மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

ஞாயிறு, 7 ஜூலை, 2013

மாரி செல்வராஜின் மறக்கவே நினைக்கிறேன்

ரசாங்கப் பள்ளிக்கூடம் ஒன்றுக்கு ஆசிரியர் பயிற்சிக்குச் சென்றிருந்த திவ்யா, 45 நாள் பயிற்சி முடிந்து கிளம்பிய சமயம், 10-வது படிக்கும் மாணவன் ஒருவன் அவளிடம் ஒரு புத்தகத்தைக் கொடுத்திருக்கிறான். அந்தப் புத்தகத்துக்குள் கல்யாணப் பத்திரிகைகளில் இருக்கும் இரட்டை மயில்களை, முருகன் வள்ளி படங்களை, அப்புறம் இதயங்களை, ஆண்-பெண் கைகளை வெட்டி ஒரு காகிதத்தில் ஒட்டி, அதனூடாக எழுதப்பட்ட ஒரு காதல் கடிதம் இருந்திருக்கிறது. திவ்யா அந்தக் கடிதத்தை ஸ்கேன் பண்ணி எனக்கு அனுப்பிவைத்தாள். அந்தக் கடிதத்தைப் பார்த்த நான், அதை லேமினேட் செய்து என் அலமாரியில் வைத்தி ருக்கிறேன். அந்தக் கடிதம் இதோ...

'ஆயிரம் பூக்கள் பூத்தாலும்
என் மனதில் பூத்த முதல் பூ நீங்கள்தான்...
கனவு என்பது காலை வரை. ஆனால்,
உங்கள் நினைவு என்பது
என் கல்லறை வரை...
மழை மண்ணை நனைக்கும்
என் மனமோ உங்களை நினைக்கும்...
குழந்தைகள் காலில் அணிவது கொலுசு
என் தலைவர் பெயரோ தனுசு
நீ விரும்பினால், நான் உங்கள் மவுசு!
என் உடம்பில் ஓடுவது ரத்தம்
நீங்கள் கொடுக்கலாம் ஒரு முத்தம்
அது கேட்கும் ரொம்பச் சத்தம்
அப்புறம் நடக்கும் காதல் யுத்தம்...
உங்கள் மடியில் படுத்து உறங்க ஆசை, 
விடியும் வரை அல்ல என் உயிர் பிரியும் வரை!’ 
- இதுதான் அந்தக் கடிதத்தில் எழுதியிருந்த வரிகள்.

என்னைக் கேட்டால், ஒருவனின் ஆகச் சிறந்த பொக்கிஷம் அவனிடம் இருக்கும் அவன் எழுதிய முதல் காதல் கடிதம்தான். மீசை முளைவிட்ட தேதியில் பாதி குழந்தையாக வும் மீதி பருவமாகவும் ஏங்குகிற, தவிக்கிற நேசத்தைக் கடிதமாக எழுதும்போது நாம் அடைகிற பரவசத்தை, உலக மகா இலக்கியங்களில்கூடக் காண முடியாது!


அப்போதெல்லாம் எங்கள் பள்ளியில், எங்கள் ஊரில் இளையராஜா பாடல்களை மனப்பாடமாகப் பாடுகிறவனையும் மோகன், முரளி படக் காதல் தோல்வி வசனங்களை அப்படியே அதே சோகத்தில் கண்ணீர் வடியப் பேசிக்காட்டுகிற வனையும்தான் கவிஞன் என்று சொல்வார்கள். ஆகவே, அன்றைய காலத்தில் எங்கள் பள்ளியில் இருந்த ஒரே ஆகச் சிறந்த கவிஞன், சந்தேகமே இல்லாமல் அடியேன்தான். எவ்வளவு காதல்கள், எவ்வளவு கடிதங்கள், எவ்வளவு அடி, எவ்வளவு உதை, எவ்வளவு அவமானம்... ஆனாலும், நண்பர்கள் வாங்கித் தரும் கோத்தையன் கடை இட்லிகளுக்காகவும், சாவிக் கடையில் கிடைக்கும் காய்ந்த சப்பாத்திகளுக்காகவும் நான் எழுதிக்கொடுத்த எத்தனையோ காதல் கடிதங்கள்தான் என் தீராப் பால்யம்.

எத்தனை பேருக்கு ஆசை ஆசையாக எவ்வளவு கடிதம் எழுதிக்கொடுத்திருந்தாலும் அண்ணன் தீக்குச்சி முத்துக்குமாருக்காக பூர்ணிமாவுக்கு நான் எழுதிக்கொடுத்த கடிதம்தான், எப்போதும் என் நினைவில் தங்கிநிற்கும் பெரும் காவியமும் பதறும் பாவமும்கூட. பீடிக்குப் பதிலாக எப்போதும் அண்ணன் முத்துக்குமாரின் வாயில் தீக்குச்சிதான் இருக்கும். அதை வைத்துப் பல் குடைவான், காது குடைவான். அப்புறம் அதைவைத்துதான் நெருப்பில்லாமல் பீடியும் குடிப்பான். பூர்ணிமா பதினொன்றாம் வகுப்பு. முத்துக்குமார் அண்ணன் பன்னிரண்டாம் வகுப்பு. ஆளு பார்ப்பதற்கு அப்பவே ரகுவரன் மாதிரி அவ்வளவு வளத்தியா, ஒல்லியா, வில்லங்கமா இருப்பான்.

யார் சொல்லி வந்தானோ தெரியவில்லை. என்னைத் தேடி ஒரு நாள் வகுப்புக்கே வந்து, பெருமாள் கோயில் மலைக்குக் கூட்டிப்போனான் முத்துக்குமார் அண்ணன்.

'ஏடே, நீ நல்லா கவிதைலாம் எழுதுவியாமே. எங்க எனக்கொண்ணு எழுதித் தாயேன் பாப்போம்.'

''யாருக்குண்ணே?'

'ஆ... நம்ம கிராஃப்ட் வாத்தியா னுக்குக் கொடுக்கிறதுக்கு. ஆளையும் சைஸையும் பாரு, கேக்குறான் கேள்வி. ஆள் யார்னு சொன்னாத்தான் கவித வருமோ உனக்கு?'

'இல்ல... ஆள் முகம் தெரிஞ்சா கொஞ்சம் ஈஸி. அதவெச்சி எழுதிடுவேன்.'

'ம்ம்ம்... அப்படியா?! சரி... உங்க கிளாஸ்ல பூர்ணிமானு ஒரு பிள்ள படிக்கில்லா... அவள நினைச்சு எழுது.'

'என்னது... பூர்ணிமாவா?'

'ஆமா, உனக்குத்தான் நிலா இருக்கால்ல. நீ எதுக்கு பூர்ணிமான்னு வாயப் பொளக்குற?'

கொஞ்ச நேரம் யோசித்துக்கொண்டே இருந்தேன். வசமாக அப்படியன்றும் சிக்க வில்லை. அவனேதான் 'பூவே பூர்ணிமா பூச்சூட வா’னு எடுத்துக்கொடுத்தான். அவன் ரசனை மட்டத்தின் அளவும், அவன் காதல் தொடங்கிய கால அளவும் எனக்குப் புரிந்துவிட்டது. கவிதை வேகவேகமாக ரெடியானது.

'என் பூஜைக்கேத்த பூ நீ... பூர்ணிமா
நேத்துதானே பூத்தது நம் காதலும்...
பூவே பூர்ணிமா
என்னை பூச்சூட வா...
பாலான என் நெஞ்சில் பால் வார்க்க வா
பூவே பூர்ணிமா நீதான்
என் பூமியம்மா
இனி நீ சுற்ற வேண்டிய சூரியன் நானம்மா
பூவே பூர்ணிமா, நீதான் என் பொன் வசந்தம்மா
புது ராஜ வாழ்க்கை நாளை நம் சொந்தம்மா’

                - இப்படியாக இளையராஜாவின் பாடல்களால் நிறைத்து நீண்டுகொண்டுபோன அந்தக் கவிதையை 'இப்படிக்கு’ போட்டு 'முத்துக்குமார்’ என்று எழுதத் தொடங்கும்போது படக்கென்று பிடுங்கிக்கொண்டான்.

'போதும் தம்பி போதும்... அண்ணன் பேரை அண்ணனே அட்டகாசமா ஆட்டின் போட்டு எழுதிக்கிறேன்' என்று சொல்லி எப்படிக் கொடுப்பான், எப்போது கொடுப்பான், என்ன சொல்லிக் கொடுப்பான் என எதையும் சொல்லாமல் விறுவிறுவெனக் கிளம்பிப்போனான். அந்த நேரத்தில், நான் எப்போதும் ஆண் பையன்களைப் பார்த்தால் பாவமாக சுவரில் பதுங்கும் பூர்ணிமாவை நினைத்துப் பார்த்தேன். 'புரியாத புதிர்’ ரேகாவைப் போல விழி பிதுங்கித் தெரிந்தது அவள் முகம். பூவே பூர்ணிமா... நீ ரொம்பப் பாவம்மா!

'இப்படிக்கு’ என்பதற்குக் கீழ் எந்தப் பெயரும் எழுதாத அந்தக் கடிதத்தின் கடைசியில் பெரு விரலை முள்ளால் குத்தி வந்த ரத்தத்தால் ஒரு பொட்டுவைத்து, அன்று மதியமே எங்கள் வகுப்பில் யாரும் இல்லாத நேரத்தில் போய் பூர்ணிமாவின் புத்தகப் பைக்குள் முத்துக்குமார் வைத்துவிட்டான்போல. அதற்கான கொடுமையான விளைவுகளை நாங்கள் மறுநாள்தான் பள்ளிக்குப் போய் அனுபவித்தோம்.

காலையில் முதல் வகுப்பு தொடங்கியவுடனே 'பதினோராம் வகுப்பு மேத்ஸ் குரூப் பசங்க எல்லாரும் ஸ்டாஃப் ரூமுக்கு வரணுமாம்... ஹெட்மாஸ்டர் சொன்னாங்க’ என்று அறிவிப்பு வந்தது. என்ன விஷயத்துக்காகக் கூப்பிடுகிறார்கள் என்று தெரியாமல், எல்லாரும் ஓடிப்போய், உள்ளே முட்டிக்கொண்டு நின்றோம். உள்ளே நிர்மலா டீச்சரும் ஹெட்மாஸ்டரும் சேர்ந்து, பசங்களை எல்லாம் ஒரு பிளாக் போர்டுக்கு முன்னால் ஒரு பிரம்பை வைத்துக்கொண்டு வரிசைப்படுத்தினார்கள். அவர்கள் கையில் ஒரு காகிதம் வேறு படபடத்தது. பக்கத்தில் பாவமாக பூர்ணிமா ஏங்கி ஏங்கி அழுதுகொண்டிருந்தாள்.

'ஏல... இங்க பாரு, இந்த லெட்டரை எவன் எழுதி இந்த புள்ள பேக்குக்குள்ள வெச்சான்னு தெரியிற வரைக்கும் ஒரு பய தப்ப முடியாது. வரிசையா ஒவ்வொருத்தனா வந்து நான் சொல்ற வார்த்தைய சாக்பீஸ எடுத்து இந்த பிளாக் போர்டுல எழுதணும். இது எந்த நாயி எழுத்துனு தெரிஞ்சதுக்கு, அப்புறம்லா இருக்கு வேடிக்கை' என்று நிர்மலா டீச்சர் சொன்னபோதுதான் ஆகச் சிறந்த கவிஞனான எனக்கு ஆப்பு காத்திருக்கிறது என்று புரிந்தது. எனக்கு முன் வரிசையில் எந்தப் பிரச்னை வந்தாலும் சந்தேக கேஸில் எப்போதும் சிக்கும், வில்லாதி வில்லன்கள் முத்துப்பாண்டி, சிவபெருமாள், கந்தையா, கொம்பையா, ரவி, மகேஷ், சங்கர் என ஒரு பெரிய லிஸ்ட்டே நின்றதுதான் அப்போதைய ஆறுதல் எனக்கு.

முதலில் முத்துப்பாண்டி போனான். 'நீதானே என் பொன் வசந்தம்’ என்று எழுதச் சொன்னார்கள். தலைவன் வேகமாகப் போய் 'நீதானோ ஏன் போன் வசந்தம்’ என்று எழுதிவைக்க, 'பதினோராம் வகுப்பு வந்ததுக்கு அப்புறமும் தமிழ் எழுதுறதப் பார் நாய்’ என்று விழுந்தது இரண்டு பூசைகள். அடுத்து, சிவபெருமாளை வெறும் பூர்ணிமா என்று எழுதச் சொன்னார்கள். பார்ட்டி கொஞ்சம் பதற்றத்தோடு 'பூற்னிமா’ என்று எழுதி, வாங்க வேண்டிய பூசைகளை வாங்கியபடி நகர்ந்துபோனான். மகேஷ் எழுதியது எந்த மொழி என்றே யாருக்கும் தெரியாததால், அவன் உச்சி முடியைப் பிடித்து இழுத்து, ஹெட்மாஸ்டர் அவனை வெளியே அனுப்பிவிட்டார். அடுத்து சங்கர். நல்ல வேளையாக எனக்கு முன்னாடி நின்றான் அவன். சங்கர் மீது ஏன் அவர்களுக்கு அவ்வளவு பெரிய சந்தேகம் வந்ததோ தெரியவில்லை... 'கண்ணே பூர்ணிமா... நீதான் என் பூமியம்மா’ என எழுதச் சொன்னார் கள். அவனும் போய் தைரியமாக எழுதினான். ஆனால், பாவம் அவன் எழுத்தும் காகிதத்தில் இருந்த என் எழுத்தும் ஒரு சாயலுக்கு அப்படியே இருந்ததால், அவனை அப்படியே அமுக்கி வெளுக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

என் கண் முன்னாடியே சங்கர் எவ்வளவோ சொல்லிக் கதறிப் பார்த்தான். ஆனால், அங்கு யாருமே அதைக் கேட்பதாக இல்லை. பல நாள் திருடன் ஒருநாள் வசமாக மாட்டிக்கொண்டான் என்பதைப் போல 'முளைச்சி மூணு இல விடல... அதுக்குள்ள துரை லவ் லெட்டரா எழுதுறீங்க’ என்று ஆளாளுக்கு அவனை வெளுத்து வாங்கி னார்கள். பூர்ணிமா ஒரு மூலையில் நின்று அழுதாள். நடப்பது எல்லாவற்றையும் அண்ணன் முத்துக்குமார் நாக்கைத் துருத்தியபடி ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான். இதெல்லாம் போதாது என்று ஒரு மாதத்துக்கு முன் மகேஸ்வரி டீச்சர் பையில் இருந்த கடிதத் துக்கும் சங்கர்தான் காரணமாக இருக்கும் என்று மகேஸ்வரி டீச்சர் தன் செருப்பைக் கழட்டி அடிக்கப் போனபோது, நல்லவேளை ஹெட் மாஸ்டர் சத்தம் போட்டுத் தடுத்துவிட்டார்.

 எல்லாவற்றையும் சொல்லி முத்துக்குமார் அண்ணனைப் போட்டுக்கொடுத்து சங்கரைக் காப்பாற்றலாம் என்றால், 'பூவே பூர்ணிமா... பூச்சூட வா  பூர்ணிமா’ என்று கொட்டெழுத்தில் எழுதிக்கொடுத்தது நான். அதுபோக, பட்டுராஜனுக்காக மகேஸ்வரி டீச்சருக்குக் கடிதம் எழுதிக்கொடுத்ததும், அவ்வப்போது கனகா அக்காவின் பெட்டிக் கடைக்குள் பசங்க வீசி எறிந்த எத்தனையோ கடிதங்களில் பாதிக் கடிதங்களும் அடியேன் எழுதியதுதான். எல்லாவற்றுக்கும் சேர்த்து எவ்வளவு அடி கிடைத்தாலும் பரவாயில்லை... அதை என் மேனி அப்படியே வாங்கி யாருக்கும் தெரியாமல் உதிர்த்துவிடும். ஆனால், ஆகச் சிறந்த என் கவித் திறமையை அம்மணமாக்கி எல்லாரும் அவமானப்படுத்தினால், அதைத்தான் என்னால் தாங்கிக்கொள்ள முடியாது.

பொறுத்துப் பொறுத்துப் பார்த்தான் சங்கர். ஹெட்மாஸ்டர், 'இன்னையோட உன் டீசியக் கிழிக்கறேண்டா பார்’ என்று சொல்லிக் கிளம்பும்போதுதான், தன்னைச் சாதாரணமாகக் கடந்து போக முயன்ற ஹெட்மாஸ்டரின் தொப்பையைக் கையை வைத்துத் தடுத்து நிறுத்தி, 'நான் சொல்றத நீங்க கேட்கவேமாட்டீங்களா, நான் வேற பொண்ணக் காதலிக் கும்போது, கல்யாணம் கட்டிக்கிடணும்னு ஆசைப்படும்போது இந்தப் புள்ள பூர்ணிமாவுக்கு நான் எதுக்கு லெட்டர் எழுதணும் சொல்லுங்க?’ என்று ரொம்பச் சத்தமாகச் சொல்ல... எல்லாரும் ஒரு நிமிஷம் அப்படியே அமைதியாகிவிட்டார்கள். நிர்மலா டீச்சர்தான் மறுபடியும் அவன் உச்சிமுடியைப் பிடித்து அடித்து, 'என்ன தைரியம் பாரு நாய்க்கு, நம்மகிட்டயே எப்படிப் பேசுது, அது யார்டா?’ என்று கேட்டார். 'எங்கே படுபாவி நம்ம பெயரைச் சொல்லிவிடுவானோ என்ற பயத்தில் மகேஸ்வரி டீச்சர் ஓடி வந்து அட்வான் ஸாகவே நறுக் நறுக்கென்று சங்கர் தலையில் ரெண்டு கொட்டு கொட்டிவிட்டுப் போய் உட்காந்துகொண்டார்.

மொத்தப் பள்ளியும் கண் கொட்டாமல் சங்கரையே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது. கண்டிப்பாக கொஞ்சம் அழகான டீச்சர்களுக்கு அப்போது இதயத் துடிப்பு எகிறியிருக்கும். 'நம்புனா நம்புங்க... நம்பாட்டி போங்க, நம்ம ஸ்கூலுக்கு வெளிய பெட்டிக்கடை வெச்சிருக்காங்கல்லா கனகாக்கா, அவங்களத்தான் நான் கல்யாணம் பண்ணிக்கப்போறேன், போதுமா?’ என்று சொல்லிவிட்டு, வேகமாக வெளியேறிவிட்டான்.

எல்லாரும் அப்படியே கொஞ்சம் நேரம் உறைந்துவிட்டார்கள். வெளியே தன் ஊனப்பட்ட இரண்டு கால்களையும் இழுத்துக்கொண்டு, கனகாக்கா தன் பெட்டிக்கடையை அப்போதுதான் மெதுவாகத் திறந்துகொண்டிருந்தார்!

எழுத்து : மாரி செல்வராஜ், ஓவியம்: ஸ்யாம்
நன்றி : ஆனந்த விகடன்.
-'பரிவை' சே.குமார்.

அன்னக்கொடி : பாரதிராஜாவிடம் சில கேள்விகள்


'இயக்குநர் இமயம் நான்' என்ற செருக்குடன் பாரதிராஜா கையிலெடுத்த கள்ளிக்காட்டுக் காதல்கதையான 'அன்னக்கொடி' அவரது செருக்கை உடைத்து நொறுக்கிவிட்டது என்ற உண்மை அன்னக்கொடி(யும் கொடிவீரனும்) பார்த்த அனைவருக்கும் நன்றாகத் தெரியும்.

ஸ்டுடியோவுக்குள் இருந்த தமிழ் சினிமாவை கிராமத்து வயல்வெளிகளிலும் நீர்நிலைகளிலும் பயணிக்க வைத்தவர் பாரதிராஜா. 16வயதினிலே மூலம் கதைக்களத்துக்கே கேமராவை தூக்கிச் சென்ற முன்னோடி...கிழக்கே போகும் ரயில், முதல் மரியாதை, வேதம் புதிது, கடலோரக் கவிதைகள் என மக்களை வியப்பில் ஆழ்த்திய கதைகளை கதை மாந்தர்களோடு அழகியலாய் கொடுத்தவர் நம் பாசத்திற்குரிய பாரதிராஜா.

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இளையராஜாவுடன் இணைந்து அருமையான பாடல்களையும் அழகான படங்களையும் கொடுத்தார் என்பது மறுக்க முடியாத உண்மை.அதற்காக இளையராஜாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டுடன் காணாமல் போய்விட்டார் என்று சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. அதன் பிறகும் கருத்தம்மா, கிழக்கு சீமையிலே என நல்ல படங்களையும் பாடல்களையும் கொடுத்திருக்கிறார்.

ஒரு மகா கலைஞன் எங்கே சறுக்கினார்... எல்லா அப்பனும் தன்னோட பிள்ளை தன்னோட காலத்துக்கு அப்புறம் நல்ல நிலையில் இருக்கணும் என்று ஆசைப்படுவது என்னவோ உண்மைதான். டாக்டர் தனது வாரிசை டாக்டராக்க நினைப்பதும் வக்கீல் தனது வாரிசை வக்கீலாக்க நினைப்பதும் அரசியல்வாதி தனது வாரிசை அரசியல்வாதியாக்க நினைப்பதும் சினிமாவில் இருப்பவர் தனது வாரிசை அதற்குள் நுழைக்க நினைப்பதும் காலம் காலமாக நடப்பதுதான். பாரதிராஜாவும் அதற்கு விதிவிலக்கல்ல.

மகனுக்காக ஏ.ஆர்.ரஹ்மானுடன் சேர்ந்து தாஜ்மஹால் கட்டினார். அருமையான பாடல்கள் இருந்தும் மகனை கிராமத்தானாக பார்க்கவோ காட்டவோ மனமில்லாமல் ஜீன்ஸ் மாட்டிவிட்டு ஜீன்ஸ் கிராமம் என்றார். படம் போன இடம் தெரியவில்லை. அதன் பிறகான முயற்சியில் மகனும் ஜெயிக்கவில்லை. தானும் வெற்றியை கொடுக்க முடியாமல் திணறினார்.

அன்னக்கொடியும் கொடிவீரனும் எனது கனவுப்படம் என்று சொல்லிக் கொண்டே இருந்தார். ஆனால் கனவுப்படம் அவரது காலை வாரிமட்டும் விடவில்லை... ஒடித்தே விட்டது. படம் குறித்த விமர்சனங்கள் இணையத்தை ஆக்கிரமித்து நாட்களாகிவிட்டன. இது படம் குறித்த விமர்சனத்திற்கான பதிவல்ல. சிறந்த கலைஞன் ஒருவன் எப்படி இப்படி ஒரு தவறை செய்தான் என்ற கேள்விகளின் தொகுப்பே இது.

பல வருடங்களுக்கு முன்னர் நடக்கும் கதையாக சொல்ல நினைப்பதால் மின்சாரம் இல்லாத கிராமம், ரவிக்கை அணியாத பெண்கள், டவுசர் போட்ட போலீஸ் என காட்டியிருக்கிறீர்கள். நாயகனின் பாட்டி கூட ரவிக்கை போட்டிருக்கும் போது நாயகி உள்ளிட்ட சில பருவம் அடைந்த பெண்கள் ரவிக்கை அணியாமல் வருகிறார்களே... அன்றைய கிராமத்தில் இப்படி இருந்ததா இமயம் அவர்களே..?

நாயகி தனது புருவம் திருத்தி உதட்டுச் சாயம் பூசி ஆடு மேய்க்கிறாள்... எந்தக் கிராமத்துப் பெண் புருவம் திருத்தி உதட்டுச் சாயம் இட்டுத் திரிகிறாள்... இதுவே படத்தின் முக்கியமான சறுக்கல் இல்லையா... கவனிக்கவில்லையா.. இல்லை இதெல்லாம் பெரிசா எடுத்துக்கமாட்டாய்ங்கன்னு ஒரு நெனப்பா...?

ஆண்கள் எல்லாம் பட்டாபட்டி டவுசர் போட வேண்டும் என்பது அந்த ஊரின் நாட்டாமை வகுத்த தீர்ப்பா என்ன..? நாயகன், வில்லன் என படத்தில் வரும் ஆண்களுக்கு எல்லாம் டவுசரை மாட்டியிருப்பதற்கு தங்களின் பட்ஜெட்டும் காரணமாக இருக்குமோ..?


கிராமங்கள் என்றாலே பல சட்ட திட்டங்கள் இருக்கத்தான் செய்யும். அதுவும் பல வருடங்களுக்கு முந்தைய கிராமம்... பெண்கள் ஆண்களுடன் பேசுவது என்பதே பெரிய விஷயம்... சில நாட்கள் பழகியவுடன் ஒரு பெண் எப்படி ஒரு ஆணின் தோளில் அமர்ந்து பயணிக்கச் சம்மதிக்கிறாள்... குட்டைப் பாவடையோடு தோளில் பயணிக்கும் போது தொடையில் முத்தம் வேறு... இது எப்படி... கட்டுப்பெட்டிக் கிராமத்தில் சாத்தியமா..?

பட்டாபட்டி டவுசர் போட்டு அடிக்கடி வேட்டியை அவிழ்த்து தோளில் போட்டுக் கொள்ளும் வில்லன் மைனர்... காட்சிக்குப் பொருந்தவேயில்லையே... இதை வடிவேலு செஞ்சா அதில் காமெடி இருக்கும்... சிரிக்கலாம்... ரசிக்கலாம்... அதையே வில்லன் செஞ்சா தலைவலி என்பது கூடவா உங்களுக்குப் புரியவில்லையா?

'சஞ்சனக்காஞ் சனக்குதான் சடையன் போட்ட கணக்குத்தா'ன்னு அடிக்கடி வில்லன் பாடிக்கொண்டே பயணிக்கிறாரே... அப்படி என்ன கணக்குப் போடுறார்... கொலைகள்தானே செய்கிறார்... கடைசி வரை யோசித்துப் பார்த்தால் நாயகியை திருமணம் பண்ணியதைத் தவிர அவரு வேற என்ன கணக்குப் போடுறாரு என்பது விளங்கவே இல்லையே... எதற்கு அந்தப் பஞ்ச்...?

திருமணத்திற்குப் பின்னர் கணவன் முரடனாக இருக்க பயந்து கிடக்கும் நாயகி வீட்டை விட்டு வெளியே வந்து ஆடு மேய்க்கும் இடத்தில் தனது முன்னாள் காதலனைச் சந்தித்து அவன் பாதுகாத்து வைத்திருந்த கடித்தெடுத்த நகத்தில் மூச்சுக்காற்றை விடுகிறாளே... நாயகி பத்தினியா... இல்லை பரத்தையா...?

மாமனார் காமவெறி பிடித்தவன் என்பதைக் காட்ட கடனை அடைக்க முடியாத வீட்டில் இருந்து பெண்களைக் கொண்டு வந்து வைத்திருப்பதாக காட்டினீர்கள் சரி, மருமகளின் இடுப்பைத் தொடுவதும்... விரலைச் சப்புவதும்... ஷகீலா படத்தை மிஞ்சிவிட்டனவே நல்ல இயக்குநர் இது போன்ற காட்சிகளை தவிர்த்திருக்கலாம் அல்லவா..?

மனைவியை வில்லன் கொன்று விட்டான்... பின்னணியில் பாடல் ஒழிக்க நாயகன் அழுகிறான்... அடுத்த காட்சியில் அவளை அப்படியே விட்டுவிட்டு வந்து வில்லனிடம் மாட்டிய நாயகியைக் காப்பாற்றுகிறான்... கட்டிய மனைவி பிணமாக கிடக்க நாயகியை கைபிடித்து கூட்டிச் செல்கிறான்... இந்த அநியாயம் எங்கு நடக்கும்... உங்கள் முடிவுப்படி பார்த்தால் நாயகன் மனைவி சாகட்டும் காதலியை வச்சிக்கலாம்... மன்னிக்கவும் கட்டிகலாம் என்று இருந்தானோ என்று எண்ணத் தோன்றுகிறதே..?

ஆமா... வயல்வெளிகளையும் நீர் நிலைகளையும் சுற்றித் திரிந்த பாரதிராஜா இந்தப் படத்தில் பெண்களின் முதுகின் மீதே பயணித்திருக்கிறாரே ஏன்? நாயகியை தோலுரித்துக் காட்டியிருக்கிறீர்கள். அரை... இல்லை முக்கால் நிர்வாணமாக ஓடவைத்தும் சந்தோஷப்பட்டிருக்கிறீர்களே... இதுதான் அறுபதிலும் ஆசை வரும் என்பதோ..?

நாயகன் ஒருவன் இருக்கிறான் என்பது பாடலுக்கு மட்டுமே... படம் முழுவதும் 'சஞ்சனக்காஞ் சனக்குத்தான்...' என்று கரைபடிந்த பற்களுடன் பாடிக்கொண்டு மாட்டு வண்டியில் திரியும் மனோஜ்தான் ஆக்கிரமித்திருக்கிறார். ஒரு தகப்பனாக தாங்கள் மகனை தூக்கிவிட நினைத்திருக்கிறீர்கள் என்பது தெரிகிறது. ஆனால் அவர் எந்திரித்து வரமால் உங்களைக் கவிழ்த்து விட்டாரே... எதற்காக அவருக்கு இந்த சகிக்காத வில்லன் முகம்... இவன் அதுக்கு சரிப்பட்டு வருவானா என்று நீங்கள் யோசிக்கவில்லையா..?

இப்படி நிறைய கேள்விக்ளை அன்னக்கொடி மூலம் இமயத்தைக் கேட்டுக்கொண்டே போகலாம்... பதிவின் நீளம் கருதி இத்தோடு நிறுத்திக் கொள்ளலாம்... 


மொத்தத்தில் பாரதிராஜா என்ற அற்புதப் படைப்பாளியின் படத்தில் இருக்கும் அழகியலோ, உணர்ச்சிப்பூர்வமான காட்சிகளோ அன்னக்கொடியில் இல்லைவே இல்லை. மேலும் பார்ப்பவர்களை முகம் சுளிக்க வைக்கும் பி கிரேடு படங்களுக்கு நிகராக காட்சிகளை அதிகம் படமாக்கியிருப்பதைப் பார்க்கும் போது தாங்கள் எதார்த்தம் என்ற இமயத்தில் இருந்து சறுக்கி கவர்ச்சி என்னும் சாக்கடைக்குள் விழுந்து விட்டீர்களோ என்றே எண்ணத் தோன்றுகிறது.

மேலும் 'வெடக்கோழி குழம்புதான்... வௌஞ்ச கம்பங்கூழுதான்... சஞ்சனக்காஞ் சனக்குதான்... இது சடையன் போட்ட கணக்குதான்...' என்று உங்களின் மைனர் காட்சிக்கு காட்சி பாடுவது படம் முடியும் போது எங்களின் காதுக்குள் 'சஞ்சனக்காஞ் சனக்குத்தான்... எங்கப்பனுக்கு சங்குதான்...' என்றே திரும்பத் திரும்ப ஒலிக்கிறது.

மணிரத்தினத்தின் கடல் உள்வாங்கியதும்... உங்களின் அன்னக்கொடி படரும் முன்னே காய்ந்து போனதும் கர்வத்தை உடைத்த நிகழ்வுகள் என்றாலும் மீண்டும் ஒரு அழகிய கிராமத்துத் தாலாட்டோடு எங்கள் பாசத்திற்குரிய பாரதிராஜாவாக சறுக்கிய இமயம் மீண்டும் உயிர்தெழ வேண்டும் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறோம்...

-'பரிவை' சே.குமார்.

சனி, 6 ஜூலை, 2013

விஸ்வரூபம் 2 போஸ்டர் - ஆர்யா பற்றி நயன்

விஸ்வரூபம் 2 - முதல் போஸ்டர்கள் & டிசைன்களை வெளியிட்டார் கமல்!

விஸ்வரூபம் 2 - முதல் போஸ்டர்கள் & டிசைன்களை வெளியிட்டார் கமல்!

நடிகர் கமல்ஹாஸன் நடிக்கும் விஸ்வரூபம் 2-ம் பாகத்தின் போஸ்டர்கள், டிசைன்கள் முதல் முறையாக வெளியாகியுள்ளன. 

கமல் தயாரித்து, இயக்கி, நடித்த படம் விஸ்வரூபம். பெரும் சர்ச்சைகளுக்கிடையே வெளியான இந்தப் படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. 

இதைத் தொடர்ந்து விஸ்வரூபம் படத்துக்காக எடுக்கப்பட்ட சில காட்சிகளை வைத்து, இரண்டாம் பாகத்தை உருவாக்கும் முயற்சியில் இறங்கினார் கமல். முதல் பாகம் அமெரிக்காவிலும் ஆப்கானிஸ்தானிலும் நடப்பதாகக் காட்டியிருந்தார். ஆனால் இரண்டாம் பாகம் முழுக்க இந்தியாவிலேயே நடக்கிறது.

படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பை முடித்துவிட்டார் கமல்ஹாஸன். உடனுக்குடன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளையும் முடித்து வருகிறார். 

இதுவரை படம் குறித்து எந்தத் தகவலையும் வெளியிடாமல் இருந்த கமல், முதல் முறையாக படத்தின் தமிழ் மற்றும் இந்தி போஸ்டர்கள் மற்றும் டிசைன்களை வெளியிட்டுள்ளார். 

இந்த இரண்டாம் பாகத்தை கமல் தயாரிக்கவில்லை. ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரிக்கும்', என்று முதலில் கூறப்பட்டது. ஆனால் இப்போது கமலின் ராஜ்கமல் நிறுவனம் அளிக்கும் விஸ்வரூபம் 2 என குறிப்பிடப்பட்டுள்ளது. முதல்பாகத்தில் நடித்தவர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களே இந்த இரண்டாம் பாகத்திலும் தொடர்கின்றனர்.


ஆர்lயாவுக்கும் எனக்கும் இடையில் ஒண்ணுமே இல்லை: நயன்

எனக்கும் ஆர்யாவுக்கும் காதல் என்று வரும் கிசுகிசுக்கள் நிஜமல்ல, எங்களுக்கிடையில் அப்படி எந்த நெருக்கமும் இல்லை என்று நயன்தாரா தெரிவித்துள்ளார்.

பாஸ் என்கிற பாஸ்கரனில் இருவரும் ஜோடியாக நடித்ததிலிருந்து நயன்தாராவும், ஆர்யாவும் காதலிப்பதாக தொடர்ந்து கிசுகிசுக்கள் வந்தவண்ணம் உள்ளன. தற்போது ராஜா ராணி படத்திலும் இணைந்து நடிக்கின்றனர். நயன்தாராவும் ஆரியாவும் தொடர்ந்து தனிமையில் சந்தித்து வருவதாக செய்திகள் வந்தன. 

சமீபத்தில் ராஜா ராணி பட விழாவுக்காக தயாரான அழைப்பிதழில் நயன்தாராவும், ஆர்யாவும் மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொள்வது போன்ற படத்தையும் அச்சிட்டு பரபரப்பு ஏற்படுத்தினர். இதனால் இருவரும் நிஜத்திலும் இணைவார்கள் என்று கூறப்பட்டது. 

இதுகுறித்து நயன்தாரா கூறுகையில், "ஆர்யாவையும், என்னையும் இணைத்து வதந்திகள் பரவுகின்றன. சினிமாவில் இதெல்லாம் சகஜம்தான். ஆனால் உண்மையில் எங்களுக்குள் எதுவும் கிடையாது. நாங்கள் இரண்டு படங்களில் சேர்ந்து நடிக்கிறோம். அதனால் தான் இப்படி வதந்தி பரவியுள்ளது. இருவரும் சேர்ந்து நடிப்பது தானாக நடந்தது. விரும்பி நடக்கவில்லை. காதல் போன்ற விஷயங்களிலிருந்து வெளியே வந்து விட்டேன். இப்போது தனியாகத்தான் இருக்கிறேன். சில காலம் இதே நிலையில் இருக்க விரும்புகிறேன். ஆண்-பெண் பழகினால் காதலாகத்தான் இருக்க வேண்டுமா? நண்பர்களாக இருக்க கூடாதா? நடிகரும், நடிகையும் ஒருத்தருக்கு ஒருத்தர் டேட்டிங் இல்லாமல் நண்பர்களாக வாழ முடியும். நானும் ஆர்யாவும் சாதாரண நண்பர்களாகத்தான் இருக்கிறோம். அவர் வீட்டில் நடந்த விருந்து பற்றி பேசுகிறார்கள். அங்கு நான் மட்டுமே போகவில்லை. என்னைப் போல் நிறைய சினிமாக்காரர்கள் வந்து இருந்தார்கள். அவர்களை மறந்துவிட்டார்களே. சில காலம் தனிமையில் இருப்பதே என் முடிவு. காதல் பற்றி சிந்திக்க விரும்பவில்லை. ஆர்யா எனக்கு நல்ல நண்பர். எப்போதும் அப்படியே இருப்பார். ராஜா ராணி பட அழைப்பிதழில் திருமணம் செய்து கொள்வது போன்று எங்கள் படங்களை அச்சிடப்பட்டு இருந்தது படத்தின் விளம்பரத்துக்காகத்தான்," என்றார்.

-நன்றி : தட்ஸ்தமிழ் இணையம்
-'பரிவை' சே.குமார்.

ஹீரோக்களுக்கு ஷாக் கொடுத்த 2013 : அரையாண்டு ரிப்போர்ட்

2013ம் ஆண்டின் முதல் அரையாண்டில் (ஜனவரி முதல் ஜூன் வரை) 78 படங்கள் ரிலீசாகியுள்ளது. சுமார் 10 படங்கள் தான் ஹிட்டடித்துள்ளது. மீதி படங்களால் தயாரிப்பாளருக்கு லாஸ். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பல படங்கள் எதிர்பார்ப்புகளை பொய்யாக்கி பெப்பே காட்டியுள்ளது. சத்தமில்லாமல் கலெக்ஷனை அள்ளிய படங்கள் எது, ஏகப்பட்ட பில்டப் கொடுத்து பிளாப்பான படங்கள் என்னென்ன என்பதை இப்போது பார்ப்போம்...

கலெக்ஷனை அள்ளிய படங்கள்...

கண்ணா லட்டு தின்ன ஆசையா : கலெக்ஷனை பொறுத்தவரை காசு... பணம்... துட்டு... மணி.. மணி... என்று கொண்டாடியது கண்ணா லட்டு திண்ண ஆசையா. குறைந்த முதலீட்டில் நிறைய லாபம். தயாரிப்பாளரான முதல் படத்திலேயே கோடிகளை அள்ளினார் சந்தானம். 


விஸ்வரூபம் : பெரிய முதலீட்டில் பெரிய லாபம் கண்டது விஸ்வரூபம். தடை, போராட்டம் அது இது என்று படத்துக்கு ஏகத்துக்கு நெகட்டிவ் பப்ளிசிட்டி கிடைக்க கமல் ஆழ்வார் பேட்டை வீட்டை காப்பாற்றிக் கொண்டார். 

சூது கவ்வும் அதிரடியாய் வந்து அள்ளியது. தில்லுமுல்லு, தீயா வேலை செய்யணும் குமாரு இரண்டுமே சிரிக்க வைத்தே சில்லறையை மூட்டை கட்டியது. கேடிபில்லா கில்லாடி ரங்கா, உதயம் என்.எச் 4, எதிர்நீச்சல், நேரம் படங்கள் லாபத்தை சம்பாதித்துக் கொண்டன.

பில்டப் கொடுத்து பிளாப்பான படங்கள்...

அலெக்ஸ் பாண்டியன் : கார்த்தி நடித்த அலெக்ஸ் பாண்டியன் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால் அந்தப் படம்தான் அவருக்கு இறங்கு முகத்தை உண்டாக்கியது. 

ஆதிபகவன் : நீண்ட இடைவெளிக்குப் பிறகு அமீர், ஆதிபகவன் படத்தை இயக்கினார். சுமார் இரண்டு வருடம் படிப்பிடிப்பு நடந்தது. படத்தின் கதையை சீக்ரெட்டாக வைத்திருந்தார். ஜெயம்ரவி திருநங்கையாக நடிக்கிறார் என்கிற தகவல் கசிய எதிர்பார்ப்பு எகிறியது. படம் எதிர்பாராத வகையில் படுதோல்வி அடைந்தது. தயாரிப்பாளர் அன்புக்கு பல கோடி லாஸ்.

டேவிட் : இந்தி, தமிழ் இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் தயாராகி வெளிவந்தது டேவிட். இந்தியில் சைத்தான் ஹிட் கொடுத்த பிஜு நம்பியாரின் படம். ஏற்கெனவே முகமூடியில் மூடி கழன்றிருந்த ஜீவாவும், ராஜாபாட்டையில் கிரீடத்தை இழந்திருந்த விக்ரமும் இந்தப் படத்தை நம்பிக்கையோடு எதிர்பார்த்தனர். டேவிட், இரண்டு பேர் நம்பிக்கையையும் பொய்யாக்கியது. 


மூன்று பேர் மூன்று காதல் : இயக்குனர் வசந்த் தனது மூன்று பேர் மூன்று காதல் படத்துக்கு எப்போதும் இல்லாத அளவிற்கு விளம்பரம் கொடுத்தார். அர்ஜூன்,  விமல் உள்ளிட்ட மூன்று ஹீரோக்கள். ஜோதிகா சாயலில் ஒரு ஹீரோயின். சிம்ரன் சாயலில் ஒரு ஹீரோயின் என்ற பில்டப் வேறு, தாமிரபரணி பானு ரீ எண்ட்ரி என எகிறிக்கிடந்தது எதிர்பார்ப்பு. அத்தனையும் கவிழ்த்து போட்டது மூன்று மூன்று.

சேட்டை : இந்தியில் மெகா ஹிட் அடித்த டெல்லி பெல்லியை அதே யுடிவி நிறுவனம் தமிழில் ரீமேக் மன்னன் கண்ணனை வைத்து ரீமேக்கியது. ஆர்யா, ஹன்சிகா, சந்தானம் என மெகா கூட்டணி இருந்தும் சேட்டையின் டாய்லெட் சேட்டையை மக்கள் ரசிக்கவில்லை. சந்தானத்திற்கு லேசான சறுக்கலைக் கொடுத்தது. 

சமர் : விஷாலின் சமர் சறுக்கிக் கொண்டது. எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக இரண்டு விஷயங்கள் நடந்தது. யாருமே எதிர்பாராத வகையில் இரண்டு மிகப்பெரிய ஜாம்பவான்களை கவிழ்த்துப் போட்டது 2013. 

கடல் : ராவணன் தோல்விக்குப் பிறகு மணிரத்னம் இயக்கிய கடல் ஏகத்துக்கு எல்லோரது பிபிபையும் எகிற வைத்தது. காரணம் அதில் அலைகள் ஓய்வதில்லை படத்தில் அறிமுகமான கார்த்திக் மகன் கவுதமும், ராதா மகள் துளசியும் அறிமுகமானார்கள். உலக சினிமா வரலாற்றில் இது அரிதான ஒரு நிகழ்வு. அதேபோன்ற கடற்புறத்து கதை. ஏ,ஆர்.ரகுமான் இசை, அர்ஜுன் முதன்முறையாக வில்லன், அரவிந்த்சாமி ரீ எண்ட்ரி என ஏகப்பட்ட பில்டப்புகள் இருந்தும் படம் ஓடாதது மணிரத்னத்திற்கு மட்டுமல்ல ரசிகர்களுக்கே அதிர்ச்சிதான். கடல் படத்தால் கோடிக்கணக்கில் பணம் இழந்த விநியோகஸ்தர்கண் மணிரத்னம் வீட்டு வாசலில் போராட்டம் நடத்தியது மோசமான வரலாற்று கரும்புள்ளி.


அன்னக்கொடி : மண்ணின் மைந்தர் பாரதிராஜாவின் அன்னக்கொடி அரைக் கம்பத்தில் பறந்தது. என் கனவு படம், லட்சிய படம் என்றெல்லாம் ஏகத்துக்கு சொன்னார். ரிலீசுக்குப் பிறகு படத்தை மீடியாக்கள் கிழித்து தொங்கவிட பாரதிராஜா அப்செட்.

பெரிய ஜாம்பவான்களையும், ஹீரோக்களையும் படுத்தி எடுத்துவிட்டது 2013ன் முன்பகுதி. 

பாராட்டு பெற்ற ஹரிதாஸ், சென்னையில் ஒரு நாள்...

தசைக்குறைபாடு உள்ள சிறுவன் மராத்தான் சேம்பியனாகும் கதைகொண்ட ஹரிதாஸ், உடல் உறுப்புதான விழிப்புணர்வை ஏற்படுத்திய சென்னையில் ஒரு நாள் இரண்டுமே மக்களின் பராட்டைப் பெற்றது. செ.ஒ.நா லாபம் சம்பாதித்தது. ஹரிதாஸ் புகழை மட்டும் சம்பாதித்தது.

மன்சூரலிகான் தனது லொள்ளு தாதா பராக் பராக் படத்துக்கும், ராஜகுமாரனின், திருமதி.தமிழ் படத்துக்கும் பண்ணிய பப்ளிசிட்டி கூத்துக்கள் பவர் ஸ்டார் இல்லாத குறையை போக்கியது.  


கூட்டி கழித்துப் பார்த்தால் 2013ம் ஆண்டின் முதல்பாதி ஹீரோக்களையும் ஜீனியஸ்களையும் சற்றே விலகி இரும் பிள்ளாய் என்று சொல்லிவிட்டு புதியவர்களுக்கு ரெட் கார்பெட் விரித்தது.

செய்திக்கு நன்றி : தினமலர்
படங்களுக்கு நன்றி : கூகிள் இணையம்
-'பரிவை'  சே.குமார்.

கலையாத கனவுகள் - 4

முன்கதைச் சுருக்கம்...

ஏழைக் குடும்பத்தில் பிறந்து  தந்தையில்லாமல் தாயின் அரவணைப்பில் வாழும் ராமகிருஷ்ணன் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு கல்லூரியில் சேர்கிறான். முதல் நாள் கல்லூரிக்கு செல்லும் அவனை அவனது தாயார் அக்கம் பக்கம் பார்த்து அனுப்பி வைக்கிறாள். அவனும் நண்பர்களுடன் கல்லூரிக்கு சென்று ராக்கிங் பயத்துடன் வகுப்பறையில் அமர்கிறான்... சில பெண்கள் வகுப்பறைக்கே வந்து மிரட்டிவிட்டுச் செல்ல... கல்லூரி ரவுடியிடம் மாட்டிக் கொள்கிறார்கள். ..

இதற்கு முன்னான பகுதிகளைப் படிக்க....

கலையாத கனவுகள் 1-ம் பாகம் படிக்க...  இங்கே சொடுக்கவும்...

கலையாத கனவுகள் 2-ம் பாகம் படிக்க...  இங்கே சொடுக்கவும்...

கலையாத கனவுகள் 3-ம் பாகம் படிக்க...  இங்கே சொடுக்கவும்...

இனி...

4. ராக்கிங் ராஜாங்கம்

பச்சைத் தாவணியை நோக்கி படபடக்கும் இதயத்துடன் நடந்து சென்றான் மரியக்கண்ணு. “மணி... அவனைக் கூப்பிடு... பெரிய ஆளா இருக்கான்... இவன் பாட்டுக்கு அவகிட்ட யுனிவர்சிட்டி சல்யூட் அடிச்சு செருப்படி வாங்கிடமா...”

“டேய் சத்யராஜ்...”

“அவன் மரியக்கண்ணுன்னு சொன்னான்...”

“வளர்ந்து இருக்கானுல்ல... அதான்... மரியக்கண்ணை சத்தியராஜ் ஆக்கிட்டேன்... டேய்... வளர்ந்து கெட்டவனே இங்க வா” என்று அவனைக் கூப்பிட்டான்.

“டேய் இங்க வா... உன் பேரு என்ன?”

“அண்ணாத்துரை...”

“ம்... நீ எங்களை அண்ணான்னு கூப்பிட்டா நாங்களும் உன்னைய அண்ணான்னு கூப்பிடனுமோ?” சிகரெட் புகையை அவன் முகத்தில் ஊதியபடி சிரித்தான் வைரவன். கல்லூரியின் முதல் தாதா. யாருக்கும் பயப்படமாட்டான். ஆசிரியர்களுக்கு இவன் வகுப்பிற்குள் வந்தால்தான் பயம். எப்பவும் தண்ணியில்தான் இருப்பான். அடிதடி என்றால் முதல் ஆளாய் நிற்பான். தள்ளாட்டமாய் எழுந்தவன் ‘...க்காலி... என்ன பர்ஸ்ட் இயர்லயே எகிறுறே...? இனி நாங்க உன்னைய சின்னானுதான் கூப்பிடுவோம்... நெஞ்சை நிமித்துறே... நெஞ்சே இருக்காதுடி...” என்றபடி அவனை தள்ளினான்.

“இப்ப என்ன வேணும் உங்களுக்கு... எம் பேரு அண்ணாத்துரை... அண்ணான்னு கூப்பிடுறது... டேய்யின்னு கூப்பிடுறதும் உங்க விருப்பம்...”

“என்னடா... எகத்தாளமா பேசுறே?”

“எகத்தாளம் எல்லாம் பேசலை... நீங்க கேட்ட்துக்கு சொன்னேன்... என்ன செய்யணும் சொல்லுங்க செய்யிறேன்...”

“...க்காலி... எல்லாரும் பம்முறாய்ங்க... நீ துள்ளுறே... ஆமா எந்த ஊருடா நீயி... எங்ககிட்ட பகைச்சுக்கிட்டா உன்னய செட்டைய ஒடிச்சுப்புடுவோம்...”

“....”

“என்னடா பேசாம நிக்கிறே?”

“ஒண்ணுமில்லண்ணே...”

“நீச்சலடிக்கத் தெரியுமா?”

“தெரியும்...”

“அப்ப அடி...”

“இங்கயா?”

“இங்கதான்... அடிடா...”

“தண்ணியிலதான் அடிக்க முடியும்... தரையில அடிடான்னா... எப்படிங்க... கொஞ்சம் யோசிச்சு சொல்லுங்க”

“என்ன எங்களுக்கே பாடம் நடத்துறியா...? ம்... இந்தா போறா பாரு ஊதா தாவணி அவளுக்கு ஒரு முத்தம் கொடுத்துட்டு வாறியா.. கிளுகிளுப்பா இருக்கும்... அடிடான்னா...”

“இல்ல டிரஸ் அழுக்காயிடும்... நான் பண்ண மாட்டேன்...”

“பண்ணுடான்னா...” என்று அவனை ஒருவன் தள்ளிவிட, மற்றொருவன் மண்டையில் தட்டினான்.

திரும்பி முறைத்தவன் “பூபாலன் தெரியுமா?” என்றான்.

“பூபாலனா... உனக்கு அவரு என்ன வேணும்...?” எதோ சாமி பேரைக் கேட்டு கன்னத்தில் போட்டுக் கொள்வது போல கையிலிருந்த சிகரெட்டை எறிந்துவிட்டு அவசரமாய்க் கேட்டான் வைரவன்.

“அவரு தம்பிதான் நான்...”

“பூபாலண்ணன் தம்பியா நீயி... அதை ஏன்டா நீ முன்னமே சொல்லலை...”

“அவரைச் சொல்லி தப்பிக்க நினைக்கலை...”

“ம்... அப்ப காலேசுக்கு அடுத்த ரவுடி வந்தாச்சு...”

“நா... படிக்கத்தான் வந்திருக்கேன்... ரவுடித்தனம் பண்ண வரலை... இப்ப என்ன நீச்சல் அடிக்கனும்... அடிக்கிறேன்...”

“நீச்சலா... நீயா... இன்னைக்கு நீச்சலடிப்பே... நாளைக்கு பூபாலண்ணன் எங்களை அடிக்கும்... நீங்க போங்கடா... இனி ஒருபய உங்க்கிட்ட வராம நான் பாத்துக்கிறேன்... ஆமா ஓரமா நின்னகட்டையா உன்னோட பேரென்ன சொல்லிட்டுப் போ...”

“ராமகிருஷ்ணன்”

“ராம்கியா... சரி... இனிமே நாம பிரண்ட்ஸ்... ஓகேவா... ஆனா மொத ஒரு மாசத்துக்கு எவனும் இன் பண்ணிக்கிட்டு வரக்கூடாது”

“சரிண்ணே...”

 “ம்... தாங்க்ஸ் அண்ணே...” என்ற ராம்கிக்கு இதே வைரவனுக்காக ஒருநாள் தானும் தடியை கையில் எடுக்க வேண்டி வரும் என்பது அப்போது தெரியாது... சினேகமாக அவனிடம் சிரித்து விடை பெற்றான்.

(தொடரும்)
-'பரிவை' சே.குமார்.

வியாழன், 4 ஜூலை, 2013

மாரி செல்வராஜின் மறக்கவே நினைக்கிறேன்

ஆணாகப் பிறப்பவர்கள் என்னவெல்லாம் ஆக முடியும்? அப்பாவாக, மகனாக, அண்ணனாக, தம்பியாக, நண்பனாக, எதிரியாக, துரோகியாக, பைத்தியக்காரனாக... முடிந்தால் தலைவனாக! அதே போல் பெண்ணாகப் பிறக்கிறவர்கள்? மகளாக, அம்மாவாக, அக்காவாக, தங்கையாக, அண்ணியாக, தோழியாக, காதலியாக, மனைவியாக, முடிந்தால் தெய்வமாக!
சரி... அரவாணியாகப் பிறக்கிறவர்கள்?

தூத்துக்குடி பழைய பஸ் ஸ்டாப்புக்கு அருகில் உள்ள எஸ்.ஏ.வி. பள்ளி மைதானத்தில் அன்று ஒரு பிரமாண்ட விழா. அந்த விழாவில் கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக நிறைய பள்ளிகளிலிருந்து மாணவ-மாணவிகள் குழுமியிருந்தார்கள். எப்போதும் எனக்குப் பிடித்தமான, 'கெடைக்கல... கெடைக்கல... பொண்ணு ஒண்ணும் கெடைக்கல...’ என்ற பாடலுக்கு லாரன்ஸாக வாரியளை வைத்துக்கொண்டு வளைந்து நெளிந்து ஆடி முடித்துக் கீழே இறங்கித் தண்ணீர் பாக்கெட்டால் முகத்தைக் கழுவிக்கொண்டிருந்தேன். திடீரென்று விசில் சத்தமும் கைத் தட்டலும் காதைக் கிழிக்க, திரும்பிப் பார்த்தால் அப்படியே 'படையப்பா’ நீலாம்பரி சாயலில் தகதகவென பரத நாட்டிய உடையோடும் நளினத்தோடும் ஒரு பெண் மேடை ஏறினாள்.

'மின்சாரப் பூவே... பெண் பூவே மெய் தீண்ட வேண்டும்’ பாட்டுக்கு அவள் ஆடத் தொடங்க... அந்த நடன நளினத்திலும் அவள் காட்டிய முகபாவனைகளையும் பார்ப்பதற்குப் பித்துப்பிடித்தது போலிருந்தது எங்களுக்கு. பாடலின் இடையே ரஜினி பாடுவதுபோல வரும்போதெல்லாம், 'தலைவரை வரச் சொல்லு... தலைவா எங்கே? வா தலைவா... தலைவா...’ என்று கூட்டம் கத்திக் கிழித்தது. 'யாராவது ஆடத் தெரிஞ்ச பையன் ரஜினியா மேலே போங்களேன்ப்பா... சூப்பரா இருக்கும்’ என்று விழா அமைப்பாளர்களே சொல்ல... 'எங்க லாரன்ஸ்தான் இன்னைக்கு ரஜினி’ என்று நண்பர்கள் அலேக்காக என்னைத் தூக்கி மேடைக்கு ஏற்றிவிட்டார்கள்.


நிஜமாகவே அந்தப் பெண் நீலாம்பரியாக அவ்வளவு ஆவேசமாக ஆடிக்கொண்டிருக்க, நான் உடனே 'படையப்பா’வாக மாற வேண்டிய கட்டாயம். வேக வேகமாகச் சட்டை பட்டன்களைக் கழட்டி, முடிகளைக் கோதிவிட்டு, முன்னாடி பின்னாடி இரண்டு நடை போட்டு,
'வெண்ணிலவைத் தட்டித் தட்டி
செய்துவைத்த சிற்பமொன்று கண்டேன்
அதன் விழிகளில் வழிவது அமுதல்ல
விஷமென்று கண்டேன்’ 
என்ற சரண வரிகளில் சடாரென முழு ரஜினியாக மாறி, அந்தப் பெண்ணின் விரல்களைப் பற்றியபோது எனக்கு உடல் சிலிர்த்தது. கூட்டம் இன்னும் கத்தக் கத்த... அவள் ஆட்டத்தில் சூடு பறந்தது. கடைசியாகப் பாடல் முடியும் தருணத்தில் சொல்லிவைத்தாற்போல மொத்தக் கூட்டமும் அந்தப் பெண்ணைப் பார்த்து, 'கிஸ் குடு... தலைவனுக்கு முத்தம் குடு... கிஸ் குடு...’ என்று கத்த, அந்தப் பெண் தயங்கித் தயங்கி கூட்டத்தையும் என்னையும் பார்த்தபடி நின்றாள். அந்த நொடி எதுவும் யோசிக்காமல், அந்தப் பெண்ணின் வலது கன்னத்தில் அழுத்தமாக ஒரு முத்தமிட்டேன்.

அது அவள் வாங்கிய முதல் முத்தமாக இருக்க வேண்டும். அவ்வளவு வெட்கத்துடன் தன் கால் சலங்கைகள் தெறிக்க மேடையை விட்டு அவள் ஓடும்போது கூட்டம் ஆர்ப்பரித்து அடங்கியது. கீழே வந்து தேடினேன். அவள் அந்தப் பக்கம் நின்றாள். நான் இந்தப் பக்கம் நின்றேன். அவள் என்னைப் பார்த்து முறைக்க, நான் அவளைப் பார்த்துச் சிரிக்க, அந்தப் புள்ளியில் அவளுக்கோ, எனக்கோ ஒரு முதல் காதல் கதை தொடங்குவதற்கான எல்லா அறிகுறி களும் அழகாக, அப்பட்டமாகக் காற்றில் கசிந்து கொண்டிருந்தது. அந்த நேரத்தில் விழா அமைப் பாளர்கள் மேடையில் கலைநிகழ்ச்சி நடத்திய மாணவ-மாணவிகளுக்குப் பரிசு வழங்க அழைத்தார்கள்.

''படையப்பாவாக மேடையேறிப் பட்டை யைக் கிளப்பி அழகான நீலாம்பரி கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்ட மாணவர் மாரிசெல்வம் அவர்களை மேடைக்கு அழைக்கிறோம். அப்படியே... எத்தனை கதாநாயகி வந்தாலும் எங்க நீலாம்பரிக்கு ஈடாகுமா என்பதைப் போல, அப்படியே அச்சுஅசல் ஒரு பெண்ணைப் போல, அந்த நீலாம்பரியைப் போலவே அவ்வளவு நளினத்துடன் பரதநாட்டியம் ஆடி படையப்பா வின் ஆசை முத்தத்தைப் பரிசாக வாங்கிய மாணவர் கார்த்தி அவர்களையும் மேடைக்கு அழைக்கிறோம்'' என்று அவர்கள் ஆரவாரமாகச் சொல்லி முடிக்க, 'புளிச்’ என்று என் முகத்தில் எச்சமிட்டுப் பறந்தது என் மனபட்சி!

நான் ஆசையாக, அழுத்தமாக முத்தமிட்டது, கார்த்தி என்ற ஒரு பையன் என்று தெரிந்ததும் கூனிக் குறுகிவிட்டேன். கசிந்துகொண்டிருந்த காதல் கதையில் நண்பர்கள் கேலியால் மண்ணை யும் கல்லையும் அள்ளிப்போட, அந்த கார்த்தி மேடை ஏறுவதற்குள் வேகமாகப் போய் என் பரிசை வாங்கிக்கொண்டு ஓடி வந்துவிட்டேன். 'இனிமேட்டு ஒரு நிமிஷம் அந்த மேடையில நின்னாலும் அது அந்த ஆறுபடையப்பனுக்கு அவ்வளவு அவமானம்’ என்று நினைத்தபடி நண்பர்களிடம் சொல்லிவிட்டு, ஓட்டமும் நடையுமாகக் கிளம்பி அலைந்து திரிந்தேன்.

ராஜ் தியேட்டர் பக்கத்தில் போகையில், ஒரு பெண் சைக்கிளில் வேகமாக வந்து என்னை மறித்து நிறுத்தினாள். வேற யாரு..? அந்த 'நீலாம்பரி’ கார்த்திதான்!

''வீடா... ஹாஸ்டலா? எந்தப் பக்கம்?''''ஹாஸ்டல்... டூவிபுரம் நாலாவது தெரு.''

''வா... அதைத் தாண்டி ரயில் ரோடுகிட்டதான் என் வீடு!'' - என்ன சொல்வதென்று தெரியாமல் பின்னால் ஏறி உட்கார்ந்துகொண்டேன்.

''எதுக்கு இப்படிப் புடைவை எதையும் கழட்டாமலே, பொம்பள மாதிரி அப்படியே போற?''

''இல்ல... எங்க அம்மாகிட்ட போய்க் காட்டணும். நீ லாரன்ஸ் மாதிரி, ரஜினி மாதிரி லாம் நல்லா ஆடுன!''

''நீயும்தான். ஆமா, ஒரு ஆம்பளைப் பையனா இருந்துக்கிட்டு, எப்படி இப்படிப் பரத நாட்டியம் கத்துக்கிட்ட?''

'' 'படையப்பா’ படம் பார்த்து!''

''படம் பார்த்தா?''

''ஆமா, எனக்கு பொம்பளைங்க மாதிரி ஆடுறதுன்னா, சின்ன வயசுல இருந்தே ரொம்பப் பிடிக்கும். டி.வி-யைப் பார்த்து அப்படியே ஆடிருவேன்!''

'உனக்கு எல்லாருக்கும் முன்னாடி முத்தம் குடுத்துட்டேன். தப்பா நினைச்சுக்காத. ஸாரி... சும்மா, ஜாலியாக் குடுக்கணும்னு தோணுச்சு. அதான் கொடுத்துட்டேன்!''

''ஏன் தோணுச்சி? நான் பொம்பளப் பிள்ளைனு நினைச்சுத்தான கொடுத்த!''

''ஐயையோ... அதெல்லாம் இல்ல. நீ ஆம்பளைனு எனக்கு முன்னாடியே தெரியும்!''

''பொய் சொல்லாத... முத்தத்த வாங்குன எனக்குத்தான தெரியும், நீ என்ன நினைச்சிக் கொடுத்தேனு!'  

அப்படியே ஒரு பெண்ணைப் போலவே அவ்வளவு நளினத்தோடு அவன் பேசிக்கொண்டு வந்தது ஆரம்பத்தில் எனக்கு அவ்வளவு பயமாக இருந்தது. அன்றோடு எனக்கும் அவனுக்குமான உறவு முடிந்துவிட்டது என்றுதான் நினைத்தேன். ஆனால், மறுநாளே என்னைப் பார்க்க விடுதிக்கு வந்துவிட்டான். வந்தவன் என்னிடம் ரொம்ப நாள் பழகியவன்போல ஏதாவது பேசுவான். பேசும்போது அவன் உடல் அசைவினை எல்லாரும் அப்படி நின்று வேடிக்கை பார்ப்பார்கள்.

'இனி, இங்க வராத கார்த்தி. எங்க வார்டன் ரொம்பத் திட்டுறாரு’ என்று பொய்கூடச் சொல்லிப் பார்த்தேன். ஆனாலும், அவன் விடுவதாயில்லை. தினமும் வருவான். வரும்போது வீட்டில் செய்த பண்டங்களை எல்லாம் எடுத்துவந்து கொடுப்பான். அவன் வந்தாலே போதும், விடுதியில் இருக்கும் மற்ற மாணவர்கள் எல்லாரும் அவ்வளவு கேலி பேசுவார்கள். 'என்ன கார்த்தி... இன்னைக்கு மாமனுக்கு என்ன கொண்டுவந்துருக்க?’ என்று அவர்கள் நக்கலாகக் கேட்டால், எதுவும் பேசாமல் சும்மா சிரித்துக்கொண்டு நிற்பான். 'கார்த்தி சிரிப்பப் பார்த்தா, அப்படியே கரகாட்டக்காரி கனகா மாரி இருக்குல்லா’ என்று சொன் னால், எதுவும் சொல்லாமல் வெட் கப்பட்டு நெளிவான். 'கார்த்தி நீ மட்டும் பொம்பளையாப் பொறந்திருந்தியோ, நிச்சயமா சினிமா நடிகைதான்’ என்று மட்டும் யாராவது சொல்லிவிட்டால் போதும், எந்த இடமென்றும் பார்க்க மாட்டான்... அவர்களைக் கட்டிப்பிடித்துக்கொண்டு கலகலவென அப்படிச் சிரிப்பான் கார்த்தி.

சில நாட்கள் அவன் வீட்டில் அம்மா-அப்பா இல்லாத நேரங்க ளில் வலுக்கட்டாயமாக அழைத்துப் போய் அவனே காபி போட்டு ஒரு பெண்ணைப்போல ஆடி அசைந்து வந்து, 'யார் எங்க வீட்டுக்கு வந்தாலும் என் தங்கச்சி இப்படித்தான் காபி குடுப்பா’ என்று சொல்லி காபியை நீட்டுவான். திடீரென டேப்ரிக்கார்டரில் சினிமா ஜோடி பாடல்களைப் போட்டு ஆடுவதற்கு அழைப்பான். அவன் விரல்களைப் பற்றி ஆடும்போது, எந்தப் பாட்டுக்கு ஆடுகிறோமோ, அந்தப் பாட்டில் ஆடிய நடிகையின் விரலையே பற்றி நான் ஆடுவதுபோல் இருக்கும். கொஞ்ச நாட்கள்தான் பழகினாலும், பழகப் பழக... எனக்கு அவனைப் பிடித்திருந் தது. காரணம், அந்த நாட்களில் ஏதோ ஒரு புள்ளியில் எங்களுக்குள் ஓர் அழகான சினேகம் நிச்சயமாகத் தொடங்கியிருந்தது.  

ராஜாஜி பார்க்கில் வைத்து எத்தனை நாள், எவ்வளவு கதைகள் அழுதபடி சொல்லியிருக் கிறான் கார்த்தி. தன் தங்கச்சி உடைகள் மீது பிரியப்பட்டு, அதில் தனக்குப் பிடித்தமான உடை களை ஆசையாக யாருக்கும் தெரியாமல் எடுத்து ஒளித்துவைத்ததற்காக அம்மா அவன் காலில் சூடு வைத்தது, பள்ளியில் நோட்டுப் புத்தகங்களில் எல்லாம் கார்த்தி என்ற தன் பெயருக்குப் பதிலாக கார்த்திகா என்று எழுதிவைத்ததற்காகவும், பெண் கள் பாத்ரூமுக்குள் போனதற்காகவும் ஹெட்மாஸ்ட ரும், ட்ரில் மாஸ்டரும் ஒருநாள் முழுக்க அடித்துத் துவைத்தது, ஊரிலிருந்து வந்திருந்த பாட்டி முன்னால் அப்பாவிடம் அம்மா சண்டை போடுவதுபோல, அப்பாவை அம்மா கொஞ்சு வதைப் போல நடித்துக் காண்பித்த தற்காக, அப்பா அவனைத் தலைகீழா கத் தொங்கவிட்டது என ஒவ்வொரு நாளும் வந்து ஒவ்வொரு கதை சொல்லி, ஓர் அழகான பெண்ணைப் போல அப்படிச் சிரிப்பான் கார்த்தி. அந்த நேரத்தில் அவனை ஆசையாக கார்த்திகா என்று கூப்பிட வேண்டும் போலிருக்கும் எனக்கு. அப்படிக் கூப்பிட்டால் எங்கே கட்டிப்பிடிச்சு முத்தம் கொடுத்துவிடுவானோ என்ற பயத்தில் கூப்பிட்டதில்லை.


ஒரு நாள் பள்ளிக்கூடத்தில் என்னைத் தேடி என் அக்கா வந்திருப்பதாகச் சொன்னார்கள். 'அக்காவா... இங்கேயா?’ என்று பதறி ஓடினால், அப்படியே அச்சுஅசல் ஒரு பெண்ணைப் போல அலங்கரித்துக் கொண்டு கையில் பெரிய பையோடு கார்த்தி பள்ளிக்கூட வாசலில் நின்றிருந்தான். பார்த்தவுடன் அவ்வளவு கடுப்பாகிவிட்டது எனக்கு. நான் திட்டத் தொடங்குவதற்குள்ளாகவே பொலபொலவெனக் கண்ணீர் வடித்துவிட்டான் அவன். அழுதபடியே சொன்னான்...

''எங்கம்மா, அப்பா, தங்கச்சி எல்லாரும் இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்குப் போயிட்டாங்க!''

''அதனால என்னடா?''

''போகும்போது என்ன சொல்லிட்டுப் போனாங் கன்னு தெரியுமா?''

''என்ன சொல்லிட்டுப் போனாங்க?''

''நாங்க வர்றதுக்குள்ள எங்கேயாவது ஓடிரு. இல்ல ரயில்ல விழுந்தாவது செத்துரு. திரும்பி வரும் போது ஊர்ல மட்டும் இருந்த, நாங்களே உன்னை விஷம்வெச்சிக் கொன்னுருவோம். உன் பாவத்தக் கழுவுறதுக்குத்தான் நாங்க கோயிலுக்கே போறோம்னு சொல்லிட்டு, கைல ஆயிரம் ரூபாயும் குடுத்துட்டுப் போயிருக்காங்க!''

அப்படியே நொறுங்கிவிட்டேன். ஆணாகப் பிறந்து, பெண்ணாக வாழ நினைக்கும் இவன் இப்போதைக்குச் சாக வேண்டுமா... வாழ வேண்டுமா? சாவதென்றால் ஏன் சாக வேண்டும்? வாழ்ந்தால் எங்கு வாழ வேண்டும்? எவ்வளவு யோசித்தும் எதுவுமே புரியாமல் அவன் அழுவதை, கதறுவதை வேடிக்கை பார்ப்பது அவ்வளவு கொடூரமாக இருந் தது எனக்கு.

''இப்ப என்ன பண்ணப்போற?''

''எங்கேயாச்சும் போகப்போறேன்!''

''பேசாம கொஞ்ச நாளைக்கு உங்க சொந்தக்காரங்க யார் வீட்லயாவது போய் இரு!''

''அங்கல்லாம் நான் போனா, எங்க அம்மா-அப்பா செத்துருவாங்கடா!''

''அப்படின்னா எங்கேதான் போவ?''

''கண்டிப்பா என்னை மாதிரி எங்கேயாச்சும் நிறையப் பேர் இருப்பாங்க. அவங்களைத் தேடிப் போறேன். நீ என்கூட பஸ் ஸ்டாண்டு வரைக்கும் வர்றியா மாரி?''

''எப்ப திரும்ப வருவ?''

''தெரியலடா!''

அது மதுரை பஸ் என்று நினைக்கிறேன். அதில் தான் ஏறினான். இன்னுமென்ன ஏறினான்..? 'ஏறினாள்’ என் கார்த்திகா!

பஸ் கிளம்பும்போது அவசரமாக என்னை உள்ளே கூப்பிட்டு எந்தக் கூச்சமும் இல்லாமல் யாருக்கும் துளியும் பயப்படாமல் நான் கொடுத்த முத்தத்தை அதே வலது கன்னத்தில் திருப்பிக் கொடுத்துவிட்டு, சிரித்தபடி மறைந்துபோனாள் 'நீலாம்பரி’ கார்த்திகா. அன்றிலிருந்து பத்து வருடங்களாக போகிற ரயிலில் பிச்சை எடுக்கிற, அதிவேக சாலைகளில் கையை நீட்டி மறிக்கிற, ஏதாவது காவல் நிலையத்தின் வாசலில் எப்போதும் காத்திருக்கிற, கிராமத்துத் திருவிழா மேடைகளில் நயன் தாராவாக ஆடுகிற எத்தனையோ திருநங்கைகளின் முகத்தில் கார்த்திகாவைத் தேடி அலைந்தபடிதான் இருந்தேன்.

கடைசியாக 'கற்றது தமிழ்’ திரைப்படம் வெளியான அன்று தியேட்டர் ரவுண்ட்ஸுக்காக தூத்துக்குடி போனபோது, கார்த்திகா வீட்டுக்குப் போயிருந்தேன். அவளுடைய அம்மாவும் அப்பாவும்தான் இருந்தார்கள். என்னை அவர்களுக்கு அடையாளம் தெரியவில்லை. 'கார்த்தி’யின் நண்பன் என்று சொல்லித்தான் விசாரித்தேன். கார்த்தி என்ற பெயரைக் கேட்டதுமே அவர்கள் கதறி அழத்தொடங்கிவிட்டார்கள். அப்படியே நிமிர்ந்து பார்த்தேன். வாசலில் பள்ளிச் சீருடையில் இருந்த கார்த்தியின் புகைப்படத்துக்கு ஒரு பெரிய மாலை போட்டிருந்தார்கள்.

கார்த்தி இறந்துவிட்டான். அது எனக்கு எப்பவோ தெரியும். என்னோட கார்த்திகா எங்கே போனாள்... அதைச் சொல்லுங்க..?

எழுத்து : மாரி செல்வராஜ், ஓவியங்கள்: ஸ்யாம்

நன்றி : ஆனந்த விகடன்.
-'பரிவை' சே.குமார்.