மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

புதன், 3 ஜூலை, 2013

கற்பனையாய் ஒரு காதல் கடிதம் (போட்டிக்காக)

சிவமயம்
முருகன் துணை
03/07/2013

'அன்பே...
ஆருயிரே...
அருமருந்தே...
அடிக்கரும்பே...
அழகே...
கண்ணே...
மணியே...
கற்கண்டே...
மானே...
தேனே...
நிலவே...' என்றெல்லாம் உன்னை வர்ணித்து எழுத எனக்கு எண்ணமுமில்லை.... தோன்றவுமில்லை...

'அடி ஆவாரங்காட்டுக்குள்ள ஆடோட்டும் புள்ள...'
அப்படின்னு உன்னை நினைத்து பாட்டோட ஆரம்பிக்க நீ அன்னக்கொடியும் இல்லை நான் கொடி வீரனும் இல்லை.

காதல் கடிதம் என்றாலே அதை ஆரம்பிக்கும் போது தேனாய் ஆரம்பித்து தித்திப்பாய் முடிக்க வேண்டுமாம். காதலிப்பவர்கள் சொல்கிறார்கள். எனக்கு அப்படியெல்லாம் ஆரம்பிக்கத் தோன்றவில்லை. எல்லாருக்கும் எழுதுவது போல் உன் பெயரைச் சொல்லி அன்புள்ள என்று ஆரம்பித்தால் பின்பு நலம் நலமறிய ஆவல்ன்னு உறவுக்குள் எழுதும் கடிதம் போலாகிவிடும் போல.

என்ன எழுதுவது... எப்படி எழுதுவது என யோசித்து யோசித்தே நாட்கள் கழிகின்றன கிழிகின்ற காகிதங்களோடு... என் காதலை ஏற்பாயா...? மறுப்பாயா...? எதுவும் தெரியாமல்தான் இத்தனை நாளாய் யோசித்த என் காதல் கடிதத்தை இப்போது எழுதப் போகிறேன்... பத்தாவது ரிசல்ட்டின் போது பரிதவித்த நெஞ்சம் போல் உன் பதிலுக்காய் காத்திருக்கப் போகிறேன் என்று நினைக்கும் போதே, ஞாயிறு காலை அம்மா கொடுக்கும் வேப்ப எண்ணையை நினைத்து வெள்ளிக்கிழமையே குடலைப் பிரட்டுவது போலத்தான் என் நிலை இருக்கிறது. என்ன செய்வது... என் காதலை உன்னிடம் கொண்டு சேர்க்க நண்பர்கள் கொடுத்த உபாயத்தில் எனக்கு பொருத்தமாய் தோன்றியது இதுதான்.

சரி கதை பேசாமல் காதலைப் பேசுவோம் வா...

என்னவளே... (தோன்றியதால் அழைக்கிறேன்... ஆவதும் ஆகாததும் உன் பதிலில்...)

எங்கே.. எப்போது... எப்படி... நீ என்னுள் நுழைந்தாய் என சன் செய்திகளுக்கு இடையே கேள்வி கேட்பது போல் எனக்குள் கேட்டு ஆற அமர அசைபோடும் மாடாய் கடந்த நாட்களின்  நினைவுகளை அசைபோட்டு திரும்பிப் பார்க்கிறேன்...

அது ஒரு பொங்கல் நாள்... ஊரே கோவில் வாசலில் பொங்கல் வைக்கிறது... எங்க அம்மாவுக்கு அருகில் பொங்கல் வைக்கும் உங்கம்மாவுக்கு உதவியாய் நீ... அப்போதுதான் பார்க்கிறேன்... புதுப் பாவாடை சட்டையில் கிராமத்து தேவதையாய் நீ... எப்போதும் பார்த்த நீ இப்போது புத்தரிசிப் பொங்கலாய்... உன்னை நெருக்கமாய் பார்க்கவே அம்மா அருகில் நிற்கும் அக்காவிடம் என்ன வேணுக்கா என நெருங்கி வருகிறேன்... நீயும் துருவி வைத்த தேங்காய்ப் பூவாய் சிரித்து வைக்கிறாய்... பொங்கும் பாலாய் எனக்குள் இறுக்கமாய் அமர்ந்து கொள்கிறாய்.

எப்படி இந்த மாற்றம்... என் யோசனையில் தீப்பிடிக்கவே இல்லை... எனக்குள் பட்டாம்பூச்சிகளும் பறக்கவில்லை... வெள்ளை தேவதைகள் என்னைச் சுற்றிவரவில்லை. ஏனோ உன்னை உட்கொள்ள கண்கள் தவித்தன... அடிக்கொரு முறை பாலுமகேந்திராவின் கேமராவாய் உன்னை உள்வாங்கிக் கொண்டன... உன் வனப்பு என்னை ஈர்த்ததா என்றால் நிச்சயமாக இல்லை... உன் நினைப்பு மட்டுமே என்னை ஆட்கொண்டது.

அதன் பின் வந்த நாட்களில் நீ பள்ளி செல்லும் போதெல்லாம் கண்மாய் கரையில் காத்துக்கிடந்தேன்... என்னுடன் என் சைக்கிளும் சேர்ந்தே கிடந்தது. என்னைப் போலவே உன்னைச் சுற்றிய சிலர் என்னை எதிரியைப் போல் கூட பார்த்தார்கள்... பூ என்றால் வண்டுகள் சுத்தத்தானே செய்யும்... அதுவும் காட்டுமல்லியாக இருந்தால் பரவாயில்லை முல்லைப்பூ யாருக்கு என்பதில் வண்டுகளுக்குள் சண்டை வரத்தானே செய்யும். எதிரிகளை பற்றி யோசிக்க இது நேரமா என்ன என உன்னைக் கவர்வதில் கண்ணாய் இருந்தேன்... நீ எப்பவும் போல் பேசினாய்.. சிரித்தாய்... என்னிடம் மட்டுமல்ல எல்லாரிடமும்தான்... ஆனால் என்னால்தான் எப்பவும் போல் இருக்க முடியவில்லை.

உனக்கு ஞாபகம் இருக்கிறதா? ஒரு மழை நாள்... அடித்துப் பெய்த மழை அவசரமாய் ஓய்ந்தது. நாம் மாடுகளை மேய்ச்சலுக்கு அவிழ்த்துச் சென்றோம். சுரேஷ், பாலா, சுதா, சுந்தரி, நான், நீ எல்லாரும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். நீ கொறிப்பதற்கு பட்டாணி கொண்டு வந்திருந்தாய்... கூடவே வெல்லகட்டியும்... எல்லாருக்கும் அள்ளிக் கொடுத்த நீ என்னை மட்டும் எடுத்துக்க என்றாய். அவனுக்கு மட்டும் என்ன சலுகை ஆதங்க ஆத்திரத்துடன் சுரேஷ் கேட்க,  அவனை எடுத்துக்கச் சொன்னா நீ ஏன் ஆத்திரப்படுறே... உனக்கென்ன வந்தது... நான் யாரை வேணுமின்னாலும் எடுத்துக்கச் சொல்லுவேன்? என்றாய் படக்கென்று... சுரேஷ் வாயடைக்க... நீ  என்னை பார்த்துப் புன்முறுவல் பூத்தாய்.

அந்தப் புன்னகைக்கு என்ன அர்த்தம்...? யோசித்தபடி பார்க்கிறேன் களங்கமில்ல உன் முகத்தில் அர்த்தம் தேடி என்னால் ஆராயமுடியவில்லை. நீயோ எப்பவும் போல யாருக்கு வெல்லக்கட்டி வேணுமின்னு கேட்டபடி உனது தாவணி ஒரத்தில் வெல்லத்தைக் வைத்துக் கடித்துக் கொடுத்தாய்... நீ வேண்டும் என்று செய்தாயா... இல்லை உண்மையில் மறந்தாயா என்று தெரியவில்லை எனக்கு மட்டும் தாவணி விடுத்து பற்களால்கடித்துக் கொடுத்தாய். உன் உதடுகள் தீண்டிய எச்சில் எனக்கு இனித்தது.

சோர்ந்திருந்த மழை மீண்டும் சோவென ஆரம்பிக்க, குடைக்குள் அடைக்கலமானோம் நாம்... பிளாஸ்டிக் கவர் வைத்திருந்த சுந்தரியை அருகே அழைத்த நீ உன் குடைக்குள் இடம் கொடுத்திருக்கலாம் ஆனால் அவளிட்ம் உன் குடையையே கொடுத்தாய்... அடுத்து நீ செய்ததுதான் ஆச்சரயம்... சனி மூலையில் வெட்டும் மின்னலாய் யாரும் எதிர்பாராமல் என் குடைக்குள் நுழைந்து கொண்டாய்... மற்றவர்கள் கேட்கும் முன்னரே அவளோட கவர் சரியில்ல பாவம் நனையுறா... அதான் எங்கொடையை கொடுத்தேன்... நீதானே பெரிய குடை வச்சிருக்கே... அதான் இதுக்குள்ள வந்துட்டேன் என்றாய். நீ என்ன நினைத்து வந்தாயோ எனக்குத் தெரியாது... ஆனால் அன்று மட்டுமல்ல அதன் பிறகான மழை நாளில் கூட எனக்கு குடைக்குள் மழை பெய்தது.

தினசரி செய்கையில் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக என்னுள்ளே நீ விதையாய் வீழ்ந்து விருட்சமாய் வளர்ந்து நின்றாய்...

ஒரு அந்தி நேரம், நான் மாடுகளை கொள்ளையில் விட்டு விட்டு ரோட்டோரம் அமர்ந்து நியூட்டனின் விதியை விடாமல் படித்திக் கொண்டிருந்தேன். டியூசன் முடித்து சைக்கிளில் வந்த நீ, என்ன பயங்கர படிப்பா இருக்கு? என்றபடி காலூன்றி கேட்டாயே ஞாபகம் இருக்கா? அன்று உன் பார்வையில் என்றுமில்லாத வித்தியாசம் உணர்ந்தேன். நாளைக்கு பரிட்சை இருக்கு அதான் என்றதும் அப்ப இன்னைக்கு அம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட வரமாட்டியா? என்று நீ கேட்டுச் சென்றததில் உன் ஏமாற்றம் அப்பட்டமாகத் தெரிந்தது. என்ன செய்வது எனக்குப் பரிட்சை என்றால் என் அம்மாவுக்கு பசிக்காது. எங்கும் விடமாட்டார்கள். படிக்க முடியாமல் பரிதவித்த எனக்கு  நீ கோவிலுக்கு வரவில்லை என வந்தும் வராததுமாய் அக்கா சொன்னதும் நியூட்டனின் விதி அழகாய் விளங்கியது. அதன்பின்னான சந்திப்பில் ஏன் போகவில்லை என நானும் கேட்கவில்லை... நீயும் சொல்லவில்ல...

கல்லூரி செல்ல குளிப்பதற்காக புதுக்கண்மாய்க்குச் சென்ற போது நீயும் சுந்தரியும் நீந்திக் கொண்டிருக்கிறீர்கள். என்ன கரெக்டா வந்திருக்கே... முன்னாடியே அழைப்பு வந்திருச்சோ என்ற சுந்தரியை நீ அதட்டுகிறாய்... என்னை ஓரக்கண்ணால் பார்த்து புன்னகைக்கிறாய். உன் குளிர்விக்கும் புன்னகையால் குளிர்ந்த நீருக்குள் பனிக்கட்டியாய் நான் பயணிக்கிறேன்... கரையேறிய போதும் கரையேறாமல் சுந்தரியின் கேள்வியும்... உன் புன்னகையும்... அதன் பிறகு தினமும் புதுக்கண்மாய் உன்னையும் என்னையும் குளிப்பாட்டியது... சுந்தரி அந்நியப்பட்டுப் போனாள்.

விளங்கியும் விளங்காத அல்ஜீப்ரா போல தொடரும் பொழுதுகளில் அக்காவை பார்க்கும் சாக்கில் அடிக்கடி என் வீடு வருகிறாய்... உரிமையோடு என் புத்தகங்களை மேய்கிறாய். என்னைப் பற்றி அக்காவிடம் பேசுகிறாய்... பேசுவது அக்காவுடன் என்றாலும் அடிக்கடி செருமுகிறாய்... என் திரும்பலில் அடங்குகிறது உன் செருமல்... என்னை உன் கண்களால் கைது செய்கிறாய்... உன் காந்த விழிகளின் ஜாலத்தால் எனக்குள் ஈர்ப்பு... சிலிர்ப்பு... தவிப்பு... துடிப்பு... மகிழ்ச்சி...  என எல்லாம் மழை நேரத்து வானவில்லாய் ஜாலமிட்டது இப்போதும் சில்லிப்பாய் என் நினைவுக்குள்...

இப்படியே போனால் எப்படி..? ஒருவருக்கு  ஒருவர் சொல்லிக் கொள்ளாமல் என்ன காதல்டா இது...? டேய் இது சினிமா இல்லையடா வாழ்க்கை மனதில் உள்ளதை சொல்லிவிடு என்ற நண்பர்களின் தூபத்துக்கு ரொம்ப நாளாய் யோசித்து எடுத்த முடிவுதான் இந்தக் கடிதம்...

எனக்கு ரத்தினச் சுருக்கமாக எழுத வரவில்லை... நான் காதலிக்கிறேன்... நீயும் காதலிக்கனுமின்னு மிரட்டத் தெரியவில்லை... என்னைக் காதலிக்கிறாயா? என்று படக்கென்று கேட்க தைரியம் இல்லை... எனக்குள் இருக்கும் காதலை எப்படிச் சொல்வது என்றும் தெரியவில்லை... வெள்ளைக் காகிதத்தில் விளங்கும்படி எழுதியிருக்கிறேன்.

நீ அறியாமலோ அறிந்தோ உன் காதலை என்னுள் விதைத்துச் சென்றாய்... அது மலர்ந்து மணம் வீசுவதோ... இல்லை மடிந்து போவதோ... உன் பதிலில்தான் இருக்கிறது. எப்படியிருந்தாலும் முதல் காதல் மூச்சிருக்கும் வரை மூழ்காதிருக்குமாம்... எத்தனை உறவுகள் வந்தாலும் உன்னை என்னுள் சுமந்துதான் என் மீது மண் சுமப்பேன் என்பதே சந்தோஷம்தானே...

'ஆயிரம் முத்தங்களுடன் அத்தான்' என்றோ... 'உனக்காகவே காத்திருக்கிறது என் உயிர்' என்றோ... வசனம் பேச எனக்குப் பிடிக்கவில்லை...  வரலாற்றுக் காதல்கள் வரலாறாய் இருக்கட்டும்... நம் காதல் வரலாறை எழுதட்டும்...

காத்திருக்கிறேன்.... காதலிப்பாய் என்ற நம்பிக்கையுடன்...

காதல் வாழட்டும்... அதில் நாமும் வாழ்வோம். 
காதலுடன்
உன்னவன் (நீ நினைத்தால்...)

நண்பர் சீனு அவர்களின் 'திடங்கொண்டு போராடு' வலைப்பூவில் அறிவித்திருந்த  'காதல் கடிதம்' பரிசுப் போட்டிக்காக எழுதியது இது . போட்டி குறிதத் விவரம் அறிய கீழே இருக்கும் இணைப்பைச் சுட்டுங்கள்....


-'பரிவை' சே.குமார்

                                                          

புற்று நோயின் பிடியில் பிரபல இயக்குநர் ராசு மதுரவன்?


புற்று நோயின் பிடியில் பிரபல இயக்குநர் ராசு மதுரவன்!
சிகரெட், போதைப் பாக்கு, போதைப் புகையிலை... இவற்றில் ஏதாவது ஒன்றைப் பற்றிக்கொள்ளாத சினிமாக்காரர்கள் ரொம்பக் கம்மி. 


மற்றவர்கள் இந்தப் பழக்கங்களுக்கு ஆளாகி உயிரை சிறுகச் சிறுக போகடித்துக் கொண்டிருப்பவர்களே. இந்தப் பழக்கத்தால் கேன்சர் நிச்சயம் என்று தெரிந்தும் அதை விடாமல் பிடித்துக் கொண்டிருப்பது வாடிக்கையாகிவிட்டது. 


'இது மிகவும் கொடியது' என அரசுத் தரப்பு நியூஸ் ரீலை, சிகரெட் ஊதியபடிதான் சினி்மாக்காரர்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் ராசு மதுரவன் நிலையை நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டும். 

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவன் ராசு மதுரவன். மறைந்த மணிவண்ணனிடம் பணியாற்றியவர். பூமகள் ஊர்வலம் என்ற படத்தில் இயக்குநராக அறிமுகமானார். குடும்பம், கிராமத்து உறவுகளை அருமையாகச் சித்தரித்த மாயாண்டி குடும்பத்தார் படம் இவர் உருவாக்கியதுதான். 


இவருக்கு இப்போது நாக்கு மற்றும் தொண்டை பகுதியில் கேன்சர் நோய் பரவியிருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்து தீவிர சிகிச்சை செய்து வருகின்றனர். 

இது கொஞ்சம் முற்றிய நிலையில் இருப்பதால், உறவினர்களும் நண்பர்களும் அதிர்ந்து நிற்கிறார்கள். 

காரணம், இந்த சிகரெட் மற்றும் பாக்குப் பழக்கம்தான் என்பதை தெளிவாகச் சொல்லிவிட்டார்கள் மருத்துவர்கள். 



மக்கள் நன்கறிந்த ஒரு கலைஞன் கண்ணெதிரே புற்றின் கோரப் பிடியில் சிக்கித் தவிக்கிறார் புகைப் பழக்கத்தால். புகையின் பிடியில் சிக்கிக் கொண்டிருக்கும் திரையுலக கலைஞர்களும் மற்றவர்களும், எப்படி அதிலிருந்து வெளிவரப் போகிறார்கள்?

-நன்றி : தட்ஸ் தமிழ் இணையம்
-'பரிவை' சே.குமார்.

செவ்வாய், 2 ஜூலை, 2013

எதிர்கட்சி தலைவர் பதவியை இழப்பாரா கேப்டன்?


ராஜ்ய சபா தேர்தலில் விஜயகாந்துக்கு வெற்றி இல்லை என்றாலும் கலைஞரை கலங்க வைத்தது... காங்கிரஸை திணற வைத்தது... எம்புட்டு அடிச்சாலும் தாங்குறானேடா என்று ஜெயலலிதாவை திகைக்க வைத்தது என தனது ஓட்டு வங்கியைக் காப்பாற்றி வெற்றி கண்டார்.

தமிழக அரசியலில் இருபெரும் திராவிடக் கட்சிகளுக்கு இடையில் சிக்கி சின்னாபின்னமாவதுதான் தொன்றுதொட்டு உதிரிக்கட்சிகளின் நிலையாக இருக்கிறது. மதிமுக, பாமக,விடுதலை சிறுத்தைகள், புதிய தமிழகம் என எல்லாருமே ரோடு ரோலரின் அடியில் மாட்டிய கரும்பு போல் ஆனார்கள் என்பதே உண்மை. 


இந்நிலையில்தான் கேப்டன் விஜயகாந்தும் தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் என்ற கட்சி ஆரம்பித்து தனித்தே போட்டி என்று சொல்லி அதிலும் ஒரு எம்.எல்.ஏ. சீட்டை வென்று தனது கட்சியை இரு பெரும் திராவிடக் கட்சிகளுக்குப் போட்டியாக வளர்த்தார். கடந்த தேர்தலின் போது தனது தனித்துப் போட்டி என்ற நிலைப்பாட்டில் இருந்து இறங்கி ஜெயலலிதாவுடன் இணைந்து போட்டியிட்டு 29 இடங்களைக் கைப்பற்றி தமிழக அரசியலில் எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தைப் பெற்றார். மாநிலக் கட்சிகள் மட்டுமின்றி தேசிய கட்சிகளையும் தன்னைத் திரும்பிப் பார்க்க வைத்தார். 

அவருக்கும் ஜெயலலிதாவுக்குமான கூட்டு தாமரை இலைத் தண்ணீர் போல் ஓட்டாமல் இருந்து, தாக்குப்பிடிக்க முடியாமல் ஒருநாள் உடைந்தது. அதற்குப் பின்னான நிகழ்வில் இருவருக்கும் இடையேயான மோதல் வலுக்க ஆரம்பித்தது. இவர்கள் பிரச்சினை பெரிதாகிக் கொண்டே போனதற்கு மற்றொரு காரணம் தொண்டர்களால் அண்ணி என்று அன்போடு அழைக்கப்படும் விஜயகாந்தின் மனைவி பிரேமலதாவின் வாய்த்துடுக்கான பேச்சுக்கள்தான் என்பதில் தொண்டர்களுக்குள் மாற்றுக் கருத்து இல்லை.

அதன் பிறகு ராஜ்யசபா தேர்தலில் விஜயகாந்த் வெற்றி பெறக்கூடாது என்ற முனைப்போடு ஜெயலலிதா செயல்பட ஆரம்பித்தார். பணம் என்றால் பிணமும் வாயைப் பிளக்கும் என்ற பழமொழிக்கு இணங்க, எதிர்கட்சி எம்.எல்.ஏ. என்ற பெயரை வைத்துக் கொண்டு என்ன செய்ய முடியும் என சிந்தித்த சில மக்கள் தொண்டர்களான எம்.எல்.ஏக்கள் கோடிக்கு மயங்கினார்கள். 

இதில் முக்கியமாக விஜயகாந்துக்கு மிகவும்  நெருக்கமான மைக்கேல் ராயப்பனும் அருண்பாண்டியனும் மக்கள் தொண்டு ஆற்றுவதற்காக, மக்கள் பிரச்சினையை தீர்ப்பதற்காக ஜெயலலிதாவை சந்தித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. முதலில் 29ல் 5பேர் மக்களுக்காக கட்சிக்கு எதிராக அணிவகுத்தார்கள். பின்னர் 2 பேர் யோசித்துப் பார்த்து 5 தொகுதி மக்களும் நல்லா இருக்காங்க நம்ம மக்கள்தான் பாவம் ஒண்ணுமே இல்லாம கஷ்டப்படுறாங்க என ஜெயலலிதாவை பார்த்து பேசினார்கள்.

இதற்கிடையில் சட்டசபையில் 6 எம்.எல்.ஏ.க்கள் சஸ்பென்ட், விஜயகாந்த் சஸ்பென்ட்... விஜயகாந்த் மீது அவதூறு வழக்குகள் என நாளொரு நாடகம் அரங்கேறிக் கொண்டிருந்தது. அறிக்கையில் கேப்டன் பிரபாகரனாக... சேதுபதி IPS ஆக... ரமணாவாக ஜொலித்த விஜயகாந்தின் ஜம்பங்கள் ஜெயலலிதா முன்னர் எடுபடவில்லை என்பதே உண்மை. 

ராஜ்யசபா தேர்தலில் தங்களுக்கு வாக்களிக்க வேண்டும் என அதிருப்தி எம்.எல்.ஏக்களை விஜயகாந்தும் பண்ருட்டியாரும் கேட்டுக் கொண்டார்கள். ஆனால் நடந்தது என்ன என்பதை நாடறியும். ஜெயலலிதா சொன்னவருக்கு வாக்களித்து தாங்கள் மக்கள் தொணடை மட்டுமே செய்ய நினைக்கிறோம் என்று சொல்லாமல் சொல்லிவிட்டார்கள். 

vijayakanth 20 vijayakanth 20

அடிபட்டு வீழ்ந்து மீண்டும் எழுந்த ஹானஸ்ட்ராஜாக ராஜ்யசபா தேர்தலுக்குப் பிறகு கட்சியை மதிக்காத எம்.எல்.ஏக்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி தற்காலிகமாக சஸ்பென்ட் செய்துள்ளார். ஆனால் இதில் என்ன கூத்து என்றால் நாங்கதான் அதிருப்தியாளர்களா மாறிட்டோமே எதுக்கு விளக்கம் கேட்கிறீங்க... கட்சியை விட்டே நீக்குங்கள் என் மைக்கேல் ராயப்பன் கிண்டல் செய்துள்ளார்.

ஏழு பேரையும் கட்சியை விட்டும் நீக்கும் பட்சத்தில் தே.மு.தி.க. 22 எம்.எல்.ஏக்களுடன் சட்டசபை எதிர்கட்சித் தலைவர் பதவியை இழக்கும். இந்தச் சந்தர்பத்துக்காகவே காத்திருக்கும் தி.மு.க எதிர்கட்சியாகிவிடும். ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தைப் பெறுவார். விளக்கம் கேட்டிருக்கும் விஜயகாந்த் ஏழு பேரையும் கட்சியின் அடிப்படை தொண்டர் பொறுப்பிலிருந்து நீக்குவாரா? எதிர்கட்சித் தலைவர் பதவியை இழப்பாரா? என்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக விவாதிக்கப்படுவதாக பத்திரிக்கை செய்திகள் தெரிவிக்கின்றன. 

எதிர்கட்சி தலைவர் பதவி என்பதை விஜயகாந்த் விரும்புவது போல் தெரியவில்லை. அதற்கு அவருக்கு நெருக்கமானவர்கள், எதிர்கட்சித் தலைவருக்கு என சட்டசபையில் ஒதுக்கப்பட்ட அறையில் முன்பு எம்.எல்.ஏக்களுடன் ஆலோசனை நடத்தி முடிவெடுப்பார். பின்னர் அந்த அறை இரண்டாக பிரிக்கப்பட்டு பாதி காங்கிரஸ் எம்.எல்,ஏக்களுக்கு கொடுக்கப்பட்டுவிட்டதால் அதை தலைவர் பயன்படுத்துவது இல்லை என்கிறார்கள்.

மேலும் எதிர்கட்சித் தலைவர் என்ற முறையில் அவருக்குக் கொடுக்கப்பட்டிருந்த சைரன் பொருத்தப்பட்ட காரை இன்னும் அவருக்கு திருப்பிக் கொடுக்கவில்லை என்றும் அவரும் அதைக் கேட்காமல் அவரது சொந்த வண்டியில் போவதாகவும் சொல்கிறார்கள். எல்லாப் படத்துலயும் சைரன் வச்ச வண்டியில போயி கேப்டனுக்கு போரடிச்சாலும் அடிச்சிருக்கலாம் இல்லையா?

இந்நிலையில் ஏழு பேரையும் நீக்கி எதிர்க்கட்சித் தலைவர் பதவியை இழப்பாரா என்பது கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது. அவர் இழக்க வேண்டும் என்பதுதான் ஜெயலலிதாவின் எண்ணமும் கூட என்கிறார்கள் பத்திரிக்கை நண்பர்கள்... எது நடந்தாலும் எல்லாருக்கும் தெரியும்படித்தான் நடக்கும். அரசியல் விளையாட்டில் எந்தக்காய் நகர்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

இதனிடையே திருப்பூர் பொதுக்கூட்டத்தில் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் ஆஜராகச் சென்ற பிரேமலதா, எத்தனை பொய் வழக்குகள் போட்டாலும் தேமுதிகவை அழிக்க முடியாது என்றும் மக்கள் பணியில் தேமுதிக எப்பவும் ஈடுபடும் என்றும் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்துள்ளார். 


எதிர்கட்சித் தலைவராக விஜயகாந்த் சாதித்தாரா? மின் வெட்டு, விலைவாசி உயர்வு என தினமும் மக்கள் சந்திக்கும் பிரச்சினைகள் ஏராளம் இருக்க ஒரு வளரும் கட்சியை அழிக்க ஜெயலலிதா ஏன் இவ்வளவு முயற்சி எடுக்கிறார்? அதிருப்தி எம்.எல்.ஏக்கள் மக்கள் பிரச்சினைகளுக்காகத்தான் கட்சியை பகைத்துக் கொண்டார்களா? என்பதெல்லாம் இப்போது பத்திரிக்கைகளுக்கும் சரி... மக்களுக்கும் சரி தேவையில்லாத செய்திகளாகிப் போய்விட்டன... விஜயகாந்த் வீழ்வாரா என்பதில்தான் பலரது ஆர்வம் இருக்கிறது.

நாக்கைத் துருத்தி கைகளை மடக்கினால் மட்டும் போதாது அரசியல் சாணக்கியத்தனம் இருக்க வேண்டும்... அதில் கில்லாடி திராவிடக் கட்சிக்காரர்களே... அவர்களை மிஞ்சுவது என்பதும் அவர்களை எதிர்ப்பது என்பதும் கடினமான அரசியல் என்பது எல்லாருக்கும் தெரியும். எனவே ஆளுங்கட்சியை எதிர்க்கும் விஜயகாந்த் வீழ்வாரா இல்லை வீழ்வேன் என்று நினைத்தாயோ என எழுந்து கொக்கரிப்பாரா என்பது போகப்போகத் தெரியும்.

படங்களுக்கு நன்றி : கூகுள் இணையம்
-'பரிவை'. சே.குமார்

பிறவிக்குணம்

ரண்டு நாட்களாக தொடர்ந்து பெய்யும் அடைமழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருந்தது. கசாலையில் சாணியும் மூத்திரமும் கலந்து உடலெங்கும் அழுக்கேறியிருந்த மாடுகள் வைக்கோலை வேண்டா வெறுப்பாக மென்று கொண்டிருந்தன. கோழிக்குஞ்சுகள் குளிருக்கு இதமாக தாயின் இறக்கைக்குள் தஞ்சம் அடைந்திருந்தன. மழை தூற ஆரம்பித்தபோது காணாமல் போன மின்சாரம் இரண்டு நாட்களாக எட்டிப்பார்க்கவில்லை. கருவ மரங்களுக்கு இடையே வரும் மின்சாரக் கம்பியில் எங்காவது மரம் விழுந்து கிடக்கலாம். மழை நின்றதும் போய்ப் பார்த்து சரி செய்தால்தான்... அதுவரைக்கும் மிம்சாரம் வர வாய்ப்பேயில்லை. அதுவரைக்கும் வீட்டிற்குள் மசமசவென்று எரியும் அரிக்கேன் விளக்குதான்.

'சே... இந்த மழ நசநசத்து பொழப்பைக் கெடுக்குது... வெளிய தெருவ போகமுடியுதா..?' புலம்பினாள் ராமாயி.

தொடர்ந்து மழை பெய்வதைப் பார்த்தால் இந்த வருஷம் விவசாயம் நல்லாயிருக்கும். இந்த மழைக்கே கண்மாய் நிறையக்கூடிய வாய்ப்பு இருக்கு... மழை ஆரம்பிக்கும் போதே இளந்தாரிப்பசங்க போய் பக்கத்து ஊருக்குப் போற குளக்காலை அடைத்து கண்மாய்க்கரையை வெட்டி திருப்பி விட்டாச்சு. அதனால கம்மாய்க்கு நீர் வரத்து அதிகம் இருக்கும்.

வானம் இடித்துக் கொண்டிருக்க, மழை விடாமல் பெய்து கொண்டிருந்தது. ''ம்... அப்பவே அடிச்சிக்கிட்டேன்... வயல்ல முள்ளப் புடுங்கி கொழுஞ்சி பறிச்சிப் போடுங்கன்னு கேட்டாத்தானே... இந்த மனுசன் காதுல வாங்குனாத்தானே... வெள்ளயும் சொள்ளயுமா கிளம்பிப் போனா மட்டும் போதுமா... இந்த தண்ணியில எப்படி சுத்தம் பண்ண முடியும். அவனவன் மழ விட்டதும் ஏரக் கட்டப் போறான். நாம முள்ளுப் புடுங்கலாம். எல்லாம் தலயெழுத்து... நாந்தான் லோலோன்னு கத்துறேன்..." கத்தலைத் தொடங்கினாள் ராமாயி.

"எதுக்கு இப்ப கத்துறே... நாளைக்கே வெதைக்கப் போறோமா என்ன... தண்ணி வத்தினதும்தானே உழுக முடியும்... அதுக்குள்ள பிடுங்கலாம்...ஈரத்துல புடுங்க நல்லா வரும் ஒருநா வேலை" என்று சொன்ன மாணிக்கம், 'எப்ப புடுங்கினாலும் நாந்தானே புடுங்கணும்... நீ வரப்போறியா..?' மனதிற்குள் கேட்டுக்கொண்டார்.

வயல் வரப்பு, ஆடு மாடு என்று ராமாயி ஒவ்வொன்றாக ஆரம்பிக்க, எதையும் கண்டு கொள்ளாமல் புகையிலையை எடுத்து கையில் தேய்த்து வாயில் அடக்கிக் கொண்டார். மழையோடு பால் கொண்டு போனவர்கள் திரும்பி விட்டனர் என்பது வீதியில் கேட்கும் பேச்சுக்குரலில் தெரிந்தது. 

"என்ன செல்லம்மா, கம்மாயில தண்ணி ஏறிடுச்சா..?" வீட்டிற்குள் இருந்து புகையிலையை குதப்பிய வாயில் இருந்து எச்சில் வழியாதவாறு கேட்டார் மாணிக்கம்.

"அந்த சனியன துப்பிட்டுத்தான் பேசுறது... " வெடித்தாள் ராமாயி.

"பெரிய முட்டு மறையிறமாதிரி இருக்கு மாமா இன்னும் சறுக்கை போகலை... குளக்கால்ல அவ்வளவா தண்ணி இல்லை..." அவரது கேள்விக்குப் பதிலாக வெளியில் இருந்து குரல் வந்தது. பெரிய முட்டு என்பது கண்மாய்க்குள் இருக்கும் ஒருசில மேடான பகுதிகளில் பெரியது. அந்தப் பகுதி தண்ணீருக்குள் அமுங்கினால் அந்த வருட நல்ல விளைச்சல் என்பது அவர்கள் வழிவழியாக வைத்திருக்கும் கணக்கு.

"எங்க ராசுப் பெரியப்பா வேற தொண்டைக்கும் நெஞ்சுக்கும் இழுத்துக்கிட்டு கிடக்குதாம்... இந்த அடைமழக்கு போயிடுதோ என்னவோ..." புலம்பினாள் ராமாயி.

"அட ஏன் ரெண்டு நாளைக்கு முன்னாலதான் ராமு மச்சானைப் பார்த்தேன். அவரு நல்லாயிருக்காராம். கொஞ்ச நாள் இருந்துட்டுப் போகட்டுமே... பொயிட்டா பாக்கவா போறோம்..."

"யாரு கண்டா... இந்த மழயில போனா எப்புடி சாதி சனத்தை இழுத்துப் போறது... எல்லாத்துக்கும் சிரமம்தானே..."

"அட... உனக்கு நல்ல பேச்சே வராதா..?" கோபமாய் அடக்கினார்.

"மாணிக்கண்ணே..." -வெளியே குரல் கேட்டது.

"என்ன ராமசாமி.. என்ன விசயம்?"

"கம்மாக்கரை உடைக்கிற மாதிரி இருக்குண்ணே... நம்ம சறுக்கைக்குப் பக்கத்துல கரை சரியில்லை... தண்ணி தளும்புது..." படபடப்பாக பேசினான் ராமசாமி.

"அடி ஆத்தாடி ராத்திரி உடைப்பு ஏற்பட்டா தண்ணியெல்லாம் போயி நம்ம தலையில கல்லு விழுந்துருமே...எல்லாருக்கும் குரல் கொடு நான் இந்தா வாரேன்." என்றபடி தோளில் துண்டைப் போட்டுக் கொணடு மண்வெட்டியை எடுத்துக் கொண்டு மழையில் இறங்கினார்.

"தலயில எதாவது எடுத்துப் போட்டுக்கிட்டு போங்க... போயி ஒரு ஓரமா நின்னுக்கிட்டு இளந்தாரிப்பயலுகளை வேலை ஏவிட்டு வாங்க. அதை விட்டுட்டு மழயில நனைஞ்சுக்கிட்டு மாங்கு மாங்குன்னு மண்ணை வெட்டிட்டு இங்க வந்து அது வலிக்குது இது வலிக்குதுன்னு கிடக்கப்புடாது சொல்லிப்புட்டேன்." முதுகுக்குப் பின்னால் கூவினாள் ராமாயி.

வீட்டிற்கு ஒருவர் பொதுக்காரியங்களுக்கு வரவேண்டும் என்பது ஊர்க்கட்டுப்பாடு. இருந்தவர்களெல்லாம் மண்வெட்டி, கூடை, சாக்கு சகிதமாக கிளம்பி வந்தனர். .

ராமசாமி காட்டிய இடத்தில் கரை உடைப்பதற்கான அறிகுறி தென்பட்டது. "ஏம்ப்பா... ரெண்டு இளவட்டம் போயி குளக்கால்ல போட்ட அணையை உடச்சு விட்டுட்டு கம்மாக்கரைய மண்மூடை போட்டு அடச்சுட்டு வாங்க"என்று மாணிக்கம் சொன்னதும் சில இளைஞர்கள் கிளம்பினர்.

மற்றவர்கள கரையை அடைப்பதற்கான ஆயத்தப் பணிகளில் இறங்கினர். கேலியும் கிண்டலுமாக பேச்சு மட்டும் குறையவில்லை. "பேச்சைக் குறைச்சுட்டு வேலையைப் பாருங்க... இருட்டுறதுக்குள்ள முடிக்கணும்"

"அப்பா... ரெண்டு பேரு மண்ணை வெட்டிக் கொடுங்க... ஆத்தா அதை சாக்குகள்ள நிரப்புங்க... தம்பி தூக்கி அடுக்குங்க..."

ஆளாளுக்கு வேலை பார்க்க மழையிலும் வேலை வேகமாக நடந்தது.

"என்ன எழவு சனியனோ தெரியலை... வருசா வருசம் கண்மாய் வெட்டுறமுன்னு இந்தக் கடைசியில இருந்து அந்தக் கடைசி வரைக்கும் ஒரே வழியா வழிச்சு... அதை அளந்து காசு பாக்குறாங்க... நல்லா வெட்டி கரையில அள்ளிப் போட்டு கரைய உயர்த்துனாத்தானே உடைக்காது... நாமளும் இந்த மழையில நனைஞ்சுக்கிட்டு மண்ணு வெட்ட வேண்டியதில்லையில்ல..."

"ஆமா வருசா வருசம் வழிச்சே கண்மாய் தாழ்ந்து வயல் உயர்ந்து போச்சு. இதுல நல்லா வெட்டவேற வேணுமாக்கும்... எதோ இன்னும் கண்மாய்கள் இருக்கிறதால ஒரு சில பேரு வழிச்சு சம்பாதிக்கிறாங்க..."

ஒரு வழியாக அடைத்துவிட்டு வீடு திரும்பினர். அனைவரும் சொட்டச் சொட்ட நனைந்திருந்தனர்.

மாணிக்கம் மழையில் நனைந்து வந்திருந்ததால் ஆத்திரமான ராமாயி "இப்புடி நனஞ்சு வந்திருக்கீகளே நாளக்கி காச்சல்ன்னு படுத்தா யார் பாக்குறது. ஆடு மாடுகதான் மனுசளை பாடாப்படுத்துதுகன்னா எல்லாந்தெரிஞ்சவுகளும் படுத்துறாக... போகயிலயே தலதலயா அடிச்சுக்கிட்டேன்... ம்... கேக்கமாட்டாங்களே... எம் பேச்சைக் கேட்டிருந்த எ இந்த தலயெழுத்து..." என்று ராமாயி அடுத்த இன்னிங்ஸை ஆரம்பிக்க, அவர் எதையும் கண்டு கொள்ளவில்லை.

ராமாயி வாய் முகூர்த்தமோ என்னவோ காலையில் எழ முடியவில்லை இருமல்... தும்மல்... காய்ச்சல் என எல்லாம் ஒன்றாய் அவரைப் படுக்கையில் தள்ளியது...

அவரது நிலை கண்ட ராமாயி, "எனக்குன்னு வந்து வாய்க்கிதுக பாரு... நல்லா... வந்ததும் அப்படித்தான் இருக்கு... பெத்ததுகளும் அப்படித்தான் இருக்கு... இந்தா மழ விட்ட மாதிரி இருக்கு... மாடுகளை கொண்டு போய குளுப்பாட்டி கொள்ளைப்பக்கம் அவுத்து விட்டுட்டு வரலாம்... ரெண்டு நாளா கட்டுத்தொறையிலயே கிடக்குது... அதுகளும் காலாற பொயிட்டு வந்தா அதுகளுக்கும் நல்லாயிருக்கும் கட்டுத்தொறையும் கொஞ்சங் காயும்... ஆரு கொண்டு போறது... இவுகதான் சாஞ்சுட்டாகளே... ஊர் வேல பாக்க ஆள் இருக்கும்... உள்ள வேல பார்க்கத்தான் ஆள் இருக்காது... நான் என்ன சொன்னாலும் கேக்கிறதில்லங்கிறது இன்னக்கி நேத்தா நடக்குது.... முப்பது வருசமாவுல்ல நடக்குது... யாராவது மட எடுத்துக்கிச்சுன்னு சொல்லட்டும் காச்சலாவது தலவலியாவது மொத ஆளா நிப்பாக..."

அவள் பாட்டுக்கு கத்த, படுக்கையில் இருந்து எழாமல் கண்ணை இறுக்க மூடிக் கொண்ட மாணிக்கம், 'இது பிறவிக்குணம்... சவக்காரம் போட்டுக் கழுவினாலும் மண்டை மண்ணுக்குள்ள போற வரைக்கும் போகாது... ' என்று நினைத்துக் கொண்டார்.

-மீள் பதிவு
(சிறுகதைகள் வலைப்பூவில் எழுதியது)
-'பரிவை' சே.குமார்

திங்கள், 1 ஜூலை, 2013

மருத்துவர் தினத்தில் சில நினைவுகள்


இன்று மருத்துவர் தினமாம். இந்த முகநூலின் பயன்பாடு அதிகமான பின்புதான் நிறைய தினங்களை அறிய முடிகிறது. 

இன்றைக்கு பெரும்பாலான மருத்துவமனைகள் பணம் ஒன்றே பிரதானம் என்ற நிலையில்தான் இருக்கின்றன.மருத்துவர்களும் லட்சங்களைக் கொட்டி படித்துவிட்டு லட்சியக் கொள்ளையர்களாகத்தான் இருக்கிறார்கள். அரசு மருத்துவமனைகளில் பணி புரிந்தாலும் தனியாக மருத்துவமனை வைத்து அரசு மாத்திரை மருந்துகளை வைத்து தொழில் நடத்தும் டாக்டர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். சினிமாவில் காட்டுவது போல் சுவாசம் நின்ற பிறகும் இருப்பது போல் மருத்துவக் கருவிகளை மாட்டி பணம் பறிப்பவர்களும் மருத்துவமனைகளும் இருக்கத்தான் செய்கின்றன.

ஒரு பக்கம் இப்படியிருந்தாலும் மனித நேயத்தோடும் மக்கள் நலனுக்காக தங்களது தொழிலை நடத்தும் மருத்துவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
தேவகோட்டையில் தற்போது பிரபலமாக இருக்கும் மகப்பேறு மருத்துவர் ஒருவர் மருத்துவமனை ஆரம்பித்த புதிதில் எங்கள் மூத்த அக்காவுக்கு பெண் குழந்தை பிறந்தது. அது முதல் எங்க வீட்டில் எல்லாருக்கும் அங்குதான் பிரசவம் பார்த்தார்கள். 

எங்கப்பா மீது அந்த டாக்டருக்கு ஒரு தனி மாரியாதை, அப்பா என்றுதான் அவரும் அழைப்பார். இரவில் ஆண்கள் தங்க அப்போது இல்லை இருந்தும் அப்பா படுத்துக் கொள்ள அனுமதிப்பார். யாரை பிரசவத்துக்கு கூட்டிச் சென்றாலும் சுகப் பிரசவமாத்தான் இருக்கணும், ஆபரேசன் பண்ணக்கூடாது என்று அப்பா டாக்டரிடம் சொல்லிவிடுவார். அவரும் சிரித்துக் கொள்வார். அபரேசன் பண்ண மாட்டார். 

என் மனைவிக்கு அவர்தான் செக்கப் செய்து கொண்டிருந்தார். பிரசவம் அவரிடமே பார்ப்போம் என்று அப்பா சொன்ன போது என்னவளின் வீடு மதுரை என்பதால் அங்கே பார்ப்போம் என்று மாமா சொல்லிவிட்டார். மகப்பேறில் பிரபலமான மருத்துவமனை, செக்கப் போகும் போதெல்லாம் குழந்தை நல்லாயிருக்கு சுகப்பிரசவம்தான் என்று சொன்னார்கள். 

வலி வந்து கூட்டிப் போய் காட்டினால் அங்கு தங்கச் சொல்லிவிட்டார்கள். ஊசி மருந்து என மாற்றி மாற்றி போட்டார்கள். காலையில் பிரசவம் ஆகும் பிரச்சினையில்லை இட்லி சாப்பிட சொன்னார்கள். ஒரு இட்லி கூட சாப்பிட்டிருக்க மாட்டார். வந்து கூப்பிட்டார்கள்... என்ன என்று கேட்டபோது ஸ்கேன் பண்ண வேண்டும் என்றார்கள். இப்போதானே பண்ணி நல்லாயிருக்கு சாப்பிட சொல்லுங்கன்னு சொன்னீங்க என்றதும் இல்ல மறுபடி செய்யணும் என்றார்கள். 

ஸ்கேன் பண்ணிவிட்டு குழந்தை கொடி சுத்தி கிடக்கு உடனே ஆபரேசன் பண்ணனும் என்று சொல்ல, நாங்கள் சண்டைக்குப் போக, பின்னர் மாமா அப்பாவெல்லாம் வந்து பேசி முடிவில் ஆபரேசனுக்கு ஒத்துக் கொள்ள ஆபரேசன் தியேட்டர் கொண்டு சென்றார்கள். அங்கு ஒரு நர்ஸ் எம்புட்டு தின்னு இருக்கா பாரு என்று சொல்லியிருக்கிறார். அரை மயக்கத்தில் அதை கேட்டதாக பின்னர் சொன்னார். சாப்பிட சொன்னதும் அவர்கள்தான்... அரை இட்லி சாப்பிடுவதற்குள் கூப்பிட்டவர்கள் அவர்கள்தான்... பின்னர் இது போன்ற பேச்சுக்கள் வேறு.

எல்லாம் முடிந்து தேவகோட்டை வந்து ஸ்ருதிக்கு தடுப்பூசி போட எங்கள் டாக்டரிம் போனபோது என்ன சுகப்பிரசவம்தானே என்று கேட்டார். இல்ல ஆபரேசன் என்றதும் எதுக்கு ஆபரேசன் எல்லாம் நல்லாத்தானே இருந்தது. சரி ஆபரேசனுக்கு அப்பா ஒத்துக்க மாட்டாரே... எப்படி விட்டார் என்று கேட்டார். நடந்ததை சொன்னதும் இப்படியும் இருக்கிறார்கள் என்று சொன்னார். அதன் பிறகு மதுரை மருத்துவமனையை மறந்துவிட்டோம். அடுத்து விஷாலும் ஆபரேசன் பண்ணித்தான் பிறந்தான் ஆனால் இந்த முறை காரைக்குடியில்...

எங்க ஊரில் இன்னொரு டாக்டர் இருந்தார். ஏழைகளின் தோழன் எனலாம்... பக்கத்து வீட்டுக்காரர் போல பேச்சு... டோக்கனெல்லாம் தேவையில்லை... அவர் அறைக்குள் எத்தனை பேர் நிக்கலாமோ அத்தனை பேர் உள்ளே சென்று அவர் மேஜையைச் சுற்றி நிற்கலாம். அதுதான் அவருக்கும் பிடிக்கும்.

'உங்களுக்கு என்ன பண்ணுது?' என்று பெரியவர் ஒருவரிடம் கேட்கும்  போதே 'பெரியத்தா கால் வலி எப்படியிருக்கு?' என்பார். 'தம்பி என்ன விஷயம்?' என்று பக்கத்தில் நிற்பவனை கேட்பார். இப்போ பெரியவரின் பதிலுக்கு 'வெளிக்கி வெள்ளையா போகுதா மஞ்சளா போகுதா'ன்னு கேட்பார். ஆனால் எல்லாருக்கும் சரியான மருந்து மாத்திரை எழுதுவார். 

அவரது மருத்துவமனையிம் அறைகளுக்கு சிந்து, கங்கை, பிரமபுத்திரா என நதிகளின் பெயரை வைத்திருப்பார். நோயாளிகளை பார்த்துக் கொண்டே நர்ஸை அழைத்து 'கோதாவரியில பென்சிலின் போட்டுட்டு வா' என்பார். எங்க ஊரில் எல்லாம் உடம்பு சுகமில்லை என்றால் அவருகிட்ட போனா போதும் சரியாயிடும் என்று போய் பார்த்தார்கள். 

எனது பெரியப்பா மகன் ஊரில் ஒருவருக்கு முடியலை இவரிடம் என்று கூட்டிப் போனார். அப்போது இரவு எந்த நேரத்தில் போனாலும் இவர் பார்ப்பார். அழைப்பு மணியை அழுத்தியதும் ஒருவர் கைலியை கட்டிக் கொண்டு வந்து கதவை திறந்து இருக்கிறார். அண்ணனும் டாக்டரைப் பார்க்கணும் என்றதும் கைலியுடன் வந்தவர் இருங்க ஐயாவை வரச் சொல்லுறேன்னு சொல்லி உள்ளே போய் இருக்கிறார். கொஞ்ச நேரத்தில் உள்ளே இருந்து அழைப்பு வர சென்றால் கைலியுடன் இருந்தவர் நாந்தான் டாக்டர், என்ன சின்னப்பய மாதிரி தெரியுறேன்னா வளரலையேப்பு என்று சொல்லியிருக்கிறார். மிகவும் நல்ல மனிதர், இன்னமும் கிராமத்து மக்கள் அவரைத் தேடி வரத்தான் செய்கிறார்கள்.
இப்படி இன்னும் சிலரையும் சொல்லிக் கொண்டு போகலாம்...

இது போன்ற நல்ல மருத்துவர்களுக்கு மருத்துவர் தின வாழ்த்துக்களை சொல்வதில் எள்ளளவும் சந்தோஷம் குறைவதில்லை. வாழ்க மக்கள் நலன் காக்கும் மருத்துவர்கள்...

-'பரிவை' சே.குமார்

'அன்னக்கொடி' விஷமிகள் புகுகிறார்கள் உஷார்: பாரதிராஜா வேண்டுகோள்!

அன்னக்கொடி திரைப்படம் தொடர்பாக சிலர் விஷமத்தனமான காரியங்களில் ஈடுபட்டுள்ளனர். இதை மக்கள் உணர்ந்து, உண்மை தெரிந்து செயல்பட வேண்டும். அவர்களின் விஷமத்தனத்திற்கு பலியாகி விடக் கூடாது என்று இயக்குநர் பாரதிராஜா கோரியுள்ளார்.


இதுகுறித்து பாரதிராஜா கூறியிருப்பதாவது: மனிதர்கள் எல்லோருக்கும் வெவ்வேறு மதங்கள், வெவ்வேறு தெய்வங்கள் இருக்கிறது. இந்துக்களுக்கென்றும், கிறிஸ்தவர்களுக்கென்றும், முஸ்லீம்களுக்கென்றும் வெவ்வேறு வழிபாடுகள் இருக்கிறது. ஆனால், என்மீதும் என் படைப்பின் மீதும் குற்றம் கண்டுபிடித்துள்ள என் மக்கள் ஒரு விஷயத்தை மறந்து விட்டார்கள், 

நாம் மதங்களற்ற மனிதர்களென்பதை. நம் முன்னோர்கள் வழிபடும் குலதெய்வங்கள், அதற்கு முன்னோடியாக உள்ளவர்களைத்தான் நாம் வழிபடுகிறோம் என்பதும் எனக்கு தெரியும். இது தாய் வழி தெய்வங்களையும், தந்தை வழி தெய்வங்களையும் வணங்கி வருகிறோம். அதன் வழியிலே மாமன், மச்சான் பங்காளி உறவுகளை கொண்டாடி வருகிறோம். 

"ஒரு வார்த்தை வெல்லும், ஒரு வார்த்தை கொல்லும்" என்பது பழமொழி. கண்ணகி காலத்தில் திருட்டு சிலம்பு என சந்தேகப்பட்டதனாலே "கோவலனை கொண்டு வா" என்ற வார்த்தையை தவறாக கொண்டு, " கொன்று வா" என திருத்திச் சொன்னதால் மதுரை எரிந்த கதை உண்டு.


எம் மண்ணின் தெய்வங்களை, எம் முன்னோர்களை, வணங்குதல்குரிய தெய்வங்களை, எந்த காலத்திலும் நான் களங்கம் ஏற்படுத்தியதில்லை. கருமாத்தூர் கோவிலை சிறப்பாக கொண்டு வர வேண்டும் என்று, ஒரு அறக்கட்டளையை நிர்மாணிக்க இருந்தவன்தான் இந்த பாரதிராஜா என்பதும் எம் மக்களுக்குத் தெரியும். 

நாம் வணங்கும் மூனுசாமிக்கும், முனிசாமிக்கும் வித்தியாசம் உண்டு. மூனு சாமி என்பது முக்குலத்தோர் சாமி. முனிசாமியை முனி என்றும் சொல்கிறோம். என் "அன்னக்கொடி" திரைப்படத்தை பார்த்து, அந்த வார்த்தையை உற்று கவனித்து, முனிசாமியா, மூனுசாமியா என்பதை தீர்க்கமாக தெரிந்துகொண்டு, அதன்பின் என் மக்கள் என்ன முடிவு எடுத்தாலும் நான் ஏற்றுக்கொள்கிறேன். 

இன்னொன்று, வட்டார வழக்கில் வந்துள்ள என் "அன்னக்கொடி" படைப்பு எந்த சமூகத்தையும் குறிப்பிடவில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். அதேபோல் இது எந்த ஒரு தனிப்பட்ட வட்டாரத்திற்கும் சொந்தமானதல்ல. இது அனைத்து கிராமங்களுக்கும், அனைத்து வட்டாரங்களுக்கும் சொந்தமான ஒரு பொதுவான கதை.


சமூகம் எல்லா இடங்களிலும் ஒரே மாதிரிதான் இருக்கும். ஆனால் எம் மக்கள் அதை உணர்ந்து கொள்ளவேண்டும். திட்டமிட்டு சிலர் செய்யும் விஷமதனத்தையும் புரிந்துகொள்ள வேண்டுமென்பதை தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். 

நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார். 

அன்னக்கொடி படத்தைத் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் பார்வர்ட் பிளாக் கட்சியினர் சிலர் நேற்று தேனியில் உள்ள பாரதிராஜாவின் வீட்டைமுற்றுகையிட்டு போராட்டம் நடத்தி பரபரப்பைக் கிளப்பினார்கள் என்பது நினைவிருக்கலாம்.


-கட்டுரைக்கு நன்றி  : தட்ஸ் தமிழ் இணைய இதழ்
-படங்களுக்கு நன்றி : இணையம்
-'பரிவை' சே.குமார்.