மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

ஞாயிறு, 25 ஏப்ரல், 2010

கண்ணதாசனின் கவிதை..!

காலத்தால் அழியாத கவிஞர் கண்ணதாசனின் கவிதை ஒன்று சில நாட்கள் முன்னர் எனக்கு மெயிலில் வந்தது. என்னைக் கவர்ந்த கவிதை உங்களையும் கவரும். கவிதை இதோ....





என்ன நண்பர்களே...

எங்கள் சிவகெங்கைச் சீமையின் முத்து கவிஞர் கண்ணதாசனின் கவிதை உங்கள் மனதுக்குள் மலர்ந்ததா..?

-'பரிவை' சே.குமார்.

வெள்ளி, 16 ஏப்ரல், 2010

பையா - விமர்சனமில்லா வித்தியாசமான பார்வை



லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி, தமனா நடிப்பில் வெளிவந்து பரபரப்பாக (!????) ஓடிக்கொண்டிருக்கும் படம் 'பையா'.

* காரில் பயணிக்கும் கதையில் அவ்வளவாக சுவராசியம் இல்லை.

* பல இடங்களில் அதே ரோடுகள் மீண்டும் மீண்டும் வருகின்றன விக்கிரமன் படப்பாடல் போல.

* தமிழ் படத்திற்கே உரிய லாஜிக் இல்லா காட்சிகள் அதிகம்.

* நீண்ட சண்டைக் காட்சிகள் அலுப்பைத் தருகின்றன.

* இரண்டு வில்லன் குரூப் இருந்தும் விறுவிறுப்பு குறைவு.

* படம் பெங்களூரில் தொடங்கி மும்பை போகிறது. எனக்கு ஒரு பெரிய சந்தேகம் படத்தின் பெயர் பையா என்று ஏன் வைக்கப்பட்டது?. தமனா மும்பையில் இரண்டு தடவை 'பையா' என்ற வார்த்தையை பயன்படுத்துவார் அதனால இருக்குமோ?.

* தமிழில் 'மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி' என்று ஒரு படம் உண்டு அதுபோல் 'பெங்களூரு டூ மும்பை' என வைத்திருந்தால் நல்லா இருந்திருக்கும் என்கிறது மனசு.

இயக்குநர்:

* நல்ல கதைகளை கொடுக்கும் புதிய இயக்குநர்கள் மத்தியில் இன்னும் சில லிங்குசாமிகள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

* ரன்னும் சண்டைக் கோழியும் விறுவிறுப்பாக இருந்ததால் ரசிக்கவைத்தன. பீமா???

* காரில் துரத்துவதும் புழுதி கிளம்ப பல மைல்தூரம் கடப்பதும் இன்னும் எத்தனை இயக்குநர்கள் மனதில் இருக்கின்றனவோ தெரியவில்லை.

* லிங்குசாமி படம் என்றாலே சண்டைக்காட்சிகள் நீண்ட நேரம் இழுக்கப்படுவது எல்லாருக்கும் தெரியும் இதில் இன்னும் கொஞ்சம் அதிகம்.

* லிங்குசாமியிடம் இருந்து வரும் அடுத்த படமாவது அரைத்த மாவை அரைக்காமல் மலிக்கா, மேனகாஸாதிகா போல் புதிய மாவை அரைக்கட்டும்.

கார்த்தி:

* அழகாக உயரமாக கம்பீரமாக இருக்கிறார். ஆனால் நடிப்பு பருத்தி வீரன். ஆயிரத்தில் ஒருவன் படங்களோடு ஒப்பிடுகையில் அரைக்கிணறு கூட தாண்டவில்லை.

* இன்னும் நடனம் கற்க வேண்டும். அசைவுகள் வராததால் காதல் பாடல்களிலும் நடனம் இல்லாமல் படமாக்கப்பட்டுள்ளது தெரிகிறது.

* உங்களால் பாடல் காட்சிகளில் தமிழர்களின் தற்போதைய கனவுக்கன்னி தமனாவும் வீணடிக்கப்பட்டுள்ளதாக துபாய்ராஜா, பனித்துளி சங்கர் போன்றவர்கள் அதிக வருத்தத்தில் இருப்பதாய் தகவல்.

* பல இடங்களில் பருத்திவீரனை ஞாபகப்படுத்துகிறது உங்கள் நடிப்பு.

* சண்டைக் காட்சிகளில் அத்தனை பேரையும் அடித்து நொறுக்கும் உங்கள் நடிப்பு விசிலடிக்கச் சொன்னாலும் ஏற்றுக் கொள்ளும்படியில்லை. இனி இது போன்ற கதைகளை தவிர்க்கவும்.

* ஷங்கர், ஸ்டார்ஜன், அக்பரின் எழுத்துக்கள் போல சும்மா அடுத்த படத்தில் தூள் கிளப்புங்க.

தமனா:

* தமிழகத்தின் தற்போதை புயல் அழகுப் பதுமை தமனா, பையாவில் ஏனோ ஒரு பிரயாணியாக பயணித்திருக்கிறாரே தவிர மனதில் ஒட்டவில்லை.

* பாடல் காட்சிகளில் சரிவர பயன்படுத்தப்படவில்லை என்பது உண்மை. அவருக்காக தனிப்பாடல் கொடுத்து இருக்கலாம் என்று நாடோடி இலக்கியன் புலம்பித் தள்ளுகிறார்.

* அழகான அருவிப் பிண்ணனியில் (செட்டாமே!!!!!!!!!) தமனா இன்னும் அழகாய்....

* சாப்பிடும் காட்சியில் தனக்கே உரிய பாணியில் நல்லா பண்ணியிருக்கிறார்.

* தேனம்மை, சத்ரியன் , விக்னேஷ்வரியின் கவிதையைப் போல் அழகாய் இருந்தாலும் இன்னும் நல்லா நடிக்க வாய்ப்பு கிடைக்கும் படத்தில் நடிக்க முயலுங்கள்.

இசை:

* யுவனின் இசையில் பாடல்கள் அருமை. குறிப்பாக ''அடடா மழைத்துளி'' பாடல் ரம்மியம்.

* பிண்ணனி இசையில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.

* உங்களிடமிருந்து பா.ரா, திவ்யா ஹரி ஆகியோரின் அழகிய கவிதைகள் போல் இன்னும் அழகான அருமையான பாடல்களை எதிர்பார்க்கிறோம்.

சண்டைக்காட்சிகள்:

* முப்பது பேர் கையில் கத்தி, கட்டைகளுடன் சுற்றி வர அனைவரையும் கதாநாயகன் அடித்து நொறுக்குவது என்பது சினிமா கலாச்சரம் போலும். இதிலும் கலாச்சாரம் மீறப்படவில்லை.

* வில்லன் ஒரு அடியில் வீழ்ந்தாலும் பல அடிகள் வாங்கி ரத்தம் கக்கி கிடக்கும் நாயகன் மறுபடியும் எழுந்து அனாயாசமாக ஐம்பது பேரை அடிக்கிறார். இது எப்படி சாத்தியம் யோசிக்க மாட்டார்களா?

* ஆமா, எதிரி நூறு பேர் வந்தாலும் கதாநாயகன் கிட்ட மோதும்போது ஒவ்வொருத்தர வாராகளே அது ஏன்னே தெரியலை... எல்லாருமா சேர்ந்து தூக்கிப் போட்டு மி..........

இதுக்கு மேல இதுல சொல்ல ஒண்ணுமில்ல.


ஒளிப்பதிவு:

* படத்துக்கு அழகு மதியின் ஒளிப்பதிவு. படமுழுவதும் அவரது கைவண்ணம் அழகாய் இருக்கிறது. அவருக்கு வாழ்த்துக்கள்.


மொத்தத்தில்...

பாடல்களுக்காகவும் ஒளிப்பதிவுக்காகவும் பையாவை ஒருமுறை திரையரங்கில் பார்க்கலாம்.

---------------------



எங்க வீட்டு செல்லக்குட்டி இப்ப விடுமுறைக்காக மதுரைக்கு போயாச்சாம். அவங்க முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுவிட்டார்களாம். முழுஆண்டுத் தேர்வில் எல்லா பாடத்திலும் 90க்கு மேலாம். பள்ளியில் நடந்த பேஷன் ஷோவிலும் நடனத்திலும் இரண்டாவது பரிசாம். இதை எல்லாம் அவர் போனில் மழலையாய் சொன்னபோது அவருக்கு இருந்த சந்தோஷம் எனக்குள்ளும்....


-'பரிவை' சே.குமார்

புதன், 7 ஏப்ரல், 2010

தங்கமலரும்... அறை மாறிய நிஜக் கதையும்..!

அலை - 1
எனது மழலை இதயம் சிறுகதை சிறுவர்களுக்காக தினத்தந்தி நாளிதழில் வெள்ளியன்று இலவச இணைப்பாக வெளிவரும் தங்கமலர் ஏப்ரல்-2ந்தேதி பதிப்பில் வெளிவந்திருந்தது. சிறுவர்களுக்கான இதழில் வெளியிட்ட ஆசிரியருக்கும் தினத்தந்தி நாளிதழுக்கும் நன்றி.

அலை - 2
நண்பர் ஸ்டார்ஜனின் வலைப்பூவில் சில புல்லுருவிகள் புகுந்து சேட்டைகள் செய்திருப்பதாகவும் அதனால் அவருக்கு ஏற்பட்ட் மனவலி குறித்தும் இன்று காலை அவரது வலையில் பார்த்தேன். நமக்குள் இருக்கும் முகம் தெரியா நட்புக்குள் நண்பர்கள், தோழிகள், சகோதரர்கள், சகோதரிகள், அம்மாக்கள் என எத்தனையோ உறவு முறைகள்...

எல்லாம் நமக்குள் ரத்த சம்பந்தத்தால் வந்தது என்றால் நிச்சயமாக இல்லை. நமக்குள் இருக்கும் பகிர்தலே காரணம். அப்படியிருக்க கேவலமான வார்த்தைகளை பயன்படுத்தி பின்னூட்டம் இட  நினைக்கும் கயவர்கள் தயவு செய்து தங்களுக்கென ஓரு வலை விரித்து அதில் என்ன வேண்டுமானாலும் எழுதுங்கள். உங்களுக்கும் நட்பு கிடைக்கும் உங்களைப் போலவே. தயவு செய்து நல்ல குடும்பத்துக்குள் நாறவாயன் நுழைய வேண்டாம். இதனால் நண்பருக்கு எத்தனை மனவேதனை...!

அவரது நட்பில் உள்ள பெண்கள் பார்த்திருந்தால்...? இனிமேலாவது இது போன்ற பின்னூட்டங்களை தயவு செய்து போடாதீர்கள். ஸ்டார்ஜன் அருமையான எழுத்தாளர். அவரது பகிர்வுகள் அனைத்தும் அருமையானவை. அவர் யாரையும் தாக்கியோ தூற்றியோ எழுதியதில்லை... அப்படியிருக்க அவருக்கேன் இப்படி...?

வலைச்சரத்தில் பட்டயை கிளப்பியதால் வந்த கோபமா என்ன...? யாரா இருந்தாலும் நண்பர்களே இனி இதுபோல் வேண்டாமே..!

அலை - 3
நாங்கள் அறை மாறிய கதை எங்களுக்கு சொல்ல முடியாத மனவலியைத் தந்தது. பிப்ரவரி மாத இறுதியில் நாங்கள் நீண்ட நாட்களாக தங்கியிருந்த கட்டிடம் உடைக்கப்படப்போவதாக நோட்டீஸ் கொடுத்ததால் நாங்கள் வேறு அறை தேடும் பணியில் தீவிரமானோம்.

புரோக்கர்கள் என்ற பெயரில் கொள்ளைக் கூட்டம் ஒன்று அபுதாபியில் அலைவது அப்பொழுதுதான் தெரிந்தது. அறை பிடித்துக் கொடுத்தால் அவருக்கு 1000 அல்லது 2000 திர்ஹாம் கமிஷன் வெட்ட வேண்டுமாம். என்ன செய்ய... நாங்கள் இருந்தது இக்கட்டான நிலையில் எனவே அவர்களிடமும் சொல்லி தேடினோம்.

அதற்குள் நண்பர் மூலமாக கமிஷன் இல்லாமல் ஒரு அறை கிடைத்தது. மார்ச் 2ஆம் தேதி எங்கள் பழைய கட்டிடத்தத்தில் மின்சாரம் எங்கள் தளத்தில் மட்டும் துண்டிக்கப்பட்டது. எனவே அவசர அவசரமாக மாற்றினோம். புதிய அறை நல்ல விசாலமானது. எங்கள் ஆறு பேருக்கு அதிக இட வசதியுடன் இருந்தது. ஆனால் கழிப்பறை மிகவும் மோசமாக இருந்தது. மலையாளிகள் பயன்படுத்தி வந்தனர். சுத்தம் செய்வது என்பது அவர்களுக்கு தெரியாது போலும். அவ்வளவு மோசம்.

கிச்சன் மற்றும் கழிப்பறையில் இருந்து எங்கிருந்து வருகிறது என்று தெரியாமலே எந்த நேரமும் மழைக்காலத்தில் மாட்டுக் கசாலைக்குள் தேங்கி நிற்கும் மூத்திரம் போல இருந்து கொண்டே இருக்கும். அழகான பால்கனி. நல்ல காற்று அதிலெல்லாம் குறையில்ல.

நாங்கள் போன நேரமோ என்னவோ தெரியவில்லை நாங்கள் போகும்போது இயங்கிக் கொண்டிருந்த லிப்ட், மூன்று நாளில் மூச்சை  நிறுத்திக் கொண்டது.  அதை சரி செய்யும் எண்ணம் கட்டிட உரிமையாளருக்கு எழவில்லை. காரணம் அதுவும் இடிக்கப்பட இருக்கும் கட்டிடமாம். போதுமுடா சாமி...!
கடந்த ஒரு மாதமாக பழனிமலை நடை பயணம்தான், தினமும் ஏறினோம்... இறங்கினோம்... இதனால் வலை (Internet) வாங்கும் எண்ணம் ஏனோ தடையானது. அதனால்தான் தமிங்கிலத்தில் அலுவலகத்தில் இருந்து அவசர... அவசரமான பின்னூட்டங்கள்.

மீண்டும் அறை தேடும் படலம் ஆரம்பிக்குமோ என்று மனசுக்குள் கிலி ஏற்பட ஆரம்பிக்கும் போது உறவினர் ஒருவர் தனது மனைவியை பிரசவத்தின் காரணமாக இந்தியா அனுப்புவதால் அந்த அறையை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று முன்பு ஒருமுறை சொல்லியிருந்தார். அவரிடம் வினவ, ஏப்ரல் 2ந்தேதி ஊருக்கு செல்ல இருப்பதால் மாறிக்கொள்ளலாம் என்றார்.
அவர் மூலமாக அந்த பிளாட்டின் உரிமையாளரிடம் பேசினால் எதோ வேலைக்கான நேர்முகத்தேர்வு போல் ஆயிரத்தெட்டு கேள்விகள். அதில் தாண்டி வந்தால் நான் கு பேர்தான் தங்கணும், சிகரெட் தண்ணி கூடாது என்ற கட்டுப்பாடுகள். எல்லாம் ஓகேயானதும் மீண்டும் அறை மாற்ற வேலைகள்.  உறவினர் சொல்லிவிட்டு மனைவியை கொண்டுவிட பத்து நாள் விடுமுறையில் சென்று விட்டார்.

இந்த முறை மூன்று மாடிகள் படிகளில் பொருட்களை இறக்கினோம். 29" தொலைக்காட்சி, ஏசி, பிரிட்ஜ், கட்டில்கள் எல்லாம் படியின் வழியாக... ஸ்... அப்பாடா என்று புது அறைக்கு வந்தபோது மீண்டும் பிரச்சினை.  வந்த முதல் நாள் மூட்டைப்பூச்சி மருந்து அடிக்கிறோம் என்றார்கள் அப்படியே போட்டுவிட்டு வெளியில் தங்கிவிட்டு மாலை திரும்பினால் நாளைதான் அடிக்கிறோம் என்றார்கள்... வந்ததே பாருங்கள் கோபம்...? ம்.... என்ன செய்ய... நமக்கு அறை வேணுமே... அதனால் அடங்கியது மனசின் எரிமலை...

சரி சாவியை கொடுங்கள் நாங்கள் படுப்பதற்காகவாவது இடம் ஒதுக்கிக் கொள்கிறோம் என்றால் கிச்சன் சாவியை மானேஜர் வாங்கிக் கொண்டுவிட்டார். பேச்சிலர்கள் சமைக்க அனுமதியில்லையாம் என்றான் எங்கள் சாவியை கொடுத்தவன்... மானேஜர் மலையாளி, அவனுக்கு நாங்கள் வருவது பிடிக்கவில்லை என்பது பின்னர்தான் தெரிந்தது.

அதற்கு மேல் அடங்கியிருக்க, முல்லைப் பெரியாறு பிரச்சினையில் அமைதி காத்து குடும்பம் நடத்தும் அவரா நாம... நமக்குன்னு ஒரு மரியாதை இருக்குல்ல... அது வாய் வழியாக சற்று வேகமாக இறங்க, இதை எதிர்பார்க்காத சாவியை கொடுக்க வந்த நண்பர் முதலாளிகிட்ட பேசுங்க... என்றார். அவரிடம் சற்று மரியாதை கலந்த சூட்டோடு பேசினோம். அவர் எங்களுக்கு கிரீன் சிக்னல் காட்டினார்.

பின்னர் மேனேஜரிடம் சாவி வாங்கி (அவன் முகத்தில் அணை கட்டியது போலிருந்தது) எல்லாம் சரி செய்து சமைத்து சாப்பிட்டு அறையில் தங்கியாச்சு. பக்கத்துல மலையாளக் கரையாளுங்க, இப்ப பாத்ரூமை குத்தகை எடுத்து உள்ள தூங்குறாங்க போல ... சரி ஆகிறது ஆகட்டும்... போகப் போக நாம எல்லாரையும் பாத்துக்கலமுன்னு மனசை தேத்திக்கிட்டு இருக்கோம். வலை (internet) வாங்கிட்ட நாம பொழப்பு நல்ல போகும்... பார்க்கலாம்.

--'பரியன் வயல்' சே.குமார்

திங்கள், 29 மார்ச், 2010

தமிழரசியும்... செல்லமும்... வலைச்சரமும்..!

மனசு - 1.

'அவள் பெயர் தமிழரசி' - பாவைக் கூத்துக் கலை என்பது அழிந்து வரும் கலைகளில் ஒன்று. தற்பொழுது எங்கும் நடத்துவதில்லை என்ற நிலையில்தான் இருக்கிறது. நாடகம், கரகாட்டம் (இப்பொழுது நடத்தப்படுவது கரகாட்டம் என்பது இல்லை என்பது எல்லோருக்கும் தெரியும்) பாவைக் கூத்தெல்லாம் நமது அப்பா காலத்தில் அடிக்கடி கிடைத்தவை... இப்போது அரிதாகக் கிடைப்பவை.



நான் பள்ளியில் படிக்கும் காலத்தில் நாடகங்களுக்கு என்று ஒரு ரசிகர் கூட்டமே இருக்கும். எங்கு நாடகம் நடந்தாலும் சைக்கிளில் சென்று வரும் கூட்டமும் உண்டு. வள்ளி திருமணம் நாடகத்தில் வேலானாக ஸ்ரீராம் நடித்தாலும் வள்ளியாக கரூர் இந்திரா நடித்தாலும் அவர்களின் தர்க்கத்திற்காக கூட்டம் அலை மோதும். அதேபோல் அரிச்சந்திர மயான காண்டம் என்றால் காமராஜின் நடிப்புக்காகவே பார்க்கப் போவோர் உண்டு. ஆனால் அதே நாடகம் இன்று ஒருசில இடங்களில் நடத்தப்பட்டாலும் பார்க்க வருபவர்களின் எண்ணிக்கை விரல் விட்டு எண்ணும் நிலையில்தான் உள்ளது.

அதேநிலைதான் கரகாட்டத்திற்கும்... நல்ல கலை, ஆனால் அவர்களின் வயிற்றுப் பிழைப்புக்காக கேவலமாக மாற்றப்பட்டு விட்டது. எங்கள் ஊரில் சில காலமாக கரகாட்டம் நடத்திவந்தோம். அவர்களிடம் 'இது கிராமம் இங்கு ஆபாசப் பேச்சுக்கூடாது' என்று சொல்லத்தான் செய்வோம். ஆனால்... அவர்கள் மோசமாக இல்லாவிட்டாலும் சில நேரங்களில் பாசமாகவாவது பேசியும் ஆடியும் விடுவார்கள். அதனால் கடந்த ஆண்டு நாடகத்திற்கு மாறினோம்.

வள்ளி திருமணம்... ஆரம்பிக்கும் போது நல்ல கூட்டம் முடியும் போது ஆறு பேர் மட்டுமே இருந்தோம். அதுவும் விழாக் கமிட்டியை சேர்ந்தவர்கள். நாடக அமைப்பாளர்தான் முருகனாக நடித்தார். ' அடுத்த வருடம் கூட்டத்தைக் கூட்டப்பாருங்க. இப்ப முடிச்சுக்கிருவோம்' அப்படின்னு எங்களது சித்தப்பாவிடம் சொன்னாரே பார்க்கலாம், வேற என்ன செய்ய முடியும் .

இந்த வருடம் திருவிழாவிற்குப் போக இப்போதே அலுவலகத்தில் ஒரு மாத விடுமுறை வாங்கியாச்சு. இந்த வருடம் கலை நிகழ்ச்சி வேண்டாம் என்ற மனநிலைதான் எல்லாருக்கும்... ம்... பார்க்கலாம்.

 சரி, நமது நாட்டுப்புறக் கலைகள் அழியக் காரணம் அவற்றை சுமந்து திரியும் மனிதர்கள்தான். அப்படி அழிந்த கலையைத்தான் கையில் எடுத்துள்ளார் புதிய இயக்குநர் மீரா கதிரவன். 'அவள் பெயர் தமிழரசி' - அருமையான கதைக்களம், சிறப்பாக பயன்படுத்தப்பட்ட பேச்சு வழக்கு, என எல்லாம் சிறப்பாக உள்ளது.

தான் சிநேகிக்கும் பாவைக்கூத்து நடத்தும் குடும்பத்து சிறுமிக்கு சிறுவயதில் உதவும் கதையின் நாயகன், அவர்களை தனது தாத்தாவை கட்டாயப் படுத்தி தங்கள் ஊரில் தங்க வைக்கிறான். அவளது குடும்பத்திற்கு உதவுவதுடன் நட்பாகவும் இருக்கிறான்.

கால ஓட்டத்தில் வளரும்போது அவள் நல்ல படிப்பதும் அவன் படிக்காமல் இருப்பதும் (பசங்களை எல்லா இயக்குநர்களுமே இப்படித்தாம்பா பலி வாங்குறாங்க.) அதனால் அவர்களுக்குள் பிரச்சினைகள் தலை தூக்குவதும் அதற்குத் தீர்வாக நண்பர்களின் கருத்தை சுமக்கும் அவனால் அவள் சுமக்கும் சுமைகளை அழகாக படமாக்கியிருக்கிறார்.

பாவைக் கூத்துக் கலைஞர்களின் பரிதாப நிலையை கண்முன்னே நிறுத்துயுள்ளனர் இயக்குநரும், பாவைக் கூத்துக் கலைஞர்களாக நடித்தவர்களும். அனைவரும் பார்க்கும் வகையில் இயக்கப்பட்ட நல்ல படம்தான் ஆனால் பாவைக் கூத்துக் கலைஞர்கள் மேக்கப்புடன் வீதியில் அலைவதாக் ஆரம்பத்தில் காட்டும் காட்சியில் நாடகத்தனம் தெரிகிறது. புதிய இயக்குநரின் புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

மனசு - 2.

கடந்த வெள்ளியன்று என் பிரிய மகளின் பிறந்தநாள். வியாழன் இரவு இந்திய நேரப்படி 12.01க்கு செல்பேசியில் வாழ்த்து அனுப்பியாச்சு. வெள்ளி விடுமுறை என்பதால் காலையில் அறை நண்பர்கள் தூங்கியதால் போன் செய்யவில்லை. பிறகு போன் பண்ணலாம் என்று நினைத்தபோது மகள் பள்ளி சென்றிருப்பார்கள் வரட்டும் என்று நினைத்து விட்டு விட்டேன்.

ஊரில் இருந்து மனைவி போன் செய்து 'எல்லாரும் போன் பண்ணி வாழ்த்துச் சொல்றாங்க... எங்கப்பா மட்டும் பண்ணலை. நான் பேச மாட்டேன்' என்று சொல்லிச் சென்றதாக சொன்னார். என் மகள் என் செல்லம் எனக்குத் தெரியும் என்றேன் அவரிடம்.

பள்ளியில் இருந்து வரும் சமயத்தில் போன் அடித்தேன். என் மகளே எடுத்து 'அப்பா...' என்று மழலையில் அழைக்க, வாழ்த்துச் சொல்லியாச்சு. அவர் "அப்பா... அம்மா உங்ககிட்ட பேசக்கூடாதுன்னு சொல்றாங்க... நான் பேசுவேன்ல" என்று சொன்னாரே பார்க்கலாம். என் மனைவிக்கு முகத்தில் ஈயாடவில்லை என்பது எனக்குத் தெரியும்.

மனசு - 3.

நான் வலையில் எழுத வந்த புதிதில் எனது கதையைப் படித்து, அது குறித்து நண்பர் நாடோடி இலக்கியன் அவர்கள் தனது தளத்தில் எழுதி எனக்குள் ஒரு உத்வேகத்தை கொடுத்தார் . இல்லையென்றால் கடந்த ஐந்து ஆறு மாதமாக வலையில் தொடர்ந்திருப்பேனா என்பது எனக்குத் தெரியாது.

எனக்கு நண்பர்களாகி எனக்கு பின்னூட்டமிட்டு வாழ்த்திய நண்பர்களில் புலவன் புலிகேசி தனது டரியலில் எனக்காக சில வரிகளை விதைத்திருந்தார். அந்த விதைப்பில் நல்ல நட்பின் விளைச்சல் இருந்தது.

இந்த முறை திரு.ஸ்டார்ஜன் அவர்கள், எனது வலைப்பூவை தொடர்ந்து படித்து வருபவர், வலைச்சரத்தின் கடந்த வாரம் ஆசிரியராக பணியாற்றி பல நல்ல பதிவர்களை அறிமுகம் செய்தார்.

வலைச்சரத்தில் அரிமுகமாக பிரபல பதிவராக இருக்க வேண்டும் என்ற என் நினைப்பை பொய்யாக்கியது அவரது சனிக்கிழமை பதிவு. நல்ல அறிமுகங்களுக்கு மத்தியில் என் பெயரும்... பிரபலங்களுக்கு மத்தியில் நானும் அதற்கு ஸ்டார்ஜனுக்கு நன்றி.


-'பரியன் வயல்' சே.குமார்

வெள்ளி, 19 மார்ச், 2010

சிம்பும் தாசனும் என் பதிவர்களும்..!

எண்ணம் - 1:

கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்திருக்கும், நடித்து மட்டுமே இருக்கும் 'விண்ணைத்தாண்டி வருவாயா' படம் சில நாட்களுக்கு முன்னர் பார்த்தேன். பார்த்ததும் அது குறித்து பதிவு எழுதலாம் என்றிருந்தேன். அறை மாறியதால் மன நிம்மதி போயாச்சு. நெட் வசதியும் இல்லை. அதனால் எதுவும் எழுத எண்ணம் இல்லை.



எனக்கு சிலம்பரசன் படங்கள் பார்க்கும் எண்ணம் இதுவரை மனசுக்குள் மலர்ந்ததில்லை. இருந்தாலும் கௌதம் மேனன் படம் என்பதால் பார்க்கலாம் என்ற எண்ணத்தில் பார்த்தேன். அட சிம்புவா இது... உண்மையில் அசந்தேன். நல்ல திறமை உள்ளவர் தேவையில்லாமல் விரலு... விசிலு என்று இதுவரை தன்னைத்தானே வீணடித்திருக்கிறாரே என்று நினைத்தபோது இனிமேலாவது அவர் மாறுவாரா என்ற எண்ணம் எனக்குள் மேலோங்கியது.

'விண்ணைத்தாண்டி வருவாயா' கௌதம் மேனனுக்கே உரிய வசனங்களோடு கலந்த ஆங்கில உரையாடல்களுடன் இருந்தது. இதில் கொஞ்சம் மலையாள நெடியும் வீசியது. சிம்பு, கார்த்திக் என்ற கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். அவரது வசன உச்சரிப்பும் அசால்டான அந்த நடிப்பும் இதுவரை எங்கே இருந்தது.

அவருக்கும் திரிஷாவுக்கும் இடயேயான நெருக்கமான காதல் காட்சிகளின் போது இருவரும் காதலிக்கிறார்கள் என்று பத்திரிக்கைகள் விட்ட புரளி உண்மைதானோ என்று நினைக்கத் தோன்றியது.

கடைசியாக சிம்புவுக்கு, நல்ல படங்ளாக பார்த்து நடியுங்கள். உங்கப்பா வழியில் செல்வதால் வீணாவது உங்கள் திறமையுடன் நீங்களும்தான் என்பதை உணர்ந்தி நடியுங்கள். கண்டிப்பாக நல்ல கதாநாயகன் என்ற நிலையை விரைவில் எட்டலாம்.

எண்ணம்-2:

திரு, பெரியார்தாசன் அவர்கள் இஸ்லாம் மதத்திற்கு மாறிவிட்டார் என்பது எல்லோரும் அறிந்ததே. இதில் என்ன இருக்கிறது என்று தெரியவில்லை. சாதி, மதம் எல்லாம் நாமாக வகுத்துக் கொண்டதுதான். அவர் மாறிவிட்டார் என்பதால் எதோ பெரிய வெற்றியை சுவைத்தது போல் பல இஸ்லாமிய பதிவுலக நண்பர்கள் சந்தோஷ பதிவுகளை போடுகிறார்கள் என்றால் மற்றவர்கள் கண்டனப் பதிவுகளை போடுகிறார்கள்.

அவர் இந்து மதத்தில் இருந்து பௌத்த மதத்திற்கு மாறினார். பின்னர் அங்கிருந்து இஸ்லாத்திற்கு மாறியுள்ளார். அது அவரது தனிப்பட்ட விஷயம். ஆனால் சேஷாசலம் என்பது அவரது இயற்பெயர் என்பது எத்தனை பேருக்குத் தெரியும். பெரியார் மீது கொண்ட பற்றுதலால் அவர் பெரியார்தாசன் ஆனார். எல்லோருக்கும் அவரை பெரியார்தாசனாகத்தான் தெரியும்.

அந்த பெரியார்தாசன் கடவுள் இல்லை என்று எத்தனை கூட்டங்களில் பேசியிருக்கிறார். அவரது பேச்சை நம்பி கெட்டவர்கள் பலர். அவர் இஸ்லாமுக்கு வந்ததற்காக நண்பர்கள் சந்தோஷப்படுவது நீடிக்குமா என்பது அவரது கையில்தான் உள்ளது. கடவுளைத் தேடினேன் எனக்கு இதுதான் பிடித்தது என்கிறார். நாளை இதுவும் இல்லை என்று வேறு எதற்காவது மாறினாலும் ஆச்சரியமில்லை.

எனக்கு ஒன்று மட்டும் புரியவில்லை... ஏன் எல்லோருமே வயதானதும் இறைவனை நாடுகிறோம்... சாவு பயம் அங்கு அழைத்துச் செல்கிறதோ..?.

எது எப்படியோ. நீங்கள் இஸ்லாத்துக்கு மாறியதில் எம் இஸ்லாமிய சகோதரர்களுக்கு நல்ல பேச்சாளர் கிடைத்த சந்தோஷம். அதை மெய்யாக்குங்கள். இதுவரை இறைவன் இல்லை என்று சொன்ன நீங்கள் எங்கள் அல்லாவின் புகழை எடுத்து உரையுங்கள். எங்கோ செய்த தவறுக்கு அங்காவது புண்ணியம் கிடைக்கட்டும்.

மதம் மாறுவது உங்கள் விருப்பம். அதையே விருப்பமாக எடுத்துக் கொண்டு அங்கிருந்து எங்கு செல்லலாம் என்று யோசிக்காதீர்கள். பிறந்த வீட்டில் இருந்து மாமியார் வீடு போய் சரியில்லை என்பதால் தனிக்குடித்தனம் போயாச்சு.. இனி போனால்...?

எண்ணம் - 3

முழுக்க முழுக்க என்னைக் கவர்ந்த, நான் வாசித்த பதிவர்கள் குறித்து எழுந்த எண்ணங்களின் வீச்சுதான். எல்லோரையும் சொல்லும் வாய்ப்பு விரைவில் கிடைக்கும். இப்ப முத்துக்களில் சில மட்டும் ( என் மனதில் பட்டதை சொல்கிறேன்... அவ்வளவுதான்)

நாடோடி இலக்கியன் - நாடோடியாய் இலக்கியம் எழுதும் நல்ல இலக்கியவாதி, அருமையான எழுத்து.

வெ.பூங்குன்றன்- இவரது கவி வரிகளை படித்து வியந்திருக்கிறேன். அப்படி ஒரு வார்த்தை ஜாலம் பாக்தாத்தில் இருந்து முழங்கும் தமிழ் கவி.

தேனம்மை - சும்மா எழுதுகிறேன் என்று சொல்லி என்னமாய் எழுதுகிறார் பாருங்கள். நல்ல இலக்கியவாதி, விமர்சகர்.

செ.சரவணக்குமார் - நிறைய புத்தகங்கள் படித்து விமர்சனங்களில் கலக்குபவர் பக்கங்களெல்லாம் சரவணக்குமாரின் எழுத்துக்களிம் வீச்சுதான்.

புலவன் புலிகேசி - வழிப்போக்கனாய் எழுதினாலும் அருமையான எழுத்து நடை.நிறைய திறமைகளை உள்ளடக்கிய புலி.

பா.ராஜாராம் - கருவேல நிழலில் இளைப்பாறலாம் என்று சற்றே ஒதுங்கிப்பாருங்கள். மரத்தை விட்டு வரமாட்டீர்கள். கவிதைகள், கதைகள் காய்த்துப் பூத்துக் குலுங்குகின்றன்.

ஷங்கர்- பலா பட்டறையில் பல்சுவை தந்து ஷங்கராக மாறினாலும் பலாவின் சுவையில் குறையில்லை.

தியாவின் பேனா - பேனாமுனையின் கூர்மையுடன் எழுதும் இவரது எழுத்துக்களை ரசித்து அனுபவிக்கலாம்.

திவ்யாஹரி - திவ்வியமான கருத்துக்கள் மற்றும் கவிதைகள்.

நிலாமதி - பௌர்ணமியான எழுத்துக்கள். நிலாவின் வீச்சு இவரது எழுதுக்களில்.

அன்புடன் மலிக்கா - கலைச்சாரலில் நீரோடையாய் எழுத்துக்களை பாயவிடுபவர்.

கண்மணி - இவர் கூட்டத்தில் கும்மி அடிக்காமல் தனியாக கும்மி அடிப்பவர். அருமையான எழுத்துக்கள்.

சித்ரா- வெட்டிப்பேச்சு என்பது இவரது பார்வை. ஆனால் நம் பார்வையில் இவர் விவேகமான எழுத்தாளர்.

விடிவெள்ளி - நட்சத்திரமாய் சொலிக்கும் இவரது செண்பக எழுத்துக்கள்.

கமலேஷ் - இவர் சுயம் தேடும் பறவையாம். ஆம் நீண்ட கவிதைகளின் மூலம் நம் சுயம் தேட வைப்பவர்.

அம்பிகா - சொல்லத்தான் நினைக்கிறேன் என்று எழுத்தால் இதயங்களை ஆக்கிரமிப்பவர்.

மீன்துள்ளியான் - மீனாக துள்ளி மின்னலாக இருப்பவர். அருமையான எழுத்துக்கள் ஒருமுறை மீன் பி(ப)டித்துப் பாருங்கள்.

விக்னேஷ்வரி - சில நாட்களுக்கு முன் பதிவுகளை பார்த்தேன். ஆழமான எழுத்துக்கள்.

இரா.குணசீலன் - எல்லோரும் கதை, கவிதை என் பகிர்வுகளில் இருக்க, இவர் தமிழின் வேர்களைத்தேடி இலக்கிய அமுது படைப்பவர்.

நிலாரசிகன் - அனைவரும் ரசிக்கும் பௌர்ணமி இவர்.

ஸ்ட்ராஜன் - நிலா அது வானத்து மேலே என்று சொன்னாலும் நல்ல பகிர்வுகளை கொடுக்கும் பதிவர்.

சத்ரியன் - மனவலி ஏற்படுத்தாத மனவிழி எழுத்துக்கள இவரது கையில் விளையாடுகின்றது.

க.நா.சாந்தி லெட்சுமணன் - கிராமங்களில் காந்தியத்தை தேடும் பெண் பதிவர். நல்ல பதிவுகளை இவரது தளத்தில் மேயலாம்.

ரசிகா - ரசிகக் கூடிய பதிவர்களில் ரசிக்கும்படி எழுதுபவர்.

ஏஞ்சல் - எண்ணங்களின் உருவத்தில் எழுதும் இவர் நல்ல இலக்கியவாதி என்பது இவரது பின்னூட்டங்களில் அறியலாம்.

மேலும் பல நல்ல பதிவுகளைத்தரும் நண்பர்கள் எனது அடுத்த பதிவில் வலம் வருவார்கள் என்ற நம்பிக்கையிடன் முடிக்கிறேன்.

கடைசியாக... நண்பர் செ.சரவணக்குமாரின் நண்பர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக அவர் ஒரு பதிவு வெளியிட்டிருந்தார். அவருக்கு அறுவைச் சிகிச்சை முடிந்திருக்கும் என்று நினைக்கிறேன். அவர் பூரண குணம் அடைய நாம் எல்லாம் இறைவனை பிரார்த்திப்போம்.


-'பரியன் வயல்' சே.குமார்

வெள்ளி, 5 மார்ச், 2010

மனசுக்குள் சில..!



கடந்த ஒரு வாரகாலமாக கணிப்பொறி முன் அமரும் வாய்ப்பு கிட்டவில்லை. காரணம் நாங்கள் தங்கியிருந்த கட்டிடத்தை இடிக்க ஆணை பிறப்பித்தாச்சு, மார்ச் 3ஆம் தேதி கடைசி நாள் என்றார்கள். நாங்களும் அறை தேடி அலுத்து கடைசி நேரம் பார்க்கலாம் என்று அசால்டாக இருந்து விட்டோம். (இன்னும் இரண்டு மாதம் நீடிக்கும் என்று ஒரு சிலர் சொன்ன வார்த்தைகளின் நப்பாசையால்..." மார்ச் ஒண்ணு நல்ல மழை.... அதனால எங்க பிளாட் மட்டும் மின்சாரம் கட்டாகியுள்ளது என்பதை அறியாமல் அலைந்து திரிந்து அதைவிட வசதிகள் குறைந்த அறையை அதிக வாடகைக்கு எடுத்தாச்சு.. இப்ப புதிய அறையில் வாசம்.. இன்னும் பல வேளைகள் பாக்கியிருக்கு... அதனால சில நாட்களுக்கு அடிக்கடி வலைப்பக்கம் வரமுடியாது அப்பப்ப வருவேன்... நண்பர்களுக்கு பின்னூட்டம் இட முடிந்த வரை முயற்சிக்கிறேன். இன்டர்நெட் இல்லைங்க அதான் பிராப்ளம்.
நித்திய ஆனந்தர் குறித்து பத்திரிக்கைகளிலும் வலைப்பக்கங்களிலும் பரபரப்பு செய்திகள். இத்தனை பரபரப்புக்கு காரணம் என்ன? யோசித்தால் காமம் அவ்வளவுதான். அவங்களும் மனிதர்கள்தான்... எதோ சில நல்ல கருத்துக்களை ஆன்மிகம் மூலமாக சொல்லும்போது நம்ம மக்கள் சாமி ஆக்கிவிடுகிறார்கள்... அவர்களும் பணம், புகழ் வந்ததும் காமத்தை எடுத்துக் கொள்கிறார்கள். பிரபலம் ஒருத்தி மாட்டியதால் செய்தியாகும் காமசாமியிடம் எத்தனை முகம் அறியா பெண்கள் அழிந்திருப்பார்கள்... அவர்கள் மனநிலை இப்போது எப்படி இருக்கும்..? . ஏமாறுகிறவர்கள் இருக்கும் வரை .ஏமாற்றுக்கரர்கள் இருக்கத்தான் செய்வார்கள்... அன்று பிரேமானந்தா... இன்று நித்யானந்தா... இடையில் எத்தனை ஆனந்தாக்கள்...?
அவர்களை குற்றம் சொல்லும் நாம் முதலில் திருந்துவோம்... அவர்களை உச்சாணிக் கொம்பில் ஏற்றுவது நாம்தானே... இவர்கள் எல்லாம் நாலு நாளோ ஒருவாரமோ பரபரப்பின் மூலதனமாக இருப்பார்கள். அப்புறம் எதாவது அரசியல்வாதியோ அல்லது பணம் படைத்தவர்களோ தலையிட்டு ஒன்றும் இல்லாமல் பண்ணிவிடுவார்கள். அவ்வளவுதான்.
சில மாதங்களில் நம் மக்கள் அடுத்த ஆனந்தாவை நம்பி புறப்பட்டு விடுவார்கள். தெய்வத்தின் பெயரால் கேவலச்செயல் செய்யும் இவர்களை எல்லாம் தெருவில் நிறுத்தி சுட்டுக் கொள்ளவேண்டும்.எந்த நாயோ எக்கேடோ கெட்டுப் போகட்டும்... வலைப்பூவில் நல்ல விசயங்களை எழுதலாமே...?
நாக்கில் சனி பிடித்த நடிகர் விவேக் அவர்களே... நீங்கள் மேடையில் என்ன வேண்டுமென்றாலும் பேசலாம் அப்போது இருந்த மனநிலையில் பலத்த கை தட்டு கிடைக்கும் என்று பேசினாயே... இப்போது உன் முகத்தை எங்கு வைப்பாய்... காசுக்காக முந்தி விரிப்பவர் யார் என்பது தெரியும்தானே... எதையும் நிதானித்துப் பேச கற்றுக்கொள்.
சரிங்க, நம்ம கதைக்கு வருவோம்... நண்பர் புலவன் புலிகேசி அவரோட வலைத்தளத்தில் எனது ஆசிரியர் என்ற சிறுகதை குறித்து எழுதியிருந்தார். அவருக்கு நன்றிகள் பல. அவருக்கு பின்னூட்டமிட்ட நண்பர்கள் பலர் வாழ்த்தியிருந்தார்கள். அவர்களுக்கும் நன்றி. குறிப்பாக தோழி தேனம்மை என்னை ரொ...ம்...பபபபபபபபப... நல்லா எழுதுறவன்னு சொல்லியிருந்தாங்க... (உண்மையாகவா...?) அவருக்கு நன்றி
சில நாட்களுக்கு முன் அபுதாபியில் பாரதி நட்புக்காக அமைப்பின் சார்பாக திருமதி. பி.சுசிலா அவர்களுக்கு பாராட்டு விழாவும் திரு.டெல்லி கணேஷ் அவர்கள் தலைமையில் விவாதமேடையும் நடத்தப்பட்டது. அது குறித்து 'அபுதாபியில் அமுதைப் பொழியும் நிலவே' என்ற தலைப்பில் வலையில் எழுதியிருந்தேன். அதை படித்த திரு. சுபான் அண்ணா அவர்கள் அந்த அமைப்பின் தலைவரிடம் சொல்லி அவரும் என்னிடம் பேசினார். நன்றாக இருந்தது என்று சொன்னார். அவருக்கு எனது நன்றி.
இன்று காலை எனக்கு வந்த mail பார்த்துக் கொண்டிருந்த போது நண்பர் சுபான் அண்ணா ஒரு forward mail அனுப்பியிருந்தார். அவரிடம் இருந்து அதிகம் mail வரும் அதில் ஒன்று என்ற நினைப்பில் கிளிக்கினால் திரு. டெல்லி கணேஷ் எனது கட்டுரை படித்து பாராட்டு அனுப்பியுள்ளார் (நல்லா எழுதி இருக்கீங்க. ரொம்ப ரொம்ப நன்றி. நிகழ்ச்சியை மறுபடியும் பார்த்த மாதிரி இருந்துது. Hats Off to u Kumar). அவருக்கு எனது நன்றிகள் பல. (எனக்கென்னவோ அந்த கட்டுரையில் திரு.டெல்லி கணேஷ் பற்றி அதிகம் எழுதவில்லை என்ற எண்ணம். இருந்து) அவரிடம் இருந்து பாராட்டு. எனது கட்டுரையில் குறிப்பிட்டிருந்தது போல மேன்மக்கள் மேன் மக்களே..!

-'பரியன் வயல்' சே.குமார்