மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 3 பிப்ரவரி, 2024

சினிமா விமர்சனம் : மதிமாறன் (தமிழ்)

திமாறன்-

உருவக் கேலி பண்ணாதீர்கள் என்பதை அழுத்திச் சொன்னதுடன் அவர்களிடம் இருக்கும் திறமையை மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் என்பதையும் சொல்லியிருக்கும் படம் இது.


போஸ்ட்மேனாக இருக்கும் எம்.எஸ்.பாஸ்கரின் இரண்டு பிள்ளைகளில் மகள் எல்லாரையும் போல் இருக்க, மகனோட வளர்ச்சியில் மாற்றம் தெரிகிறது. மருத்துவரிடம் போய் விசாரிக்கும் போது அவர் சொல்லும் காரணத்தைக் கேட்டு இவ்வளவுதானா டாக்டர் நா வேற என்னமோ நெனச்சிட்டேன். எனச் சொல்லி, உடம்பில் வளர்ச்சி இல்லை என்றால் என்னால் என் மகனோட மனசு உயர்ந்ததாய் இருந்தால் போதும் என இரண்டு பேரையும் மகிழ்வாய், நேசம் மிகுந்தவர்களாய் வளர்க்கிறார்.

மகள் மதியாக வரும் இவானா அழகி, நன்றாக நடித்தும் இருக்கிறார். படத்தின் நாயகனாக , மகன் நெடுமாறனாக வரும் வெங்கட் செங்குட்டுவன், மிக எதார்த்தமாய் நடித்திருக்கிறார். தன்னைக் கேலி பேசுபவர்களைப் பற்றிக் கவலைப்படாமல் தன் பாதையில் படம் முழுவதும் பயணிப்பது சிறப்பு. நாயகனின் தோழியாய், காதலியாய், காவல்துறை அதிகாரியாக வரும் ஆராத்யா தோழியாய், காதலியாய் சிறப்பாகச் செய்திருக்கிறார்.

தன் மகனிடம் நாங்களே இல்லைன்னாலும் நீ அக்காவை விட்டுறக் கூடாது என்றும் நீதான் தம்பிக்குத் துணை என்றும் பிள்ளைகளிடம் சொல்லி வளர்க்கிறார்கள். அப்படித்தான் இருவரும் கல்லூரி வரையிலும் இருக்கிறார்கள். தம்பியை யாராது உருவக் கேலி செய்தால் மதி உடனே அதற்கான பதிலடியைக் கொடுத்து விடுவதுடன் தம்பியையும் கொடுக்கச் சொல்லிக் கொடுக்கிறார். அப்படிப்பட்ட காட்சிகளில் பதினாறு வயதினிலேயிலே சப்பாணின்னு சொன்னா சப்புன்னு அடிச்சிரு எனக் கமலிடம் சொல்லும் ஸ்ரீதேவியை ஞாபகப்படுத்தினார். 

நாம் எடுக்கும் ஒரு முட்டாள்தனமான முடிவு நமது குடும்பத்தை எப்படிப் பாதிக்கும் என்பது தெரிந்திருந்தும் மதி எடுக்கும் ஒரு முடிவு குடும்பத்தை உருக்குலைக்கிறது. தற்கொலை முடிவை எடுக்கும் நெடுமாறன், அப்பாவின் சொன்ன சொல்லை நினைத்து அதை மாற்றிக் கொண்டு அக்காவைத் தேடி சென்னைக்குப் பயணிக்கிறான்.

அங்கு போனபின் படம் பெண்களின் தொடர் கொலை,  அதன் கொலையாளியைத் தேடும் போலீஸ் என வேறு பாதையில் பயணிக்க, குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க நாயகனே உதவியாய் இருக்கிறார்.  இப்படிப்பட்ட ஒருவன் எப்படி போலீஸுக்கு உதவமுடியும் என்று யோசிக்க வழியில்லாமல் கல்லூரியில் படிக்கும் போதே ஒரு கொலையினை ஆராய்ந்து குற்றவாளி யார் என்பதைக் காவல்துறை அதிகாரியான ஆடுகளம் நரேனுக்கு சொல்வதைக் காட்டி விடுகிறார்கள்.

நாயகனின் விசாரணை சிறப்பாகவே இருக்கிறது.  காவல்துறை அதிகாரியின் மகனும் இந்தக் கொலைகளை விசாரிக்கும் அதிகாரியுமான சுதர்ஷன் கோவிந்த், முடிவில் திருந்தினாலும் அதுவரை நாயகனை உருவக்கேலி செய்வதையே முக்கிய வேலையாக வைத்திருக்கிறார்.

படத்தில் தபால் துறை ஊழியர்கள் கிராமத்து மக்களுடன் எப்படி ஒரு நெருக்கமான உறவை வைத்திருப்பார்கள் என்று காட்டியிருக்கிறார்கள். நாயகனும் அப்பாவைப் போல் தபால்துறை  ஊழியராகவே இருக்க விரும்புகிறார். இன்று கிராமங்களுக்கு தபால்காரர்கள் வருவது என்பது அதிசயமான விசயமாகிவிட்டது. தபால்கள் எழுதுவதெல்லாம் இப்போது இல்லாமலேயே போய்விட்டது.

படம் எந்த இடத்திலும் சோர்வைக் கொடுக்கவில்லை என்பதே சிறப்புத்தான். இப்படி ஒரு கதையை எடுத்து குடும்பக் கதையாய் பயணித்து கொலை, தேடுதல் என மற்றொரு பாதைக்குள் பயணிக்கும் கதையை மிகச் சிறப்பாக கொண்டு சென்றிருக்கும் இயக்குநர் மந்திரா வீரபாண்டியன் அவர்களுக்கு வாழ்த்துகள்.

நெடுமாறன் தன் உயரத்தைப் பற்றி யோசிக்காமல் தனது மதியை வைத்து உயரத்துக்குப் போவதாய் இருப்பது சிறப்பு. அதற்காக நாயகனுக்கு அதிகமான பில்டப்புக்கள் எல்லாம் இல்லை. கல்லூரி விழாவில் ஆடும் நடனம் மிகச் சிறப்பு. செங்குட்டுவன் தமிழ் சினிமாவில் நாயகனாக இல்லை என்றாலும் மிக முக்கியமான கதாபாத்திரங்களில் வலம் வரும் வாய்ப்பு அதிகமிருக்கிறது.

இவானாவுக்கான நடிப்பு இடைவேளை வரைதான். அதற்கு அப்புறம் அவர் ஏதோ வருகிறார்... போகிறார் அவ்வளவுதான். எம்.எஸ்.பாஸ்கரின் நடிப்பு எப்பவும் போல் சிறப்பு. அவரின் மனைவியாக வருபவரும் சிறப்பாகவே நடித்திருக்கிறார்.


கொலைகாரன் இவனாகத்தான் இருக்கும் என்பதை நம்மால் கண்டு பிடித்து விட முடிகிறது என்றாலும் அவனிடம் நேரிடையாகப் போகாமல் வேறு ஒருவனை வில்லனாக்கி, கதை அந்த இடத்திலேயே முடிய மீண்டும் நம்மால் யூகிக்க முடிந்த வில்லனிடம் போய் எல்லாத் தமிழ்ச் சினிமாவையும் போல படத்தை முடிப்பது தேவையில்லாமல் இந்த வில்லன் ஏன் எனத் தோன்ற வைக்கிறது.

கார்த்திக் ராஜாவின் இசை ரம்மியம். பர்வேஸின் ஒளிப்பதிவு படத்துக்கு மெருகூட்டியிருக்கிறது.

கிராமங்களில் ஒரு வீட்டில் ஏதாவது பிரச்சினை என்றால் ஊரே கூடி விடும். தன் வீட்டில் நாயகன் கத்தி, விழுந்து கதறி அழும் போது ஒருவர் கூட வராமல் இருப்பது சினிமாத்தனம். அதேபோல் தன்னைக் கேலி பண்ணும் அதிகாரியை காவல் நிலையத்தில் வைத்து வயிற்றில் குத்துவதெல்லாம் நடக்குமா..? அப்படிச் செய்து விட்டு அங்கிருந்து கெத்தாக வெளி வந்துவிடமுடியுமா..?

தனது உருவத்தைப் பற்றி யோசிக்காமல் தன் பாதையில் பயணிக்கும் போது  அவரை உருவக்கேலி செய்வதாய் வரும் காட்சிகளை அதிகமாகக் காட்டியிருப்பதைக் குறைத்திருக்கலாம்.

கதை திருநெல்வேலி பக்கமாய் நடைபெறுவதாய் காட்டினாலும் காளையார் கோவில் குளத்தைப் பார்த்தபோது கதைக்களத்துக்குப் போக முடியவில்லை என்றாலும் கதையோடு ஒன்றிப் பயணிக்க முடிந்தது.

இந்தப் படத்தை கல்லூரியில் எங்களுக்கு முன் படித்த நவீன் அண்ணனின் ஜிஎஸ் சினிமா இண்டர்நேசனலுக்காக லெனின் பாபு தயாரித்திருக்கிறார். நல்லதொரு படத்தைக் கொடுத்ததற்காக அண்ணனுக்கு வாழ்த்துகள்.

மற்றபடி நெடுமாறன்... இல்லையில்லை மதிமாறன் பார்க்க வேண்டிய படம்தான். 

மதியோடு பயணிக்கும் மதிமாறன் கூட நாமும் சேர்ந்தே பயணிக்கலாம்.

-பரிவை சே.குமார்.

2 எண்ணங்கள்:

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்லதொரு விமர்சனம். படத்தின் சில காட்சிகளை இணையத்தில் பார்க்க முடிந்தது. முழு படமும் பார்க்கக் கிடைத்தால் பார்க்கலாம் என்று தோன்றுகிறது.

ஸ்ரீராம். சொன்னது…

OTT யில் வந்ததும் பார்த்து விடுகிறேன்! நல்லதொரு பகிர்விற்கு நன்றி குமார்.