மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வியாழன், 18 ஜனவரி, 2024

மனசு பேசுகிறது : ஐந்து வருடத்தில் ஏழு புத்தகங்கள்

ந்த முறை சென்னைப் புத்தகக் கண்காட்சிக்கு இரண்டு புத்தகங்கள், அதுவும் இரண்டுமே நாவல் என்பதெல்லாம் என்னாலயே நம்ப முடியாத ஒன்று. இதையெல்லாம் சாத்தியமாக்கியது நட்புக்கள்தான். அன்று தசரதனிடம் கொண்டு சேர்த்த நட்புக்களால்தான் கலக்கல் ட்ரீம்ஸில் ஆண்டுக்கு ஒன்றாய் இந்தாண்டில் எனது ஐந்தாவது புத்தகமாய் 'காளையன்'.

அதேபோல் கேலக்ஸி பாலாஜி அண்ணனுக்கு என் எழுத்து மீது பெரும் நம்பிக்கை உண்டு. அந்த நம்பிக்கையில் ஒரு கதாபாத்திரம் எல்லாக் கதையிலும் வரணும், உன்னால் முடியும் எழுது எனச் சொல்லி எழுதச் சொன்னதுதான் 'வாத்தியார்'. அதில் பதிமூனு கதையிலும் வாத்தியார் இருப்பார். அதன்பின் ஷார்ஜா புத்தகக் கண்காட்சிக்கு நாவல் கொன்டு வர்றோம் எனச் சொல்லி எழுதச் சொன்னார். சில காரணங்களால் கொண்டு வர இயலாமல் போய் சென்னைப் புத்தகக் கண்காட்சிக்கு வந்திருக்கிறது 'சாக்காடு'.

இந்த இரண்டு நாவல்களுமே 2021-ல் எழுத ஆரம்பித்து, 2022 கொடுத்த அடியில் எதுவுமே எழுதாமலேயே அந்த வருடம் கடந்து 2023-லிலும் பெரிதாக எதுவும் எழுதிவிடவில்லை. வாத்தியாருக்கான கதைகள் பாலாஜி அண்ணன் எழுதச் சொல்லி விரட்டியதாலேயே சாத்தியமானது. இருவரும் எழுதச் சொல்லி விரட்டியபோது கேலக்ஸிக்கு என எழுத ஆரம்பித்து இரண்டு அத்தியாயத்துடன் தொடராமல் விட்டிருந்த காளையனை தொடர்ந்து எழுதி, கிளைக்கதைகள் எழுதி இணைத்து கலக்கலுக்குக் கொடுத்து விட்டு, கலக்கலுக்கு என எழுத் இருந்த ஒரு சாவுக் கதைக்குள் நினைவுகளைச் சுமக்கும் மனிதனின் கதையைத் தனியே எழுதிச் சேர்த்து கேலக்ஸிக்குக் கொடுத்தேன்.

இப்ப என்ன எழுத ஆரம்பித்திருக்கிறீர்கள் எனக் கேட்கும் நண்பர்களிடம் ஒரு சிறு புன்னகையை உதிர்த்துவிட்டு நகர்ந்து செல்கிறேன். காரணம் இந்த நாவல்களுக்குப் பின் வேறொன்றும் எழுதவில்லை, எழுத நினைக்கவுமில்லை.... இன்னும் சில நாட்களோ மாதங்களோ ஆகலாம் அடுத்து எழுத ஆரம்பிக்க.

2019 டிசம்பருக்கு முன் நம் எழுத்தில் ஐந்து வருடத்தில் ஏழு புத்தகங்கள் வரும் என்றெல்லாம், ஏன் நம் கதைகளைப் புத்தகமாக்குவோம் என்று கூட நான் நினைத்ததில்லை. எல்லாமே நடந்தது.... காரணம் தசரசன்.

கலக்கல் ட்ரீம்ஸ்க்குப் போகும் முன் அமீரகத்தில் ஒரு முயற்சி, அது தோல்வியில்தான் முடிந்தது. பணம் கொடுத்து புத்தகம் போடுவது என்பது நடக்காத காரியம் என்பதுடன் அப்படிப் புத்தகம் போட்டு எதுவும் சாதிக்கப் போவதில்லை என்பதுதான் உண்மை.

அமீரகத்தில் புத்தகம் கொண்டு வர முயற்சிகள் நடந்தபோது அணிந்துரை வேண்டுமென எனக்கு நெருக்கமான ஒரு பிரபலத்திடம் போய் நின்ற போது, கதைகளை வாங்கி வாசிக்கிறேன் என்று சொல்லிக் கிட்டத்தட்ட ஒரு மாதத்துக்கு மேல் இழுத்துப் பின் இதில் சில கதைகள் மூடநம்பிக்கையைத் தூக்கிப் பிடிக்கின்றன என்று சொன்னதுடன் எனக்கு எழுத விருப்பமில்லை என்றார். இவ்வளவுக்கும் அவர் யார் கவிதை எழுதினாலும் அதற்கு அணிந்துரை எழுதிக் கொடுப்பதை அறிந்துதான் நான் கொடுத்தேன். மேலும் எனது கதைகளுக்கு அவர் கொடுக்கும் கருத்துக்களையும் மனதில் வைத்தே அவரிடம் கேட்டுச் சூடு பட்டுக் கொண்டேன். மூட நம்பிக்கை என இவர் சொன்ன கதைகள்தான் பலரால் பேசப்பட்டது. அந்தப் புத்தகம்தான் தஞ்சை பிரகாஷ் வளரும் எழுத்தாளர் விருதைப் பெற்றது. 

அதேபோல் மற்றொரு எழுத்தாளரான அண்ணன் ஒருவர் என் எழுத்தை மண் சார்ந்த எழுத்து எனச் சொல்லி எப்போதும் பாராட்டுவார். நான் எழுதித்தாரேன் என அவரே கேட்டு வாங்கினார், என்ன நினைத்தாரோ தெரியாது அழுகாச்சிக் கதைகளுக்கு நான் எழுதுவதில்லை எனச் சொன்னார். இந்த நிகழ்வுகள் வெறுப்பு மனநிலையை ஏற்படுத்தியபோது நானே எழுதுறேன்டா என என் நண்பன் தமிழ்க்காதலன் எழுதினான். அந்த நேரத்தில் இங்கு புத்தகம் கொண்டு வர இருந்த அமைப்பு பின்வாங்க, புத்தகங்கள் வெளிவரவில்லை.

இவர்கள் எல்லாம் இப்படிச் சொன்னதால் முதல் புத்தகமாக 2019-ல் 'எதிர்சேவை'-யை  தசரதன் கொண்டு வந்தபோது அணிந்துரை யாரிடமும் வாங்குவதில்லை என்பதே முதல் முடிவாய் இருந்தது. இதுவரை எந்தப் புத்தகத்துக்கும் அணிந்துரை வாங்கியதில்லை, வேரும் விழுதுகளும் நாவலுக்கு மட்டும் எங்க ஐயாவிடம் வாங்க வேண்டும் என வாங்கிப் போட்டோம். இப்போது வெளியிட்ட புத்தகம் வரை அணிந்துரை இல்லாமல்தான் வெளியிட்டிருக்கிறோம்.

இப்போது ஒரு எழுத்தாளனாய் ஓரளவுக்கு அறியப்பட்ட முகமாக மாறியிருக்கிறேன் என்றே நினைக்கிறேன். என்னால் எழுத முடியும் வரை எழுதிக் கொண்டே இருப்பேன். அவ்வளவே.


காளையனிலிருந்து சில வரிகள்...

“ஏம்ப்பா... மாடு புடிபடலப்பா... யாருப்பா அது மாட்டுக்காரரு... சொர்ணலிங்கம்தானே... ஏப்பா... மாட்டுக்காரங்க இருந்தா அதுமேல கயறு போடுங்கப்பா... அதப் புடிங்கப்பா... எப்பா ஆளுக இல்லேன்னா மாடு புடிக்கிறவுக ஒதுங்குங்கப்பா... அது பாட்டுக்கப் போவட்டும். அப்பறம் அதுக்கிட்ட ஒரண்ட இழுத்துக் குத்து வாங்குனா கமிட்டி பொறுப்பேற்காது... கமிட்டியோட அறிவிப்பு மாடு புடிபடல... புடிமாடு இல்ல.' எனக் கத்தினார் மைக்கில் பேசிக் கொண்டிருந்தவர்.

காளையனை விட்டுக் கூட்டம் ஒதுங்கியது.

மாடு பிடிபடவில்லை என்ற அறிவிப்பைக் கேட்டதும் வேனில் இருந்து கீழிறங்கி, வேட்டியைத் தூக்கிக் கட்டிக் கொண்டு மீசையை முறுக்கி, அருகிலிருந்தவர்களிடம் 'காளயன் களத்துல ஜெயிச்சிட்டான். இனிமே அவனோட காலம். அவன் களத்துல நிக்கிற வரக்கிம் பிடிபடமாட்டான்' எனச் சிரித்தார் சொர்ணலிங்கம்.

'பிடிங்க பணம் தர்றேன்'னு சொன்ன புத்தூரணி முத்து, சொர்ணம் இருவரும் எதுவும் சொல்ல முடியாமல் அங்கிருந்து நகர, 'பிடிபட்டா காசு தர்றேன்னு கொக்கரிச்சீங்க... இப்பச் சொல்றேன். நீங்க ரெண்டு பேரும் அவனப் பிடிச்சிட்டீங்கன்னா நா ஐயாயிரம் தர்றேன். பிடிச்சிப் பாருங்க' கத்தினார் சுந்தர்ராஜன்.

இருவரும் பதில் பேசவில்லை.

பாண்டி கயிறை எடுத்து காளையன் முதுகில் போட்டான்.

தன் இடத்தில் நின்று கொண்டிருந்த காளையன் அமைதியானது.

பாண்டி அருகில் போய் அதன் நெற்றியில் தடவிக் கொடுத்தான்.

தனது தலையை வைத்து அவனின் உடம்பில் உரசியது.

'வாடா' என்று சொல்லி அவனும் சுந்தர்ராஜனும் நடக்க, அதுவரை கோபத்தில் தகித்துக் கொண்டிருந்த காளையன் அமைதியாய், அம்மா பின்னே மெல்ல நடக்கும் குழந்தையாய் மாறி அடியெடுத்து வைத்தது.

*

காளையன், கலக்கல் ட்ரீம்ஸ், விலை.150/-

தொடர்புக்கு,

தசரதன்
கலக்கல் ட்ரீம்ஸ்
0091 98409 67484

****


சாக்காட்டிலிருந்து சில வரிகள்...

"கார்த்தி... கார்த்திதானே...?  என்னத்தா இருட்டுக்குள்ள..?"

"சும்மாதான் மாமா... ஒண்ணுக்குப் போலாமுன்னு..."

"அதான் பின்னால டாய்லெட் இருக்குதானே... அங்க போவேண்டியதுதானே..."

"கொஞ்சம் காத்தாட வெளிய போயிட்டு வரலாமுன்னுதான்... நம்மூருல என்ன பயம்...?" 

"இருட்டு ஏமத்துக்குப் பயப்படணும்த்தா... நாளு நட்சத்திரம் நல்லாயில்ல. நீ உள்ள இருக்க பாத்ரூமுல போ... இல்லேன்னா அந்தா அந்தப்பக்கம் மறைவாப் பொயிட்டு வா. வாசக்கதவத் தொறந்து வெளிய  போ வேணாம்..."

"சரி மாமா..." என்றபடி வடக்குப் பக்கம் போனாள்.

"ஆத்தா... தூக்கம் வரலன்னு இங்க வா. மாமாவுக்கும் தூக்கம் வரலதான்... என்னென்னவோ நெனப்பு... எல்லாத்துலயும் அம்மா. மனசெல்லாம் படபடங்குது...." என்றபடி சோம்பல் முறித்தார்.

"என்ன மாமா பண்ணுது... தண்ணி எடுத்தாரவா..?"

"ஏய் அதெல்லாம் ஒண்ணுமில்ல... நீ பொயிட்டு இங்க வா..."

"ம்..." எனச் சென்றவள் சிறிது நேரத்தில் திரும்பி வந்து சந்திரனுக்கு முன் நின்றபடி "ஆயா நினைவால தூக்கம் வரலயா மாமா...” என்றாள்.

“ஆத்தா... இப்டி உக்காருடா”

“பரவாயில்ல மாமா”

“அட உக்காருத்தா... நீ ஏம்புள்ளதானே... மரியாத எதுக்கு... சின்ன வயசுல இங்க மிதிச்சி, ஒண்ணுக்கு ரெண்டுக்கெல்லாம் எம்மேல போயி வளர்ந்த புள்ளதானே... உக்காரு...” என்றதும் அருகே அமர்ந்தாள். சந்திரன் தூக்கி வளர்த்த பிள்ளைகளில் கார்த்திகாவுக்கே முதலிடம். அவரின் நெஞ்சில்தான் பலநாள் தூங்கியிருக்கிறாள். ஆரம்பத்தில் படித்தது கூட ஆயா வீட்டில் இருந்துதான். 

"ம்... நீங்கள்லாம் தள்ளித்தள்ளி இருந்துட்டீங்க... உங்க சின்ன மாமானுங்க கூட தள்ளித்தான் இருந்தானுங்க... நாந்தான்... ம்ம்ம்ம்... நான்தான் கூடவே... அது கூடவே இருந்துட்டேன். எப்பவாச்சும் கோவத்துல ஏதாச்சும் கத்திட்டுப் போயிருவேன்... எனக்கும் மனசு கேக்காது, அதுக்கும் மனசு கெடக்காது. திரும்பி வரும்போது வாசல்லயே... ம்... வாசல்லயே உக்காந்திருக்கும். ம்ம்ம்ம்... ஒரு நா வெளியில ராத்தங்கிட்டா அவன் வரல... எப்ப வருவான்னு நச்சரிச்சிக்கிட்டே இருக்கும்... ம்ம்ம்ம்ம்... யாரு என்னய என்ன சொன்னாலும் அதுக்குப் படக்குன்னு கோபம் வந்துரும். அதோட நெனப்பு... இன்னக்கி அது மொகத்துல மண்ணள்ளிப் போடு... முடியல... மறக்குறதுதானே மனுசப்பொறப்பு... செத்தவங்க நெனப்பத் தூக்கிட்டா அலையப் போறோம்... கொஞ்சநாளக்கிச் சொமப்போமுல்ல... என்னமோ முடியல கார்த்தி..." கண்ணைத் துடைத்துக் கொண்டார்.

"என்ன மாமா இது... சின்னப்புள்ளயாட்டம்... ஆயா நம்ம எல்லாருக்கும் துணையாயிருக்கும்..." அவரின் முதுகில் கைவைத்து ஆதரவாய் தடவினாள்.

"ஆத்தா மாமா சொல்றத கேப்பேதானே...?"

"என்ன மாமா... நீங்க சொல்லி நா எப்பக் கேக்கல..."

"ம்... நீ ஓவியமுத்தா... ஓவியம்... ஆனா உன் நெலம..." பேச முடியாமல் நிறுத்திக் கொண்டார்.

"எனக்கென்ன மாமா... நீங்கள்லாம் இருக்கீங்க... பின்ன என்ன... நா... நா நல்லாத்தானே இருக்கேன்..." உடைந்தாள்.

"ம்... எங்காத்தா, அதான் உங்காயா உனக்குத் தொணக்கித் தொணயா நின்னு நல்ல வாழ்க்கையை அமைச்சிக் கொடுக்கணும்... நீ ரொம்ப நல்லாயிருக்கணும்"

கார்த்திகா சிரித்தாள்.

"ஏந்த்தா சிரிக்கிறே... இப்புடியே இருக்க முடியுமா..? அது அந்தக் காலம் நினைவச் சொமந்துக்கிட்டு வாழ்ந்தது. அதுவும் பொம்பளங்க மட்டுந்தான்... ஆம்பளக்கி வருசந் திரும்பும் முன்னால அடுத்த பொண்டாட்டி..."

"அதெல்லாம் வேண்டாம்மாமா... இ... இ...இப்புடியே இருந்துடு...றேன்..."

சந்திரன் ஒன்றும் பேசவில்லை.

*

சாக்காடு, கேலக்ஸி பதிப்பகம், விலை ரூ.260.

தொடர்புக்கு...

புகாரி
வாட்ஸப் - +91 99944 34432

*

சென்னைப் புத்தகக் கண்காட்சி கலக்கல் ட்ரீம்ஸ் அரங்கு எண் 520, 521-ல்... நானும் ஒரு எழுத்தாளனாய்...நன்றி. 

-பரிவை சே.குமார்.

4 எண்ணங்கள்:

வெங்கட் நாகராஜ் சொன்னது…

ஐந்து வருடங்களில் ஏழு புத்தகங்கள்….. மனம் நிறைந்த வாழ்த்துகள் குமார். நல்லதே நடக்கட்டும். மென்மேலும் தங்களது புத்தகங்கள் வெளிவர வாழ்த்துகள்.

Kamala Hariharan சொன்னது…

வணக்கம் சகோதரரே

ஐந்து வருடங்களில் ஏழு புத்தகங்களை எழுதி வெளியிட்டுள்ளீர்கள். மனமார்ந்த வாழ்த்துக்கள் மேலும், மேலும் தங்கள் சிறந்த படைப்புக்கள் வெளிவர இறைவனை வேண்டிக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

ஸ்ரீராம். சொன்னது…

மென்மேலும் உயர, சிறக்க வாழ்த்துகள் குமார்.

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் சொன்னது…

ஐந்தாண்டுகளில் ஏழு நூல்கள்!! வாழ்த்துகள் சகோ, தொடர்ந்து நிறைய எழுதுங்கள்.