மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 25 மார்ச், 2023

புத்தக விமர்சனம் : சுரதா தொகுத்த 'நெஞ்சில் நிறுத்துங்கள்'

விஞர் சுரதா தொகுத்த 'நெஞ்சில் நிறுத்துங்கள்' என்னும் புத்தகம் சகோதரர் ராஜாராம் மூலம் வாசிக்கக் கிடைத்தது. சற்றே வித்தியாசமான புத்தகம் அது.


'தொடுப்பவன் தன் திறமையை வெளிப்படுத்துகிறான். தொகுப்பவன் பிறர் திறமையை வெளிப்படுத்துகிறான். தமிழும் தமிழிலக்கியமும் வளர வேண்டுமானால் தொடுக்கவும் வேண்டும், பிறர் கருத்துக்களைத் தொகுத்து வெளியிடவும் வேண்டும். இப்போது நான் இரண்டாவது காரியத்தைச் செய்திருக்கிறேன்' என்று தனது உதடுகளில் - முன்னுரை- சொல்லியிருக்கிறார் சுரதா.


இதில் மொத்தம் ஒன்பது கட்டுரைகள் இருக்கின்றன. எல்லாமே பிரபலங்கள் எழுதிய உயில், கடிதங்களின் தொகுப்பு என்பதே இதன் சிறப்பு. 


முதல் கட்டுரை 'மருதுவின் மரண வாக்குமூலம்' - சிவகங்கைச் சீமையில் வேலு நாச்சியாருக்குப் பக்கபலமாய் நின்று பதினெட்டாம் நூற்றாண்டில் வெள்ளையனை எதிர்த்துப் போரிட்ட பெரிய மருது, 1801-ம் ஆண்டு அக்டோபர் பத்தாம் தேதி ஆங்கிலேயரால் தூக்கிலிடப்படுவதற்கு முன் அளித்த மரண வாக்குமூலமே இது. இதில் யார் யாருக்குத் தனது சொத்தில் பங்கு கொடுக்க வேண்டும் எனச் சொல்லியிருப்பார். வேலுநாச்சியார் குறித்து வரும் செய்தி இடைச்செருகலாகக் கூட இருக்கலாம் என்றால் மருதுவின் வாக்குமூலம் இது என்பது சற்றே அதிர்ச்சியாகவும் இருந்தது. சிவகங்கை மண்ணில் பிறந்தவன் என்பதாலும் வேலு நாச்சியாரைப் பற்றிக் கேள்விப்பட்டதில் இதுவரை கேள்விப் படாத ஒரு செய்தியை இக்கட்டுரை பேசியிருக்கிறது என்பதாலும் இக்கதையில் எனக்கு அத்தனை நம்பிக்கை இல்லை என்பதே உண்மை.  செய்திகள் திரிக்கப்பட்டிருக்கலாம் என்று தோன்றினாலும் இது கிழக்கிந்தியக் கம்பெனியாரின் சேனாதிபதியான கர்னல் அக்னியூ துரையின் முன்பாக சொல்லப்பட்ட வாக்குமூலம் எனச் சுரதா பகிர்ந்திருக்கிறார். அவருக்கும் இதில் சந்தேகம் இருக்கத்தான் செய்கிறது. சிவகங்கைச் சீமை குறித்தான் வரலாற்று ஆய்வாளர்கள்தான் இக்கதை உண்மைதானா என்பதைச் சொல்லமுடியும். 


இரண்டாவது கட்டுரை 'பச்சையப்ப முதலியாரின் உயில்' - தனது நாற்பதாவது வயதில் மறைந்த காஞ்சிபுரம் பச்சையப்ப முதலியார் பலருக்குக் கடிதம் எழுதியிருந்தாலும் ஒரு சிலவற்றைத் தவிர மற்றவை கிடைக்கவில்லை என்று சொல்லும் சுரதா, 1974-ம் ஆண்டு மார்ச் 22-ம் தேதி அவர் எழுதி வைத்த இவ்வுயில் கிடைத்ததாகச் சொல்லி அதைப் பகிர்ந்திருக்கிறார். இதில் அவர் இத்தனை வராகனை இவருக்குக் கொடுங்கள். இதை வட்டிக்கு வைத்து அதில் வரும் தொகையை இந்த காரியத்துக்குப் பயன்படுத்தச் சொல்லுங்கள் என எழுதியிருக்கிறார். தான் இரண்டாவது கல்யாணம் பண்ணிக் கொண்ட வேதாரண்யம் பெண்ணுக்கும் அவரின் மகளுக்கும் நகை, திருமணச் செலவு, தட்டுமுட்டுச் சாமானுக்கு ஐயாயிரம் பொன் கொடுக்கச் சொல்லியிருக்கிறார். தனது சகோதரி மகனும் புத்தி சுவாதீனமில்லாமலும் இருப்பவனுக்கு ஐயாயிரம் பூவராகன் கொடுக்கச் சொல்லியிருக்கிறார். இப்படி இந்த உயில் முழுவதும் மற்றவர்களுக்கு உதவும்படி பணம் கொடுக்கச் சொல்லியிருப்பதுடன் இறுதியில் இருவரைச் சாட்சியும் வைத்துள்ளார்.


மூன்றாவது கட்டுரை 'ஆறுமுக நாவலரின் ஐந்து முடிவுகள் - துறவி ஆகாமலே ஒரு துறவியைப் போல் வாழ்ந்த, தமிழையும் சைவத்தையும் தன்னுடைய இரு கண்களாகக் கருதிய, பழந்தமிழ் நூல்கள் பலவற்றைப் பதிப்பித்தும், உரைநடையைப் புதுப்பித்தும், சிறந்த சொற்பொழிவாளராகவும் வாழ்ந்த, அதீத நினைவாற்றலை உடைய  நல்லூர் ஆறுமுக நாவலர் 1868-ல் எழுதியது இது. அவர் தான் தமிழ் பண்டிதனாக இருந்து அதைத் தொடராததற்கான காரணத்தையும், ஆங்கில வித்வானாக வாய்ப்பிருந்து அதைச் செய்ய விரும்பாத காரணத்தையும், தனது சகோதரர்கள் வசதியாய் இருந்தபோதும் அவர்களிடம் பொருளுதவி பெறாத காரணத்தையும், தான் திருமணம் செய்து கொள்ளாத காரணத்தையும் சொல்லி இதற்கெல்லாம் முக்கியக் காரணம் சைவ சமயத்தையும் அதன் வளர்ச்சிக்குக் கருவாகிய கல்வியையும் வளர்க்க வேண்டும் என்ற பேராசைதான் காரணம் என்றும் சொல்லியிருக்கிறார்.


நான்காவது கட்டுரை 'வள்ளலாரின் விளக்கப் பத்திரிகை' - பசித்திருக்கையில் ஏழைகளின் பசியை உணர்ந்தும், தனித்திருக்கையில் தன்னைப் பற்றி அறிந்து இன்பமுற்றும், விழித்திருக்கையில் கனிவிலும் முதிர்ச்சியிலும் இரக்கத்திலும் சிறந்த இனிய பாடல்களைப் பாடியும் வாழ்ந்த வள்ளலார் 1872-ல் எழுதிய கடிதம் இது. இதில் இன்று முதல் தங்களது சபைக்கு சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபை என்றும், சாலைக்குச் சமரச சுத்த சன்மார்க்க சத்திய தர்மச்சாலை என்றும், சங்கத்துக்கு சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் என்றும் திருப்பெயர் வழங்க வேண்டும் எனச் சொல்லி, ஞானசபைக்குள்ளே எப்படி விளக்கேற்ற வேண்டும், யார் விளக்கேற்ற வேண்டும் என்றும் எழுதியிருக்கிறார்.


ஐந்தாவது கட்டுரை 'நரசிமலு நாயுடுவின் நாட்குறிப்பு' - தன் எதிரே நிற்கும் மனிதனைத் தன் பார்வையால் எப்படிப்பட்டவன் என அறிந்து கொள்ளும் விவேகியும், அவசரப்படாத அரசியல்வாதியும், தமிழ், தெலுங்கு, வடமொழி, ஆங்கிலத்தில் புலமை பெற்றவருமான சேலம் பக்டாலு நரசிம்மலு நாயுடு எழுதியது இது. 1889-ல் வெளிவந்த 'திவ்விய தேச யாத்திரை' என்னும் இவரது பயணநூலே தமிழகத்தில் வெளிவந்த முதல் பயண நூலாகும். இவர் தனது சொத்துக்களை மனைவி, மக்களுக்கோ அல்லது உறவுகளுக்கோ எழுதி வைக்காமல் அறக்கட்டளைக்கு எழுதி வைத்தவர் ஆவார்.  1885-ல் மும்பையில் கூடிய முதல் காங்கிரஸ் சபைக்கு கோயமுத்தூர் பிரதிநிதியாக அவர், சென்னையில் இருந்து பிரபலங்களான இரங்கய்யா நாயுடு, சுப்பிரமணிய ஐயர், திவான் பகதூர் இரகுநாத ராயர், ராய்பகதூர் அனந்தாசர் உள்ளிட்ட இருபத்தியோரு பேருடன் பயணப்பட்டதையும், ஸ்ரீமான் சேட் கோகுலதாஸின் திருமாளிகையில் தங்கியதையும் அங்கு தாங்கள் கவனிக்கப்பட்ட விசயத்தையும் காங்கிரஸ் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களையும் பற்றி மிக விரிவாக, வாசிப்பவரை ஈர்க்கும் வண்ணம் எழுதியிருக்கிறார்.


ஆறாவது கட்டுரை 'முருகேச பிள்ளையின் வாத விளம்பரம்' - 1883-ல் புதுக்கோட்டை அரங்கசாமி பிள்ளை அவர்கள் முதல் முதலாக சிவக சிந்தாமணியின் முதல் ஐந்து இலம்பகங்களைப் பதிப்பித்தார். அதன் பின்னர் 1887-ல் உ.வே.சாமிநாத ஐயர் அவர்கள் நூல் முழுவதும் அடங்கிய பதிப்பினைக் கொண்டு வந்தார். இந்தப் பதிப்பில் பல பிழைகள் இருப்பதைப் பார்த்து 'சீவக சிந்தாமணி வழுப்பிரகரணம்' என்னும் கண்டன நூலைக் கொண்டு வந்தவர்தான் இந்த  சுன்னாகம் முருகேச பண்டிதர். இதற்குத் தனது மாணவனான சண்முகம் பிள்ளையைக் கொண்டு கன்டண நூல் எழுதச் செய்தார் உ.வே.சா. இதனால் கோபமுற்ற முருகேச பிள்ளை இருவரையும் வாதுக்கு - விவாதம் - அழைத்தார். முருகேச பிள்ளையோ மறைமலை அடிகளாரைப் போல ஒவ்வொரு நூலையும் எழுத்தெண்ணிப் படித்தவர், மேலும் வித்வான் தியாகராசச் செட்டியாரையே திகைக்க வைத்தவர் என்பதால் அவருடன் வாதிட இருவரும் முன்வரவில்லை. இதனால் முருகேச பிள்ளை 1888-ல் ஒரு வாத விளம்பரம் கொடுத்தார். அதில் தான் சுட்டிக்காட்டிய பிழைகளை பிழைகள் அல்ல எனத் தக்க ஆதாரங்களோடு அறிஞர்கள் பலர் கூடிய சபையில் எடுத்துக் கூறினால் தானும் அதில் இருக்கும் தவறுகளை எனது ஆதாரங்களுடன் விளக்கச் சித்தமாயிருக்கிறேன் என்றும் சொல்லியிருந்தார்.  


ஏழாவது கட்டுரை 'காரைக்கால் இராசகோபால பிள்ளையின் கல்வி அறிக்கை' - ஆங்கிலேயர்களிடம் செல்வாக்குப் பெற்றிருந்த தமிழர்களின் வளர்ச்சியைப் பொறுக்காது  சில சமூகங்கள் செய்த காரியத்தால் தமிழர்கள் வீழ்ச்சி அடைந்ததைக் கண்டு வருந்தியவர்களில் காரைக்கால் இராசகோபால் பிள்ளையும் ஒருவர். இவர் தமிழர் நலனைக் கருத்தில் கொண்டு ஆங்கில-தமிழ்ப் பாடசாலை ஒன்றை காரைக்காலில் நிறுவினார். 1890-ஆம் ஆண்டிலேயே ஏழை மாணவர்களுக்கு இலவசக் கல்வி என்னும் திட்டத்தையும் கொண்டு வந்தார். தனது பாடசாலை குறித்தும் அதன் செயல்பாடுகள் குறித்தும் அவர் எழுதிய விளம்பரக் கடிதம்தான் இது.


எட்டாவது கட்டுரை 'சூளை சோமசுந்தர நாயகரின் மன்னிப்புக் கடிதம்' - சிறந்த சொற்பொழிவாளரும் வைணவ மதத்தையும் வைணவப் பெரியார்களையும் கடுமையாகக் கண்டித்தெழுதியும் பேசியும் வந்தவருமான சூளை சோமசுந்தர நாயகர், தனது பஞ்சராத்திர மதசபேடிகை அல்லது சைவ சூளாமணி என்னும் நூலில் புதுவை இராமநுச நாவலரை 'அவுசாரி மகன்' என இழிவாகக் குறிப்பிட்டு எழுதியதால் அவர்மீது இராமநூசரால் சென்னைப் பட்டணம் பிரசிடெண்சி மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டில் வழக்குத் தொடுக்கப்பட்டது. அந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது சூளை சோமசுந்தர நாயகர், அட்டர்னிகள் முன்னிலையின் மாஜிஸ்ட்ரேட்டிடம் மன்னிப்புக் கடிதம் கொடுத்தார்.  அதில் தான் அவ்வாறு எழுதியதற்கு மன்னிக்கும்படியும், இனிமேல் நான் அவதூறாகப் பேசமாட்டேன் என்றும் இதனால் அவருக்கு ஏற்பட்ட செலவுக்கும் மானநஷ்டத்துக்கும் ரூபாய் நூறு அபராதமாக செலுத்தியிருக்கிறேன் என்றும் இதை தங்களின் விருப்பப்படி பத்திரிக்கைகளில் பிரியசுரித்துக் கொள்ளலாம் என்றும் இனிமேல் இதுவிசயமாக எந்தவொரு நீதிமன்ற விவாவதமும் நடக்க வேண்டாம் என்றும் எழுதியிருந்தார்.


ஒன்பதாவது கட்டுரை 'டி.என்.சொக்கலிங்கத்தின் வேண்டுகோள்' - திண்டிவனத்தில் 1852-ல் பிறந்து 1897-ல் மறைந்த பன்மொழிப் புலவர் ப.வ.இராமசாமி ராஜு என்பவர்1877-ல் தேசியப் பாடலொன்றைப் பாடியிருக்கிறார். இதன் மூலம் தமிழகத்தில் தோன்றிய முதல் தேசியக் கவிஞர் இவர்தான் என்பதை யாரும் மறுக்க முடியாது. இவர் பல்லவி என்றால் இவருக்கு அடுத்த நிலையிலுள்ள பாரதியார் அனுபல்லவியைப் போன்றவர் சேலம் அர்த்தநாரீஸ்வர வர்மாவும், கோவை குழந்தை தாசும், பழனி வேலுச்சாமிக் கவியும் சரணத்தைப் போன்றவர்கள் எனச் சொல்லும் சுரதா, பாரதி தவிர மற்றவர்களின் பெயர்களைக் கூட மக்கள் மறந்து விட்டார்கள் என வருத்தப்பட்டுள்ளார், காமராஜரின் நண்பரும், தலையங்கம் எழுதுவதில் சிறந்தவருமான சொக்கலிங்கம் அவர்கள் பாரதியின் கவிதைகளில் மிகுந்த ஈடுபாடு உடையவர்,  இவர் பாரதி மீது கொண்ட பற்றின் காரணமாக அவரின் பாடல்களை பட்டிதொட்டி எங்கும் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக இவ்வேண்டுகோள் கடிதத்தை எழுதியிருக்கிறார். இவர் 1934 முதல் 1947 வரை தினமனி ஆசிரியராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


புறநானூறு மிகப்பெரிய தொகுப்பு நூல், இது மிகச் சிறிய தொகுப்பு நூல் இந்நூல் ஆராய்ச்சியாளர்களுக்குப் பெருதும் பயன்படும் என்றே கருதுகிறேன் எனச் சுரதா எழுதியிருக்கிறார். உண்மைதான், வாசிக்கக் கிடைத்த மிக வித்தியாசமான நூல். கிடைத்தால் வாசியுங்கள் அன்றைய தமிழின் சுவையையும் உணரலாம்.


சிறப்பான கட்டுரைகளின் தொகுப்பான இந்நூல் இப்போது கிடைக்கிறதா என்பது தெரியவில்லை.


-------------------------
சுரதா பதிப்பகம்
முதல் பதிப்பு : 1976
விலை ரூ.1.50
-------------------------

-பரிவை சே.குமார்.

1 எண்ணங்கள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமை குமார்...