மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

திங்கள், 13 டிசம்பர், 2021

பிக்பாஸ் : அபிநய் Vs பாவனி

பிக்பாஸ் பார்த்தாலும் அது குறித்தான பதிவுகளைத் தொடர்ந்து எழுத முடிவதில்லை. கடந்த நான்கு சீசன்களை விட இந்த சீசன் மிகவும் நன்றாகவே இருக்கிறது. பத்து வாரங்களைக் கடந்த நிலையில் குழுக்களாகப் பிரியாமல் அவரவர் தங்களது விளையாட்டை விளையாடுவது என்பது இந்த சீசனில் மட்டும்தான். ஒருவேளை அபிஷேக் இருந்திருந்தால் பிரியங்கா, அபிநய், பாவனி, அபிஷேக் என ஒரு குழு உருவாகியிருக்கலாம் என்றாலும் அபிஷேக் எல்லாப் பக்கமும் காய் நகர்த்தி, எல்லாரும் தனது பேச்சை மட்டுமே கேக்க வேண்டும் என்றுதான் நினைத்திருப்பார். அப்படி எதுவும் நடக்காமல் வந்தார்... அதே போல் விளையாண்டார்... சென்றார்... அவ்வளவுதான்.

இந்த வாரம் யார் போயிருக்க வேண்டும் என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிந்த நிலையில், ஜெமினி பேரன் என்பதற்காக அவருக்கு வாய்ப்புக் கொடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது என்ற பேச்சு இருந்தாலும், கமலின் பேச்சுக்குப் பின் பாவனிக்கும் தனக்குமான உறவில் தன் பக்கம் தவறில்லை என்பதை நிரூபிக்கும் விதமாகவே அபிநய்க்குப் பதிலாக அண்ணாச்சி பலி கொடுக்கப்பட்டிருக்கிறார். இந்தப் பலி ஆடு வரிசையில் அடுத்த வாரம் தாமரையாகக் கூட இருக்கலாம். அபிநய் உள்ளே நிறுத்தப்படுவார். அப்பத்தான் இனி வரும் நாட்கள் அபிநய்-பாவனி-அமீர் என்ற வட்டத்தில் சுற்றி சில பல பிரச்சினைகளை உண்டு பண்ணும் என்பதை பிக்கி தெள்ளத் தெளிவாகத் தெரிந்து வைத்திருக்கிறார். அதன் காரணமாகவே வாக்கு அடிப்படையில் வெளியே போக மாட்டார் என்று நினைத்த அண்ணாச்சியை அனுப்பியிருக்கிறார்கள். கேட்டால் எதிர்பாராததை எதிர்பாருங்கள் என கமல் சொல்லி விட்டு சோபாவில் இருந்து எழுந்து போய் விடுவார்.


ஒரு ஆணும் பெண்ணும் பேசினாலே தவறு என்றும், கணவனை இழந்த பெண் என்றால் எப்போதும் இந்த சமூகத்துக்கு ஒரு இளக்காரம் என்றும் சொல்லிக் கொண்டேதான் இருக்கிறோம். அப்படியான பேச்சுக்களுக்கு யார் முற்றுப்புள்ளி வைப்பது..? இன்று ஆண் பெண் பேதம் பார்த்து யாரும் இங்கு பழகுவதில்லை என்பதே உண்மை என்றாலும் பாவனி விஷயத்தில் அபிநய் நடந்து கொண்ட விதம் எப்படியானது..? பூரணமான,  உண்மையான நேசத்தின் வெளிப்பாடா என்றால் அது இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். கணவனை இழந்தவள் நாம் அதிகமாகக் கவனம் எடுத்துக் கொள்ளும் போது நம் மீது அது காதலாக மாறவும் வாய்ப்பு இருக்கிறது என்பதற்கான காய் நகர்த்துதலே அது என்பதுதான் உண்மை. இதை அபிநய் மறுக்கலாம், கமல் கூட அது அவங்க படுக்கையறை அங்கே ஏன் எட்டிப் பார்க்கிறீர்கள் என்று சொல்லலாம். பாவனி அத்தனை முறை சமூகத்தின் பார்வையை - இங்கே சமூகத்தின் பார்வை என்பது கூட இருக்கும் போட்டியாளர்கள்தான் - சுட்டிக் காட்டிய பின் நான் உன் மீது அப்படித்தான் பாசத்தைப் பொழிவேன் என்று சொல்வது எந்த வகையில் சேரும்..?

கூர்ந்து பார்த்தோமேயானால், அமீரின் வருகைக்குப் பின் அபிநய் மெல்ல மெல்ல ஒதுங்க ஆரம்பித்தார் என்றாலும் பெரும்பாலும் அவர்கள் பேசும் இடங்களில் எல்லாம் இருக்கத்தான் செய்தார். அமீரின் வருகை தனக்குப் பிடிக்கவில்லை என்பதாய்த்தான் அவரின் செயல்பாடு இருந்தது. இச்செயலே அவர் நட்பாய்த்தான் பழகினாரா என்ற கேள்வியை எல்லாரிடமும் விதைத்திருக்கிறது. ஆரம்பம் முதலே உங்க நெருக்கம் எனக்கு வேறு மாதிரி தெரிகிறது, விலகியிருங்கள் என்று பாவனி சொல்லிக் கொண்டிருக்கிறார் என்பதை நாம் அறிவோம். அப்படியிருக்க அப்போதெல்லாம் யார் என்ன சொன்னாலும் நீ என் தோழி என முன்னால் நின்றவர் அமீரின் வருகைக்குப் பின் பின்னால் போகும் போது எப்படி அது நட்பாக இருக்க முடியும். கமலிடம் கூட அமீரின் வருகைக்குப் பின் நான் ஒதுங்கிட்டேன் சார் எனத்தான் சொல்கிறாரே ஒழிய பாவனிக்குப் பிடிக்கலை அதனால் நான் ஒதுக்கிட்டேன்னு ஒரு வார்த்தை கூட சொல்லலை.

இங்கே பாவனி மீதும் தவறு இருக்கத்தான் செய்கிறது. அபிநய்யின் நடவடிக்கைகள் தவறாக இருக்கும்பட்சத்தில் யாரிடமாவது சொல்லியிருக்கலாம். ராஜூ இதைப் பொதுவெளிக்கு கொண்டு வந்த போது கூட பாவனிதான் கத்திக் கொண்டிருந்தாரே தவிர, அபிநய் அவளுக்காக நான் ஏன் இதைக் குறித்துப் பேச வேண்டும் என ஒதுங்கித்தான் இருந்தார். இது நல்ல நட்பு என்னும் பட்சத்தில் அவர் ராஜூவுடன் மோதியிருக்க வேண்டும். அதைச் செய்ய அவர் யோசித்தார். பேசவேயில்லை என்பதுதான் உண்மை. ராஜூவுக்கு சரியான தகவல்கள் கிடைத்ததின் பேரில்தான் அவர் பேசுகிறார் என்ற நிலை கமலுக்குப் புரிந்தபின்தான் அது அவங்க படுக்கையறை அங்க ஏன் எட்டிப் பாக்குறீங்க, அவங்க விருப்பம் எதுவோ அப்படி நடக்க பூரண உரிமை இருக்கிறது என முதல்நாள் பேசியவர் மறுநாள் ராஜூவின் கருத்தை எடுத்து அவரைப் பேச வைத்துப் பாவனி வாயிலிருந்து செய்திகளைப் பிடுங்கி குறும்படம் வரை வந்து விளக்கம் கொடுத்தார். அப்போது அபிநய் மீது கமலுக்கு ரொம்பவே பாசம் இருப்பதை உணர முடிந்தது. பாவனியைப் பேசிய அளவுக்கு அபிநய்யைப் பேசாதது தவறு, ஒரு பெண் மீது நட்பென்ற போர்வையில் காதலைத் திணிக்க முயன்றதைக் கண்டிக்காமால் விட்டுவிட்டு இரட்டை சமூக இடைவெளியைக் கடைபிடி என்று சொன்னது எந்த வகையில் நியாயம்..? அப்ப பாவனிகள் தன் நிலையை எடுத்துச் சொன்ன பின்னும் அவர்களே தவறானவர்களா..?

இந்த இடத்தில் ப்ரியங்காவின் காய் நகர்த்தலைக் கவனித்து பார்த்தால் ஒரு விஷயம் புரியும். ராஜூவுக்கு ப்ரியங்கா மீது எப்போது ஒரு அன்பு இருக்கும், அதே அன்பு தாமரையிடமும். ப்ரியங்காவைப் பொறுத்தவரை முதல் நாள் ராஜூ கமலிடம் அடிவாங்கும் போதெல்லாம் ரஜினியை திரையில் பார்த்ததும் எகிறிக் குதிக்கும் ரசிகனைப் போல் கைதட்டி மகிழ்ந்தார். அதே ப்ரியங்காவை இந்த விஷயத்தை நீயும் நிரூப்பும் கூட பேசியிருக்கீங்க என கமல் சொன்னபின் கவுண்டமணி செந்திலைப் பார்த்துச் சொல்லும் திருவிழாவில் காணாமல் போன பிள்ளையாட்டாம் இருந்தார். இப்போ ப்ரியங்கா கடந்த இரண்டு வாரமாகத் தூக்கிக் கொண்டாடிய பாவனியை இந்த வாரம் முதல் எதிரி ஆக்கிக் கொள்ள வேண்டும். காரணம் நாமே பேசியிருக்கிறோம் என்பது வெளியில் வந்தாச்சு, இனி அபிநய் பக்கம் நிற்போம் என்பது அவரின் முடிவு என்பதை நேற்றைய நிகழ்ச்சியில் காட்டியிருக்கிறார். பாவனி மீது அடுக்கடுக்கான புகாரை வைத்துக் கொண்டிருக்க்கிறார். 

எப்போதும் பாவனி கூட உட்கார்ந்து உன் உடை நல்லாயிருக்கு, தலை முடி நல்லாயிருக்குன்னு சொல்லிக்கிட்டு இருக்கவன் எப்படி உண்மையான நண்பனாக இருப்பான் என்பதை ஏன் நான் நடுநிலைவாதி, எல்லாப் பிரச்சினையையும் பேசுபவள் எனச் சொல்லும் ப்ரியங்கா கேட்கவில்லை என்று யோசித்தோமேயானால் பாவனி சொல்லித்தானே இருக்கு, இந்தப் பாவிதான் அவளை விடாமல் துரத்தியிருக்கிறான் ஜெமினி பேரன்தானே... தாத்தாவின் சித்து விளையாட்டுகள் இல்லாமலா இருக்கும் என மக்கள் யோசித்து பாவனிக்கு ஆதரவாகக் கரம் தூக்கினால் அது நாம முன்னே போவதற்கு தடைக்கல்லாக இருக்கும் என்பதும் அபிநய் கூட சேர்ந்து பாவனியை அடித்து விளாச வேண்டும் என்ற எண்ணமும்தான் காரணமாக இருக்கும் என்பது விளங்கும்.

இனி வரும் நாட்களில் பாவனிக்கான ஒரே ஆதரவாக ராஜூ மாற வாய்ப்பு இருக்கிறது. ஏனென்றால் ராஜூவைப் பொறுத்தவரை மற்றவர்கள் சந்தோசமே முக்கியம் என்ற எண்ணம் நிறைந்த ஒரு மனுசன். அண்ணாச்சி மீதான அதீத அன்பே நேற்றைய ராஜூவின் உடைந்த அழுகை. மற்றவர்களை எப்போதும் மட்டம்தட்டிப் பேசவோ, மனதளவில் தாக்கவோ இதுவரை செய்யாத சிலரில் ராஜூவே முதன்மையானவர். 

ப்ரியங்காவைப் பொறுத்தவரை அர்ச்சனாவின் அன்பு பாயசத்தை வேறு மாதிரி கொஞ்சம் விஷம் கலந்து கொடுத்துக் கொண்டேயிருக்கிறார். நிகழ்ச்சி தொகுப்பில் தன் குரல் ஓங்கியிருக்க வேண்டும் என்று நினைப்பது போல்தான் வீட்டுக்குள்ளும் கத்திக் கொண்டிருக்கிறார். எல்லாரும் என் பேச்சுக்கு அடி பணிய வேண்டுமென்ற அபிஷேக்கின் பாணிதான் இவரின் பாணியும்... இவரை எதிர்த்தால் சற்றே விலகி எதிர்க்கவில்லை என்றால் இறங்கி அடித்து விளையாடுவதில் கில்லாடி. தாமரையை அந்த அடி அடித்துவிட்டு கமலின் வருகை அன்று கட்டிப் பிடித்து ஒரு முத்தம் கொடுத்தால் பிரச்சினை முடிவுக்கு வந்துவிடும் என்பதை உணர்ந்து வைத்திருக்கும் கில்லாடி. இந்த வாரம் இவரின் நாமினேசன் ஆட்களாக ராஜூவும் பாவனியும் இருக்கவே வாய்ப்பிருக்கிறது. பொறுத்திருந்து பார்க்கலாம்.

அடுத்த கட்டுரையாக ப்ரியங்காவும் மற்ற போட்டியாளர்களும் பற்றிப் பார்க்கலாம்.

-'பரிவை' சே. குமார்.

2 எண்ணங்கள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

இந்தப் பிரச்சனையைப் பற்றி பேச வந்த தாமரையை பேச விடவில்லை...

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் அண்ணா.
இல்லை அண்ணா, தாமரை பேசியிருந்தாலும் அது பாவனி மீதான கோபத்தில் அபிநய்க்கு ஆதரவாகவே இருந்திருக்கும்.

இங்கே 'அண்ணன்னு சொல்லாதே...', 'நான் உன்னை ரொம்ப விரும்புறேன்...' என்பவை எல்லாம் குறும்படத்தில் காட்டப்படவில்லை.

ஜெமினி குடும்பம் என்பதாலோ அல்லது அபிநய்க்கு குடும்பம் இருக்கு (ஆப்ப பாவனி மேல் பலி போடுவது நியாயமா என்று யோசிக்கவில்லை என்பதையும் உணர வேண்டும்) என்பதாலோ கமல் இதை அடக்கியே வாசித்தது போல் தோன்றியது.

எப்படி இருந்தாலும் நேற்றுக் கூட அபிநய் மீதுதான் தப்பு... என்னவோ கண்ணையே ஒப்படைப்பது போல் அமீரிடம் பேசியது... பாவனி சொல்வதை கேட்க மறுத்தது என...

தன் மீது தவறில்லை எனில் தட்டிவிட்டுட்டுப் போய்க்கிட்டே இருக்கணும். அது அவரால் முடியவில்லை என்னும் போது அவர் மடியில்தான் கனம் இருப்பதாய் தோன்றுகிறது.