மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

திங்கள், 21 ஜனவரி, 2019

மனசு பேசுகிறது : முருகன் என் காதலன்

Related image

சின்ன வயசுல இருந்தே முருகன் மீது காதல்... 

இந்தக் காதல் இப்போதும் தொடர்கிறது... எப்போதும் தொடரும்... 

'அதென்ன அவன் மீது மட்டும் காதல்..?' என்ற கேள்வி வருமாயின் அதற்கு எதற்காக என்ற விளக்கம் எல்லாம் கொடுக்கத் தெரியாது ஆனால் அவன் மீது தீராக்காதல்... ஆம் இறுதிவரை தீராத காதல்.

எப்போதும் முருகன் பாடல்கள் என்றால் ஒருவித ஆர்வம்... திருவிழாவுக்கு ரேடியோ கட்டினால் காலையில் சாமிப்பாடலாய் முருகன் பாடலை ஒலிக்க விட்டுக் கேட்பதில் அத்தனை ஆர்வம் அந்தப் பள்ளிப் பருவத்தில்... இப்போதும் அப்படியே.

முருகன் மீதான காதலால் ஐயப்பன் மீது பற்றற்று இருந்த பருவம் அது... ஐயப்பன் கோவிலுக்கு மாலை போடுபவர்களை இங்கிருந்து கேரளாவுக்குப் போறானுங்க பாரு என்று கேலியாகப் பார்த்தவன் நான். 'பள்ளிக்கட்டு சபரிமலைக்கு கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை' என்ற பாடலைப் ஒலிக்க விடும் ஒலிபெருக்கி உரிமையாளரிடம் இதை மாற்றி 'மருதமலை மாமணியே' போடுண்ணே என்று நின்றவன்தான் நான். 

அப்படி ஒரு காதல் அழகன் முருகன் மீது.

அழகான முருகன் படங்கள் கிடைத்தால் சாமி அறையில் ஒட்டி வைப்பேன். சில படங்கள் பள்ளிப் பாட நோட்டின் முன் பக்கத்தை அலங்கரிப்பதுண்டு.

பள்ளியில் படிக்கும் போது எங்க ஊரில் இருந்து நிறையப் பேர் பழனிக்கு பாதயாத்திரை செல்வார்கள். மாலை போட்டது முதல் தினமும் மாரியம்மன் கோவிலில் பஜனை, பிரசாத விநியோகம் என களை கட்டும்.

எல்லாருமே அருமையாக முருகன் பாடல்களைப் பாடுவார்கள். 'சுட்டதிரு நீரெடுத்து  தொட்டகையில்  வேலெடுத்து தோகைமயில்  மீதமர்ந்த  சுந்தரம்..', 'ஆடுக  ஊஞ்சல்  ஆடுகவே அய்யா  முருகா ஆடுகவே..', 'பாசி படர்ந்த மலை முருகய்யா... பங்குனித் தேர் ஓடும் மலை முருகய்யா..' என ஒவ்வொரு பாடலும் அவர்களின் கணீர்க்குரலில் ஒலிக்கும். இறுதியில் கந்தர் சஷ்டி கவசம் பாடி முடிப்பார்கள்.

அப்போதெல்லாம் பழனிக்கு மாலை போட்டவர்கள் மாரியம்மன் கோவிலை ஒட்டிக் கொட்டகை போட்டு இரவில் அங்குதான் தங்குவார்கள். நடை பயணம் ஆரம்பிக்கும் முதல் நாள் நெருங்கிய உறவுகளை அழைத்து விருந்து வைத்து அன்றிரவே கிளம்பி மாரியம்மன் கோவிலுக்கு வந்து விடுவார்கள். மறுநாள் அதிகாலை சாமி கும்பிட்டுக் கிளம்பிவிடுவார்கள். அவர்களுடன் குன்றக்குடி வரை நடப்பவர்களும் செல்வார்கள்.

அப்போதெல்லாம் நாமும் பழனிக்கு நடக்க வேண்டும் என்ற ஆவல் மட்டும் மனசுக்குள் முளைவிடும்... ஆனால் அம்மாவோ குன்றக்குடி வரைக்கும் கூட நடந்து போக விடமாட்டார். பள்ளியில் படிக்கும் வரை ஆசை நிராசையாகவே இருந்தது. கல்லூரி வந்த பின் பழனிக்குச் செல்லும் ஆசை நிறைவேறியது.

தேவகோட்டையில் இருந்து ஏழு நாள் நடை... அதாவது பூசத்தைக் கணக்குப் பண்ணிப் போனால்... 

நாங்களெல்லாம் கூட்டத்தைக் கணக்குப் பண்ணிப் போவதால் 5ஆம் நாள் இரவு ஆயக்குடி போய் தங்கிவிட்டு ஆறாம் நாள் அதிகாலை பழனிக்குப் போய் அன்று முழுவதும் அங்கிருந்து முருகன் தரிசனம், தங்கத்தேர், கேரளத்தினரின் காவடி ஆட்டம் என எல்லாம் பார்த்து இரவு கிளம்பி மறுநாள் அதிகாலை ஊருக்குத் திரும்பிவிடுவோம்.

அந்த நடைப் பயணம் கொடுத்த அனுபவங்கள் ஒன்றா... இரண்டா... 

ஆஹா... அதை அனுபவித்து ரசிக்க வேண்டும். 

முதல்நாள் குன்றக்குடியில் தங்க வேண்டும் என்பார்கள். பழனி செல்லும் போது குன்றக்குடி மலை ஏறக்கூடாது என்பதால் முருகனுக்கு கீழிருந்தே சலாம் வைத்துவிட்டு இரவுத் தங்கலை நாங்கள் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகரின் வாசலில் வைத்துக் கொள்வோம்.

பெரும்பாலும் இரவு 2 மணிக்கெல்லாம் விடிஞ்சிருச்சு எனச் சொல்லி கிளப்பி நடக்க வைத்து விடுவார்கள். அந்தக் குளிரில் நடப்பதென்பது அலாதியானது... காலை பத்தரை, பதினோரு மணிக்கெல்லாம் எங்காவது ஒரு வீட்டு நிழலில் படுக்கையைப் போட்டு விட்டு, மதியம் சாப்பிட்டு, மீண்டும் படுத்து... வெயிலின் தாக்கம் குறைய ஆரம்பிக்கும் போது மீண்டும் நடை... நல்ல இடத்தில் தங்க வேண்டும் என்பதால் இரவு பத்து மணி வரை கூட நடை தொடரும்.

தொடர்ந்து ஆறாண்டுகள் முருகனைக் காண நடைப்பயணம்... 

ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு விதமான அனுபவம். 

மறக்க முடியாத பயணம் அது. முருகனைத் தரிசிக்கும் போது நடந்து வந்த கால் வலி எல்லாம் மறந்து போகும். பேருந்துக்கு வரிசையில் நிற்கும் போதுதான் 5 நாள் நடையின் வலி தெரியும்.

படம் இதைக் கொண்டிருக்கலாம்: வெளிப்புறம்
(தேவகோட்டை மலை முருகன் கோவில்)
ஒருமுறை நகரத்தாருடன் திருப்பரங்குன்றத்துக்கு நடந்திருக்கிறேன்... அவர்களின் பயணத்திட்டமிடல் மிகச் சிறப்பாக இருக்கும். தங்குமிடத்தில் சமையல் செய்து, பஜனை முடித்து எல்லாருக்கும் சாப்பாடு. பாடல்கள், ஆட்டம் என அவர்களுடன் பயணித்தது புதுவிதமான அனுபவம். 

தேவகோட்டையில் இருந்து செல்லும் நகரத்தார் காவடிக்கு பழனியில் சிறப்பு மரியாதை உண்டு. காவடியுடன் ஒரு முறை நடைப்பயணம் செல்ல வேண்டும் என்ற ஆசை மனசுக்குள் உண்டு. அது எப்போது நிறைவேறுமோ தெரியவில்லை.

முருகன் மீதான காதலால் ஐயப்பனை ஒதுக்கினேன் என ஆரம்பத்தில் சொன்னேனல்லவா... ஆனால் கல்லூரியில் வேலை பார்க்கும் போது எங்க எம்.எஸ். சார் தலைமையில் ஐந்துமலை அழகனைத் தரிசிக்கும் வாய்ப்பு... 

நான்காண்டுகள் தொடர் சபரிமலைப் பயணம்...  

எட்டுவித அபிஷேகத்துக்கான பொருட்களையும், அவற்றைத் தயாரிப்பதற்கான பாத்திரங்களையும் சுமந்து கொண்டு, எங்கள் பேராசிரியர்களுடன் லேசான தூறலில் மலை ஏறுதல் என்பது வித்தியாசமான அனுபவம்... 

ஐயப்பனின் தரிசனம், அபிஷேகம், பஸ்மக்குளக் குளியல், மஞ்சமாதா தரிசனம், அங்கு இராத்தங்கல், படிபூஜை என பழனிக்கு மாற்றான ஒரு அனுபவம் சபரிமலைப் பயணத்தில்... 

'அப்பா ஐயப்பன் கோவிலுக்குப் போகணும்' என்ற விஷாலின் ஆசையை அவனுடன் பயணித்து நிறைவேற்ற வேண்டும். பார்க்கலாம்... எப்போது ஐய்யப்பன் வரவழைக்கிறான் என.

பழனிக்கு நாங்க 5 நாளில் போனால் எங்க அண்ணன்கள் 3 நாளில் போய்த் திரும்பி வந்தார்கள். அதிகம் தூங்காமல்... அதிகம் ஒய்வெடுக்காமல் மனுசனுங்க நடந்தே சாதிச்சிருக்கானுங்க... பாவம் திரும்பி வந்ததும் இவனுக கூட போகவே கூடாதுப்பா... சொல்லி வச்ச மாதிரி விடிஞ்சிருச்சு வாடான்னு தூங்கவே விடலைன்னு மச்சான் ஒருத்தர் புலம்பினார். காலம் அவரை இளம் வயதிலேயே எடுத்துக் கொண்டு விட்டது.

முருகன் மீதான காதல் எப்போதும் தீரப்போவதில்லை... 

எதார்த்தமாகவே என்னோட நட்பில் எப்போதும் முருகன் என்ற பெயர் மிகவும் நெருக்கமான நட்பாக அமையும். நான் மதிக்கும் என் பேராசான் பெயர் பழனி.

எப்பவுமே அமர்ந்தாலும்... எழுந்தாலும்... பெரிதாக மூச்சை இழுத்து விட்டாலும்..... ஏன் எதைச் செய்தாலும் 'ஸ்ஸ்ஸ்... அப்பா முருகா...' என்ற வார்த்தை வந்து கொண்டேயிருக்கும்... ஒரு நாளைக்கு ஆயிரம் முறை கூட இந்த வார்த்தை என்னிலிருந்து வெளியாகும். 

முருகன் என் காதலன்... அவன்தான் என்னை இயக்குகிறான்.

அவனே இத்தனை கஷ்டத்திலும் துயரிலும் துணை நிற்கிறான்.

இன்று தைப்பூசம்.... அவன் பாதம் பணிவோம்.

'அப்பா... முருகா... எல்லோரையும் காப்பாத்து'


***********
ணக்கம்.

பிரதிலிபி போட்டியில் இருக்கும் எனது கவிதைக்கான இணைப்பு கீழே...

முடிந்தால் வாசித்து உங்கள் கருத்தையும் பதியுங்கள்...

நன்றி.
-'பரிவை' சே.குமார்.

5 எண்ணங்கள்:

கோமதி அரசு சொன்னது…

வரம் தருவாய் முருகா! நாளும் அவனை மறவா நிலையை அவன் தர வேண்டும் என்று நான் நினைத்துக் கொள்வேன்.
அருமையான பதிவு.
நடைபயண மக்களை பார்த்து இருக்கிறேன் அவர்ளிடம் தெரியும் மகிழ்ச்சி துள்ளல் எல்லாம் மிக நன்றாக இருக்கும்.
காவடி பாடல்களை பாடிக் கொண்டு போவது கேட்க இனிமை.
உங்கள் பயண அனுபவங்கள் அருமை.

என் தங்கை, தம்பி எல்லாம் போய் இருக்கிறார்கள். அவர்கள் சொல்லி இருக்கிறார்கள் தங்கள் அனுபவத்தை.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

இதுவல்லவோ பக்தி...!

ஸ்ரீராம். சொன்னது…

காதலாகிக் கசிந்து... கண்ணீர் மல்கி முருகன் மேல் உள்ள பக்தியைச் சொல்லி இருக்கிறீர்கள். நானும் இதில் 70 சதவிகிதம் அப்போஅப்படித்தான்.​

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நடைப் பயணம் இதுவரை அமையவில்லை.,.

உங்கள் அனுபவம் படிக்கும் போது ஆசை உண்டாகிறது.

சிறப்பான பதிவு.

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

அழகான நடைப்பயணம் குமார். நானும் இப்படி 10 நாட்கள் ஒரே ஒரு முறை திருச்சியிலிருந்து நடந்து சென்றேன் சிவாலயங்கள் தரிசனத்திற்கு. அதன் பின் நடைப்பயணம் அமையவில்லை. எனக்கும் முருகன் பிடித்தமான தெய்வம். இரண்டாவது மகனுக்கு சரவணன் விநாயக் என்று பெயர் வைத்தேன். பதிவை ரசித்தேன்.

துளசிதரன்