மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 31 மார்ச், 2018ஓரிதழ்ப்பூ - என் பார்வைரிதழ்ப்பூ

கதை... அது சிறுகதையோ நாவலோ, இந்த வட்டத்துக்குள்தான் எழுத வேண்டும் என்ற வரைமுறைகள் எதுவும் இல்லை. வட்டத்தை மீறி எழுதப்படும் கதைகளே வாசகனால் பேசப்படும். அது காதலைச் சொல்லும் கதையாக இருந்தாலும் வட்டத்துக்குள்ளான காதலைச் சொல்லும் போது 'இது ஏற்கனவே வேறொருவர் எழுதியது போல்தான் இருக்கிறது' என்றும் 'அவரின் சாயல் இதில் தெரிகிறதுதானே' என்றும் விமர்சனம் வரவே செய்யும். 

அதே காதலை வேறொரு கோணத்தில் வட்டத்தை விட்டு நகர்த்தும் போது 'ஆஹா... என்ன எழுத்துய்யா...' என்ற வார்த்தைகள் வந்து விழும். அப்படியான எழுத்துக்கள் வட்டத்தை மீறி வரும்போது வாசகனை வசமிழக்கச் செய்ய வேண்டுமே ஒழிய, அவனுக்குள் இதைத் திணித்தால் மட்டுமே நம் எழுத்து பேசு பொருளாகும் என்ற எண்ணத்தை எழுத்தாளனுக்கு உருவாக்கக் கூடாது.

நண்பர் பிரபுவின் அன்பிற்கிணங்க, வாசித்துக் கொண்டிருந்த மரப்பசுவின் அம்மணியிடம் 'கோபாலியோடு கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிரு நான் பூவை நுகர்ந்து விட்டு வருகிறேன்' என வாசிப்பின் மடை மாற்றி இன்று காலை ஓரிதழ்ப்பூவைக்  கையில் எடுத்தேன்.

ஊரில் காரம்பூ, சூராம்பூ, மஞ்சநெத்திப்பூ, அரளிப்பூ, டிசம்பர்பூ, மாம்பூ, மல்லிகைப்பூ, வாகம்பூ, புளியம்பூ, வேப்பம்பூ என இன்னும் இன்னுமாய் பல பூக்களோடு வாழ்ந்தவனின் மனசுக்கு ஒவ்வொரு பூவின் வாசமும் நாசிக்குள் சுற்றிக் கொண்டேயிருக்கும். 

பூக்களின் வாசனை தரும் சுகந்தம் எப்போது அலாதிதான். அப்படியானதொரு வாசனையை திருவண்ணாமலையைச் சுற்றிச் சுற்றிப் படரும் இந்த ஓரிதழ்ப்பூவும் நம் நாசிக்குள் திணிக்கிறது. அது காமவாசனை.

அமிர்ந்தமாயினும் அளவுக்கு மீறினால் நஞ்சே... அப்படியிருக்க ஓரிதழ்ப்பூவில் அய்யனார் விஸ்வநாத் அவர்கள் அளவுக்கு மீறியிருக்கிறாரா இல்லை அளவோடு அமுது படைத்திருக்கிறாரா..?

சமீபத்தில் ஒரு சிறுகதைப் போட்டிக்கான  கதையில் 'அவன் அவள் மார்பைத் தொட்டான்' என்ற வரிக்காக கதையினை வாசித்தவர்கள் சிலரின் கருத்தில் 'இது அடல்ஸ் ஒன்லி கதை' என்பதாய்ச் சொல்லியிருந்தார்கள். இந்த ஒரு வரிக்கு அடல்ஸ் ஒன்லியா என்ற யோசனை எழ, சிரித்துக் கொண்டு கடந்து வந்தேன்.

இன்று ஓரிதழ்ப்பூ வாசித்தபோது அந்த கருத்துக்கள் ஞாபகத்தில் வர, இந்தக் கதை பொதுவெளியில் வைக்கப்படும் போது எது மாதிரியான கருத்துக்கள் முன்வைக்கப்படும் என்ற யோசனை எனக்குள் எழுந்தது. வாசிப்பில் பல படிமானம் உண்டு. அதில் ஒரு பக்கம் இதை தூக்கிக் கொண்டாடினால் மறுபக்கம் திட்டித் தீர்க்கத்தானே செய்வார்கள்.

பெருமாள் முருகனின் 'மாதொருபாகன்'... அது அபத்தமோ ஆபாசமோ... அதைப் பற்றி இங்கு பேசவரவில்லை. அது எதை பேசுபொருளாக எடுத்துக் கொண்டதோ அதையேதான் இந்த ஓரிதழ்ப்பூவும் எடுத்துக் கொண்டுள்ளது... அதுதான் காமம்.

திரு.அய்யனார் விஸ்வநாத் கதை சொன்ன விதம் ரொம்ப அருமை... காட்சிகள் முன்னும் பின்னுமாக விரிக்கப்படுதல் வித்தியாசமாய்... விறுவிறுப்பாய்... வாசிக்க ஆரம்பித்து ஆசிரியர் சொன்னது போல் ஏழு அத்தியாயம் வரை... இல்லையில்லை ஒரு அத்தியாயம் கூடுதலாக எட்டு அத்தியாயம் வரை அடைமழையென அடித்துப் பெய்து எழாமல் படிக்க வைத்தது. 

என்ன எழுத்து... இப்படியான எழுத்து கைவரப் பெறுதல் வரமே... அப்படியே தன்னுள் ஈர்த்துக் கொண்டது. அதன் பின்னான அத்தியாயங்கள் கொஞ்சம் சுணக்கம் காட்டி, அடைமழையென ஆர்ப்பாட்டமாய் நகரவில்லை என்றாலும் மனம் ஈர்க்கும் சிறுமழையாய் இறுதிவரை நகர்த்திச் சென்றது என்பதைச் சொல்லியே ஆக வேண்டும்.

அகத்தியமாமுனி, போகர், இரமணர், அவர் வளர்க்கும் காகம், மான் என வித்தியாசமாகப் பயணிக்கும் கதைக்குள் சாமிநாதன், வாத்தி ரவி, சங்கமேஸ்வரன், ஜோசியர், லட்சுமி, அமுதாக்கா, ரமா, அங்கயற்கன்னி, மலர்செல்வி, துர்க்கா... என ஒரு பெருங்கூட்டமே வாழ்கிறது நம்மோடு.

ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு காதல்... அதை வெளிக்கொணர்ந்த விதமும்... கதையை அகத்தியமுனியில் ஆரம்பித்து ஒவ்வொருவராய் நகர்த்தி எல்லோரையும் ஒரு புள்ளியில் இணைத்த விதமும் மிக அழகு. 

அய்யனார் விஸ்வநாத் மிகச் சிறந்த கதைசொல்லி என்பது அவரின் எழுத்தில் தெரிகிறது. வாசிப்பவனை ஈர்க்கும் எழுத்து எல்லாருக்கும் அமையப் பெறுவதில்லை... அது இவருக்கு கைவரப் பெற்றிருக்கிறது. வாழ்த்துக்கள் அ.வி.

மிகச் சிறப்பானதொரு நாவல்... இதுதான் எல்லை என்றில்லாமல் தன் போக்கில் விரியும் எழுத்து எப்பொழுதும் தனக்கான இடத்தைத் தக்க வைத்துக் கொள்ளும். கண்டிப்பாக சிறப்பானதொரு இடத்தைப் பிடிக்கும் நாவலாக இது இருக்கும்.  

மேலே சொன்னவை பொதுவான பார்வை... இனி... 

வர்ணனைகள் எல்லாம் வாசிக்கும் பெண்களை முகம் சுளிக்க வைக்கும் என்பது வாசித்தவர்களில் பெரும்பாலானவர்களின் கருத்தாக இருக்கும் என்று நினைக்கிறேன். 

கிராமத்துச் சண்டையில் வந்து விழாத வார்த்தைகள் இல்லை... பேச்சோடு பேச்சாக கலந்த, கேலியாகப் பேசும் போது கூட வந்து விழுந்த, வார்த்தைகளைக் கேட்டு வளர்ந்தோம் என்றாலும் அதெல்லாம் பேச்சு வழக்கு... அதைச் சட்டென சுலபமாய் சிரித்தபடி கடந்து சென்று விடுவோம். அதே எழுத்தாய் மலரும் போது... அதுவும் சாதாரண கிராமத்துப் பேச்சாக இல்லாமல் கலவிக்குள் உலவும் எழுத்தாய் ஆகும் போது அவ்வளவு எளிதாய் எடுத்துக் கொள்ளவோ கடக்கவோ முடிவதில்லை.

சாப்பாட்டின் சுவை கூட்டத்தான்  உப்பு.  நமக்கு அது ரொம்பப் பிடிக்கும் என அளவுக்கு மீறி அள்ளிப் போட்டுக் கொள்வதில்லை. அப்படித்தான் காமமும்... இந்தக் கதைக்கு காமச்சுவை அவசியமே.... அது இல்லை என்றால் ஓரிதழ்ப்பூவை விரிக்கவே வேண்டியதில்லை ஆனாலும் அளவுக்கு மீறி இருப்பது திகட்டலாய்....

இன்னும் நம் வீடுகளில் படுக்கை அறை என்பது இருபத்தி நான்கு மணி நேரமும் கலவி கொள்ளும் இடம் என்பதாய் மாறவில்லை. அப்படி மாறும் காலம் இப்போது வரப்போவதுமில்லை.  அதற்கென்று நேரம் காலம் இருக்கிறது. ரோட்டில் கூடித்திரிதல் என்பது ஆறறிவுக்கு ஏற்ப்புடையதல்ல.

பெண்கள் இப்படி இல்லையா என்று ஒரு கேள்வியை முன் வைக்கலாம்... இன்றைய வாழ்க்கைச் சூழலில் இப்படியும் இருக்கலாம்தான்...படக்கென சேலை அவிழ்க்கும் பெண்களாய் இருப்பார்களா..?  

கள்ளக்காதலுக்காக கணவனுக்கு விஷம் வைத்தவள் குறித்து இருநாள் முன்பு வாசிக்க நேர்ந்ததுடன் கணவனைத் தீர்க்க திட்டமிடும் ஆடியோவும் கேட்கக் கிடைத்தது. எம்மாதிரியான பாதையில் நாம் பயணிக்க ஆரம்பித்திருக்கிறோம் என்பது வருத்தமளித்தது என்றாலும் இக்கதையில் வரும் துர்க்கா, அங்கயற்கன்னி, அமுதாக்காவைப் போன்றவர்களை நாம் பெரும்பாலும் பார்த்து வளர்ந்ததில்லை. நாமெல்லாம் லட்சுமிகளையும் ரமாக்களையுமே அதிகம் பார்த்து வளர்ந்திருக்கிறோம்.

எல்லாப் பெண்களுமே (ரமா, லட்சுமி தவிர) சேலையை அவிழ்க்கிறார்கள். அப்படியென்ன காமம் பெரிதாய்ப் போய்விட்டது இந்தப் பெண்களுக்கு...? 

தங்கள் மனசுக்குள் நினைத்து வாழ்ந்து வரும் வாழ்க்கையை நேரில் காணும் போது காமம் மட்டுமே தலைக்கேறுமா என்ன... இங்கு அது மட்டுமே தலைக்கேறுவது எந்த வகை..?

காம போதையுடன் மது போதையும் கதை நெடுகப் பயணித்து வாசிப்பவனை போதையில் ஆழ்த்தியே ஆகவேண்டும் என்பதில் குறியாய் இருப்பது எந்த வகையான போதை..?

நாம் ஏன் இன்னும் எழுத்தில் பெண் வர்ணனைக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம்..? சிறு பெண் லட்சுமியை வர்ணிக்கும் இடத்தில் மட்டுமில்லாது அங்கயற்கன்னி, துர்க்கா என பெண்கள் எல்லாரையும் இப்படித்தான் வர்ணிக்க வேண்டுமா...? 

கட்டுனவன் கிழவனோ இளைஞனோ கணவன் இறந்த வீட்டில் எந்தப் பெண் கலவி கொள்வாள்.  அப்படியென்ன அவளுக்கு அவசரம்..? பொண்டாட்டிகூட இருக்கப் பிடிக்காதவனுக்கு புத்திமதி சொல்லுதல் என்பது காமம் வழியாகத்தானா..?

துர்க்கா கணவனையும் பெரியசாமியையும் அடிக்கும் இடத்தில் சபாஷ் போட வைக்கிறாள். அதே துர்க்கா மாமுனியுடன் தானே முன் வந்து சல்லாபிக்கிறாள்... கணவனிடம் பொண்டாட்டியை  கூட்டிக் கொடுக்கிறியா எனக் குதிப்பவள் 'வாத்தியை ஒரு வாட்டி கூட்டிப் போய் மந்திரிச்சி விடுறியா' என அதே கணவன் கேட்குமிடத்தில் 'ரொம்ப சின்னப்புள்ளயாட்டம் இருக்கு' என கடந்து செல்கிறாள். அப்படியென்றால் சபாஷ் போட வைத்த கோபம் எங்கே போனது..? இது என்ன முரண்..?

காமம் தேவையே... காமல் இல்லாத வாழ்வேது..? என்றெல்லாம் நாம் நிறையப் பேசலாம்... காமம் மட்டுமே வாழ்க்கை இல்லை என்பதையும் நாம் பேசித்தானே ஆகவேண்டும்..? 

பெண்கள் குறித்த வர்ணனைகளும்... ஓரிதழ்பூ எது என்ற கேள்விக்கு வாத்தி ரவி சொல்லும் பதிலும் வாசிப்பவரை முகம் சுளிக்க வைக்கும்.... குறிப்பாக பெண்களை.

நான் பெரிய எழுத்தாளனெல்லாம் கிடையாது. என் வாசிப்பின் பின்னான கருத்துக்களே இவை. இதில் மற்றவர்களுக்கு மாற்றுக் கருத்து இருக்கலாம். பல இலக்கிய சாம்பவான்களின் கருத்துக்களுக்கு முன்னே என் எழுத்து எதுவுமில்லை. இது வாசிப்பின் பகிர்வே. 

கனவுப்பிரியன் அண்ணன் சொன்னது போல் நாம் எதாக நினைத்து வாசிக்கிறமோ அதுவே ஓரிதழ்ப்பூ. 

காமம் தவிர்த்துப் பார்த்தோமேயானால் அய்யனார் விஸ்வநாத் அவர்கள் எழுத்து மிகச் சிறப்பு. தமிழ் எழுத்துலகில் மிகச் சிறந்த ஆளுமையாக வருவார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அவரின் பேச்சைப் போல் எழுத்தும் தைரியமாய் வந்து விழுந்திருக்கிறது. ஓரிதழ்ப்பூவின் ஆசிரியரைக் கொண்டாடலாம்.

தாங்கள் கதை சொன்ன விதமும்... காட்சிப்படுத்திய விதமும் எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது. வாழ்த்துக்கள் அகத்திய மாமுனி... அடச்சே... கதையில் ரொம்ப ஒன்றிட்டமோ... வாழ்த்துக்கள் அய்யனார் விஸ்வநாத்.

-'பரிவை' சே.குமார்.

13 கருத்துகள்:

 1. நேர்மையான உங்கள் பார்வைக்கு என் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 2. மிக சிறந்த விமர்சனம். வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 3. நல்ல விமர்சனம், நேர்மையான, துணிவான விமர்சனம். இரண்டு நாட்களுக்கு முன்பு அவர் தளம் சென்று அங்கு பகிர்ந்திருந்தவைகளை ரசித்து வந்தேன்.

  பதிலளிநீக்கு
 4. அனைத்தும் நம் மனதை பொறுத்து தான் நினைக்கத் தோன்றும்...

  பதிலளிநீக்கு
 5. நல்லதொரு விமர்சனம். அவரின் எழுத்து படித்ததில்லை.

  பதிலளிநீக்கு
 6. கதையை படிக்கலை.. ஆனா உங்க பதிவுக்கு சிறு பதில்...
  குற்றவாளிகள் பிறப்பதில்லை உருவாக்கப்படுறாங்கன்னு சொல்வோம். அது கள்ளக்கலவியில் ஈடுபடும் பெண்ணுக்கு பக்காவா பொருந்தும் பிறப்பிலேயே உடன்பிறந்த அச்சம் மடம் நாணம்லாம் விட்டு எல்லாம் மறந்து அப்படி சேலை அவிழ்க்க, வெறும் செக்ஸ் மட்டும் காரணமா இருக்குமா?!

  தரவேண்டிய இடத்திலிருந்து கிடைக்க வேண்டிய அன்பு, அரவணைப்பு, காதல், வித் செக்ஸ் வேற இடத்திலிருந்து கிடைச்சதால தப்பு பண்ணுறா.

  இந்த மாதிரி குற்றத்தில் ஈடுபட்ட ஒரு பெண் பேட்டியில் சொன்ன கருத்து மனசில் ஆணி அடிச்ச மாதிரி இருந்துச்சு. அதை எத்தனை மனநல புத்தகம் படிச்சாலும் கிடைக்காது. அதுக்காக கள்ளக்கலவி சரின்னு சொல்ல வரல.

  கணவன் ஒரு பெண்ணை முழுசா திருப்தி படுத்தனும். அப்படி முடியலையா அன்பால திருப்தி படுத்தனும். அதில்லாம போனால் லட்சுமி, ரமாக்கள் உருவாக்கப்பட்டுக்கிட்டுதான் இருப்பாங்க. கள்ளக்கலவியில் தான் ஆசைப்படும் ஆண்மீது அந்த பெண்கள் காட்டும் நேர்மை, அன்பு, அக்கறையை கணவன்மேல காட்டமுடியாம போச்சுன்னா தப்பு எங்க இருக்கும்ன்னு யோசிக்கனும்.

  இதை வெரைட்டிக்காக தேடிப்போகும் ரகங்கள் இதில் சேராது.

  பதிலளிநீக்கு
 7. முன் சொன்ன கருத்து உங்க கருத்துக்காக வைக்கப்பட்ட வாதமே தவிர கள்ளக்கலவிக்கான ஆதரவு இல்ல

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் கருத்தில் தவறில்லை அக்கா...
   இந்தப் புத்தகம் குறித்தோ ஆசிரியர் குறித்தோ எதுவும் சொல்லவில்லை.
   ஆசிரியர் கொண்டாடப்பட வேண்டிய எழுத்தாளர்.
   இங்கு கள்ளக்கலவி என்பதைவிட தங்கள் மனதுக்குள் வாழும் கற்பனை உலகத்தை நிஜத்தில் கண்டு திளைக்கும் போது பெண்கள் கலவி மட்டுமே வாழ்க்கை என்பதாய் நினைப்பதாய் கதை பயணிக்கிறது.

   என் கருத்தும் கலவி தவறல்ல என்பதுதான்... தாங்கள் சொல்வது போல் அன்பிருந்தால் வேலி தாண்டமாட்டார்கள்.

   இது ரமா, செல்வி, ரவியின் அம்மா யசோதா தவிர மற்ற பெண்கள் எல்லாருமே கலவிதான் முக்கியமென தாங்களே முன்னெடுப்பதாய்த்தான் நகர்கிறது.

   அய்யனார் விஸ்வநாத் இங்குதான் இருக்கிறார். என் நண்பர்தான்...

   மிகச் சிறந்த எழுத்தாளர்... சிந்தனைவாதி...

   பெண் வர்ணனைகளை இவ்வளவு ஆபாசமாகச் சொல்லணுமா என்பதே நட்பு வட்டாரத்தில் அவரிடம் வைக்கப்படும் கேள்வி.

   இது குறித்தான பதிவெழுதியவர்களில் பாதிப் பேர் ஆதரவும் பாதிப்பேர் எதிர்ப்புமாய் எழுத என் எண்ணமே ஆதரவாய் பாய்ந்தாலும் சில கேள்விகளை முன் வைத்தேன் அவ்வளவே.

   இறுதியில் சொன்னது போல் எதுவாகப் பார்க்கிறோமோ அப்படித்தான் இக்கதை.

   மிக நல்லதொரு நாவல்.

   தங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
  2. வரும் வெள்ளியன்று இப்புதினம் குறித்தான விமர்சனக் கூட்டம் இருக்கு. கலந்து கொண்டால் நண்பர்கள் முன் வைத்த கேள்விகளையும் அதற்கு அய்யனார் கொடுக்கும் பதில்களையும் பகிர்ந்து கொள்கிறேன்.

   நீக்கு
 8. காமம் சாப்பாட்டில் உப்பு போலதான். ஆனா உப்பில்லன்ன சாப்பாடு ருசிக்காது. அதேநேரத்தில் கணவனுக்காக, பிள்ளைக்காக, குடும்பத்துக்காக உப்பில்லாம சாப்பிடக்கூட தயாரா இருப்பாங்க. ஆனா, அதுக்கு அங்க அன்பிருக்கனும். அது இல்லன்னா ஒன்னும் வேலைக்கு ஆகாது, கருத்துகள் தப்பா, ஆபாசமா இருந்தா மன்னிச்சுக்க சகோ

  பதிலளிநீக்கு
 9. தங்கள் பார்வை அருமை
  தொடருங்கள்

  பதிலளிநீக்கு
 10. வாழ்த்துக்கள்...

  வணக்கம்,

  www.tamilus.com எனும் முகவரியில் புதிய திரட்டி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பல தமிழ் திட்டிகளுக்கு பதிவர்களின் சரியான ஒத்துழைப்பு கிடைக்காததால் அவற்றினை மூட வேண்டிய தேவை ஏற்பட்டது. அந்த நிலையினை இத் திரட்டிக்கு கொண்டுவரமாட்டீர்கள் என்ற புதிய நம்பிக்கையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது தமிழ்US

  உங்களது பதிவு பகிரப்பட்டுள்ளது. உங்களின் பயனுள்ள இடுகைகள், ஆக்கங்கள், பதிவுகள் என்பவை பலரைச் சென்றடைய இத் திரட்டியில் பகிர்ந்து உங்களின் ஒத்துழைப்பை நல்குவீர்கள் என நம்புகிறோம்.

  நன்றி..
  தமிழ்US

  பதிலளிநீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...