மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வெள்ளி, 31 ஜனவரி, 2014

மண் பயணுற வேண்டும் - இன்னும் சில

பாரதி நட்புக்காக அமைப்பின் பொங்கல் சிறப்புப்  பட்டி மன்றமான இன்றைய வாழ்க்கை முறை நமக்கு தருவது நிம்மதியே / நெருக்கடியே என்பது குறித்த முந்தைய பகிர்வுகளைப் பார்க்க... 

                            பாரதி-1            பாரதி-2             பாரதி-3               பாரதி-4

அபுதாபியில் பாரதி நட்புக்காக அமைப்பினர் நடத்திய பட்டிமன்றம் குறித்த தொகுப்பை நான்கு பகிர்வுகளாக வெளியிட்டிருந்தேன். பதிவுகளை சுருக்கும் எண்ணத்தில் சில நகைச்சுவைகளைப் பகிர்ந்தும் பலவற்றை பகிராமலும் விட்டிருந்தேன். என்னுடன் இணைய அரட்டையில் வந்த சில நண்பர்கள் பதிவு குறித்துப் பேசினர். விடுபட்ட நகைச்சுவைகளில் கவர்ந்தவற்றை ஒரு பகிர்வில் கொண்டு வரச் சொன்னார்கள். அதனால் இங்கு சில நகைச்சுவைகளையும் சில கருத்துக்களையும் மீண்டும் ஒரு பகிர்வாக உங்கள் முன் வைக்கிறேன்.

  • தொலைக்காட்சியில வர்ற மெகா சீரியல்கள்ல இயக்குநருக்கும் முக்கிய நடிகருக்கும் சண்டை என்றால் அவரை எடுத்துவிட்டு அவருக்குப் பதிலாக வேறு ஒரு ஆளை நடிக்க வைத்து இவருக்குப் பதிலாக இவர்ன்னு போட்டுவிடுவார்கள். இப்படித்தான்  எங்க அத்தை ஒருத்தி சரியான நாடகப் பைத்தியம். ஓரு நாடகத்தை தொடர்ந்து பார்க்கும். இடையில அதுக்கு ரொம்ப முடியாம ஆஸ்பிட்டல்ல வச்சிருந்தோம். பின்ன ரெண்டு மூணு மாசம் கழிச்சி வந்தது என்னைய தொலைக்காட்சியைப் போடுடா அந்த நாடகம் பார்த்து ரொம்ப நாளாச்சின்னு சொன்னுச்சு. சரியின்னு நாடகத்தைப் போட்டேன். நாயகியின் தோளில் கை போட்டபடி ஒருத்தர் பேசிக்கொண்டிருந்தார். இதுவும் கொஞ்ச நேரம் பார்த்தது... அப்புறம் என்னிடம் இது யார்ரா இவன் புதுசா இருக்கான்... இவ தோள்ல கையைப் போட்டிருக்கான் இவ புருஷன் எங்க போனான்னு கேட்டுச்சு நானும் எதார்த்தமா இப்ப இவ புருஷன் இவன்தான்னு சொல்லிப்புட்டேன். உடனே அது ஆத்தாடி புருஷனையுமா மாத்துவாளுங்கன்னு கத்த ஆரம்பிச்சிருச்சி.
  • எங்க வீட்டுக்குப் பக்கத்துல ஒரு பையன்... பத்துப் பொண்ணுக்கு லவ் லெட்டர் கொடுத்திருந்தான். உடனே நான் அவனைக் கூப்பிட்டு இங்க பாரு தம்பி பத்துப் பொண்ணுக்கெல்லாம் லெட்டர் கொடுக்காதே... எதோ ஒண்ணு இல்ல ரெண்டு பொண்ணுக்கு கொடுன்னு பெருந்தன்மையாச் சொன்னேன். அடுத்த நாள் காலையில எனக்கிட்ட வந்து லெட்டர் கொடுத்துட்டான். அடப்பாவி எனக்கே லவ் லெட்டரான்னு நினைச்சபடி பிரிச்சிப் படிச்சா... என்னால முடியுது நான் லெட்டர் கொடுக்கிறேன்.. எதிர்வீட்டு எருமைக்கு ஏன் வயித்தெரிச்சல்ன்னு  எழுதியிருந்தான். இது மாதிரி என்னோட மாணவன் ஒருவன் கவிதை எழுதியிருந்தான்... அதில் உன்னைப் பார்த்தேன் உலகம் மறந்தேன். உன் தங்கையைப் பார்த்தேன் உன்னை மறந்தேன்னு எழுதியிருந்தான். (இது பத்திரிக்கையில் வந்த கவிதை... இதுபோல் அவர்கள் சொன்ன நிறையக் கவிதை பத்திரிக்கையில் வந்ததுதான்)
  • எங்க தாத்தா முன்னாடி நடந்து போனா எங்க பாட்டி பின்னால தலையில ஒரு சுமையும் இடுப்பில் குழந்தையுமாய் காலில் செருப்பில்லாமல் நடந்து போனார்கள். அப்புறம் எங்க அப்பா காலத்தில் அப்பாவும் அம்மாவும் சேர்ந்து நடந்தார்கள். இன்று எங்கள் காலத்தில் எங்களிடம் ஸ்கூட்டி இருக்கு. இருங்க உங்கள நானே ஆபீசில் டிராப் பண்ணுறேன்னு வண்டியில பின்னால உக்கார வச்சி ஓட்டிக்கிட்டுப் போகும்போது அவரு முன்னாடி இருக்க கண்ணாடியைப் பார்த்து தலை சீவுவார் பாருங்க.... எங்க மாமா கருப்புத்தான்... ஆனா காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சுதானே.
  • இப்பல்லாம் கல்யாணத்துக்கு முதல் நாள் ரிசப்ஷனுக்கே பத்திரிக்கை வச்சிடுறானுங்க... சரி முத நாளே பொயிட்டு வந்துடலாம்ன்னு போனா பொண்ணு மாப்பிள்ளையை பார்த்துட்டுப் போங்கன்னு சொல்லிடுறானுங்க... அங்க ஒரு கியூ நிக்கும்.... நாமளும் வேர்க்க விறுவிறுக்க நிக்கணும்... மெட்ராஸ்ல ரொம்ப மண்டபத்துல ஏசியே இல்லை... அப்பத்தான் அப்பாக்காரர் சொந்தக்காரனுங்களை நேரடியா மேடைக்கு ஏத்துவார். அப்புறம் பய ஐடிக் கம்பெனியில வேலை பார்ப்பான்... அவனோட பிரண்ட்ஸ் அம்பது பேர் ஒண்ணா ஏறுவானுங்க... ஐடிக் கம்பெனியில வேலை பாக்குறவனெல்லாம் கூட்டம் கூட்டமாத்தான் வருவானுங்க... ஒரு வழியா மேடைக்குப் போனா யாருக்குப் பக்கத்துலயோ நிப்பாட்டிடுவானுங்க. இப்படித்தான் ஒரு தடவை எனக்குப் பக்கத்துல ஒரு பையனை நிப்பாட்டிட்டானுங்க... யாருன்னே தெரியலை. யாருப்பான்னு கேட்டா பந்தி போடலாமான்னு கேக்க வந்தேங்க... என்னையும் மேடையில ஏத்திட்டானுங்க அப்படின்னு சொன்னான். கால் கடுக்க காத்திருந்து நம்ம கைக்காசு ஐநூறையும் கொடுக்கணுமான்னு இப்பல்லாம் நான் போறதில்லை.
  • ஸ்கூட்டர் விளம்பரத்துல ஒரு பொண்ணு தலைய விரிச்சிப் போட்டுக்கிட்டு வண்டி ஓட்டுது. ஸ்கூட்டருக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் இருக்கு. அப்பாஸ் வீடு வீடா கதவைத் தட்டி டாய்லெட் கிளீன் பண்றாரு. அவனும் நாமெல்லாம் அதுக்குத்தான் லயக்குன்னு முடிவு பண்ணிடுறான். பிரபு போராடுவோம் போராடுவோம்ன்னு சொன்னதும் நான் எதுக்கோ போறாடப் போறாருன்னு பார்த்தா கல்யாண் ஜூவல்லர்ஸ் வரச்சொல்லுறாரு. விக்ரம் மலபார் கோல்டுக்கு வாங்கன்னு சொல்றான். சூர்யா ப்ரு காபி குடிக்கச் சொல்றாரு. சத்தியராஜ் ஈமு கோழி வளர்க்கச் சொன்னாரு. வளத்தவனெல்லாம் போயிட்டான். இப்போ அரசாங்கம் அந்தக் கோழிய வளக்குது.
  • நான் முதன் முதலா கல்லூரிக்கு புரபஸரா வேலைக்குப் போனேன். அப்ப ஒரு பையனைக் கூப்பிட்டு இங்க மத்த புரபஸர்ஸ் எல்லாம் எப்படி இருப்பாங்கன்னு கேட்டேன். அதுக்கு அவன் எல்லாரும் சுமாராத்தான் இருப்பாங்க மேடம்ன்னு சொல்றான்.
  • நடுவர் அவர்களே எதையும் சொல்லும் விதத்தில்தான் இருக்கிறது. இப்ப நீங்க குண்டாயிருக்கீங்க... ஏன்ய்யா இது இப்ப ரொம்பத் தேவையா என்ற நடுவரிடம் இல்லை நடுவர் அவர்களே இதை நீங்க அழகா இருந்தாலும் குண்டாயிருக்கீங்கன்னு சொல்றதைவிட நீங்க குண்டாயிருந்தாலும் அழகா இருக்கீங்கன்னு சொன்ன உங்களுக்கு சந்தோஷமா இருக்குமா இல்லையா... நீங்க எங்களுக்கு அழகா குண்டாயிருக்கீங்க... எதிரணிக்கு அணுகுண்டா இருப்பீங்க.
  • நபிகள் அவர்களின் இறுதி நேரம்... வாழ்க்கை முடியும் தருணம்.... வீட்டில் படுத்திருக்கிறார்... அவரது துணைவியாரும் அருகிருக்கிறார். இன்றைக்கு எல்லாப் பணத்தையும் கொடுத்துவிட்டாயா இல்லை எடுத்து வைத்திருக்கிறாயா என்று மனைவியிடம் கேட்க, ஆம் நமது இறுதிச் செலவுகளுக்காக ஐந்து நாணயங்களை எடுத்து வைத்திருக்கிறேன் என்றதும் தப்புச் செய்துவிட்டாயே அதை யாருக்காவது கொடுத்துவிட்டு வா என்றாராம். நபிகள் தான் சம்பாதித்த பணத்தில் தன் செலவுக்குப் போக மிச்சத்தை எல்லாம் தானம் பண்ணிவிடுவார். இரவு நேரத்தில் கொடுத்துவிட்டு வா என்று சொன்னதும் இந்த நேரத்தில் யார் வருவார் என்று கேட்க யாருக்காவது இது தேவைப்படும் போய்ப்பார் என்று சொல்ல, நபிகளின் மனைவியும் வெளியே வந்து பார்க்க, சாப்பிட காசில்லாமல் பசியோடு ஒருவர் நின்றிருக்கிறார். அவரிடம் கொடுத்துவிட்டு உள்ளே செல்ல என்ன கொடுத்துவிட்டாயா என்று கேட்க, ஆம் இந்த நேரத்தில் பசியோடு ஒருவர் என்று சொல்லி எப்படி யாராவது வருவார்கள் என்று சொன்னீர்கள் என்றதும் அந்த நாணயம் யாருக்கு விதித்திருக்கிறதோ அவருக்கு கிடைக்க வேண்டும் என்பது விதி. நமக்கு செய்ய வேண்டியதைச் செய்ய இறைவன் யாரையாவது அனுப்புவான் என்றாராம்.
  • இங்க அக்கா ஒருத்தவங்க வேலைக்குப் போனா நெருக்கடி நெருக்கடின்னு புலம்பினாங்க... ஏன் வேலைக்குப் போறீங்க... போகாதீங்க... வேலைய விட்டுடுங்க... ஒண்ணாந்தேதி ஆனா எனக்கு நெருக்கடி இருக்கு சம்பளம் வேண்டாம்ன்னு சொல்லு... அப்பச் சொல்ல மாட்டீங்களே... சம்பளம் வந்தாத்தனே நிம்மதி.
  • பொங்கல் சிறப்பு நிகழ்ச்சி என்பதால் அனைவருக்கும் ஹோட்டலில் ஏற்பாடு செய்திருந்த பொங்கல் கொடுத்தார்கள் என்பதை சென்ற பதிவில் சொல்ல மறந்துவிட்டேன்.
  • எப்பவுமே இந்த இட்லிக்கார அம்மாக்களால பிரச்சினைதான் என்று சுகிசிவம் அவர்கள் சொன்னார்கள். அவர் இட்லிக்கார அம்மா என்றாரா இத்தாலிக்கார அம்மா என்றாரா தெரியவில்லை. ஏன்னா ஆரம்பத்திலயே எனக்கு அரசியல் பிடிக்காது என்று சொல்லிவிட்டார்.

-'பரிவை' சே.குமார்.

புதன், 29 ஜனவரி, 2014

தொடர்கதை: கலையாத கனவுகள் - 47

முந்தைய பதிவுகளைப் படிக்க...

                      பகுதி-43      பகுதி-44    பகுதி-45    பகுதி-46         
------------------------------------------------

47.  காதல்.... காதல்... காதல்...

முன்கதைச் சுருக்கம்

கிராமத்து ஏழைக் குடும்பத்துப் பையனான ராம்கி, கல்லூரி ரவுடி வைரவனின் தங்கை புவனாவுடன் நட்பாக பழகுகிறான்.  அண்ணனும் மச்சானும் சிங்கப்பூர் செல்ல, வாழ்க்கை கொஞ்சம் மாற்றமான பாதையில் செல்ல ஆரம்பிக்கிறது, மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைத்ததும் காதல் இன்னும் இறுக்கமாகிறது. ராம்கியின் அக்காவின் திருமணத்திற்கு புவனா வந்ததும் மீண்டும் அவர்களது காதலில் புயல் மையம் கொள்ள ராம்கியை கத்தியால் குத்தும் அளவுக்குப் போனது.

இனி...

ராமைக் கத்தியால் குத்திட்டாங்கன்னு சொன்னதும் என்னோட ராம்மையா யாரு என்ற புவனா, கண்களில் கண்ணீர் வடிய சூழல் மறந்து மல்லிகாவிடம் பேச்சைத் தொடர்ந்தாள்.

"யாருடி... சொல்லு...?" என்று கத்தினாள்.

"யாரோ மணியாம்... அவன்தான் கூட்டிக்கிட்டுப் போனானாம். அப்புறம் இன்னொரு ஆள் அது யாருன்னு தெரியலையாம்... மற்ற விபரம் எனக்குத் தெரியலைடி...."

"அந்த ஆள் எப்படியிருந்தானாம்...? ராமை  மட்டும் விட்டுட்டு இவனுக எங்க போனானுங்களாம்..?" கேள்வியை அடுக்கினாள்.

"அவனுக விவரமா பேசுற மனநிலையில இல்லைடி... உங்கிட்ட சொல்லச் சொன்னானுங்க..."

"சரி எந்த ஆஸ்பிடல்ன்னு சொல்லு.... நான் இப்பவே போறேன்..."

"உனக்கென்ன பைத்தியமாடி... இந்த நேரத்துல போறேன்னு சொல்றே... கையில தான் காயமாம்... போலீசுக்குன்னு போனா போலீஸ் யாரு பக்கம் பேசுமுன்னு உனக்குத் தெரியுந்தானே.... அதான் அண்ணாத்துரையும் ராம்கியும் மறுத்துட்டாங்களாம்... அப்புறம் அண்ணாத்துரை அப்பா வந்து அவருக்குத் தெரிஞ்ச டாக்டர்கிட்ட காட்டி தையல் போட்டாங்களாம். ஒண்ணும் பிரச்சினையில்லையாம். அவங்க வீட்டுல கொண்டு போய் விடலாம்ன்னா அவன் வேணான்டா அம்மா ஊரைக்கூட்டிருவாங்க நான் போயிடுவேன்னு பொயிட்டானாம். இதையெல்லாம் அறிவுதான் போன்ல சொன்னான். நீ எதாவது பண்ணி பிரச்சினையை பெரிசாக்கிடாதே... நாளைக்குப் பேசிக்கலாம்..."

"எனக்கு இப்பவே ராமைப் பாக்கணும் போல இருக்குடி... எப்படிடி... அவருக்கு ஒண்ணுன்னு தெரிஞ்சு காலையில வரைக்கும் காத்திருக்க முடியும்..." புலம்பினாள்.

"சரி... முடிஞ்சா அவனுக்குப் போன் பண்ணிப்பாரு... ஆனா ரொம்ப கவனமா இரு..." என்றபடி  மல்லிகா போனை வைக்க, "இங்க என்னடி நடக்குது?" கத்தினாள் அம்மா.

"அம்மா என்ன பிரச்சினை... எதுக்கு கத்துறீங்க... என்னடி ஆச்சு... எதுக்கு இப்போ அழுது ஆர்ப்பாட்டம் பண்ணுறே?" கேட்டபடி வைரவன் அவளருகில் வந்தான்.

"ஏண்டா ராமைக் குத்துனீங்க... என்னோட பழகுறதுக்கு அவரோட உயிரோட விளையாடுறீங்களா?" வைரவனைப் பார்த்துக் கத்தினாள் புவனா.

"ஏ... ஏய்.... என்னடி சொல்றே? ராம்கியை குத்தினேனா... நானா... என்னடி ஆச்சு... எப்போ?"

"தெரியாத மாதிரி பேசாதடா... அந்த மணிப்பயலை வச்சி அடிக்கச் சொல்லியிருக்கே... அவனோட போனது யாரு... எனக்குத் தெரிஞ்சாகணும்..."

"மணி... நான்... இங்க பாரு மதியந்தான் அவனை காலேசுல பார்த்துப் பேசினேன். அவனை அடிக்கணுமின்னு எனக்கு எண்ணம் இருந்தா ஏன் அவன்கிட்ட போய் பேசப்போறேன். அவன் எங்கிட்ட இருக்க அன்பைவிட உன்மேல ரொம்ப பாசமா இருக்கான்... அது காதலா... கத்திரிக்காயான்னு நான் குழம்பிக்கிட்டு இருக்கேன். அப்புறம் அவனை எதுக்கு கத்தியால... அதுவும் நான்... இதுல யாரோ விளையாண்ட்டிருக்காங்க... மணிப்பய அவனை அடிக்க... ம்... தள்ளுடி..."

"டேய் அவன எவனோ கத்தியால குத்துனா இவ என்னமோ கதருறா... நீயும் பேசாம அவளுக்கு பதில் சொல்லிக்கிட்டு இருக்கே..."

"அம்மா... அன்னைக்கு என்னய எவனோ அடிக்கிறான்னு அவன் பாத்துக்கிட்டுப் போயிருந்தா இன்னைக்கு மாலை போட்ட போட்டோவுல சிரிச்சிக்கிட்டு இருந்திருப்பேன். அவனை அடிக்கச் சொல்லி நீங்க யார்கிட்டயாவது சொன்னீங்களா?"

"நானா... என்னடா சொல்றே? திடீர்ன்னு என்னைய கொலகாரின்னு சொல்றே...?"

"அப்ப கொஞ்சம் பேசாம இருங்க..." என்றபடி ரிசீவரை கையில் எடுத்து டயல் செய்தான்.

எதிர்முனை போனை எடுத்ததும் "சித்தி எங்க உங்க வீட்டுக்காரர்?" என்றான் கோபமாக.

"என்னடா கோபமா கேக்குற? தூங்குறாரு..."

"தூங்குறாரா... என்ன வெட்டி முறிச்சிட்டு வந்தாரு..."

"எதுக்குடா இம்புட்டுக் கோபம்? எங்கயோ பொயிட்டு புல்லா தண்ணியில வந்தாரு..."

"ம்... அதானே உம் புருஷனை அந்தப் பையனை கத்தியால குத்தச் சொன்னாங்களா?"

"எந்தப் பையனைடா...? "

"ம்... புவனா... அந்த ராம்கி பயலை..."

"ஓ... அவனையா... நம்ம புள்ள பின்னால சுத்துனா போட வேண்டியதுதானே... அதானே செஞ்சிருக்காரு.. நீ செய்ய வேண்டியதை அவரு செஞ்சிருக்காரு... இதுக்கு எதுக்கு கோபம்?"

"சித்தி கடுப்பக் கெளப்பாதே... அவன எதுக்கு அந்த மணிப்பய கூட சேர்ந்துக்கிட்டு கத்தியால குத்துனாரு... நாந்தான் அவன் விஷயத்துல தலையிடாதீங்கன்னு சொல்லிட்டு வந்தேனே... அவனுக்கு எதாவது ஆச்சின்னா அந்தக் குடும்பத்துக்கு இவரு பதில் சொல்வாரா? எப்ப எந்திரிச்சாலும் என்னைக் கூப்பிடச் சொல்லு..." என்றபடி போனை வைக்க "எதுக்குடா இப்ப அவனுக்குப் பரிஞ்சிக்கிட்டு சித்தப்பனை திட்டுறே... இனியாவது அந்தப் பய நம்ம பொண்ணு பின்னால சுத்தாம இருக்கட்டும்..." என்று கத்திய அம்மாவிடம் "அப்ப எங்க பொண்ணு அவனை லவ் பண்ணுறான்னு நீங்களே தம்பட்டம் அடிக்கப் போறீங்களா..?" என்று பதிலுக்கு கத்தினான். இவன் நல்லவனா கெட்டவனா ஒண்ணுமே புரியலையே என்று நினைத்த புவனா, 'அவனே விழகிப் போனாலும் நான் அவன இழுத்துக்கிட்டு ஓடிப்போயிருவேன்' என்று நினைத்தபடி ராம்கிக்கு போன் பண்ண, அது எங்கேஜ்டாக இருக்க கண்களில் நீரோடு அருகிலிருந்த சேரில் தொப்பென்று அமர்ந்தாள்.

தே நேரம்...

"நான் தலதலயா அடிச்சிக்கிட்டேன்... அவ கூட்டு வேணாம்ன்னு... கேட்டானா... இப்ப குத்துப்பட்டு வந்து கெடக்கானே..." புலம்பினாள் நாகம்மா.

"அம்மா... சத்த சும்மா இருக்கியா... கத்தி ஊரைக் கூட்டாம..." அவளை அடக்கினான் ராசு.

"என்னய அடக்குடா... அவன ஒண்ணும் கேக்காதே... நம்ம குடும்பத்துக்கு இது தேவையா... இன்னக்கி கத்தியால குத்துனானுங்க... நாளக்கி வீடேறி வந்து அடிப்பானுங்க..."

"அம்மா... சும்மா இருங்க..."

"இருண்ணே... என்னம்மா இப்ப அந்தப் பொண்ணோட பழகுறது தப்பா? நடக்கணுமின்னு இருந்துச்சு... நடந்திருச்சு... விடும்மா... எதுக்கு தேவையில்லாம அவளை இழுக்கிறே?" என்ற ராம்கி "அண்ணே.... நீங்கள்லாம் எப்படியோ அப்படித்தான் அவளும்... எனக்கு நீங்க எவ்வளவு முக்கியமோ அப்படித்தான் அவளும்... யாருக்காகவும் அவளை விட்டுக் கொடுக்கமாட்டேன்... உயிரே போனாலும்...."

"ஏய்... என்னடா சொல்றே..."

"ப்ளீஸ் அண்ணே... புரிஞ்சிக்கங்க... " என்றபடி எழுந்தான். போன் அடிக்க எடுத்தவன் எதிர் முனையில் உடைந்த புவனாவின் குரலைக் கேட்டதும் "புவி..." என்றான்.

"அவதான் பண்ணுறா... குடியைக் கெடுத்தவ... என்ன பேச்சுப் பேசுறான் பாரு... நீ ஊருக்குப் பொயிட்டு இந்தப் பயலை அங்கிட்டு கூட்டிக்கிட்டுப் போயிடு... இது இங்க இருந்தா நமக்குப் புள்ளையா இருக்காது..." கண்ணீரோடு சொன்ன நாகம்மாவை கண்களால் கட்டுப்படுத்தினான் ராசு.

"ஏய் எனக்கு ஒண்ணும் இல்ல.... எதுக்கு இப்போ அழறே..? இங்க பாரு புவி.... எனக்கு ஒண்ணுமில்லம்மா... நல்லாயிருக்கேன்... எல்லாம் நாளைக்கு காலேசுல பார்ப்போம்... ஐ லவ் யூடா..." என்றபடி போனை வைத்தான்.

(சனிக்கிழமை தொடரும்)
-'பரிவை' சே.குமார்.

செவ்வாய், 28 ஜனவரி, 2014

மண் பயனுற வேண்டும் - பாரதி விழா: 4

பாரதி நட்புக்காக அமைப்பின் பொங்கல் சிறப்புப்  பட்டி மன்றமான இன்றைய வாழ்க்கை முறை நமக்கு தருவது நிம்மதியே / நெருக்கடியே என்பது குறித்த முந்தைய பகிர்வுகளைப் பார்க்க... 

பாரதி-1            பாரதி-2             பாரதி-3 


நிம்மதியே என மூவரும் நெகிழ்ச்சியே என மூவரும் தங்களது கருத்துக்களை எடுத்து வைத்துவிட்டு அமர நடுவரின் தீர்ப்பைக் கேட்கும் ஆவலில் விழா அரங்கம் காத்திருந்தது. எல்லாரும் பேசிட்டாங்க...  இப்ப தீர்ப்புச் சொல்லும் இடத்திற்கு வந்தாச்சு. இதே கோர்ட்டா இருந்தா தீர்ப்பை ஒத்தி வச்சிட்டு அந்தப் பேப்பர்ல என்ன எழுதியிருக்குன்னு வீட்ல போயி படிச்சிப் பார்த்துட்டு அப்புறமா தீர்ப்புச் சொல்லலாம். ஆனா இங்க அப்படியில்லை... விவாதம் முடிந்ததும் தீர்ப்புச் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

'இரும்பைக் காய்ச்சி...' என்ற பாரதியின் பாடலைச் சொல்லி இரும்பைக் காய்ச்சச் சொன்ன பாரதிக்கு பால் காய்ச்சவே தெரியாது என்ற செய்தி எத்தனை பேருக்குத் தெரியும். ஒரு முறை செல்லம்மா ஊருக்குப் போயாச்சு. பால்க்காரம்மா பால் போட்டுட்டுப் போயாச்சு. தனியாப் படுக்க மகாகவிக்குப் பயம்... உடனே பாரதிதாசனை இரவு தங்க வரச் சொல்கிறார். போனவர் பாரதி படுத்திருக்க தானும் படுத்துவிடுகிறார். தனது தலைமாட்டில் ஏதோ நகர்வது போல் தெரிய விழித்துப் பார்த்தால் பாரதி அமர்ந்திருக்கிறார். என்ன விஷயம் கவிஞரேன்னு கேட்க, இந்த பாலைக் காய்ச்சிறது எப்படின்னு தெரியலை... அடுப்பே பற்ற வைக்க முடியலைன்னு சொன்னதும் அங்கே போய் பார்த்திருக்கிறார். சில பேப்பர்களைக் கொழுத்திப் போட்டிருந்திருக்கிறார். விறகு வைத்து எரிக்காமல் எப்படி பால் காய்ச்ச முடியும் என்றபடி விறகை வைத்துப் பற்ற வைத்திருக்கிறார் பாரதிதாசன். நீண்ட நேரம் போராடி ஒரு வழியாக பாலைக் காய்ச்சி இருக்கிறார்கள். இதை எழுதியது யார் தெரியுமா... பாரதிதாசன் தான். இருவரும் மிகப்பெரிய மகாகவிகள். ஆனால் இருவரால் பால் காய்ச்ச முடியவில்லை. பாலைக் கூட காய்ச்சத் தெரியாத மகாகவிதான் 'இரும்பைக் காய்ச்சி...' என்று பாடியிருக்கிறார்.

பொங்கல் என்றால் கடவுளுக்கு நன்றி சொல்வது என்று சிறப்பு விருந்தினர்கள் சொன்னார்கள். ஆம் நமக்கு கொடுத்த இறைவனுக்கு நன்றி சொல்லும் விதமாக நாம் பொங்கல் வைக்கிறோம். நமக்கு மேல உள்ளவங்களுக்கு நமக்கு கீழ உள்ளவங்களுக்கும் சொல்லணுமில்ல... அதுதான் மாட்டுப் பொங்கல். ஐந்தறிவு விலங்குக்குப் பொங்கல் வைத்தோம் பாருங்கள். அதுதான் தமிழனோட குணம். இது யாருக்கும் வராது. ஆனா உழைக்கிறவங்களோட கையில இருந்ததெல்லாம் கோயில்ல இருக்க சாமிகளுக்கு கொடுத்துட்டு அவங்களை மட்டும் கோயிலுக்குள்ளே போக விடாம வச்சிருக்கோம்.

இங்க வேலை பார்க்கிற எல்லாரும் வெயில்ல கஷ்டப்பட்டு ஊருக்கு மாசாமாசம் பணம் அனுப்பினாலும் நீங்க படுற கஷ்டம் அங்க இருக்க யாருக்கும் தெரியாது. ஒரு அறைக்குள்ள அஞ்சு பேரு ஆறு பேருன்னு இருந்துக்கிட்டு கஷ்டப்பட்டாலும் ஊர்ல எல்லாரும் நல்லாயிருக்கணுமின்னு நினைப்பீங்க. ஆனா ஒரு மாசம் பணம் அனுப்பலைன்னாலும் அப்பா என்னப்பா இன்னும் பணம் அனுப்பலை. இங்க செலவு கட்டுபடி ஆகலைன்னு பேச ஆரம்பிச்சிருவாரு. அப்புறம் என்னான்னா அப்பா கஷ்டப்படுறாரேன்னு கார் வாங்கிக் கொடுத்திருப்பீங்க... அதை தம்பிக்காரன் எடுத்துக்கிட்டுப் போயி எங்கயாவது மோதிருவான். அப்போ அப்பா நம்ம தம்பி காரை எடுத்துக்கிட்டுப் போனான்... மோதிட்டான்ப்பா என்று சொல்லும் போது அவனுக்கிட்ட எதுக்கு குடுத்தீங்க? என்று நீங்க கேட்டால் உடனே அப்பாக்காரர் அவன் உன் தம்பிதானே அவன் எடுக்கக்கூடாதான்னு கேட்டுட்டு பணங்காசு வந்ததும் உனக்கு சொந்தமெல்லாம் தூரப்போச்சு என்பார். இவனோட கண்ணீர் இவனோடதான்.

இங்க இருக்கிறவங்களுக்கு வருசத்துக்கு ஒரு மாசம் லீவு கொடுப்பாங்க.... அதிக நாள் இருக்க முடியாது. மாமனாருக்கு ஆகஸ்ட்ல அறுபதாம் கல்யாணம், அப்பாவுக்கு செப்டெம்பர்ல... இவன் இரண்டு விழாவுக்குமாக லீவை சரிபண்ணிக்க முடியாது. ஒருதடவை போனாலே செலவு அதிகமாகும். இரண்டு முறை போகமுடியாது. உடனே ஒருத்தர் கல்யாணத்துக்குப் போனா மத்தவங்க கல்யாணத்துக்குப் போக முடியாது. அதனால் நீ உங்கப்பா அறுபதுக்குப் போ... நான் எங்கப்பா அறுபதுக்குப் போறேன்னு சொன்னா அப்பத்தான் அவ அதெல்லாம் முடியாது எங்கப்பா கல்யாணத்துக்கு மாப்பிள்ளை வரலைன்னு வருத்தப்பட மாட்டாரா... கண்டிப்பா போறோம்ன்னு சொல்லிடும். அங்க போயிட்டு அப்பாக்கிட்டப் போயி இப்பத்தான் மாமனார் அறுபதுக்கு வந்தேன். உங்க அறுபதுக்கு இருக்க முடியாதுப்பா என்றால் நீ இருக்கலைன்னா நான் தூக்குல தொங்குறேன்னு சொல்லுவார். சரி இந்த மாமனாருக்குத்தான் அறிவு வேணாம். எங்கல்யாணத்துக்கு வரலைன்னாலும் பரவாயில்லை மாப்பிள்ளை உங்க அப்பா கல்யாணத்துக்கு வாங்கன்னு சொல்லியிருக்கலாம்ல. ஆனா சொல்ல மாட்டாரு... ஆட்டிவிட்டு வேடிக்கை பார்ப்பாரு. இல்ல இந்த ரெண்டு பயலுகளும் ஒரே நாள்ல ஒரு கோயில்ல வச்சா என்ன நடக்காதா. இருந்தாலும் வீண் பிடிவாதங்கள் நெருக்கடியைக் கொடுக்கும்.

மோகன சுந்தரம் நகைச்சுவையாய்ப் பேசினார். ஆனா அவரு சொன்னது எல்லாமே அவரோட கஷ்டங்கள்... வருத்தங்கள்... அவரோட வருத்தத்தைக் கேட்டு நாம எல்லாம் அழுது அது ஆறா ஓடுச்சா என்ன.... இல்லையே... நாம எல்லாரும் அவரு சொல்லச் சொல்ல சிரிச்சோம். அதுதான் இலக்கியம். எப்படிப் பேசினாலும் ரசிக்க வைக்கும். அவரு சொன்னாரு ஏழெட்டுச் செருப்பு, அஞ்சாறு பேக் எல்லாம் வச்சிருக்காங்க... நமக்கு ஒரே செருப்புத்தான் பக்கிங்ஹாம் போனாலும் பாத்ரூம் போனாலும் ஒரே செருப்புத்தான் அப்படின்னு சொன்னாரு... நமக்கு ஒரே செருப்புத்தான் அவங்ககிட்ட ஏழெட்டு இருக்கு ஆனா அவங்களுக்கு கணவன் ஒருத்தன்தான்... ஆனா நமக்கு என்றதும் அவையில் சிரிப்பொலி அடங்க அதிக நேரமானது. இதுக்கு அடுத்து நான் எதுவும் சொல்ல வேண்டியதில்லை என்றார்.

நெருக்கடிக்கும் நிம்மதிக்குமாக நிறைய விஷயங்களைப் பேசினார். சினிமாப் பார்க்கிறோம்... திரையில் மரம், செடி கொடி வீடுகள் எல்லாம் வருது... ஆடிப் பாடுகிறார்கள்... மின்சாரம் இல்லை என்றால் திரை கருப்பாகத்தான் இருக்கும்... அந்த மரம் செடி கொடிகளை எல்லாம் திரைக்கு கொண்டு வருவது புரோஜெக்டர்தான். எந்த ஒரு விஷயத்தையும் புரோஜெக்ட் பண்ணுங்கள் என்றவர் இங்கு பேச்சாளர்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்கிறேன். நீங்கள் பேசுவதைக் கேட்பவர்களை இம்ப்ரஸ் பண்ணப் பேசாதீர்கள்... உங்கள் மனதில் உள்ளதை எக்ஸ்போஸ் பண்ணுங்கள். அப்பொழுதுதான் நீங்கள் சொல்ல வந்ததை தெளிவாகச் சொல்ல முடியும் என்றார்.

நான் நிம்மதிதான் என்று தீர்ப்புச் சொன்னால் அப்ப நெருக்கடி இல்லையா என்ற கேள்வி எழும்... சரி நெருக்கடிதான் என்றால் அப்ப நிம்மதியே இல்லையா என்று கேள்வி எழும்... இரண்டும்தான் என்று சொல்ல இவ்வளவு நேரம் பேச வேண்டியதில்லை. உங்களது வாழ்க்கையில் எந்த ஒரு விஷயத்தையும் நீங்கள் எக்ஸ்போஸ் பண்ணுவதன் மூலமாக எது கிடைக்கிறதோ அதுதான் உண்மை. உங்களது வாழ்க்கை கொடுப்பது நிம்மதியா நெருக்கடியா என்பதை இந்த ஆறு பேரின் பேச்சில் இருந்தோ... எனது தீர்ப்பில் இருந்தோ சொல்வதென்பது சரியானதல்ல. அதை தீர்மானிக்கும் கருவி நீங்கள்தான்... உங்கள் பிரச்சினையை நீங்கள் எக்ஸ்போஸ் பண்ணுவதில்தான் நிம்மதியோ நெருக்கடியோ கிடைக்கும். எனவே தீர்ப்பை நீங்கள்தான் முடிவு செய்கிறீர்கள் என்று முடித்தார்.


விழாவில் சில துளிகள்:
  • நாம் பேசுவதைக் கேட்க திரண்டு வந்திருக்கும் இவர்கள் நமக்கு கை தட்டுகிறார்கள். அவர்களுக்கு நாம எழுந்து நின்று கை தட்டலாமே என்று நடுவர் சொன்னதும் பேச்சாளர்கள் எழுந்து நின்று கைதட்டினார்கள். பார்வையாளர்களும் எழுந்து நின்று கைதட்ட திரு. சுகிசிவம் அவர்கள் உங்களுக்கு நிகர் நீங்களே என்றார்.
  • எங்களுக்கு முன் வரிசையில் ஒருவர் மிகவும் ரசித்து எழுந்து எழுந்து கைதட்ட அவரருகில் இருந்தவர்கள் ஒவ்வொருவராக எழுந்து சென்றுவிட, ஒரு கட்டத்தில் அவருக்கு அருகில் கிடந்த சேரில் அவரை தள்ளி அமரச் சொன்னார் மனைவியோடு வந்த ஒருவர், நான் தள்ளி உக்காந்து கைதட்டும் போது பக்கத்துல இருக்கவங்க திட்டுறாங்க என்றவர் தனது கைதட்டலைத் தொடர்ந்தார்.
  • பேச்சாளர்களின் பேச்சைக் கேட்க விடாமல் குழந்தைகள் கத்தி விளையாட ஆரம்பித்தார்கள். பெற்றோர்கள் எவரும் சட்டை செய்யவில்லை. பேச்சை கவனித்துக் கேட்ட சிலர் சத்தம் போட, பாரதி அமைப்பினர் சிலர் சொல்லியும் குழந்தைகள் ஆட்டத்தைக் கைவிடவில்லை.
  • எங்கள் வரிசையில் இருந்த அம்மாவும் மகளும் அடிக்கடி எழுந்து போய் எதாவது வாங்கிய வண்ணம் இருந்தனர். அவர்களுக்காக என்னருகில் அமர்ந்திருந்த ஏழெட்டுப் பேர் கால்களை மடக்கி மடக்கி நொந்து போனோம்.
  • எப்பவும் போல் இந்த முறையும் நன்றியுரை சொல்லும் போது எல்லோரும் வெளியாகி இருந்தனர். தியேட்டரில் கடைசியாக தேசிய கீதம் போடுவது போல் ஆகிவிட்டது.
  • பேச்சாளர்கள் ஆறு பேருமே நடுவர் மணி அடித்தும் தொடர்ந்து பேசினார்கள். அவர்களின் பேச்சு ரசிக்கும் விதமாக இருந்ததால் இன்னும் கேட்கத் தூண்டியது. இடையில் திரு.சுகிசிவம் அவர்கள் மணி அடித்தால் பேச்சை நிறுத்த வேண்டும் என்று சொல்லியும் பார்த்தார் பலனில்லை.
  • சரியாக 7.15க்கு ஆரம்பித்த பட்டிமன்றம் 10.40 மணியளவில்தான் முடிந்தது. நீண்ட நேரம் மிக நல்லதொரு இலக்கியப் பேச்சை ரசிக்க முடிந்தது.


மனசின் மனசு:

அடுத்த விழாவில் திரு.சுகிசிவம் அவர்களை எதாவது ஒரு தலைப்பில் பேச அழைத்தால் அபுதாபி வாழ் தமிழர்களுக்கு  மிகச் சிறப்பான இலக்கியம் பருகும் வாய்ப்புக் கிடைக்கும். செய்யுமா பாரதி?

நன்றி:

விழாவை நடத்திய பாரதி நட்புக்காக அமைப்புக்கு...
படங்கள் கொடுத்து உதவிய சுபஹான் அண்ணனுக்கு...
இந்தப் பதிவுகளைத் தொடர்ந்து படித்து கருத்திட்ட உறவுகளுக்கு...

(இது பதிவு செய்து வைத்து கேட்டு எழுதிய பதிவு அல்ல... நிகழ்வின் போது கேட்டதை அசைபோட்டு எழுதியதுதான்... சில மாற்றங்கள் இருக்கலாம்... தவறான தகவல்கள் இருக்க வாய்ப்பில்லை அப்படியிருந்தால் சம்பந்தப்பட்ட அமைப்புச் சார்ந்த நண்பர்கள் தாராளமாக மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம்.)

****   வேலைப்பளுவின் காரணமாக இந்தப் பகிர்வே இரவில்தான் எழுத முடிகிறது. நண்பர்களின் தளங்களை வாசிக்க முடியவில்லை. இன்னும் இரு தினங்களில் தங்கும் அறை வேறு மாற்ற வேண்டும்... நேரம் கிடைக்கும் போது கண்டிப்பாக நண்பர்களின் தளம் வருவேன்... நன்றி.

**** இது 555.... நான் சிகரெட்டைச் சொல்லவில்லை... பதிவைச் சொன்னேன்... மனசில் இது 555...  இது சாத்தியமாகக் காரணம் நீங்களே... அதற்கும் நன்றி.

முற்றும்.
-'பரிவை' சே.குமார்.

திங்கள், 27 ஜனவரி, 2014

மண் பயனுற வேண்டும் - பாரதி விழா:3

பாரதி நட்புக்காக அமைப்பின் பொங்கல் சிறப்புப்  பட்டி மன்றமான இன்றைய வாழ்க்கை முறை நமக்கு தருவது நிம்மதியே / நெருக்கடியே என்பது குறித்த முந்தைய பதிவுகளைப்  பார்க்க... 



ஆறு பேச்சாளர்களின் பேச்சுக்களையும் விரிவாகச் சொன்னால் இன்னும் மூன்று பகிர்வு வந்துவிடும் இதுவே நிறைவுப் பகிர்வு என்ற எண்ணத்தில்தான் எழுதுகிறேன். என்னைக் கவர்ந்த சில நகைச்சுவைகளை மட்டுமே சொல்லி பதிவை முடிக்க நினைக்கிறேன்... பதிவின் நீளத்தைப் பொறுத்து நடுவரின் தீர்ப்பு தள்ளி வைக்கப்படும்.

நடுவர் தனது துவக்க உரையை முடித்ததும் நெருக்கடியே அணித் தலைவர் திரு. இராமச்சந்திரன் அவர்கள் தனது பேச்சை ஆரம்பித்தார். இன்றைய வாழ்க்கையில் எல்லாவற்றிற்கும் நெருக்கடி இருக்கத்தான் செய்கிறது என்றவர் எனது மனைவியும் பக்கத்து வீட்டு போலீஸ்காரர் மனைவியும் நான் அலுவலகம் போனதும் பேசிக்கொள்வார்கள் என்றதும் திரு.சுகிசிவம் அவர்கள் உங்களைப் பற்றியா என்று கேட்டார். இல்லையய்யா உலக விஷயங்களைப் பற்றித்தான் ஓபாமா மீண்டும் வெற்றி பெறுவாரா? ஈரான் ஈராக் பிரச்சினை எப்போ தீரும்? அப்படின்னு எல்லாம் பேசுவாங்க. ஒரு நாள் என் மனைவி அவரிடம் வாத்தியாரைக் கட்டி எதுக்கெடுத்தாலும் கையை நீட்டிடுறாரு நீங்க போலீஸ்காரரைக் கட்டியிருக்கிங்களே எப்படிக்கா என்று கேட்டிருக்கிறார். (இங்கு நிறுத்தி கல்யாணம் ஆன புதுசுல கையை நீட்டிருவேன். இப்பல்லாம் இல்ல... இப்ப ஆம்புலன்ஸ்ல போக எனக்குப் பயம் என்று சொல்லி அவையை சிரிக்க வைத்தார்) அதற்கு அந்தப் போலீஸ்காரரின் மனைவியோ வேகமாக அடிக்க ஓடிவருவாரு.... டக்குன்னு ஒரு அம்பது ரூபாயை எடுத்துக் கொடுத்ததும் பேசாம போயிடுவாருன்னு சொன்னுச்சு என்றார்.

நான் ஆங்கிலப் புரபஸர் என்பதால் உயிரைக் கொடுத்துப் பாடம் நடத்துவேன் சார், ஒரு முறை இப்படித்தான் ஷேக்ஸ்பியரை பற்றி சொல்லிக் கொடுத்தேன். வகுப்பு முடிந்து கேண்டீனுக்குப் போனா எனக்கு முன்னாடி இரண்டு பயலுக மாப்ள பாவம்டா நம்ம ராமச்சந்திரன் சார் எதுக்குடா இப்படி கத்துறாருன்னு கேக்குறான். அதுக்கு மற்றவன் எல்லாம் ஒருச்சாண் வயித்துக்காகத்தான் மாப்ள் என்கிறான். பாருங்க என்னோட வயித்தை அளந்து பார்த்திருக்கிறான் என்று சொல்லி நெருக்கடிக்கான காரணங்களை விளக்கினார்.

நிம்மதியே என்று பேச வந்த திரு.இராமலிங்கம் அவர்கள் எந்த வாழ்க்கையையுமே ரசித்து வாழ்ந்தால் நிம்மதி இருக்கும் அது அவருக்குத் தெரியலை என்றவர் பையன்கள் பற்றி நிறையச் சொன்னார். பசங்களைப் புரிஞ்சுக்கணும் சார்... பரிட்சையில 28 நாள் எந்த மாதத்தில் வரும் என்று கேட்டிருந்தேன் எல்லா மாதத்திலும் வரும் என்று எழுதியிருந்தான் என்று வரிசையாக நகைச்சுவையாகச் சொல்லிக் கொண்டே போனவர் அன்னைக்கு நான் பஸ்க்கு நிற்கிறேன் என்னோட மாணவன் ஒருவன் காண்டஸாக் கார்ல போறான் என்னைப் பார்த்ததும் என்ன சார் இங்க நிக்கிறீங்க வாங்க நான் கூட்டிக் கொண்டு போய் விட்டுட்டுப் போறேன்னு சொன்னான். உடனே நேற்றும் இந்தக் காரை இங்க பார்த்தேன் தம்பி என்றதும் கூப்பிட்டு இருக்கலாமே சார் ஏத்தியிருப்பேன்ல என்றான் என்று சொல்ல பார்வையாளர் மத்தியில் சிரிப்பு அலை எழ, எதிர் அணியினரும் சிரிக்க. உடனே தவறாகத்தான் நினைப்பார்கள் எதிரணியினர் என்று சொல்லி கைதட்டல் வாங்கினார்.

பின்னர் வீட்டில் நெருக்கடி இல்லையா என்று கேட்டார் அம்மாவுக்கும் பொண்டாட்டிக்கும் ஒரே விலையில எடுத்தாத்தானே பிரச்சினை. பொண்டாட்டிக்கு ஆயிரம் ரூபாய்ல எடுங்க. அம்மாவுக்கு 999 ரூபாயில எடுங்க. பொண்டாட்டிக்கிட்ட கொடுத்து இது உனக்கு எடுத்தது இது அம்மாவுக்கு, நீயே கொண்டு போய் அம்மாக்கிட்ட கொடுவே என்று சொல்லிப் பாருங்கள்... அப்படியே போய் அத்த இது உங்களுக்கு உங்க மகன் எடுத்தாந்தது என்று சொல்லி கொடுக்கும் போது கிடைக்கும் சந்தோஷம் நெருக்கடியை கொடுப்பதில்லையே என்றதும் குறுக்கிட்ட நடுவர் அவர்க்ள் இப்போ சண்டை வராதா? எனக்கு 999 அவளுக்கு ஆயிரம்ன்னு சண்டை வராதா என்றார். உடனே விலையைக் கிழித்துவிட்டுக் கொடுக்க வேண்டும் நடுவர் அவர்களே என்றார்.

அடுத்துப் பேச வந்த திருமதி. பிரேமா அவர்கள் ஒரு குழந்தை இருப்பதால் உறவுகள் இன்றி வளரும் நெருக்கடிக்கு ஆளாகிறார்கள் என்றார். இவரும் சேலை குடும்பம் என எல்லாம் சொல்லி சில இடங்களில் நகைச்சுவையாகவும் பேசினார். இவருக்குப் பதிலளிக்கும் விதமாகப் பேசிய திருமதி. சுந்தரவள்ளி நகைச்சுவையை அள்ளி வீசினார். அவரது கணவரை பனை மரத்துல மழை பெஞ்ச மாதிரி கலர்ல இருப்பாரு. கரண்ட் இல்லைன்னா அவரைத்தான் சிரிக்கச் சொல்லி தீப்பெட்டி எடுப்பேன் என்றார். 

உறவுகள் இல்லை... மாமா இல்லை சித்தப்பா இல்லைன்னு என்னோட அக்கா புலம்புனாங்க என்றதும் அவங்க உங்களுக்கு அக்காவா என்று நடுவர் கேட்கவும் ஆமா அவரு அண்ணன் இது ஐயா என சொல்ல எல்லாருக்கும் நான் தங்கச்சி என்றார். எங்களோட நண்பர்கள்தான் எங்க பையனுக்கு மாமா, சித்தப்பா எல்லாம்... இப்ப இங்க வந்திருக்கேன்... நீங்க எல்லாம் என் மகனுக்கு மாமா என்று சொல்லி கைதட்டல் வாங்கினார். 

பின்னர் பேசிய திரு மோகனசுந்தரம் பட்டிமன்றத்தின் மொத்தத்தையும் தன்பக்கம் திருப்பினார். பேசியது எல்லாமே நகைச்சுவைதான். நெருக்கடி என்பதற்கு ஏராளமான நகைச்சுவைகளை அள்ளி வீசினார். அலுவலகத்தில் சிக்கன் குனியா என்று சொல்லி விடுமுறை போட்டதாகச் சொன்னார். அதற்கு அவர் சொன்ன காரணம் என்னவென்றால் சென்ற முறை அபுதாபிக்கு கூப்பிட்ட போது அலுவலகத்தில் எல்லாரும் எதாவது வாங்கி வரச்சொன்னதால் இந்த முறை சொல்லவில்லை என்றார். மேலும் இங்கு வந்ததற்கு ஞாபகார்த்தமாக ஒரு திர்ஹம் கடையில மொத்தமாக் ஒட்டகம் வாங்கிக்கிட்டுப் போய் கொடுத்துட்டேன். அடுத்த நாள் போனா எல்லாரும் முறைக்கிறாய்ங்க... மேனேஜர் கூப்பிட்டு ஊர்ல இருக்கிறதுக்கு லீவு போட்டுட்டு எதுக்கு அபுதாபி போனேன்னு பொய் சொன்னே என்றபடி ஒட்டகத்தை திருப்பி அடிவயித்தைப் பார்க்கச் சொன்னார். அங்க  பார்த்தால் 'மேட் இன் இந்தியா'ன்னு போட்டிருக்கு.

கோயிலுக்குப் போனால் காசு கொடுத்தால் ஒரு மரியாதை இல்லைன்னா ஒரு மரியாதைதான். பெருமாள் கோயிலுக்குப் போனேன். அங்க நான் தீபத்தட்டுல ஒரு ரூபாய் போட்டேன். பக்கத்துல ஒருத்தர் நூறு ரூபாய் கொடுத்தார். அவரு தலையில பெருமாளுக்கே வைக்கிற மாதிரி வச்சாரு... எனக்கு வச்சாரு பாருங்க டங்குன்னு.. ஒண்ணாம் வகுப்புல தலையில கொட்டுன மாதிரி இருந்துச்சு. ஒரு தடவை என்னோட டைப்பிஸ்ட திட்டிட்டேன். உடனே அழுக ஆரம்பிச்சிருச்சு... அழுதாலும் பரவாயில்லைங்க வாயில துணிய வச்சிக்கிட்டே வெளிய போக எல்லாரும் என்னையவே பாக்குறானுங்க... அப்புறம் அந்தப் பொண்ணோட புருஷன் வந்து கேட்க நான் விளக்கினேன். சரி இனிமே இப்படி நடக்கக்கூடாதுன்னு சொல்லிட்டு என்னையப் பார்த்தான் பாருங்க அந்தப் பார்வையில நன்றி தெரிந்தது என்றார்.

வீட்டில் இருக்கும் பீரோவில் மேல் தட்டு பட்டுச் சேலைகளுக்கு அடுத்தது உடுத்துற சேலைகள். அதற்கு அடுத்தது பையனுக்கு. நமக்கு கீழ கொஞ்சம் இடம். பையன் அங்க இருந்து ஓடியாந்து என்னோட துணிக மேலதான் கால வச்சி ஏறி துணி எடுக்கிறான். செருப்புல பாத்த மூணு நாலு பேக்ல மூணு நாலு, நமக்கு பாத்ரூம் போனாலும் எங்க போனாலும் ஒரே செருப்புத்தான் என நகைச்சுவையாய் சொல்லிக் கொண்டே போனார்.

இறுதியாகப் பேச வந்த திரு.சிவக்குமார் அவர்கள் நிம்மதி குறித்து விளக்கமாகப் பேசினார். இவரது பேச்சில் ஆழ்ந்த கருத்துக்கள் இருந்தன நகைச்சுவை இல்லை. இராமச்சந்திரன் அண்ணன் நெருக்கடி நெருக்கடின்னு புலம்புறாரு. இவரு பட்டிமன்றத்துல மாதம் ஒரு லட்சம் சம்பாதிக்கிறாரு என்றதும் நீங்க ஒரு முடிவோடத்தான் வந்திருக்கீங்க போல என்றார் சுகிசிவம். தனது பேச்சைத் தொடர்ந்தவர், அண்ணன் குடும்பத்தால நெருக்கடி, மனைவியால நெருக்கடி என்று புலம்பினார். ஆனால் வந்ததில் இருந்து ஊருக்குப் போன் பண்ணி என்னம்மா பண்றே... வீட்டைப் பூட்டிக்க... பத்திரமா இருன்னு பேசிக்கிட்டே இருக்காரு. 

பிரேமா அக்காவும் ரொம்பத்தான் நெருக்கடி நெருக்கடின்னு புலம்பிட்டு உக்காந்திருக்காங்க. அவரு சிக்கன் குனியான்னு சொல்லிட்டு வந்தது எனக்கு காலையில தெரியும். அவரு கம்பெனியில இருக்கிற என்னோட நண்பனுக்கு போன் பண்ணி என்ன உங்களு அபுதாபிக்கு பேச வந்திருக்காருன்னு சொன்னதும் அவரு சிக்கன் குனியானுல்ல சொன்னாருன்னு சொன்னார். உடனே நடுவர் அவருக்கு ஊருக்குப் போனதும் சிக்கன் குனியா வந்துடும் என்றார். இவரு இங்க வர்றதுக்காக பொய் சொல்லிட்டு வந்திட்டு நெருக்கடி இருக்குன்னு சொன்னா எப்படி என நிம்மதிக்காக வாதிட்டார்.

எல்லாரும் பேசி அமர்ந்ததும் தீர்ப்புச் சொல்லும் விதமாக தனது பேச்சை ஆரம்பித்தார் நடுவர்....

மன்னிக்கனும் பதிவு நீண்டுக்கிட்டே போயிருச்சு... மூணு பதிவுன்னு சொன்னேன்... இப்போ மூணோட முடியலை... அதனால எல்லாரும் நடுவர் தீர்ப்புக்கு நாளை வரை காத்திருங்கள்...

நிறைவுப் பகுதி நாளை மாலை...
-'பரிவை' சே.குமார்.

ஞாயிறு, 26 ஜனவரி, 2014

மண் பயனுற வேண்டும் - பாரதி விழா:2

பாரதி நட்புக்காக அமைப்பின் பொங்கல் சிறப்புப்  பட்டி மன்றமான இன்றைய வாழ்க்கை முறை நமக்கு தருவது நிம்மதியே / நெருக்கடியே என்பது குறித்த முதல் பதிவைப் பார்க்க... 



விழாவின் தொடக்க நிகழ்வுகள் எல்லாம் முடிந்ததும் பட்டிமன்றத்துக்காக மேடை தயாரானது. பேச்சாளர்களை திரு. முனீஸ்வரன் அவர்கள் அறிமுகம் செய்து மேடைக்கு அழைத்தார். நிம்மதியே அணிக்காக பேராசியர். திரு. இராமச்சந்திரன், முனைவர் சுந்தரவல்லி மற்றும் திரு. சிவக்குமார் ஆகியோரும் நெருக்கடியே அணிக்காக புலவர் திரு. இராமலிங்கம், திரு. மோகனசுந்தரம் மற்றும் டாக்டர்.பிரேமா குமார் ஆகியோரும் பேசுவதற்காக மேடைக்கு அழைக்கப்பட இறுதியில் சொல்வேந்தர் கலைமாமணி திரு.சுகிசிவம் அவர்களும் மேடை ஏறினார். பேச்சாளர்கள் அனைவருக்கும் பொன்னாடை போர்த்தி மரியாதை செய்யப்பட்டது.

பட்டிமன்றத்தை ஆரம்பித்த நடுவர் அவர்கள் தனது இருக்கையில் இருந்து எழுந்து வந்து நின்று கொண்டே பேச்சை ஆரம்பித்தார். நடுவர்ன்னா உக்காந்துக்கிட்டுத்தான் பேசணும். எனக்கும் அங்கு மைக் எல்லாம் வைத்து இருந்தார்கள். நானும் எனக்கான இடத்தில் அமர்ந்து எழுந்து வந்துவிட்டேன். இப்பல்லாம் நின்று கொண்டு பேசுவதையே வழக்கமாக வைத்திருக்கிறேன் என்றார்.

அதற்கு உதாரணமாக திருமாலுக்கு நின்ற கோலம் அமர்ந்த கோலம் படுத்த கோலம் என்று உண்டு அதுபோல பட்டிமன்றத்திலும் நின்ற கோலம், அமர்ந்த கோலம்  என பேசிவிட்டோம் இனி படுத்த கோலம் ஒன்றுதான் பாக்கி என தென்கச்சி சுவாமிநாதன் அண்ணன் அவர்கள் அடிக்கடி சொல்வார்கள் அதையும் செய்துவிட்டால் நன்று. ஏன்னா நின்னுக்கிட்டு பேசுறவனுக்கு உக்காந்தா பேச வராது. உக்காந்து பேசுறவனுக்கு நின்னுக்கிட்டு பேச வராது. ஒரு தடவை நெடுஞ்செழியன் அமைச்சராக இருக்கும் போது பொதிகையில அவர் பேசிய ஒரு நிகழ்ச்சியினை தென்கச்சி சுவாமிநாதன் அண்ணன்தான் பதிவு செய்தார். நெடுஞ்செழியன் உக்காந்து பேசுவதற்காக எல்லாம் தயார் பண்ணி வைத்திருக்கிறார்கள். ஆனால் அவரோ நின்று பேசிப் பழக்கப்பட்டவர் அதனால் வந்து உக்காந்ததும் பேச்சு வரவில்லை. உடனே அவர் நான் நின்று கொண்டுதான் பேசுவேன் அதற்கு தயார் செய்யுங்கள் என்று சொல்லிவிட்டாராம். உடனே மைக்கை கம்பில் கட்டி சுவாமிநாதன் அண்ணன் நிகழ்ச்சி முடியும் வரை தூக்கிப் பிடித்துக் கொள்ள இவர் கையை அங்கிட்டும் இங்கிட்டும் ஆட்டிப் பேசி முடித்தாராம்.

பாரதி ஒருமுறை விலங்குகள் சரணாலயத்துக்குப் (zoo) போனாராம். அங்கு போனதும் அங்கிருந்த சிங்கத்தைப் பார்த்தவருக்கு அதைத் தொட்டுப் பேச ஆசை வந்ததாம். அதற்காக அங்கிருந்து காப்பாளரிடம் நான் அந்த சிங்கத்தை தொட்டுப் பேச வேண்டும் என்றாராம். அவரோ தொட்டுப் பேசுறது பிரச்சினை இல்லை. ஆனா சிங்கத்துக்கிட்ட பேசணுமின்னு இதுவரை யாரும் கேட்டதில்லை என்று மறுத்திருக்கிறார். ஆனால் மகாகவியோ விடாப்பிடியாக நின்று சிங்கத்தின் அருகில் சென்று பாடி அதனை கர்ஜிக்கச் சொன்னாராம். அதுவும் தொடர்ந்து பத்து நிமிடங்கள் கர்ஜித்ததாம். இதை செல்லம்மா அவர்கள் எழுதும் போது அவரைப் பற்றி எனக்குத் தெரியும். இறைவா அந்த சிங்கத்துக்காவது நல்ல புத்தியைக் கொடு என்று வேண்டிக் கொண்டேன் என்று எழுதியிருக்கிறார் என்றவர் இதனை எதற்காகச் சொல்கிறேன் என்றால் இங்கு பாரதி நட்புக்காக அமைப்பினர் இதுவரையான நிகழ்வுகளைப் பற்றிய தொகுப்பின் ஆரம்பத்தில் சிங்கத்தில் இருந்து பாரதி வருவதாக காண்பித்தார்கள் அவர்கள் இதை நினைத்துப் போட்டார்களா இல்லையா என்பது தெரியவில்லை ஆனால் மிகவும் பொருத்தமான காட்சி அது என்றார்.


'அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்' பாடலைப் பற்றிச் சொல்லும் போது அக்கினிக் குஞ்சென்றால் என்ன என்று அழகாக விளக்கினார். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு ஸ்பார்க் வரும். அது வரும்போது வாழ்க்கையில் மாற்றம் வரும். அந்த ஸ்பார்க் முப்பதிலும் வரும். நாற்பதிலும் வரும் ஒரு சிலருக்கு வராமலே போய்விடும் எனச் சொல்லி பட்டினத்தார், திருநீலகண்டர் எனச் சிலரின் வாழ்க்கையில் அப்படி ஒரு அக்கினி (ஸ்பார்க்) வந்த இடத்தை அழகாக விளக்கினார். அதிலும் குறிப்பாக தத்தரிகிட தத்தரிகிட தோம் என்றால் என்ன என்று விளக்கினார் பாருங்கள். மிகவும் அருமை... ஒரு கவிஞனின் பார்வை மற்றவர்களின் பார்வை பார்க்காததை எல்லாம் பார்க்கும். அப்படி வாழ்க்கையில் ஸ்பார்க் வந்து அதனை அடைந்து வெற்றி பெற்ற பின் ஆடும் ஆனந்தக் கூத்து இருக்கு பாருங்க... அதுதான் இந்த தத்தரிகிட தத்தரிகிட தோம் என் இன்னும் பல விளக்கங்களுடன் விளக்கினார்.

இன்னும் நிறைய விஷயங்களுடன் பாரதி குறித்து நிறைய விஷயங்கள் பேசினார். பின்னர் பேச்சாளர்களை ஒவ்வொருவராக அறிமுகம் செய்தார். திரு. இராமச்சந்திரன், திரு இராமலிங்கம் இருவரையும் அறிமுகம் செய்யும் போது மிகச்சிறந்த பேச்சாளர் ஐயா திரு. சாலமன் பாப்பையா அவர்களின் குழுவில் பேசுபவர்கள் நகைச்சுவையுடன் பேசினாலும் சிந்தனைக்கு விருந்தாக பேசுபவர்கள் என்றார். பேராசிரியை பிரேமாவைப் பற்றிச் சொல்லும் போது கலைஞர் டிவியில் சூரிய வணக்கம் என்ற நிகழ்ச்சியை நடத்துபவர் என்றும் நல்ல பேச்சாளர் என்றும் சொன்னார். முனைவர் சுந்தரவல்லி அவர்களை பட்டிமன்றத்தின் சூப்பர்ஸ்டார் என்றவர் இவருக்காக நடுவரின் தேதியைக் கூட மாற்றுகிறார்கள் என்றார். மற்றும் திரு மோகனசுந்தரத்தை சிரிக்கச் சிரிக்க பேசக்கூடியவர் என்றும் திரு. சிவக்குமாரை மிகச்சிறந்த பேச்சாளர் என்றும் சொல்லி அவர்க்ளாய் அறிமுகம் செய்து வைத்தார்.

பேச்சாளர்களின் பேச்சுக்களுக்கு இடையே அவர்களின் கருத்துக்களை மையமாக வைத்துப் பேசினார். ஒரு முறை வீட்டில் சமையலுக்கு அரிசி இல்லை. இருந்த அரிசியையும் எடுத்து குருவிகளுக்குப் போட்டு காக்கை குருவி எங்கள் சாதி என பாடிக் கொண்டிருந்தார். அதைப் பார்த்த பக்கத்து வீட்டு அம்மா செல்லம்மாவிடம் 'என்னம்மா சாப்பாட்டுக்கு இருந்த அரிசியையும் இந்த மனுசன் பறவைகளுக்குப் போட்டுட்டாரே' என்று கேட்டாராம் அதற்கு செல்லம்மா கோபப்பட்டு பேசாமல் சிரித்தபடியே அது அவரோட சுபாவம் என்று சொன்னார்களாம்.


சுந்தரவல்லி அவர்கள் மாமா, சித்தப்பா குறித்துப் பேசியதைப் பற்றி சொன்னவர் இன்னைக்கு மாமா இல்லைன்னா என்ன அந்த இடத்தைத்தான் நண்பர்கள் நிரப்பி விடுகிறார்களே.. எனது நண்பரின் வீட்டில் அவரும் அவரது மகளும் எதாவது பிரச்சினை பற்றி பேசும் போது நான் அங்கு சென்றால் இந்த உன்னோட சித்தப்பாக்கிட்ட கேட்டுக்க என்று சொல்லிவிடுவார். அதுவும் சித்தப்பா நீங்களே சொல்லிவிடுங்கள் என்று கேட்கும். அதேபோல் விருந்தில் சொந்தக் காரனை எழுப்ப முடியுமா? அப்படி எழுப்பினால் அதை பெரிய பிரச்சினை ஆக்கிவிடுவார்கள். அங்கும் நண்பனைத்தான் எழுப்ப முடியும் என்று விரிவாகப் பேசியவர் இதை இங்கு நட்புக்கு இலக்கணமாகச் சொல்கிறேன் என்றார்.

இப்படியாக ஒவ்வொருவரின் பேச்சுக்கும் இடையிலும் நல்ல நல்ல கருத்துக்களை சொல்லிக்கொண்டிருந்தார். நாளைய பகிர்வில் அறுவர் உரையின் சிறு தொகுப்பும் நடுவரின் தீர்ப்பும்...

-நாளை தொடரும்...
-'பரிவை' சே.குமார்.

சனி, 25 ஜனவரி, 2014

தொடர்கதை: கலையாத கனவுகள் - 46

முந்தைய பதிவுகளைப் படிக்க...


                                             பகுதி-43      பகுதி-44    பகுதி-45              
------------------------------------------------

46.  காவு கொடுக்குமா காதல்

முன்கதைச் சுருக்கம்

கிராமத்து ஏழைக் குடும்பத்துப் பையனான ராம்கி, கல்லூரி ரவுடி வைரவனின் தங்கை புவனாவுடன் நட்பாக பழகுகிறான்.  அண்ணனும் மச்சானும் சிங்கப்பூர் செல்ல, வாழ்க்கை கொஞ்சம் மாற்றமான பாதையில் செல்ல ஆரம்பிக்கிறது, மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைத்ததும் காதல் இன்னும் இறுக்கமாகிறது. ராம்கியின் அக்காவின் திருமணத்திற்கு புவனா வந்ததும் மீண்டும் அவர்களது காதலில் புயல் மையம் கொள்ள  இருபுறமும் விசாரணைகள் தொடங்கின. மணியுடன் போன ராம்கியை தேடி நண்பர்கள் செல்கிறார்கள்.

இனி...

"என்ன மாப்ள என்ன சொல்றார் தம்பி?" என்றபடி வண்டியில் இருந்து இறங்கினார் புவனாவின் சித்தப்பா. 

'ஆஹா... தேவையில்லாம சேகரோட பிரண்ட்டு இந்த தறுதலை நாயி கூப்பிடுறானேன்னு வந்து சிக்கிக்கிட்டோமே... சிதைச்சிடுவானுங்களோ... ம்... சிதையக் கூடாது' என்று நினைத்தபடி வரப்போவதை எதிர்க்கொள்ளத் தயாரானான் ராம்கி.

"எங்க மாமா... இல்லேன்னுதான் சொல்லுறான்... ஒண்ணும் சொல்ல மாட்டேங்கிறான்... என்னோட பிரண்டோட மச்சான் வேற... கையக்கால ஒடச்சிவிட்டா நாளைக்கு அவன் வேற வந்து கேப்பான்" என்றபடி சிகரெட்டை முழுவதும் இழுத்து துண்டை கிழே போட்டு நசுக்கியபடி "ஆனா மாமா... கொக்காலி... புவனாவை எவனாவது காதலிக்கிறேன்னு வந்தா அவன் எவனா இருந்தாலும் பொளந்துபுடுவேன் பொளந்து... ஏன்னா அவ யாரு மாமா... நம்ம குடும்பத்துப் பொண்ணு... முக்குலத்து ரத்தம் மாமா... முக்குலத்து ரத்தம்... எவனோ ஒரு  பொறம்போக்கு எப்படி மாமா நம்ம பொண்ண லவ் பண்றேன்னு வரலாம்..." என்று பேசிய மணி கண்கள் சிவப்பாக கிடாவெட்டில் ரத்தம் குடிக்கும் கருப்பராகத் தெரிந்தான்.

"இரு மாப்ள... கோபப்படாதே... கோபம் காரியத்தைக் கெடுத்துடும்... நா விசாரிக்கிறேன்..." என்றபடி வேஷ்டியை தூக்கிக் கட்டிக்கொண்டு சட்டை கையை ஏற்றிவிட்டபடி "இங்க பாருங்க தம்பி... நீங்க யாரு... என்ன சாதி... இதெல்லாம் எனக்குத் தெரியாது... அது தேவையும் இல்ல... என்னப் பொறுத்தவரைக்கும் எங்க வீட்டுப் பொண்ணோட நீங்க சுத்துறதா விசாரிச்சி தெரிஞ்சிக்கிட்டேன். இந்த அடிதடி... வெட்டுக்குத்து... ரத்தக்கறை எல்லாம் நிறைய பார்த்துட்டேன்... இப்ப உங்ககிட்ட எங்க பொண்ணோட பழக வேணான்னு ஜென்டிலாச் சொல்லத்தான் வந்திருக்கேன். என்ன புரியுதா?"

"சார்... நீங்க சொல்றது எனக்கில்லை... எல்லாருக்கும் புரியும்.. பட் புவனா கூட பட்டிமன்றங்களுக்கும் கவியரங்கங்களுக்கும் போவேன். எனக்கு அவங்க நல்ல பிரண்ட்... தட்ஸ் ஆல்... நீங்க நினைக்கிற மாதிரி ஒண்ணும் இல்ல... என்னையும் நீங்க புரிஞ்சுக்கங்க... இவரு என்னமோ மிரட்டுறாரு... மிரட்டுனா இல்லாததை ஒத்துக்கணுமா என்ன... அன்னைக்கு வைரவண்ணனை காப்பாத்துனதுக்காக அடிக்க வந்தாரு. இன்னைக்கு அதே வைரவண்ணனோட தங்கச்சிக்காக அடிக்க வாராரு... ஏன் சார் நாந்தெரியாமத்தான் கேக்குறேன்... காதல்ங்கிற கொலை பாதகச் செயலா என்ன... இல்ல ஒரு பொண்ணுகூட பழகுனா அது காதலாத்தான் இருக்கணுமா... அங்க ஒடுறது முக்குலத்து ரத்தம்ன்னா இங்க ஓடுறது அதுக்கு நிகரான ரத்தம்தான்... "

"ஏய்... என்னடா எகிறுறே... மாமா இவனுக்கிட்ட எல்லாம் பேசிக்கிட்டு இருக்க முடியாது... இவன் பேசுறதை கேக்கவா வந்தோம்... டென்சன் ஏத்துறான் மாமா... டென்சன் ஏத்துறான்... இதுல நீங்க மட்டும் தலையிடலைன்னா இந்நேரம் இவனை போட்டுட்டுப் போய்க்கிட்டே இருந்திருப்பேன்..."

"இரு மாப்ள அவசரப்படாதே... அவரு இல்லைன்னு சொல்றாரு... நாம இருக்குன்னு சொல்றோம்... பேசிப்பாப்போம்... படியலைன்னா பாத்துக்கலாம்..."

"ம்... என்னவோ மாமா... இனி எதாவது ஓவராப் பேசினான்னா போட்டுட்டு எதாவது செங்கக் காலவாயில தூக்கிப் போட்டுட்டு போய்க்கிட்டே இருப்பேன்..." என்றபடி சிகரெட்டை பற்ற வைத்துக் கொண்டு தள்ளிப் போனான்.

"தம்பி... இங்க பாருங்க... உங்க குடும்பம் உங்க மேல நம்பிக்கை வச்சிருப்பாங்கல்ல அது மாதிரித்தான் எங்க குடும்பமும் எங்க பொண்ணு மேல நம்பிக்கை வச்சி படிக்க வைக்கிறோம்... இதுவரைக்கும் ரெண்டு பேரும் பழகியிருக்கீங்க... இப்ப விட்டு வெளகிடுங்க... உங்கள் எதுனாச்சும் பணக்கஷ்டமுன்னா சொல்லுங்க... நாஞ்சரிபண்ணுறேன்... எதுக்கு வீணாவுல... ம்... இப்ப இங்க அவனை விட்டா உங்கள செதச்சிட்டுப் போயிடுவான்... ம்... எதுக்காக உயிரை விடணும்..."

"சாரி சார்... நான் உயிரை விட பயப்படலை.... ஆனா மத்தியானம் வைரவண்ணன் வந்தாரு... எப்பவும் போல பேசினாரு... அவரு தங்கச்சிக்கு மாப்பிள்ளை பார்க்கிறோம்... ஒத்துக்க மாட்டேங்கிறாஙகன்னு சொல்லி என்னைய கன்வின்ஷ் பண்ணச் சொன்னார். எனக்கு அப்ப எதுவும் புரியலை... ஆனா இப்பத்தான் புரியுது... உங்க பொண்ணு கல்யாணத்துக்கு ஒத்துக்கலைங்கிறதுக்காக நான் பலிகடாவா சார்... சொல்லுங்க..." என்று ராம்கி கேட்டதும் புவனாவின் சித்தப்பா யோசிக்கலானார்.

"என்ன மாமா... ஐய்யய்யோ என்ன யோசிக்க ஆரம்பிக்கிறீங்க... இவன் பேச்சாளன் மாமா... பேச்சாளன். பேசியே உங்கள மயக்கிடுவான்... நீங்க இங்கிட்டு வாங்க... நான் கேக்குற விதமாக் கேக்குறேன்... முக்குலத்துக்கு நிகரான ரத்தத்துக்கிட்ட..." என்றபடி சிகரெட்டை கீழே போட்டான்.

புவனாவின் சித்தப்பா "ம்... கேட்டா சொல்ல மாட்டேங்கிறே... இனி அவனாச்சு நீயாச்சு..." என்றபடி விலகிக் கொள்ள, "என்ன பங்காளி... அறுக்கப்போற ஆடு கணக்கா முழிக்கிறே... சேகர் எனக்கு பிரண்டுன்னுதான் உன்னைய அன்னைக்கு விட்டேன். ஆனா இது புவனா மேட்டர் அவளுக்காக சேகரையே போடணுமின்னா போட்டுட்டுப் போய்க்கிட்டே இருப்பேன்.. என்ன யோசிக்கிறே... இனிமே புவனாவோட பாதையில வரமாட்டேன்னு சொல்லி மாமாகிட்ட ஒயிட் ஷீட் இருக்கும் எழுதிக் கொடுத்துட்டு போய்க்கிட்டே இரு... உன் உயிருக்கு சேதாரம் வராது..." என்றபடி சட்டையைப் பிடித்தான் மணி.

"என்னங்க மிரட்டுறீங்களா? உங்க பொண்ணப் போயி கேட்டுப் பாருங்க... எவனோ சொன்னான்னு எங்கிட்ட வந்து பிரச்சினை பண்ணுறீங்க... ஆமா... அந்தப் பொண்ணோட அண்ணனே எங்கிட்ட நல்லாப் பேசும் போது உங்களுக்கு என்ன வந்துச்சு... சரி அவளோட சித்தப்பா அவருக்கு உரிமை இருக்கு எங்கிட்ட விசாரிக்கிறாரு... நீங்க யாரு? அப்ப நீங்க புவிய லவ் பண்ணுறீங்களா?"

"என்னடா எகத்தாளம்... எகிறுறே.... பயமே இல்லாம பேசுறே... என்ன காதல் கொடுக்கிற திமிரா... ஆமா என்ன சொன்னே... புவியா... பேரு வச்சவங்ககூட புவனான்னு சொல்லும்போது நீ புவி போடுறே...?"


"என்னங்க நீங்க.... எல்லாத்துலயும் குத்தம் கண்டு பிடிக்கிறீங்க... பிரண்ட்ஸ் எல்லாருமே பேரைச் சுருக்கித்தான் கூப்பிடுவோம்... என்னைய எல்லாரும் ராம்கியின்னு சொல்லுவாங்க... ஏன் நீங்க முன்னாடி எல்லாம் அப்படித்தானே கூப்பிட்டீங்க... இன்னைக்குத்தானே புல் நேமையும் சொன்னீங்க..."

"இங்க பாரு... இப்ப மேட்டருக்கு வாறேன்... அவ கூட பழக மாட்டேன்னு சொல்லிட்டு உயிரைக் காப்பாத்திக்கிட்டு ஓடிடு..."

"இல்லேன்னா... என்ன பூச்சாண்டி காட்டுறீங்களா? ஆமா அவளை லவ் பண்ணலேன்னு சொன்னாலும் அடிப்பே... பண்றேன்னு சொன்னாலும் அடிப்பேன்றே... அப்புறம் என்ன அடிக்க வேண்டியதுதானே... சும்மா பிலிம் காட்டுறே?" என்று ராம்கி எகிறினான்.

"என்னடா நாயே எகிறுறே.... எங்கிட்ட இம்புட்டு நேரம் பேசினதுக்கே உன்னையப் போடணும்..." என்று கத்திய மணி ஓங்கி ஒரு அறைவிட ராம்கியும் திருப்பி அறைந்தான்.

"ஏய்" என்று புவனாவின் சித்தப்பா கத்திக்கொண்டு வருவதற்குள் வெறி கொண்ட மணி இடுப்பில் இருந்த கத்தியை எடுத்து ராம்கியின் வயிற்றை நோக்கி இறக்க விலகிய ராம்கி அதை தடுத்தபோது கத்தி கையில் சொருகியது. அதைப் பிடிங்கி மீண்டும் குத்த முயன்றபோது புவனாவின் சித்தப்பா ஓடிவந்து பிடிக்க நடந்த தள்ளுமுள்ளில் ராம்கி கீழே விழுந்தான்.

"என்ன மாப்ள... பேசும் போது இப்படி பண்ணிட்டே... சும்மா ரெண்டு தட்டு தட்டுவேன்னு விட்டுட்டு வேடிக்கை பார்த்தா கத்தி எடுத்துட்டே... வேண்டாம் மாப்ள... நாமளே நம்ம பொண்ணை பற்றி ஊர் பேச வைக்க கூடாது... இதுக்குத்தான் வைரவன் சொன்னான்... நான் கேக்கலை... அவனுக்குத் தெரிஞ்சா என்னாகும்... வா போயிடலாம்... தம்பி.... எந்திரிச்சுப் போயிடு... இங்க நடந்ததை யார்க்கிட்டயும் சொல்லாதே... போகும் போது எதாவது டாக்டர்கிட்ட காட்டிக்கிட்டுப் போ... இந்தா ஐநூறு ரூபாய் என்று பணத்தை அவன் மீது வீச...

அப்போது ராம்கியைத் தேடி எல்லாப் பக்கமும் அலைந்து திரிந்து தூரத்தில் வந்து கொண்டிருந்த நண்பர்கள் ராம்கி விழுந்து கிடப்பதையும் மணியும் மற்றொருவரும் நிற்பதையும் பார்த்து கத்தியபடி ஓடிவர....

"ஏய் மாப்ள... என்னடா ஆச்சு.... எவன்டா அவன்... ஆம்பளையா இருந்தா நில்லுடா..." என முன்னால் கத்திக் கொண்டு வந்த அண்ணாத்துரையைப் பார்த்த மணி, "மாமா குயிக்கா வண்டியை எடுங்க... முன்னால வர்றவன் பூபாலன் அண்ணானோட தம்பி... அவனோட பிரண்டா இவன்... வீணாவுல சண்டை வரும்... வாங்க... அப்புறம் இவனைப் பார்த்துக்கலாம் " என்றபடி வண்டியை எடுத்துக் கொண்டு ஓட...

ராம்கி கையில் வழியும் ரத்தத்துடன் எழுந்து நின்று உடம்பில் ஒட்டிய செம்மண் புழுதியை தட்டிக் கொண்டிருக்க...

ஆளாளுக்கு கத்தியபடி அவனைச் சூழ்ந்து கொண்டனர்.

"ஹலோ புவனா இருக்காளா?" 

"நீயாரும்மா... என்ன விஷயம்?"

"ஆண்டி.. நான் மல்லிகா... அவகிட்ட முக்கியமா பேசணும்..."

"என்னன்னு சொல்லும்மா... நாஞ்சொல்லிக்கிறேன்..."

"ஆண்டி அவகிட்டதான் சொல்லணும்... கொஞ்சம் போனைக் கொடுக்கிறீங்களா? ப்ளீஸ்..."

"அப்படி என்ன ரகசியம்?" என்றவள் "இரும்மா... இந்தாக் கொடுக்கிறேன்" என்றாள்.

சிறிது நேரத்தில் "ம்... என்னடி சொல்லு... தலவலின்னு படுத்திருந்தேன்... அப்படி என்ன அவசரம்?"

"ராம்கியை கத்தியால குத்திட்டாங்க..." 

"என்னடி சொல்றே... என்னோட ராமையா? யாரு..." கண்ணீரோடு கேட்க அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்த அம்மா என்னோட ராமில் அதிர....

வீட்டுக்குள் வேகமாக நுழைந்த வைரவன் புவனா கண்ணீரோடு 'யாரு?' என்று கேட்டதைப் பார்த்து எதுவும் புரியாமல் அம்மாவைப் பார்த்தான்.

(புதன்கிழமை தொடரும்)
-'பரிவை' சே.குமார்.