மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வியாழன், 29 செப்டம்பர், 2016

மனசு பேசுகிறது : மாற்றாந்தாய்

Image result for இரண்டாவது மனைவி
முதல் மனைவியின் இறப்புக்குப் பிறகு தனது குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள ஒரு துணை வேண்டும் என்பதற்காக திருமணம் செய்து கொள்ள, அந்த இரண்டாம் தாரம் மூத்தவளின் குழந்தைகளுக்கு மாற்றாந்தாய் ஆகிறாள். அப்படி மாற்றாந்தாயாக வருபவள் தன் கணவனின் குழந்தைகளிடம் எப்படி நடந்து கொள்கிறாள்... அவர்கள் மனதுக்குப் பிடித்தவளாகவா..? அல்லது அவர்கள் வெறுப்பவர்களாகவா..?

இரண்டாம் தாரம் என்பது மனைவி இறந்த பிறகுதானா...? என்ற ஒரு கேள்வியை முன்னிறுத்தினால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். மனைவி இருக்கும் போது அவளுக்கு குழந்தை இல்லை என்று மலடி பட்டம் கட்டி, அவளின் தங்கையோ அல்லது வேறு பெண்ணையோ மணம் முடித்துக் கொள்வதும் உண்டு. அப்படி வேறு பெண்ணைக் கட்டினால்  அதற்கு வாரிசுக்காக அவளைக் கட்டிக் கொண்டேன் என்று சப்பைக்கட்டுக் கட்டுவது... மனைவியின் தங்கையைக் கட்டிக் கொள்வது... இதற்கு எந்த சப்பைக்கட்டும் தேவையில்லை... உங்க மக எங்கூட வாழணுமின்னா இவளைக் கட்டித்தாங்கன்னு கேக்கிற ஆட்களும் உண்டு... சினிமாவில் இது சர்வசாதாரணம். இது போக எங்காவது போன இடத்தில் பார்த்துப் பழகி தன்னோட கூட்டி வந்து குடும்பம் நடத்துபவர்களும் இருக்கிறார்கள்.

இன்றைய சூழலில் பல தார மணத்தை யாரும் ஆதரிப்பதில்லை... அப்படியிருந்தும் மனைவியின் இறப்பின் பின்னே கணவன்... நல்லாக் கவனிங்க கணவனின் இறப்பின் பின்னே மனைவி அல்ல... மனைவியின் இறப்பின் பின்னே கணவன் குழந்தைகளுக்காக என்று தன் இச்சைகளைத் தீர்த்துக் கொள்ளவே இன்னொரு பெண்ணை மணக்கிறான்... குழந்தைகளும் பெற்றுக் கொள்கிறான். என் குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள ஒரு தாய் வேண்டும் என்று சொல்லி கட்டுபவன் பத்தாவது மாதத்தில் அவள் மூலமாக பிள்ளை பெற, மூத்தவளின் குழந்தைகளுக்கு தொடங்குகிறது தலைவலி.

சமீபத்தில் 'ஆல்ப்ஸ் தென்றல்' நிஷா அக்கா, முகநூலில் பகிர்ந்து கொண்ட வீடியோவே இந்தக் கட்டுரை எழுதக் காரணம்... அதில் இலங்கையில் ஒரு மாற்றாந்தாய் சிறுமியை அடித்துத் துவம்சம் செய்வதை மனம் கனக்கப் பார்க்க நேர்ந்தது. இந்தக் கொடுமையை தடுக்க இயலாத நிலையில் ஒருவர் அதை வீடியோவாக எடுத்துப் பகிர்ந்து அது போலீசாருக்குத் தெரிந்து அந்தத் தாயை சிறைப்படுத்தியிருக்கிறார்கள் என்ற விவரமும் அறிய முடிந்தது. எத்தனை கொடுமை பாருங்கள்... ஒரு குழந்தையை பெற்றவளால் எப்படி இன்னொரு குழந்தையை... தாயில்லாத குழந்தையை... கண் மண் தெரியாமல் அடிக்க முடிகிறது. இவர்கள் மாற்றாந்தாயா... கண்டிப்பாக இல்லை... இவர்கள் அரக்கிகள்... பிள்ளை பெற்ற பிசாசுகள்... ஆனால் எல்லா மாற்றாந்தாயும் இப்படியா என்றால் இல்லை என்று அடித்துச் சொல்லலாம்... இரண்டாம் தாரமாக வந்து மூத்தவளின் குழந்தைகளை தன் குழந்தைகளாகப் பார்த்த... பார்க்கின்ற தாய்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

எங்கள் உறவில் கூட அப்படிப்பட்ட நல்ல தாய்களைப் பார்த்திருக்கிறேன். திருமணமாகி வரும்போது கணவனுக்கு ஆண், பெண் என இரண்டு குழந்தைகள்... தன் குழந்தைகளாக பார்த்துப் பார்த்து வளர்த்தாள்... அவளுக்கும் இரண்டு ஆக... இப்ப நாலும் என் குழந்தைகளே என எந்த வேறுபாடும் இல்லாமல்... பாசமாய்... மூத்தவன் செய்யும் சேட்டைகளை எல்லாம் தன்னுள் வாங்கி... அழுது... இவர்களுக்காகவே தன் குடும்பத்து உறவுகளை எல்லாம் ஒதுக்கி மூத்தவளின் குடும்ப உறவுகளோடு பாசமாய் பயணிக்கும் ஒரு தாயைப் பார்த்திருக்கிறேன்.

தான் இரண்டாம் தாரம்தான்... ரொம்ப சின்ன வயதில் தாயை இழந்த குழந்தைகள் இருக்கும் வீட்டிற்குப் போகிறோம் என்று தெரிந்தே வந்து தனக்கு குழந்தை வேண்டாம் என்று சொல்லி மற்றவர்கள் உனக்கென்று ஒரு குழந்தை கண்டிப்பாக வேணும் என்று வற்புறுத்தவே முதல் குழந்தை பிறந்தபோதே கருத்தடை ஆபரேசன் செய்து கொண்டு மூன்று குழந்தைகளையும் வேறுபாடு இல்லாமல் வளர்க்கும் ஒரு இளம் வயது தாயையும் பார்த்திருக்கிறேன்.

அக்கா இறந்த பிறகு அவளின் மூன்று குழந்தைகளுக்கு தாயாக வந்து தானும் ஒரு பிள்ளை பெற்று இன்று வரை தனக்குப் பிறந்தவனை விட மற்ற மூவரின் மீதும் அதிக பாசம் காட்டும் தாயையும்... அம்மா... அம்மா என அவரை அன்போடு அழைக்கும் மூத்தவளின் பிள்ளைகளையும் பார்த்திருக்கிறேன்.

நம் முப்பாட்டங்களின் காலத்தில் இருதார மணம் என்பது சாதாரண விஷயமாகத்தான் இருந்திருக்கிறது. தாத்தாக்களின் காலத்தில் அக்கா, தங்கை இருவரையும் கட்டிக் கொண்டு வருவது என்பது பெரிய விஷயம் அல்ல... தனக்கு பிள்ளை இல்லை என்றாலும் தன் தங்கை பெற்ற பிள்ளைகளை பாராட்டி சீராட்டி வளர்த்து இன்று வரை அவர்கள் இருவரில் யாருடைய பிள்ளை இவர் என்று நம் தலைமுறையை யோசிக்க வைத்த பெண்களையும் பார்த்திருக்கிறேன்.

நிஷா அக்காவின் வீடியோவில் பார்த்தது போல் மூத்தவளின் பிள்ளைகளை துன்புறுத்தும் மாற்றாந்தாய்களையும் பார்க்க நேர்ந்திருக்கிறது. மனைவி இறந்த பின்னர் குழந்தைகளுக்காகவே திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்த ஒருவரை, மூத்த மகளின் திருமணத்திற்குப் பிறகு உனக்கென்று ஒரு வாழ்க்கை வேண்டாமா என்று சுற்றி இருப்பவர்கள் கரைக்க... கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் என்று சொல்வார்களே... மெல்ல மெல்ல மாறி எனக்கும் ஒரு வாழ்க்கை வேண்டுமென மறுமணம் செய்து குழந்தைகளையும் பெற்று... ஏதோ ஒரு சூழலில் இரண்டாம் மனைவியின் மோகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வெழுதி காத்திருந்த மகளை அடித்துக் கொன்றதில் அவருக்கும் பங்குண்டு என்று செய்தி அறிந்த போது இரண்டாம்தாரம் எப்படிப்பட்டவளாய் வாய்த்திருக்கிறாள் என்பதை உணர முடிந்தது.

சினிமாக்களில் இரண்டாம்தாரம் என்றால் ரொம்ப ரொம்ப மோசமாகக் காட்டுவார்கள்... நிஜ வாழ்க்கையில் அப்படியான தாய்மார்கள் இருந்தாலும் மாற்றாந்தாய்களிலும் மனசுக்குள் நிற்கும் தாய்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

எங்க தாத்தாவுக்கு ரெண்டு பெண்டாட்டி ரெண்டு பேரும் ஒண்ணா ஒரே வீட்டுல வம்பு சண்டை இல்லாமல் வாழ்ந்தார்கள் என்றும் எங்க பாட்டனுக்கு மூணு பொண்டாட்டி பேராண்டி.. மூணு பேருக்கும் சேத்து பதினாறு புள்ளைங்க... எங்க தாத்தா மூணாந்தாரத்துப் புள்ள... ஆனா எல்லாரும் ஒண்ணாத்தான் வாழ்ந்திருக்காக... என்று உறவுக்காரர் சொல்ல, இன்றைக்கு அப்படி மூணு பொண்டாட்டிகள் ஒன்றாக வாழ முடியுமா என்று தோன்றிய போதே... மூன்று பொண்டாட்டிகளை வைத்து வாழ்க்கையை ஒட்ட முடியுமா என்ற கேள்வியும் தோன்றியது. சிலர் ஓட்டிக்கொண்டுதானே இருக்கிறார்கள்... :)

வரலாறுகளை புதினமாக்கும் போது கதை ஆசிரியர்கள் இரண்டு தார மூன்று தார வாழ்க்கைகள் சர்வசாதாரணமாய் இருந்தது என்றுதான் சொல்லியிருக்கிறார்கள். இப்போது வாசித்துக் கொண்டிருக்கும் உடையாரில் ராஜராஜனுக்கு நிறைய மனைவிகள் என்கிறார். இராஜேந்திரனுக்கு ரெண்டு மனைவி இருந்தாலும் பரவை என்ற தேவரடியாள் பெண்ணுடன் கூட்டு இருக்கு என்று சொல்கிறார். பிள்ளைப் பேறுக்காக தாய் வீடு சென்றிருகும் மனைவி இருக்க அருண்மொழிப் பட்டன் என்ற உபசேனாதிபதியை இராஜராஜி (சில இடங்களில் இராஜேஸ்வரி) என்ற பெண் திருமணம் செய்ய விரும்புவதாகவும் உன்னை நினைக்கும் ஒரு பெண்ணை திருமணம் செய்துகொள்... உன் சிறப்பான வாழ்க்கைக்கு அது உதவும் என்று கருவூர்த் தேவர் என்ற ராஜரிஷி சொல்வதாய் சொல்லியிருக்கிறார். அப்படியென்றால் அந்த காலத்தில் பலதார மணம் எல்லாராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. முற்றும் துறந்த முனிகள் கூட நாலைந்து கல்யாணம் பண்ணிக்கொள் என அட்வைஸ் பண்ணுகிறார்கள். இன்று முனிகளே நிறைய வைத்துக் கொள்கிறார்கள்... ஆட்டம் பாட்டம் போட்டு மாட்டிக் கொள்வது தனிக்கதை. 

சமீபத்தில் நம்ம கில்லர்ஜி அண்ணா எழுதிய ஒரு கதையின் தொடர்ச்சியாக அன்பின் ஐயா துரை. செல்வராஜூ அவர்கள் தனது தஞ்சையம்பதியில் ஒரு கதை எழுதியிருந்தார். அருமை... முடிவுதான் அதில் மிக முக்கியமானது... தங்களை வீட்டை விட்டு விரட்டிய பிள்ளை வளர்ப்புப் பிள்ளை என்பது அவனுக்குத் தெரியாது என்பதாய் முடித்திருப்பார்.  மாற்றாந்தாய்களை பிள்ளைகளை துன்புறுத்துவதைவிட கொடியது பெற்ற பிள்ளை பெற்றவர்களை கவனிக்காமல் முதியோர் இல்லத்தில் சேர்ப்பது... வீட்டை விட்டு அடித்து விரட்டுவது போன்றவை.

இப்படித்தான் ஒரு புள்ளியில் ஆரம்பித்து... வேறு வேறு புள்ளிகளுக்கு நகர்ந்து விடுகிறது எழுத்து... பேச ஆரம்பித்தது மாற்றாந்தாய் குறித்து என்றாலும் எங்கெங்கோ பயணப்பட்டு விட்டேன் பாருங்கள்.... மாற்றாந்தாய் என்பவள் மற்றொரு தாயாக இருந்தால் எவ்வளவு சந்தோஷம்.
-'பரிவை' சே.குமார்.

திங்கள், 26 செப்டம்பர், 2016

சினிமா : தொடரி

து ரொம்ப நீளமான பகிர்வு... தொடரி... அதாங்க இரயில்... நம்ம கிராமங்கள்ல சொல்ற மாதிரி ரெயிலு... இன்னும் புரியிற மாதிரி சொன்னா புகைவண்டி... அது நீளமாத்தானே இருக்கும்... அதைப் பற்றி பேசினா நீண்டுக்கிட்டுத்தான் போகும்... பொறுமையா வாசிங்க...


Image result for தொடரி விமர்சனம்

பார்த்ததும் காதல்...

கிறுக்குத்தனமான மேனேஜர்... 

லூசுத்தனமாக பேசக்கூடிய நண்பர்கள்...

விரைந்து செல்லும் இரயிலின் மேல் டான்ஸ் ஆடும் நாயகன்...

லூசுப் பெண்ணான நாயகி...

இப்படியெல்லாம் இருந்தால் அது அழகான தமிழ்ப்படம்தான் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்காதுன்னு நினைக்கிறேன்... அப்படி ஒரு படம்தான் 'தொடரி'.

'காவிரியின் தண்ணீர் கேட்க நமக்கென்ன உரிமை இருக்கிறது' என்று மாமனார் மேல் உள்ள பாசத்தால் கேட்ட... நாளைய தமிழக முதல்வர் என்று நம் ரசிக சிகாமணிகளால் சொல்லப்படுகின்ற... பயிருக்கு நீர் இல்லை என்று போராடிய போது எட்டிப் பார்க்காமல் பத்தடி, பனிரெண்டு அடி கட் அவுட்டுக்கு ஆவின் பால் அபிஷேகம் செய்து கொண்டிருக்கும் இளைஞர் படையின் தலைவனான... தனுஷ் நடிப்பில் பிரபு சாலமன் இயக்கத்தில் வந்திருக்கும் படம்தான் 'தொடரி'. 

லூசுப் பெண் கதாபாத்திரம் என்றால் நமக்கு நினைவுக்கு வருவது ஜெனிலியா, அந்தப் பெண் இல்லாத குறையை தனது முதல் படத்தில் சிறிதளவு போக்கி, இதில் முழுவதும் போக்கி... பாட்டுப் பாடுகிறேன் என்று தனுஷை மட்டுமல்லாது பார்க்கும் நம்மையும் வதைத்து... இரயில் கம்பியில் தஞ்சம் புகுந்து கிடக்கும் 'உன் மேல ஒரு கண்ணுதான்' கீர்த்தி சுரேஷ்... 

நகைச்சுவை என்று சொல்லி சொற்ப இடங்களில் சிரிக்க வைத்து நம்மை கொலையாய் கொல்லும் தம்பி இராமையா, கருணாகரன், 'தர்புகா' சிவா கூட்டணி... அரைத்த மாவையே அரைப்பது... சவச் சவ...

மத்திய அமைச்சர் ரங்கராஜன்... அவரது பி.ஏ., அவரைப் பாதுகாக்க இரண்டு மெய்க்காப்பாளர்கள்... டெல்லியில் இருந்து சென்னைக்கு இன்னைக்கு எந்த அமைச்சரய்யா இரயிலில் வர்றான்... அமைச்சர் பொண்டாட்டி... அவ்வளவு ஏன் அமைச்சரோட வேலைக்காரன் கூட விமானத்துலதான் வர்றான்னு எல்லாம் யோசிக்கக் கூடாது... அமைச்சர் இரயில் வர்றார்,,, அம்புட்டுத்தான்... எதுக்கு வர்றார்... அவர் சாண எரிவாயு அமைச்சர்... இப்பத்தான் விவசாயம் போச்சு... ஏறு தழுதல் மட்டுமில்ல... எருதுகளும் பசுக்களுமே குறைந்து போச்சு... சாணத்துல எரிவாயு எடுக்க சாணமே இல்லையேன்னு எல்லாம் ரொம்ப டீப்பா சிந்திக்கக் கூடாது... சாண எரிவாயு அமைச்சர் அம்மாவைப் பாக்க வரலாம்... கூட்டணி பத்திப் பேச அவர் சார்ந்த மத்திய அரசு அனுப்பியிருக்கலாம்... இல்ல ஐயாவைப் பார்த்து எந்த ஜியில எவ்வளவு கிடைக்கும்ன்னு பேச வரலாம்... அதுவும் இல்லேன்னா வாக்களித்து ஜெயிக்க வச்ச மக்களை... எதுக்கு இம்புட்டு யோசனை... படத்துக அந்த இரயில் மத்திய மந்திரி வர்றாருய்யா... அமைச்சரா 'டத்தோ' ராதாரவி.

ஸ்ரீஜான்னு ஒரு நடிகை... மலையாளி ஆனா தமிழ் நடிகை... இப்ப தமிழ்ல சேச்சிங்கதானே சேர் போட்டு உட்காந்திருக்காங்க... சாய் பல்லவின்னு ஒரு தமிழச்சி இங்கிட்டு வரவே மாட்டேன்னு மலையாளத்துல பாரா ஒலிம்பிக்ல தங்கம் வாங்கின மாரியப்பன் மாதிரி உயரத்துல நிக்கிதுன்னு வேணுமின்னா நாம பெருமைப் பட்டுக்கலாம்... சரி விடுங்க... மலர் டீச்சரைப் பற்றி பேசினா தெலுங்கில் நம்ம ஸ்ருதி டீச்சரோட நடிப்பு கண் முன்னால வந்து பெப்பே காட்டுது. எங்க ஆரம்பிச்சோம்... ஆங்... மலையாள நடிகை... அது எதுவும் பேசாம  எப்பவாச்சும் நாயை கொஞ்சுது... மத்த நேரமெல்லாம் அந்த நாயை கீர்த்தி சுரேஷ் கொஞ்சுது.. கீர்த்தி சுரேஷை நம்ம தனுஷ் கொஞ்சுது... நமக்கு கடுப்பு மிஞ்சுது... என்ன இது இரயில் ஒரே டிராக்ல போன நாம பல டிராக் மாறிக்கிட்டே இருக்கோமே.... அந்த நடிகைக்கு ஒரு அம்மா.... திண்ணிப் பண்டாரம்... கேன்டீன்ல செய்யிற எல்லாத்தையும் இது ஒரு ஆளே தின்னுக்கிட்டு வருது... தனுஷ் வரப்போக இருக்கார்... அட பதார்த்தங்கள் கொண்டு வந்து கொடுக்கவும் போகவுமா இருக்காரு... ஏன்னா பார்த்ததும் காதல் கொண்ட பாவை அங்கதானே இருக்கு...

மொத்த இரயிலுக்கும் நம்ம இமான் அண்ணாச்சி மட்டுமே டிடிஆர்... அதாங்க டிக்கெட் பரிசோதகர்... வேற ஒரு ஆளைக்கூட கண்ணுல காணோம்... ஒருவேளை சம்பளப் பிரச்சினையில அவங்க சார்ந்த சங்கம் வேலை நிறுத்தம் செஞ்சிருச்சோ என்னவோ... நம்ம இமான் அண்ணாச்சியும் அப்ப அப்ப நகைச்சுவையை அள்ளித் தெரிக்கிறார்... 700 பேர் இருக்காங்கன்னு சொல்லி 70 பேரைக்கூட கண்ணுல காட்டாத இரயிலில் அவனவனுக்கு ஆயிரம் வேலை சிரிக்கத்தான் ஆளில்லை... நம்மளையும் சேர்த்துத்தான்... படம் பேண்ட்ரி... நடிகை...மந்திரியின்னே சுத்துது... பயணிகள் கவனத்திற்கு அப்படின்னு ஆரம்பத்துல சொல்றாங்க... ஆனால் பயணிகள் கவனிக்கப்படலை.

மெல்ல நகர்ற இரயிலில் மனைவியையோ, குழந்தைகளையோ கை பிடித்து மேல ஏற்றவே சிரமப்பட வேண்டியிருக்கும்... ஆனா வேகமாகப் பயணிக்கிற இரயிலின் மீது நாயகனும் நாயகியும் அநாயசமாக ஏறிப் போறாங்க... இறங்கி வர்றாங்க... எப்படின்னு எல்லாம் யோசிக்கக் கூடாது... இரயில் தறிகெட்டு ஓடும் போது மொபைல்லயும் கணிப்பொறியிலயும் விடாம டிவியில வர்ற நேர்படப்பேசு பாக்குறாங்க... கண்ட்ரோல் ரூம்ல பேசுறதெல்லாம் கேக்குறாங்க... டவர் கிடைக்குமா... சார்ஜ் நிக்குமான்னு எல்லாம் யோசிக்காம தொடரியை தொடர்ந்து பார்த்தோமா இல்லையா... அப்படித்தான் இதையும் எடுத்துக்கணும்..  

என்னப்பா நீ இப்படிப் பேசிக்கிட்டுப் போறே... தொடரி என்னன்னு சொல்லாம நடிச்சவங்களைத் தொடர்றே.... கொஞ்சம் தூக்குறே... ரொம்ப வாறுறே... அப்படின்னு நீங்க யோசிக்கலாம்... இடைவேளை வரை இப்படித்தான்... நகைச்சுவையின்னு கொன்னும்... காதல் பண்றேன்னு கடுப்படித்தும்... நடிகையை காட்டியும் மத்திய அமைச்சரைக் காட்டியும்... ஒன்றுமில்லாமல் பயணிக்கிறது இரயில்... அதாங்க 'தொடரி'.

இடைவேளைக்கு பின்னர் கட்டுப்பாட்டை இழக்கும் இரயில் 120 கிமி வேகத்தில் பயணிக்க, பிரச்சினையில் சிக்கி இரயிலில் இருந்து வெளியாகி, தன்னைக் கொல்ல வரும் மந்திரியின் மெய்க்காப்பாளனிடமிருந்து தப்பிக்க இரயிலில் ஏறி எஞ்சின் பெட்டியின் வெளியே கம்பியைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்திருக்கும் கீர்த்தியை தீவிரவாதிகளின் தலைவி ஆக்கி... இரயில் இருப்பவர்களிடம் கொள்ளை அடித்துக் கொண்டு மேல் தளத்தில் வந்து அமரும் ஆறு பேரை தீவிரவாதிகள் ஆக்கி... மத்திய அமைச்சரை கடத்துகிறார்கள் என தொலைகாட்சிகள் பரபரப்பாக்க... தொடரி... அதாங்க இரயில் கொஞ்சம் கொஞ்சமாக வேகம் எடுக்குது... 

ஆங்கிலப் படத்துக்கு நிகராக ஒரு பாலத்தின் மீது பயணிக்கும் காட்சி... இறுதிக் காட்சி என்று நாம் மார்தட்டிக் கொள்ளலாம்... அவ்வளவு சூப்பர் என்றாலும் தொடரிக்கு மூலமான 'அன்ஸ்டாப்பபுள்' போன்ற ஒரு தடக்... தடக்கை கொடுக்கத் தவறி விட்டதால் நமக்குள் ஏறிய பரபரப்பு... காவிரி பிரச்சினையில் தமிழகம் போல் சப்பென்று அடங்கிவிட்டது. இருந்தாலும் முற்பாதிக்கு பிற்பாதியில் 'தொடரி' வேகமாத்தான் போகுது. என்ன ரொம்ப நேரத்துக்கு தனுஷை அறைக்குள் வைத்துப் பூட்டிவிட்டு... கீர்த்தியை கம்பிக்குள் உட்கார வைத்து விட்டு கதையை தொலைக்காட்சி... இரயில்வே கண்ட்ரோல் அறை... போலீஸ் என பயணிக்க வைப்பதால் என்னய்யா தனுஷ்... இந்நேரம் கதவை உடைச்சிக்கிட்டு வந்து அந்தபுள்ளய காப்பாத்தியிருக்க வேணாமான்னு கேக்கத் தோணுது... ஆனா கேக்கலை.... ஏன்னா இவ்வளவு வேகமா எங்கும் நிக்காம ஓடுற ரயிலோட டிரைவர் (டிரைவர்தானே... இல்ல வேற எதுனாச்சும் பேரு இருக்கா...) என்ன ஆனார்ன்னு எவனும் கேக்கலையே... (கடைசியிலதான் கேக்குறானுங்க) ரயில் அம்புட்டு வேகமா தறிகெட்டு ஓடினாலும் பேண்டரியில வாங்கித் தின்னுக்கிட்டு ஹாயாத்தானே வர்றானுங்க... கொஞ்சம் கூட பயமில்லையே ராஸ்கல்ஸ்...

தனுஷ் வெளியானதும் ஆஹா... இனித்தானே ஆரம்பம்... நெருப்புக்கு மருமகன்டா... அழகிய தமிழ் மகன்டா... வேட்டி கட்டி விழாக்களுக்குப் போகும் தமிழன்டா... தண்ணி மட்டும் கேக்கக் கூடாதுன்னு பேசும் மாமனாருக்கு உகந்த மறத் தமிழன்டான்னு எழுந்து உட்க்கார்ந்தா... மேல ஏறிப் போயி கொள்ளையர்களுடன் சண்டை போட்டு.... லூசுப் பெண்ணோட பேசி அவளுக்கு காதலையும் சூழலையும் புரிய வச்சி... பெட்டி நெருப்புப் பிடிச்சி எரிய பாட்டுப்பாடி... அப்படியே சின்ன ஆட்டமும் போட்டு.... கட்டுப்பாட்டுறை அறையில் இருந்து ஒருவிதமாக தொடர்பில் வர... அவர்கள் சொல்படி... எஞ்சினுக்கும் அவர் இருக்கும் முதல் பெட்டிக்கும் இடையில் ஹெலிகாப்டர் மூலமாக இறங்கி... அவற்றை பிரித்து விட்டு... காதலி இருக்கும் பக்கம் தாவி... முடிஞ்சிருதே... தனுஷ் வீரதீரமெல்லாம் காட்டாமல் முடிஞ்சிருதே... நல்லவேளை 'குருவி'யாப் பறக்கலை... தனக்கு எது வருமோ அதை மட்டும் செஞ்சிருக்காரு...

தனுஷ்... தேசிய விருது பெற்ற நாயகன்... தனுஷோட நடிப்பைப் பற்றி சொல்லவே வேண்டியதில்லை... எந்தக் கதாபாத்திரமோ... அதுவாகவே மாறும் நடிகன்... ரொம்ப ஓவர் பில்டப்பெல்லாம் இல்லாமல்... தனது வழக்கமான ஏற்ற இறக்க... கத்திப் பேசும் பாணியில் கலக்கியிருக்கிறார்... தனுஷ் மட்டுமே தொடரிக்கு எரிபொருள் என்று நினைத்து விட்டார்கள் போலும்... அந்தத் தவறுதான் படத்தின் வேகத்துக்கு தடை போட்டுவிட்டது. தம்பி இராமையாவிடம் பேசும் சின்னச் சின்ன வார்த்தைக் கிண்டல்கள்... கீர்த்தியிடம் இரயில் மீது நின்று கத்திப் பேசும் போதும்... கண்ட்ரோல் அறையில் அதிகாரிகளுடன் பேசும் போதும் இடையிடையே வெளிப்படுத்தும் கிண்டல்கள் என மனுசன் எப்பவும் போல் இதிலும்...

கீர்த்தி சுரேஷ்... மலையாளம் பேசுது சரி... எதுக்குய்யா ஒண்ணுமே தெரியாத புள்ள மாதிரி மலையாளத்தைக் கொன்னு துப்புது... லூசு மாதிரி நடித்தால் அப்புறம் அதற்கென முத்திரை குத்தி விடுவார்கள் என்பதை உணர்ந்தால் நல்லது... ஆனா பத்திரிக்கைகள் அந்தப்புள்ள நல்லா நடிச்சிருக்குன்னு எழுதியிருக்கு... சில இணைய விமர்சனமும் அப்படியே... ஆமா அது நடிச்சிருக்கா... கம்பியைப் பிடிச்சிக்கு லூசு மாதிரி பேசினா நடிப்புன்னா... சரி விடுங்க... பாவாடை... சட்டையில ஒரு கேரளப் பிகரு வந்தா 'ஜொள்'லத்தானே செய்வோம்.

ராதாரவி... அளவான நடிப்பு.... அரசியல்வாதிகளை நல்லாத் தாக்குறாரு... அவருக்கு சொல்லியா கொடுக்கணும்... சின்ன கோடு போட்டா ரோடு போடமாட்டாரா என்ன... ஆனா ஒரு மந்திரி... நடிகை ஒருத்தி அதே இரயிலில் பயணிக்கும் போது சந்திக்கவே இல்லைய்யா... அது ஏன்..? கேரளக்காரின்னதும் சசிகலா புஷ்பா,,, அடச்சீ.... திருச்சி சிவா சடை போட்டது கிராஸாகுது பாருங்க... இது தமிழ்நாட்டு சின்னம்மா ஆகப் போறதை இங்க பேசி நாளைக்கி நாலு பேரு கட்டைய தூக்குவானுங்களே... நடிகை மலையாளியின்னதும் சரிதா நாயர் மாதிரி சந்தி சிரிக்க வச்சிரும்ன்னு பயந்துட்டாரு போல... கடைசி வரை தன்னொட கூபேயை விட்டு வெளிய வரலை.

ரயிலின் வேகத்தின் ஊடே... பட்டிமன்ற ராசா, ஞானசம்பந்தன் என நாலு பேரை வைத்து தொலைக்காட்சியில் படவா கோபி நடத்தும் நேர்படப்பேசு.... இரயிலின் வேகத்துக்கு(120கீமி?) அதை ஒட்டியே பயணித்து லைவ்வாக செய்தி கொடுக்கும் தொலைக்காட்சி ஊழியர்கள் என செம தாக்கு தாக்கியிருக்கிறார்கள்... நேர்படப் பேசை சும்மா கிழிகிழியின்னு கிழிச்சதுக்காகவே... அந்த சூப்பர் வசனங்களுக்காகவே இயக்குநரை வாழ்த்தலாம்... ஆனா நீங்க என்னதான் கிழிச்சாலும் நாங்க அப்படித்தான்னு ராம்குமார் தற்கொலை(?) பற்றிப் பேச தேசியக் கொடியை எரித்த வீரன் திலீபனைக் கொண்டு வந்து உக்கார வச்சி பேசத்தானே செய்யிறானுங்க.... இவனுக திருந்த மாட்டானுங்க... ஆனா நம்ம மக்கள் கொடியை எரித்தால் கூப்பிட்டு பன்னும் டீயும் பக்கோடாவும் கொடுத்து பேச வைப்பானுங்கன்னு கண்டிப்பா கிளம்புவானுங்க... எரிக்க... இவனுகளை இல்லை... கொடியை... நம் தேசியக் கொடியை...

படத்தின் பின்னணி இசையும் பாட்டும் சூப்பர்... அது எப்படிப்பட்ட சூழலில் பாடினாலும் கேட்க இனிமைதான்... ஒளிப்பதிவு கலக்கல்... இரயில் கணிப்பொறி வரைகலை... அதாங்க கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் ஹி...ஹி... புரியலையா ரொம்பவே பல்லைக் காட்டுதுங்க... மேலே நிற்கும் தனுஷோ... கம்பியை பிடித்து அமர்ந்திருக்கும் கீர்த்தியோ.... 120 கீமி வேகத்தில் போயும் காற்றில் ஆடலைங்க... ஆடிக் காத்துல அம்மியே பறக்கும்ன்னு ஊர்ப்பக்கம் சொல்வாங்க... அப்படியிருக்க ஓல்லிக்குச்சி உடம்புக்காரன் தனுஷ் 120கீமி வேகத்தில் இரயில் விரைய... பறந்து... பறந்தே போயிருக்கணுமா இல்லையா... இல்லையே... காத்தே இல்லையே... தலை கலையாமல் பாட்டு.. ஆட்டம்... சண்டை... ஆமா காத்து எங்க போச்சுன்னு கேக்கக்கூடாது.... அடிக்கலை அம்புட்டுத்தான்... கதிரறுத்து நெல் தூற்றும் போது காத்து வரலைன்னா விசிலடிச்சி வர வைப்போம்... இங்கே விசிலடிச்சி... இல்லே ஒரு பெரிய மின்விசிறியை வச்சிருக்கலாம்... சரி... இனி பேசி என்னாகப் போகுது...

நாயகன் நாயகி எஞ்சின் பெட்டியில் போகும் போது 'என்ன ஜாக்... பெட்டியை பிரிச்சிவிட்டா எஞ்சின் நிக்கும்ன்னு சொன்னாரே... நிக்கலை ஏதாச்சும் டெக்னிக்கல் எரரா...?' என்று காவல் அதிகாரி கேட்க, 'இது டெக்னிக்கல் எர்ரர் இல்ல... ஹீமன் எர்ரர்' என்று சின்னி(ஜாக்) சொல்வார். ஏன்யா தனுஷை இரண்டு பெட்டிக்கும் இடையில் இறக்கிவிடப் பறந்த ஹெலிகாப்டர் அங்கினதான் பறக்குது.... அதில் இருந்து அந்த கயிறு ஏணியைப் போட்டா ஹீரோ நாயகியை காப்பாற்றி, ஏணியில் நின்று ஒரு பாட்டுப் பாடி இருப்பாரே... சுபமா முடிஞ்சிருக்குமே ஏன் செய்யலைன்னு கேட்கலாம்ன்னு நினைச்சா... அந்த கடைசி நிமிட பரபரப்பு கிட்டாம போயிருமேன்னு விட்டுட்டாரு போலன்னு மனசைத் தேத்திக்கிட்டு கேட்காமலேயே நிம்மதியா 'தொடரி'யில இருந்து இறங்கி நடந்தாச்சு.

நிறைய லாஜிக் சொதப்பல்கள்... மீறல்கள்.. அதெல்லாம் இருந்தாத்தானேய்யா தமிழ்ப்படம்... இதைவிட இன்னும் கூடுதலாய்.... ஏதேனும் இருந்தால்... அது தெலுங்குப் படமய்யா...  தொடரி... நல்ல தமிழில் பெயர் வைத்த தமிழ் படம்... தனுஷ் படம்... பிரபு சாலமன் படம்... இரண்டாம் பாதியில் 120 கிமி வேகத்தில் பயணிக்கவில்லை என்றாலும்... குறைகள் நிறைவாய் இருந்தாலும்.... பாலத்தின் மீது இரயில் போகும் போது அதிர்வில் பாலம் உடைவது... இறுதிக் காட்சியில் சென்ட்ரல் ஸ்டேசனுக்குள் இரயில் எஞ்சின் எல்லாவற்றையும் அடித்து நொறுக்கிச் செல்வது என கலக்கலாய் பயணித்திருக்கிறது... இரண்டாம் பாதி படத்தை வெற்றி பாதையில் பயணிக்க வைத்திருக்கிறது.

தொடரி.... ரொம்ப எதிர்பார்க்காமல் சென்றால் வைகையில் பயணித்த அனுபவத்தைப் பெறலாம். மைனா, கும்கி அளவுக்கு இல்லை என்றாலும் ஒரு தடவை பார்க்கலாம்தானுங்க...

இது போன்ற படங்களில் நடித்தாலும் காக்கா முட்டை, விசாரணை என வித்தியாசமான கதைக்களங்களில் பயணிக்கும் இயக்குநர்களுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கும் தயாரிப்பாளராய் தனுஷ் இருப்பதில் சந்தோஷமே. தனுஷ் மற்றும் வெற்றிமாறன் கூட்டணியின் விசாரணை... ஆஸ்கார் ரேசில் இருக்கிறது... வெற்றி பெற வாழ்த்துவோம்.
-'பரிவை' சே.குமார்.

ஞாயிறு, 25 செப்டம்பர், 2016

மனசு பேசுகிறது : என்னடா வாழ்க்கை இது

சில நேரங்களில் இப்படித்தான் தோன்றுகிறது... என்னத்தை சாதித்து விட்டோம் என்ற கேள்வி முன்னே எழுந்து நின்று திரும்பத் திரும்ப மனசுக்குள் அதைக் கேட்க வைக்கிறது.  இரண்டு நாள் விடுமுறை எப்படிக் கழிகிறது...? வெளியில் இறங்கினால் வெயிலப்பா... என்ற மூன்று வார்த்தைகளைச் சுமந்து அறைக்குள்ளேயே முடக்கிப் போடுகிறது... எத்தனை நேரம் வாசிப்பது...?  எதைத்தான் எழுதுவது...? நேரம் விழுங்கி முகநூலில் வீழ்ந்து கிடப்பதால் என்ன லாபம் என்றெல்லாம் யோசிக்கத் தோன்றுகிறது... ஆனால் யோசனை யோசனையாய் மட்டுமே அதே இடத்தில் நின்று சிரிக்கும் போது வாழ்க்கை அதன் பாதையில் இங்கு வேகமாய் நகர்ந்து கொண்டே இருக்கிறது.

Image result for கேள்விக்குறி

ஒரு அறைக்குள் வேறு வேறு ஊரில் இருந்து வந்து இங்கு வேலை பார்க்கும் நாலைந்து நண்பர்கள் தங்கியிருப்பதில் அரசியலும் ஆதங்கப் பேச்சுக்களும் ஓடுமே தவிர, உறவுகள் குறித்த... நம் வாழ்க்கை குறித்தான... பேச்சுக்களுக்கு அதிக வேலை இல்லை இங்கு என்பதே உண்மை... அதிகாலையில் எழுந்து குளித்து அலுவலகம்... வேலை முடிந்தால் அறை...  ஊருக்குப் போன்... வாசிப்பு... முடிந்தால் எழுத்து... இல்லையேல் ஏதேனும் சினிமா... பதினோரு மணிக்கு மேல் தூக்கம்... இப்படியான ஒரு வாழ்க்கைதான் இங்கு இருக்கும் எல்லாருக்குமே வேலை நாட்கள்... விடுமுறை தினம் என்பது காலை பத்து மணி வரை உறங்கி... எழுந்து குளித்தோ குளிக்காமலோ ஏதோ தின்று... பிரியாணி சமைத்து சாப்பிட்டு மீண்டும் உறங்கி... ஊருக்குப் பேசி... இரவு சினிமா பார்த்து... ஒரு மணி வரைக்கும் உறங்காது இணையத்தில் நீந்தி இப்படியாகத்தான் கழியும். வெளிநாட்டு வாழ்க்கை பார்ப்பதற்குத்தான் பளபளப்பாகத் தெரியும்... அதை அனுபவிப்பவனுக்கு மட்டுமே அதன் வலி தெரியும்.

அலுவலகத்தில் இருப்பவனின் நிலை கூட பரவாயில்லை... கட்டிட வேலை பார்ப்பவன்... ரொம்ப பரிதாபத்துக்கு உரியவன் அவன்... அதிகாலையில் கிளப்பிக் கொண்டு வந்துவிடுவார்கள்... வெயிலில் உழன்று ... ஏதோ சாப்பிட்டு... மாலை தங்கியிருக்கும் கேம்ப் போய்... பாத்ரூம்க்கு வரிசையில் நின்று குளித்து... டிரஸ் துவைத்து சாப்பிட்டுட்டுப் படுத்து.... எழுதும் போதே வலிக்கிறது... பலரின் நிலை கேட்கும் போது இந்த வலி அதிகமாகத்தான் ஆகிறது... கிளினிங் கம்பெனியில் பணி எடுக்கும் மனிதர்களின் நிலை யோசித்தாலே... எதற்காக அற்ப சம்பளத்துக்கு இங்கு வருகிறார்கள் என்றே தோன்றும்... ஊருக்குப் போகும் போது தங்கச் செயினும்... மோதிரமும்... கையிலே ஆண்ட்ராய்டு போனுமாய் எவனிடமோ வாங்கிய கடனில் பகட்டாய் போய் இறங்குவதால் அவனிடம் நிறைய இருக்குன்னு நாம் நினைக்கிறோம்... ஆனால் அவன் எல்லாம் இழந்து அது வெளியில் தெரியாமல் இருக்கவே தன்னை அப்படி  அலங்கரித்துக் கொள்கிறான் என்பதை நாம் அறிவதில்லை.

இதைத்தான் ரொம்பத் தடவை எழுதிட்டியே இப்ப ஏன் மறுபடியும் என்று நீங்கள் நினைக்கலாம்... பல வலிகளைச் சொல்ல இதைச் சொல்லிச் சென்றால் நல்லது என்பதால் நினைவில் கொண்டு வந்தேன்...யூரிக் ஆசிட் வலி வந்து கால் நடக்க முடியாத நிலையில் பேருந்து ஏறிச் சென்ற அந்தத் தினத்தில் உறவுகள் இருந்தும் நம் நிலை இப்படியிருக்கே என்று நினைத்து கண்ணீர் வந்தபோதுதான் நம் குடும்பம் நம்மோட இல்லாத நிலை குறித்தான வருத்தம் இன்னும் அதிகமாகி போட்டு வாட்டியது. முடியாமல் கிடப்பவனை என்ன முடியலையா... ஆபீஸ் போகலையா...? என்று கடந்து செல்லும் அறை நண்பர்கள் மத்தியில் 'என்னங்க பண்ணுது... முடியலையா...? கசாயம் வச்சித் தரவா...' என்றும் 'என்னப்பா... உடம்பெல்லாம் கொதிக்குது... கஞ்சி வச்சித்தாறேன்' என்றும் சொல்லும் உறவுகள் ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருப்பதன் வலி அப்போதுதான் அதிகமாகும்.

வெளிநாட்டில் இருக்கும் எல்லாருக்குமே ஊருக்குச் செல்லும் அந்த ஒரு மாதமே மிகப்பெரிய சந்தோஷமான நாட்கள்... முப்பது நாள் என்பது அவனுக்கு முன்னூற்றி அறுபத்தஞ்சு நாள் வாழ்க்கை... இது புரியாத உறவுகள் ஊரில் நடந்து கொள்ளும் விதம்... வலியைக் கொடுத்தாலும் சந்தோஷிக்கவே வைக்கும். அப்படியான அந்த சந்தோஷ நாட்கள் கூட பலருக்கு வலியைக் கொடுக்கும் நாளாக அமைவதுதான் வேதனை. அப்படியான மிகப்பெரிய துக்கத்தை சமீபத்திய நிகழ்வு ஒன்று கொடுத்தது. உண்மையிலேயே மனசு ரொம்ப வருந்திய துயரச் சம்பவம் இது.

எங்கள் அறைக்கு அருகில் இருக்கும் அறை நண்பர், வயதில் என்னைவிடச் சிறியவர்தான்... ரொம்ப ஜாலியான நண்பர்.... சமையல் வேலை தெரியாது என்றாலும் எடுபிடி வேலைகள் எல்லாம் செய்து கொடுத்துக் கொண்டு அவரின் உறவுகளுடன் அரட்டை அடித்தபடி நாம் நின்றால் என்னண்ணே நான் சொல்றது என்று சிரித்துப் பேசும் அவர் பக்ரீத் கொண்டாட சந்தோஷமாக... மிகச் சந்தோஷமாக விடுமுறையில் சென்றார். இரண்டு நாட்களுக்கு முன்னர் தனது சொந்தக்கார குடும்பத்துடன் தன் மனைவி குழந்தையுடன் ஊட்டி சென்றிருக்கிறார். சந்தோஷ அனுபவங்களைச் சுமந்து அங்கிருந்து இறங்கும் போது....

ஒரு கொண்டை ஊசி வளைவில் பிரேக் பிடிக்காமல் போன கார்... விழுந்ததோ 150 அடி பள்ளத்தில்... கொஞ்சம் வேகமாக விழுந்திருந்தால் 500, 600 அடி பள்ளத்துக்குள் போயிருக்குமாம்... ஏழு மணிக்கு விழுந்த காரை யாரும் பார்க்கவில்லை என்கிறார்கள். பதினோரு மணிக்கு ஒரு லாரிக்காரர் பார்த்து போலீசுக்குச் சொல்லியிருக்கிறார். போலீஸ் வந்து அவர்களைப் பார்த்து தூக்கியபோது இங்கிருந்து சென்ற நண்பரின் இளம் மனைவியின் உயிர் போய்விட்டது. நண்பருக்கு தலையில் அடி... காரை ஓட்டிய டிரைவருக்கு ஒரு கால் தொடையோடு போய் விட்டது... இன்னொரு குடும்பத்துப் பெண்ணுக்கு இடுப்பில் அடி... சுத்தமாக நொறுங்கி விட்டது... இருவரின் குழந்தைகளையும் எப்படியோ அடிபடாமல் காப்பாற்றியிருக்கிறார்கள் என்பதே இந்த இழப்பில் கிடைத்த நல்ல செய்தி. நண்பரின் குழந்தைக்கு மூன்று வயது.

இங்கு கஷ்டப்பட்டு... கிடைத்ததை தின்று வாழ்ந்து... ஒரு மாதம் குடும்பத்துடன் சந்தோஷமாய் கழிக்கச் சென்றவரின் நிலை இன்று... அன்பான மனைவியை இழந்து... மூன்று வயதுக் குழந்தையை.... என்ன கொடுமை பாருங்கள்... ஊருக்குச் செல்வதற்கு ஒரு மாதம் முன்னதாகவே பக்ரீத்துக்கு ஊருக்குப் போறேன்... ஆட்டம் பாட்டம்தான் என்று சொல்லிச் சொல்லி சிரித்தவன் இன்று சிரிக்க முடியாமல் வாழ்க்கைக்குள் சிறைபட்டு நிற்கிறான். கடந்து செல்லும் காலங்கள் வலியைக் குறைக்கும் தருணத்தில் அவனுக்கு ஒருவேளை இன்னுமொரு வாழ்க்கை அமைந்தாலும் அமையலாம்... இல்லை என் துணையை இழந்து இனி எனக்கெதற்கு வாழ்க்கை என்று நினைத்து காலமெல்லாம் தன் குழந்தைக்காக வாழலாம்... எது எப்படியிருந்தாலும் அந்த மூன்று வயதுக் குழந்தைக்கு தாயின் ஸ்பரிசம் இனி கிடைக்குமா...?  இந்த விபத்தில் மகளை இழந்த பெற்றோருக்கு...? நண்பர் மீண்டு வருவார் என்றாலும் அந்தச் சந்தோஷ வாழ்க்கை மீண்டு(ம்) வருமா..? அவருடன் எப்போதும் குடி கொண்டிருக்கும் சந்தோஷம் எல்லாம் திரும்ப வருமா...? அந்தக் குழந்தையின் எதிர்காலம் எப்படியிருக்கும்...? இந்த விபத்தின் பின்னே விடை தெரியாத கேள்விகள் எத்தனை... எத்தனை...

வெளிநாட்டு வாழ்க்கையில் என்ன சந்தோஷத்தைப் பெற்றுக் கிழித்தோம்... ஊருக்குச் செல்லும் அந்த ஒரு மாத வாழ்க்கை குறித்து எத்தனை கனவுகளுடன் அவர் சென்றிருப்பார்... எவ்வளவு சந்தோஷமாக் ஊட்டிக்குப் போயிருப்பார்கள்... எல்லாம் போச்சே... இதையெல்லாம் பார்க்கும் போது என்னடா வாழ்க்கைடா இது... அப்படின்னுதான் தோணுது. என்னமோ போங்க... எப்போதுதான் இந்த வாழ்க்கைக்கு விடிவோ தெரியவில்லை... கூழோ கஞ்சியோ குடும்பத்தோடு சேர்ந்து குடித்து வாழும் வாழ்க்கை வாய்க்கப்பெற்றால் சந்தோஷமே... என்று... எப்போது... எப்படின்னு எதுவும் தெரியாமல் நகரும் நாட்களில் இப்படியான ஒரு வாழ்க்கை எதற்காக வாழ வேண்டும் என்று தோன்றினாலும் இந்த வாழ்க்கை வேகமாகத்தான் நகர்ந்து கொண்டிருக்கிறது...
-'பரிவை' சே.குமார்.

சனி, 24 செப்டம்பர், 2016

மனசின் பக்கம் : கிறுக்கலே சந்தோஷம்

னசின் பக்கத்தில் என்ன நினைக்கிறோமோ.... நம்மைச் சுற்றி என்ன நடந்ததோ... நடக்கிறதோ அது எல்லாவற்றையும் கிறுக்கலாம். அப்படிக் கிறுக்குவதால் சில சமயங்களில் ஏன் அப்படி எழுதினாய் என்ற கேள்விகளும் எழலாம்... எழுந்திருக்கின்றன... இருந்தாலும் மனசின் பக்கத்தில் நாம தொடர்ந்து கிறுக்குவோமுல்ல.

கிறுக்கல்

அவன் ; 'நீ என்ன நினைக்கிறியோ அதைச் செய்..'

இவன் : சரி.

அவன் : 'மனசுலபட்டதைப் பேசு...'

இவன் : சரி.

அவன் : 'அவன் என்ன நினைப்பானோ இவன் என்ன நினைப்பானோன்னு யோசிக்காதே...'

இவன் : சரி.

அவன்: 'யாருக்காகவும் எதுக்காகவும் செய்ய நினைத்ததை செய்யாமல் விடாதே...'

இவன் : சரி.

அவன் : 'எந்த விஷயத்துலயும் யார்க்கிட்டயும் யோசனை கேக்காதே...'

இவன் : சரி.

அவன்: 'இதுதான் பாதை... இதில்தான் பயணம் என்று நினைத்துவிட்டால் அதில் பயணப்படு... துணைக்கு ஆள் வேண்டுமென காத்திருக்காதே...'

இவன் : சரி.

அவன் : 'நீ இதைச் செய்யணுமின்னு நினைச்சியன்ன எவன் பேச்சையும் கேக்காதே...'

இவன் : 'ச...ரி'

அவன் : 'மற்றவன் ஆயிரத்தெட்டு அட்வைஸ் பண்ணுவான்... அதையெல்லாம் தூக்கிச் சுமக்காதே...'

இவன் : '.....'

அவன் : 'என்னடா பதில் சொல்லாம யோசிக்கிறே...?'

இவன்  : 'இம்புட்டு நேரம் நீ என்ன சொல்லிக்கிட்டு இருந்தே...?'

அவன் : 'உன்னை உன்னோட வழியில் போன்னு சொன்னேன்... நல்லதுதானே சொன்னேன்...'

இவன் ; 'அது எங்களுக்குத் தெரியாதோ...? என்ன 'டாஷ்'க்கு அறிவுரை சொல்ல வர்றே...'

அவன் ; '.....'

இவன் : 'பொத்திக்கிட்டு போ... என்னோட பாதையில எப்படி நடக்கணுமின்னு எனக்குத் தெரியும்... அட்வைஸ் பண்றேன்னு எவனுக்கிட்டயும் போயி நிக்காதே... வச்சி செஞ்சிருவானுங்க... உன்னோட பாதையில நீ முதல்ல சரியாப் போறியான்னு பாரு... முதல்ல நீங்க திருந்துங்கடா... அப்புறம் அடுத்தவனுக்கு அட்வைஸ் பண்ணலாம்'

(உண்மையிலேயே இது கிறுக்கியதுதான்... உள் குத்து... வெளிக்குத்து எல்லாம் இதில் இல்லை)

அடி தூள்...1

ண்ணன் சந்தோஷிடமிருந்து 'ஸ்கை கிட்ஸ்' என்ற ஆங்கிலப் படத்தை மொபைலில் ஏற்றிக் கொண்டு வந்து பார்த்துவிட்டு அடுத்த நாள் அக்காவிடம் கொண்டு போய் 'ஏய் இந்தப் படத்தைப் பாரு... சூப்பரா இருக்கு...' என்றபடி மொபைலை நீட்டியிருக்கிறான்.

'நான் சரவணன் மீனாட்சிதான் பார்ப்பேன்... இதெல்லாம் பார்க்கமாட்டேன்..' என்று சொல்ல, 'உன்னைய எதுக்கு இந்தப் படத்தைப் பார்க்கச் சொல்றேன்னு நினைச்சே... அக்கா தம்பியை எப்படிப் பாத்துக்குதுன்னு பாத்துச் தெரிஞ்சிக்கத்தான்... நீ எப்பப்பாரு அடிச்சிக்கிட்டேத்தான் இருக்கே.... அதான் கொடுத்தேன்... பாரு' என்று நீட்டியிருக்கிறான்.

'அம்மா அவனுக்கு உள்ள கொழுப்பைப் பாருங்க... என்ன சொல்லி என்னைய படம் பாக்கச் சொல்றான்னு...' என்று அக்கா கத்த... 'இந்தா பாத்துத் திருந்து'ன்னு மொபைலைக் கொடுத்திருக்கிறான்.

# விஷால் ராக்ஸ்

அடி தூள்...2

'இந்தப் படிப்பை எவன் கண்டு பிடிச்சானோ... யார் போன் பண்ணுனாலும் படி... படியின்னு...'

'பரிட்சைக்கு படிக்கத்தானே வேணும்...? மார்க் எப்படி எடுக்குறது...' நான்.

'அவன் மட்டும் கெடச்சான்..... கொலை பண்ணிடுவேன்...'

'எவன்...?' - நான்.

'பரிட்சையை கண்டுபிடிச்சவன்...'

'அது சரி... இப்பவே இப்படியா.... வாழும்...' - நான்.

'என்னைய படி படியின்னு சொல்றீங்களே... உங்களுக்கு தமிழ், இங்கிலீஸ் தெரியாது.... அம்மாவுக்கு தமிழ், இங்கிலீஸ், ஹிந்தி தெரியாது... அப்புறம் என்னைய மட்டும் படி படியின்னு...'

'இது யாருடா சொன்னா... எங்களுக்குத் தெரியாதுன்னு...' - நான்.

'அதான் எழுதிக் கொடுத்துட்டீங்களே...?'

'எங்க..? எப்ப..?' - நான்.

"எங்க டைரியில..." 

'டைரியிலயா..?'

'ஆமா... அதான் நோ லாங்குவேஜ்ன்னு எழுதிக் கொடுத்திருக்கீங்களே...?'

'அடப்பாவி... நோ லாங்க்வேஜ் இல்லடா... KNOWN (தெரிந்த) லாங்க்வேஜ்டா...'

'சும்மா போங்கப்பா...'

# விஷால் III வகுப்பு

(குழந்தைகள் குறித்து எதுவும் வலையிலோ முகநூலிலோ எழுதுவதில்லை என்றாலும் இந்த இரண்டு நிகழ்வுகளும் எழுதத் தோன்றியதால் எழுதியாச்சு.)


சந்தோஷம்

பாக்யாவில் தொடர்ந்து எனது கருத்து 'மக்கள் மனசு' பகுதியில் வந்து கொண்டிருக்கிறது.  அகலுக்காக எழுதிய 'குழலியின் தேவன்' கட்டுரைக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதில் சந்தோஷமே... மருது சகோதரர்கள், வேலு நாச்சியார் என இரண்டு கட்டுரைகள் எழுதி ரொம்ப நாளைக்குப் பின்னர் எழுதிய வரலாறு சம்பந்தமான கட்டுரை... நண்பர்கள் நல்லாயிருந்தது என்று சொன்னதில் சந்தோஷமே.

மனசின் பக்கம் தொடரும்.
-'பரிவை' சே.குமார்.

புதன், 21 செப்டம்பர், 2016

மனசு பேசுகிறது : கடிதங்கள்

காணமல் போன கடிதங்கள் என்ற தலைப்பில் தமிழ் இந்து நாளிதழ் கட்டுரை ஒன்றை வாசிக்க நேர்ந்தது. அதை வாசித்த பின்னர் கடிதத்துடனான நம் வாழ்க்கை கொஞ்சம் கொஞ்சமாக... இல்லை சுத்தமாகவே மறைந்து போய்விட்டது குறித்த நினைவு மெல்ல மேலெழும்பியது. அன்று கடிதங்கள்தான் உறவுக்குள் பாலமாய் இருந்தன என்று அடித்துச் சொல்லலாம்... சந்தோஷம், துக்கம், வருத்தம் என எல்லாம் சுமந்து பயணப்பட்டவை அவை. காலத்தின் வளர்ச்சியில் காணாமலேயே போய்விட்டன என்றாலும் மத்திய மாநில அரசுகள் முக்கியப் பிரச்சினைகள் குறித்துப் பேச கடிதம் எழுதுவதை இன்னும் வாடிக்கையாக வைத்திருக்கிறது. அவர்கள் கடிதம் என்று சொல்வது மின் அஞ்சலையோ அல்லது பேக்ஸ் செய்தியையோ... இருப்பினும் கடிதம் எழுதியிருக்கிறேன் என்றுதான் சொல்கிறார்கள். தற்போதைய காவிரிப் பிரச்சினையில் கூட நம் முதல்வர் கடிதம் மட்டுமே எழுதினார். சரி விடுங்க இதைப் பேசினால் எழுத்து அரசியலுக்குள் போய்விடும். 

Image result for இன்லேன்ட் லெட்டர்

கடிதம்... பள்ளியில் படிக்கும் காலத்தில் வெளியூரில் இருந்த அண்ணனின் கடிதம் வரும். 'அன்புள்ள அப்பா' என்று ஆரம்பிக்கும் அந்தக் கடிதம் பெரும்பாலும் வீட்டுப் பிரச்சினைகள் குறித்து அப்ப எழுதிய கடிதத்துக்கு பதில் கடிதமாகத்தான் வரும். அதில் உரம் வாங்க பணம் அனுப்புகிறேன் என்றும் தீபாவளி, பொங்கல் என்றால் செலவுக்கு பணம் அனுப்புகிறேன் என்றும் எழுதப்பட்டிருக்கும். கடிதத்தின் இறுதியில் தம்பிகளை நன்றாகப் படிக்கச் சொல்லுங்கள் என்று முடிந்திருக்கும்.

அப்பா யாருக்கும் கடிதம் எழுதினாலும் 'உ சிவமயம்' போட்டு, ஒரு பக்கம் அவர் பெயர் மற்றும் ஊர், மறுபுறம் பெறுபவர் பெயர் மற்றும் ஊர் போட்டு அதன் கீழே தேதியிட்டு அதன் பின்தான் கடிதத்தை ஆரம்பிப்பார். அண்ணன்களுக்கோ அத்தான்களுக்கோ என்றால் சிரஞ்சீவி அன்புள்ள மகன்/மாப்பிள்ளை என்று ஆரம்பித்து நலம் விசாரித்து... எல்லாருடைய நலமும் எழுதி.... விவசாயம் முதல் மாடு கன்று போட்டதுவரை விரிவாய் எழுதுவார். அவர் கடிதம் எழுத உட்கார்ந்தால் யோசித்து யோசித்து எழுதிய் சில சமயங்களில் கடிதத்தில் இடமில்லாமல் சின்ன பேப்பரில் எழுதி உள்ளே ஓரமாய் ஒட்டி வைப்பார். கடிதம் எழுதி முடிப்பதற்குள் வாயில் இருக்கும் புகையிலை எச்சிலைத் துப்ப ஏழு தடவை எழுந்து செல்வார். வேற என்ன எழுதணும் என்று அம்மாவிடம் வேறு அடிக்கடி கேட்டு திட்டையும் வாங்கிக் கொள்வார்.

அண்ணன்கள் அத்தான்கள் சிங்கப்பூர் சென்ற பிறகு, பதினைந்து நாளைக்கு ஒரு தடவை ஏர்மெயில் கடிதம் வரும். அதுவும் கஷ்டங்கள் சுமந்துதான் அங்கும் இங்கும் பறக்கும். இப்போது போல் அப்போது செல்போன் வசதி இல்லை.... ஏன் வீட்டில் தொலைபேசி கூட இல்லை... சிங்கப்பூரில் இருந்து கடிதம் வந்தால் ரொம்ப ஆவலாய்ப் பிரிப்போம். அதற்குக் காரணம் அதற்குள் வைத்து அனுப்பப்படும் புகைப்படங்கள்தான். முழங்கால் வரை மூடிய ஷூ போட்டுக் கொண்டு சிமெண்ட் அள்ளும் போட்டோக்கள்... பல மாடிக் கட்டிடத்தின் உச்சியில் கம்பிகளைப் பிடித்துக் கொண்டு தலையில் மஞ்சள் கலர் தொப்பி வைத்து நிற்கும் போட்டோக்கள்... இரயிலில் பயணிக்கும் போட்டோக்கள்... தேக்காவில் சொந்தங்கள் கூடி எடுத்த போட்டோக்கள்... என அவர்களின் நிஜ வலி சுமந்த நிழல்படங்களைப் பார்த்து சந்தோஷப்பட்ட வயது அது. இப்போது இங்கு அது போன்ற மனிதர்களைக் கடக்க நினைக்கும் போது அன்று அவர்கள் பட்ட கஷ்டம் மனசுக்குள் மெல்ல எழும்பி வதைக்கிறது. இன்னைக்கு நினைத்தால் ஊருக்குப் பேசலாம்... நினைத்த போது ஊருக்குப் போகலாம்... ஆனால் அன்று வாரம் ஒருமுறை பேசுவது என்பதே அரிது. வீட்டில் தொலைபேசி வந்த பிறகு ஞாயிறுகளில் பேசுவார்கள்... வீட்டில் எந்த நல்லது கெட்டது என்றாலும் வருவது என்பது சந்தேகமே.. இரண்டு வருடங்கள் முடிய வேண்டும் விடுமுறை பெற என்ற சூழல் அப்போது... அப்படிப்பட்ட காலத்தில் ஒரே ஆறுதல் கடிதங்கள்தான்.

அப்படிப்பட்ட வாழ்க்கையில் திருமணம், திருவிழா போன்ற சந்தோஷத்தை விடுங்கள்... இறப்புக்கள்... எத்தனை இறப்புக்களுக்கு வர முடியாமல் தவித்திருப்பார்கள் என்பதை இப்போது உணர முடிகிறது. வீட்டில் உறவு இறந்தால் கூட வரமுடியாது. எப்படிப்பட்ட நரக வாழ்க்கை அது... இன்றும் கட்டிட வேலை செய்யும் தொழிலாளர்களின் பெரும்பாலான நிலை இப்படித்தான். திருவிழா நிகழ்வுகள் எல்லாம் கடிதத்தில் எழுத்தாய் பயணித்தாலும் வீடியோவாக யாரோ ஒருவரிடம் கொடுத்து அனுப்பப்படும். கடிதங்கள் தாங்கி வந்த போட்டோக்களில் அண்ணன் அடிப்பட்டு கால் முழுவதும் கட்டுப் போட்டுக் கிடந்த போட்டோ இன்னும் கண்ணுக்குள் நிழலாடுகிறது. பெரும்பாலும் வெளிநாடு செல்லும் கடிதங்கள் போட்டோக்களுடன் மட்டும் பயணிக்காமல் கோவில் திருநீறு, குங்குமம் எல்லாம் சுமந்து செல்லும்.

பள்ளியில் படிக்கும் போது அதிக கடிதம் எழுதுவதில்லை... பொங்கல் தீபாவளி வாழ்த்துக்கள் மட்டுமே... இப்ப வாழ்த்தும் வாழ்ந்து முடிஞ்சு போச்சு இல்லையா... பொங்கல் வாழ்த்துக்கள் எத்தனை சந்தோஷத்தைச் சுமந்து வரும்... போகும்... ம்... எல்லாம் போச்சு... எழுதும் போது பெருமூச்சுத்தான் வருகிறது. கல்லூரி சென்ற பின்னர் காளையார்கோவில், ஆனந்தூர், திருவாடானை என நண்பர்கள் இருந்ததால் செமஸ்டர் விடுமுறையில் எப்படியும் கடிதம் வந்துவிடும். நானும் எழுதுவதுண்டு. அப்போதெல்லாம் ஆதி, திருவாடானையில் இருந்து 'அன்பின் பங்காளிக்கு' என்று ஆரம்பித்து நிறைய எழுதியிருப்பான். அதே போல் அண்ணாத்துரை காளையார்கோவிலுக்கு அருகே கடம்பங்குளம் என்ற ஊரில் இருந்து கடிதம் எழுதுவான்... அவன் எங்கள் வீட்டில் ஒருத்தன் என்பதால் அம்மாவில் ஆரம்பித்து பெரிய அக்கா குழந்தைகள் வரை கேட்டு எழுதியிருப்பான்.

நாமளும் கவிதை, கதை எழுத ஆரம்பித்த கால கட்டம் அது... கவிதைகள் பத்திரிக்கைகளில் வர, பேனா நட்பு என்று ஒன்று அப்போது உண்டு... அந்த அடிப்படையில் சில தபால் அட்டைகளில் முகம் தெரியாத நண்பர்கள் கடிதம் எழுதுவார்கள். அவர்களுக்கு பதில் போட்டதும் உண்டும். அப்படிச் சில காலம் சில நண்பர்கள் தொடர்ந்தார்கள். பெரும்பாலான கவிதைப் போட்டிகள், மாலை முரசு இதழில் வரும் வார்த்தைகள் கண்டுபிடித்தல், பாக்யாவிற்கான கவிதை எல்லாமே தபால் அட்டையில்தான் எழுதி அனுப்புவதுண்டு. சுபமங்களாவில் தபால் அட்டை சிறுகதை என்று ஒன்று போடுவார்கள். அதற்கும் எழுதி பிரசுரமாகியிருக்கிறது. தாமரைக்கு... செம்மலருக்கு... ராணிக்கு... தினபூமியில் வியாழக்கிழமை கொடுக்கப்படும் படத்துக்கு எழுதும் கவிதைக்கு என 50,100 தபால் அட்டைகளை மொத்தமாக வாங்கி வைத்தும் இருந்திருக்கிறேன். பின்னர்தான் போட்டிகளுக்கான தபால் அட்டை 10 ரூபாய் என்று  மாற்ற, நாம மெல்ல பதுங்கியாச்சு.

கல்லூரி முடித்த பின்னர் நட்புக் கூடு கலைந்தது... பெரும்பாலும் கடிதங்கள் மட்டுமே நட்புக்கு நீர் வார்த்துக் கொண்டிருந்தது. ராமகிருஷ்ணன், நவநீ, அண்ணாத்துரை, சேவியர், ஆதி, திருநா,பிரான்சிஸ் என அனைவரோடும் சிலகாலம் கடிதப் போக்குவரத்து இருந்தது. பின்னர் வாழ்க்கைப் பயணத்தில் மாறி... மாறி....எல்லாம் மாறிப்போச்சு. அதன் பின்னான நாட்களில் கடித சுவராஸ்யம் மட்டுமின்றி நாப்பது அம்பது வாழ்த்து அட்டைகள் அனுப்புவதும் மெல்லக் குறைந்து விட்டது. 

நண்பன் முருகன் சிங்கப்பூரில் இருந்தபோது எனக்கு அடிக்கடி கடிதம் வரும். அந்தக் கடிதங்கள் வாழ்க்கைப் பிரச்சினையையும் பேசும்... எங்கள் கல்லூரிக்கால வாழ்க்கையையும் பேசும்... அதில் இறுதியாக முடிந்தால் இந்த ஞாயிறு வீட்டுக்கு வா... உன்னுடன் பேச வேண்டும் என்று முடிந்திருக்கும். அப்போது எங்கள் வீட்டிலும் போன் இல்லை.. முருகன் வீட்டிலும் இல்லை. அவனோட வீட்டுக்கு எதிரே இருந்த தீயணைப்பு நிலைய நம்பருக்குத்தான் போன் அடிப்பான். அங்கு போய் காத்திருந்தால் கூப்பிடுவான்... சில நிமிடங்கள் பேசுவோம். மற்றபடி எல்லாமே கடிதத்தில்தான். பெரிய பெரிய எழுத்தில் நிறைய எழுதுவான்... இடமில்லாமல் சுற்றிச் சுற்றி எழுதியிருப்பான்.

அன்று கடிதங்களும் வாழ்த்துக்களும் கொடுத்த சந்தோஷத்தை இன்றைய மின்னஞ்சலும் வாட்ஸ்அப் செய்திகளும் குறுஞ்செய்திகளும் கொடுக்கின்றனவா என்றால் சத்தியமாக இல்லை என்றே சொல்லலாம். ஒருவேளை அதனுடன் பயணப்பட்டு எப்பவும் செல்லும் கையுமாகத் திரிபவர்களுக்கு வேண்டுமானால் அது சந்தோஷத்தைக் கொடுக்கலாம். 'லெட்டர் வந்திருக்கா..' என வாரம் இரண்டு முறை ஊருக்குள் வரும் தபால்காரரிடம் கேட்டு அவர் இல்லை என்று தலையாட்டியதும் 'என்ன இந்தப்பய லெட்டரே போடாம இருக்கான்' என்றபடி முந்திய லெட்டர் வந்து இத்தனை நாளாச்சே என்று நாளை எண்ணிப் பார்த்தும் பொங்கல் வாழ்த்துக்களை வாங்கி அவசர அவசரமாய் பிரித்துப் பார்த்தும் வாழ்ந்த அந்த நாட்கள் எத்தனை சுகமானவை. 

பள்ளிகளில் தேர்வு பெற்ற விபரத்தை கடிதத்தில்தான் அனுப்புவார்கள். நாங்கள் படித்த தே பிரித்தோ மேல் நிலைப்பள்ளியில் காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண்கள் கடிதத்தில் வீட்டுக்கு வரும்.  அது போக பள்ளியில் தலைமையாசிரியர் ஒவ்வொரு வகுப்பாக வந்து நம்மை எழுந்து நிற்கச் சொல்லி மதிப்பெண்களை வாசித்து... எல்லாத்திலும் தேர்ச்சி பெற்றவர்கள் எந்திரி, ஒரு பாடம் போனவன், ரெண்டு, மூணு, நாலு, எல்லாம் என எழுந்து நிற்க வைத்து... சரி விடுங்க... அதெல்லாம் கனாக்காலம்... இனி காணாத காலம். தேர்ச்சி விபரம் வரும் கடிதத்தை பிரிப்பதற்குள் கை காலெல்லாம் ஆடும் பாருங்க... அதுவும் ஒன்பதாவது ரிசல்ட்டுக்குத்தான் உடம்பு பிரபுதேவா டான்ஸ் ஆடுச்சு... காரணம் என்னன்னா நாங்க படித்த நடுநிலைப்பள்ளியில் இருந்து மேல் நிலைப்பள்ளிகளுக்குப் போய் ஒன்பதாவது தேர்வது என்பது காவிரியில் தண்ணீர் கொண்டு வர படும்பாடுதான்.... அப்படியும் ஜெயித்தவர்களில் நாமளும் ஒரு ஆள்ன்னு காலரைத் தூக்கி விட்டுக்கலாம்... அப்ப ஜெயிச்சதும் வீட்டுல நம்ம படிப்பை கண்டுக்க மாட்டாங்க... 

கடிதங்கள் சுவராஸ்யம் நிறைந்தவை... பெரிய மாடு கன்னு போட்டிருக்கு... பால் கம்மியாத்தான் இருக்கு... அக்காவையும் பெண் கேட்டு வந்தார்கள்... மாப்பிள்ளை இன்ன வேலை பாக்கிறாராம்... நமக்கு தோதான இடந்தான்... வயலுக்கு எல்லாரும் அடி உரம் போட்டுட்டாங்க... நாமளும் போட்டுட்டா நல்லது... அம்மாவுக்குத்தான் அடிக்கடி முடியாம வருது.... நேத்து டாக்டர்கிட்ட காமிச்சிட்டு வந்தோம்... ஒய்வெடுக்க சொல்லுது... அது ஓய்வெடுத்தா இங்க யாரு பாக்குறது.... இப்படி நிறைய விஷயங்களை எழுதுவார்கள். எல்லாம் எழுதி பார்த்துக் கொள்ள வேண்டியது என்று முடிந்திருக்கும் அந்த பார்த்துக் கொள்ள வேண்டியதில்  மொத்தத்துக்குமான பணத்தேவை அடங்கியிருக்கும்.

சாதாரணமாக எழுதப்பட்ட கடிதங்களுக்கு மத்தியில் சில கடிதங்கள் பொக்கிஷங்கள்தான்... அவற்றை இப்போது பிரித்துப் படிப்பதில்தான் எத்தனை சுகம்... எத்தனை பேரின்பம்... சில வாழ்த்துக்களும் கூட... இப்போது எடுத்துப் பார்த்தால் அந்த நாள் மெல்ல மனசுக்குள் கிளை விடும்...  நான் வைத்திருக்கும் சில கடிதங்களில் முருகனின் கடிதங்கள், திருமிகு இறையன்பு அவர்கள் எனது ஹைக்கூக்களை வாசித்துவிட்டு எழுதிய கடிதம், தாமரையில் முதல் கவிதை வெளியான போதும் மற்றொரு கவிதையை ஐயா மூலமாக வாசித்த போதும் திரு. பொன்னீலன் அண்ணாச்சி எழுதிய கடிதங்கள், அண்ணாத்துரை சென்னையில் இருந்தபோது எழுதிய கடிதங்கள் மிக முக்கியமானவை.

இன்றைக்கு கடிதங்கள் போன இடம் தெரியவில்லை... தபால்காரர் எங்கள் ஊருக்குள் வருவதே இல்லை. அரிதாக யாருக்கேனும் ஏதேனும் கடிதம் வந்திருந்தால் கண்டதேவிக்கு போகும் யாரிடமாவது கொடுத்து விட்டு விடுகிறார்கள். 'அன்பும் பண்பும் பாசமும் நிறைந்த' என்றோ 'சிரஞ்சீவி' என்றோ 'மேதமை தாங்கிய ஐயா' என்றோ 'பாசத்துக்குரிய நண்பனுக்கு' என்றோ ஆரம்பித்த கடிதங்கள் தன் வாழ்வை இழந்து விட்டன... இப்ப எல்லாம் வாட்ஸ்அப்பிலும் மின்னஞ்சலிலும்தான். அவை என்ன சொல்ல நினைக்கிறோமே அந்தச் செய்தியை மட்டுமே தாங்கிச் செல்கின்றன இவற்றின் ஊடாக நாம் சந்தோஷம், துக்கம். வலி, வேதனை என எவற்றையும் அதிகம் திணிப்பதில்லை. நறுக்கென்று நாலு வார்த்தையில் முடித்து விடுகிறோம். 

கடிதங்கள் காணாமல் போனாலும் அவை சுமந்து வந்த சந்தோஷங்களும் துக்கங்களும் இன்னும் மனசுக்குள்... கடிதங்கள் கொடுத்த சந்தோஷங்கள்தான் எத்தனை எத்தனை... என்பதை அனுபவித்தவர்கள் அறிவோம் அல்லவா..?

சரி இந்தப் பாட்டையும் கேளுங்க...

-'பரிவை' சே.குமார். 

சனி, 17 செப்டம்பர், 2016

அகல் மின்னிதழ் கட்டுரை : குழலியின் தேவன்

வந்தியத்தேவனும்  வசீகரமான பெண்களும்

Picture

பொதுவாகவே கணவன் மனைவி சண்டையில் 'என்னை மானமுள்ள பொண்ணு என மதுரையில கேட்டாக'ன்னு மனைவி ஆரம்பித்தாலோ அல்லது ‘யாரென்று தெரிகிறாதா?' என கணவன் ஆரம்பித்தாலோ, 'ஆரம்பிச்சிட்டாங்க அவுக வரலாறை உங்க வரலாறை ஒண்ணும் நாங்க கேக்கலை' என்ற வார்த்தை வந்து விழ, சண்டை சூடு பிடிக்க ஆரம்பிக்கும். ஆமா இப்ப எதுக்கு இதுன்னு தானே யோசிக்கிறீங்க... எனக்கு வரலாறுகள் ரொம்பப் பிடிக்கும். சண்டை போட இல்லை. எப்படியிருந்தது என்பதை அறிந்து கொள்ளவே! ‘நாங்கள்லாம் அந்தக் காலத்துல’ என்று எங்க ஊர் பெரிசுகள் ஆரம்பித்தால் அதை விரும்பிக் கேட்பவன் நான். எனக்கு வரலாற்றுக் கதைகளின் மீது காதல் என்றே சொல்லலாம். அந்த வரலாற்றோடு ஒன்றி வாசித்து அதை முழுவதும் உள் வாங்கிக் கொள்வதில் அலாதி பிரியம். அப்படி ஒரு வாசிப்பு அனுபவத்தைக் கொடுத்தது சமீபத்தில் வாசித்த கல்கி அவர்களின் 'பொன்னியின் செல்வன்'.
               
பொன்னியின் செல்வனை வாசித்தவர்களுக்கு வந்தியத்தேவன், குந்தவை, நந்தினி, ஆழ்வார்கடியான், மதுராந்தகர், ஆதித்த கரிகாலன், வானதி, அருள்மொழிவர்மர், பூங்குழலி, கந்தமாறன், மணிமேகலை, ஊமை ராணி, சேந்தன் அமுதன், பழுவேட்டையர்கள் போன்றவர்களில் ஒருவரை அதிகமாகப் பிடித்திருக்கும் அல்லது இவர்களை விடுத்து மற்றவர்களில் யாரையேனும் பிடித்து இருக்கக் கூடும். எனக்குப் பிடித்த கதாபாத்திரம் என்றால் அது வந்தியத்தேவன். கதையின் ஆரம்பத்தில் பரந்து விரிந்து கிடந்த வீர நாராயணன் ஏரிக் கரையில் குதிரையின் மீது வந்த வீரன் என் மனசுக்குள் வந்து அமர்ந்துக் கொண்டான். அவன் பின்னே இலங்கை வரை சுற்றி வந்த மனசு கதையை படித்து முடிக்கும் போது அவனை இரண்டாம் இடத்தில் வைத்து சம்புவராயரின் மகளான கந்தமாறனின் தங்கையும் கடம்பூர் மாளிகையின் இளவரசியுமான மணிமேகலையை முதலிடத்தில் வைத்துப் போற்றியது என்பதே உண்மை இங்கு நாம் வந்தியத்தேவனும் அவனுடன் பழகிய அல்லது அவன் பழகிய மிக முக்கியமான வசீகரிக்கும் அழகு கொண்ட அந்த நாலு பெண்களைப் பற்றி பார்ப்போம். ​

வந்தியத்தேவன் இந்தக் காலத்து இளைஞன் போல வாழ்க்கையை சந்தோஷமாக வாழ நினைப்பவன். இந்தக் கதையில் அவனுக்கும் ஆயிரத்தெட்டு பிரச்சினைகள் இருந்தாலும் அவன் பெண்களைப் பார்த்ததும் இவள் நம் வாழ்க்கைத் துணைவி ஆக மாட்டாளா என்று ஏங்கும் சாதாரண இளைஞன் தான். மணிமேகலையைப் பார்க்கும் போதும், குந்தவையை பார்க்கும் போதும், நந்தினியைப் பார்க்கும் போதும், ஏன் பூங்குழலியைப் பார்க்கும் போதும் கூட அவன் மனசுக்குள் 'உன் மேல ஒரு கண்ணு’ என்று பாட்டு ஓடி வண்ணத்துப் பூச்சி சிறகடிக்கிறது. வானதியை மட்டும் அப்படி அவன் பார்க்கவில்லை அதற்கு காரணம் குந்தவையின் மேல் வைத்த கண்ணை அவன் வானதி பக்கம் திருப்பவில்லை என்பதை அறிந்தாலும் அவள் ராணியாகப் போகிறவள் என்பதை முன்னரே உணர்ந்து விலகிவிட்டான் போல என்ற எண்ணமும் நம்முள் எழத்தான் செய்கிறது.

சரி அந்த நாலு பெண்களைப் பார்த்தபோதும் அவன் மனதில் தன்னுடைய நாயகியாக்கிப் பார்த்தான் என்றாலும் முடிவில் அவன் குந்தவையின் நாயகனாகிறான். குந்தவையைப் பொறுத்தவரை அதிகாரமிடும் பெண்தான். ஆண்கள் அனைவரும் தன் ஆணைக்கு அடி பணிந்து கிடக்க வேண்டும் என்ற எண்ணமுள்ளவளாக இருக்கிறாள். வந்தியத்தேவனுக்கு பொருத்தமான பெண்ணாக இருப்பது குந்தவையா அல்லது மற்ற பெண்களா என்று பார்த்தால் ‘தலையில எழுதியதை இனி மாற்றவா முடியும்’ என்றும் ‘பிடிக்காமல் செய்து கிட்டேன் ஆச்சு இருபத்தைந்து வருடம், குப்பை கொட்டிக்கிட்டுத்தான் இருக்கேன்’ என்றும் சலித்தபடி சந்தோஷ வாழ்க்கை நடத்துவது போல அல்லாமல் அதிகாரம் செய்யும் பெண்ணாக இருந்தாலும் வந்தியத்தேவனுக்கு பொருத்தமானவள் குந்தவை தான் என்பதை கதை அழுத்தமாக சொல்லிச் செல்கிறது. இருந்தாலும் வாசகனின் மனசுக்குள் மாற்று சிந்தனை என்ற எண்ணம் எழலாமே? நமக்கு எல்லாவற்றிலும் யோசிக்க, பேச, முடிவெடுக்க, சுதந்திரம் உண்டல்லவா? அதனால் வந்தியத்தேவனுக்குள் பட்டாம்பூச்சி பறக்க விட்ட மற்ற மூன்று பெண்களில் ஒருத்தியை மணமுடித்திருந்தால்? என எனக்குள்ளும் ஒரு எண்ணம் எழுத்தான் செய்தது. அது குறித்து கொஞ்சம் எழுதினால்? கற்பனை தப்பில்லையே...

வந்தியத்தேவன் முதலில் சந்திப்பது தன் நண்பன் கந்தமாறனின் தங்கையான மணிமேகலையை, தன் தங்கை குறித்து அவனிடம் நிறையச் சொல்லி அவளை  நீ தான் திருமணம் செய்ய வேண்டும் என்று சொல்லி வைத்திருப்பவன், சோழப் பேரரசை கவிழ்க்க நினைக்கும் ஒரு சதியின் காரணமாக அதிலிருந்துப் பின் வாங்கி, ஒரு கட்டத்தில் வந்தியத்தேவனுக்கு எதிரியாகி இறுதியில் நண்பனாகிறான். நண்பன் மாறிய போதிலும் மணிமேகலை மீதான அன்பு அவனிடம் அப்படியே தான் இருக்கிறது. முதன் முதலில் பார்க்கும் போது அம்மாவின் பின்னே ஒளிந்து கொள்ளும் மணிமேகலை, பின்பு வந்தியத்தேவனுக்காக ஆதித்த கரிகாலனின் கொலையை தான் செய்ததாகச் சொல்வதும் அதன் காரணமாக பைத்தியம் பிடித்தது போல் ஆகி இறுதியில் வந்தியத்தேவனின் மடியில் மரணத்தைத் தழுவுகிறாள்.  

முதலில் காதலித்த பெண்ணோ அல்லது இவள் மனைவியாக வந்தால் வாழ்க்கை சிறக்கும் என்று நினைக்க வைத்த பெண்ணோ நம் இதயத்துக்குள் ஆயுள் வரை  நிறைந்திருப்பார். அவர்களை எப்படிப்பட்ட உறவு முறை வைத்து கூப்பிடும் சூழ்நிலை இருந்தாலும் மனசுக்குள் மட்டும் அந்த முதல் பிம்பம் ஓரமாக ஒளிர்ந்தபடி இருக்கும். குந்தவையைக் காதலித்தாலும் மணிமேகலையை சகோதரியாக பார்ப்பதாகச் சொன்னாலும் வந்தியத்தேவனுக்கு மணிமேகலை மீது ஒரு ஆத்மார்த்த காதல் உண்டு என்பதை உணரும் கட்டங்கள் பல இருக்கத்தான் செய்கிறது.

அடுத்ததாக அவன் சந்திப்பது நந்தினியை. பெரிய பழுவேட்டையரின் மனைவி. அந்த வயோதிகரை அவள் கணவனாக ஏற்றுக் கொள்ளக் காரணம் அரசியல்.... ஆதித்த கரிகாலனைப் பழி வாங்கவே அவள் பாண்டிய தேசத்தில் இருந்து சோழ நாட்டுக்கு வந்தாள். உடல் அழகிலும் பேச்சிலும் எதிரே இருப்பவரை சொக்க வைப்பதில் கில்லாடி. அப்படியொரு பேரழகியைப் பார்ப்பவர் அனைவரும் அவள் மீது காதல் பித்து கொள்வர். ஆதித்த கரிகாலன், கந்தமாறன்... என பலர் அவள் அழகில் தங்கள் நிலை மறக்க, வந்தியத்தேவன் அவள் மீது காதல் கொள்வதில் தவறில்லையே? நந்தினி தன் திட்டத்தை நிறைவேற்ற ஒவ்வொரு முறை காய் நகர்த்துதை அறிந்தவர்கள் அவளை வெறுத்து ஒதுக்கலாம் என்று நினைத்தாலும் அந்தப் பேரழகில் மயங்கி மகுடிக்கு ஆடும் பாம்பாகி விடுவர். அவளைப் பார்க்கும் போதெல்லாம் வந்தியத்தேவனின் மனமும் பித்தம் கொள்கிறது. அவளுக்கும் இவன் மீது ஏதோ ஒரு நேசம். இவனால்தான் காரியம் ஆக வேண்டும் என்று சொல்லிச் சொல்லியே இவனைத் தப்பவிட்டு வருகிறாள். ஆதித்த கரிகாலனின் கொலையில் இவன் மாட்டிக் கொள்வது எதார்த்தமான நிகழ்வுதான். நந்தினிக்கு எடுத்துக்காட்டாய் பல அரசியல்வாதிகளைச் சொல்லலாம் இருந்தாலும் ‘தில்’ பட சொர்ணாக்கா கதாபாத்திரம் போல் எனக்குத் தெரிகிறார். (இது தவறாகக் கூட இருக்கலாமோ?)

அடுத்து ஜோசியரின் இல்லத்தில் வானதியுடன் குந்தவையைச் சந்திக்கிறான்.  குந்தவையைப் பார்த்ததும் நந்தினி, மணிமேகலை இருவரையும் மறந்து மனசை இழந்து தவிக்கிறான். சோழப் பேரரசை ஆட்டுவிக்கும் சக்தி, அவளின் சொல் கேட்கும் தகப்பன், பெரிய பாட்டி, தம்பி அருள்மொழிவர்மன் என எல்லாருமே இவளின் கீழ்தான் என்பது போன்ற ஒரு மாயையை தன் மீது குந்தவை பரப்பி வைத்திருக்கிறாள். அப்படியான இடத்தில்தான் வந்தியத்தேவனும் இணைகிறான். இருப்பினும் அவளைப் பார்த்ததும் வந்தியத்தேவன் காதல் கொள்வது போல் அவளுக்கும் அவனைச் சந்தித்த பின் காதல் அரும்பத்தான் செய்கிறது. அவன் இலங்கைக்குச் செல்லும் போது அவளின் மனம் படாத பாடு படுவதை நாம் அறிய முடிகிறது. சிறையில் தவிப்பவனை வெளியில் கொண்டு வரத் துடிக்கிறாள். தன்னை விடுத்து தம்பியிடம் நேசம் கொள்ளும் போது மனசுக்குள் மறுகுகிறாள். மணிமேகலை அவளை விரும்புவதாய்ச் சொல்லும் போதெல்லாம் ஒருவித அச்சம் உண்டாவதைத் தவிர்க்க முடியாமல் தவிக்கிறாள். எங்கே அவன் நந்தினி பின்னால் போய்விடுவானோ என்ற எண்ணமும் அடிக்கடி தலை தூக்கத்தான் செய்கிறது... ஆரம்ப முதல் பிடிக்காத நந்தினி மீது அவள் வந்தியத்தேவன் மீது காட்டும் கரிசனத்தால் இன்னும் அதிக வெறுப்புக் கொள்கிறாள். மணிமேகலை, நந்தினி தவிர்த்து பூங்குழலி அவனை விரும்பவில்லை என்பதை அறிந்தாலும் பூங்குழலி வானதிக்கு எதிரியாகி விடுவாளோ என்ற அச்சமும் அவளுக்குள் தலை தூக்குகிறது.  வந்தியத்தேவனுக்குள்ளும் குந்தவைதான் தன் மனைவி என்ற எண்ணம் மேலோங்க மற்றவர்களை மறக்கிறான்.

வந்தியத்தேவன் இலங்கை செல்லும் போது கோடியக்கரையில் வைத்துச் சந்திப்பவள்தான் பூங்குழலி. இவள் பெயரில்தான் பூ... ஆனால் ஆளோ பெரும் புயலின் வடிவம். இவளை முதலில் பார்க்கும் போதும் அவனுக்குள் காதல் குழலோசை கடலின் அலையோசையை மீறி கேட்கத்தான் செய்கிறது. வேகமும் விவேகமும் கூடிய பெண், தனக்கு மனைவியானால் எப்படியிருக்கும் என்ற நப்பாசையும் வருகிறது. இருவரும் இலங்கை நோக்கி படகில் பயணிக்கும் போது இருவருக்குள்ளும் மோதல்... அதன் பிறகு அவளின் துணிவு கண்டு பாசம் கொள்கிறான். தன் உயிரைக் காப்பாற்றிய நண்பன் சேந்தன் அமுதன் காதலிக்கும் பெண் இவள்தான் என்று தெரிந்ததும் அவள் மீது ஒரு சகோதரப் பாசம் பிறந்துவிடுகிறது. அவள் அருள்மொழிவர்மனுக்கு செய்யும் உதவிகளால் அவளுக்கும் அருள்மொழிக்கும் காதல் உண்டாகலாம் என்றும் அவளும் அருள்மொழியை விரும்பத்தான் செய்கிறாள் என்றறிந்த வந்தியத்தேவனுக்கு அருள்மொழி அவளை மணந்தால் நலம் என்று தோன்றுகிறது. நமக்கும் கதையின் போக்கு அப்படித்தான் தோன்றச் செய்கிறது  ஆனால் சேந்தன் அமுதன் ராஜபுத்திர இளவரசன் என்பதால் பூங்குழலி சேந்தன் அமுதனுக்கு மனைவியாகிறாள். அருள்மொழியின் முயற்சியால் சேந்தன் அரசனாக பூங்குழலி பட்டத்து இளவரசி ஆகிறாள். அவளின் பட்டத்து இளவரசி ஆசை நிறைவேறினாலும் என் மனது இந்த ஜோடியை ஏற்க மறுக்கிறது.  

ஆக வந்தியத்தேவன் மனதில் பயணித்த நான்கு பெண்களில் குந்தவை அவன்  மனைவியாக, மணிமேகலை மரணத்தைத் தழுவ... பூங்குழலி பட்டத்து இளவரசியாகிவிட, நந்தினி தன் வேலை முடிந்த திருப்தியில் பாண்டிய நாட்டிற்கு செல்ல கதை சுபமாய் முடிகிறது ஆனால் வந்தியத்தேவனோடு பயணித்த எனக்கு  அவனுக்காக தான் குற்றம் சுமக்க நினைத்து அவனைக் காப்பாற்றப் போராடி இறுதியில் பித்துப்பிடித்து மரணத்தை தழுவிய மணிமேகலைக்கு தனி இடம் தந்தாலும், அந்த பேதைப் பெண் பூங்குழலி? ஆம் பூங்குழலி. அவளிடம்தான் என்ன ஒரு வேகம், விவேகம். புயலெனச் சீறவும் தென்றலெனத் தழுவவும் ஆற்றல் கொண்ட வீரப்பெண்... அவளும், புத்திக் கூர்மையும் விதியையும் மதியால் வெல்லும் திறனும் கொண்ட வந்தியத்தேவனும் இணைந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் என்றே எண்ணத் தோன்றியது. வீரமும் விவேகமும் நிறைந்த ஒரு பெண்ணை வீரனுக்கு மணமுடிக்காமல் கதையின் போக்குக்காக சிவபக்தனான சேந்தனுக்கு இல்லத்தரசியாக சித்தரித்து, குந்தவையின் கணவனாக ராஜராஜ சோழனான அருள்மொழிவர்மனை வழி நடத்தும் நல்ல நண்பனாக வந்தியத்தேவனையும் காண்பித்து கதாசிரியர் இனிதாக முடித்து விடுகிறார்.  

குந்தவை என்னும் அரசியின் கணவனாய் இருப்பதைவிட பூங்குழலி என்றும் படகோட்டிப் பெண்ணின் கணவனாய் இருந்திருக்கலாமோ என்ற எண்ணம் கதையை படித்து முடித்த போது எனக்குள் தோன்றியது. இது என்ன விபரீதக் கற்பனை என்று  நீங்கள் நினைக்கலாம். தன்னைக் காதலிக்கும் பெண்ணை துவக்கத்தில் திருமணம் செய்ய வேண்டும் என்று நினைத்து கதையின் முக்கிய காலகட்டத்தில் சகோதரியாய் நினைப்பது என்பது எப்படியோ அப்படித்தான் எனக்குள்ளும் சேந்தன் அமுதன் விரும்பினாலும் அவனை விரும்பாமல் அருள்மொழிவர்மன் மீது ஆசைப்பட்டு அதுவும் நடக்காமல்... சேந்தன் அரசனானதும் அவனை மணந்து பட்டத்து அரசியாகும் பூங்குழலி, வந்தியத்தேவன் கரம் பற்றியிருந்தால் என்ன என எனக்குள் தோன்றியதில் தவறில்லைதானே. கல்கி அவர்கள் தற்போது இருந்திருந்தால் என் சிந்தனை அவருக்கு எட்டியிருந்தால் அப்படி ஒரு மாறுபட்ட பொன்னியின் செல்வனை அவர் படைத்திருந்தால் ஒரு மாறுபட்ட வரலாற்றுப் பொக்கிஷத்தை வாசிக்கும் பாக்கியம் எனக்கு கிட்டியிருக்கும்.

எனக்கு மட்டுமல்ல... உங்களுக்கும்...

***
ட்டுரையை வெளியிட்ட அகல் மின்னிதழ் ஆசிரியர் திரு. GP. சத்யா அவர்களுக்கும் வாசித்த அனைவருக்கும் நன்றி.
-'பரிவை' சே.குமார்.

வெள்ளி, 16 செப்டம்பர், 2016

மனசு பேசுகிறது : மனிதனாய் இரு சகோதரனே...

Image result for காவிரி
(நடந்தாய் வாழி காவேரி)
ர்நாடகச் சகோதரனே....

காவிரி...

கொளுந்து விட்டு எரிகிறது தண்ணீர் கிளப்பிய தீ....

எங்களுக்கு உரிமையான தண்ணீரைத்தானே கேட்டோம்... நெருப்பையும் அல்லவா சேர்த்துக் கொடுக்கிறாய் நீ... உன்னை உறவென்று நினைத்தோம்... நீயோ வெறி கொண்டு அலைகிறாயே... உன்னை வெறியன் என்பதில் தவறில்லைதானே.... மன்னிக்கவும் நேற்று வரை... ஏன் இன்று கூட  உன்னை... கன்னட உறவு என்றுதான் நினைத்திருந்தேன்.... எழுதி வந்தேன்... ஒரு பெரியவரை அடிக்கிறாயே... பின்னே உன்னை உறவென்பதில் என்ன அர்த்தம் இருக்கிறது.... நாங்கள் வயதுக்கு மட்டுமல்ல அன்புக்கும் மதிப்புக் கொடுப்பவர்கள்... ஆமாம் அவர் அப்படி என்ன செய்து விட்டார்...? சீத்தாராமையாவைக் கூப்பிட்டு தண்ணீர் திறந்து விடச் சொன்னாரா..?  உச்சநீதி மன்றத்தில் தண்ணீர் கேட்டு வழக்குத் தொடர்ந்தாரா..? அதுவும் இல்லாது இங்கிருக்கும் கன்னட சகோதர சகோதரிகளை அடித்து உதைத்தாரா...? எதற்காக அடிக்கிறாய்..? கன்னடம் பேசச் சொல்லி அடிக்கிறாயே நாயே... நாங்கள் தமிழ் பேசச் சொல்லி எங்கள் குழந்தைகளைக்கூட அடிப்பதில்லையடா பரதேசி... கேபிஎன் பேருந்து தமிழனுக்கு மட்டும் ஓடவில்லை... உனக்காகவும்தான் ஓடியது என்பதைக் கூட உணர முடியாதவனா நீ... அதன் உரிமையாளர் கஷ்டப்பட்டு இந்த உயரத்தை அடைந்தார் என்பதைக் கூட அறியாதா ஜென்மமாடா நீ... மல்லையாக்களை வளர்த்தவன்தானே நீ... கஷ்டப்படுபவனை உனக்கெப்படித் தெரியும்... நீயெல்லாம் என்ன பிறவி... உனக்கு எரியும் பேருந்து முன் செல்பி தேவைப்படுகிறது... மூளை என்னும் செல் இல்லாத உனக்கு செல்பி ஒரு கேடா...? முகநூலில் உடனுக்குடன் வீடியோ பகிர்வது எதற்காக...? வீரன் என்று காட்டவா...? அப்பாவியிடம் வீரம் காட்டுவதில் அப்படி என்னடா சந்தோஷம் இருக்கிறது வெட்கங்கெட்டவனே... தண்ணீர் திறக்கச் சொன்னது உச்சநீதிமன்றம்... திறந்து விட்டது உங்கள் மாநில அரசாங்கம்... இதில் எந்த மயிருக்குடா தமிழனை அடிக்கிறாய்..? ஆத்தா, அப்பன், அக்கா, தங்கை, அண்ணன், தம்பி என உனக்கு சொந்தமெல்லாம் இல்லையா...? மிருகம் அல்ல நீ... மனிதன் என்பதை உணர். மிருகங்கள் கூட இனத்துக்குள் அடித்துக் கொள்வதில்லை... 

காவிரி... பிறப்பது கர்நாடகம் என்றாலும் புகுந்த வீடான எங்கள் தமிழகத்தில்தான் நீண்ட தூரம் பயணிக்கிறாள்... பசுமையை தன் கரைகளில் பார்த்துப் பயணித்தவளின் உடம்பில் ரத்தத்தைப் பாய்ச்சும் செயல் என்னடா செயல்... தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்காதே என்றும் தவிச்ச வாய்க்கு தண்ணீர் கொடுக்கணும் என்றும் வீட்டுக்கு வந்தவங்களுக்கு முதல்ல தண்ணி கொடுக்கப் பழகிக்க என்றும்  சொல்லி வளர்க்கப்பட்டவர்கள் நாங்கள்... வளர்ந்தவர்கள் நாங்கள்...  ஆனால் நீயோ...? வன்மம் கொள்... வக்கிரத்துடன் திரி என்று வளக்கப்பட்டாயோ... அப்பாவிகளை அடித்து உன் வீரத்தைக் காட்டுகிறாயே... மூத்திரத்தைக் குடிக்கச் சொல்கிறாயே... நீ அதைக் குடித்துத்தான் வளர்ந்தாயோ... அதான் இவ்வளவு மூர்க்கமாய் இருக்கிறாய் போலும்... எங்கள் பதிலடி உனக்கு திருப்பிக் கிடைத்தால் நீ தாங்கமாட்டாய் என்பதை உணர்ந்து கொள்... எங்கள் மாநிலத்தில் இருந்து உனக்கு வரும் மின்சாரத்தை நிறுத்தினால் நீ இருட்டுக்குள்... உனக்கு விடிவேது...?  யோசித்தாயா...? கேட்டால் நெய்வேலியும் கூடங்குளமும் இந்தியனின் சொத்து என்பாய்... காவிரி கன்னடனுக்கு சொந்தம் என்பாய்... காரணம் எங்களை ஆளும்... ஆண்ட மூதேவிகளின் முட்டாள்தனம்தான் என்பதை நாங்களும் அறிவோம்.

காவிரி...  விவசாயத்திற்காக தண்ணீர் கேட்டால் வன்முறை விதைத்து ரத்தம் வார்க்கிறாய்... காவிரியின் இரு கரைகளையும் தொட்டுத் தழுவி தண்ணீர் மகிழ்வாய் ஒடி வந்து பார்த்தவர்கள் நாங்கள்... இன்றோ நீ தண்ணீருக்குப் பதில் அதன்  இரு கரைகளிலும் நெருப்பு வைத்துச் சந்தோஷம் கொள்கிறாய். நைல் நதியை மூன்று நாடுகள் பகிர்ந்து கொள்வதை அறிவாயா...? எல்லைப் பிரச்சினையில் என்றும் முட்டிக் கொள்ளும் பாகிஸ்தானும் நாமும் சிந்து நதியைப் பிரித்துக் கொள்வதில் என்றுமே முட்டிக் கொண்டதில்லை என்பதை நீ அறிவாயா...?  கிறுக்குத்தனமாக கிரிக்கெட்டுக்கு அடித்துக் கொண்டாலும் நமக்கும் பங்களாதேஷ்க்கும் கங்கையை பகிர்ந்து கொள்வதில் எந்த இடர்பாடும் இல்லை என்பதை நீ அறிவாயா..? எந்த ஒரு நாட்டிலும் நதிகளுக்கான பிரச்சினைகள் இருப்பதில்லை... எங்களுக்கு மட்டுமே நதிகளே பிரச்சினையாய்...

காவிரி... நீ அவள் பெயரை வைத்து அரசியல் பண்ணுகிறாய்.... வாய்க்கு அரிசி கிடைக்காதே என்று தவிக்கும் விவசாயிக்கு தண்ணீர் கொடுக்காமல் வாக்கரிசி போட நினைத்து உனக்கு நீயே ஏன் குழி வெட்டிக் கொள்கிறாய்... ஐடி கம்பெனிகள் யோசிக்கிறதாம்... வருமான இழப்பாம்... பத்திரிக்கைகள் கூவுகின்றன... உன் இழப்பு இருக்கட்டும்... அது நீயே வைத்துக் கொண்ட வினை... எம் மானத்தை இழந்து நிற்கிறோமே... எல்லாத்துக்கும் பொறுமை... பொறுமை... என்பது எங்கள் குணம்தான்...  இல்லை என்று சொல்லவில்லை.... அதனால்தான் ஒன்றிரண்டு வன்முறைகள் நிகழ்ந்த போதும் எதிர்பாராத விபத்தில் சிக்கி, எங்கே இவர்கள் நம்மை அடிப்பார்களோ என்று பயந்து நின்ற உன் மாநிலத்தவரை மிகுந்த அன்போடு விபத்தில் இருந்து மீட்டு... அவர்களை பாதுகாப்பாய் அனுப்பி வைத்துவிட்டிருக்கிறான் தமிழன் என்பதை அறிந்தாயா இல்லையா...? நீ எப்படி அறிவாய்... உனக்கு அறிவிருந்தால்தானே அறிவாய்... உன் அப்பன் வயதுக்காரன்.... கிழவன்... சிரித்தபடி பதில் சொல்லும் அவரை எப்படியடா அடிக்க மனம் வந்தது...? உன மாநிலத்தவனுக்கு சின்ன பிரச்சினை என்றதும் சீத்தாராமைய்யா பதட்டப்படுகிறார்... உடனே கடிதம் எழுதுகிறார்...  எங்களைப் பார்.... எம் இனம் கன்னடன் என்னும் வெறியர்களால் அடிபட்டுச் சாகும் போது பூக்களால் அலங்கரித்து புகழ் பரப்பிக் கொண்டிருக்கிறார் எங்கள் முதல்வர்... இதையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்... எங்கள் பொறுமையும் வெடிக்கும் நாள் அதிக தூரமில்லை...  அப்படி வெடித்தால் என்னாகும் என்பதை யோசித்துப் பார்.

உனக்கொன்று தெரியுமா...? நாங்கள் இதுவரை பிரபுதேவாவை எங்கள் தமிழனாய்த்தான் நினைத்திருந்தோம்... நீ ஆரம்பித்த வன்முறையில்தான் தெரிகிறது அவர் மட்டுமல்ல இன்னும் சிலரும் கன்னடர் என்று... ஆனாலும் நாங்கள் அவர்களை தமிழராய்த்தான் பார்க்கிறோம்... எங்கள் நிலமைதான் உங்களை கொக்கரிக்க வைக்கிறது... எங்கள் விவசாயிகளின் வயிறு எரிவதை அடக்க நினைக்கிறாய் நீ... நாங்களோ உங்களால் நான் உங்களுக்காக நான் என்ற வசனத்தை நம்பி ஏமாந்ததால்தான் இன்று எங்கள் போராட்டத்தில் நடிகர்கள் வரவேண்டும் என்று வெறும் வயிற்றோடு காத்திருக்கிறோம்... எத்தனை கொடுமை இது...? எவ்வளவு வேதனையான விஷயம் இது.../ தேர்ந்தெடுத்த முதல்வர் தெருவில் அடிபடுபவனைப் பற்றி கவலை இல்லாமல் தேரில் பவனி வருகிறார்.... எங்கள் பிரதிநிதிகள் என்று நினைத்த எம்.எல்.ஏக்களும் எம்.பிக்களும் எங்கே என்றே தெரியவில்லை.... எதிர்க்கட்சித் தலைவருக்கு சேர நன்நாட்டிளம் பெண்களுக்கு ஒணம் வாழ்த்துச் சொல்லத் தெரிகிறது.... கர்நாடகாவில் அடிபடும் எம் இனத்தின் ஓலம் கேட்கவில்லை... இதெல்லாம் எங்களின் பொறுமையை புடம் போட்டுக் கொண்டிருக்கின்றன. நாங்கள் வெடித்துக் கிளம்பினால் நீ வீழ்ந்து மடிவாய் என்பதை மறந்துவிடாதே....

நாம் இந்தியர்கள்... இந்தியர்கள் அனைவரும் சகோதர சகோதரிகள் என்று படித்ததெல்லாம் போயாச்சு... நாங்கள் தமிழர்கள்... எங்களின் வீரம் இன்று நேற்றுக் கதை அல்ல.... பண்டைய வரலாறுகளைப் பார்... எங்கள் வீரத்தை அறிவாய்.... எங்களுக்கு இனி சகோதர இந்தியா வேண்டாம்... சண்டையில்லாத தமிழகமும் தன் மானம் இழக்காத தமிழனும் போதும். எங்களின் காளைகளை நாங்கள் நேசித்தும் பூஜித்தும் வந்தாலும் அதை வதைக்கிறோம் என்று எத்தனை அமைப்புக்கள் எதிராகக் கிளம்பி எங்கள் வீரவிளையாட்டை அறுவடை செய்தார்கள் தெரியுமா...? இதோ எம் இனம் நெருப்பு வெறியனான உன்னிடம் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறது கேட்க ஒரு நாதியையும் காணோமோ.... நாதியத்தவன் தமிழன் என்பதை இலங்கையில் சொன்னான்... இன்று கன்னடனான நீயும் சொல்கிறாய்...  

நாங்கள் மனிதர்களாக வாழ்ந்து பழகிவிட்டோம்... பக்கத்து மாநிலத்தில் அரக்கர்க்கள் இருப்பார்கள் என்று நினைக்கவில்லை... அன்பான மனிதர்கள்தான் இருப்பார்கள் என்றே நினைத்திருந்தோம்.  எத்தனை வன்மத்தை  உன்னுள் புதைத்து வைத்திருந்திருக்கிறாய்.... மனித நேயமே இல்லாத அற்பனே... நாங்கள் எங்களின் வித்துக்களுக்கு அன்பையும் பொறுமையும் நேசத்தையும் சொல்லி வளர்க்கிறோம்... நீயோ வன்முறை எண்ணெய் ஊற்றி வளர்க்க ஆசைப்படுகிறாயே... எரியும் நெருப்பில் செல்பி எடுக்கிறாய்... எரியும் காரைப் பார்த்து சிரித்தபடி செல்லும் குமரிகளைக்கூட உன் மாநிலத்தில்தான் பார்க்க முடிகிறது... அப்பாவிகளைப் பிடித்து அடிப்பதை சிரித்து வேடிக்கை பார்க்கும் கழுகுக் கூட்டத்தையும் உன் மாநிலத்தில்தான் பார்க்க முடிகிறது... உனது வாரிசுகளுக்கு அன்பை சொல்லிக் கொடு... வன்முறைச் சொல்லிக் கொடுக்காதே... வளரும் தலைமுறையாவது வன்மம் அறியாது வளரட்டும்.

எங்களுக்கு தண்ணியே வேண்டாம் நீயே வைத்துக் கொள் அல்லது உன் இனத்தை அதனால் அழித்துக் கொல்...  எங்களுக்கு காவிரி வேண்டாம்... இன்று தண்ணீர் தர மறுக்கும் நீ... மழை பெய்து உன் மாநிலத்தில் கரையோரக் கிராமங்கள் மூழ்கியதும் உபரி நீரை எங்கள் பக்கம் திறக்காதே... திறக்க நினைக்காதே...  அதை உன் மக்களைக் குடிக்கச் சொல்... இல்லை அதில் அவர்களைக் குளிக்கச் சொல்... பெரிய அணை கட்டி உன் மாநிலத்துக்குள் திருப்பிக் கொள்...  இப்போது நீ பொங்குகிறாய்... உபரித் தண்ணீர் வந்து நீ திறக்க நினைக்கும் போது நாங்கள் பொங்கினால் கர்நாடகம் காணாமல் போகும் என்பதை உணர்...  

போதும் கன்னடச் சகோதரனே... நிறுத்திக்கொள்.... இல்லையேல் உபரித் தண்ணீர் உனக்கு எமனாகும்... உறவுகள் துறந்து நீ நிற்கும் நிலை வரும்... யோசித்துக் கொள்.

என்றும் உறவாய்...
மறத் தமிழன்... மானமுள்ள தமிழன்.
___________________

செப்டெம்பர் மாதம் 16ம் தேதி அகல் மின்னிதழில் எனது 'குழலியின் தேவன்' என்னும் கட்டுரை வெளியாகியிருக்கிறது. கட்டுரையை இங்கு பகிருமுன் அங்கு வாசிக்க...


Picture

வாசித்து தங்கள் மேலான கருத்துக்களைச் சொல்லுங்கள் நட்புக்களே... கட்டுரையை வெளியிட்ட அகல் மின்னிதழ் ஆசிரியர் GP. சத்யா அவர்களுக்கு நன்றி.
-'பரிவை' சே.குமார்.

திங்கள், 12 செப்டம்பர், 2016

சினிமா : ஸ்கூல் பஸ்ஸில் ஷாஜியும் பரியும்

ஷாஜகானும் பரிக்குட்டியும்

Image result for shajahanum pareekuttiyum cast
கார் விபத்தில் சிக்கி ஹாஸ்பிடலில் இருக்கும் மியா (அமலாபால்), விபத்துக்கு முந்திய சில வருட நினைவுகளை இழந்து விடுகிறார். குறுகிய கால நினைவு இழப்பில் இருக்கும் அவருக்கு யாரால் விபத்து நடந்தது. அவரது டைரியில் குறித்து வைத்திருக்கும் 'பி' யாராக இருக்கும் என்பதைக் கண்டறிய, அவரைத் திருமணம் செய்து கொள்ள இருக்கும் மேஜர் ரவி (அஜூ வர்கீஸ்) , பிரைவேட் டிடெக்டிவ் ஏஜென்ஸி நடத்தும் தன் நண்பனுடன் (சூரஜ் வெஞ்சாரமூடு) சேர்ந்து துப்பறிகிறார்.

ஆரம்பத்தில் விபத்துக்கு முன்னர் என்ன நடந்தது என்பதை அறிய சுவராஸ்யம் காட்டாத அமலாவின் முன்னே பிரணவ் (ஜெயசூர்யா) , பிரின்ஸ் (குஞ்சக்கோ போபன்) இருவர் முளைத்து நான்தான் காதலித்தேன் என ஆளாளுக்கு கதை சொல்கிறார்கள். அவர்கள் சொல்லும் கதையில் குழம்பும் அமலா, யார் தன்னைக் காதலித்தவர் என்பதை அறிய முனைகிறார்.

இதற்கு இடையே வில்லனும் இவருக்கு நினைவு திரும்ப வேண்டும் என்று நினைக்கிறார். இரண்டு 'பி'யில் எந்தப் 'பி' உண்மையான காதலன்...? விபத்து எப்படி நிகழ்ந்தது...? விபத்து  நிகழ்ந்த பின் அந்தக் கார் என்னாச்சு...? வில்லன் எதற்காக அமலாவுக்கு நினைவு திரும்ப வேண்டும் என்று நினைக்கிறான்...? மேஜர் ரவிக்கும் அமலாபாலுக்கும் திருமணம் நடந்ததா...? பிரைவேட் டிடெக்டிவ் என்ன கண்டு பிடித்தான்...? என்பவற்றிற்கான விடையை மெல்ல மெல்ல அவிழ்த்திருக்கிறார்கள்.

ஜெயசூர்யாவும் குஞ்சக்கோபோபனும் போட்டி போட்டு கதை சொல்வது சிறப்பு. ஜெயசூர்யா கதை சொல்லும் போதே இது ஏதோ ஒரு தமிழ்படத்துல வருமே என்று நினைத்து படத்தையும் மூளைக்குள் பிடித்து வைத்தபோது அவர்களே சொல்லிவிட்டார்கள். அதில் ஒன்றும் சுவராஸ்யமில்லை... அவர்கள் சொல்லும் கதைகள் தமிழ், ஆங்கிலம் மற்றும் மலையாளப் படத்திலிருந்து உருவியதுதான் என்றாலும் மேஜர் ரவிக்காக டிடெக்டிவ் நண்பன் சொன்ன கதை, ஒரு கட்டத்தில் உண்மையாகிப் போக மேஜர் பேஜாராகிவிடுகிறார்.

காமெடி திரில்லர் படம் என்றால் நல்லாயிருந்திருக்கும்... ரொம்ப மெதுவாகச் செல்லும் கதை பார்ப்பவர்களுக்கு திருப்தி கொடுக்காது என்றாலும் படம் ரொம்ப மொக்கை அல்ல... பொழுது போகலையின்னா எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இந்தப் படத்துக்குப் போகலாம்...

***
ஸ்கூல் பஸ்

Image result for school bus malayalam movie review

டத்தின் பெயருக்கும் படத்தும் சம்பந்தம் என்பது அடிக்கடி வந்து போகும் ஸ்கூல் பஸ் என்பதாக மட்டுமே எனக்குத் தோன்றியது. ரெண்டு மூணு இடத்தில் பசங்க ஸ்கூலுக்கு அந்த பஸ்ஸில் போவார்கள் அப்புறம் ஒரு இடத்தில் பள்ளிக்கூடத்தில் உங்களுக்குப் பிடித்த இடம் எது என்றும் அதை விடுத்து உங்களுக்கு வேறு எந்த இடம் பிடிக்கும் என்றும் போலீஸ் விசாரணையில் கேட்கும் போது பசங்க ஸ்கூல் பஸ் என்பார்கள் அவ்வளவே படத்துக்கும் பெயருக்குமான சம்பவம். படம் குறித்து இயக்குநர் ஒரு பேட்டியில் பள்ளிகளில் நடக்கும் சில மோசமான சம்பவங்களை வெளிச்சம் போட்டுக் காட்டும் இந்தப் படம் என்றெல்லாம் சொல்லி கேரளா லுலு மாலில் ஸ்கூல் பஸ் போல செட் அமைத்து வைத்திருந்தாராம். அவரின் ஹவ் ஓல்ட் ஆர் யூ போல நம்மை ஈர்க்கவில்லை... காரணம் அப்பா தோலுரித்தது போல் இது எதையும் தோலுரிக்கவில்லை.

பசங்க செய்யும் தவறை பெற்றவர்களிடம் மறைத்து அதன் பின்னான காய் நகர்த்துதலில் என்ன ஆகிறது என்பதைச் சொல்லும் படம் இது. பள்ளியில் செய்யும் தவறுக்காக, பெற்றோருடன் வரவேண்டும் என்று சொல்லும் பள்ளி நிர்வாகம், போனில் குறுஞ்செய்தியும் அனுப்புகிறது. ஆனால் அதை செல்போனை பிரித்து மேயும் குழந்தைகள் பார்த்து அதற்குப் பதிலும் அனுப்பி, சொந்தங்களை எல்லாம் விரோதி ஆக்கி வைத்திருக்கும் அப்பா மற்றும் பிசினஸ் டென்சனில் இருக்கும் அம்மா இவர்களிடம் சொன்னால் நம்மை கொன்றுவிடுவார்கள் என்பதை மனதில் கொண்டு அதை மறைத்து விடுகிறார்கள். தப்புச் செய்யும் பையன் அடுத்த மூன்று நாட்களுக்கு பள்ளிக்குச் செல்லாமல் தங்கையைக் கூட்டிக் கொண்டு ஊர் சுற்ற ஆரம்பிக்கிறான்.

மூணு சென்ட் இடப் பிரச்சினையில் இருக்கும் பெற்றோருக்கு இதெல்லாம் தெரியவில்லை. ஒவ்வொருவராய் பார்த்துச் சொல்ல, ஒரு பெண்ணிடம் ஆட்டோவுக்குப் பணம் கேட்டு, அவள் இவர்களின் அம்மா நம்பர் கேட்டு போன் செய்ய, அங்கிருந்து தப்பி ஓடி தியேட்டரில் படம் பார்க்கும் போது மாட்டிக் கொள்கிறார்கள். மாட்டினால் கொன்று விடுவார்கள் என்பதை அறிந்தவன் தங்கையுடன் ஓடி பாத்ரூமுக்குள் நுழைந்து சன்னல் வழியாக அவளுடன் தப்பிச் செல்ல நினைத்து முடியாமல் போக, அவளை விட்டுவிட்டு சன்னலை உடைத்துக் குதித்து எஸ்கேப் ஆகிவிடுகிறான்.

அதன் பின் அவனைத் தேடும் படலம்... அவன் சிக்கினானா...? அவன் செய்த தவறுக்கு தண்டனை கிடைத்ததா..? சொந்தங்களைப் பகைத்துக் கொண்ட அப்பா திருந்தினாரா...? பிஸினஸ் டென்சனென குழந்தைகளை கவனிக்க மறந்த அம்மா மாறினாரா...? மூணு செண்ட் இடம் என்னாச்சு...?  மூணு செண்ட் இடத்துக்காக சண்டையிட்ட கலெக்டர் சகோதரன் இவர்களுக்கு உதவினாரா...? என்பதுதான் மீதிக்கதை.

இதில் ஜெயசூர்யா சொந்தங்கள் முதல் பக்கத்து வீட்டுக்காரர்கள் வரை பகைத்துக் கொண்டு வாழும் மனிதராய் வருகிறார்... மகனை இழந்து விட்டு அவனைத் தேடித் திரியும் போது மனைவியிடம அழுது புலம்புவது... போலீசாரிடம் மோதுவது... போன்ற காட்சிகளில் கலக்கல்.

இன்ஸ்பெக்டராக குஞ்சக்கோபோபன்... எப்படியும் பையனைக் கண்டுபிடிக்க வேண்டும் என தன் மனைவியின் முதல் பிரசவத்துக்கு கூட போகாமல், குழந்தையின் போட்டோவை வாட்ஸ்சப்பில் பார்த்து சூவீட் வாங்கிக் கொடுத்து அலையும் கதாபாத்திரம். நிறைவாய்...

சின்னக் குழந்தைகள் பள்ளியில் நடக்கும் விசயத்தை மறைப்பதால் வரும் விபரீதத்தைச் சொல்லியிருக்கிறார்கள். படம் பரவாயில்லை ரகம்தான்... ஆஹா... ஓஹோன்னு புகழும் அளவுக்கு ஒன்றும் இல்லை என்றாலும் பார்க்கலாம்.
***
காவிரிப் பிரச்சினை குறித்தான கட்டுரை ஒன்று பாதியில் நிற்கிறது.... முடிந்தால் நாளை பகிர்கிறேன். நாய் கடித்தால் திருப்பிக் கடிக்க வேண்டும் என்றில்லை... நம் பக்கம் வன்முறைகள் வேண்டாம்... அப்பாவிகளை அடிப்பதால் அரசியல்வாதிகளின் சித்து விளையாட்டு தீர்ந்து விடுமா என்ன...? புரியாத கர்நாடகக்காரன் புத்தி கெட்டு அலையுறான்.... பெங்களூரில் இருக்கும் நம் தமிழ் சொந்தங்கள் பத்திரமாக இருங்கள். இப்போதைக்கு உங்கள் பாதுகாப்பே முக்கியம்.
-'பரிவை' சே.குமார்.

வெள்ளி, 9 செப்டம்பர், 2016

மனசு பேசுகிறது : மனிதனாக வாழ்வோமே

Image result for மனிதம்
தயத்தை அடகு வைத்துவிட்டு இயங்கும் சூழலில்தான் இன்றைய மனிதம் இருக்கிறது. ஐந்தறிவு ஜீவன்களெல்லாம் ஒன்றுக் கொன்று உதவி செய்து வாழப் பழகிக் கொண்டிருக்கும் காலத்தில் நாம் மட்டுமே உதவும் மனப்பான்மையை தீயிலிட்டு விட்டு உற்சாகமாக வலம் வருகிறோம். நம்ம மனசுக்குள் இப்பல்லாம் இணையம் புகுந்திருச்சு... எது நடந்தாலும் அது நல்லதோ... கெட்டதோ முகநூலிலும் டுவிட்டரிலும் பதிவு செய்து லைக்குக்களை அள்ள வேண்டும் என்பதே மனசுக்குள் நிறைந்து நிற்கிறது. இதுதான் இன்றைய வாழ்க்கையும் ஆகிப் போய்விட்டது என்பதே உண்மை.

சமீபத்தில்தான் எத்தனை நிகழ்வுகள்... நம் மனிதாபிமானத்தை அடகு வைத்துவிட்டு செல்போனில் படம் பிடித்துக் கொண்டு நின்றதை உலகுக்கு படம் பிடித்துக்காட்டிய நிகழ்வுகள்... எங்கே போகிறோம் என்பதை எடுத்துச் சொல்லிய நிகழ்வுகள்... அது கொலைகளாகட்டும்... கொள்ளைகளாகட்டும்... வாழ்க்கைப் பிரச்சினைகளாகட்டும் எல்லாவற்றிலும் நம் செயல்பாடுகள் ரொம்ப மோசமாகத்தான் இருக்கிறது. அதை விடக் கொடுமையான விஷயம் என்னவென்றால் ஜாதி, மத பிரச்சினைகள்... ஊடகங்களே இன்ன சாதி என்பதை சொல்லிச் செய்தி போடுவதுதான்.

சில நாட்களுக்கு முன்னர் ஒருவர் இந்தியாவில் இப்படி நடக்குது... அப்படி நடக்குது உதவுவார் யாருமில்லை என்று என்.ஐ.ஆர். ஆட்கள் அமெரிக்காவிலிருந்து லண்டனில் இருந்தும் பேசுகிறார்கள். இங்கு எல்லாம் நல்லாத்தான் இருக்குது... நீங்க கூவுறதை விடுங்க என்று கண்டனப் பதிவை வெளியிட்டிருந்தார். எல்லாவற்றிற்கும் கூவுபவர்கள் மீதான கோபமாகக் கூட அது இருக்கலாம்... ஆனாலும் மனிதாபிமானமுள்ளவன் கூவத்தான் செய்வான்... அவரின் கூற்றைப் போல எல்லாம் நல்லா நடந்தால் சந்தோஷமே... அப்படி எல்லாம் நடக்கும் பட்சத்தில் எதற்கெடுத்தாலும் கூவுபவன் பைத்தியகாரனாகவே இருப்பான். இவ்வளவு பிரச்சினைகள் சுழன்று அடிக்கும் போது  நல்லது எப்படி நடக்கும்..?

இறந்த மனைவியை கொண்டு செல்ல மருத்துவமனை ஆம்பூலன்ஸ் ஏற்பாடு செய்து தராத நிலையில்... அதுவும் இலவச ஆம்பூலன்ஸ் வசதியை மாநில அரசு செய்து கொடுத்திருந்தும்... அது குறித்து அறிந்திராத மலைசாதி மனிதனுக்கு தாங்களே முன் வந்து இலவச ஆம்பூலன்சை ஏற்பாடு செய்து கொடுக்காத மருத்துவமனையில் எப்படி மனிதாபிமானம் இருக்கும்... அறுபது கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் ஊரை நோக்கி, வயதுக்கு வந்த பெண் குழந்தையுடன் இறந்த மனைவியை தோளில் சுமந்து நடக்க ஆரம்பித்து விட்டான். வழியெங்கும் செல்போனைத் தூக்கிக் கொண்டு நிற்கும் நம்மவர்கள் யாருமே உதவி செய்ய வேண்டும் என்று நினைக்காதது வேதனையே... விரட்டி விரட்டி படமெடுத்துப் போட்ட தொலைக்காட்சி நிருபர், கலெக்டருக்குச் சொல்லி அவர் மூலம் ஆம்பூலன்ஸ் ஏற்பாடு செய்யப்பட்டு அந்த மலைசாதி மனிதரைச் சென்றடைந்த போது பனிரெண்டு கிலோ மீட்டர் கடந்திருந்தார். கொஞ்சம் யோசித்துப் பார்ப்போம்... தன்னில் பாதியான மனைவியின் சடலத்தை தனது தோளில் சுமக்கும் போது அந்த மனிதன் என்ன நினைத்திருப்பான்..? மலர்கள் தூவி ஊர்வலமாக இறுதியாத்திரை செல்ல வேண்டிய அம்மா, துணியில் சுற்றி அப்பாவின் தோளிலும்... தூக்க முடியாத தருணத்தில் சற்றே தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள சாலையோரத்தில் கிடத்தியும்... பயணிக்கும் போது அந்தப் பெண் குழந்தை என்ன நினைத்திருப்பாள்..? அவளின் மனநிலையை யோசிக்கும் எப்போது இதயம் வலிக்கிறது... எவ்வளவு கொடுமை இது...? எதிரிக்கும் வரக்கூடாத கொடுமை இது.... இங்கே மனிதாபிமானம் எங்கே போனது... எல்லாம் நல்லாத்தான் நடக்குதுன்னு சொன்னோமே... இந்தப் பிரச்சினையில் என்.ஆர்.ஐ. மட்டுமல்ல நாம் எல்லாரும்தானே புலம்பித் தீர்த்தோம்.

இறந்த மூதாட்டியின் உடம்பை இடுப்போடு ஒடித்துக் கட்டித் தூக்கிப் போன நிகழ்வில் அந்த மனிதர்களிடம் மனிதாபிமானம் இருந்ததா...? இல்லையே..? இவர்கள் சரியாகத்தான் செய்தார்கள் என்று சொல்ல முடியுமா..? இப்படி நடக்கிறதே தட்டிக்கேட்க ஆளில்லையா என்று கேட்டால் தப்பா...? எந்த மாதிரியான சமூகத்தில் நாம் வாழ்கிறோம்... எதை நோக்கிப் பயணிக்கிறோம்..? இன்னும் சில வருடங்களில் வீட்டுக்குள் ஒரு நிகழ்வு என்றாலும் நாம் செல்போனில் வீடியோ எடுக்க மாட்டோம் என்பது என்ன நிச்சயம்..?

வீட்டில் பிரசவித்த பெண்ணை உடம்பு முடியாத நிலையில் மருத்துமனைக்கு அழைத்துச் செல்ல, வாகன வசதி ஏற்படுத்திக் கொள்ள வசதியற்ற நிலையில் பேருந்து பயணித்து... பயணத்தின் போது அந்தப் பெண் இறக்க, பயணிகளும் டிரைவரும் பொணத்தைக் கொண்டு போக முடியாது என்று சொல்லி போக்குவரத்து அற்ற ஒரு இடத்தில் இறக்கிவிட்டுச் செல்ல, அந்த வழியாக வந்த வழக்கறிஞர் ஒருவர் போலீசுக்கு போன் செய்து அவர்களும் மறுத்துவிட, தன்னோட நண்பர்கள் உதவியுடன் அவர்களின் வீட்டில் கொண்டு போய் விட்டதை எவ்வளவு பேர் அறிவோம்... பேருந்தில் இருந்த மனிதர்களுக்கும் போலீஸ்காரர்களுக்கும் இல்லாத மனிதாபிமானம் அந்த வழக்கறிஞருக்கு இருந்ததில் மகிழ்ச்சி அடைவோம். அவரை வாழ்த்துவோம்... இந்த விஷயத்தில் மனிதாபிமானமற்ற மனிதர்களை விட உதவிய அந்த மனிதரால் நல்லது நடந்து கொண்டுதான் இருக்கிறது என்பதை ஏற்றுக் கொள்ளலாம். இதற்கு யாரும் பொங்கிப் பதிவிடவில்லை என்பதையும் அறியலாம்.

இதில் இன்னொரு கூத்து என்னவென்றால் எல்லாப் பிரச்சினைகளையும் ஆளும் பாஜக அரசின் மீது அள்ளித் திணிப்பதுதான்... பிரதமரின் செயல்பாடுகளைக் குறித்து ஆயிரத்தெட்டு கருத்து முரண்பாடுகள் இருக்கலாம்... அவர் ஊர் சுற்றலாம்... அதன் பின்னணியில் வளர்ச்சிக்கான விதை இருப்பதாக சிலர் சொல்கிறார்கள்... அவர் வாழ்கிறார் என்றும் சிலர் சொல்கிறார்கள். நாம் அரசியல் பேசுவதற்கான கட்டுரை இதுவல்ல... ஆனாலும் ஒருவனுக்கு முள் குத்தினால் குத்திய முள்ளை ஏன் அங்கே அவர் போட்டார் எனப் பேசுவது கேலிக்கூத்தாக இருக்கிறது. ஒரிசாவில் ஆம்பூலன்ஸ் கொடுக்க மாட்டேன் என்று சொன்ன மருத்துவமனை நிர்வாகத்தின் செயல், தொலைக்காட்சியில் செய்தியாகி கலெக்டருக்குப் போன பின்னரே ஆளும் அரசாங்கத்திற்குத் தெரிய வந்திருக்கும். அப்படியிருக்க பிரதமரைத் திட்டும் நம்மை என்னவென்று சொல்வது..? குறை காண வேண்டியதுதான்... ஆனால் அதைக் காண வேண்டிய இடத்தில் காண வேண்டும்... எல்லாத்துக்கும் பொங்கும் மகளிர் அமைப்புக்கள் கூட சமீப காலமாக சினிமாவுக்கு பொங்கும் அளவுக்கு பொதுப்பிரச்சினைகளில் பொங்குவதில்லை.

கள்ளக்காதலைத் தட்டிக் கேட்ட நாலு வயதுக் குழந்தையை தாய் கொன்றாள்ன்னு செய்தி வாசிக்க நேர்ந்தது. நாலு வயதுக் குழந்தை தட்டிக் கேட்குமா என்பது செய்தி வெளியிட்ட நிருபருக்குத் தெரியாமலா இருக்கும். இந்தக் கொலை எதற்கானது என்பதும் அவருக்குத் தெரியும்... இருந்தாலும் பத்திரிக்கை பரபரப்புக்காக இப்படியான செய்திகளைப் போடுகிறார்கள். இதனால் யாருக்கு என்ன லாபம்... நேற்று ஒரு செய்தி... ஐந்து வயதுப் பையனை வெட்டிக் கொன்றிருக்கிறான் ஒரு மனிதன்... இவர்களுக்கு எல்லாம் சரியான தண்டனை... அரபு நாடுகளில் கொடுப்பது போல் கொடுத்தால் அடுத்து ஒருவனும் தவறு செய்ய மாட்டான்.  நமக்கு இணையத்தில் வேலை இருக்கிறது. அரசியல்வாதிகளுக்கு இருப்பைச் சேர்க்க வேண்டிய வேலை இருக்கிறது. காவல்துறையினருக்கோ அரசியல்வாதிகளின் பின்னே அலையவும் அஞ்சுக்கும் பத்துக்கும் கை நீட்டவும் வேண்டிய முக்கிய வேலை இருக்கிறது. அப்படிப்பட்ட சூழலில் மனிதாபிமானமுள்ள ஒருவன் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் பொங்கத்தான் செய்வான். பொங்கதே என்று சொல்பவன் இந்தப் பிரச்சினைகளில் போராட வேண்டியதுதானே...

இது ஒரு பக்கம் என்றால் நாம் ஜாதி, மதங்களில் காட்டும் நிலைப்பாடு பற்றி சொல்ல வேண்டியதில்லை. ஒரு மதத்தைக் குறித்து தரக்குறைவாக பேசும் முன்னரோ எழுதும் முன்னரோ சற்றே சிந்திக்க வேண்டும் ஆனால் நாம் அதைச் செய்வதில்லை. முகநூலில் ஆளாளுக்கு தாக்கவும் தூக்கவும் செய்கிறார்கள். நான் மதிக்கும் நண்பர் ஒருவர் கோகுலாஷ்டமியின் போது கிருஷ்ணரைப் பற்றி தவறான பதிவொன்றை இட்டிருந்தார். அதைவிடக் கொடுமை என்னவென்றால் இந்து மதக் கடவுள்களைப் பற்றி அவர்களே தரக்குறைவாக எழுதும் போது நாம் எதற்காக அதையே எழுதி நம் மதத்தின் மீது சேறை வாரி வீசிக்கொள்ள வேண்டும் என்ற அட்வைஸ் வேறு. அடேங்கப்பா..! அடுத்த மதக் கடவுளை தரக்குறைவாய் பேசிவிட்டு என்ன ஒரு நல்ல அறிவுரை. 

நம் மதத்தை... நம் மத நம்பிக்கையை... நம் தெய்வத்தைக் குறித்து என்ன வேண்டுமானாலும் எழுதுங்கள்.... மற்ற மதங்குறித்தோ... அவர்களின் தெய்வ நம்பிக்கை குறித்தோ கேவலமாக எழுத என்ன வேண்டி வந்தது...? ஒவ்வொரு மதத்துக்கும் ஒவ்வொரு விதமான கடவுள் நம்பிக்கைகள் உண்டு... அது குறித்து கேள்வி எழுப்பத் தேவையில்லையே... அப்படிக் கேள்வி எழுப்புவதால் நமக்கு என்ன லாபம்..? இந்த மத அரசியல் செய்பவர்களின் எண்ணமே ஒற்ருமையாய் இருக்கும் நமக்குள் அடித்துக் கொண்டு சாவதை வேடிக்கை பார்க்க வேண்டும் என்பதுதான். இவற்றிற்கு எல்லாம் நாம் செவி சாய்த்து நம் சுயத்தையும் நம் நட்பையும் இழப்பதில் இல்லை வாழ்க்கை... நாம் நாமாக இருப்போம்... கொளுத்துபவர்கள் கொளுத்திப் போட்டுக் கொண்டே இருக்கட்டும். எடுத்தால்தானே வெளிச்சம் பரவும்... அங்கேயே கிடந்தால் அதுவே அணைந்து விடும் என்பதை உணர்ந்து அதன்படி நடப்போம்.

எல்லாம் நல்லபடியாக நடக்கட்டும்... நாமும் நல்லாவே இருப்போம்... சாதிகளை எல்லாம் மதங்களாக்கிப் பார்க்கத் துடிக்கும்மனிதர்களுக்கு மதம் பிடித்திருக்கிற காரணத்தால்தான் மனிதம் செத்துவிட்டது போலும். பிடித்த மதத்தை உங்களோடு வைத்துக் கொண்டு பிடிக்காத செயலை செய்வதை தவிர்ப்போம்.

மனிதனாய் வாழ்வோம்... மனிதாபிமானத்தோடு வாழ்வோம்...

-'பரிவை' சே.குமார்.

செவ்வாய், 6 செப்டம்பர், 2016

சினிமா : கிடாரி

Image result for கிடாரி

ங்க பக்கம் பருவம் அடையாத... அதாவது சினை பிடிக்கும் பக்குவத்தை எட்டாத வரை மாட்டை 'கிடேரி' என்று அழைப்பார்கள். பசுவங்கிடேரி... எருமைக்கிடேரி என்பது பெயராகவே ஆகிவிடும். ஒருவேளை கிடாரி என்பதுதான் பேச்சு வழக்கில் கிடேரி என்று ஆகியிருக்கக் கூடும். எங்க வீட்டில் பிறந்து வளர்த்த மாடுகளில் பலவற்றை  'கிடேரி' என்றே அழைத்துப் பழக்கப்பட்டதால், அவற்றை மேய்க்கும் போது எங்காவது ஓட எத்தனித்தால் 'ஏய் கிடேரி' என்று கத்தினால் அப்படியே நின்று திரும்பிப் பார்த்து குரல் கொடுக்கும். கிடாரி என்பதற்கு ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொன்றிற்குச் சொல்கிறார்கள்.  கிடேரி என்பது பெண் மாட்டைக் குறிப்பதால் இந்தப் படத்திற்கு பெயர் வைத்தார்கள் என்றால் அது நாயகனைக் குறிக்கும் என்பதாக இல்லை... எல்லாவற்றிக்கும் துள்ளி எழும் அவனைப் பெட்டை என்ற பதத்தில் அழைக்கமாட்டார்களே... ஒருவேளை வில்லனாய் சித்தரிக்கப்படுபவர் தனது வாழ்க்கைக்காக மற்றவரை அழிப்பதாலும் இந்தப் பெயர் வைத்திருப்பார்கள் என்றே தோன்றுகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு விதமான பெயர்காரணம் இருப்பதால் படத்தின் பெயரைப் பிரபலமாக்க நாயகனுக்கு கிடாரி என்ற பெயரை வைத்திருக்கிறார்கள். ஊரில் அடங்காப்'பிடாரி' என்று சொல்வார்களே அப்படிப்பட்டவன்தான் இந்த கிடாரி. 

கிடாரி... இங்கு யாருக்கும் அடங்காமல் திமிரிக் கொண்டு திரியும்... நம்ம பக்கம் அப்படித் திணவெடுத்துத் திரிபவனை கோவில் காளை என்றோ பொலி எருது என்றோ அழைப்போமே அப்படிப்பட்டவந்தான் இவன்... முறுக்கு மீசையும் குறுங்கத்தியுமாகத் திரிபவன். தன்னை வளர்த்து பிள்ளை போல் நினைப்பவருக்காக அடிக்கடி ரத்தம் பார்க்கும் ராட்சஸன். அவனுக்குள்ளும் மென்மையான காதல் இருக்கிறது... வளர்த்தவள் என்றாலும் அவள் மீது பெற்றவள் போன்ற அன்பு இருக்கிறது... உப்பு போட்ட வீட்டுக்கு துரோகம் பண்ண மாட்டேன் என்ற நல்ல குணமும் விரவிக் கிடக்கிறது.

கிடாரி... யாரை நல்லவன் என்று நம்புகிறோமே அவன் நல்லவன் இல்லை என்பதே படத்தோட கரு... சசிகுமாரோட படங்களில் எல்லாமே இதுதான் மையக்கரு... தனது படங்களில் வன்முறை இருந்தாலும் சில நல்ல விஷயங்களைப் பேசும் சசிகுமார், படம் முழுவது தன்னைச் சுற்றியே நகரும்படி கதை அமைப்பதில் கில்லாடி. இந்தப் படத்தில் கொஞ்சம் மாறுதலாய் வன்முறைக்கு வன்முறைதான் சரி என்று சொல்வதுடன் எல்லாக் கதாபாத்திரங்களும் தன்னைப் பற்றி பேசும்படி வைத்திருக்கிறார். இதில் சாதித்தாரா..? இல்லை நம்மைச் சோதித்தாரா...? என்றால் இரண்டும் சமபங்குதான்... பெரிய எதிர்பார்ப்பைக் கொடுத்த படம்... ரத்தச் சகதியில் சிக்கி குற்றுயிராய்க் கிடந்து தவிக்கிறது.

படத்தில் எல்லாரையும் பின்னுக்குத் தள்ளி முன்னுக்கு நிற்பவர் எழுத்தாளர் வேல ராமமூர்த்தி அவர்கள்தான்... 'ஏய் பொட்டை வெளியில வாடா'ன்னதும் கோவணத்தை வரிந்து கட்டியபடி எண்ணெய் தேய்த்த உடம்புடன் வேல் கம்பைத் தூக்கிக் கொண்டு வீதிக்கு ஓடிவரும் போது  மனுசன் கலக்கிட்டாரு... அவர் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு காட்சியிலும் சிறப்பாக நடித்திருக்கிறார்... மகனிடம் கோபப்படும் இடம்... கிடாரி வரவில்லை என்று வருந்தி இரவெல்லாம் தூங்காமல் விழித்திருந்து, அவன் வீட்டுக்குள் நுழைந்து மாடத்தில் நிற்கும் தன்னைப் பார்த்து லேசான புன்னகை பூத்ததும் விடும் ஒற்றைப்  பெருமூச்சு... மகனின் பிணத்தைப் புரட்டி செருப்பை எடுத்துக் கொண்டு பதட்டத்துடன் நடப்பது என தூள் கிளப்புகிறார். வேல ராமமூர்த்தி ஐயா அவர்கள் சிறப்பாக நடித்திருக்கிறார் என்றால் அவரின் போக்கில் நடிக்க வைத்த இயக்குநரையும் தயாரிப்பாளரையும் பாராட்டியே ஆகவேண்டும். பெரும்பாலான படங்களில் இது போன்ற பாத்திரங்களையே அவர் ஏற்பதுதான் ஏனென்று தெரியவில்லை... மாற்றிக் கொண்டால் மிகச் சிறப்பான இடத்தை அடையும் நாள் வெகுதூரத்தில் இல்லை என்பதை அவர் உணர்ந்து கதாபாத்திரத்தை தேர்வு செய்ய வேண்டிய காலகட்டம் இது.

ரத்த வாடை வீசும் படத்தில் காதல் தென்றலை வீசச் செய்து நெஞ்சை அள்ளி நம் நெஞ்சுக்குள் 'விரல் தொடும் தூரத்தில் வரம் இருக்கு' என்று அமர்ந்து கொள்பவர் நிகிலா விமல்... இந்தப் பொன்ணு என்னமா நடிக்குது... வெற்றிவேல் படத்தில் சோகமாய் இருக்கும் போதே பட்டையைக் கிளப்பியிருக்கும் இதில் சொல்லவா வேண்டும்... காதல் காட்சிகளில் எல்லாம் செம...  காதல் காட்சிகளை ரொம்ப ரசனைக்குரியதாய் ஆக்கியதில் பெரும்பங்கு இவருக்குத்தான்.... அந்த உதட்டுச் சுழிப்பு... புருவ நெளிப்பு... கண் ஜாடை... சின்னச் சின்ன துள்ளல்கள்... என எல்லாமே கலக்கல். தமிழ் சினிமாவுக்கு ஒரு நல்ல நடிகை கிடைத்திருக்கிறார். ஊதாக்கலரு ரிப்பனில் ஸ்ரீதிவ்யா கண்ஜாடை காட்டுமே.... உன்மேல ஒரு கண்ணுதானில் கீர்த்தி கண்ஜாடை காட்டுமே... அதெல்லாம் பின்னுக்குத் தள்ளி வண்டியில நெல்லு வருமில் கண்ஜாடை காட்டி எல்லாரையும் தன் பக்கம் இழுத்திருச்சு... உண்மையிலேயே நல்ல நடிப்பு... தன்னோட படங்களில் கதாநாயகிக்கு நிறைய காட்சிகள்... அதுவும் நிறைவாய் கொடுப்பது சசிகுமாரின் பாணி. அது இதிலும்... நிகிலாவும் பட முழுக்க வருவது போல் காட்சிகள் வைத்ததில் ரத்தத்தின் ஊடே காதல் பாய்ந்திருக்கிறது.

கொம்பையா பாண்டியன் அதாங்க வேலராமமூர்த்தி ஐயாவின் மகனான வருபவர் மிகச் சிறந்த எழுத்தாளுரும் இலக்கியவாதியுமான வசுமித்ரவாம். அவரோட வசன உச்சரிப்பு... பேசும் போது முகத்தில் காட்டும் பாவங்கள் என பக்காவாச் செய்திருக்கிறார். நடிகனின் மகன் நடிகன் ஆவது போல்... அரசியல்வாதி மகன் அரசியல்வாதி ஆவது போல் ஒரு ரவுடியின் மகன் ரவுடி ஆக ஆசைப்படுவான் என்பது நம்ம தமிழ்ச் சினிமாவில் எழுதப்படாத விதி. கபாலி குடும்பச் சிதைவுக்கும் இதுதானே காரணம்... அதேதான் இங்கும்... தன் இடத்தில் சசியா என்று பொருமுபவரை தன்னுள் அடக்கி ஏத்திவிட்டு தனக்கான வரவு செலவு கணக்கை முடிக்க நினைக்கும் பெண் ஒருத்தியின் தூண்டுதலில் சிலிர்த்தெழுந்து அடங்கிப் போகிறார்.

சசிகுமார்... மீசையைத் தடவிக் கொண்டு... குறுங்கத்தியை வாயில் கடித்துக் கொண்டு... டநான் இருக்கும் போது உங்களை போட வந்துட்டானே...' என்று மதயானை போல் கொம்பையா பாண்டியனுக்காக சதக்.. சதக்குன்னு காசாப்புக் கடையில் ஆடு வெட்டுவது போல் வெட்டுகிறார். தன்னோட படத்தில் வன்முறைகள் இருந்தாலும் கடைசியில் ஒரு நல்ல தீர்வைச் சொல்லி முடிப்பார். இதில் வன்முறைக்கு வன்முறையே தீர்வு என்பதாய்த்தானே சொல்கிறார்... திருந்தி வாழவில்லை... யாரையும் திருத்தவும் இல்லை... நீண்ட முடி வைத்து வழித்துச் சீவி.... எப்பவும் போல் தாடியுடன் முறுக்கிய மீசை வைத்து கண்ணில் வன்மம் காட்டி நடித்து சசிகுமார் நாயகனாக நின்றாலும் வேலராமமூர்த்தியுடன் வரும் காட்சிகளில் எல்லாம் அந்த மனுசன் நாயகனைப் பின்னுக்குத்தள்ளி வில்லனை முன் நிறுத்திவிட்டார். சசிகுமார் வன்முறைகளில் இருந்து வெளி வரவேண்டிய காலகட்டத்துக்கு வந்துவிட்டார். வன்முறையை வைத்து மட்டுமே நல்ல கருத்தை சொல்ல வேண்டும் என்பதில்லை... சொல்ல வேண்டிய நல்லதை எப்படியும் சொல்லலாம் என்பதை உணர வேண்டும். காதல் காட்சிகளில் அசத்துகிறார். சின்னச் சின்ன சில்மிஷங்களில் நிகிலாவுக்கு இணையாய்... எப்பவுமே நகைச்சுவை காட்சிகளை தனக்கும் வைத்துக் கொள்ளும்  இவர் இதில் 'தூளியிலே ஆட வந்த' பாடலில் நகைச்சுவையில் கலக்கியிருக்கிறார்... சசி ராக்ஸ்.

கொம்பையா பாண்டியனின் மைத்துனராய்.... மகனுக்கு பெண் கொடுத்த சம்பந்தியாய் வருபவர் எழுத்தாளர் மு.இராமசாமி ஐயாவாம்... கொந்தளிப்பை தன்னுள்ளே வைத்துக் கொண்டு சின்னக் குழந்தையின் காலை கொஞ்சி விளையாடும் அலைகளை அனுப்பும் கடலாய் அவர் இருந்தாலும் அப்படியான கதாபாத்திரத்துக்கு இன்னும் அழுத்தம் கொடுத்து நடித்திருக்கலாமே என்று எண்ண வைத்தது என்னவோ உண்மை என்றாலும் நிறைவாகத்தான் செய்திருக்கிறார். நாடக நடிகர்கள், எழுத்தாளர்கள் என நல்ல நடிகர்களை வைத்து செதுக்கியிருப்பதால்  படக்குழுவைப் பாராட்டலாம்.

இசை தர்புகா சிவா... பின்னணி இசையில் கலக்கல்... பாடல்களும் சூப்பராய் வந்திருக்கிறது.... மெலோடி பாடல்கள் செம... வண்டியில நெல்லு வரும் பாடல் முன்னரே இணையத்தில் கேட்ட பாடல்தான்... தஞ்சை அந்தோணி அவர்களின் பாடல்... அவரே இதில் பாடியும் ஆடியும் இருக்கிறார். எல்லாருக்கும் தலகாலு புரியலையே பிடிக்கும்... எனக்கு வண்டியில நெல்லு வரும் பாடலின் இடையே சசி-நிகிலா ரொமான்ஸாய் வரும் சில வரி மெலோடியான 'விரல் தொடும் தூரத்தில் வரமிருக்கு....'  ரொம்ப பிடிச்சிருக்கு... இன்னைக்கு மட்டும் தொடர்ந்து ஓடிக்கிட்டே இருந்துச்சு அந்த அஞ்சாறு வரி மட்டும்...  டிரஸ்ம்சைப் போட்டு உருட்டாமல் உருப்படியான இசை கொடுத்த சிவா...  முன்னணி இசையமைப்பாளராய் வரும் காலம் விரைவில் வரும்.... வாழ்த்துக்கள் சிவா.

ரத்தச் சட்டையை அணிந்து களமிறங்கியிருக்கும் இயக்குநர் பிரசாத் முருகேசன் மாஸ் படத்தைக் கொடுத்து தன்னை தமிழ் சினிமா இயக்குநர்களில் ஒருவராய் அடையாளம் காட்டிக் கொள்ள முயன்றிருக்கிறார். இது தோல்வி அல்ல வெற்றிதான் என்றாலும் எதற்காக ஒரு இளம் இயக்குநரின் மனதுக்குள் வன்முறை கதைக்களமாய்... சாதியையும் வன்முறையையும் தூக்கி வைத்து கொண்டு படம் காட்டினால் சாதித்து விடலாம் என்ற எண்ணத்தை இளம் இயக்குநர்கள் சுமப்பது வேதனையான விஷயம். காதல் காட்சிகளில் இயக்குநரின் சொந்த அனுபவம் பேசியது போல் அவ்வளவு சிறப்பு...  கதையிலும் நல்ல நேர்த்தி... சின்னச் சின்ன காட்சிகளிலும் அதீத கவனம்... வன்முறை இல்லா நல்ல படம் கொடுத்தால் இயக்குநராய் நிறைய சாதிக்கலாம்.

ஓ.ஏ.கே. சுந்தர் வில்லானாக காட்டப்பட்டு காமெடியனாக்கப்பட்டு அதிகாரம் இழந்த அரசியல்வாதிபோல் தெருவில் நிற்கிறார். அவருக்கு அண்ணனாக வருபவர், வில்லன்களாக வரும் மற்றவர்கள், கொம்பையா பாண்டியனின் மனைவி, மருமகள், குழந்தையை இழந்து அதற்காக தன்னையே அடகு வைக்கும் அந்தப் பெண், அவளின் கணவன், மூக்கையாவாக வரும் காளை, விநாயகமாக வருபவர், குழறிப் பேசியபடி வருபவர் என அனைவரும் தங்கள் கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

சாத்தூர் மண்ணையும்... அந்தப் பக்கத்து மனிதர்களையும்...  அந்தக் கிராமத்தையும் அழகாய் படம் பிடித்திருக்கிறார் கதிர்.  பிரவீண் ஆன்டணியின் படத்தொகுப்பு மிகவும் சிறப்பாக இருக்கிறது. சண்டைக் காட்சி திலீப் சுப்புராயன்... நிறைய இடங்களில் மிரட்டியிருந்தாலும் இன்னும் மிரட்டியிருக்கலாமே என்று யோசிக்க வைத்தது.  சோளத்தட்டையில் மாட்டி கார் நின்ற இடத்தில் நடக்கும் சண்டைக்காட்சியில் தூள் கிளப்பியிருக்கிறார்.

இன்னொருத்தரை சொல்லாமல் விட்டாச்சு பாருங்க... நம்ம சீவலப்பேரி பாண்டி நெப்போலியனின் மறு வருகை... நெப்போலியனை நீங்கதான் நடிக்கணும்ன்னு சொல்லி அழைத்து வந்தேன்னு சசிகுமார் சொல்லியிருந்தார். உண்மைதான்... அந்தக் காதாபாத்திரம், படத்தினை திருப்பிப் போடும் சின்ன பிளாஸ்பேக் காட்சி.... இவர் நடிக்காமல் வேறு யார் நடித்திருந்தாலும் எடுபட்டிருக்காது... கனகச்சிதமான நடிப்பு... நடிப்பை தொடருங்கள் நெப்ஸ்.... ரகுவரன் இல்லாத சினிமாவில் நீங்களும் விலகியிருப்பதால் நிறைய வில்லன் கதாபாத்திரங்கள் வாழாமலேயே போய்விட்டன.

ஒரு கிராமத்து வீட்டுக்குள் எப்படி இருக்குமோ அப்படியான வாழ்க்கையை அச்சு அசலாகத் தந்திருக்கிறார்கள்.  நடிகராய், இயக்குநராய், தயாரிப்பாளராய்  பரிணமிக்கும் சசிக்குமார் அவர்கள் தொடர்ந்து வன்முறை என்னும் களத்தில் ஏன் வலம் வருகிறார் என்று தெரியவில்லை. நல்ல விஷயத்தைப் பேசணும்... நல்ல விஷயத்தைச் சொல்லணும் என்று சொல்லும் அவர் நண்பேன்டா என்னும் வளையத்துக்குள் இருந்து வெளியே வந்திருந்தாலும் வன்முறை என்னும் சட்டையை தன் மேல் கர்ணனின் கவச குண்டலமாய் மாட்டிக் கொண்டு இருப்பது ஏனோ தெரியவில்லை. சுப்ரமணியபுரம் கொடுத்த போதும் நாடோடிகள் கொடுத்த போதும் ஏற்புடையதாக இருந்த வன்முறைக் காட்சிகள் இதில் ஏனோ நம்மைச் சுற்றி ரத்தவாடை அடிப்பது போன்றதொரு பிரமையை ஏற்படுத்தி விடுகிறது. ஆரம்பக்காட்சியில் ஓடிவரும் ரத்தமும் அதன் மீது விழும் கையும்.... கடைசி வரை நம்மை ரத்த சேற்றில் நிற்க வைத்துவிடுகிறது.

எனக்கு சசிக்குமாரை ரொம்பப் பிடிக்கும் என்பதற்காக படம் குறித்து புகழ்ந்து எழுத நினைக்கவில்லை... மனதில் பட்டதை அப்படியே பகிர்ந்திருக்கிறேன். சசிக்குமார் என்னும் நல்ல நடிகரைவிட ஒரு திறமையான இயக்குநர், சமூகத்தைப் புரட்டிப் போடும் படங்களை... அவரின் நண்பரான சமுத்திரக்கனியைப் போல் சமூக அவலங்களை படமாக எடுக்க வேண்டியதில்லை... வன்முறை மட்டுமே தீர்வு என்ற எண்ணத்தைக் கைவிட்டு வன்முறையில்லா நல்ல படங்களைக் கொடுத்தாலே போதும். கொடுப்பார் என்ற நம்பிக்கை நிறைய இருக்கிறது. வன்முறைக் கூடாரத்துக்குள் இருந்து பரந்த வெளியில் சிறகை விரியுங்கள் சசி.

கிடாரியை பார்க்கலாம்... காதலும் ரத்தமும் கலந்த கலவை இது... வெட்டி வீழ்த்துறதைத் தவிர சசிக்கு வேற தெரியாதா என்று சொல்லும் இணைய ஊடகங்கள்தான் படம் முழுவது சுட்டு வீழ்த்தி வன்முறையைக் கட்டவிழ்த்த கபாலியை தூக்கி வைத்துக் கொண்டாடின என்பதைச் சொல்லித்தான் தெரியவேண்டும் என்பதில்லை. நடிகர்களுக்காக விமர்சனம் செய்யாதீர்கள்... மனதில்பட்டதைப் பேசுங்கள்.... என்னைப் பொறுத்தவரை கிடாரியைவிட கபாலியில் வன்முறை தூக்கல்தான்... இல்லையென்று சொல்ல முடியாது... இதை அழுத்திப் பேசினால் சாதீயம் பேசுகிறேன் என்ற ஒரு வார்த்தை வந்து விழும்.  அதனால நாம கிடாரியைப் பேசலாம். ரவடித்தனம் பண்ணும் சண்டியர் கதைதான் என்பதால் அவருக்கு வில்லன்கள் ஒவ்வொரு பிரச்சினையிலும் துளிர் விடுகிறார்கள். அவர்களைப் பற்றிய அறிமுகத்துடன் அவர்கள் கதை தொடர்வது புதுமுயற்சி என்றாலும் நமக்கு அயர்ச்சியாக இருக்கிறது. ஒவ்வொரு கதை முடிவிலும் விதையை விட்டுட்டோம் அது வளரத்தானே செய்யும்ன்னு வில்லன்களை வளர்ப்பது கதையை தொய்வடையச் செய்கிறது. 

வேல ராமமூர்த்தி , நிகிலா, சசிகுமார், இசை, பாடல்கள், வசனம், ஒளிப்பதிவு இவற்றைக் கருத்தில் கொண்டு கிடாரியைப் பார்க்கலாம்.

மொத்தத்தில் கிடாரி ஒரு தென் மாவட்டத்து வாழ்க்கை என்றாலும் வன்முறை மட்டுமே தென் மாவட்டத்து வாழ்க்கை இல்லை என்பதையும் மனதில் கொள்ள வேண்டும். அழகான எதார்த்தமான... வாஞ்சையான மனிதர்களின் வாழ்க்கைக் கதைகள் நிறையக் கிடக்கு... அதையெல்லாம் விடுத்து எப்பவும் அருவாளையும் கத்தியையும் எடுத்து முன்னிறுத்தி தென்மாவட்டம் என்றாலே வீச்சருவாவும் வேலுக்கம்பும்தான் என்று தமிழ்ச் சினிமா பாடம் நடத்துவது ஏனோ..? நம்ம பக்கத்து நல்ல கதைகளை படமாக்குங்கள் சசிகுமார்... மற்றவன் செய்தால் பரவாயில்லை.... செம்மண் பூமிக்காரன் ரத்த ஆறுதான் ஓடுதுன்னு ஏன் சொல்லணும்... அன்பும் உறவும் இரண்டறக் கலந்திருக்கும் வாழ்க்கையை படமாக்குங்கள்... கிடாரிகளை எல்லாம் விட்டுவிட்டு வெற்றுடம்பு மனிதர்களின் வியர்வைக் கதைகளை உள்வாங்குங்கள்,,, இன்னும் சாதிக்கலாம்.

ஒரு விளக்கம் : நான் எப்பவுமே படத்தின் கதை குறித்து அதிகம் பேசமாட்டேன். தர்மதுரை பற்றி எழுதும் போது ஏனோ படத்தின் கதையை விலாவாரியாக எழுத வேண்டும் என்று தோன்றியது... அப்படியே கிறுக்கியும் விட்டேன். அதற்கு பயங்கர எதிர்ப்பு பலரிடமிருந்து வந்தது. தனிப்பட்ட முறையிலும் சிலர் சொன்னார்கள். எனக்கு சினிமா விமர்சனமெல்லாம் எழுத வராது. தமிழ் சினிமாவை விட மலையாளப் படத்தை விரும்புவது அதற்கு விமர்சனம் எழுதுவதும் பிடித்திருப்பதால் அவ்வப்போது எழுதுவதுண்டு. விமர்சனம் என்ற பெயரில் லைட்பாய் அங்க நிக்கணும்... கேமரா இங்க வைக்கணுமின்னு எல்லாம் எழுதத் தெரியாது... மனதில்பட்டதை கிறுக்கவே இந்தத் தளம்... என் மனதில் தோன்றுவதை இங்கு கிறுக்கிவேன் அவ்வளவே....


-'பரிவை' சே,குமார்.