மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 28 அக்டோபர், 2017

மனசு பேசுகிறது : எழுத்தால் கிழித்தது...

ழுத்து...

இந்த எழுத்து எதைக் கொடுத்து விடப்போகிறது..?

இது உனக்கான வருமானத்தைக் கொடுத்துவிடுமா..?

இது உனக்குச் சோறு போடுமா..?

இதன் பின்னே போனவர்களில் ஜெயித்தவர்களை விட காணாமல் போனவர்களே அதிகம் என்பது தெரியுமா..?

உன்னை நம்பி ஒரு குடும்பம் இருக்கு என்பதை யோசித்துப் பார்த்தாயா...?

என இது மாதிரியான எத்தனை எத்தனையோ கேள்விகளை எழுத்தின் பின்னே பயணித்த பலரும் சில வருடங்களுக்கு முன்பு வரை கண்டிப்பாக கேட்டிருக்கக் கூடும். இப்போது இந்த வார்த்தைகளை அதிகம் கேட்க வாய்ப்பில்லை என்றாலும் இன்னும் இந்த வார்த்தைகளின் காரம் இருந்து கொண்டுதான் இருக்கிறது. அன்று எழுதி பத்திரிக்கைகளுக்கு அனுப்பி வருமா... வருமா... எனக்காத்திருந்து வரமாலேயே போக, முயற்சிகளை மட்டும் தொடர்ந்து கொண்டே இருந்து சில மாதங்களிலேயே வெறுப்பின் உச்சத்தில் எழுத்தின் நாதத்துக்கு சுருக்கிட்டுத் தொலைத்தவர்கள் எத்தனையோ பேர்... பல நல்ல எழுத்தாளர்களை இரண்டாயிரத்துக்கு முன்னான காலம் தொலைத்திருக்கிறது என்பதை நான் சொல்லித்தான் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதில்லை.

இன்றைக்கு எழுத ஆரம்பிக்கும் எல்லாருடைய எழுத்துக்களையும் வாசிக்கும் வாய்ப்பை இணையம் கொடுத்திருக்கிறது. நாம் எழுத, நமக்கான ஒரு களத்தை ஏற்படுத்துவதுடன் நம் எழுத்தைப் பகிர பல இணைய மின்னிதழ்களும் திரட்டிகளும் வந்துவிட்டன. இதன் காரணமாகவே இணைய வெளியில் புதிது புதிதாய் எழுத்தாளர்கள் பூத்துக் கொண்டே இருக்கிறார்கள். எத்தனை விதமான எழுத்துக்கள்... வார்த்தை அலங்காரமில்லாத... வர்ண ஜாலம் காட்டாத... பட்டிக்காட்டுத்தனமாய்... பட்டவர்த்தனமாய்... வாழ்க்கைக் கதை பேசிகள் பலர் இன்று பக்கம் பக்கமாக எழுதிக் கொண்டிருக்கிறார்கள். வாசிக்கும் நம்மை அந்த வாழ்க்கைக்குள் மெல்ல மெல்ல இழுத்துச் சென்று வாழ வைக்கிறார்கள். என் எழுத்து பத்திரிக்கையில்தான் வரணும் என்றெல்லாம் நினைப்பதில்லை... சிந்தையில் உதிர்த்ததை சிறகு விரித்துப் பறக்க வைத்து இணையத்தில் விதைக்கிறார்கள்.

நானெல்லாம் பிறவி எழுத்தாளன் இல்லை என்பதையும் கல்லூரியில் படிக்கும் போது என் நண்பனின் கதைகளை வாசித்துத் திருத்திக் கொடுத்த எங்கள் பேராசான் 'நீங்களும் எழுதுங்கய்யா' என்று சொல்லி ஒரு கதை எழுத வைத்து... அது மிகக் கேவலமான கதை என்றாலும்... கல்லூரியில் படிக்கும் வயதில் என்ன கதை பெரிதாய் எழுதி விடப்போகிறோம்... எங்கு சுற்றினாலும் அது காதல் கதையில்தானே வந்து நிற்கும்... மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக்காதல் அல்ல என்ற கருவில் உதித்த கதை பாடலில் ஆரம்பித்து பாடலில் முடியும். அதையும் பொறுமையாக வாசித்து, நான் ஒரு பக்கம் என் நண்பன் ஒரு பக்கம் சைக்கிளை உருட்ட, நாடு நாயகமாய் தன் கேரியல் இல்லாத சைக்கிளை உருட்டியபடி, எங்கள் பேராசான் குடியிருந்த தேவி பவனத்தில் இருந்து கவிஞர் பாலு அண்ணா வீட்டிற்கு நடந்தே... திருப்பத்தூர் ரோடு, குதிரை வண்டிச் சந்து (இப்ப ஸ்டேட் பாங்க் ரோடு), கருதாவூரணி வழியாக கதைகள் பேசி நடந்தபோது 'கதை நல்லாயிருக்குய்யா... இன்னும் நல்லா எழுதணும்... சமூகப் பிரச்சினைகளைப் பார்த்து அதைக் கதையாக்கணும்.. (இது வரைக்கும் சமூகப் பிரச்சினைகளை கதையாக்கியிருக்கிறேனா தெரியலை...:)) வாழ்க்கையை கதையை மாற்றும் கலை தெரிஞ்சிக்கணும்.' (இது ஓரளவு வந்திருச்சின்னு நினைக்கிறேன்) என்றெல்லாம் சொல்லி என்னை எழுத்தாளனாக்கிய கதையையும் பல முறை சொல்லிவிட்டேன். ஐயா வீட்டில் நான் எப்பவும் செல்லப்பிள்ளை... இப்பவும் கூட என்பதில் பெருமை எனக்கு.

புதுசாக் கல்யாணம் பண்ணினவன் பொண்டாட்டிய சுத்திச் சுத்தி வர்ற மாதிரி எப்பவும் பேப்பரும் பேனாவுமா அப்பா கணக்கெழுதுற மேசையை தூக்கிப் போட்டு கதை எழுதுறேன் பேர்வழின்னு... ஏன்னா ஐயா நல்லாயிருக்குன்னு சொல்லிட்டாருல்ல... அதனால எழுதி... எழுதி... எழுதிக் கிழிக்க... (இதெல்லாம் கல்லூரி இரண்டாம் ஆண்டின் தொடக்கத்தில் என்பதை நினைவில் கொள்க.) அப்புறம் கவிதை எழுதுறேன் பேர்வழின்னு பல பயலுக காதலுக்கு கவிதை எழுதிக் கொடுத்த கதையெல்லாம் பல தடவை சொல்லியாச்சு... மறுபடியும் சொன்னா இவனுக்கு வேற வேலையில்லையான்னு திட்டிடப் போறீங்க... விவசாய நேரத்துல ராத்திரி மழை பெய்திருக்கும்.. காலையில 'வாகமடையை அடைச்சிட்டு வா...', 'அந்த வயல்ல யூரியாவைத் தூவிட்டு வா...', 'பனிப்பதத்துல பூசிமாவைத் தூவிவிட்டா கப்புன்னு புடிச்சிக்கும்...' என்றெல்லாம் அப்பா வேலை சொல்ல, நாமதான் கதாசிரியன் கனவுல இருக்கோமோ... பேனாவை கர்ணனோட கவச குண்டலம் மாதிரி கையை விட்டு இறக்காமல் அதெல்லாம் முடியாது எனச் சொல்ல , 'இதெல்லாம் எங்க உருப்படப் போகுது... எல்லாத்துக்கும் நாந்தான் போவனும் தொரைக (நானும் தம்பியும்)  ரெண்டு பேரையும் வீட்டுக்குள்ளயே இருக்கச் சொல்லு சமஞ்சபுள்ளயளாட்டம்... தம்பி கத எழுதுதாம்... கத... இது கதயெழுதி என்னத்தைக் கிழிக்கப் போவுது' என அப்பா கத்திவிட்டு மம்பட்டிய எடுத்துக்கிட்டு போக, அம்மா அடுத்த அர்ச்சனையை ஆரம்பிக்கும். அப்பா திட்டு கொஞ்சந்தான்... ஏந்திட்டு இம்புட்டுத்தான் உங்கம்மா திட்டு கப்பல்ல வருதுன்னு சொல்லாம சொன்ன மாதிரி செமையாத் திட்டு விழும். அதுக்கு மேல உக்கார முடியாத நிலையில வாய்க்குள்ளயே முணங்கிக்கிட்டே வயலுக்கு போன நாட்கள் மறக்க முடியாதவை. இப்ப எங்கம்மாக்கிட்ட கேட்டா அது எங்க வய வேல பாத்துச்சு... அது இப்ப மாதிரித்தான் அப்பவும் எழுதுறேன்னு கிறுக்கிக்கிட்டு கெடக்கும் என்றுதான் சொல்லும்.

'என்னத்தை கிழிக்கப் போறான்..?' - இது அப்பாவின் வார்த்தைகள்... இதுவரைக்கும் என்னத்தைக் கிழிச்சிட்டோம்... ஒண்ணுமே இல்லை... என் கதைகள் கல்லூரிக் காலத்தில்... அதன் பின்னான வருடங்களில்... சென்னை வாழ்க்கையில்... அபுதாபி வாழ்க்கையில் என அடிக்கடி பிரேக் போடப்பட்டு பின்னர் மீண்டும் உதித்து இதுவரை தொடர்ந்து கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு சமயத்திலும்  வேறு வேறு பாதையில் பயணிக்க ஆரம்பித்து இப்போது கொஞ்சம் மன நிறைவாய் மலர ஆரம்பித்திருக்கின்றன என்று நினைக்கிறேன். இந்த எழுத்து வாழ்க்கையை நகர்த்தும் பணத்தைப் பெற்றுக் கொடுக்கவில்லை. முதல் கதைக்கு ஐம்பது ரூபாய் சன்மானமாய் பெற்று இன்று போட்டிகள் தவிர்த்து இதழ்களில் வெளியாகும் போது ஐநூறு வரை கிட்டியிருக்கிறது. இது பணத்துக்கான... பணத் தேவைக்கான எழுத்து அல்ல... மன நிறைவுக்கான... நிம்மதிக்கான எழுத்தே... அப்பா சொன்ன வாசகங்கள் போல் எதையும் கிழிக்கவில்லை என்றாலும் நிறைய நேசமுள்ள மனிதர்களின் மனங்களைக் களவாடியிருக்கிறேன் அல்லவா..? வாழ்க்கை நகர்த்துதலுக்கான பணத்தைக் கொடுக்கவில்லை என்றாலும் என் வாழ்வின் சுக துக்கங்களைப் பகிர்ந்து கொள்ளவும் என்னை நேசத்தோடு கொண்டாடவும் கூடிய மனங்களை உலகெங்கும் உறவாகக் கொடுத்திருக்கிறது அல்லவா...? இதை விட வேறு என்னத்தை மகிழ்வோடு கிழிக்க முடியும் சொல்லுங்கள்.

இந்த வாரத்தின் இரு தினங்களும் எனக்கு மிகச் சிறந்த நாட்களாக அமைந்தன. நேற்றைய பொழுதில் ஒன்பது வருடங்களாக பாலைவனப் பூமியில் இருந்தாலும்... குடும்பம் வந்திருந்த போது பாலைவன மண்ணில் கொஞ்சமே கொஞ்சத் தூரம் குழந்தைகளுடனும் மனைவியுடனும் நடந்து சென்றதுடன் சரி... அந்த மண்ணில் அமர்ந்து ஓடி சந்தோஷப் படும்படியான நாட்கள் எனக்குக் கிட்டவில்லை... நேற்று அந்த சந்தோஷத்தை புகைப்படக் கவிஞன் அண்ணன் சுபான் பாய் அவர்களும் சுமையாவைச் சமைத்த எழுத்தாளர் அண்ணன் கனவுப்பிரியன் அவர்களும் ஏற்படுத்திக் கொடுத்தார்கள். மாலை நேரத்தில் பாலை மண்ணில் ஒரு அஞ்சாறு பேர் போட்டோக்களைச் சுட்டுத் தள்ளினோம்... கதாநாயகன் கனவுப்பிரியன் என்பதையும் சொல்லிவிடுகிறேன்... சூரியனைப் பந்தாடினோம்... கொண்டாடினோம்... காற்று மணலுடன் காதல் கொண்டு எங்களை ஊடல் கொள்ள வைத்தது... அள்ளி இறைத்தாலும் அன்பாய்த்தான் உடலில் அமர்ந்து கொண்டது. மணலில் நாயகனாய் நடை பழகினோம்... இன்று அந்த வீடியோ பின்னணிப் பாடலுடன் பகிரப்பட, 'இவருக்கு சூர்யான்னு நெனப்பு... சும்மா இருக்கமாட்டாரு போல...' என்று விஷாலின் கருத்து வந்ததாய் ஊரிலிருந்து மனைவி ரொம்ப மகிழ்ச்சியாய்ச் சொன்னது சொல்லக்கூடாத கதை என்றாலும் சொல்லத் தோன்றும் கதையாகிவிட்டது.

நேற்றைய பொழுது மணலில் கழிய இன்றைய பொழுது மகிழ்வில் கழிந்தது. போன பதிவைப் பகிர்ந்த பின்னர் 'குமார் உங்க போன் நம்பரை என் மெயிலுக்கு அனுப்புங்க' என்ற அழைப்பு... அதன் பின் அனுப்ப, உடனே தொடர்பு கொண்டு பேசி, 'வார இறுதியில் நாம் சந்திக்கிறோம்' என்றார் அவர்  அன்பாய்... நேற்று இரவு மீண்டும் அழைப்பு... 'நாளை மதியம் எங்க வீட்டிற்கு வாரீங்க... சாப்பிட்டு எங்களுடன் பேசிக் கொண்டிருந்து விட்டுச் செல்லலாம்' என்றார். திடீர் அழைப்பு... சாப்பாடு செய்கிறோம் என்று வேறு சொல்கிறார்... அவரைச் சந்தித்ததும் இல்லை... அதிகம் பேசியதும் இல்லை என்ற எண்ணம்... சரி சாப்பாடு என்பதை அப்புறம் பார்த்துக்கலாம்... அந்த அன்பிற்காக அவரை நேரில் சந்தித்து பேசிவிட்டு வரலாம் என காலையில் போன் செய்து 'நாம சந்திக்கலாம் சார்... சாப்பாடெல்லாம் வேணாம்' என்ற போது 'சமையல் முடிஞ்சாச்சு... வாங்க பேசிக்கிட்டு இருந்திட்டு... சாப்பிட்டுப் போகலாம்... யோசிக்காதீங்க... உங்க வீடு மாதிரி நினைச்சிக்கங்க' என்றார் போனில் சிரித்தபடி... இவனுக்கிட்ட பேசணுமின்னா காசு கொடுக்கணும் என்ற பேரு ஊருக்குள்ள இருந்ததெல்லாம் ஒரு காலம். புதியவர்கள் என்றால் பேச்சுக்கூட அளந்துதான் வரும். இப்பக் கொஞ்சம் பரவாயில்லை என்றாலும்... பலர் கூடினால் குறைவாய் பேசியது நாமாகத்தான் இருக்கும். என்னையும் கவியரங்கில் கவிபாட வைத்த பெருமை எங்க பேராசானுக்கு உண்டு. அதுவும் தேவகோட்டை பூங்கா எதிரே... அப்ப நமக்கு பில்டிங் ஸ்ட்ராங்க்... பேஸ்மெண்ட் வீக் கதைதான்.. துரை.செல்வராஜூ ஐயா இங்கு வந்த போது அவரும் கில்லர்ஜி அண்ணாவும் நான் ஸ்டாப்பாய் பேச, நான் மட்டும் மௌனியாய் இருந்ததை ஐயா ஒரு பதிவில் கூட சொல்லியிருந்தார். எப்பவுமே அதிகம் பேசுவதில்லை... அது அப்பவே ஒட்டிக்கிட்டது.... இன்னும் தொடருது.... இனிமேல மாறப் போகுது... ஆனா இன்னைக்கு கொஞ்சம் பரவாயில்லை.. :)

கிளம்பி அவர் சொன்ன கட்டிடம் சென்று போன் செய்து அவர் இருக்கும் தளத்துக்குச் சென்றால் புன்சிரிப்போடு வரவேற்றார். புதிதாய்ப் பார்ப்பவனைப் போலில்லாமல் அவர்கள் வீட்டில் ஒருவனாய் அவரும் அவர் துணைவியாரும் மிகுந்த அன்போடு பேசினார்கள். அவரின் குட்டிப் பையன் அவ்வப்போது ஒரு சிரிப்பை உதிர்த்து விஷாலை நினைவில் நிறுத்திக் கொண்டே இருந்தான். பெண் எங்க ஸ்ருதி போல்தான் என்று நினைக்கிறேன்... புதியவர்கள் வந்தால் எட்டிப் பார்ப்பதில்லை போலும். சனிக்கிழமை பெரும்பாலும் சைவம்தான் என்பதாலும் சைவத்தின் மீதே விருப்பம் அதிகம் என்பதாலும் சிக்கன், மட்டன்னு வச்சி தாளிச்சிடாம சைவமாச் சமைச்சிருந்தால் மகிழ்வாய் இருக்குமென நினைத்துச் சென்றால்...  மிகச் சிறப்பான சைவச் சமையல்... நம்ம வீட்டில் சாப்பிட்டதொரு நிறைவு... நிறையப் பேசினார்... எல்லாம் நிறைவாய்... அவரின் பணிகளுக்கு இடையே வலைப்பூவில் எழுதும் எழுத்தாளர்கள் எல்லாரையும் வாசிக்கிறார் என்பது எத்தனை சந்தோஷம்... ஜோதிஜி அண்ணா, தேனக்கா, முத்துநிலவன் ஐயா, மணிகண்டன், மதுரை செந்தில்குமார் சார், கில்லர்ஜி அண்ணா, கனவுப்பிரியன் என எல்லாருடைய எழுத்தையும் பற்றிப் பேசினார். எல்லாரைப் பற்றியும் அவர் சந்தோஷமாய்ப் பேச எனக்குள் எத்தனை மகிழ்ச்சி தெரியுமா... இலக்கணம், இலக்கியம் எல்லாம் நமக்கு ரொம்பத் தூரம்... அவர் முழுக்க முழுக்க வலை எழுத்தை லயித்துப் பேசினார்... கொஞ்சமே கொஞ்சம் அரசியலும் பேசினோம். அவர் வீட்டிற்குச் சென்று சாப்பிட்டுப் பேசி வந்த இன்று மதியம் மறக்க முடியாது. அவரைச் சார் என்றுதான் சொன்னேன்... ஆனாலும் மனசுக்குள் அவர் அண்ணனாய் உயர்ந்து நின்றார் திரு. பூபதி. தொட்டுத் தொடரும் பட்டுப் பாரம்பரியம் போல் இந்த வாழ்க்கையில் கிடைத்த இன்னொரு உறவு இவர்கள்.

இந்த எழுத்தால் என்னத்தைக் கிழிச்சோம் என்றால் இப்படி எத்தனை எத்தனையோ அன்பான மனிதர்களைப் பெற்றது போதாதா... வேறு என்ன வேண்டும்... உன் தொடர்கதை நாவலாக வேண்டும்... நான் அதைச் செய்கிறேன் குமார் என பேசும்போதெல்லாம் வார்த்தைக்கு வார்த்தை சொல்லும் நிஷா அக்கா, எல்லாரும் புக் போட்டுட்டாங்க... மண்ணின் மனத்தோட இருக்கிற உன் கதைகள் எப்ப புத்தகமாகுறது அடுத்த வேலை நமக்கு அதுதான் என பார்க்கும் போதெல்லாம் சொல்லும் தேவா அண்ணன்... உங்க கதைகளுக்கு நான் அடிமை அண்ணா என்று முகநூலில் தட்டிவிட்ட மேனகா சத்யா, குமார் நான் இதை எழுதியிருக்கிறேன்... உங்ககிட்ட சொல்லணும்ன்னு நினைச்சேன் எனச் சொல்லும் ஆர்.வி.சரவணன் அண்ணன்... என்ன உதவி என்றாலும் உடனே செய்து கொடுக்கும் தனபாலன் அண்ணன்... உங்க எழுத்தை வாசிக்க எனக்கு ஒரு லிங்க் மட்டும் கொடுங்க குமார் எனச் சொல்லும் கவிஞர் மீரா செல்வக்குமார்.. போனில் கூப்பிடுங்களேன் என்று உரிமையோடு சொல்லும் கில்லர்ஜி அண்ணா, மிக அருமையா எழுதுறீங்க என்று சொல்லும் ஜம்புலிங்கம் ஐயா, பாலசுப்ரமணியம் ஐயா, என் எழுத்தில் சந்தோஷிக்கும் ஸ்ரீராம் அண்ணா, துளசிதரன் அண்ணா, கீதா அக்கா, குடும்பத்தில் ஒருவரான காயத்ரி அக்கா, என் நண்பன் தமிழ்க்காதலன், தம்பி தினேஷ் இப்படி எத்தனை உறவுகளைப் பெற்றிருக்கிறேன்.இங்கு சொன்னவர்களை விட சொல்லாதவர்கள் அதிகம். இப்படி எத்தனை எத்தனையோ நல்ல உள்ளங்களைப் பெற்றிருக்கிறேன்... எல்லாரையும் சொல்லிக்கிட்டே போகலாம்... எல்லாரையும் பற்றி எழுத ஆசைதான் ஆனா நாலஞ்சி பதிவு எழுத வேண்டியிருக்கும் என்பதால் எல்லாரும் மனசில் இருக்கீங்கன்னு சொல்லிகிறேன்.  

இந்த எழுத்து ஓட்டுக்காகவும் முன்னணி ரேசுக்காகவும் எழுதுவதில்லை.. என் ஆத்மா திருப்திக்கான எழுத்து... இப்போது என் எழுத்து மீண்டும் பத்திரிக்கைகள், இணைய இதழ்கள் என கிளைவிட ஆரம்பித்திருக்கிறது. அதைவிட நிறைய உறவுகளைப் பெற்றுத் தந்திருக்கிறது... எத்தனை மனங்களைப் பிடித்திருக்கிறோம். இதைவிட நிறைவாய் இந்த எழுத்தால் என்னத்தைக் கிழித்து விடப் போகிறோம்..?
-'பரிவை' சே.குமார்.

புதன், 25 அக்டோபர், 2017

மனசு பேசுகிறது : பாதித்த பாடல்

சில பாடல்களைக் கேட்கும் போது அது தொடர்பான நினைவுகளை நம்முள்ளே மீட்டெடுக்கும். இந்தப் பாட்டைக் கேட்டா எனக்கு இந்த நிகழ்ச்சி மனதில் வந்து போகும் என்றும் இந்தப் பாட்டென்றால் எனக்கு அவள் முகம் ஞாபகத்தில் வரும் என்றும் பலர் சொல்வதைக் கேட்டிருப்போம். இப்படியான பாடல்களும் அது தொடர்பான நிகழ்வுகளும் எல்லாருக்குள்ளும் இருக்கத்தான் செய்யும்... யாரும் விதிவிலக்கல்ல அப்படியான பாடல்கள் பல சமயங்களில் மீட்டெடுக்கும் நிகழ்வுகள் ஒரு நாள் முழுவதும் நம் மனதைச ஆக்கிரமிக்கும். சந்தோஷமான நிகழ்வுகள் என்றால் நம் மனதைச் சந்தோஷமாகவும், சோகமான நிகழ்வுகள் என்றால் நம் மனதைச் சஞ்சலமாகவும் ஆக்கும் தன்மைகள் கொண்டவை இந்தப் பாடல்கள்.

கடந்த வாரத்தில் ஒருநாள் அலுவலகத்தில் இருக்கும் போது எனது மொபைலில் வள்ளி திருமண நாடகம் கேட்டபடி வேலை செய்து கொண்டிருந்தேன்... கவனிக்க பார்த்தபடி இல்லை... கேட்டபடி... அது வீடியோவாக இருந்தாலும் ஆடியோ மட்டும் ஓடிக்கொண்டிருக்கும்... போன் ஸ்கிரீனை 'ஆப்' செய்து வைத்துவிட்டு வேலையில் தீவிரமாக இருந்தேன் என்பதையும் இங்கு கவனித்தில் கொள்ள வேண்டும். என்னடா இவன் வள்ளி திருமணம் நாடகத்தைப் பார்க்கிறானே... அம்புட்டு வயசானவனா என்று கூட நீங்கள் நினைக்கலாம். வயசெல்லாம் ஆகல... நிறைய வரலாறுகளை அறிய முடிகிறது என்பதால் மட்டுமே.

படிக்கும் காலத்தில் பக்கத்து ஊரில் கூத்து (நாடகம்) நடந்தால் கூட போக விரும்புவதில்லை. கண்டதேவி தேரோட்டத்தின் போதோ, கூத்தாடி முத்துப் பெரியநாயகி அம்மன் சிவராத்திரியின் போதோ இரவு கோவிலுக்குச் சென்றால் நாடகம் பார்ப்பதுண்டு. அதிலும் வள்ளி திருமணம் என்றால் நம்பிராஜன் வந்ததும் கூட்டம் கலைய ஆரம்பிக்கும்... நாங்களும் நகர்ந்து விடுவோம். அப்படித்தான் நாடகம் பார்த்திருக்கிறோம்.. சில நாடகங்களை மட்டுமே முழுவதும் பார்த்த அனுபவம் உண்டு. அப்போதெல்லாம் நாரதர்-வள்ளி தர்க்கம் என்பது சில நடிகர்கள் நடித்தால்தான் மட்டுமே நல்லாயிருக்கும் என்பார்கள். எல்லாரும் சிறப்பாக தர்க்கம் பண்ணுவதில்லை என்று தீவிர நாடக விசிறிகள் சொல்லக் கேட்டதுண்டு. நாம தீவிர விசிறியில்ல... அப்பல்லாம் ராஜேஸ்குமாரின் க்ரைம் நாவலின் விசிறி நான்.

சரி நாம நாடகம் கேட்ட விஷயத்துக்கு வருவோம்... இப்ப எல்லா நாடகங்களும் இணையத்தில் சில நண்பர்களால் பதிவேற்றப்படுகின்றன. இது மிகவும் நல்ல விஷயம்... நம் கிராமியக் கலைகள் அழிந்து விடக்கூடாது என்ற எண்ணம் போற்றுதலுக்குரியது. நாடகங்களைப் பொறுத்தவரை தமிழகத்தின் தெற்குப் பகுதியில் அதாவது எங்கள் பக்கத்தில்தான் அதிகமாக நடத்தப்படுகின்றன என்பதில் தெற்கத்திக்காரனாய் பெருமை உண்டு. எப்பவுமே கிராமியக் கலைகளைப் போற்றுவதில் தென் மாவட்டங்களே முன்னணியில் இருக்கும். அப்படி நடக்கும் நாடகங்களை இணையத்தில் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்திருப்பது மகிழ்வான விஷயம்.

இன்று நாடகங்களில் நடிக்கும் பபூன்கள் நாரதருடன் விவாதிப்பது நல்ல வரலாற்று விஷயங்களை என்பது பாராட்டுக்குரியது.... சும்மா வந்தோமா... டான்ஸாக நடிப்பவருடன் இரட்டை அர்த்த வசனம் பேசினோமா... வள்ளியையும் கேலி பேசினோமா என்றில்லாமல் நிறைய விஷயங்களைப் பேசுகிறார்கள்... வள்ளி - நாரதர், வள்ளி -முருகன் என தர்க்கங்களில் எல்லாம் வரலாறுகளையும் ஆன்மீகச் செய்திகளையும் மட்டுமே முக்கியானதாக எடுத்துக் கொள்கிறார்கள். வள்ளியும் பபூன் டான்சுடன் ஆட்டம் போடுவதைப் பார்த்து இணையத்தில் எந்த வள்ளி டான்ஸ் ஆடியிருக்கு என்று வந்த கருத்துக்களைப் பார்த்து இனி வள்ளியாக நடிப்பவர்கள் மேடையில் ஆடக்கூடாதென சங்கத்தில் முடிவெடுத்திருப்பதாக சமீபத்தில் பார்த்த ஒரு நாடகத்தில் சொன்னார்கள். நல்ல முடிவு.

மறைந்த நாரதர் முத்தப்பாவிடம் யாராலும் வரலாறு குறித்தோ கடவுள்கள் குறித்தோ தர்க்கம் பண்ணமுடியாது என்று சொல்வார்கள்... நானும் வீடியோக்களில் பார்த்திருக்கிறே. எதை எடுத்தாலும் அதை விளக்கமாய்ச் சொல்வார்... ஆனாலும் கொஞ்சமல்ல நிறையவே முன்கோபி... பல மேடைகளில் அவரின் தர்க்கம் சண்டையில் முடிந்திருக்கின்றன. அவரின் வீடியோக்களும் இணையத்தில் இருக்கின்றன. தற்போது பெருமாள்ராஜ், முத்துச்சிற்பி, வெங்கடேஷ் என பலர் தர்க்கத்தில் கலக்குகிறார்கள். வரலாற்று விஷயங்களைக் கேட்டபடி வேலை பார்த்துக் கொண்டிருப்பது இப்போது வாடிக்கையாகி இருக்கிறது.

அப்படித்தான் சென்ற வியாழன் கலைமகள் - முத்துச்சிற்பி விவாதத்தைக் கேட்டுக் கொண்டிருந்தேன். அவர்களின் விவாதம் ஆரம்பிக்கும் முன்னர் ஆர்மோனியம் வாசிப்பவர் பாடிய பாடல் எனக்குள் பழைய நினைவுகளை மெல்ல வருடி விட, என்னையறியாமல் கண்ணீர் எட்டிப் பார்த்தது. பாடலை மீண்டும் ஓடவிட்டேன். என் நினைவுகள் எங்களை எல்லாம் சுமந்து... தற்போது தம்பி வீடு கட்டுவதின் காரணமாக இடிக்கப்பட்ட ஐம்பதாண்டு கால ஓட்டு வீட்டிற்குள் நுழைந்தது.

அந்தச் சிறிய ஓட்டு வீட்டில்... ஒரு திண்ணை... ஆல்வீடு... சாமி அறை மட்டுமே... சின்னப் பிள்ளைகளாக இருந்த போது அடுப்படி பனைஓலையில் கட்டப்பட்டிருக்கும்... பின்னர் அடுப்படி ஓடு அணிய திண்ணை, அடுப்படி டாணா வடிவில் இருக்கும். இரண்டுக்கும் முன்னே கல்கால் ஊன்றி ஒரு கீத்துக் (கிடுகு-பின்னிய தென்னை ஓலை) கொட்டகை போட்டு சுவரெடுத்தார் அப்பா. வீட்டின் பின்னே ஒரு மாட்டுக் கசாலை... அது எருமை, பசு என எத்தனை மாடுகளைப் பார்த்த இடம் தெரியுமா..? இப்ப கசாலையும் இல்லை... மாடும் இல்லை... பக்கத்து வீட்டுக்காரன் பாதைகேட்டு போட்ட கேஸ் மட்டும் இன்னும் பிரச்சினையாய் ஓடிக்கிட்டு இருக்கு.

நாங்கள் எல்லாரும் எவ்வளவு சந்தோஷமாக பண்டிகைகளைக் கொண்டாடினோம் தெரியுமா... எத்தனை சந்தோஷங்களைச் சுமந்தது அந்த வீடு... நாங்க படிக்கும் போது எங்க பெரியண்ணன் வெளியூரில் வேலை பார்த்தார்... இப்பவும் அதே ஊரில்தான் வேலை பார்க்கிறார். நானும் என் தம்பியும் படித்ததே அவரால்தான்... தீபாவளி, பொங்கலுக்கு ஊருக்கு வரும்போது தவறாது துணியெடுத்து எங்களுக்கு டிரஸ் தைத்துக் கொண்டு வருவார். அப்போதெல்லாம் ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தில் இரண்டு டிரஸ் என்பது மிகப் பெரிய விஷயம். அது எங்களுக்கு பள்ளியில் படித்த நாட்களில் இரண்டாகவோ மூன்றாகவோ கிடைக்கும்.

பின்னர் கல்லூரி சென்ற போது லூஸ் பிட்டிங் சட்டை என தொம்பாத் தொம்பா சட்டைதான் பேமஸ்... அப்போ நாங்க தைக்கும் சட்டைகள் எங்க அண்ணன்களும் போடலாம்... அவங்க தைக்கிற சட்டை நமக்கும் சரியா இருக்கும். யார் கழட்டிப் போட்ட சட்டை என்றாலும் நல்லாயிருந்தால் அது அடுத்தாளு உடம்பில் இருக்கும். இப்படி சட்டைகளை மாற்றி மாற்றிப் போடுவதும்... ஊருக்கு கிளம்பும்போது இந்தச் சட்டை நல்லாயிருக்கு நான் எடுத்துக்கிறேன் என பெரியண்ணன் எங்க சட்டைகளை எடுத்துச் செல்வதும்... சின்ன அண்ணன் கழட்டிப் போட்ட சட்டையை காலேசுக்குப் போட்டுச் செல்வதும் எப்போதும் வாடிக்கை.

எங்க அம்மா படுத்திருக்க, நால்வரும் (சில வேளைகளில் சின்ன அக்காவும்) நாலு பக்கமும் தலைவைத்துப் படுத்திருந்த நாட்கள் எல்லாம் எப்போதும் மறக்க முடியாதவை. அக்காக்கள், அண்ணன்கள், தம்பி என சந்தோஷமாய் கும்மாளமிட்ட வீடு அந்த சிறிய ஒட்டு வீடு.... அன்னைக்கு ஒண்ணுக்கு ரெண்டு என்றிருந்தபோது பாசமும் நேசமும் நிறைந்திருந்தது. இப்போது ஒத்தையாய் பெத்து வைத்து அதற்கு அண்ணன் தம்பி பாசம் எப்படிப்பட்டது என்பது கூட தெரியாமல் வளர்ப்பதில் உறவுகளின் உன்னதத்தை இழக்க ஆரம்பித்து விட்டோம்... பெண் குழந்தைகளுக்கு கூட ஒரு கட்டத்துக்கு மேல் அதோட முக்கியமான பிரச்சினைகளைச் சொல்லி, விவரம் அறியவும் ஆறுதல் தேடவும் முடியாத நிலைதான் இருக்கிறது.

திருமணம் முடிந்து அவரவர் குடும்பம் எனப் பிரிந்தாலும் அந்தப் பாசக்கயிறு மட்டும் பல வீடுகளில் இன்னும் உயிர்ப்போடு இருக்கிறது. அப்படியான பாக்கியம் எங்கள் வீட்டிலும் உண்டு என்றாலும் வெளிநாட்டு வாழ்க்கையில் நால்வரும் ஒருமித்து சந்தித்தல் என்பது நடவாத காரியமாகிவிட்டது. பெரியண்ணனுடனாவது வாரம் ஒரு முறை பேச முடிகிறது. சின்ன அண்ணன் மற்றும் தம்பி சிங்கப்பூரில் என்பதால் பேசுவதும் குறைவு... பார்ப்பதும் அரிது.

நான் ஊருக்கு இதுவரை திருவிழா நேரத்தில் வரும்படியாக மே மாதத்தைத் தேர்வு செய்து வைத்திருக்கிறேன். இந்த முறை மே மாதம் என்பது சாத்தியமாக வாய்ப்பில்லை என்பது தற்போதைய புராஜெக்ட்டின் போக்கில் தெரிகிறது. வருடாவருடம் செல்ல முடியும் சூழல் என்றாலும் சிங்கப்பூர்வாசிகளான அண்ணனும் தம்பி இரண்டு வருடத்துக்கு ஒருமுறை வருவார்கள். இந்த முறை தம்பியைச் சந்தித்தால் அடுத்த முறை அண்ணன்.... இரண்டு வருடம் ஒரு முறைதான்... குடும்பங்கள் எல்லாம் சில விஷயங்களில் அன்னியப்பட்டு நிற்கும் நிலைகளும் மெல்ல மேலோங்க ஆரம்பித்திருந்தாலும்... பலரின் வீரியமான விஷ வித்துக்கள் உறவுக்குள் விரிசலை உண்டாக்கி மன வேதனைகளைக் கொடுத்தாலும்... பாசம் என்பது இன்னும் அழகாய்த்தான் முளைவிட்டு வளர்ந்து கொண்டிருக்கிறது.

அந்தப் பாடலைக் கேட்டதும் கண்ணீர் எட்டிப் பார்த்து கன்னத்தில் இறங்கியது... எல்லாரும் ஒன்றாக கட்டிப்பிடித்துக் கிடந்த அந்த நாட்கள் இனி வருமா...? அந்த அன்பு இனி கிடைக்குமா...? அம்மாவின் மடியில் அந்த கோபுரக்கரைச் சேலை வாசத்தை நுகர்ந்தபடி படுத்திருக்க, நிகழ்ந்த சண்டைகளை இனி மீட்டெடுக்க முடியுமா...? வானம் பார்த்து வாசலில் படுத்தபடி அம்மா சொன்ன கதைகளை இனி அதுபோல் கேட்க முடியுமா..?எங்களை எல்லாம் சுமந்த அந்தச் சிறிய ஓட்டுவீடு  கொடுத்த மகிழ்வையும் சந்தோஷத்தையும் மறக்க முடியுமா...? இப்படி கேள்விகள் பல எழுந்தாலும் காலங்களும் வாழ்க்கையும் பல விஷயங்களை மெல்லக் கொன்று தின்று விட்டு இடைவெளியை மெல்ல மெல்ல எட்டிப் பார்க்க வைத்து விடுகிறது என்பதே உண்மை... இனி அப்படி ஒரு காலம் வருமா என்ற நினைப்பே கண்ணீராய் கரைந்து ஓடியது.

அந்தப் பாடல் 'முத்துக்கு முத்தாக... சொத்துக்குச் சொத்தாக...' எவ்வளவு அருமையான பாடல். ஆர்மோனியக்காரர்கள் பலர் ஏதேதோ பாடி பாட்டைக் கொன்று எடுத்துவிடுவார்கள். ஆனால் இவரோ அவ்வளவு அருமையாக... அழகாகப் பாடி மக்களிடம் கைதட்டு வாங்கியதுடன் அவர்களிடம் பண அன்பளிப்பும் பெற்றார். அந்தப் பாடலில் வரும் வரிகளான 

'ராஜாக்கள் மாளிகையும் காணாத இன்பமடா
நாலுகால் மண்டபம்போல் நாங்கள் கொண்ட சொந்தமடா
ரோஜாவின் இதழ்களைப் போல் தீராத வாசமடா
நூறாண்டு வாழவைக்கும் மாறாத பாசமடா'

இதைக் கேட்டதும் நினைவுகள் மெல்லத் தாலாட்டி அண்ணன் தம்பிகளின் பாச நாட்களை அசை போட வைத்து கண்ணீரை வெளிக் கொணர்ந்தது.

-'பரிவை' சே.குமார்.

ஞாயிறு, 22 அக்டோபர், 2017

மெர்சல் ஒரு பார்வை

Image result for மெர்சல்
மெர்சலில் வரும் சில வசனங்கள் குறிப்பாக டிஜிட்டல் இந்தியாவும் , ஜிஎஸ்டியும் தமிழக அரசியல்வாதிகளுக்கு வயித்துல புளியைக் கரைச்சிருக்க, அதனை நீக்கச் சொல்லி, அதன் காரணமாக இந்திய அளவில் மிகப்பெரிய பிரச்சினையை கிளப்பி வைத்திருக்கிறார்கள். இதன் மூலம் படத்துக்கும் பெரிய அளவில் விளம்பரம் கிடைத்துள்ளது.   இதை தங்கள் அரசாங்கத்தைப் பற்றிய ஒரு வசனத்துக்கான கருத்துச் சுதந்திரத்தின் கழுத்தை நெறித்தல் என்பதாய் மட்டும் பார்க்கத் தோன்றவில்லை. நம் அனைவரின் கருத்தையும் அரசியல்வாதிகள் கழுத்தை அறுத்து அவர்கள் வாழ நம் சுயத்தை அழிக்கும் நிலையின் ஆரம்பம்தான் இது. சென்ஸார் போர்டு என்ற ஒன்று ஒரு படத்தின் வசனங்களைப் பார்த்துத்தானே அனுமதி அளித்திருக்கும். அப்படிப்பட்ட சூழலில் எங்கள் ஆளும் அரசாங்கத்தை ஆட்டிப் பார்க்கும் வசனங்களை எப்படி வைக்கலாம் என ஆளாளுக்கு ஆட்டம் ஆடி, அதை நீக்க வைப்பது என்பது எவ்வளவு மோசமான செயல்... இவர்கள் இதைச் சேர்த்துக் கொள்... இதை நீக்கிவிடு என்று அதிகாரம் இடும் நிலை வந்த பின் எதற்காக சென்சார் போர்டு என்று ஒன்று இருக்க வேண்டும். இவர்களே அந்த வேலையைச் செய்துவிடலாம்.

சினிமாவில் அரசியல் வசனங்கள் என்பது ஆரம்ப காலத்தில் இருந்தே இருக்கத்தானே செய்கிறது. ரஜினி பேசாத அரசியல் வசனங்களா...? சத்தியராஜ் பேசாததா...? இதையெல்லாம் விட இயக்குநர் மணிவண்ணனின் வசனங்களில் இல்லாத கூர்மையா விஜய பேசிய ஜிஎஸ்டியில் உள்ளது. இன்றைய நிலையில் ஒரு படம் நல்லா ஓடிட்டா அடுத்த படத்தில் நடிக்கும் போது அந்த நாயகனுக்கு முதல்வர் கனவு வந்து விடுகிறது. அதுவும் தமிழ் சினிமாவில் ரொம்ப அதிகம். ஜெயலலிதா மறைவுக்குப் பின் அரசியல் ஆசையே இல்லை என்ற கமலுக்கே அரசியல் ஆசை வரும்போது 'Time to Lead'ன்னு போட்டு அரசியல் பேசிவரும் விஜய்க்கு வருவதில் தவறென்ன... தவறெல்லாம் நம் மீதுதானே கூத்தாடிகள்தான் நம்மை ஆளச் சிறந்தவர்கள் என்று நினைப்பவர்கள் நாம்தானே. 

எந்த ஒரு பெரிய நடிகரின் படமும் சாதாரணமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு படம் நல்லா இருந்தால் மட்டுமே மக்களால் விரும்பப்பட்டு சில நாள்கள் தியேட்டரில் நின்று செல்ல, அதை மறந்து விட்டு அடுத்த படத்துக்குப் பின்னே நாம் நகரப் போகிறார்கள். அதைச் சொன்னாய் இதைச் சொன்னாய் என பேசி, அரசியல் ஆக்கி, அதில் ஏதோ ஒன்று இருக்கும் போல அதுதான் இப்படி ஆளாளுக்கு அறிக்கை விடுகிறார்கள் என மக்களுக்குள் பரபரப்பைப் பற்ற வைத்து  சாதாரணமாக கடக்க வேண்டிய ஒரு படத்தை இந்திய அளவில் மட்டுமின்றி உலக அளவில் பரபரப்பான படமாக ஆக்கியிருக்கிறார்கள். இந்தப் பரபரப்பின் பின்னணி உண்மையிலேயே ஜிஎஸ்டிதானா... இல்லை படத்தை வெற்றிப்படமாக்கும் முயற்சியா... தம்பி விஜய் படங்களில் கவனம் செலுத்தட்டும் என்று சொல்லி தான் அரசியலுக்கு வர  இருக்கும் கமலைப் பயமுறுத்தவா என பலவாறு பட்டிமன்றங்கள் நடக்கின்றன. இப்படியும் கூட இருக்கலாம்... அரசியல்வாதி விதைக்க, மீடியாக்கள் தீவிர அறுவடை செய்வது யோசிக்கத்தான் வைக்கிறது. எது எப்படியோ இந்தப் பரபரப்பின் மூலமாக விஜயின் வெற்றிப் படங்களில் ஒன்றாய் கூட வேண்டிய மெர்சல், விஜய் படங்கள் பெறாத வரலாற்று வெற்றியை பெற்றிருக்கிறது.

இந்த அரசியல்வாதிகளுக்கு குறிப்பாக தமிழக அரசியல்வாதிகளுக்கு எதில் எல்லாம் அரசியல் செய்ய வேண்டும் என்பதில் சுத்தமாக ஞானம் கிடையாது. எப்பவுமே மக்கள் முட்டாள்கள் என்ற நினைப்பிலேயே எதை எடுத்தாலும் அரசியல் பண்ணுகிறார்களே... மக்கள் விழித்துக் கொண்டு விட்டார்கள் என்பது இந்தக் கூமுட்டைகளுக்குத் தெரிவதில்லை.... என்ன சொன்னாலும் கேட்டுக் கொண்டிருந்த கூட்டமெல்லாம் இப்ப இல்லை... நல்லவன்னா தூக்கி வைத்து ஆட்டம் போடவும்... அதுவே நாதாரின்னா தூக்கிப் போட்டு மிதிக்கவும் மக்கள் பழகியாச்சு. இந்த ஜி.எஸ்,டி விவகாரம் சீமான் ஒரு கூட்டத்தில் பேசியது என்று நினைக்கிறேன். அரசியல்வாதியாகிவிட்ட சீமான் பேசலாம்... ஆனால் நடிகன் தன்னோட படத்தில் பேசக்கூடாது... இதெல்லாம் என்ன லாஜிக் என்றே தெரியவில்லை.

நமக்குப் பக்கத்தில் இருக்கும் கேரளாவில் அரசியல் படங்கள் என்றால் கம்யூனிச கட்சிக் கொடிகளையே பயன்படுத்துகிறார்கள். அந்தக் கட்சிகளின் பெயர்களையே பயன்படுத்துகிறார்கள். நம்மைப் போல் கற்பனையில் ஒரு பெயர் வைத்து, அதற்கு கலர்கலராய் கொடி வைத்தெல்லாம் படமெடுக்கவில்லை. சமீபத்தில் பார்த்த படத்தில் கூட மத்திய அரசுக்கு எதிரான  அரசியல் வசனங்கள் அதிகமிருந்தன. அங்கெல்லாம் யாரும் இப்படி இசைக்கக் கிளம்பவில்லை... தமிழகத்தில் மட்டுமே இது போன்ற கேவலங்கள் எல்லாம் நடக்கும். இந்தப் பிரச்சினையை மிகப்பெரிய பிரச்சினை போல மீடியாக்கள் செய்யும் அலம்பல்கள் தாங்கவில்லை. எந்தப் பக்கம் போனாலும் நேர் படப் பேசுகிறேன் என ஆளாளுக்கு கூவிக் கொண்டிருக்கிறார்கள். நெடுவாசல் போராட்டத்தின் போதோ... அனிதா மரணத்தின் போதோ... கூவத்தூர் குதூகலத்தின் போதோ... டெங்கு குறித்தோ... எந்த மீடியாவும் இந்தளவுக்கு தீயாய் வேலை செய்ய வில்லை... இதை வைத்து தங்கள் டிஆர்பியை கூட்டிக்கச் செய்ய தீவிர வேலை செய்கிறார்கள் என்பதும் இது விஜய்க்கு  ஆதரவாக களம் காணும் கருத்துப் போர் அல்ல என்பதும் நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்..?

நடப்பை வசனமாக வைத்திருப்பதால்தான் இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் தியேட்டரில் கை தட்டுகிறான்... ஆஹா.. நமக்கெதிராக கை தட்டுறானே... கை கட்டி அல்லவா இருக்க வேண்டும்... எப்படிக் கை தட்டலாம் என எகிறிக் குதித்து நடிகர்கள் அரசியல் பேசக்கூடாது என வந்து நிற்க ஆரம்பித்திருக்கிறார்கள். இதை சென்ற ஆண்டு அம்மையார் உயிருடன் இருக்கும் போது இவர்களால் இவ்வளவு தில்லாக பேசியிருக்க முடியுமா..? ரஜினியை வா... வாவென அழைக்கும் இவர்கள்தான் கமலையும் விஜயையும் கழுவி ஊத்துகிறார்கள். இவர்கள் எண்ணம் எல்லாம் ரஜினி நமக்கு ஆதரவாய் இருப்பார் என்பதே... இவர்களுக்கு ஆதரவாய் நின்றால் நம் நிலை என்னவாகும் என்பது கூடவா அவருக்குத் தெரியாது..?

இங்கு ஒரு நண்பர் விடாது நேர் பட, ரொம்ப நேர்மையாகப் பேசுவதைப் பார்த்து குதித்துக் கொண்டிருக்கிறார். ஒரு படத்துக்கு இம்புட்டு பிரச்சினை பண்ணுகிறார்களே... திட்டம் சரியில்லை... சிங்கப்பூர் இலவசமாகக் கொடுக்கலையா... இங்க அதைச் செய்யலையா என்றெல்லாம் கேட்கிறார். சிங்கப்பூர்... துபாய் எல்லாம் சிறிய நாடுகள்... அவர்கள் ஒன்றைச் செய்வதென்றால் உடனே செய்ய முடியும். நம் நாட்டில் எதையும் உடனடியாக செய்ய முடியாது. மருத்துவத்துறையில் மட்டுமல்ல எல்லாத்துறையிலுமே காசு பாக்கத்தான் செய்கிறார்கள். மருத்துவம், கல்வி என எல்லாமே பெரும்பாலும் அரசியல்வாதிகளின் கைகளில்தான் இருக்கின்றன. அப்புறம் எப்படி இதையெல்லாம் செய்ய முடியும்...? சினிமா என்பது கற்பனை என்பதை விடுத்து அதுதான் வாழ்க்கை என்பதை நாமும் அரசியல்வாதிகளும் எப்போதும் கைவிடப் போவதில்லை. இன்று மெர்சலுக்கு குரல் கொடுக்கும் பல நண்பர்கள் அன்று விஸ்வரூபத்தை எதிர்த்தவர்களே...

மெர்சல் கதைக்கு வருவோம் வாங்க.... அப்பனைக் கொன்றவனைப் பலி வாங்கும் அரதப் பழசான கதைதான்... சுயமாய் சிந்திப்பதைவிட ஆங்காங்கே இருந்து உருவி ஒரு கூட்டாக்கி அதை தனது மேக்கிங் என்னும் சுவையால் மெருகூட்டச் செய்வதில் அட்லீ கில்லாடிதான்... இல்லைன்னா அவரோட மூணு படமுமே தோல்விப் படங்களாய்தான் அமைந்திருக்கும். இதில் மருத்துவத்துறையை கையில் எடுத்திருக்கிறார்கள். மருத்துவத்துறையின் பாதிப்பு சாமானியனுக்கு மட்டுமே புரியும்... அதனால்தான் அவன் இந்தப் படத்தைக் கொண்டாடுகிறான். இன்று எந்த மருத்துவமனை லேபரேட்டரி வசதியின்றி, மருந்தகம் இன்றி இருக்கின்றது. எல்லாவற்றிலும் காசு பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். மருந்துகள் அவர்களிடம் மட்டுமே வாங்க வேண்டும்... வாங்க முடியும்.

மனிதாபிமான முறையிலான மருத்துவம் பார்க்கும் மருத்துவர்களை நாம் அத்தி பூத்தாற்போல்தான் பார்க்க முடியும். சில வசனங்கள்தான் விஜய்யை ஜோசப் விஜய்யாகவும் அட்லீயை கிறிஸ்தவனாகவும் முன்னிறுத்த வைத்திருக்கிறது. தற்போதைய சினிமாவில் பல இளம் இயக்குநர்கள் தங்கள் மதம் தவிர்த்து மற்ற மதத்தின் மீது சேற்றை வாரி இறைக்க ஆரம்பித்திருக்கிறார்கள். தங்கள் சாதியைக் கொண்டாடவும் மதத்தின் சாராம்சத்தைப் புகுத்தவும் செய்கிறார்கள். இது சரியான செயல் அல்ல... அதிலிருந்து இளம் இயக்குநர்கள் மாற வேண்டும். ஒருவரின் மீது நாம் வெறுப்புக் கொள்ளும் போது அவரின் சாதியையும் மதத்தையும் முன்னிறுத்த ஆரம்பித்திருப்பது அருவெறுக்கத்தக்கது.. கேவலமானது. தங்கள் திட்டங்களில் வெற்றி பெற ஒருவனின் சாதியையும் மதத்தையும் சொல்லி எதிர்ப்பைக் காட்டுவதில் தமிழக பாஜகவினர் ரொம்பக் கேவலமாக நடந்து கொள்கிறார்கள். இதுவரை விஜய்யை எவனும் கிறிஸ்தவராகப் பார்த்தது கிடையாது. அப்படி தமிழர்கள் சாதியும் மதமும் பார்க்க ஆரம்பித்திருந்தால் பலர் உச்சத்தைத் தொட்டிருக்க முடியாது. தயவு செய்து சாதி, மத அரசியலுக்கு முடிவு கட்டுங்கள். சாதியாலும் மதத்தாலும் எங்களைப் பிரிக்க நினைத்தால் அழிவு உங்களுக்குத்தான் என்பதை எப்போது உணர்வீர்களோ..?

மூன்று விஜய்... மூன்று நாயகிகள்... இதில் சமந்தாவும் காஜலும் ஒரு பாடலுக்காக பயன்படுத்தப்பட, நித்யாமேனன் மட்டுமே கதையில் வாழ்ந்திருக்கிறார்... ஆனால் பெயர் போடும் போது பின்னுக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்.  வெற்றியும் மாறனும் எப்பவும் போல் விஜய்யின் சிறு மாற்றங்கள் கூட இல்லாத இரட்டையர்களாய்... அப்பனாய் வரும் விஜய்யின் கெட்டப் நல்லாயிருக்கு... ஆனா அந்தப் பேச்சு வழக்கு கொஞ்சம் கூட ஒட்டலை... பார்க்கும் நம்மிடம் தள்ளியே நிற்கிறது. எது எப்படி என்றாலும் படம் பார்க்கலாம்... நல்லாத்தான் இருக்கு... வசனங்கள் பெரும்பாலும் சுட்டவையே என்றாலும் சூடாய்த்தான் இருக்கின்றன. வடிவேலு வருகிறார்... கோவைசரளா இருக்கிறார். சத்தியராஜூம் இருக்கார்... சூர்யாவின் வில்லத்தனம் ஸ்பைடரோடு ஒப்பிட்டால் வேகம் குறைவு... ஏ.ஆர். ரஹ்மான் இசையில் பாடல்களில் ஆளப்போறான் தமிழன் ஆட்டம் போட வைக்கும் என்றால் நீதானே மெலோடியில் தாலாட்டும். மேஜிக் காட்சிகள் சூப்பர்.

விஜய் உடல் மொழி மாற்றத்தை எந்தப் படத்தில் கொண்டு வருவார் என்பது தெரியவில்லை... இதிலும் அந்த நெளிவு குனிவுன்னு... மாத்துங்க பாஸ்... கோவை சரளா நீ எங்களின் ஒரே பிள்ளை... அக்மார்க் புத்திரன் என்கிறார்... பின்னர் விஜய்யின் ரெண்டாவது பிள்ளையாய் பிறந்து இறந்து மிராக்கிளாய் உயிர் பெற்று அம்மா, அப்பா வில்லனால் சாக, அண்ணன்காரன் எடுத்துக் கொன்டு ஓடி, கண் தெரியாத மேஜிக் செய்யும் ஒருவரால் வளர்க்கப்பட்டு டாக்டராகிறார். இங்க கோவைசரளாவோட அக்மார்க் லாஜிக் இடிக்குதா இல்லையா.? வடிவேலு நீங்க எங்க அண்ணன் மகனுங்கடா... அதனாலதான் உங்க பின்னாலயே திரியிறேன்னு சொல்லுறார்... விஜயை அடித்துக் கொல்லும் போது யாரும் வரலை... அப்புறம் பசங்க எங்க ஓடினாங்கன்னு விவரமும் தெரியாது... எப்படி இவர்கள் பின்னே வந்தார்...? அப்படியே  இவருக்குத் தெரியும் நிலையில் இந்தப் பசங்களை வில்லனுக்கு எப்படி தெரியாமல் போச்சு. பிரான்சில்தானே மேஜிக் ஷோவில் வில்லனில் ஒருவனைக் கொல்றாங்க... அங்கயும் தமிழக போலீஸ் மற்றொரு வில்லனோட வந்து பிடிச்சிடலாம் என்கிறார்... அது எப்படி...? சூர்யாவால் விஜயை அடையாளம் காண முடியும் போது டாக்டரால் கண்டு கொள்ள முடியவில்லையே அது எப்படி...? பெரிய போஸ்டரில் விஜய் படம் வைத்து டாக்டர் என்று பறை சாற்றியிருக்க, டாகடருக்கு உதவியாக வரும் டாக்டர் காஜலுக்கு எப்படி தெரியாமல் போனது..?

மொத்தத்தில் நம்மை ஒவ்வொரு பிரச்சினையின் பின்னும் பயணிக்க விடாமல் அவ்வப்போது மாற்றுப் பாதைகளை  அமைத்து அதில் அலைய விடுவதில் தமிழக அரசியல்வாதிகள் கில்லாடிகள்... சேகர்பாபு என்ன ஆனார்..? வருமானத்துக்கு அதிகமாக சொத்துச் சேர்த்த தலைமைச் செயலாளர்..?  விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த ரெய்டு..? விவசாயிகள் பிரச்சினை..? நெடுவாசல் போராட்டம்...? நீட் பிரச்சினை..? அனிதா மரணம்..? டெங்கு விவகாரம்...? இப்படி பதில் தெரியாமல் மாற்றுப் பாதையில் பயணிக்கும் நாம் இப்போது பயணிக்கும் பாதை மெர்சல்... இந்தப் பிரச்சினையை மீடியாக்கள் கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் டெங்கு கொசு சுத்தமாச் செத்துப் போச்சு பாருங்க... எல்லாத்தையும் மறந்துட்டு நாமளும் அவங்க பின்னால பயணிக்க ஆரம்பிச்சிடுறோம் இல்லையா..? நம்மள பரபரப்புக்கு பழக்கிப்புட்டானுங்க...

படத்தில் லாஜிக் ஓட்டைகள் நிறைய இருந்தாலும் வசனங்களின் வேகத்தால் படம் நல்லவே ஓடும்... இப்ப நம்ம அரசியல்வாதிகள் போட்ட ஆட்டத்தில் இன்னும் பிச்சிக்கிட்டு ஓடும். விஜய்க்கு மிகப்பெரிய மைல்கல் இந்தப்படம்... எல்லாத்திலும் அரசியல் பொழப்பு நடத்தும் கேடு கெட்ட அரசியல்வாதிகளுக்கு மிகப்பெரிய மைனஸ் இந்தப் பிரச்சினையை கையிலெடுத்தது என்பதை  அவர்கள் உணரும் போது மெர்சல் மிகப் பிரமாண்ட வெற்றியைப் பெற்றிருக்கும்.

விஜய் அடுத்த ஆட்டத்துக்கு ரெடியாகலாம்... 

******

குறிப்பு : என் எழுத்து எனக்கானது... நான் என் மகிழ்ச்சிகாகவே எழுதுகிறேன். எல்லாருக்கும் பிடிக்க வேண்டும் என்று நினைப்பவனில்லை... தமிழ்மண வாக்கை ஒரு பொருட்டாகவே கருதுவதும் இல்லை. மைனஸ், பிளஸ் உங்கள் விருப்பத்தின் குறியீடு...  மைனஸ் ஓட்டுப் போடுவதால் என் எழுத்தில் எந்த மாற்றமும் வரப்போவதில்லை. நான் எப்பவும் நான்தான்... என் எழுத்து எனக்கானதுதான்.. மைனஸ் ஓட்டுப் போடும் நண்பர்கள் FAKE ID-ல் வரவேண்டியதில்லை... உங்கள் சுயத்தை மறைத்து எதற்காக வாக்களிக்கிறீர்கள்... தைரியமாக முகமூடியை கழட்டிவிட்டு வாருங்கள்...  உங்களை வரவேற்கிறேன்.

-'பரிவை' சே.குமார்.

வெள்ளி, 20 அக்டோபர், 2017

பேச்சிலர் ரூம்...

Related image

வெளிநாட்டு வாழ்க்கையில் மிக முக்கியமான பங்கு இந்த பேச்சிலர் அறைக்கு உண்டு. ஊரில் திருமணம் ஆகவில்லை என்றால் பேச்சிலர் என்போம்... கல்யாணம் ஆனவன், ஆகாதவன், பேரன் பேத்தி எடுத்தவர் என  குடும்பம் ஊரில் இருக்க இங்கு  வேலைக்கு வருபவர்கள் எல்லாருமே பேச்சிலர்ஸ்தான்... அவர்கள் தங்கும் அறைகள் பேச்சிலர் ரூம்தான். ஒரு பெட் மட்டுமே இந்த அறைகளில் நமக்கான சொத்து... அதுவே போதுமானதாய்... அதற்கான மாத வாடகை சாதாரண அறை எனில் இந்திய ரூபாயின் மதிப்பில் ரூ. 12000 முதல் ரூ. 15000.  அதுவே ரெண்டு பேர் மட்டும் தங்கும் நல்ல அறை எனில் ரூ.25000 முதல் ரூ.40000 வரை. எல்லா இடங்களிலும் பேச்சிலர் அறை வாடகைக்கு இருக்கு.. இன்ன வாடகை, இணைய வசதி உண்டு, வாசிங்மெஷின் இருக்கு, சமையல் செய்யலாம் என்ற விளம்பரம் ஒட்டப்பட்டிருக்கும். இப்போது ஒட்டினால் உடனே கிழித்து விடுகிறார்கள். தூய்மையான நகரம் என்ற  காரணத்தினால்... அமீரகத்தில் அதிக வாடகை அபுதாபியில் மட்டுமே... இப்போது எல்லா இடத்திலும் வாடகை குறைக்கப்பட்டாலும் அபுதாபியில் மட்டும் அப்படியே.

இந்த பேச்சிலர் அறைகள் ஆயிரத்தெட்டு கதைகள் சொல்லும்... சந்தோஷங்களையும் துக்கத்தையும் அழுகையையும் வேதனையையும் ஒரு சுமக்கும் அறைகள் இவை. ஜாதி, மதம், மொழி, இனம் கடந்து மனிதர்களைச் சுமக்கும் அறைகள் இவை. நான் இங்கு வந்தது முதல் எட்டு வருடங்கள் சொந்தங்களுடனும் சில பக்கத்து மாவட்ட நண்பர்களுடனுமே தங்கியிருந்தேன். உறவுகளுடன் இருப்பது பல வகையில் உதவியே என்றாலும் சில வகையில் நிறையச் சிக்கல்களைக் கொடுத்துக் கொண்டுதான் இருந்தது... என்னிடம் நல்லது பேசி, ஊரில் மலையென நம்மீது அவதூறுகளை பரப்பி வந்த போதும்... வேறு அறைக்குச் செல்லுங்கள் என குடும்பத்தில் சொன்ன போதும்... உறவுகளற்ற பாலையில் இருக்கும் சில உறவுகளோடு வாழ்தல்தான் நல்லது என்பதாலும்... ஏதாவது ஒன்று என்றால் உறவுகள் முன்னிற்குமே என்பதாலும்... பெருங்குடும்பத்தில் பிறந்து பெருங்குடும்பத்தில் பெண்ணெடுத்த நமக்கு இந்த ஊரில் உறவென்று சொல்லக் கிடைத்த மனிதர்கள் இந்த நாலைந்து பேர் மட்டுமே என்பதாலும்.... அவர்கள் புறம் பேசினால் அதனால் நமக்கென்ன வந்தது என்பதாலும் கிட்டத்தட்ட நாலு வருடத்துக்கு முன்பு ஆரம்பித்த பிரச்சினைகளை மேலும் நாலு வருடங்கள் பொறுமையாய்க் கடந்து பொறுக்க முடியாத ஒரு தினத்தில்... ஆறு மாதம் முன்னர் முற்றிலும் புதியவர்களின் அறைக்கு வந்தேன்... இந்தச் சிறிய அறையில் மனிதர்கள் மனிதர்களாய் இருப்பது சிறப்பு.

முதன் முதலில் தங்கியது ஒரு பெரிய வீட்டில்... ஆறாவது தளத்தில் 602ம் நம்பர் எண் கொண்ட அந்த வீடு ஒரு பெரிய ஹால், மூன்று பெட்ரூம்... இரண்டு டாய்லெட், கிச்சன், பால்கனி என அழகாக இருந்தது. அதில் முதல் அறையில் நாங்கள் ஒன்பது பேர்... மற்ற இரு அறைகளில் மலையாளிகள்... ஹாலில் ஒரு பெரிய டேபிளும் பத்துச் சேர்களும் இருக்கும். வார விடுமுறை தினத்தில் அங்குதான் மலையாளிகளும் எங்க ஆட்களும் காசுக்கு சீட் விளையாடுவார்கள்... தண்ணியும் சீட்டும் விறுவிறுப்பாக இறங்க, அது பெரும்பாலும் அடிதடியில் முடியும். கொஞ்ச நேரத்தில் 'மச்சான்' என மலையாளி வர, எங்க ஆட்களும் 'மச்சான்' போட மீண்டும் சிகரெட், தண்ணி, சீட்டாட்டம் என இரவு வரை தொடரும். தீபாவளி, பொங்கல் என்றால் நாங்களும் மலையாளிகள் பண்டிகைக்கும் ரம்ஜானுக்கும் அவர்களும் சமையல் செய்ய எல்லாரும் ஹாலில் அமர்ந்து சாப்பிடுவோம். எல்லோருக்குள்ளும் ஒரு நேசம் இருந்தது. மலையாளிகள் தண்ணி அடித்து விட்டு செய்யும் அலப்பறைகளை தினமும் ரசிக்கலாம். இரண்டு கிழவர்கள் தண்ணி அடிக்காத வரை பிரியமான நண்பர்கள்... அடித்த பின் உடம்பில் ஒட்டுத்துணியில்லாமல் சண்டையிட்டு கட்டி உருளுவார்கள். எங்க அறையில் தண்ணி அடிப்பவர்களால் அதிக அலம்பல் இருக்காது. வாரவிடுமுறையில் நண்பர்களும் உறவுகளும் வர, அந்த இரண்டு நாள் மட்டுமே அலப்பறைகளும் ஆட்டங்களும் அதிகமாக இருக்கும். அந்தக் கட்டிடத்தில் மூன்றாண்டுகள் இருந்தோம். பின்னர் அது இடிக்கப்பட இருந்ததால் வேறொரு கட்டிடத்துக்கு மாற வேண்டிய சூழல்... அறை தேடி அவசரத்துக்கு மிகவும் மோசமான ஒரு கட்டிடத்தில் மோசமான ஒரு அறையில் மூன்று மாதங்கள் ஓட்டினோம். கிச்சனும், வரண்டாவும் மழை பெய்த ஒட்டைக் கசாலைக்குள் நடப்பது போல் இருக்கும்.

மூன்றாவதாக மாறிய கட்டிடத்தில் ஹாலையும் அறையாக்கி வைத்திருந்தார்கள். இரண்டு அறைகளாக இருந்த ஹாலில் மிகச் சிறிய அறையில் நாங்க ஏழு பேர்... இரண்டு இரண்டாக மூன்று கட்டில்கள்..  நான் எப்பவுமே தரையில்தான் படுப்பேன் என்பதால் ஆறு பேருக்கு கட்டில்... இரண்ட இரட்டைக் கட்டிலில் கீழோ மேலோ படுக்கும் நபரைப் பொறுத்துத்தான் இருவரின் தூக்கமும் அமையும்... மேலே ஆட்டினால் கீழிருப்பவரின் தூக்கம் போகும்... கீழே ஆட்டினால் மேலிருப்பவரின் தூக்கம் போகும்... இதெல்லாம் சுக அனுபவம்தான் போங்க... இது இரண்டாவது தளத்தில் 203 என்ற எண் கொண்ட வீட்டின் ஹால் இரண்டு அறையாக மொத்தம் ஐந்து அறைகள்... இரண்டில் இங்கு இருக்கும் தமிழக சைவ ஹோட்டலில் வேலை செய்யும் நண்பர்கள்... ஒன்றில் மலையாளிகள்... மற்றொன்றில் எங்க உறவினரும் ஒரு ஏழெட்டுப் பேரும்... எங்க இரண்டு அறைக்கும் ஒரே சமையல்... ஒரு சமையல்காரர்... ஹோட்டல் நண்பர்களுக்கு ஒரு பாத்ரூம்... உறவினரின் அறை பெரியது... அதன் உள்ளேயே பாத்ரூம்... எங்களுக்கும் மலையாளிகளுக்கும் ஒரு பாத்ரூம்... மலையாளிகள் பாத்ரூமுக்குள் போனால் ஒரு மணி நேரமாகும்... தினமும் பிரச்சினைதான்... நாம் உள்ளிருக்கும் போது கதவைத் தட்டிக் கொண்டே இருப்பார்கள். அவர்கள் இருக்கும் போது தட்டினால் சண்டைக்கு வருவார்கள். பெரிய சண்டைகள் எல்லாம் நடந்தது உண்டு. அடிக்கப் போனதும் உண்டு. உறவினர் தன் அறை நண்பர்களுடன் வேறொரு பக்கம் நகர, அவர்கள் இருந்த பெரிய அறைக்கு மாறினோம். அந்த அறையைப் பொறுத்தவரை எங்களால் ஒழிக்க முடியாமல் இருந்தது மூட்டை மட்டும்தான்... எவ்வளவோ முயற்சிகள் செய்தும் அது தன்னோட ஜாகையை மாத்திக்கவேயில்லை.  பெரிய அறை என்பதால்  வாடகையும் சின்ன அறையோடு ஒப்பிட்டால் அதிகம்... அதனைச் சரிக்கட்ட புதிதாய் மூவர் உள்ளே வர, எட்டுக் கட்டில் போக நானும் இன்னொரு நண்பரும் கீழே... ஸ்பிரே பாட்டிலில் டெட்டால் கலந்து வச்சிக்கிட்டு எங்களைச் சுற்றிலும் அடித்து வைத்து... இரவில் மூட்டைக் கடிக்கு வெளியே எந்திரித்து வந்து உக்காந்திருந்து... அடிக்கடி போர்வையை கொண்டு போய் உதறி... மீண்டும் டெட்டால் அடித்து.... உறங்கிய இரவுகள் கணக்கில் அடங்கா... மறக்க முடியாத இரவுகள் அவை.

பின்னர் அதிலிருந்து மாறி மற்றொரு கட்டிடம் போனோம்... புதுப்பிக்கப்பட்ட பழைய கட்டிடம்... நாலாவது தளத்தில் 404, இங்கும் ஹால்தான் அறையாகி இருந்தது... இங்கும் மலையாளியோடு பாத்ரூம் பகிர்ந்து கொள்ள வேண்டிய சூழல் என்றாலும் பிரச்சினை இல்லாத மலையாளிகள்.... எட்டு மணிக்குள் நாங்கள் வேலைக்கு  கிளம்பி விடுவோம்.... பத்து மணிக்குத்தான் அவர்கள் குளிக்க ஆரம்பிப்பார்கள்... பிரச்சினை இல்லாமல் நகர்ந்தது... ஒரே ஒரு பிரச்சினைதான்... மலையாளிகள் எல்லாரும் சிகரெட் அடிப்பார்கள்... பாத்ரூமுக்குள் அடிக்கடி சிகரெட் பிடிக்கச் செல்வார்கள். அவர்கள் சென்று வந்தபின் நம்மால் நுழைய முடியாத அளவுக்கு நெடியிருக்கும்.. சொல்லிச் சொல்லிப் பார்த்து கோபமாகப் பேசினாலும் அவர்கள் அவர்களாகவே இருந்தார்கள்.  குறிப்பாக மூட்டைகள் இல்லா அறை என்பது இங்கு தமிழக அரசியலில் சுத்தமான அரசியல்வாதியை தேடுவது போல்தான்... இந்த அறையில் சுத்தமான அரசியல்வாதியைக் கண்டு கொண்டோம்... ஆம் மூட்டைகள் இல்லை... பெரிய அறை... மூலைக்கு ஒன்றாய் நாலு கட்டில் மட்டுமே... நான் மட்டும் தரையில்... கிச்சனும் பெரியதாய்....  கீழே இறங்கினால் சூப்பர் மார்க்கெட்... அருகே சினிமா தியேட்டர் என நல்லதொரு அறை...  நமக்குள் பரிமாற்றம் செய்ய வேண்டியவற்றை... சாதாரண பொட்டுவெடியின் மீது முடிந்தளவுக்கு நூல் சுற்றி அணுகுண்டாக்கி ஊருக்கு அனுப்பி பிரச்சினை மேகங்களை மழை பெய்யச் செய்ய... அதுவும் கடும் மழைக்கு வித்திட... போதும் சாமிகளா எனக் கிளம்பி சொந்தங்களற்ற அறைக்கு மாறினேன். அதுவும் 404தான்... அருகில் ஒரு பூங்காவும் உண்டு.

இதுவரை தமிழர்களுடன் மட்டுமே இருந்த நான், முதன் முதலாக தமிழர்களும் மலையாளிகளும் சம விகிதத்தில் இருந்த அறைக்குள் ஐந்தாவதாய் நுழைந்தேன். ஒன்பதாவது வருடத்தில்தான் கட்டிலில் படுக்கை... காரணம் சிறிய அறை... தரையில் ஆள் படுக்கும் அளவுக்கு இடமில்லை.... பத்துக்கு பத்து அறையில் மூன்று இரட்டைக் கட்டில்கள்... நம் கட்டில்தான் நம்மளோட பங்களா.... கட்டிலுக்கு கீழே என்னுடைய உடமைகளும் மேல் கட்டிலில் படுத்திருக்கும் நண்பரின் உடமைகளும்... பெரும்பாலான அறைகளில் சில காரணங்களால் வேற்று மதத்தினரை சேர்ப்பதில்லை... எங்கள் அறையில் நாங்கள் கலந்தே இருக்கிறோம்... அவர்களின் மத நம்பிக்கைகள் அவர்களுக்கு... நம் மத நம்பிக்கை நமக்கு. எங்கள் கட்டிலை ஒட்டி சிறிய அட்டைப் பெட்டியை சுவற்றில் அடித்து முருகனையும் லெட்சுமியைம் சிவனையும் தங்க வைத்திருக்கிறோம். பேச... சிரிக்க... சந்தோஷிக்க இந்த சிறிய அறைக்குள் இடமுண்டு. நல்லதொரு அறை... சிறிய அறை என்றாலும் மூட்டையில்லாத அறை என்பது சிறப்பு. எங்கள் வீட்டுக்குள் நாலு அறைகளில் பெங்காளிகள், மலையாளிகள், வடநாட்டுக்காரர்கள் என எல்லாரும் உண்டு.

அதிகாலை எழுந்து குளித்து சூரியன் வருமுன்னர் வேலைக்குச் செல்பவர்கள்... சூரியன் மறைந்த பின்னர்... பணி முடித்துத் திரும்பி குளித்து சமையல் செய்து ஊருக்குப் போன் பண்ணி... இப்போ ஸ்கைப், இமோ என நிறைய சாப்ட்வேர்கள் இருப்பதால் மணிக்கணக்கில் பேசி... தங்கள் மனபாரங்களை வெளியில் சொல்லாவிட்டாலும் கொஞ்சம் ஆசுவாசமாகி... சாப்பிட்டு... ஏதாவது ஒரு படத்தை... தமிழ் ராக்கர்ஸ்ன்னும் தமிழ்க்கன், தமிழ்யோகி ஆகியோரின் புண்ணியத்தில் வெளியான அன்றே பார்த்து... அதுவும் மெர்சல் ஊரில் வெளியாகும் முன்னரே மிகச் சிறப்பான தரத்தில் கொடுத்தான் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.  எப்படியும் பதினோரு பனிரெண்டு மணிக்குப் படுத்து.... மறுநாள் எழுந்து... இப்படி இயந்திரத்தனமான வாழ்க்கையில் எல்லாருடைய வேதனைகள், வலிகள், வருத்தங்களையும் நாலு சுவற்றுக்குல் சுமந்து வருந்துபவை இந்த பேச்சிலர் அறைகளே.

இங்கு பிரச்சினைகள் இல்லாத மனிதர்களே இல்லை... எல்லாருக்கும் ஏதாவது ஒரு பிரச்சினை இருக்கத்தான் செய்யும்... ஊரில் இருந்து வரும் போன் சந்தோஷத்தை சுமந்து வந்தால் எல்லாரும் சிரித்து... சோகம் எனில் எல்லாரும் பங்கு கொண்டு... போன் பேசும்போது பேச்சு கோபமாய் திரும்பினால் ஆதரவு சொல்லி... ஏதோ சமைத்து... எல்லாருமாய்ச் சாப்பிட்டு... கேலி கிண்டல் என எல்லாமுமாய் நகரும் வாழ்க்கையைச் சுமக்கும் பேச்சிலர் அறைகளே இங்கு அதிகம்... ஒரு தளத்தை வாடகைக்கு எடுத்து அதில் ஹாலைக்கூட அறையாக மாற்றி சம்பாதிப்பதில் மலையாளிகள் கில்லாடிகள்... அதேபோல் ஒவ்வொரு கட்டிடத்துக்கும் ஒன்றோ அல்லது இரண்டோ வாட்ச்மேன்கள் (நாத்தூர் - அரபியில்) இருப்பார்கள்... இவர்கள் கூட பெரும்பாலும் மலையாளிகளாய் இருப்பார்கள். ஒரு அலுவலக மேலாளர் சம்பாதிப்பதைக் காட்டிலும் அதிகம் சம்பாதிப்பவர்கள் இவர்கள். இவர்கள் செய்யும் கெடுபிடிகள் பல நேரங்களில் கடுப்படைய வைக்கும். இப்போது இருக்கும் கட்டிடத்தில் பெங்காலி... எந்தப் பிரச்சினையும் இல்லாத நாத்தூர்...

தண்ணியடிக்காதவர்கள் இருக்கும் அறையில் தங்க இடம் கிடைப்பது அரிது. பெரும்பாலும் எவராவது ஒருவர் தண்ணி அடிப்பவராக இருப்பார். இங்கு வியாழன் மாலை கருப்புக் கவர்களில் ஆண்களும் பெண்களும் பாட்டில்களை அள்ளிச் செல்வார்கள். சிகரெட்டும் தண்ணியும் கட்டுப்பாட்டில் வைக்க முடியாதவையாகத்தான் எல்லா இடத்திலும் இருக்கின்றன. எங்க அலுவலக கட்டிடத்தின் கீழ்ப் பகுதிக்கு எப்போது வந்தாலும் ஒரு லெபனான் பெண் சிகரெட்டை ஊதிக் கொண்டுதான் நிற்கும். அது வேலை பார்க்கும் அலுவலகத்தில் இருப்பதை விட கீழ்த் தளத்தில் இருப்பதே அதிக நேரம் எனத் தோன்றும்... நாலு ஆண்களுடன் புகையில் கலை செய்து கொண்டிருப்பதை எப்போதும் பார்க்கலாம். எங்க அறையில் தண்ணி அடிப்பவர்கள் உண்டு. தினம் ஊற்றியவர் மூன்று மாதமாக தண்ணி அடிப்பதில்லை.... இருவர் எப்போதேனும் அடிப்பார்கள். அலம்பல் இருப்பதில்லை. என்னைப் பொறுத்தவரை பெரும்பாலும் கணிப்பொறியில் ஏதேனும் டைப் பண்ணிக் கொண்டே இருப்பதால் கட்டில்தான் வாழ்க்கை... இன்னைக்கு ஒருத்தர் இம்புட்டு எழுதுறியளே... எல்லாம் பத்திரிக்கைக்குத்தானே கொடுப்பீங்க.... மாசம் ஒரு பத்தாயிரம் கிடைக்குமா என காலையிலேயே கேட்டு என்னைச் சிரிக்க வைத்தார். கவலைகள், கஷ்டங்கள் இருந்தாலும் சின்னச் சின்ன சந்தோஷங்களைச் சுமக்கும் மனிதர்களுடன் இருப்பதும் ஒரு சுகமே.

நம்மவர்கள் ஆறு ஏழுபேர் ஒரு அறையில் என்றால் ஒரு பத்துக்குப் பத்து அறைக்குள் நாலு கட்டிலில் நாலு பிலிப்பைனி குடும்பம் வாழ்க்கை நடத்தும்... பாகிஸ்தானிகளோ பத்துக்கு பத்து அறையில் பதினைந்து பேர் தங்கிவிடுவார்கள். பாதிப் பேர் பகலில் வேலைக்குச் சென்றால் மீதிப்பேர் இரவு வேலைக்குச் செல்வார்கள். பிலிப்பைனிகளின் சமையல் முறைகள் கூட நம்மோடு ஒத்து வராது... நம் மசாலா வாசம் பிடிக்காத அரபிக்கு மசாலா இல்லாத  பச்சையாக வெந்து வேகாமலும் கொண்டு வரும் பிலிப்பைனி சாப்பாடு பிடிக்கும். அரபிப் பெண்களுக்கு பிலிப்பைனி பெண்களைக் கண்டாலே பிடிக்காது... இதன் பின் வேறோரு கதை இருக்கு... அது நமக்கெதுக்கு. எங்க அலுவலகத்தில் பிலிப்பைனி தோழிகள் சாப்பாட்டை திறந்தால் நான் வெளியாகிவிடுவேன். அந்த வாசம் நமக்கு ரொம்பத் தூரம்... இப்ப பிலிப்பைனிகள் கூட காரம் அதிகமிருக்கும் பிரியாணி ஆர்டர் பண்ணிச் சாப்பிட ஆரம்பிச்சிருச்சிங்க. அலுவலகத்தில் யாரேனும் பார்ட்டி கொடுத்தால் ஸ்பைசி பிரியாணி என கட்டுக்கட்டுபவர்கள் அவர்களாகத்தான் இருக்கும்.

மொத்தத்தில் வெளிநாட்டு வாழ்க்கை வரம் அல்ல... கிராமத்துக் கிழவிகள் சொல்வது போல் 'நாங்க வாங்கி வந்த வரம் இப்படி' என்று சொல்லிக் கொண்டு பேச்சிலர் அறைகள் பல கதைகளைப் பேசும்.... முடிந்தால் அந்த அறைகள் சொல்லும் கதைகளை அவ்வப்போது பார்க்கலாம் என்று சொல்லி பிரியாணி போடும் நண்பருக்கு உதவச் செல்கிறேன்... மத்தியானம் சாப்பிடணும்ல்ல...

குறிப்பு : போட்டோ எங்கள் அறையில் சுட்டதல்ல இணையத்தில் இருந்து சுட்டது.

-'பரிவை' சே.குமார்.

புதன், 18 அக்டோபர், 2017

சிறுகதை : தீபாவளிக் கனவு

'ஞாயித்துக் கெழம தீவாளி... இன்னக்கி செவ்வாக்கெழமயாச்சி... புசுபாக்காவுக்கு போனடிச்சி சொல்லுறேன்னு சொன்ன அம்மா இன்னமும் போன் பண்ணல... இன்னக்காச்சும் பண்ணுமா...?' யோசித்தபடி பாத்திரங்களை விளக்கிக் கொண்டிருந்தாள் சுந்தரி.

சுந்தரிக்கு இப்ப வயசு பதினைந்து இருக்கும்... மூணு வருசத்துக்கு முன்னாடி அவ பெரிய மனுஷியானப்ப ஊருக்கு வந்த அவளோட பெரியம்மா சரசுதான் தூரத்து சொந்தமான புசுபவதி இருக்காள்ல அவ வீட்டுக்கு ஒரு ஆள் வேணுமின்னு சொன்னா... தெரிஞ்ச பிள்ளையா இருந்தா நல்லதுன்னும் சொன்னா... இவள அங்க கொண்டு போயி விட்டுடலாம்ன்னு சொன்னப்போ சுந்தரியோட அம்மாவுக்கு இஷ்டமில்லை... 

'இப்பத்தான் பெரிய மனுசியாயிருக்காக்கா... அவளுக்கு அது பத்தின வெவரம் பத்தாதுக்கா...கொஞ்சநா நம்ம கூட இருந்தாளுன்னா அந்த நாள்ல எப்படி இருக்கணும்... என்ன செய்யணுமின்னு சொல்லிக் கொடுத்துடுவேன்... புது இடம்... புது மனுசங்க... அவளுக்கு அந்த நாளுக்கு இன்னது  வேணுமின்னு கூட கேக்கத் தெரியாதுக்கா....' அப்படின்னு சொல்ல, 'அடி என்னடி இவளே... இது நல்ல வாய்ப்பாக்கும்... அங்க பிக்குப் பிடுங்கல் இல்ல... பிள்ளங்க எல்லாம் தனித்தனியா மருதயிலயும் மெட்டுராசுலயும் இருக்குதுக... நல்லநாளு பெரிய நாளுக்குத்தான் வருங்க... புசுபவதியும் அவ வீட்டுக்காரருந்தான்... பிள்ள மாதிரி பாத்துப்பாக... முப்பது கழிஞ்சதும் மாசாமாசம் எப்படி நடந்துக்கணும் என்ன ஏதுன்னு சொல்லிக் கொடுத்து வையி... நா அவகிட்ட சொல்லிட்டு வந்து கூட்டிக்கிட்டுப் போறேன்... ஒரு நாளஞ்சி வருசத்துக்கு அங்கிட்டு இருந்தான்னா அவ கலியாணத்துக்கு ஏதாச்சும் பெரிசா செய்யிவாங்க... நீ அவளுக்குச் செய்ய என்ன வச்சிருக்கே... அஞ்சுக்கு பத்துக்கும் பாக்குற வேலயில வர்ற வருமானம் வாயிக்கும் பத்தாது... வயித்துக்கும் பத்தாது... இவளுக்குப் பின்னே மூணு இருக்கு... அதுல ஒண்ணுதான் ஆம்பளப்புள்ள... அதுவும் கடசி... அதையாச்சும் படிக்க வக்கணுமில்ல... ஒம்புருசனிருந்தான்னா சம்பாதிச்சி பிள்ளயளக் கட்டிக் கொடுத்துருவான்னு சொல்லலாம்... பாழாப்போன லாரிக்காரன் பகல்ல அடிச்சித் தூக்கிப் போட்டுட்டுப் பொயிட்டான்... ஒம்புருசமுட்டு சொந்தபந்தமுன்னு யாரு ஒதவியாச்சும் இருக்கா... ஏதோ இருக்க ஒரு ஓட்டு வீடு இருக்கு... இதுவும் இல்லன்னா நடுத்தெருவுலயில்ல நிப்பே... சும்மா இங்க பஞ்சு மில்லுக்கு அனுப்புறேங் கிஞ்சு மில்லுக்கு அனுப்புறேன்னு புள்ளய அனுப்புனா... காலங் கெட்டுக் கெடக்கு ஒண்ணு கெடக்க ஒண்ணுன்னா என்ன செய்யிறது... போன மாசம் இப்பிடித்தான் எங்க வூட்டுக்குப் பக்கத்துல பதினாறு வயசு... செல்போனு கடக்கி வேலக்கிப் போச்சு... எவனோடவோ கூட்டாம்... வேலக்கி போனபுள்ள வீடு திரும்பல... திருப்பூரு பக்கம் இருக்காகன்னு சொல்றாக... பதினாறு வயசுல அதுக்கு என்ன தெரியுஞ் சொல்லு... புசுபவதியின்னா நம்ம ஆளு... பத்தரமாப் பாத்துப்பா... என்ன நாஞ் சொல்றது' அப்படின்னு நிறையப் பேசி சொன்ன மாதிரி  ஒரு மாதம் கழித்து இங்க கூட்டியாந்து விட்டுட்டா.

புஷ்பவதி... முதலாளியம்மா மாதிரி நடந்துக்க மாட்டா... சுந்தரிய வீட்டுல ஒருத்தியாத்தான் வச்சிப்பா... என்ன வாங்கிட்டு வந்தாலும் என்ன செஞ்சாலும் சுந்தரிக்கும் ஒரு பங்கு இருக்கும்... ஆரம்பத்துல அவளுக்கு நாப்கின் வாங்கிக் கொடுத்து அதை எப்படி வைக்கணும்... எப்படி சுத்தம் பண்ணனுமின்னு பெத்த புள்ளக்கி சொல்ற மாதிரி சொல்லிக் கொடுத்தா... ஆரம்ப நாள்ல வயித்துவலி அதிகமிருக்கும் போது ரொம்ப வேலையும் சொல்லமாட்டா... ஆச்சு வருசம் மூணு.... இது வரைக்கும் கடிஞ்சி பேசினதெல்லாம் இல்ல... என்ன அதிகமா ஊருக்கு விட மாட்டா... அதுவும் தீபாவளி பொங்கன்னா... அன்னைக்கித்தான் புள்ளகுட்டியெல்லாம் வரும்... இங்க யாரு வேல பாக்குறது... புள்ளங்க வந்துட்டு போனதுக்கு அப்புறம் போகலாம்ன்னு சொல்லிடுவா... சொன்னபடி அனுப்பியும் வைப்பா... ரெண்டு தீபாவளிக்கும் தீபாவளி முடிஞ்சி பதினைந்து நாளைக்கு அப்புறம் அனுப்பும் போதெ அதிக நாள் தங்குறதா இருந்தா இங்க வரவேண்டாம்... போனமா வந்தமான்னு இருக்கணும்ன்னு சொல்லியே விடுவா... சுந்தரியோட அம்மாவும் அங்க நீயில்லாம சிரமப்படுவாகன்னு ரெண்டு மூணு நாள்ல திருப்பி அனுப்பிடுவா... இந்தத் தடவை பக்கத்து வீட்டு சாமியாடி தாத்தாக்கிட்ட போன வாங்கி  புஷ்பாவுக்குத் தெரியாம சுப்பிரமணிக்கு மாமாவுக்குப் போன் பண்ணி அம்மாவைப் பேசச் சொல்லி இந்தத் தீபாவளிக்கு நான் ஊருக்கு வரணும்... நீ  புஷ்பாக்காக்கிட்ட சொல்லிடுன்னு சொல்லி வச்சிருக்கா... ஆனா அவ அம்மா இன்னும் போன் பண்ணலை...

'இந்தத் தீவாளியாச்சும் தம்பி தங்கச்சியோட கொண்டாடணும்... ரெண்டு வருசமா அதுக கூட கொண்டாடாத தீவாளி என்ன தீவாளி... அப்பா இருக்கும் போது தீவாளி பொங்கன்னா அம்புட்டு சந்தோசமா இருக்கும்... தீவாளிக்கி புதுத்துணி, வெடின்னு வாங்கிட்டு வந்து கொடுப்பாரு... காலையில எல்லாரும் வரிசையா அப்பாக்கு முன்னால உக்காந்து அவரு கையால எண்ணெ தேச்சிவிடச் சொல்லி, சீயக்காய டம்ளருல எடுத்துக்கிட்டுப் போயி குளிச்சி புதுத்துணி மாட்டிக்கிட்டு சாமி கும்பிட்டு, அம்மா செஞ்ச பலகாரத்த சாப்பிட்டுட்டு வெடியோட வெளிய போயி புள்ளயளோட சந்தோசமா வெடிச்சி... ஆட்டம் போட்டு... எத்தன சந்தோசம் அன்னக்கி... அப்பா செத்ததுக்குப் பின்னால அம்புட்டுச் சந்தோசமும் அழிஞ்சி போச்சு... யாரு ஒதவியும் இல்லாம அம்மா கசுட்டப்பட்டு வேல பாத்து கஞ்சி குடிக்கிறதே பெரும்பாடா இருந்துச்சி... நா இங்கன வேலக்கி வந்தோடனே  புசுபாக்கா மாசாமாசம் அம்மாக்கு பணம் அனுப்புறதால இப்பக் கொஞ்சங் கசுடமில்லாம இருக்கு... ' என்று நினைத்தபடி பாத்திரங்களை வெயில் பார்த்துக் கவிழ்த்து வைத்தாள்.

புஷ்பா ஜவுளிக்கடைக்கு போயிருக்கா... காலையில போனவங்க... எல்லாருக்கும் டிரஸ் எடுத்துக்கிட்டு வர சாயந்தரம் ஆயிரும்... மத்தியானச் சாப்பாடெல்லாம் அங்கிட்டுத்தான்... பாவம் புஷ்பா புருஷந்தான் நொந்து போயி வருவாரு... 'இந்தப் பொம்பளங்க ஒரு தண்ணியில வேக மாட்டாங்க... ஒரு கடையில என்னைக்கும் எடுத்ததா சரித்திரமே இல்லை... ரெண்டு மூணு கடை போயி... அப்புறம் மொதல்ல போன கடைக்கே வந்து... அப்பப்பா இந்தக் கூட்டத்துல... வெளயல... வெளயலன்னு புலம்புற எல்லாக் கிராமத்தானும் என்ன வெல இருந்தாலும் வாங்கத்தான் செய்யிறானுங்க...' என்று ஒவ்வொரு முறையும் புலம்பினாலும் பொண்டாட்டி கிளம்பலையான்னு கேக்குறதுக்கு முன்னால கிளம்பி நிப்பாரு.


'என்னதான் புதுத்துணி எடுத்துக் கொடுத்தாலும் நம்ம வூட்டுல எல்லாருமா சேந்து சந்தோசமா கொண்டாடுற சொகம் இதுல இல்ல... எல்லாரும் வந்திருப்பாக... பிள்ளங்க எல்லாம் டஸ்சு புஸ்சுன்னு இங்கிலீசு பேசுங்க... டிவியில சரவணே மீனாச்சி பாக்க விடாதுக... எப்பப் பாத்தாலும் பொம்மப் படமாப் பாக்குங்க... ஆளாளுக்கு வேல சொல்லுவாக... சத்த ஒக்கார விடமாட்டாங்க... அதுவும் புசுபாக்காவோட ரெண்டாவது மருமவ ரொம்ப ராங்கி புடிச்சவ... நா வேலக்காரப்புள்ளய எல்லாம் நடுவீட்டு வரக்கிம் வரவிடமாட்டேன்...  இங்க என்ன இம்புட்டுச் சலுக கொடுத்து வச்சிருக்கீகன்னு புசுபாக்காக்கிட்ட சத்தம் போடும்... அந்த வேல பாரு... இந்த வேல பாருன்னு சொல்லிக்கிட்டே இருக்கும்... என்னோட சேல எல்லாம் வாசிங்குமிசினில போட்டா சரியா வராது... பவுடரப் போட்டு ஊறவச்சி கையால தொவச்சிருன்னு சொல்லும்.... அம்புட்டும் சிமிக்கி வச்சது... தொவச்சி முடிக்கிறதுக்குள்ள போதும் போதுன்னு ஆயிரும்... மூத்த மருமவ நல்ல மனுசி... மவராசி... என்ன எப்பப் பாத்தாலும் எந்தலயப் பாரு... அங்க பேனு பாக்கல்லாம் ஆளில்லன்னு சொல்லும்... ஆனா ஊருக்குப் போம்போது நூறு எரநூறுன்னு கையில கொடுத்துட்டுப் போவும்... அதோட புள்ளகளுக்கு பத்தாத சுரிதாரெல்லாம் கொண்டாந்து கொடுத்து போட்டுக்கச் சொல்லும்... ம்... நாளக்கி இல்லாட்டி நாளனக்கி எல்லாரும் வந்துருவாக... தீபாளி சந்தோசம் எல்லாரு மொகத்துலயும் இருக்கும்... ஆட்டம் பாட்டம்ன்னு... அவுக வந்ததுல இருந்து கறி மீனுன்னு ஒரே கவுச்சியாத்தானிருக்கும்...' என்று மனசுக்குள் பேசியவள் 'இந்தக் கறி மீனெல்லாம் நா நல்லாத்தேன் திங்குறேன்... அங்க வீட்ல அம்மா வாரம் ஒருக்கா வாங்குறதே கசுடம்... பாவம் அதுக... இந்தத் தடவ போயி கறி, மீனு, நண்டெல்லாம் அம்மாவ வாங்கியாரச் சொல்லி அதுகளுக்கு செஞ்சி குடுக்கணும்' என்றும் நினைத்துக் கொண்டாள்.

'ம்... நாம்போனா எந்தம்பி தங்கச்சிங்க எம்புட்டு சந்தோசப்படுவாக... அப்ப அப்ப கெடக்கிற காசயெல்லாம் சேத்து வச்சி ஒரு தொக இருக்கு... புசுபாக்கா போச்சொல்லிட்டா சாமியாடி தாத்தாவ கூட்டிக்கிட்டுப் போயி தம்பி தங்கச்சிங்களுக்கு புதுடிரசு எடுக்கணும்... பாவம் அம்மா... அப்பா செத்த பின்னால நல்லது எதுவுமே உடுத்துறதில்ல... அவ மொகத்துல அந்தப் பொட்டுத்தான் அழகா இருக்கும்... சினிமாவுல பாடும்ல்ல சின்னப் பொண்ணு... அதான் மருக்கொழுந்தே மல்லியப்பூவேன்னு பாடுச்சில்ல அது மாதிரி பெரிய பொட்டு வட்டமா நெலாவாட்டம் வச்சிருக்கும்... எல்லாம் போயி அம்மா என்னவோ மாதிரி ஆயிருச்சி இப்போ... அதுக்கு நாங்கதான் சந்தோசமே...  என்னய அனுப்ப அதுக்கு இசுடமேயில்ல... என்ன பண்ண... அது ஒராளு வேல பாத்து அஞ்சி பேரு சாப்பிட முடியலயே... அம்மாக்கு ஒரு நல்ல சீலையா எடுக்கணும்... எனக்கு எடுக்காட்டியும் பரவால... அதான் புசுபாக்கா எனக்கு எடுத்துருமில்ல... அவுங்க நாலு பேருக்கும் எடுக்கணும்... இந்த மாச சம்பளத்தோட புசுபாக்கா கொஞ்சக்காசு சேத்துத்தான் போட்டு விட்டுச்சு... அதுல அம்மாவ எல்லாருக்கும் டிரசெடுத்துட்டு மளியச்சாமானெல்லாம் வாங்கிக்கங்கன்னு சொல்லியிருந்தே... என்ன பண்ணுச்சின்னு தெரியல... பக்கத்துல வாங்குனதக் குடுத்தேன் சரியாப் போச்சுன்னு சொல்லுதோ என்னவோ... அது என்னக்கி அதுக்கு டிரசெடுத்திருக்கு... அப்பா செத்ததோட எண்ண தேச்சிக் குளிக்கிறதயும் விட்டிருச்சு... யாராச்சும் ஏன்டி இப்புடியிருக்கேன்னு கேட்டா இனி என்னருக்கு எனக்குன்னு கேக்கும்... நாங்கள்லாம் இல்லையான்னு தோணும்... சூரப்புலி வீட்டு முத்தையா மாமா பொண்டாட்டி செத்த மூணாவது மாசத்துல கொழுந்தியாவ கட்டிக்கிட்டு வந்துட்டாரு... அவுகளுக்கு எல்லாம் வாழ்க்க இருக்கும் போது அம்மாவுக்கு மட்டும் வாழ்க்க இல்லமா எப்படிப் போகும்ன்னு தோணும்... ஆனா அப்பா பணங்காசு இல்லாட்டியும் அம்மாவையும் எங்களயும் அப்புடி வச்சிருந்தாரு... அவரு செத்ததுக்கு அப்புறம் அம்மாக்கு மட்டுமில்ல எங்களுக்கும் என்ன இருக்குன்னு கூட தோணுது' மனசுக்குள் புலம்பியவளின் புலம்பல் கண்ணீராய் வெளியாக துடைத்துக் கொண்டு வீட்டைக் கூட்டி சுத்தப்படுத்திவிட்டு அவளுக்கு மட்டும் உலை வைத்து விட்டு 'நேத்து வச்ச கொழம்பு இருக்கு... அது  போதும்... ராத்திரிக்கி எதாச்சும் புசுபாக்கா வைக்கும்..' என்றபடி டிவியை ஆன் பன்ணினாள்.

டிவியில் தீபாவளி விளம்பரங்கள்... போத்தீஸ், சென்னை சில்க்ஸ், சரவணா ஸ்டோர்ஸ், சாரதாஸ் என அணிவகுக்க இங்கல்லாம் போயி எப்பத் துணியெடுப்போம் என்று நினைத்தவள் சிரித்துக் கொண்டாள். அப்பா இருக்கும்போது எம்பொண்ண ராஜகொமாரனுக்குத்தான் கட்டுவேன்னு சொல்லுவாரு... சோத்துப்பாட்டுக்கே கசுடப்படுறவளக் கட்ட எந்த ராஜகொமாரன் வருவான்னு தெரியல....' என்று நினைத்து சிரித்துக் கொண்டாள்.  

விளம்பரம் முடிந்ததும் இரவு ஒளிபரப்பான பிக்பாஸ் மறு ஒளிபரப்பில் தொடர, ம்... சல்லிக்கட்டுல உண்மயாப் போராடுனவுக எல்லாம் எங்கயோ இருக்க, இந்தப்புள்ளக்கி வந்த வாழ்வப் பாரு... எவ்வளவு மோசமான பொம்பள இது... எங்கதெருவு காளியம்மா அக்கா மாதிரி... அதுவும் இப்பிடித்தான்.... அதை எனக்கு சுத்தமாப் பிடிக்காது... அதுமாரி இதப்பாத்தாலே கடுப்பு வருது... அது பேசுறதுகூட கடுப்படிக்கிது... எனக்குத்தான் புடிக்கலன்னு பாத்தா... புசுபாக்காவுக்கு புடிக்கலை... பக்கத்து வீட்டு அக்காக்களுக்கெல்லாம் புடிக்கல... இப்பிடியும் பொம்பள இருப்பாளான்னு காலையில கதகதயாப் பேசுவாங்க... என்ன செய்ய எவ எவளுக்கு என்ன வாழ்வுன்னு எழுதியிருக்கோ அதுதானே நடக்கும்... எங்க தலயில இப்பிடி எழுதியிருக்கு...' என்று நினைத்தபடி சேனலை மாற்றினாள்.

'ஒவ்வொரு தீவாளிக்கும் சுந்தரப்பய நெறய வெடிப் போடுவான்... அவுக அப்பா செட்டியவூட்டு கணக்கப்பிள்ள... அவுருக்கு செட்டியாரு நெறய வெடி கொடுத்துவுடுவாரு... எப்பவுமே ஓவராப் பீத்திப்பான்... லெச்சுமி வெடி, அணுகுண்டுன்னு போட்டுக்கிட்டே இருப்பான்... கொட்டாச்சிக்குள்ள வச்சி அணுகுண்டு போடுறது ஒரு சந்தோசந்தேன்... அதேமாரி பாட்டில்ல வச்சி ராக்கெட் விடுறது... சுந்தரப்பய கையில புடிச்சி விடுவான்... விர்ருன்னு தூக்கி வீசுவான்... மாரியம்மங் கோவிலு திருவிழாவுல வானம் போடுறதப் பாத்து அது மாதிரி விடுவான். ஒரு வருச தீவாளிக்கு சுந்தரப்பய மேல உள்ள ஆத்தரத்துல அவன் வெடி வக்கிம்போது அவனுக்குத் தெரியாம சரவணன் சாணியில வெடிகுண்ட வச்சி... அது வெடிச்சி... சுந்தரத்தோட புதுடிரசு எல்லாம் சாணியாகி... ரெண்டு பேரும் கட்டி உருண்டு... நாங்க வெளக்கிவிட்டு... அதெல்லாம் எத்தன சந்தோசம்... இனிமே அப்புடி வருமா... சுந்தரங்கூட எங்கயோ வெளியூருல படிக்கிறானாம்... சரவணனும் அவுக அக்கா வீட்டுலயிருந்து படிக்கிறானாம்... அன்னக்கி பேசின மாதிரி... சண்ட போட்டு வெளாண்ட மாதிரி இனிப் பாத்தா பேசுவானுங்களா... சண்ட போடுவானுங்களா... போனவாட்டி ஊருக்குப் போனப்பவே ரோட்டுல போன முருகன நிப்பாட்டிப் பேசினதுக்கு இப்ப நீ பெரியபுள்ள... ரோட்டுல நின்னுலாம் பேசக்கூடாது... பாக்குறவுக தப்பாப் பேசுவாகன்னு அம்மா சத்தம் போட்டுச்சு... நம்ம கூட ஒண்ணா ஓடிப்புடிச்சி வெளாண்ட பயக கூட பேசுனா ஊரு எதுக்கு தப்பாப் பேசணும்... வயசுக்கு வந்துட்டா பொட்டப்புள்ளக எல்லாத்தயும் மாத்திக்கணுமா... ஆனா இங்க வயசு வந்த புள்ளக எல்லாத்தையும் மாத்திக்கிட்ட மாதிரி தெரியலையே...  எதுக்கு தேவயில்லாததெல்லாம்... அம்மா சொன்னா சரியாத்தானிருக்கும்...' என்று நினைத்தவள் டிவியை ஆப் பண்ணிவிட்டு காய்ந்த துணி எடுக்க மொட்டமாடிக்குப் போனாள்.

'புசுபாக்கா வர்றதுக்குள்ள அம்மாக்கு போன் பண்ணி ஏன் பேசலைன்னு கேக்கலாம்... வாரத்துல ஒருநா அம்மாக்கிட்ட பேசச்சொல்லி புசுபாக்காவே அதோட செல்லுப்போனுல நம்பர் போட்டுக் கொடுக்கும்... இப்ப செல்லு வந்ததுல இருந்து யார் வீட்டுலயும் டெலிபோனு இல்ல...  புசுபாக்கா ஒரு போனு... அது வீட்டுக்காரருக்கிட்ட ஒரு போனு... அப்புறமெதுக்கு வீணால பணங்கட்டனுமின்னி... இங்க இருந்ததையும் வேண்டான்னு கொடுத்துட்டாக... துணிய மடிச்சி வச்சிட்டு சாமியாடி ஐயா வீட்டுக்குப் போயி அம்மாக்கு ஒரு போன் பண்ணி இன்னக்கி பேசச் சொல்லணும்... நாளக்கி எல்லாரும் வந்துட்டா அப்புறம் அக்கா ஒத்துக்காது...' என்று நினைத்தபடி துணிகளின் மீதிருந்த கிளிப்பை எடுத்து டப்பாவில் போட்டுவிட்டு துணிகளை எடுத்து மடித்து மடித்து கட்டைச் சுவற்றில் தரம் பிரித்து  வைத்து மொத்தமாக அள்ளிக் கொண்டு கீழிறங்கினாள்.

'ரெண்டு வருசமா தீவாளிக்கி ஊருக்குப் போகல... இந்த வருசமாச்சும் புசுபாக்கா மனசு வச்சி போச்சொல்லணும்... தீபாளிக்குப் பொயிட்டு எல்லாரும் சினிமாக்குப் போகணும்... அப்புறம் கொலசாமி கோயிலுக்குப் போயி சாமி கும்பிட்டு வரணும்... ஒரு நாலஞ்சி நாளு லீவு கேக்கணும்... எனக்கென்னவோ இந்த வாட்டி புசுபாக்கா போச்சொல்லும்ன்னு மனசு சொல்லுது... எப்பவும் எம்மனசு சொன்னா சரியா இருக்கும்... அம்மாதான் பேசணும்... இந்தவாட்டி அவள அனுப்புங்கக்கா புள்ளங்க அவகூட கொண்டாடனும்ன்னு சொல்லுதுகன்னு அம்மாவைச் சொல்லச் சொல்லணும்... ஊருக்குப் போன்னு சொன்னா புசுபாக்கா பஸ்சுக்குப் போக செலவுக்கு கண்டிப்பா காசு கொடுக்கும்... பெரிய மருமவ வந்திருச்சின்னா அதுவும் கொடுக்கும்... புசுபாக்கா பேத்தி நருமதா, எங்கயோ கம்பூட்டரு கம்பெனியில வேல பாக்குதாம்... அதுதான் போனதடவ வந்தப்ப கடக்கி கூட்டிப் போயி பிராவெல்லாம் வாங்கி கொடுத்துச்சு... எல்லாம் பழசாப்போச்சு... ரெண்டு சட்டியும் ரெண்டு பிராவும் வாங்கித்தரச் சொன்னா வாங்கிக் கொடுக்கும்... அதுகூட ஊருக்குப் போறேன்னு சொன்னா ஏதாச்சும் காசு தரும்...' என நினைவுகளோடு அடுத்திருந்த சாமியாடி ஐயா வீட்டுக்குப் போனாள்.

'இப்பத்தாண்டி புஸ்பாக்காக்கிட்ட பேசினேன்... துணிக்கடயில நிக்கிதாமாம்... நாளான்னக்கி அனுப்புறேன்னு சொன்னுச்சு...' என்றதும் மகிழ்ச்சியின் உச்சத்துக்கே போனாள். நினைத்ததெல்லாம் நடந்தது போல 'அய்ய்ய்ய்யா' என்று கூச்சலிட்டாள் 'அடியேய்... இவளே... எதுக்கு கத்துறே... அது சரியின்னு சொல்லிருச்சி.... ஆனா...' என்று அம்மா இழுக்க, 'என்னம்மா... என்ன ஆனான்னு இழுக்குறே...' கலவரமாய்க் கேட்டாள். 'உங்க பெரியப்பாவுக்கு முடியலன்னு ஆசுபத்திரிக்கி கொண்டு போனாக... செத்துப்பொயிட்டாராம்... இப்பத்தான் சுப்பிரமணி அண்ணனுக்கு சந்துரு போன் பண்ணினானாம்... வந்து சொல்லிட்டுப் போவுது... என்ன இருந்தாலும் உங்கப்பனோட கூட பொறந்தவரு.... பேச்சு வார்த்த இல்லன்னாலும் செத்த மொற கேக்கணுமில்லயா... அப்பொறம்   அவர சாகக் கொடுத்துட்டு நாம தீவாளி கொண்டாட முடியுமா...? புள்ளயளுக்கு புதுத்துணி எடுத்தேன்... இந்தவாட்டி நீ வருவேன்னு ஒனக்குங்கூட ஒரு சுரிதாரு எடுத்து வச்சேன்... அழுகுற பண்டமா... துணிதானே.... இருக்கட்டும் பொங்கலுக்கு போட்டுக்கலாம்...  நீ என்னத்த இப்ப வந்தே... ஒரு வாரமோ பத்து நாளோச் செண்டு வா... நா நாளக்கி புசுபாக்காக்கிட்ட வெவரம் சொல்லுறேன்... அங்க புதுத்துணி எடுத்துக் கொடுத்தாலும் தீவாளி அன்னக்கிப் போடாதடி... வாங்கி வச்சிக்க பின்னால போட்டுக்கலாம்' அம்மா பேசிக் கொண்டே போக,  'இதுவரைக்கும் இல்லாத பெரியப்பன் இப்ப எங்க இருந்து வந்தானாம்... அவனுக்காக நாங்க தீவாளி கொண்டாடக் கூடாதாம்... இந்தம்மா இப்படித்தான்... அதுக்காக வாழாது... எப்பவும் ஊருக்கும் ஒறவுக்கும் பயந்தே வாழும்... ஒரு வருசம் தட்டுனா மூணு வருசம் தட்டும்ப்பாங்க... மூணு வருச தீவாளிக்கு ஊருக்குப் போவல... இந்த வருசத்துக்கு பெரியப்பன்... அடுத்த வருசம் என்னவோ...' என்று நினைத்தவள் மேற்கொண்டு அம்மாவுடன் பேச விருப்பமில்லாமல் போனைக் கட் பண்ணி சாமியாடி தாத்தாவிடம் கொடுத்துவிட்டு வீடு நோக்கி நடந்தவளின் நெஞ்சுக்குள் நிரம்பியிருந்த தீபாவளி நினைவுகள் மெல்ல அழுகையாய் விக்கி வெடிக்க, அந்தக் கண்ணீரில் மெல்லக் கரைந்து வெளியானது காலை முதல் மனசுக்குள் பூத்திருந்த தீபாவளிக் கனவு.
-'பரிவை' சே.குமார்.

ஞாயிறு, 15 அக்டோபர், 2017

மனசின் பக்கம் : ஒருநாளும் பலசுவைகளும்

ங்க அலுவலகத்தின் புதிய புராஜெக்ட்டுக்கு அதிக ஆட்கள் தேவை என்பதால் இங்கிருக்கும் இந்திய மேனேஜரின் ஏற்பாட்டில் (அவருக்கு நல்ல கமிஷன் வந்திருக்கும் போல) கேரளாவில் இருக்கும் ஒரு கம்பெனி மூலமாக இரண்டு பெண்கள் உள்பட பதினைந்து பேரை இரண்டு வருட ஒப்பந்தத்தில் எடுத்து வந்திருக்கிறார்கள். அதற்கான நேர்முகத் தேர்வு நடத்த எங்க அலுவலகத்தில் இருக்கும் லெபனான் மேனேஜர் கேரளா சென்றான். அவனிடம் என் நண்பனை இந்தப் புராஜெக்ட்டில் எடுத்து கொள் என்று சொன்ன போது என்னிடம் பயோடேட்டா வாங்கி கேரளா கம்பெனிக்கு அனுப்பி நான் நேர்முகத் தேர்வு செய்ய வரும் நாளில் இவருக்கும் அழைப்பு விடு என எனக்கு முன்னர்தான் மின்னஞ்சல் அனுப்பினான். அவன் கேரளா போய் நேரடித் தேர்வு நடத்தியும் நண்பருக்கு அழைப்பு போகவில்லை. நான் எங்க மேனேஜரிடம் மின்னஞ்சலில் என்னாச்சு... ஏன் நண்பருக்கு அழைப்பு போகவில்லை என்று கேட்டபோது அவர் சொன்ன பதில் அவங்க அலுவலகத்தில் போதுமான ஆட்கள் இருக்கிறார்களாம் அதனால் அவர்களை அனுப்புகிறார்களாம்... தங்கள் நண்பருக்கு மற்றுமொரு வாய்ப்பு வரும் போது கண்டிப்பாக அழைப்பு விடுகிறேன் என்று சொல்லிவிட்டார்கள் என்றான். மலையாளிகள் மலையாளிகளுக்குத்தான் முதலிடம் கொடுப்பார்கள் தமிழன் என்றாலே தள்ளி வைத்துத்தான் பார்ப்பார்கள். மேலும் கேரளா என்பது தனி நாடு போல்தான் இங்கு அவர்கள் பேச்சு இருக்கும். நல்லதொரு வாய்ப்பில் நண்பருக்கு வேலை கிடைக்காதது மிகுந்த வருத்தமே. அந்தக் கம்பெனி அனுப்பியவர்களுக்கு நம்ம ஊர் மதிப்பில் சம்பளம் கொடுக்குமாம். அந்தக் கம்பெனிக்கு பதினைந்து பேரை வைத்து இந்த ரெண்டு வருடத்தில் கோடிக்கணக்கில் பணம் கிடைக்கும். எங்க கம்பெனிக்கு இந்தப் பதினைந்து பேரால் மில்லியன் கணக்கில் லாபம் கிடைக்கும். ஆனால் எவ்வளவுதான் கஷ்டப்பட்டாலும் நமக்கு கூடுதலாக பணம் கொடுக்க நினைப்பது கூட இல்லை. இப்போது ஒப்பந்தத்தில் ஆட்களைக் கொண்டு வந்து விட்டதால் பிடிக்கலைன்னா வேலையை விட்டுட்டுப் போன்னு சொல்ற மாதிரி பேச ஆரம்பிச்சிட்டானுங்க.

சரி அடுத்த கதைக்கு வருவோம்... இங்கு வந்திருக்கும் பதினைந்து பேருடன் எங்க ஆட்கள் இருவரையும்... நானும் போக வேண்டியவன்... வேறொரு புராஜெக்ட்டில் இருப்பதால் என்னை விட்டுவிட்டார்கள்... அந்த புராஜெக்டில் நம் மேற்படி இந்திய இஞ்சினியரால் நானும் எகிப்து சர்வேயரும் படும் பாடு தனிக்கதை...  அதுக்கு அப்புறம் வாரேன்... இப்ப பதினைந்து பேருக்கு வாரேன்... மூன்று அலுவலத்தில் பணி... ஆட்களை பிரித்துக் கொடுத்தாச்சு...  மூன்றும் அரசு நிறுவனங்கள்... இரண்டு அலுவலகத்தில் எந்தப் பிரச்சினை இல்லை... ஒரு அலுவலகத்துக்கு கொடுத்த மூன்று பேருக்கும் பணி தெரியவில்லை என மின்னஞ்சலை அந்தப் பிரிவின் மேலாளரான அரபிப் பெண் எல்லாருக்கும் அனுப்பிவிட, அவர்களுக்கு எப்படி பணி எடுக்க வேண்டும் என வகுப்பெடுக்க வேண்டும் என்று முடிவாகி, என்னைப் போய் வகுப்பெடு அதற்கு முன்னர் அவர்களுடன் பேசு என்று சொன்னான் புதிதாய் அந்த புராஜெக்ட்டிற்கு மேனேஜராய் வந்திருக்கும் பாகிஸ்தானி, நான் மூவரில் ஒருவருடன் தொலைபேசியில் பேசியபோது அவர் உங்களிடம் யார் சொன்னது எங்களுக்கு பணி அறியவில்லை என... இஞ்சினியர் கொடுத்த ஒரு பணியைச் செய்து வெரிகுட் வாங்கினோம்... அவர் எங்களைப் போல் வேறு யாரும் பணி எடுக்கவில்லை எனச் சொல்லி ஒரு பெண் குட்டியை கூட்டி வந்து அவருக்கும்  படிச்சிக் கொடுக்கச் சொன்னார் என ஏதோ நான் அவர்களைத் தப்பாகச் சொன்னது போல் என்னிடம் சண்டையிட்டார். நமக்கு சும்மாவே சுள்ளுன்னு வரும்... போனில் சம்பந்தமில்லாமல் பேசினால்... என்னிடம் அந்த மின்னஞ்சல் இருந்தது. அதில் அவர்களுக்கு பணி தெரியவில்லை எனச் சொல்லி முதல் மின்னஞ்சல் அனுப்பியது அவர்களிடம் படிக்கப் போன பெண்குட்டி என்பதை நான் அவர்களிடம் சொல்லாமல் சற்றே கோபமாக உன் இஞ்சினியர் சொன்னான்... அவனுக்கிட்ட கேட்டுக்க... என ஆரம்பித்து சுதி கூட்ட,  எதிர்முனை ஸாரி சேட்டா என்றது.

வியாழனன்று பத்து மணிக்கு வகுப்பெடுக்க வேண்டும்... பாகிஸ்தானி முதல் நாள் என்னிடம் நாளை நீ அங்கு வந்துடு என்றெல்லாம் சொல்லவில்லை. மறுநாள் எப்பவும் போல் அலுவலகம் போயாச்சு. பாகிஸ்தானி வரவில்லை... ஒன்பது மணி முதல் போன் அடித்தால் எடுக்கவே இல்லை... அலுவலக எண்ணில் இருந்து போன் வந்திருக்கிறதே என திருப்பியும் அடிக்கவில்லை. 9.40க்கு பொனெடுத்து என்ன நீ இன்னும் வரலை... இங்க எல்லாரும் வந்தாச்சு... இன்சினியரும் வந்திருக்கு என்றான். அவனிடம் ஒரு சவுண்ட் விட, சரி நீ பஸ்சில் வந்துவிடு லேட்டானாலும் பரவாயில்லை என்றான். பஸ் பிடித்துப் போனால் ரொம்ப நேரமாகும் என்பதால் டாக்சியில் பயணப்பட்டேன்... இப்போது டாக்ஸி வாடகை எல்லாம் ஒட்டகத்தை விட உயரமாய் ஆக்கி வச்சிருக்கானுங்க... அலுவலகத்தில் பில் கொடுத்து வாங்கிக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் டாக்ஸி ஏறினேன்.  

டாக்ஸி டிரைவர் நேபாளி, அவன் பேசிக்கொண்டே வந்தான்... பயங்கர சூடா இருக்குடா என்றதும் என்ன பண்ணச் சொல்றே... எனக்கு இந்த மாச டார்க்கெட் முடிக்கணும்... வெயில் பார்த்தா ஆகுமா... இந்தச் சூட்டுலதான் வண்டி ஓட்டுறேன் என்றவன் அதுவும் இந்த மாசம் கூடுதலாய் உழைக்கணும் என்றான். ஏன் என்று கேட்டபோது ஒரு பைன் இருக்கு... 4000 திர்ஹாம் அடைக்கணும்... அதுக்கும் சேர்த்து உழைக்கணும் என்றான்.. வாங்குற சம்பளத்தைவிட பைன் அதிகமாச் சொல்றே... உனக்குத்தான் அதிக வேகம் போனால் வார்னிங் வந்துருமே அப்புறம் என்ன எங்க வேகமாக ஒட்டினாய் என்றதும் சிரித்தபடி சிக்னல்ல நின்னேன்... போன் நோண்டுறது என்னோட முக்கியமான வேலை... அப்படி நோண்டிக்கிட்டு இருக்கும் போது லெப்ட்ல திரும்புற சிக்னல் விழ, நான் நமக்குத்தான் பச்சை விழுந்துருச்சின்னு நேரா வண்டியை விட்டுட்டேன்... நாலாயிரம் தீட்டிட்டான் என்றான். இப்போது இங்கு ரோட்டை கண்ட இடத்தில் நடந்து கடந்தால் 400 திர்ஹாம் பைன்... முன்னர் 200 இருந்தது... எல்லாத்தையும் அதிகமாக ஏத்தி வச்சிட்டானுங்க கில்லர்ஜி அண்ணா...  டாக்ஸி வாடகை இரவை விட கூடுதல் ஆக்கி இப்ப இரவு பகல் இரண்டும் ஒரே மாதிரி கொண்டு வந்துட்டானுங்க... ஏறி இறங்கினால் 12 திர்ஹாம் கொடுக்கணும். ஒரு வழியாக அலுவலகம் போனா பாகிஸ்தானி அங்கு வந்திருந்த ஒரு அரபி இஞ்சினியர் பெண்ணிடம் அவனோட பிரதாபத்தை அளந்து கொண்டிருந்தான். ஒருவழியாக அங்கு போய் அமர்ந்தாச்சு.

சிறிது நேரத்தில் எல்லாருக்கும் மேனேஜரான அரபிப் பெண் சைமா வர எல்லோரையும் அறிமுகப்படுத்திக் கொள்ளச் சொன்னான். புதிய மூவரும் அறிமுகம் செய்துகொள்ள, என்னை பார்த்து குமாரை எனக்கு நல்லாத் தெரியும் என்று சிரித்தாள். அந்தச் சிரிப்பின் பின்னே வெறொரு கதை இருக்கு... இந்த மூணு பேர் மாதிரி ஒரு மாதம் அங்கு போன என்னை எல்லாப் பயலும் சேர்ந்து பாடாய் படுத்த, நம்ம சுயமரியாதை எகிறியபோது இதேபோல் மின்னஞ்சல் எல்லாருக்கும் பறக்க, பெரிய மேனேஜரான இவள் எட்டு வருசமா குமாரை எனக்குத் தெரியும்... என்ன வேலையோ அதை மட்டும் செய்யச் சொல் எல்லாருடைய வேலையையும் செய்ய அங்கு அனுப்பவில்லை... அப்படி கொடுக்க முடியவில்லை என்றால் குமார் அங்கு வரமாட்டார் என மின்னஞ்சல் அனுப்பினாள்... அதான் அந்த சிரிப்புக்குக் காரணம். பின்னர் அந்த இருவரும் சிறிது நேரம் பேசிவிட்டுச் செல்ல, பாகிஸ்தானியும் நான் மேலே இருக்கேன் எனக் கிளம்பினான், மற்ற மூவருக்கும் எப்படி பணி எடுக்க வேண்டும் என இரண்டரை மணி நேரம் வகுப்பெடுக்க... இந்த வகுப்பெடுக்கிற வாழ்க்கை இன்னும் மாற மாட்டேங்குது... இறுதியில் சேட்டா நான் கேட்டதுக்கு அன்னைக்கு சூடாயாச்சு... சாரி என்றான் ஒருவன். பின்னர் நட்பாகி பேசிக் கொண்டிருந்துவிட்டு பாகிஸ்தானியை தேடினால் ஆளில்லை. அந்த வெயிலில் ரெண்டு சிக்னல் நடந்து பஸ்சிற்க்கு காத்திருந்தால் வெயில் காரணமாக குளித்துக் கொண்டிருந்தேன். அருகில் நின்ற ஒருவன் என்ன சூடு... என்ன ஊரு... பஸ்சையும் காணோம் என்று ஆங்கிலத்தில் புலம்பினான். நான் அக்டோபராச்சு இன்னும் சூடு குறையலை என்ற போது எங்க ஊரில் குளிர்காலம்... நான் ஜோர்டான்... இங்க இந்த சூட்டுல கோட்டை மாட்டிக்கிட்டு நிக்க வேண்டியிருக்கு என்று சிரித்தான். அவன் போக வேண்டிய பஸ் வர, நீயும் வா என்றான்... எனக்கான நம்பர் இதில்லை என்று சொல்ல, அப்ப இன்னும் இந்த வெயிலை அனுபவி என்று சிரித்தபடி சென்றான்.

அரை மணி நேரத்துக்குப் பின் பேருந்து வர, சரியான கூட்டம் ஏறி இரண்டாவது சிக்னல் கடந்ததும் இருக்கை கிடைக்க, அமர்ந்து கிரிக்கெட் கேமை விளையாட ஆரம்பித்தேன். பேருந்து நிறுத்தம் வந்து இறங்கிய போது வீட்டில் போய் படுத்திருந்துவிட்டு அலுவலகத்துக்கு வர, முன்பக்கமாக இறங்கினான் பாகிஸ்தானி. இப்படியானவர்களுக்குத்தான் எங்க கம்பெனியில் வாழ்க்கை.  இவன் பரவாயில்லை எங்க மேனேஜருக்கு அலுவலகம் வந்து விட்டு வீட்டுக்கு போகனும் என்றால் ஏதோ மீட்டிங்கிற்குப் போறது போல லாப்டாப் சகிதம் கிளம்பி வீட்டில் போய் தூங்கிருவான்..  என்னோட புராஜெக்ட் கதையை இப்பச் சொன்னா பதிவு நீண்டுடும்... இன்னொரு நாளில் பார்க்கலாம்.

சில மலையாளப் படங்கள் பார்த்தேன்... ஒன்றும் மனதில் ஒட்டவில்லை...விமர்சனம் எழுதுமளவுக்கு இல்லை என்பதால் எழுதவில்லை. சில நல்ல ஆங்கிலப் படங்களையும் பார்த்தேன். கொஞ்சம் கதைகள் எழுத வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த வார விடுமுறையில் இரண்டு கதைகள் எழுதினேன். தினமணிக் கதிரில் நீண்ட நாட்களுக்குப் பிறகு என் கதை வந்ததில் மிக்க மகிழ்ச்சி. அதை என்னைவிட மிகச் சந்தோஷமாக கொண்டாடிய ஜம்புலிங்கம் ஐயா, ஸ்ரீராம் அண்ணா, துளசிதரன் அண்ணா, கீதா அக்கா, நிஷாந்தி அக்கா உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி.

இன்று பிறந்தநாள் கொண்டாடும் அன்பின் ஐயா கரந்தை ஜெயக்குமாருக்கும் அன்புத் தம்பி கலியுகம் தினேஷ்குமாருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

-'பரிவை' சே.குமார்.

வியாழன், 12 அக்டோபர், 2017

மனசு பேசுகிறது : வாசிப்பும் மருத்துவமும்

சென்ற ஆண்டில் நண்பர் தமிழ்வாசியின் மூலமாக கல்கியின் பொன்னியின் செல்வனுக்குள் நுழைந்து அதன் தொடர்ச்சியாக சாண்டில்யனின் கதைகளைத் தொடர் வாசிப்பாக்கி... பாலகுமாரன், விக்கிரமன், இந்திரா சௌந்தர்ராஜன் எனப் பயணித்த வாசிப்பு அப்போது இருந்த வேகம் இல்லாவிட்டாலும் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. எப்படி மீள்வோம் எனத் தினந்தினம் நடக்கும் மனப்போராட்டம்,  வேலையில் ஒண்ணுமே தெரியாத மேனேஜரின் கீழ் மாட்டிக் கொண்டு எல்லா வேலைகளும் தலையில் சுமத்தப்படுவதால் ஏற்படும் அயற்சி... இந்தக் கம்பெனியில் இது ஒன்பதாவது ஆண்டு, இதுவரை பார்த்த எந்தப் புராஜெக்ட்டிலும் வாரத்தில் மூன்று நாள் மீட்டிங் எல்லாம் போனதே இல்லை... சொல்லப் போனால் மீட்டிங்கிற்கே போனதில்லை... அதெல்லாம் நமக்கு மேலுள்ளவன் பார்த்துப்பான். இப்ப தினமும் ஐந்து மணி நேர மீட்டிங்... இந்த வாரம் பெரும்பாலும் மதிய உணவு நாலு ஐந்து மணிக்குத்தான்... இப்படி எல்லாமுமாகக் கொடுக்கும் மனவலிகளின் நிவாரணி காலையும் மாலையும் பேருந்தில் பயணிக்கும் போது வாசிப்பவைதான்... 

ஊரில் இருந்து வந்தது முதல் வாசிப்பும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. பாலகுமாரனின் தேடிக் கண்டு கொண்டேன் வாசித்து முடித்ததும் அடுத்து என்ன வாசிக்கலாம் என்ற தேடுதலில் கிடைத்தது தற்போது வாசிப்பில் இருக்கும் என் அண்ணன் ஜோதிஜி அவர்களின் 'காரைக்குடி உணவகம்'. இதுவரை இருநூறு பக்கம் வாசித்து இருக்கிறேன். ஒரு எழுத்து கதையாகும் பட்சத்தில் அது எப்படியிருந்தாலும் வாசித்து விடுவேன்... கதையின் பயணமும் முடிவும் என்ன ஆகும் என்ற ஆவலில் எப்படியும் முடித்து விடுவேன். அதே கட்டுரைகள் என்னும் பட்சத்தில் சில பத்திகளைப் படிக்கும் போதே தேருக்கு கட்டை கொடுத்து நிறுத்தியது போல் நிறுத்தி மேற்கொண்டு படிக்காமல் அடுத்த கட்டுரைக்கு தாவிவிடுவேன். பாலகுமாரனின் தேடிக் கண்டு கொண்டேன் கட்டுரைகளின் தொகுப்புத்தான்... அதிகம் கோவில்கள் குறித்த வரலாற்றுச் செய்திகள், செவி வழிச் செய்திகள், அவர் பார்த்தது அறிந்தது என கலந்துகட்டி எழுதி, அந்தக் கோவில் குறித்தும் அங்கு சென்றால் என்ன நடக்கும் என்பதையும் சொல்லும் கட்டுரைகள்... வாசிப்பில் அயற்சி ஏற்படுத்தவில்லை... உடையார் வாசிக்கும் போது அதில் அவர் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை மட்டுமே உயர்ந்தவர்களாகவும் அவர்களுக்கு இராஜராஜனே பயந்தான் எனவும் சொல்லியிருந்தார்... உடையார் ஏனோ கோவில் கட்டுமானம் தவிர மற்றவற்றில் ஈர்க்கவில்லை. இதிலும் அவர்கள் துதிதான் என்றாலும் கட்டுரைகள் வாசிக்க வைத்தன. 

காரைக்குடி உணவகம்... நம்ம ஜோதிஜி அண்ணனின் எழுத்தைச் சொல்லவே வேண்டாம்... எள்ளல், எகத்தாளம், நையாண்டி என எல்லாம் ஊறுகாயாக இருந்தாலும் சொல்ல வந்ததை, சொல்ல வேண்டியதை மிகத் தெளிவாக புள்ளி விபரத்துடன் சொல்வதில் அவருக்கு நிகர் அவரே. இதிலும் அப்படியே சத்துமாவு செய்யும் குறிப்புக்கள், தேன் இஞ்சி, தேன் நெல்லிக்காய் என சாப்பாட்டில் ஆரம்பிக்கும் எழுத்து அரசியல், ஆன்மீகம் என கலந்து கட்டி பயணிக்கிறது. கட்டுரைகளை வாசிக்க ஆரம்பித்தால் அது நம்மை உள்ளிழுத்து தொடர்ந்து வாசிக்க வைக்கின்றன... இந்தத் திறமை எல்லாருக்கும் சாத்தியமல்ல. மேலே சொன்னது போல் கட்டுரைகள் பெரும்பாலும் மெகா தொடர் போல சவ்வாய்ப் பயணித்து வாசிக்க முடியாத அயற்சியை ஏற்படுத்தும்... ஆனால் இவையோ ஆவலைத் தூண்டுகின்றன. இன்னும் முழுமையாகப் படிக்கவில்லை... இது விமர்சனப் பகிர்வும் அல்ல. அதில் மருத்துவம் குறித்து அண்ணன் எழுதிய கட்டுரையை வாசித்ததும் நான் எடுத்துக் கொண்ட ஆயுர்வேத மருத்துவமும் இங்கு இருக்கும் மருத்துவமும் குறித்து எழுத நினைத்து ஆரம்பித்த கட்டுரைதான் இது.

அப்ப நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன். பேராசிரியர் பழனி இராகுலதாசனின் செல்லப்பிள்ளையாகி அவர் வீட்டில் நாங்களெல்லாம் ஆட்டம் போட்ட நாட்கள் மறக்க முடியாதவை. சின்ன வயதில் இருந்தே உள்நாக்கு வளரும் பிரச்சினை  இருந்தது.  வீங்கிவிட்டால் எச்சில் முனுங்க... சாப்பிட, தூங்க என நான்பட்ட சிரமம் சொல்லி மாளாது. வலியின் காரணமாக கண்ணீர் ஓடிக்கொண்டேயிருக்கும். உப்புப் போட்டு வாய் கொப்பளித்தல் செய்தாலும் ஊசியே நிவாரணி ஆகும். கல்லூரி படிக்கும் போதும் அது தொடர, என் நிலை பார்த்து காரைக்குடி ஆனந்த் தியேட்டர் (இப்போது சத்தியன்) அருகில் ஞாயிறன்று இலவச ஆயுர்வேத சிகிச்சை கொடுப்பதை அறிந்த ஐயா என்னைக் கூட்டிக் கொண்டு பஸ் ஏறினார். முதல் வாரம் சென்றோம் எல்லா விசாரணைகளும் முடிந்து இது இது சாப்பிடக் கூடாதெனச் சொல்லி, கடுகை விட கொஞ்சம் பெரிதாக மாத்திரைகள் கொடுத்து காலை, மாலையில் இரண்டு மாத்திரையை வாயில் போட்டு சப்பிச் சாப்பிடச் சொன்னார். இரண்டு முறை சென்றோம்... அதன் பின்னர் ஐயா தங்களின் கிளினிக்கிற்கு வருகிறோம் என்று சொல்லிவிட்டார். பின்னர் அங்கு பயணம்...  கிட்டத்தட்ட பத்துப் பதினைந்து பேருக்கு காபி கொடுக்கும் அம்மா, காபி சாப்பிடக்கூடாது என்பதால் எனக்கு மட்டும் ஐயாவின் உத்தரவினால் கல்லூரி முடிக்கும் வரை... ஏன் இப்போது சென்றாலும் சுடச்சுட பால் மட்டுமே கொடுப்பார்கள் என்பது தனிக்கதை. அவரிடம் தொடர்ந்து பார்த்ததில் இதுவரை வலி வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதிகமான செலவு இல்லை... அதிகமான மாத்திரை இல்லை... உண்மையில் மிகச் சிறப்பான மருத்துவம்... மருத்துவர்... இப்பவும் கழனிவாசல் ரோட்டில் அவரது கிளினிக் இருக்கிறது.

இங்கு மருத்துவம் என்பது கம்பெனி கொடுத்திருக்கும் மருத்துவத்துக்கான இன்சூரன்ஸ் அட்டையை வைத்துத்தான். அட்டைகள் கலர் கலராய் பலவிதம்... இன்சூரன்ஸ் கம்பெனிகளும் பலவிதம்... இதில் அட்டைக்குத் தகுந்தாற் போல் கட்டணமும் சிகிச்சையும் உண்டு. எங்கள் கம்பெனி வருடா வருடம் அட்டை கம்பெனியை மாற்றி இப்போது நமக்கு லாபமில்லாத ஒரு அட்டையைத் தந்திருக்கிறது. மருத்துவருக்கு குறைந்தது 50 திர்ஹாம் முதல் 100 திர்ஹாம், லேபரெட்டரிக்கு 20%, மாத்திரைக்கு 30% இதுதான் இப்போதைய எங்கள் அட்டையின் கணக்கு. இதனால் நமக்கு எந்த லாபமும் இல்லை. சென்ற முறை கொடுத்த அட்டையில் மருத்துவருக்கு 50ம் மாத்திரைக்கு 10%ம் தான் இருந்தது. இப்போதைய அட்டையைப் பார்த்தாலே உடம்புக்கு முடியவில்லை என்றாலும் மருத்துவமனை செல்ல வேண்டுமா என்றுதான் தோன்றுகிறது. இங்கு பெரிய பதவியில் இருப்பவர்களுக்குக் கொடுக்கும்  அட்டைக்கும் சாதாரண வேலையில் இருப்பவர்களுக்குக் கொடுக்கும் அட்டைக்கும் நிறைய வித்தியாசம் உண்டு. பின்னவர்கள் அதிகம் பணம் செலவழிக்க வேண்டியிருக்கும். மருத்துவம், லேபரெட்டரி, மாத்திரை என எல்லாம் இலவசமாகப் பார்க்கும் அட்டையும் உண்டு... எல்லாத்துக்கும் 10% முதல் 50% வரை கொடுக்க வேண்டிய அட்டைகளும் உண்டு. இங்கு மருத்துவம் என்பது நம்ம ஊரோடு ஒப்பிட்டுப் பார்த்தால் செலவு வகையில் மிச்சம் என்றாலும் அந்தளவுக்கு நல்ல மருத்துவமாகத் தெரிவதில்லை. எல்லா வசதிகளும் இருக்கும்... நல்ல மருத்துவர்களும் உண்டு. இருப்பினும் அதிகமான மருத்துவர்கள் கணிப்பொறியில் தேடித்தான் மருத்துவம் பார்க்கிறார்கள் என்பதுடன் லாபம் பார்க்கும் தொழிலாகவே இருக்கிறது. குறிப்பாக மருத்துவமனைகள் பெரும்பாலும் மலையாளிகளால் நடத்தப்படுகின்றன. மருத்துவர்களில் மலையாளிகளும் தெலுங்கரும் அதிகம். நம்மவர்களும் சிலர் உண்டு. பிலிப்பைனி, அரபிகள் என நாம் பார்க்க நினைக்காத மருத்துவர்களும் உண்டு.

எல்லாமே அட்டையை மையமாக வைத்து நடக்கும் தொழில் என்பதால் மேலே சொன்னது போல் மருத்துவமனைக்கு வருமானம் வரும்படியான செயல்கள் கண்டிப்பாக மேற்கொள்ளப்படும். இரத்தப் பரிசோதனை, எக்ஸ்ரே போன்றவை முக்கியமானதாக கருதப்படும். மருந்துக்கள் டப்பா, டப்பாவாக எழுதப்படும். மெடிக்கலிலும் இன்சூரன்ஸ் அட்டைக்குத்தான் மருந்து கொடுக்கப்படும். அதற்கு முதலில் இன்சூரன்ஸ் கம்பெனியின் அனுமதியை மெடிக்கல்காரர் பெற்றுத்தான் மாத்திரை மருந்து கொடுப்பார். தனிப்பட்ட முறையிலான விற்பனை அரிது. அப்படி வாங்கினாலும் நம்மூரைப் போல ரெண்டு மூணு மாத்திரைகள் வாங்குவது என்பது முடியாத காரியம்... ஒரு டப்பாதான் கிடைக்கும். எல்லாமே இன்சூரன்ஸ் பணத்தையும் நம் பணத்தையும் குறிவைத்தே நடக்கும் வியாபாரம் என்பதால் டப்பா, டப்பாவாக வாங்கி அதை தின்று... குறிப்பாக கொலஸ்ட்ரால் மற்றும் சர்க்கரை நோய்க்கு மாத்திரை டப்பாக்களைத் தொடர்ந்து விழுங்குபவர்களே அதிகம். எனக்கும் கெட்ட கொழுப்பு (LDL Cholesterol ) இருக்கென மாத்திரை டப்பாக்களைக் கொடுத்து ஒரு வருடத்துக்கு மேலாச்சு... நான் அதில் ஒரு மாத்திரையும் சாப்பிடலை. மற்றொரு மருத்துவமனையில் பரிசோதித்த போது அப்படி எதுவும் இல்லை. ஊருக்கு வந்த போது அங்கு பரிசோதனை செய்த போதும் எதுவும் இல்லை என்று சொல்லிவிட்டார்கள். யூரிக் ஆசிட் பிரச்சினை கூட ரெண்டு மூணு ஹாஸ்பிடலில் இருக்கு என்பதாகவும் கடைசியாக பார்த்த ஆஸ்பத்திரியிலும் ஊரிலும் இல்லை என்பதாகவுமே வந்தது. இல்லாத ஒன்றை அதாவது சர்க்கரை, உப்பு, கொழுப்பு போன்றவற்றை இருப்பதாகக் காட்டி லாபம் சம்பாதிக்கிறார்களோ என்றும் தோன்றுவதுண்டு. ஏனென்றால் இங்கு 100க்கு 98 பேருக்கு இந்த வியாதிகள் இருக்கென மாத்திரை சாப்பிடுகிறார்கள். தொடர்ந்து இருபத்தைந்து முப்பது வருடங்கள் இருப்பவர்கள் மாத்திரைகளை விழுங்கியே ஊர் வந்ததும் வாழ முடியாமல் உயிரை விட்டு விடுவதையும் பார்க்க நேர்கிறது... இதுவே ஊருக்கு போக வேண்டும் என்ற எண்ணத்தையும் நாளுக்கு நாள் கிளைவிட்டு வளரச் செய்கிறது.

மகளுக்கு சிறு வயது முதல் பார்த்த மருத்துவத்தில் தீராத பிரச்சினையை, என்னய்யா இந்த மாத்திரையெல்லாம் கொடுத்து பிள்ளையை பாடாப் படுத்தியிருக்காங்க படிச்சவங்க நீங்களும் அதை யோசிக்கவே இல்லையா என்று திட்டிவிட்டு ஒரு மாத மருத்துவத்தில் சுத்தமாகக் குணமாக்கிக் கொடுத்தார் மதுரையில் இருக்கும் டாக்டரான அவ்வை நடராஜனின் சகோதரர். இது வரை எந்தத் தொந்தரவும் இல்லை...  மனைவிக்கு பார்த்த மருத்துவம் குறித்தும் நிறையப் பேசலாம். அதையெல்லாம் பேசினால் இந்தக் கட்டுரை இன்னும் இன்னுமென நீண்டு போகும். பிறகு பார்க்கலாம்.

வாசிப்பு ஒரு போதை.... அது பிடித்துக் கொண்டால் எதையும் தேடித்தேடி வாசிக்கச் சொல்லும். முடிந்தால் காரைக்குடி உணவகத்தை வாசியுங்கள். நிறைய விபரங்களைப் பேசியிருக்கிறார். சில கட்டுரைகள் அவரின் தேவியர் இல்லத்தில் எழுதியவைதான். அவரின் கட்டுரைகளின் தொடர்ச்சியாக நாமும் நிறையப் பேசலாம்.
-'பரிவை' சே.குமார்.

ஞாயிறு, 8 அக்டோபர், 2017

மனசு பேசுகிறது : கிராமத்துக் காதல்


கரத்துக் காதலுக்கும் கிராமத்துக் காதலுக்கும் நிறைய வித்தியாசம் இருந்தது அப்போது... இப்போதும் வித்தியாசங்கள் நிறைய இருக்கத்தான் செய்கின்றன என்றாலும் அன்றைய மண் வாசனைக் காதல் இன்று இல்லாமல் போய்விட்டது. இன்றைய கிராமத்துக் காதல்கள் பெரும்பாலும் சாதீய மோதல்களாலும் கௌரவக் கொலைகளாலும் முடிவு வந்துவிடுகின்றன. நகரத்தைப் போல் பூங்காக்கள் இல்லை என்றாலும் வயல்வெளிகளும் கோவில்களும் காதல் வளர்க்கும் இடங்களாக இருந்தன. பெரு நகரங்களில் குறிப்பாக கடல் சார்ந்த நகரங்களில் பீச்சுக்கள் கொடுத்த காதல் சுகத்தை கிராமங்களின் கண்மாய் கரைகளும் ஊரணிகளும் கொடுக்கத்தான் செய்தன. இன்று கிராமக் காதல்கள் அரிதாகிவிட்டன... காரணம் பிழைப்புத் தேடி நகரங்களை நாடி விட்ட குடும்பங்களில் வயதானவர்கள் மட்டுமே கிராமத்தின் சொத்தாக... ஒரு காலத்தில் பசுமை போர்த்திய வயல்வெளிகளும் பெரிய குடும்பங்களைத் தன்னுள்ளே இருத்தி, அந்த இருப்பின் மகிழ்ச்சியில் திளைத்த வீடுகளும் இப்போது வாழ்விழந்து... அன்று நிகழ்ந்த காதல்களில் சுவடுகளை மட்டுமே தாங்கி நிற்கின்றன.

பள்ளியில் படிக்கும் போது... அதாவது ரொம்பச் சின்னப்பிள்ளையாக இருக்கும் போது சினிமா மோகம்தான் நமக்குள் அதிகமாக இருக்கும்... (இப்பவும் அப்படித்தான் இருக்கு என்ன மாறியிருக்கு என்ற குரல்கள் சுற்றிலும் கேட்கத்தான் செய்கின்றன.) அதனால்தான் கீழே விழுந்து கை ஓடிந்து அழுது கொண்டு வீடு வந்து சேர்ந்த போது முதல்நாள் பார்த்த தூறல் நின்னு போச்சு படத்துல பாக்கியராஜ் சண்டை போட்ட மாதிரி போட்டிருப்பே... அதான் விழுந்து கையை ஒடிச்சிக்கிட்டே என அம்மா நங்கு நங்குன்னு நாலு போடு போட்டுச்சு... சிவனேன்னு தவட்டாங்கம்பு விளையாண்டவனுங்களைப் பார்த்துக்கிட்டு கொய்யாமர ஓரமா நின்னவன் மேல சவரிமுத்து மரத்துல இருந்து குதிச்சிட்டான்னு சொன்னா நம்பவே இல்லை... ஆவரஞ்செடி இலையை பிடிங்கி வந்து வதக்கி இளஞ்சூடாக வைத்துக் கட்டியும் வலி நிற்காததால் அடுத்த நாள் காலை அம்மாவிடம் திட்டு வாங்கியபடி குன்றக்குடிக்கு கட்டுக்கட்டச் சென்றதும்... அப்படிச் செல்லும் தினங்களில் எல்லாம் ஏஞ்சோகக் கதையைக் கேளு தாய்க்குலமேயோ அல்லது ஏரிக்கரைப் பூங்காற்றோ வானொலியில் ஒலித்தால் இரும்மா இந்தப் பாட்டு முடியட்டும் என நின்று திட்டு வாங்கி, அம்மாவை முன்னே நடக்கச் சொல்லி பாடல் முடிந்ததும் ஒடிப் போய் அம்மாவுடன் சேர்ந்து கொண்டதும் இந்தப் பகிர்வுக்கு தேவையில்லாததுதான் அது கை ஒடிந்த கதை... இது காதலில் விழுந்தவர்கள் கதை. மொட்டத் தலைக்கும் ழுழங்காலுக்கும் தரமணியில் ராம் போட்டது போல் முடிச்சு எதற்கு...?

கல்லூரி முடித்து பிறகு என் நண்பனின் காதலுக்காக காரைக்குடியில் காத்திருந்த நாட்களை... இரவில் காரைக்குடியில் இருந்து டிவிஎஸ்-50-யில் இருவரும் பிரச்சினைகளின் பின்னணி எப்படியிருக்கு என்று ஆராய உஞ்சனைப் பாதையாக தேவகோட்டைக்கு வந்த நாட்களை... இப்போது நினைத்தாலும் படபடப்புடன் ஆச்சர்யமாகவும் இருக்கும். அத்தனை நிகழ்வுகளுக்குப் பின்னர் இருவரும் குழந்தை குட்டி என சந்தோஷமாக வாழ்கிறார்கள் அவரவர் இணையுடன்... இதற்குத்தானா அத்தனை கஷ்டப்பட்டோமெனத் தோன்றினாலும் அன்றைய சூழல் ஒரு மோதலைத் தவிர்க்க உதவியது அந்தக் காதல் தவிர்க்கப்பட்டதால்... இப்போது அவர்களுக்குள் அந்த காதலின் துளி இருக்குமோ என்னவோ எனக்குத் தெரியாது ஆனால் அந்த அலைச்சல்... அவர்களுக்காக அலைந்த அந்த நாட்கள் எனக்குள் இன்னும் அப்படியே.. இதுவும் கதைக்கு சம்பந்தமில்லாமல் மொட்டத்தலைக்கும் முழங்காலுக்குமான முடிச்சித்தான்.

சரி கிராமத்துக் காதலுக்குப் போவோம்... பள்ளியில் படிக்கும் காலத்தில் எங்க ஊரில் திருவிழா என்பது மகாமகம் போல்தான்... பனிரெண்டு ஆண்டுக்கு ஒரு முறை அல்ல... எப்போதேனும் ஊர்க்கூட்டத்தில் ஒருமித்த முடிவு எடுக்கப்படும் பட்சத்தில் திருவிழா என்பது சிறகடிக்கும். அப்படியான ஒருமித்த முடிவு சண்டைகளின்றி எடுக்கப்பட வேண்டுமென மீனுக்காக காத்திருக்கும் கொக்கு போல வீட்டு வாசலில் அமர்ந்து அம்மன் கோவிலில் நடக்கும் கூட்டத்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்போம். அப்படி ஒரு முறை சிறகடித்த திருவிழாவுக்கு மைக்செட் போட வந்தவர், முதல் முதல் ராக தீபம் ஏற்றும் நேரம் புயல் மழையோ என்ற பாடலை அடிக்கடி போட்டார். அதுவும் பள்ளியில் இருந்து வரும் போது ரொம்பத் தூரத்திற்கு முன்னரே கேட்க ஆரம்பிக்கும் பாடல் மெல்ல மெல்ல சப்தம் கூடி வர, சனி மூலையில் ஒரு  மின்னல் அடிக்கும்... மேகம் கருகருவென மெல்லக் கூடுகட்டும்... கம்மாக்கரை வேப்ப மரம் காற்றில் தலை விரித்து ஆடும்... செம்மண் புழுதி மெல்லக் கிளம்பி மேலெழும்பும்... காற்றில் பறக்கும் முடியுடன்... காக்கி டவுசரை இழுத்துச் சொருகிக் கொண்டு ஊதாக்கலர் புத்தகப் பைக்குள் சத்துணவுக்கான தட்டு முட்டி நிற்க லேசான தூறலுக்கு ஓட ஆரம்பிக்கும் போது இந்தப் பாடல் காற்றில் மிதந்து வரும்... ஏதோ நாமே மழையில் நனைந்து கொண்டு பாடுவது போல் நம்மை மோகனாக சித்தரித்து ஒரு பிம்பம் மனசுக்குள் தோன்றும்.

அந்தப் பாட்டு அடிக்கடி ஓலித்தது... நாம சின்னப் பயலுகதானே... கூமுட்டைகளுக்கு பாட்டுப் போடுற அண்ணன் ரொம்ப நல்ல பாட்டாப் போடுறாருன்னு சந்தோஷம் வேற... பெண்கள் அடிபைப்பில் தண்ணி எடுக்க வரும்போது, கண்மாய்க்கு தண்ணீர் எடுக்கப் போகும் போது, சாமி கும்பிட வரும்போது என குறிப்பாக சில வேளைகளில் இந்தப் பாடல் ஒலிக்கும். இரவு சாமி கும்பிடும் முன்னர் அவர் பாடல் போடுமிடத்தில்தான் நாங்க தவமாய் தவம் கிடப்போம். அப்பத்தான் மோகன் பாட்டு புதுரூட்டுப் போடுவதை அறிந்தோம். பாட்டுப் போட வந்தவரு... எங்க ஊருக்கு விருந்தாளியா வந்திருந்த தாவணி போட்ட தேவதையை பூர்ணிமாவாப் பார்க்கிறதுக்காக அவரு மோகனா மாறுறாருன்னு... விவரமா இருந்து இதை யாருக்கிட்டயாச்சும் சொன்னா மோகனுக்கு கை கால் இருக்காது.... நாங்கதான் விவரமில்லாதவயிங்கதானே... சின்னப் பசங்க நாங்க... அவங்க ரூட்டுக்கு நாங்களும் உதவியா இருந்தோம். திருவிழா அன்னைக்கு காலையில ஐஸ் வாங்கி அந்தக்காக்கிட்ட கொடுடான்னு கொடுக்க, பத்திரமாக் கொண்டு போய்க் கொடுத்துட்டு வந்தான் ஒருவன். அவங்க சிரிக்க... இவங்க சிரிக்க... அவங்க கண்ணால பேச... இவங்க கண்ணால பேச... என ஒரு வாரம் நகர்ந்து திருவிழா காப்பு அவிழ்த்ததும் குழாய் ரேடியோவை அவிழ்த்து டிவிஎஸ் -50யில் கட்டிக்கிட்டு ராக தீபத்தை வேறொரு ஊரில் ஏற்ற மோகன் கிளம்பிப் பொயிட்டாரு... அந்த அக்காவை கூட்டிக்கிட்டு எல்லாம் போகலை.  அந்தக் காதல் கண் ஜாடையில் ஆரம்பித்து பால் ஐஸ்ஸோட பாழாப் போச்சு.

அப்புறம் இன்னொரு கதை... இது மாடு மேய்க்கும் போது உருவான காதல்... அப்ப நாங்க கொஞ்சம் விவரமான பசங்க... சைக்கிள் எல்லாம் ஓட்டத் தெரியும்... அதுவும் எங்க சரளை ரோட்டில்... இப்ப தார் ரோடு... கையை விட்டுட்டு ஓட்டிக்கிட்டு போற அளவுக்குத் தேறியிருந்தோம். மூணு ரப்பர் குடம் கேரியரில் கட்டி, மூணு கிலோ மீட்டர் சைக்கிள் ஓட்டிப் போய் தண்ணீர் எடுத்து வருமளவுக்கு சிறப்பாய் சைக்கிள் ஓட்ட ஆரம்பித்தோம். விடுமுறை தினங்களில் மாடு மேய்க்கச் செல்வோம்... எங்க கண்மாய்க்கு உள்புறமாக பக்கத்து ஊர் வயல்வெளி, அதில் அப்போதே விவசாயம் அரிதாகிப் போயிருந்தது. ஒரு வயலின் வரப்பில் வரிசையாக உசிலை மரங்கள் நிற்கும். அதில் தவட்டாங்கம்பு விளையாட்டு அனல் பறக்கும். அப்போது பக்கத்து ஊர் கதாநாயகன் படிப்பது போல் கையில் புத்தகத்துடன் நாங்க மாடு மேய்க்கும் இடம் தேடி வருவார். நாங்க விளையாட்டில் கவனம் செலுத்த எங்க ஊர் நாயகியுடன் மணிக்கணக்கில் பேசிக் கொண்டிருப்பார்.  இது வாராவாரம் இரு தினம் தொடரும். 'டேய் நான் அவரோட பேசிக்கிட்டு இருந்தேன்னு ஊர்ல யார்க்கிட்டயும் சொல்லக்கூடாது' என்ற மிரட்டல் வரும். சில நேரம் சிரிப்பாய் பேச்சு இருக்கும்... சில நேரம் அழுகையாய் பேச்சு இருக்கும்.  மெகா தொடர் போல் ஒரே அழுகையாய் இல்லாமல் எல்லாம் கலந்த கலவையாய் இருக்கும். சில நாட்கள் வரும்போது எங்களுக்கு கடலை மிட்டாய் வாங்கி வருவார்... அது அவர் கடைலை போட நமக்கு லஞ்சம் எனத் தெரியாமல் கிடைத்த வரை லாபமெனத் தின்று தீர்ப்போம்.  அப்படி மணிக்கணக்கில் பேசியும் எங்க ஊரு நாயகிக்கும் அந்த நாயகனுக்கும் தீவிரக் காதல் மலரவில்லை போலும்... அது அத்துப் போய் எங்க சொந்தக்காரருடன் புதிய பூவிது பூத்தது எனத் தொடர்ந்து அடிதடி வரை போனது... காதல் காய்ந்து போனது.

கிராமத்துல ரெண்டு பேருக்குள்ள காதல் வந்துட்டாப் போதும்... அடிபைப்புக்கு தண்ணீர் எடுக்க வருவதும்... கோவிலுக்கு வருவதும்... வயலுக்கு எருக் கொண்டு போவதும்... புல்லறுக்கப் போவதும்... புத்தாடை போட்டதும் வீட்டுக்கே வந்து அயித்தை என்றோ அத்தாச்சி என்றோ முறை வைத்து 'நல்லாயிருக்கா' எனக்கேட்டு ஓரக்கண்ணால் மனசுக்குப் பிடித்தவனைப் பார்ப்பதும் அவன் கண்ணாலே சொல்லும் பதிலைக் கேட்டு சிரித்துக் கொண்டு ஓடுவதும் இப்போது சினிமாவில் கூட இல்லாமல் போய்விட்டது. சினிமாவில் கூட நகரத்துக் காதல்கள்தான் மலிந்து கிடக்கின்றன... கிராமத்துக் காதல்கள் பொய்த்துப் போன விவசாயம் போல்... மறைந்து விட்ட தாவணி போல்... காணாமலே போய்விட்டன.

என்ன இருந்தாலும் பீச்சுல உக்கார்ந்து இதழோடு இதழ் சேர்த்து மணிக்கணக்கில் காதல் செய்பவர்களை விட, வயல்வெளியிலும் கண்மாய்க்கரையிலும் கண்ணாலே பேசி காதல் செய்து, எப்போதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் முகத்தில் கொடுத்துவிட்டு ஓடும் முத்த ஈரத்தில் அதிக நேசம் இருக்கத்தான் செய்திருக்கும் போல... அனுபவஸ்தர்களைக் கேட்டால் தெரியும்.

டிஸ்கி : இது முழுக்க முழுக்க பதிவுக்காக எழுதியதுதான்... மேலே சொன்ன இரண்டு காதலும் உண்மையே.... அதிலும் கொஞ்சம் காரத்திற்காக பொடி தூவியிருக்கிறேன்... எனக்கு அனுபவமான்னு எல்லாம் கேட்டு வைக்க கூடாது. இந்த அனுபவமெல்லாம் எங்கூரு முனியய்யா மேல சத்தியமா எங்க பசங்க யாருக்குமே கிடைக்கலை... அவனவன் சொந்தத்திலயோ அல்லது அந்நியத்திலயோ பொண்ணு கட்டி குடும்பம் பிள்ளைங்கன்னு சந்தோஷமா இருக்கானுங்க... அதனால யாரும் தீபாவளி வெடி வைக்க வேண்டாம் என்று சொல்லி விடைபெறுகிறேன்.
-'பரிவை' சே.குமார்.

வெள்ளி, 6 அக்டோபர், 2017

மனசு பேசுகிறது : தாஜ்மஹால்

புதிது புதிதாய் சட்டங்கள்...

வித்தியாசம் வித்தியாசமாய் திட்டங்கள்...

சட்டங்களும் திட்டங்களும் மக்களுக்கு நன்மை பயக்குமா என்பதெல்லாம் பற்றி யாருக்கும் கவலை இல்லை... என்ன சட்டம் போட்டாலும் என்ன திட்டம் போட்டாலும் எவனும் எதிர்த்துக் கேட்கமாட்டான் என்ற மதர்ப்பு அவர்களுக்கு அதிகமாகிவிட்டது. அதன் விளையே இந்த கேவலமான சட்டங்களும் திட்டங்களும்... இந்தக் கேடு கெட்ட சட்டங்களும் திட்டங்களும் மக்கள் நிலை மறந்து  மாநிலத்திலும் மத்தியிலும் குத்தாட்டம் போடுகின்றன. அப்படியான குத்தாட்டத்தில் ஒன்றுதான் சமீபத்திய தாஜ்மஹால் குறித்தான சட்டம்.

Image result for தாஜ்மஹால்

தாஜ்மஹால்...

என்ன ஒரு கம்பீரம்... என்ன ஒரு அழகு...

இந்தியாவின் சிறப்புக்களில் அதுவும் ஒன்று என்பது ஏன் இந்தக் கூமுட்டைகளுக்குத் தெரியவில்லை. மதமும் சாதியுமே இங்கே மரியாதைக்குரியதாய் இருப்பதுதான் இந்தியாவின் சாபக்கேடு. மொகலாயன் கட்டியது... இந்தியக் கட்டிடக் கலைக்கு எதிரானது என்பது எல்லாம் எவ்வளவு அபத்தமான பேச்சு... அது கட்டிடக் கலைக்கான சின்னம் என்பதைவிட காதலுக்கான... அதுவும் ஒரு ஆத்மார்த்த காதலுக்காக கட்டப்பட்ட காதல் சின்னம்... அதை சுற்றுலா இடங்கள் பட்டியலில் இருந்து நீக்குவது என்பது முட்டாள்தனமானது.  இந்த முட்டாள்களின் ஆட்சியில் இன்னும் என்ன என்ன அரங்கேறப் போகிறதோ தெரியவில்லை.

அபுதாபி வரும் முன்னர் சான்றிதழ்களை எல்லாம் தில்லியில் போய் சான்றொப்பம் (attestation) வாங்க வேண்டும் என்பதால் மிகப்பெரிய மழை பெய்து கொண்டிருந்த நேரத்தில் மதுரையில் இருந்து சென்னை வந்து நாங்கள் மூவர் தில்லி நோக்கி இரயிலில் கிளம்பினோம்... நல்ல குளிர் காலம்... வெடவெடவென ஆட்டும் குளிர்... மூவரில் துணையாய் வந்த அண்ணனுக்கு அபுதாபி கொடுத்த அனுபவத்தால் ஹிந்தி அத்துபடி... நாம் தமிழர் என்பதால் ஹிந்தி தள்ளியே நின்றது... இப்பவும் அப்படித்தான் இருக்கு... அது வேற விஷயம். அவர் ஒரு ஹோட்டலில் தங்க வைத்து கையெழுத்து வாங்குவதற்கான ஆயத்தப் பணிகளில் இறங்க... முதல் நாள் போனபோது கூட்டத்தில் எங்களால் வாங்க இயலா நிலை... முதல் அங்க போ... அப்புறம் இங்க வா... கடைசியா அமீரகத் தூதரகம் போன்னு விரட்டியதால் முதல் நாள் அறைக்கு வெறுங்கையுடன் திரும்பி... மறுநாள் இரண்டு இடத்தில் வாங்கி விட, அமீரகத் தூதரகத்தில் நேரம் முடிந்துவிட்டது இன்று போய் நாளை வா என்றார்கள். மறுநாள் காலையில் சீக்கிரமாகப் போய் வரிசையில் நின்று கொடுத்தால் பணம் கட்டியதும் நாளை மறுநாள் வந்து வாங்கிக்கங்க என்று சொல்லிவிட பார்க்க வேண்டிய இடங்களைப் பார்க்க முடிவு செய்து சுற்றினோம்.

மறுநாள் அதிகாலை ஆக்ரா நோக்கிப் பயணித்தோம் தாஜ்மஹாலையும் பார்க்க. அங்கு இறங்கியதும் இங்கு நமது பழனியில் ஏமாற்றுவது போல் ஆட்கள் நம்மை வட்டமிடத்தான் செய்கிறார்கள். அதெல்லாம் கடந்து தாஜ்மாஹால் நுழைவாயில் போய் டிக்கெட் எடுத்து உள்ளே கொண்டு போகக் கூடாது என்று சொன்னவற்றை கொண்டு போகாமல் புல்வெளியில் நடந்து யமுனை ஆற்றின்  கரையில் நிற்கும் அந்தக் காதலின் பொக்கிஷத்தை... வெள்ளை ஒவியத்தை... ஷாஜகானின் காதலை... மும்தாஜின் அழகு முகத்தை... ஒரு பகல் முழுவதும் சுற்றி ரசித்தோம்... ஆஹா எத்தனை ரசனையானவன் ஷாஜகான்... காதல் மனைவிக்கு ஒரு பளிங்கு மண்டபம்... என்ன அழகு... என்ன கம்பீரம்... இத்தனை அழகான கம்பீரமான ஒரு நினைவுச் சின்னத்தை கட்ட வேண்டுமெனில் எவ்வளவு நேசத்தை தன் மனைவி மீது வைத்திருந்திருப்பான் அந்த மொகலாயன்.

தாஜ்மாஹாலைக் கட்டியது யார்...? என்றதும் நாமெல்லாம் கொத்தனார் என்று சொல்லிச் சிரித்த காலமும் உண்டு... இப்பவும் இது போன்ற நகைச்சுவைகள் வலம் வருவதுண்டு. கொத்தனார்தான் கட்டினார் என்றாலும் தன் காதலுக்கு... தன் மனைவியின் மீதான நேசத்துக்கு... தாஜ்மஹால் என்னும் கட்டிடடத்துக்கு உயிர் கொடுத்தவன் ஷாஜகான் அல்லவா...? எப்படி அவனுக்குள் இப்படியொரு... நம் அன்பர்கள் சொல்வது போல் கல்லறை கட்ட வேண்டும் என்று தோன்றியது. எப்படி இவ்வளவு அழகான காதல் காவியத்தை இந்த மட இந்தியர்களுக்கு கொடுத்துச் செல்ல வேண்டும் என்று தோன்றியது. இதற்கான திட்டத்தை எத்தனை காலம் தன் மனசுக்குள் தீட்டி... எத்தனை முறை கட்டிப் பார்த்திருப்பான். நம் இராஜராஜன் தஞ்சைக் கோவிலை பார்த்துப் பார்த்துக் கட்டியது போல்... இங்கும் கட்டிய கொத்தனார்களும் சிலை செய்த சிற்பிகளுமே காரணம் என விதண்டவாதம் பேசினாலும் அந்தக் கோவிலை இப்படிக் கட்ட வேண்டும்... அப்படிக் கட்ட வேண்டுமென இராப்பகலாக மனசுக்குள் திட்டம் தீட்டி... ஆலோசித்து... இரவு பகல் பாராது ஒரு அரசன் வேலையாட்களுடன் அலைந்து திரிந்து கட்டுவதென்பது சாதாரணக் காரியாமா...? இங்கு ஒரு வார்டு பிரதிநிதி கூட காரை விட்டு இறங்காமல்தான் திரிகிறார்கள்... பேருந்து நிறுத்தம் கட்டினால் அது காவு வாங்குகிறது. சுண்ணாம்பையும் கல்லையும் வைத்து ஆயிரம் ஆயிரம் காலத்துக்கும் அழகு குறையாமல் நிமிர்ந்து நிற்கும்படி கட்டியிருக்கிறானே இராஜராஜன், அவனைப் புகழாமல்... காலகாலத்துக்கும் காதல் சின்னமாய் நிற்கும்படி கட்டியிருக்கிறானே ஷாஜகான், அவனைப் புகழாமல்... வேறு யாரைப் புகழ முடியும்..? வேறு யாரைப் போற்ற முடியும்..?

இங்கு சமாதிகளில்தான் தர்மயுத்தமும் தியானமும் செய்கிறார்கள்... முக்கிய முடிவுகள்... அது என்னான்னு கேக்கக்கூடாது... அவர்களுக்குத் தேவையான முக்கிய முடிவுகள் எடுக்கும் முன்னர் சமாதிகளில் விழுந்து வணங்கி எழுகிறார்கள்.  நீங்களோ ஒரு காதலின் சின்னத்தை... இந்தியாவின் அடையாளத்தை அது ஒரு கல்லறை... நம் கட்டிடக் கலைக்கு எதிரானது... மொகலாயன் கட்டியது என்றெல்லாம் சொல்லி பட்டியலில் இருந்து நீக்குவது ஆணவத்தின் அடையாளமே...  உங்கள் ஆணவம் அழிவை நோக்கித்தான் கொண்டு செல்லும் என்பதை எப்போது உணர்வீர்கள்..? உங்கள் முடிவுகள் எல்லாமே தோல்வியின் பக்கத்தில் திரும்பியிருப்பதை உணர்ந்தும் உணராதது போல் இருப்பதால் என்ன பயன்..?

தாஜ்மஹாலை பட்டியலில் இருந்து நீக்கிவிட்டால் எல்லாம் முடிந்து விட்டது என்று நினைக்கும் கோமாளிக்குத் தெரியவில்லை... அது சுற்றுலாத் தளமல்ல... ஒவ்வொரு இந்தியனின் மனசுக்குள்ளும் உட்கார்ந்திருக்கும் காதலின் சின்னம்... நம் இந்தியாவின் அடையாளம். இது போன்ற கேனத்தனங்களை அரங்கேற்றுவதை விடுத்து மக்கள் நலனுக்கான... இந்திய முன்னேற்றத்துக்கான திட்டங்களை எப்போது தீட்டுவீர்கள்...? மக்கள் வளர்ச்சிக்கான நடவடிக்கைகளை எப்போது எடுப்பீர்கள்..?

தாஜ்மஹால் மத சின்னம் அல்ல... அது இந்தியர்களின் அடையாளம்...

-'பரிவை' சே.குமார்.