மனசு - 1.
'அவள் பெயர் தமிழரசி' - பாவைக் கூத்துக் கலை என்பது அழிந்து வரும் கலைகளில் ஒன்று. தற்பொழுது எங்கும் நடத்துவதில்லை என்ற நிலையில்தான் இருக்கிறது. நாடகம், கரகாட்டம் (இப்பொழுது நடத்தப்படுவது கரகாட்டம் என்பது இல்லை என்பது எல்லோருக்கும் தெரியும்) பாவைக் கூத்தெல்லாம் நமது அப்பா காலத்தில் அடிக்கடி கிடைத்தவை... இப்போது அரிதாகக் கிடைப்பவை.
நான் பள்ளியில் படிக்கும் காலத்தில் நாடகங்களுக்கு என்று ஒரு ரசிகர் கூட்டமே இருக்கும். எங்கு நாடகம் நடந்தாலும் சைக்கிளில் சென்று வரும் கூட்டமும் உண்டு. வள்ளி திருமணம் நாடகத்தில் வேலானாக ஸ்ரீராம் நடித்தாலும் வள்ளியாக கரூர் இந்திரா நடித்தாலும் அவர்களின் தர்க்கத்திற்காக கூட்டம் அலை மோதும். அதேபோல் அரிச்சந்திர மயான காண்டம் என்றால் காமராஜின் நடிப்புக்காகவே பார்க்கப் போவோர் உண்டு. ஆனால் அதே நாடகம் இன்று ஒருசில இடங்களில் நடத்தப்பட்டாலும் பார்க்க வருபவர்களின் எண்ணிக்கை விரல் விட்டு எண்ணும் நிலையில்தான் உள்ளது.
அதேநிலைதான் கரகாட்டத்திற்கும்... நல்ல கலை, ஆனால் அவர்களின் வயிற்றுப் பிழைப்புக்காக கேவலமாக மாற்றப்பட்டு விட்டது. எங்கள் ஊரில் சில காலமாக கரகாட்டம் நடத்திவந்தோம். அவர்களிடம் 'இது கிராமம் இங்கு ஆபாசப் பேச்சுக்கூடாது' என்று சொல்லத்தான் செய்வோம். ஆனால்... அவர்கள் மோசமாக இல்லாவிட்டாலும் சில நேரங்களில் பாசமாகவாவது பேசியும் ஆடியும் விடுவார்கள். அதனால் கடந்த ஆண்டு நாடகத்திற்கு மாறினோம்.
வள்ளி திருமணம்... ஆரம்பிக்கும் போது நல்ல கூட்டம் முடியும் போது ஆறு பேர் மட்டுமே இருந்தோம். அதுவும் விழாக் கமிட்டியை சேர்ந்தவர்கள். நாடக அமைப்பாளர்தான் முருகனாக நடித்தார். ' அடுத்த வருடம் கூட்டத்தைக் கூட்டப்பாருங்க. இப்ப முடிச்சுக்கிருவோம்' அப்படின்னு எங்களது சித்தப்பாவிடம் சொன்னாரே பார்க்கலாம், வேற என்ன செய்ய முடியும் .
இந்த வருடம் திருவிழாவிற்குப் போக இப்போதே அலுவலகத்தில் ஒரு மாத விடுமுறை வாங்கியாச்சு. இந்த வருடம் கலை நிகழ்ச்சி வேண்டாம் என்ற மனநிலைதான் எல்லாருக்கும்... ம்... பார்க்கலாம்.
சரி, நமது நாட்டுப்புறக் கலைகள் அழியக் காரணம் அவற்றை சுமந்து திரியும் மனிதர்கள்தான். அப்படி அழிந்த கலையைத்தான் கையில் எடுத்துள்ளார் புதிய இயக்குநர் மீரா கதிரவன். 'அவள் பெயர் தமிழரசி' - அருமையான கதைக்களம், சிறப்பாக பயன்படுத்தப்பட்ட பேச்சு வழக்கு, என எல்லாம் சிறப்பாக உள்ளது.
தான் சிநேகிக்கும் பாவைக்கூத்து நடத்தும் குடும்பத்து சிறுமிக்கு சிறுவயதில் உதவும் கதையின் நாயகன், அவர்களை தனது தாத்தாவை கட்டாயப் படுத்தி தங்கள் ஊரில் தங்க வைக்கிறான். அவளது குடும்பத்திற்கு உதவுவதுடன் நட்பாகவும் இருக்கிறான்.
கால ஓட்டத்தில் வளரும்போது அவள் நல்ல படிப்பதும் அவன் படிக்காமல் இருப்பதும் (பசங்களை எல்லா இயக்குநர்களுமே இப்படித்தாம்பா பலி வாங்குறாங்க.) அதனால் அவர்களுக்குள் பிரச்சினைகள் தலை தூக்குவதும் அதற்குத் தீர்வாக நண்பர்களின் கருத்தை சுமக்கும் அவனால் அவள் சுமக்கும் சுமைகளை அழகாக படமாக்கியிருக்கிறார்.
பாவைக் கூத்துக் கலைஞர்களின் பரிதாப நிலையை கண்முன்னே நிறுத்துயுள்ளனர் இயக்குநரும், பாவைக் கூத்துக் கலைஞர்களாக நடித்தவர்களும். அனைவரும் பார்க்கும் வகையில் இயக்கப்பட்ட நல்ல படம்தான் ஆனால் பாவைக் கூத்துக் கலைஞர்கள் மேக்கப்புடன் வீதியில் அலைவதாக் ஆரம்பத்தில் காட்டும் காட்சியில் நாடகத்தனம் தெரிகிறது. புதிய இயக்குநரின் புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
மனசு - 2.
கடந்த வெள்ளியன்று என் பிரிய மகளின் பிறந்தநாள். வியாழன் இரவு இந்திய நேரப்படி 12.01க்கு செல்பேசியில் வாழ்த்து அனுப்பியாச்சு. வெள்ளி விடுமுறை என்பதால் காலையில் அறை நண்பர்கள் தூங்கியதால் போன் செய்யவில்லை. பிறகு போன் பண்ணலாம் என்று நினைத்தபோது மகள் பள்ளி சென்றிருப்பார்கள் வரட்டும் என்று நினைத்து விட்டு விட்டேன்.
ஊரில் இருந்து மனைவி போன் செய்து 'எல்லாரும் போன் பண்ணி வாழ்த்துச் சொல்றாங்க... எங்கப்பா மட்டும் பண்ணலை. நான் பேச மாட்டேன்' என்று சொல்லிச் சென்றதாக சொன்னார். என் மகள் என் செல்லம் எனக்குத் தெரியும் என்றேன் அவரிடம்.
பள்ளியில் இருந்து வரும் சமயத்தில் போன் அடித்தேன். என் மகளே எடுத்து 'அப்பா...' என்று மழலையில் அழைக்க, வாழ்த்துச் சொல்லியாச்சு. அவர் "அப்பா... அம்மா உங்ககிட்ட பேசக்கூடாதுன்னு சொல்றாங்க... நான் பேசுவேன்ல" என்று சொன்னாரே பார்க்கலாம். என் மனைவிக்கு முகத்தில் ஈயாடவில்லை என்பது எனக்குத் தெரியும்.
மனசு - 3.
நான் வலையில் எழுத வந்த புதிதில் எனது கதையைப் படித்து, அது குறித்து நண்பர் நாடோடி இலக்கியன் அவர்கள் தனது தளத்தில் எழுதி எனக்குள் ஒரு உத்வேகத்தை கொடுத்தார் . இல்லையென்றால் கடந்த ஐந்து ஆறு மாதமாக வலையில் தொடர்ந்திருப்பேனா என்பது எனக்குத் தெரியாது.
எனக்கு நண்பர்களாகி எனக்கு பின்னூட்டமிட்டு வாழ்த்திய நண்பர்களில் புலவன் புலிகேசி தனது டரியலில் எனக்காக சில வரிகளை விதைத்திருந்தார். அந்த விதைப்பில் நல்ல நட்பின் விளைச்சல் இருந்தது.
இந்த முறை திரு.ஸ்டார்ஜன் அவர்கள், எனது வலைப்பூவை தொடர்ந்து படித்து வருபவர், வலைச்சரத்தின் கடந்த வாரம் ஆசிரியராக பணியாற்றி பல நல்ல பதிவர்களை அறிமுகம் செய்தார்.
வலைச்சரத்தில் அரிமுகமாக பிரபல பதிவராக இருக்க வேண்டும் என்ற என் நினைப்பை பொய்யாக்கியது அவரது சனிக்கிழமை பதிவு. நல்ல அறிமுகங்களுக்கு மத்தியில் என் பெயரும்... பிரபலங்களுக்கு மத்தியில் நானும் அதற்கு ஸ்டார்ஜனுக்கு நன்றி.
-'பரியன் வயல்' சே.குமார்