மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

கட்டுரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கட்டுரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 29 ஜூன், 2025

கேலக்ஸி ஆண்டு விழாவும் உன்மத்தம் வெளியீடும்

டந்த சனிக்கிழமை மாலை ஜெசிலா மேடத்தின் 'Proactive Excel Safety Consultancy' நிறுவனத்தில் கேலக்ஸியின் நான்காமாண்டு துவக்க விழா - மூன்றமாண்டு நிறைவு விழா - மிகச் சிறப்பாக, மகிழ்வாக, மன நிறைவோடு நடந்து முடிந்தது.

திங்கள், 13 ஜனவரி, 2025

சான்றோர்... பாலர் : பேராசிரியர் மு.பழனி இராகுலதாசன்

நேற்றுக் காலை 'அப்பா உங்ககிட்ட பேசணுமாம் குமார்' என வாட்சப்பில் அனுப்பியிருந்தார் மேகலை. எதிர்பாராத நிகழ்வாய் அமைந்த அம்மாவின் இறப்புக்குப் பின் ஐயாவிடம் எப்படிப் பேசுவது..? என்ன பேசுவது..? என்ற மன தைரியமில்லாத நிலையில் இருந்து வருகிறேன் என்பதே உண்மை.

செவ்வாய், 10 மார்ச், 2020

மலையாள சினிமாக்களம் (அகல் கட்டுரை - ஜனவரி : 2020)

Image result for மலையாள சினிமா வினீத் ஸ்ரீனிவாசன்

சின்ன வயதில் இருந்தே சினிமா மீது ஒரு தனிப் பிரியம். அது ஏன்னு எல்லாம் தெரியாது... படம் பார்ப்பதும்... பாட்டுக் கேட்பதும் எப்பவுமே பிடிக்கும் ஒன்று. தூறல் நின்னு போச்சு படம் பார்த்துட்டு மறுநாள் பள்ளியில் அடிபட்டு கை உடைந்த போது ‘படம் பார்த்துட்டு அதுல வர்ற சண்டைக்காட்சி மாதிரி செஞ்சு பார்த்திருப்பாக... விழுந்து கையை ஒடச்சிக்கிட்டு வந்திருக்காக’ என வலியும் வேதனையும் சுமந்து நிற்கும் போது அம்மா கொடுத்த அடி எப்போதும் மறக்க முடியாத ஒன்று. சில படங்கள் பார்த்த பின்னணி இன்னும் இனிமையாய் மனசுக்குள்! ம்.... அது ஒரு கனாக்காலம்னு எல்லாம் கடந்து போய்விட முடியாது. ஏன்னா சினிமா பார்ப்பது என்பது இன்னும் உயிர்ப்புடன்தான் இருக்கு. இப்பவும் அது தொடரும் காலம்தான்!  ​

ஆம் இன்றும் படம் பார்ப்பது தொடர்கிறது என்றாலும் இங்கு நாம் பார்க்க விரும்பும் படங்கள் தியேட்டருக்கு வருவதில்லை. பிரபலங்களின் படங்கள் மட்டுமே வரும். அப்படியே நாம் பார்க்க நினைக்கும் படம் வந்தாலும் கணக்குப் பண்ணி வாழும் வாழ்க்கையில் டிக்கெட் விலைக்கு மூன்று நாள் சாப்பிடலாமே என்றுதான் தோன்றும். ஆம் எது தேவையான செலவோ அதை மட்டுமே செய்து நாட்களை நகர்த்தும் போதே ஏகப்பட்ட நெருக்கடி, தினம் தினம் ஒரு பிரச்சினை. எழும்போதே இன்று என்ன செய்யப் போகிறோம் என்ற நினைப்புடன்தான் எழச் செய்கிறது அழுத்திக் கொண்டிருக்கும் பொருளாதாரம். இதில் எங்கே சினிமாவுக்கான செலவையெல்லாம் யோசிப்பது? டோரண்டுகளும் சில இணைய வெளிகளுமே சினிமாவை எனக்குக் காட்டிக் கொண்டிருக்கின்றன. ஊருக்குப் போனாலும் ஒரு மாத விடுமுறையில் சினிமா என்பது யோசிக்கும் விஷயமாகத்தான் இருக்கிறது. பிள்ளைகளுக்காக எப்போதேனும் செல்வதுண்டு.

தமிழ்ப்படங்கள் மட்டுமே பார்த்து நகர்ந்த வாழ்க்கைதான் ஊரில் இருக்கும் வரை! அதுவும் காரைக்குடியில் கணிப்பொறி நிலையத்தில் இருந்த போதும், சென்னையில் வேலை பார்த்த போதும் கிட்டத்தட்ட வெளியான எல்லாப் படங்களையும் பார்த்து விடுவோம், அது மரண மொக்கை என்றாலும் கூட! காரைக்குடி தேவகோட்டையில் எல்லாத் தியேட்டரிலும் படம் பார்த்திருந்தாலும் சென்னையில் கிருஷ்ணவேணியும் ஸ்ரீநிவாசாவும்தான் எங்களை அதனுள்ளே அதிகம் அமர்த்திப் பார்த்திருக்கும். நடந்து போகும் தூரத்தில் எங்கள் அறை என்பதால் நினைத்தவுடன் இரவுக்காட்சிக்குச் சென்று விடுவோம்.

அமீரகம் வந்தபின் தமிழ் தவிர்த்து மற்ற மொழிப்படங்களையும் டோரண்டில் தரவிறக்கம் செய்து நண்பர்கள் பார்க்கும் போது வெட்டித்தனமாய் மாலைகளைக் கடத்த வேண்டிய சூழலில், விளக்கணைக்க பதினோரு மணி என்ற சட்டதிட்டத்துடன் இயங்கும் அறையில், பெரும்பாலும் பனிரெண்டரை, ஒருமணி வரை உறக்கம் வரா உளைச்சலில் வேறு என்ன செய்ய முடியும்? அதுவும் வார விடுமுறை தினங்களில் பிரியாணி சமைத்துச் சாப்பிட்ட பின் நேரத்தைக் கடத்த என்ன செய்வது? எல்லா மொழிப் படங்களும் பரிட்சயமானது இப்படித்தான்.

சமைத்தல், ஊருக்குப் பேசுதல், எழுதுதல் என்பதெல்லாம் குறிப்பிட்ட நேரத்துக்கு மேல் நீடித்தல் என்பது சாத்தியமில்லை. மகிழ்வான பேச்சுக்குப் பின்னே பணம் என்னும் வார்த்தை வந்தால் நம் இயலாமை எதிர்த்து நிற்கும். மகிழ்வாய் ஆரம்பித்த பேச்சும் இறுதியில் சண்டையில்தான் முடியும் என்பதால் இடைவெளி விட்ட பேச்சே கொஞ்சமேனும் மனசுக்கு மருந்தாக இருக்கக் கூடும் என்பதாலும், எவ்வளவு நேரம்தான் எழுத முடியும்? எழுத்துக்குப் போரடித்துப் போகாதா என்ற நினைப்பாலும் சில நிமிடம் பேச்சும் கொஞ்ச நேர எழுத்துமே சாத்தியமாகிப் போன சூழலில், நேரங்கடத்தி என்பது பெரும்பாலும் கணிப்பொறியில் பார்க்கும் படங்களே! சில நேரங்களில் குறிப்பாக விடுமுறை தினத்தில் அறையில் ப்ரொஜெக்டர் மூலமாக படம் போடுவார்கள். எல்லாரும் ரசித்துப் பார்க்க ஆரம்பிப்பார்கள் ஆனால் இறுதிவரை பார்ப்பது நானும் என் நண்பருமாகத்தான் இருக்கும். மற்ற பக்கமெல்லாம் மழை நேரத்து தவளைபோல குறட்டைச் சப்தங்கள் வர ஆரம்பித்துவிடும்.

நான் பார்த்த முதல் மலையாளப்படம் 'அன்னையும் ரசூலும்' - பஹத்பாசிலும் ஆண்ட்ரியாவும் நடித்தது. அருமையானதொரு காதல்கதை. ரசித்துப் பார்க்க வைத்தது. ஆண்ட்ரியாவின் நடிப்பு மிகவும் அருமையாக இருக்கும். இது மலையாளத்தில் அவருக்கு முதல்படம். இந்தப் படம் பார்த்தபின் என் கணிப்பொறித் திரையில் நீண்டநாள் அன்னா இருந்தார். அந்தப்படம் கொடுத்த ஈர்ப்பின் காரணமாக மலையாளப் படங்களைத் தேடித்தேடிப் பார்க்க ஆரம்பித்தேன். அப்படித்தான் நிறையப் படங்களைப் பார்த்தேன். மலையாளப் படத்தின் மீது தீராக்காதல் வந்தது.

டோரண்டில் புதிய மலையாளப்படம் என்றால் அது எப்படியிருக்கும் என்றெல்லாம் யோசித்ததே இல்லை. இப்போதெல்லாம் டிரைலரையோ அல்லது விமர்சனத்தையோ பார்ப்பது உண்டு அப்போது உடனே தரவிறக்கம்தான். எத்தனை படங்கள்... ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாய்... குறிப்பாக எல்லாமே நல்ல கதைகளுடன்... என்னு நிண்டே மொய்தீன், அனார்கலி, சார்லி, பிரேமம், மகேஷிண்டே பிரதிகாரம், உஸ்தாத் ஹோட்டல், தொண்டிமுதலும் த்ரிஷாக்சியமும், த்ரிஷயம், டேக் ஆப் இப்படி நிறையப் படங்களை மீண்டும் மீண்டும் பார்க்க வேண்டும் என்பதாலேயே எனது கணிப்பொறியில் சேமித்து வைத்திருக்கிறேன்.

நாம் இன்னமும் மாஸ் நாயகர்களுக்காக கதை என்று ஒன்று வேண்டும் என்பதையே மறந்து படமெடுத்துக் கொண்டிருக்கிறோம். நாலு சண்டையும் அஞ்சு பாட்டும் போதும் என்ற மனநிலையில் இருந்து இன்னும் மாறவில்லை. பற்றாக்குறைக்கு சூரி, விவேக், சந்தானம், ஆர்.ஜே.பாலாஜி, யோகிபாபு போன்றோரின் வறட்சியான நகைச்சுவைகளுமே தமிழ்ச் சினிமாவை எழ விடாமல் அழுத்திப் பிடித்து வைத்திருக்கின்றன.

வடிவேலு என்னும் கலைஞன் இல்லாதது தமிழ்ச் சினிமாவுக்கு மிகப் பெரிய இழப்பு என்று கூட சொல்லலாம் என்றாலும் தொழில் மீது காட்ட வேண்டிய பக்தியை அரசியல்வாதிக்காக காட்டியதால் தானாகத் தொலைந்து போன நகைச்சுவையாளன்தானே அவர். நுணலும் தன் வாயல் கெடும் என்ற பழமொழிக்குப் பாந்தமாய்ப் பொருந்திப் போனவர். இவரால் மட்டும் தமிழ்ச்சினிமா தழைத்து விடாது என்றாலும் சவக்குழிக்குப் போகாமலாவது இருந்திருக்குமோ என்ற ஆதங்கமே கொடுக்கிறது அவரின் சமீபத்திய கமலஹாசன் விழா மேடைப் பேச்சு.

சமீபத்திய தமிழ் படங்கள் இளம் இயக்குநர்களின் கையில் சிக்கி, சாதி என்னும் தரித்திரத்துக்குள் நகர்ந்து கொண்டிருக்கிறது. ‘அடக்கி வச்சே...’, ‘அடிமைப் படுத்தினே...’, ‘எழுந்து வருவோமுடா...’ என நீலம், பச்சை, சிவப்புன்னு சாதிக்கொரு கலர் கொடுத்து இந்த இருபத்தியோராம் நூற்றாண்டில் சாதீயத் தீயை நன்றே வளர்க்கிறார்கள். இவர்களின் பாதையில் பயணிப்பதாலேயே தன் சாதிப்பெயரை பைக்கில் எழுதிப் பறக்கிறது இளைஞர் கூட்டம். நல்லதைக் கற்றுக் கொடுக்க வேண்டிய சினிமா சாதியை வளர்த்துக் கொண்டிருக்கிறது. இதற்குப் பலர் பால் ஊற்றிக் கொண்டிருக்கிறார்கள், அவர்கள் ஆதாயத்துக்காக! இது எப்போது மாறும் என்பது கேள்விக்குறியே...

நம்மவர்களுக்கு நேர் மாறாய் இருக்கிறார்கள் மலையாள இளம் இயக்குநர்கள்... சின்னதாய் ஒரு கதை... அதை வைத்துக் கொண்டு திரையில் மாயாஜாலம் காட்டுகிறார்கள். ஒவ்வொன்றும் வாழ்க்கைக் கதைகளாய் நம்முன்னே நின்று நம்மை வசமிழக்க வைக்கின்றன. அவர்கள் சாதிக்குள்ளோ மதத்துக்குள்ளோ மறந்து நின்றுவிடவில்லை. அதையும் தாண்டிப் பயணிக்கிறார்கள். அரசியல் பேசுகிறார்கள்... அதிகாரத்தைச் சாடுகிறார்கள். அன்பை விதைத்து அநீதியைக் கொல்கிறார்கள். சாதியையோ மதத்தையோ சுமக்கவேயில்லை. சக மனிதனின் வாழ்க்கையைச் சுமக்கிறார்கள். நம் முன்னே அதைச் சுவையுடன் படைக்கிறார்கள்.

தமிழ்ச்சினிமா இன்றைய நிலையில் தரம் தாழ்ந்து போய்க் கொண்டிருக்கிறது... ஒரு சிலர் மட்டுமே அதைத் தூக்கி நிறுத்த முயற்சிக்கிறார்கள் என்பதுதான் உண்மை. புதிதாய் புதிய கதையுடன் வரும் இயக்குநர்கள் முதல் படத்தை முக்கனியின் சுவையுடன் எடுத்து, தியேட்டர் கிடைக்காமல் படும் அவதியில், தனது நல்ல படம் ஓடாமல் முடங்கிப் போன வருத்தத்தில் அடுத்த படத்தை தமிழ்ச்சினிமாவின் மசாலா பார்முலாவிலோ அல்லது சாதீயப் பார்முலாவிலோ எடுக்க ஆரம்பித்துக் காணாமல் போய்விடுகிறார்கள். மலையாளத்தில் முதல் படம் கொடுத்த பெரும் தாக்கத்துக்கு இணையாக, அதையும் விட இன்னும் சிறப்பாக இரண்டாவது படத்தைக் கொடுக்க வேண்டும் என்ற ஆவலில் பயணிக்கிறார்கள். அதில் வெற்றியும் காண்கிறார்கள்.

இங்கே நாம் மாஸ் நடிகர்களுக்காக கதை எழுதுகிறோம். ஆனால் மலையாளிகளோ தங்கள் கதைக்கான நடிகர்களைத்தான் தேடுகிறார்கள். அப்படித்தான் சமீபத்திய படங்கள் எல்லாம் மகா வெற்றியைக் குவித்திருக்கின்றன.  சிறிய படங்களுக்கு இங்கே சரியான விளம்பரம் கிடைப்பதில்லை... ஆனால் அங்கே சிறிய பட்ஜெட் படங்கள்தான் பெரிய இலக்கை நோக்கி நகர்கின்றன.

வினீத் ஸ்ரீனிவாசன் ஒரு நாயகனுக்கு உரிய உடலமைப்பு கொண்டவரல்ல என்றாலும் மிகச் சிறப்பாக, அற்புதமாக நடிப்பவர். நல்ல பாடகர், இயக்குநர். அவர் நடித்தால்தான் சரியாக இருக்குமென வந்த படங்கள் பல. சமீபத்தில் அவரின் 'மனோகரம்' சினிமாவைப் பார்த்தேன். அப்படியான கதாபாத்திரத்தில் நம்மவர்கள் நடிக்க யோசிப்பார்கள். ஆட்டோகிராப்பில் பலர் நடிக்க மாட்டேன் என்று சொன்னதும்தான் சேரன் நடிகனானார். சுப்ரமணியபுரத்தில் சசிகுமார் கதாபாத்திரத்தில் சிலர் நடிக்க மறுத்ததால்தான் அவரும் நடிகனானார்.

மனோகரத்தில் ராசி என்பது என்னவென்றே அறியாத, எதைச் செய்தாலும் தோல்வியே மிஞ்சும் ஒரு பெயிண்டரின் கதாபாத்திரம் வினீத்துக்கு.! மனுசன் அடித்து ஆடியிருப்பார். அந்த உருவத்தை தமிழ்ச் சினிமா என்றால் ஏற்றுக் கொள்ளவே மறுக்கும் ஆனாலும் நாமும் இப்போது மாறித்தானே இருக்கிறோம். சரவணா ஸ்டோர் ஜாம்பவான் அண்ணாச்சியை எல்லாம் நாயகனாக்கி கொடியும் கட்டவுட்டும் வைக்கும் நாளுக்கு காத்துக் கொண்டிருக்கிறோமா இல்லையா? வினீத் எழுதி இயக்கிய 'தட்டத்தீன் மராயத்து' பார்த்திருக்கிறீர்களா? பார்க்கவில்லை என்றால் பாருங்கள், அழகானதொரு காதல்கதை.

இவரைப் போல்தான் பஹத்பாசிலும்! நடிப்பு அரக்கன். எவனாவது ஒரு இளம் நாயகன் வழுக்கைத் தலையுடன் படங்களில் நடிப்பானா? இவர் நடித்தார். எதார்த்த நடிப்பென்றால் பஹத் எனத் தனக்கென ஒரு பாதையை உருவாக்கிக் கொண்டார். ‘அன்னையும் ரசூலும்’ திரைப்படத்தைப் பார்க்கும் போது ‘யார்டா இவன்?’ எனத் தோன்றியது. அடுத்தடுத்த படங்களில் இவரின் நடிப்பு பிரமிக்க வைத்தது. பஹத்தின் ஒவ்வொரு படத்தையும் தேடித்தேடிப் பார்க்க வைத்தது அவரின் அலட்டலில்லாத, ஆத்மார்த்தமான நடிப்பு. இதுவரை அவரின் எல்லாப் படங்களும் பார்த்தாச்சு. தமிழில் வந்ததைத் தவிர.

இதே வரிசையில் ஷௌபின் ஷாகிர் பற்றிச் சொல்லியே ஆகணும்... இவரின் ‘சூடானி ப்ரம் நைஜீரியா’ படத்தைப் பார்க்கும் முன்பு வரை ஒரு நகைச்சுவை நடிகனாய்த்தான் இவரைத் தெரிந்து வைத்திருந்தேன்... சத்தியமாக சந்தானத்தைப் போல் இவர் இல்லை. இந்தப்படம் பார்த்தபோது இவரின் நடிப்பு வியக்க வைத்தது. அதன் பின் பார்த்த படங்களில் எல்லாம் ஷௌபின் என் மனம் கவர்ந்த நாயகராய் மாறிப் போனார்... அவர் இருந்தால் அந்தப்படம் பார்த்தே ஆக வேண்டும் என்றாகிப் போனது. கும்பளங்கி நைட்ஸில் மகிழ்ந்து கடந்த போது அம்புலியில் மனுசன் அடித்து ஆடியிருப்பார். அப்படி ஒரு நடிப்பை அந்தக் கதாபாத்திரத்துக்கு இவரைத் தவிர வேறு யாராலும் தந்திருக்க முடியாது. அம்புலி இவரின் வாழ்நாள் சாதனைப்படம் என்றும் சொல்லலாம்.

இப்படியே துல்கர் சல்மான், நிவின் பாலி, சோனு நிகம், ப்ரித்விராஜ், டொவினோ தாமஸ், அஜூ வர்கீஸ், ஜெயசூர்யா, குஞ்சக்கோ போபன் என ஒவ்வொருவரைப் பற்றியும் விரிவாகப் பேசிக் கொண்டே செல்லலாம். மலையாள சினிமா என்று சொல்லிவிட்டு நாயகர்களின் பின்னே செல்வது முறையல்லவே! மம்முட்டி, மோகன்லால், ஜெயராம் வரிசை நாயகர்களுக்குப் பிறகு மலையாளத்துக்கு கிடைத்திருக்கும் இளைஞர் பட்டாளம் மிகச் சிறப்பாக நடிக்கிறது. இவர்களின் தொடர் வெற்றிக்குப் பின்னே நல்ல கதைகள் இருக்கின்றன. அதைக் கொடுப்பவர்கள் புதிதாய் பதியமிடும் இளம் இயக்குநர்களே. மலையாளச் சினிமா உயரத்தை நோக்கி நகர்ந்து செல்ல ஆரம்பித்து நாட்களாகிவிட்டது. நாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

மலையாள சினிமாவில் ஒவ்வொரு படமும் புதிதான கதைக்களத்துடன்... எதார்த்தமாக எடுக்கப்படுகின்றன. இந்த எதார்த்தக் கதையாடலே அந்தப் படங்களின் வெற்றிக்கு வித்திடுகின்றன. மேலே சொன்னது போல் நாயகனுக்காக கதை என்பதைவிட கதைக்காகத்தான் நாயகன் என்பதில் மிகத் தெளிவாக, உறுதியுடன் இருக்கிறார்கள்... நாயகனுக்காக கதையில் எந்தச் சமரசமும் செய்வதுமில்லை... செய்ய விரும்புவதுமில்லை. அவர்களின் படங்களைக் களங்களே நிர்ணயம் செய்கிறது. காட்சிப்படுத்துதலில் நம்மை வீழ்த்தி விடுகிறார்கள்.

தமிழ்ச்சினிமா, நான் சின்ன வயதில் எப்படிப் பார்த்தேனோ அப்படியேதான் இன்னும் நகர்கிறது. சில நல்ல படங்கள் எப்போதேனும் தலைகாட்டுவதுடன் சரி... மாஸ் நாயகர்களின் படங்களுடன் வெளிவந்து மறுநாளே பெட்டிக்குள் முடங்கி விடுகின்றன. மிக மிக அவசரம், மேற்குத் தொடர்ச்சி மலை, தொரட்டி, ஒத்தைச் செருப்பு போன்ற படங்களையெல்லாம் நம்மில் எத்தனை பேர் பார்த்திருப்போம்? அசுரன் கூட மாஸ் ஹீரோ என்பதால்தான் இமாலய வெற்றி பெற்றது என்பதே வெளிப்படையான உண்மை.

நல்ல படங்களைக் கொடுத்துக் கொண்டிருந்த தமிழ்ச் சினிமா மாஸ் என்னும் கோட்டைக்குள் உட்கார்ந்த பிறகு, ‘கதையா..? அப்படின்னா..?’ என்ன என்று கேட்க வைத்துவிட்டது. நாங்கள் எடுப்பதுதான் கதை... நாலு சண்டை, ஐந்து பாட்டு... கொஞ்சம் பஞ்ச் வசனங்கள் இருந்தால் போதும் கட் அவுட் வைக்கவும் அதுக்குப் பால் ஊத்தவும் அப்படியே தங்களுக்கு வாக்கரிசி போட்டுக் கொள்ளவும் ஒரு கூட்டம் இருக்கு என்பதை உணர்ந்தபின் கதைகள் எல்லாம் காணாமல் போய்விட்டன. அதுவும் குறிப்பாக புதிய இயக்குநர்கள் எல்லாருமே சொல்லி வைத்தாற்போல சாதிகளைச் சுமந்து படமெடுப்பதுதான் கேவலத்தின் உச்சம். அதையும் தூக்கி வைத்துக் கொண்டாடவும் ‘நான் இவன்டா’ எனச் சாதி சொல்லித் திரியவும் ஒரு கூட்டம் இருக்கத்தானே செய்கிறது... பின் எப்படி நல்ல கதைகளுக்கு இங்கே மதிப்பிருக்கும்..?

மலையாளக் கரையோரம் இப்படியான சாதீய இயக்குநர்கள் ஒதுங்கவில்லை என்பதே ஆறுதல். நல்ல சிறுகதைகளை வாசிக்கும் போது கிடைக்கும் மனநிறைவு சமீபத்திய மலையாள புதிய இயக்குநர்களின் படங்களில் கிடைக்கிறது என்பதே உண்மை.

சல்லிக்கட்டு, தண்ணீர் மத்தன் தினங்கள், அம்புலி, உயரே, ஜூன், கும்பளங்கி நைட்ஸ், இஸ்க், வைரஸ் எனச் சமீபத்தில் பார்த்து... ரசித்த படங்கள் எல்லாம் மனசுக்குள் இன்னும் தித்திப்பாய்...

முடிந்தால் இந்தப் படங்களைப் பாருங்கள்... மனநிறைவான சிறுகதையை காட்சிப்படுத்திப் பார்த்த அனுபவம் கிடைக்கும்... நிச்சயமாய் வித்தியாசமான அனுபவத்தைப் பெறுவீர்கள். கத்தியும் ரத்தமும் சாதியும் மதமும் இல்லாத ஒரு வாழ்வை ரசிக்க முடியும்.

மலையாளத் திரையில் மண் வாசமும் மனதின் வாசமும் சுற்றிச் சுழன்று கொண்டிருக்கும் காலமிது. இந்த வாசம் இன்னும் இன்னுமாய்த் தொடரட்டும். 

 - பரிவை சே. குமார்

செவ்வாய், 26 நவம்பர், 2019

அனுபவக் குறிப்புகள் - வாசிப்பு (அகல் கட்டுரை)

அகல் மின்னிதழ் எப்போது என்னிடம் கட்டுரைக்கான களத்தை மட்டுமே காட்டும். சிறுகதையை விட கட்டுரைகள் அதிகம் எழுதியது அங்கு மட்டுமே. அது ஏனோ தெரியவில்லை நண்பர் சத்யா, 'ஜி அடுத்த இதழுக்கு ஒரு கட்டுரை எழுதுங்களேன்' என்றுதான் முகனூல் அரட்டையில் சொல்வார். அப்படித்தான் தொடர்ந்து கட்டுரைகளாய் அகலில் மட்டும். எனக்கே ஆச்சர்யமாக இருக்கும்... கதைகள் என்றால் ஒகே... கட்டுரை என்னும் போது கொஞ்சம் யோசிப்பேன். இந்த முறை கட்டுரை எழுதி அனுப்பியதும் வாசித்துவிட்டு இப்படி முகனூல் அரட்டையில் சொல்லியிருந்தார். 

'கட்டுரை படிச்சுட்டேன் அற்புதம் ஜி உங்க கட்டுரைகளில் இது தான் டாப். ஆரம்ப கட்ட எழுத்திலிருந்து வேகுவா மெருகேறி சிறப்பா எழுதி இருக்கீங்க...தொடர்ந்து கலக்குங்க ஜி'

நன்றி சத்யா.

சந்தோஷமாக உணர்ந்த தருணம் அது. இன்று அகலில் வெளியாகியிருக்கும் என் கட்டுரை உங்கள் வாசிப்புக்காக.

Image result for வாசிப்பு
வாசிப்பு
வாசிப்பு என்பது ஒரு சுகானுபவம்தானே..?

வாசிப்புக்கும் எனக்கும் இடையே மிகப்பெரிய தூரம் இருந்தது... அது படிக்கும் காலம் முதல் இப்போது வரை ஏற்ற இறங்கங்களுடன் நகர்ந்தாலும்... பெரும்பாலும் தூரமாகவேதான் இருந்து வந்தது... சமீபத்தில்தான் சற்று பக்கத்தில் வந்திருக்கிறது என்பது கூட மகிழ்வான விஷயம்தானே.

பள்ளியில் படிக்கும் போது வீட்டில் அம்மாவின் விருப்பமாய் 'ராணி' மட்டுமே வாங்கப்படும். செவ்வாய்க்கிழமை கடைகளுக்கு வந்ததும் வாங்கி வர வேண்டும். அதில் அட்டை டூ அட்டை எல்லாரும் வாசிப்போம். சின்னம்மா வீட்டில் ராணி காமிக்ஸ், முத்து காமிக்ஸ், அம்புலி மாமா முதல் வாராந்திர, மாதப் பத்திரிக்கைகள் நாவல்கள் எல்லாம் வாங்குவார்கள். அங்கு சென்றால் புத்தகங்கள் அள்ளி வரலாம் என்பதால் இரு ஊருக்கும் இடையில் இருக்கும் கண்மாயைக் கடந்து சென்று புத்தக மூட்டையுடன் திரும்பி வருவோம். அப்போதுதான் க்ரைம், பாக்கெட் நாவல்களின் தீவிர வாசிப்பாளன் ஆனது.
Picture
கல்லூரியில் படித்தபோது தமிழ்த்துறையோடு சிறிதான தொடர்பு இருந்ததாலும் நண்பன் முருகன் தழித்துறையில் படித்ததாலும் பழனி ஐயாவுடனான நட்பு, உறவாய் மாறி அவரின் வீட்டுக்குள் அழைத்துச் செல்ல, அங்குதான் பெரிய பெரிய புத்தகங்களாய் எடுத்து வாசிக்க ஆரம்பித்தேன். ஐயா இருந்தால் பேச்சு பல நல்ல விஷயங்களுக்குள் நுழைந்து பயணிக்கும்... அவர் இல்லைன்னா ஒரு பெருங்கூட்டத்தின் அரட்டைதான் அங்கு நிறைந்திருக்கும்... எல்லாருக்கும் காபி, சாப்பாடென அம்மாதான் வேலை பார்த்துக் கொண்டிருப்பார்... என்ன கூட்டம் இங்கே... ஐயா இல்லை போங்க என்று ஒரு வார்த்தை எப்போதும் அவர் வாயில் இருந்து வந்ததேயில்லை... என் பிள்ளைகள் என்றுதான் சொல்வார். ஐயா இருந்தாலும் இல்லையென்றாலும் உபசரிப்பு ஒன்றுதான்... அதில் எப்போதும் மாற்றமிருக்காது.

வீடெங்கும் நிறைந்து கிடக்கும் புத்தகத்தில் எதையும் எடுத்துப் படிக்கும் உரிமை எங்களுக்கு இருந்தது... நல்ல புத்தகமெனில் ஐயாவே இதை வாசிங்க என்று சொல்லிக் கொடுப்பார். சில நேரங்களில் நமக்கே நமக்காகவும் அந்தப் புத்தகத்தைக் கொடுத்துவிடுவார். இந்த வாசிப்பின் நீட்சியாய் கல்லூரி நூலகத்தில் பாடப்புத்தகம் தவிர்த்து சுஜாதா, பாலகுமாரன், ஜெயகாந்தன் என புத்தகங்களை எடுத்து வாசிக்கவும் முடிந்தது. தோழி சுபஸ்ரீ கல்லூரி நூலகத்தில் உணவு இடைவேளை மற்றும் ஆசிரியர் வராத பாடவேளைகளில் தன்னார்வ சேவை செய்ததால் விருப்பப்பட்ட புத்தகத்தைச் சொன்னால் அவர் எடுத்துக் கொடுப்பார். வாசித்துவிட்டு அவரிடம் திருப்பிக் கொடுத்தால் அடுத்த புத்தகம் வரும்.

அதன் பின்னான நாட்களில் வாசிப்பு என்பது மீண்டும் வெகு தூரமாகிப் போனது... பெரும்பாலும் வேலை, வீடு எனச் சென்னையில் வாழ்க்கை நகர்ந்து செல்ல, எழுத்தும் வாசிப்பும் சொல்லாமல் கொள்ளாமல் இனிதே காணாமல் போனது, அமீரகம் வந்த பின்னும் வாசிப்பிலும் எழுதுவதிலும் நாட்டமில்லை... ஏன் வாழ்க்கையிலும் கூட நாட்டமில்லாமலே இருந்தது.

கோவில்களில் தினசரி பூஜை எப்படி நேராநேரத்துக்கு நடக்குமோ அதுபோலானது வாழ்க்கை... அதிகாலை விழிப்பு... குளியல்... அலுவலகம்... மதிய உணவு உண்ணக்கூட அதிக நேரம் எடுத்துக் கொள்ள முடியாத வேலைப்பளு... மாலை அறைக்குத் திரும்புதல்... ஊருக்குப் பேசுதல்... பெரும்பாலும் வருத்தத்தை மட்டுமே சுமக்க வைக்கும் பேச்சு... )வலிகளை இறக்கி வைக்க முடியாமல் வருத்தங்களைக் கூடுதலாய்ச் சுமக்க மட்டுமே முடிந்த வெளிநாட்டு வாழ்க்கையில் எப்போது நிம்மதியான பேச்சுக் கிடைக்கும்) சமையல்... சாப்பாடு... மனசை ஆசுவாசப்படுத்த பாடல்கள் அல்லது படம்... உறக்கம்... மீண்டும் அதிகாலை விழிப்பு... என தினசரி வாழ்க்கை கோவில் பூஜை நேரம்போல சுருங்கிப் போனது.

வெள்ளிக்கிழமை என்பது விடுமுறை தினமான போதும் இதுநாள் வரை அதிக நேரம் தூங்க வேண்டுமென மற்றவர்களைப் போல் நினைத்ததேயில்லை... அதே அதிகாலை விழிப்பு... குளியல் என்பது இப்போதுவரை அப்படியே... சில நாட்கள் மற்றவர்களின் தூக்கம் கெடக்கூடாது என்பதால் மிஞ்சிப்போனால் எழாமல்.... தூங்காமல்... அரைமணி அல்லது ஒரு மணி நேரம் படுக்கையில் கிடக்க வேண்டிய சூழல்...  இருப்பினும் வாட்ஸப்பும் முகநூலும் முந்திக் கொள்ள, அவற்றின் பின்னே படுத்தபடி நகர ஆரம்பித்து விடுகிறேன்.

இங்கு வியாழன் இரவு முதல் சனி விடுமுறை என்றால் சனி இரவு வரை கொண்டாட்டம்தான்... குடி மனிதர்களைக் குடித்து மகிழும் நேரம் அது... ரசித்துக் குடிக்க ஆரம்பித்து அவர்களை குடி ரசித்துக் குடிக்கும் வரை தொடரும்... ஒரு வாரத்துக்கான சரக்கை ஒரே நாளில் குடித்து... ஒட்டகத்தைப் போல சேமித்து வைத்து அடுத்த வாரம் முழுவதும் ஓட்ட வேண்டும் என்பதாய்... குடித்துக் குடித்துக் குடித்துக் கொண்டேயிருப்பார்கள்... அரசியலும் அந்நிய நாட்டு நிகழ்வுகளும் பேச்சாய் ஆரம்பித்து சண்டையாய் முடியும்... சில நேரங்களில் அடிதடி, கத்துக்குத்து, கொலை வரை செல்லும். 

அதிகமான குடியால் எழ முடியாமல்... நடக்க முடியாமல்... போட்டது போட்டபடி அதே இடத்தில் படுத்தாலும் மறுநாள் காலை மணக்க மணக்கக் குளித்து மறுபடியும் குடிக்க ஆரம்பிப்பார்கள். இது ஆறுதலில்லாத வாழ்க்கை... குடி ஒன்றே வலி போக்கும் மருந்தென நினைத்துத் தன்னையே அழித்துக் கொள்பவர்கள் இங்கே 90%க்கு மேல்தான். இந்த வாழ்க்கை குறித்து நிறைய எழுதலாம்... இது வாசிப்புக்கான பகிர்வு என்பதால் மாறிய குடிகாரப்பாதையிலிருந்து மறுபடியும் வாசிப்பு என்னும் வளமான பாதைக்குள் நுழைவோம்.

அமீரகம் வந்த பின் வாழ்க்கை மீதான வெறுப்பு அதீதமாய் துளிர்விட்ட தருணத்தில்தான் வலைப்பூ (BLOG) அறிமுகமானது. அதில் எழுத ஆரம்பித்த பின்தான் சிறுகதைகள், கவிதைகள் எழுதுவதை மீண்டும் தூசிதட்ட ஆரம்பித்தேன்... உண்மையிலேயே மனசுக்குப் பிடித்த, வாழ்க்கைக் கதைகள் இங்குதான் எழுத்தாய் மலர்ந்தன... தனிமை இந்த எழுத்தில் தன்னிறைவு பெற ஆரம்பித்தது. கிராமத்து மனிதர்கள் என் கதைக்குள் வலம் வந்தார்கள்... வாழ்க்கை மீதான வெறுப்பு, குடும்பத்தைப் பிரிந்த விரக்தி, அறை... அலுவலகம் என்ற வழக்கமான வாழ்க்கை என எல்லாவற்றையும் இந்த மனிதர்கள்தான் மறக்கச் செய்து எழுத்தின் மூலம் கொஞ்சமாய் எழ வைத்தார்கள். அப்போதும் வாசிப்பு என்பது தூரமாகவே இருந்தது ஆனால் சினிமா மொழி கடந்து இன்னும் நெருக்கமானது. இணையத்தில் புதிய படங்களின் வருகை அதிகரிக்க அதிகரிக்க நானும் அதிகமாய் சினிமா பார்த்தேன்.

வலைப்பூ வழி நட்பான சகோதரர்கள் தமிழ்வாசி பிரகாஷ், தினேஷ் குமார் மற்றும் நிஷாந்தினி அக்கா மூவரும் புத்தக வாசிப்பில் இறங்க, அவர்களின் பின்னத்தி ஏராய் நானும் இறங்கினேன். பெரும்பாலும் பிடிஎப் பைல்களாகத்தான் அவர்களிடமிருந்தும் மற்ற நண்பர்களிடமிருந்தும் பெற்றேன். வேலைக்குப் போக, வர பேருந்தில் 40 நிமிடத்துக்கு மேலாகும் என்பதால் அதுவே வாசிக்கும் நேரமானது.

கல்கியின் பொன்னியின் செல்வனின் ஆரம்பித்து உடையார், கடல்புறா என பாலகுமார், சாண்டில்யனில் பயணித்து ஏறக்குறைய சாண்டில்யனின் எல்லா வரலாற்று நாவல்களையும் வாசித்து முடித்து, அதைப் பற்றி விவாதித்தல்... வலைப்பூவில் எழுதுதல் என சில மாதங்கள் வாசிப்பின் பின்னே நகர்ந்தது... மகிழம்பூப் போல... மல்லிகைப்பூப் போல... வாசிப்பு அத்தனை வாசமாய் இருந்தது... உண்மையில் வாசிப்பு மகிழ்வைக் கொடுத்தது... வலிகளை மெல்லக் குறைத்தது... குறிப்பாக எதற்கெடுத்தாலும் கோபப்படும் குணம் வாசிப்புக்குள் மூழ்கி மெல்லக் கரைந்து போனதும்

பின்னர் ஒரு தொய்வு... வாசிப்பு மீண்டும் தூரமாய்த் தள்ளி நிற்க ஆரம்பித்தது. அமீரக எழுத்தாளர் குழுமத்துக்குள் இணைந்த போது மீண்டும் வாசிப்புக்குள்... பிடிஎப், புத்தகமெனக் கலந்து கட்டி வாசிக்க ஆரம்பித்தோம்... ஆம் அதிகமான வாசிப்பாளர்கள் ஒரு இடத்தில் இருப்பதும் வசதிதான்... இதைப்படி.. அதைப்படி எனச் சொல்லிச் சொல்லி புத்தகங்கள் கிடைத்தன... வாசிப்பு நிறைய நட்பைக் கொடுத்தது... வாசிப்பு நிறைய விஷயங்களை அள்ளிக் கொடுத்தது... ஒவ்வொரு எழுத்தும் ஒவ்வொரு விதமாய்... எத்தனை கதைகள்... எவ்வளவு தகவல்கள்... என்ன மாதிரியான எழுத்துக்கள்... வாசிப்பு தொடரத் தொடர ஒவ்வொருவரின் எழுத்தும் வெவ்வேறு விதமாய் மனசுக்குள் தங்கியது. மீண்டும் வாசிப்பில் களம் காண நண்பர்களே முக்கியக் காரணமாக அமைந்தார்கள்.

கிராமத்துக் கதைகள் என்றால் அதனோடு ஒன்றி வாசித்துப் பழகியவன் வரலாற்றுப் புதினங்களையும் ரசித்து வாசிக்க ஆரம்பித்தவன் நமக்கு சரிவராதென்றாலும் தகவல்கள் நிறைந்த நாவல்களையும் வாசிக்க ஆரம்பித்திருக்கிறேன். என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்..

தங்களின் எழுத்துக்காக அந்தந்த இடங்களுக்கே சென்று வருடக் கணக்கில் தங்கி, விவரங்களைச் சேகரித்து எழுதப்பட்ட நாவல்களை வாசிக்கும் போது ஒரு நாவலுக்காக இத்தனை மெனக்கெடலா என்று ஆச்சர்யமும் அவர்கள் மீதான மரியாதையும் கூடிப் போனது.

சிலர் வரலாறுகளை ஆராய்ந்து... தீவிரமாய்த் தேடிப் படித்து... விவரணைகளுடன் எழுதியிருப்பதை வாசிக்கும் போது என்னால் எழுத முடியும் என்பதைவிட என்னால் இத்தனை விவரங்களுடன் எழுத முடியும் என்று காட்டும் அவர்களின் திறமை மீதும் தனி மரியாதை உண்டாகியது.

சிலரோ இணையம் சொல்வதை உண்மையென நம்பும் விதமாய் புனைவு எழுதுகிறார்கள்... சிலரின் கதைகள் காமத்துக்குள் காவிரியாய்ப் பாய்ந்து வெளிவருகிறது... சிலரோ வாழ்க்கையைப் படம்பிடித்து எளிய மனிதர்களை நம் கண்முன்னே நடமாட விடுகிறார்கள்... எத்தனை வண்ணமான எழுத்துக்களை இப்போதெல்லாம் வாசிக்க முடிகிறது... இதையெல்லாம் கொடுத்தது எழுத்து மூலம் கிடைத்த நட்புக்களே.

இரா.முருகவேளின் முகிலினி வாசித்தபோது பஞ்சாலையும் அதனோடு தொடர்புடைய மனிதர்களுமெனச் சுற்றி வந்த மனசு, கரன் கார்க்கியின் மரப்பாலம் வாசித்தபோது இரண்டாம் உலகப்போர் காலகட்டத்துக்குள் நகர்ந்து சயாம் - பர்மா மரப்பாலம் கட்டும் பணியில் ஜப்பானிடம் மாட்டிய மக்கள்பட்ட துயரக்கடலுக்குள் நீந்திய மனசை, முஹம்மது யூசுஃப்பின் மணல் பூத்த காடு சௌதிக்குள் கைபிடித்து அழைத்துச் சென்று ஒவ்வொரு இடமாக வரலாற்றுச் செய்திகளுடன் சுற்றிக் காட்டி அமைதிப்படுத்தியது... ஆசுவாசப்படுத்தியது.

சோளகர் தொட்டி வீரப்பன் வேட்டை என வனக் காவலர்கள் பழங்குடி மக்களைச் சித்திரவதை செய்ததை, அவர்கள் அனுபவித்த நரகவேதனையை நெஞ்சுக்குள் நிறுத்தி இன்னும் என்னை அதிலிருந்து மீளமுடியாமல் வைத்திருக்கிறது... உண்மையில் இந்த நாவலுக்காக அந்த மக்களோடு சில காலம் தங்கியிருந்த ச.பாலமுருகன் அவர்கள் பாராட்டுக்குரியவர். வீரப்பன் வேட்டை மலைவாழ் பழங்குடி மக்களை என்னவெல்லாம் செய்தது என்ற உண்மையை உரக்கச் சொன்ன ஒரே நாவல் இது. இன்னும் ஒருமுறை படிக்க முடியாத வலி என்றாலும் மீண்டும் அந்த மக்களுடன் வலம் வர வேண்டும் என்ற ஆசையிருக்கத்தான் செய்கிறது. நான் வாசித்தவரை என்னை அதிகம் பாதித்த நாவல் இது. இன்னும் மீளமுடியவில்லை... மாதியும் சித்தியும் இன்னமும் கண் முன்னே கதறுகிறார்கள்.

சி.சு.செல்லப்பாவின் வாடிவாசல்... மிக அற்புதமான புத்தகம்... சல்லிக்கட்டு நடக்கும் இடம் மட்டுமே கதைக்களம்... மாடும் அதைப் பிடிப்பவனுமே பிரதானம்... எத்தனை விவரிப்பு... என்ன அழகான காட்சிப்படுத்துதல்... சிறிய நாவல் என்ற போதும் சிறப்பான நாவலாய்... இப்படி ஒரு நாவல் எழுதினால் என்ன என்று தோன்ற வைத்த எழுத்து... குறிப்பாக வட்டார வழக்கில்தான் முழு நாவலும் நகர்கிறது என்றாலும் நம்மை வாடிவாசலில் கட்டிப் போட்டு விடுகிறது என்பதே உண்மை.

சில நாள் முன்பாக முஹம்பது யூசுஃப்பின் இரண்டாம் நாவலான கடற்காகம் வாசித்தேன்... டெல்மா தீவுக்குச் சென்று வந்திருக்கிறேன் என்றாலும் கதையின் மனிதர்களும் அவர்கள் பேசும் இனப்பிரிவினை, சிரியா யுத்தமென வாசிக்கும் போது நிறையத் தகவல்களைத் தெரிந்து கொள்ள முடிகிறது. இந்த நாவலில் எழுத்தாளரின் எழுத்துநடை மெருகேறியிருக்கிறது.

தகவலைச் சொல்வதிலும் ஒரு கலை இருக்கத்தான் செய்கிறது. கதையின் போக்கில் சொல்லத் தெரிந்தவர்களின் எழுத்து வீரியம் பெற்று நம் முன்னே உயர்ந்து நிற்கிறது. தகவல்களுக்காக அதிக சிரத்தை எடுக்கும் போது கதை மாந்தர்களுக்குப் பதில் எழுத்தாளனே நம்மிடம் நேரடியாகச் சொல்வது போல் மாறிவிடும் போது அதன் வீரியம் குறைந்து உயரம் தடைபடுகிறது. எது எப்படியென்றாலும் அந்த எழுத்தாளர்களின் தேடுதலுக்காவேனும் அவர்களைக் கட்டி அணைத்து அன்பைப் பரிமாறலாம்... தப்பேயில்லை... அந்தத் தேடுதலில் 1% கூட என்னிடம் இல்லை... நான் தேடுவதெல்லாம் கிராமத்து மனிதர்களின் மனசை மட்டுமே. அப்படியான எழுத்துத்தான் வாய்த்திருக்கிறது.

கலைஞரின் தென்பாண்டிச் சிங்கம் வாசித்த போது அந்த எழுத்து என்னைத் தொடர்ந்து வாசி என ஈர்த்தது. கலைஞரைப் பிடிக்காது என்றாலும் அந்தத் தமிழ் என்னமாய்க் கொஞ்சி விளையாண்டிருக்கிறது... வார்த்தை விளையாட்டுக்களும் அதில் அடக்கம். சிறப்பான தமிழ் புத்தகமும் முழுவதும் விரவிக் கிடந்தது. கலைஞரின் மற்ற நாவல்களையும் வாசிக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டியது.

விதவிதமான கதைகள்.... வித்தியாசமான எழுத்துக்கள்... பலதரப்பட்ட கதைக்களன்கள் என வாசிப்பின் பாதை நீண்டு கொண்டே போனாலும் வாசிப்பின் மூலம் நம் பார்வை விரிந்து கொண்டு போக ஆரம்பிக்கிறது... நிறையத் தேடல்களை நம்முள்ளே பதியம் போட்டு வைக்கிறது... அடுத்து என்ன... அடுத்து என்ன... என வாசிப்பின் வாசலைத் திறந்து வைக்கிறது. நம் எழுத்திலும் நிறைய மாற்றங்களைக் கொண்டு வரத் தோன்றுகிறது.

வாசிப்பு நிறையக் கற்றுக் கொடுக்கிறது... இப்போதெல்லாம் எதாவது வாசிக்க வேண்டும் என்று தோன்ற ஆரம்பித்து விடுகிறது. விடுமுறை தினங்களில் சினிமா என்னிடமிருந்து விலகி, வாசிக்கச் சொல்கிறது... சில புத்தகங்கள் எடுத்ததும் முடித்தால்தான் கையிலிருந்து விலகுவேன் என்கிறது. வாசிப்பை நான் நேசிக்க ஆரம்பித்திருக்கிறேன் என்பதை விட வாசிப்பு என்னை நேசிக்க மட்டுமில்லாமல் இழுத்து அணைத்துக் கொண்டு விட்டது. அந்த அணைப்புக்குள் பல புத்தகங்களை மாறி மாறி வாசித்துக் கொண்டே இருக்கிறேன்.

வெக்கையின் அறுபது பக்கங்களைக் கடந்து காட்டுக்குள் திரிந்தபடி, பெயரிடப்படாத புத்தகத்தின் ஆறாவது கட்டுரையில் அமிழ்ந்து கிடக்கிறேன்... காடோடியின் பின்னே நூறு பக்கங்களைத் தாண்டி ஆற்றங்கரையில் நின்று கொண்டிருக்கிறேன் மரம் வெட்டச் செல்லும் மனிதர்களுடன்... இடையே நானும் எழுதிக் கொண்டிருக்கிறேன் கிராமத்து வெள்ளந்தி மனிதர்களின் கதையை...

வாசிப்பு உங்களின் பார்வையை விரிவாக்கும்... நிறைய கற்றுக் கொடுக்கும்...

வாசியுங்கள்... நிறைய... நிறைவாய்....

வாசிக்க ஆரம்பித்தால் அவ்வளவு சீக்கிரம் வெளியில் வந்துவிடமாட்டீர்கள்.

ஆம்... வாசிப்பு என்பது சுகானுபவம்தான்.

*******
அகலில் வாசித்து அங்கும் கருத்துச் சொல்லுங்க... உங்கள் கருத்தே அம்மின்னிதழை இன்னும் சிறப்பாக பயணிக்க வைக்கும்... அங்கிடப்போகும் கருத்துக்கு நன்றி.

-'பரிவை' சே.குமார்.

புதன், 4 ஜூலை, 2018

வாசிப்பனுபவம் : வேயன்னா - அகல் கட்டுரை

லைப்பக்கம் வந்து ரொம்ப நாளாச்சு... இப்ப எதுவும் எழுதுவதுமில்லை... நேரமில்லை என்ற பொய்யெல்லாம் இல்லை... பிரச்சினைகள் சூழ் வாழ்வில் எழுதுவதற்கான மனநிலை இல்லை. இனி வலைப்பக்கம் தொடருமா... தொடராதா தெரியாது... ஆனாலும் இதுவரை எழுதியவற்றையாவது தொடர்ந்து வலையில் வைத்திருக்க வேண்டும் என்பதால் பிரதிலிபி போட்டிகளில் கலந்து கொண்ட கதைகள். அகல் மின்னிதழ் சிறுகதைப் போட்டியில் தேர்வான கதை, அகலுக்கு எழுதிய கட்டுரை என கைவசமிருப்பவற்றை அவ்வப்போது பதிந்து வைக்கலாம் என்ற எண்ணம்.

கருத்து இடுவதில்லை... மறுமொழி இல்லை என்றெல்லாம் நினைப்பீர்கள் என்றால் மீண்டு(ம்) வரும் வரை அப்படித்தான் நகரும். சிலரின் வலைப்பக்கத்தை வாசித்துக் கொண்டுதான் இருக்கிறேன். தொடர்ந்து நட்பில் இருப்பேன்... நன்றி.

நட்புடன்
சே.குமார்.

மே மாத (வைகாசி மின்னிதழ்) அகலில் வெளியான கட்டுரை 'வேயன்னா' இங்கே...

குற்றப்பரம்பரை : வேயன்னா

ரு நாவலை வாசிக்கும் போது அதில் ஏதோ ஒரு கதாபாத்திரத்தின் பின்னே நாம் பயணிக்க ஆரம்பித்தால் அந்த நாவல் வாசிப்பு நிச்சயமாக நமக்கு ஒரு வித்தியாசமான சுவையைக் கொடுக்கும். அந்தச் சுவையை பொன்னியின் செல்வன் வாசிக்கும் போது வந்தியத்தேவனுடனும்... உடையார் வாசிக்கும் போது இராஜராஜனுடனும்... கடல்புறா வாசிக்கும் போது கருணாகரப் பல்லவனுடனும்... ஜலதீபத்தில் இதயச் சந்திரனுடனும்... யவனராணியில் இளஞ்செழியனுடனும்... சிவகாமியின் சபதத்தில் நரசிம்மவர்மப் பல்லவனுடனும் பயணிக்கும் போது உணர்ந்தேன்... கதைகளைச் சுவைத்தேன். ஒரு சில நாவல்களில் எந்தக் கதாபாத்திரமும் நம்முடன் ஒட்டாது. அப்படியான நாவல்கள் வாசிப்புக்கு அயற்சியைக் கொடுக்கும். அப்படி ஒரு நாவலை சமீபத்தில் வாசித்தேன். அதன் பின் வாசிக்க ஆரம்பித்த குற்றப் பரம்பரையில் ஆரம்பம் முதலே ஒருவரின் பின்னால் ஓடிக் கொண்டிருந்தேன்.

அவர்தான் வேலுச்சாமி என்ற வீயன்னா என்ற வேயன்னா.

நண்பர்கள் எல்லாம் சிலாகித்துப் பாராட்டிப் பேசிய நாவல் குற்றப்பரம்பரை. ரொம்ப நாளாகவே வாசிக்க வேண்டும் என நினைத்துக் கொண்டிருந்த நாவல். நண்பர்களால் சமீபத்தில் வாசிக்கக் கிடைத்தது. வாசிக்க ஆரம்பித்து ஒரே நாளில் முடித்தேன்.

“பற்றிக் கொண்டால் பல உயிர்களைக் காவு கேட்கும் தென் மாவட்டத்து சாதிக் கலவரங்கள். தமிழ்நாட்டின் சரித்திரக் கேடு” என்ற வரிகளே நாவலாசிரியரின் முன்னுரையின் முதல் வரிகளாய்... அது முற்றிலும் உண்மை. அதேபோல் பேரன்பும் பெருங்கோபமும் கொண்டு எழுதத் துவங்கினேன் என்றும் சொல்லியிருக்கிறார். அந்த பேரன்பையும் பெருங்கோபத்தையும் வேயன்னாவின் பின்னால் பயணிக்கும் போது உணரலாம்.

ஊருக்கு ஒரு மரியாதைக்குரிய மனிதர் இருப்பார் இந்த வேயன்னாவைப் போல... ஊருக்கு ஒரு பிரச்சினைக்குரிய மனிதர் இருப்பார் பெருநாழி பச்சமுத்துவைப் போல...  இது எல்லாக் கிராமங்களிலும் இருக்கும். எங்கள் ஊரில் கூட இது போன்ற மனிதர்களை பார்த்து வளர்ந்திருக்கிறோம்... பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

எல்லா ஊரிலும் நல்லது செய்ய ஒருவன் இருந்தால் கெடுதல் செய்வதற்கென ஒருவன் இருப்பான். அவனுக்குப் பத்துப் பேர் என்றால் இவனுக்குப் பத்துப் பேர் இருக்கத்தான் செய்வார்கள். இதனாலேயே ஊர் நல்லது கெட்டது எல்லாவற்றிலும் ரெண்டு பட்டுக்கிடக்கும். ஊரில் ஒரு பிரச்சினை என்றால் ஊர்ப்பெரியவர் தலைமையில் ஊர்க்கூட்டம் நடக்கும். ஊர்க்கூட்டத்தில் விதண்டாவாதம் செய்வதே பச்சமுத்து போன்றவர்களின் வேலை. இது குற்றப்பரம்பரையில் இல்லை என்றாலும் கிராமங்களில் வழிவழியாக வந்துகொண்டுதான் இருக்கிறது.

எந்த ஒரு பிரச்சினை என்றாலும் ஊர்த் தலைவர் தலைமையில் ஊர்க்கூட்டம் கூட்டப்பட்டு அந்தப் பிரச்சினைக்கு ஒரு முடிவு எடுக்கப்படும். ஊர்க்கூட்டத்தில் பெண்கள் கலந்து கொள்ளக்கூடாது என்பதுதான் விதி ஆனால் அந்த விதியும் சிலகாலமாக ஆம்பளை இல்லாத வீட்டில் பொம்பளை கலந்துக்கலாம் என மாற்றப்பட்டுவிட்டது. ஊர்க்கூட்டத்தில் முடிவு எடுக்க முடியாத பெரும் பிரச்சினைகள் நாட்டுக் கூட்டத்துக்குச் செல்லும். பல கிராமங்களை உள்ளடக்கியது ஒரு நாடு. கிராமத் தலைவர்கள் எல்லாம் நாட்டுத் தலைவருடன் அமர்ந்து பிரச்சினையை பற்றிப் பேசி, பெரும்பாலும் நல்லதொரு முடிவை எடுத்து விடுவார்கள். இங்கும் முடியாதபட்சத்தில் நீதிமன்றம் நோக்கிச் செல்வார்கள். இந்த நடைமுறை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக மாறிவிட்டது. இப்ப சின்னப் பிரச்சினைகள் என்றாலும் காவல் நிலைத்திலும் நீதிமன்றத்திலும்தான் நிற்கிறார்கள். இந்த ஊர்க்கூட்டம், நாட்டுக்கூட்டம் எல்லாம் எங்க பக்கம் இன்னும் உயிர்ப்போடுதான் என்று சொல்லிக் கொள்ளலாம் ஆனால் காவல் நிலையங்களே இப்போது பிரதானமாகிவிட்டது.

சரி இனி வேயன்னாவோட பயணிக்கலாம்.

தங்கள் வாழ்க்கைக்காக... குறிப்பாக மூன்று வேளை சோற்றுக்காக திருடும் மக்கள் அவர்கள். தங்களை அழிக்கத் துடிக்கும் ஆங்கிலேயர்களிடமிருந்து தப்பித்து உயிர் பிழைக்க காட்டுக்குள் குழந்தை குட்டிகள், நாய்கள், மாடுகள் என எல்லாவற்றோடும்  ஓடும் மக்கள் பலரை இழந்து சம்பங்கி நதிக்குள் விழுந்து அதன் போக்கில் இழுத்துச் செல்லப்பட்டு கரையொதுங்கி கிடக்க, அந்தக் காட்டுக்குள் மாடு மேய்க்க வரும் பெரும்பச்சேரி வட்டத்துரை என்னும் அரிஜனச் சிறுவனால் தங்கள் ஊருக்கு அருகில் சுற்றிலும் வேலிக்கருவை சூழ்ந்த பகுதியில் தங்க வைக்கப்படுகிறார்கள்.

அதையே கொம்பூதி என்ற பெயருடன் தங்கள் ஊராக மாற்றிக் கொள்ளும் அக்கள்ளர்கள். அங்கிருந்தபடியே தங்கள் திருட்டுத் தொழிலைச் செய்ய ஆரம்பிக்கிறார்கள். அவர்களின் தலைவன் தான் வேலுச்சாமி. உயிருக்குப் பயந்து வரும் போது மூத்தமகன் சேதுவைத் தொலைத்து விட்டவரின் இரண்டாவது மகன் வில்லாயுதம். அப்பனுக்குப் பின் அந்த இடத்தில் இவந்தான் தலைவன் என்பதை ஆரம்பம் முதலே அக்கூட்டம் சொல்லி வருகிறது. நாம் செயல் எப்படியும் தலைவராகிவிடுவார் என்றும் முதல்வர் ஆகிவிடுவார் என்றும் கனவு காண்பதைப் போல்தான்... வில்லாயுதமாச்சும் தலைமைப் பண்புக்கு சிறந்தவனாகிறானா என்பதை முடிவில் பார்க்கலாம். இப்ப நாம் பயணிக்க வேண்டியது வேலய்யாவோடுதானே...

தங்களைப் பார்த்ததும் தோளில் போட்டிருக்கும் துண்டை எடுத்து கக்கத்தில் வைத்துக் கொண்டு 'கும்புடுறேன் சாமி' என்று சொல்லிச் செல்ல வேண்டும் என்ற சட்டங்கள் இன்று பல கிராமங்களில் இருக்க, இக்கதையின் காலகட்டத்தில் நீயும் நானும் ஒண்ணுதாம்லே நம்ம அர்ணாக்கயிரை அவுத்துட்டா நமக்குள்ள என்னலே வித்தியாசமிருக்கு என வாழ்ந்திருக்கிறார் இந்த வேயன்னா. இன்று அரசியல் காரணிகளுக்காகவே இந்த இரு சாதிகளும் பிரித்து வைக்கப்பட்டிருக்கின்றன. எப்படிப் பிரித்தாள வெள்ளையரும் அவருடன் சேர்ந்த பெருநாழிக் கிராமத்தார்களும் முயற்சிக்கிறார்கள் என்பதை கதையை வாசிக்கும் போது அறியலாம்.

தங்களுக்கு வாழ்வளிக்க முக்கியக் காரணியாய் இருந்த பெரும்பச்சேரி வட்டத்துரையை தன் மகனாகத்தான் பார்க்கிறார். சாதி என்னும் சகதியை தன்னுள் அப்பிக் கொள்ளாத மனிதன் வேலய்யா... வட்டத்துரையுடன் சரிசமமாக வீட்டுக்குள் அமர்ந்து சாப்பிடுகிறார். தோளில் கை போட்டு நீயும் எம்புள்ளதாம்லே என அணைத்துக் கொள்கிறார். வட்டத்துரையைக் காணோமென்றால் தவிக்கிறார். தன் மகன் வில்லாயுதத்தைக் கூட அருகில் வைத்துக் கொள்ள விரும்பாத மனிதர், வட்டத்துரை இல்லாது எங்கும் செல்ல விரும்பாத மனிதராகவே வாழ்கிறார்.
கொம்பூதி கிராமம் மட்டுமல்ல, பெரும்பச்சேரி கிராமமும் இவர் மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறது. அதற்காக நாட்டமை பாதம் பட்டால் என்றோ, எஜமான் காலடி மண்ணெடுத்து என்றோ பாடவில்லை. மரியாதையை மரியாதையாகவே செய்கிறார்கள். அவரும் அவர்களை மதிக்கிறார்... அவர்களுடன் பேசி மகிழ்கிறார். பெருநாழி உள்ளிட்ட மற்ற ஊர்களில் இவர் மீது பயம் கலந்த மரியாதையே இருக்கிறது... அதுவும் திருட்டுக் கூட்டத் தலைவன் என்ற பயம்.

தங்கள் வீட்டைப் பெரிதாக கட்ட வேண்டும்... பெண்கள் எல்லாம் நகைகளைப் போட்டு அழகு பார்க்க வேண்டும் என்பதெல்லாம் அவர்களின் எண்ணமில்லை. மண் குடிசைதான் அவர்களின் வீடு... திருடும் பொருள்கள் எல்லாம் பெருநாழியைச் சேர்ந்த பச்சமுத்துவிடம் கொடுக்கிறார்கள். அவரும் இவர்களுக்கு தவசம் உள்ளிட்ட தானியங்களைக் கொடுக்கிறார். அதை வாங்கி தங்களுக்குள் பிரித்துக் கொண்டு சாப்பிடுகிறார்கள். அதுவே அவர்களுக்குப் போதுமானதாக இருக்கிறது. வேயன்னாவின் பேச்சுக்கு எதிர்ப்பேச்சு என்பது அந்த ஊரில் இல்லவே இல்லை... அவர் சொல்வதே வேதவாக்கு.

திருடப் போகும் முன்னர் தனது சொந்தத் தங்கை உள்ளிட்ட பெண்களை ஆட்டுக்கறி கொண்டு செல்வது போல் போகவிட்டு யார் வீட்டில் கொள்ளை அடிக்க நினைக்கிறார்களோ அவர் வீட்டில் எந்த அறையில் நகைப்பெட்டி இருக்கிறது என்பதை அறிந்து வரச் செய்து அதன் பின் இரவில் ஊர்க் கோவிலின் முன் நின்று தனது தாய் கூழானிக்கிழவி... இந்தக் கிழவி செமக் கிழவி... கதையை வாசித்தால் இது பண்ணுற அட்டகாசத்தையும் இறுதியில் அது நம்மளை அழ வைப்பதையும் ஒரு சேரப் பருகலாம். இந்த மாதிரி ஆட்டம் போடுற அப்பத்தா ஊருக்கு ஒண்ணு இருக்கும். சுந்தர பாண்டியனில் வருகிற அப்பத்தாக்கள் மாதிரி ரகளையான கிழவி. அது சாமி கும்பிட்டு திருமண் எடுத்துப் பூசிவிட்ட பின்தான் திருடக் கிளம்புகிறார்கள். இரவில்தான் இவர்களின் வேட்டை. சரியான இடத்தில் ஓட்டையிட்டு ஆக்காட்டி குருவியை உள்ளே விட்டு வேவு பார்த்து அதன் பின்னே வேலையைக் கச்சிதமாக முடிக்கிறார்கள். எல்லாத்திலும் மூளை வேயன்னாதான்.

சுற்றுப்பட்டு எங்கிட்டும் உப்புத் தண்ணியாக இருக்க, பெருநாழியில் இருக்கும் கிணறு மட்டுமே நல்ல தண்ணீரைக் கொடுக்கிறது. பெருநாழிக் கிராமத்தில் கூலி வேலை செய்து பிழைப்பை நடத்தும் பெரும்பச்சேரி மக்களுக்கும் அதுதான் தாகம் தீர்க்கும் சாமி... அவர்கள் தங்களது வயல்களில் உழைத்தாலும் கீழ்சாதிக்காரர்கள்தானே... தீண்டாமை என்னும் தீயை மிகத் தீவிரமாக வளர்க்கும் பெருநாழி ஆண்களும் பெண்களும் பெரும்பச்சேரி பெண்கள் தண்ணீர் எடுக்க வந்தால் குடத்தை தள்ளி வைத்து விட்டு எட்ட நிற்க வேண்டும்.  தண்ணீர் எடுக்க வரும் பெருநாழிப் பெண்கள் ஒவ்வொருவரும் ஒரு வாளிதான் ஊற்றுவார்கள். எப்போது குடம் நிறைகிறதோ அதுவரை காத்திருக்க வேண்டும் என சட்டமியற்றி வைத்திருக்கிறார்கள். காத்திருக்கும் குடங்கள் அரைமணியிலும் நிறையலாம்... அரை நாளிலும் நிறையலாம்... பாவம் வெயில்ல காத்துக்கிடக்காளே என யாரும் ஒரு வாளி சேர்த்து ஊத்துவதில்லை. இந்தக் கிணறுதான் மிகப்பெரிய பிரச்சினைக்கு விதையாகிறது.

ஆம்... கைக்குழந்தைக்காரியான ராக்கு தண்ணியெடுக்கப் போகும் போது இந்த நேரத்தில் யாருமிருக்க மாட்டார்கள் எனப் போய் தானே தண்ணியெடுக்க, அவள் கணவன் துருவனைப் பிடித்து கொதிக்கும் எண்ணெய்க்குள் கிடக்கும் காசை எடுக்கச் சொல்லி, கையை வேக வைத்து உடம்பெல்லாம் சர்க்கரைப் பாகை ஊற்றி எறும்புகள் நிறைந்த மரத்தடியில் கட்டி வைத்து விடுகிறார்கள், கணவனைக் காணவில்லை என வேயன்னாவிடம் முறையீடு செய்ய, வட்டத்துரை இன்னும் சிலர் சகிதம் பெருநாழி சென்று அவனை மீட்பவர் நாளை முதல் பெரும்பச்சேரி சனம் அந்தக் கிணற்றில் தாங்களே நீர் எடுத்துக் கொள்வார்கள் எனச் சொல்லிச் செல்லும் வேயன்னா, மறுநாள் பெரும்பச்சேரி ஊரையே கூட்டிக் கொண்டு கிணற்றுக்கு வர, நீரில் மலம் நிறைந்து மிதக்கிறது. அவமானத்தால் கோபத்தில் தகிக்கும் வேயன்னாவால் பெருநாழி சந்தையும் வீடுகளும் அடித்து நொறுக்கப்பட்டு சந்தை தீக்கிரையாகிறது.

கள்ளர்களை ஒடுக்க பெருநாழியில் கச்சேரி (போலீஸ் நிலையம்) அமைக்கப்பட, முதலில் வரும் வெள்ளக்கார போலீசுக்கு வேயன்னா மீது மிகுந்த மரியாதை, வீயன்னா என அழைக்கும் அவர் கச்சேரிக்கு அழைத்துப் பேசுகிறார் ஆனால் மற்ற போலீசுக்கு வேயன்னாவை பிடித்து உள்ளே போட வேண்டும் என்பதுதான் ஆவா... நல்லவரான வெள்ளைக்கார அதிகாரியை தங்களுக்கு எதிரானவர் என வேயன்னாவின் ஆட்கள் விரட்டி விட, அடுத்து வருகிறவன் எப்படியும் வேயன்னாவை பிடிச்சி உள்ளே போடணும் என்ற எண்ணத்துடனேயே இருக்கிறான். அவனின் மேலதிகாரியும் வேயன்னாவை வீழ்த்த வேண்டும் என்பதில் குறியாய் இருக்கிறார்.அதற்குப் பெருநாழி ஆண்களும் துணை நிற்கிறார்கள்.

கிணற்றுப் பிரச்சினைக்குப் பின்னர் பெரும்பச்சேரி மக்களுக்கு பெருநாழியில் வேலை இல்லை என்றாகிப் போனதால் சாப்பாட்டுக்கே கஷ்டப்பட ஆரம்பிக்கிறார்கள். தங்களுக்கு வரும் தவசத்தை அவர்களுக்குக் கொடுக்கச் சொல்கிறார் வேயன்னா.

பெருநாழி ஆசாரியின் வீட்டில் தீப்பிடிக்க இது கொம்பூதி வேயன்னா வேலைதான் என்று ஊரே கூடிப் பேசிக் கொண்டிருக்க, வெள்ளைக்கார போலீசும் எரியும் தீயை வேடிக்கை பார்க்க, வயிற்றுப் பிள்ளைக்காரியான மனைவி தீக்குள் சிக்கியிருக்கும் நிலையில் ஆசாரி தவிச்சி நிற்க, புதிய வெள்ளை அதிகாரியின் அழைப்பை ஏற்று பெருநாழிக்கு கண்மாய் வழியாகச் செல்லும் வேயன்னாவும் வட்டத்துரையும் தீக்குள் புகுந்து ஆசாரி மனைவியைக் காப்பாற்றுகிறார்கள். அந்த வெள்ளை அதிகாரிக்கு வேயன்னா மீது மரியாதை ஏற்பட, அவர் கள்ளத் தொழிலை விட்டால் போதும் என்ற மனநிலைக்கு வருகிறார்.

தங்கள் தொழிலை விட்டுவிட்டு திருந்தி வாழ மாட்டோமென முடிவாய் இருப்பவர்களை எருது கட்டுக்கு மாடு பிடிக்க வரச்சொல்லி அழைத்துத் தந்திரமாக போலீஸ் வளைத்துப் பிடித்து அடிக்கிறது. கொம்பூதி ஆண்கள் எல்லாம் வேயன்னாவின் ஒற்றைப் பார்வைக்கு கட்டுப்பட்டு அத்தனை அடியையும் வாங்கிக் கொண்டிருக்க, அவர்களோடு நாமும் உக்கார்ந்திருக்கிறோம் போலீஸ் அடி வாங்கிக் கொண்டு.

அந்த கருத்த உரமேறிய தேகம்... வேல் கம்பு பிடித்து சிங்கமென நடக்கும் மனிதன்... பார்த்தவர் எல்லாம் பயந்து ஒதுங்கிச் செல்லும் மனிதன்... சுற்றிலும் இறுக்கப்பட்ட கயிற்று வலைக்குள் நொறுங்கி அமர்ந்திருக்கும் போது நாமும் அவர் அருகே கண்ணீரோடு அமர்ந்திருக்கிறோம்.

சிங்கத்தை சீண்டிட்டேல்ல.... அது இனி என்ன பண்ணுதுன்னு பாரு அப்படின்னு ஊரில் சொல்லுவாங்க... அப்படி போலீஸ் தீண்ட, அவர்களுக்கு பாடம் கற்பிக்க தன் இளைஞர் கூட்டத்துக்கு கண்ணைக் காட்டுகிறார் வேயன்னா. பெருநாழி ஆசாரி, வேயன்னா மீது கொண்ட மரியாதையின் காரணமாக தன் குழந்தைக்கு வேலுச்சாமி என பெயர் வைத்திருக்கிறார். அதே ஆசாரி போலீசாரையும் பெருநாழி குள்ள நரிகளையும் பலி வாங்க தன் வீட்டில் சட்டி சட்டியாக எண்ணெய் காய வைக்க உதவுகிறார். வித்தியாசமான திட்டத்தால் போலீசாரெல்லாம் எண்ணெய்க்குப் பலியாக, வேயன்னாவைப் பிடிக்க வந்த உயர் அதிகாரி வில்லாயுதத்தால் கொல்லப்படுகிறார்.

மூன்றாவதாக வரும் போலீஸ் அதிகாரி சேது. ஆம் வேயன்னா தப்பி வரும் போது தொலைத்த மகன்தான் அவன். ஐயாவை (அப்பாவை ஐயா என்றழைப்பது பெரும்பாலான கள்ளர்களின் வழக்கம்) தன் பாசத்தால் இனித் திருட மாட்டோம் என சத்தியம் செய்ய வைக்கிறான். அதன் பின் வேயன்னாவின் கொம்பூதி கிராமம் திருடச் செல்லவில்லை. திருடிய மொத்தத்தையும் வாங்கிக் கொண்டு சாப்பாட்டுக்குப் பொருள் அனுப்பும் பச்சமுத்து சும்மா இருப்பாரா என்ன...? அவரின் சித்து வேலைகளால் திருட்டு நடக்கிறது... பழி வேயன்னா மீது விழுகிறது. மகன் எதிரியாகிறான்... தன் கையால் அவரை அடித்து நொறுக்குகிறான்.

வயிற்றுப்பசியால் வாடினாலும் செய்த சத்தியத்தை மீறாத வேயன்னாவும் அவரின் கூட்டமும் வேறு வேலை எதுவும் செய்யத் தெரியாது தவித்துக் கொண்டிருக்கும் நிலையில் பெருநாழி பச்சமுத்துவின் திட்டத்தால் செய்தாத திருட்டுப் பழியையும் சுமந்து வருந்தித் திரிகிறது. வேல் கம்புடன் வீறாப்பாய் திரிந்த மனிதன் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கிறார் வேதனையுடன்.

இவர்களுக்கு எதிராக சிலர் கிளம்பினாலும் இவர்களோடு இருக்கும் பெரும்பச்சேரி மக்களைப் பிரித்தாலொழிய வேயன்னாவை வீழ்த்த முடியாது... அவர்களுக்குள் மூட்டி விட வேண்டும் என முடிவெடுத்து பெரும்பச்சேரி மக்களுக்கு பெருநாழியில் மீண்டும் வேலை அது இது என்ன இரு சாதிக்குள்ளும் சா'தீ'யை வளர்க்க ஆரம்பிக்கிறது கச்சேரியும் பெருநாழியும்.

இறுதியில் மிகப்பெரிய சண்டை... பெருநாழியில் பலர் கொல்லப்படுகிறார்கள். கொம்பூதிக்கு வரும் சேது தலைமையிலான போலீஸ் தண்ணீருக்குள் மூழ்கியிருந்து தாக்கும் ஆண்களை எல்லாம் சுட்டுத் தள்ள, மகன் சேதுவால் தண்ணீருக்குள் மறைந்திருக்கும் வேயன்னாவும் கொல்லப்படுகிறார்.

இப்படி மக்களுக்காக, மக்களோடு வாழுந்த மனிதரான வேயன்னாவுக்கு அங்கம்மா என்ற மனைவியும் அன்னமயிலு என்ற அழகிய மகளும் வில்லாயுதம், கூனிக்கிழவி, கணவனை இழந்த தங்கை, அவளின் மகன் ஊமைத்துரை, மகள் சிட்டு என ஏகப்பட்ட சொந்தங்கள் இருந்தாலும் இந்த மனிதர் திருடியது... வாழ்ந்தது... எல்லாமே தன்னை நம்பி வந்த மக்களுக்காகவும் தங்களைக் காப்பாற்றி இருக்க இடமளித்த பெரும்பச்சேரி மக்களுக்காகவும்தான். பெருநாழி பகைக்கிராமமாக இருந்தாலும் அங்கும் பலருக்கு உதவி செய்தவர்தான் இந்த வேயன்னா. மொத்தத்தில் ஊருக்காக வாழ்ந்த மனிதன் வேயன்னா... உறவுக்குக் கட்டுப்பட்டு உயிரை இழக்கிறார்.

கதையை முடித்து அதிலிருந்து வெளிவரும் போது வீரம் செறிந்த மனிதன்... தன்னை நம்பிய மக்களுக்காகவே தன் வாழ்வை அர்ப்பணித்த மனிதன்... என்றோ காணாமல் போன மகன் போலீசாய் வந்து வாங்கிய சத்தியத்தால் வறுமையில் வாடிய மனிதன்... தண்ணீருக்குள் இறந்து கிடக்க, வேயன்னா பின்னால் வட்டத்துரை போல் நடந்தும் ஓடியும் அவரின் கைகாட்டலுக்கு அடித்தும் ஆர்ப்பரித்தும் பயணித்த நாமும் கூழானிக்கிழவி, அன்னமயிலு, அங்கம்மா, சிட்டு, வட்டத்துரை... இன்னும் இன்னுமாய்க் கூடிநிற்கும் கொம்பூதி, பெரும்பச்சேரி மக்களுடன் மக்களாய் நின்று கொண்டிப்போம் கண்ணீருடன்.

இதுவே இந்த நாவலின் மிகப்பெரிய வெற்றி. வட்டார எழுத்தும் ஒரு பரம்பரையின் வாழ்வும் நம்மை ஈர்த்துக் கொள்ளும்... அதிலிருந்து மீள்வது என்பது வேயன்னாவின் மரணத்தில் கண்ணீராய் நாம் வெளியாகும் போது மட்டுமே.

வில்லாயுதம் ஒரு களவைத் தலைமை தாங்கிச் செய்து வேயன்னாவுக்குப் பின் இவன்தான் என்று நிரூபித்தாலும் கதை முழுவதும் அவனின் களம் வஜ்ராயினி, வைரம், முனியின் குடில் என வேறு பாதையில்தான் பயணிக்கிறது. எனக்குச் சரிசமமாக வில்லாயுதம் கூட உட்கார முடியாது ஆனால் வட்டத்துரை உட்காருவான் என வேயன்னா சொல்வதன் உண்மையை கதையினை வாசிக்கும் போது அறியலாம். வில்லாயுதத்துக்கு அப்பாவுடன் அமரவோ பேசவோ நேரம் இருந்தால்தானே சமமாக உட்காரமுடியும். அவனின் போக்கு வேறு பாதையில்...

வட்டத்துரை பிறப்பு குறித்தான கன்னிமார்கள் கேட்கக்கூடாத காளத்தி கதையும் வஜ்ராயினி தொடர்பான வைரத்தேடல் கதையும் கிளைக்கதைகளாய்... அவலமாய் முடியும் கதைகள். இரண்டுமே சோகமயமானது என்றாலும் வஜ்ராயினி கதையின் கழுகு, மான், வைரம், ஆட்டுத் தோலில் வைரத்தை கழுகு எடுத்து வருதல் என ஆபுனைவாய் பயணிப்பது வேயன்னா பின்னால் வேல் கம்புடன் பயணிக்கும் போது நம்மோடு ஒட்டவில்லை.

சேதுவின் வெள்ளைக்கார காதலி... அவர்களின் காதல் என மற்றொருமொரு களம்... இறுதியில் வெள்ளைக்காரக் காதலி எடுக்கும் முடிவால் மனசுக்குள் நிற்கிறாள்.

அன்னமயிலுக்கு வட்டத்துரை மீது சொல்லாத காதல். அதை சில இடங்களில் அவளின் செய்கையால் மட்டுமே ஆசிரியர் உணர்த்தியிருப்பார். சினிமாத்தனமாய் அவனிடம் உன்னைத்தான் கட்டிப்பேன்னு அவளை நிற்க வைக்கவில்லை.

சேது போலீஸ் பயிற்சிக்குச் செல்வதும், அவனுக்கு துப்பாக்கி சுடுவதில் இருக்கும் திறமை குறித்து காதலி வீட்டில் பெருமை பேசுவதும் கதையின் முடிவை நமக்குச் சொல்லிவிடுகின்றன ஆமா எத்தனை சினிமா பார்த்திருப்போம்.

சேதுவின் வருகைக்குப் பின்னர் கதையில் சினிமாத்தனம் குடி கொண்டு விடுகிறது. வேகமான வேயன்னா சத்தியத்தின் பின்னே சாந்த சொரூபியாய் மாறிவிட, கதை மெல்லத்தான் பயணிக்கிறது.

வேயன்னாவாய் அந்த கருத்த தேகமும் வேல் கம்பு தாங்கி கையும் வீரமான நடையும்... கிடாரி, மதயானைக் கூட்டம் படங்களில் நடித்த இந்த நாவலின் ஆசிரியர் வேல ராமமூர்த்தி அவர்கள்தான் இக்கதையை வாசிக்கும் போது எனக்கு முன்னே வேகவேகமாய் நடந்து கொண்டிருந்தார்.

கூட்டாஞ்சோறு என்ற தலைப்பில் ஜூனியர் விகடனில் தொடர்கதையாக வந்ததுதான் நாவலாகும் போது ஒரு பரம்பரையின் கதையாய்... சீறும் காளையாக பயணிக்க குற்றப்பரம்பரை ஆனது.

பாலா இந்தப் படத்தை எடுக்கும் போது நாயகனைச் சேது, வில்லாயுதம் என இரட்டை வேடத்தில் நடிக்க வைத்துவிட்டு வேல ராமமூர்த்தி அவர்களை 'வேயன்னா' ஆக்கினால் மிகச் சிறப்பாக இருக்கும்.

வேயன்னாவாக வாழ அந்தப் பரம்பரையில் வந்த வேல ராமமூர்த்தி அவர்களால் மட்டுமே முடியும்.

வேயன்னா இன்னும் எனக்குள் வேல் கம்போடுதான் வலம் வருகிறார். ஒருவேளை நீங்கள் வாசிக்கும் போது அவர் எனக்குள் இருந்து உங்களுக்குள் இடம் மாறலாம். 

-'பரிவை' சே.குமார்.

திங்கள், 16 ஏப்ரல், 2018

இப்படியும் சிலர் (அகல் மின்னிதழ்)

சித்திரை மாத அகல் மின்னிதழில் வெளிவந்த எனது கட்டுரை உங்கள் பார்வைக்கு... கட்டுரையை வெளியிட்டதற்கும் தொடர்ந்து எழுத வாய்ப்பளிப்பதற்கும் நண்பர் சத்யா அவர்களுக்கு நன்றி. 

அகலில் வாசிக்க "இப்படியும் சிலர்"

*****

ம்மைக் கடந்து செல்லும்... நாம் கடந்து போகும்... மனிதர்களில் சிலர் அவர்களது செய்கையால் நம் மனதுக்குள் வந்து விடுவார்கள். தான் கடந்து வந்த பாதையில் சந்தித்த மனிதர்களைப் பற்றி சத்யா அவர்கள் 'முகங்கள்' என்னும் தொடராய் முத்துலெட்சுமி ராகவன் அவர்களின் தளத்தில் எழுதி வருகிறார். இதையே என்னை நேசித்த மனிதர்களைப் பற்றி 'வெள்ளந்தி மனிதர்கள்' என்னும் தலைப்பில் என் தளத்தில் எழுதி வந்தேன். என்னை நேசிப்பவர்களை எழுத எழுதக் குறையாது என்றாலும் என்ன காரணத்தாலோ தொடர் பாதியில் நிற்கிறது.

வாழ்வின் நிமித்தம் ஓடிக்கொண்டிருக்கும் போதும் இங்கும் அன்றாடம் நிறைய முகத்தைக் கடந்து போய்க் கொண்டிருக்கிறேன். அதில் சில முகங்கள் அவர்களின் செய்கையால் மனதுக்குள் ஒட்டிக் கொள்கிறார்கள். இந்த வெளிநாட்டு வாழ்க்கையில் பல முகங்கள் பரிதாப முகங்களே. சமீபத்தில் முகநூலில் ஒரு கவிதை வாசித்தேன். கவிதையின் சாராம்சம் வெளிநாட்டு வாழ்க்கைக்காரர் இருவரின் மனைவியர் பற்றியதாய்... இறுதியில் இரண்டு மனிதர்களும் ஒரே கட்டிட வேலை இவரை மனதை அவர் அறியாது அவர் மனதை இவர் அறியாது வேலை பார்ப்பதாய் முடியும். அதுதான் நிதர்சனம். இனி கட்டுரைக்குள் வருவோமா?

நாங்கள்... நாங்கள் என்றாலும் நானும் இன்னொரு தமிழ் நண்பரும் காலையில் பேருந்து ஏறும் இடத்தில் சற்றே கூட்டம் இருக்கும். இங்கு பேருந்தில் இடம் பிடிக்க வேண்டும் என ஜன்னல் வழியாக துண்டு போடுதல், குழந்தையை வீசுதல் எல்லாம் இருக்காது. அடித்துப் பிடித்து ஏறுதலும் இல்லை என்பதால் ஒவ்வொருவாராக ஏறுவார்கள். இடையில் திடீரென ஒருத்தன் வர ஆரம்பித்தான். அவன் பாகிஸ்தானி, கையில் வைத்திருக்கும் லேப்டாப் பேக்கில் மதிய சாப்பாட்டை வைத்துக் கொண்டு ஏறுவான்.

பேருந்து வந்ததும் ஓடி படியில் நின்று கொள்வான். யாராவது அவனுக்கு முன்னே ஏற முனைந்தால் இடித்துத் தள்ளுவான். ஏறி அமர்ந்து மொபைலில் முகம் பார்த்து அதை அஷ்டகோணலாக்கி என்னென்னமோ செய்வான். அவன் இருக்குமிடத்துக்கு அருகில் அமர்பவர்கள் அவனுடன் உரசி விடாமல் இருக்க, ரோபோ போல் உட்கார்ந்து கொள்வான். அவனைப் பார்த்தாலே பேருந்தில் பயணிக்கும் யாருக்குமே பிடிப்பதில்லை. ஒருநாள் அவனுக்கு இடம் கிடைக்கவில்லை என்ற போது மற்றவர்களுக்கு வந்த சிரிப்பைப் பார்க்க வேண்டுமே! இப்படியும் சிலர்.

இங்கு பிச்சை எடுப்பவர்கள் எல்லாம் இல்லை என்றாலும் ரோட்டைக் கடந்து செல்ல அமைக்கப்பட்ட நடைபாதையில் எப்போதேனும் சிலர் அமர்ந்து பிச்சை எடுப்பார்கள். சில நாட்கள் முன்னர் ஒருவர் என்னமோ பைபாஸ் சர்ஜரி செய்தது போல் மிகப் பெரிய பேண்டேஜ் ஒட்டி அது தெரிய, சட்டை கழட்டி விட்டு உட்கார்ந்திருந்தான். பார்க்கும் போதே கடுப்பு தான் வந்தது.

அதன் பின்னான ஒருநாள் அலுவலகம் விட்டு பேருந்தில் வந்து இறங்கி நடந்த போது ஒரு அரபிப் பெண்மணி, அரபி என்றாலும் உள்ளூர்க்காரி அல்ல வேறு நாட்டிலிருந்து வந்தவள்தான். ஓரு ஓரமாக உட்கார்ந்து முன்னே ஒரு பிளாஸ்டிக் கவர் வைத்திருந்தார். அதில் சில சில்லறைகளும் கிடந்தன. அவளருகே ரோஜா மலர் போல ஒரு பெண் குழந்தை, மூணு நாலு வயதிருக்கும்... அமர்ந்திருந்தது. அம்மா என்ன செய்கிறாள் என்பது தெரியாமல் அந்தக் குழந்தை சிரித்துக் கொண்டிருந்தது. அந்தப் பெண்ணோ மகளுக்கு முத்தம் கொடுத்து அரபியில் ஏதோ சொன்னாள். உண்மையில் அவள் வாழ்வில் ஏதேனும் கஷ்டம் இருக்கலாம் இருப்பினும் குழந்தையை அருகமர்த்தி பிச்சை எடுத்தது மனசுக்கு வருத்தத்தையே கொடுத்தது. இப்படியும் சிலர்.

கழிப்பறைகளை அடிக்கொரு தரம் சுத்தம் செய்ய அதற்கென பணியாட்கள் இருப்பார்கள். அவர்கள் பெரும்பாலும் இந்தியர்களும் (குறிப்பாக தமிழர்கள், தெலுங்கர்கள்) வந்கதேசத்தவர்களும் இந்த வேலைக்கு வருவார்கள். அவன்தான் சுத்தம் செய்கிறானே என்ற நினைப்பில் பாத்ரூமைப் பயன்படுத்துபவர்கள் அலங்கோலம் செய்து விட்டுப் போவதைப் பார்க்க வேண்டுமே... சுத்தம் செய்பவனும் மனிதன் தானே என்ற எண்ணம் ஏற்படுவதேயில்லை. அதுவும் சிலர் பாத்ரூம் போய்விட்டு தண்ணீர் விடுவதே இல்லை. பாகிஸ்தானிகளோ வெஸ்டர்ன் டாய்லெட்டில் மேலே ஏறி இருந்து... வயல்ல நாத்துப் பறிச்ச மாதிரியே போட்டு வச்சிருப்பானுங்க... இப்படியும் சிலர்.

எங்கள் அறை இருக்கும் கட்டிடத்தில் ஒரு மலையாளி ஹோட்டல். அங்கு ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒரு தமிழர் வேலை செய்கிறார். ஆரம்பத்தில் அவரும் மலையாளி என்றுதான் நினைத்தேன். தினம் செல்வதால் அவருடன் பழக்கம் ஏற்பட, அவர் வேலூர்க்காரர் என்பதை அறிய முடிந்தது. ஒரு ஆள், எல்லா வேலையையும் இழுத்துப் போட்டுப் பார்ப்பார். மிகவும் சுறுசுறுப்பானவர். ஊருக்குப் பேத்தியைப் பார்க்கப் போறேன் என்று சொன்னபோது அவர் முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சி. ஊருக்குப் போய் திரும்பி வந்து விட்டார். இப்போது பம்பரமாக சுழன்று வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார். இப்படியும் சிலர்.

இதுவும் பேருந்து ஏறும் இடத்தில் பார்க்கும் நிகழ்வுதான். சில நாட்களாக நானும் நண்பரும் நிற்கும் இடத்துக்கு அருகில் ஒரு பிலிப்பைனி வந்து நிற்பதும், பெண்கள் சிகரெட் விற்பனையில் இருக்க, சில ஆண்களே பெண்கள் சிகரெட்டை பிடிக்கும் போது இந்தப் பெண்ணோ ஆண்கள் சிகரெட்டை வாயில் வைத்து ஊது ஊது என்று ஊதுவாள். தள்ளி வாங்க விட்டா புகையால நம்மளைக் குளிப்பாட்டிருவா போலன்னு நண்பர் சொல்வார். அதே இடத்தில் சற்று தள்ளி ஒரு பெண்ணும் (ஆந்திரா) மூணு பசங்களும் அடிக்கும் லூட்டி இருக்கே.... அப்பப்பா எல்லாரும் அவர்களைத்தான் பார்ப்பார்கள். நம்ம ஊரா இருந்தா என்ன தங்கச்சி இப்பதான் லாத்துதுன்னு கொமட்டுல ரெண்டு குத்துவிடுவாங்க... இங்க எல்லாம் சகஜம்தானே... அதனால் அவங்க ஆட்டம் நிற்பதே இல்லை. இப்படியும் சிலர்.

இங்கு மலையாளியுடன் வேலை பார்த்தாலும் எகிப்துக்காரனுடன் வேலை பார்ப்பது என்பது மிகவும் சிரமம். அவர்கள் வேலையே பார்க்கமாட்டார்கள். வேலை பார்ப்பவனை ஏறி மேய்வதும், போட்டுக் கொடுத்தலுமே அவர்கள் வேலை. அப்படிப்பட்ட கூட்டத்தில் முன்பு ஒரு நண்பருடன் வேலை செய்தேன். அவன் வேலை செய்யமாட்டான் என்றாலும் நமக்கு மிகவும் நெருக்கமாய் உதவி செய்பவனாகவும் இருந்தான். இப்போது ஒரு நண்பர் அதே போல்... மிகவும் நல்லவர்... இவர் எகிப்துக்காரரா என்று நினைக்கத் தோன்றும். இப்ப புதிதாய் ஒருத்தனும் எங்க புராஜெக்ட்டுக்கு வந்திருக்கான். இவன் நான் எகிப்துக்காரன்டா என வந்த உடனே நிரூபிச்சிட்டான். இப்படியும் சிலர்.

இன்னும் எழுதிக் கொண்டே போகலாம்... பார்த்த பல மனிதர்களை. நீளம் கருதி இத்துடன் முடிக்கிறேன்.

-'பரிவை' சே.குமார்.

திங்கள், 21 ஆகஸ்ட், 2017

பிக்பாஸ் : ஆண்டவரே இது சரியா?

பிக்பாஸ் வீட்டுக்குள் தான் வைத்ததே சட்டமென ஒருவருக்கு ஒருவர் அடித்துக் கொள்ளும் விதமாக உள்ளடி வேலை பார்த்தல், கெட்ட வார்த்தைகளை ஆங்கிலத்தில் பேசுதல், ஒருவரை ஒதுக்கி வைத்து முடிந்தளவுக்கு அவருக்கு மன அழுத்தத்தைக் கொடுத்தல் என ஐம்பத்தைந்து நாட்களாக அடித்து ஆடிக் கொண்டிருந்த காயத்ரி அவர்களை ஒருவழியாக நேற்று வீட்டுக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். 

Image result for பிக்பாஸ் காயத்திரி

இதே காயத்ரியை சென்ற முறை ஒரு எளிய கேள்வி பதிலின் மூலமாக காப்பாற்றினார் பிக்பாஸ்... இதற்குப் பார்வையாளர்களிடம் இருந்து எதிர்ப்பு வர, இந்த முறை காப்பாற்றும் முயற்சியில் இறங்கவில்லை என்றாலும் சுஜா, காஜல் என்ற இரண்டு ரவுடிகளை காயத்ரிக்கு பதிலாக களம் இறக்கியிருக்கிறார் பிக்பாஸ்... மேலும் காயத்ரி விதைத்த வன்ம விதை ஆரவ்வுக்குள்ளும் ரைஸாவுக்குள்ளும் வளரத் தொடங்கிவிட்டது. இந்த வாரம் மன அழுத்தத்திற்கு உள்ளாக்கப்படப் போகும் அந்த இருவர் சிநேகனும் வையாபுரியுமாகத்தான் இருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. 

சரி காயத்ரியின் வழி அனுப்புதலில் கமல் நடந்து கொண்ட விதம் சரியா? என்ற கேள்வி பலரிடம் இருப்பதை முகநூல் பதிவுகளில் காண முடிகிறது. அதில் உண்மையும் இருப்பது போல்தான் நேற்றைய பிக்பாஸ் நிகழ்வுகள் இருந்தது. 

ஒரே சாதி அதான் கமல் காயத்ரிக்கு ஆதரவுக்கரம் நீட்டுகிறார் என்ற பேச்சுக்கு நேற்று காயத்ரி முன்னிலையில் பதில் அளித்த கமல், நான் அப்படியா என்று கேட்டார்... அதில் தனது கோபத்தையும் காட்டினார்... நியாயம்தான்.. கமலைப் பொறுத்தவரை சாதி எதிர்ப்பாளர்தான் என்பதில் சந்தேகமில்லை, ஆனால் காயத்ரி விஷயத்தில் சாதியோ மண்ணாங்கட்டியோ நடந்து கொண்ட விதம் ஆதரவுக்கரம் நீட்டுவது போல்தானே இருந்தது ஆண்டவரே.

இதுவரை வழி அனுப்பி வைத்தவர்களுக்கு போட்ட குறும்படங்களும் காயத்ரிக்குப் போட்ட குறும்படமும் உங்கள் எண்ணப்படி சரியாகத்தான் இருந்ததா? மனசைத் தொட்டுச் சொல்லுங்கள்... 

காயத்ரியிடம் கேள்விகள் கேட்கப்பட்ட விஷயத்தில் மக்கள் கேட்க வேண்டியதைக் கேட்டு, உரைக்க வேண்டியதை உரைக்க வைத்தல்தான் சிறந்து அப்படின்னு கமல் நினைத்திருக்கலாம் என்று வக்காலத்து வாங்கினாலும் அவரே கேள்விகள் கேட்டிருந்திருக்கலாம் என்றே தோன்றியது. மேலும் கேட்கப்பட்ட கேள்விகளில் சிலவற்றைத் தவிர மற்றவை எல்லாம் சாதாரணக் கேள்விகளே. தான் வில்லிதான் என்பதை மறைத்து எப்பவும் கமலைப் பார்த்ததும் செயற்கைச் சிரிப்போடு இருக்கும் காயத்ரி மேடையிலும் செயற்கைச் சிரிப்போடு பேசினாலும் அவ்வப்போது அவருக்குள் சொர்ணாக்கா எழத்தான் செய்தது... கமல் அடக்கவில்லை.... மடக்கிக் கேள்வியும் கேட்கவில்லை என்பது ஏமாற்றமே.

ஜூலி... சுயமாய் சிந்திக்கத் தெரியாத ஒரு பெண்... காயத்ரியின் சூதாட்டத்தில் சிக்கிய முதல் காய்... அவரிடம் நல்ல பேர் வாங்க வேண்டும் என்பதற்காகவே பொய் சொல்லி தன்னைத் தாழ்த்திக் கொண்டவர்... மற்றபடி அவர் ஓரளவுக்கு எல்லாருடனும் அன்பாய்த்தான் நடந்து கொண்டார். ஒவ்வொரு முறை ஓவியாவுடன் இணக்கமாகும் போதும் பின்னணியில் சதி செய்து பிரித்தது காயத்ரிதான். மேலும் காயத்ரி தனது பிரித்தாளும் செய்கையை ஜூலி, சக்தி, ரைஸா, ஆரவ் வாயிலாக நிகழ்த்தியதை எல்லோரும் அறிவோம். பரணி விழுந்தா கால்தானே உடைஞ்சிருக்கும், சாகவா போறான் என்றதும்... ஓவியா பிரச்சினையில் விளையாண்டதும்... ஒவ்வொருவரையும் கேவலமாகப் பேசியதும் காயத்ரிதான் என்பது தெரிந்தும் மழுப்பலான வழி அனுப்பல் ஏன் தலைவரே?

ஜூலியிடம் வளைத்து வளைத்துக் கேள்வி கேட்டீர்... கஞ்சாக்கருப்பு, நமீதா ஏன் சக்தியிடம் கூட ட்ரிக்கர் இல்லாமல் ட்ரிக்காக கேள்விகள் கேட்டீர்கள். காயத்ரி என்று வரும் போது எவ்வளவு கேள்விகள் கேட்டிருக்கலாம்... ஓவியா ஆரவ் காதலைப் பிரித்தது? ஜூலி ஓவியாவைப் பிரித்தது? சிநேகன் ஆரவை மோதவிட்டது? புதிதாக வந்தவர்கள் குறித்துப் பேசியது என எத்தனை கேள்விகளைக் கேட்டிருக்கலாம். எதுவுமே கேட்காமல் மக்களே நீங்களே கேளுங்கள் என்று விலகி இருந்து கொண்டு டுவிட்டரில் முகம் தெரியாது என்பதால் பேசினீர்களா? என்று மக்களைப் பார்த்து எதிர்க்கேள்வி கேட்கிறீர்களே...? இதுதான் சரியான வழி அனுப்பலா ஆண்டவரே?

சரி குறும்பட விஷயத்துக்கு வருவோம்... ஜூலிக்கான குறும்படத்தில் அவர் குறித்து மற்றவர்கள் பேசியதைக் காட்சிப்படுத்தினீர்கள்... உண்மையிலேயே பொய் பேசி மக்களிடம் திட்டுக்களை வாங்கியிருந்தாலும் பரவாயில்லை சார்... அது என் குடும்பம்தானே என பெருந்தன்மையாக சிரித்துச் சென்றாள் அந்தப் பெண். அதேபோல் காயத்ரியிடம் அவர் செய்த அட்சகாசங்களைக் காட்டியிருந்தால் பெருந்தன்மை காட்டியிருப்பாரா? இந்தக் கேள்வி தங்களுக்குள்ளும் எழுந்ததால்தான் பாசிட்டிவ்வான விசயங்களை மட்டும் குறும்படம் ஆக்கினீர்களோ? 

ஓவியா மூன்று முறை அம்மான்னு சொன்னாங்கன்னு குறும்படத்துல காட்டுன நீங்க... பல முறை சொன்ன 'ஹேர்', 'மூஞ்சி முகரக்கட்டை','நாய்' எல்லாம் காட்டவில்லையே ஏன்? இப்பொழுதுதான் இது கேம் என்பதைப் புரிந்து கொண்டேன் என்று சொன்ன அவரிடம் அந்த வீட்டுக்குள் கேம் விளையாண்டதே தாங்கள்தானே எனச் சொல்லவில்லையே ஏன்? ஜூலிக்கு ஒரு முகம்... காயத்ரிக்கு மற்றொரு முகமா...? இதுதான் நீங்க பார்த்துக் கொண்டே இருப்பேன் என்று சொன்னதன் அடையாளமா?

மக்கள் கேள்விகள் என புதியவர்கள் மூவரையும் கேள்வி கேட்க வைத்து காயத்ரி இல்லாத வாரத்தை சூடாக கடத்திச் செல்ல மெல்லப் பற்ற வைத்திருக்கிறீர்கள். அதுவும் நல்லாவே பத்திக் கொண்டிருக்கிறது.. இனி வரும் நாட்களில் அது காட்டுத் தீயாக மாறும் என்பதில் சந்தேகம் இல்லை. இதுதானே வேணும்... இதுதானே டி.ஆர்.பிக்கான ஆட்டம்... பொறுப்பாய் செய்திருக்கிறீர்கள். 

காயத்ரியுடன் எப்படி டான்ஸ் ஆடலாம் என்றும் சிலர் கேட்கிறார்கள். அவர் கேட்டுக் கொண்டதற்கிணங்க ஆடியதில் தவறில்லை என்பது என் எண்ண்ம்... இருப்பினும் தங்களின் அன்பு மற்றவர்களைவிட காயத்ரிக்கு எவ்வளவு அதிகம் இருக்கிறது என்பது அந்த முத்தத்தில் தெரிந்தது. இனி வரும் நாட்களில் யாருக்கும் சார்பாக... உங்கள் மொழியில் பாரபட்சமாக (யானைக்கும் அடிசறுக்கும் நேற்று சார்பாக என்பதை பாரபட்சமென சொல்லி அடி சறுக்கினீர்கள்... இது கூட பேசு பொருளாக அடித்து ஆடிக் கொண்டுதான் இருக்கிறது) இருக்கமாட்டீர்கள் என்று நம்புகிறோம்.

ஓவியா வெளியே போனபின் சனி, ஞாயிறு மட்டுமே பார்க்கும்படி இருந்தது. இந்த வாரம் அதிலும் சறுக்கல்... வரும் வாரத்தில் சூடு பிடிக்குமா ஆண்டவரே..? என்னதான் தாங்கள் சார்பாக, பாரபட்சமாக இருந்தாலும் தங்களின் முக நளினங்கள் ஆஹா... அசத்தல்... மற்ற மொழிகளில் பிக்பாஸ் எப்படியோ தமிழில் தனித்துவம் இருக்க வேண்டும் என்று சொன்னீர்கள்... உங்கள் பேச்சு, முகபாவம் எல்லாமே தனித்துவம்தான்... வரும் வாரங்களில் தனித்துவம் கெடாமல் பார்த்துக் கொள்வீர்கள்தானே..?
-'பரிவை' சே.குமார்.

வியாழன், 10 ஆகஸ்ட், 2017

'பிக்பாஸ்' மனிதர்களை எடை போடலாமா..?

பிக்பாஸ் பற்றி எழுதிய பதிவுக்கு வந்த கருத்துக்களில் நண்பர் வருணின் கருத்து மிகவும் வித்தியாசமாகவும் சற்றே கோபமாகவும் வந்திருந்தது. பிக்பாஸ் பற்றி எழுதியது எப்படி எனது விருப்பமோ அப்படித்தான் கருத்து என்பது அவரவர் விருப்பம்... அவர் மனதில் உள்ளதை தெள்ளத்தெளிவாகச் சொன்னதில் எனக்கு எவ்வித வருத்தமும் இல்லை. அதே நேரத்தில் நான் கமல் ஆதரவாளனும் இல்லை... எதிர்ப்பாளனும் இல்லை... ஆண்ட, ஆளத்துடிக்கிற பரம்பரையும் இல்லை... இதையெல்லாம் விட திராவிட அடிமையும் இல்லை என்பதை சொல்லித்தான் ஆகவேண்டும். இன்ன சாதியாய் இருப்பாய் என்று அவராக, மாவட்டத்தை வைத்து சாதியைக் கணித்திருக்கிறார் ஆனால் அது தவறான கணிப்பு. என்னைப் பொறுத்தவரை சாதி பார்த்துப் பழகுவதும் இல்லை... சாதியைத் தூக்கி தலையில் வைத்துக் கொள்வதும் இல்லை... அதனால் அந்த வரிகள் சிரிப்பைத்தான் கொடுத்தது.

மேலும் அந்தப் பதிவில் கமல் குறித்து அதிகம் எழுதவும் இல்லை... போராளிகளாய் தங்களைக் காட்டிக் கொண்டு புத்தி சொல்வோரைப் பற்றிய பகிர்வாய்த்தான் எனக்குத் தெரிந்தது. சரி விடுங்க... ஒவ்வொருவரின் பார்வையும் வித்தியாசப்படும்தானே... வருணின் கருத்துக்களிலும் அவரின் பதிவுகளிலும் ஒரு சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அவர் தளத்தை தொடர்ந்து வாசிப்பவன் நான்... கருத்துப் போர்களையும் வாசிப்பதுண்டு. கருத்துப் போர் செய்யத் தெரியாததால் அதிகம் கருத்து இடுவதில்லை. நிறைய விஷயங்களை நிறைவாய் எழுதக்கூடியவர் அவர்... அவரைப் போல் என்னால் எழுத இயலாது... நானெல்லாம் போகிற போக்கில் கிறுக்கிச் செல்லும் ஆள்தான்...அவரின் கருத்துக்கு மட்டுமின்றி எனது முந்தைய பகிர்வில் கருத்துச் சொன்ன அனைவருக்கும் நன்றி.

இதுவும் பிக்பாஸ் பற்றிய பகிர்வுதான். ஒவியாக்கள் கொண்டாடப்பட வேண்டியவர்களா...? ஆரவ்கள் செய்ததை ஏற்றுக் கொள்ளலாமா..? ஜூலிக்கள் ஒதுக்கப்பட வேண்டியவர்களா..? சிநேகன்கள் செய்வது சரியா..? என நிறையக் கேள்விகளை நம்மிடம் மற்றுமின்றி நம்மைச் சுற்றியிருப்பவர்களிடமும் கேட்கத் தோணலாம். ஏன் நமக்குள் எழும் இதே கேள்விகள் அவர்களுக்குள்ளும் எழலாம் இல்லையா..?

ஓவியாவைப் போல் ஒரு பெண் நம் வீட்டில் இருந்தால் தூக்கி வைத்துக் கொண்டாடுவோமா அல்லது தூக்கிப் போட்டு மிதிப்போமா என்று சிலர் முகநூலில் கேட்டிருந்தார்கள். ஓவியாவைப் போல் ஒரு பெண், தனக்குச் சரியெனப்பட்டதை... மனதில் நினைத்ததை... அப்படியே வாழ நினைத்தால்... அப்படியான ஒரு வாழ்க்கை வாழ்ந்தால் அவரை அப்படியே வளர விடவேண்டும் என்பதுதான் என் எண்ணம். ஆனால் கிராமங்களில் அப்படி வளரும் பிள்ளைகளை 'பொட்டப் பிள்ளைக்கு அடக்கம் வேணும்...' என்றும் 'சமஞ்சபுள்ள மாதிரியா நடந்துக்கிறே' என்றும் அடக்கி வளர்ப்பதைப் பார்க்கலாம். எங்களுடன் கல்லூரியில் படித்த தோழி இப்படித்தான் தனக்கு எது சரியெனப்படுகிறதோ அதை தயங்காமல் செய்து அப்படியே நடந்து கொள்ளவும் செய்தார். எதற்கும் பயப்படமாட்டார்.. இது சரி... இது தவறென மூஞ்சிக்கு நேராக சொல்லிவிடுவார். அவரை அடங்கி ஒடுங்கி வாழ் என்று யாரும் சொல்லவில்லை.. சொல்லப் போனால் அவரின் அந்தக் குணம்தான் எல்லாருகும் அவரைப் பிடிக்கும்படி செய்தது. 

சரி ஓவியாக்கு வருவோம்... அவரின் தனிப்பட்ட தன்மை எல்லாரையும் கவர்ந்ததில் ஆச்சர்யமில்ல... ஆனாலும் நான் கொடுத்ததைக் கொடு போய்விடுகிறேன் என்று சொல்லி வாங்கிக் கொண்டு பின்னரும் துரத்துவதும்... மிரட்டுவதும்... நான் இப்படித்தான் என்று சொல்லும் ஒரு பெண், தூக்கிப் போட்டுட்டுப் போயிடுவேன் என்று உதார் விட்டு விட்டு மீண்டும் மீண்டும் சீண்டி விளையாடுவதும்... அதற்காக எல்லை தாண்டுவதும் சரியானதல்ல... இப்படியான மனநிலை கொண்ட ஆணோ அல்லது பெண்ணோ தூக்கி வைத்துக் கொண்டாட வேண்டியதில்லை... பிடித்தவர்கள் எது செய்தாலும் சரி என்ற மனநிலை நம்மில் மாற வேண்டும். நடவடிக்கை மாற்றம் என்பது சரியா.. தவறா... என்பதை புரிந்து தூக்குவதும் தூர எறிவதும் இருக்க வேண்டும்.

மருத்துவ முத்தம் கொடுத்த... கொடுக்கும் ஆரவ்கள்... ஆபத்தானவர்கள் அல்ல என்றாலும் தங்களுக்கு தேவை என்றால் ஒட்டிக் கொள்ளவும், தேவையில்லை என்றால் வெட்டிக் கொள்ளவும் அவர்களால் முடியும். ஒருவரின் மனதுக்குள் நுழைந்து ஒரு பிம்பத்தை உருவாக்கிவிட்டு உடனே வெளிவர இவர்கள் தயங்குவதில்லை. அப்படியான அதிரடி மாற்றத்தைப் பாதிக்கப்பட்ட நபரால் ஏற்றுக்கொள்ள முடியுமா என்பதைப் பற்றி சிந்திக்கத் தெரியாதவர்கள் அல்லர் இவர்கள்... சிந்திக்க நினைக்காதவர்களே இவர்கள். உன்னைப் பழி வாங்குகிறேன் பார்  என நேற்றைய எதிரியை இன்று தூக்கி வைத்து கொண்டாடும் மனநிலை இவர்களுக்கு இன்பம் அளிக்கலாம் ஆனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு..? இந்தச் செயல் அவர்களின் வெந்த புண்ணில் வேலைத்தான் பாய்ச்சும் என்பதை அறியாதவர்கள் அல்லர்... அறிந்தே அதைச் செய்பவர்கள், என்ன இருந்தாலும் ஓவியாக்களுக்கும் இதில் பங்கு இருக்கும்போது ஆரவ்களை மட்டுமே திட்டுவது என்பது தவறு. ஆரவ்களின் ஆசைக்கு எங்கோ ஓரிடத்தில் ஓவியாக்கள் இடமளித்து விடுவது விபரீதங்களை விலைக்கு வாங்கும் நிலைக்கு கொண்டு செல்கிறது. ஆரவ்களில் செயல்களுக்கு அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்றில்லை என்றாலும் மன்னிப்புக் கேட்கும் மனிதர்களாக மாறும் ஆரவ்களை கேவலமாகப் பார்க்க வேண்டியதில்லை என்பதே என் எண்ணம். ஆனாலும் ஒரு முத்தம் கொடுத்துட்டு அதை மருத்துவ முத்தம் எனச் சொல்லும் மகத்தான இந்த மனிதர்கள் கொஞ்சம் கவனமுடன் அணுக வேண்டியவர்களே என்பதில் சந்தேகம் இல்லை.

நம்மில் பெரும்பாலானோர் ஜூலிகளாய்த்தான் இருக்கிறோம் என்றால் அதை கண்டிப்பாக ஒத்துக்கொள்ளமாட்டோம். ஆனால்அதுதான் உண்மை... அரிச்சந்திரனாய் உண்மை மட்டுமே பேசுவது என்பது இயலாத காரியம்... ஆனால் பொய் மட்டுமே வாழ்க்கையல்ல என்பதை உணர்ந்து வாழ எல்லாராலும் முடியும். ஒரு சிறு பொய்யை... அட இது சும்மா எனக் கடந்து போகத் தெரிந்தால் நாம் வாழ்க்கையை வாழக் கற்றுக் கொண்டுவிட்டோம் என்பதை உணரலாம். அதை விடுத்து அந்தப் பொய்க்கு மசாலா தூவி புதிதாக அடுத்தவருக்குக் கொடுக்கும் போதுதான் நாம் பொய்யிலே வாழத் தொடங்குகிறோம். இப்படித்தான் ஜூலிகள்... தனக்கான இலக்கை நோக்கிப் பயணிக்க உண்மையைவிட பொய்யே சிறந்த ஆயுதம் என்பதை மனதுக்குள் ஆணி அடித்து மாட்டி வைத்துக் கொண்டு அதற்கான வாழ்வை வாழத் துணிபவர்கள்... இதனால் அடுத்தவர் செய்ய நினைப்பதை தன்மேல் சுமத்தி, தன்னைச் செய்யத் தூண்டுவதை அறியாமல் பலி ஆகும் ஆடுகள்... புறம் பேசும் மனிதர்களிடையே பொய் பேசி இலக்கை அடைந்து விடலாம் என்ற நப்பாசையில் நாளுக்கு நாள் பொய்யில் நெய் ஊற்றி பிரகாசிக்க வைப்பவர்கள். அதிலிருந்து வெளிவந்தால் நல்லாயிருக்கும் என்றாலும் அந்த நடிப்பில் இருந்து வெளிவரத் தயங்குபவர்கள்... இப்படியே இருப்போமே என போலியாக நடிக்கத் தெரிந்தவர்கள்... இவர்கள் ஒதுக்கப்பட வேண்டியவர்கள் அல்லர்... நான் உத்தமன் எனக்கு பொய் பிடிக்காது என்று சொல்லும் நூறு சதவிகித சுத்தமானவர்களுக்கு ஜூலிகள் தள்ளி வைக்கப்பட வேண்டியவர்கள் என்றாலும் செய்த தவறுக்கு மன்னிப்புக் கேட்கும் இவர்கள் கவனிக்கப்பட வேண்டியவர்களே... அரவணைப்பே இவர்களை திருத்தும் மருந்து.

புறம் பேசாதார் யாருண்டு...? நானும்... நீங்களும்... அவர்களும்... இவர்களும்... எங்கோ ஒரு இடத்தில், ஏதோ ஒரு விஷயத்தில் புறம் பேசத்தானே செய்கிறோம். அதைத்தான் பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்கள் கேமராவை மறந்து செய்து கொண்டிருக்கிறார்கள். இதில் காயத்ரிகளும் சக்திகளும் மட்டுமின்றி சிநேகன்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். கட்டிப்புடி வைத்தியம் நோயாளிக்கு நல்லதென கமல் சொன்னதை தவறாகப் புரிந்து கொண்டவர்கள் சிநேகன்கள்... ஆறுதல் என்ற போர்வையில் கட்டிப்பிடிப்பது திரைக்கு அழகு... ஆனால் பொதுவெளிக்கு அழகல்லவே... ஆறுதல் சொல்ல ஆயிரம் வழிகள் இருக்க இது மட்டுமே உடனடி நிவாரணம் என நினைக்கும் மனிதர்கள் இவர்கள்... இவர்களின் கட்டிப்பிடி வைத்தியம் எதிர்பாலரிடம் மட்டுமே... இதைத் தவிர்த்துப் பார்க்கும் போது இவர்கள் மனிதாபிமானம் நிறைந்தவர்களாகத்தான் இருக்கிறார்கள்... எதுக்கெடுத்தாலும் பொசுக்கு பொசுக்குன்னு அழுகுறான் பாருன்னு ஊரில் சொல்வாங்க... இன்னொன்னும் சொல்லுவாங்க... ஆம்பளை அழக்கூடாதுன்னு.... ஆனாலும் சிநேகன்களின் மனசு இளகிய மனசு என்பதை பொசுக்கென்று பொங்கும் கண்ணீர் சொல்லத்தான் செய்கிறது ஆம்பளை அழலாம் என... கட்டிப்புடி வைத்தியம் தவறு என்பதை... அதுவும் எதற்கெடுத்தாலும் ஏய் அழாதே எனச் சொல்லி கட்டிப்பிடிப்பது என்பது தவறுதான் அதைச் செய்யக் கூடாதுதான்.

எது எப்படியோ பிக்பாஸ் நம்மை நாம் எடை போட்டுப் பார்க்க வைக்கிறது... இந்த நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்கினாலும் அங்கிருக்கும் மனிதர்கள் ஸ்கிரிப்படியோ அல்லது சுயமாகவோ நடித்தாலும் என் பார்வை இப்படியாகத்தான் இருக்கும். அந்த வீட்டுக்குள் நடமாடும் மனிதர்களை வைத்து நம்மை சுயபரிசோதனை செய்து கொள்ள முடியும் என்பதே என் எண்ணம். கருத்துக்கள் எப்படி வந்தாலும் இது பற்றி இன்னும் பேசுவேன்.

தூக்கிக் கொண்டாடப்பட்ட ஓவியாவும் வில்லியாக்கப்பட்ட ஜூலியும் இல்லாமல் பிக்பாஸ் போரடிப்பதாகச் சொல்கிறார்கள். காய் நகர்த்தும் காயத்ரியும் போய்விட்டால்... சீந்துவாரின்றிப் போகுமோ...?
-'பரிவை' சே.குமார்.

சனி, 5 ஆகஸ்ட், 2017

பிக்பாஸ் பார்க்கக் கூடாதா..?

பிக்பாஸ்...

எங்கு பார்த்தாலும் பிக்பாஸ் பற்றியே விவாதங்கள்...

Image result for biggboss tamil

இந்தப் பதிவு கூட அது பற்றியதுதான்... விருப்பம் இருப்பவர்கள் மட்டும் தொடர்ந்து படியுங்கள். பிக்பாஸ் பிடிக்காதவர்கள் தயவு செய்து வாசிக்க வேண்டும். வாசித்துவிட்டு நான் கீழே சொல்லியிருப்பவர்களைப் போல் எனக்கு அறிவுரை சொல்ல வேண்டாம். ஏன்னா நான் விவசாயக் குடும்பத்தில் பிறந்து  மண்வெட்டி பிடித்தவன்தான்... எரவாமரம் போட்டு தண்ணீர் இறைத்தும்... நாற்றுப் பறித்தும்... வரப்பு வாய்க்கால் வெட்டியும்... கதிர் அறுத்தும்... கட்டுத் தூக்கியும் எல்லா வேலையும் பார்த்து வளர்ந்தவன்தான். விவசாயியின் வலியும் தெரியும் அந்த கஷ்ட ஜீவன வாழ்க்கையும் தெரியும். எனவே எனக்கு அறிவுரை வேண்டாம்... மன்னிக்கவும்... அறிவுரை சொல்லும் கருத்துக்களுக்கு விவாதம் செய்யும் மனநிலையில் நான் இப்போது இல்லை.

பிக்பாஸ் பற்றி பேசும் நீங்க நெடுவாசல் போராட்டத்துக்கு ஏன் பொங்கவில்லை... ரேசன் இல்லைன்னு சொல்லிட்டானுங்க அதுக்கு ஏன் போராட்டக்களம் அமைக்கவில்லை... இறப்பைப் பதிவு செய்ய ஆதார் அவசியம் என்று சொன்னதற்கும் பொங்கவில்லையே... ஏன்...? ஏன்...?? என சமூக வலைத்தளங்களில் பலர் குதித்துக் கொண்டிருக்கிறார்கள்... இவர்கள் எல்லாம் எத்தனை போராட்டங்களை முன்னெடுத்து நடத்தினார்கள்... இல்லை எத்தனை போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தார்கள் என்றுதான் தெரியவில்லை. 

மக்களைக் கவர்ந்த ஒரு நிகழ்ச்சி பற்றி முகநூலிலோ டுவிட்டரிலோ தங்கள் எண்ணங்களைப் பகிர்வதில் என்ன தவறு இருக்கிறது என்பதுதான் எனக்குப் புரியவில்லை. இதில் ஒரு நண்பர் பிக்பாஸ் பற்றி எழுதிய பதிவுக்கு கருத்திட்ட ஒருவர் விவசாயியின் வலி உனக்குத் தெரியலையா...? அவர்கள் போராட்டம் நடத்தும் போது நீ கேவலம் எழுதிக் கொடுத்ததை நடிக்கும் நாடகத்துக்கு இவ்வளவு சிரத்தையாக எழுதுகிறாயே என்பதுடன் மானே... தேனே... பொன்மானே... எல்லாம் சேர்த்து கருத்து இட்டிருந்தார். விவசாயியின் மகனாய்ப் பிறந்து அந்த வலியை எல்லாம் அறிந்தவர்கள்தான் அந்தப் பதிவை எழுதிய என் நண்பர்... அவர் சொன்ன ஒரே பதில் நான் இப்படித்தான் புடிக்கலைன்னா போயிடுங்க... என்ன புடுங்கணுமுன்னு கிளாஸ் எடுக்க வேண்டாம்... இதன் பின் பொங்கியவர் அடங்கிப் போய்விட்டார். இன்று விவசாயிகள் போராட்டம் கூட அரசியல் ஆக்கப்பட்டுத்தான் இருக்கிறது... விவசாயிகள் போராட்டம் என்றில்லை எல்லாப் போராட்டமுமே அரசியல் கலந்தவைதான் என்பதுதான் உண்மை. 

பிக்பாஸ் பதிவுகள் உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் அந்தப் பதிவைப் படிக்காதீர்கள்... விலகிச் செல்லுங்கள்... நீங்கள் கேட்கும் போராடினீர்களா என்ற கேள்வியை உங்களிடமே கேட்டு போராட்டக் களங்களுக்கு விரையுங்கள்... அதை விடுத்து நீ ஏன் அதற்கு எழுதுகிறாய்... நீ ஏன் இதற்கு எழுதுகிறாய் என்று கேட்க உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது. சமூக அக்கறையோடு பொங்குவதாய் நடிப்பதை விட, பிடித்ததைக் குறித்து எழுதுவது தவறில்லை என்பதே என் எண்ணம்... இந்தப் பொங்கு பொங்குகிறவர்கள்தான் காலை வணக்கத்துக்கும் மாலை வணக்கத்துக்கும் லைக்கிட்டு ஆயிரம் ஆயிரமாய் லைக் வாங்க வைக்கிறார்கள் என்பதை நம்மில் எத்தனை பேர் அறிவோம்...

Related image

இந்த நிகழ்ச்சி பிரபலமாக ரெண்டே காரணங்கள்தான்... அது 'ஆண்டவர்' என்று சொல்லப்படும் கமலும் 'ஆன்மா'வின் ராகமாய் இருக்கும் ஒவியாவும் மட்டுமே. இந்தாளுக்கு வேலை இல்லையா... இந்த நிகழ்ச்சி நடத்த வந்துட்டான் எனக் கோபமாய் பேசினார் என்னுடன் தங்கியிருக்கும் பக்கா பிஜேபி நண்பர். இதை கமல் நடத்துவதில் என்ன தவறு இருக்கிறது..? பலர் கமலின் திறமையான பேச்சைக் கேட்கவே சனி , ஞாயிறு மட்டும் பிக்பாஸ் பார்ப்பதாய்ச் சொல்கிறார்கள். இந்த நிகழ்ச்சியை கமல் தவிர வேறு யார் நடத்தினாலும் சொதப்பியிருப்பார்கள் என்பதை ஏற்றுக் கொள்ளும் மனநிலை நமக்கு இல்லை என்பதே உண்மை. கமல் தள்ளி வைக்கப்பட வேண்டியவர் என்ற கருத்தே பலருக்குள் இருக்கிறது. 

ரஜினியை அரசியலுக்கு வா என்று சொல்லும் பிஜேபிதான் கமல் வரக்கூடாது என்பதில் தீவிரமாக இருக்கிறது என்பது சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை. கமலின் டுவிட்டர்களை கேலி செய்கிறேன் பேர்வழி என நம்மை நாமே கேலி செய்து கொள்கிறோம்... கமலின் கருத்தை ஏற்று அவரை தலைவராக்க வேண்டும் என்றில்லை... நாம் சுயமாக சிந்திக்க வேண்டும்... மக்களைப் பற்றி சிறிதும் சிந்திக்காமல் தங்கள் நலம் மட்டுமே பார்த்து மத்தியிடம் மண்டியிட்டுக் கிடக்கும் அரசைத் தூக்கியெறிய வேண்டும்... ஆனால் அதைச் செய்வோமா என்றால் செய்ய மாட்டோம் என்பதே நிதர்சனம்... அரசு இப்படி இருக்கே... அரசு எந்திரம் முடங்கிப் போச்சேன்னு யாராவது கேட்டால் பிக்பாஸ் பார்ப்பதால்தான் ஆளும் அரசு குறித்து கவலையில்லாமல் இருக்கிறார்கள் என்று ஒரு சாரார் கிளம்புவார்கள். எது எப்படியோ நாம் திருந்தாதவரை அரசியல்வாதிகள் வாழ்ந்து கொண்டுதான் இருப்பார்கள்.

சரி விஷயத்துக்கு வருவோம்... கமலை விடுத்து பிக்பாஸ் பிக்கப் ஆக முக்கிய காரணம்... 'ஹேர்', 'மொகரையைப் பாரு', 'தூக்கி அடிச்சிருவேன்', 'சேரி பிகேவியர்' என்றெல்லாம் பேசி வன்மம் விதைக்கும் காயத்ரியோ... அவருக்கு சப்போர்ட் பண்ணும் 'ட்ரிக்கர்' சத்தியோ..., 'ஆ...', 'யா..' எனத் தலையாட்டும் ரைசாவோ... 'ஆளிருக்கும் போது ஏன் செய்தாய்' என ஆளில்லாத போது காதல் செய்யத் துடிக்கும் ஆரவோ... 'கட்டிப்புடி' வைத்தியம் செய்யும் சிநேகனோ... 'நான் நடுநிலைவாதி' எனச் சொல்லும் முட்டை கணேஷோ... ஒரளவு நியாயம் பேசும் வையாபுரியோ... என்ன பேசுவது எனத் தெரியாமல் விழிக்கும் பிந்து மாதவியோ... இவ்வளவு ஏன் சல்லிக்கட்டு பிரச்சினையில் நம் உறவுகள் எல்லாம் அடி வாங்கி மிதி வாங்கித் துடிக்க, மீடியா வெளிச்சம் பட மட்டுமே கூச்சலிட்டு இன்று காயத்ரியின் அடிவருடியாகி...  பொய்யின் பிம்பமாய் வாழும் ஜூலியோ அல்ல... எதையும் நேரிடையாகப் பேசும் ஓவியாவே...

ஓவியாவை எல்லாருக்கும் பிடிக்க எது காரணமாக இருக்கும் என்றதும் எல்லாரும் சொல்வது கவர்ச்சி... சத்தியமாக இல்லை என்பதுதான் என் கருத்து. நாம் இப்படி வாழணும் என்று நினைத்து சில காரணங்களால் முடியாமல் சார்பு நிலை வாழ்க்கையைத்தான் இன்று பெரும்பாலானோர் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நாம் வாழ நினைத்த வாழ்க்கையை... ஒரு பெண் வாழ்ந்து காட்டுகிறாளே என்ற எண்ணமே ஓவியாவின் மீது காதல் கொள்ள வைக்கிறது. காதல் என்றதும் வேறு திசையில் பயணிக்காதீர்கள்... பொய் சொல்லாமல்... எது சரி எது தவறு என்பதை உணர்ந்து வாழும் பெண்ணின் மீதான அதீத அன்புதான் ஓவியாவை விரும்ப வைக்கிறது. சரி ஓவியா பற்றி மற்றொரு பதிவில் விரிவாய் பார்ப்போம்.

என்னைப் பொறுத்தவரை வேலை டென்ஷன், பணப் பிரச்சினைகள் எல்லாம் சுற்றி வாழும் சூழலில் மாலை அலுவலகத்தில் இருந்து திரும்பியதும் இது போன்ற நிகழ்ச்சிகளைப் பார்ப்பது ஏதோ ஒரு வகையில் ஆறுதல்... அதற்காக போராட்டக்காரர்களின் வலி தெரியலையின்னு சொல்லாதீங்க... நிறைய போராடியாச்சு... இன்னும் வாழ்க்கையோடு போராடிக்கிட்டுத்தான் இருக்கேன்.

மறுபடியும் சொல்றேன்... பிக்பாஸ் பிடிக்கலையா பாக்காதீங்க... அதைப் பற்றி எழுதுபவர்களை ஒதுக்கி வைத்து உங்க வேலையைப் பாருங்க.. அதை விடுத்து அதற்காக போராடினாயா... இதற்காக போராடினாயா... நடிகன் பின்னே போகாதே... நடிகையின் கவர்ச்சியில் அழியாதேன்னு புராணம் பாடாதீங்க... ஏன்னா மீடியா வெளிச்சம்பட கூச்சல் போட்ட ஒருத்தியை வீரத்தமிழச்சின்னு நீங்க தூக்கி வச்சீங்க... அவ மீடியாவுக்குள்ள நுழைய போட்ட நாடகமே என்பதை இப்போது உணர்ந்து பொங்குகிறோம்... இதுதான் நாம். நான் நானாக இருக்கவே விரும்புகிறேன்... என் விருப்பு வெறுப்புக்களைச் சொல்வதில் முட்டுக் கொடுக்கவோ... முட்டுக் கட்டையாக இருக்கவோ யாரும் தேவையில்லை. 

உங்களுக்கு ஒண்ணு தெரியுமா இன்னைக்கு பொங்குறவங்கதான் சூப்பர் சிங்கர்ல சின்னப் பிள்ளைங்களை முக்கல் முணங்கள் பாட வைப்பதைப் பார்த்து ரசிச்சி பதிவு போட்டவங்க... அதை மறுத்து நான் எப்பவுமே போராளிதான் என்று எத்தனை பேரால் சொல்ல முடியும்...

மீண்டும் சொல்றேன்... யாரும் இங்கு பொங்காதீர்கள்... எனக்கு பிக்பாஸ் பிடிச்சிருக்கு...
-'பரிவை' சே.குமார்.

திங்கள், 24 ஏப்ரல், 2017

தியாகராஜன் (சிற்றிதழ்கள் உலகம் சிறு கட்டுரை)

ன்பின் ஐயா பெரம்பலூர் திரு.கிருஷ் ராமதாஸ் அவர்கள் 'சிற்றிதழ்கள் உலகம்' என்னும் என்னும் சிற்றிதழை நடத்தி வருகிறார். துபாயில் வேலை செய்து கொண்டு ஒரு இதழ்... அதுவும் இணைய வழி மற்றும் பிரிண்ட்டிங்கில் புத்தகமாக சந்தாதாரருக்கு ஊரில் அவரின் மகள் மூலமாக அனுப்பவும் செய்து வருவதென்பது அவரின் எழுத்து மீதான... சிற்றிதழ்கள் மீதான அதீத காதலையே காட்டுகிறது. நானெல்லாம் இப்போ அறைக்கு வந்ததும் சமைத்துச் சாப்பிட்டு எப்படா படுப்போம் என்ற நிலையில்தான் இருக்கிறேன். இப்போ அதிகம் எழுதுவதில்லைதான்... 

சிற்றிதழ்கள் உலகம் முதல் இதழில் இருவரி வாழ்த்துச் செய்தி... இரண்டாம் இதழில் இங்கு நான் பகிர்ந்து கொண்ட ஐயா குறித்தான ஒரு கட்டுரை... இப்போது வெளி வந்திருக்கும் மூன்றாவது இதழுக்கு மறைந்த எழுத்தாளர் திருமிகு. அசோகமித்ரனைப் பற்றி ஒரு பக்கம் எழுதிக் கேட்டார். அசோகமித்திரனை அதிகம் வாசித்ததில்லை என்றாலும் ஐயா என்னையும் ஒரு எழுத்தாளனாய் நினைத்து அன்போடு கேட்டமைக்காக சமீபத்தில் வாசித்ததை வைத்து எழுதிக் கொடுத்தேன். அது இந்த இதழில்... அதுவும் என் போட்டோவுடன்... (நான் போட்டோ பெரும்பாலும் கொடுப்பதில்லை... பாக்யாவில் வாராவாரம் வரும் மக்கள் மனசு பகுதியில் நம்ம போட்டோ ஒன்றை ஒட்டியே வச்சிருக்கானுங்க... இவரு முகநூலில் தேடி எடுத்திருப்பார் போல... முகநூலில் கூட என் போட்டோ பகிர்வதில்லை... இது அலைனில் இருக்கும் போது எடுத்தது)

அவருக்கு நான் எழுதி அனுப்பிய முழு வடிவம் கீழே... அவர் பகிர்ந்த ஒரு பக்கத்துக்கு சுருக்கப்பட்ட பகுதி போட்டோவாக....

நன்றி கிருஷ் ராமதாஸ் ஐயா மற்றும் சிற்றிதழ்கள் உலகம் ஆசிரியர் குழு.

Image may contain: 1 person, text

 தியாகராஜன்...

தமிழின் பிரபல எழுத்தாளர்... 1970களின் ஆரம்பத்தில் தமிழ்ச் சிறுகதைகளையும் நாவல்களையும் உலகளவில் கொண்டு சென்ற எழுத்தாளர்களில் முக்கியமானவர்.

உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர் தியாகராஜனா...? அப்படி ஒருத்தர் தமிழ் எழுத்துலகில் இருந்தாரா... என்ன..? என்று யோசிக்கிறீர்கள்தானே....

அவர்தாங்க எழுத்துலக ஆளுமை... வாழ்க்கைக் கதைகளை என்றென்றும் வாழும் கதைகளாக எழுதி, எழுத்துப் பணியே தன் வாழ்க்கை என இறுதி மூச்சுவரை எழுத்தாளனாக வாழ்ந்து சமீபத்தில் மறைந்த தமிழின் பிரபல எழுத்தாளர்...
திருமிகு. அசோகமித்திரன்...

நானெல்லாம் மிகப்பெரிய வாசிப்பாளன் இல்லை... கல்லூரிக்குப் போகும் வரை ராணி, குமுதம், க்ரைம் நாவல்தான்... கல்லூரியில் எங்க பேராசிரியரின் அறிமுகம் கிடைத்து அவரின் பிள்ளைகளாய் அவர் இல்லம் செல்லும் போதுதான்... இரண்டு அறைகள் முழுவதும் புத்தகங்களாக இருக்க, அவற்றில் மூழ்கும் வாய்ப்புக் கிடைத்தது. கி.ரா, ஜெயகாந்தான், கார்ல் மார்க்ஸ், லெனின், பொன்னீலன், மீரா என அதிகம் வாசிக்க கிடைத்தது. அப்போது அசோகமித்திரனின் சில சிறுகதைகளை வாசித்ததுண்டு. வாசிப்பில் இப்போது இருக்கும் ஆர்வம் அப்போது இல்லை என்றாலும் அவர் வாசிக்க சொன்ன புத்தகங்களை வாசித்ததுண்டு. அப்படியான வாசிப்பில் அசோகமித்திரன் அவர்களின் சில கதைகளை மட்டுமே வாசித்திருக்கிறேன். ஆனால் அவை இப்போது ஞாபகத்தில் இல்லை என்பதே உண்மை.

அவரின் மறைவுக்குப் பின் நண்பர் ஒருவர் அசோகமித்திரன் அவர்களின் சில சிறுகதைகள் மற்றும் நாவலைப் பிடிஎப்பாக அனுப்பித் தர வாசிக்க ஆரம்பித்தேன். கல்லூரிக் காலத்தில் புரிந்து கொள்ள ஏதுவாக இல்லாமல் கடினமாக பயணித்த கதை ஆசிரியரின் கதைகளை இப்போது வாசிக்கும் போது அந்த மனிதர்களுடன் நம்மையும் பயணிக்க வைத்ததை உணர முடிந்தது.

குறிப்பாக ‘தண்ணீர்’ நாவல்... கதையின் மையக்கரு தண்ணீர் பிரச்சினைதான் என்பதாய் படிக்க ஆரம்பித்த நாவல்... வீட்டுக்குள் இருக்கும் தண்ணீர் பிரச்சினை வீதிக்கு வந்து மெல்ல மெல்ல அடுத்த தெருக்களுக்கும் பயணிக்கும் போது சில பெண்களின் வாழ்க்கைப் பிரச்சினை பேசப்படுகிறது... தண்ணீரும் பெண்களின் கண்ணீருமாய் பயணிக்கும் கதை தமிழ் இலக்கிய உலகத்தை மற்றொரு களத்துக்கு எடுத்துச் சென்றது என்று பலர் சொல்லியிருக்கிறார். குறிப்பாக கதை நாயகி  யமுனாவின் வாழ்க்கை... இந்தப் பெயர் பொருத்தத்தைப்  பாருங்க... அதாவது கதை தண்ணீர் பிரச்சினை பற்றியது... அதில் வாழ்க்கை பிரச்சினையாகி... தற்கொலை வரை செல்லும் பெண்ணின் பெயர் யமுனா... எப்படியான சிந்தனை... கதை நகர்த்தல் மிக அருமை....  தண்ணீர் குழாய்க்காக ரோட்டோரத்தில் குழி வெட்டுதல் அதனால் கக்கூஸ் குழாய் உடைப்பு... கார் பதிந்து கொள்ளுதல்... தெரு விளக்குப் பிரச்சினை...  என மிக எதார்த்தமாய் கதை பயணிக்கிறது. கடைசியில் வரும் தண்ணீரும் சாக்கடை நாற்றத்துடன் வர, யமுனாவின் வாழ்க்கையும் கேள்விக்குறியாய் நிற்க வாசித்த நம்மை கண்ணீருடன் சில நிமிடம் அமர வைத்துவிடுகிறார். மிகச் சிறப்பான நாவல்... அருமையான.... ஆழமான எழுத்து.

அசோகமித்திரனின் மறைவு ஈடில்லா இழப்பு என்பது மறுக்க முடியாத உண்மை என்ற போதிலும் அவரின் எழுத்துக்கள் என்றென்றும் இளமையுடன் வாழும்.

அனைவரும் வாசிக்க வேண்டிய எழுத்தாளன்... எழுத்தின் ஆளுமை அசோகமித்திரன்.
-‘பரிவை’ சே.குமார்.

ஞாயிறு, 27 நவம்பர், 2016

சின்னக் கன்ணன் அழைக்கிறான்

கிருஷ்ணன்...

கோபால கிருஷ்ணன்...

கண்ணன்...

மாயக்கண்ணன்...

மாயவன்...

கோவிந்தன்... இப்படி எத்தனை பெயர்கள் அவனுக்கு...

Related image

சிறு குழந்தையாக... வெண்ணெய் திருடித் தின்று ஆயர் குலப் பெண்களின் அன்பில் வளர்ந்தவன் கண்ணன்... கோபியர்களின் செல்லப்பிள்ளை அல்லவா அவன்... வெண்ணெய் திருடித் தின்பதில் கண்ணன் மட்டுமா கெட்டிக்காரன்... அப்படிப்பட்ட ஒரு சந்தோஷத்தை நம் தலைமுறை வரை அனுபவித்திருக்கிறோம் என்பதை சொல்லிக் கொள்வதில் பெருமைதானே.

இன்றைய குழந்தைகளுக்கு கடையில் விற்கப்படும் பாக்கெட் தயிர் மட்டுமே தெரியும். ஆனால் அன்று...? இந்த பாக்கெட் தயிரெல்லாம் இல்லையே... வீட்டில் உறை ஊற்றி வைக்கப்படும் தயிர்தானே... அதிலிருந்த சுவை இப்போது வரும் பாக்கெட் தயிர்களில் இல்லையே... எங்கள் ஊரில் எல்லாருடைய வீட்டிலும் மாடு இருக்கும்.... அது பசுவோ... எருமையோ... வீட்டுக்கு வீடு இருக்கும்.

பசுவின் பாலை விட எருமையின் பால் கெட்டியாக இருக்கும். எங்கள் வீட்டில் எங்களது பள்ளிக் காலங்களில் எருமை மாடுகள்தான்... ஒரு மாடு பால் வற்றும் போது இன்னொரு மாடு கன்று போட்டு விடும். அதனால் பாலுக்கு குறைவிருக்காது. அம்மா தயிர் விற்க மாட்டார்கள்... டீக்கடைக்கு மொத்தமாக கொடுத்துவிடுவோம். வீட்டில் காபிக்கும் தயிருக்கும் பால் எடுத்து வைத்துக் கொள்வார்கள். இரவு பாலைக்காய்ச்சி சூடு ஆறவைத்து, அதில் கொஞ்சம் தயிரை விட்டு மூடி வைத்து விடுவார்கள். காலையில் எடுத்துப் பார்க்கும் போது அல்வாபோல் கட்டியாக இருக்கும். சோற்றில் கட்டித் தயிரைப் போட்டு பிசைந்து சாப்பிடுவதுதான் சுகம். அதுவும் கஞ்சியில் தயிர் விட்டு... சின்ன வெங்காயமும் உப்பில் ஊறவைத்த எலுமிச்சை ஊறுகாயும் போட்டுச் சாப்பிட்டால்... ஆஹா... என்ன ருசி.. என்ன ருசி.

வீட்டில் தயிர் கடைவதற்கு என்றே மத்து வைத்திருப்பார்கள். காலையில் தயிரை கடைந்து வெண்ணெய் எடுக்க வேண்டும். அம்மா ஆரம்பித்து வைக்க யாராவது ஒரு ஆள் தொடர்ந்து மத்தால் கடைய வேண்டும்... நேரம் ஆக ஆக... மத்தின் நெளிவான பாகங்களிலும் சட்டியின் ஓரங்களிலும் வெண்ணெய் திரண்டு ஒட்டிக் கொள்ளும். ஒரு பழமொழி இருக்குமே வெண்ணெய் திரண்டு வரும்போது தாழி உடைந்த கதையான்னு... அதனாலதானோ என்னவோ மீன் குழம்புக்கு மண் சட்டி பயன்படுத்தும் அம்மா, தயிர் வைப்பது அலுமினியப் பாத்திரத்தில்தான்... திரண்டு வரும் வெண்ணெய்யை சுடச்சுட தின்பதற்காகவே தயிர் கடைவதுண்டு... மத்தியில் இருக்கும் வெண்ணெய் அவ்வப்போது வாய்க்குள் போய்க் கொண்டே இருக்கும்.

திரண்டு வந்த வெண்ணெய்யை லாவகமாக எடுத்து ஒரு சிறிய கிண்ணத்தில் சேர்த்து வைப்பார்கள்... வாய்ப்புண்ணா... உதட்டில் வெடிவு வெடிவாக இருக்கிறதா... வெண்ணெய்யை எடுத்துத் தேய்த்துக் கொள்ளும் போது ஒரு உருண்டை வாய்க்குள் ஓடிவிடும்... பொங்கல், தீபாவளி, திருவிழாக்களின் போது எடுத்து வைத்த வெண்ணெய்யை இருப்புச் சட்டியில் போட்டு அடுப்பில் வைத்து உருக்கி நெய் எடுப்பார்கள்... அதில் கொஞ்சம் சீரகமும் கருவேப்பிலையும் போட்டு கொதிக்க வைக்கும் போது ஆஹா... அந்த வாசம்... இப்ப வர்ற பாட்டில் நெய்களில் இல்லை. நெய்யை ஊற்றிவிட்டு இருப்புச் சட்டியில் சாதத்தை எடுத்துப் போட்டு பிசைந்து ஆளுக்கு ஒரு உருண்டை அம்மா கொடுக்கும் போது வாங்கிச் சாப்பிட்டால்தானே தெரியும் அந்தச் சுவை... அதை அறியாத இன்றைய தலைமுறை நிறைய விஷயங்களில் கொடுப்பினை இழந்து விட்டார்கள் என்பதே உண்மை.

சின்னக் கண்ணனை பேச ஆரம்பித்து வெண்ணெய் திருடித் தின்ன நம்ம கதைக்கு பொயிட்டேன் பாருங்கள்... ஸ்கைப்பில் மகளுடன் நடந்த  உரையாடல் அப்படியே... 

'என்ன பாப்பா கிருஷ்ண ஜெயந்தி வருது... வீட்டில் என்ன விஷேசம்..?'  

'என்ன விஷேசம்... அம்மா சூப்பரா வெஜிடபிள்ஸ் சமைப்பாங்க... இனிப்பு பணியாரம் எல்லாம் செய்வாங்க... அவ்வளவுதான்'. 

'ம்...சரி... வீட்டுக்குள்ள கண்ணன் வந்த மாதிரி கால்தடம் போடுவீங்கதானே... கையால போடாமா சின்னக் கண்ணனோட காலால போடுங்க...' மெல்ல வம்புக்கு வலை வீசினேன்.

'சின்னக்கண்ணனா...? இங்க யாரு இருக்கா... அம்மா கையால சூப்பரா கால்தடம் போடுவாங்க தெரியுமா..?' 

'அது தெரியும்... அதான் நம்ம சின்னக் கண்ணன்... நம்ம தம்பி இருக்கானுல்ல...' தூபம் போட்டாச்சு... இனி புகையும் பாருங்க.

'யாரு... விஷாலா... அப்ப்ப்ப்பா... அவன் கால் தடம் வச்சா வீடே நிறைஞ்சிரும்... தேர்ட் ஸ்டாண்டர்ட் படிக்கிறான் சின்னக் கண்ணனாம்.... சின்னக்கண்ணன்....' பேச்சில் கோப ஜ்வாலை அடித்தது... காதுகளில் புகை வந்தது.

நானும் விடாமல் 'அவந்தானே நம்ம வீட்டு செல்லக் கண்ணன்... பின்னே இதுக்காக கண்ணப்பாவையா கூட்டியார முடியும்..?' என்றேன். 

'எந்தக் கண்ணப்பாவை...? எதிர்கேள்வி வந்தது. 

கேட்டது சரிதான் அதுலயும் சிக்கல் இருக்குல்ல... எங்க பெரியண்ணன் கண்ணன்... அங்கிட்டு அவங்க சித்தி வீட்டுக்காரர் கண்ணன்... யாரைக் கூப்பிடுவது என்று ஸ்ருதி கேட்டது சரிதான் என்றாலும் நாம விடாக் கண்டனுல்ல.. இதை இன்னும் இழுக்காம விடுறதில்லையின்னு ஆட்டத்தைத் தொடர்ந்தேன்.

இங்கேரு பாப்பா... உங்க சித்தப்பா இங்க இருக்காரு... உடனே கூப்பிடமுடியாது.... நம்ம கண்ணப்பா அங்கதானே இருக்கார்... வரச்சொல்லி மாவைக் கலக்கிக் கொடுத்தியன்னா... மிதிச்சி வீடெல்லாம் நடந்துட்டு போவாருல்ல...' என்றேன் சிரிக்காமல்.

 'அப்ப்ப்ப்ப்பா.... யாரு நம்ம கண்ணப்பா..? அவருக்கு வயசு 50... தெரியுமா...?' 

'இருக்கட்டுமே... விஷால் செல்லக் கண்ணன் இல்லைன்னா... அவரு எங்கம்மாவுக்கு செல்லக் கண்ணன்தானே... பாரு பேர்லயும் கண்ணன் வச்சிருக்காரு..' 

'ஐயோ அப்பா முடியல... இதுக்கு பேசாம நானே கால்தடம் போட்டிருவேன்...' 

'நீயா... அதெப்படி போட முடியும்... நீ அழகு மீனாட்சியில்ல... கிருஷ்ண ஜெயந்திதானே... மீனாட்சி ஜெயந்தி இல்லையே..?' விடாமல் வம்பிழுத்தேன்.

'ஓ அப்ப உங்க செல்லமகனும் கிருஷ்ணன் இல்லையே... பெரிய கருப்பன்தானே... எப்பூடி...' என்னை மடக்கிய சந்தோஷம்.

'என்ன இருந்தாலும் அவன் கோகுலத்துல கண்ணன்தானே... பெரிய கருப்பன்னு உங்க ஐயா கோவில்ல கூப்பிடச் சொல்லிட்டாங்க சரியின்னு எல்லாரும் ஏத்துக்கிட்டோம்... ஆனா நாங்க மாயக்கண்ணன்னு யோசிச்சி வச்சிருந்தோம் தெரியுமா?' வம்பைத் தொடர்ந்தேன்.

'வக்கலையில்ல... வக்கலயில்லை...' என்றவர், 'அப்பா... நாங்க அம்மா கையால காலடி வச்சி சாமி கும்பிட்டுக்கிறோம்... நீங்களா வரப்போறீங்க... இல்லயில்ல... பின்ன என்ன... ஆனா அவனை மட்டும் வைக்கவே விடமாட்டேன்...' என்றார் கோபமாக. 

'பொறாமை... எங்க அவன் அழகா வச்சிருவானோன்னு பொறாமை..' எரியும் தீயில் எண்ணெய் வார்த்தேன்.

'ஆமா அவுக அழகா வச்சிக் கிழிச்சிட்டாலும்... வீடு பூராம் மிதிச்சி நாறடிச்சிடும்... போங்கப்பா நான் போறேன்... அம்மா வந்து பேசுவாங்க...' என்றபடி எழுந்தார்.

சின்னக் கண்ணனைப் பேச ஆரம்பித்து வெண்ணெய் திருடித் தின்று மகளிடம் வம்பளந்தது வரைக்கும் பேசியாச்சு.... இனி... என்ன பேசுறது..?

நாளைக்கு கிருஷ்ண ஜெயந்தி... ஊரில் விஷேசமான நாள்... இங்க... எப்பவும் போல எழுந்து குளித்து... சாமி கும்பிட்டு... வேலைக்கு வர வேண்டியதுதான்.... நமக்கு எங்கே கிருஷ்ண ஜெயந்தியும், தீபாவளியும், பொங்கலும்... எல்லா நாளும் வேலை நாளே...

'சின்னக் கண்ணன் அழைக்கிறான்...
ராதையை... பூங்கோதையை...
அவள் மனம் கொண்ட ராகத்தைப் பாடி...
சின்னக் கண்ணன் அழைக்கிறான்...' 
என்ற பாடல் மனசுக்குள் ஓடிக்கொண்டிருக்கிறது....

கண்ணன் மட்டும் தீராத விளையாட்டுப் பிள்ளை அல்ல... நம் வீட்டுச் செல்லங்களும்தான்... அவர்களுடன் வம்பிழுத்து உரையாடுவதில் கிடைக்கும் சுகமே தனிதான்... அந்தச் சுவைக்கு முன்னால் கண்ணனும் நாமும் திருடித் தின்ற வெண்ணெய் சுவை கூட குறைவுதான்...

(இந்தக் கட்டுரை கோகுலாஷ்டமிக்காக சகோதரி ஒருவரின் பத்திரிக்கைக்கு எழுதி, அவர் இதை தவறுதலாக வெளியிடாமல் விட்டு விட்டு, மீண்டும் அடுத்த இதழில் போடுகிறேன் என்றார்... போட்டாரா என்று தெரியவில்லை... இதுவரைக்கும் போட்டதற்கான எந்த மின்னஞ்சலும் வரலை... அதான் பதிவு எழுத நேரமில்லாத காரணத்தால் இதை இங்கு பகிர்ந்தாச்சு)

சின்னக் கண்ணனைப் பற்றிய பகிர்வை பகிரும்போது இறுதியில் சொல்லியிருக்கும் பாடலை  வாசித்தபோது சமீபத்தில் மறைந்த இந்தப் பாடலைப் பாடிய திரு.பாலமுரளி கிருஷ்ணா அவர்கள் ஞாபகச் சுவற்றில் வந்து போனார். அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்தித்து அவர் பாடிய பாடலை இங்கு பகிர்கிறேன்.


-'பரிவை' சே.குமார்.