மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

திங்கள், 31 டிசம்பர், 2018

சிறுகதை : கலங்காத குளத்தில் ஏன் கல்லெறியனும்..? - தேன்சிட்டு பொங்கல் மலர்

நண்பர் 'தளிர்' சுரேஷ் அவர்களின் தேன்சிட்டு பொங்கல் மலரில் எனது சிறுகதை வெளியாகியிருக்கிறது. வெளியிட்ட நண்பருக்கும் ஆசிரியர் குழுவுக்கும் நன்றி.


(படத்தைப் பெரிதாக்கி கதையை வாசித்து உங்கள் கருத்தைச் சொல்லுங்க)







ண்பர் 'தளிர்' சுரேஷ் அவர்களின் தேன்சிட்டு மின்னிதழ் அச்சு இதழ் போல மிகச் சிறப்பாக வடிவமைக்கப்படுகிறது. ஒவ்வொரு பக்கத்திலும் அவரின் மெனக்கெடல் தொடர்கிறது. தேன்சிட்டு இதழ் மிகச் சிறப்பான இடத்தைப் பிடித்துள்ளது. மகிழ்ச்சி... தேன்சிட்டு தன் பயணத்தை இன்னும் சிறப்பாய் தொடர வாழ்த்துக்கள்.
-'பரிவை' சே.குமார்.

ஞாயிறு, 30 டிசம்பர், 2018

மனசு பேசுகிறது : அய்யப்ப பூஜையும் அன்பான சந்திப்பும்

ப்போதேனும் ஒரு விடுமுறை நாள் மகிழ்வுக்குறிய நாளாகிவிடும்... இங்கு அது அத்தி பூத்தாற்போல் கிடைப்பதுண்டு, ஏனென்றால் பெரும்பாலான விடுமுறை தினங்கள் அறைக்குள்ளேயே கழிந்துவிடும். பழைய அறையில் இருக்கும் வரை எப்போதேனும் குழும கூட்டங்கள், நட்புக்களின் வருகை என வெளியில் சென்றால்தான் உண்டு. புதிய அறைக்கு வந்தபின் அருகே நண்பர்களின் பூக்கடை இருப்பதால் பெரும்பாலான விடுமுறை தினங்களை மாலை நேர அரட்டை விழுங்கிக் கொள்கிறது.


கணிப்பொறி பழுதான பின் விடுமுறை தினங்கள் எல்லாம் வெறுமையான தினங்களாய்... வீட்டுக்குப் பேசும் நேரம் தவிர்த்து மற்ற நேரங்களைக் கடத்துதல் என்பது மிகப்பெரிய விஷயமாகிவிட்டது. இரவெல்லாம் செல்போனில் படம் பார்க்கும் நண்பர்கள் மத்தியில் அரைமணி நேரம் செல்போனைப் பார்ப்பதென்பது மிகவும் கடினமான ஒன்றாக உள்ளது. எப்போது கணிப்பொறி மீண்டும் உயிர்பெறும் என்பது தெரியாது. அதன் காரணமாகவே பூக்கடை முன் கராசார விவாதம் மணிக்கணக்கில் தொடர்கிறது.

எப்போதேனும் ஒரு விடுமுறை தினம் மகிழ்வுக்குறிய நாளாகிவிடும் என்றுதானே ஆரம்பித்தேன். அப்படியான விடுமுறை தினத்தை கடந்த பத்து நாட்களுக்கு முன்னர் அனுபவிக்க முடியாமல் செய்தது தொடரும் கால் வலி. 

பாரதி நட்புக்காக அமைப்பின் 'ஆனந்த ராகம்' நிகழ்வுக்கு வரச் சொல்லி அதன் தலைவர் இராமகிருஷ்ணன் அவர்கள் பலமுறை அழைத்திருந்தார். விழாவை ரசிக்கவும் சூப்பர் சிங்கர் வெற்றியாளரும் தற்போதைய சினிமாப் பாடகருமான திவாகரைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலும் இருந்தது. கால் வலியுடன் செல்வதென்பது இயலாத காரியம் என்பதால் ஆவலுக்கு அணைபோட்டு அறைக்குள் முடங்கிவிட்டேன்.

இந்த விழாவிற்குச் சில நண்பர்கள் வருவதாய் சொல்லியிருந்தார்கள் ஆனால் அவர்கள் எல்லாம் வரவில்லை என்பதை பின்னர் அறிந்தேன். துபாயில் இருந்து சில நண்பர்கள் வந்து சென்றிருக்கிறார்கள் சுவடு தெரியாமல்...  இந்தச் சுவட்டில் அபுதாபி நட்புக்கள் சிலரும் அடக்கமே.

அமீரக எழுத்தாளர்கள் குழுமத் தலைவர் ஆசிப் மீரான் அண்ணாச்சிதான் நிகழ்ச்சியின் தொகுப்பாளராய் இருந்தார் என்பதைப் பின்னர் அறிய முடிந்தது. நிகழ்வு மிகச் சிறப்பாக இருந்ததாகச் சொன்னார்கள். இராமகிருஷ்ணன் சாரும் மறுநாள் 'ஏன் வரவில்லை' எனக் கேட்டு நலம் விசாரித்தார். இந்தப் பண்பு எல்லாருக்கும் வருவதில்லை... நானும் அடக்கமே இதில்.

எப்போதேனும் ஒரு விடுமுறை தினம் மகிழ்வுக்குறிய நாளாகிவிடும்... மறுபடியுமான்னு நினைக்காதீங்க... உண்மையிலேயே இந்த வெள்ளி மகிழ்வுக்கு உரிய தினமாகத்தான் இருந்தது. இந்திய சமூக மையத்தில் (ISC) ஐயப்பன் பூஜை... இரண்டு வருடங்களுக்கு முன்னர் சென்றிருக்கிறேன். இந்த முறை செல்லலாம் என்ற ஆவல். இரவெல்லாம் தூங்க முடியாத கால்வலிதான் ஆவலுக்கு முட்டுக்கட்டையாய் இருந்தது. இருந்தும் ஐய்யபனைத் தரிசிக்க வேண்டும் பிரச்சினைகளைக் கடக்க என முடிவெடுத்தேன்.

முதல்நாள் இரவே இராஜாராமுடன் பேசும் போது அதிகாலையில் வந்துவிடுவேன்... நீங்களும் வாங்க என்றார். அறை நண்பர் போகலாம் எனச் சொல்லியிருந்தார். காலையில் கேட்டபோது இரவு நீண்ட நேரம் தொடர்ந்த வாரவிடுமுறையின் காரணமாக பின்வாங்கிவிட்டார். 

எப்போதும் போல் அதிகாலைக் குளியல் முடித்து இராஜாராமுக்குப் போன் செய்து அவர் வந்ததை உறுதி செய்து கொண்டு மெல்ல நடந்து போய் பேருந்தைப் பிடித்து ISC-க்கு அருகில் இறங்கி இராஜாராமுடன் அவரின் உறவினரையும் வாசலியேயே சந்தித்து அளவளாவினோம்.

பின்னர் காலை சிற்றுண்டி ஐயப்ப பூஜையில்... கொஞ்ச நேரம் பூஜை நடந்த இடத்தில் அமர்ந்திருந்தோம். பின்னர் மேல்தளத்தில் சமையல் வேலை நடக்கும் இடத்தில் பணியிலிருந்த கிளினிங் கம்பெனி ஆட்களில் பலர் இராஜாராமின் உறவினர்கள், பக்கத்து ஊர்க்காரர்கள் என்பதால் அங்கு சென்றோம். நீச்சல் குளம் அருகில் அமர்ந்து நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தோம்... குளிர் எங்களை விரட்டத் துடித்தது.

நீண்ட நாட்களுக்குப் பிறகு உறவுகள் சந்திப்பு எப்படியானதொரு மகிழ்வைக் கொடுக்கும் என்பதை அறிவோமல்லவா..? நாமும் அனுபவிப்பவர்கள்தானே... அப்படியான ஒரு நெகிழ்வான தருணத்தில் எல்லாருடைய மகிழ்ச்சியும் கண்களில் தெரிந்தது.

இன்றைய அவசர உலகத்தில் உறவுகள் சந்திப்பு என்பது மட்டுமல்ல கூடப் பிறந்தவர்கள் சந்திப்பு என்பது கூட அரிதாகிவிட்டது. அப்படியிருக்க, இந்தப் பாலை மண்ணில்... அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கும் உறவுகள் சந்திக்க இயலாத சூழலில் இது போன்ற நிகழ்வுகளே சந்திப்பதற்கான வாய்ப்பாய் அமைகின்றன அல்லவா..? 

அதுவும் அந்தக் கம்பெனி தன்னை ஐயப்ப பூஜையில் இணைத்துக் கொண்டதால் வருட முழுவதும் எங்கோ ஓரிடத்தில் வேலை பார்த்துக் கொண்டிருப்பவர்கள் அந்த ஒருநாளில் எல்லாரையும் சந்திக்கும் வாய்ப்புக் கிடைப்பதில் எத்தனை மகிழ்வாய் இருப்பார்கள் என்பது அவர்களின் நல விசாரிப்புக்களில் தெரிந்தது. அத்தனை மகிழ்ச்சி அவர்களுக்குள்... அது தனியொருவனாய் நின்ற என்னையும் தொத்திக் கொண்டது என்பதே உண்மை.

'கவிஞர்' பால்கரசும் வந்து சேர்ந்தார். எழுத்து, எழுத்தாளர்கள் என பேச்சு ஒரு பக்கம் ஓடிக் கொண்டிருந்தது. மற்றொரு பக்கம் வரும் உறவுகளுடன் அவர்களின் நல விசாரிப்புக்கள்... ஊர்ப் பேச்சுக்கள் எனத் தொடர்ந்து கொண்டிருந்தது. 

இதற்கிடையே மீண்டும் கீழிறங்கி வரிசையில் நின்று ஐயப்ப தரிசனம் முடித்து மீண்டும் மொட்டைமாடி... உறவுகளின் குலாவல்... கதை, கவிதை, கட்டுரை, பிரபல எழுத்தாளர்கள் என பேச்சு தொடர்ந்து கொண்டேயிருந்தது.

மதிய உணவுக்கு டோக்கன் கொடுத்திருந்தார்கள்... ஆனால் டோக்கன் கேட்டு தொந்தரவு செய்யவில்லை என்றாலும் பெரும் கூட்டத்தில் திருமண வீட்டில் பந்திக்கு நிற்பது போல் நின்று ஒரு வழியாக மூன்றாவது பந்தியில் ராஜாராமும் பால்கரசும் சாப்பிட, நாலாவது பந்திதான் உனக்கானது என ஐயப்பன் சொன்னதால் சாப்பிட்டு அங்கிருந்து கீழிறங்கினோம். மிகச் சிறப்பான சைவ உணவை, வாழையில் சாப்பிடக் கொடுத்துத்தான் வைக்க வேண்டும். எங்களுக்குக் கொடுத்து வைத்திருந்தது. அங்கிருந்து பால்கரசுவின் காரில் கிளம்பினோம்.

அறைக்கு அருகில்... ஆஸ்தான பூக்கடைக்கு முன்னர் மீண்டும் தொடங்கியது பேச்சு... இலக்கிய ஆர்வமுள்ள நட்புக்களுடன் பேசுவதற்கு சொல்லவா வேண்டும்... அவர்கள் பேச... எப்பவும் போல் கேட்டுக் கொண்டிருந்தேன் நான். 

ஒரு மணி நேரத்துக்கும் மேல் பேச்சுத் தொடர்ந்தது. அதன் பின் பூக்கடையில் சில சாமான்கள் வாங்கிக் கொண்டு எங்களின் மாளிகையையும் பார்த்து அவர்கள் விடை பெற்ற பின்னர் கட்டிலில் அமர்ந்து காலை நீட்டினால் வலியின் கொடுமை மெல்ல மெல்ல உச்சம் பெற்றது... 

இன்று வரை வலி தொடர்ந்து கொண்டே இருக்கிறது என்றாலும் நிறைவான தரிசனமும் அன்பான சந்திப்பும் அன்று பரிமாறப்பட்ட நெய் பாயாசம் போல் இனித்துக் கொண்டேயிருக்கிறது இன்னும் மனசுக்குள்.


திருவிழாக்களை எல்லாம் முன்னோர்கள் திட்டமின்றி ஏற்படுத்தவில்லை... எல்லாரும் கூடி மகிழ வேண்டும் என்பதே முக்கியமான காரணம். தற்போது வேலை, குடும்பம் என எல்லாரும் பிரிந்து கிடக்கிறோம்... இச்சூழலில் நல்லது, கெட்டதில் கலந்து கொள்வதென்பது கூட அரிதாகிவிட்டது. 

திருவிழாக்களில் கூடி மகிழ்தல் என்பது அத்திபூத்தாற்ப் போலாகிவிட்டது. திருவிழாவுக்கு என்னால் வரமுடியாது என்பதே இப்போது அதிகம் கேட்கும் வார்த்தையாகிவிட்டது. பெரும்பாலான கிராமங்களில் திருவிழாக்கள் பெரிசுகளின் கட்டாயத்தின் பேரில்தான் இன்னும் மரணிக்காமல் பயணித்துக் கொண்டிருக்கின்றன. இன்னும் சில ஆண்டுகளில் ஆட்களற்ற கிராமங்களில் திருவிழாக்களும் சிதைந்து போகும். சந்திப்புக்கள்... நல விசாரிப்புக்கள்... மகிழ்வான தருணங்கள் எல்லாமே காணாமல் போய்விடும் என்பது மட்டும் உறுதி.

தற்போது உறவு முறைகள் தெரியாது வளரும் தலைமுறை, கொஞ்சக் காலத்தில் திருவிழாக்களையும் அறியாமல்தான் வளரும் என்பதே உண்மை.

-'பரிவை' சே.குமார்.

வியாழன், 27 டிசம்பர், 2018

சினிமா விமர்சனம் : கனா

Related image

னா

'ஆசைப்பட்டா மட்டும் போதாது... அடம்பிடிக்கத் தெரியணும்' என்பதாய் 'என் உயிர்த் தோழன்' நாயகி ரமா,  தன் மகளின் ஆசைக்கு தான் போட்டு வைத்திருக்கும் முட்டுக்கட்டையை உடைக்கும் இடத்தில் சொல்வார். உண்மைதான்... எத்தனை தடைகள் வந்தாலும் உடைச்சி எறிஞ்சிட்டு தன்னோட ஆசையை, கனவை அடைந்தே தீருவேன் என அடம்பிடிக்கத் தெரியணும். அப்படி அடம்பிடித்து தன் இலக்கை அடைந்தாரா கௌசி.

'ஜெயிக்கிறேன்னு சொன்னா இந்த உலகம் கேட்காது... ஆனா ஜெயிச்சவன் சொன்னா கேட்கும்' என இந்தியாவுக்காக களம் இறங்கப்போகும் அந்நாளில் குடும்ப பிரச்சினைக்காக கனவை தூக்கியெறிய நினைக்கும் போது பயிற்சியாளராக வரும் சிவகார்த்திகேயன் சொல்வார். இது உண்மையான, எதார்த்த வரிதானே... இந்த அறிவுரையை ஏற்றாரா கௌசி.

'என் பொண்ணு தமிழ் நாட்டுக்காக மட்டுமில்லை... இந்தியாவுக்காகவும் விளையாடுவாய்யா... விளையாட வைப்பேன்...' எனக் கேலி செய்யும் ஊரார் முன் விவசாயி சத்யராஜ் சபதம் போடுகிறார். அந்தச் சபதத்தை நிறைவேற்றினாரா கௌசி.

'சித்தி அவ எங்கூடத்தானே விளையாடுறா...' என விளக்குமாற்றால் அடித்து இழுத்துச் செல்லும் ரமாவிடம் கேட்கும் அண்ணனும், அவளுக்கு விளையாடச் சொல்லிக் கொடுக்கும் ஊர் உறவுகளான அண்ணனின் நட்புக்களும் விரும்பியதைச் செய்தாளா கௌசி.

'சார் எங்கப்பா இந்தியா தோத்துப் போனதும் அழுதார் சார்... நான் விளையாண்டு ஜெயிச்சி அவரைச் சிரிக்க வைக்கணும் சார்' என பள்ளியில் விளையாட்டு ஆசிரியரிடம் சொன்னபடி தன் ஆசையை, கனவை நிறைவேற்றி அப்பாவைச் சிரிக்க வைத்தாளா கௌசி.

தன்னை ஒதுக்கும் வடக்குக்கு முன் திறமையைத் தொலைக்காமல் அடித்து ஆடி களம் கண்டு தெற்கைத் தலை நிமிர வைத்தாளா கௌசி.

வயசுக்கு வந்த புள்ளயா லட்சணமா நடக்கத் தெரியிதா என முதுகுக்குப் பின்னே பேசும் ஊர்க்காரர்களுக்கு தன் லட்சணத்தை உயர்த்திக் காட்டினாளா கௌசி.

'பொட்டச்சிக்கிட்டயாடா அவுட்டானே' என்பவனிடம் 'நான் பார்த்ததை நீ பார்த்திருக்கணும்' என்று சொல்ல, களத்தில் இறங்கியவன்  'ஆமாடா பந்து ஆடி ஆடி வருதுடா'ன்னு சொல்ல அதன்பின்  அடிதடி, கலவரமென உள்ளூர்க் கிரிக்கெட் போட்டிப் பிரச்சினை காவல் நிலையம் செல்வதாய் ஆரம்பிக்கும் கதையில் தன்னைக் கேவலமாய்ப் பேசியவர்களுக்கு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பதில் சொன்னாளா கௌசி.

கிராமத்தில் பிறந்து வளர்ந்தவங்களுக்குத்தான் தெரியும்... அங்கிருக்கும் பெண்களின் நிலை. இன்று கிராமங்களில் இருந்து பெரும்பாலான குடும்பங்கள் நகரத்தை நோக்கி நகர்ந்து விட்டன. பெண்களும் கூட கிராமிய சூழலில் வளர்வதென்பது வெகுவாகக் குறைந்து விட்டது. அப்படி வளரும் பெண் சாதிக்கத் துடிக்கும் போது வந்து விழும் வார்த்தைகளை அனுபவித்த பெண்ணான கௌசி சாதித்தாளா..?

Image result for kanaa movie images

வயசுக்கு வந்தால்தான் என்றில்லை ஒரு குறிப்பிட்ட வயசுக்கு மேல் பசங்களுடன் விளையாடினால் 'ஏய்... வர்றியா.. வரவா...' என்ற குரல் வீட்டிலிருந்து கிளம்பி வரும். 'பொட்டச்சிக்கு பயலுகளோட என்ன விளையாட்டு' என்றும் 'உம்மவளக் கண்டிச்சி வையி... ஆம்பளப் புள்ளயளோட ஜோடி போட்டுச் சுத்துறா' என்றும் 'அடக்க ஒடுக்கமா இருடி..' என்றும் எத்தனையோ வார்த்தைகள் வசவுகளுடன் வந்து விழும். இதுதான் கிராமத்தின் உண்மையான பக்கம்... அதை அப்படியே காட்டியிருக்கிறார் இயக்குநர்.

'கனா'வில் கிரிக்கெட்டும் விவசாயமும் இணைத்துப் பேசப்படுகிறது. விவசாயம் சம்பந்தமாக கொஞ்சம் அதிகமாகப் போயிருக்கிறார்கள் என்றாலும் கதையே இல்லாமல் 'மாஸ்' காட்டாமல் அதைப் பேசியிருக்கிறார்களே அதுவும் சோறு போடும் விவசாயம் குறித்து கோடிகளில் புரளும் கிரிக்கெட்டை மையமாகக் கொண்ட கதையில் பேசியிருக்கிறார்களே... அதற்காக இயக்குநர் அருண்ராஜ் காமராஜைப் பாராட்டலாம்.

சில காட்சிகள் முரண் என்றாலும் முழுதாய்ப் பார்த்து முடிக்கும் போது முரணைப் புறந்தள்ளி 'ஜெயிச்சிட்டாடா கௌசி' என ஆரிப்பரிக்கிறது கண்ணீர்.

எத்தனையோ படங்களில் கிரிக்கெட் போட்டி பார்த்திருக்கிறோம்... பந்தை எல்லைக்கோட்டில் உருட்டி விட்டு நாலு என்பார்கள். தூக்கிப் போட்டு ஆறு என்பார்கள் ஆனால் இதில் அந்த மைதானக் காட்சிகளை நாம் நேரடியாகக் கிரிக்கெட் பார்ப்பது போல் மிகவும் பரபரப்பாக... 'ஆப் சைட்... ஆப்சைட் போடாதே... பின்னால போடு' என செமத்தியாகக் கொடுத்திருக்கிறார்கள். எடிட்டர் ரூபன் பாராட்டுக்குறியவர்.

விவசாயி முருகேசனாக சத்தியராஜ்... வானம் பார்த்த பூமியின் கிராமத்து விவசாயியாக வலம் வருகிறார். அப்பா செத்துக் கிடக்கும் போதும் ஸ்கோர் பார்க்கும் கிரிக்கெட் பைத்தியம் (இது கொஞ்சம் ஓவர்தான், செத்த வீட்டுல எங்கய்யா டிவி போடுவானுங்க... அதுவும் கிராமத்தில்). 

படிக்கும் காலத்தில்... கணிப்பொறி மையம் வைத்திருக்கும் போது நாங்களும் அப்படித்தான் திரிந்தோம். அபுதாபி வந்தும் இந்தியா - பாகிஸ்தான் உலககோப்பை போட்டி அன்று லெபனானி மேனேஜரிடம் கேட்டு விடுப்பு வாங்கிச் சென்று மேட்ச் பாத்தவங்கதான் என்றாலும் இப்போது கிரிக்கெட் மீதான பாசம் குஷ்பு, சிம்ரன் மீதான பாசம் போல அடியோடு குறைந்து விட்டது. ஆனா முருகேசன் இந்த வயசுலயும் பைத்தியமா இருக்காரு எங்கப்பா போல.... ஆமா இப்பவும் கிரிக்கெட்டுன்னா டிவிக்கு முன்னாலதானே கிடக்கிறார்.

கௌசி.... 

ஐஸ்வர்யா ராஜேஷ் எனக்கு இறுதி வரை 'கௌசி'யாத்தான் தெரிந்தார்.

என்ன நடிப்பு... ஒரு கிரிக்கெட் வீராங்கனையாக வாழ்தல் என்பது எளிதல்ல... தோல்வி, துரோகம், எள்ளல், என எல்லாவற்றையும் சுமந்து வைராக்கியத்தோடு முன்னேறி இந்தியாவுக்காக களம் இறங்கும் வரை... இல்லையில்லை விவசாயத்தையும் கிரிக்கெட்டையும் இணைத்துப் பேசுவது வரை கௌசி... கௌசிதான். 

ஒவ்வொரு படத்திலும் தன் திறமையை நிருபித்துக் கொண்டிருக்கும் ஐஸ்வர்யா, கனாவை தன் திறமையால் தனியே சுமந்திருக்கிறார். இது அவரது சினிமாப் பயணத்தில் மகுடம்...  ஒவ்வொரு காட்சியிலும் அவரின் உழைப்புத் தெரிகிறது. கடுமையான உழைப்பின் களைப்பை வெற்றி போக்கியிருக்கிறது.

இவரை 'பொம்பள விஜய் சேதுபதி'ன்னும் சொல்லலாம். ஆனா நல்லவரு வல்லவருன்னு ஒரு காலத்துல 'தல'யைச் சொன்ன மாதிரி கொஞ்ச நாளா இணையமெல்லாம் வி.சேயைப் புகழ ஆரம்பிக்கிறாங்க... எங்கிட்டுப் பார்த்தாலும் அவருதான்... சீதக்காதி இதுல மயங்கினாருன்னா அமுக்கிப் போட்டு சோலியை முடிச்சிடுவானுங்க.. சூதனமா அவரு இருக்கணும்... புகழ் போதை பொல்லாதது என்பதை உணர்ந்து வல்லவரு நல்லவரை விட்டு வெளியே வர வேண்டிய நேரமிது அவருக்கு. ஐஸ்வர்யா இன்னும் தொடரட்டும் தனது எதார்த்த, போராட்ட நடிப்பை... அதுவே மற்றவர்களிடம் இருந்து அவரைத் தனித்துக் காட்டும்.

எப்பவுமே பிடிக்காத சிவகார்த்திகேயனை இதில் பிடித்தது.. காமெடி செய்கிறேன் பேர்வழி என சூரியுடன் மொக்கை போடாமல் தனித்த பயிற்சியாளராய் பண்பட்ட நடிப்பு.

Actress Aishwarya Rajesh in Kanaa Movie Photos HD

உர வியாபாரி இளவரசு... மகளைக் கண்டிக்கும் கிராமத்து அம்மாவாக ரமா, கௌசியை ஒரு தலையாகக் காதலிக்கும் புதுமுகம் தர்ஷன், அவரின் நண்பர்கள், கிரிக்கெட் சொல்லிக் கொடுக்கும் ஊர் பசங்க, இன்ஸ்பெக்டராக வரும் ராமதாஸ் என எல்லாருமே சிறப்பாகச் செய்திருக்கிறார்கள்.

படத்தின் இசை அருமை... பாடல்கள் நல்லாயிருக்கு... இசையமைப்பாளர் திபு நிணன் தாமஸ் பின்னணி இசையில் பின்னிப் பெடலெடுத்திருக்கிறார். அதுவும் கிரிக்கெட் போட்டிக் காட்சியில் தூள்... பதற்றத்தை நம்முள் பத்த வைக்கிறார். அனிருத் போல பாத்திரங்களை உருட்டவில்லை என்பதைச் சொல்லித்தான் ஆகவேண்டும்.

முதல் படத்தில் விளையாட்டை மையமாக்கி விவசாயம் பற்றி பேசியிருப்பதற்கு தாராளமாக வாழ்த்துச் சொல்லலாம் இனியும் தரமான படங்களைக் கொடுங்கள் என்ற விண்ணப்பத்தோடு. 'அவனுக்கு எங்கயோ மச்சமிருக்கு'ன்னு யாரேனும் உங்கள் வெற்றி குறித்துச் சொன்னால் மயங்கி விடாதீர்கள் அருண்ராஜ்.

இப்படி ஒரு படத்தை எடுத்து தயாரிப்பாளராகவும் உயர்ந்திருக்கும் சிவகார்த்திகேயன், இன்னும் நல்ல படங்களைக் கொடுக்கட்டும். 

கனா - கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்... அதிலும் குறிப்பாக பெண் குழந்தைகளுடன் பார்க்க வேண்டிய படம்.

கணிப்பொறி இல்லாதது... கால் வலி குறையாதது என பாதிக்கப்பட்டிருந்தாலும் வேலையில்லாத நேரத்தில் ஏதேனும் எழுதலாமேயென அலுவலகத்தில் பொழுது போகாமல் தட்டச்சிய பதிவு இது என்பதை எல்லாருக்கும் முகநூலில் லைக் போடுறே, பதிவு எழுதுறே கேட்டா வீட்டில் கணிப்பொறி இல்லை, கால் வலிங்கிறேன்னு சொல்லி கோபப்படும் உறவுகளுக்காகவே இங்கு சொல்லிவிட வேண்டுமல்லவா. அப்புறம் அலுவலகத்தில் இதையெல்லாம் செய்யாதே என அட்வைஸ் பண்ண நினைத்தால் வேலையில்லாம 10 மணி நேரம் என்னய்யா செய்யிறது என்பதே என் பதிலாய் வரும்.
-'பரிவை' சே.குமார்.

வியாழன், 20 டிசம்பர், 2018

மனசு பேசுகிறது : கரும்புனல்

Image result for கரும்புனல்

ரும்புனல்

ராம்சுரேஷ் அவர்களின் கரும்புனல் நாவல் நிலக்கரி சுரங்கத்தின் கருப்புப் பக்கங்களை... நாம் அறிந்திராத அரசியலை... படிப்பறிவில்லாத மக்களின் வலியை... எந்த வித சமரசமும் இல்லாமல் பேசியிருக்கிறது. 

ஆரம்பம் முதல் இறுதிவரை அடுத்து என்ன நடக்கும் என்ற ஆவலோடும் அந்த மக்களுக்கு என்ன ஆகுமோ என்ற பதட்டத்தோடும் பயணிக்க வைக்கும் எழுத்து நடை.

மிகச் சிறந்த எழுத்தாளராய் வரவேண்டியவர் ஏன் அமீரகத்தில்  'பினாத்தல்' சுரேஷ் என தன்னைச் சுருக்கிக் கொண்டு ஒரு வட்டத்துக்குள் சிக்கிக் கொண்டார் அல்லது தன்னைச் சுற்றி ஒரு வட்டத்தை அமைத்துக் கொண்டார் என்பதுதான் புரியவில்லை. அண்ணே அந்த வட்டத்தை விட்டு வெளியே வாங்கண்ணே... நீங்க போட்டுக் கொண்ட வட்டம் உங்கள் பாதையில் பயணிக்க விடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்... உங்களிடமிருந்து இன்னும் நிறைய நாவலை எதிர்பார்க்கிறோம்.

வட மாநில அதிகாரிகளின் வெறிக்குப் பலியாடாய்ப் போகிறான் கோல் இந்தியா லீகல் ஆபீசர் சந்திரசேகர் என்ற சந்துரு.

நிலக்கரி சுரங்கத்துக்காக ஆதிவாசிகள் வாழும் உச்சிடி என்ற ஒரு கிராமத்தையே எடுத்துக் கொள்ள நினைக்கும் சாஹல் கோல்மைன்... அதற்கென இழப்பீடு தொகையாய் சில ஆயிரங்களை மக்களுக்குக் கொடுக்க நினைக்கிறது. மக்களோ வீட்டில் ஒருவருக்கு வேலை, இழப்பீட்டுத் தொகை மற்றும் பசுமை நிறைந்த ஜிர்க்கி என்னும் கிராமத்தில் இடம் என்ற மூன்று கோரிக்கைகளை வைக்கிறார்கள். 

ஆனால் அவர்களின் கோரிக்கையில் இரண்டை ஏற்றுக் கொள்ளலாம் என்று சொல்லும் அரசு, அதற்கான முயற்சியில் மட்டும் இறங்காமல் இழுத்தடித்துக் கொண்டே இருக்கிறது. காரணம் என்ன என யோசிக்கவே வேண்டியதில்லை... இதில்தான் ஒட்டு மொத்த அரசியலும் அடங்கியிருக்கிறது. அதைத்தான் நாவலும் பேசுகிறது.

ஆதிவாசி மக்களிடம் பேசுவதே தீண்டாமை என்று நினைக்கும் அதிகாரிகள் வர்மா, பானர்ஜி, சட்டர்ஜி என. அந்த மக்களிடம் பேசுவதற்கு என்றே வக்கீலான சந்திரசேகர் அனுப்பப்படுகிறார். அவருக்கு முதல் பார்வையிலேயே உச்சிடி நீலக்கண் தீபா மேல் காதல்... காதல் என்பது ஊறுகாய் போலத்தான்... கதை பேசுவது நிலக்கரிச் சுரங்கத்தையே.

தீபா... இவள் உச்சிடியில் பிறந்து கோயம்புத்தூரில் டிகிரி முடித்தவள். தங்கள் ஊரை எடுத்துக் கொள்ள நினைக்கும் அரசுக்கு எதிராக தாங்கள் கேட்கும் மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தி மக்களுக்காக... மக்களை ஒருங்கிணைத்துப் போராடும் லோபோவின் முறைப்பெண். இவளும் போராளியே. முரட்டுத்தனமில்லாமல் போராட வேண்டும் என்று நினைப்பவள். சந்துருவை கணவனாக அடைய நினைப்பவள்.

லோபோ... குடிகாரன்... முரடன்... மக்களுக்காகப் போராடுபவன். தீபாவின் பேச்சுக்கு அடிபணிபவன்... அரசு அதிகாரிகளை வெறுப்பவன்... இவனை வழக்கில் மாட்ட வைத்து தங்கள் காரியத்தை முடிக்க நினைக்கும் அதிகாரிகளை கருவறுக்கிறான் இறுதியில்... மாவோயிஸ்ட் தீவிரவாதியாக...

எந்த ஊர் என்றாலும் நல்லது செய்ய நாலு பேர் இருந்தால் தூக்கிப் போடும் பிஸ்கெட்டுக்கு வாலாட்டும் ஒருவன் இருக்கத்தான் செய்வான். அப்படி ஒரு கிழவன் இருக்கிறான் உச்சிடியில்... எல்லாரும் ஜிர்க்கி போக, இவன் மட்டும் வேறு இடம் போகிறான் அரசின் உதவியுடன்.

போட்டிருக்கும் சட்டையெல்லாம் கருப்புப் பொடியா இருக்கேன்னு உதறிப்போட்டா மறுபடியும் பொடி படியத்தானே செய்யும்... இந்தக் கருப்பு உதறினால் போகக்கூடியதா என்ன...? அப்படியான கருப்புப் பிடித்த அதிகாரிகள்... அவர்களின் குறுக்குப் புத்திகள்... தாங்கள் நினைத்ததைச் சாதிக்க நடத்தும் குள்ளநரி நாடங்கள் என விரிகிறது நிலக்கரிச் சுரங்கத்தின் புகை கரும்புனலாய்...

டீசல் திருடும் போலீஸ் எதிர்த்துக் கேட்டவன் மீது வழக்குத் தொடுப்பதும்... ரோட்டில் நடந்து செல்லும் சந்துருவை சந்தேகப்பட்டு பிடித்து வருவதும்... அதன் பின்னான போராட்டங்கள்... போலீஸ் நிலைய எரிப்பு... போலீசார் மரணம் என கதை விரியும் போது தொடர்ந்து வாசிக்க வேண்டும் என்று தோன்றுவதை கரும்புனலை வாசிக்க நேர்ந்தால் உணர்வீர்கள்.

ஜார்க்கண்ட் உருவாவதற்கு முன் நிகழ்ந்த நிகழ்வுகள்தான் காட்சியாய் விரிகிறது. கிராமத்துக்கு கீழே இருக்கும் சுரங்கத்துக்குள் சந்துரு போகும் போது அவனுக்கும் அவனைக் கூட்டிச் செல்லும் நண்பனுக்குமான உரையாடலில் நமக்குத் தெரியாத நிறைய விஷயங்களை அறிய முடியும். 

வேலை தருவதாகச் சொல்லி நூறு கிலோமீட்டருக்கு அப்பால் டீக்குடுக்க, தண்ணீர்க் கொடுக்க... என வேலை கொடுப்பதையும்... இடம் தருவதாகச் சொல்லி ஒண்ணத்துக்கும் உதவாத மலையடிவார பாறை நிலங்களைக் கொடுப்பதையும் கதை வழியே நம்மிடம் சொல்லிச் செல்கிறார். நாமும் வாசிக்கிறோம் வலியுடனும் மலை உச்சியில் டீக்கடை வைத்து 50 பைசாவுக்கு டீக்கொடுக்கும் கிழவனின் மனநிலையுடனும்.

ஒரு கிராமத்தை அழிக்க ஓடும் ஆற்று நீரை அரசு அதிகாரிகளால் நிறுத்தி வைக்க முடியும் என்பதையும் நிலக்கரி சுரங்க அதிகாரிகள் தாங்கள் நினைத்ததை எல்லாம் செயல்படுத்துவார்கள் என்பதையும் படிக்கப் படிக்க இப்படியும் மனிதர்களா... இப்படியெல்லாம் செய்வார்களா என்று யோசிக்க வைத்ததுடன் சக மனிதனை மனிதனாகப் பார்க்காதவர்களை நினைத்து வருத்த வைத்தது.

இறுதிப் பக்கங்களை திக்... திக்... மனதோடுதான் வாசிக்க முடியும். அழிவும் அதன் பின்னான வன்முறைகளும் பதைபதைக்க வைக்கிறது. 

தீபா - சந்துரு காதல் கதையின் போக்கில் சினிமாத்தனம் என்றாலும் அந்த நீலக்கண்கள் பிழைத்துப் போகட்டும் என சொல்லி கண்ணீரோடு இறங்கும் போது சில நிமிடங்கள் அப்படியே உறைந்து உட்கார வைத்து விட்டது.

மாவோயிஸ்ட் எப்படி உருவாகிறார்கள்... உருவாக்கப்படுகிறார்கள் என்பதையும் கதை சொல்லிச் செல்கிறது.

பலரின் அரசியல் பசிக்கு... கோடிகளை சுருட்டுவதற்கு... சந்துரு என்னும் அப்பாவி பலியாடாக்கப்படுகிறான். அவனின் பார்வையிலேயே கதை விரிந்தாலும் இறுதிவரை அவன் நாயகனாக நிறுத்தப்படவில்லை. கதையில் போக்கில் எல்லாருமே சிறப்பான இடத்தைத்தான் பிடிக்கிறார்கள் கமல் பட கதாபாத்திரங்களைப் போல.

சுரேஷ் அண்ணா... ஒரே ஒரு வேண்டுகோள் நீங்கள் இன்னும் நிறைய எழுத வேண்டும் நிலக்கரி அரசியல் குறித்து... இதில் விரிவாகச் சொல்லக் களமில்லை என்றாலும் நிறைவாய்ச் சொல்லியிருக்கிறீர்கள்.

நண்பர்களே... முடிந்தால் அல்ல விருப்பத்துடன் கரும்புனலை வாசிக்க முயலுங்கள். ஒரு வித்தியாசமான நாவலை வாசித்த அனுபவம் கிடைக்கும்.

நிலக்கரி சுரங்கத்துக்குள் பயணித்த அனுபவத்தையும் ஒரு கிராமம் அரசியலுக்காகவும் தங்கள் வருமானத்துக்காகவும் எப்படி அழிக்கப்படுகிறது என்ற 'பய'ங்கர அனுபவத்தையும் ஒரு சேரப் பெறலாம் 'கரும்புனல்' என்னும் அருமையானதொரு நாவலை வாசிக்கும் போது. 

அவரின் அடுத்தடுத்த நாவல்களும் வாசித்தேன் செமையா இருந்தன... 

அண்ணா தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்.

லாப்டாப் உறங்கி ஒரு மாதத்துக்கு மேலாச்சு... கையில் இப்போது சிஸ்டம் இல்லை... அலுவலகத்தில் மாலை வேலையில்லாத போது வேகமாய் தட்டச்சியது. தவறுகள் இருந்தால் பொறுத்தருள்க.

கரும்புனல் 
வம்சி பதிப்பகம்
விலை : 170 ரூபாய் 
-'பரிவை' சே.குமார்.

செவ்வாய், 4 டிசம்பர், 2018

சிறுகதை : சன்னலோரம்

முத்துக்கமலம் இணைய இதழில் தீபாவளி புதுப்பித்தல் பகுதியில் வெளியான எனது சிறுகதை. 

நன்றி முத்துக்கமலம் ஆசிரியர் குழு.

முத்துக்கமலத்தில் வாசிக்க 'சன்னலோரம்'

****
Related image
திருச்சி செல்லும் பேருந்தில் சன்னலோர இருக்கையில் அமர்ந்திருந்தேன். எனக்கு எப்பவுமே இருவர் அமரும் இருக்கையில் சன்னலோரம் அமர்ந்து பயணிப்பது மட்டுமே பிடிக்கும். பெரும்பாலும் வேலை நிமித்தமாக நான் அடிக்கடி நீண்ட தூரம் பயணிக்க வேண்டியிருக்கும் என்பதால் எப்பவுமே என்னோட சாய்ஸ் சன்னலோர இருக்கைதான்... லேசா சன்னலைத் திறந்து வைத்தால் முகத்தில் அடிக்கும் காற்று... கடந்து செல்லும் அசையும் அசையாப் பொருட்கள்... மனிதர்கள்... என ரசிப்போடும்... களிப்போடும் பயணிப்பதில் ஆர்வம் அதிகம்.

சில நேரங்களில் இருவர் அமரும் சீட்டில் சன்னலோரம் அமர்ந்த பின்னர் நம்மருகில் யாருமே அமர மாட்டார்கள். அப்போதெல்லாம் எங்கே நம்மை எழச் சொல்லி விடுவார்களோ என்ற நினைப்போடு பேருந்துக்கு உள்ளே பார்ப்பதைத் தவிர்த்து வெளியில் விழிகளை ஓட்டுவேன்.

எனக்குப் பிடித்தது சன்னலோர இருக்கை அதை யாரோ ஒருவருக்கு விட்டுக் கொடுத்துட்டு உள்ளிருக்கையில் அமர்ந்து கூட்ட நெரிசலில் அழுக்கப்பட்டு... அழுத்தப்பட்டு... பிழிந்து எடுக்கப்பட்டு... பின்னர் கசங்கிய சட்டையோடும் உடலோடும் இறங்குவதில் எனக்கு எப்பவும் விருப்பம் இருந்ததில்லை.

இப்படித்தான் ஒருமுறை மதுரைக்குச் செல்லக் காரைக்குடியில் ஏறினேன். பேருந்துக்குள் ஏறியதும் இருக்கைகளைப் பார்த்து முன் சக்கரத்துக்கும் பின் சக்கரத்துக்கும் இடையிலான இரண்டு பேர் அமரக்கூடிய இருக்கையைத் தேர்ந்தெடுத்து அமர்ந்து கொண்டேன். 

பேருந்தில் அவ்வளவாகக் கூட்டமில்லை என்றாலும் பெரும்பாலான சன்னல் இருக்கையை ஆண்களும் பெண்களும் ஆக்கிரமித்து இருந்தார்கள். அப்போது ஒரு இருபது வயது மதிக்கத்தக்க பெண் ஒருத்தி ஏறினாள். சுற்றும் முற்றும் பார்த்தவள் நேராக என் இருக்கை அருகே வந்து 'எக்ஸ்கியூஸ் மீ...' என்றாள். நானோ அப்போதுதான் மொபைலில் முக்கியமாய் எதையோ தேடுவது போல் நோண்டிக் கொண்டிருந்தேன். அவள் மீண்டும் 'எக்ஸ்கியூஸ் மீ சார்... உங்களைத்தான்' என்றாள்.

"என்னையா...? உங்களுக்கு என்ன வேணும்...?" என்று அவளை அண்ணாந்து பார்த்துக் கேட்டேன்.

"நீங்க கொஞ்சம் மாறி உக்காரமுடியுமா...?" என்றாள்.

"மாறி உக்காரணுமா..? ஏன்..? பஸ்ல சீட் இல்லையா?" எழுந்த கோபத்தை அடக்கியபடி கேட்டேன்.

"இப்படி எல்லாச் சீட்டுலயும் ஒவ்வொரு ஆளா உக்காந்துக்கிட்டா வர்றவங்க எங்க உக்கார்றதாம்..."

நான் என் மடியைப் பார்த்தேன்... உடனே அவள் என்னைப் பார்த்து முறைத்தாள்.

"மேடம் பஸ்ல இடமில்லைன்னா பரவாயில்லை... அதான் நிறைய சீட் காலியாத்தானே இருக்கு... முன்னாடி மூணு பேர் அமர்ற இருக்கையில எல்லாம் ரெண்டு பேர்தானே இருக்காங்க... அங்க போயி உக்காருங்க... அதென்ன குறிப்பா.. என்னமோ நீங்க சீட் போட்டிருந்து அதுல நான் உக்காந்த மாதிரி எங்கிட்ட வந்து நிக்கிறீங்க.. அப்படி சன்னலோர சீட்டுதான் வேணுமின்னா... கண்டக்டருக்கிட்ட போயி கேளுங்க..." என்று சொல்லிவிட்டு மீண்டும் மொபைலை நோண்ட ஆரம்பித்தேன்.

சிறிது நேரத்தில் கண்டக்டர் என் அருகில் வந்து "சார்... கொஞ்சம் மாறி உக்காருங்க " என்றார்.

"எதுக்கு சார்... நான் காசு கொடுத்துத்தானே பயணிக்கிறேன்... எனக்கு எந்த இருக்கை வேணுமோ அதில் பயணிக்க உரிமை இருக்கா இல்லையா... அதுக்காக ஒரு இடத்தைப் பிடிச்சி... அதுல உக்காந்த பின்னால யாரோ ஒருவருக்காக நான் ஏன் இடம் மாறனும்... அப்படி எதுவும் ரூல்ஸ் வச்சிருக்கீங்களா...? மாறி உக்காந்தா டிக்கெட் ரேட்ல டிஸ்கவுண்ட் தருவீங்களா..?" என்றேன்.

"சார்... விதண்டவாதம் பேசாதீங்க... எல்லா சீட்டுலயும் ஒவ்வொரு ஆளா உக்காந்தா எப்படி சார்... கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணுங்க சார்..."

"அது சரி... இந்த சீட்ல பயணம் செய்யலாம் அப்படின்னு ஒரு மனநிலைக்கு வந்த பின்னால இப்ப ஏறிக்கிட்டு இடமாறி உக்காரச் சொல்றவங்களுக்கு முன்னுரிமையின்னா நான் எதுக்கு பதினைந்து நிமிடமா உங்க பேருந்துல ஏறி உக்காந்திருக்கணும்... கிளம்பும் போது ஏறி இருக்கலாமே... இதே ஒரு பொம்பளை உக்காந்திருந்து நான் வந்து மாறி உக்காருங்கன்னு சொன்னா விட்டிருப்பாங்களா... நீங்க கூட மாறி உக்காரச் சொல்லுவீங்களா...? ஏன் பஸ்ல இருக்கவங்களே இவ்வளவு இடம் கிடக்கையில நீங்க ஏன் சார் அங்க போயி நிக்கிறீங்கன்னு எனக்கு அட்வைஸ் பண்ணுவாங்க..."

"என்ன சார் படிச்ச நீங்களே இப்படிப் பேசுறீங்க... பாருங்க... நிறைய லேடீஸ் ஏறுறாங்க... ஜென்ஸ் ஒவ்வொரு ஆளா உக்காந்திருந்தா அவங்களை நான் எப்படி உக்கார வைக்கிறது சொல்லுங்க.... முன்னாடி இருக்கிற சீட்டுக்கு மாறுறதால உங்களுக்கு என்ன பிரச்சினை சார்..."

"ஓகே... சார்... நான் விரும்புற சீட்டுல பயணிக்கத்தான் எனக்கு விருப்பமே தவிர, உக்காந்த சீட்ட மத்தவங்களுக்கு கொடுத்துட்டு நீங்க உக்காரச் சொல்ற இடத்துல உக்காந்து பயணிக்க எனக்கு இஷ்டமில்லை சார்... அவங்க உக்காரட்டும்..." என்றபடி எழுத்து பேருந்தைவிட்டு இறங்க, "சார்... சார்... முன்னால சீட்ல உக்காருங்க சார்... அடுத்த பஸ் இருபது நிமிஷம் ஆகும் சார்...' என கண்டக்டர் முதுகுக்குப் பின்னே கத்திக் கொண்டிருந்தார்.

என்னடா இவன் சீட் மாறி உக்காந்தா என்னன்னு நீங்க யோசிக்கலாம்... ஒரு பெரியவர் வந்து தம்பி எனக்கு சன்னல் பக்கம் உக்காந்தாத்தான் வாந்தி வராது என்றாலோ... சன்னல் சீட்டா இருந்தா குழந்தை வேடிக்கை பார்த்துக்கிட்டு வருவான் அழமாட்டான் என்றாலோ... மாறிக் கொடுப்பவன்தான் நான்.. ஆனால் சீட் இருக்கும் போது வீம்புக்குன்னே வந்து நிக்கிறவங்களுக்கு நான் எப்பவும் இறங்கிப் போவதில்லை... அது என் குணமும் இல்லை. 

பேருந்து மெல்ல நகர ஆரம்பித்தது... ஒரு சில இருக்கைகள் தவிர மற்ற இருக்கைகளில் ஆட்கள் அமர்ந்திருந்தார்கள். எனக்கு அருகே காலியாக இருந்தது. 'யாராச்சும் வந்து உக்காந்துட்டா தேவலாம்... இல்லேன்னா எதாச்சும் லேடீஸ் வந்தா மாறி உக்காருங்கன்னு சொல்லுவானுங்க... அப்புறம் சண்டை போட வேண்டி வரும்' என்று நினைத்தபோது ஒரு பெரியவர் அருகில் வந்து அமர்ந்தார். அவருக்கு 70 வயசு இருக்கும். என்னைப் பார்த்து சிநேகமாகச் சிரித்தார்.

பேருந்து வேகமெடுக்க ஆரம்பிக்க, டிவியில் மருது படம் ஓட ஆரம்பித்தது. 

படம் பார்க்கும் எண்ணமின்றி வெளியில் வேடிக்கை பார்த்துக் கொண்டு வந்தேன்.

"என்ன தம்பி... படம் பிடிக்கலையோ... வெளியில பாத்துக்கிட்டு வாறீக...?" என்றார் பெரியவர்.

"பாத்த படம்தான் ஒரு தடவைக்கு மேல பாக்க முடியாது... அதான்"

"இப்ப எல்லாப் படமும் அப்படித்தானே இருக்கு..." என்றவர் டிஏஎஸ் பட்டணம் பொடி பட்டையை இடைவாரில் இருந்து எடுத்தார். "தூக்கம் வராம இருக்க பொடிப் போடுவேன்... உங்களுக்கு எதுவும் தொந்தரவு இல்லையே..." என்றார்.

"பிரச்சினையில்லை..." என்றதும் கொஞ்சம் பொடியை விரலால் கிள்ளி எடுத்து மூக்கில் வைத்துச் சர்ரென்று உறிஞ்சினார். 

அவர் கையை உதறியபோது எனக்குத் தும்மல் வந்தது.

கொஞ்ச தூரம் சென்றதும் நிஜாம்லேடி புகையிலை பாக்கெட் எடுத்து அதிலிருந்து கொஞ்சம் எடுத்து கையில் வைத்து உருட்டி, வாய்க்குள் அதக்கிக் கொண்டார். 

அதன்பிறகுதான் அவரின் ஆட்டம் ஆரம்பமானது... 

பேருந்து ஏதாவது ஸ்டாப்பிங்கில் நிற்கும் போதெல்லாம் என் மீது படுத்து வெளியே எச்சிலை துப்ப ஆரம்பித்தார். வாய்க்குள் எச்சிலோட கொதகொதவென பேச ஆரம்பித்தார். எனக்கு கோபம் தலைக்கேறியது பெரிய மனுசன் என்பதால் பேசாமல் அமர்ந்திருந்தேன். 

திருமயம் தாண்டியது மெல்ல தோள் சாய்ந்தார்... தட்டி விட்டுப் பார்த்தும் மறுபடியும் தோளில் சாய்ந்து தூங்க ஆரம்பித்தார்.... மெல்லிய குறட்டையோடு.... 

நான் எப்போதும் என்மீது சாய்ந்து தூங்க யாரையும் அனுமதிப்பதில்லை. அது எனக்குப் பிடிப்பதுமில்லை... கோபம் தலைக்கேறினாலும் பெரிய மனிதர் என்பதாலேயே அவரை தட்டித் தட்டி விடிவதோடு நிறுத்திக் கொண்டேன். 

புதுக்கோட்டை போவதற்குள் போதும் போதுமென ஆகிவிட்டது. 'தம்பி உங்களுக்கு தொந்தரவு கொடுத்துட்டேனோ...?' என்று சிரித்தபடி அங்கு இறங்கினார். 

இப்போது பக்கத்தில் ஒரு அறுபது வயது மதிக்கத்தக்க ஆயா வந்து அமர்ந்தது... கையில வேற வெத்தலைப் பெட்டி வச்சிருக்கதைப் பார்த்ததும் ‘ஆஹா புதுக்கோட்டை வரை புகையிலை பார்ட்டி... இனி வெற்றிலை பார்ட்டி இன்னைக்கு யார் முகத்துல முழிச்சமோ தெரியலை’ என்று நினைத்த எனக்குள் பக்கத்து வீட்டு புஷ்பா வந்து சிரித்தாள்... சேச்சே... புஷ்பாவைப் பார்த்துட்டுப் போனா அன்னைக்கு சக்ஸஸ்தான் என நினைத்துக் கொண்டேன்... காரணம் அவ நம்ம ஆளாச்சே.

சரி சன்னலோரமா ஒண்டிக்க வேண்டியதுதான் என சன்னலோடு ஐக்கியமாக...

பேருந்தின் வேகத்தில் காற்றுத் தாலாட்ட... 

தூக்கம் மெல்லக் கண்களை அணைக்க ஆரம்பிப்பதை உணர்ந்தேன்... 

என் தலை மெல்ல அருகிலிருந்த ஆயாவின் தோள் சாய்ந்தது.

- 'பரிவை' சே.குமார்.

புதன், 28 நவம்பர், 2018

மனசு பேசுகிறது : காலம் மாறிவிட்டது

கல் மின்னிதழ் தீபாவளி மலரில் வெளியான எனது கட்டுரை. வெளியிட்ட நண்பரும் அகல் மின்னிதழ் ஆசிரியருமான எழுத்தாளர் கணேஷ் (சத்யா) அவர்களுக்கு நன்றி.


காலம் மாறிடுச்சு என்ற எஸ்.ரா.வின் கட்டுரை ஒன்றை வாசித்தேன்... மாடுகள் குறித்தும் கிராமங்களில் காணாமல் போன வாழ்க்கை குறித்தும் எழுதியிருந்தார். ஆம்... அதுதான் உண்மை. இன்றைய கிராமங்களின் நிலை மிகவும் மோசமாகத்தான் இருக்கிறது அதன் சுயம் இழந்து வெற்றிடமாய் நிற்கிறது.

கிராமம் என்றாலே மாடு, ஆடு, கோழி, விவசாயம் என்பதாய் தான் நம் கண் முன்னே விரியும்... சிறிய கிராமம் என்றில்லை பெரும்பாலான கிராமங்களில் இன்று இவை எதுவுமே இல்லை... ஏன் பெரியவர்கள் தவிர இன்றைய தலைமுறையில் 80% பேர் கிராமங்களில் இல்லை என்பதே உண்மை. சினிமாவில் காட்டப்படும் கிராமங்கள் சில இடங்களில் இருக்கலாம்... கிராமங்கள் தன் தனித்தன்மை இழந்து விட்டன என்பதே உண்மை.

எங்க ஊரையே எடுத்துக்கலாம்...

மிகச் சிறிய ஊர்... நாலு பங்காளிகள் என்றாலும் எல்லாருமே உறவுதான்... சின்னச் சின்ன சண்டைகள் வந்தாலும் நீண்ட நாள் நீடிப்பதில்லை... மொறப்பாடு என்பதும் இன்னும் இருக்கத்தான் செய்கிறது... அப்படியான வீடுகளுக்குள் எதையும் பகிர்ந்து கொள்வதில்லை... சாப்பிடுவதில்லை என்றாலும் பேச்சு இருக்கும்.

அப்போது எல்லாருடைய வீட்டிலும் பசு அல்லது எருமை மாடுகள் இருக்கும்... மாடு இல்லாத வீடு என்பது அரிது. கசாலைகளும், மாட்டுக் கொட்டில்களும், கூட்டு வண்டி மொட்டை வண்டிகளும் பெரும்பாலான வீட்டில் இருக்கும்.

எங்கள் வீட்டில் கூட எனக்குத் தெரிய காளை மாடுகள் இருந்தன... எருமை மாடுகளும் இருந்தன... எங்க அப்பாவின் அம்மா (அப்பத்தா) வீட்டிலேயே பிறந்த நரை எருமையும் அதன் வாரிசுகளும் எங்க வீட்டில் இருந்தன. அதில் ஒன்று வெள்ளை நிறத்திலான எருமை... மனிதர்களில் வெள்ளையாய் பிறந்தால் குறைபாடு என்பார்கள்... அப்படி எங்க ஊருக்கு அருகே இருக்கும் ஊரில் அக்கா, தம்பி இருவரும் பிறந்திருந்தார்கள். மனிதரைப் போல மாட்டிலும் குறைபாடோ என்னவோ... அது வெள்ளை எருமைதான்... எங்களுக்கு ‘வெள்ளச்சி'. வெள்ளச்சி எனக் குரல் கொடுத்தால் எங்கிருந்தாலும் 'ம்மா' என்ற எதிர் குரலோடு நம்மை நோக்கி வரும். அதை விற்கும் போதெல்லாம் நாங்க அழுத அழுகை இருக்கே... மாடும் எங்களில் ஒன்றுதான்.

எங்க வீட்டின் பின்னே மாட்டுக் கசாலை... வைக்கோல் வைத்திருக்கும் வைக்கோல் படப்புக்கள் ஊரணிக்கு அருகே இருக்கும். மாலை நேரங்களில் வைக்கோல் அள்ள படப்புக்குப் போக வேண்டும். விடுமுறை தினங்களில் மாடு மேய்த்தல் என்பது விரும்பிச் செல்லும் வேலையாக இருக்கும். அதுவும் கதிர் அறுப்புக்குப் பின்னர் என்றால் சிதறிய நெல் கதிரைப் பொறுக்கி துண்டில் போட்டு கல்லால் இடித்து உமி ஊதித் தின்பதும், கூட்டாஞ்சோறு சமைப்பதும் என இப்போது நினைத்தாலும் மனசு குதியாட்டம் போடும் நிகழ்வுகள் அவை.... அதையெல்லாம் மறக்க முடியுமா..?

கல்லூரிக்குச் செல்ல ஆரம்பித்த போது வீட்டில் எருமைகளை வைத்துப் பார்ப்பது கடினமாக இருக்கிறது... ஒரு ஆள் தேவைப்படுது மேய்ப்பதற்கு... தினமும் ஒருவரிடம் சொல்லி விட முடியாது... காணாமல் போனால் தேடிப்பிடிப்பது சிரமமாக இருக்கிறது என அம்மா சொல்ல ஆரம்பிக்க, எருமைகள் வாழ்ந்த கசாலைக்குள் பசுக்கள் குடிபுகுந்தன.

கோழிகளைப் பொறுத்தவரை எல்லார் வீட்டிலும் கோழிக்கூடு இருக்கும்... அதில் நிறைய நாட்டுக்கோழிகளும் இருக்கும். எங்க வீட்டில் நூறு கோழிகளுக்கும் மேல் இருந்தது. எங்க அண்ணனின் திருமண வீடியோவில் ஆரம்பமே எங்களது இரட்டைச் சேவல்கள் ஒன்றோடொன்று பேசிக் கொண்டிருப்பதில்தான் ஆரம்பிக்கும்... இரண்டும் மயில் போல் இருக்கும் அவ்வளவு அழகாய்... கோழிகள் குஞ்சு பொறித்து இருக்கும் போது கரையானுக்காக வயல்களுக்குள் காய்ந்த சாணிகளைத் தேடி சென்ற நாட்கள் இன்னும் இளமையாய்.

கோழிகளுக்கு சீக்கு வராமல் இருக்க சனிக்கிழமைகளில் அருகிலிருக்கும் மாட்டாஸ்பத்திரியில் போய் ஊசி போட்டு வருவோம்... அப்படியும் சீக்கில் அள்ளிக் கொடுத்து விடுவோம். அப்போது இப்ப போல விலை இல்லை... பெரும்பாலும் விற்பதும் இல்லை. விருந்தினர் வந்தால், திருமணமான அக்கா வந்தால், திருவிழா... பண்டிகைகள் என்றால் எல்லாவற்றுக்கும் நாட்டுக்கோழி ரசம்தான். இப்ப வளர்ப்பவர்கள் எல்லாம் விற்பனையையே பிரதானமாக்கி விட்டார்கள். அடிச்சு சாப்பிடுவதைவிட அஞ்சு காசு பாக்கலாம் என்பதாய்! இன்று நாட்டுக் கோழிகளின் விலை மிக அதிகமாய்...

பசு மாடுகள் எங்கள் வீட்டில் மட்டுமல்ல.. ஊருக்குள் பெரும்பாலான வீடுகளுக்கு வர ஆரம்பித்துவிட்டன. எருமைகள் மெல்ல ஒழிந்தன. பசுவ மாட்டை வயலில் ஓரிடத்தில் கட்டிப் போட்டும் மேய்க்கலாம் என்றாலும் சில காலங்களுக்குப் பிறகு அதையும் பார்க்க முடியவில்லை என்ற புலம்பல் மெல்ல எழ ஆரம்பித்தது. காரணம் வயோதிகம். எல்லாரும் படிப்பு முடித்து வேலைக்காக வெளியில் செல்ல ஆரம்பித்ததும்தான்... அம்மா மட்டுமே வீட்டில் என்றாகிப் போனதே முக்கியமானதாய்! எங்க வீட்டில் பசு மாடுகளும் இல்லை என்றானது. கசாலையும், மாடுகள் தண்ணி குடித்த கல் குலுதாளியும் (தொட்டி) காட்சிப் பொருளாகிப் போனது.

இடையிடையே வெள்ளாடுகள் வளர்க்கப்படும். பின் வயலில் இருக்கிற மரங்களை எல்லாம் ஒடித்து ஆட்டுக்குப் போடுகிறார்கள் எனச் சண்டை வரும். அதன் பின் ஊர் கூட்டம். ஆடு வளர்க்கக் கூடாதென முடிவு... பின் கொஞ்ச நாள் ஆடுகள் ஒழிக்கப்படும். மீண்டும் யாரோ ஒருவர் ஒரு குட்டியைக் கொண்டு வருவார்... பின் அவன் மட்டும்தான் வளர்ப்பானா என மெல்ல மெல்ல ஊருக்குள் பல்கிப் பெருகும்... மீண்டும் பிரச்சினை... ஊர் கூட்டம்... கட்டுப்பாடு.... இப்படியாய் தான் நகரும்.

வீட்டுக்கு ஒன்று இரண்டென நாய்கள் இருக்கும். அவை எல்லாம் சில நேரங்களில் கோவிலின் அருகே சண்டை போடும். மனிதர்களைப் போல குழுவாய்ச் சேர்ந்து மல்லு கட்டும். அப்பிராணியாய் மாட்டும் நாய் அன்னைக்குச் சட்னிதான். வேடிக்கை பார்க்கும் எங்கள் கூட்டத்தில் இருந்து நாய்கள் மீது கற்கள் பறக்கும். அடிபட்டு 'வீல்' என கத்தியோட சண்டை முடிவுக்கு வரும். எங்க வீட்டில் ராஜா என்பவன் ஆள்களைக் கடிக்கிறான் என தொன்றிக்கட்டை போட்டு வளர்த்தோம். அதையும் வாயில் கடித்துக் கொண்டு ஆட்களை விரட்டியிருக்கிறான். கடித்தும் இருக்கிறான். ஒரு ஞாயிற்றுக் கிழமை எங்க பெரியப்பா மகனின் தூக்குக் கயிற்றுக்கு இரையாகும் வரை அவனின் ஆட்டம்தான். அதன் பின் நாய் வளர்ப்பதில்லை. இப்ப என் மகன் ரோஸி என்று ஒருத்தியை வளர்த்து வருகிறான்.

ஆடு, மாடு, கோழி, நாய் என இல்லாத கிராமத்து வாழ்க்கை சுவைப்பதில்லை. அதேபோல் விவசாய காலத்து மடை மாற்றிய சண்டைகள், மாடு இறங்கிய சண்டைகள் இல்லாத கிராமத்து வாழ்க்கையை யாரும் வாழ்ந்திருக்க முடியாது. மாலை நேரங்களில் கூ... கூவென அதக்குடிக்கி.... இதக்குடிக்கி என கிராமத்துக்கே உரிய கெட்டவார்த்தைப் பிரயோகங்களுடன் நடக்கும் சண்டைகளைப் பார்க்க கொடுத்து வைத்திருக்க வேண்டும். இன்று விவசாயமும் இல்லை... மாடுகளும் இல்லை... அந்தச் சண்டைகளும் இல்லை... குறிப்பாக அந்த மனிதர்களில் பெரும்பாலானோர் இல்லை.

மாலை நேரத்தில் சிறுவர்கள், இளைஞர்கள் என எல்லாரும் கூடுமிடம் எங்க ஊர் மாரியம்மன் கோவில். அப்போது கோவில் திண்ணை எல்லாரும் ஆட்டம் போடும் இடமாக... அங்குதான் ஆட்டம், பாட்டம், கபடி, பம்பரம், கோலிக்குண்டு, கிட்டி, நொண்டி,அடிதடி எல்லாமே நிகழும்.வீட்டிலிருந்து 'டேய் சாப்பிட வாடா' என்றும் 'வாரியா... வரவா...' என்றும் 'கூப்பிடுறது கேக்குதா இல்லையா வந்தேன் வெளக்குமாறு பிஞ்சிரும்' என்றும் குரல்கள் வந்தால்தான் ‘கண்டு பிடிச்சி விளையாடும்’ விளையாட்டு முடிவுக்கு வந்து வீடு செல்வது வழக்கம். இன்று அம்மன் கோவில் திண்ணை அடைப்புக்குள்... விளையாட பசங்க இல்லை... எல்லாமே வெறுமையாய்...

கம்மாயில் முழங்கால் அளவு தண்ணீர் இருந்தாலே மணிக் கணக்கில் குளிப்போம். இன்று ஒரு ஆள் மட்டம் தண்ணீர் இருந்தாக்கூட சிலரே குளிக்கிறார்கள். பலருக்கு அந்தத் தண்ணீர் ஒத்துக் கொள்வதில்லை. நான் உள்பட! என் குழந்தைகள் அதில் இறங்குவதேயில்லை.

பொதிக் கணக்கில் விளைந்த வயல்கள் எல்லாம் கருவை மரங்களின் பிடியில். ‘ஊடு வரப்பை நல்லாக் கட்டுப்பா தண்ணியும் வெளிய போகக்கூடாது. அடுத்த வயக்காரன் நடந்து போக வேண்டாமா’ என்று வரப்பு வெட்டும் போது சொல்வார்கள். இன்று ஊடு வரப்பு மட்டுமல்ல சைக்கிளே போகலாம் என்றிருந்த முக்கியமான வரப்புகள் கூட இருந்த இடம் தெரியவில்லை.

வீட்டின் முன்னே கொட்டகை போட்டு பத்து பதினைந்து நாட்களாய் ஊராரும் உற்றாரும் வேலை பார்த்து திருமணம் முடிந்தும் சில நாட்கள் உறவுகள் எல்லாம் ஒன்றாய் இருந்து மகிழ்ந்தது என்னும் கிராமத்து திருமணங்கள் இப்போதெல்லாம் கிடைப்பதே இல்லை. ஆம் எல்லாமே நகரத்து மண்டபங்களுக்குள் அமிழ்ந்து விட்டன. காலக்கெடுவுக்குள் காரியத்தை முடித்து வெறுமையைச் சுமந்து வீடு செல்லும் காலமாகிவிட்டது.

தீபாவளி என்பது எல்லாரும் கூடிக் கொண்டாடி, கோவிலைச் சுற்றி ஒரே வெடிப் பேப்பர்களாகக் கிடக்க, மறுநாள் கூட்டிக் குவித்து வெடிக்காத வெடிகளை எல்லாம் போட்டு பற்ற வைத்து ‘டப்... டப்...’ என வெடித்து சந்தோஷித்த நாட்கள் எல்லாமே மாறிவிட்டது. இந்த மாற்றத்தை கிராமங்களுக்குள் தொலைக்காட்சியின் சிறப்பு நிகழ்ச்சிகள் அன்று கொண்டு வந்தன. இன்றோ ஆட்களற்ற ஊரில் வெடிப்பேப்பர்களுக்கு எங்கே போவது? வெடிப்புக்களை மட்டுமே பார்க்க முடியும்! வயல் வெளியிலும் கண்மாயிலும் சில வீட்டுச் சுவர்களிலும்!

பெரும்பாலானோர் ஊருக்கு வருவதில்லை. வந்தாலும் விருந்தாளி போல் தான் வந்து செல்கிறார்கள். பல வீடுகள் பூட்டித்தான் கிடக்கின்றன. சில வீடுகளில் பெரியவர்கள் மட்டுமே இருக்கிறார்கள். சில ஊரில் மருந்துக்குக் கூட ஆடு, மாடு, கோழிகள் இல்லை. அந்த வகையில் எங்க ஊரில் இருக்கும் சிலரிடம் இவை இருக்கின்றன.

பழமை போற்ற சில பெரியவர்கள் இருக்கிறார்கள். அவர்களின் மறைவுக்குப் பின் நகர வாழ்க்கை தின்ற மனிதர்கள் கிராமத்தைத் தள்ளியே வைப்போம். காவல் தெய்வங்கள் கூட காணமல் போகும் காலம் விரைவில் என்பதே நிஜம்.

கேலியும் கிண்டலுமாய்... வயலும் மாடுகளுமாய்... வாழ்ந்த தலைமுறையில் பெரும்பாலானோர் மண்ணுக்குள் போயாச்சு.... இருக்கும் சிலரும் இன்றைய வாழ்க்கை முறையை வேண்டாவெறுப்பாய் ஏற்றுக் கொள்ளப் பழகியாச்சு.

ஊர்க்கூட்டங்களில்தான் எத்தனை சுவராஸ்யங்கள்... இப்ப திருவிழாவுக்கு மட்டுமே கூட்டம்... அதுவும் சுவராஸ்யம் இழந்து அரசியலும்... அடுத்தவன் கதையும் பேசும் இடமாகி விட்டது.

ஊருக்குள் வந்த சேலை விற்பவன், பாத்திரம் விற்பவன், பழைய சாமானுக்கு ஈயம் பூசுறவன், ஈயம் பித்தளைக்குப் பேரிச்சம்பழம் கொடுப்பவன், கொடை ரிப்பேர்காரன், அம்மி ஆட்டுக்கல் கொத்துறவன், பாத்திரங்களுக்கு பேர் வெட்டுபவன், ரிக்கார்ட் டான்ஸ் போட வண்டியில் குடும்பத்துடன் வருபவன், பஞ்சாரம் விற்க வருபவன், ஏலம் விட வருபவன், உப்பு விற்க வருபவன், ஐஸ் வண்டிக்காரன் என எவனுமே இப்போது எட்டிப் பார்ப்பதில்லை. எங்க ஊர்ப் பக்கம் மட்டுமல்ல பெரும்பாலான கிராமங்களின் பக்கம்! காரணம் மனிதர்கள் இல்லாத ஊரில் வியாபாரம் எப்படி நடக்கும் என்பதே.

இன்னும் திருவிழாக்கள் மட்டும் உயிர்ப்புடன் இருக்கு. அன்றைய நாளில் எங்கள் ஊர் மீண்டும் தன் இளமையைப் புதுப்பித்து சந்தோஷப்படும். அடுத்த இரண்டு நாளில் மீண்டும் மயான அமைதிக்குள் ஆட்கொள்ளப்படுவோம் என்பதை அறியாமல்!

ஊருக்குள் வீடு வேண்டும் என்பதால் நாங்கள் ஊரிலும் வீடு கட்டியிருக்கிறோம். நாங்கள் பிறந்து வளர்ந்த வீடு இருந்த இடத்தில் தம்பியின் புது வீடு முளைத்திருக்கிறது. எல்லாம் மாறி வருகிறது.

இதையெல்லாம் ஒரே ஒரு வார்த்தையில் சொல்லிவிடலாம். ஆம்... அது காலம் மாறிவிட்டது என்பதாய்!

உள்ளங்கைக்குள் உலகம் என சந்தோஷிக்கும் நாம் நமது உள்ளத்தைக் கொள்ளை கொண்ட உலகத்தை இழந்து விட்டோம். அடுத்த தலைமுறைக்கு அந்த உலகின் சிறப்புகளைச் சொல்லாமலே கிராமங்களை மெல்ல மெல்ல அஸ்தமிக்க வைத்துவிட்டோம்.

திருவிழாவுக்கு வரும் பலூன் வியாபாரி, ‘விக்கவே இல்லை சாமி இப்ப எவனும் வாங்குறதில்லை’ என்ற புலம்பலோடு கடந்து போகும் போது காற்றில் ஆடும் பலூனைப் போல கிராமங்கள் சுயம் இழந்து தவிக்கின்றன.

தலைமுறைகள் மாற்றம் எல்லாவற்றையும் இழந்து நிற்கிறது... இன்னும் சாதி, மதங்களை மட்டும் சுமந்து கொண்டு!

கிராமங்கள் காணாமல் போய்க் கொண்டிருக்கின்றன, என்ன செய்ய? முன்னாள்!?  கிராமத்தானாய் வருந்தவே முடிகிறது.

“காலம் மாறிவிட்டதுங்க”    
- 'பரிவை' சே. குமார்.

வியாழன், 25 அக்டோபர், 2018

சினிமா விமர்சனம் : வட சென்னை

Image result for வடசென்னை

'சந்திரா... அது யாருன்னு தெரியுதா... அதுதான் அன்பு' என்பதாய் ஆண்ட்ரியாவுக்கு அறிமுகப்படுத்தப்படும் தனுஷ், கடலோரப் பகுதியான வட சென்னையின் கள்ளங்கபடமில்லாத பையனாய்... அதே அன்பு சிறுவனாய் இருக்கும் போதே சந்திராவுக்குத் தெரிந்தவன்தான் என்றாலும் கால மாற்றத்தில் அன்புவை மறந்திருக்கலாம் ஆனாலும் அன்புதான் அவளின் சபதத்தை பூர்த்தி செய்ய வந்தவன் என்பதில் அந்த அறிமுகத்துக்குப் பின் அவள் தீவிரமாக இருக்கிறாள் என்பதை அடுத்தடுத்த காட்சிகள் எடுத்துச் சொல்லிக் கொண்டே செல்கின்றன இறுதிவரை.

அன்புக்கு பத்மா (ஐஸ்வர்யா ராஜேஸ்) மீது காதல்... பத்மா அன்புவைப் பார்ப்பது... இல்லையில்லை பத்மாவை அன்பு பார்ப்பது ராஜீவ்காந்தி செத்த தினத்தில் கடைபுகுந்து கிடைத்ததை அள்ளிக் கொண்டு செல்லும் தருணத்தில் முகம் மறைத்தவளாய்... மனசை மறைக்காதவளாய்... அதன் பின் பைனாக்குலர் வழி... அவளின் பட்டன் இல்லா சட்டை வழி... பார்வையெல்லாம் மனசில் மட்டுமே...  அன்பு மீது அவள் பிரவகிக்கும் முதல் வார்த்தையே பெண்கள் சொல்லத் தயங்கும் வார்த்தைதான் என்றாலும் அது அவள் வளர்ந்த சூழலில் சாதரணமே... அதை அவனும் மனசைப் பிடித்துப் பார்த்ததில் பட்ட சந்தோஷத்தின் வழி சிரித்தபடி கடந்து போகிறான் மொக்கைச் சிரிப்போடு... அதான் அவள் அப்படியொரு வார்த்தையைச் சொல்லியிருக்கிறாள்.

படம் முழுக்க எல்லாரும் கெட்ட வார்த்தைகளையே பேசுகிறார்கள் என்பது மிகப்பெரிய குற்றச்சாட்டாய்... குறியிடுகளைச் சுமக்கும் படங்களை புகழ்பவர்கள்தாமே நாம்...  இங்கு வடசென்னை மக்களின் வாழ்க்கை காட்டப்படவில்லை... ஒரு சாராரின் வாழ்க்கையும் அவர்களின் பேச்சு மொழியுமே காட்டப்படுகிறது. அவர்களில் கூட முன்னால் நிற்பவர்களே பேசுகிறார்கள்... பின்னால் நிற்பவர் எவரும் கெட்ட வார்த்தைகளைப் பேசவில்லை.

இந்தக் கெட்டவார்த்தை என்பது புதிதாக கேட்கும் போது நாரசமாய்த் தெரியும்... அதுவே பேச்சு வழக்காகிப் போகும் போது அது நாரசமாய்த் தெரிவதில்லை... சிரிப்போடு கடந்து போகும் வார்த்தையாய் ஆகிப் போய்விடும்.... எங்க பக்கம் கிராமங்களில் பல வார்த்தைகள் சரளமாகப் பேசப்படும். கேலி முறைக்காரியின் பையன் என்றால் அம்மாவுடன் இணைத்தும் மச்சான் முறை என்றால் அக்காவுடன் இணைத்தும் கோபத்தில் முன்னால் இருப்பதை பின்னால் இருப்பதாகவும்... இப்படி நிறைய வார்த்தைகள் வந்து விழும்...  இன்னும் அதைக்குடி... இதைக்குடி என்பதெல்லாம் சண்டைகளில் சரளமாய் வரும் வார்த்தைகள்தான். அப்படித்தான் இங்கு மீனவ மக்களில் முன் நிற்பவர்கள் பேசுகிறார்கள். ஏன் சந்திராவும் கேட்கிறாள் நான் என்ன தேவடியாவா என்று...

இதே போன்றொரு வார்த்தையைத்தான் சண்டைக்கோழி-2 வரலெட்சுமி சொல்கிறார் சற்றே மாறுதலுடன். நாம் தலையில் வைத்துக் கொண்டாடும் எழுத்தாளர்கள் வாழ்க்கைக் கதைகள் என்றாகும் போது அப்படித்தான் வசனங்கள் எழுதுகிறார்கள். மொக்கையும் மோசமான வசனத்துக்கும் சண்டைக்கோழி-2 ஒரு சான்று. எழுதிய வசனத்தை படம் முழுக்க பேசத்தான் செய்வார்கள்... சரளமாய் வரத்தான் செய்யும்... ஏதோ இந்தப் படங்கள்தான் சமூகத்தை சீரழித்துவிட்டதாய் பொங்குதல் என்ன நியாயம்..?

டார்ச்லைட் என்றொரு படம்... ரோட்டோரத்தில் நின்று விபச்சாரம் செய்யும் பெண்கள் பற்றிய கதை... கதை சொன்ன விதத்தில் நல்ல படம்தான்... படம் முழுக்க மோசமான காட்சிகளும் வசனமும்... இருந்தும் யாரும் கூவவில்லை... நாம் வெற்றிமாறன்கள் மட்டுமே நல்ல படங்களைத் தரவேண்டும் என்று விரும்புபவர்கள்... சாதியைச் சொல்லி படமெடுத்தால் தலையில் வைத்துக் கொண்டாடுவோம்... இப்படியான ஒரு வாழ்க்கையும் இருக்கிறது என்பதைச் சொல்லப் போனால் ஏன் இப்படித்தான் பேசுவார்களா என்ற கேள்வியை முன் நிறுத்தத் தவறுவதில்லை.

இங்கே அன்பு... இவன் சிறுவனாக இருக்கும் போது அந்தப் பகுதி மக்களுக்கு நாயகனாய்த் தெரிகிறான் ராஜன் (அமீர்), அரசியல்வாதி முத்துக்கு (ராதாரவி) திரைமறைவு வேலைகள் செய்பவன் என்றாலும் தன் பகுதி மக்களுக்கு தீங்கு நினைக்காதவன்... அவனின் மனைவியாகிறாள் சந்திரா. எட்டுவழிச்சாலை பிரச்சினை மையங்கொள்ள ஆரம்பித்தபின் தமிழ்ச் சினிமாவில் பிரச்சினை என்றால் சாலை விரிவாக்கம்தான்... அதுதான் இதிலும் என்பதால் முத்துவை எதிர்க்கிறான் ராஜன். அரசியல்வாதிகளைப் பொறுத்தவரை தனக்கு வாலாட்டும் வரை ரவுடியை பக்கத்தில் வைத்திருப்பார்கள். கொஞ்சம் முரண்டு பிடித்தால் அவனுக்கு கீழிருப்பவனை அந்த இடத்தில் அமர வைக்கிறேன் என்று பிஸ்கட்டைப் போடுவார்கள்... அதுவரை அண்ணே, தல என்று திரிந்தவன் ஒரு நாளை எதிர்பார்த்திருந்து காரியத்தை நிறைவேற்றிக் கொல்(ள்)வான். அப்படித்தான் நிகழ்கிறது இதிலும் அந்தச் சம்பவம். அதுவே படத்தின் மையப்புள்ளி.

குணா(சமுத்திரகனி), செந்தில் (கிஷோர்), பவன் (வேலு), தம்பி (டேனியல் பாலாஜி) என நால்வர் குழு அந்த மையப்புள்ளியில் இருக்கிறது. அந்தப்புள்ளியில் வெடித்தெழுகிறது சந்திராவுக்குள் இருக்கும் ராஜன் மீதான காதல்... அதன் பின்னான நாட்களில் குணாவுக்கும் செந்திலுக்கும் இடையில் பனிப்போர் ஆரம்பித்து மோதல் வெடிக்கிறது. எதிர் எதிர் துருவங்கள், அங்கும் இங்கும் சம்பவங்ளை நிறைவேற்றத் துடிக்கும் மனதுடன்.

இவர்களுக்கே தெரியாமல் நால்வர் குழுவை எப்படியும் கழுத்தறுப்பேன் என்பதாய் திரியும் சந்திரா, இரண்டாவது கணவனாய் அடைகிறார் குணாவை... எல்லாமே எதிர்பார்த்தலின் ஆரம்பம்தான். இதே போன்ற கழுத்தறுப்பேன் சூளுரைதான் சண்டைக்கோழி-2விலும் ஆனாலும் அதில் அவள் ஆட்டம் போட்டு இறுதியில் அடங்கிப் போகிறாள்... அடக்கப்படுகிறாள்... தாய்ப்பாசம் திருந்த வைக்கிறது. அதற்காக ச.கோ. நல்லபடம்ன்னும் வ.செ. கெட்ட படம்ன்னு எல்லாம் முடிவுக்கு வந்துடாதீங்க... திருவிழா என்பது சந்தோஷத்துக்கே... அதை வைத்தே நம் கழுத்தறுத்தலை ச.கோவில் காணலாம். நாம வடசென்னைக்குள் இருக்கும் போது எதுக்கு தென் மாவட்டம் பக்கம் போறோம் என யோசித்தாலும் போக வேண்டிய சூழல் இருக்கே என்ன செய்வது...

மதுரைப் பக்கத்துக் கதையா.... அரிவாளை எடுங்கடா... பங்காளி சண்டை... பலி வாங்கல்ன்னு போட்டுத் தாக்குங்கடா... தலையும் உருளணும் ரத்தமும் தெரிக்கணும்... அப்படித்தான் இதுவரை காட்டப்படுது...  வட சென்னையில் மட்டும் ரவுடிகள் மட்டுமேவா இருக்காங்கன்னு பொங்குறோமுல்ல.... ஏன் தென்மாவட்டத்தைப் பற்றி பொங்கவில்லை... அங்கு நல்லவர்களே இல்லையா... சென்னை என்றால் மட்டுமே பிரச்சினை... மற்ற இடங்கள் என்றால் பிரச்சினையில்லை என்பதே நம் எண்ணமாய்.

இந்த அன்பு கேரம் போடுல வெற்றி பெறணும்ன்னுதான் குறிக்கோள்... ஆனா காதல்ல வெற்றி பெறுகிறான்... அதுவும் அடிக்கடி உதடு உதடும் கொஞ்சும் ஆங்கிலப் பட பாணியிலும் சேர்த்தே... ஐஸ்வர்யா ராஜேஷா இப்படின்னு பொங்க வைக்கவெல்லாம் வேண்டாம்... விரும்பித்தானே சுவைக்குது உதடை... விரும்பித்தானே ரசிக்கிறோம் அந்த உதடு கடியை...

வாழ்வில் நாம் இப்படித்தான் ஆகவேண்டும் என்று நினைத்து அதேபோல் ஆவதெல்லாம் அபூர்வம்... பெரும்பாலும் நினைவுகள் சிதறித்தான் போகும் சிக்குண்டு தவிக்கும் வாழ்க்கையில்... அப்படித்தான் ஆகிறான் அன்பு... கேரம்போர்டு கனவு ஒரு வருடம் தகர்ந்து போக... ஓளியும் ஒலியும் இருட்டில் உதட்டு ஆராய்ச்சி செய்யப் போய்... மின்சாரம் வந்ததால் ஊரெல்லாம் ஆராய்ச்சி குறித்துப் பேசப்பட, அதன் பின்னான நகர்த்தல் கத்தி எடுக்க வைக்கிறது... அந்த இரவில் சம்பவமும் நடந்தேறுகிறது... தம்பியின் அன்புக்குப் பாத்தியப்பட்ட அன்பு, காக்கப்படுகிறான் குணாவால்.... குணாவுக்கு ஜெயிலில் இருக்கும் செந்திலை சம்பவம் ஆக்கணும்... அதுக்கு... ஆமா அதே... ஜெயிலுக்குள் அன்பு... செய்தானா சம்பவத்தை என்பதைச் சொல்கிறார்கள்... நாம் சொல்ல வேண்டாமே அதை.

இப்படியாக சம்பவங்களோடு நகரும் வடசென்னை வாழ்க்கையில் அன்பு ரவுடியாகிறான்... பத்மாவை மணக்கிறான்... அவளின் தம்பி அப்பாவுக்கு அறை விடுகிறான்... நல்ல குடும்பம்... அதையும் சிரித்து ரசிக்கிறோம் நாமும் நல்லவர்கள்... ரவுடியா ஆயிட்டோமுல்ல... அப்புறம் குரல் எல்லாப் பக்கமும் கேக்கணுமா இல்லையா... மக்கள் பிரச்சினைக்காக குரல் கொடுக்கிறான்... ராஜனைப் போல பிறருக்கு ரவுடி... தன் பகுதி மக்களுக்கு நாயகனாய்... சந்திரா வில்லன்களுடன் இருந்து கொண்டே வில்லியாய் காய்களை நகர்த்துகிறாள்... தேவையில்லாமல் வரலெட்சுமியைப் போல ஆய்... ஊய்ன்னு கத்தலை... அரிவாளை எடுத்துக் கொண்டு வெட்ட ஓடிவரலை... அந்த வகையில் சந்திரா பாந்தமாய்...

வெற்றிமாறனின் திரைக்கதையில் எப்பவுமே ஒருவித ஈர்ப்பு இருக்கும்... அதைக் கொண்டு செல்லும் விதத்தில் அவர் சோடை போவதில்லை... அப்படித்தான் இதிலும் முன்னுக்குப் பின்னும் பின்னுக்கு முன்னுமாய் நகர்த்தி நகர்த்தி மிகச் சிறப்பாக கதை சொல்லியிருக்கிறார். படமும் விறுவிறுப்பாய் நகர்கிறது.

ஏகப்பட்ட கதாபாத்திரங்கள்... எல்லாரையும் கட்டி மேய்த்திருப்பது சிறப்பு...

தனுஷ் நடிப்பு அரக்கன் என்றால் கிஷோரையும் டேனியலையும் சொல்லவா வேண்டும்... ஆனாலும் டேனியலின் பாத்திரப் படைப்பு மிகச் சிறப்பானதாய் கெத்தாய் பயணிக்கும் தருணத்தில் ராஜன் கதையில் உடைபடுகிறது... பின் ஒட்டவே இல்லை...

ஆண்ட்ரியா தாவணி, சேலையில் பாந்தமாய் வருகிறார்... அமீருடன் குலாவும்போது ரவிக்கை துறந்து முதுகு காட்டுவதுடன் தனக்கான கதாபாத்திரத்தை சிறப்பாகவே செய்திருக்கிறார். ஐஸ்வர்யாவும் கூட மற்ற படங்களில் இருந்து இதில் வேறுபட்டிருக்கிறார்... பட்டன் இல்லாத பனியனும் அடிக்கடி உதடு கடித்தலுமாய் இருந்தாலும் கதை ஓட்டத்தில் அதற்க்குத் தகுந்த மாதிரி மாறி விடுகிறார்.

அந்தந்த காலகட்டத்துக்குத் தகுந்த மாதிரி கதைக்களம் மாற்றப்பட்டிருக்கிறது. தனுஷின் தலைமுடி மாற்றம், மீசை தாடி என காலகட்ட மாற்றம் அருமையாய்....

பின்னணி இசையும் பாடல்களும் அருமை... ஒளிப்பதிவு கலக்கல்.

நமக்கு முடி முக்கியம்... எனக்கு அரிக்குது... பொடுகு சார்.... முடிக்கு கலர் அடிச்சி கெடுத்துட்டாங்க என்றெல்லாம் அப்பிராணியாய் பிக்பாஸில் நடித்த செண்ட்ராயன் கொஞ்ச நேரம் படிய வாரிய தலையுடன் அப்பிராணியாவே வர்றார்.

அன்பு ரவுடியாகக் கிளம்பும் போது அவன் பின்னே சந்திரா நிற்கிறாள்... ஒரு கட்டத்தில் அவள் கழுத்திலும் கத்தியை வைக்கிறான்...  காதலும் ரவுடியிசமும் அரசியலும் துரோகமும் வன்மமும் கலந்து சொல்லப்பட்டிருப்பதால் விறுவிறுப்பு இருந்தாலும் காரம் கம்மியே...அடித்து ஆடவில்லை வடசென்னை முதல் பாகம் என்பதே உண்மை என்றாலும் ஆடாமலும் இல்லை... ஒருவேளை வடசென்னை டூவில் அடித்தும் ஆடலாம் அசரவும் அடிக்கலாம் தனுஷும் வெற்றிமாறனும் ஆண்ட்ரியாவும்... இருப்பினும் ஏகப்பட்ட கதாபாத்திரங்களும் அவர்களுக்கான கதை விவரித்தலும் இல்லாது இருந்தால் நல்லது... செய்வார்களா...? காத்திருப்போம்.

இப்ப லைக்கா இல்லாம ஒரு படமும் இல்லை போல... ஆரம்ப காலத்தில் இலங்கையில இருந்து வந்திருக்கானுங்க... ராஜபக்சேயின் உறவுக்காரனுங்க... என்றெல்லாம் பொங்கிக் கொண்டிருந்தோம்... இப்ப அவர்கள்தான் தமிழ் சினிமாவுக்கு பொங்கிப் போடுகிறார்கள்... கிரிக்கெட் போட்டி நடக்கக் கூடாதுன்னு இலங்கையை விரட்டினவனுங்கதானே நாம என்றால் நமட்டுச் சிரிப்புடன் கடந்து செல்வோம்... இது சினிமால்ல.... அமலா பால்களையும் ஐஸ்வர்யா ராஜேஷ்களையும் ரசிக்க வேண்டும் அல்லவா... அப்ப லைக்கா மாதிரி ஆளுங்க அள்ளிக் கொடுத்தாத்தானே முடியும்...

அமீரின் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாய்த்தான் முதலில் செய்திகள் வந்தன... பின்னர் மாற்றம்... ஒருவேளை வி.சே. நடித்திருந்தாலும் இன்னும் அந்தப் பாத்திரம் பேசப்பட்டிருக்கும்... நமக்குத்தான் ஒரு மாசத்துல மூணு படம் வந்திருக்கே எப்படிப் பாக்குறதுன்னு கஷ்டமாயிருந்திருக்கும். நல்லவேளை வி.சே. நடிக்கலை.... 96 இன்னும் மனச விட்டு அகலலை... வி.சே.க்கு ஒரு கடிதம் எழுதணும் போலிருக்கு.

வடசென்னை வெற்றிமாறனின் மைல்கல் படம்தான்... அதில் மாற்றுக் கருத்து இல்லை.

கெட்ட வார்த்தை பேசுறாங்க எனக்குப் பிடிக்காது என்பவர்கள் ஒதுங்கிக் கொள்ளலாம்...

இதெல்லாம் ஒரு கெட்ட வார்த்தையா... இதைவிட அதிக வார்த்தைகளைக் கேட்டிருக்கிறேன் என்பவர்கள் தாராளமாக படத்தைப் பார்க்கலாம்...

கதை சொன்னவிதம் எனக்குப் பிடித்திருந்தது.

பாருங்கள்... உங்களுக்கும் பிடிக்கலாம்.
-'பரிவை' சே.குமார்.

ஞாயிறு, 21 அக்டோபர், 2018

19. என்னைப் பற்றி நான் : நிஷா

சென்ற ஆண்டில் தொடர்ந்து பதினெட்டு வாரங்கள் 'என்னைப் பற்றி நான்' என்ற தலைப்பில் வலை நட்புக்களைப் பற்றி அவர்களே எழுதிய பகிர்வைப் பகிர்ந்து வந்தேன். கேட்டவர்கள் எல்லாருமே உடனே அனுப்பிக் கொடுத்தார்கள். வலைப்பூவில் தீவிரமாக இயங்கிக் கொண்டிருந்த காலம் அது.

இந்த வருடம் பிரச்சினைகளுக்கான வருடமாக ஆகிவிட்டது. எதிலிருந்தும் மீளமுடியாமல் மாற்றி மாற்றி சுற்றிச் சுற்றி அடிக்கிறது. எழுதவே எண்ணாத நிலைக்குத் தள்ளிவிட்டது. தினம் தினம் நிம்மதியைத் தேடி கிடைக்காமலேயே நகரும் நாட்களைக் கடப்பது என்பதே வாடிக்கையாகிவிட்டது. எப்போதே எழுதிய கதைகள் மின்னிதழ்களில் வருகின்றன. அவற்றைப் பகிரும் இடமாக, சினிமா குறித்து எழுதும் இடமாக 'மனசு' மாறிப் போனது.

இந்நிலையில்தான் 'வெள்ளந்தி மனிதர்கள்' பகுதியை சகோதரர் பாலாஜியை பற்றி எழுதி தூசி தட்டினேன். இதோ இப்போது ஏறத்தாழ ஒண்ணேகால் வருடத்துக்குப் பிறகு 'என்னைப் பற்றி நான்' பகுதியை தூசி தட்டும் வாய்ப்பு ஆல்ப்ஸ் தென்றல் நிஷா அக்கா மூலம் கிடைத்திருக்கிறது.

அக்காவிடம் கேட்டபோது தர்றேம்ப்பா என்ற வார்த்தை வந்தது. தருவதற்குத்தான் நேரம் வாய்க்கவில்லை. அவரின் வேலையும்... உடல்நலமும் எப்போதும் அவரை பரபரப்பாக வைத்திருக்க, அவரைப் பற்றி எழுத ஏது நேரம்...?

முகநூல்ல போடலாம்ன்னு பார்க்கிறேன் என எனக்கு அனுப்பிய பகிர்வை ஏன் என்னைப் பற்றி நானாக மாற்றக்கூடாது என்பதாய் இதை மனசில் பகிர்வோம் அக்கா என வாங்கிக் கொண்டேன். விரிவாய் எழுதியிருக்கிறார் வலிகளையும் அதைக் கடந்து வந்து பெற்ற வெற்றியையும்...

கேட்ட போது கிடைக்கவில்லை என்றாலும் கிடைத்த போது சிறப்பானதாய்... நீங்களும் வாசிங்க....

நன்றி நிஷாக்கா...

ன்னை நான் சீர் தூக்கி, ஆராய்ந்து பார்க்கின்றேன்.
நேர்காணல், சுய அறிமுகக் கட்டுரைகளுக்கு மக்கள் கொடுக்கும் முக்கியத்துவத்தினைக் காணும் போதுதான் நான் எனக்கான எத்தனையோ சந்தர்ப்பங்களைத் தவற விட்டிருக்கின்றேன் என புரிந்திட முடிகின்றது. சமுதாயத்தில் நல்லதை விதைக்க நினைக்கும் சிந்தனைக்கும் செயல் பாட்டுக்கும் இம்மாதிரி புகழ்ச்சிகளும் போலித்தனங்களும் அவசியம் என உணரத்தவறி விட்டேனா? கண்ணதாசன் சொன்னது போல் எழுதப்படும் கருத்தை விட எழுதியவர் தலையைச் சுற்றும் வெளிச்சத்தை நம்பும் சமூகத்தின் சிந்தனையை உணராமல் போனேனா..? எனக்கான வாய்ப்புக்களை நான் சரியாக பயன் படுத்த தவறி விட்டேனோ? எல்லாமும் பேசலாம் இங்கே.... நான் என்னும் நிஷாவின் பாதங்கள் மூன்று வயது வரை பஞ்சு மெத்தைகள் மேல்தான் நடை பயின்றது. தரையில் விட்டால் பாதம் வலிக்குமோ என மாமாக்களும் அப்பாவின் நண்பர்களும் மாறிமாறி தூக்கி வைத்திருப்பார்களாம். ஆறு வயது வரை இனிக்கும் நினைவுகள் தான் எனக்குள்... தங்கக்கரண்டி வாழ்க்கைதான் வாய்த்திருந்தது. எல்லாமிருந்தும் எதுவுமே இல்லாமல் போவதை உணர்ந்தவள் நான். நிஷாவின் வாழ்க்கையில் கடந்து வந்த பாதை முழுமைக்கும், தரை விரிப்புக்கள் விரிக்கப்பட்டோ பூக்கள் தூவப்பட்டோ இருந்து விடவில்லை. கரடு முரடான, செங்குத்தான மலைகளும் மேடு பள்ளங்களுமே நிரம்பியிருந்தன. அவற்றைத் தாண்டிட என்னை நான் உருக்கி இருக்கின்றேன், உருகியும் இருக்கின்றேன். எனக்கான வாய்ப்புக்கள் இங்கே கொட்டி கிடக்கவில்லை. பட்டாம்பூச்சியாய் பறந்த என் வாழ்க்கை சிறகொடிக்கப்பட்டும் இருக்கின்றது. சிறகொடிந்து விட்டதே என ஓய்ந்திடாமல் எழும்பிப் பறக்க முயற்சித்தேன். இன்னும் முயற்சித்து கொண்டே இருக்கின்றேன்... ஓய்வொன்றை நாடாமல். என் சிறகுகளை ஒடிக்க முனைந்தோரும், முனைவோரும் என்னைச் சுற்றிக் கொண்டே இருக்கின்றார்கள். அவர்கள் கைகளில் என் இறகுகளில் ஒன்று எப்படியோ சிக்குப்பட்டும் விடுகின்றது. ஆனாலும் நான் என்னை நிருபிக்க மீண்டும் எழும்பிப் பறக்க போராடிக்கொண்டே இருக்கின்றேன். மரணத்தின் இறுதி நொடி வரை இயங்கிக்கொண்டே இருப்பேன். அதுவே என் இலக்கு ஆகும். என்னைக்குறித்து எழுத ஏன் இத்தனை தாமதம்? ஏறத்தாழ ஒன்னறை வருடத்தை நான் ஏன் எடுத்துக்கொண்டேன்? சோதனைகளை சாதனைகளாக்குதலுக்கு இலட்சியங்களுடன் இலக்கை நோக்கிய பயண திட்டம் தேவையாக இருந்தது. அர்ஜுனனை போல் இடப்பக்கமோ, வலப்பக்கமோ சாயாமல் எனக்கான கடமைகளை முடிக்கவும், என் இலக்கை அடையவும் நான் பயன்படுத்தும் ஒவ்வொரு மணித்துளியும் முக்கியமாக இருந்தது. இப்போதும் என் நேரம் எனக்கு பொன்னானதாகவே இருக்கின்றது. என் கவனம் ஒரு நொடி பிசகினாலும் தலைக்குப்புறத் தள்ளி கேலி செய்து கை கொட்டிச் சிரிக்க சந்தர்ப்பத்துக்காக காத்துகொண்டிருக்கின்றார்கள் பலர். அப்படி தள்ளி விட்டதாக நினைத்து அவர்களில் சிலர் பெருமிதமடைந்தும் இருக்கின்றார்கள். நானோ... மேலே மேலே பறந்து கொண்டே இருக்கின்றேன். எவர் கைக்கும் அகப்படாத மின்மினிப் பூச்சி போல் வெளிச்சம் தந்து கொண்டே இருக்கின்றேன். இணையத்தில் இருந்தாலும் என் எழுத்து எங்கோ ஒருவரை சிந்திக்க வைக்கின்றது என்பதை என்னுடன் நேரில் உரையாடுவோரும், இன்பாக்சில் வந்து தங்கள் உணர்வை வெளிப்படுத்துவோரும் நிருபிக்கின்றார்கள். கடந்த பத்து வருடங்களாக இந்த இணையத்தை என்னை வளர்த்தெடுக்கும் ஆரோக்கிரமான் களமாகவே பயன்படுத்தி இருக்கின்றேன் என நம்புகின்றேன். ஏனையோர் சொல்வது போல் இணைய நட்புக்கள் நம்பிக்கைக்கு அப்பாட்பட்டவர்கள், தூரமாக நிறுத்தபப்ட வேண்டியவர்கள் என்பதை நான் மறுதலிக்கின்றேன். என்னுடைய ஒவ்வொரு செயல்பாட்டின் பின்னும் இந்த இணையம் தந்த நட்புக்களே இருந்தார்கள்... இருக்கிறார்கள்... இனிமேலும் இருப்பார்கள். என்னைப்போல் எல்லோருக்கும் இந்த நன்மை வாய்க்கும் என என்னால் எந்த உறுதியும் தர முடியாது. நிஷாவும்... நிஷாவின் அணுகுமுறையும் வேறு. என்னை அறிந்த ஒவ்வொருவருக்கும் எனது தனித்தன்மை புரியும். என்னை உணர்ந்தோர் எவரும் அத்தனை சீக்கிரம் என் நட்பை விட்டு செல்ல விரும்ப மாட்டார்கள். இது திமிர் அல்ல தன்னம்பிக்கை. இந்த இணையம் மூலமாக என்னை வெளிக்காட்டக் கூடிய பல வாய்ப்புக்களை நானே தவற விட்டிருக்கின்றேன் என்பது என்னை அணுகிய ஒவ்வொருவருக்கும் தெரியும். ஆயிரக்கணக்கில் நட்புக்களை இணைத்து நாம் இடும் பதிவுகள் எவ்வித புரிதலும் இல்லாமல் கொடுக்கப்பட்ட லைக் எண்ணிக்கையை வைத்து அக்கருத்தை சமுதாயம் ஏற்று கொண்டிருப்பதான மாய உலகில் நான் என்னை அமிழ்த்த விரும்புவதே இல்லை. என் பதிவை வாசிக்கும் ஒருவராக இருந்தாலும் வாசிப்பவரை அப்படியும் இருக்குமோ... ? என சிந்திக்க வைக்குமானால் அதுவே என் எழுத்துக்கான வெற்றி. இந்த வெற்றியை நான் அடைந்திருக்கின்றேன். உங்கள் எழுத்துக்கு நான் விசிறி. என்னுள்ளத்தை அப்படியே உங்கள் பதிவுகளில் காண்கின்றேன் என மறைவாய் வந்து சொல்வோர் எவரும் பொதுவில் என்னை ஆதரிப்பதில்லை. கும்பலோடு கோவிந்தா போட்டே பழக்கப்பட்ட எம் சமூகத்து சிந்தனை எனக்காக அத்தனை சீக்கிரம் மாறி விடும் என எதிர்பார்க்க முடியுமா? ஈழத்தை ஆதரிக்க வேண்டும்... இல்லாது போனால் விரோதியாக்கபபடுவேன். ஆம்... ஆக்கப்பட்டேன். விடுதலைபுலிகளின் சாதனையை மட்டுமே வெளிப்படுத்த வேண்டும் என்போர் மத்தியில் அவர்களின் தவறுகளையும் எடுத்தியம்பியதனால் நான் துரோகி ஆக்கப்பட்டேன். சமுதாயத்துக்கான நற்கருத்தினை, தெளிவினை தருவோரின் பதிவுகளை நான் ஏற்பதனாலும், அப்படியானவர்கள் எதிர்த்தரப்பாராக இருப்பதனாலும், என் நட்பில் அவர்கள் இருப்பதனாலும் நான் ஒதுக்கப்பட்டே ஆகவேண்டும் என்போர் பலர். அவர்களிடமிருந்து நானே ஒதுங்கி கொண்டேன் . ஈழம் தான் தேவை என்றாலும் அதற்குள் பிரதேச வாதம், பிரிவினை வாதம் நிறைந்திருக்கு. என் ஊர் தான் உசத்தி, உன் ஊர் சொத்தி என சொல்லவும் வேண்டும். அப்படி சொல்பவர்களுக்கு ஜால்ரா போட வேண்டும். தப்பைச் சொல்லவே கூடாது. சொன்னால் நான் அரை லூசு. அப்படித்தான் ஆக்கப்பட்டிருக்கிறேன். அவ்வப்போது டிரெண்ட் ஆகி மக்களையும் சிந்தனைகளையும் திசை திருப்பும் மீம்ஸ்கள் குறித்துப் பெரும்பாலோனோரின் கருத்தினையே நானும் பின்பற்ற வேண்டும். எனக்கென சொந்தக்கருத்து இருக்கவே கூடாது. ஆட்டு மந்தைகளாய்ச் செல்லும் எல்லோர் போலும் நானும் செல்ல வேண்டும். சுய சிந்தனை அறவே இருக்க கூடாது. எதையும் மேலோட்டமாக அணுகி கனவு வாழ்க்கையை கற்பனையில் வாழ கற்றுக்கொடுக்கும் பணியை செய்வோருக்கு நான் ஆதரவு கொடுத்தால் நானும் வீரத்தமிழ் பெண்ணாகி இருப்பேன். என்னால் அது முடியாமல் போனது ஏன்..? அவ்வப்போது நடக்கும் மேடை ஏற்றல்கள். விருதுகளுக்கு ஓரு ஓரமாக ஒதுங்க... அவர்கள் கேட்கும் ஸ்பான்சர்களை நானும் கொடுக்க வேண்டும். கொடுத்து விட்டால் இந்த உலகில் சாதனை நாயகியே நான் தான். முதலும் முக்கியமுமாக நானும் தினமும் விதவிதமாக மேக்கப் செய்து புகைப்படம் எடுத்து பேஸ்புக்கில் பகிர வேண்டும். இத்தனையும் செய்தால் நானும் பிரபலம்தான் எனில் அப்படி என்னை மாற்ற என்னால் முடியாது. இதில் எதையும் என்னால் இதுவரை பின்பற்ற முடியவில்லை. இனியும் முடியாது. எனக்கான அஸ்திவாரம் என்பது நான் வாழும் காலத்தில் கட்டப்பட்ட கூடாரமானதாக பயன்படுத்தப்படுவதாக இருக்க கூடாது. நான் மாண்ட பின்னும் நிலைத்து நிற்கும் கான்கிரிட் அஸ்திவாரமாக இருக்க வேண்டும். என்னை நேசிப்போர் மனதில் வாழும்படி அது கட்டப்பட வேண்டும் என்பதே என் எண்ணம்... ஆசை. அந்த அஸ்திவாரத்தை இட்டிருக்கின்றேன் என நம்புகின்றேன். இந்த நம்பிக்கை தான் நிஷா... என்னை பற்றியும், நான் கடந்து வந்திருக்க கூடிய பாதைகள் குறித்தும் அறிய என்னை நானும் என்னை அறிந்த நட்புக்களும் சொல்லி இருக்கும் பதிவுகளை இங்கே இணைக்கின்றேன் படியுங்கள்.


தாங்கள் எழுப்பும் கேள்விகளுக்கு என்னாலான பதிலை இங்கு தருவேன் என்பதையும் சொல்லிக் கொள்கிறேன்.

நன்றி அக்கா... காலம் தாழ்த்திக் கொடுத்தாலும் உங்க மனசை என் 'மனசு'க்கு கொடுத்தமைக்கு...

குறிப்பு : என் வலை நட்புக்கள் என்னைப் பற்றி நான் பகுதியில் இடம் பெற விரும்பினால் kumar006@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு தங்களைப் பற்றி எழுதி அனுப்புங்கள்... உங்கள் ஆதரவு இருந்தால் இதை மீண்டும் தொடரலாம்.


**************

ப்படியே  கானல் அமீரக யூடியுப் சேனலில் என்னோட இரண்டாவது வீடியோவான 'சுனை நீர்' சிறுகதை குறித்த பகிர்வையும் பார்த்து எப்படி பேசியிருக்கேன்னு சொல்லுங்க... நன்றி.

-'பரிவை' சே.குமார்.

வியாழன், 18 அக்டோபர், 2018

மனசு பேசுகிறது : மீராவின் கடிதம்

ந்த ராம் - ஜானு கடிதப் போக்குவரத்துக்கு முற்றுப்புள்ளி வச்சிடலான்னு தோணுது. சினிமாங்கிறதால சிலாகிக்கிறோம்... இதுவே உண்மையாக வாழ்க்கையில் நிகழ்ந்திருந்தால்... அதுவும் நம் வாழ்க்கையாக இருந்திருந்தால்... எத்தனை பேர் இதைச் சிலாகிப்போம். 

ஒரு இரவு ஆத்மார்த்தமான அன்புடன் நிறையப் பேசி மகிழ்ந்திருந்தாலும் அவர்களுக்குள் வேறெதுவும் நிகழ்ந்திருந்தால் என்பதே நம் எண்ணமாக இருக்கும் இல்லையா... இப்படியான சந்திப்பு நிகழும் ஆங்கிலப் படங்களில் உதடுடன் உதடு மோதிக்கொள்ளும் முத்தமும் காமமும் அதன் பின்னான கலவியுமே காட்சிப்படுத்தப்படுகிறது. 

ராம் திருமணம் செய்யவில்லை... ஜானு உருகினாள்... சரி... இதையே மாற்றிப் பாருங்கள்... ராமுக்கு திருமணம் ஆகியிருந்தால் ஜானு உருகியிருப்பாளா..? இல்லை ராம்தான் ஜானுவுடன் சுற்றியிருப்பானா...? அப்படியே சுற்றினாலும் வீட்டுக்கு கூட்டிப் போயிருப்பானா..?

இவர்கள் ஊர் சுற்றிய விவரம் எப்படியோ ராம் மனைவிக்கோ அல்லது ஜானுவின் கணவனுக்கோ தெரிய வரும்போது அந்தக் குடும்பங்களில் நிகழ்வது என்னவாக இருக்கும்... சூறாவளிதானே... நம்மில் எத்தனை பேர் இது போன்றதொரு நிகழ்வை டேக் இட் ஈஸியாக எடுத்துப்போம்.

ஜானுவின் கடிதம் தட்ஸ் தமிழிலும்(One India - இணைப்பு இங்கே) பிரதிலிபியிலும் பகிரப்பட்டபோது பலர் ஆஹா ஓஹோ என்ன எழுத்து என்றார்கள். சிலர் மேலே சொன்னது போல் சிந்தித்திருந்தார்கள். சினிமா சினிமாதான்... எதார்த்தம் எப்போதும் வேறுதான்.  

 அதன் பாதிப்புத்தான் இந்த மீராவின் கடிதம்...

Image result for 96 movie hd images

திப்பிற்குரிய ராம் சார்...

நான் மீரா... உங்கள் பள்ளித் தோழி ஜானகியின் மகள்.

உங்களை எந்த உறவு முறையில் அழைப்பது என்பதே மிகப்பெரிய குழப்பமாய் எனக்குள்... அதனாலயே 'மதிப்பிற்குரிய' என மரியாதைக்குரியவராக உங்களை மாற்றிக் கொண்டுள்ளேன்.

உங்களுடன் கொஞ்சம் பேச வேண்டும்... 

இவள் என்ன பேசப் போகிறாளென்று உங்களுக்குத் தோன்றலாம். நான் சிறுமி அல்ல... உலக விஷயங்கள்.. நல்லது கெட்டது என எல்லாம் அறிந்து அதற்கேற்றவாறு வாழக்கூடிய இளைஞிதான்... எனவே வாழ்க்கை குறித்தும் பேசலாம் தப்பில்லை.

பெரும்பாலும் தோற்ற... இங்கே தோற்ற என்பதைவிட முழுமையடையாத என்பதே சரியாகும் என்பதால் முழுமையடையாத காதல்களின் பின்னே காலச் சூழலில் காதலர்கள் சந்திக்கும் பட்சத்தில் தன் குழந்தையிடம் ஒருவருக்கு ஒருவர் 'மாமா', 'அத்தை' எனத்தான் அறிமுகம் செய்து வைப்பார்கள்... இது அவர்களை ஏமாற்றிக் கொள்ளும் முயற்சி என்பது தெரிந்தும் சமூகத்தின் பார்வைக்காக அப்படித்தான் நடந்துகொள்ள முடியும்.

சில மாதங்கள் முன்பு அம்மாவுக்கு நீங்க எழுதிய கடிதத்தில் மாமான்னு அறிமுகம் செய்து விடுவாயோ என்று பயந்தேன் எனச் சொல்லியிருந்தீர்கள். அதான் உங்களை முறை சொல்லி அழைக்க முடியாமல் தவிக்கிறேன். சார் என்பதே இருக்கட்டும் பொதுவாய்...

அம்மாவுக்கு நீங்கள் எழுதிய கடிதத்தை வாசித்தேனா என்றுதானே நினைக்கிறீர்கள்..? 

வாசித்தேன் சார்... நீங்ககூட என்னிடம் எல்லாம் சொல்லச் சொல்லியிருந்தீர்கள்தானே,,, அம்மா கடிதத்தை மட்டும் காட்டவில்லை... எல்லாம் சொன்னாள்... இங்கு காதல் குற்றமெல்லாம் இல்லை... அதெல்லாம் நம்மூரில்தான்... ஆணவக்கொலைகள் கூட நடப்பதுண்டுதானே... நேற்றுக் கூட ஒரு செய்தி பார்த்தேன் பள்ளிச் சீருடையுடன் பேருந்து நிலையத்தில் காதலனுடன் குலாவிய மாணவி என... இங்கு காதல் தவறில்லைதான் என்றாலும் பொது இடங்களில் எல்லை மீறல் எல்லாம் கிடையாது... ஒருவேளை அடைத்து வைத்தால் அதுபோல நிகழலாம்... என் வீட்டில் நான் சிறைப்பறவை அல்ல.

எனக்கு அம்மாவைப் பிடிக்குமா..? அப்பாவைப் பிடிக்குமா..? என்றால் அம்மாதான். பெண் பிள்ளைகளுக்கு அப்பாவைத்தானே பிடிக்கும் என நீங்கள் நினைக்கலாம்... எனக்கு அம்மாவைத்தான் பிடிக்கும்... அப்பாவுக்கு எப்பவும் பிஸினஸ்தான்... ஆனாலும் அவருக்கு என்னை ரொம்பப் பிடிக்கும்... அம்மாவையும்தான்...

நீங்கள் ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை..? 

என் அம்மாவிடம் சொல்லாத காதலையா இத்தனை வருடமாகத் தூக்கிச் சுமந்தீர்கள்...? 

எனக்கு அதை நினைத்தால் சிரிப்பாகவும் பரிதாபமாகவும் இருக்கிறது.

அம்மா வேறு உங்களைப் புகழ்ந்து தள்ளுகிறாள்... இத்தனை வருடமாக நீங்க வெர்ஜினாமே... ஆம்பளை நாட்டுக்கட்டை என்று வேறு சொன்னாள்... எனக்கு நாட்டுக்கட்டைக்கு அர்த்தம் புரியலை.. அம்மாவே விளக்கினாள். 

ஆமா அம்மாவைப் பத்தாவதோடு விட்டு விட்டுச் சென்னை போனவர் பின் தொடர்பே இல்லாமல் வருடங்கள் கடந்த நிலையில் காலேஜ் படிக்கும் போது தேடி வந்ததாய் சொல்லியிருக்கிறீர்கள்... 

அதுவரை உங்களை தஞ்சாவூருக்கு இழுக்காத அம்மா நினைவு திடீரென இழுத்தது எப்படி..? ஏன் தஞ்சாவூரில் இருந்து கிளம்பும் போது அம்மாவிடமோ உங்க நட்புக்களிடமோ சொல்லாமல் போனீர்கள்..?

உங்க வாழ்கையில் எதுவும் மேஜிக் நிகழ்ந்ததா என்ன..?

ஏதோ ஒரு பெண் உங்களைக் காதலித்ததாகவும் அவளிடம் அம்மா மீதான உங்கள் காதலைச் சொன்னதாய் அம்மாவிடம் சொன்னீர்களாம்... அம்மா விரும்பி விரும்பிக் கேட்டபோதெல்லாம் சொல்லாத காதலை எவளோ ஒருத்தியிடம் சொல்லியிருக்கிறீர்களே... அதெப்படி... கேட்டால் வயதும் வாழ்வும் மாற்றங்களைச் சந்தித்ததே காரணம் என நீங்கள் சொல்லலாம்...

உண்மையில் பயம் உங்கள் காதலைத் தின்றிருக்கிறது என்பதை ஏற்றுக் கொள்வீர்களா..?

அப்பாவுக்கு அம்மாவின் காதலும் அது நிறைவேறாமல் போனதும் தெரியும்... அவருக்குள்ளும் ஒரு நிறைவேறாத காதல் உண்டு... அதை அம்மாவும் அறிவார்... நானும் அறிவேன்... அவர் உங்களைப் போல் தூக்கிச் சுமக்கவில்லை.... இவ்வளவுக்கும் கல்லூரியில் படிக்கும் போது காதலைச் சொல்லி சில ஆண்டுகள்  வாழ்ந்த காதல் என்றபோதிலும்...

உங்ககிட்ட ஒண்ணு கேக்கணும்... கோபப்பட மாட்டீங்கதானே... நான்தான் ஜானகியின் பொண்ணாச்சே... எப்படிக் கோபிப்பீங்க...?

உங்களுக்குத் திருமணம் ஆகி என்னைப் போல் ஒரு பையனோ பெண்ணே இருந்திருந்தால் அம்மாவைப் பார்த்தபோது எப்படி நடந்து கொண்டிருப்பீர்கள்...? 

அம்மாவுடன் அந்த மழை இரவில் ஊர் சுற்றியிருப்பீர்களா..?

அம்மாவை உங்க விட்டுக்கு கூட்டிப் போயிருப்பீர்களா...?

உங்கள் மனைவி அதை ஏற்றுக் கொண்டிருப்பாங்களா..?

அதையெல்லாம் விடுங்க... எனக்குள்ள ஒரு மறக்க முடியாத காதல் இருக்குன்னு உங்க மனைவிக்கிட்ட சொல்லி இருப்பீங்களா..?

எங்கம்மாவை எங்கிட்ட சொல்லச் சொன்ன நீங்க உங்க பிள்ளைகளிடம் சொல்லியிருப்பீர்களா...?

ஒருவேளை நான் காதலித்தால்... அப்படி எதுவும் செய்யமாட்டேன்... நான் ஜானகியின் வளர்ப்பு... அம்மாவின் காதல் வலி எனக்குத் தெரியும்... ஒருவேளை காதலித்தால் என் வீட்டில் ஏற்றுக் கொள்வார்கள்... இருக்கும் நாடு அப்படி... இதே உங்க பிள்ளைங்க காதலிச்சா ஏத்துப்பீங்களா...?

என்னடா இந்தப் பெண் இத்தனை கேள்விகளை முன் வைக்கிறாள் என்று உங்களுக்குத் தோன்றலாம்... இதெல்லாம் முடியுமா..? என்ற கேள்வியை உங்கள் முன் வைத்துப் பாருங்கள்... பதில் கிடைப்பதில் இருக்கும் சிக்கலை அறிவீர்கள். 

எல்லாமே என்னால் முடியும் என்பதெல்லாம் வெறும் வார்த்தைகளாய் மட்டுமே வரலாம்...செயலாய் அதெல்லாம் அவ்வளவு எளிதாய் முடியாது சார்.

நீங்க சிங்கப்பூர் வந்திருந்தால்... அம்மா உங்க கூட சுற்றியிருக்க முடியாது... வீட்டுக்கு வேண்டுமானால் அழைத்திருக்கலாம் அதுவும் நள்ளிரவில் அல்ல... பகலிலேயே சாத்தியமாகியிருக்கும்...

அப்பாவுக்கும் அறிமுகம் செய்து வைத்திருக்கலாம்... பள்ளித் தோழனாக...

இன்னொன்னு கேட்க மறந்துட்டேன் பாருங்க... 

அந்தப் பொக்கிஷப் பெட்டியை எவ்வளவு நாள் பத்திரப்படுத்துவீர்கள்...? 

உங்களுக்குத் திருமணம் ஆனால் அதைக் கொண்டாடுவீர்களா..? 

உங்கள் மனைவி முன் இன்னொருத்தியின் துப்பட்டாவையும்... குர்தாவையும்... ஜீன்ஸையும்... ஏன் காய்ந்து போன பூவையும் எடுத்து வைத்து நினைவுகளில் நீந்த உங்களால் முடியுமா..?

அப்பாவின் முன் இதெல்லாம் செய்ய முடியாமல் மனசுக்குள்ளேயே தவிக்கிறாள் அம்மா.. இதுதான் உண்மை... பல நாள் யாருமற்ற தனிமையில் 'யமுனை ஆற்றிலே' பாடியிருக்கிறாள் கண்ணீரோடு... எனக்கான தாலாட்டே அதுதான் தெரியுமா..?

தஞ்சாவூர் செல்லும் போதெல்லாம் நீங்க படித்த பள்ளியின் வாசலுக்கு ஓடிச் சென்று பார்த்து தன் நினைவுகளை மீட்டியிருக்கிறாள்.

அம்மாவைச் சுமந்து திரிந்தேன் என்று சொல்லும் நீங்கள் எத்தனை முறை அந்தப் பள்ளிக்குப் போயிருக்கிறீர்கள்...? 

ஏதோ மாற்றுப் பாதையில் செல்ல வேண்டிய சூழலாம் அந்த வழி சென்றீர்கள்... நினைவை மீட்டீர்கள்... இல்லையென்றால்...?

நெருங்கிய நண்பர்கள் வாட்ஸ் அப் குழுமம் வைத்திருந்தும் அதில் உங்களை இணைக்கவில்லை... அம்மாவை இணைத்திருக்கிறார்கள்... இதெல்லாம் எப்படி... நம்பும்படியாகவா இருக்கிறது.... 

இன்னொன்றும் கேட்கிறேன்.. 

இதே ரீயூனியன்... இரவு முழுவது தனிமை ஊர் சுற்றல் என என் அப்பாவோ... உங்கள் மனைவியோ... செய்திருந்து தெரிய வந்தால் இதிலென்ன இருக்கு... அவங்க மனசுக்குள்ள வாழ நினைத்த வாழ்க்கைன்னு நீங்க ரெண்டு பேரும் ஏத்துக்கிட்டிருப்பீங்களா..? இல்லை எப்படி நானிருக்கும் போது இன்னொருத்தனுடன் / இன்னொருத்தியுடன் ஊர் சுற்றலாம் என  மல்லுக்கு நின்றிருப்பீர்களா..?

அம்மா... இப்போது மிகவும் சோர்ந்து... எப்போதும் எதையோ இழந்தது போல் இருக்கிறாள்... காரணம் மீண்டும் பார்க்க நேர்ந்த நீங்களும்... அந்த இரவுத் தனிமையும்...

அந்த இரவில் எதை மீட்டுக் கொடுத்தீர்கள் அம்மாவிடம்... பால்யத்தையா... காதலின் வேதனையையா...

முதலில் நீங்கள் ஒரு திருமணம் செய்யுங்கள்... உங்களுக்கான வாழ்வை வாழுங்கள்...

அம்மா ஒன்றும் திருமணம் செய்ய மறுத்து... அப்பா அவரைக் கட்டாயப்படுத்தி... திருமணம் செய்து கொள்ளவில்லை. விருப்பத்துடந்தான் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். 

தொலைந்த காதலை தூக்கிச் சுமக்காதீர்கள்... தொலைந்தது தொலைந்ததாகவே இருக்கட்டும்... அதைச் சுமந்தது போதும்.... உங்களுக்கான வாழ்வைச் சுமக்கப் பாருங்கள்.

எனது கேள்விகளுக்கான பதிலெல்லாம் நீங்கள் எனக்கு எழுத வேண்டாம்...

நீங்கள் திருமணம் செய்தால் மட்டுமே... எனக்கும் அப்பாவுக்குமான அம்மா கிடைப்பாள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

நான் உங்களுக்குச் சொல்ல வேண்டியதில்லை.... வாழ்க்கை நிறைய கற்றுக் கொடுக்கும் சார்...

இறுதியாக, என்னைப் போல் உங்களுக்கு ஒரு மகனோ / மகளோ இருந்திருந்தால் என் அம்மாவுக்கு லெட்டர் எழுதுவார்களா இதுபோல...

அதுவும் ஆண் பிள்ளை என்றால் என் அம்மாவை எவ்வளவு கேவலமாக பேசியிருக்கக் கூடும்..? 

எதார்த்தத்தை யோசியுங்கள்.

வாழ்ந்து பாருங்கள்.... ராமாக இல்லை ராமச்சந்திரனாக...

அம்மாவை நீங்கள் அழைப்பது போல் எழுதிவிடக் கூடாது என்பதாலே கடிதத்தில் அம்மாவின் முழுப் பெயரையும் எழுதினேன்.

அப்பாவுக்கு அம்மா எப்போதும் அம்முதான்.... ஜானு என அழைப்பதை அவர் ஏனோ விரும்பவில்லை... 

அவரிடமும் அம்மாவுக்காக நிறைய காதல் இருக்கு சார்... பிஸினஸ் பிசியிலும் அவர் அதைக் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்... அம்மா பெற்றுக் கொண்டுதான் இருக்கிறாள்... திருப்பிக் கொடுக்காவிட்டாலும்...

நினைவுகளை தூக்கி எறிந்துவிட்டு நிஜத்துடன் வாழப் பழகினால் எல்லாம் சுகமாகும்.

நன்றி.
ஜானகியின் மகள் மீரா.
-'பரிவை' சே.குமார்.