மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

காற்றுவெளி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காற்றுவெளி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 7 ஆகஸ்ட், 2019

உமை மறு பாகம் (காற்றுவெளி சிறுகதை)

காற்றுவெளியில் தொடரும் வாய்ப்பாய் இந்த மாதம் உமை மறு பாகம் சிறுகதை. இக்கதை 'திருநங்கைகள்' குறித்தான சிறுகதைப் போட்டிக்கு எழுதியது. அங்கு தெரிவாகவில்லை என்ற நிலையில் காற்றுவெளிக்கு அனுப்பினேன். எப்பவும் போல் காற்றுவெளியில் இடம் பிடித்தது. பெரிய கதை... காற்றுவெளியில் எட்டுப் பக்கங்கள்... அதிகப் பக்கங்கள் என்றாலும் தொடரும் ஆசிரியர் குழுவின் அன்புக்கு நன்றி.

**************
உமை மறு பாகம்
Image result for திருநங்கைகள் ஆர்ட்

'புது மேனேஜர் வர்றாராம்...'

இந்த வார்த்தை ஆபீஸ் முழுவதும் ஒரு வாரமாகவே வலம் வந்து கொண்டிருந்தது.

'யார் அந்த புது மேனேஜர்..?' என்பதற்கான விடை யாருக்கும் தெரியவில்லை.

அடுத்த வாரத்தில் ஜாயின் பண்ணுவார் என்ற செய்தி மட்டுமே மேலிடத்தில் இருந்து வந்திருந்தது.

'யார் அவர்...?'

'ஆணா... பெண்ணா...?'

'எப்படி இருப்பார்..?'

'மற்றவர்களிடம் எப்படி நடந்து கொள்வார்...?' என்பதெல்லாம் யாருக்கும் தெரியாது.

மதிய லஞ்ச் பிரேக்கில் "வரப்போற புது மேனேஜர் யாரு... எங்கேயிருந்து வர்றாருன்னு தெரிஞ்சிக்க முடியலையே... ஒரே சஸ்பென்சா இருக்கு..." மெல்லப் பேச்சை ஆரம்பித்தான் பிரேம் மசாலா உருளைக்கிழங்கை மென்றபடி.

"ஆமா... ஆல் இண்டியா ரேடியோவான நம்ம பியூன் செல்வத்துக்குக்கூட தெரியலைங்கிறதுதான் ரொம்ப ஆச்சர்யமா இருக்கு..." என்றாள் தேவகி தன் முட்டைக் கண்களை விரித்தபடி.

"ம்... அந்தாளு எப்படியும் தெரிஞ்சிக்கிட்டு வந்து கதையளப்பாரு... இந்த முறை அவருக்கே தெரியலைங்கிறதுதான் அதிசயமா இருக்கு..." என்றான் பிரேம்.

"எது எப்படியோ... இப்ப ஆக்டிங் மேனஜரா இருக்க ரமணி அம்மாவோட தொந்தரவுல இருந்து விடுதலை கிடைக்கப் போகுதுங்கிறதே நமக்கெல்லாம் சந்தோஷம்தானே..." மெல்லச் சொன்னான் லாரன்ஸ்.

"ஆமா... ஆமா... இந்த ரெண்டு மாசமா அந்தப் பொம்பளை என்ன ஆட்டம் போடுது... நல்லவேளை அதுக்கு மேனேஜர்ன்னு புரமோசன் கொடுத்து இங்கயே இருந்து நம்ம தாலிய அறுக்காம விட்டானுங்களே..." சிரித்தாள் தேவகி.

"அதுதான் மேனேஜருன்னு சொல்லியிருந்தா நானெல்லாம் ரிஜைன் பண்ணிட்டு போயிருப்பேன்... இதுக்கிட்ட வேலை பாக்குறதுக்கு... மாமியாக்கிட்ட வேலை பார்த்துடலாம்" கன்னத்தில் குழி விழச் சிரித்தாள் மல்லிகா.

"இப்ப மேனஜரா வேற மாநிலத்தைச் சேர்ந்தவங்களைத்தான்  நம்மளோட ரெண்டு மூணு பிராஞ்சுல போட்டிருக்காங்க... சோ நம்ம பிராஞ்சுக்கும் வேற மாநிலத்துக்காரன் எவனாச்சும்தான் வருவான்னு தோணுது..." என்றார் அனுபவ அக்கவுண்ட்டன்ட் அருணாச்சலம் செட்டியார்.

"அப்படியும் இருக்கலாம்...  இங்கல்லாம் மொழி தெரியாத ஆளைக் கொண்டாந்து போட்டு என்னத்தைப் பண்றது..."அலுத்துக் கொண்டான் பிரேம்.

"இங்கன்னு இல்ல மச்சான்... இப்ப எல்லா சென்ட்ரல் கவர்மெண்ட் ஆபீஸ்லயும் வட நாட்டானுங்களை கொண்டாந்து போட்டு நிரப்புறானுங்க... இது எதுக்குன்னு தெரியல... ஒருவேளை தமிழனுக்கு வேலை தெரியாதுன்னு முடிவு பண்ணிட்டானுங்களோ என்னவோ...  நேத்து கனரா பேங்க் போனேன்... பழைய ஆளுங்க எல்லாரையும் மாத்திட்டாய்ங்க... மேனேஜரையும் சேர்த்து... இப்ப வந்திருக்கவனுங்க பேசுற ஹிந்தி நம்மாளுகளுக்குப் புரியலை.... நம்மாளுக பேசுற தமிழைக் கேட்டு அவன் ஹியா... ஹியான்னு கத்துறான்... முகத்துல சிரிப்பே இல்லாம கடுகடுன்னு பேசுறானுங்க... அதுலயும் அங்க ரெண்டு குட்டிக இருக்காளுக பாரு... என்ன மண்டையாப் பேசுறாளுகங்கிறே... அங்க வர்றது பூராம் நூறு நாள் வேலைத்திட்டத்துல வேலை பாத்துட்டு..."

எல்லாரும் சிரித்தார்கள்.

"சரி... சரி... சிரிக்காதீங்க... எங்க வேலை பாக்குறாங்க... படுத்து ஊர்க்கதைதான் பேசுறாங்க... என்ன இருந்தாலும் படிப்பறிவில்லாத வயசானவங்கதானே அவங்க... இவளுங்க நுனி நாக்கு இங்கிலீசுல பேசினா அவங்களுக்கு என்ன புரியும் ... புரியாம முழிக்கிறவங்ககிட்ட முகத்தைத் தூக்கி வச்சிக்கிட்டு திட்டுறாளுங்க... வேலை பாக்காம பக்கத்துல இருக்கவனுக்கிட்ட சிரிச்சிப் பேசிக்கிட்டு இருக்காளுக... நான் ஏம்மா எம்புட்டு நேரம் நிக்கிறதுன்னு கேட்டதுக்கு எங்கிட்ட ஏறுனா... நேரா மேனேஜருக்கிட்ட பொயிட்டேன்... அந்தாளு வந்து சாருக்கு முடிச்சிக் கொடும்மான்னதும் எங்கிட்ட சார்... சார்ன்னு சிரிச்சிப் பேசுறா... வரும்போது அழகா இருக்கேன்னு ஆட்டம் போடாத... காலம் இந்தா நிக்கிற ஆயா மாறி உன்னையுந்தான் மாத்தும்... இப்படியே வச்சிருக்காதுன்னு சொல்லிட்டு இன்னொன்னும் சேர்த்து சொல்லிட்டு வந்தேன்" என்றான் லாரன்ஸ்.

"என்ன சொன்னே...?" ஆவலாக் கேட்டான் அவனைப் பற்றித் தெரிந்த பிரேம்.

"வேணாம் விடு... சக தோழிகள் இருக்காங்க..." என மழுப்பினான்.

"மூதேவி நீ என்ன சொல்லியிருப்பேன்னு தெரியும்... இனி அங்க போனியன்னா கொன்னுடுவாளுங்க...."

"சரி... சரி...  நம்ம புது மேனேஜரை வரவேற்க ரெடியா இருங்க..." சிரித்தபடி சொன்னாள் தேவகி.

"ஆமா அதுவும் ஹியா... ஹியாவாத்தான் இருக்கும்... என்ன பான்பராக் கோஷ்டியில இருந்து வராம இருந்தாச் சரி." என்றான் ப்ரேம்.

திங்கள் கிழமை காலை...

வர இருக்கும் புது மேனேஜரை வரவேற்க்க, மாலை, பொன்னாடையுடன் அலுவலகமே காத்திருந்தது.

ரமணி மானேஜர் அறையில் இருந்த தன்னுடைய பொருட்களை சனிக்கிழமையே  தனது பழைய இடத்தில் வைத்துவிட்டு அறையைச் சுத்தம் பண்ண செல்வத்திடம் சொல்லியிருந்தாள். அறை சுத்தமாக, பளிச்சென்று இருந்தது. ஆனாலும் தனக்கு புரமோசன் கொடுக்கவில்லை என்ற வருத்தமும் கோபமும் அவளுக்குள் இருந்ததால் என்னதான் வலியச் சிரித்தாலும் அவளின் முகம் இருண்டுதான் இருந்தது.

வாசலில் வந்து நின்ற வாடகைக் காரில் இருந்து இறங்கி வந்தவளைப் பார்த்ததும் ஆபீஸே ஆச்சர்யத்தில் மூழ்கியது.

ஆம்... அமலாபால் போல் ஒருத்தி சிவப்புச் சேலையில் தேவதையாய் வந்தாள்.

"ஹாய்... ஐ'யாம் நியூ மேனேஜர் ஆப் திஸ் பிராஞ்ச்" நுனி நாக்கு ஆங்கிலம் கொஞ்சியது. மூக்குத்தி தெலுங்குக்காரி போலக் காட்டியது.

மாலையைக் கழுத்தில் போட்டுவிட்டு, ரமணி கொடுத்த பொன்னாடையை வாங்கி கையில் வைத்துக் கொண்டு 'ரமணிதானே' எனக் கட்டிக் கொண்டாள்.

"என்னடா இது போர்ட்டி பிளஸ் ஆளு ஒண்ணு வரும்ன்னு பார்த்தா பார்ட்டி பிரஷ்சா வந்திருக்கு" லாரன்ஸ் காதில் கிசுகிசுத்தான் ப்ரேம்.

"ஆமா மச்சான்.. எதாச்சும் பேரல் வரும்ன்னு பார்த்தா 36-24-36ன்னு ஊறல் வந்து நிக்குதுடா..."

"ம்... செம பிகருடா... இதுக்குக் கீழ நாம எப்படிடா வேலை பாக்குறது.... வேலை பார்க்க மனசே வராதேடா..."

"கீழ வேலை பாக்கலைன்னா மேல பாரு...." டபுள் மீனிங்கில் சொன்னான் லாரன்ஸ்.

"மூதேவி... எப்பவும் அதே நினைப்புலயே இரு..."

"இனி கண்ணெல்லாம் அங்கிட்டுத்தான் மேயும்... எங்க பக்கம் தவறிக்கூட வராதே..." அவனுங்களுக்கு மட்டும் கேட்கும்படி சொன்னாள் தேவகி.

"உலக அழகி வந்த பிறகு உள்ளூர்க் கிழவிக்கு என்ன வேலை..." எனச் சிரித்த லாரன்ஸ். 'வாடி' என முறைத்தாள் தேவகி.

"டியர் ப்ரண்ட்ஸ்... ஐ ஆம் சஞ்சனா... ப்ரம் மலப்புரம்... கேரளா..." என ஆங்கிலத்தில் ஆரம்பித்து சில நிமிடம் பேசியவள், "எனக்குத் தமிழ் கொறச்சி அறியாம்... எங்கிட்ட மேனஜர்ங்கிற டிஸ்டண்ட்ஸ் எல்லாம் வேண்டாம்... பிரண்ட்லியா இருக்கலாம்..." என்றாள் சிரித்தபடி.

அவள் அறைக்குள் சென்று அமர்ந்ததும் பிரேமைப் பார்த்து "மூக்குத்தி தெலுங்கோன்னு நினைக்க வச்சா... சேச்சியாம்... அப்புறம் என்ன மாப்ள... இனி உங்காட்டுலதான் செமமழை..." எனச் சிரித்தான் லாரன்ஸ்.

"ஏன் நீ பாக்க மாட்டியாக்கும்..?" உள்ளூர் கிழவின்னு சொன்ன கடுப்பில் கேட்டாள் தேவகி.

"பலாப்பழம் வெளியில இருந்தா ஈ மொய்க்காம இருக்குமா...? ஆனாலும் அடிக்கடி அந்த ரூமுக்குப் போறவன் மாப்ளைதானே... தேவி தரிசனம் அடிக்கடி நிகழுமில்ல..."

"அடப் போடா..."

நாட்கள் நகர... நகர... ப்ரேம் நெஞ்சுக்குள் சஞ்சனாவின் உருவம் பிரேம் போட்டு மாட்டப்பட்டுவிட்டது. அவளும் இவனிடம் ரொம்பப் பிரியாகவும் பிரியமாகவும் பேச ஆரம்பித்தாள்... அவளின் கொஞ்சிப் பேசும் மலையாளத் தமிழ் அவனுக்கு ரொம்பப் பிடித்திருந்தது.

ஹோட்டலில் தங்கியிருந்தவளுக்கு வீடு பிடித்துக் கொடுத்தவன் ப்ரேம்தான்... அப்பவே லாரன்ஸ் அப்புறம் என்ன குடியும் குடித்தனமுமாய் இருக்க வேண்டியதுதானேன்னு கேலி பண்ணினான்.

மற்றவர்கள் இருவரையும் இணைத்துப் பேசுவதை சந்தோஷமாக ரசிக்க ஆரம்பித்தான்... சஞ்சனாவிடம் தன் காதலைச் சொல்வதற்கான நாளுக்குக் காத்திருந்தான்.

கையெழுத்து வாங்க அவளின் அறைக்குள் சென்றவன் "ஈவினிங் பிரியா..." என்றான்.

"ம்... ஏன்...?"

"உங்ககிட்ட கொஞ்சம் பர்சனலாப் பேசணும்... எதாவது ஒரு காபி ஷாப் போயிட்டு... மாக்ஸிமம் ஹால்ப் ஆன் ஹவர்தான்... ரொம்ப லேட் ஆக்க மாட்டேன்.."

ஒரு மாதிரி சிரித்தவள் "ஓகே... நோ பிராப்ளம்..." என்றாள்.

ந்த காபி ஷாப்பில் ஆட்களே இல்லை... காலியாக இருந்தது... ஒரு ஓரமாக இருவரும் அமர்ந்தனர்... சேர நாட்டுப் பெண்... அதுவும் காட்டன் சேலையில்... காலையில் எப்படி அவளைப் பார்த்தானோ.... அப்படியே... அதே அழகில் இருந்தாள்.

அவளையே ரசித்தான்....

முகம் பார்த்து ரசித்தவன் பார்வையை மெல்ல இறக்கினான்...

மலையாளத்துக்கே உரிய வனப்பு அவனைத் திக்குமுக்காட வைத்தது.

"அலோ... பெர்சனலா சம்சாரிக்கணும்ன்னு பறைஞ்சிட்டு நீங்கள் என்னை நோக்கிக்கிட்டே இருக்கு... இதுக்கா இவட வான்னு விளிச்சது..." என்ற அவளின் குரலால் மீண்டும் சுயத்துக்கு வந்தான்.

"எப்படிச் சொல்றதுன்னு தெரியலை... பட்... உங்க மேல... எனக்கு ரொம்பப் பிரியம்... ஐ திங்க்... ஜ ஆம் பால் இன் லவ் வித் யூ..." மெல்லச் சொன்னான்.

உதட்டில் புன் சிரிப்புடன் "ஆமா... என்னைப் பற்றி சாருக்கு என்ன அறியும்..."

"உங்களுக்கு மேரேஜ் ஆகலைன்னு தெரியும்... அது மட்டும் போதுமே.... வேறென்ன தெரியணும்..."

"லவ் பண்ண அது மட்டும் மதியோ..? பாஸ்ட் லைப்பெல்லாம் அறிய வேண்டாமா..?"

"எனக்குப் பிரசண்ட் மட்டும் போதும்... பாஸ்ட்டெல்லாம் வேண்டாம்..."

"ப்ரேம்... எனக்குன்னு ஒரு பாஸ்ட் இருக்கு... அது ரொம்பப் பயங்கரமானது... பரிதாபமானது... அதை நீங்க தெரிஞ்சிக்கணும்... இதுவரைக்கும் நிறையப் பேருக்கிட்ட சொல்லிட்டேன்... அதுல ஒரு ஆளா நீங்க சேரப்போறீங்க... தட்ஸ் ஆல்... நான் என்னோட பாஸ்ட்டைச் சொல்ல வெட்கப்பட்டதுமில்லை... வேதனைப்பட்டதுமில்லை..." மலையாளம் கலந்த தமிழில் பேசுவதைவிட ஆங்கிலம் சுலபமாய் வந்தது அவளுக்கு.

அவளே தொடர்ந்தாள்... "எங்க வீட்ல நான் மூணாவதாப் பிறந்தேன்... எல்லார் மாதிரித்தான் நானும் வளர்ந்தேன்... பதின்ம வயசுல எனக்குள்ள மாற்றம்... ஆண் பிள்ளையான நான் எனக்குள் பெண்மையை உணர்ந்தேன்.... அதை ரசித்தேன்... அப்படியே வாழத் துடித்தேன்... வெளியில் சொல்ல முடியாமல் தவித்தேன்... தகித்தேன்... வீட்ல ஆளில்லாத நேரத்துல அக்காவோட பிரா, பாவாடை என எல்லாம் எடுத்துப் போட்டுப்பேன்... கண்ணுக்கு மை போடுவேன்... வளையல், தலைக்குப் பூன்னு ஒரு பொண்ணா வாழ்ந்து மகிழ்வேன்."

ப்ரேம் சிலையாய் இருந்தான்.

"எத்தனை நாள் மறைக்க முடியும்..? ஒரு நாள் அக்கா பார்த்துட்டா... வீட்டில் பயங்கர பிரச்சினை... அப்பா என்னைய அடி அடின்னு அடிக்கிறாரு... என்ன செய்ய எனக்குள்ள ஆண்மை துளி கூட இல்லை எதிர்த்து நிக்க... பொட்டச்சியா சுருண்டு படுத்துக்கிட்டு அழுதேன்... அழுதேன்... அழுதுக்கிட்டே இருந்தேன்..." கண்களைத் துடைத்துக் கொண்டாள்.

"எனக்குள்ள வளர்ச்சி மாற்றம் இருக்குங்கிறதை அப்பத்தான் அம்மாவே பார்த்தாள். என்னோட மார்பக வளர்ச்சி அவளுக்கு அதிர்ச்சியைக் கொடுத்துச்சு... ஆளாளுக்கு இவன் இப்படி மொட்டச்சியா மாறிட்டானேன்னு புலம்புனாங்க... ஏதோ என்னால எங்க வீட்டுக்கே கேவலம் வந்துட்ட மாதிரி பேசினாங்க... என்னால அவங்கள்லாம் இனி வெளிய தலைகாட்ட முடியாது... எல்லாரும் செத்துடலாம்ன்னு பேசினாங்க... என்னால அவங்க ஏன் சாகணும்... எனக்கு வாழணும்... இந்த சமூகத்துல ஜெயிச்சிக் காட்டணும்ன்னு வெறி வீட்டை விட்டு வெளியில வந்துட்டேன்..."

"ம்... வெளிய வந்து எப்படி... இப்படி... " ப்ரேம் குழப்பமாய்க் கேட்டான்.

"ம்... வெளியில வந்து எங்க போறதுன்னு தெரியாம தவிச்சி நின்னேன்... முதல்ல தங்க இடம் வேணுமே... நேர எனக்குத் தெரிஞ்ச அக்காக்கிட்டப் போயி நடந்ததைச் சொல்லி அழுதேன்... அவங்க திருநங்கைதான்னாலும் படிச்சிட்டு ஒரு அமைப்பை நடத்திக்கிட்டு இருக்காங்க... பாலியல் தொழில்ல மாட்டிக்கிட்ட திருநங்கைகளுக்கு உதவுறவங்க... என்னை... என்னோட நிலையைப் புரிஞ்சிக்கிட்டாங்க... எனக்கு முதல்ல பெண்ணாய் மாறணும்... என்னை ஆணாய் அடையாளம் காட்டும் அந்த உறுப்பை அறுத்து எரியணும்ன்னு வெறி மனசுக்குள்ள... அவங்கதான் பொறுமையா இரு... முதல்ல படி... மத்ததுக்கெல்லாம் காலம் வரும்ன்னு சொல்லி என்னைப் படிப்பைத் தொடர வச்சாங்க..."

ப்ரேம் காபியைக் குடிக்காமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். சஞ்சனா காபியைக் குடித்தபடி, "காபியைக் குடிங்க..." என்றாள்.

"அப்புறம்..?" என்றான் காபியைக் குடித்தபடி.

"படிச்சேன்... இப்பத்தான் எப்படி வேணுமின்னாலும் மாற ஆபரேசன் இருக்கே... அக்காதான் அவங்க அமைப்பு மூலமா எனக்கு ஆபரேசனுக்கு ஏற்பாடு பண்ணுனாங்க... நிறைய செலவு... ஆபரேசனுக்காக பலர் பிச்சை எடுத்திருக்காங்க... ஆனா எனக்கு அக்கா முழுச் செலவையும் பண்ணினாங்க... ஆபரேசன்ல முழுப் பெண்ணாய் மாறி நின்னேன்... எனக்கு அன்னைக்குத்தான் மகிழ்ச்சி மனசுக்குள்ள... ரொம்பச் சந்தோஷமாய் உணர்ந்தேன்...  இத்தனை நாள் அடைபட்டுக் கிடந்த கூண்டுக்கிளி அது போக்குல சுதந்திரமாப் பறக்கிற மாதிரி உணர்ந்தேன்..."

"ம்..."

"என்னோட பெர்த் சர்ட்டிபிகேட்ல இருந்து எல்லாத்தையும் அக்கா மாத்த ஏற்பாடு பண்ணினாங்க... அதனால் பெண் பேர் வைக்கணுமே என்ன பேர் வைக்கலாம்ன்னு யோசிச்சாங்க... அவங்க லிவிங் ஸ்மைல் வித்யா மேடம் மாதிரி வித்தியாசமான பேரா இருக்கணும்ன்னு யோசிச்சாங்க... அப்ப நாந்தான் அவங்க பேரையே வச்சிக்கிறேன்னு சொல்லிட்டேன்... ஆமா அவங்க பேரும் சஞ்சனாதான்... என்னோட சர்டிபிகேட்ஸை மாத்த நிறைய சிரமப்பட்டோம்... எத்தனை கிண்டல், கேலி தெரியுமா...?"

பிரேம் உறைந்து போயிருந்தான்.

"இதெல்லாம் என்னோட படிப்பு முடிஞ்சதும் நடந்தது. அப்புறம் மேற்படிப்புக்கு யுனிவர்சிட்டி போனேன்... பசங்களோட அமர்ந்து படிச்ச நான் அங்க பொண்ணுங்களோட அமர்ந்தேன். நான் மூன்றாம் பாலினம்ன்னு யாருக்குமே தெரியாது... எல்லாருமே என்னைப் பெண்ணாத்தான் நினைச்சாங்க... என்னோட குரல் கரகரப்பா இல்லாம பெண்மை கலந்திருந்ததுதான் முக்கியக் காரணம்... அப்பவும் என்னோட அழகுல நிறையப் பேர் லவ் பண்றேன்னு முன்னால வந்தாங்க... விபரம் சொன்னதும் டேய் அவ அலியாமுடான்னு சொல்லிட்டுப் போயிடுவாங்க... ஆனா காதல் வேண்டாங்கிறதுக்காகத்தான் நான் அப்படிச் சொல்றதா என் காதுபடவே பேசிக்குவாங்க... சிரிச்சிக்குவேன்... நான் இன்னைக்கு வரை திருநங்கைதான்.... என்னோட பாலினம் அப்படித்தான் பதியப்பட்டிருக்கு..."

ப்ரேம் பதில் பேசாது அமர்ந்திருந்தான்... கையிலிருந்த காபி மேல் ஆடை படர்ந்திருந்தது.

"நாம இந்தச் சமூகத்துல ஜெயிச்சிக் காட்டணுங்கிற வெறியில படிச்சேன்... எக்ஸாம் எழுதினேன்... டிஸ்டிங்சன்ல பாஸானேன்... எக்ஸாம் எழுதி, இன்டர்வியூ அட்டண்ட் பண்ணி, திருநங்கைக்கு இவ்வளவு பெரிய போஸ்டைக் கொடுக்கிறதான்னு ஒரு சில அதிகாரிகளால எதிர்ப்பு... எல்லாம் சமாளிச்சி கேரளாவுல வேலை பார்த்தேன்... அப்புறம் இங்க மாத்திட்டாங்க... ம்... இதுதான் என் கதை... இப்பவும் நீங்க பால் இன் லவ் வித் மீயா..?" சிரித்தாள்.

"பாஸ்ட்டை தெரிஞ்சிக்காம இருக்கிறதுதான் நல்லதுன்னு சொன்னேன்... நீங்க கேக்கலை... பட் இன்னைக்கு திருநங்கைகள் காவல்துறை உள்பட எல்லா வேலையிலும் இருக்காங்க... குறிப்பா அவங்ககிட்டதான் மனிதாபிமானம் நிறைஞ்சிருக்கு... அவங்களை அலியின்னும் ஒம்போதுன்னும்... சாரி... சொல்றது இப்ப குறைஞ்சிருச்சு... அதேபோல அவசர பாலியல் தேவைகளைப் பூர்த்தி செஞ்சிக்கிறதுக்காக காசு கொடுத்து மறைவான இடத்துக்கு அழைச்சிக்கிட்டுப் போறதும்... பஸ்ல, வீதிகள்ல கைதட்டி பிச்சை எடுக்குறதும்... மார்பைத் திறந்து காட்டி பணம் பறிக்கிறதும் இப்ப கொஞ்சம் கொஞ்சமாக் குறைஞ்சிருக்குங்கிறது நல்ல விஷயம்தான்... பெரும்பாலானோர் படிச்சி முன்னேறி வர்றது நம்பிக்கையைக் கொடுக்குது... நல்ல விஷயமாத் தெரியுது..." என்றான் ப்ரேம்.

"ம்... நான் முழுமையான பெண்தான் இப்போது... என்னால செக்ஸைக் கொடுக்க முடியும்... பட் ஒரு குழந்தைக்குத் தாயாக முடியாது... நான் கேட்டதுக்கு உங்ககிட்ட இருந்து பதில் வரலை... சோ... நீங்க என்னை இனி லவ் பண்ண மாட்டீங்கன்னு நினைக்கிறேன்..." என்று சிரித்தவள் "எப்பவும் போல பிரண்ட்டாவே இருப்போம்... நான் திருநங்கைன்னு சொல்லிக்க வெட்கப்பட்டதில்லை... பட் ஆபீஸ்ல யாருக்கும் தெரிய வேண்டாம்... அவங்களோட பார்வை வேறு மாதிரி இருக்கும்... ஏன்னா என்னதான் காவல்துறை... நீதித்துறை... சினிமான்னு நாங்க இப்ப கால் வச்சிருந்தாலும் எங்க மீதான சமூகப் பார்வை இன்னும் விகாரமாத்தான் இருக்கு... சோ இங்க சொன்னது ஆபீஸ்ல வேண்டாம்... ப்ளீஸ்..."

"ம்..." மூச்சை இழுத்து விட்டான்... அதில் காதல் வெளியேறிச் செல்வதை சஞ்சனா உணர்ந்து சிரித்துக் கொண்டாள்.

"சரி.... வாங்க போலாம்... இப்பத் தொடச்சிட்டுப் போட்ட டிஸ்யூ பேப்பரா நினைச்சிக்கங்க என்னோட கதையை... அதை தூக்கிச் சுமக்காதீங்க.... என்னோட கனவு பெரிசு...  அக்காவை என் பக்கத்துல வச்சிக்கணும்... அவங்களைப் போல நானும் சமூக சேவைகள் செய்யணும்... குறிப்பா நான் இன்னும் சிறகை விரிக்கணும்... எல்லையில்லா வானம் நோக்கிப் பறக்கணும்... எனக்குச் சிறகா இருக்கப் போற துணைதான் வேணுமேயொழிய  திருநங்கைதானேன்னு சிறகொடிக்கிற உறவுகள் எல்லாம் இனித் தேவையில்லை..." என்றபடி எழுந்தாள்.

ப்ரேம் என்ன பேசுவது என்று தெரியாமல் "கொஞ்ச நாள் அவகாசம் வேணும்... என்னோட முடிவு என்னன்னு நான் யோசிக்க..." என்றபடி அவள் பின்னே நடந்தான். 
-'பரிவை' சே.குமார்.

ஞாயிறு, 7 ஜூலை, 2019

சிற்றிதழ்கள் உலகம் (காற்று வெளி கட்டுரை)

ஆடி மாத காற்று வெளி  - சிற்றிதழ் சிறப்பிதழாக வெளி வந்திருக்கிறது, அதில் சிற்றிதழ் குறித்த எனது கட்டுரை வந்திருக்கிறது. தொடர்ந்து வாய்ப்புக் கொடுக்கும் காற்று வெளி ஆசிரியர் குழு மற்றும் திரு. முல்லை அமுதன் ஆகியோருக்கு நன்றி.

உங்கள் பார்வைக்காக கட்டுரை...
----------------

சிற்றிதழ்கள் உலகம்

ல்லூரியில் படித்த போது நண்பர்கள் அறுவர் இணைந்து விளையாட்டாய் ஆரம்பித்ததுதான் ‘மனசு’ கையெழுத்துப் பிரதி.

மனசு மாத இதழாக பயணித்த காலத்தில் எங்கள் கல்லூரியில் நீ, கவி'தா', ரோஜா, மருதம், காகிதம் என ஏகப்பட்ட கையெழுத்துப் பிரதிகள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் வித்தியாசமாய்... கவி’தா’ இதழை பரக்கத் அலி என்ற ஒருவர் மட்டுமே நடத்தினார். சிறுகதைப் போட்டி வைத்து பரிசு கொடுத்ததுடன் தேர்வான சிறுகதைகளைத் தொகுத்து புத்தகமாகக் கொண்டு வந்தார்.

கையெழுத்துப் பிரதிகளும் சிற்றிதழ்களுக்குள் அடக்கம்தானே.

கதை, கவிதைகள், கட்டுரைகள் என ஒரு வட்டத்துக்குள் சுற்றிக் கொண்டிருந்த கல்லூரி கையெழுத்துப் பிரதிகளுக்கு மத்தியில் 'மனசு' இதழையும் அந்த வட்டத்துக்குள் நிறுத்தி விடாமல் தனித்துவமாகத் தெரிய வைக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தது எங்கள் ஆசிரியர் குழு. அதற்கென புதுப்புது முயற்சிகள் ஒவ்வொரு இதழிலும் தொடர்ந்தது.

அதன் தொடர்ச்சியாய் 'கருத்துக் கணிப்பு' என்பதை ஒரு கேள்வியை பல்வேறு தரப்பட்டவர்களிடம் கேட்டு அதற்கான பதிலைப் பெற்றுப் போட ஆரம்பித்தோம். இதற்கென நாலைந்து பக்கங்கள் ஒதுக்கினோம். ஒவ்வொரு மாதமும் கேட்கப்படும் கேள்வியும் அதற்கான பதிலும் பேராசிரியர்களிடம் எங்கள் மீதான நம்பிக்கையை விதைத்தது. பேராசிரியர்கள் விரும்பும் மாணவர்கள் ஆனோம்.

கல்லூரித் துறைகள், நூலகம், பெண்கள் ஓய்வு அறை, நகர பொது நூலகம், பள்ளி நூலகங்கள் என மாதம் 11 புத்தகம் போட்டோம். வெளியில் இருக்கும் நண்பர்களிடமும் படைப்புக்கள் வாங்கிப் போட ஆரம்பித்தோம். மனசுக்கு கல்லூரி தவிர்த்து வெளியிலும் நல்ல வரவேற்ப்பு இருந்தது.

என்னப்பா இன்னும் மனசு எங்க துறைக்கு வரலை என பேராசிரியர்களும் பொது நூலக, பள்ளி நூலக நண்பர்களும் கேட்ட நாட்களும் உண்டு. அதுவே எங்கள் புத்தகத்தின் வெற்றி எனலாம்.

ஆசிரியர் குழுவில் இருந்து சிலர் விலகினாலும் நான், முருகன், சுபஸ்ரீ என மூவருமாய் மனசு என்னும் கையெழுத்துப் பிரதியை அனைவரும் விரும்பும் ஒரு இதழாகத் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் நடத்தி வந்தோம். எங்களுக்கு உறுதுணையாய் எங்கள் பேராசான் மு.பழனி இராகுலதாசன் அவர்கள் இருந்தார்கள். கடைசி இதழில் அவரின் போட்டோவுடன் சிறு பேட்டியும் இருந்தது. இதிலின் பிரதி ஊரில் வைத்திருந்தேன். இப்போது எங்கிருக்கிறது என்று தெரியவில்லை.

எல்லா கையெழுத்துப் பிரதிகளுமே நடத்துபவர்கள் படிப்பை முடித்ததும் மறைந்துவிடும் அப்படித்தான் மனசும்.... எங்களுக்குப் பின்னர் சிலர் எடுத்து நடத்துகிறோம் என்றார்கள்... ஏனோ செய்யவில்லை.

நானும் முருகனும் அதே கல்லூரியில் வேலை பார்த்த போது (நண்பன் இப்போது பேராசிரியர்) எங்களுக்கு ஆசிரியர்களாய் இருந்த சிலர் உங்களுடைய துணையோடு மனசு இதழை மீண்டும் கொண்டு வரலாமே... நல்ல இதழாக நடத்துனீர்கள் என்றார்கள். ஏனோ மீண்டும் நடத்தும் எண்ணம் எழவில்லை.

அபுதாபி வந்த பின் பொழுது போகாமல், கவலைகள் போக்க எழுத்தே பிரதானமாக இருந்தது. அப்போது நான் தினமணியில் பணி செய்தபோது என்னுடன் பணிபுரிந்த நண்பன் மோ.கணேசன் (இப்போது புதிய தலைமுறையில்) உதவியுடன் வலைப்பூ ஆரம்பித்த போது எனக்குத் தோன்றிய பெயர் 'மனசு'. ஆம் என் வலைப்பூ கல்லூரியில் நடத்திய கையெழுத்துப் பிரதியின் மீதான காதலால்தான் அதே பெயரில் இன்றும் தொடர்கிறது.

இங்கு நிறையச் சிற்றிதழ்களை வாசிக்க முடிந்தது. காராணம் இணையத்தில் நிறைய இதழ்கள் கிடைத்தன. நிறைய எழுதவும் முடிந்தது.

நாம் என்ன எழுதிக் கொடுத்தாலும் அதை அப்படியே பிரசுரித்தார்கள். அனுப்பிவிட்டு மாதக் கணக்கில் காத்திருக்க வேண்டியதில்லை... அனுப்பிய மறுமாதமே பிரசுரமாகும். அவற்றிற்கு எழுதுவது ஒரு போதை என்பதாய் ஆனது. சிற்றிதழ்கள் எல்லாம் மின்னிதழ் வடிவம் பெற ஆரம்பித்தது. எத்தனை மின்னிதழ்கள்... எவ்வளவு நேர்த்தியாய்... அழகாய்....

சிற்றிதழ்கள் மீது தீராத காதல் கொண்டவர் ஐயா. கிருஷ் ராமதாஸ் அவர்கள். சிற்றிதழ்கள் உலகம் என்ற சிற்றிதழை ஆரம்பித்து பல பழைய, புதிய சிற்றிதழ்கள் குறித்தெல்லாம் எழுதினார். ஹைக்கூ, அசோகமித்திரன் சிறப்பிதழ்கள் எல்லாம் கொண்டு வந்தார். சிற்றிதழ்களைக் கொண்டாடினார்.

அவர் அலைனில் இருந்தாலும் போனில் மட்டுமே தொடர்பில் இருந்தோம். பேசும் போதெல்லாம் சிற்றிதழ்கள் குறித்தே பேசுவார். அவரின் முதல் இதழுக்கு என்னிடம் வாழ்த்து செய்தி கொடுங்க எனக் கேட்டு வாங்கினார்.

சிறுகதைப் போட்டிகள் வைத்தார்... அதில் எனக்குப் பரிசும் கிடைத்தது.

அசோகமித்திரன் சிறப்பிதழுக்கு கட்டுரை கேட்டார். 

எழுதிக் கொடுத்தேன்... பிரசுரித்தார்.

சிற்றிதழ்களை வளர்க்க வேண்டும் என்பதற்காக ஊரில் அவர் மகள் மூலமாக சந்தா வசூலித்து இதழ்களை வீட்டுக்கு அனுப்ப ஆரம்பித்தார்.

ஒரு நாள் உடல்நலமில்லாமல் துபை மருத்துவமனையில் இருக்கிறார் என்றார்கள்.

சில நாட்களுக்குப் பிறகு அவரின் மறைவு குறித்த செய்தி  முகநூல் வழி அறிய நேர்ந்தது.

அவரின் மறைவு சிற்றிதழ்களுக்கு மிகப்பெரிய இழப்பு...

சிற்றிதழ்களை பரவலாகக் கொண்டு செல்ல முயன்றவர் காலனிடம் தோற்க, சிற்றிதழ்களை பரவலாக்கும் முயற்சி தடைபட்டு நின்றது. வதிலை பிரபா போன்றோர்களால் சிற்றிதழ்கள் இன்னும் உயிர்ப்புடன் இருப்பது மகிழ்ச்சி.

எனக்கும் ஒரு மின்னிதழ் ஆரம்பிக்கும் எண்ணம்... ஆசை... கனவு.... எல்லாம் உண்டு. இது குறித்து ஆல்ப்ஸ் தென்றல் நிஷா அக்காவிடமும் பேசினேன். அதன் பின்னான வாழ்க்கை நகர்த்தல்கள் என்னை வாட்டி எடுப்பதால் எண்ணம் எண்ணமாகவே இருக்கிறது. விரைவில் மனசு மின்னிதழாக மலரலாம்.

தற்போது நிறைய சிற்றிதழ்கள் வருகின்றன... தன் பாதையைத் தீர்மானித்து பயணிக்கும் பட்சத்தில் அவை வெற்றி பெறலாம்.... பெறுகின்றன.

நிறைய சிற்றிதழ்கள் வர வேண்டும்.... வெற்றி பெற வேண்டும் என்பதே என் ஆசை... அந்த ஆசை நிறைவேறும் என்று நம்புவோமாக.
-------

குறிப்பு : இந்த மாத தேன்சிட்டு மின்னிதழில் 'அப்பத்தா' சிறுகதை வெளியாகி இருக்கிறது. அதிக பக்கங்கள் ஒதுக்கி வாய்ப்புக்கு கொடுத்த நண்பர் 'தளிர்' சுரேஷுக்கு நன்றி. 
-‘பரிவை’ சே.குமார்.

செவ்வாய், 10 ஏப்ரல், 2018

பூமாராங் (காற்றுவெளி மின்னிதழ்)

சித்திரை மாத காற்றுவெளி மின்னிதழில் எனது சிறுகதை வெளியாகியிருக்கிறது. சிறுகதையை வெளியிட்ட ஆசிரியர் முல்லை அமுதனுக்கு நன்றி.

இதழுக்கான இணைப்பு : http://kaatruveli-ithazh.blogspot.co.uk/

*****



பூமாராங்
'இந்த அநியாயம் எங்கயாச்சும் நடக்குமா என்ன... இப்படிப் பண்ணிட்டாளே... இவளெல்லாம் பொம்பளப் புள்ளதானா...' காயத்ரிக்கு மனசு கிடந்து அடித்துக் கொண்டது. 

'சை என்ன ஜென்மங்களோ... இவளுகளுக்கு எல்லாம் எப்படி இப்படித் தோணுதோ... இதுகளை எல்லாம் செங்கக் காலவாயில வச்சி எரிக்கணும்...' மனசுக்குள் திட்டிக் கொண்டே சுபத்ரா கொடுத்த தண்ணீரை மடக் மடக்கென்று குடித்தாள். 

வாயில் ஊற்றிய நீர் வெளியில் வடிந்து மார்ப்புச் சேலையை நனைத்தது.

"ஏன்டி... தண்ணிய மெதுவாத்தான் குடிச்சா என்ன... அப்புடியென்ன அவசரம்... எந்த ரெயிலப் பிடிக்கப் போறே.... நல்லாத்தான் சின்னப்புள்ளயாட்டம் சேல எல்லாம் நனச்சிக்கிட்டு..." சிரித்துக் கொண்டே கேலி செய்தாள் சுபத்ரா.

"அடியாண்டி நெஞ்சு பத்திக்கிட்டு எரியுது... இவளுக எல்லாம் என்ன நெனச்சிக்கிட்டு இருக்காளுக... இந்நேரம் இதயே ஒரு பய பண்ணியிருந்தான்னா நம்ம ஊர்ல எல்லாப் பயலும் வாள்வாள்ன்னு கத்தியிருப்பானுங்க... பொட்டச்சி பண்ணினா... அதுவும் அவனுக வீட்டுல பண்ணினா சத்தங் காட்ட மாட்டானுங்க..."

"ஏய்... இப்ப எதுக்கு நீ இந்தக் குதி குதிக்கிறே...?"

"என்னடி தெரியாத மாதிரி பேசுறே... இது படிச்ச பொட்டச்சி செய்யிற வேலயா... சொல்லு..."

"இங்க பாரு... அந்தக் குடும்பத்துக்கும் நம்ம பங்காளிகளுக்கும் ஒத்து வராது... நீ ஏதாவது பேசப்போக அவனுக அத ஊதிப் பெரிசாக்கி நம்மக்கிட்ட பிரச்செனக்கி வருவானுங்க... அவனுகளப் பத்தித்தான் தெரியுமில்ல... பேனப் பெருமாளா ஆக்குறவனுங்க... இது அவனுக வீட்டுப் பெரச்செனங்கிறதால பேசமா இருக்கானுங்க.. இந்நேரம் இது நம்ம வீட்டுப்பக்கம் நடந்திருக்கட்டும்... இந்நேரம் ஊருக்கே தந்தி அடிச்சிருப்பானுங்க..."

"அதுக்காக... அவ பண்ணுது செரியின்னு சொல்லுறியா...?"

"இங்க பாரு... நான் செரியா தப்புன்னு பேச வரல... இத யாரு செரியின்னு சொல்லுவா... நமக்கு இது தேவயில்லன்னுதான் சொல்லுறேன்... நம்ம வீட்டுப் புள்ளயள நாம செரியா வளத்தாப் போதும் அம்புட்டுத்தேன்… நமக்கு வேண்டாத சனங்க எப்புடிப் போனா நமக்கென்ன... விட்டுட்டு வேலயப் பாரு... கத்திரிக்காய் முத்துனா கடத்தெருவுக்கு வந்துதான் ஆவும்... ஆமா..."

"என்னடி இப்படிப் பேசுறே...? யாரு வீட்டுப் புள்ளயா இருந்தாலும் பாதிக்கப்பட்டவங்களோட மனசு என்ன பாடுபடும்..."

"அடிப்போடி... பாதிக்கப்பட்டவுங்களுக்காக நாம பாவப்பட்டாலும் அவனுக யாருக்காகவும் பாவப்படுறவனுக இல்லதானே... மூத்தவள ஒரு இடத்துல கட்டுனானுங்க... என்னாச்சு... மாப்பிள்ளை இப்ப வீட்டோட... எங்க பயல எங்ககிட்ட திருப்பிக் கொடுங்கன்னு கேக்க வந்த அப்பன அவனோட மவன விட்டே வெரட்ட வச்சானுங்களா இல்லயா...”

“ம்…”

“இன்னைக்கு மாமானும் மாப்பிள்ளயுமா வண்டியில சுத்துறானுங்க... பெத்த அப்பன் டவுனுக்குள்ள ஒரு கட வச்சிக்கிட்டு கஷ்டப்பட்டு வாழ்க்கய ஓட்டிக்கிட்டு இருக்காரு... சரி அத வுடு... ரெண்டாவது புள்ளய கட்டுனானுங்களே... அதாச்சும் சேர்ந்து வாந்துச்சா... புருஷன் அடிக்கிறான்... புருஷன் திட்டுறான்னு தினம் ஒரு பொய்ய ஆத்தாக்கிட்ட அவுத்து விட்டுட்டு... அத எல்லாரயும் நம்ப வச்சி... ஆத்தா பின்னாடியே திருஞ்சிச்சு... முறுக்கிக்கிட்டு போன அவ புருஷன் இப்ப மாமியாவுக்கு டிரைவரு... பொண்டாட்டி முந்தானய பிடிச்சிக்கிட்டு அவனும் பெத்த நாத்தானப்பன ஏவங் கேக்குறானா இல்லயா... விட்டுட்டுப் போடின்னா..."

"ஏன்டி வெக்கங் கெட்டவனுங்க பெத்தவங்கள விட்டுட்டு இங்க வந்து கிடக்குறானுங்களே... இதே மாதிரி நாளக்கி இவங்க பொத்திப் பொத்தி வளக்குற மகனுக்கு கல்யாணம் பண்ணி வச்சா... அவன் இவங்களப் பாக்காம மாமியா வீட்டுக்குப் பொயிட்டா... பொயிட்டா என்ன... போகத்தான் போறான்... நான் பாக்கத்தான் போறேன்... அன்னக்கி கெடந்து கத்துவாளுங்கதானே... அப்பத் தெரியுமில்ல அவங்க பண்ணுனதோட பலனு..." கடுகடுப்பாகப் பேசினாள் காயத்ரி.

"என்னத்த அனுபவிக்கப் போறானுக... அவனுக நல்லாத்தான் இருப்பானுக... நல்லது நெனக்கிற நமக்குத்தான் எல்லாமே நேர்மாறா நடக்கும். செரி நீ எதுக்கு இம்புட்டுக் கோபமா இருக்கே... அவுக வெதச்சத அவுக அறுப்பாக... அந்தாளுக்கு அதெல்லாம் தெரியமயா மாப்பிள்ளகளுக்கு நில புலனெல்லாம் வாங்கி இங்கிட்டே செட்டில் பண்ணுறான்... என்ன செய்ய... இன்னக்கி ஒரு குடும்பதையில அறுத்துப் போட்டுப்புட்டானுக... செரி இதப் பேசுனா மனசு ஆறாது...  விட்டுட்டு வேலயப் பாருடி..."

"எனக்கு அந்த வீட்டு மூணாவது சிறுக்கி பண்ணுனதைக் கேள்விப்பட்டதுல இருந்து மனசு கொதிக்கிதுடி... நாக்க புடுங்கிற மாதிரி நாலு கேள்வி கேட்டாதான் என்னோட கோபமெல்லாம் அடங்கும். என்ன தகிரியம் அந்தக் குட்டிக்கு... என்ன நெஞ்சுரம் இருந்தா இப்படிப் பண்ணியிருப்பா..."

"அவதான் லெட்டர் எழுதி வச்சிருக்காளாமே... எனக்குப் பிடிக்கல... எங்கப்பாம்மாதான் என்னை கட்டாயப்படுத்துனாங்கன்னு..."

"படிச்சிருக்காதானே... பிடிக்கலன்னா முன்னாடியே சொல்றது... ஒருத்தனோட வாழ்க்கயில்ல போச்சு... நெடுங்குளத்துல மரியாதயான குடும்பத்துப் பிள்ள அது... ரோட்டுல பாத்தாக்கூட பல்லுத் தெரியாம சிருச்சிக்கிட்டு அத்த நல்லாயிருக்கிகளான்னு கேட்டுட்டுப் போகும்... அதோட வாழ்க்கயில வெளாண்டுட்டாங்களே பாவிய..."

"சொத்துப் பத்து இருக்க குடும்பம்ன்னு இவங்க போனாங்க... அவங்களுக்கும் இவுக மாப்பிள்ளகள வீட்டோட வச்சிக்கிறதும் தெரிஞ்சிருக்கு... இவ சங்கதியும் தெரிஞ்சிருக்கு… சரி தூரத்துச் சொந்தம் வேற... நமக்கிட்ட அப்படியெல்லாம் நடக்க மாட்டாக... புள்ளயும் பாக்க கலரா மொக லெட்சணமா இருக்கா... அவளும் ஒத்துக்கிட்டு பயலையும் பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டாளேன்னு நெனச்சிருக்காங்க... பாவம் இப்ப வெளிய தலகாட்ட முடியாம நொந்து போயிகெடப்பாக... அதுக்காக நாம என்ன பண்ண முடியும்... “

"என்ன பண்ண முடியும்ன்னு என்னால் இருக்க முடியலடி... அவள… அந்தச் சிறுக்கி மவ சிறுக்கியோட முடியை அறுத்து எரியணும்... களவாணி நாயக் கண்டந்துண்டமா வெட்டணும்... என்ன ஒரு திமிரு... எம்புட்டுத் தகிரியம்… ஒருத்தனுக்கு கழுத்த நீட்டிட்டு எனக்குப் பிடிக்கல... நான் லவ்வு பண்ணுனவன் கூட போறேன்னுட்டு லெட்டர் எழுதி வச்சிட்டுப் போவா...”

“அவள வெட்டுணாச் சரியாயிருமா…” 

“இந்தச் சிறுக்கிய வெட்டுறதவிட இவளக் கூட்டிக்கிட்டு போனாம்பாரு அவனயும் சேர்த்து வெட்டணும்... பாவம் அந்தப் புள்ள மனசொடிந்து போயி மருந்தைக் குடிச்சி இப்ப ஆஸ்பத்ரியில உயிருக்குப் போராடிக்கிட்டு இருக்காம்.... அதோட தலயெழுத்து இந்தச் சிறுக்கிய கட்டி தொட்டுக்காம கட்டிக்காம மருந்தக் குடிச்சிட்டுக் கெடக்கு... இனி அதுக்கு கல்யாணமின்னாலே பாவக்காய் சாப்பிட்ட மாதிரி நெனக்காதா..."

"சனியன் இத்தோட போச்சுன்னு விட்டுட்டு வேற புள்ளயப் பாத்து கட்டிக்கிட்டு அது சந்தோஷமா வாழணும்... இதை நெனச்சிக்கிட்டு செத்து என்ன பண்றது... சரி அதை விட்டுட்டு நீ வேலயப் பாரு... எவளோ எக்கேடோ கெட்டுட்டுப் போறா... நாம் பொலம்பி என்னாகப் போவுது."

"என்னடி இப்படிப் பேசுறே... நீ எல்லாத்தயும் லேசா எடுத்துக்கிறே...? ஆனா என்னால முடியல..."

"வேற என்ன பண்ணச் சொல்றே... நம்ம புள்ளயா இப்படிப் பண்ணுச்சு... அது ஒரு கேடுகெட்ட குடும்பம்... அதப் பேசி என்ன பண்ண.... எங்கண்ணனுக்குத் தெரிஞ்சா உன்னய மட்டுமில்ல என்னயிம் தூக்கிப் போட்டு மிதிக்கும்... இது நமக்குத் தேவயா... வேலையைப் பாருன்னா..." 

“நம்ம பரம்பரெக்கே இந்தப் புத்தியில்ல…”

“நீ சொல்றது செரிதான்…”

"என்னவோ போ... இப்படியும் பண்ணிட்டு எப்படித்தான் சந்தோஷமா வாழுவாளுங்களோ தெரியல... என்னத்தைப் படிச்சி என்ன புண்ணியம்... படிக்க வச்சதுக்கு இதுதான் பலன்... ம்... நம்ம வீட்டு புள்ளயளயும் காலாகாலத்துல கட்டிக் கொடுக்கணும்... காலங் கெடக்குற கெடயில நமக்கெல்லாம் இந்தப் பேரு வேண்டாந்தா..." என்றபடி எழுந்தாள் காயத்ரி.

"ஆமா யாரக் கூட்டிக்கிட்டு ஓடுனாளாம்..." சுபத்ரா மெதுவாகக் கேட்டாள்.

"என்னடி என்னய பேசாதேன்னு சொல்லிட்டு இப்ப நீ மறுக்கா ஆட்டய ஆரம்பிக்கிறே...?"

"இல்ல யாருன்னு வெவரந் தெரியுமான்னு கேட்டேன்..."

"இவுகதான் மெட்ராஸ்ல வேல பாக்குறேன்னு லாத்துனாகள்ல... அங்க எவனோ ஒருத்தன லவ்வு பண்ணுனாகளாம் லவ்வு... வீட்ல சொன்னதுக்கு யாரு எவன்னு கூட கேக்காம நாங்க சொல்றவனத்தான் கட்டிக்கணுமின்னு மிரட்டி இந்தப் புள்ளக்கி கட்டி வச்சாகவளாம்”.

“அது செரி…”

 “ஒரு மாசமா ரெண்டுக்கும் ஒண்ணும் நடக்கலயாம்... ஒப்புக்குத்தான் புருஷன் பொண்டாட்டியாம்... வீட்டுக்குள்ள தனித்தனியாம்...  என்னமா யோசிக்கிறாளுங்க இப்ப உள்ளவளுவ...”

“அடி ஆத்தி…. இம்புட்டு நடந்திருக்கா… நமக்குத்தேன் ஒண்ணுந் தெரியிதில்ல…”

“சனியன் ஒத்துக்காம மருந்தைக் குடிச்சி செத்திருந்தாக்கூட பரவாயில்லை... அவன மேடயேத்தி இன்னக்கி அறுத்துப் போட்டுட்டு பொயிட்டா... அவளக் கூட்டிக்கிட்டு ஓடுன நாயி வெளங்குங்கிறே... எங்கயாச்சும் போகயில ரெண்டும் அடிபட்டுத்தான் சாகும்..." கைகளை நெறித்து 'சடச்சட'வென நெட்டி பறித்தாள்.

"சரி வாறேன்... பொழுசாய அங்கிட்டு வா..." என்றபடி எழுந்து முந்தானையை இழுத்து சொருக்கிக் கொண்டு அவிழாத கொண்டையை அவிழ்த்து கொண்டை போட்டுக் கொண்டு வீதியில் இறங்கினாள்.

'என்ன காயத்ரி ஒனக்கு வெசயந் தெரியுமா... ஒங்கண்ணன் மவன் இருக்கானுல்ல... அதான் ஒம்மவ செம்பவத்த கட்டணுமின்னு வச்சிருந்தியே... அந்தப்பய கூட வேல பாக்குற புள்ளய கட்டிக்கிட்டானாம்.... இப்பத்தான் ஒங்கண்ணனுக்குத் தெரியுமாம்... வீட்டுல கூகூன்னு கெடக்காம்... ஒங்கூரு ராமசாமி சொன்னான்... ஒனக்கு யாரும் சொல்லலயா...' என்றபடி மாணிக்கம் சைக்கிளை மிதிக்க, மகள் செண்பகம் கண்ணில் தோன்றி மறைய காயத்ரிக்கு நெஞ்சை அடைத்தது.

*************

நான் எழுதிய 'ஓரிதழ்ப்பூ - அறிமுகமும் விமர்சனமும்' என்ற பகிர்வு துபை நண்பர் நந்தகுமார் மூலமாக இந்நேரம்247 என்ற இணையதளத்தில் வெளியாகியிருக்கிறது. வெளியிட்ட இந்நேரத்தாருக்கும், அதற்கு காரணகர்த்தாவாக இருந்த நண்பருக்கும் நன்றி. அந்தப் பதிவின் கீழ் பேரைக் கொண்டு வருவதற்குத்தான் வெகுநேரம் முயற்சிக்க வேண்டியிருந்தது.

***

பிரதிபிலி மாயா சிறுகதைப் போட்டியில் 'பய'ராத்திரி அப்படிங்கிற பேர்ல நம்ம கதையும் இருக்கு. பேய், பிசாசு, திகில் எல்லாம் கலந்து எழுத வேண்டிய கட்டாயத்தால் கிறுக்கிப் பார்த்தேன்... வாசிங்க... ஆனா இதுல என்னய்யா திகிலு இருக்குன்னு கம்பு தூக்கிறாதீங்க.... நன்றி.


***
-'பரிவை' சே.குமார்.

செவ்வாய், 6 மார்ச், 2018

சிறுகதை : நெஞ்சக்கரை (காற்றுவெளி மின்னிதழ்)

ண்டனில் இருந்து வெளிவரும் 'காற்றுவெளி' மின்னிதழில் வெளியான சிறுகதை இது. என் சிறுகதைகள் சற்றே நீளமானவைதான்... அதிகம் கவிதைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு இதழில் மிகப்பெரிய கதைக்கு நான்கு பக்கங்கள் ஒதுக்கிப் பிரசுரித்திருக்கிறார்கள். இதுதான் காற்றுவெளிக்கு நான் அனுப்பிய முதல் சிறுகதை என்பதையும் சொல்லிக் கொள்கிறேன்..

சிறுகதையைப் பிரசுரித்த காற்றுவெளி ஆசிரியர் சோபா மற்றும் திரு. முல்லை அமுதன் அவர்களுக்கு நன்றி.


காற்றுவெளி வாசிக்கசொடுக்குங்கள்...----📄 

*********

நெஞ்சக்கரை

'து புள்ளயாருபட்டியிலதான் இருக்குதாம்'

செலுவஞ் சொன்ன வார்த்த எனக்குள்ளே முன்னுக்கும் பின்னுக்குமா போயி வந்துக்கிட்டிருந்துச்சு.

'புள்ளயாருபட்டியிலயா... அங்கயா இருக்கா அவோ...?' என என்ன நானே பல தடவ கேட்டுக்கொண்டேன்.  வெவரமாச் சொல்லுடான்னு சொன்னா வயல்ல ஆளுவ களயெடுக்க வந்திருக்காவோ... வெவரமா பொறவு சொல்லுறே... வயல்ல ஆளவுட்டுட்டு இங்கன ஒக்காந்து கத பேசுனா ஒங் கொழுந்தியா மத்தியானத்துக்கு சோறு போடமாட்டான்னு பாதியைச்  சொன்னதோட  எனக்குள்ள தீயப்பத்த வச்சிட்டுப் பொயிட்டான். இந்தச் செலுவப்பய அப்பந்தொட்டு இப்பவரக்கிம் இப்புடித்தான் எதயிம் முழுசாச் சொல்லமாட்டான். அவனுக்கு இப்புடி பாதியச் சொல்லி தவிக்கவச்சிப் பாக்குறதுல தனிச்சந்தோசம்...  இனி எப்ப வந்து அவன் சொல்லுறது...?'

'ஏலா... சுதா... மேல வீட்டுக்குப் போயி செலுவய்யா இருந்தான்னா ஐயா கேட்டாகன்னு மூக்குப்பொடி டப்பாவ வாங்கிக்கிட்டு ஓங்கட்ட எதோ முக்கியமாப் பேசணுமின்னு ஐயா வரச்சொன்னாகன்னு சொல்லிட்டு வா'ன்னு பேத்திய போச்சொன்னா அது டிவிப்பொட்டிக்கு முன்னால ஒக்காந்துக்கிட்டு நருவுசா நகரமாட்டேங்கி...

'இந்த டிவிப்பொட்டி புள்ளயல நல்லாக்கெடுத்து வச்சிருக்கு... ஒரு வேல செய்ய மாட்டேங்கிதுக... எந்த நேரமும் அதக்கட்டிக்கிட்டுத்தான் அழுவுதுக... எப்பப்பாத்தாலும் பாட்டுத்தான் போடுறானுவ...  அதுவும் உருப்படியான பாட்டுக்கூட இல்ல... முக்கலும் மொணங்கலுமா... அதத்தானே இந்த புள்ளய விரும்பிப் பாக்குதுவ...இல்லேன்னா அழுகாச்சி நாடவம் போடுவானுக... இதுகளோட ஒக்காந்து ஒக்காந்து சரவணேமீனாச்சி பாக்க ஆரம்பிச்சிட்டேன். மவமுட்டு சின்னது ஒண்ணு இருக்கி... நாலு வயசுதான் ஆவுது... அது அத்தாரு... உத்தாருன்னு என்னமோ பாட்டுப் போட்டா அந்தக்குதி குதிக்கிது. நமக்கெங்க பிரியிது இப்ப வார பாட்டுக... ம்... கலிகாலம் என்னத்த சொல்ல...'

கயித்துக் கட்டிலிலிருந்து எழுந்து மண்பானத் தண்ணிய சொம்புல மோந்து குடிச்சேன். 'மம்பானத் தண்ணியில வெட்டிவேரு போட்டுக் குடிக்கிறது வெயிலுக்கு ஒரு சொகந்தே... இப்ப அயிசுப் பொட்டியில வச்சி எடுத்துக் குடிக்கிற தண்ணி தொண்டக்குழிய மட்டுந்தான் சில்லுன்னு வைக்கிம்... ஒரு சொவயுமிருக்காது. அடுப்படியில சனி மூலப்பக்கமா ஆத்து மண்ணள்ளிப் போட்டு அது மேல மம்பானய வச்சி ஊத்தி வச்சிருக்க தண்ணியக் குடிச்சா ஒடம்பெல்லாம் சில்லுன்னு வக்கிறதோட என்ன சொவ... கம்மாத் தண்ணியவுட மழத்தண்ணியா இருந்தா இன்னுஞ் சொவ கூடத்தான் இருக்கும்... குடிச்சவனுக்குத்தா இதோட அரும தெரியும்'

'இதுககிட்ட சொன்ன எந்தக்காரியமும் நடக்காது.. நாமதான் அவமூட்டுக்குப் போவனும் போல... வெரட்டி வெரட்டிப் போனமுன்னா ரொம்ப பிகு பண்ணுவான்.... இந்தா புள்ளயாருபட்டியிலதான் இருக்கா நமக்குத் தெரியல... நாலெடத்துக்கு வேலக்கிப் போனாமட்டும் போதுமா... ஊரு ஒலவத்துல என்ன நடக்குதுன்னு தெரிஞ்சிக்காம இருந்து என்னத்த சாதிக்கப் போறேன்னு அப்பத்தா அடிக்கடி சொல்லும்... செலுவத்துக்கு ஊரு ஓலகத்துல நடக்குறதெல்லாம் அத்துபடி.. எப்புடித்தான் அம்புட்டு நீசயுந் தெரிஞ்சிப்பானோ தெரியல... நமக்கு வூட்டுக்குள்ள நடக்குறதுகூட நறுக்காத் தெரியமாட்டேங்கி... இதுல நாட்டுல நடக்குறது எங்குட்டுத் தெரியும்...'

"ஏலா... செலுவமூட்டு வரக்கிம் பொயிட்டு வாரேன்" என பேத்தியோடு டிவி பாத்துக்கிட்டு படுத்துக்கெடந்த எம்பொண்டாட்டி ராஜாத்திக்கிட்ட சொல்லிட்டு துண்ட ஒதறி தோள்ல போட்டுக்கிட்டு மேலத்தெருப் பக்கமாப் போனே.

'வா லாசு... ஒக்காலு...' என்றான் செலுவம் வாய்க்குள் இருந்த சோற்றோடு... தட்டுல மோர்ச்சோத்துல சின்ன வெங்காயம் மெதந்தது. வாயிலிருந்த சோத்த மென்னு விழுங்கிட்டு சொம்புத் தண்ணிய மடக்கு மடக்குன்னு குடிச்சிட்டு ஒரு செருமலோட, 'இப்பத்தா வயல்லயிருந்து வந்தே... வெயில்ல நின்னது மசண்டய வந்திருச்சு... வெயிலாவா போடுது... தயிருக் கஞ்சியில ஊறுகா போட்டு, பேத்தியா உறிச்சிப் போட்ட சின்ன வெங்காயத்த கடிச்சிக்கிட்டு  குடிச்சதுந்தே நல்லாருக்கு. வெயில்ல நிக்கமுடியலன்னு சொல்லிக்கிட்டு வயல்ல களயெடுக்கிற ஆளுவல விட்டுட்டு இங்கிட்டு வந்துட்டா, ஊருக்கத பேச ஆரம்பிச்சிருவாளுக... இன்னக்கி கூலி எம்புட்டு ஆயிப்போச்சி பாத்தியா... இந்தக் கூலிக்கே ஆளுக்கெடக்கல... ஊருக்கு முன்னாடி  நீ களயெடுத்து தப்பிச்சிக்கிட்ட... நல்லவேள எலங்க அகதிய இங்குன இருக்கதால ஏதோ அதுக வருதுக.... அதுகளும் இல்லன்னா நாமதான் கள எடுக்கணும் போல... ஆளும்பேருமா நின்னு எடுத்தா வேல சீக்கிரம் முடியுமில்ல... அதான் அவுக கூட நானும் ஒங்கொழுந்தியாவும் நின்னு களயெடுத்தோம்... இன்னங் கொஞ்சக் காலத்துல வெவசாயமே இல்லாமப் போயிடும் பாரு...  " என்றபடி வாயில் சோத்தை அள்ளி வைத்தான்.

வாயிலிருந்த சோத்தை முணுங்கிட்டு பேச்சைத் தொடர்ந்தான் "வெயிலுக்கு எதமா கஞ்சியத்தவர வேறெதக் குடிக்க முடியுஞ் சொல்லு... அதுவும் எருமத் தயிரும் சின்ன வெங்காயமும் சேத்துச் சாப்பிட்டா சொர்க்கந்தானேப்பா... கயித்துக்கட்டில வேப்பமரத்தடியில போட்டு படுத்தா சும்மா தூக்கம் சொவமா வருமில்ல" என சிலாகித்துச் சொன்னவன் "ஆமா...என்ன இந்த நேரத்து வந்துருக்கே... மூக்குப்பொடி வேணுமாக்கும்... டப்பால கொஞ்சந்தேங் கெடக்கு... இன்னிக்கி சாந்தரம் டவுனுக்குப் போயில பொடிமட்ட வாங்கிட்டு வரணும்... ஏ கெவுரி... பெரியய்யாவுக்கு அந்த மாடத்துல இருக்க மூக்குப்பொடி டப்பாவ எடுத்துக் கொடு" என்று சொல்ல, கெவுரி அதை எடுத்தாந்து நீட்ட, மூடியைத் திறந்து உள்ள கெடந்த பொடிய ஆள்காட்டி வெரலால் கொஞ்சமாக மேலிழுத்து கட்டை விரலால் மெல்லப் பிடித்து ஒரு உதறு உதறி மூக்கில் வைத்து இழுத்தேன். நான் உதறியதில் பறந்த பொடிக்கு கெவுரி 'அச்சுக்' எனத் தும்ம, நான் 'ம்க்கும்...' எனச் செருமி மூக்கை தோள்ல கெடந்த துண்டால தேய்த்துக் கொண்டேன்.

'சரி.. சரி.. வேமாய்ச் சாப்புட்டு வா... ஒங்கிட்ட கொஞ்சம் பேசணும்...' என்றேன் மெல்ல.

"அதா சேதி... அதான என்னடா எலி அம்மணத்தோட ஓடுதேன்னு பாத்தேன்... காலயில சொன்னதுலருந்து சோறு தண்ணி எறங்கலயோ... அப்பவும் சாப்புடாமக் கெடந்த பயதான நீயி..." எனச் சிரித்த செல்வம் தட்டைத் தூக்கி அதிலிருந்த தண்ணிய அலசிக் குடிச்சிட்டு ஏப்பம் விட்டபடி தட்டிலேயே கையைக் கழுவ, கெவுரி தட்டை எடுத்துக் கொண்டு போனது.

"ம்... ஒனக்கு வெவரந் தெரியணும்... அம்புட்டுத்தானே..." என்றபடி தூணில் சாய்ந்து கொண்டு பக்கத்தில் இருந்த வெத்தலைப் பொட்டியிலிருந்து கற்பூர வெத்தலையை எடுத்து காம்பு கிள்ளி, பின்பக்கமாக சுண்ணாம்பு தடவி, தொடயில வச்சிக்கிட்டு, களிப்பாக்கெடுத்து பாக்குவெட்டியால் வெட்டி வாயில போட்டுக்கிட்டு "வெத்தல பொடுறியா? எனக்கு இந்த பாக்கெட்டு பாக்குல்லாம் பிடிக்கிறதில்லை... தொவப்பில்லாம இனிச்சிக்கிட்டு" என்றபடி வெத்தலப் பெட்டிய நீட்டினான்.

"வாணாம்... எனக்கு அவோ புள்ளயாருபட்டியியலதான் இருக்காளான்னு தெரியணும்... எதயுமே பாதியில சொல்லி பரிதவிக்க வக்கிறத நீ இன்னமும் விடல..." என்றேன் கோபமாக.

"எதுக்கு உனக்கு இம்புட்டுக் கோவம்... எத்தன வருசமாச்சு... இனி அவோ எங்க இருந்தா ஒனக்கென்ன... எதுக்கு தேவயில்லாத வேல..அவளுக்குன்னு ஒரு குடும்பமிருக்கு... அதத் தெரிஞ்சிக்க... அன்னக்கி ஒன்னால அவ சொன்னத செய்ய முடியல... அப்ப குடும்பங் கண்ணுல தெரிஞ்சிச்சி... இப்ப குடும்பந் தெரியலயாக்கும். அது செரி... இப்ப அவளப் போயி பாத்து... என்ன பண்ணப் போற... விட்டுட்டுப் போவியா... நாஞ் சொன்னத தூக்கிகிட்டு வெயில்ல விழுந்து படுக்காம வெவரங்கேக்க ஓடியாறே..." வெத்தலையை மென்டபடி சிரிச்சிக்கிட்டே கேட்டான்.

எனக்குச் சுள்ளுன்னு வந்துச்சு பாக்கலாம் "அப்பொறம் என்ன மசுத்துக்கு எங்கிட்ட சொல்ல வந்தே... பொறவு சொல்றேன்னு சொன்ன வாயி எந்த வாயி... இந்த மசுத்தைச் சொல்லமா இருந்திருந்தா நா எதுக்கு நாயி மாதிரி இங்க வரப்போறேன்..." என்றபடி கோபமா எந்திரிச்சி துண்ட ஒதறினேன்.

"யேய் இருப்பே... இந்த கோபமசுத்துக்கு மட்டும் கொறச்சலில்ல... சும்மா சொன்னாக்கூட படக்குன்னு எம்பெரியப்பமுட்டுக் கோபமட்டும் முன்னாடி வந்திரும்.. எம்பெரியப்பன் ஒனக்கு என்னத்தக் கொடுத்துட்டுப் போனாரோ இல்லயோ அவரோட கோவத்த மட்டும் மறக்காம கொடுத்துட்டுப் போயிட்டாரு..." என்றபடி எழுந்து வேட்டிய அவுத்து நல்லாக்கட்டிக்கிட்டு எங்கூட நடந்தான்.

கோவிலுக்குப் பின்னால நிக்கிற வேம்போட சிலுசிலு காத்த அனுபவிச்சிக்கிட்டு, அதோட வேருல ஒக்காந்தோம். அவந்தான் பேச்ச ஆரம்பிச்சான்.

"நேத்துச் சாந்தரம் தேவட்டைக்குப் போனேனுல்ல... அப்ப நம்ம சுப்பிரமணி அயிரப் பாத்தேன்... அதான்ப்பா நம்ம கூத்தாடிச்சி அம்மங்கோவிலு பூசாரி செல்லய்யிரோட மவே... அட மூத்தவன்... கண்டேவி கோவிலு பாக்குறானுல்ல... அட நம்மூட படிச்சானுல்ல...  அவங்கூட பேசிக்கின்னு நிக்கிம்போது பேச்சு வாக்குல அவந்தே அவோ புள்ளயாருபட்டியில இருக்கதாச் சொன்னான்..."

"ஆமா... அவனுக்கு அப்பமே அவ மேல ஒரு கண்ணு... இப்பவும் பேச்சுவாத்தயில இருக்காவலோ என்னவோ..."

"சொந்தக்காரவுகளுக்குள்ள பேச்சுவாத்த இருக்காதா பின்ன... குடியானவன் கண்ணு வக்கிறப்போ... ஒரே சாதிக்காரன்... அதுவும் சொந்தக்காரன்... அவனுக்கு அவோ மொறப்பொண்ணு வேற.... அவனுக்கு ஆசயிருந்துச்சி... அவதான் அவனக் கட்டிக்க மாட்டேனுட்டா... அவோ மனசுல அன்னக்கி வேறயில்ல இருந்துச்சு... " என என்னய ஒரப்பார்வை பார்த்துச் சிரித்தான்.

"நீ கிண்டல் பண்ணுனது போதும்...  புள்ளயாருபட்டியில ஆரு வீட்ல இருக்காளாம்..?"

"அவளுக்கு ஒரு பொம்பளப் புள்ளதானாம்... அவ வீட்டுக்காரரு ரிட்டையரு ஆயிட்டாராம்... மாப்ள புள்ளயாருபட்டி கோவில்ல பெரிய பொறுப்புல இருக்காராம்... அதான் இங்கிட்டு வந்துட்டாக.... காரக்குடிப்பக்கம் வூடு பாக்குறாவளாம்... அவோ மாப்ள இனி எதுக்கு தனியா வூடு புடிச்சி இருந்துக்கிட்டு எங்க கூடவே இருந்திருங்கன்னு  சொல்றாராம்... அவரோட அப்பாரு பரலோகம் பொயிட்டாராம்... ஆத்தாக்காரி மட்டுந்தானாம்... எல்லாருமா இருக்கலாமுன்னு அவருக்கு ஆசயாம்... என்னயிருந்தாலும் மக வீடுதானே... அதனால அவளுக்கு தனியா இருக்கதுதான் நல்லதுன்னு தோணுதாம்... சுப்பிரமணி பாக்கப் போனப்ப அவனுக்கிட்ட சொன்னாளாம்." என்றான்.

"எனக்கு அவோ வெலாசம் வேணு... இல்லேன்னா அவ மாப்ள பேர மட்டுமாச்சும் கேட்டுச் சொல்லு... நா போயி வெசாரிச்சி பாத்திட்டு வாறேன்"

"ஒனக்கு என்ன மசுத்துக்கு இப்ப அவோ வெலாசம்... அன்னக்கி முடிவெடுக்க முடியாதவனுக்கு இப்ப எதுக்கு அவோ வூடு தேடிப்போ வேண்டியிருக்கு... அதெல்லாம் ஒரு மசுரும் வேணாம்... ஒங்கிட்ட வந்து சொன்னது என்னோட பெசவு... காலயிலருந்து காத்திய மாசத்து நாயி மாரிக்கி திரியிறே போல... இதெல்லாம் வாணாம்... சொல்லிட்டேன்... வீணாவுல பெரச்சன வரும்..."

"நாம்பாட்டுக்க செவனேன்னுதானே இருந்தே... என்ன மசுத்துக்கு அவோளப் பத்தி சொல்ல வந்தே...ஏத்திவுட்டுட்டு இப்ப பெரச்சன வரும்... மசுரு வருமுன்னு சொல்ற... இந்த வயசுல என்ன பெரச்சன நக்கிக்கிட்டு வரப்போவுது... இப்ப அவள கூட்டிக்கிட்டு ஓடப்போறேனாக்கும்... முடிஞ்சா சொல்லு... இல்லன்னா விடு... நா எப்புடியாச்சும் வெலாசத்த வாங்கி அவளப் பாத்துக்கிறே..." என்று கோபமாகவும் சத்தமாகவும் பேசினேன்.

"ஏய் இருப்பே... எதுக்குக் கத்துற... ஆருக்காச்சும் வெவரந் தெரிஞ்சி அத்தாச்சிக்கிட்ட சொன்னா அம்புட்டுத்தான்... அதச் தெரிஞ்சிக்க மொதல்ல... இனி அவளப் பாக்கிறதால என்ன பெரோசனங்கிறே... செரி விடு... ஒனக்கு வெலசாந்தானே வேணும்.... நாளக்கி கேட்டுச் சொல்லுறே.... எனக்கென்ன வந்துச்சி... வேலியில போற ஓணானை வேட்டிக்கிள்ள பிடிச்சி விட்டுக்கிட்டு குத்துதே கொடையுதேன்னு சொன்னா... இந்த வாயி மசுத்தாலதான் பெரச்சன வருதுன்னு எம்பொண்டாட்டி திட்டுறதுலயிம் குத்தமில்ல... என்ன சொன்னே... இழுத்துக்கிட்டு ஒடுறியா.... பொட்டச்சி தகிரியமா சொன்னப்பவே ஒன்னால இழுத்துக்கிட்டு ஓட முடியல... இப்ப இழுத்துக்கிட்டு ஓடிட்டாலும்... பொளந்து போயிரும்..."

"இங்கரு செலுவம்...அவளப் பாக்கணுமின்னு தோணுது.... முடிஞ்சா வாங்கிக் கொடு... நீயும் கூட எங்கூட வா.. அவளப் பாத்துட்டு அடுத்த காருக்குத் திரும்பிடுவோம்..."

"இங்கேருப்பா... ஒனக்கு வெலாசம் வாங்கித்தாரேன்... என்ன ஆள விடு... அன்னக்கி ஒங்களுக்கு காவக்காத்த மாரி இன்னக்கிம் காவக் காக்கணுமாக்கும்... ஒன்னு மட்டுஞ் சொல்றேங் கேட்டுக்க... போனமா பாத்தமா வந்தமான்னு இரு... அப்பொறம் அடிக்கடி தொடராத... அவோ இப்ப மாப்ள வீட்டுல இருக்கா... நீ யாரு... எதுக்கு அடிக்கடி வாரேன்னு  தேவயில்லாத பெரச்சன வரும்... பாத்துக்க... அம்புட்டுத்தான் நாஞ்சொல்லுவேன்."

"செரி... செரி...எங்களுக்குத் தெரியும்... புத்தி மசுரெல்லாம் சொல்லவேண்டாம்... உங்க வேலப்பு***** பாருங்க" என்றேன் கடுப்பாய்.

"ஏ வேலப்பு***** பாத்திருந்தா இப்ப என்ன மசுத்துக்கு உங்கிட்ட பேச்சு வாங்கிக்கிட்டு இருக்கேன்.." எனச் செலுவம் எழ, நானும் எழுந்து துண்ட ஒதறினேன்.

'செலுவம் வெலாசம் வாங்கிக் கொடுக்க, இந்தா தேவட்டயிலருந்து காரு ஏறியாச்சு... அவோ மாமாவூட்டு நல்லது கெட்டதுக்கு அப்பாதான் சமயல்... அவோ மாமா சீனிவாசய்யர் அப்பவ மாப்ளயின்னுதான் சொல்லுவாரு... அப்பாக்கு எரனியா ஆப்ரேசன் பண்ணியிருந்தப்ப அவரால போமுடியாம என்னய போச் சொன்னாரு... அன்னக்கி சீனிவாசய்யரோட பேத்தியான அவள பாவாட தாவணியில பாத்தேன்... என்ன அழகு... சொக்கிப் பொயிட்டேன்... அப்பொறம் அவளுக்காவே அடிக்கடி அங்க போனேன். போறப்பல்லாம் பாத்து... பேசி.. எங்களுக்குள்ள நெருக்கமாயிருச்சி... அவோ காலேசு படிச்சாதால அடிக்கடி அவளச் சந்திக்கிறது வெளிய தெரியாம இருந்திச்சி... அப்பல்லாம். எங்களுக்குத் தொண செல்வந்தே... எப்படியோ வெசயம் அப்பா காதுக்கு வர, அந்தவூடு எனக்கு எம்புட்டோ செஞ்சிருக்கு.. உண்ட வூட்டுக்கு ரெண்டகம் பண்ணினா உருப்பட முடியாது தெரிஞ்சிக்க.. ஐயரு வூட்டுப் புள்ளய குடியானவன் கூட்டிக்கிட்டு வரமுடியுமா... சமக்கப் போடான்னு சொன்னா சமஞ்சபுள்ளய பாத்துக்கிட்டு இருக்கியாம்..? சீனிவாசய்யருக்குத் தெரிஞ்சா என்னாகுந் தெரியுமா...? நீ இங்கன இருக்க வேண்டா... ஒம்மாமே ஆந்திராவுல இருக்கான்...அவனுக்கு கடுதாசி போடுறே... அவனுக்கிட்ட போயிடு...' அப்படின்னு கத்தி அனுப்பி வச்சிட்டாரு. '

'வீட்டுக்குத் தெரியாம கடுதாசி போட்டுப்போம்... ஊருக்கு வந்தா அவளத்தேடிப் போயி பாப்பேன். அவளோட படிப்பு முடிஞ்சி கலியாணமும் முடிவு பண்ணிட்டாங்க... என்னால் ஒண்ணுஞ் செய்ய முடியல... நாம ஓடிப்போயிடலாமுன்னு அவ கடுதாசி போட்டா... எனக்குப் பின்னால வெளஞ்சி நின்ன தங்கச்சியளோட வாழ்க்க பெரிசாத் தெரிய என்ன சொல்றதுன்னு தெரியாம வீட்டுல பாக்குற மாப்ளய கட்டிக்க அதுதான் ஒனக்கு நல்லதுன்னு கடுதாசி போட்டுட்டு மனச தேத்திக்கிட்டு ஒதுங்கிட்டேன்... செலுவந்தான் அவ கலியாணத்துக்குப் பொயிட்டு வந்து ஒன்னயத்தான் ரொம்பக் கேட்டா... கலியாணத்துக்காச்சிம் வந்திருக்கலாமுல்லன்னு சொன்னான்னு கடுதாசி போட்டிருந்தான். அதுக்கு அப்பொறம் ஊருக்குப் போவே பிடிக்கல... காலம் எல்லாத்தையும் மாத்தி, தங்கச்சிக கலியாண முடிச்சி... மாமா மவளயே கட்டிக்கிட்டு, ஆந்திரா போவாம மறுபடியும் அப்பாவோட சமயல்ல எறங்கிட்டேன்... '

'ம்... அந்தா இந்தான்னு முப்பது வருசத்துக்கு மேல ஆச்சி... எனக்குள்ள அவோ இருக்கமாரி அவளோட நெனவுல நானிருப்பேனான்னு தெரியல... இத்தன வருசத்துக்கு அப்புறம் இந்த வயசுல அவளத் தேடிப் போறது சரியான்னும் தெரியல... அன்னக்கி அவ சொன்னமாரிக்கி கூட்டிக்கிட்டு ஓடியிருந்தா எங்க வாழ்க்க மாறியிருந்திருக்கும்... அம்புட்டுத் தப்பும் எம்பக்கந்தானே... பொட்டச்சி தகிரியமா ஓடிப்போவோமுன்னு சொன்னப்ப நாந்தானே பொட்டச்சியாட்டம் வீட்டுல பாக்குற மாப்ளய கட்டிக்கன்னு சொன்னேன். அவள விரும்பும் போது தங்கச்சிக வெளஞ்சி நின்னது எனக்குத் தெரியல...  அவளோட மனசுல ஆசய வளத்திட்டு அவோ கட்டிக்கடான்னு சொன்னப்பத்தானே தங்கச்சிக தெரிஞ்சாக.  ஐயரு குடியானவன் சூத்திரமெல்லாம் அப்பா சொன்னப்பல்லாம் எனக்குத் தெரியல... முடியாதுன்னு தெரிஞ்சப்பத்தான் எல்லாம் தெரிஞ்சது... இப்ப என்ன அவசியம் வந்திச்சி அவளப் போயி பாக்கணுமின்னு... எப்பவோ செத்துப்போன நேசத்தை இப்ப தூசி தட்டி என்னாகப்போவுது..? இனி அவளப் போயி பாத்து பழங்கதய ஞாபகப்படுத்துறதுல என்ன வந்துரப்போவுது..? இதால ஆருக்கு என்ன லாபமுன்னு யோசிச்சேன்'.

தேவட்டய நோக்கி காருல திரும்பி வந்துக்கிட்டிருந்தேன். டிக்கெட் வாங்கி பாக்கெட்ல வச்சிக்கிட்டு அவோ வெலசமெழுதியிருந்த பேப்பரக் கிழிச்சி சன்ன வழியா வீசினேன். 

அது காற்றில் பறந்து சென்றது.
******
பிரதிலிபி 'அன்பென்று கொட்டு முரசே!' சிறுகதைப் போட்டிக் களத்தில் நான் எழுதிய சற்றே வித்தியாசமான காதல் கதை என்று நான் நினைக்கும் (!) 'இன்னாருக்கு இன்னாரென்று...' என்ற கதையும் இருக்கு. 

முடிந்தால் வாசியுங்கள்... வாசித்தால் தவறாமல் கருத்துச் சொல்லுங்க... கருத்துச் சொல்லும் முன்னே மறக்காமல் மதிப்பெண் கொடுங்கள்.

கதை குறித்து சில கருத்துக்கள் வந்திருக்கின்றன. அதில் திரு. முஹமது சர்பான் அவர்கள் எழுதிய கருத்து உங்கள் பார்வைக்கு... (எப்படியும் உங்களை வாசிக்க வைக்கும் முயற்சியில்..ஹி..ஹி..)

'எளிமையாக வாழ்க்கையின் திருப்பங்களை உணர்வுகளில் ஆணி அடித்தாற் போல் வெளிப்படுத்தும் கதையோட்டம் மனம் தொட்டது. உள்ளங்கள் சுமந்த அன்பு பலருக்கு ஒரு சிலுவைக்குள் முடிந்து  போகிறது; சிலருக்கு ஒரு பொம்மை போல்  சுட்டித்தனமாய் ஆயுளை கடத்துகின்றது. நாம் நினைப்பது  ஒன்று நடப்பது வேறு இது தான் வாழ்க்கை. அன்பை சுமக்கும்  உள்ளங்கள் எல்லாம் தூய்மையானவை அது  மரணத்தின் பின் கூட காலாவதியாவதில்லை. இன்னும் எழுதுங்கள்  வாழ்த்துக்கள்'
  
கதைக்குச் செல்ல 'இங்கு' சொடுக்குங்கள்.

நன்றி.
-'பரிவை' சே.குமார்.