'மணல் பூத்த காடு'
மண்ணையும் மனிதர்களையும் நேசிக்கும் ஒரு மனிதனால்தான் அதன் மீதான தன் காதலை வசீகரிக்கும் எழுத்தாக்க முடியும். அப்படித்தான் எழுத்தால் வசீகரித்திருக்கிறார் கனவுப்பிரியன் என்னும் முஹம்மது யூசுஃப்.
கூழாங்கற்கள், சுமையா என்ற இரண்டு சிறுகதைத் தொகுப்புக்களைக் கொடுத்த கனவுப்பிரியன் அவர்கள் மணல் பூத்த காடு என்னும் முதல் நாவலினை தன் இயற்பெயரிலேயே எழுதியிருக்கிறார். அது தேவை என்பதால் கனவுப்பிரியனைத் துறந்திருக்கிறார். இனி முஹம்மது யூசுஃபாகவே தொடர்வார் என்பதைச் சொல்லாமல் சொல்கிறது இந்நாவல்.
முழுக்க முழுக்க சவுதி மண்தான் மணக்கிறது நாவல் முழுவதும்... நாம் அறியாத ஒரு நாட்டின் பெரும்பாலான இடங்களை நாவல் மூலம் நமக்கு அறியத் தருகிறார், கூடவே நாம் அறியாத மூஸ்லீம் மதம் தொடர்பான நிறைய செய்திகளுடன்... இங்கு நாம் என்பது முஸ்லீம் அல்லாத நாம்... நிறைய விஷயங்கள் நமக்குத் தெரியாதவை என்பதைவிட நமக்குப் புரியாதவைதான்.
சவுதியின் எல்லா இடங்களுக்கும் நம் கை பிடித்து அழைத்துச் செல்லும் நாயகன், அந்நாயகனிடம் 'இங்கு போ...', 'அங்கு போ...', 'இதைப் படி...', 'அந்தப் படம் பார்...' எனச் சொல்லி இயக்கும் நாயகனுக்கு நாயகன், நட்பு வட்டம், அலுவலக நட்புக்கள், செல்லும் இடமெல்லாம் உதவி புரியும் நட்புக்களின் நட்புக்கள் என அன்பால் விரிந்து கிடக்கிறது பாலையின் மணல்வெளி.
புதிதாக சவுதிக்கு வந்த மகனுக்கு மழையில் நனையும் ஆசை வருகிறது... அது மழையில் நனையும் ஆசைதானா என்றால் இல்லை என்பதே உண்மை... காரணம் பாலை நிலத்தில் மழையில் நனையும் ஆசை என்பது எளிதாய்க் கிட்டிவிடுவதில்லை.... ஊரில் இருந்து வருபவர்களுக்கே தோன்றும் ஊருக்குப் போக வேண்டுமென்ற உள்ளத்து ஆசையை மழையில் நனைய வேண்டுமென்பதாய் முன் வைக்கிறான். மகனின் ஆசைக்காக உடனே ஊருக்குப் போக வழியற்ற தந்தை ஹம்மாது மழையில் நனையவென பெட்ரா என்னும் ஊருக்கு கூட்டிப் போகிறார். அதே நேரத்தில் பின்பொரு நாள் ஹம்மாது வேலை செய்யும் தோட்டத்துக்கு ஒட்டகபால் குடிக்கச் சென்று அவரின் மகனையும் நல்ல வேலையில் சேர்த்துவிட தன்னுடன் அழைத்துச் செல்லும் அனீஸ் இந்தியாவில் இருந்து வேலைக்காக சவுதிக்கு விமானத்தில் பறந்து கொண்டிருக்கிறான்.
வெளிநாட்டுக்கு வேலைக்கு வருபவர்களில் 80%க்கு மேல் குடும்ப கஷ்டம், வாழ்க்கைப் பிரச்சினைகள் நிமித்தமே விமானம் ஏறுபவர்களாய் இருப்பார்கள்... இருக்கிறார்கள். அப்படித்தான் பயோமெடிக்கல் இன்சினியரான அனீஸூம் கடன் பிரச்சினையால் வெளிநாட்டுக்கு விமானம் ஏறுகிறான்.
கல்லூரிகள், சிறைச்சாலை, அரசு அலுவலகங்கள் என சவுதி முழுமைக்கும் இயந்திரங்களை இணைத்து அது குறித்து அங்கியிருப்பவர்களுக்கு விளக்கம் அளித்து வரக்கூடிய வேலை... மொத்தத்தில் அனீஸ் ஊர் சுற்றி... ஊர் சுற்றும் வேலையில் உள்ள சுகம் என்னவெனில் நமக்குப் பிடித்த இடங்களையும் பார்த்து வரமுடியும்... அப்படித்தான் தனக்குப் பிடித்த, தான் பார்க்க நினைத்த வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களை எல்லாம் பார்த்து வருகிறான்.
அப்பாவின் நண்பரைப் போலிருக்கும் மீராசா ஹாஜியாரை அனீஸ் தோழப்பாவாக்கிக் கொள்ள, வார இறுதி நாள் நடைப்பயிற்சியின் போது அடுத்த வாரம் செல்ல இருக்கும் இடம் பற்றி அவரிடம் சொன்னதும் அங்கு பார்க்க வேண்டிய இடங்களைப் பற்றிச் சொல்லி, அது தொடர்பான புத்தகங்கள், படங்கள் குறித்தும் சொல்லுவார்... அவர் ஒரு சவூதி தகவல் அங்காடி... நடமாடும் நூலகம்.
அவர் சொல்லும் இடங்களுக்கு எல்லாம் செல்லும் அனீஸ், தனக்கு இருக்கும் சந்தேகங்களை மறு வாரத்தில் அவரிடமே தீர்த்துக் கொள்ள, மீண்டும் அடுத்த வார பயணம் குறித்த பேச்சில் அங்கு காண வேண்டிய இடங்களைப் பற்றி பேசுவார். எதையும் விரிவாக பேசமாட்டார்... பார்த்துட்டு வா பேசலாம் என்பார்.இவர்தான் அந்த நடையாடியின் வழிகாட்டியாய் நாவல் முழுவதும்... இவர்தான் நாயகனின் நாயகன்... நாவலின் நாயகன்.
அவர் சொல்லும் இடங்களுக்கு எல்லாம் செல்லும் அனீஸ், தனக்கு இருக்கும் சந்தேகங்களை மறு வாரத்தில் அவரிடமே தீர்த்துக் கொள்ள, மீண்டும் அடுத்த வார பயணம் குறித்த பேச்சில் அங்கு காண வேண்டிய இடங்களைப் பற்றி பேசுவார். எதையும் விரிவாக பேசமாட்டார்... பார்த்துட்டு வா பேசலாம் என்பார்.இவர்தான் அந்த நடையாடியின் வழிகாட்டியாய் நாவல் முழுவதும்... இவர்தான் நாயகனின் நாயகன்... நாவலின் நாயகன்.
வெளிநாட்டு வாழ்க்கையில் வாரம் முழுவதும் வேலை... வேலை... வேலைதான்... வார இறுதி விடுமுறைநாள்தான் கொண்டாட்ட தினம். தண்ணி அடிப்பவர்கள் எல்லாம் வியாழன் இரவே ஆரம்பித்து விடுவார்கள் ஆட்டத்தை... வெள்ளி என்பது பிரியாணியுடன் படம் பார்த்து மகிழ்வாய் கழியும் நாள். அனீஸ்க்கும் ரவி, ஷேக் பாய் என ஒரு நட்பு வட்டம் கிடைக்கிறது வார இறுதியை பிரியாணி, சினிமா என ரகளையாய் கழிப்பதற்கு.
இந்த நாவல் அனீஸின் கடன் தொல்லையையோ குடும்ப நிலையையோ வெளிநாட்டில் அவன் படும் கஷ்டத்தையோ, அவனுக்கு இழைக்கப்படும் நம்பிக்கைத் துரோகத்தையோ பேசவில்லை.... மாறாக அவன் இணைக்கும் கருவிகள், செல்லும் பயணங்கள், பார்க்கும் இடங்கள் என பயணத்தை மட்டுமே பேசுகிறது. நாவலுக்கான வட்டத்துக்குள் இருந்து சற்றேயல்ல மொத்தமாய் விலகி பாலை எங்கும் பயணப்படுகிறது... 448 பக்கங்கள் கொண்ட மிகப்பெரிய புத்தகமாய்.
அனீஸ் மனைவிக்கு எழுதும் கடிதங்களில் முதல் கடிதம் மனம் கனக்கச் செய்கிறது. இறுதிக் கடிதத்தில் 'தாஜூஸ் ஸலாவத்' ஓதினேன் என்று சொல்லி அதை முழுவதுமாய் இரண்டு பக்கங்கள் கொடுத்திருப்பது தேவையில்லை என்பதாய்த்தான் தோன்றியது. மனைவியிடம் சொல்லும் போது எதற்காக முழுப்பாடலும் என அவரிடமே கேட்டபோது அரபிப் பாடல் ஒன்றை தமிழில் மொழிமாற்றம் செய்து ஓதுவது பற்றி எல்லாரும் தெரிந்து கொள்ளட்டும் என பதிப்பகத்தார் விரும்பி வைத்ததாகச் சொன்னார். இருப்பினும் மனைவிக்கான கடிதத்தில் அது அவசியமில்லை என்பதாய்தான் மீண்டும் வாசிக்கும் போதும் எனக்குத் தோன்றியது.
எத்தனை பயணங்கள்...
எவ்வளவு அனுபவங்கள்...
ஒவ்வொன்றும் பல கதைகள் பேசுகிறது. இந்த நாவலில் இடம்பெற்ற சில பயணங்கள் குறித்து புத்தகமாகும் முன் எங்களுடன் பேசியிருக்கிறார்... நிறைய விஷயங்களைச் சொல்லியிருக்கிறார்... ஆனால் புத்தகத்தில் அவை எல்லாம் நிறைவு செய்யப்படாமல் விடப்பட்டுள்ளது. இது குறித்தான விபரம் வேணுமா..? அப்ப அந்தப் புத்தகத்தைப் படி, இந்தப் படத்தைப் பார் எனச் சொல்லி முடித்து விடுகிறார்... சில வில்லங்க அரசியலை விரிவாய்ப் பேச வேண்டாமே என்பதாய்தான் நிறுத்தியிருக்கிறார் என்றாலும் பல விஷயங்களை முடிந்தளவு விரிவாய்ப் பேசியிருக்கிறார்.
வஹாபியிசம் பற்றி, வஹாபிகளால் வரும் பிரச்சினைகள், அவர்கள் எப்படி... யாரால்... எங்கிருந்து உருவாக்கப்பட்டார்கள் என்பதை எல்லாம் மிக விரிவாகப் பேசியிருக்கிறார்.
ஓட்டகம் நீரைத் தன் திமிலில் சேமித்து வைப்பது போல சவுதியில் ஊர் சுற்றியாய்த் திரிந்து செய்திகளைச் சேகரித்து, அதைத் தனக்குள் சேமித்து வைத்துக் கொண்டு இன்னும் இன்னுமென புதியவற்றைத் தேடி அலையும் அனீஸ், விடுமுறையில் ஊருக்கு வரும் போது மனைவி மக்களுடன் மகிழ்வாய் கழித்தாலும் ஊரிலும் பயணப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறான்... அவன் மனம் பயணத்துக்குள் சங்கமித்து விடுகிறது. எங்கு சென்றாலும் பயணப்படனும்... புதியவற்றை உள்வாங்கிக் கொள்ள வேண்டும் என்பதாய் அவனை மாற்றிவிடுகிறது பாலையில் பயணித்த காலங்கள்...
மீண்டும் சவுதிக்கு வருபவனுக்குப் பிரச்சினைகள் எல்லா விதத்திலும் ஆரம்பிக்கிறது. பாலை மண்ணும் காற்றும் இன்னும் காதலோடு இருக்க... நண்பர்களாய் இருந்தவர்களில் பலர் எதிரிகளாய் மாறுகிறார்கள். தோழப்பா தந்தையாக நிற்கிறார் இறுதிவரை...
சவுதியில் அவனுடன் ஒரு பூனை இருக்கிறது... வழியில் அவனுடன் இணைந்த இந்தப் பூனை... ஏதோ ஒரு பாசத்தில் அவனுடன் பிணைந்து கிடக்கிறது. நம்ம ஊரில் பூனை குறுக்கே போனால் கெட்ட சகுனம் என்போம்... இந்தப் பாலை நிலங்களில் பூனைகள் குறுக்கிடாமல் எங்கும் செல்ல முடியாது. அந்தப் பூனையும் பேட்டா என்று அழைக்கும் பாகிஸ்தானி டிரைவரும் மட்டுமே தோழப்பாவைப் போல அவன் மீது பாசமாய்...
பிரச்சினைகள் சூழ, அதிலிருந்து மீள நினைப்பவன் எவரிடமும் சொல்லாமல் சவுதியில் இருந்து மன வருத்தத்துடனேயே விடைபெறுகிறான். பாலை மண்ணின் மீதான அவனின் பெருங்காதலை மனித மனங்கள் உடைத்து விடுகின்றன.
கல்லில் இருந்து ஓட்டகம் வந்த கதை கேட்ட நண்பனின் குழந்தை, அந்த ஒட்டகம் இப்ப வருமா? என்று கேட்க, அருகில் ஒட்டகத்தைப் பிடித்துக் கொண்டு நிற்கும் அரபி என்னவென்று கேட்டு , குழந்தைக்கு ஏதேனும் சொல்ல வேண்டும் என்றால் நீயும் குழந்தையாக மாற வேண்டும் என்று சொல்லி, அத்தரை அவனிடம் கொடுத்து இதை நான் சொல்லும் போதெல்லாம் நீயும் முகர்ந்து பார், அந்தக் குழந்தையையும் முகரச் சொல் என்று சொல்லி ஒரு புது உலகத்துக்குள் அழைத்துச் செல்கிறார்.
அதே போல் ஜபல் அல் நூர் மலையின் உச்சியில் உள்ள குகையில் இருந்து பார்த்தால் தூரத்தில் இருக்கும் உலகின் முதல் பள்ளியான 'காபா' தெரியும். அதைக் காணச் செல்லும் போது அனீஸ் மயக்கமுறுகிறான்... அதன் காரணமாக படுக்க வைத்துவிட்டு மற்றவர்கள் மேலே செல்ல, மயக்கம் தெளிந்து எழுந்தமர்பவனைக் கடந்து செல்லும் கைத்தடி ஊன்றியபடி மேலிருந்து இறங்கி வரும் பெரியவர் 'ஸலாவத் ஓது' என்று சொல்லிப் புன்னகைக்கிறார். அந்த உருவத்தில் தன் அப்பாவைக் காணும் அனீஸ் அதன் பின் மீண்டும் நடந்து மேலேருகிறான்.
குகையில் அமர்ந்து 'காபா'வைப் பார்க்கும் போது ஆட்கள் செல்லாமல் இருக்கப் போடப்பட்டிருக்கும் இரும்புக் கிராதிகளைத்தாண்டி இளம் வெள்ளாடு ஒன்று காபாவைப் பார்த்தபடி நிற்கிறது. அனீஸ்க்கு எப்படி ஆடு வந்ததென ஆச்சர்யம்... இப்படியான சில ஆச்சர்ய நிகழ்வுகளும் நாவலுக்குள் சிதறிக் கிடக்கின்றன... பயணக் களைப்பைப் போக்கும் விதமாக.
சித்ரா மாமி, புத்தகங்கள், பட்டிமன்றம் என நகரும் இடத்தில் சித்ரா மாமி, காபியெல்லாம் எனக்கு வேறொரு நிகழ்வை ஞாபகமூட்டியது. தம்பி எழுத்தாளர் நௌஷாத்தும் கவிஞர் பிரபும் வந்து போனார்கள் ஆனால் இது சவுதியில் என்பதால் ஞாபகத்துக்கு சிறையிட்டாச்சு. சித்ரா வைத்திருக்கும் புத்தகங்கள் குறித்த பேச்சுக்களும் புத்தகங்களைப் பார்க்க வேண்டும் என்பதும் பாதி படித்த புத்தகமாய் மட்டுமே... முழுவதுமாக பேசப்படவில்லை.
சவுதி வெயில் தகிக்கும் பாலை நிலம் என்றும் அங்கிருக்கும் சட்டதிட்டங்கள் மோசமானவை என்றும் நினைத்திருப்போர் மத்தியில் அந்தப் பாலையில் பல பசுமை இருக்கிறது... சட்டதிட்டங்கள் கடுமையாக இருந்தாலும் நமக்கான நல்வாழ்வு அங்கிருக்கிறது என்பதைச் சொல்லியிருக்கிறார்.
அவர் பேசும் வரலாறுகள் எந்தளவுக்கு உண்மை என்ற ஆராய்ச்சியெல்லாம் செய்யத் தேவையில்லை. இந்தப் புத்தகத்துக்கான அவரின் உழைப்பு மிகக் கடுமையானது... இதற்காக அவர் பட்ட கஷ்டங்களை நான் அறிவேன். நிச்சயம் அவரின் உழைப்பைக் கொண்டாட வேண்டும்... கொண்டாடுவோம்.
எழுத்துப் பிழைகளை ஒரு குறையாகக் கூறி சிலர் எழுதுவது வருத்தமளிப்பதாய் இருக்கிறது. பதிப்பகத்தாரின் தவறினால் நிகழ்ந்தது அது அடுத்த பதிப்பில் சரி செய்யப்படும் என்ற போதும் அதை பெரிதாக்கிப் பேசுவதில் என்ன லாபம் இருக்கப் போகிறது..?
நடையாடியாய் இருந்தால் உனக்கு இந்த நாவல் மிகவும் பிடிக்கும் என்று சொல்லியிருப்பார் தன் முன்னுரையில்... அது உண்மைதான் நாவலோடு பயணப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும்... நீண்ட பயணம்... பயணம் அலுக்க, பயணப்பட்டது போதும் என்ற எண்ணம் தோன்றினால் நாவல் நமக்கு அயற்சி அளிக்க ஆரம்பித்துவிடும். அதன் பின் பக்கங்கள் மெல்லத்தான் பயணிக்கும்.
வெளிநாட்டு வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு என்னடா இது வார விடுமுறை, பிரியாணி, சினிமா என திரும்பத் திரும்ப வருதேன்னு தோன்றும் என்றாலும் ஊரில் இருப்பவர்களுக்கு இங்கான வாழ்க்கை இப்படிதான்... எல்லாரும் சொகுசாக வாழ்ந்து விடுவதில்லை என்பதை அறியும் போது உனக்கென்ன வெளிநாட்டு வாழ்க்கை என்று சொல்லும் மனநிலையில் இருந்து மாறிக் கொள்வார்கள் என்றே தோன்றுகிறது.
நாவல்களுக்கான ஆதி வடிவத்தை உடைத்தெறிந்து பயணப்படும் 'மணல் பூத்த காடு' உலகெங்கும் பேசப்படும் என்பதில் சந்தேகமில்லை... விருதுகளையும் அள்ளிக் குவிக்கும்... குவிக்க வேண்டும் என்ற ஆசையும் நம்பிக்கையும் எனக்குள் இருக்கிறது... கண்டிப்பாக நடக்கும்.
மிகப்பெரிய நாவல்தான் என்றாலும் கண்டிப்பாக வாசியுங்கள்... உங்களுக்கு சவுதி குறித்தான வித்தியாசமான... இதுவரை உணர்ந்திராத அந்த மண் குறித்த புதிய அனுபவத்தைக் கொடுக்கும்.
மொத்தத்தில் 'மணல் பூத்த காடு' வாசிப்பனுபவம் உங்கள் மனதைப் பூக்க வைக்கும்.
யாவரும் பதிப்பகம்.
பக்கம் : 448
விலை : 500
எழுத்தாளரின் மின்னஞ்சல் : usooff@gmail.com
பிரதிலிபி சிறுகதை போட்டியில் இருக்கும் சிறுகதை... வாசிக்காதவர்கள் வாசிக்க....
"அவரை வெறி ஏத்திப் பாக்காதே... அவரு வெறியானாருன்னா என்ன ஆகும்ன்னு உனக்கே தெரியும்ல்ல... கேட்டதுக்குப் பதில் சொல்லு.... அவளோட பேச மாட்டேன்னு சத்தியம் பண்ணிக் கொடு..." கோவில்ல சாமி ஆடுறவரைப் பார்த்து பக்கத்துல இருக்கவரு ஆத்தா உக்கிரமாயிருக்கான்னு ஏத்தி விடுற மாதிரி அம்மா அவ பங்குக்கு சாம்பிராணி போட்டாள்.
அப்பாவின் கண்கள் சிவப்பாக மாறியிருந்தது. எப்பவும் பந்து வீசலாம்... களத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
"அதான் சொன்னேன்ல ஆமான்னு..." கொஞ்சம் சத்தமாகச் சொன்னேன்... எனக்குப் பயமில்லை என்பதாய்க் காட்டிக் கொள்ள... ஆனால் உள்ளுக்குள் சோயிப் அக்தர் பாலை எதிர் கொள்ள இருக்கும் கும்ளேயின் மனநிலையில்தான் இருந்தேன்.
*******************
பிரதிலிபி சிறுகதை போட்டியில் இருக்கும் சிறுகதை... வாசிக்காதவர்கள் வாசிக்க....
"அவரை வெறி ஏத்திப் பாக்காதே... அவரு வெறியானாருன்னா என்ன ஆகும்ன்னு உனக்கே தெரியும்ல்ல... கேட்டதுக்குப் பதில் சொல்லு.... அவளோட பேச மாட்டேன்னு சத்தியம் பண்ணிக் கொடு..." கோவில்ல சாமி ஆடுறவரைப் பார்த்து பக்கத்துல இருக்கவரு ஆத்தா உக்கிரமாயிருக்கான்னு ஏத்தி விடுற மாதிரி அம்மா அவ பங்குக்கு சாம்பிராணி போட்டாள்.
அப்பாவின் கண்கள் சிவப்பாக மாறியிருந்தது. எப்பவும் பந்து வீசலாம்... களத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
"அதான் சொன்னேன்ல ஆமான்னு..." கொஞ்சம் சத்தமாகச் சொன்னேன்... எனக்குப் பயமில்லை என்பதாய்க் காட்டிக் கொள்ள... ஆனால் உள்ளுக்குள் சோயிப் அக்தர் பாலை எதிர் கொள்ள இருக்கும் கும்ளேயின் மனநிலையில்தான் இருந்தேன்.
-'பரிவை' சே.குமார்.