மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வலைச்சரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வலைச்சரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 19 அக்டோபர், 2014

வலைச்சர ஆசிரியனாய் மீண்டும்...


ரு வார காலத்திற்கு வலைச்சர ஆசிரியனாய் இருக்க சீனா ஐயா அவர்களின் அன்பு அழைப்புக்கு மறுப்பு சொல்ல நினைத்த சூழல் மறுப்புச் சொல்ல முடியாமல் அன்பினால் அடித்துச் செல்லப்பட்டது. 

எங்களது புராஜெக்ட் அரசு அலுவலகத்தில் இந்த மாதத்துடன் முடிவடைவதால் ஒரு நாளைக்கு தொடர்ந்து பதினோரு மணி நேரத்துக்கு மேல் வேலை செய்கிற சூழ்நிலை.. பத்துப் பேர் பார்க்க வேண்டிய பணியை கடந்த ஒரு வருடத்துக்கு மேலாக நான், இரண்டு மலையாளிகள், ஒரு பாகிஸ்தானி என நான்கு பேர் பார்த்து வருகிறோம். விரட்டித்தான் பணிகளை முடித்து வந்தோம். கடைசி நேரத்தில் சர்வே பணியில் சொதப்பலாகிவிட எல்லா வேலைகளும் எங்கள் தலையில் விழுந்துவிட்டது. விரட்டி முடிக்க பார்ப்பதால் சனிக்கிழமைகளில் கூட பணிக்குச் செல்கிறோம்.

இந்த பிரச்சினையால்தான் கடந்த 15 நாட்களுக்கு மேலாக நண்பர்களின் தளங்களுக்குச் செல்லவில்லை. ஒரு சிலரின் தளங்களில் மட்டும் அவ்வப்போது தலைகாட்டி வருகிறேன். இங்கும் இடுகைகள் அதிகம் எழுத முடியவில்லை. இருப்பினும் எதாவது எழுதினால் இவனை நம்ம பக்கம் ஆளையே காணோம் என்று நினைக்காமல் வந்து கருத்திடும் நட்புக்களை நினைத்து சந்தோஷமாக இருக்கிறது.

இனி ஒருவாரம் அலுவலகப் பணியுடன் வலைச்சரப் பணி இருப்பதால் இங்கு எழுத நேரம் இருக்காது. நட்புக்களின் தளத்திற்கு நேரம் கிடைக்கும் போது தவறாமல் வருவேன். ஆனா நீங்க எல்லாரும் தினமும் வலைச்சரம் வந்து என்ன பண்ணியிருக்கேன்னு ஒரு எட்டு பார்த்து உங்க கருத்தையும் தட்டி விட்டுட்டு வர மறக்கக் கூடாது. 

ஆங்... சொல்ல மறந்துட்டேனே... வலைச்சரத்தில் பலரால் பலமுறை அறிமுகமான நான் அதே வலைச்சரத்தில் மூன்றாவது முறையாக ஆசிரியனாக சீனா ஐயா மற்றும் தமிழ்வாசி பிரகாஷ் அவர்களால் அமர்த்தப்பட்டிருக்கிறேன். என்னால் முடிந்தவரை இந்த ஒரு வார காலத்தில் செய்து முடிக்கிறேன். அதற்கு தங்கள் ஆதரவு கண்டிப்பாக வேண்டும்.

நாளை முதல் வலைச்சரத்தில்... 

அங்க இன்னைக்கு சீனா ஐயா அவர்கள் நம்மளைப் பற்றி அதிகமாச் சொல்லியிருக்காங்க... செவ்விருந்தோம்பி வரவிருந்து காத்திருத்தல் அப்படின்னு மீனைப் பிடிக்கப் போற கொக்கா காத்திருக்காங்க.,.. மீன்னா அங்க போயி கலக்கிட்டு வந்திடுவோமான்னு கலக்க ஆரம்பிச்சிருச்சு... நீங்களே பாருங்க...

நாளைய வலைச்சர ஆசிரியப் பொறுப்பினை ஏற்கும்  சே.குமாரினை வருக வருக - ஆசிரியப் பொறுப்பேற்று ஒரு வார காலத்திற்கு சிறந்த பதிவர்களையும் அவர்களது சிறந்த பதிவுகளையும்  அறிமுகம் செய்யும் பதிவுகளைத்  தருக எனக் கூறி வாழ்த்துவதில்  பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

அப்படியே ரிலாக்ஸா யாரோ இவன்... யாரோ இவன்... அங்க போயி என்ன பண்ணப் போறானோ இவன் என்று எனக்காக யோசித்தபடி இந்தப் பாடலையும் ரசித்துச் செல்லுங்கள்...



-'பரிவை' சே.குமார்.

ஞாயிறு, 8 செப்டம்பர், 2013

வலைச்சரத்தில் அறிந்த முகங்கள்

வணக்கம் உறவுகளே...

இன்று வலைச்சரப் பங்களிப்பின் நிறைவு நாள்... ஒரு வாரகாலமாக நல்லதொரு பணி... நிறைய வாசிக்கக் கிடைத்தது. சரி வாங்க இன்றும் சிலரைப் பார்த்துட்டு வருவோம்...

பதிவர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட முகங்களே இவர்கள்... புதியவர்களை அறிமுகம் செய்யாமல் அறிந்தவர்களின் அறிமுகமா என்று நினைக்கலாம்... வரும் புதியவர்கள் அனைவரும் கண்டிப்பாக படிக்க வேண்டியவர்களைத்தான் இதுவரை அறிமுகமாகக் கொடுத்தேன்.  இன்றும் சில முக்கியப் பதிவர்கள் உங்களுக்காக...

இவரைப் பற்றி முதல்பதிவிலேயே சொல்ல நினைத்தேன். சரி பின்னால் பார்க்கலாம் என்று விட்டு வைத்தேன். மனிதர் நான் சென்ற எல்லாத்தளங்களிலும் பின்னூட்டத்தில் முதலாவது ஆளாய் சிரிக்கிறார். இவருக்கும் நான்கைந்து புதியவர்களை அறிமுகம் செய்திருக்கிறேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள் கண்ணில் விளக்கெண்ணைய் ஊற்றி ஆளு வந்திருக்காரான்னு பார்த்து புடிக்க வேண்டியதாப் போச்சு. தொலைக்காட்சித் தொகுப்பாளினி திவ்யதர்ஷினி எப்படி சின்னத்திரையினருக்கு DD’ யோ அப்படி பதிவர்களுக்கு இவர் ‘DD’. இந்த முறை ஊருக்குப் போகும்போது இவரைப் பார்க்க நினைத்திருந்தேன் வீட்டுப் பணிகளால் சந்திக்க முடியவில்லை. அடுத்தமுறை சந்திக்க வேண்டும். பிரபலம்... சந்திக்க நேரம் ஒதுக்குவாரா தெரியவில்லை....

யாரென்றுதானே கேட்கிறீர்கள்... இங்கே  சொடுக்கி அங்கே போய் பாருங்கள்...

இனி தொடர்ந்து நம் தளத்தில் எழுதுப்பணி...
-'பரிவை' சே.குமார். 

சனி, 7 செப்டம்பர், 2013

வலைச்சரத்தில் கிராமத்து வைத்தியம்

ன்னடா கிராமத்து வைத்தியத்தைப் பத்தி சொல்லப் போறானேன்னு நினைக்கிறீங்களா... கழுத்து வலிக்கு படியை வைத்துப் படுத்தால் நல்லது என ராஜராஜேஸ்வரி அக்கா சொல்லியிருந்தாங்க. உண்மைதான்... அப்படியெல்லாம் ஊரில் இருக்கும் போது செய்து சரி பண்ணியிருக்கிறோம். சில வருடங்களுக்கு முன்பிருந்த கிராமத்து வைத்திய முறைகள் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து விட்டன.

கழுத்து வலி வந்தால் தலையணை வைக்காமல் நிலைப்படிக்கல்லில் தலைவைத்துப் படுக்கச் சொல்வார் அம்மா. அப்படி செய்தால் காலையில் எழுந்திருக்கும் போது வலி பறந்து போயிருக்கும். வறட்டு இருமலாக இருக்கிறதா கொஞ்சம் மிளகை எடுத்து காரம் அதிகமாக தெரியாமல் இருக்க அரிசியுடன் சேர்த்து மென்று வாய்க்குள் வைத்துக் கொள்ளச் சொல்வார்கள். மூச்சுக்குத்துப் பிடித்துக் கொண்டால் எங்க ஊர் மெய்யரு வீட்டிற்கு வந்து முதுகில் உலக்கையை வைத்து உருட்டி ஒரு சொம்பில் தண்ணீர் எடுத்து கந்தர் சஷ்டி கவசமோ மாரியம்மன் தாலாட்டோ கொஞ்சம் வாய்க்குள் முணுமுணுத்து அந்த சொம்பை ஒரு சாப்பாட்டுத் தட்டில் கவிழ்த்து வைத்துவிடும், தட்டோடு ஒட்டிக் கொண்டிருக்கும் சொம்பு தட்டை விட்டுப் பிரியும் போது மூச்சுக்குத்தும் பறந்துவிடும்.

எங்க வீட்டில் எங்க அக்காக்கள், அண்ணன்களின் பிள்ளைகள் எல்லாருக்கும் பிறந்திருக்கும் போது காலையில் உடலெல்லாம் நல்லெண்ணை தேய்த்து கண்ணுக்குள் எண்ணைய் ஊற்றி வெயிலில் கொஞ்ச நேரம் வைத்திருப்பார்கள். காலையில் வேப்பிலைக் கொழுந்தைப் பறித்து நன்றாக இடித்துச் சாறெடுத்து ஒரு சங்கு புகட்டி விடுவார்கள். ஆனால் எனது குழந்தைகள் பிறந்த போது இந்தச் சோப்புதான் பயன்படுத்த வேண்டும் என மருத்துவர்கள் குறித்துக் கொடுத்துவிட்டார்கள். பாட்டி வைத்தியம் எல்லாம் கிடைத்தாலும் இன்றைய சூழல் அதை விரும்பவில்லை.

நாங்கள் பள்ளியில் படிக்கும் போது... நாங்கள் என்றால் நான், எங்க அக்கா, தம்பி... ஞாயிற்றுக்கிழமை காலை எழுந்ததும் அம்மா மூவருக்கும் அரைடம்ளர் வீட்டில் ஆட்டி எடுத்த வேப்பெண்ணையை குடிக்கச் சொல்லிக் கொடுப்பார். வாயில் ஊற்றிவிட்டு சீனியை அள்ளி கொட்டிக் கொள்வோம். குடிக்கவில்லை என்றால் அடிதான். மாதம் ஒருமுறை தமிழ் மருந்துக்கடையில் பேதி மாத்திரை வாங்கிக் கொண்டு வந்து கொடுத்து ஊரணிக்கும் வீட்டுக்கும் நடக்க வைத்துவிடுவார்கள். பாவக்காய், பூண்டுக் குழம்பெல்லாம் சாப்பிட்டே ஆகவேண்டும். இப்ப எனது பிள்ளைகள் இரவில் நூடுல்ஸ் சாப்பிடுகிறார்கள்.

பழைய சாதம், வெங்காயம், எருமைத் தயிர் இருந்தால் போதுமெனக்கு... கல்யாணத்துக்கு முன்பு வரை நானும் அம்மாவும் மட்டுமே வீட்டில் எனக்காக காலையில் பலகாரம் போடமாட்டார்கள். அவனுக்கு கஞ்சிதான் பிடிக்கும் என்று அவர்களும் எனக்காக கஞ்சி குடிப்பார்கள். ஆனால் இப்போ இங்கு கஞ்சி வைக்க முடிவதில்லை... ஊருக்குப் போனாலும் ஒட்டல் முதலாளி மகள் காலை இரவு டிபன் போட்டு நம்மையும் அதையே சாப்பிட வைத்துவிடுவார். கஞ்சி என்றால் நல்லா வளர்த்திருக்காங்க கஞ்சி கஞ்சியின்னு அப்படின்னு சொன்னதும் இட்லியோ தோசையோ கஷ்டப்பட்டு உள்ள போகும். ஒரே சந்தோஷம் பாப்பாவும், விஷாலும் அப்பா போல கஞ்சிப் பிரியர்கள்தான்... விஷால் சோறு மோரு என்று அடம் பண்ணி சாப்பிட்டு விடுவான்.

வலைச்சரத்தில் தொடர்ந்து படிக்க இங்கே சுட்டுங்கள்...

நன்றி.
-'பரிவை' சே.குமார்.

வெள்ளி, 6 செப்டம்பர், 2013

வலைச்சரத்தில் பிரபலங்கள்

வணக்கம் உறவுகளே...

நேற்றைய பகிர்வு தாமதமாகப் பதிவு செய்ய வேண்டியதாகிவிட்டது. காரணம் எங்கள் அறையில் இருந்து உறவினர் ஒருவர் ஊருக்குப் போனதால் அவருக்கு பெட்டி கட்டி அனுப்பி வைத்துவிட்டு வந்துதான் பதிவை தயார் செய்ய முடிந்தது. அதன் பிறகு பதிவிட்டுவிட்டு படுக்கும் போது இங்கு மணி இரவு இரண்டரைக்கு மேலாகிவிட்டது. இன்று விடுமுறைதானே என்பதால் மதியம் பதிவை தயார் செய்து மாலைக்குள் பதிவிட திட்டமிட்டிருந்தேன். காலையில் எழும்போதே கழுத்தில் பிடித்துக் கொண்டு வலியிருந்தது. அது இப்போ கூடுதலாகி இருபுறமும் திரும்பினால் நெருஞ்சி முள் குத்தியது போல் வலிக்கிறது. அதனால் வழக்கமான பாணியில அறிமுகம் செய்ய நிறைய நேரம் வேண்டும் என்பதாலும் அவ்வளவு நேரம் கணினியில் அமர எனது கழுத்து இடம் கொடுக்காது என்பதாலும் வழக்கமான அறிமுகம் நாளை (இப்போ அபுதாபியில் இரவு 10:50 மணி) கழுத்து சரியாகும் பட்சத்தில் இரண்டு பதிவாக பகிர்கிறேன். இன்று சில அறிமுகங்கள் உங்களுக்காக... இவர்கள் எல்லாம் எல்லாருக்கும் பரிட்சயமான எழுத்தாளர்கள்தான்... 

தொடர்ந்து படிக்க இங்கே சுட்டுங்கள்...
-'பரிவை' சே.குமார்

வலைச்சரத்தில் ஆசிரியர்கள்

னக்கு ஒண்ணாங்கிளாஸ், ரெண்டாங்கிளாஸ்க்கு ஒரே டீச்சர்தான். அவங்க பேர் மரியம்மை... பேருக்கு ஏற்றாற்போல அன்னைதான். எங்க அம்மா ஒண்ணாப்பு முடிச்சதும் ஆளு சின்னப்பயலா இருக்கான்... அதனால மறுபடியும் இவனை ஒண்ணாப்புல போட்டுடுங்கன்னு சொன்னதுக்கு சத்தம் போட்டாங்களாம். எட்டாவது வரைக்கும் அதே பள்ளி என்பதால் என்மேல் மிகவும் பிரியமாக இருப்பார். இப்போது எனது அன்பு ஆசிரியர் மண்ணுலகில் இல்லை.

அடுத்தது எங்க தாசரதி ஐயா, கணீர்க்குரலில் பாடம் எடுப்பதாகட்டும், அழகாக பாடல் பாடுவதாகட்டும் அவருக்கு நிகர் அவர்தான்... சிறியவர்களைக்கூட வாங்கய்யா என்று வாயார அழைப்பார்... வீட்டிற்குப் போனால் அவரைப் போல் உபசரிக்க முடியாது. கலையிலக்கியப் பெருமன்றத்தில் இருக்கும் போது அவருடன் தொடர்ந்து பழகும் வாய்ப்பு ஏற்பட்டது. எல்லாரிடமும் என்பிள்ளைகள் என என்னையும் முருகனையும் சொல்லுவார்.

இதேபோல் பள்ளியில் படிக்கும்போது அதிகம் தொடர்பு இல்லாவிட்டாலும் கலையிலக்கியப் பெருமன்றத்தில் இணைந்தது மூலம் மிக நெருக்கமானவர்கள் முக்கியமானவர்கள் சவரிமுத்து ஐயாவும் அருள்சாமி ஐயாவும்... இன்றும் இருவரும் மிகவும் பாசமாகப் பேசுவார்கள்...

கல்லூரியில் நிறைய ஆசிரியர்களைச் சொல்லலாம்... எங்க துறைத்தலைவர் கே.வி.எஸ் சார், அமலசேவியர் சார், வெங்கடாசலம் சார், சேவியர் சார், எம்.எஸ்.சார், சந்திரமோகன் சார், விஜயன் சார், பரமசிவம் (சார்) அண்ணன், மாணிக்கம் சார், சுப்பிரமணியன் சார், பெரிய திருவடி சார், சுந்தரமூர்த்தி ஐயா, ஆறுமுக ஐயா, தேனப்பன் ஐயா, பட்சிராஜன் சார், ரபீக்ராஜா சார், ஜானகிராமன் சார்... இன்னும்  சொல்லிக்கொண்டே போகலாம்.

என் ஆசான் குறித்து நிறைய முறை சொல்லியாச்சு. இந்நாளில் அவருக்கும் மற்ற அனைத்து நல் ஆசிரிய இதயங்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்களை அவர்களின் பாதம் பணிந்து சொல்லிக் கொள்கிறேன்.

தொடர்ந்து படிக்க இங்கே சுட்டுங்கள்....
-'பரிவை' சே.குமார்

புதன், 4 செப்டம்பர், 2013

வலைச்சரத்தில் தேரோட்டம்

ப்பொழுதும் நகரத்துத் திருவிழாக்களைவிட கிராமத்துத் திருவிழாக்கள் சற்றே கூடுதல் சந்தோஷத்தைக் கொடுக்கும் என்பதை எல்லோரும் அறிவோம்... உறவுகளுக்குச் சொல்லி ஊரில் எல்லோரும் ஒன்றாகக்கூடி கொண்டாடும் திருவிழாக்கள் என்றால் சந்தோஷத்திற்கு கேட்கவே வேண்டாம். அதுவும் ‘ஊர் கூடித் தேரிழுத்தால்...’ என்ற பழமொழிக்கு ஏற்ப சுத்துப்பட்டு கிராமங்கள் எல்லாம் ஒன்று கூட கண்டதேவி தேரோட்டம் மிகச்சிறப்பாக நடக்கும்.
(கண்டதேவி தேர்)

வருடா வருடம் ஆனி மாதம் தேரோட்டம் நடக்கும். பத்து நாட்கள் திருவிழா... தினமும் கலை நிகழ்ச்சி... அதிகாலை சாமி திருவீதி உலா... ஒன்பதாம் நாள் தேரோட்டம்... சின்னத்தேர் பெரியதேர் என இரண்டு தேர்கள்... முன்னே சப்பரத்தில் சில சாமிகள்... என தேரோட்டம் சுற்றியுள்ள கிராம மக்கள் எல்லாம் ஒன்று கூட சிறப்பாக நடைபெறும். நாங்கள் பள்ளியில் படிக்கும் போது தேரோட்டம் என்பது மிகப்பெரிய விழா. அன்று பள்ளிகளுக்கு விடுமுறை, சொந்தங்களுக்கு எல்லாம் சொல்லி வீட்டில் ஆட்டுக்கறி அல்லது நாட்டுக்கோழிக்கறிக் குழம்பு வைத்து சாப்பிட்டு மதியம் மூணு மணிக்கெல்லாம் தேர் பாக்க கிளம்பிவிடுவோம். அப்போது பெரியவர்கள் தேரோட்டக்காசு என்று எல்லாருக்கும் கொடுப்பார்கள். எங்கள் ஊரும் கண்டதேவியும் அருகருகே என்பதால் ஐந்து நிமிட நடையில் வந்துவிடலாம். தூரத்து ஊரில் இருப்பவர்கள் எல்லாம் வண்டி கட்டி வருவார்கள்.

கோவிலின் முன்பாக அலங்கரித்த தேர் உயரமாக நிற்பது பார்க்க கண்கொள்ளாக்காட்சியாக இருக்கும். அதன் முன்னே குதிரைகள் பாய்ந்து வருவதுபோல் பொம்மை கட்டிவைத்திருப்பார்கள்... நான்கு நாட்டார்கள் பிடித்து இழுக்க வேண்டிய வடங்கள் வீதியில் போடப்பட்டிருக்கும். நான்கு நாட்டாருக்கும் மாலை மரியாதை செய்தபின்னர் அவர்களுக்கு உரிய வடத்தில் நாட்டார்கள் வந்து நிற்க, நாட்டம்பலங்கள் வடங்களில் நின்று துண்டைச் சுற்றி இழுக்கச் சொல்ல பெரியவர், சிறியவர், இளைஞர் என எல்லாருமாக சப்தம் எழுப்பியபடி இழுப்பார்கள்.. (நானும் வடம்பிடித்து இழுத்திருக்கிறேன்) இடையிடையே தேரை நிறுத்தவும் வேகத்தைக் கட்டுப்படுத்தவும் கட்டை போடுபவர்கள் முன் சக்கரங்களின் அருகே கயிரைப் பிடித்தபடி வருவார்கள். நான்கு வீதியிலும் ஆங்காங்கே நின்று கிளம்பும் போது குலுங்கிச் செல்வது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.

ஆனி மாதம் மாம்பழ சீசன் என்பதால் தேரோட்டம் என்றால் மாம்பழத்திற்குப் பஞ்சம் இருக்காது. தேர் கிளம்பிய இடத்தை வந்தடைவதை 'நிலைக்குத்துதல்' என்று சொல்வோம். தேர் நிலைக்குத்திருச்சா என்று தேர் பார்த்து செல்லும்போது எதிர்படும் எல்லாரும் கேட்பார்கள். நிலையை அடைந்ததும் மாம்பழங்களை அள்ளி வீசுவார்கள். அதைப் பிடிக்க ஒரு கூட்டம் கூடிவிடும். தேரோட்டம் பார்த்து திரும்பும் போது மாம்பழம், பொரி உருண்டை என எல்லாம் வாங்கி வருவோம்.

முன்பெல்லாம் ரோடு சரியில்லாமல் இருந்ததால் தேர் சில நேரங்களில் பதிந்து கொள்ளும். இழுத்துப் பார்த்து முடியவில்லை என்றால் அடுத்த நாள் மீண்டும் இழுப்பார்கள். ஆனால் தற்போது ஊரணியைச் சுற்றி நான்கு வீதிகளும் தார் ரோடாக இருப்பதால் கடகடவென நிலையை வந்து சேரும்.

எங்களுக்கு எல்லாம் சந்தோஷத்தைக் கொடுத்த தேர்த் திருவிழா, கடந்த சில வருடங்களாக வடப்பிரச்சினையால் தடைபட்டுக் கிடக்கிறது. ஒவ்வொரு வருட ஆனிமாதமும் இந்த வருடம் தேரோட்டம் நடக்குமா என்று ஏங்க வைத்துக் கடந்து செல்கிறது. இனி தேரோட்டம் காணும் நாள் வருமா என்பது கேள்விக்குறியே..

தொடர்ந்து படிக்க இங்கே சுட்டுங்கள்...

குறிப்பு : வலைச்சரப் பணிகளால் தங்களின் வலைப்பூ பகிர்வுகளுக்கு வர நேரமில்லை... விரைவில் வந்து படிக்கிறேன்... தொடர்ந்து வாருங்கள்... விரைவில் வருகிறேன்...

நன்றி,
-'பரிவை' சே.குமார்.

செவ்வாய், 3 செப்டம்பர், 2013

வலைச்சரத்தில் இன்று 'கெட்டவனுக்கு எட்டா?'



எட்டாம் நம்பர் என்றாலே பெரும்பாலானவர்கள் ராசியில்லாத நம்பர் என்று ஒதுக்கிவிடுவார்கள். வண்டிகளுக்கு நம்பர் வாங்கினால் கூட கூட்டுத்தொகை எட்டு வராமல் பார்த்து வாங்குவார்கள். சரி கெட்டவனுக்குத்தான் எட்டு என்பார்களே அது உண்மையா? கொஞ்சம் எட்டைப் பற்றிப் பார்ப்போமா?

கல்லூரியில் படிக்கும் போது எங்கள் பேராசிரியர் ஒருவரின் ஸ்கூட்டர் எண் ‘0440’ கூட்டுத்தொகை ‘8’. அந்த ஸ்கூட்டரில்தான் கல்லூரிக்கு வருவார். பெரும்பாலும் தமிழ்த்துறை ஆசிரியர்கள்தான் சோல்னாப் பை பயன்படுத்துவார்கள். ஆனால் இவரின் தோளிலும் ஒரு சோல்னாப் பை தொங்கத்தான் கல்லூரிக்கு வருவார்.

ஒருமுறை எங்க சந்தேகத்தை அவரிடம் கேட்கவும் சிரித்துவிட்டு நம்பரில் என்னய்யா இருக்கு... மனசுதான்யா எல்லாத்துக்கும் காரணம் என்றவர். எட்டுதான் சிறப்பான எண் என்றார். எப்படி என்று கேட்கவும் ஒன்றிலிருந்து ஒன்பது வரை எழுதுங்கள் என்றார். ஒரு நண்பனும் கரும்பலகையில் போய் எழுத ஆரம்பித்தான். அப்போது எல்லாரையும் நன்றாகப் பார்க்கச் சொன்னார். எழுதியதும் என்னய்யா பார்த்தீர்கள் என்றார். எங்களுக்கு எதுவும் விளங்கவில்லை... எனவே அவரே விளக்கினார். ஒன்று என்று எழுதினால் மேலிருந்து கீழே வந்துதான் முடிப்போம்... இப்படியே எல்லா நம்பரும் கீழேதான் முடியும். ஆனால் எட்டு மட்டும்தான் மேலே முடியும் என்றவர், என்னோட வண்டி எண் கூட்டுத்தொகை ‘8’ தான். அதற்காக நான் கேட்டுவிட்டேனா... இல்லையே... இதோ இந்தா இருக்கிறதே இந்த சோல்னாப் பையில் பத்து லட்சம் வரை வைத்துக் கொண்டு இந்த வண்டியில்தான் போயிருக்கிறேன் என்றார்.

எனக்கு எண்கள் மீது அப்படி எதுவும் நம்பிக்கையில்லைதான். இருந்தும் எட்டுக்கும் எனக்கும் ஒரு உறவு உண்டு. பத்தாவது அரசுத் தேர்வு எண்ணின் கூட்டுத்தொகை எட்டு, அப்படியே பனிரெண்டாவது, கல்லூரி வருகைப்பதிவு எண், கல்லூரித் தேர்வு எண், பிஜிடிசிஏ பண்ணிய போது வரிசை எண், எம்.சி.ஏ. வருகைப்பதிவு எண், தேர்வு நம்பர், வங்கிக் கணக்கு எண்கள் என எல்லாவற்றின் கூட்டுத் தொகையும் எட்டுத்தான். வீடு கட்ட நாள் பார்த்த தினம், பூஜைபோட்ட நாள், நிலை வைத்த தினம், குடிபோன நாள் எல்லாவற்றின் கூட்டுத் தொகையும் எட்டுத்தான். பாப்பா பிறந்தது-26, விஷால் பிறந்தது-17 – இங்கும் எட்டுதான்.

இவ்வளவு ஏன் இந்த முறை வலைச்சர ஆசிரியனாய் சீனா ஐயா எனக்களித்த நாள் 02/09/2013 – கூட்டுத்தொகை எட்டு வருதா? நான் முதலில் எழுதிய பதிவு 2798வது பதிவு என்று காட்டியது அப்படிப்ப பார்த்தாலும் எட்டுத்தான். எனக்கு எப்பவும் எட்டு சிறப்பானதாகத்தான் இருக்கிறது. குபேரனாக வைக்காவிட்டாலும் வாழ்க்கையை வாழ வைத்திருக்கிறது.

என்னைப் பொறுத்தவரை கெட்டவனுக்குத்தான் எட்டு என்பதெல்லாம் மூடநம்பிக்கையே... 

பகிர்வை தொடர்ந்து வாசிக்க இங்கே சுட்டவும்...
-'பரிவை' சே.குமார்

வலைச்சரத்தில் கும்மிப்பாட்டு


கிராமங்களில் நடவின் போதும்திருவிழாக்களின் போதும் குலவைப் பாடல்கள் பாடுவார்கள். பாடுபவரின் குரல் அவ்வளவு அழகாக இருக்கும். ரோட்டோரத்தில் நடவு நடும் போது ரோட்டில் துண்டை விரித்து அதன் மேல் நாற்று முடியை வைத்து கேலி முறைக்காரர்கள்ஊரின் பெரிய மனிதர்கள் போகும் போது குலவைப் பாடலைப் பாடி பணம் போட வைத்து விடுவார்கள். எங்கள் ஊர் மாரியம்மன் கோவில் செவ்வாயின் போது தினமும் சாமி கும்பிடும் போது குலவைப்பாடல் பாடுவார்கள். சித்தப்பா பெண் அவ்வளவு அழகாகப் பாடும். ஆத்தா குலவை போடுங்கன்னு சொன்ன உடனே

'தெற்குத் தெருவிலே
தேரோடும் வீதியிலே
தேங்காய் குலைபறிச்சு
வாறாளாம் மாரியாத்தா'  

அப்படின்னு கணீருன்னு பாடும்.  பாட்டை நிப்பாட்டும் போது மற்றவர்கள் 'உலுலுலு'ன்னு குலைவை போடுவார்கள். கேட்பதற்கு அவ்வளவு சந்தோஷமா இருக்கும். இந்த முறை என் மனைவியின் அம்மா ஊரில் திருவிழாவிற்குச் சென்றபோது ஒரு சின்னப்பெண்... பத்து வயது இருக்கும்... அவ்வளவு அருமையாக மைக் இல்லாமல் கணீர்க்குரலில் பாடியதைப் பார்த்தபோது ஆச்சர்யமாக இருந்தது. இன்னும் கிராமங்களில் குலவைப்பாடல் இளவயதினரிடமும் தொற்றிக் கொண்டிருப்பது சந்தோஷமான விஷயம்தானே... எங்க ஸ்ருதி மொளக்கொட்டில் எல்லாக் காலும் போட்டு கொட்டும்... எனக்கே ஆச்சர்யமாக இருக்கும்.. நான் மொளக்கொட்டப் போறது இல்லைங்கிறது வேற கதை... இதைப் போல குலவைப்பாடல் நிறைய இருக்குங்க... இன்னும் சில உங்கள் பார்வைக்காக...

‘மதுவாம் மதுக்குடமாம்
மதுக்கேத்த தெம்மாங்காம்
மதுவ இறக்கி வைக்க
மனங்குளிர்வா மாரியாத்தா...’

***

‘எல்லாரு வீட்டுலயும் எண்ண
ஊத்தி விளக்கெறியும்
மாரியாத்தா வாசலிலே
எளநித்தண்ணி நின்னெறியும்...’

இப்படி நிறையப் பாடல்களைச் சொல்லமாம்...  தொடர்ந்து வாசிக்க... இங்கே சுட்டுங்கள் 

குறிப்பு : கலையாத கனவுகள் தொடர்கதை வலைச்சரப் பணியின் காரணமாக இன்று மாலைக்குள் பதியப்படும்...

நன்றி...
-'பரிவை' சே.குமார்

திங்கள், 16 ஆகஸ்ட், 2010

வலைச்சர ஆசிரியனாய்...




வணக்கம் நண்பர்களே...

இன்று முதல் (16/08/2010) வரும் ஞாயிறு (22/08/2010) வரை வலைச்சரத்தில் ஆசிரியர் பணி ஆற்றும்படி திரு.சீனா ஐயாவிடம் இருந்து அழைப்பு. வலைப்பூவிற்குள் இறங்கி ஒரு வயது குழந்தையான எனக்கு இந்த அழைப்பு சொல்லவொன்னா சந்தோஷத்தைக் கொடுத்தது. அழைப்புக்கு தலைவணங்கி நாளை முதல் வலைச்சரத்தில் வலம் வர இருக்கிறேன். என் நட்புக்கள் அனைவரும் வலைச்சரத்தை வாசிக்க வாருங்கள்.

இந்த வாய்ப்பை வழங்கிய சீனா ஐயா என்னிடம் மின்னஞ்சலில் மட்டுமே தொடர்பு கொண்டிருந்தாலும் என் குடும்பத்தில் ஒருவராக ஆகிவிட்டார். ஆம் இன்று காரைக்குடி சென்ற ஐயாவும் அம்மாவும் எனது இல்லத்தை சிரமப்பட்டு தேடி கண்டுபிடித்து என் மனைவி, மகள், மகன் ஆகியோரை பார்த்து வந்துள்ளார்கள். என் இல்லத்தாருக்கும் மிகுந்த சந்தோஷம். மதுரை வந்ததும் ஐயா எனக்கு உடனே மின்னஞ்சல் அனுப்பி சந்தோஷப்பட்டார். அதற்கும் ஐயாவுக்கு நன்றிகள்.

இது மனசில் எனக்கு 50வது பதிவு. எனது 50வது பதிவை வலைச்சர ஆசிரியனாய் இருக்கப் போகிறேன் என்ற பகிர்வாக இடுவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.

இதுவரை கிறுக்கல்களில் 110 நெடுங்கவிதைகளில் 65 சிறுகதைகளில் 20 மற்றும் மனசில் 50 என மொத்தமாக பார்த்தால் எனக்கு இது 255வது பதிவு. இதற்கெல்லாம் காரணம் உங்கள் அன்பும் நட்பும்தான் என்று கூறிக் கொள்வதில் பெருமைப்படுகிறேன்.

நன்றி நண்பர்களே... உங்கள் அன்பும் ஆதரவும் என்றும் தொடரட்டும்.

வலை நட்பை வாழ் நாளெல்லாம் கொண்டு செல்வோம்.

வலைச்சரத்துக்கு செல்ல இங்கே கிளிக்கவும்.