காய்ந்த கண்மாய்க்குள்
காலாற நடந்த போது
தண்ணீர் தூக்கும் உன்
உருவம் கானல் நீராய்..!
பாலத்தில் படுத்து
பால் நிலா பார்த்தபோது
நிலவில் ஊடே உன்
உருவம் கலைந்த மேகமாய்...!
கோயில் சுவற்றில் வரைந்த
ஓவியங்களை வியந்து
பார்த்த கண்ணுக்குள் உன்
உருவம் வரையாத ஓவியமாய்...!
இன்னும் என்னுள்
இறக்காத உன் நினைவுகள்...
அடிக்கடி அழ வைக்கின்றன...
அழுகை ஆண்மைக்கு
அழகல்ல என்பாயே...
அழுக வைத்துச் செல்வது
பெண்மைக்கு அழகா..?
உன்னை கேட்க நினைத்து
உயிருக்குள் புதைத்தேன்...
நினைவுகளை விதையாக்கி
நித்தம் விதைக்கிறேன்...
இழந்த காதலை
இதயத்தில் சுமந்து
உலர்ந்த புன்னகையுடன்
உலகுக்காக வாழ்கிறேன்...
-'பரிவை' சே.குமார்.