மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வியாழன், 24 பிப்ரவரி, 2011

கோட்டாமி

அவரு பேரு கோட்டசாமியோ இல்ல கோபால்சாமியோ தெரியலை. எல்லாருக்கும் அவரை கோட்டாமியாத்தான் தெரியும். அவருக்கு எப்படியும் ஐம்பது வயசுக்கு மேலதான் இருக்கும். இந்த ஊருக்கு அவரு வந்து நாலஞ்சு வருசமாச்சு. வரும்போது ஒரு மஞ்சப்பை மூட்டையோடும் அழுக்கு சட்டையுடனும்தான் வந்தார். பிச்சைக்காரராய் இருக்குமோ என்று நினைத்து யாரும் அவரை கண்டு கொள்ளவில்லை... ஆனால் அவர் பிச்சை எதுவும் எடுக்கவில்லை... கோவில் அருகில் பயனில்லாமல் கிடந்த ஒரு வீட்டு திண்ணையில் படுத்துக் கொண்டு கோயில் பிரசாதங்களை வாங்கி சாப்பிட்டு வந்தார்.

இப்பதான் ராமேஸ்வரம் போறப்போ மனநலமில்லாதவங்களை தேவகோட்டையில் இறக்கிவிட்டு போயிடறாங்களே... அவங்கள்ல ஒருத்தரா இருக்குமோன்னு நினைச்சு யாரும் அவர்கிட்ட போகலை. அப்படி விடப்படுறவங்க பிச்சை எடுத்துக்கிட்டும்.. தெருவுல கிடந்துக்கிட்டும் அவதிப்படுறாங்க... சிலர் வாகனங்கள்ல அடிபட்டு சாகுறாங்க... அவரைப் பத்தி யோசிக்க யாருக்கும் நேரமில்லை... பத்தோட பதினொன்னுன்னு நினச்சுக்கிட்டாங்க.

கொஞ்ச நாளாக சினேகமா பாக்க ஆரம்பிச்சாரு... கோயில் வாசல்ல இருக்க செடிகளைப் பிடிங்கி சுத்தமாக்கி வைக்க ஆரம்பிச்சாரு. அப்புறம் கோயிலுக்குள்ள சின்ன சின்ன வேலை பாக்க ஆரம்பிச்சாரு. எல்லாருக்கும் அவருகிட்ட இருந்த பயம் மெல்ல விலக ஆரம்பிச்சுருச்சு. அவருக்கு யாராவது காசு கொடுத்தா வாங்க மாட்டேன்னு தலையாட்டி மறுத்துட்டு போயிடுவாரு. ஆனா வேட்டி, சட்டை கொடுத்தா மறுக்க மாட்டாரு. அடுத்த நாள் அந்த உடுப்ப போட்டுக்கிட்டு வலம் வருவாரு. யார்கிட்டயும் வாய் திறந்து பேசமாட்டாரு. எல்லாத்துக்கும் புன்னகையை பதிலா அளிச்சிட்டுப் போயிடுவாரு.

குருக்கள்கிட்ட ரொம்ப நெருக்கமா இருப்பாரு. அவருக்கு வீட்டு வேலையெல்லாம் பாத்துக் கொடுத்துட்டு மாமி போடுற சாப்பாட்டை சாப்பிட்டு அவரு வாசம் செய்யிற திண்ணையில வந்து படுத்துப்பாரு. அவருகிட்ட குருக்கள் உங்க பேரு என்னன்னு கேட்டப்போ கோட்டாமின்னு சொன்னாராம். அவரு விளங்காம திரும்பத் திரும்ப கேட்டப்போ கோட்டாமிதான்னு சொன்னாராம். அதை குருக்கள் சொன்னதுக்கு அப்புறம் இப்ப எல்லாருக்கும் கோட்டாமியாயிட்டாரு.

கோட்டாமிக்கு எந்த ஊரு... சொந்த பந்தமெல்லாம் இருக்கா... இல்லையா... என்று விசாரித்தால் சிரிப்பை உதிர்த்துவிட்டு அங்கிருந்து நகர்ந்து விடுவார். யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. யாருக்கும் தொந்தரவில்லை என்றாலும் இத்தனை வருடமா இங்க இருக்கிற அவரை தேடி இதுவரை யாரும் வரவில்லை என்பதும் அவரும் யாரையும் தேடி போகவில்லை என்பது எல்லாருக்கும் உறுத்தலாகவே இருந்தது.

போனவார நிகழ்வுக்குப் பிறகு அவர் முகத்தில் புன்னகை பூக்கவில்லை... மாறாக வெள்ளைத்தாடி வளர்ந்திருந்தது. நீண்ட நேரம் திண்ணையில் அமர்ந்து இருந்தார். சாப்பிட யாராவது கொடுத்தால் மட்டும் சாப்பிட்டார். யாரிடமும் கேட்கவுமில்லை... கோவில் பிரசாதத்தையும் தேடி போகவுமில்லை. குருக்கள் மரணம்தான் அந்த நிகழ்வு. அந்த நிகழ்வில் இருந்து அவரது குடும்பம் மீண்டு வந்தபோதும் கோட்டாமி மட்டும் மீளவில்லை என்பது அவரது முகத்தில் தெரிந்தது.

மாணிக்கம் பிள்ளை டீக்கடை பெஞ்சில் அமர்ந்திருந்த கோட்டாமிக்கு அருகில் வந்து அமர்ந்த பூவநாதன், என்ன கோட்டாமி தாடியெல்லாம் வச்சிக்கிட்டு.... ஒரு வாரமா ஆளு டல்லா இருக்கேன்னு கேக்க, ஒரு வெற்றுப் புன்னகையை பதிலாக்கினார். ஏம்பு அவருகிட்ட பேசி என்னாகப் போகுது? யாரு என்ன கேட்டாலும் சிரிப்பாரு... இங்க வந்ததுல இருந்து வாய் தொறந்து எதாவது பேசியிருப்பாரா? ஆனா என்ன சொன்னாலும் செய்வாரு... காசா கொடுத்தா வாங்க மாட்டாரு... சாப்பாடாப் போடணும்... இல்ல துணி மணியாக் கொடுக்கணும் என்ற மாணிக்கம் பிள்ளை, சரசு வீட்டு பிரச்சினை என்னாச்சி என்று கேட்டதும் சரசுவின் பிரச்சினையை பூவநாதன் விளக்க, அங்கிருந்து கோட்டாமி கிளம்பினார்.

நானும் வந்ததில இருந்து பாக்குறேன்... சும்மாதான் படுத்திருப்பாரு... ஆனா இப்ப ஏதோ எழுதுறாரு... தினமும் இல்லாட்டியும் ஒரு சில நாள் ராத்திரி தெருவிளக்கு வெளிச்சத்துல உக்காந்து எழுதி குருக்கள் கொடுத்த டிரங்குப் பெட்டிக்குள்ள வச்சு பூட்டி வச்சிடுவாரு... அந்த பெட்டிக்குள்ள அப்படி என்ன பொக்கிஷம் இருக்குன்னு தெரியலை. காசு பணம் வாங்க மாட்டேங்கிறாரு... கொடுக்கிற துணிகளையும் அப்பவே உடுத்திடுறாரு... பேப்பரத்தான் சேத்து வச்சிருக்கப் போறாருன்னு ஒரு நாள் ராமசாமி அண்ணன் அப்பாகிட்ட சொல்லிக்கிட்டு இருந்தாரு.

அப்ப அப்பா, அட அவரு கொஞ்சம் மனநிலை சரியில்லாத ஆளுப்பா... நமக்கெல்லாம் வேலை பாத்துக் கொடுக்கிறாரு... நல்ல மனுசனுக்கு இப்படி ஒரு வாழ்க்கை என்னத்தையோ வச்சிட்டுப் போகட்டும்... அதை எதுக்கு நீ ஆராயிறே... யாருமே இல்லாத அந்த மனுசன் நமக்கு முன்னால போனா நல்லபடியா அடக்கம் பண்ணுவோம். இல்ல நாம முந்திக்கிட்டா இருக்கவங்க அவரை நல்லா பாத்து அனுப்பட்டும். இதுதான் நாம அவருக்கு செய்யிற நன்றிக்கடன்னு சொன்னார். சின்ன வயசுல சாவுக்கு பயப்படுற மனசு ஒரு நிலையை எட்டியபோது அதை சாதாரணமாக எடுத்துக் கொள்கிறது என்பது அப்பாவின் பேச்சில் தெரிந்தது.

சரசக்கா வீட்டைப் பத்தி எல்லாரும் தப்புத்தப்பா பேசினாங்க. அவங்க வீட்டுக்காரர் வெளிநாட்டுல இருக்கதால இவங்க இங்க யாருகூடவோ தொடுப்புன்னு கூட சொன்னாங்க. எல்லாரும் அவங்ககிட்ட பேச்ச நிப்பாட்டிட்டாலும் கோட்டாமி மட்டும் தினமும் அவங்க வீட்டுக்கு போயி சின்ன சின்ன வேலை பாத்துக் கொடுத்துட்டு வருவாரு. ஒரு நா அப்படி வரும்போது மாணிக்கம்பிள்ளை என்ன கோட்டாமி அந்த வீட்டம்மாவோட தொடுப்பு யாருன்னு கேட்டப்போ வழக்கத்துக்கு மாறாக அவர் முகத்தில் கோபம் தெரிந்தது. அது எங்க எல்லாருக்குமே புதுசு. ஆனா ஒண்ணும் பேசாம திண்ணைக்கு போயி உக்காந்துட்டாரு.

அம்மாகூட எதுக்கு அவ வீட்டுக்குப் போறே... எல்லாரும் தப்பா பேசுறாங்க, நாளைக்கு உன்னைய இணைச்சுப் பேசினாலும் பேசுவாங்க... இனி போகாதேன்னு சொன்னப்போ சிரிச்சுக்கிட்டே சாப்பாட்டை பாதியில வச்சிட்டு எந்திரிச்சுப் பொயிட்டாரு... அதுக்கப்புறம் எங்க வீட்டுப் பக்கம் அதிகமா வாறதில்லை. எனக்கு அவருக்கும் சரசக்காவுக்கும் தொடர்பா இருக்குமோ அதான் கோவம் வருதுன்னு கூட தோணுச்சு.

ஒரு நாள் கார்ல ஒரு ரெண்டு மூணு பேர் வந்து இறங்கினாங்க... அவங்களைப் பாத்ததும் அவரு முகமெல்லாம் இருண்டு வேர்க்க ஆரம்பிச்சிருச்சு... ஓடப்பாத்தவரை வந்தவங்க வெரட்டிப் புடிச்சு... பொடலியில ரெண்டு அடிவிட்டாங்க. ஆத்தா... ஆத்தான்னு கத்துனாரு... நாங்கல்லாம் தடுத்துப் பாத்தோம் ஆனா முடியலை... அவரோட பசங்கன்னு சொல்லி அவரை இழுத்துக் காருல ஏத்துனாங்க...

இவ்வளவு வருசம் வராத பசங்க இப்ப எப்படி வந்தாங்கன்னு எங்களுக்கு தெரியலை... அவரு ஆத்தா... ஆத்தான்னு கத்தக் கத்த அவரை கார்ல ஏத்தப்போனங்க... திமிறிக்கிட்டு பொட்டி... பொட்டின்னு டிரங்குப் பெட்டிக்கு ஓட, ஆமா சொத்து வச்சிருக்காரு பர்ருன்னு ஒருத்தன் தூக்கி ரோட்டுல ஒடைக்க அதுல இருந்து சில போட்டோக்கள், சில சில்லறைக் காசுகள், ஒரு சேலை, சில வேட்டிகள் என சிதறி ஓடுச்சு... ஒரு டைரியும் சாக்கடைக்குப் பக்கத்துல போயி விழுந்துச்சு. அவங்க அவரை குண்டுக்கட்டா தூக்கி கார்ல ஏத்திக்கிட்டு பொயிட்டாங்க.

அவங்க போனதும் எல்லாரும் அவரைப் பத்தியே பேசிக்கிட்டு இருந்தாங்க... அப்புறம் அவங்க அவங்க வேலையப் பாக்க பொயிட்டாங்க... எல்லாருக்கும் சோகமுன்னாலும் சரசக்கா மட்டும் அழுத மாதிரி தெரிந்தது. அது ஏன் அழணும்... ஊர் சொல்ற மாதிரி அந்த தொடுப்புக்காரன் கோட்டாமியா இருக்குமோ என நினைக்கத் தோன்றியது. எல்லாரும் போனதும் ராமசாமி அண்ணன் சொன்னது ஞாபகத்துக்கு வர, சாக்கடைக்குப் பக்கத்தில் கிடந்த டைரியை எடுத்து பிரித்தேன். அதில் அழகான கையெழுத்தில் எழுதியிருந்தார்.

அதை வாசித்த போது...

'...குருக்கள் ஐயா மரணம் என்னை நிறைய யோசிக்க வைத்து விட்டது. அநாதையாய் வந்த எனக்கு ஆலமரமாய் அடைக்கலம் தந்தவர்... எதுவுமே பேசாத என்னிடம் பேரை மட்டுமே கேட்ட அவர் வேறெதையும் கேட்கவில்லை... ஆனால் ஒருநாள் எல்லாத்தையும் அவரிடம் சொல்லியழ ஆசைப்பட்டேன். ஆனால் அந்த ஒருநாள் வருமுன்னே என்னை அழவைத்துச் சென்றுவிட்டார். என்ன செய்ய... அவருக்கு காரியம் பண்ண உறவு இருந்தது... எனக்கு உறவாய் அவர் மட்டுமே இருந்தார்...'

மேலும் படித்துக் கொண்டே வர, சரசக்கா பத்தியும் எழுதியிருந்தார். '...எல்லாரும் சரசை கொச்சைப் படுத்துகிறார்கள். பாவம் அவள்... அவளும் மனுசிதான்...அவளுக்குள்ளும் ஆசாபாசாங்கள் இருக்கத்தான் செய்யும் என்பது வெள்ளுடை உடுத்திய மனித மிருகங்களுக்குத் தெரியவில்லை. வெளி நாட்டில் அவள் கணவன் இன்னொருத்தியுடன் வாழ்வதை மறைக்கப் பாடுபடும் அந்த அபலை, சில புல்லுறுவிகளின் ஆசைக்கு இணங்காதலால் இப்படி ஒரு அவப்பெயர்... இது போன்ற நிலை இன்னும் எத்தனை பெண்களுக்கு... அவள் வீட்டுக்கு நான் போவதால் என்னையும் அவளையும் இணைத்து பார்க்கிறது சில இருண்ட மனசுகள்... அவர்களுக்குப் எப்படி தெரியும் நான் இழந்த என் மகள் மீண்டும் கிடைத்தது போல் உணர்கிறேன் இந்த அபலையின் அன்பில் என்பது...'

இப்படி நிறைய.... சில படிக்க முடியாமல் மனசை அழுத்தின... என்னையும் அறியாமல் கண்கள் நனைந்த போது கோட்டாமி கோவில்சாமியாகத் தெரிந்தார்.

*******************

தகவல்: நண்பர் சிநேகிதன் அக்பரின் தொடர் அழைப்பு ஒன்று எழுதப்படாமல் இருக்கிறது. இந்த வார விடுமுறையில் முடிக்க எண்ணம்... அதேபோல் நண்பர் ஒருவரின் வாழ்க்கை குறித்தான பார்வைக்கான கட்டுரையும் முற்றுப் பெறாமல் இருக்கு... இரண்டும் விரைவில் பகிர எண்ணம்... பார்க்கலாம். அதற்கு முன் மறக்காமல் இருக்க... இந்தச் சிறுகதைப் பகிர்வு.

-'பரிவை' சே.குமார்.

ஞாயிறு, 20 பிப்ரவரி, 2011

ஏர் உழவன்


மொத உழவன்னைக்கு மறக்காம
அப்பா படத்துக்கு விளக்கேத்தும் ஆத்தா...

வெள்ளைக்காளை மயிலக்காளை ஜோடி
மச்சக்காளை அண்ணன் கையில்...

செவலைக்காளை பில்லைக்காளை ஜோடி
முத்துக்காளை அண்ணன் கையில்...

வயல் நோக்கிப் போகும் நுகத்தடி
பூட்டிய மாட்டுப் பின்னே ஏரோடு அவர்கள்...

அவர்கள் பின்னே அம்மாவும்...
மண்வெட்டியை தோளில்போட்டபடி நானும்...

வயலெங்கும் உழுது கொண்டிருக்கும்
அழகை ரசித்துக் கொண்டிருந்த என்னை...

என்னங்க உங்க மகனுக்கு என்னவோ
வரையணுமாம் என்ற குரல் எழுப்ப...

அப்பா ஏர் உழவன் படம் போடணுமாம்...
அவன் எப்படிப்பா இருப்பான்..?'

படம் கேட்டு நின்ற மகனின் கேள்வியில்
கலைந்த கனவு கண்ணீராய் இறங்கியது...

-'பரிவை' சே.குமார்.

புதன், 16 பிப்ரவரி, 2011

இதயச்சாரல்


ரமேசுக்கு டவுன்ல இருந்து இருட்டுல வர்றப்போ மனசுக்குள்ள ஒரு பயம் வந்து திக்...திக்குன்னு தொத்திக்கும். காலேசுப் படிக்கிற பயலா இருந்தாலும் இந்த பயம் மட்டும் அவனுக்குள்ள நல்லா சம்மணம் போட்டு உக்காந்துக்கிச்சு. இங்கிலீஸ் எழுதி எழுதி அரியராத்தான் போகுது... ஒரு முப்பத்தஞ்சு மார்க் போட மாட்டேங்கிறாங்க. இது கடைசி வருசம் வேற... அரியர் வச்சா அம்புட்டுத்தான் வேதாசலத்துக்கு பயங்கரமா கோவம் வந்துருங்கிறதுக்காகவே சின்னசாமி சாருக்கிட்ட டியூசன் படிக்கிறான். இந்த பயத்தை அவருகிட்ட சொல்ல முடியாம காலையில வர்றேன்னு சொன்னதுக்கு, காலையில பொம்பளப்புள்ளங்களுக்கு மட்டுந்தான் எடுப்பேன்னுட்டாரு. என்ன செய்ய... இரவுல வேர்க்க விறுவிறுக்க பயத்தோட எப்படியோ வீடு வந்து சேர்ந்துடுவான்.

இந்தப் பயம் சின்ன வயசுல இருந்து இருந்தாலும் பத்தாப்பு படிக்கும் போது சாயந்தரம் டியூசனுக்குப் பொயிட்டு ஆறு...ஆறரை மணிக்கு வர ஆரம்பிச்சு... அப்புறம் ஏழு...ஏழரைன்னு ஆனப்போ இருட்டுல வாரதுனாலே கருக்குன்னு இருக்க ஆரம்பிச்சிருச்சு... அது இன்னும் தொடருது... அவனும் இருட்டுல வர்றதை நிப்பாட்ட முடியலை... பயமும் அவனை விட்டுப் போகலை... அதுவும் சைக்கிள்ல வரும்போது கமல் பாட்டோ... ரஜினி பாட்டோ... பாடிக்கிட்டே வருவான். கரெக்டா சுடுகாட்டுக்கு நேரா வரும் போது அவனையறியாம 'காக்க காக்க கனகவேல் காக்க... நோக்க நோக்க நொடியில் நோக்க...' அப்படின்னு கந்த சஷ்டி கவசம் சத்தமா வந்துரும். அதுக்கு அப்புறம் ரோட்டை விட்டு அந்தப்பக்கம் இந்தப்பக்கம் பாக்க மாட்டான்.

டவுனுல பெட்டிக்கடை வச்சிருக்கிற வேதாச்சலம்... அவனோட அப்பாவை அவன் எப்பவும் மரியாதையா வேதாசலமுன்னுதான் சொல்லுவான். எல்லாம் காலேசு படிக்கிற ரவுசு... ஒருத்தனுக்கு ஒருத்தன் என்னடா அருள்சாமி என்ன சொல்றான்... வேதாசலம் ரொம்ப லொள்ளு பண்றான்னுதான் பேசுவாங்க. எப்பவும் ராத்திரி பத்து பதினோரு மணிக்குத்தான் வருவாரு. அதுவும் லொடலொடன்னு சத்தம் போட்டுக்கிட்டு முப்பதுக்கு மேல போனா மூச்சு வாங்குற டிவிஎஸ்ல... காலையில எப்படி பாக்கிறானே அப்படியேதான் வருவாரு... முகத்துல கொஞ்சங்கூட பயக்கலையே இருக்காது. எப்பவும் இப்படித்தான்... எங்கயும் எந்த நேரத்துலயும் போவாரு. அவருக்கு பிள்ளையா பொறந்து நாம இப்படியிருக்கோமேன்னு நெனச்சுக்குவான்.

பள்ளிக்கூடத்துல படிக்கிறப்போ யாராவது வீட்டுத் திண்ணையில உக்காந்து பேய்க்கதை பேசினா போதும். அப்படியே எந்திருச்சு வீட்டுக்குள்ள போய் படுத்துப்பான். அன்னைக்கு ராத்திரி மூத்தரம் வந்தாலும் எந்திரிக்க மாட்டான். மத்த நாள்ல இருட்டுக்குள்ள கண்ணை மூடிக்கிட்டே வந்து வாசலை விட்டு இறங்கியும் இறங்காமயும் இருந்துட்டுப் போயிடுவான். இப்ப பரவாயில்லை... ராத்திரி எந்திரிக்கிறதில்லை... அப்படியே எந்திரிச்சாலும் வேப்ப மரத்துப் பக்கம் 'காக்க காக்க கனகவேல்...' துணையோட பொயிட்டு வருவான்.

இப்படித்தான் ஒருதடவை அவனோட அக்கா வேணி, மாடு தேடிப் போறேன்னு பொயிட்டு வந்துட்டு ராத்திரியில கத்தி ஊரைக் கூட்டிருச்சி... அடுத்த நாள் பாத்தா நல்லா வேலை பாத்துக்கிட்டு இருக்கும்போதே எங்கயோ பாத்துக்கிட்டு நிக்கும்... நாக்கை கடிக்கும்... மேல பாக்கும்... சிரிக்கும்... கீழ பாக்கும் 'டேய்' அப்படின்னு கத்தும்... அப்புறம் அப்படியே நிக்கும்.

அம்மா இது பேய்க் கோளாறுதான்னு எம் புள்ளைய காப்பத்துடி கொல்லங்குடி காளின்னு ஒண்ணேகால் ரூபா முடிஞ்சு போட்டாங்க... அப்புறம் சாமி ஆடி சித்தப்பாகிட்ட கூட்டிப் போனாங்க... அவரு வேணியப் பாத்தோடனே ஆட ஆரம்பிச்சிட்டாரு... யாருகிட்ட... போறியா... இல்லையான்னு... ஆக்ரோஷமா ஆட... வேணியும் ஆட ஆரம்பிச்சிட்டா.... வாடா பாப்போம்ன்னு குதிக்கிறா... அப்புறம் சித்தப்பா அக்கா தலையில நச்சினு அடிக்க... மயங்கி விழுந்துட்டா... அப்புறம் நார்மலா இருந்தா... இருந்தாலும் ரொம்ப நாளைக்கு ரமேசுக்கு அக்காகிட்ட பேசவே பயம்.

இதே மாதிரி ராமசாமிய ஒரு தடவ பேய் பிடிச்சிக்கிச்சு... அவனை விட்டு போக மாட்டேன்னு அலும்பு பண்ணுச்சி... அது யாரோ நாண்டுக்கிட்டு செத்ததாம். இருந்தாப்புல இருப்பான்... திடீர்னு கழுத்தைப் புடிச்சு இழுக்குற மாதிரி செஞ்சுக்கிட்டு ஒரு மாதிரி மூச்சை விடுவான். அவங்களும் எங்க எங்கயோவெல்லாம் பாத்தாங்க... ஒண்ணும் சரியாகுற மாதிரி தெரியலை... அப்புறம் கேரளாவுல இருந்து வந்திருந்த ஒரு மந்திரவாதிய வச்சி எதோ பூசையெல்லாம் செஞ்சி ராத்திரி பன்னெண்டு மணிக்கு சுடுகாட்டுக்குப் போயி பூசை வச்சாங்க... கண்ணன், முத்துல்லாம் போனாங்க... ஆனா ரமேசு அந்தப் பக்கமே போகல.

மறுநா முத்துப்பய வந்து சுடுகாட்டுல ராமசாமிய பொணம் எரிச்ச எடத்துல படுக்க வச்சு பூஜை பண்றப்போ எங்களை எல்லாம் ஒரு வட்டம் போட்டு அதுக்குள்ள நிக்க வச்சாங்கன்னு சொன்னப்போ ரமேசுக்கு இருதயம் இடமாறிடுச்சு. அப்புறம் ராமசாமிக்கு சரியாயிடுச்சு. எல்லாரும் அவங்கூட பேசினாலும் ரமேசுக்கு மட்டும் ஏனோ மனசுக்குள்ள பயம்.

இரும்பு இருந்தா பேய் பக்கத்துல வராதுன்னு பாட்டி கதை சொல்றப்போ சொல்லியிருக்கு. அதான் சைக்கிள்ல வர்றப்போ கொஞ்சம் தைரியம். பேய்க்கு என்ன தெரியும் இரும்பு... கரும்புன்னு மனசுக்குள்ள பயத்தோட நெனச்சு சிரிச்சுக்குவான். எத்தனை பேரு வண்டியியல போறாப்போ பேய் பிடிச்சிருக்கு. அப்ப எங்க போச்சு பாட்டியோட இரும்புச்சாமி... பயம் மனசுக்குள்ள இருந்தாலும் இதுபோல குதர்க்கமா யோசிக்கிறதுல ரமேசு கில்லாடி.

ஒரு தடவை அப்படித்தான் ரமேசு ஒரு ஏழு மணிக்கு சைக்கிள்ல வந்துக்கிட்டிருந்தான்... அப்ப அவனுக்கு முன்னாடி வெள்ளையா ஒரு உருவம் நல்ல உயரமா வேகவேகமா நடந்து போய்க்கிட்டு இருந்துச்சு... அம்புட்டுத்தான் பயலுக்கு நாக்கு வறண்டு... உடம்பெல்லாம் வேர்க்க... இருதயம் படபடன்னு அடிச்சிக்கிச்சி... காக்க காக்க சொல்லிக்கிட்டு... கண்ண மூடிக்கிட்டு... சைக்கிளை மிதிக்க... ரோட்ட விட்டு இறங்கி மடேர்ன்னு விழுந்தான். முன்னால போனவரு 'அடியாத்தி... யாரு இந்த இருட்டுல விழுந்ததுன்னு ஓடியாந்து தூக்குறப்போதான் பார்த்தான். அது பாண்டி மாமா... அன்னைக்கு கால்ல பட்ட சிராப்பு இன்னும் தழும்பாவே இருக்கு.

ஆம்பளைப்புள்ள படப்படக்கூடாதுப்பான்னு அம்மா எவ்வளவோ சொல்லியும் அவனுக்குள்ள இருக்க பயம் பட்டும் போகவேயில்லை. அவங்க சித்தி பொண்ணு சித்ரா பத்தாப்பு படிக்கிறா... ராத்திரி டியூசன் படிச்சிட்டு எட்டு மணிக்குத்தான் வருவா... எந்தப் பயமும் இல்லாம... ரமேசுக்கே ஆச்சரியமா இருக்கும். அதுக்காக அவகிட்ட போயா கேக்கமுடியும்.

இவன் பயப்படுறது சின்னப்புள்ளயில அவன ஒத்த பசங்களுக்கு தெரியும். அதனால அவனுக்கு பயந்தாங்கோழின்னு பட்டமே இருந்துச்சு... அதுக்காக மத்தவங்களுக்கு இல்லாம இல்ல...கண்ணனுக்கு கருப்பட்டி, ராமசாமிக்கு லெப்ட்... முத்துக்கு தொத்தன்னு... இப்ப அதெல்லாம் மறைஞ்சு போச்சு... இவன் இன்னும் பயப்படுறான்னு அம்மாவுக்கு மட்டும்தான் இப்ப தெரியும். பிரண்ட்டெல்லாம் ராத்திரியில வர்றதால பயத்தையெல்லாம் மறந்துட்டான்னு நெனச்சுக்கிட்டாங்க...

போன வாரம் வைதேகி மருந்தைக் குடிச்சிட்டா... அவளோட அப்பா எதுக்கோ திட்டினாருன்னு சொல்லிட்டு வீட்ல இருந்த பால்டாலை எடுத்து குடிச்சிட்டு செத்துப் பொயிட்டா... ஊருக்குள்ள எவனாவது போயி போலீஸ்ல சொல்லிப்புட்டா கேசு அது இதுன்னு அலையணுமின்னு எல்லாருமா சேந்து அவசர அவசரமா அவளை எரிச்சிட்டு வந்திட்டாங்க. அவ இப்படி கோழைத்தனமா செத்ததுல மகேசுக்கு ரொம்ப வருத்தம்.

யாராவது வயசானவங்க செத்தா ரோட்டுல கொள்ளிக்கட்டையும் வெத்தலை, பாக்கு, போயிலையோட ஒரு சின்ன மண் சட்டியில தண்ணியும் வைப்பாங்க. அப்படி வச்சா அதை மட்டும் பாக்கவே மாட்டான். ஆனா இந்த முத்துப்பய எட்டி காலால உதைப்பான்... கேட்டா... ஆமா கெழடு எந்திரிக்க முடியாம கெடந்து செத்துச்சு... அதுதான் வந்து பிடிக்கிதாக்கும்... போடா இவனேன்னு சொல்லுவான். ஆனா வைதேகி சின்ன வயசுல செத்ததால இது மாதிரி எந்த சடங்கும் இல்லை. சின்னப்புள்ள... மனசுக்குள்ள என்னென்ன நெனச்சிருந்துச்சோ... பேயா அலையப் போகுதுன்னு அம்மா யாருகிட்டயோ சொன்னதை கேட்டப்போ ரமேசுக்கு வயித்துல புளியக் கரைக்க ஆரம்பிச்சிருச்சு.

அதுனால ஒரு வாரமா டியூசன் போகலை... இன்னைக்கு சின்னசாமி சாரு பாத்து இப்புடி படிச்சியன்னா பாஸாக முடியாது... இன்னைக்கு டியூசனுக்கு வரலைன்னா... இனி என்னைக்குமே வராதேன்னு கோவமா சொல்லிட்டாரு.. அதனால பயத்தோட அவருக்குப் பயந்து டியூசன் பொயிட்டு வந்தான்... நெஞ்சு திக்குத்திக்கின்னு அடிக்க... மனசுக்குள்ள வைதேகி நெனப்பு மட்டுந்தான் வருது... வேற எதுவுமே வரலை...

காக்காத்தோப்புக்கிட்ட வரும்போது என்னைக்கும் கழடாத சைக்கிள் செயின் கழண்டுக்கிச்சு... அவனுக்கு நாக்கெல்லாம் வறண்டு வேர்த்து ஊத்த ஆரம்பிச்சிருச்சு... உக்காந்து செயினை மாட்டப் பயம் தள்ளிக்கிட்டே ஓடியாந்திட்டான். காக்காத்தோப்புங்கிறது ரொம்பத்தூரம் இல்ல... ஊருக்குள்ள இருக்க மொதவீட்ல இருந்து ஒரு அரைக்கிலோ மீட்டர் இருக்கும். அம்புட்டுத்தான்.

வேர்த்துப் போயி வந்த மகனைப் பார்த்து என்னப்பா... ஆத்தி.. இப்புடி வேர்த்து வந்திருக்கே... எதையும் பாத்து பயந்துட்டியான்னு அம்மாக்காரி பதற, இல்லம்மா... சைக்கிள் செயின் கழண்டு போச்சு அதான் தள்ளிக்கிட்டு வந்தேன்... என்று சொல்லி அவளை சமாதானப்படுத்தினான். இரவு படுத்தவன் ஏதேதோ பொலம்ப ஆரம்பிச்சிட்டான்.

காலையில வீட்டுக்கு வந்த சாமியாடி சித்தப்பாக்கிட்ட அம்மா, என்னன்னு தெரியலை.... ராத்திரி வேர்த்துப் போயி வந்தான்... ராவெல்லாம் தூங்கலை... முணங்கிக்கிட்டே கிடந்தான்... அவகிவ பிடிச்சிருப்பாளோன்னு பயமா இருக்கு... கொஞ்சம் என்னான்னு பாருங்கன்னு சொன்னவுடனே... சித்தப்பா இடுப்புல இருந்த விபூதிப் பையில இருந்து துணூறை எடுத்து கண்ணை மூடி வாய்க்குள் மொனங்கி எங்கே வந்தே... போ... என்று தலையில் அடித்து நெற்றில் பூசிவிட்டுட்டு அம்மாகிட்ட அத்தாச்சி நீ நினைச்சது சரிதான்... வைதேகிதான் பிடிச்சிருக்கா.... விரட்டிட்டேன். கோளாறு தெரிஞ்சா வீட்டுக்கு கூட்டிக்கிட்டு வான்னு சொல்லிட்டுப் போனாரு.

ரமேசுக்கு அந்த நேரத்திலும் பயத்தைவிட சிரிப்புதான் வந்தது... உசுரோட இருக்கப்போ எத்தனை தடவ லவ் பண்றதா சொல்லியிருப்பேன்... அப்பல்லாம் பிடிக்கலே... பிடிக்கலேன்னு சொன்னா... இப்ப வந்து பிடிச்சிருக்கா... சரி... இப்பவாவது என்னய பிடிச்சிச்சே... என்னைய விட்டு வெரட்டுனா வேற யாருகிட்டயாவது போவா... அட அவ பாட்டுக்கு இருக்கட்டும்... நமக்கும் ஒரு தொனையான்னு நெனச்சு சிரிச்சிக்கிட்டான்... ஆனா அவனையறியாமல் மனசுக்குள்ள ஏனோ பால்டால் ஞாபகம் வட்டமிட ஆரம்பிச்சிருச்சு.

-'பரிவை' சே.குமார்.

Photo - Thanks : Google

வியாழன், 10 பிப்ரவரி, 2011

விதி வலை

ராசப்பன்னு சொன்னா யாருக்கும் தெரியாது. ஆனா குறி சொல்லுவாரே அவரு வீடு எதுன்னு யாரைக் கேட்டாலும் கரெக்டா சொல்லுவாங்க. ஒரு காலத்துல மூத்தான் வீடுன்னு இருந்த ராசப்பன் வீடு இப்ப குறி பாக்கிறவரு வீடுன்னு மாறிடுச்சு. சின்னஞ் சிறுசுககிட்ட மூத்தான் வீடுன்னு கேட்டா மேலயும் கீழயும் பாக்குதுங்க.

ராசப்பன்கிட்ட குறி பாக்க எங்கெல்லாமோ இருந்து வந்த காலமெல்லாம் இருக்கு. அப்பல்லாம் குறி பாக்க மொத நாளே வந்து அவரு வீட்டு திண்ணையில படுத்திருந்து அடுத்த நாள் பார்த்துட்டுப் போவாங்க... அவ்வளவு கூட்டம் இருக்கும். எத்தனை பெரிய ஆளா இருந்தாலும் அவரு வீட்டுக்கு வந்துதான் குறி பாக்கணும். எவ்வளவு பணம் கொடுத்தாலும் யாரு வீட்டுக்கும் போயி பாக்க மாட்டாரு. அவரு குறி சொன்னா அப்படியே நடக்குமுன்னு எல்லாருக்கும் ஒரு நம்பிக்கை. அதுக்கு சாட்சியா நிறைய சொல்லலாம்.

நானாக்குடி ராமையா மகள் எவங்கூடவோ ஓடிப்பொயிட்டா... அவுங்களும் தேடி அலஞ்சு நிறைய குறி பாத்து கடைசியா ஒத்த வீட்டு மண்டையன் மூலமா இவருகிட்ட வந்தாக. அப்ப அவரு பொண்ணு போயி பதினஞ்சு நாள் கழிச்சு வந்திருக்கீங்கன்னு ஒரு போடு போட்டாரு பாருங்க வந்த சனமெல்லாம் ஆத்தாடி அத்தனை கரெக்கிட்டாவுல்ல சொல்லுறாகன்னு மூக்குல விரலை வச்சிருச்சுங்க... அப்புறம் என்னென்னவோ பாத்து நாளைக்கி பன்னெண்டு மணிக்கு மதுரை மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட்க்குப் போங்க பொண்ணை கொண்டு வந்திடலாமுன்னாரு. ஆனா வந்தவங்களுக்கு அதுல நம்பிக்கையில்ல. எங்கயிருக்குன்னு கேட்டா பஸ் ஸ்டாண்ட்டுல பாக்கச் சொல்றாரு... எல்லாக் குறிகாரங்க மாதிரித்தாம்பு இவருமுன்னு பேசிக்கிட்டாங்க. இருந்தாலும் அவரு சொன்ன மாதிரி மாட்டுத்தாவணி பஸ்ஸ்டாண்ட்ல போயி காத்திருந்தாங்க. திருச்சியில இருந்து வந்த கவர்மெண்ட் பஸ்ல ஒருத்தங்கூட வந்து எறங்கினா... பாத்ததும் விரட்டி புடிச்சி அவனுக்கு நாலு தட்டு விட்டுட்டு புள்ளைய கொண்டு வந்து அவசர அவசரமாக கல்யாணத்தையே முடிச்சிட்டாங்க.

இது மாதிரி மறவமங்களம் செந்தியோட கறவமாடு காணாமப் போயி பல மாதத்துக்கு அப்புறம் இவரு குறிபாக்கிறதை ஆளுக மூலமா தெரிஞ்சு வந்தப்போ மாடு இந்த ஊர்லதாம்பு நிக்கிது... கருக்கல்ல மாடவுக்கிற நேரத்துக்கு போ... மேய்ச்சலுக்கு வாராப்போ பாத்துப் பிடிச்சாந்திடலாம். ஆனா இப்ப மாட்டை வச்சிருக்கவன் சாதாரணமா தரமாட்டான்... ஊர்ல நாலு பெரிய மனுசங்களைப் பாத்து பேசி அவனுக்கு எதாவது பணம் கொடுத்து மாட்டைக் கொண்டு வான்னு சொன்னாரு. அதுபடியே ஆயிரம் ரூபா கொடுத்து மாட்டைக் கொண்டு வர பயங்கர சிரமமாயிடுச்சி.

அவரு குறி சொல்ற அழகே தனிதான். குறி பாக்க வந்து காத்திருக்கிற ஆளுங்களுக்கு டோக்கன் கொடுத்து வரிசைப்படுத்திட்டு பள்ளிக்கொடத்துக்குப் போறதை வழக்கமா வச்சிருந்தான் பெரியவன். ராசப்பன் குளிச்சிட்டு காவி வேஷ்டியோட வந்து திண்ணையில இருக்கிற பதினெட்டாம் படியானை விழுந்து வணங்கிட்டு ஏதோ வாய்க்குள்ள சொல்லுவாரு.

அப்புறம் அவருக்குன்னு போட்டிருக்க பலகையில உக்காந்து துணூறை எடுத்து நெற்றியெல்லாம் பட்டையா பூசிட்டு, மதுரை மீனாட்சி குங்குமத்தை எடுத்து வட்டமா வச்சிப்பாரு. அப்புறம் நெஞ்செல்லாம் துணூறை பூசிப்பாரு. அதுக்கப்புறம் எல்லாச் சாமியையும் அழைப்பாரு... அப்படி அழைக்கிறப்போ 'சங்கிலிக் கருப்பா நீ...' என்று போடும் சத்தத்துக்கு குழந்தைங்க வீல்லுன்னு கத்த ஆரம்பிச்சிடுங்க. எங்கயோ போற நாய்களெல்லாம் மாத்தி மாத்தி குரைக்க ஆரம்பிக்குங்க.

அப்புறம் வரிசையா இருக்க தேங்காய் பழ பையை எடுத்து துணூறை அதுமேல போட்டு கையில எடுத்தா... குறி பாக்க போறாருன்னு அர்த்தம். இல்ல துணூறை போடுறப்பவே தள்ளி வச்சிட்டாருன்னா இன்னைக்கு குறிகேக்க நமக்கு குடுப்பினை இல்லேன்னு போக வேண்டியதுதான்.

பெரியவனை படிக்க வச்சிப் பாத்தாரு பத்தாவதை தாண்டாத அவன் கடல் தாண்டி துபாய் போனான். போனப்போ மாசமாசம் எட்டாயிரமோ பத்தாயிரமோ அனுப்பினான். எடையில வந்து கலியாணம் பண்ணிட்டுப் போனான். அவன் பொண்டாட்டி இங்கதான் இருக்கா. வாயிம் வயிறுமா இருக்கா. அடுத்த மாசம் புள்ள பொறக்குமுன்னு டாக்டரம்மா சொல்லியிருக்கு. மகன் அனுப்புற காசுல மாசாமாசம் அவகிட்ட ரெண்டாயிரத்தை கொடுத்துடுவாரு. அப்படியிருந்தும் அவளுக்கு எல்லாரு மாதிரி டவுனுல தனியா இருக்க ஆசை. அதுக்கு அவ புருசன் ஒத்துக்கலை. அதனால பல்லக் கடிச்சிக்கிட்டு ஓட்டுறா.

இப்ப என்னவோ எக்கனாமி பிரச்சினையின்னு சொல்லி அவனோட கம்பெனி ஆளைக்க குறைக்கிதாம். நிறைய பேரு வந்துட்டாங்க... அவனை கருப்பன் புண்ணியத்துல இதுவரை அனுப்பலை. ஆனா முன்ன ஓவரு டைமெல்லாம் கொடுத்தாங்களாம் இப்ப இல்லையாம். சம்பளத்தையும் கூட்டவே இல்லையாம்... கொறவாத்தான் அனுப்புறான். ஊருக்கு வாரேன்னு வேற இப்ப சொல்ல ஆரம்பிச்சிட்டான். இங்க விக்கிற வெலவாசிக்கு வந்து என்னடா பண்றதுன்னு தட போட்டு வச்சிருக்காரு.

சின்னவனுக்கு இவரு மாதிரி குறி பாக்க ஆசை... அவன் சொல்றதும் பலிக்குமுன்னு இவருக்குத் தெரியும். இருந்தாலும் இவரே இப்ப அவ்வளவா ஆட்கள் வராம வீட்டுத் திண்ணையில உக்காந்துக்கிட்டு இருக்கிறப்போ அவனும் இதுல எறங்கி அஞ்சுக்கும் பத்துக்கும் அல்லாடனுமான்னு படிக்க வச்சுப் பாத்தாரு...பத்தாவதுல பெயிலானதும் படிக்க மாட்டேனுட்டான். டுட்டோரியல்ல சேத்து விட்டாரு. அங்க படிக்க வந்த பொண்ணோட சுத்துனானே தவிர படிப்புல கவனம் போகலை... எழுதிக்கிட்டே இருந்தான் வெற்றி மட்டும் தூரத்துலயே நின்னது. அப்புறம் அவங்கூட படிச்ச பசங்க இருக்காங்கன்னு சென்னைக்குப் போனான். எதோ ஒரு வேலையில சேந்துட்டான்... கிடைக்கிறதுல அவன் செலவுக்கே சரியா இருக்கும் போல, ஊருக்கு வாரப்போ அவங்க அம்மாகிட்ட எதாவது கொடுத்துட்டுப் போவான்.

உதடெல்லாம் கருத்துப் போயி இருக்க... சிகரட் எதுவும் பிடிப்பானோன்னு சந்தேகப்பட்டு எங்க நாம கேட்டா கோவப்பட்டு முறைச்சுக்கிட்டு நிப்பானுட்டு அம்மாக்காரிய கேக்க சொன்னாரு. அவ கேட்டதுக்கு நம்ம பக்கத்து வீட்டு காயத்ரி அக்கா உதடு கூட கருப்பாத்தான் இருக்கு அப்ப அது சிகரட் பிடிக்குதான்னு எதிர் கேள்வி கேட்டு வாய அடச்சிட்டான். அப்புறம் அதைப் பத்தி ரெண்டு பேரும் பேச்சே எடுக்கலை. போன தடவ ஊருக்கு வந்தவன் ஊரு வெளக்குல இருக்க ஒத்த பெட்டிக்கடையில அதிக நேரம் உக்காந்து அரட்டையடிச்சிக்கிட்டு இருந்தான். திடீர்ன்னு ஒரு நா அவரு அந்த வழியா வந்தப்போ கையில இருந்த சிகரட்டை மறைக்க அவன் பட்ட பாடு இருக்கே... செம்மத்துக்கும் மறக்க மாட்டான்.

தோளுக்கு மேல வளந்துட்டான். அவனுக்கு புத்தி சொன்னா பிடிக்காதுங்கிறதால சூதனமா பொழச்சுக்கப்பா... மூத்தவன் ஏதோ கஷ்டப்பட்டாலும் அவன் வாழ்க்கை நல்லாயிருக்குமின்னு எனக்கு தோணுது... நீதான் நல்லா வரணும்... வருவே... நாலு காசு சேத்து வச்சியனாத்தான் நாளைக்கு நாய் கூட உன்ன மதிக்குமின்னு பொத்தாம் பொதுவா சொல்லி வச்சாரு... அதை அவன் காதுல வாங்குன மாதிரி தெரியலை.

இப்ப குறி பாக்க வாரவங்க ரொம்ப குறஞ்சிட்டாங்க. பொண்டாட்டிக்காரிக்கும் உடம்புக்கு நல்லாயில்லாம... கெடந்து கஷ்டப்பட ஆரம்பிச்சிட்டா. மூத்தவன் வேலை சரியில்லைங்கிறான்... சின்னவன் பேருக்கு வேலை பாக்குறான்... மருமக இன்னைக்கோ நாளைக்கோன்னு வயித்த வச்சிக்கிட்டு புள்ளப் பேருக்கு காத்திருக்கா... நல்லபடியா பொறக்கணும்... பொண்ணுக்கு இன்னும் சரியான வரன் அமையலை... தங்கச்சி பையனுக்கு புடிச்சு கட்டி வச்சிடலாமுன்னு பாத்தா அவ பிடி கொடுத்தே பேசமாட்டேங்கிறா... இவருக்கும் இப்ப கால் மூட்டுக்கு மூட்டு வலிக்க ஆரம்பிச்சிருச்சு. கார மடைக்காரர்கிட்டதான் எண்ணெய் வாங்கி தேக்கிறார்.

அக்காவை பாக்க ஊர்ல இருந்து வந்த மச்சான் சாப்பிட்டுக்கிட்டே ஏம் மச்சான் இப்படி வீட்டோட போட்டு ஆட்டுதே கெரகம் கிரகம் சரியில்லை போல தெரியுது... அது என்னன்னு பாக்கலாமுல்ல... நாளைக்கி வெள்ளிக்கெழமைதானே உங்க குறி எடுக்க வேண்டியதுதானே என்றான். இல்ல நம்ம வீட்டுக்கு நான் குறி எடுக்க முடியாது மச்சான் என்று சொல்ல, என்ன மச்சான் ஊருக்கே சொல்றீங்க உங்களுக்கு பாக்க முடியாதா.?. ஊருக்கு சொல்லலாம் மச்சான். அவங்க வந்து பாக்கிறப்போ எல்லாம் எனக்கு தெரியும் ஆனா நல்லதை சொல்லிட்டு கெட்டதை சொல்லாம ஆறு மாதத்துக்கோ ஒரு வருசத்துக்கோ நேரம் சரியில்லைன்னு சொல்லிடுவேன். ஆனா நம்ம குடும்பத்துக்குப் பாத்தா எதுவா இருந்தாலும் எம் மனசுக்குள்ளயே நிக்கும். ஆத்தி இன்னைக்கு நடந்துடுமோ, நாளைக்கு நடக்குமோன்னு மனசு தவிச்சிக்கிட்டே இருக்கும்... நிம்மதி போயிடும் மச்சான் என்றார் வருத்தம் தோய்ந்த குரலில். நீங்க சொல்றதும் சரிதான்... அப்ப நம்ம வெத்தியூர் சோசியருக்கிட்ட போயி பாத்துட்டு வரலாமா... என்றதற்கு அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம் எல்லாம் சரியாகும் என்றபடி எழுந்து கை கழுவப் போனார்.

ஊர் விழிக்கும் முன்னால எழுந்து குளிச்சு பதினெட்டாம்படியானை கும்பிட்டு தூங்கிக் கொண்டிருந்த மச்சானை எழுப்பி வெரசா கிளம்பி வா முத வண்டியியல வெத்தியூருக்கு பொயிட்டு வந்திடலாம் என்றவரின் கையில் இருந்த மஞ்சப் பைக்குள் ஜாதகங்கள் சிரித்தன.

-'பரிவை' சே.குமார்.

போட்டோ - நன்றி : கூகிள்

திங்கள், 7 பிப்ரவரி, 2011

சுமைதாங்கி



முன்னெல்லாம் அடிக்கடி வீட்டுப் பக்கம் வரும் செண்பகம் இப்ப அதிகமா வாறதில்லை. மூச்சுக்கு முன்னூறு தரம் அக்கா... அக்கான்னு வருவா. கொஞ்ச நாளா பாத்த பேசுறதோட நிறுத்திக்கிறா. இன்னைக்கு அவகிட்ட ஏண்டி வாறதில்லையின்னு கேக்கணும் என்று நினைத்தபடி மாட்டெருவையை சுமந்து வயலை நோக்கி நடந்து கொண்டிருந்தாள் பர்வதம்.

மழக் காலங்கிறதால பசும்புல்லை தின்னுட்டு மாடு பூராம் கழிய ஆரம்பிச்சிருச்சு. கசாலை எல்லாம் தொறுத்தொறுன்னு கிடக்கு பாக்கச் சகிக்கலை. மாடுக மேலெல்லாம் எருவும் மூத்தரமுமா கலரே மாறிப்போயி கெடக்குக. இந்த சரவணப் பயலை மாட்டை குளிப்பாட்டுடான்னா அசைய மாட்டேங்கிறான். நாமதான் குளிப்பாட்டணும் போல. என்ன அந்த சனியங்களை இழுத்துக் கொண்டு போய் சேக்கிறதுதான் கஷ்டம். ஒண்ணு காட்டுக்கு இழுத்தா ஒண்ணு மேட்டுக்கு இழுக்கும். இன்னும் சொல்லப் போனா பில்லப்பசுவை தண்ணிக்குள்ள இறக்க போராடணும். தனி மூக்கனையில போட்டு தறத்தரன்னு இழுத்துக்கிட்டுப் போனாலும் தண்ணிக்கிட்ட போனோடனே டக்குனு பிரேக்கு போட்ட மாதிரி நின்னுக்கும். இல்லேன்னா நம்மளை இழுத்துப் போட்டுட்டு மாக்காலி எடுத்து ஒரே ஓட்டம்... அப்புறம் அந்தக் கயிரை பீ பிருக்கெல்லாம் இழுத்துக்கிட்டு திரிஞ்சிட்டு சாயந்தரம்தான் வரும். கயறைத் தொடவே அருவெறுப்பா வரும்.

அவரு இருந்த செவ்வா வெள்ளி அவனையும் கூட்டிக்கிட்டு மாடுகளை குளிப்பாட்டி பொட்டு வச்சு கொண்டாந்து கட்டிட்டு வேலைக்குப் போவாரு. போன வாரம் முதலாளிகூட நாமக்கல் போனவரு நாளைக்குத்தான் வாராரு. வயலுக்குப் பொயிட்டு வந்துட்டு இந்தக் காளய கூட்டிக்கிட்டு போயி கழுவியாந்திரணும். மத்தியானத்துக்கு கீரத்தண்டு கிடக்கு அதோட கருவாட்டைப் போட்டு வச்சமின்ன நாக்குக்கு ருசியா சாப்பிடலாம். நாச்சியக்கா மோரு ஊத்தப் போகயில வெங்காயம் தக்காளி வாங்காரச் சொல்லணும் ரெண்டோ மூனோதான் கிடக்குது. எதேதோ யோசனைகள் எழுந்த வண்ணம் இருக்க வரப்பில் போய்க்கொண்டிருந்தவளின் எதிரில் எருக்கொட்டிவிட்டு வெறுங்கூடையுடன் செண்பகம் வந்து கொண்டிருந்தாள்.

"என்னக்கா யோசன பலமா இருக்கு எந்தக் கோட்டையைப் பிடிக்க..."

"ஆமா அது ஒண்ணுதான் கொறச்சல்... மாட்டை குளிப்பாட்டணுமின்னு நெனச்சிக்கிட்டு வந்தேன்."

"அதான் சரவணன் இருக்கானுல்ல... அவனை குளிப்பாட்ட சொல்ல வேண்டியதுதானே..."

"அது இருந்த எடத்த விட்டு எந்திரிச்சா என்னத்துக்கு ஆகுறது... சரி நில்லு மேட்டுச் செய்யில கொட்டிட்டு வந்துடுறேன்" என்றபடி நகர்ந்தாள்.

எருவக் கொட்டிட்டு 'சை கழுஞ்சு வைக்கிதுக மேலெல்லாம் வழிஞ்சு சேல எல்லாம் போச்சு' என்றபடி வந்தாள்.

"உங்கிட்ட கேக்கணுமின்னே நினச்சேன்டி... ஆமா இப்பல்லாம் எங்க வீட்டுப் பக்கம் அதிகம் வாறதில்லையே ஏண்டி."

"அதெல்லாம் ஒண்ணுமில்லேக்கா... வேல நிறைய இருக்கு..."

"பொய் சொல்லாதடி... அப்படி என்னடி வேல இருக்கு... "

"அது.."

"என்னமோ மறைக்கிறே... எங்கூட்டுக்கு போவப்படாதுன்னு உங்காத்தா சொன்னுச்சா..."

"ஐய்யோ... அம்மா அதெல்லாம் சொல்லாது. அதுவே உங்கூட்டுப் பக்கம் வராம இருக்கவும் நோண்டி நோண்டி கேக்குது... அதுகிட்ட எதோ சொல்லி சமாளிச்சிட்டேன்."

"எதோ சொல்லி சமாளிச்சிட்டேன்னா... என்ன பிரச்சினை உனக்கு..."

"ஒண்ணுமில்லேக்கா... வேல இருந்துச்சு அதான்..."

"மறுபடியும் மறைக்கிறே... சொல்லலாமின்னா சொல்லு..."

"அப்பறம் வீட்டுக்கு வாரேங்க...இப்ப அம்மா பால் ஊத்தப் போயிருக்கு, தங்கச்சியும் தம்பியும் பரிச்சைக்குப் படிக்கிறாங்க... அப்பா வேலக்குப் போறதுக்குள்ள அவருக்கு சாப்பாடு செய்யணும்.. வாரேங்க" என்று அவள் பதிலை எதிர்பார்க்காமல் ஓடிவிட்டாள்.

'ம்ம்... என்னத்தையோ மறைக்கிறா... என்னான்னு தெரியலை... சரி அப்புறம் வரட்டும் என்னன்னு கேக்கலாம்' என்று நினைத்தபடி சென்றவள் எதிரே நாச்சியக்கா வர, அக்கா வெங்காயம் தக்காளி வாங்கிக்கிட்டு வா... வந்து காசு வாங்கிக்க என்று சொல்லிவிட்டு வீட்டுக்கு போனாள். வாசலில் கிட்டிக் கம்பு செதுக்கிக் கொண்டிருந்த சரவணனை பாத்தவளுக்கு கோபம் தலைக்கேறியது. "ரொம்ப முக்கியம்... இதுதான் உங்களுக்கு சோறு போடப்போகுது... தூக்கிப் போட்டுட்டு எந்திரிக்கிறியா இல்ல எருக்கூடய தலயில போடவா"

"போம்மா... கிட்டி வெளடா செதுக்கி வச்சிட்டு வாரேன்" முகத்தை தூக்கி வச்சிக்கிட்டு சொன்னான்.

"வா மாட்டைக் குளிப்பாட்டிட்டு நீ என்ன வேணாலும் வெளயாடு... வா"

"மாடு குளியாட்டவா சித்தப்பா வந்தோடனோ அதுகிட்ட சொல்லலாமுல்ல... நா வரலை போ" சொல்லிக்கிட்டே தள்ளிப் போனான்.

"அவுக கலக்கிட்டரு உத்தியோகம் பாக்கிறாக காலயில போனா ராத்திரிக்குத்தான் வாராக. அப்புடி என்னதான் வேலயோ தெரியலை. நீங்க கிட்டி வெளாடப் போங்க... எனக்குத்தானே எல்லாம் வந்து கிடக்கு. இன்னைக்கு பட்டினிதான் போ" அவள் கோபமாக சத்தம் போட

"கம்மாயில சொறியிருக்கு... மேலெல்லாம் அரிக்கும்மா"

"அப்ப பைப்புல தண்ணி அடிச்சுக் கொடு... நா மாட்டக் கழுவுறேன்"

"தண்ணி அடிக்கிறதுக்கு கம்மாக்கே போகலாம்."

"சரி வா..."



அடுக்கடுக்கான வேலைகளில் மூழ்கியதால் நேரம் போனதே தெரியவில்லை. கீரத்தண்டையும் கருவாட்டையும் போட்டு கொழம்பை கூட்டிவிட அந்த ஏரியாவே மணத்தது. அவளது மாமியாவுக்கு அந்த வாசம் வயித்துப்பசியை கிள்ளி நாக்கில் எச்சில் ஊற வைத்தது.

"என்னத்தா... கீரத்தண்டும் கருவாடுமா வக்கிறே." என்றவாறு உள்ளே வந்தது.

"ஆமா அயித்தை... வேற ஒண்ணுமில்ல... நாளைக்கி கிடக்க பயரைப் போட்டு வச்சமின்னா நாளானைக்கு சந்தையில காய் வாங்கிக்கலாம்..."

"ம்.. இந்த சரவணன் எங்க போனான? ராமசாமியண்ண தோட்டத்துல போயி கத்திரிக்கா வாங்கிகிட்டு வரலாமுல்ல... அங்க வதி அழியுது அத்தாச்சி வந்து பறிச்சிக்க சொல்லுன்னு அண்ணபொண்டி சொன்னுச்சு. நாம அங்க போறமாதிரியா இருக்கு பாதைக... இவனை விட்டா சைக்கிள்ல ஒரு நிமிசத்துல பொயிட்டு வந்திருவான்."

"ஆமா... அது எந்தப் பொட்டல்ல கிட்டி வெளாடுதோ... லீவ் விட்டா வீட்ல தங்குறதில்லை. நாளக்கி பாக்கலாம்"

"சரி... ராமசாமி அண்ண போனா பிடுங்கியாரச் சொல்லிட்டு வாரேன்" என்றபடி ராமசாமி வீட்டில் ஊர்க்கதை பேச போய்விட்டாள். இனி ரெண்டு மணியோ, மூணு மணியோ தெரியலை.

அரிச்ச தலய சொறிஞ்சிக்கிட்டு பேனு கெடக்கு போல புடுங்குது... யாரையாச்சும் பாக்க சொல்லலாமுன்னா யாருமில்ல நாமளே உருவிப்பாப்போமுன்னு ஈருவலிய எடுத்துக்கிட்டு திண்ணையில வந்து உக்காந்தவள் செம்பகம் வாராதை பாத்ததும் இவகிட்ட தலயக் கொடுக்கலாம். நல்லா பேன் பாப்பானு நெனச்சிக்கிட்டா.

"என்னக்கா வேல முடிஞ்சிருச்சா..."

"இப்பதான் முடிச்சேன். சித்த எந்தலைய கொஞ்சம் பாரேன்... ஒரே அரிப்பா இருக்கு."

"இப்படி திரும்பி உக்காருங்க வெளிச்சம் தெரியலை. எங்க அத்தைய காணோம்."

"அவங்க மீட்டிங்குக்கு போயாச்சு."

"அப்புறம் அவங்களுக்கும் பொழுது போகணுமில்ல..."

நினைவு வந்தவளாய், "சரி நீ ஏன் இங்க வரலைங்கிறதுக்கு காரணத்தை சொல்லு" என்றாள்.

"அதான் வந்துட்டேன்ல..."

"பேச்ச மாத்தாதே... எனக்கு தல வெடிச்சிடும் போல... ஒரு நாள்ல பாதி நேரத்தை இங்கயே போக்குறவ திடீர்ன்னு வரலையின்னா..."

"சொல்லாம விடமாட்டீங்க... அப்படித்தானே... முருக மாமா உள்ளயா?"

"எதுக்கு அவனைக் கேக்கிறே..."

"இல்ல எல்லாரும் இருந்தா சொல்ல வேண்டாமேன்னுதான்..."

"அவன் இல்ல... வேற யாரும் இல்ல"

"பேன் இல்லக்கா ஈறு நெறய இருக்கு. ஒண்ணுமில்லேக்கா... மனசு சரியில்லை..."

"...." பேசாமல் அவளைப் பார்த்தாள்.

"உங்களுக்கெல்லாம் தெரியாது... நா முருக மாமா மேல உசுரையே வச்சிருந்தேன். ஆனா..."

இப்பத்தான் அவளுக்கு புரிந்தது. அவளது பெரும்பாலான நேரம் இங்கே கழிந்தாலும் அதில் முருகனுடன் அவள் அடிக்கும் லூட்டிதான் அதிகமிருக்கும். அவனை எதாவது சொல்லி வம்பிழுத்துக் கொண்டே இருப்பாள். அதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.

"அவனுமா...?"

"இல்லக்கா... நா மட்டும் சின்ன வயசுல இருந்தே மாமா மேல ஆசய வளத்துக்கிட்டேன். "

"அவங்கிட்ட சொன்னியா..."

"இல்ல... படிப்பு முடிஞ்சதும் சொல்லலாமுன்னு இருந்தேன். அதுக்குள்ள..."

"அதுக்குள்ள..."

"அன்னைக்கு உங்ககிட்ட மாமா என்ன சொன்னுச்சு..."

"என்ன சொன்னான்...." யோசித்தவளுக்கு அதற்கான விடை கிடைத்தது. கூட படிச்ச புள்ள கூட பழகுறதாவும் அவளையே கட்டிக்கப் போறேன்னும் முருகன் சொன்னது ஞாபகத்தில் ஆடியது.

"என்ன சொன்னாங்கன்னு ஞாபகம் வந்திருச்சா..."

"ம்..."

"அதைக் கேட்டேன்... அதுக்கப்புறம் மாமாவ பாக்க மனசில்ல அதான் இங்கிட்டு வரல..."

"அடி கிறுக்கி இதுக்காகவா வராம இருந்தே... அவன் சொல்லியிருக்கான்... நாங்க ஒத்துக்கலையில்ல... மனசு மாறாமய போயிடுவான். அப்படியே அவளத்தான் கட்டுவேன்னு கட்டினா உனக்கு என்ன நல்ல மாப்ள கெடக்காமயா போயிடுவான்..."

"கெடப்பான்... கெடப்பான்... முருக மாமா மாதிரி கெடப்பானா..?"

அதற்குள் பர்வதத்தால் பதில் சொல்ல முடியலை.

"என்னால போன போகட்டுமின்னு விட்டுட்டுப் போக முடியலக்கா... மாமாவ பாக்காம இருக்க நினச்சாலும் முடியலக்கா. ரோட்ல சைக்கிள்ல வாரப்ப என்னயறியாம எட்டிப் பாக்கச் சொல்லுது..." கண் கலங்கியது.

"சரி விடு... மாமாகிட்டயும் அத்தைகிட்டயும் பேசி உன்னைய அவனுக்கு கட்ட ஏற்பாடு பண்றேன். நம்மள மீறியா போகப் போறான்."

"வேண்டாங்க... கட்டாயப்படுத்தி வாழ்க்கையில் சேந்தா சந்தோசம் போயிடுமுக்கா. மாமாவோட சந்தோசத்தையும் பறிச்சிட்டு, அவரை விரும்புன பொண்ணோட சந்தோஷத்தையும் பறிச்சிட்டு நா மட்டும் எப்படிக்கா நல்லா இருக்க முடியும். நான் மட்டும்தானே விரும்புனேன். மாமா இல்லையில்ல... ஒத்த மனசு செத்தா பரவாயில்லக்கா. ரெண்டு மனசைக் கொன்ன பாவத்தை சுமக்கணுமாக்கா. மாமா நெனப்ப சுமந்துக்கிட்டு கிடக்கிறதும் ஒரு சுகந்தாக்கா. அந்த சுகத்தை நான் இப்ப அனுபவிக்கிறேங்க...அவங்க சேரட்டும்... இத யார்கிட்ட பேசாதீங்கக்கா.... நான் வாரேன்" என்றபடி கண்ணீரை துடித்துக் கொண்டு சென்றவளை பார்த்துக் கொண்டிருந்த பர்வதத்தின் கண்கள் நீந்திக் கொண்டிருந்தன.

***************

நன்றி... நன்றி... நன்றி..!


எனது அக்கா சமைத்து அசத்தலாம் வலைப்பூவில் சமைத்து அசத்தும் ஆசியா உமர் அவர்கள் "One Lovely Blog Award" ஒன்றைப் பெற்று அதை பலருக்கு கொடுத்துள்ளார்கள். அந்தப் பலரில் சகோதரனாய் நானும்....

விருதுக்கு நன்றி அக்கா.

***************
-'பரிவை' சே.குமார்.

 நன்றி: படங்கள் கூகிள் 

வியாழன், 3 பிப்ரவரி, 2011

சேரட்டும் நம் காதல்



மஞ்சள் வெயில் மாலையில
மாடக்கரை ஓரத்தில
மயிலிறகு பொறக்கயில
மனதிழந்து போனேனே..!

பூத்தபின் புதுப்பொலிவாய்
புன்னகைக்குள் வெட்கம் வைத்து
தோழியுடன் நீ போக...
சொக்கித்தான் போனேனே..!

களத்து மேட்டு காவலுக்கு
தனியாய் நான் போகயிலே
நீ சுழிக்கும் உதட்டசைவில்
உருகித்தான் போனேனே..!

தண்ணி எடுக்க வரும்போது
தள்ளி நிற்கும் என்மீது
நீர் இறைத்து நீ சிரிக்க
சிலிர்த்துத்தான் போனேனே..!

அம்மன் கோவில் வாசலிலே
திருவிழா கூட்டத்திலே
என்னை நீ தேடயிலே
கசிந்துருகிப் போனேனே..!

எப்போதும் உன் வாசம்
என் இதயக் கூட்டுக்குள்...
தப்பேதும் நேராமல்
தழைக்கட்டும் நம் காதல்...

நீ இருக்கும் நெஞ்சமது
உன்னுடனே சிரிக்கட்டும்...
பாழப்போன மேடுபள்ளம்
பாழுதாகிப் போகட்டும்.

எங்கப்பன் உங்கப்பன்
எச்சில் சோறு தின்னட்டும்...
எல்லாரும் ஒன்றாக
எப்போதும் இருக்கட்டும்...!

சாதி மத பேதமெல்லாம்
தள்ளி நின்று வாழ்த்தட்டும்...
போதி மத புத்தன் வந்து
புதுக்கவிதை எழுதட்டும்..!

-'பரிவை' சே.குமார்.

செவ்வாய், 1 பிப்ரவரி, 2011

பாரதி நட்புக்காக லியோனியின் நெல்லிக்கனி (பட்டிமன்றம் - நிறைவுப் பகுதி)



முந்தைய பகுதிகள் படிக்காதவர்கள் படிக்க

தொகுதி-1                              

தொகுதி-2

தொகுதி-3

----------------------------------------------------------------------------------------

திருமணத்துக்குப் பின்பே அணியின் திரு. மதுக்கூர் ராமலிங்கள் அவர்கள் கடைசியாக பேச வந்தார்.  அவர் எத்தனை ராஜாக்கள் வந்தாலும் பட்டிமன்றத்தின் முடிசூடா மன்னன் என்று லியோனியைப் பார்த்துக் கூற, ஏய்யா வழுக்கத்தைத் தலையின்னு நேரடியாச் சொல்ல வேண்டியதுதான். இப்ப நாட்டுல ரொம்பப் பேரு இப்படித்தான் திரியிறான்... எனக்கு மட்டும்தான் வழுக்கையா அங்க பாரு எல்லாத் தலையையும் நம்ம பாரதி நட்புக்காக தலைவர் ராமகிருஷ்ணனுக்கும் இப்புடி ஏறிடுச்சு. முன்னாடி இழுத்து சீவியிருக்காரு என்று கலாய்த்தார்.

மதுக்கூர் ராமலிங்கம்: எம் பையன் இந்த வருசம் பத்தாவது எழுதுறான். அவனைப் படிக்க வைக்கணுமின்னு நைட்ல முழிச்சு எழுப்பினா அப்பா ஒரு நிமிசம் அப்படின்னு தூங்குறான். மறுபடியும் வந்து தட்டி எழுப்பி படிக்க வச்சி, அப்துல் கலாமைப் பாரு அவரு மாதிரி வரணுமின்னு சொன்னா, ஆமா நீ எவ்வளவு மார்க் வாங்கினேன்னு திருப்பிக் கேக்கிறான் என்றார்.

நடுவர் அவர்களே தம்பி செந்தில் பேசும் போது பட்டாம்பூச்சி அப்படியே பறந்து திரியுமின்னார். ஆனா பட்டாம் பூச்சி பூ மீது அப்படி ஜோடியா உக்காந்திருக்கும் போதுதான் அழகா இருக்கும் என்று சொல்ல, செந்தில் பட்டாம் பூச்சி தனியா பறந்து திரியுறதை ரசிச்சிருக்காரு. ஆனா இந்தாளைப் பாருய்யா எப்படி ரசிச்சிருக்காருன்னு என்று இடையில் புகுந்தார் லியோனி. அப்புறம் நடுவர் அவர்களே தண்ணிப்பால் (தனபால்) எம் பொண்டாட்டி அதைக் கேக்குறா, இதைக் கேக்குறான்னு அள்ளிவிட்டார். எந்தங்கச்சி எம்புட்டு நல்லவங்க தெரியுமா... ஒரு நா தனபால் வீட்டுக்குப் போறேன், நடு வீட்ல இந்த ஆளை உக்கார வச்சி எந்தங்கச்சி தேங்காய் பழமெல்லாம் வச்சி படச்சு இருக்கு. என்னம்மான்னு கேட்டா, நேரம் சரியில்லையின்னு சனீஸ்வரனை கும்பிடச் சொன்னாங்க... பக்கத்துல கோவில் இல்லை அதான் இந்தாளுக்கு படச்சு கும்பிடுறேன்னு சொன்னுச்சு என்றதும் அவையில் சிரிப்பொலி அடங்க நேரமானது.

நடுவர் அவர்களே திருமண வாழ்க்கை என்பது எவ்வளவு சந்தோஷமானது. அதுவும் பொண்ணு பாத்துட்டு வாரது... சிவாஜி தன் நண்பனுக்கும் நண்பன் சிவாஜிக்கும் பொண்ணு பாத்துட்டு வந்து குளிச்சிக்கிட்டு "பொண்ணோன்று கண்டேன் பெண் அங்கு இல்லை என்னென்று நான் சொல்லலாகுமோ' ன்னு பாடுவாரே என்று பாட, லியோனியும் சேர்ந்து சில வரிகள் பாடினார். பாடல் முடிந்ததும் இப்படி ஒரு டூயட்டை என் வாழ்க்கையில் இன்னைக்குத்தாய்யா பாடியிருக்கேன்னார்.

லியோனியைப் பார்த்து நடுவர் அவர்களே நீங்க ஒரு படத்துல நடிச்சீங்கள்ல... அந்த கொடுமையை ஏய்யா இப்ப கேக்குறேன்னு லியோனி கேக்க, சொல்லுங்க நடிச்சிங்களா இல்லையா... ஆமா நடிச்சேன்... அந்தப் படம் ஓடுச்சா... ஓடிச்சின்னு சொன்னாங்க... எங்க ஓடுச்சு தியேட்டர் தியேட்டரா ஓடுச்சு... அந்தப் படம் ஏன் ஓடலை தெரியுமா... ஏய்யா?... அதுல ஒங்களுக்கு ஜோடியில்ல... ஜோடியிருந்திருந்தா படம் சூப்பர் ஹிட்டாயிருக்கும் என்று சொல்ல, ஆமா என க்கு ஜோடியாப் போட்டிருந்தா காந்திமதியைப் போட்டிருப்பாங்க என்றதும் சிரிப்பொலி அடங்க நேரமானது.

இன்னும் நகைச்சுவையாய் பேசியவர், ஒரு ஊர்ல வயதான ஒருத்தர் செத்துப் பொயிட்டாரு... அவரை தூக்க ஏற்பாடு பண்ணினாங்க... அப்ப அவரு சம்சாரத்தைக் காணோம்... எங்கடான்னு பார்த்தா வீட்டுக்குப் பின்னால சுடுதண்ணி வச்சிக்கிட்டு இருக்கு. எல்லாரும் அதை திட்ட... அப்ப அது எப்பவுமே அவரு சுடுதண்ணியிலதான் குளிப்பாரு... இப்பவும் அதுலயே குளிப்பாட்டி அனுப்புங்கன்னு சொன்னுச்சாம் என்று சொல்லி திருமண வாழ்வின் மகோத்துவத்தை விளக்கினார்.


(பாரதி அமைப்பினர்)

திரு.லியோனி : மதுக்கூர் ராமலிங்கம் அவர்களின் பேச்சுக்கு சில கருத்துக்களைப் பகிர்ந்த திரு. லியோனி, இப்படித்தாய்யா எங்கப்பத்தாவும் ஐயாவும் எப்பவும் சண்டை போட்டுக்கிட்டு இருப்பாங்க... ஆனா அவங்களுக்கு எங்கப்பாவையும் சேத்து 16 புள்ளைங்க... எப்பவும் சண்டை போட்டுக்கிட்டே இருக்கியலே எப்படி தாத்தா 16 பெத்தியன்னு கேட்டா அட அத ஏன்டா, கேக்குறே..? காத்து வல்லையின்னு அப்படி போனேன்... உங்க பெரியப்பன் பொறந்தான்... கரண்ட் இல்லை உங்க அத்தை பொறந்தா... விசிறி எடுக்கப் போனேன் உங்கப்பன் பொறந்தான்னு சொன்னாருன்னு இன்னும் நகைச்சுவையாய் பேசினார்.

பட்டிமன்றப் பேச்சாளர்கள் எல்லாம் பேசி முடிச்சிட்டாங்க இப்ப நான் தீர்ப்பு சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். ரெண்டுந்தாய்யான்னு சொன்னா இதை வந்தவுடனே சொல்லியிருந்தா மழை நேரத்துல வீட்டுக்கு சீக்கிரம் போயிருப்போமுல்ல.... எதுக்கு மூணு மணி நேரம் உக்கார வச்சேன்னு நீங்க கேப்பீங்க... இந்த பட்டிமன்றத்தை மூன்று மணி நேரமாக ரசித்து, பலர் சீட் இல்லாமல் நிண்டு கொண்டு ரசித்தீர்கள் எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. இது நம் தமிழுக்கு கிடைத்த வெற்றி. நானும் நிறைய ஊருக்குப் போயிருக்கேன். அங்கெல்லாம் இவ்வளவு கூட்டம் வந்ததேயில்லை (சம்பிரதாய வார்த்தைகள்).

இப்படித்தான் ஒரு ஊருக்கு பட்டிமன்றம் நடத்தப் போனோம்... உக்காந்திருந்தவங்களெல்லாம் எந்திரிச்சுப் போக, ஊர்ப்பெரிசிடம் என்னய்யா கூட்டமே இல்லைன்னு கேக்க, எல்லா இடத்துலயும் குழாய் கட்டியிருக்கோம். வீட்ல இருந்தே கேப்பாங்கன்னார்... நாங்க கத்திக்கிட்டு இருக்கணுமாம். இவங்க போயி படுத்துக்கிட்டு கேப்பாங்களாம். இன்னம் சில பட்டிமன்றங்கள்ல முன்னாடி ஒரு பத்துப் பேரு வந்து உக்காந்துக்கிட்டு என்ன சொன்னாலும் சிரிக்கவே மாட்டாங்க... அப்படியெல்லாம் இல்லாம சந்தோஷமா சிரிச்சு ரசிச்சீங்க... ரெண்டு அணியினரும் தங்கள் கருத்தைச் சொல்லி அமர்ந்திருக்காங்க...

திருமணத்துக்கு முன்னான வாழ்க்கை என்ன சந்தோஷங்கிறீங்க... நம்மளை கேக்க யாரும் இருக்க மாட்டாங்க.... அது மாதிரி ஒரு வாழ்க்கை திரும்ப கிடைக்குமா? அந்த பருவத்து வாழ்க்கை குறித்து சிலாகித்து நிறைய பேசினார்...

அப்புறம் அதற்காக திருமணத்துக்கு பின்னான வாழ்க்கை சரியில்லைன்னு நினைச்சிடக்கூடாது. அதுல இருக்க சந்தோஷம் இருக்கே, வேலைக்குப் பொயிட்டு வாரப்போ வண்டியில வந்து ஒருத்தன் விழுந்துட்டு இவங்கூட சண்டைக்கு வந்திருப்பான். வீட்டுக்குள்ள வந்த உடனே என்னங்க ஏன் சோர்வா இருக்கீங்கன்னு கேக்கிறப்போ ஒண்ணுமில்லேம்மான்னு சொன்னா, இல்லே நீங்க சரியில்லைன்னு கேக்கிறப்போ, என்னைய தெருவுல ஒருத்தன் திட்டிட்டான்னு சொன்னவுடனே... அப்படியே கையை அமுக்கி விடுங்க தெரு நாய் கத்துனதையெல்லாம் பெரிசு படுத்திக்கிட்டு என்று சொல்லி , போய் முகங்கழுவிட்டு வாங்க காப்பி தாரேன்னு சொன்னதும் வேணாம்மா என்று மறுத்தால் காபிங்க என்று அழுத்தி சொல்லும் போது அதன் அர்த்தம் புரிந்து நம் மனதின் கவலைகள் பறந்து போகுமே... என்ற நடுவர்...

திருமணத்துக்குப் பின்னான புரிந்து வாழ்தலில் கிடைக்கும் சுகம் முன்னான வாழ்வில் கிடைப்பதில்லை என்று சொல்லி அதற்கு ஆதாரங்களாக நிறைய சொன்னார். இறுதியில் மகிழ்ச்சியான வாழ்க்கை திருமணத்துக்குப் பின்பே என்று தீர்ப்பு வழங்கினார்.

பேச்சாளர்கள் பேசும் போது அவர்களுக்கு அமைப்பின் நிறுவனர் ஜெகன் மற்றும் அவரின் துணைவியார் பொன்னாடை போர்த்திக் கௌரவித்தனர்.

பட்டிமன்றத்தின் தீர்ப்பை சொல்லிய பிறகு நன்றி நவிலல் நடந்தால் பேசுபவர மட்டும் நாற்காலிகளுக்கு நன்றி சொல்ல வேண்டியிருக்கும் என்பதால் தீர்ப்பு சொல்லும் முன்பாக நன்றியுரையாற்ற லியோனி வாய்ப்பு வழங்கினார். அந்த வாய்ப்பில் திருமதி. சங்கீதாரத்தினச் சுருக்கமாக நன்றி சொல்லிச் சென்றார்.

******************

** எனக்கு போட்டோக்கள் உதவி எனது பட்டிமன்றத் தொகுப்பை பாராட்டியதுடன் பாரதி நட்புக்காக நண்பர்களுக்கு மின்னஞ்சலில் அனுப்பி வைத்த திரு. சுபஹான் அவர்களுக்கு என் நன்றிகளை உரித்தாக்குகிறேன்.

** நான்கு பதிவாக எழுதிய போது என்னை பாராட்டிய நண்பர்களுக்கும் 'எப்பா லியோனிய ஒரு பாடுபடுத்திடுவே போல' என்று சாட்டிங்கில் வந்து திட்டிய நட்புக்களுக்கும் நன்றி.

** இங்கு நான் தொகுத்தவை எல்லாமே என் மனதில் இருந்தவைதான் ஆடியோவோ, வீடியோவோ பார்த்து எழுதவில்லை. அதனால் என் தொகுப்பில் பேச்சாளர்களின் பேச்சுக்கள் தொகுப்பாக இருக்காமல் முன்பின் மாறி வந்திருக்கலாம்.

** முதன் முதலில் நான் தொகுப்பாக... தொடரும் போட்டு எழுதிய பதிவுக்கு வரவேற்ப்பளித்த உங்கள் அனைவருக்கும் நன்றிங்க....

லியோனி போட்டோவுக்கு நன்றி : நிலாச்சாரல்.காம்

-'பரிவை' சே.குமார்.