பார்வைக்குள் போகுமுன் முகம் அறியாவிட்டாலும் மனம் அறிந்த மூத்த வலைப்பதிவர் அம்மா திருமதி. கோமதி நடராஜன் அவர்கள் உடல்நலக் குறைவால் இறைவனடி சேர்ந்ததாக மனோ அண்ணா மற்றும் ராமலெஷ்மி அக்கா ஆகியோரின் பதிவில் பார்த்தேன். அம்மாவின் ஆத்மா சந்தியடைய நம் அனைவரின் சார்ப்பாக இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
மனசு வலைத்தளத்தில் முதன் முதலாக ஒரு தொடர்கதை ஆரம்பிக்கலாம் என்று எழுந்த எண்ணம் நீண்ட நாட்களுக்குப் பிறகு நண்பர்கள் சிலர் எழுதுறேன் எழுதுறேன்னு சொல்றே... எப்படா எழுதப்போறே என்று கேட்டதும் சரி படிக்க ஆளிருக்கு அப்ப எழுதலாம்ன்னு ஆரம்பிச்சதுதான் 'கலையாத கனவுகள்'.
ஆரம்பிக்கும் போது 30 பகுதிகளுக்குள் முடித்து விட வேண்டும் என்று ஆரம்பித்தது. கதையின் போக்கில் போய் நான் ஊருக்கு விடுமுறைக்குப் போகும் வரை 63 பகுதிகள் கடந்துவிட்டது. எல்லோரும் வாசிக்கிறார்களா... படிப்பவர்களுக்குப் பிடிக்கிறதா... தொடர்வோமா அல்லது நிறுத்தி விடுவோமா... என்ற சிந்தனைகளை எல்லாம் தொடர்ந்து வாசிக்கும் யோகராஜா அண்ணா, ஜெயக்குமார் ஐயா, தனிமரம் நேசன் என சிலரின் தொடர் வருகை சிறையிலிட்டுவிட்டன.
கல்லூரியில் ஆரம்பமாகும் சாதாரண காதல் கதைதான். குடந்தை ஆர்.வி. சரவணன் அண்ணன் போன்றெல்லாம் ஆர்ப்பாட்டமாக எழுத முடியவில்லை, இருப்பினும் நானும் தொடர்கதை எழுதுகிறேன் என்று எழுத ஆரம்பித்த கதை, சில இடங்களில் அட நீயும் நல்லாத்தான்டா எழுதுறே என எனக்கு நானே அட போட வைத்த பகுதிகளையும் உள்ளடக்கி நகர்ந்து நிற்கிறது.
ராமகிருஷ்ணன் (ராம்கி) - இவன் கதையின் நாயகன். ஏழைக் குடும்பத்தில் பிறந்து அம்மாவின் கனவுகளை நனவாக்க கல்லூரிக்கு வருகிறான். கல்லூரியில் அவனுக்கு ஏற்படும் பிரச்சினைகள், காதல் என கதை இவனை முன்னிருத்தியே நகர்கிறது.
புவனா - கல்லூரியில் எதற்கும் பயப்படாத புதுமைப்பெண். ராம்கியுடன் காதல் கொள்கிறாள். கல்லூரி ரவுடியான அண்ணன், ரவுடித்தனத்துக்கு பெயர்போன சித்தப்பா, எதற்கெடுத்தாலும் பயந்து திட்டும் அம்மா, எதையும் கண்டு கொள்ளாமல் இவள் மேல் பாசங்காட்டும் அம்மா என இவர்களைக் கடந்து ராம்கியுடன் காதல் கொள்கிறாள்.
வைரவன் - புவனாவின் அண்ணன் - கல்லூரியில் ரவுடியாக இருந்து சட்டக்கல்லூரியில் பயில்கிறான். தற்போது ரவுடித்தனம் குறைந்தாலும் எதற்கும் விட்டுக் கொடுக்கும் மனம் இன்னும் வரப்பெறாதவன்.
நாகம்மா - ராம்கியின் அம்மா. கிராமத்து வாழ்க்கைக்குப் பழக்கப்பட்டவள். மகள் சீதாவை அண்ணன் மகனுக்குக் கொடுத்துவிட்டு அவள் வாழ்க்கை சிறப்பா இல்லை என்று வருந்தியவள். அது சரியாக மூத்த மருமகள் இவளை எதிர்த்துப் போய்விட. சின்னவனான ராம்கியின் காதலுக்கு முதலில் எதிர்ப்பாய் இருந்து தற்போது கொஞ்சம் மாறுதலாகியிருக்கிறாள்.
மணி - புவனாவைக் கட்டிக்கொள்ள ஆசைப்படுபவன். ரவுடி என்பதைவிட கூலிக்கு கொலை செய்யப் போகும் ஆள். அப்படி ஒரு கோஷ்டியிடம் வாங்கிய வெட்டில் வீட்டில் முடங்கிக் கிடப்பவன்.
சரவணன், பழனி, அண்ணாத்துரை, சேவியர், அறிவு - இவர்கள் எல்லாம் ராம்கியின் நண்பர்கள். ராம்கியின் காதலுக்காக என்ன வேண்டும் என்றாலும் செய்வோம் என அவனிடம் சொல்லி அப்படியே நடப்பவர்கள்.
சேகர் + காவேரி - இருவரும் தற்போது திருமணமான இளஞ்சோடி, ராம்கியின் மச்சான் சேகர். ராம்கிக்கு எல்லாவகையிலும் உதவிகரமானவன்.
சீதா + முத்து - ராம்கியின் அக்காவும் அவளது கணவனும் - அடாவடித்தனம் செய்து ராம்கியின் நண்பர்களால் திருந்தியவன். தம்பியின் காதலுக்கு உதவ நினைக்கும் பாசக்கார அக்கா.
ராசு - ராம்கியின் அண்ணன், அம்மா பிள்ளையாக இருந்து பொண்டாட்டிதாசனானவன். சிங்கப்பூரில் இருக்கிறான்.
தமிழய்யா - ராம்கியும் புவனாவும் பெரும்பாலான பொழுதை கழிப்பது இவர் வீட்டில்தான். அம்மாவுக்கும் இருவரும் செல்லம். இவர்களின் காதல் தெரிந்தவர்.
இளங்கோ, சிவா, புவனாவின் அம்மா, அப்பா, சித்தி, சித்தப்பா என நிறையப் பேர் இருக்கிறார்கள்.
ஆமா, ஒருத்தரை மறந்துட்டேன் பார்த்தீங்களா... அதுதான் மல்லிகா, ராம்கியின் வகுப்புத்தோழி. முதலில் இவளைத்தான் விரும்புகிறானோ என புவனாவைச் சந்தேகப்பட வைத்தவள். இப்போது ராம்கியின் காதலுக்கு உதவி புவனாவுக்கு நல்ல தோழியாகிப் போனவள்.
என்னடா எல்லாரையும் அறிமுகம் செய்யுறேன்னு பாத்தீங்களா? மறுபடியும் தொடர்கதையை தொடர்ந்து விரைவாக முடிக்கலாம் என்ற எண்ணம்தான். நன்பர் தனிமரம் நேசன் அவர்கள் என்ன கதைய மறந்துட்டீங்களா.. இல்ல நிறுத்திட்டீங்களான்னு கேட்டார். எனவே மீண்டும் இவர்களின் காதலோடு பயணித்து அவர்களின் சந்தோஷத்தோடு தொடர்கதைக்கு ஜகா வாங்கிக்கலாம்ன்னு முடிவு எடுத்தாச்சு.
அதனால நாளைக்கு புதன்கிழமை என்பதால் 64-வது பகுதி வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை.
-'பரிவை' சே.குமார்.