மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

போட்டிக் கதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
போட்டிக் கதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 31 ஜனவரி, 2012

உருகும் உயிர் ( நேசம் + யுடான்ஸ் இணைந்து வழங்கும் விழிப்புணர்வு போட்டிக்கான கதை)

நேசம் மற்றும் யுடான்ஸ் இணைந்து நடத்தும் பாராட்ட வேண்டிய விழிப்புணர்வுப் போட்டி. இதில் கலந்து கொள்ளும் விதமாக எழுதப்பட்டதுதான் இந்தக் கதை. பரிசு வேண்டும் என்ற நோக்கில் எழுதப்படவில்லை. கலந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் இரண்டு மாத காலமாக எழுதாத நான் ஜனவரி 31 இரவு 10 மணிக்கு எழுதிய கதை இது. நல்லாயிருக்கிறதா இல்லையா என்பதை உங்கள் முடிவுக்காக...

நட்புடன்

-'பரிவை' சே,குமார்.

*******




ன்னவாம்... உங்காத்தா போன் பண்ணினோன தனியா போயி பேசினிங்களே என்ன?” முகத்தை ஒரு மாதிரி வைத்துக்கொண்டு கேட்டாள் தாரிணி.

“அப்பாவுக்கு உடம்புக்கு முடியலையாம்... அதான் அம்மா போன் பண்ணுச்சு...” வெறெதுவும் சொல்லாமல் தரையை பார்த்தபடி நின்றான் அருண்.

“ம்... என்னவாம் கிழத்துக்கு....”

அவளை முறைத்துப் பார்த்தான். “சரி... உங்கப்ப்ப்ப்பாவுக்கு...” அழுத்தமாக சொன்னாள்.

“தெரியலை... காச்சலா இருந்துச்சாம்... நைட்டெல்லாம் வாமிட் எடுத்தாராம்... ரொம்ப டயர்டா இருக்காராம்... ரங்கசாமி மாமா எதோ பச்சிலை மருந்து கொடுத்தாராம்... இருந்தும் பயமா இருக்குன்னாங்க...”

“சும்மா காச்சலுக்கு எதுக்கு ஊரைக் கூட்டுதாம்... நல்லாத்தானே நங்கு... நங்குன்னு திரியிறாரு... இவ்வளவு ஏன் ஒரு வாரம் முன்னாடி பானுமதி மக கல்யாணத்துல பிரசர் இருக்குன்னு இல்லாம ஆட்டுக்கறிய தின்னு தீத்தாரே... அவருக்கு என்ன வரப்போகுது...”

“ஏண்டி... உடம்பு முடியலைன்னு அம்மா போன் பண்றாங்க... வயசான அவங்களுக்கு நாமதான் ஆதரவு... ஆறுதலா நாலு வார்த்தை சொல்லாட்டியும் எதுக்கு இப்படி பேசுறே... நான் போயி என்ன எதுன்னு பாத்துட்டு வாரேன்...”

“அதானே பாத்தேன்... எங்க இன்னும் கிளம்பக் காணுமேன்னு பாத்தேன்... உங்கண்ணன் என்ன பண்றாராம்... ஒவ்வொரு முறையும் நாமதான் அழணுமா என்ன...”

“சும்மா இருடி... பெத்தவங்களுக்கு செய்யிறதுக்கு கணக்குப் பாத்துக்கிட்டு...”

“ஆமா... கொட்டிக்கெடக்கு... அவருக்கு போன் பண்ணி வரச்சொல்லி பாருங்க... சும்மா எப்ப பாத்தாலும் உங்காத்தா ஆ... ஊன்னா இங்கதான் போன் பண்ணும்... அவரையும்தானே பெத்தாங்க...”

“சரி... உம் பஞ்சாங்கத்தை மூடு... நான் பாத்துக்கிறேன்... எனக்கு தெரியும் என்ன பண்றதுன்னு...” என்றபடி ஊருக்கு கிளம்பினான்.

------------------------------------

வாப்பா...”

“என்னம்மா... அப்பாவுக்கு என்ன... எதுவும் சாப்பிடக்கூடாததை சாப்பிட்டுட்டாரா?”

“இல்லப்பா... கொஞ்ச நாளாவே அசதியாவே இருக்கும்பாரு... நேத்து ராத்திரியில இருந்து காச்சல்... வாந்தின்னு கெடக்குறாரு... பச்சில மருந்து கொடுத்தும் சரியா வரலை... டவுனு டாக்டர்கிட்டதான் பாக்கணுமாம்... அதான்...”

“அண்ணனுக்கு போன் பண்ணுனியா?”

“பேசினேன்... அவனுக்கு வேல இருக்காம்... தம்பிய கூட்டிக்கிட்டுப் போன்னு சொல்லிட்டான்...”

“ஆமா... அவருக்கு எப்பவும் வேலதான்... நா மட்டும் சும்மா இருக்கேனாக்கும்... செலவழிக்க அவருக்கு கஷ்டம்...”

“....” ஒன்றும் பேசாத தாய் மனம் பெத்தவங்களுக்கு செய்யிறதுக்கு ரெண்டு பேருக்குமே மனசில்ல... என்ன பண்றது... நாம பெத்த நேரம் அப்படின்னு நினைத்துக் கொண்டது.

“ஒண்ணும் பேச மாட்டியே... சரி... அப்பாவை கெளப்பு போவோம்...”

------------------------------------



ருண்... அப்பாவை நல்லா செக் பண்ணியாச்சு... அவருக்கு ஒண்ணுமில்ல... சாதாரண காய்ச்சல்தான்... ஆனா... அவரு புகையிலையை நிப்பாட்டுறது நல்லது...”

“எங்கே டாக்டர்... யாரு சொன்னாலும் கேக்க மாட்டேங்கிறாரு... ஒரு தடவை மஞ்சக் காமாலை வந்தப்போ சுருட்டை நிப்பாட்டியிருந்தாரு.... அப்புறம் வாய் நமநமன்னு இருக்குன்னு ஊர்ல அப்ப அப்ப புகையிலை வாங்கிப் போட்டாரு...... அப்புறம் பாக்கெட் பாக்கெட்டா வாங்கித்திங்க ஆரம்பிச்சிட்டாரு... அதனால எதாவது...” அப்பாவை பார்த்தபடி கேட்டான்

“என்ன நீங்க இப்படி கேட்டுட்டிங்க... படிச்சிருக்கீங்க... புகையிலைப் பழக்கத்துல இருக்கவங்களுக்குத்தான் அதிகமா புற்று நோய் வருது... அவருக்கு இப்ப இருக்க கண்டிசன்ல புற்று நோய் வர அதிக வாய்ப்பிருக்கு... வாயெல்லாம் அரிச்சிருச்சி... இதுவரைக்கும் சரி... இனி கண்ட்ரோலா இல்லைன்னா அனுபவிச்சித்தான் ஆகணும்... ஐயா புகையிலை போடுறத நிப்பாட்டிக்குங்க... ” என்று நிறைய புத்திமதிகள் சொன்னார்.

வெளியில் வந்ததும் “என்ன டாக்டர் சொன்னது புரிஞ்சதா... போயலை போடக்கூடாதாம்... போட்ட புத்து நோய் வந்து அவதிப்படணுமாம்... அந்த சனியனை நிப்பாட்டுங்க... சரியா...”

“ஆமா... சாவு எப்ப வரணுமின்னு இருக்கோ அப்ப வரத்தான் போகுது... போயலை போடுறதாலதான் வருதாக்கும்... அட போடா”

“அதானே நாம யார் சொல்லி கேட்டிருக்கோம். அம்மா.... நீ சொல்லி வையி... எதையாவது இழுத்து வச்சிக்கிட்டா நா வந்து பாக்க மாட்டேன்... ஆமா... சொல்லிப்புட்டேன்.”

------------------------------------



ன்ன அப்பாவுக்கு பாத்து விட்டுட்டு வந்தாச்சா... ஆமா உங்கண்ணன் வந்திருக்கமாட்டாரே... அவரு பொழக்கத் தெரிஞ்சவரு... நம்மளமாதிரியா...”

“இப்ப என்னடி... எதுக்கு இப்படி பேசிக்கிட்டு இருக்கே... உங்கப்பாவுக்கு உன்னோட அண்ணன் தம்பி பாக்கலையின்னா எப்படி துடிக்கிறே... எங்கப்பா அம்மாவுக்கு நா பாத்த மட்டும் கத்துறே... நாளைக்கு உனக்கு உம்பிள்ள பாக்காம விடுறப்போதான் இந்த வலி தெரியும்... சும்மா கத்துறதை நிப்பாட்டிட்டு வேலயப் பாரு...”

“என்னய அதட்டுங்க... நாந்தானே உங்களுக்கு கெடச்சேன்...”

“சை...” என்றவனின் மொபைல் சிணுங்கியது... “அடுத்த என்ன அழைப்பு... எதாவது வந்துக்கிட்டே இருக்குமே...” என்றாள் சத்தமாக.

“என்ன திவாகர்...”

எதிர்முனை சொன்னதைக் கேட்டதும் “என்னடா சொல்றே... சுப்பண்ணனா... எதோ உடம்பு முடியலைன்னாங்க... அவங்க மகன் சென்னையில வச்சிப் பாக்கிறதா சொன்னாங்க... எப்படிடா...”

“அப்படித்தாண்டா சொன்னாங்க... ஆனா அவருக்கு ரத்தப் புத்து நோயாம்... ஆள உருக்கிருச்சு... பச்சப் புள்ள மாதிரி கெடக்காருடா... இங்க காரியம் செய்யணுமின்னுதான் சென்னையில இருந்து கொண்டாந்திருக்காங்க... உடனே எடுத்துடுவாங்க... சீக்கிரம் வா...”

“சரி... வாறேன்...”

சுப்பண்ணனின் இறுதிச் சடங்கின் முடிவில் புற்று நோய் ஒழிப்புக்கான உறுதி மொழியை தோழர்கள் எடுத்துக் கொள்ள, தனது மொபைலில் அம்மாவை அழைத்து “அப்பா நமக்கு வேணும்மா... அவரை போயலையை குறைக்கச் சொல்லும்மா... இந்தா லெட்ச லெட்சமா செலவழிச்சும் காப்பாத்த முடியாம போயி சேர்ந்திட்டாரு... அப்பாவ மட்டுமில்ல நம்ம ஊர்ல போயலை, சிகரெட்டு பிடிக்கிற எல்லார்கிட்டயும் சொல்லி விடச் சொல்லும்மா...” என்றான் தேம்பலாய்...


-‘பரிவை’ சே.குமார்.

வெள்ளி, 24 செப்டம்பர், 2010

சினிமாக்களம் (சவால் சிறுகதை)



(சற்றே 'பெரிய' சிறுகதை - படம் அருளிய கூகிளாருக்கு நன்றி)

சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள ஒரு சிறிய குடியிருப்பின் மொட்டை மாடியில் பேசிக் கொண்டிருந்த அந்த நால்வருமே சினிமா ஆசையில் சென்னை வந்தவர்கள்.

"என்ன மாப்ளே... இன்னைக்கு போன காரியம் என்னடா ஆச்சு..?" என்று பேச்சை ஆரம்பித்தான் ரகு. இயக்குநராகும் ஆசையில் புதுக்கோட்டையில் இருந்து வந்தவன். நல்லா கதை எழுதுவான். நல்ல கதையம்சம் கொண்ட படங்களை இயக்கி பிரபல இயக்குநர்கள் வரிசையில் இருக்கும் சத்ரியனிடம் கடந்த சில மாதமாக உதவி இயக்குநராய் இருக்கிறான். அவரது தற்போதைய படம் இவனது கதைதான் என்பது அவனுக்கும் அவருக்கும் மட்டுமே தெரியும்.

"இயக்குநர் சங்கரை பல நாள் அலைச்சலுக்குப் பின்னர் இன்றுதான் பார்த்தேன்." என்று பேச்சை நிறுத்தினான் மதுரைக்காரனான சுந்தர். இவனும் இயக்குநர் ஆசையில் அதுவும் பிரமாண்ட இயக்குநர் சங்கரிடம் இணை இயக்குநராக பணிபுரிந்து தொழிலை கற்றுக் கொண்டு அடுத்த பிரமாண்ட இயக்குநராய் சன் பிக்ஸர்க்கு படம் பண்ண வேண்டும் என்பதை கொள்கையாய் கொண்டு சங்கர் அலுவலகத்துக்கு நடையாய் நடப்பவன்.

"என்னடா... அவரைப் பாத்தியா..? " ஆவலாய்க் கேட்டான் வசந்த், நடிகனாய் ஆகவேண்டும் என்று நெல்லையில் இருந்து வந்து சில படங்களிலும் சில மெகா தொடர்களிலும் தலை காட்டிக் கொண்டிருப்பவன்.

"இன்னைக்குதாண்டா மாப்ளே எங்கிட்ட பேசினாரு... நான் எழுதி பத்திரிக்கையில் வந்த கதையெல்லாம் காட்டினேன். அவருகிட்ட அசோசியேட்டா இருக்கவரு ஒருத்தரை பிரண்டாக்கி வச்சிருக்கேன். அவரும் சொன்னாரு... தம்பி இப்ப எந்திரன் பட ரீலீஸ் அது... இதுன்னு ரொம்ப பிஸி... இப்பக்கூட மலேசியா போறேன்... அடுத்த வாரம் வாங்க... அடுத்த ஸ்கிரிட் பற்றி டிஸ்கஷன் இருக்கு... நீங்களும் கலந்துக்கங்கன்னு சொல்லியிருக்காருடா..."

"ஹே... நம்மள்ள அடுத்த ஆளும் இணை இயக்குநராயிட்டான், அப்புறம் என்ன..." கோரஸாய் கத்தினர்.

"எப்படா பார்ட்டி... நாளைக்கு மகாபலிபுரம் போகலாமா?" என்றான் அந்த அணியின் பைனாஞ்சியர் ரமேஷ், இவனும் ரகுவும் சிறுவயது முதலே நண்பர்கள். பள்ளி, கல்லூரி மேடைகள் அவனை நல்ல பாடகனாக்கி வைத்திருந்தன. அதனால் பாடகனாக வேண்டும் என்று சென்னைக்கு வந்தவன். படித்த எம்.பி.ஏவை வைத்து நல்ல வேலையில் சேர்ந்து சம்பாதித்து வந்த வருமானத்தில் நண்பர்களுக்கும் அறைக்கும் செலவு செய்து கொண்டு அப்பப்ப பெற்றோருக்கும் பணம் அனுப்பவும் செய்தாலும் பாடகன் கனவு மனதுக்குள் நிறைய விழுதுகளை விட்டுக் கொண்டேதான் இருக்கிறது.

"என்ன பார்ட்டின்னாலும் எங்க மூணு பேர்கிட்டயும் இப்ப சல்லிக்காசு பெயராது. நீதான் செலவு பண்ணனும்... அவனுக்கு பணம் கையில் கெடச்சதும் உனக்கு திருப்பிக் கொடுத்துடுவான் இல்லடா மாப்ளே..."

"அட ஏண்டா... நீங்க வேற... அவருகிட்ட சேர்ந்த பின்னாடி கண்டிப்பா பார்ட்டி வைக்கிறேன் மாப்ளே... அது வரைக்கும் ஆளைவிடுங்க்டா சாமிகளா... இந்த ரகு இன்னம் பார்ட்டி வைக்கலை... அதுக்குள்ள என்னைய கேக்க ஆரம்பிச்சிட்டிங்க..."

"மாப்ளே... பார்ட்டி வைக்கிறது பெரிய விஷயமில்லைடா... இப்ப எங்கிட்ட காசேயில்லைடா... எல்லாத்துக்கும் ரமேஷ்கிட்ட கேட்டா நல்லாயிருக்காதுடா...படம் எடுத்து முடிச்சதும் என்னோட கதைக்கு பணம் தர்றேன்னு சொல்லியிருக்காருடா... கிடைச்சதும் கண்டிப்பா பார்ட்டி வச்சிடலாம்... என்ன ஒகேவா..."

"அதுக்கு என்னடா இப்ப அவசரம்... நீ சீக்கிரம் படம் எடுக்கணும் அதுதாண்டா எங்க ஆசையெல்லாம்..."

"கண்டிப்பா நடக்குமுடா... நான் எடுக்கப்போற படத்துக்கான கதையெல்லாம் ரெடியாத்தாண்டா வச்சிருக்கேன். இப்ப அமையாதுடா... இன்னும் கொஞ்ச நாளாகுமுடா...பார்க்கலாம் எல்லாம் கடவுள் செயல்... நான் எடுக்கிற படத்துல கண்டிப்பா நீ பாடுறே... இவனும் நல்ல கதாபாத்திரத்துல நடிக்கிறான்... அதுல எந்த மாற்றமும் இல்லைடா..."

"நான் இல்லையா?" என்றான் சுந்தர்.

"நீதான் பெரிய பட்ஜெட் இயக்குநர்கிட்ட சேர்ந்துட்டியே... அப்புறம் என்ன பெரிய பட்ஜெட் படமாத்தான் இயக்குவே... யார்கண்டா நான் களவாணி மாதிரி படம் பண்றப்போ நீ எந்திரன் மாதிரி படம் பண்ணி எனக்கே போட்டியா நின்னாக்கூட நிப்பே" என்று சொல்லி ரகு சிரிக்க, வசந்தும் ரமேஷூம் சேர்ந்து கொண்டனர்.

"போங்கடா அங்கிட்டு... நீங்கள்லாம் இல்லைன்னா இந்த சென்னையில நான் யாருடா... கடவுள் புண்ணியத்துல நான் நல்ல நிலைக்கு வந்தாலும் வராட்டாலும் கடைசி வரைக்கும் எனக்கு எல்லாமே நீங்கதான்டா... பணம் காசு வந்ததும் குணத்தை மாத்திக்கிற சாதி நான் இல்லைடா..."

"சே... என்னடா மாப்ளே... உன்னையப் பத்தி தெரியாதா... சும்மா ஒரு ஜாலிக்காக சொன்னேன்..." என்ற ரகுவின் செல்போன் 'உன் பெயர் சொல்ல ஆசைதான்...' என்று அழைக்க, "மாப்ளக்கு தங்கச்சிக்கிட்ட இருந்து போன் வந்தாச்சு... இனி இப்ப படுக்க வரமாட்டான்... " என்று வசந்த் நண்பர்களிடம் சொல்ல எல்லாரும் சேர்ந்து சிரித்தனர்.

"போங்கடா... படுங்க வாரேன்..." என்றபடி போனை ஆன் செய்து மொட்டைமாடி கட்டைச் சுவற்றில் அமர்ந்து "ம்... சொல்லும்மா..." என்று பேச ஆரம்பித்தான்.

*****

சில வாரங்கள் ஓடிய நிலையில் படப்பிடிப்பு முடிந்து கிளம்பிய ரகுவை இருக்கச் சொன்னார் இயக்குநர். சரி இன்னைக்கு பணம் தருவார் நாளைக்கு மகாபலிபுரம் போயிடலாம் என்று மனதிற்குள் நினைத்துச் சந்தோஷப்பட்டுக் கொண்டான்.

தயாரிப்பாளருடன் பேசிவிட்டு வந்த இயக்குநர் "வா ரகு... கார்ல போகயில பேசிக்கிட்டே போகலாம்..." என்றார்.

அண்ணாசாலை போக்குவரத்து நெரிசலில் சிக்கித் திணறி போய்க் கொண்டிருந்த காரை ஓட்டியபடி "ரகு உனக்கு ஒண்ணும் வேலையில்லையே..." என்று கேட்டார்.

"இல்லண்ணே... என்ன விசயம்?"

"அடுத்த படத்தைப்பத்தி உங்கிட்ட கொஞ்சம் பேசணும்... அதான்..."

"எங்கிட்ட எண்ணன்னே பேச இருக்கு... எப்ப ஆரம்பிக்கப் போறோம்."

"சொல்றேன்... அப்படியே பீச்சுக்குப் போயி பேசலாமா..?"

"ம்... போகலாண்ணே..." என்றபடி செல்போனை எடுத்து ரமேஷூக்கு போன் செய்து, "மாப்ளே நான் எங்க டைரக்டர் அண்ணங்கூட இருக்கேன்... லேட்டாத்தான் வருவேன் " என்று சொல்லி வைத்த போது கார் சிவாஜி சிலையில் திரும்பி பீச்சுக்குள் நுழைந்தது.

காரை பார்க் செய்துவிட்டு இறங்கி, கூட்டமில்லாத பகுதியில் நடந்து கடலோரத்தில் இருந்த ஒரு படகின் முனையில் இருவரும் ஏறி அமர்ந்தனர்.

சிகரெட் ஒன்றை எடுத்துப் பத்தவைத்தபடி அவனிடம் பாக்கெட்டை நீட்ட அவனும் ஒன்றை எடுத்துக் கொண்டான்.

"சொல்லுங்கண்ணே..."

"அடுத்த படம் பண்றது தொடர்பா ரெண்டு நாளைக்கு முன்னாடி முன்னணி தயாரிப்பாளர் பரிசல்காரன் சார்கிட்ட பேசினேன்."

"அண்ணே அவர் பண்ற எல்லாபடமும் சூப்பர் ஹிட்டுண்ணே.... அடுத்தது அவர் படமா.... கிரேட்ண்ணே... ஆமா அவரு என்னண்ணே சொன்னார்... பண்ணலாம்ன்னு சொன்னாரா..."

"ம்... நல்லா பண்ணலாம்ன்னு சொன்னார்... ஆனா கிராமத்து சப்ஜெக்ட் வேண்டாங்கிறார்...:

"அப்புறம் என்ன சப்ஜெக்ட் வேணுமாம்... கிராமத்துக் கதையில உங்களை அடிச்சுக்க ஆளே இல்லைன்னு இருக்கப்போ ஏன் வேண்டாங்கிறார்."

"அவரு சொல்றதும் கரெக்ட்தான்... வரப்போற எந்திரன் தமிழ் படத்தோட டிரண்டை மாத்துதோ இல்லையோ வித்தியாசமான கதைகளை இயக்குநர்களை தேட வைக்கும் என்பது மட்டும் உண்மை. அப்ப நாம பண்ற படத்துலயும் கிராமியக்கதைக்குப் பதிலா சற்று மாறுதலா க்ரைம் கதை பண்ணினா நல்லாயிருக்குமுல்ல அப்படின்னு சொல்றாரு..."

"ஆமாண்ணே... அவரு சொல்றது சரி தானே ஒரு காதல் கோட்டை வந்தது... அதுக்குப் பின்னால பார்த்தா பார்த்து, பாக்காம, டெலிபோன் அப்படின்னு எத்தனையோ காதல்கள். ஒரு சுப்ரமண்ய புரத்துக்குப் பின்னால வட்டார வழக்கை அப்படியே வழங்கி எத்தனையோ படங்கள்... அதுமாதிரி இதுவும் டிரண்டை மாத்தலாமில்லையா..? நீங்க க்ரைம் கதை பண்ணலாமுன்னு சொல்லிட்டு வரவேண்டியதுதானே..."

"இதுல இன்னொரு பிராப்ளம் இருக்கு ரகு... சாதாரணமாக க்ரைம் சப்ஜெக்ட்டு ஒண்ணு ரெடி பண்ணிக்கிட்டு வான்னா நாம ரெடி பண்ணலாம். அவரு என்னன்னா ஒரு இங்கிலீஷ் ரைட்டரோட நாவலோட தமிழாக்கத்தை படிச்சிட்டு சில இடங்களை அடிக்கோடிட்டு கொடுத்து இருக்காரு. அதை நல்லா படிச்சுப் பார்த்துட்டு அதை தீமா வச்சு நல்ல கதை ரெடி பண்ணிக்கிட்டு வா கண்டிப்பா பண்ணலாம்ன்னு சொல்றார்..."

"ப்பூ... இவ்வளவுதானா... அதுக்கென்னன்னே நல்ல கதையா ரெடி பண்ணிடலாம்..."

"அதுக்குத்தான் உன்னைய கூட்டியாந்தேன்... இது நம்ம ரெண்டு பேரைத்தவிர வேற யாருக்கும் தெரியக்கூடாது... இப்ப பண்ணிக்கிட்டிருக்கிற கதை மாதிரி சீக்ரெட்டா இருக்கணும்..."

"அது சரிண்ணே... நான் யார்கிட்டண்ணே சொல்லப் போறேன்..." என்றபோது அவனது செல் 'உன் பேர் சொல்ல...' என்ற போது கட் செய்தான். மீண்டும் அடிக்க, "எடுத்துப் பேசு உன் பிரண்ட்ஷாத்தான் இருக்கும்" என்றார்.

"ம்... என்னடா... டைரக்டர் சார்கூட முக்கியமான டிஸ்கஷன்ல இருக்கேன். அப்புறம் கூப்பிடுறேன்" என்றபடி பதிலுக்காக காத்திருக்காமல் கட் செய்தான். பின்னர் இயக்குநரிடம் "அண்ணே அந்த புத்தகத்தைக் கொடுங்க..."என்றான்.

"கார்ல இருக்கு... வா... தர்றேன் பாரு... எழுத முடியுமான்னு பாரு... முடியலைன்னா வேண்டான்னு சொல்லிட்டு வேற தயாரிப்பாளர்கிட்ட பேசலாம்..."

"செய்யலாம்ண்ணா....எனக்கு ஒருவாரம் டயம் கொடுங்க சூப்பர் கதை ரெடி பண்ணலாம்" என்றான் முழு நம்பிக்கையுடன்.

"இந்த நம்பிக்கைதான் எனக்கு உங்கிட்ட ரொம்ப பிடிச்சது... நாளைக்கு நீ பெரிய ஆளா வருவேடா..." என்று முதுகில் தட்டினார்.

"எல்லாம் உங்க ஆசிர்வாதம் அண்ணா" என்று நெஞ்சில் கை வைத்துக்கொண்டான்.

இருவரும் காருக்கு வந்ததும் அவர் கொடுத்த புத்தகத்தை வாங்கிப் பார்த்தான் அடிக்கொடிட்ட பக்கங்களின் அடையாளத்துக்கு பேப்பர் வைக்கப் பட்டிருந்தது. பிரித்துப் படிக்க ஆரம்பித்தான். அதில் சிலவற்றை படித்துப் பார்த்தான்... பின்னர் ஒரு சில பத்திகளை மறுபடியும் சொல்லிப் பார்த்துக் கொண்டான்.

'டாக்டர் அகன்றதும் காமினி எழுந்து தன் முகத்தில் இருந்த மாஸ்கை அக்ற்றிவிட்டு, வயர்களையெல்லாம் பிடுங்கி விட்டு அருகிலிருந்த கண்ணாடி ஜன்னலைத் திறந்து வெளியே குதித்தாள்.'

'“ஸாரி.. எனக்கு வேற வழி தெரியலை” என்று காமினியின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தான் சிவா.'

'"காமினி... வெல்டன்.. எப்படியோ போலீஸ் கண்ல மண்ணைத் தூவிட்டு இந்த டைமண்டைக் கொண்டு வந்துட்டியே” என்று பாராட்டினார் பரந்தாமன்."' புத்தகத்தை மூடி வைத்தான்.

"என்ன ரகு... முடியுமா?"

"கண்டிப்பா முடியும்... எனக்கு இந்த புத்தகம் வேணும்... இந்தக் கதைய ஒரு தடவை படிச்சேன்னா நல்ல ஐடியா கிடைக்குமுன்னு நினைக்கிறேன்...."

"எடுத்துக்க... சீக்கிரம் ரெடி பண்ணு..."

"சரிண்ணே..."

"அப்புறம்... இன்னம் பணம் வரலை... வந்ததும் பேமண்ட் வாங்கிக்க... செலவுக்கு காசிருக்கா... இந்தா இதை வச்சுக்க்க..."என்று இரண்டு நூறு ரூபாய் நோட்டை அவனது பாக்கெட்டில் திணித்தார்.

"வேண்டாண்ணா... அப்புறம் வாங்கிக்கிறேன்..."

"இருக்கட்டும் ரொம்ப சந்தோஷமா இருக்குப்பா... வீட்டுக்குப் பொயிட்டு பரிசல்காரன் சார்கிட்ட ஒரு வாரத்துல கதையோட வாரேன்னு சொல்லிடுறேன்..."

"சரிண்ணே... என் ரூம் வந்தாச்சு...நான் இங்க இறங்கிக்கிறேன்..."

"சரி பாத்துப் போப்பா... வரட்டா"

*****

"என்னடா மாப்ளே... அடுத்தபட டிஸ்கஷனா...?" என்று கேட்டான் சுந்தர்.

"ஆமாடா..."

"மறுபடி உன்னைய கதை எழுதச் சொன்னாரா...?" கோபமாய் கேட்டான் வசந்த்.

"------"

"என்னடா... அப்ப அடுத்த கதைய நீ எழுதப் போறியா... அவன் லெட்சம் லெட்சமா சம்பாதிக்க நீ கதை எழுதிக் கொடுக்கிற... உன்னோட முதக் கதைக்கு இன்னும் ஆயிரம் ரூபா கூட தரலை அதைப்பத்தி எதாவது கேட்டியா... வேற டைரக்டர்கிட்ட டிரைப் பண்ண வேண்டியதுதானே..."

"அங்கயும் இதே கதை இருக்காதுண்ணு என்னடா நிச்சயம்? விடுங்கடா"

"நீ திருந்தமாட்டே..."

"இல்லடா... இன்னும் பணம் வரலைன்னு சொன்னாரு... வந்ததும் தர்றேன்னாருடா... சரி வாங்க சாப்பிட போகலாம்.

'உன் பேர் சொல்ல ஆசைதான்...' போன் அழைக்க...

"ம்... சொல்லும்மா..."

"எங்க இருக்கே... ரூமுக்கு வந்துட்டியா..?"

"இப்பத்தான் வந்தேன்... இன்னைக்கு உன்னோட ரெக்கார்டிங் முடிஞ்சதா?"

"அப்பா... இப்பவாவது கேக்கணுமின்னு தோணுச்சே... முடிஞ்சாச்சு"

"சாரிம்மா... காலையில இருந்து நல்ல வேலை... படம் பினிசிங்ல இருக்கதால அங்க இங்க நகர முடியலை... அப்புறம் டைரக்டரோட பீச்சுல டிஸ்கஷன் அதான்"

"என்ன அடுத்தபடத்துக்கு கதை எழுதச் சொன்னாரா... இந்தப்படத்துக்கே இன்னம் பணம் தரலையில்ல...முதல்ல பணத்தைக் குடுங்க... அப்புறம் எழுதுறேன்னு சொல்ல வேண்டியதுதானே"

"அது எப்படிம்மா... முகத்துல அடிச்சமாதிரி கேக்கிறது... வரட்டும் கேக்கலாம்... "

"சரி... நான் இன்னைக்கு ரிக்கார்டிங் தியேட்டர்ல புரடியூசர் பாலாஜிகிட்ட உனக்காக பேசினேன்... நல்ல கதையோட வரச்சொல்லும்மா... கதைய பாத்துட்டு சொல்றேன்னு சொல்லியிருக்காரு... நல்ல கதையா ரெடிபண்ணிட்டு சொல்லு... அவரைப் போயி பாக்கலாம்..."

"சரிம்மா... எங்க டைரக்டரோட வேலையை முடிச்சிட்டு நல்ல கதைய ரெடி பண்றேன்..."

"சரி.... சாப்பிட்டியா?"

"இல்ல இப்பத்தான் கிளம்புறோம்.... பாத்துக்க... குட்நைட்... நாளைக்கு பார்ப்போம்."

"ஏய்... காமினி என்னடா சொல்றா?"

"தெரிஞ்ச புரடியூசர்கிட்ட பேசியிருக்காளாம்.... கதையோட வரச்சொல்லியிருக்காராம்..."

"வாவ்.... ஹே......... கூஊஊஊஊஊ" என்று கத்தியபடி அவனை தூக்கினர்.

"மாப்ளே முதல்ல நல்ல கதைய ரெடிபண்ணு.... கண்டிப்பா வாய்ப்பு கிடைக்கும். இந்த புத்தகத்தை ஒரு மூலையில் வைடா"

"இல்லடா... எங்க டைரக்டர் பணம் தரலைன்னாலும் நா எழுதித்தாரேன்னு சொன்னதும் பணம் தாரேன்னு சொன்னாரோ இல்லையோ மகிழ்ச்சியில இரு நூறு ரூபா பாக்கெட்டுல வச்சிட்டுப் போனாருடா... அவரை ஏமாத்த எனக்கு மனசில்லைடா.... மூணு நாள்ல ரெடி பண்ணிட்டு எனக்கான கதையை ரெடி பண்ணலாம்... இந்த வாய்ப்பு கிடைச்சா... நீ கண்டிப்பா பாடுறே.... இவன் நடிக்கிறான்... சரி வாங்க... இன்னைக்கு கையேந்திபவன் வேண்டாம்... நல்ல ஒட்டலுக்குப் போகலாம்... சந்தோசமாய் எஞ்சாய் பண்ணலாம்..." என்றான் கண்டிப்பாய் இயக்குநராவோம் என்ற நம்பிக்கையில் ரகு.

-'பரிவை' சே.குமார்.

குறிப்பு: நண்பர் பரிசல்காரன் அவர்கள் அறிவித்த சிறுகதைப் போட்டிக்கான கதைக்கான கதை இது. சிறுகதைப் போட்டி குறித்து அறிய இங்கே கிளிக் செய்து படியுங்கள்... நீங்களும் எழுதுங்கள்.

இந்தக் கதைக்கான உங்கள் கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.