மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வெள்ளி, 30 ஜூலை, 2010

வறுமை


கானல் நீராய் கனவுகள்
வானவில்லாய் எண்ணங்கள்
மழை மேகமாய் கற்பனைகள்
அமாவாசையாய் ஆசைகள்
இருந்தும் பயன்...?

தூரத்து நட்சத்திரமாய்
பொருளாதாரம்...
வானத்து நிலவாய்
வளர்ந்து தேயும் வாழ்க்கை..!

-----------

ஊரெங்கும் கொண்டாட்டம்...
அம்மனுக்கு ஆராட்டு...
அதே நாளில் கிறிஸ்தவர்
பகுதியிலும் விழா...
அது மட்டுமா?
முஸ்ஸீம்களின் சந்தனக்கூடு...
எங்கு பார்த்தாலும்
விழாக்காலம்...
நாங்கள் மட்டும்
எச்சில் இலைக்காக
ஏங்கியபடி...!

(இந்தக் கவிதை நான் தேவகோட்டை கல்லூரியில் வேலை பார்த்தபோது இதயா மகளிர் கல்லூரியில் வெளிவந்து கொண்டிருக்கும் இதய வீணை முத்திங்கள் இதழில் வெளியானது)

-'பரிவை' சே.குமார்.

வியாழன், 29 ஜூலை, 2010

மனசைப் பாதித்த சில...



பாலைவன வாழ்க்கையில் பெற்றதும் இழந்ததும் என்று மனோ சாமிநாதன் அம்மா அவர்கள் கட்டுரை எழுதியிருந்தார்கள் (படிக்க : பகுதி-1 , பகுதி-2.) அவர்களது கட்டுரையில் எல்லாமே இங்கு நடந்த, நடந்து கொண்டிருக்கிறவைகளைத்தான் அதில் தெரிவித்திருந்தார். அதன் தாக்கமாக நானும் சிலவற்றைப் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

சில நாட்களுக்கு முன்னர் எங்களால் சார் என்று அழைக்கப்படும் நாங்கள் மிகவும் மதிக்கும் கர்நாடகாவைச் சேர்ந்த இஞ்சினியர் ஒருவரின் வாழ்வில் நிகழ்ந்த அந்த சோகம் யாருக்குமே நிகழக்கூடாது என்பதே என் வேண்டுதல்...

அது....

அவர் ஏறக்குறைய இருபது வருடங்களுக்கு மேலாக இந்த பாலைவன பூமியில் இருக்கிறார். இடையிடையே குடும்பத்தையும் கொண்டு வந்து வைத்திருந்திருக்கிறார். நான் இங்கு வந்த பிறகு ஒருமுறை குடும்பத்தை கொண்டு வந்து வைத்திருந்தார். அவருக்கு ஆஸ்திக்கு ஒன்று ஆசைக்கு ஒன்று என இரண்டு பிள்ளைகள். இருவரையும் நல்லா படிக்கவைத்து வேலைக்கும் போகிறார்கள்.

அவரது பெண்ணுக்கு 23 வயது இருக்கும். இவர் ஒவ்வொருமுறை ஊருக்குப் போகும்போதும் மகளுக்கு நகைகள் வாங்கிக் கொண்டு போவார். ஊருக்குப் போனால் மகளை சென்னைக்கு அழைத்துச் சென்ற வேண்டும் என்கிற பட்டுப்புடவைகளை வாங்கி கொடுத்து மகிழ்வார்.

சில தினங்களுக்கு முன் எங்கள் வெள்ளிக்கிழமை விடுமுறைக்காக எங்கள் அறைக்கு வந்திருந்து பிரியாணி செய்து சாப்பிட்டு சந்தோஷமாக கழித்தார். மறு நாள் காலை அவர் கிளம்பும்போது ஊரில் இருந்து போன் வந்துள்ளது. மகளுக்கு உடலநிலை சரியில்லை என்று சொல்லி சாதாரண காய்ச்சல்தான் என்றதும் அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல சொல்லிவிட்டு தனது இருப்பிடத்துக்கு கிளம்பி இருக்கிறார். நிலமை சீரியஸ் என்று சில மணி நேரங்களில் மகன் போன் செய்யவும் அண்ணாவிடம் போனில் சொல்லியிருக்கிறார்.

அதன் பிறகு மருத்துவமனையில் குளுக்கோஸ் போடுவதாகவும் கவலைப்பட வேண்டாம் என்றும் மகன் போன் செய்ய, அவரும் அலுவலக வேலையில் ஐக்கியமாகிவிட்டார். இரவு அண்ணன் போன் செய்ய, காய்ச்சல் கொஞ்சம் சிவியராத்தான் இருக்காம். குளுக்கோஸ் போய்க்கிட்டு இருக்காம் என்றதும் அண்ணா நீங்க உடனே ஊருக்கு போங்கள் என்றார். அதற்கு இல்லப்பா இப்பதான் பொயிட்டு வந்தேன் சாதாரண காய்ச்சல்தானாம் சரியாயிடும் என்றார்.

'அன்று இரவு அவர் யாருக்காக இத்தனை வருடங்கள் இந்த பாலைவன பூமியில் சம்பாதித்தாரோ அந்த தங்கம்... அவரது இதயம்... நினைவில்லாத நிலையிலேயே மரணித்து விட்டாள். தங்கக் கிளியாக வளர்த்த தந்தை முதல் நாள் சென்றிருந்தால் தனது ஆசை மகளுடன் எதாவது பேசியிருக்க்கலாம். ஆனால் அவள் இறந்த பிறகு சென்ற தந்தைக்கு அவளின் உயிறற்ற உடலுக்கு கடன் செய்வதுமட்டுமே மிஞ்சியது. இதை விட கொடுமை என்ன இருக்க முடியும் சொல்லுங்கள்?



இந்த சம்பவம் குறித்து நான் தற்பொழுது செல்லும் கவர்மெண்ட் அலுவலகத்தில் தமிழ் நண்பருடன் பேசும்போது, அவர் சொன்ன தகவல் என்னை இன்னும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது...

அது...

அவர் இங்குள்ள கிளினிங் கம்பெனிக்கு வேலைக்கு வந்து ஆறு மாதத்தில் அப்பா இறந்துவிட இரவெல்லாம் அழுது காலையில் கம்பெனியில் கேட்டபோது, ' கிளினிங் கம்பெனியில் இரண்டு வருடத்துக்கு ஒருமுறைதான் விடுப்பு வழங்கப்படும். வந்த ஆறுமாதத்தில் எப்படி விடுமுறை கிட்டும்' என்று எதேதோ பேசி, நீ போய் என்ன செய்யப் போறே என்று அவரை விடவில்லையாம். இந்த தகவலை அவர் சொன்னபோது அவரது கண்களில் கண்ணீர் அணை கட்டியதை நான் பார்த்தேன்.

இங்கு படித்தவர்கள் அலுவலகங்களில் குளிர்சாதன அறைக்குள் அமர்ந்து வேலை பார்த்து நல்லா சம்பாதிக்கலாம். படிக்காமல் கட்டிட வேலைகளுக்கு வருவோர் அடிக்கும் வெயிலில் நாப்பது, அம்பது மாடி கட்டிடங்களில் வேலை செய்து குறைந்த சம்பளத்தை வாங்கி அதற்குள் இங்கும் செலவு செய்து, ஊருக்கும் அனுப்பி அவர்கள் படும்பாடு சொல்லிமாளாது.

இதில் இன்னொன்று இங்குள்ள நண்பர்கள் வார விடுமுறை என்றாலே எதோ தண்ணி அடிப்பதற்காகவே விடுவது போல் காலையில் இருந்து இரவுவரை பாட்டிலுடன் தான் குடும்பம் நடத்துகிறார்கள். தண்ணியடித்துவிட்டு இவர்கள் அடிக்கும் லூட்டியை ஊரில் இருக்கும் இவர்களது குடும்பம் அறிய வாய்ப்பில்லை.

முன்னர் தங்கியிருந்த் கட்டிடத்தில் நாங்கள் இருந்த பிளாட்டில் தங்கியிருந்த சென்னையைச் சேர்ந்த இளைஞர் குடி குடி என்று இருந்து மோசமான நிலைக்குப் போய் மருத்துவமனையில் காண்பித்தும் குடியை நிறுத்தாததால் ஒரு நாள் காலை பாத்ரூமிற்குள் சென்றவர் அட்டாக்கில் அதற்குள்ளேயே இறந்துவிட, போலீஸ் வந்து பாத்ரூம் கதவை அறுத்து எடுத்தது.

இதில் ஒரு கொடுமை என்னவென்றால் அவருக்கு திருமணமாகி ஆறே மாதம்... அதுவும் காதல் திருமணம். இவரது குடியால் இறந்தது இவரென்றால்... இருந்தும் அழிந்தது அந்த இளம்பெண்ணின் வாழ்க்கையல்லவா?

என்னடா இவன் ஒரே சோகமாக அடுக்குகிறானே என்று நினைக்காதீர்கள் நண்பர்களே... பணம் காய்க்கும் வெளிநாட்டு வாழ்க்கைக்குள் வெளிச்சத்திற்கு வராத இது போன்ற எத்தனையோ சோகங்கள் உண்டு.

இத்தனையும் கடந்து சம்பாதித்து ஊரில் உள்ளாவர்களை சந்தோஷமாக வைத்துக் கொள்கிறார்கள் என்பது எல்லோரும் அறிந்த உண்மை.

நண்பர் புலவன் புலிகேசி போபால் குறித்த பதிவுகளுக்காக போபால் என்ற வலைப்பூ ஒன்றை தொடங்கியுள்ளார். அதில் யார் வேண்டுமானாலும் போபால் கொடுமைகள் குறித்து எழுதலாம். அந்த வலைப்பூ படிக்க இங்கே சொடுக்கவும். வலைப்பூ குறித்த நண்பரின் விளக்கம் இங்கே.


-'பரிவை' சே.குமார்.



செவ்வாய், 27 ஜூலை, 2010

பேரம்

(Thanks : Google)


"ம்பா... பழம் என்ன வெல..?"

"வெலயக்கேட்டு வாங்கப் போறியா பெரிசு... காலையில வந்து கடுப்பேத்தாதே..."

"என்னப்பா... காலையில வர்ற யாவாரத்துக்கிட்ட இப்புடி பேசுறியே நீ யாவரம் பாத்து கிழிச்சியல்ல"

"சரி... என்ன வெல வேணும் உனக்கு"

"பழ விலைதான் கேப்பாங்க... அப்புறம் பழக்கடைக்கு வந்துட்டு ஆடு வெலயாக் கேப்பாங்க"

"நல்லா பேசுற பெரிசு... பொத்தாம் பொதுவுல பழ வெல கேட்டா எதை சொல்ல... ம்... சரி... ஆப்பிள் அறுவது, ஆரஞ்சு முப்பது, திராட்சை இருபத்தி அஞ்சு, வாழப்பழம் டஜன் பதினெட்டு, சாத்துக்குடி நாப்பது..."

"இருப்பா...அடுக்கிக்கிட்டே போறே... நாப்பத்தஞ்சு ரூபான்னு ஆப்பிள்ல ஒரு கிலோ போடுப்பா"

"என்னது நாப்பத்தஞ்சா... அட போ பெரிசு, காலையில வந்து கழுத்தறுக்காம... எனக்கு அடக்கமே அம்பத்தஞ்சாகுது. அறுபதுக்கு குறைஞ்சு இல்ல"

"ஏம்ப்பு விக்கத்தானே வச்சிருக்கே... நான் கேக்குறது சரியின்னு படலைன்னா நீ கொடுக்கிறவிலைய சொல்லு அதை விட்டுட்டு..."

"பெரிசு அடக்கம் அம்பத்தஞ்சு அதுக்கு வேணா தாரேன். எனக்கு லாபம் இல்லாட்டாலும் பரவாயில்லை"

"ஆமா... நீ கூட லாபம் இல்லாம கொடுப்பே... அம்பதுன்னு போடுப்பா..."

"இல்ல பெரிசு... முத கிராக்கி தட்டிபோனா அப்புறம் எல்லாமே தட்டிப்போகும்... அம்பத்தி மூணுன்னு போடுறேன்..."

"சரி போடு... ம் அந்த பழத்தைப் போடு. இது வேணா அடிபட்டிருக்கு பாரு. நல்லதா போடு"

"எம் பெரிசு எங்க அடிபட்டிருக்கு... சும்மா ஏம்ப்பு.?"

"காசு கொடுத்துதானே வாங்குறோம்... சும்மாவா தாரே"

"அது சரி..."

"இன்னொரு பழம் ஒண்ணு போடுப்பா..."

"நிறுவையெல்லாம் கரெக்டா இருக்கும்ப்பு... வேணும்மா பக்கத்து கடையில கொடுத்து அளந்து பார்த்துக்க"

"ஆமா இதுக்காக நான் அவன் கடைக்கு போறேன். அட ஏம்ப்பு நீ வேற..."

"இந்தாங்க அம்பத்தி மூணு கொடுங்க"

"இருப்பு... முப்பதுன்னு சாத்துக்குடி ஒரு கிலோ குடு"

"சும்மா போ பெரிசு... இதுக்கு காசை குடுத்துட்டு அடுத்த கடையில வாங்கிக்க"

"ஆமா உங்கடையில ஆப்பிளு வாங்கிட்டு அடுத்த கடைக்கு போறேன்... எவ்வளவுன்னா கொடுப்பே..."

"முப்பத்தஞ்சுன்னு போட்டு வாங்கிக்க"

"சரி கொடு..."

"பாரு இதுலயும் அடிபட்டதை கொடுக்கப் பாக்குறே... நல்லதா போடுப்பா"

"ஏம் பெரிசு லேசா அடிபட்டதெல்லாம் வேண்டான்னா நான் எப்படி யாவாரம் பண்றது?"

"அதுக்கு நாந்தே கெடச்சனா... எவனாவது கிராமத்துல இருந்து முழங்காலுக்கு எத்திக்கட்டின வேட்டியும் வெத்து உடம்புமா வருவான் அவன் தலையில கட்டு..."

"அட இங்க பார்ரா பெரிசுக்கு லொல்லை... நீங்க எங்க இருந்து வாரீங்க... அமெரிக்காவுல இருந்தா... நீயும் பட்டிகாடுதானே... அப்புறம் என் இப்புடி அள்ளிவிடுறே..."

"என்ன பண்ண கிராமத்தான்னா ஏமாத்திடுவீங்கள்ல"

"சரிதான்... சரியான ஆளுதான். இந்தா புடி..."

"அப்புடியே வாழப்பழம் ஒரு டசன் கொடு"

"அப்பு இதுல கொறைக்க முடியாது... பதினெட்டுனா தர்றேன்... இல்லேன்னா இதுக்கு மட்டும் காச கொடு"

"அட ஒரு ரெண்டு ரூபா கம்மி பண்ணி கொடுப்பா..."

"அதானே பாத்தேன்... அது எப்புடி அதே வெலக்கு வாங்குவே... என்னாகுறது உன்னோட தீர்மானம்... சரி புடி இன்னைக்கு காலையில உங்கிட்ட மாட்டணுமுனு இருந்திருக்கு...ம்... அம்பத்தி மூணும் ஒரு முப்பத்தஞ்சும் எம்பத்தெட்டு... இது ஒரு பதினாரு... அப்பு நூத்தி நாலு கொடுப்பு..."

"இந்தா.."

"என்ன நூறு ரூபா கொடுக்கிறே... நாலு ரூபா கொடு"

"அட ரவுண்டா வச்சுக்கப்பா..."

"என்ன பெரிசு உன்னோட ஒரே ரோதனையாப் போச்சு... அட காலையில வதைய வாங்காம கொடு பெரிசு... அதான் எல்லாத்துலயும் கொறச்சு கொடுத்தாச்சுல்ல"

"என்னப்பா ஒண்ணோட... சில்லறயில்லப்பா"

"எவ்வளவுக்கு வேணும் நான் தர்றேன் கொடு..."

"விடமாட்டியே... சரி இந்தா ரெண்டு ரூபாதான் இருக்கு"

"அதுல ரெண்டு ரூபா குறைச்சாத்தான் ம்னசு ஆறும்போல... "

"வாரேம்பா..."

"வராதே...நல்ல நேரத்துல கடைய திறந்திருக்கேன். இன்னைக்கு யாரு முகத்துல முழிச்சேனோ நாளைக்கும் தேடிப்போயி முழிக்கணும்"

"என்னப்பா முணங்குறே..."

"ஒண்ணுமில்லே"



"ம்பா மல்லிகைப்பூ என்னப்பா வெல"

"அடுத்து மாமூவா... மாட்டுனேடி மாமூ"

"ஏம்ப்பா... அடுத்த கடையில சாமான் வாங்கும்போது நீ ஏன் பேசுறே. உங்கடையில யாவாரத்தைப் பாரு?"

"சரி பெரிசு... நீ ஆரம்பி"

"நூரு பத்து ரூபாயா? அடேயப்பா அநியாய வெலயா இருக்கே... மதுர மாட்டுத்தாவணியில நூரு ரெண்டு ரூவாக்குத்தாரான்..."

"சரி பெரிசு... இந்தா கண்ணப்பா கிளம்புது ஏறி முப்பது ரூபாக்கு டிக்கெட் எடுத்துக்கிட்டு படம் போடுவான் பாத்துக்கிட்டு போனா மதுரயில கொண்டே எறக்கிவிடுவான். நூறு ரெண்டு ரூபாக்கி வாங்கிக்கிட்டு வரலாம்"

"அடேங்கப்பா... எ உனக்கு இம்புட்டு கோவம்? விக்கிறான்னுதானே சொன்னே... உன்னைய கொடுக்கச் சொல்லலையே... கட்டுற வெலைக்கு கொடு..."

"அப்பு பத்து ரூபாதான்... உனக்கு எவ்வளவு வேணும் ஐநூறா... ஆயிரமா..? சொல்லு பாத்துப் போட்டுத்தாரேன்..."

"முதல்ல நீ வெலயச் சொல்லு"

"எட்டு ரூபான்னு தாரேன்..."

"சரி நூறு கொடுப்பா..."

"இதுக்குத்தான் இப்புடி பேரம் பேசினே... விளங்கிடும் போ..." என்றபடி மல்லிகைப்பூ கன்னியை எண்ண,

"நல்லா எண்ணுப்பு... பேசிக்கிட்டே கன்னிய விட்டுறப் போற. ரெண்டு கன்னி சேத்து வெட்டுப்பா"

"அப்பு ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கா எண்ணுற எனக்கு கணக்குச் சொல்லித்தரியா? இந்தா எட்டு ரூபா எடு"

"இந்தாப்பா..."

"எங்ககிட்ட பேரம் பேசுங்க... பெரிய கடைக்குப் போயி சாமான் வாங்கும்போது போட்டிருக்க வெல கொடுத்து வாங்குவீங்க. அப்ப இப்புடி பேரம் பேச மாட்டிங்க. அவன் தரமாட்டான்னு தெரியும்"

"வாரேம்பா..."

"ம்..."

"மாமூ... வலுவான கிழடுதான். அதான் வீட்டுல இதை அனுப்பியிருக்காங்க."

"ஆமா... எல்லாத்துலயும் ரெண்டு ரூபாயாவது லாபம் பாக்காம பெரிசு விடலை பாத்தியா"


றுநாள்...

தனது சைக்கிளில் தோட்டத்தில் பறித்த காய்கறிகளை கட்டிக்கொண்டு வியாபாரத்துக்கு கிளம்பினார் பேரம்.

"பெரியவரே... கத்திரிக்காய் என்ன வெல"

"கிலோ பதினஞ்சும்மா"

"பதினஞ்சா... அரைக்கிலோ வேணும் வெலய பாத்துப் போட்டுக் கொடுங்க..."

"எத்தனை கிலோ வாங்கினாலும் அஞ்சு பைசா கூட கொறச்சுத் தரமாட்டேன். இது மூட்டைக் கத்திரி இல்ல... தோட்டத்துல காலையில பறிச்சு கொண்டு வாரேம்மா. கடக்காரங்கிட்ட காஞ்சு போன கத்திரிக்காயை இருவது ரூவா கொடுத்து வாங்குவீங்க... இது எப்புடியிருக்கு பாரு.... ஒரே வெலதான் வேணுமின்னா வாங்கு"

"சரி போடுங்க... அஞ்சு பைசா கூட கொறக்க மாட்டிங்களே" என்றபடி காயை வாங்க, 'கத்திரிக்காய், வெண்டைக்காய்... " என்று கத்தியபடி சைக்கிளை மிதித்தார் கறார் பேரம்.
 
-'பரிவை' சே.குமார்.

ஞாயிறு, 25 ஜூலை, 2010

பயணம் எதுவரை..?


ஏதோ நினைவில் எங்கோ பயணம்...
போகுமிடம் மனதில் இல்லை...
திரும்பி வரும் எண்ணம்
இதுவரை எழவேயில்லை..!

இலக்கில்லா இந்தப் பயணம்
எதுவரை போகும்..?

வாழ்வின் எல்லை வரையிலா..?
வயதின் முதிர்ச்சி வரையிலா..?
தெரியாமலே பயணம்...

எப்படிப்பட்ட பாதை
என்பது தெரியாது..!

எங்கே போய் எங்கே முடியும்
என்பது தெரியாது...

இலக்கில்லா பயணத்தில்
எதையோ தேடி...

இதுவரை பயணித்தோரின்
வழித்தடத்தில் பயணம்...

நாளைய பயணத்தில்
எத்தனை வழித்துணை....
என்பதறியா பயணம்..!

நாளை பய(ண)த்தில் நான்...?

-'பரிவை' சே.குமார்

வியாழன், 22 ஜூலை, 2010

புறையோடிய சாதி வேர்

சுந்தரம் தாத்தான்னா சிறுசுகளுக்கெல்லாம் ரொம்ப பயம்... அவரு பீடியும் பிடிப்பாரு... பொடியும் போடுவாரு... அவரு கட்டை விரலையும் ஆட்காட்டி விரலையும் சேர்த்துப் பிடிச்சு பொடியை எடுத்து மூக்குல வச்சி 'சர்ர்ர்ர்ர்ன்ன்ன்ன்னு' ஒரு உறிஞ்சு உறிஞ்சிட்டு கைய உதறப்ப பக்கத்துல இருக்க ஆளுங்க தும்ம, அவரு மட்டும் எதுவுமே நடக்காதது போல முகத்தை வச்சுக்கிட்டு மூக்கை தேச்சுக்கிட்டு இருப்பாரு.

பசங்களுக்கு அவருகிட்ட என்ன பயமுன்னா தம் அடிச்சிட்டு கண்ணுக்குள்ள புகை வருது பாருன்னு சொல்லி, ஆன்னு பாக்கும்போது கால்ல சுட்டு விட்டுடுவாரு... இல்லேன்னா பொடியை எடுத்து மூக்குல வச்சு விட்டுடுவாரு. அதனால சின்ன பசங்க அவரை கண்டாலே அய்யோ ரவுடித் தாத்தா வாராருன்னு ஒடிடுங்க...

ஆனா பாருங்க, பசங்ககிட்ட அப்படி நடந்துக்கிட்டாலும் குணத்துல அவரு கர்ணன். யாருக்காச்சும் ஒண்ணுன்னா அவரால முடிஞ்ச உதவியை செய்வாரு. அவருக்கிட்ட உதவி பெற்றவங்கதான் அதிகம். அதனால பசங்க மத்தியில் மூக்குப் பொடி தாத்தா மோசமான்ன தாத்தான்னு பேரெடுத்தாலும் ஊருக்குள்ள புண்ணியவான்னு பேரெடுத்து வச்சிருக்காரு.

காலையில ஒரு பத்துமணி இருக்கும் வெயிலுக்கு தலையில துண்டப் போட்டுக்கிட்டு மாமரத்தடியில கூடி இருக்கும் அவர் வயதொத்த மனிதர்களுடன் மனம்விட்டு பேச போய்க் கொண்டிருந்தார். தெருமுனை திரும்பும் போது மேலத்தெருவில் இருந்து இரைச்சல் கேட்டது. யாருக்கும் என்னாச்சோ என்னவோ தெரியலையே என்று பதறியபடி மேலத்தெருவுக்குள் நுழைந்தவர், ஏகாம்பரம் யாரையோ மயிரு... மட்டைன்னு சரமாரியாக பேசிக்கொண்டிருப்பதைக் கேட்டார். அவர் அருகில் போகவும் 'ஐய்யய்யோ... மூக்குப்பொடி தாத்தா..' என்று சிறுசுகள் பயந்து ஓட, கூட்டத்தை விலக்கிக் கொண்டு உள்ளே போனார். ஏகாம்பரம் ஏக வசனத்தில் பேச, அவருக்கு பதில் சொல்லும் விதமாக சோனையன் பேசிக் கொண்டிருந்தான்.

"ஏய் சோனையா... என்னடா மரியாதை இல்லாம வாய்க்கு வாய் பேசிக்கிட்டு..."

"வாங்க ஐயா... நீங்களே இந்த அநியாயத்தை கேளுங்க...என்னோட வயல்ல ஐயாவோட மாடு தினமும் வந்து மேஞ்சு பயிரை எல்லாம் பாழாக்கிடுது... அதை வந்து சொன்னதுக்குதான் வாயில வராத வார்த்தை எல்லாம் சொல்லி திட்டுறாரு..."

"என்ன ஏகாம்பரம்... அவன் கஷ்டப்பட்டு வெள்ளாமை பண்ணிக்கிட்டு இருக்கான்... வயல்ல மாடு அழிக்கிதுன்னா சரி இனிமே வராதுன்னு சொல்ல வேண்டியதுதானே... அதுக்கு எதுக்கு மசுரு... மட்டைன்னு..."

"வாங்க... நீங்க நாயம் பொழக்க வந்துருக்கீங்களோ...?"

"இப்ப நான் என்ன சொன்னேன்னு இப்படி கோபப்படுறே...?"

"பின்ன என்னப்பு... உங்களைப் பார்த்து சின்னப் பயலுக பயப்படுறாங்கன்னா எல்லாரும் பயப்படணுமா...?"

"நான் உன்னைய பயப்படுன்னு சொல்லலை... வெள்ளாமை யாரு உட்டா இருந்தா என்ன... இப்ப பொதி கட்டுற பருவம்... இந்த சமயத்துல மாடு அழிச்சா என்னப்பா மிஞ்சும்... அவனும் பிள்ளை குட்டிக்காரன் அதை நம்பித்தானே இருக்கான்... இனிமே மாட்டை அவுக்கும் போது பின்னால ஆள் போகச்சொல்லு... இல்லே தரிசு வயல்ல கொண்டு போய் முளக்குச்சியடிச்சு கட்டிப் போட்டு மேய விடு..."

"யோவ் பெரிய மனுசன்னு பாக்கிறேன்... இல்ல மரியாதை கெட்டுடும்... ஒரு பர நாய்க்கு ஏந்துக்கிட்டு சாதிக்காரனுக்கே புத்தி சொல்றீங்களோ...? உங்க வேலை எதுவோ அதை மட்டும் பாருங்க போதும்..."

"என்னப்பா... சாதியெல்லாம் இழுத்துக்கிட்டு... இப்ப என்ன சொன்னேன்னு இவ்வளவு கோபப்படுறே...?"

"ஐயா நீங்க விடுங்கய்யா.... எனக்கா நீங்க எதுக்கு கேவலப்பட்ட பேச்சு வாங்குறீங்க... நான் பார்த்துக்கிறேன்... நீங்க போங்க..."

"என்னடா பாக்கப் போறே... உன் சாதிப்பயலுக ஊருக்குள்ள இருக்க முடியாது..."

"என்னப்பா... சாதி சாதியின்னு பேசுறே... ஒண்ணாமண்ணா இருக்கிற ஊருக்குள்ள மாட்டுப் பிரச்சினையை சாதிப் பிரச்சினையாக்கிடுவே போல இருக்கே..."

"யோவ் போய்யா அங்கிட்டு... எனக்கு சொல்ல வந்துட்டாக... எதாவது பேசினா சாதிக்காரன்னு பார்க்க மாட்டேன்... வயசுக்கு மரியாதை கொடுத்தா ஒதுங்கிப் போகாம..."

இதுக்கு மேல் நின்றால் மரியாதை இருக்காது என்பதால் பேசாமல் வெளியேறினார்.

மாமரத்துக்கு போக மனமின்றி மீண்டும் வீட்டிற்கே திரும்பினார்.



"ன்னப்பா... உடனே திரும்பிட்டிங்க..."

"மனசு சரியில்லைம்மா..."

"என்னப்பா ஆச்சு...உடம்புக்கு முடியலையா?"

"இல்லைம்மா... நம்ம ஏகாம்பரம், சோனையனுக்கிட்ட சண்டை போட்டுக்கிட்டு இருந்தான். தட்டிக்கேட்க போன என்னைய என்னென்னமோ பேசிட்டாம்மா..."

"ஏம்ப்பா அவரைப் பத்திதான் தெரியுமே... உங்களுக்கு எதுக்குப்பா இந்த வேண்டாத வேலை..."

"ஏம்மா... வெள்ளாமை பாதிக்குதுன்னு சொன்னான் மனசு கேக்கலை நாயமாத்தான் பேசினேன்... அதுக்குப் போயி..."

"சரி விடுங்கப்பா... மனசைப் போட்டு அலட்டிக்காதீங்க..."

வீட்டிற்குள் நுழையும் போதே...

"என்ன மாமா... ஏகாம்பரத்துக்கிட்ட சண்டைக்குப் போனீங்களாமே..?"

"இ... இல்ல... மாப்ளே... வயல்ல மாடு மேஞ்சுடுச்சின்னு சொல்ல வந்த சோனையனை வாய்க்கு வந்தபடி திட்டினான்... அதை கேட்டதுக்கு என்னென்னமோ பேசிட்டான்."

"அந்த ...... நாய்க்கு நீங்க வக்காலாத்து வாங்கினீங்களா..? உங்களுக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை..."

"........."

"ஏங்க அவரு என்னென்ன பேசியிருக்காரு தெரியுமா... அவரு சொன்னதை கேட்டுக்கிட்டு வந்ததும் வராததுமாக..."

"நீ சும்மா இருடி... அவரு நம்ம சாதி... அவருக்கு சப்போர்ட்டா பேசினா நாளைக்கு நமக்கு ஒண்ணுன்னா வருவாரு... அந்த சாதிக்காரப் பயலுகளுக்கு சப்போர்ட் பண்ணி நமக்கு என்னத்துக்கு ஆகப்போகுது..."

"மாப்ளே... நீங்களும் சாதி சாதின்னு பேசுறீங்க... உங்க சாதி உங்களுக்கு என்னங்க பண்ணுச்சு சொல்லுங்க... சாதிக்காரன்னு சொல்லி ஒருத்தனை எம்.எல்.ஏவா ஆக்கி சட்டசபைக்கு அனுப்புனீங்களே... அவனை அதுக்கு அப்புறம் பாத்தீங்களா... ரிசர்வ் தொகுதின்னு சொல்லி இப்ப சொன்னீங்களே ...... நாய் அதுல இருந்து ஒருத்தனை பிரசிடெண்ட ஆக்கினோம்... அவன் நம்ம மேல உள்ள மரியாதையில ஊருக்கு ரோடு, தண்ணி வசதி எல்லாம் செய்து தரலை... ஏன் முடிவெட்டுறவன் அடுத்த சாதிக்காரன் தான் அவன் கிட்ட சாதிபாத்து போகாம இருங்கலே... சடை புடிச்சிடும் சடை... உங்க சாதிக்காரன் வந்து வெட்டிவிடுவானா...? இல்ல வெள்ளையும் சொள்ளையுமா வண்டியில போறியளே... அதுக்கு யார் காரணம் நம்ம சாதிக்காரனா இல்லையே... அதுவும் வேற சாதிக்காரன் தானே... இவ்வளவு ஏன் நீங்க வட்டிக்கு கொடுத்து வாங்கி நிலம் நீச்சியின்னு வசதியோட இருக்கீங்களே... அதுக்கு காரணம் உங்க சாதிக்காரனா இல்லயே... இப்ப சொன்னீங்களே... அந்த சாதிக்காரன் தான் உங்ககிட்ட வட்டிக்கு வாங்கி உங்களை வாழவைக்கிறான்... எல்லாத்துக்கும் மேல நம்ம ஊருல யார் செத்தாலும் ஏதோ சோனையன் மாதிரி ஆளுங்க இருக்கறதால குழி வெட்டுறதுல இருந்து குழிக்குள்ள எறக்குறதுவரை பார்க்கிறாங்க... இப்ப சின்னபசங்கள்ளாம் வெளியில போயாச்சி... இன்னும் சில காலத்துல குழிக்குள்ள இறக்குறதுக்கே காசு கொடுத்து ஆளைப்புடிக்க அலையணும்... அதை மனசுல வச்சுக்கங்க... சும்மா சாதி சாதியின்னு பேசாதீங்க... சாதி ஒண்ணும் சாப்பாடு போடாது... நாம வாழ எதாவது ஒரு சாதிக்காரன் எதாவது ஒரு வகையில நமக்கு உதவியா இருப்பான். அதை புரிஞ்சுக்குங்க."

"சும்மா... பிரசங்கம் பண்ணாதீங்க... எனக்கு என் சாதிதான் முக்கியம்..."

"உங்களை திருத்த முடியாது... நீங்களா திருந்துற நாள் சீக்கிரம் வரும்" என்றபடி வெளியேறினார்.

மாமரத்தடியில் போய் அமர்ந்தவர் அங்கே சாதிப்பாகுபாடு இன்றி சந்தோசமாய் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களை பார்த்து 'அறியாப் பருவத்தில் கூட்டாஞ்சோறு... அறிஞ்ச உடனே தனிக்குடித்தனம்... ம்...' என்று நினைத்தவர் லேசாக சிரித்துக் கொண்டார்

-'பரிவை' சே.குமார்.

செவ்வாய், 20 ஜூலை, 2010

சிறு பூக்கள்...


பிரியாணியில் கோழி...
மிச்சத்தை கொத்திப்
பார்த்தது குஞ்சு..!

-----
நாடு காக்க வேண்டுதல்
பிள்ளையாரிடம்...
காணாமல் போனது சிலை..!

-----

சந்தோஷமாய்
பறந்து பார்த்தது
குருவிக்குஞ்சு...
கன்னிப் ப்யணம்..!

-----

நெருக்கத்தில் புழுக்கமாய்
நெஞ்சுக்குள் மறக்க
முடியாத காதலி..!

-----

மங்கள நிகழ்ச்சி
வாசலில் கட்டப்பட்டது...
வெட்டப்பட்ட வாழை..!

-'பரிவை' சே.குமார்.




எனது முந்தைய ஹைக்கூ கவிதைகளை படிக்க இங்கே சொடுக்கவும். கிறுக்கல்கள்.

ஞாயிறு, 18 ஜூலை, 2010

எகனை மொகனை

(நன்றி : கூகுள் தேடுபொறி)
எப்போதும் போல
காலையில் பால் விற்க
வந்த செண்பகம்...
சிநேகமாய் சிரித்தாள்...

பதிலுக்கு சிரிக்க
பத்திக் கொண்டது
தர்ம பத்தினிக்கு...

காய்க்கார கனகா
'ஏம்ப்பு வாரம் ஒருவாட்டிதான்
வாரீக... நல்லா இருக்கீகளா?'
என்றதற்கு

சிரித்தபடி பதில் அளித்ததால்
சிரிப்பைத் துறந்தாள்
தர்ம பத்தினி...

வருவோர் போவோரெல்லாம்
சிநேகமாய் பேச...
நீங்க பேப்பரை வச்சிக்கிட்டு
என்ன படிக்கிறீங்கன்னு
தெரியும் வாங்க உள்ளே...

சிரித்தபடி செல்ல
இப்ப எவ வந்தா...?
சந்தேகத்துடன் கேட்டவள்

தொலைக்காட்சி நாடகத்தில்
நண்பனுடன் பேசிய மகளை
கடிந்து கொண்ட அம்மாவை...
வசை பாடிக் கொண்டிருந்தாள்..!

-'பரிவை' சே.குமார்

செவ்வாய், 13 ஜூலை, 2010

ஹரிணி



"க்கா.. கொஞ்ச நாளா நம்ம வூட்டுல நடக்கிற கூத்தைப் பாத்தியா..?" மெதுவாக ஆரம்பித்தாள் வனஜா.

"ஆமாண்டி... பார்த்துக்கிட்டுதான் இருக்கேன். சின்ன மருமகளை தாங்குறதை..." இது சரோஜா.

"ஆமாக்கா... நாம எல்லா வேலையும் பார்க்கிறோம்... ஆனா அவளை தலையில தூக்கி வச்சுக்கிட்டு ஆடுதுக.."

"அதுக்கு அவ வேலைக்குப் போறால்ல... அதுதான்..."

"பாழாப்போன படிப்பு நமக்கு வந்திருந்தா நாமளுந்தான் இன்னைக்கு ஆபிசரு..."

"அதுதான் பத்தாங்கிளாசை தாண்ட முடியலையே... அப்புறம் எப்படி ஆபீசராகுறது?"

"அதுக்காக அவளைவிட நாமதான் அதிகம் உழைக்கிறோம். எல்லாம் அவளைத்தானே தலையில வச்சிக்கிட்டு ஆடுதுங்க... நம்மதுக நம்மளை கண்டுக்காதுங்க... தம்பி பொண்டாட்டிய தாங்குதுங்க..."

"நமக்கு ஒரு காலம் வராமயா போயிடும்... அப்ப வச்சிக்கலாம்... “

“அவளும் வேலைக்குப் போறேன்னுட்டு ரொம்பத்தான் மினுக்கிறா"

"சரி விடுடி... இந்த வீட்ல நாம வேலை பார்த்தாத்தான் மதிப்பு... என்ன செய்ய நாம பொறந்த நேரம் அப்புடி"

"என்னங்கடி... பொறந்த நேரம்... அது... இதுன்னு பேசிக்கிட்டு இருக்கீங்க..." என்றபடி வந்தாள் அவர்களது மாமியார் மீனாட்சியம்மா.

"இல்ல அத்தை... சும்மா பேசிக்கிட்டிருந்தோம்."

"உங்க முகம் சும்மா பேசினது மாதிரி தெரியலையே... ஒரு வாரமாவே ரெண்டு பேருக்கு முகம் சரியில்லையே... என்ன பிரச்சினை... பயலுக எதுவும் சத்தம் போட்டாங்களா?"

"இல்ல அத்த... அதெல்லாம் ஒண்ணுமில்லை... நாங்க எப்பவும் போல இருக்கோம்."

"அப்ப ஹரிணிதான் உங்களுக்கு பிரச்சினையா?"

"ஐய்யோ... அப்படியெல்லாம் இல்ல" இருவரும் ஒன்றாக சொல்ல,

"எனக்கு எல்லாம் தெரியும்... அவ வேலைக்குப் போறா... அவகிட்ட எல்லாரும் அன்பா பேசுறாங்க...அப்படின்னுதானே..?"

".........."

"அடியேய்... வனஜா நீ யாரு... என் தம்பி மக... உங்க அக்கா சரோஜா மாமாவோட அக்கா மக... நல்லா படிச்சிருந்தும் எம் பசங்களுக்கு உங்களை கட்டியாரக் காரணம் பொண்ணு கிடைக்காம இல்ல நம்ம சொந்தம் விட்டுடக்கூடாதுன்னுதான். அவ அந்நியத்துல இருந்து வந்த பொண்ணு... நீங்க நான் பார்த்து வளர்த்த பொண்ணுங்க... என் மார்மேலயும் உங்க மாமா முதுகுலயும் உங்களை சுமந்திருக்கோம். அவளுக்கு நாம எல்லாரும் புதுசு. பணக்கார வீட்டுல வளர்ந்த ஒரே பொண்ணு. அப்பா செல்லம் வேற... நாளைக்கு அவ கண்ணக் கசக்கிட்டு நின்னா யாருக்கு கேவலம்... நம்ம குடும்பத்துக்குதானே.. எங்களுக்கு நீங்க மூணு பேரும் ஒண்ணுதான்.... அவ பழகிட்டா அப்புறம் எல்லார்கிட்டயும் சகஜமாயிடுவா. போங்க போய் வேலையைப் பாருங்க..."

"ம்க்க்கும்... புது மருமகளுக்கு சப்போர்ட்... நீ வாடி நம்ம முடியாமக் கெடந்தாலும் ஏன்னு கேக்க நாதியில்லை..."

மாதங்கள் கடந்தன...

இருவர் கூட்டணி வலுவானது. ஹரிணியிடம் அதிகம் பேசுவதுமில்லை... அவளைக் கண்டு கொள்வதும் இல்லை.

தீபாவளிக்கு ஒரு வாரம் இருக்க,

அலுவலகத்தில் இருந்து வந்த ஹரிணியின் கையில் ஏகப்பட்ட பிளாஸ்டிக் பைகள்.

ஹாலில் வந்து அமர்ந்தவள் மாமா, அத்தை, கொழுந்தன்கள், குழந்தைகள் என எல்லாருக்கும் ஒவ்வொரு பை கொடுத்தாச்சு.

சமயலறையில் இருந்து இதை கவனித்த சரோஜாவும், வனஜாவும் குசுகுசுவென்று பேசிக்கொண்டார்கள்.

"அக்கா... பாத்தியா சம்பாதிக்கிற திமிரு எல்லாருக்கும் டிரஸ் வாங்கியாந்து கொடுத்து ஐஸ் வைக்கிறா..."

"ஆமா... திமிர் பிடிச்சவ... நமக்கு எதுவும் கொடுத்தா வாங்கக் கூடாது. அவ கொடுத்துதான் நாம புதுத்துணி போடணுமா...? நம்ம ஆத்தா அப்பன் என்ன ஒண்ணுமில்லாமயா இருக்காங்க... இல்ல நம்ம புருஷங்கதான் ஒண்ணுமில்லாதவங்களா...?"

"ஆமா... கொடுத்தா மூஞ்சியில அடிச்ச மாதிரி வேண்டாண்ணு சொல்லிறனும்... அப்பதான் அவளுக்கு உறைக்கும்,"

"அக்காள்லாம் எங்க அத்தை" ஹரிணி இவள்களை கேட்கவும் பேச்சை நிறுத்தி நடப்பதை கவனித்தனர்.

"அவளுக எங்க இருக்கப் போறாளுங்க... ராத்திரிக்கு சாப்பாடு தயார் பண்ணுவாளுங்க..."

"பாவம்... அவங்களுக்குத்தான் வேலை அதிகம்.."

"அக்கா... நம்ம மேல ரொம்ப கரிசனம் பாரு... அடுப்படிக்குள்ள வந்து நமக்கு உதவப்போறா... அக்கரையா கேக்கிறா..?"

"கூப்பிடவாம்மா..."

"இல்ல அத்தை... சும்மா கேட்டேன்.. அவங்களுக்கு எதுவும் வாங்கலை"

"அதானே பார்த்தேன்... வனஜா... பாத்தியா நாம வாங்க மாட்டோம்ன்னு தெரியும். அதான்"

"எல்லாருக்கும் வாங்கியிருக்கே... அவளுகளை மட்டும் விட்டுட்டியே..?" மீனாட்சியம்மா வருத்தம் தோய்ந்த குரலில் கேட்டாள்.

"இல்ல அத்தை... எல்லாருக்கும் டிரஸ் வாங்குறதா அவருகிட்ட கேட்டேன். அவருக்கும் சந்தோஷம். நல்லா வாங்கு... அண்ணிகளுக்கு நல்லதா வாங்கு... அவங்க ரெண்டு பேரும் எங்க அம்மா மாதிரின்னு சொன்னாரு... எல்லாருக்கும் வாங்கிட்டேன்... ஆனா அவங்களுக்கு நான் வாங்கி கொடுத்து கட்டச் சொல்றதைவிட அவங்களையே கூட்டிக்கிட்டுப் போயி அவங்களுக்குப் பிடிச்சதா எடுத்துக்கிட்டா எல்லாருக்கும் சந்தோஷம்தானே... அதான் வாங்கலை... தப்பா அத்தே..."

"இல்லம்மா... நீ செஞ்சதுதான் சரி..."

"அக்கா...." வனஜா

"என்னடி இது... நல்லவளா தெரியுறா?"

"அப்புறம் அத்தை... நான் அக்கா தங்கச்சி கூட பொறக்கலை. அவங்களை என்னோட சொந்த அக்காக்களாத்தான் நினைக்கிறேன். முதல் வருஷத்தீபாவளிக்கு அப்பா ஊருக்கு வரணுமின்னு சொன்னார். மாமா, அத்தை, அத்தான்கள், அக்காக்கள், குட்டிஸ்ன்னு பெரிய குடும்பத்துல எல்லார்கூடவும் சந்தோஷமாக தீபாவளி கொண்டாடணும்பா... அதனால நீங்களும் அம்மாவும் இங்க வந்துடுங்கன்னு சொல்லி நான் மறுத்துட்டேன்..."

"வனஜா... அவ நல்லவதாண்டி... நாமதான் தப்பா நினைச்சிட்டோம்... படிச்சிருந்தாத்தானே அறிவுக்கு எட்டும்... சே... அவ நம்ம மேல எவ்வளவு பாசமா இருக்கா..."

"ஆமா... அக்கா... " என்றவள் "அத்தே... ஹரிணியை முகம் அலம்பிட்டு வரச்சொல்லுங்க... சூடா காபி இருக்கு" என்று சொல்ல,

சரோஜா காபி கலக்க ரெடியானாள்.

-'பரிவை' சே.குமார்

(மறக்காம வாக்களியுங்கள்... மற்றவர்களும் தொடர வாய்ப்பாய் இருக்கும் அல்லவா..?)

திங்கள், 12 ஜூலை, 2010

காதல் அனாதைகள்


நமக்குள் நடந்த சண்டையின்
சாரலால் அமைதியானது வீடு...!

ஆளுக்கொரு மூலையில்...
நடந்ததை மென்றபடி..!
இது முதலல்ல
தொடரும் கதைதான்..!

சண்டைக்குப் பின் சமாதானம்
என்பது நமக்குள் சுலபமல்ல..

சுடும் வார்த்தைப் பிரயோகம்
இரண்டு பக்கத்திலும்...

வீசிய வார்த்தைகளின் வீரியம்
குறைய நேரம் பிடிக்குமல்லவா..?

நமக்குள் நிகழும்
சண்டைகளெல்லாம் எதற்காக..?
விடை தெரியா வினா இது..!

ஏதோ பேசி... எதிலோ முடிந்து...
வாயிலிருந்து கைக்கு மாறும்
நிலைக்கு தள்ளப்பட்டோம் நாம்..!

யாரால்..?

யோசனையின் முடிவில்
இருவரும் தான்
என்பதே விடையானது...

நமக்குள் இருந்த விட்டுக்
கொடுக்கும் மனம் மாறியதுகூட
காரணமாக இருக்கலாம்..!

நேரம் கடக்க இருவருக்குள்ளும்
விசும்பல்கள்..!
வீணாய் கரைகிறது நிமிடம்..!

தூக்கம் மறந்த விழிகள்
சிவப்பை போர்த்தியபடி...

அழுகையின்  பிரதிபலிப்பாகக்கூட
இருக்கக்கூடும்...

கோபத்தின் வீரியம் தணியும்
கட்டத்தில் மெதுவாய் உனைப்பார்க்க...
நீயும் பார்க்கிறாய்...

வார்த்தைகள் வராததால் வந்த
சைகைக்கு ஆறுதல் தேடி
அலைந்த மனம் தோளில்
சாய்ந்து விம்முகிறது..

கண்ணீரில் கரையும் கோபம்
சூடாய் தோள்களில் இறங்குகிறது...
நமக்குள் கனன்ற கோபம் மாயமாய்..!

என்ன செய்வோம் நமக்கு
ஆறுதல் சொல்ல யாருமில்லை...
இருவருக்கும்  இருவரே உறவு...

ஆம்...
நாம் காதல் அனாதைகள்...

(இது எனது நெடுங்கவிதைகள் தளத்தில் முதன் முதலாய் நான் பதிவு செய்தது... இங்கு மீள் பதிவாய்...)

-'பரிவை' சே.குமார்

வெள்ளி, 9 ஜூலை, 2010

பாஸான கூட்டமுங்க... தொடர் பதிவுங்க..!




நண்பர் நாடோடி இலக்கியன் அவர்கள் (உங்க தலைப்பையே அடிச்சிட்டோமுல்ல... எப்பூடி...நம்ம பிட்டூடூடூ.........டூ) நான் இந்தியாவிற்கு விடுப்பில் சென்றிருந்த போது பள்ளி முதல் கல்லூரி வரையிலான தேர்வு பயம் குறித்து தொடர் எழுதும்படி அழைத்திருந்தார். இது எனக்கு முதல் தொடர்பதிவு உண்மையில் தேர்வு பயத்தைவிட இதை எழுதுவதற்குத்தான் பயமாய் இருக்கிறது.

நானாக எழுதும் பகிர்வில் மனதில்பட்டதை எழுதிவிடுவேன். தலைப்புக் கொடுத்து எழுதச் சொன்னால் பள்ளியில் தலைப்புக் கொடுத்து கட்டுரை எழுதுவது போலத்தான். எழுதுகிறேன்... படித்து வாத்தியார் மாதிரி மார்க் போடாமல் கொஞ்சம் நல்லாவே ஓட்டுப்போடுங்க... சரி தலைப்புக்குள்ள போவோமா...

நாம படிச்ச ஆரம்பப் பள்ளி கிராமத்துப் பிள்ளைங்களையே நம்பி நடத்தப்பட்ட பள்ளி. பள்ளி தலைமையாசிரியர் முதல் அனைத்து ஆசிரியர்களுக்கும் நம்ம குடும்பத்தை பற்றி தெரியும். ஏன்னா, நம்ம குடும்பம் பெரியது. நாங்க மொத்தம் ஏழு பேருங்க. அக்கா, அண்ணன் எல்லாம் அதே பள்ளிதான்.

நம்ம ஆறாவது ஆளு, அதனால எல்லாருக்கும் நம்மளை நல்லா தெரியும். எனக்கு வந்த ஆசிரியர்கள் எல்லாம் நம்ம பேரை சொல்லி கூப்பிடுறது அரிது. கண்ணா (அண்ணன் பெயர்) என்றுதான் அழைப்பார்கள். நாமும் கொஞ்சம் நல்லா படிப்போமுங்க, அதனால மரியாதையானவங்க வரிசையில நாமக்கும் கொஞ்சம் இடமுண்டு. அப்ப தேர்வு பயமெல்லாம் இல்லைங்க, ஏன்னா எட்டாவது வரை தேர்ச்சி போடுற பள்ளி அது. அப்புறம் ஏங்க பயப்புடணும்?.

ஒன்பதாம் வகுப்புக்கு தே பிரித்தோ மேல்நிலைப் பள்ளியில் நுழைவுத்தேர்வு எழுதி சேர்ந்தாச்சு. எங்க பள்ளியில் எட்டாம் வகுப்பு வரைக்கும் தேர்ச்சி போடுவதால் அடுத்த பள்ளிக்குப் போனதும் எல்லாருமே நல்ல அஸ்திவாரம் போட்டுதான் போவாங்க. எங்க ஊர்ல 10க்கு 9 அப்படித்தான்... அதுக்கு மேல போகமாட்டாங்க... அப்பதான் நமக்கு புளியக் கரைக்க ஆரம்பிச்சிருச்சு.

பள்ளிக்கூடத்துக்கு போன ரொம்பப்பேரு நல்லா படிக்கிறாங்க... ஆத்தாடி இவங்ககிட்ட நம்ம வண்டி ஓடாதோன்னு நினைச்சுதான் படிச்சேன். பரிட்சை மார்க்கை வகுப்பில் தலைமையாசிரியர் வந்து வாசித்து வீட்டுக்கு மார்க் அனுப்பி அதெல்லாம் பெரிய கதை... இது குறித்து மனசுல ஆரம்பத்துலயே பள்ளிப்பருவம்-III அப்படின்னு பதிவு போட்டிருக்கேன்.

இங்கிலீஷ் கொஞ்சமில்லை நிறையவே காலை வாரியது. அப்ப கண்டிப்பா 10க்கு 9ல நாம இருப்போமுன்னு நினைச்சு படிச்சேன். ஆனா பிட்டு பக்கமே போறதில்லை என்ன தெரியுமோ அது கூட நமக்கு தெரிஞ்சதையும் சேர்த்து எழுதிட்டு வந்திடுறது. இதை பெருமையா சொல்லலை நமக்கு அந்தளவுக்கு தைரியம் இல்லை அதான் உண்மை. எப்படியோ வண்டி ஓடி 10,11,12 தேறிடுச்சு. அதுக்கு அப்புறம் ஊருக்குள்ள தனி மரியாதைதான் போங்க.

நாமளும் காலேசு படிக்கணுமின்னு சேவுகன் அண்ணாமலை கல்லூரியில் சேர்ந்தாச்சு... வகுப்பு ஆங்கிலத்தில் எடுத்தார்கள், பரிட்சை தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதலாம். நண்பர்கள் பெரும்பாலானோர் தமிழ்தான் நல்லது என்ற முடிவுக்கு வர, நானும் சிலரும் ஆங்கிலத்தில் எழுதிப் பார்ப்போம்... இந்த செமஸ்டர் ரிசல்டைப் பார்த்து மாறிக்கலாம் என்று முடிவெடுத்தோம். ஆனா, என்ன எழுதினோம் என்று எங்களுக்கே தெரியாது இருந்தும் கௌரவமான மதிப்பெண் பெற்றதால் ஆங்கிலத்துலேயே தொடர்ந்தோம். அங்குதான் எழுதும் ஆர்வம் வந்தது, அதனால் கையெழுத்துப் பிரதி அது இது என்று கல்லூரிக்குள் சுற்றியதால் பெரும்பாலான ஆசிரியர்களிடம் நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்தது.

பரிட்சைக்கு போகும் வரை படித்தாலும் அறைக்குள் போனதும் எல்லாம் மறந்துவிடும் இருந்தும் எதாவது எழுதுவது வாடிக்கையாகிவிட்டது. நண்பர்கள் பரிட்சை என்றால் வேஷ்டியும் ஹவாய் செருப்புமாய் வருவார்கள் உடம்பிலும் செருப்பின் மேல் புறத்திலும் அவசர உதவிக்கு எழுத்துக்கள். நமக்கு அங்கயும் பயம்தான். இருந்தும் நல்ல மதிப்பெண் கிடைக்கும். முதல் மூன்று பேருக்குள் நாங்கள் மூவர் மாறிமாறி வருவோம். அதனால் கல்லூரியிலும் பரிட்சை பயம் போயாச்சு.

பிட்டே அடிக்கலைன்னு சொன்னா அது உண்மையில்ல, பெரிய திருவடி சார்கிட்ட ஆங்கிலத்திற்கு தனிப்பயிற்சி எடுத்தபோது முதல் நாள் ஒரு கட்டுரை (Essay) கொடுத்து அடுத்த நாள் எழுதிக் காண்பிக்கச் சொல்வாரு. அது எப்படிங்க முடியும்... நாம என்ன இங்கிலீஷ்காரங்களா..? மொட்டை மாடியில எழுதச் சொல்லிட்டு கீழ போயிடுவாரு... அப்ப நானும் என் நண்பனும் நோட்டை பார்த்து எழுதி நல்ல பேரு வாங்கிக்கிறதுதான்.

பிசிடிசிஏ முடிச்சிட்டு ரெண்டு மூணு கணிப்பொறி நிறுவனத்துல வேலை பார்த்த்துட்டு தனியா கணிப்பொறி நிறுவனம் அமைத்தப்ப முதுகலை பட்டம் படிக்கலாம் என்று ஆசைப்பட்டதன் விளைவு எம்.சி.ஏ. சேர்ந்தாச்சு.. முதல் செமஸ்டர்ல ஒரு பாடம் தவிர எல்லாத்துலயும் ஊத்திக்கிச்சு. முதல் அரியர் அதுவும் ஒண்ணுதவிர எல்லாத்துலயும்... தேவையில்லாத வேலையோ என்று நினைக்க வைத்தாலும் நம்ம நண்பர்கள் சிலர் இரண்டாம் ஆண்டில் இருந்தார்கள். அவர்கள் கொடுத்த டிப்ஸ்படி தேர்வெழுதி ஒரு வழியா படிச்சு 70%க்கு மேல வாங்கி வெளிய வந்துட்டோம்.

எப்படியோ நாம படிச்ச கதையை சொல்லியாச்சு... நீங்களும் படிச்சாச்சு... என்ன உங்க படிப்புக் கதையையும் சொல்லலாமே... என்ன நண்பர்களே எல்லாரும் ரெடியாயிட்டிங்க போல... ம்... ஆரம்பமாகட்டும் உங்கள் அதிரடி.


(மறக்காம பிட் ... சாரி வாக்களியுங்கள்... மற்றவர்களும் தொடர வாய்ப்பாய் இருக்கும் அல்லவா..?)


நட்புடன்,
'பரிவை' சே.குமார்.

திங்கள், 5 ஜூலை, 2010

பந்தயம்


மாட்டு வண்டிப் பந்தயத்திற்கும் பந்தய மாட்டிற்கும் பெயர் போன மாவட்டத்தில் செட்டிகுளம் கிராமத்தில் ஒரு உச்சி வேளை, வேப்ப மரத்தடியில் அமர்ந்து பந்தயமாடு குறித்து பேசிக் கொண்டிருந்தவர் மத்தியில் கொஞ்சம் கொஞ்சமாக சண்டையின் ஆரம்ப அறிகுறி தென்பட ஆரம்பித்தது.

"கோத்தா... இவுக கிழிச்சிப்புடுவாக... அட போடா இவனே... மாட்டப்பத்தி பேச வந்துட்டான். உனக்கு என்னடா தெரியும்?" அமில வார்த்தைகளை கலந்து அள்ளி வீசினார் வேதாசலம். இவர் கரிசல்பட்டி அழகரின் மாட்டை ஓட்டும் சாரதி. எல்லா இடத்திலும் முதல் பரிசை தட்டி வருவதால் அவரது மீசை எப்போதும் முறுக்கியே இருக்கும்.

"என்ன சித்தப்பு பேசிக்கிட்டிருக்கும் போதே வார்த்தையை விடுறீங்க... கொட்டிப்புட்டா அப்புறம் அள்ள முடியாது" வீட்டில் வளர்க்கும் மயிலைக் காளையை பந்தயக் காளையாக மாற்றத் துடிக்கும் ராசப்பன்.

"பின்ன என்னடா... ஒரு காளங்கன்டை வச்சிக்கிட்டு நீ பேசுறே..? நான் மாடு கொண்டு போன அவனவன் ஒதுங்கிப் போவான்... தெரியுமா.?"

"இப்ப அதுக்கு என்ன... நீ ஒடலையே... பக்க சாரதியா வர்ற முத்துதானே ஓடுறான்..." இடையில் புகுந்தார் நாராயணன்.

"முத்து ஓடுனா... ஓட்டுறது நாந்தானே..."

"சரி... நீ என்ன சொல்ல வர்றே... ராசப்பன் பந்தய மாடு ஓட்டக்கூடாதுங்கிறியா..?

"அவனுக்கு பந்தய மாட்டைப் பத்தி என்ன தெரியும்... பந்தயத்தைப் பத்தி பேச வந்திட்டான். அவன் வச்சிருக்கிற காளைக்கு ஒரு ஜோடி சேர்த்து வயலை உழச் சொல்லு... நல்லா உழும்."

"அடங் கோ.... என்ன சொன்ன என் மசுராண்டி... எனக்கு பந்தயத்தைப் பத்தி தெரியாதா... அடியே நாங்கெல்லாம் வீம்புக்கு வெசங்குடிக்கிறவங்க பரம்பரை... யாரைப்பாத்து என்ன பேசுறே...? அடுத்த வருஷத்துக்குள்ள உன்னைய நான் பந்தயத்துல வண்டி ஓட்டி ஜெயிக்கலை நான் ஒருத்தனுக்கு பொறக்கலைடா..."

"சரி.. ஒருத்தனுக்குதான் பொறந்தேன்னு நிரூபிக்க முடிஞ்சா பாக்கலாம்."

"பாக்கலாம்... பாக்கலாம்"

"என்ன வேதாசலம் சின்ன பயகிட்ட வீம்பு பேசிக்கிட்டு..."

"சின்னப்பய மாதிரியா பேசுறான்... மயிரு எப்படி புடுங்குறான்னு பார்ப்போம்..." என்றபடி கிளம்பினார்.

"மச்சான்... உடனே ஒரு மாடு வாங்கணும்...?"

"ஏண்டா... உனக்கு என்ன கிறுக்கா புடிச்சிருக்கு..."

"மச்சான்... மாடு வாங்கணும்... கழுத்து காதுல கிடக்குறதை அடகு வச்சாவது வாங்கியாகணும்... எங்காத்தா ஒருத்தனுக்குதான் முந்தி விரிச்சான்னு அந்த கருங்காலிப் பயகிட்ட நிரூபிக்கணும்."

"அட அவன் எல்லா இடத்துலயும் ஜெயிக்கிற திமிர்ல பேசிட்டுப் போறான்... விடுவியா... அதை விட்டுட்டு..."

"நீ வரதுன்னா வா... இல்ல நான் வேற ஆளை வச்சி மாடு வாங்கிறேன்..."

"நீ திருந்த மாட்டே... இரு பாக்கியண்ணங்கிட்ட ஒத்தக்காளை ஒண்ணு இருக்கு... கொடுக்கிறதா சொல்லியிருந்துச்சு... நாளைக்கு காலையில போய் பாத்துப் பேசலாம்.."

"சரி மச்சான்... அப்புறம் காலையில வயலுக்கு போறேன்னு நிக்கக்கூடாது. கருக்கல்ல போறோம். மாட்டோட வாறோம்... சரியா"

"சரி... மத்த வேலைய பாரு.."

மாடு வாங்கி ஒரு வாரம் ஆச்சு... அதை கவனிப்பதிலே பெரும்பாலான நேரத்தை செலவிட்டான் ராயப்பன்.

"பங்காளி ஓடக்கரையில நடக்கிற பந்தயத்துக்கு வேதாசலண்ணன் போகுது போல"

"எப்ப பந்தயம்..?"

"இன்னும் ஒரு மாதம் இருக்குன்னு நினைக்கிறேன்... எதுக்கு கேக்குறே..?"

"நாமளும் போறோம்..."

"என்னது லூசாடா நீ... மாடு வாங்கி ஒரு வாரம்தான் ஆகுது... முதல்ல சும்மா ஓட்டிப்பாரு... அப்புறம் பாக்கலாம். அதைவிட்டுட்டு போயி அசிங்கப்பட்டு நிக்காதே.."

"இல்ல நாம களம் இறங்குறோம்... அவங்கிட்ட முதல்ல தோத்தாலும் பரவாயில்லை."

"வேண்டாண்டா... ஓடக்கரை பந்தத்துல உச்சாணி, சீவல் மாடுகள்லாம் ஓடும் நாம எல்கையை தொடுறதே கஷ்டம். பேசாம இரு பூங்குடி பந்தயத்துல ஓட்டலாம்."

"நல்லா சொல்லுங்கண்ணே. கழுத்து, கையில கிடந்த நகையை அடகு வச்சு மாடு வாஙகியாந்திருக்காரு... அவரு பேசுனா இவருக்கென்ன வெட்டி வீராப்பு... ஒரு வாராமா மாடுதான் பொண்டாட்டி..."

"சரி விடும்மா... ஆசைப்படுறான்... அடிபட்டா தானா திருந்துவான். நான் வாரேண்டா"

"சரி போகயில நாராயண மச்சான் இருந்தா வரச்சொல்லிட்டுப் போ"

"ம்......"


டக்கரை....

நடுமாடு பந்தயத்தில் கலந்து கொள்ளுபவர்கள் பெயர் கொடுக்கலாம் என்று அழைக்க, நாராயணனை அழைத்து "வேதாச்சலம் சித்தப்பா பேர் கொடுத்தவுடனே நம்ம பேரை கொடுத்துட்டு வா மச்சான்"

"வேணாண்டா... முதல் முதல்ல விரட்டுறோம் சின்ன மாட்டுலயோ... கரிச்சான்லயோ போடலாம்."

"சொல்றதை செய்யி மச்சான்... பங்காளி நீதான் ஓட்டுறே... மச்சான் பங்காளி பேரை சாரதியாவும், நம்ம சரவணன் பேரை பக்க சாரதியாவும் போடு..."

"என்னடா சொல்றே... நானா... நீயே ஓட்ட வேண்டியதுதானே..."

"வேண்டாம் நீ ஓட்டு... சரவணன் நல்லா ஓடுவான்..."

"என்னமோ செய்யி... வேதாச்சல அண்ணன் முன்னால நம்ம மானத்தை எல்லாம் மாட்டை விட்டு ஓட்டப்போறே.."

மாடுகள் சீட் வாங்கி வரிசைக்கு வந்தாச்சு. வேதாசலம் முதல் இடத்திலும் ராயப்பனின் மாடு ஆறாவது இடத்திலும் இருந்தன. போட்டி தொடங்கி மாடுகள் ஓட ஆரம்பித்தன.

மரத்தடியில் அமர்ந்திருந்த ராயப்பனிடம், "ஏண்டா உனக்கு இந்த வேண்டாத வேலை... அவனுக்கு முத சீட்டு ... நமக்கு ஆறாவது... அவனை எப்படி நாம தோக்கடிக்கிறது... சொன்னா கேக்குறியா?"

"உன்னைய வச்சிக்கிட்டுதானே அவரு ஒரு அப்பனுக்கு பொறந்தியான்னு கேட்டாரு..?"

"கேட்டான் நான் இல்லைங்கள... அதுக்காக பழகாத மாடை அந்தப் பயலுககிட்ட கொடுத்து... ஒண்ணுகிடக்க ஓண்ணு ஆச்சின்னா யாரு பொறுப்பாகுறது... கோபத்துல உனக்கு கண்ணு தெரியலை..."

"இப்ப என்ன மச்சான்... தோத்தாலும் பரவாயில்லை... ஓடுற வரைக்கும் ஓடிட்டு வரட்டும்..."

"ஆமா.. அப்பத்தான் அவன் இன்னும் கேவலம் பேசுவான்... உங்கூட வராம வயலுக்கு போயிருக்கலாம்..."

"இரு மச்சான்... பஞ்சாயத்தார் வண்டி வாரமாதிரி சத்தம் கேக்குது... எதோ சொல்றான் தெளிவா கேக்கலை..."

"என்ன சொல்லப் போறான்... வேதாச்சலம் வண்டி முதல்ல வருதும்பான்... போனா வண்டியில செட்டிகுளம் ராயப்பன் வண்டி எல்கையில கொடி வாங்கலைம்பான்..."

"இரு வெறுப்பேத்தாதே... இப்ப நல்லா கேக்குது..."

'முதலாவதாக செட்டிகுளம் ராயப்பன் மாடு வந்து கொண்டிருக்கிறது. மற்ற வண்டிகளைவிட ரெண்டு கிலோ மீட்டர் வித்தியாசத்தில் வந்து கொண்டிருக்கிறது. சாரதி கண்ணன் திறமையாக வண்டியை ஓட்டி வருகிறார். அவருக்கு உறுதுணையாக பக்க சாரதி சரவணன் செயல்படுகிறார். இதோ பாய்ந்து வருகிறது செட்டிகுளம் ராயப்பனின் மாடுகள்'

"மாப்ளே... நம்ப முடியலைடா... நம்ம மாடா...?"

"மச்சான் நாம நிரூபிச்சிட்டோம். நம்ம மானத்தை காத்திட்டாங்க..."

இருவரும் கட்டிக் கொண்டு சந்தோஷத்தை பறிமாறிக்கொள்ள, ரோட்டில் துள்ளி வந்து கொண்டிருந்த வண்டியில் கண்ணன் எழுந்து நின்று கம்பை சுழற்றிக் கொண்டிருந்தான். அது தூரத்தில் மூன்றாவது வண்டியாக வந்து கொண்டிருக்கும் வேதாசலத்தை கேலி செய்வது போலிருந்தது.

-'பரிவை' சே.குமார்