மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வெள்ளி, 17 ஆகஸ்ட், 2012

நீ...!




ஒரு கவிதை சொல்லு
தோளில் சாய்ந்து
காது கடித்து
சிணுங்கலாய் கேட்டாள்...

"நீ...!"
என்றதும் ....
உனக்கு எப்பவும்
குறும்புதான் என்று
காது திருகி
சிரித்தவள்...

நான் கேட்டது
கவிதையை என்றாள்...

மீண்டும் "நீ..!" என்றவன்
கவிதை சொல்லச்
சொன்னபோது
உன் முகம் மொட்டாய்...

கவிதை சொன்னதும்
உன் முகம்
மலர்ந்த பூவாய்...

நீ... நீதான்
என் கவிதை என்றதும்
கவிதையின் பரிசாய்
 ஈர இதழ்கள்...!

-"பரிவை" சே.குமார்.

புதன், 15 ஆகஸ்ட், 2012

சுதந்திரத் தியாகி மாவீரன் பாஷ்யம்


இந்திய சுதந்திர தினம் என்பது கொடியேற்றி இனிப்பு வழங்கும் நாள் என்றும் நடிகைகளின் கவர்ச்சிப் பேட்டிகளும் உலகத் தொலைக்காட்சிகளில் முதன் முறையாக ஒரு சினிமாவுமாக கழியும் விடுமுறை நாள் என்றும் மட்டுமே இன்றைய சூழலில் வந்து செல்கிறது. இதற்குப் பின்னால் தியாகிகள் என்ற பட்டத்துடன் பிரபலமான சிலரும் பிரபலமாகாமல் சுதந்திரப் போராட்டத்தில் அடி வாங்கி... மிதி வாங்கி... சிறைப்பட்டு இன்றும் தியாகி பென்சன் கிடைக்காமல் அரசியல்வாதிகளால் அலைக்கழிக்கப்படும் பலரும் தங்கள் உயிரைப் பணயம் வைத்து வாங்கிக் கொடுத்த சுதந்திரம் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும். இது சுதந்திர நாடு எனக்கு எல்லாச் சுதந்திரமும் இருக்கு என்று வெற்றுப்பந்தா காட்டிக் கொண்டு பக்கத்து வீட்டுக்காரனுடன் வேலித் தகராறு, வெட்டிப் பேச்சு என கழிக்கிறோமே தவிர சுதந்திர தினத்தில் எத்தனை பேர் போராட்டத்தில் தங்கள் இன்னுயிரை கொடுத்த மாவிரர்களாம் நம் முன்னோர்களை நினைக்கிறோம் சொல்லுங்கள்.
பாஷ்யம் என்கிற ஆர்யா - இவரும் ஒரு சுதந்திரப் போராட்ட வீரர்தான். 1932-ம் வருடம் தமிழக தலைமைச் செயலகமாக செயல்படும் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் இருந்த 140 அடி உயரமுள்ள கொடிக்கம்பத்தின் உச்சியில் ஒருவரும் அறியாமல் ஏறி, பிரிட்டிஷ் கொடியான யூனியன் ஜாக்கை இறக்கிவிட்டு, நமது தேசியக் கொடியை ஏற்றிய மாவீரர்.
1907-ஆம் ஆண்டு தஞ்சை மாவட்டம் மன்னார்குடிக்கு அருகில் உள்ள சேரங்குளம் என்னும் ஊரில் சாதாரணக் குடும்பத்தில் பிறந்தார். இவர் சுதேசமித்திரன் பத்திரிக்கையின் ஆசிரியராக இருந்த தேசபக்தர் ஏ.ரங்கசாமி அய்யங்காரின் உறவினர் ஆவார். மன்னார்குடியில் படித்துக் கொண்டிருந்த பாஷ்யம், தனது 11வது வயதில் ஜாலியன் வாலாபாக் படுகொலையின் காரணத்தால் வெள்ளையர் மீது தணியாத கோபம் கொண்டு சுதந்திர போராட்ட கருவறைக்குள் தன்னையும் இணைத்துக் கொண்டார்.
திருச்சி தேசியக் கல்லூரியில் படிக்கும் காலத்தில் பாடப்புத்தகங்களை படித்தாரோ இல்லையோ தேசபக்தி நூல்களை அதிகம் படிக்கலானார், அவர் தேடிப் படித்த புத்தகங்களில் குறிப்பிடத்தக்கவை லஜபதிராயின் 'துரதிஷ்ட இந்தியா', விவேகானந்தரின் சொற்பொழிவுகள், அரவிந்தர் வரலாறு, வ.வே.சு. அய்யர் வரலாறு, வீர சாவர்கரின் '2857- இந்திய சுதந்திரப் போர்' ஆகியவை குறிப்பிடத்தக்கவை.
இங்கிலாந்திலிருந்து சைமன் குழு இந்தியா வந்தபோது காங்கிரஸ் மற்றும் இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் விடுத்த அழைப்பின் பேரில் நாடெங்கும் கருப்புக் கொடி காட்டி திரும்பிப் போகச்சொல்லி போராட்டங்கள் வெடித்தன. சைமன் குழு திருச்சி வந்தபோது தேசியக் கல்லூரி மாணவர்கள் பாஷ்யம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். போராட்டம் முடிந்து கல்லூரி திரும்பிய மாணவர்களுக்கு இரண்டு ரூபாய் அபராதமும் தலைமை தாங்கிய பாஷ்யத்துக்கு ஐந்து ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. மற்ற மாணவர்கள் பணம் கட்டியபோதும் பாஷ்யம் கட்ட மறுத்தார். பின்னர் கல்லூரி முதல்வர் திரு.சாரநாதன் அவருக்கான ஐந்து ரூபாய் அபராதத் தொகையை கட்டியதால் அது தனது தேசபக்திக்கு இழுக்கு என்று கல்லூரியை விட்டு வெளியேறினார்.
தேசிய விடுதலையே தனது உயிர் மூச்சு என தீவிரம் காட்டிய பாஷ்யம், அய்யலூர் ரயில் நிலையம் அருகில் இருக்கும் பஞ்சந்தாங்கிப் பள்ளத்தாக்கில் துப்பாக்கி சுடும் பயிற்சி பெற்றார். இதற்காக மகாகவி பாரதியாரின் நெருங்கிய நண்பரான திரு. முத்துக் குமாரசாமிப் பிள்ளையின் தொடர்பின் மூலம் துப்பாக்கிகள் வாங்கிக் கொண்டார். 'யுனிவர்சிட்டி டிரைனிங் கோர்' படையினால நடத்தப்பட்ட துப்பாக்கி சுடும் போட்டியில் வெற்றி பெற்றார். இதன் பின் தனது நண்பர்களுக்கும் துப்பாக்கி சுடும் பயிற்சி அளித்தார். புதுவை விடுதலை வீரர் திரு வ. சுப்பையா அவர்களை சந்தித்து நட்பை வளர்த்துக் கொண்டார். காளி படத்துன் முன் ரத்தக் கையெழுத்து இட்டு உறுதிமொழி எடுத்து புரட்சி அமைப்புகளுடன் இணைந்தார். 
நாட்டு விடுதலைக்காக எதாவது செய்ய வேண்டும் என்ற முனைப்போடு இருந்த பாஷ்யம், சிதம்பரத்தில் நடராஜர் பூங்கா அடிக்கல் நாட்டு விழாவுக்கு வந்த கவர்னர் மார்ஷ் பாங்ஸ் என்பவரை சட்டைப் பையில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் சுட முயன்று முடியாமல் போனதை தனது நண்பரான தஞ்சை கோபாலகிருஷ்ணனிடம் சொல்லி வருந்திய போது அவரை இது போன்ற காரியத்தில் இனி ஈடுபடாதே என்று கடிந்து கொண்டதுடன் மகாத்மாவை பின்பற்றும்படி அறிவுரை கூறினார்,
விடுதலைப் போராட்டத்துக்கு பணம் தேவைப்பட்டதால் நண்பர்கள் இருவருடன் சேர்ந்து மதுரை இம்பீரியல் வங்கியில் கொள்ளை அடிக்கத் திட்டமிட்டார். நண்பர்கள் அவசரப்பட்டு செயலில் இறங்கி மாட்டிக் கொண்டனர். போலீஸாரின் சித்திரவதை தாங்கமுடியாமல் பாஷ்யத்தை காட்டிக் கொடுத்ததால் கைது செய்து இரண்டு மாதம் சித்திரவதை செய்து ஆதாரம் இல்லையென விடுதலை செய்யப்பட்ட போதிலும் சதிகாரக் கேடி என்ற பட்டியலில் இவரது பெயரும் சேர்க்கப்பட்டது.
சென்னையில் தனது சகோதரர் வீட்டில் தங்கி இருந்த போது போலீஸ் கண்காணிப்பையும் மீறி கதர் ஆடை அணிந்து அந்நியத்துணிகளை வாங்காதீர்கள் என்று வேண்டுகோள் விடுத்தபடி கதர் துணிகளை விற்பனை செய்தார். இதனால் கோபம் கொண்ட கடைக்காரர்கள் வெற்றிலை எச்சிலை இவர் மீது துப்பினர். மேலும் சிகரெட் துண்டுகளை நெருப்புடன் வீசினர். இதேபோல் ஐஸ்ஹவுஸ் பகுதியில் கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்ட போது கள்ளுக்கடைக்காரர் இவர் மீது கள்ளுப் பானையைப் போட்டு உடைத்தார். 
சென்னை வந்த இந்துஸ்தான் சேவாதளத் தலைவர் டாக்டர் ஹார்டிகார் தனது சேவாதளத் தொண்டராக சேர்த்துக் கொண்டார். தனது தொண்டர்களுக்கு பகல்கோட் என்ற இடத்தில் பயிற்சி அளித்துக் கொண்டிருந்தார் அப்போது ஏற்பட்ட சில நிகழ்வுகளால் அரசியல் இயக்கங்கள் தடை செய்யப்பட்டன எனவே தனது சேவாதளத்தை கலைத்த ஹார்டிகார் தொண்டர்களை போராட்டத்தை தொடரும்படி கூறி அவர் அவர் பகுதிக்கு அனுப்பி வைத்தார்.
ஜனவரி 26ஆம் தேதியை நாட்டு மக்கள் சுதந்திரதினமாக கொண்டாடும்படி பண்டித நேரு அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை தனக்காக விடுத்த அழைப்பாக எண்ணி தானே ஜனவரி 25 மாலை 7 மணியளவில் பெரிய தேசியக் கொடியொன்றை தயாரித்து அதன் நடுவில் மையினால் ராட்டை வரைந்து அதன் கீழ் இன்று முதல் இந்தியா சுதந்திரம் அடைகிறது என்று எழுதி எடுத்துக் கொண்டு சுப்பிரமணிய சிவாவின் மருமகனும் தனது நண்பருமான வேணுகோபாலை அழைத்துக் கொண்டு சினிமா பார்த்துவிட்டு இரவு 12 மணிக்கு காவலர் உடையில் கோட்டையின் தென்புற வாயில் வழியாக கோட்டைக்குள் நுழைந்தார். அங்கு 140 அடி உயரமும் 3 அடி குறுக்களவும் உள்ள கம்பத்தில் ஏறினார், கலங்கரை விளக்க ஒளிபடும் நேரத்தில் தன்னை கம்பத்தில் மறைத்துக் கொண்டு ஏறி யூனியன் ஜாஜ் என்ற ஆங்கிலேயரின் கொடியை இறக்கிவிட்டு தான் மறைத்துக் கொண்டு வந்த இந்திய தேசியக் கொடியை ஏறிவிட்டு தப்பியோடிவிட்டார். காலையில் பட்டொளி வீசிப் பறந்த தேசியக் கொடியை பார்த்த ராணுவத்தினர் பதட்டமடைந்து கவர்னருக்கு செய்தி அனுப்பினர். இதனைச் செய்தவரை கண்டுபிடிக்க மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்ததாகவும் கடைசி வரை கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் அரசாங்க ஆவணங்கள் தெரிவித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
சுதந்திரக் காற்றை சுவாசிக்க தனது வாழ்நாளை அர்ப்பணித்த பாஷ்யம், 1942ல் ஆகஸ்ட் புரட்சி தொடங்கிய போது துப்பாக்கிகளை கடத்துதல், தண்டவாளங்களை தகர்த்தல், பாலங்களை வெடி வைத்து தகர்த்தல் என எல்லாக் காரியங்களிலும் ஈடுபட்டார். மேலும் அவர் கம்யூனிஸ்டுகளாக இருந்த அமீர் ஹைதர்கான், சி.எஸ்.சுப்பிரமணியன், புதுவை சுப்பையா ஆகியோரோடு தொடர்பு வைத்திருந்தார்.
சிறந்த ஓவியரான பாஷ்யம் அரசியல் கருத்துப் படங்கள், கதைகளுக்கான சித்திரங்கள், புத்தகங்களுக்கான முகப்புப் படங்கள் என பல்வகை ஓவியங்களை ஆர்யா என்ற புனைப் பெயரில் வரைந்து வந்தார். இவர் வரைந்த மகாகவி பாரதியின் படம் சென்னை அரசாங்கத்தாரால் ஏற்றுக் கொள்ளப்பட்டு இன்றளவும் வளைய வருகிறது. 1945ல் முழு நேர ஓவியரானா  பாஷ்யம். "யுனைடெட் ஆர்ட்ஸ்" என்னும் சொந்த நிறுவனத்தைத் தொடங்கினார். காந்தி, நேதாஜி ஆகியோருடைய படங்களையும் இவர் வரைந்திருக்கிறார். காந்தியின் உருவச்சிலையையும் இவர் வடித்துள்ளார். 
தனது வாழ்நாள் முழுவதையும் இந்திய சுதந்திரப் போராட்டத்துக்காக அர்ப்பணித்த பாஷ்யம் போன்ற எத்தனையோ தியாகிகளின் தேசியப் பற்றுத்தான் இன்று நம்மை சுதந்திரக் காற்றை சுவாசிக்க வைத்துள்ளது. தியாகிகளை நினைவில் நிறுத்தி சுதந்திரத் திருநாளை சிறப்பாய் கொண்டாடுவோம்.


குண்டு துளைக்காத காரில் வந்து 
குண்டு துளைக்காத கூண்டுக்குள் நின்று
சுதந்திரக் கொடியை சுதந்திரமில்லாமல்
ஏற்றும் தலைவர்களும்...
குடிக்க கஞ்சியும் உடுக்கத் துணியும் இன்றி
சுதந்திரமாக வாழும் மக்களும்

நிறைந்த எங்கள் சுதந்திர இந்தியாவின்
கடைக்கோடி இந்தியனுக்கும்
என் இனிய சுதந்திரதின வாழ்த்துக்கள்.


அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள். 

ஜெய் ஹிந்த்..!

திரு.பாஷ்யம் குறித்த செய்திகளை படிக்க உதவிய தமிழ் விக்கிபீடியா மற்றும் சில தளங்களுக்கு நன்றி.

-'பரிவை' சே.குமார்.

புதன், 1 ஆகஸ்ட், 2012

ஒரு கவிதை... ஒரு விருது...

 முத்தம்


கொடுங்கல் வாங்கலில்
எப்போதுமே பிரச்சினைதான்...
கொடுக்க மறுக்கும்
காதலி..!
வாங்கத் துடிக்கும்
காதலன்..!
இடையில் உலர்ந்து
கொண்டிருந்தது
ஒரு முத்தம்..!

****************************************************
விருது

இந்த முறை விருது கொடுத்திருப்பவர் மதிப்பிற்குரிய
ஐயா. திரு. வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள்.  
விருது கொடுத்த ஐயா அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.

விருது கொடுத்த ஐயா

திரு. வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள்


ஆசியுடன் பெற்ற விருது



நன்றி... நன்றி.. நன்றி...
 
-'பரிவை' சே.குமார்