மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 30 நவம்பர், 2013

தொடர்கதை: கலையாத கனவுகள் - 32

முந்தைய பதிவுகளைப் படிக்க...


-----------------------------------------------------------------------

32. தொடரும் பழிவாங்கலும்... தேடும் கண்களும்...

முன்கதைச் சுருக்கம்: 

கிராமத்து ஏழைக் குடும்பத்துப் பையனான ராம்கி, கல்லூரி ரவுடி வைரவனின் தங்கை புவனாவுடன் நட்பாக பழகுகிறான்.  அக்காவுக்கு விருப்பமில்லாத மாப்பிள்ளையை பேசி வைத்திருக்கும் அம்மாவுடன் மல்லுக்கு நிற்கிறான். கல்லூரியில் வைரவனைத் தாக்க வந்தவர்களுடன் ஏற்பட்ட தகராறின் காரணமாக கெட்டபெயர் ஏற்படுகிறது. இதன் பின்னான நிகழ்வுகளில் புவனா தன் காதலை ராம்கியிடன் சொல்கிறாள்.  அவர்களது காதல் பயணம்சந்தோஷமாக போய்க் கொண்டிருக்கிறது. இதற்கிடையே ராம்கியை அடிக்க வந்த மணி, சேகரைப் பார்த்ததும் அடிக்காமல் திரும்பிச் சென்றான்.

இனி...


"என்ன மாப்ள... இப்படிப் பண்ணிட்டு வந்து நிக்கிறே... இப்ப இளங்கோ அண்ணனுக்கு என்ன பதில் சொல்றது. அவரும் சரவணண்ணனும் நீதான் காரியத்தை கச்சிதமா முடிப்பேன்னு சொன்னாங்க... ஆனா..." பேச்சை நிறுத்தி மணியை நோக்கினான் சிவா.

"என்னைய என்ன பண்ணச் சொல்றே...? அவனோட நல்ல நேரம் என்னோட பிரண்ட் சேகர் வந்துட்டான்... நான் என்ன செய்யட்டும்... அதுக்கப்புறம் அவனை எப்புடி போடுறது... நான் எப்ப ஸ்கெட்ச் போட்டாலும் தப்பானதேயில்லை... காலேசு தொறக்கட்டும் இங்க வச்சே போடலாமுன்னு சொன்னேன்... யாரு கேட்டீங்க... போன வருசம் புரபஸரை எங்க வச்சிப் போட்டோம்... காலேசு வாசல்லதானே... இளங்கோ அண்ணனும் சரவணனும்தான் இப்பவே போடணும்... கடைசிப் பரிட்சை... அவங்க ஊர் ரோட்ல வச்சிப் போடுறது ஈசி... அப்படியிப்படின்னு சொல்லி என்னோட பிளானை டோட்டலா மாத்துனது... இப்ப வந்து எனக்கிட்ட கத்துறே..?"

"இல்ல மாப்ள இம்புட்டு தூரம் எல்லாம் பண்ணி... கடைசியில..."

"என்ன பண்ணுனே... தண்ணி வாங்கி ஊத்துனீங்க... அம்புட்டுத்தானே... இந்த இதுல முன்னூறு ரூபாய் இருக்கு... எடுத்துக்க..." என்று பாக்கெட்டில் இருந்து காசை எடுத்து அவனிடம் நீட்டினான்.

"டேய் என்னடா இவன்... நான் காசு கேட்ட மாதிரி... இனி அவனை எப்படிடா போட முடியும்..ய"

"காலேசு தொறந்ததும் எவனையாவது வச்சிப் போடுங்க... இல்ல நீயே போடு..."

"நானா.... அது சரி... இந்தக் காலேசுலதான் இன்னும் ஒரு வருசம் படிக்கணும்... நான் அவனை அடிக்கப் போன வைரவனோட ஆளு அந்த சுதாகர் எனக்கு எதிரா கண்டிப்பா மோதலுக்கு தயாராயிடுவான்... வேற ஆளுகளை வச்சிப் போடுறதுன்னா நீ செய்யாததை எவனும் செய்ய வரமாட்டானுங்க... அது போக அவனை அடிக்கவே போறோம்ன்னு வையி அவன் என்ன சொல்லுவான் தெரியுமா... நான் மணியோட பிரண்ட்... வேணுமின்னா அவன்கிட்ட கேளுங்கன்னு சொன்னாலும் சொல்லுவான்... ஏன்னா அவனோட சொந்தக்காரன்... அதான் அந்தப்பயலோட மாமனோ... மச்சானோ... சொன்னியே அவன் எல்லாத்தையும் விவரமா சொல்லிக் கொடுத்திருப்பான்..."

"இப்ப எதுக்கு இப்படி புலம்புறே... காலேசு தொறந்ததும் போடப்பாருங்க... இதுல என்னை இழுக்காதீங்க... அப்புறம் அவன் வைரவனை அடிக்கப் போன உங்க ஆளுகளை அடிச்சிருக்கான்... அவன் வைரவனுக்கு சப்போர்ட்டாத்தான்  அடிச்சானா என்ன... இல்லையில்ல... தன் கண் முன்னால ஒருத்தனை அடிக்க வாரானுங்களேன்னுதானே அடிச்சான்... இதே உங்க சைடுல ஒருத்தனை வைரவன் ஆள் வச்சி அடிக்க ஏற்பாடு பண்ணி அதுவும் இவன் கண் முன்னால நடந்திருந்தா... வைரவனுக்கு சப்போர்ட்டா அவனும் சேர்ந்து அடிச்சிருப்பானா..?"

"சேச்சே... அவன் பரம்பரை ரவுடி இல்லை... என் கண் முன்னால யாரை அடிச்சிருந்தாலும் நான் தடுத்திருப்பேன்னுதான் காலேஸ் கவுன்சில்ல சொன்னான்..."

"அப்புறம் என்ன மயித்துக்கு அவனைப் போடணுமின்னு துடிக்கிறீங்க?"

"எதுக்குடா நீ இம்புட்டு சூடாகுறே...? அன்னைக்கு அடி வாங்குனதுல ஒருத்தன் சரவணண்ணனோட மச்சான்... அவருதான் ரொம்ப போர்ஸ் பண்ணுறாரு..."

"அப்புடி அவனை அடிக்கணுமின்னா அவனுக்கிட்ட அடி வாங்கிக்கிட்டுப் போன அந்த நொண்ணையைப் பண்ணச் சொல்லு... நல்லா படிக்கிற பையனாம்... காலேசு கல்சுரல்ல நல்ல பேர் வச்சிருக்கானாம்... ரொம்ப கஷ்டப்படுற குடும்பமாம்... இவனோட படிப்பை நம்பித்தான் குடும்பமே இருக்காம்... இவனை எதுக்குடா அடிச்சி ரவுடி ஆக்கணுமின்னு பாக்குறீங்க... ம்...அவன் பாட்டுக்கு படிக்கட்டும்டா... நாமதான் படிப்பைத் தவிர எல்லாம் செய்யுறோம்... படிக்கிறவனுங்கள விட்டுருங்கடா... வேண்டாம்... "

"நீ சொல்றது சரிதான் மாப்ளே... இளங்கோ அண்ணன் ஒத்துக்கிட்டாலும் சரவணன் ஒத்துக்க மாட்டாரு..."

"அப்ப அவரையே போடச் சொல்லு... டேய் வாங்கடா போகலாம்..." என்றபடி அங்கிருந்து மணி கிளம்ப, சிவா என்ன பண்ணுவது என்ற குழப்பத்தில் இளங்கோவைத் தேடிச் சென்றான்.

"வா சிவா... என்னாச்சி... மணி வந்துட்டானா?"

"அண்ணே அவன் போடலண்ணே..."

"ஏ... ஏன்டா... ரெடியாத்தானே போனான்..."

"ம்... ராம்கிப்பயலோட மச்சான் இவனுக்குப் பிரண்ட்டாம்... இவனுக அடிக்கப் போற நேரத்துல அவன் வந்துட்டானாம்... அதனால..."

"சை... இப்படிப் பண்ணிட்டானே... மணி தொடலைன்னா எவனும் செய்ய மாட்டானுங்களே...  என்னதான் சொல்றான்... கொஞ்ச நாள் கழிச்சு போடுறேன்னு சொல்றானா?"

"இல்லண்ணே... நாம எப்படியோ அப்படித்தானாம் அந்தப் பயலும்... அதனால விட்டுருங்கடா... படிக்கிற பயலை எதுக்கு ரவுடியாக்குறீங்கன்னு சொல்றான்..."

"ஓ அட்வைஸ் பண்றானா... ம்... சரவணன் இவனைத் தூக்கணுமின்னு நிக்கிறான்... சரி விடு காலேசு தொறந்ததும் யாரையாவது வச்சிப் போட்டுக்கலாம்... இப்ப இந்த மேட்டரை கிடப்பில் போட்டுரு... நீதான் இங்கதானே இருப்பே... பார்த்துக்கலாம்... சரவணனை நான் பார்த்துக்கிறேன்.. இனி இந்த மேட்டரை எங்கயும் ஓபன் பண்ண வேண்டாம்.... சரியா..."

"சரிண்ணே..."


விடுமுறை தினம் பறந்து கொண்டிருந்தாலும் ராம்கியும் புவனாவும் ஒருவரை ஒருவர் பார்க்காமல் நாட்களை வேதனையுடன் கடத்திக் கொண்டிருந்தார்கள். எப்போது கல்லூரி திறக்கும் என்ற நினைப்புடனே நாட்களை கடந்து கொண்டிருந்தனர். 

"என்னடா... ஏன் ஒரு மாதிரி இருக்கே...?" என்று வீட்டு வாசலில் அமர்ந்திருந்த ராம்கியிடம் கேட்டபடி அருகில் அமர்ந்தான் சேகர்.
.
"ஒண்ணுமில்லேடா...."

"என்ன தங்கச்சி நினைப்பா... காதல் வந்தாலே இப்படித்தான்... சரி அவ நம்பர் வச்சிருக்கியா..? வா வீட்ல போயி பேசலாம்... அப்பாம்மா வெளிய போயிருக்காங்க... "

"இல்லடா... அவ நம்பர் இல்லை... அவங்க சித்தி வீட்டுக்கு போயிருக்கும்ன்னு நினைக்கிறேன்... அதுவா கூப்பிட்டாத்தான்..."

"ம்... அப்ப அங்க போயிட வேண்டியதுதானே..."

"என்ன விளையாடுறியா... அட்ரஸ் தெரியாம போயி... இருக்கட்டும்... பிரிவுதான் இன்னும் எங்களுக்குள்ள உறவை பலப்படுத்தும்... என்ன காலேசு தொறக்குறவரைக்கும்தானே..."

"பார்றா... மச்சான் தத்துவமெல்லாம் பேசுறான்... எல்லாம் காதல் படுத்தும்பாடு... மெதுவா அத்தைக்கிட்ட போட்டுவிடவா... சாமி ஆட்டம் பாக்கலாம்..."

"அப்பா சாமி... நீ சும்மா இரு...  சரி வா உங்க வீட்டுப் பக்கம் போகலாம்... வீட்லதான் அத்தைமாமா இல்லையில்ல... கொஞ்சம் ப்ரியா பேசிக்கிட்டு இருக்கலாம்..."

"சரி வா போகலாம்... அவங்க வெளியில பொயிட்டாங்கதான்... ஆனா எங்க அப்பத்தாவை விட்டுட்டுத்தான் போயிருக்காங்க..."

"அப்பத்தாவா..? அதுதான் போயிச் சேர்ந்துருச்சே..."

"உனக்குத் தெரியாதா... ஆத்தா காவேரிதான் எங்க அப்பத்தா...."

"உனக்கு ரொம்ப கொழுப்புடா... அவ கேட்டா அம்புட்டுத்தான்...." என்று பேசிச் சிரித்தபடி செல்ல, "என்னடா எங்கடா போயித் தொலஞ்சே..?" என சேகரைப் பார்த்து வாசலில் நின்றபடி கத்தினாள் காவேரி.

"என்னடி... எதுக்கு அப்பத்தா மாதிரி கத்துறே...?"

"நா அப்பத்தாவா... இரு உனக்கு இருக்கு... எவளோ போன் பண்ணினா..."

"யாரு..?" சேகர் கேட்க, 'ஒருவேளை புவியா இருக்குமே?' மனசுக்குள் கேட்டுக் கொண்டான் ராம்கி.

"பேர் சொல்லலை... ரெண்டு மூணு தடவை அடிச்சிட்டா... சேகர் அண்ணன் வீடுதானேன்னு கேட்டா.... ஆமான்னதும் அண்ணன் இல்லையான்னுட்டு வச்சிட்டா.... எவடா அவ..."

"எனக்கென்னடி தெரியும்... ஆக்சுவலி நான் ரொம்ப பேருக்கு ஹெல்ப் பண்ணியிருக்கேன்... அதுல யாராவது எனக்கு தாங்க்ஸ் பண்ண போன் பண்ணியிருக்கலாம்... சேகர் அத்தான் இருக்காங்களான்னு கேட்டிருந்தாலும் நீ வயித்தெரிச்சல்ல அண்ணன்னு சொல்லுவே..."

"ஆமா... இவருக்காக அலையுறாளுங்க.... சரி இங்கதானே இருப்பீங்க... நான் வீட்டுக்குப் போறேன்.... அத்தை சொன்னதெல்லாம் செஞ்சிட்டேன்... அவ போன் பண்ணினாலும் பண்ணுவா இங்கயே இருங்க..." என்றபடி அவள் கிளம்ப, போன் மணி அடிக்க ஆரம்பித்தது.

(புதன் கிழமை தொடரும்)
-'பரிவை' சே.குமார்.

வியாழன், 28 நவம்பர், 2013

வீடியோ : கிராமிய சங்கீதம்...

த்தனை கவலைகள் இருந்தாலும் 80, 90 களில் வந்த ராஜாவின் பாடல்களை ஒலிக்க விட்டு கண்ணை மூடி இசையை ரசிக்கும் போது கிடைக்கும் ஏகாந்தத்துக்கு ஈடு இணை ஏது... ராஜாவுக்கு முன்னர் கண்டசாலா, எம்.எஸ்.வி. உள்ளிட்ட இசை மாமேதைகள் எத்தனை இனிமையான பாடல்களைக் கொடுத்தனர். ராஜாவின் கொடி பறந்து கொண்டிருக்கும் போதே தமிழ் திரையுலகில் இசையில் தனிக்கொடி நாட்டிய ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர். ரகுமான், சங்கர் கணேஷ், தேவா, வித்யாசாகர், யுவன் சங்கர் ராஜா, இமான் , இன்னும் நிறைய இசையமைப்பாளர்கள் தங்களது இசையால் நம்மைத் தாலாட்டி வருகிறார்கள்.  இன்றைய இளம் இசையமைப்பாளர்கள் தமது இசையால் கவர்ந்தாலும் நம்மை எல்லாம் தாலாட்டும் உரிமை ராஜாவின் பாடல்களுக்கு மட்டுமே இருக்கிறது.

கிராமத்து இசையும் பாடலும் எல்லோரையும் கவரும் என்பதைச் சொல்லித்தான் தெரிய வேண்டுமா என்ன... இதோ கிராமத்து இசையில் நம் உள்ளம் கவர்ந்த முத்தான எட்டுப்பாடல்கள் இன்றைய வீடியோப் பகிர்வில் உங்கள் செவிக்கு இனிமை சேர்ப்பதற்காக...


படம் : பெரிய மருது
பாடல் : வெடலப்புள்ள நேசத்துக்கு...





படம் : சேரன் பாண்டியன்
பாடல் : சம்பா நாத்து...





படம் : சின்னத்தாயி
பாடல் : நான் ஏரிக்கரை மேலிருந்து....





படம் : ஆட்டுக்கார அலமேலு
பாடல் : பருத்தி எடுக்கயிலே...





படம் : அச்சமில்லை அச்சமில்லை
பாடல் : ஆவரம் பூவு ஆறேழு நாளா....





படம் : கிராமத்து அத்தியாயம்
பாடல் : ஆத்து மேட்டுல...





படம் : கன்னிப் பருவத்திலே
பாடல் : பட்டு வண்ண ரோசாவாம்...





படம் : முதல் மரியாதை
பாடல் : பூங்காத்து திரும்புமா...



பாடல்களை கண்டிப்பாக ரசித்து இருப்பீர்கள் என்று நம்புகிறேன். இதே வரிசையில் இன்னும் சில முத்துக்களை அடுத்த பகிர்வில் பார்ப்போம்.

பகிர்வு தொடரும்...
-'பரிவை' சே.குமார்.

புதன், 27 நவம்பர், 2013

தொடர்கதை: கலையாத கனவுகள் - 31

முந்தைய பதிவுகளைப் படிக்க...



-----------------------------------------------------------------------

31. ராம்கி தப்பினானா?

முன்கதைச் சுருக்கம்: 

கிராமத்து ஏழைக் குடும்பத்துப் பையனான ராம்கி, கல்லூரி ரவுடி வைரவனின் தங்கை புவனாவுடன் நட்பாக பழகுகிறான்.  அக்காவுக்கு விருப்பமில்லாத மாப்பிள்ளையை பேசி வைத்திருக்கும் அம்மாவுடன் மல்லுக்கு நிற்கிறான். கல்லூரியில் வைரவனைத் தாக்க வந்தவர்களுடன் ஏற்பட்ட தகராறின் காரணமாக கெட்டபெயர் ஏற்படுகிறது. இதன் பின்னான நிகழ்வுகளில் புவனா தன் காதலை ராம்கியிடன் சொல்கிறாள்.  அவர்களது காதல் பயணம்சந்தோஷமாக போய்க் கொண்டிருக்கிறது. இதற்கிடையே ராம்கியை அடிக்க இளங்கோ நண்பர்களை அனுப்பினான்.

இனி...


தூரத்தில் சைக்கிளில் யாரோ வருவது தெரிந்ததும் "டேய் மாப்ளே... நீ இவனுக்கிட்ட பேசிக்கிட்டு இருக்க மாதிரி நில்லு... சட்டையில பின்னால அருவாளை வச்சிக்க... நாங்க எல்லாரும் வண்டியில இருக்கோம். அந்த ஆளு நம்மளை கடந்து போறவரைக்கும் எல்லாம் சகஜமா இருக்கட்டும்... பதட்டம் எதுவும் வேண்டாம்... டேய் இங்கேரு... சைக்கிள்ல வர்றவன் உங்க ஊருக்காரனாவோ உனக்குத் தெரிஞ்சவனாவோ இருந்து காட்டிக் கொடுக்க நினைச்சு கத்துனேன்னு வச்சுக்கவே மாப்ளக்கிட்ட இருக்க அருவாளால சங்குல ஒரே இழுதான்... இழுத்துப் போட்டுட்டுப் போய்க்கிட்டே இருப்போம்... எங்க மயிரைக்கூட எவனாலயும் புடுங்க முடியாது... சத்தமில்லா நின்னியன்னா உங்கிட்ட கொஞ்சம் பேசிட்டு போய்க்கிட்டே இருப்போம்... சரியா?... மாப்ள சுதாரிப்பா நில்லு... கத்துனா போட்டுட்டு வண்டியில தாவிரு... சரியா" என்றான் அந்த அணியில் நடுநாயகமாக நின்றவன். இவன்தான் இளங்கோ சொன்ன மணியாக இருக்க வேண்டும். ஒரு மாணவனுக்கான முகக்கலையைவிட ரவுடிக்கான எல்லாம் அட்சரம் பிசகாமல் இருந்தது. ஆள் நரம்பு மாதிரித்தான் இருந்தான். சிகரெட் சுவைத்த உதடு கருத்து காய்ந்து போய் இருந்தது. கண்கள் வரும்போது குடித்துவிட்டு வந்த பிராந்தியை பிரதிபலித்துக் கொண்டிருந்தன.

'ஆஹா... வகையா மாட்டிக்கிட்டோமே... இன்னைக்கு எப்படியும் நம்மளைப் போடப் போறாய்ங்க... என்ன கத்துனா கழுத்துல கண்டிப்பா இறக்கிடுவான்... கத்தாம நின்னா உயிருக்கு உத்ரவாதம் இருக்கும்... ம்... யாரா இருப்பாய்ங்க இவனுக... ஒருவேளை வைரவன் தங்கச்சிக்கிட்ட பழகுறது தெரிஞ்சு தட்டி விடச் சொல்லியிருப்பானோ... இல்லே இளங்கோ... சேச்சே... அன்னைக்கு நமக்கிட்ட பேசுனதுக்கு அப்புறம் அவரு ரொம்ப ஜென்டிலா நடந்துக்கிட்டாருல்ல... அவரு இப்படி ஆள் வச்சு அடிக்கிற அளவுக்கு கீழ்த்தரமாப் போகமாட்டாரு.. எப்படிப்பார்த்தாலும் இது புவியோட பழகுறதுக்காக நடக்கப்போற தாக்குதல்தான்... என்ன நடந்தாலும் கடவுள் செயல்' என்று மனதுக்குள் ராம்கி நினைத்துக் கொண்டிருக்கும் போதே சைக்கிள் அருகில் வந்தது.

"என்னடா மாப்ளே... என்னடா பண்ணுறே... இதெல்லாம் யாரு?" என்றபடி சைக்கிளில் இருந்து இறங்கிய சேகர், பைக்கில் அமர்ந்திருந்த அந்த நரம்பனைப் பார்த்ததும் "டேய் மாப்ளே மணி, என்னடா இங்க...?" என அவனது தோளில் தட்டினான்.

"டேய் மாப்ளே சேகரு... என்னடா இப்பல்லாம் நம்ம போற பஸ்ல ஆளைக் காணோம்... எதாவது மாட்டிருச்சா...? திருச்சி வண்டியில போறியாம்... ஒரு நாளைக்கு வந்து பாக்கனும்... எந்த ரதி மாட்டியிருக்கானு..." என்றபடி வண்டியில் இருந்து இறங்கி பாக்கெட்டில் இருந்து சிகரெட் பாக்கெட்டை எடுத்து அவனிடம் நீட்டினான். சேகர் சிகரெட்டை எடுத்து உதட்டில் பொருத்தி அவனது சிகரெட்டை வாங்கி பற்ற வைத்துக் கொண்டான்.

"அதெல்லாம் இல்ல மாப்ளே... நம்மல்லாம் ஒரு இடத்துல லாக் ஆகுற ஆளுங்களா என்ன... ம்... கே.எஸ்.எஸ்ல ஒரே கூட்டம். அதுபோக காலையில அவசரமா வந்து வண்டியை பிடிக்க வேண்டியிருக்கு. காரைக்குடியில போய் ரொம்ப நேரம் போட்டுடுறான். அதுக்கு திருச்சி வண்டியியல போன நேர எங்க பாலிடெக்னிக்கிட்ட போயி இறங்கிக்கலாமுல்ல... இப்ப என்ன உனக்காக இனி கே.எஸ்.எஸ்ல வந்துட்டாப் போச்சு... ஆமா இங்க என்ன வேலை உனக்கு... புல்லா தண்ணி போட்டுட்டு வந்திருக்கே... ஒரு செட்டப்பா வந்திருக்கிறதைப் பார்த்தா... என்னடா... எதாவது பிரச்சினையா?... " என்றான் சேகர்.

"இல்லடா... அதெல்லாம் ஒண்ணும் இல்லடா..."

"இல்லையே... ஒரு குரூப்பா வந்திருக்கிறதைப் பார்த்தா சும்மா வந்த மாதிரி தெரியலையே... ஆமா... இவனோட என்ன பேசிக்கிட்டு இருக்கீங்க... இவனைத் தெரியுமா என்ன...?"

ராம்கி பேசாமல் நிற்க,  மற்றவர்களும் ஒன்றும் சொல்லவில்லை. "இவனை உனக்குத் தெரியுமா?" என்று மணி திருப்பிக் கேட்டான்.

"என்ன மாப்ளே... நம்ம மச்சான் ஒருத்தன் படிப்பாளி இருக்கான்னு உங்கிட்ட சொல்லி இருக்கேன்ல... அவன்தான்டா இவன்.. என்னோட மச்சான்..." என்று ராம்கி தோளில் கையைப் போட்டான்.

"நல்லாப் படிக்கிறவனா...?"

"அதுல என்னடா சந்தேகம்... இவன் கலந்துக்கிற போட்டியில எல்லாம் பரிசு வாங்குறவன்டா... ஆமா ஆளைத் தெரியாமத்தான் பேசிக்கிட்டு இருந்தீங்களா.... மாப்ளே என்ன பிரச்சினை... இவனை யாருடா அடிக்கச் சொன்னா..." சேகர் நேரடியாகக் கேக்க, ராம்கி அவனைப் பார்த்தான்.

"அப்படியெல்லாம் இல்லடா..."

"இங்க பாரு மாப்ளே... என்ன பிரச்சினை எனக்கிட்ட சொல்லுவியா மாட்டியா...?"

"சரி இங்க வா..." என்று அவன் தோளில் கைபோட்டு தனியாகக் கூட்டிச் சென்றான்.

"மாப்ளே... சாரிடா உன்னோட மச்சான்னு தெரியாது... அவனைப் போடத்தான் வந்தோம்... சைக்கிள் வர்றதைப் பார்த்துட்டு அது போகட்டும்ன்னு காத்திருந்தோம்... அவனோட நல்ல நேரம் நீ வந்திருக்கே..."

"எ... என்ன மாப்ளே சொல்றே... அவனைப் போடவா... டேய்... என்னடா இதெல்லாம்... அப்பா இல்லாம எங்க அயித்தை கஷ்டப்பட்டு வளக்குறாங்கடா... அவங்களோட கனவே இவன்தான்டா... இவனை எதுக்குடா.,.. இவனுக்கு யாருடா எதிரி..." படபடப்பாக கேட்டான்.

"அதெல்லாம் எதுக்கு மாப்ளே... விடு... யாரா இருந்தா என்ன... ஆனா பயலை சூதனமா இருக்கச் சொல்லு... எனக்கிட்ட எந்திரிக்காம கையை காலை ஒடிச்சிப் போடச் சொன்னானுங்க...  இன்னைக்கு நாங்க விட்டுட்டுப் போகலாம். நாளைக்கு வேற யாராவது வந்து ஆளையே போட்டாலும் போட்டுருவாய்ங்கடா..."

"என்னடா சொல்றே... இவனைப் போடணுங்கிற அளவுக்கு என்னடா பிரச்சினை... யாருடா... இவன் லவ் பண்ணுற பொண்ணோட அண்ணனா... இல்ல வேற யாருமா...?"

"லவ் பண்ணுறானா.. அதெல்லாம் தெரியாது மாப்ளே... நீ எப்படியோ அப்படித்தான் இவனைப் போடச் சொன்னவனும்... யாருன்னு சொல்றது நட்புக்குச் செய்யிற துரோகமுடா... சரி விடு... நான் கிளம்புறேன்... நாளைக்கு கே.எஸ்.எஸ்ல பார்க்கலாம்." 

"சரி... மாப்ளே... இனி இவனை அடிக்க வரமாட்டியல்ல..."

"என்ன மாப்ளே... இப்படிக் கேக்குறே.. உனக்கு மச்சான்னா எனக்கு அவன் பங்காளி... வா" என்றவன் சேகரின் தோளில் கை போட்டபடி மீண்டும் ராம்கியிடம் நடக்கலானான்.

"டேய் போகலாமா?"

"பங்காளி... சிவா பேசினான்... என்னாச்சின்னு கேட்டான்... நான் வந்து சொல்றோம்ன்னு சொல்லிட்டேன்..." என்றான் வளர்ந்தவன். இப்போது இந்தப் பேச்சு இங்கு தேவையில்லை என்று நினைத்தவன் ஒன்றும் சொல்லாமல் சரி சரி என்றான்.

ராம்கி பக்கம் திரும்பி "இனி நீ எனக்குப் பங்காளி... லவ் பண்ணுறதா மாப்ள சொன்னான்... ஏதாவது பிரச்சினை வந்தா சொல்லு... நா வந்து பொண்ண தூக்கியாந்து வேணுமின்னாலும் கல்யாணம் பண்னி வக்கிறேன்... வரவா..." என்றவன் "சரி..வாங்கடா போகலாம்...  வண்டியை எடுங்க" என்றபடி அவனது பதிலுக்கு காத்திராமல் வண்டியில் தாவி ஏறினான்.

ராம்கி பேசாமல் சைக்கிளை உருட்ட, "என்னடா என்ன பிரச்சினை... யாருடா அடிக்கச் சொன்னது..."

"எதுக்குன்னு தெரியலை... கடவுள் புண்ணியத்தால நீ வந்தேடா மச்சான்... இல்லேன்னா இந்நேரம்... நான் ஒத்தைக்கு ஒத்தையின்னா மோதிருவேன். ஆனா அருவா... கத்தி... சைக்கிள் செயினுன்னு... ம்... நீ வரலைன்னா வெட்டியிருப்பாங்கடா..."

"அதெல்லாம் உன்னோட நல்ல மனசுக்கு எதுவும் வராது.. ஆமா சிவா யாரு..?"

"சிவாவா... சிவா?" யோசித்தான்.

"ஆமாடா மணிக்கிட்ட ஒருத்தன் சொன்னான்ல... என்னாச்சின்னு சிவா போன் பண்ணினான்னு..."

"ம்... சிவா... டேய் மச்சான்... அவன் இளங்கோவோட வலது கையிடா... செகண்ட் இயர் படிக்கிறான்..."

"அப்ப உன்னைய அடிக்கச் சொன்னது இளங்கோ... பழிக்குப் பழி..."

"எவ்வளவு நல்லவனாட்டம் பேசினான் தெரியுமா... அவனா... நம்பமுடியலை மாப்ள..."

"இவனுக எல்லாம் நல்ல பாம்பு மாதிரிடா... கர்வம் வச்சே போடப்பார்ப்பானுங்க... நம்ப மட்டும் கூடாது... சரி மணி என்ன சொன்னான் தெரியுமா..? வேற எவனாச்சும் இவனைப் போட வந்தாலும் வருவாங்கன்னு சொன்னான்... சூதனமா இரு மாப்ளே... பேசாம லீவுக்கு எங்கயாச்சும் போயிரு..."

"எங்கடா போறது... கொஞ்ச நாள்தான் லீவு... பார்த்துக்கலாம்... வா... எதுக்குடா லவ் பண்ணுறேன்னு சொல்லித் தொலச்சே..."

"எனக்கு பதட்டத்துல என்ன பேசுறதுன்னு தெரியலை... ஒருவேளை அவளோட அண்ணனான்னு தெரிஞ்சுக்க கேட்டேன்... அவனும் இதை பெரிசா எடுத்துக்கலை... பழகிட்டா மணி உயிரையே கொடுப்பான். எனக்கு பஸ்லதான் பழக்கம்... ரொம்ப குளோஸ்... இனி அவனால உனக்கு பிரச்சினையில்லை... மணி தொட மறுத்துட்டா எவனும் தொட மாட்டாய்ங்க... அந்தளவுக்கு மணிக்கு பேர் இருக்கு... எதுக்கும் நாம கேர்புல்லா இருக்கணும்..."

"ம்...  நீ பாட்டுக்கு தங்கச்சிக்கிட்ட இதையெல்லாம் சொல்லிடாதே? அவ வேற பயந்துடப்போறா... பாவம்..."

"ம்... எனக்கு இன்னும் படபடன்னு இருக்குடா.... நீ வரும்போது எங்கிட்ட நின்னானுல்ல நெட்டையன் முதுகுப் பக்கம் அருவா சொருகி வச்சிருந்தான்... சைக்கிளைப் பார்த்து நான் கத்தினா கழுத்துல ஒரே போட போடச் சொல்லியிருந்தானுங்க தெரியுமா?"

"தெரியும்... இவனுக நட்புக்காக மட்டுமில்ல காசுக்காகவும் கழுத்தறுக்கிறவனுங்கதான்... ஒரு அரசியல்வாதியை போன வருசம் மழை நேரத்துல நடு ரோட்டுல வச்சிப் போட்டானுங்களே.... ஞாபகம் இருக்கா... அதுல மணிக்கு முக்கியப் பங்கு இருக்கு... ஆளு பாக்கத்தான் நரம்புமாதிரி இருப்பான்... பெரிய மேட்டருக்கு எல்லாம் மணியைத்தான் தேடி வருவானுங்க..."

"ஆத்தாடி..."

"சரி வா.... எதுவும் வெளியில தெரிய வேண்டாம்... எல்லாத்தையும் மறந்துட்டு லீவை எஞ்சாய் பண்ணு..." என்று சேகர் சொல்ல, இருவரும் பேசியபடி சைக்கிளை மிதிக்க ஆரம்பித்தனர்.

(சனிக்கிழமை தொடரும்)
-'பரிவை' சே.குமார்.

திங்கள், 25 நவம்பர், 2013

மனசின் பக்கம்: உள்ளம் கொள்ளை போச்சுதே...

சில நாட்களாக சௌதியில மழை, பஹ்ரைன்ல மழை, அட ஏன் துபாய்ல மழை... புஜேராவில் மழை என்று கேட்கும் போது என்னடா இது அபுதாபியில தூரல் கூட போடவில்லையே என்று வருத்தமாகத்தான் இருந்தது. நம்ம வருத்தம் வருண பகவானுக்கு கேட்டிருச்சு போல... வியாழன் காலை அழகான மழையுடன் விடியலை ஆரம்பித்து வைத்தார். லேசான தூரலாகத் தெரிய அலுவலகம் போய் விடலாம் என நடக்க ஆரம்பித்தால் சட்டென வேகமெடுத்து நனைக்க ஆரம்பித்துவிட்டது. இனி போக முடியாது என்ற நிலையில் ஒரு கட்டிடத்தின் ஓரமாக ஒதுங்கினேன். பாவம் பள்ளிக் குழந்தைகளும் அவர்களது தாய்மார்களும் ரொம்பவே சிரமப்பட்டார்கள். மழை சற்றே சாந்தமானதும் நடந்து அலுவலகம் சென்று எனது இருக்கையில் அமர்ந்து கண்ணாடி வழியே வெளியே நோக்கினால் மழை அடித்துப் பெய்து கொண்டிருந்தது. சனிக்கிழமை இரவு வரை மழை வருவதும் போவதுமாக இருந்தது. இப்போது அருமையான சீதோஷ்ண நிலை தொடர்கிறது. எங்கள் அறையில் குளிர்சாதனப் பெட்டி பயன்படுத்தாமல் உறங்கும் இரவுகள் இப்போதுதான் கிடைத்திருக்கின்றன. சன்னலைத் திறந்தால் ஊட்டியில் இருப்பது போல் சிலுசிலுவென இருக்கிறது. இனி சில மாதங்களுக்கு வெயிலில் தாக்கம் இல்லாமல் அழகானதொரு சீதோஷ்ண நிலையில் பயணிக்க தொடங்கிவிட்டது பாலைவனப் பூமி.

சூப்பர் சிங்கரில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கவிஞர் வைரமுத்து அவர்களிடம் இருந்து நிறைய விஷயங்களைக் தெரிந்து கொள்ள முடிந்தது, அதற்கு முக்கிய காரணம் தொகுப்பாளினி பாவனாவுக்குப் பதிலாக வைரமுத்து அவர்களிடம் விஷயம் தெரிந்து கேள்வி கேட்பதற்காகவே கோபிநாத் அவர்களை மாபாகாவுடன் இணைத்திருந்தார்கள். போட்டியாளர்கள் பாடலைப் பாடி முடித்ததும் வைரமுத்து அவர்கள் அது குறித்து அழகான விளக்கம் கொடுத்தார். அவரது பேச்சில் தமிழ் விளையாடியது.... அப்பப்பா... அந்த கம்பீரமான குரலில் அழகான தமிழை அப்படியே அனைவரும் பருகத் தந்தார். ஒவ்வொரு பாடலும் உருவான விதம் பற்றி பேசினார். தமிழில் லகர, ளகர, ழகரம் பற்றி அழகாகச் சொன்னார். இளையராஜாவுடனான பிணக்கம் குறித்து கருத்துத் தெரிவித்தார். அவரைப் பற்றி பேசும் போது கண்கலங்கினார். ரஹ்மான், மணிரத்னம் குறித்துப் பேசினார். கடைசியில் தற்போது சூப்பர் சிங்கரில் இருக்கும் பத்துப் பேருக்கும் ஆளுக்கு பத்தாயிரம் கொடுப்பதாக அறிவித்துச் சென்றார்.


னது நட்பு வட்டத்தில் பார்க்கச் சொன்ன 'அன்னயும் ரசூலும்' (Annayum Rasoolum) மலையாளப் படத்தை நிறையப் பேரிடம் கேட்டும் கிடைக்கவில்லை. சனிக்கிழமை எதார்த்தமாக நண்பரை அவரது அலுவலகத்தில் சந்திக்கப் போனேன். அப்போது அங்கு ஒரு மலையாள நண்பர் 'புள்ளிப்புலிகளும் ஆட்டின் குட்டிகளும்' பார்த்துக் கொண்டிருந்தார். 'அன்னயும் ரசூலும் இருக்கா?' என்று நண்பரிடம் மெதுவாகக் கேட்டேன். 'எல்லாப் படமும் இருக்கு... என்னா அன்னயும் ரசூலும் வேணுமின்னு கேக்குறீங்க?' என எதிர்க்கேள்வி கேட்டார். 'அருமையான படம் என்று நட்பு வட்டத்தில் சொன்னார்கள் அதான் கேட்டேன்' என்றதும் 'பென்டிரைவ் இருக்கா?' என்று கேட்டார். நான் சென்றது காய்கறி வாங்க... அப்படியே நண்பரைப் பார்த்துவிட்டு வரலாம் என்றுதான் சென்றேன் அதனால் கொண்டு போகவில்லை. சரி நான் கொண்டு வருகிறேன் என்றவர் அன்று மதியமே இரண்டு படங்களையும் நண்பர் ஒருவரிடம் கொடுத்து விட்டிருந்தார். இன்று அலுவலகத்தில் இருந்து சீக்கிரம் வந்துவிட்டதால் முகப்புத்தகத்தை ஒதுக்கி அன்னாவைப் பார்த்தேன். பார்த்து முடித்தும் அந்தக் காதல் இன்னும் எனக்குள்ளே.... என்ன அழகான கதை... அதை நகர்த்திய விதம்... அப்பப்பா... இன்னும் எத்தனை முறை பார்ப்பேன் என்று தெரியவில்லை. கதை நகரும் இடங்கள் அழகென்றால் நம்ம ஆண்ட்ரியா... வாவ்... கொள்ளை கொள்கிறார். அதுதான்யா அனிருத்துப் பய அவளுக்கு உதட்டுல.... சரி விடுங்க... நம்மாள முடிஞ்சது 'ம்ம்ம்'ன்னு ஒரு பெருமூச்சுத்தான்... மதம் கடந்த காதலை எந்தவொரு விரசமும் இல்லாமல்... நாயகன் நாயகிக்கு ஸ்விச்சர்லாந்திலோ அல்லது இதுவரை போகாத பாலைவனப் பகுதியிலோ பாடல் வைக்காமல்... குத்துப்பாட்டோ... டாஸ்மாக் பாட்டோ இல்லாமல் தெளிந்த நீரோடையாக கொண்டு சென்றிருக்கும் படத்தின் இயக்குநருக்குப் பாராட்டுக்கள். படத்தின் முடிவு எதிர்பார்ப்பது போல் அமைந்திருந்தாலும் படத்தின் தாக்கம் நமக்குள் பழசை எல்லாம் கிளறிவிட்டுத்தான் செல்கிறது. முடிந்தால் எல்லாரும் பாருங்கள்... கொஞ்சம் பழசைக் கிளறிப் பார்க்கலாம்.

நேற்று இரவும் அப்படித்தான் ஏதாவது பார்க்கலாமென இணையத்தில் நோண்டியபோது 'நீயா நானா' கண்ணில்பட்டது. பேய் பற்றிய நிகழ்ச்சி முன்னரே பார்த்தாச்சு. இதைப் பற்றி தனிப்பகிர்வே போடலாம். அதனால் அதற்கு முன்னால் பார்க்கலாம் என போனால் 'குழந்தைகளிடம் கற்றதும் பெற்றதும்' என்னைப்பார் என்றது, சரியென்று அதைப் பார்த்தால் ஆங்கில மோகத்தில் இந்தத் தலைமுறைக்கு தமிழைச் சொல்லிக் கொடுப்பதையே பாவம் என நினைக்க ஆரம்பித்துவிட்டோம் என்பது குழந்தைகள் பேசும் போது தெரிந்தது. தமிழ்ல கேள்வி கேளுங்கள் என்று சொன்னபோது ஒரு தெலுங்கு குடும்பத்தைச் சேர்ந்த பையன் அழகிய தமிழில் கேள்வி கேட்டான். தமிழ் குழந்தை அதுவும் ஆசிரியையின் குழந்தை எனக்கு தமிழ்த் தெரியாது. நான் இந்தி படிக்கிறேன் என்று சொன்னது. நான் யோக்கியன் என்று சொல்லவில்லை, எனது குழந்தைகளை ஆங்கிலப் பள்ளியில்தான் படிக்க வைக்கிறேன் இருந்தாலும் தமிழை விருப்பப் பாடமாக்கி தமிழ் சார்ந்த அனைத்துப் போட்டிகளிலும் குழந்தைகளைப் பங்கெடுக்கச் சொல்லியிருக்கிறேன். வீட்டிலும் தமிழ் சொல்லிக் கொடுக்கிறார்கள். தேவகோட்டை கந்தர் சஷ்டி விழாவில் விஷால் திருவாசகப் போட்டியில் கலந்து கொண்டு கலக்கலாகச் சொல்லியிருக்கிறான். சரி விஷயத்துக்கு வருவோம், ஒரு குழந்தை 'அம்மா என்னை அடிப்பார்கள்' என்று சொல்ல, அந்தக் குழந்தையின் அம்மா 'அவ சேட்டை பண்ணுவா சார்.. அதுக்காக அடிப்பேன்.. எதனால அடிச்சாங்கன்னு உணர மாட்டா சார்... ஒரு சாரி கூட கேக்கமாட்டா சார்' என்று சொன்னார். உடனே அந்தக் குழந்தை 'அம்மா சாரின்னு சொன்னா முதல்ல தெளிவா உணர்ந்து பார் அப்புறம் சாரி சொல்லும்பாங்க... அதுக்காக கொஞ்சம் நேரம் கழித்து சொன்னா ஒரு சாரி சொல்ல இம்புட்டு நேரமாம்பாங்க' என்று சொன்னது போது கண்ணீர் விட்டு அழ ஆரம்பித்தது. அப்போது கோபிநாத், 'உங்களது செயல் உங்க குழந்தையை எவ்வளவு பாதிச்சிருக்கி பாருங்க'ன்னு சொன்னதும் 'இவ்வளவு தூரத்துக்கு பாதிக்கப்படுவான்னு தெரியலை சார்' என்றார் அந்தத்தாய். அந்தக் குழந்தையின் அழுகையைப் போக்கும் விதமாக 'உங்களுக்கு அம்மாவைப் பிடிக்குமா?' என்ற கோபிநாத்தின் கேள்விக்கு 'ம்' என்று பதில் வந்தது. 'எம்புட்டு பிடிக்கும்?' என மறுபடியும் கேட்டார். 'ரொம்பப் பிடிக்கும்' என்றது அழுகையின் ஊடே அந்த மழலை. அதுக்கு அப்புறம் அவர் 'ஏன் அம்மாவை ரொம்பப் பிடிக்கும்?' என்று கேட்டார். அந்தக் குழந்தை சொன்ன பதில் என்னை கண்ணீர்விட வைத்துவிட்டது. அந்தக் குழந்தைக்கு விரிவாக சொல்லத் தெரியவில்லை. அது சொன்ன ஒற்றை வரிப் பதில் இதுதான் 'ஏன்னா அவங்க அம்மா, தாய்' அவ்வளவுதான். அம்மா அழ, மகள் அழ, நானும் அழுதேன்ய்யா... முடிந்தால் எல்லாப் பெற்றோரும் இந்த நிகழ்ச்சியை பாருங்க.

து அப்பாவாக நம்ம கதை... பாப்பா கூட நாலு வருடம் இருந்திருக்கிறேன். தூக்கம், குளியல், சாப்பாடு எல்லாம் அவங்களுக்கு என்னோடுதான்... எல்.கே.ஜி படிக்கும் போது இரவுப் பணி முடித்து வந்து அப்போதுதான் படுத்திருப்பேன். எப்படி நான் வந்தது தெரியுமோ... எனக்குத் தெரியாது... என் மேல் ஏறிப் படுத்துவிடுவார். 'பாப்பா எந்திரி குளிக்கலாம் ஸ்கூல் போகணும்' என்று அவங்க அம்மா எழுப்பியதும் எழுந்து அருகில் உக்காந்து கொண்டு 'அப்பா வாங்க... அப்பா... பாப்பா குளிக்கணும்' என்று நோண்ட ஆரம்பித்துவிடுவார். 'ஏன்டி அவரை கிளப்புறே..? இப்பத்தான் வந்து படுத்தார்... நீ வா' என்றாலும் எப்படியும் என்னை எழுப்பி குளித்து, சாப்பிட்டு பள்ளியில் கொண்டு போய் விட்டுவிட்டு வர வைத்துவிடுவார். அவரது மழலைக் காலத்தில் எல்லாச் சந்தோஷத்தையும் நான் அனுபவித்தேன். ஆனால் விஷால் விஷயம் வேறு. அவன் பிறந்தது முதல் அவனுடன் நான் இருப்பதற்கு கடவுள் இடமளிக்கவில்லை. வருடம் ஒரு முறையே அவனுடைய மழலையை அருகில் இருந்து ரசிக்க முடிகிறது. ஸ்கைப்பில் பார்த்துப் பேசிக்கொண்டிருந்தேன். கணிப்பொறி பிரச்சினையால் வீடியோ கடந்த இரண்டு மாதமாக வேலை செய்யவில்லை. பேசும் போது அவன் அடிக்கும் அரட்டைகள் அப்பப்பா.... எல்லாவற்றையும் இரவில் படுத்துக் கொண்டு அசை போட்டு ரசிக்கத்தான் முடிகிறது. இரு தினங்களுக்கு முன்னர் 'உங்க மகன் எல்லாத்துக்கும் பதில் வச்சிருக்கான். என்னால மேய்க்க முடியலை' என்று அவரது அம்மா சொல்ல, நான் 'அப்படியே வளரட்டும் சின்னக் குமார், பின்னாடி பெரிய ஆளா வருவான்' என்று சொல்ல, 'ஆமா பெரியாளாகி ரஜினியோட நடிப்பேன்' என அவனது தத்தக்கபித்தக்க மழலையில் சொன்னான். 'ரஜினி வேணான்டா இப்போ உள்ள நடிகராச் சொல்லு' என்றதும் பேசாமல் இருந்தவன், திடீரென 'அம்மா டிவியில கே.விஷால்ன்னு பேரு போடுவாய்ங்க அப்பப் பாத்துக்கங்க நாங்க எப்பூடின்னு' என அசால்ட்டாக அடித்துவிட்டான் பாருங்கள். இன்னும் அதை நினைத்து நினைத்து சிரிக்கிறேன். எப்படியும் குடும்பத்தை விரைவில் இங்கும் கொண்டு வர வேண்டும். 

மனசின் பக்கம் தொடரும்...
-'பரிவை' சே.குமார்.

ஞாயிறு, 24 நவம்பர், 2013

சங்கதியும் கெமிஸ்ட்ரியும்

ங்கதி... கெமிஸ்ட்ரி... இந்த ரெண்டு வார்த்தையையும் சொல்லாத தொலைக்காட்சிகளே இல்லை எனலாம். பெரும்பாலும் ஆடல் பாடல்... அதாங்க போட்டி டான்ஸ் நிகழ்ச்சிக்கு வர்ற நடுவர்கள் எல்லாம் கெமிஸ்ட்ரி படிச்சிருக்காங்களோ இல்லயோ ஜோடியா ஆட்டம் போடுறவங்களைப் பார்த்து உங்களுக்குள்ள கெமிஸ்ட்ரி சரியா பொருந்தியிருக்குன்னு சொல்லாம விட்டுட்டா ஜென்ம சாபல்யம் அடைய முடியாமல் போய்விடும் என்பதால் அடிக்கடி கெமிஸ்ட்ரியை சொல்லிக் கொண்டே இருப்பார்கள். இதேபோலத்தான் பாட்டுப் போட்டியில் கலந்து கொள்ளும் நடுவர்களுக்கு சங்கதி என்ற வார்த்தை ஜென்ம சாபல்ய வார்த்தை... என்ன சங்கதி போட்டிருக்கே... அந்த பல்லவியில ஒரு சங்கதி போட்டே பாரு... சும்மா செத்துப் பொயிட்டேன்னு அள்ளி வீசிருவாங்க.

இந்த சங்கதியும் கெமிஸ்ட்ரியும் மேல் தட்டு மக்களுக்குத் தெரிந்திருக்கலாம். என்னை மாதிரியான கிராமத்தானுக்கெல்லம் இது இன்னும் புரியாத புதிராகவே இருக்கு. இப்ப கிராமத்துல இருக்க ஒரு பெரியவரோ, ஒரு அப்பத்தாவோ, ஆயாவோ இல்லை அம்மாவோ இது போன்ற நிகழ்ச்சிகளை வீட்டில் டிஷ் வைத்து ரசித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களுக்கு இவர்கள் பேசும் 80% ஆங்கிலம் 20%  தமிழ்  என்ன சொல்கிறார்கள் என்று எப்படி புரிய வைக்கும் என்று தெரியவில்லை. கெமிஸ்ட்ரியும் சங்கதியும் சுத்தமாக தெரிய வாய்ப்பில்லை.

எனக்குத் தெரிந்த ஐயா ஒருத்தர் கலைஞரின் மானாட மயிலாட பார்த்துவிட்டு என்ன சொன்னார் தெரியுமா "என்ன பேராண்டி நம்ம ஊர்ல ஆடல் பாடல் வச்சாலே ஆபாசமுன்னு போலீஸ்காரன் அனுமதி கொடுக்க மாட்டேங்கிறான்... எல்லாரும் பாக்குற ஒரு டிவியில இப்படி ஆட்டம் போடுறாங்க.. இதுக்கு அந்த மூணு பொம்பளைங்க வேற கிழிகிழின்னு கிழிச்சிட்டேன்னு கத்துறாளுங்க.. அப்புறம் கெமிஸ்ட்ரி... கெமிஸ்ட்ரின்னு என்னமோ சொல்லுறாளுங்க... ஒண்ணுமே புரியலை." அப்படின்னு சொன்னார்.

அவர் சொன்னது முற்றிலும் உண்மைதான். ஊர் திருவிழாவிற்கு கலைநிகழ்ச்சி வைப்பதென்றால் முதலில் போலீஸ் ஸ்டேசனில் அனுமதி வாங்க வேண்டும். அதுவும் கரகாட்டம், ஆடல்பாடல் என்றால் பயங்கர கெடுபிடி... ஆபாசம் இருக்கக்கூடாது என்று சொல்லித்தான் அனுமதி கொடுப்பார்கள். திருவிழா அன்று இரண்டு போலீஸ்காரர்கள் வந்து விடியவிடிய அமர்ந்திருப்பார்கள். இடையில் இன்ஸ்பெக்டர் வேறு விசிட் அடிப்பார். 

இந்த முறை ஊருக்குப் போன போது என் மனைவியின் அம்மா ஊரில் திருவிழாவிற்கு ஆடல்பாடல் நிகழ்ச்சி வைத்திருந்தார்கள். ஆரம்பத்தில் முத்துமாரி என்றுதான் ஆரம்பித்தார்கள். போகப்போக முத்தமாரி ஆக்கினார்கள்.  ஒரு மணி நேரத்திற்குள் விஷாலுக்கு தூக்கம் வர, நானும் நம்ம சிங்கக்குட்டியும் வீட்டிற்கு வந்துவிட்டோம். போகப்போக ரொம்ப மோசமாகிவிட்டதாம். போலீஸ்காரர் சொல்லியும் ஆட்டம் தொடர்ந்திருக்கிறது. அந்த சமயம் அங்கு வந்த இன்ஸ்பெக்டர் ஆட்டத்தை நிறுத்தச் சொல்லி, விளக்கையெல்லாம் அணைக்கச் சொல்லி சத்தம் போட ஆட்டம் முடிவுக்கு வந்திருக்கிறது. இதை ஏன் இங்கு சொல்கிறேன் என்றால் 25, 30 வீடுகள் கொண்ட கிராமத்தில் 100, 150 பேர் பார்க்கும் நிகழ்ச்சிக்கு இவ்வளவு கெடுபிடி ஆனால் தொலைக்காட்சியில்..?

சரி விஷயத்துக்கு வருவோம். நமக்குத் தெரிந்த சங்கதியும் கெமிஸ்ட்ரியும் என்ன தெரியுமா? சின்ன வயதில் பசங்களோட விளையாடும் போது ஒருத்தனுடன் எப்படியும் சண்டை போட்டு விடுவோம். அது ரெண்டு நாள் மூணு நாள் கூட தொடரும். அப்போதைக்கு நம்மிடம் ரொம்ப நெருக்கமானவன் 'டேய் நான் ஒரு சங்கதி வச்சிருக்கேன்...' என்று சொல்லி காதுக்குள் சொல்லுவான். நமக்கு சண்டைக்காரனைப் பற்றிச் சொன்னால் பயங்கர சிரிப்பா வரும். அதுவே நம்ம நண்பனைப் பற்றிச் சொன்னா ஏற்க மறுத்துவிடுவோம். ஒரு சில நேரங்களில் 'ஒரு சங்கதி தெரியும்... ஆனா சொல்ல மாட்டேன்...' என்று சொன்னால் அவனிடம் கெஞ்சிக் கெஞ்சி சங்கதியைக் கறந்த நாட்களும் உண்டு. அதற்கு லஞ்சமாக சாப்பிட வைத்திருக்கும் எதையாவது கொடுத்தும் இருக்கிறேன்.

மாலை நேரத்தில் வீட்டு வாசலில் அம்மாவிடம் பேச வரும் பக்கத்து வீட்டு உறவுகள் ' அடி ஆத்தி... அக்கா இந்த சங்கதியைக் கேட்டியா?' என்றும் ' ஏன்டி... உனக்குத் தெரியுமா சங்கதி?' என்றும் ஆரம்பித்தால் நானும் படிக்க எடுத்த புத்தகத்தை வைத்துவிட்டு சங்கதியை கேட்க ஆரம்பித்து விடுவேன். இதேபோல் வயலில் மாடு இறங்கிவிட்டது என்றாலோ அல்லது எதாவது பிரச்சினை என்றாலோ சண்டை களை கட்டும் போது 'போடி இவளே உன்னோட சங்கதி தெரியாதாக்கும்..' என்று சொல்லாமல் முடிந்த கிராமத்துச் சண்டை எங்கிருக்கிறது..? இப்படித்தான் எனக்கு சங்கதியைத் தெரியும்.

அடுத்தது கெமிஸ்ட்ரி, பள்ளியில் படிக்கும் போதே கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகாமத்தானே வேற பக்கம் போனோம். கெமிஸ்ட்ரி படித்த நம்ம நண்பர்கள் பரிசோதனை கூடத்துக்குள் இருந்து வரும்போது இரண்டாம் உலகம் பார்த்துட்டு தியேட்டரைவிட்டு வெளிய வரும் ரசிகனைப் போல வருவான். என்னடா ஆச்சு முடியெல்லாம் சிலுப்பிக்கிட்டு நிக்கிதுன்னு கேட்டா...  மாப்ளே நல்லாத்தான்டா செஞ்சேன்... எல்லாம் சரியாத்தான் இருந்துச்சு... என்னன்னு தெரியலை... கடைசிவரை ரிசல்டே வரலைடா... என்று கெமிஸ்ட்ரி செய்முறைத் தேர்வு ஊத்திக் கொண்டதை சொல்லி அழுவான். இன்னொருத்தன் என்னன்னா... இந்த கெமிஸ்ட்ரிப் பேப்பரை தூக்க படாதபாடு பட்டிருக்கிறான். கெமிஸ்ட்ரிங்கிறது ஒரு பாடம் அப்படிங்கிற அளவுலதான் நம்ம அறிவு இருந்துச்சு.

இப்ப தொலைக்காட்சியில ஆடல் பாடல் குத்தாட்டம் போடும் போது கெமிஸ்ட்ரி, கெமிஸ்ட்ரிங்கிறாங்க... பாட்டுக்குப் பாட்டுல ஆஆஆஆன்னு இழுக்கும் போது சங்கதி... சங்கதின்னு சொல்றாங்க... இதுக்குல்லாம் மேல ஒரு சினிமாவுக்காக நாயகனையும் நாயகியையும் ஒரு ரூம்ல ரெண்டு நாளோ மூணு நாளோ தங்க வச்சி கெமிஸ்ட்ரிய வேலை செய்ய வச்சாங்களாம். இப்போ அந்த படத்துல நடிக்கும் போது இருவருக்கும் கெமிஸ்ட்ரி சூப்பரா இருக்காம் இயக்குநர் பேட்டி கொடுக்கிறார். அவங்களுக்குள்ள என்ன வேலை செய்ததுன்னு அவங்களுக்குத்தானே தெரியும். நாமெல்லாம் எங்க போய்க்கிட்டு இருக்கோம்... முகநூலில்தான் நண்பர்கள் அடிக்கடி நாம் எந்த மாதிரி உலகத்தில் வாழுறோம்ன்னு போடுவாங்க... அப்படித்தான் தோணுது.

சரிங்க எனக்குத் தெரிந்த கெமிஸ்ட்ரியையும் சங்கதியையும் சொல்லிட்டேன்.. உங்களுக்கு யாருக்காவது கெமிஸ்ட்ரிக்கும் சங்கதிக்கும் சரியான விளக்கம் தெரிந்தால் சொல்லுங்க இந்த கிராமத்தானும் பிறவிப் பயனை அடையப்பார்க்கிறேன்.
-'பரிவை' சே.குமார்.

சனி, 23 நவம்பர், 2013

தொடர்கதை: கலையாத கனவுகள் - 30

முந்தைய பதிவுகளைப் படிக்க...



-----------------------------------------------------------------------

30. மீண்டும் சதியா?

முன்கதைச் சுருக்கம்: 

கிராமத்து ஏழைக் குடும்பத்துப் பையனான ராம்கி, கல்லூரி ரவுடி வைரவனின் தங்கை புவனாவுடன் நட்பாக பழகுகிறான்.  அக்காவுக்கு விருப்பமில்லாத மாப்பிள்ளையை பேசி வைத்திருக்கும் அம்மாவுடன் மல்லுக்கு நிற்கிறான். கல்லூரியில் வைரவனைத் தாக்க வந்தவர்களுடன் ஏற்பட்ட தகராறின் காரணமாக கெட்டபெயர் ஏற்படுகிறது. இதன் பின்னான நிகழ்வுகளில் புவனா தன் காதலை ராம்கியிடன் சொல்கிறாள்.  அவர்களது காதல் பயணம்சந்தோஷமாக போய்க் கொண்டிருக்கிறது.

இனி...

இருவரும் சந்திப்பதற்கான வாய்ப்பே இல்லாமல் செமஸ்டர் நாட்கள் வேகமாக ஓடிக் கொண்டிருந்தன. இருவரின் காதலும் நண்பர்கள் மத்தியில் தெரிய வர, ராம்கியின் நண்பர்கள் வேணான்டா... அவங்க அண்ணன் ரவுடிப்பய... உன்னோட குடும்பச் சூழலைப் பாரு... நமக்கான வாழ்க்கையை நாமதான் விரட்டிப் பிடிக்கனுங்கிற நிலமையிலதான் உன்னோட குடும்பச் சூழல் இருக்கு. அவளுக்கு அப்படியில்ல... அப்பா பிஸினஸ்மேன்... சொத்துப் பத்துன்னு நிறைய இருக்கு. காதல் கத்திரிக்காய்ன்னு விழுந்து அதனால விழுகுற ஒவ்வொரு அடியும் உன்னோட குடும்பத்தைப் பாதிக்கும். இதையெல்லாம் தாங்குற சக்தி அம்மாவுக்கு இல்லைடா... நாளைக்கு அவங்க சைடுல ஒத்துக்கலைன்னா ஊரைவிட்டு ஓடிப்போகலாமுன்னு முடிவெடுப்பீங்க... அப்ப பாதிக்கப்படுறது நம்ம குடும்பமாத்தான் இருக்கும் ஏன்னா அவ அண்ணன் என்ன வேணுமின்னாலும் செய்வான். இவளும் கடைசி வரைக்கும் நின்னு பிடிப்பாளான்னு தெரியலை. இதெல்லாம் சரிப்படாதுடான்னு நிறையப் பேசினார்கள்... அவன் மனசுக்குள் புவனா நிறைந்திருந்தாள். அவர்கள் சொன்னபோது அவன் சொன்ன வார்த்தை புவனாதான்டா என்னோட வாழ்க்கை என்பது மட்டுமே.

இவர்களது காதலுக்கு கடவுளே உதவுவது போல் புவனாவின்  கடைசித் தேர்வு ராம்கியின் தேர்வோடு ஒரே நாளில் நடந்தது. பரிட்சை முடிந்ததும் அவளுக்காக காத்திருந்தான். அவள் வரவும் இருவரும் பேசியபடி நடக்கலானர்.

"எப்படி எழுதியிருக்கீங்க..?"

"ம்... நல்லா எழுதியிருக்கேன்..."

"இன்னும் ஒரு பரிட்சை இருக்குல்ல..?"

"ம்..."

"பரிட்சை முடிந்ததும் லீவுல ஊர்லதான் இருப்பீங்களா?"

"இருப்பேன்..."

"என்ன இழுக்குறீங்க... எங்கயும் போறீங்களா?"

"ம்..."

"எங்க..?"

"வேலைக்கு..."

"வேலைக்கா?"

"ம்..."

"எந்த ஊருக்கு...?"

"இங்க தான்..."

"என்னாச்சு... பதில் எல்லாம் சுருக்கமாவே வருது..."

"ம்... மனசு சரியில்லை..."

"ஏன்... என்னாச்சு..?"

"தெரியாத மாதிரி கேட்கிறே..?"

"ம்... கொஞ்ச நாள் லீவுதானே... பிரிவு இருந்தாத்தான் நமக்குள்ள இருக்க உறவு இன்னும் அதிகமாகும்... இதுவரை பரிட்சைக்கு படிச்சது மாதிரி இன்னும் கொஞ்சநாள் ஓட்ட வேண்டியதுதான்... சரி எங்க வேலைக்குப் போறீங்க..?"

"சும்மா... தெரிஞ்ச கடையில போய் இருப்பேன்... ஸ்கூல் டைம்ல ரெண்டு மாசம் லீவு கிடைக்கும்... ஏதாவது சம்பளம் கொடுப்பாரு... இப்போ லீவு கம்மிதான்... சும்மா போய் இருந்துட்டு வருவேன்... உன்னைய பாக்காம இருக்கனுமே அதுதான்..."

"ம்... எனக்குந்தான்...என்னைய எங்க சித்தி வீட்டுக்குப் போகச் சொல்லி நிக்கிறாங்க... நான் போகலைன்னு சொன்னாலும் இங்க இருந்து என்ன பண்ணப்போறேன்னு சொல்றாங்க... எப்படியும் என்னைய பார்சல் பண்ணிடுவாங்கன்னு நினைக்கிறேன்... உங்க மச்சான் வீட்டு போன் நம்பர் கொடுங்க நான் கூப்பிடுறேன்..."

"அவன் வீட்டுக்கு இரவுல கூப்பிட்டாத்தான் நான் பேச முடியும்... பகல்ல வேலைக்கு வந்துருவேன்... உன்னோட நம்பர் கொடு... நான் கூப்பிடுறேன்..."

"எங்க வீட்டுக்கா வேண்டாம்... சித்தி வீட்டுக்குப் பொயிட்டா அங்க இருந்து கூப்பிடுறேன்... நீங்க நம்பரைச் சொல்லுங்க..."

நம்பரைச் சொன்னதும் நோட்டில் குறித்துக் கொண்டாள். இருவரும் பேசியபடியே நடந்து கொண்டிருந்தனர்.

"இங்க பாரு மாப்ளே... இந்த வருசத்தோட இந்த காலேசை விட்டுப் போறோம் தெரியுமில்ல... அப்புறம் அரியர் எழுதத்தான் வருவோம்... அதுவும் நீ பேப்பருக்கு இவ்வளவுன்னு கொடுத்து பேப்பரைத் தூக்கிட்டு லா படிக்கப் போயிடுவே... கொடுக்க முடியாத நாங்கதான் இங்க திரும்பி வருவோம்... தெரியுமில்ல..." என்ற நண்பனிடம் இப்ப என்ன சொல்ல வர்றே..?" என்றான் இளங்கோ.

"என்ன சொல்ல வர்றேனா..? அன்னைக்கு நம்ம ஆளுகளை அடிச்ச அந்த ராமுப்பயலை இன்னும் ஒண்ணும் பண்ணலை... எப்ப திருப்பிக் கொடுக்கிறது..?"

"பண்ணுவோன்டா... இப்ப அவனாட பிரச்சினை..?"

"உனக்குப் பிரச்சினை இல்லை மச்சான்... வைரவனை பகைச்சுக்கக் கூடாதுன்னு நினைக்கிறே... ஒரே சாதிக்காரனுங்க... உனக்கும் அவனோட தங்கச்சி... அதான் நம்ம காலேசுல திரியிற படிப்பாளி... அந்த புவனா மேல ஒரு கண்ணு... எப்படியும் லா முடிச்சிட்டு வந்துட்டா ரெண்டு குடும்பமும் பேசி அவளை கட்டிக்கலாமுன்னு திட்டம் போடுறே... எல்லாந் தெரியுண்டி... எங்களுக்கு இது பிரச்சினை இல்ல... நீயும் அவனும் நாளைக்கு மாமன் மச்சான்னு போயிடுவீங்க... உனக்காக அடிவாங்குனவன்ல ஒருத்தன் என்னோட மச்சான்... அவன் எப்படா அவனைத் தூக்குறீங்க... இல்லேன்னா ஒதுங்குங்க நாங்க போட்டுக்கிறோம்ன்னு நச்சரிக்கிறான். அவனுக செய்யிறதைவிட நாம செஞ்சாத்தான் கெத்து... புரிஞ்சிக்க..." மற்றொருவன் சூடாக பேசினான்.

"சரிடா... வைரவன்கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு..."

"எதுக்கு.. அவனுகிட்ட பாதுகாப்பு கேக்குறியா... இல்ல அடிக்க ஆளு கேக்குறியா... கேவலமா இல்லை..."

"அதுக்கு இல்லடா... நாளைக்கு அவன் அந்த ராமுப் பயலுக்காக வந்து நின்னா..."

"அதெல்லாம் வரமாட்டான்... அந்த ராமுப்பய அவனோட தங்கச்சி கூட பேசுறதுல அவனுக்கு இஷ்டமில்லை... அவனே போட்டாலும் ஆச்சரியமில்லை..."

"சரி.... அதெல்லாம் இருக்கட்டும்... நாம சொல்லிடுறது நல்லதில்லையா...?"

"ஒரு மசுரும் வேண்டாம்... இம்புட்டு நாளும் அவனை எதிர்த்துட்டு ஒரு சின்னப்பயலை தூக்க அவன் கால்ல விழணுமா?"

"கோபப்படாதீங்கடா... நான் பிராக்டிக்கலா திங்க் பண்ணிப் பார்த்தேன். ஓகே... அவனோட கடைசிப் பரிட்சை என்னைக்குன்னு பார்த்து வையி.... நாம இதுல எறங்க வேண்டாம். திருப்பத்தூர் காலேசுல படிக்கிற மணிக்கிட்ட சொல்லிட்டா கையக் கால முறிச்சிப் போட்டுடுவான்..."

"சரியான ஆள்... காலு கைய ஒடச்சி ஜென்மத்துக்கும் நல்லா நடக்க விடாம பண்ணிடனும்..." என்றான் ஒருவன். ராம்கியை அடிப்பதற்கான சதியும் அதன் பின்னான செயல்பாடுகளும் யாருக்கும் தெரியாமல் நடந்தது.

கடைசிப் பரிட்சை முடிந்து எல்லாரும் சந்தோஷமாக பேசிச் சிரித்து விடை பெற்றுச் சென்றதும் டவுனை விட்டு தனது ஊருக்குப் பிரியும் கிளைச்சாலையில் திரும்பி கொஞ்சத் தூரம் போனவன் தன்னை இரண்டு வண்டிகளில் ஆறு பேர் தாண்டிச் செல்லவும் 'யாரு இவங்க... புதுசா இருக்காங்களே'ன்னு யோசித்தபடி சைக்கிளை மிதிக்க, வண்டியை நிறுத்தி இறங்கியவர்கள் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு ஆளுக்கு ஒரு ஆயுதத்தை எடுத்தபடி அவனை நோக்கி வர, "நீதானே இராமகிருஷ்ணன்..." என்று ஒருவன் கேட்க... மற்றொருவன் அவனது சட்டையை கொத்தாகப் பிடித்தான்.

அப்போது தூரத்தில் ஒரு சைக்கிள் வேகமாக வந்து கொண்டிருந்தது.

(புதன்கிழமை தொடரும்)
-'பரிவை' சே.குமார்.

வெள்ளி, 22 நவம்பர், 2013

நாயகன்: சச்சின்... சச்சின்...


ச்சின் என்ன செய்தார்? அவருக்கு பாரத் ரத்னா கொடுப்பது முறையா என்ற பரபரப்பு பட்டிமன்றங்கள் பத்திரிக்கைகளில் மட்டுமின்றி பட்டி தொட்டியெல்லாம் விவாதிக்கப்படுகின்றது, இங்கு தனி மனிதனைப் பற்றிப் பேசப்போவதில்லை. கிரிக்கெட்டில் சச்சினை எனக்குப் பிடிக்கும்... எவ்வளவு பிடிக்கும்... ரொம்பப் பிடிக்கும் என்பதைச் சொல்லும் பகிர்வுதான் இது.

பள்ளியில் படிக்கும் காலத்தில் எங்களுக்கெல்லாம் கிரிக்கெட் அவ்வளவாக அறிந்த விளையாட்டு இல்லை. எங்களுக்குத் தெரிந்ததெல்லாம் பித்திக்காய் (கோழிக்குண்டு), கிட்டிப்புல், பம்பரம் இப்படி கிராமிய விளையாட்டுக்கள்தான். கிரிக்கெட் எங்களுக்கு அவ்வளவாக பரிட்சையம் இல்லாததற்கு முக்கிய காரணம் எங்கள் ஊருக்குள் தொலைக்காட்சிப் பெட்டி வராததே. இந்தியா கிரிக்கெட்டில் வென்றது தோற்றது என்பதை  ரோடியோ செய்தியில் சரோஜ் நாராயணசுவாமி சொல்லும் போது கேட்பதுடன் கிரிக்கெட் என்பது முடிந்து விடும்.

மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் போது கிரிக்கெட்டின் மீது மெல்ல மெல்ல ஆர்வம் வந்தது. தேவகோட்டையில் நண்பர்கள் வீட்டிற்குச் சென்று தூர்தர்ஷன் ஒளிபரப்பும் போட்டிகளை பார்க்க ஆரம்பித்தோம். எங்கள் ஊரில் எங்க சித்தப்பா வீட்டில்தான் முதன் முதலில் தொலைக்காட்சி வாங்கினார்கள். வெள்ளிக்கிழமை ஓளியும் ஓலியும் ஞாயிறன்று மாலைச் சினிமா மட்டுமே பார்க்கச் செல்வோம். அப்புறம் வீட்டில் நானும் தம்பியும் நச்சரிக்க ஆரம்பிக்க எங்கள் வீட்டுக்கும் பிபிஎல் கருப்பு வெள்ளை தொலைக்காட்சி வந்தது,

அசார், மனோஜ் பிரபாகர், சச்சின், ஜடேஜா, கும்ளே, ஸ்ரீநாத், வெங்கடபதி ராஜூ என வீரர்கள் பெயரெல்லாம் மனப்பாடம் ஆகிவிட கிரிக்கெட் பைத்தியம் ஆகிவிட்டோம். எந்தப் போட்டி என்றாலும் சச்சின் களத்தில் நின்றால் சோறு தண்ணி தேவையில்லை. அப்பொழுதெல்லாம் தூர்தர்ஷனில் மட்டும்தான் போட்டிகளைப் பார்க்க முடியும். அதுவும் ஸ்ரீலங்காவில் போய் விளையாண்டால் தூர்தர்ஷனில் பெரும்பாலும் ஒளிபரப்ப மாட்டார்கள், அப்போது ஸ்ரீலங்காவில் இருந்து ஒளிபரப்பாகும் ரூபவாஹினியை பிடித்து புள்ளிப் புள்ளியாகத் தெரிந்தாலும் பார்த்த நாட்கள் ஏராளம்.

கல்லூரிக்குச் சென்ற பிறகு எல்லாப் போட்டிகளையும் நண்பர்கள் வீட்டிலோ அல்லது அக்கா வீட்டிலோ கேபிள் இணைப்பில் பார்த்துவிட்டுத்தான் வீட்டுக்குப் போவேன். எந்தப் போட்டி என்றாலும் சச்சின் களத்தில் கடைசி வரை நிற்க வேண்டும் என்று மனசு எப்பவும் வேண்டிக் கொண்டே இருக்கும். களத்தில் இறங்கி எல்லாப் பக்கமும் ஒரு முறை பார்வையை ஓடவிட்டு குனிந்து எழுந்து பேட்டை பிடிக்க ஆரம்பித்ததும் எதிர் அணி வீரர் வீசும் ஒவ்வொரு பந்தும் நான்கு ரன்னுக்கான கோட்டில்தான் கிடக்க வேண்டும் என்று மனசு துடிக்க ஆரம்பித்துவிடும்.


சில போட்டிகளில் இன்றைக்கு சச்சின் நின்றால்தான் வெற்றி பெற முடியும் என்று நினைத்து ஆவலோடு இருக்கும் பட்சத்தில் வந்த வேகத்தில் திரும்பிவிடுவார். எங்க வீட்டில் எல்லாருமாக அமர்ந்து பார்க்கும் போது எங்கப்பா, ஆமா வந்து கிழிச்சிப்புட்டாருல்லன்னு சச்சினை திட்டினால் அவ்வளவு கோபம் வரும். எனக்கு மட்டுமல்ல என் தம்பிக்கும்தான். மற்ற விஷயங்களில் இருவரும் அடித்துக் கொண்டாலும் சச்சின் என்று வரும் போது ஒரே பாதையில்தான் பயணிப்போம்.

சச்சின் வெளுத்து வாங்கிய போட்டிகள் எண்ணிலடங்காதவை.. கிரிக்கெட் பார்க்க ஆரம்பித்ததில் இருந்து எல்லாப் போட்டிகளையும் ரசித்துப் பார்த்து சந்தோஷப்பட்டிருக்கிறேன். காரைக்குடியில் நண்பனின் அறைக்கு விசுவல் பேசிக் படிக்கச் சென்ற அன்றுதான் ஷார்ஜாவில் ஆஸ்திரேலியாவுடனான போட்டி. குறிப்பிட்ட ரன்னை 40 ஓவருக்குள் அடிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அப்படி அடித்தால் இறுதிப் போட்டிக்குச் செல்லலாம் என்ற நிலையில் களம் இறங்கியது இந்திய அணி. நாங்கள் படிக்க வந்தோம் என்பதெல்லாம் பொய் அந்தப் போட்டியை பார்க்க வேண்டும் என்பதற்காகத்தான் வந்தோம் என்பதே உண்மை. அறைக்கு அருகில் இருக்கும் டீக்கடையில் போய் அமர்ந்து போட்டியை பார்க்க ஆரம்பித்தோம். 

டீக்கடையில் கிரிக்கெட் பார்ப்பதற்கென்றே சரியான கூட்டம்...  சச்சின் விளாசிக் கொண்டிருக்கிறார்... ஷேன் வார்னேயின் பந்தெல்லாம் எல்லைக் கோட்டை தாண்டிப் போய்க் கொண்டிருக்கிறது. இப்போது இங்கு சில சமயங்களில் புழுதிப் புயல் அடிப்பதைப் பார்த்திருக்கிறேன். அன்று ஷார்ஜாவில் புழுதி காற்றுடன் சச்சின் என்ற புயல் அடித்த அடியை எந்த ரசிகனாலும் எப்பொழுதும் மறக்க முடியாது. எனக்கும் அப்படித்தான்... என்ன ஒரு ஆட்டம்.... சச்சினின் மிகச்சிறந்த ஆட்டம் அதுதான் என்பது என் எண்ணம்.

இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற வைத்துவிட்டுத்தான் வெளியேறினார். அவர் வெளியேறியதும் இந்திய அணி தோல்வியைத் தழுவியது. இருந்தும் அணியை இறுதிப் போட்டிக்கு கொண்டு சென்றதால் அன்றைய தினம் எல்லோருக்கும் சந்தோஷ தினம்தான். இந்த முறை அதற்கு நேர் மார்... இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்றாலும் சச்சின் என்ற ஜாம்பவானின் கிரிக்கெட் வாழ்க்கை முற்றுப் பெறுவதால் சந்தோஷக் கொண்டாட்டம் இன்றி இருந்தது. அன்று ஒரு வர்ணனையாளர் சொன்னார் தோத்துப் போனாலும் ரசிகர்கள் சந்தோஷமாக இருப்பதை இங்கு பார்க்கிறேன்... காரணம் சச்சின் என்றார். இன்றும் அவர் வெற்றி பெற்றாலும் ரசிகர்கள் அமைதியாக இருப்பதை இப்போது பார்க்கிறேன் காரணம் சச்சின் என்று சொல்லியிருக்கலாம் 

இப்படி எத்தனையோ போட்டிகள்... எவ்வளவு ரன்கள்.... சச்சின் களத்தில் என்றால் டெஸ்ட் போட்டியைக்கூட பார்த்த காலம் உண்டு. 97, 98, 99 இப்படியான ரன்களில் சச்சின் அவுட்டாகி வெளியேறிய நாட்களில் எல்லாம் அதன் பிறகு கிரிக்கெட் பார்க்காமல் தொலைக்காட்சியை அணைத்துவிட்டு எழுந்து சென்ற நாட்களும் உண்டு. 17, 33 70க்கு மேல் இப்படி சில ரன்களில் சச்சில் களத்தில் நிற்கும் போது இந்த ரன்னைக் கடந்து விடவேண்டும் என்று சாமியை வேண்டிய போட்டிகள் நிறைய உண்டு. இந்த ரன்களில்தான் அதிக முறை அவுட்டாகி வெளியேறியிருக்கிறார்.


ஜிம்பாப்வேயின் ஓலாங்கோ, தொடர்ந்து சச்சின் விக்கெட்டை வீழ்த்து தனது சடை முடியை சிலுப்பிக் கொண்டு திரிய ஆரம்பிக்க, என்னடா இவன்கிட்ட விக்கெட்டை விட்டுடுறாரே... அடிக்க மாட்டேங்கிறாரேன்னு வருத்தப்பட, அதுக்கும் ஒரு போட்டியில் சரியான பதிலடி கொடுத்தார். அன்றைக்கு ஓலாங்கோ வீசிய அனைத்துப் பந்துக்களையும் விளாசினார். 4 ஓவரில் 40 ரன்களைக் கொடுத்துவிட்டு பரிதாபமாக எல்லைக் கோட்டருகே நின்ற ஓலாங்கோ, சச்சின் அவுட்டானதும்தான் பந்து வீசவே வந்தார். தன்னை கேலி பண்ணுபவர்களுக்கு அவர் எப்போதுமே வாயினால் பதில் சொல்லியதில்லை. களத்தில் அவர்களுக்கு அவரது பேட் பதில் சொல்லிவிடும்.

ஒவ்வொரு உலக கோப்பையின் போதும் இந்த முறை இந்தியா வாங்க வேண்டும் என்று நினைத்து நினைத்து எல்லாம் கனவாகிப் போக சென்ற முறை இதுதான் சச்சினின் கடைசி உலகக் கோப்பை இந்த முறை இந்த சாதனை நாயகனுக்காக இந்தியா கோப்பையை வெல்ல வேண்டுமென வேண்டாத தெய்வம் இல்லை. போட்டியில் சச்சின் சோபிக்கா விட்டாலும் இளம் வீரர்கள் திறமையாய் விளையாண்டு வெற்றி பெற்றதும் கோப்பயுடன் போட்ட ஆட்டமும் சச்சினை தூக்கிக் கொண்டு வலம் வந்ததும் இன்னும் நெஞ்சுக்குள் நீங்காமல்.

இருநூறு ரன்னை நோக்கி சில வீரர்கள் ஓடிக்கொண்டிருக்க, இவரெல்லாம் அவ்வளவு ரன் அடிக்கிறது சாத்தியமில்லை என்ற பேச்சுக்கள் பரவலாக இருக்க, சாதித்துக் காட்டினார் சச்சின். இன்றைக்கு சேவாக் 219 ரன்னுடன் முதல் இடத்திலும் ரோகித் 209 ரன்னுடன் இரண்டாவது இடத்திலும் இருந்தாலும் 200 எட்டக்கூடிய ரன்தான் என உலகுக்கு காட்டிக்கொடுத்தவர் சச்சின். இருருநூறை எட்டிய மூவருமே இந்தியர்கள் என்பதில் நமக்குப் பெருமையே.

கடைசிப் போட்டி... அவருக்கு மட்டுமல்ல... என்னைப் போன்றவர்களுக்கும் மிகவும் துயரமான போட்டிதான்... தன் இருபத்து நான்கு வருட கிரிக்கெட் வாழ்க்கையில் அன்றுதான் அதிக நேரம் பேசியிருக்கிறார். அவர் அழுதபோது ரசிகர்களை மட்டுமல்ல... இந்தியர்களை மட்டுமல்ல... உலகத்தையே மனம் கலங்க வைத்த பேச்சு அது... ம்.. அழ வச்சிப்புட்டானய்யா... அழ வச்சிப்புட்டானய்யா... கடைசியில் தனியாளாக ஆடுகளத்துக்குள் வந்து அதைத் தொட்டுக் கும்பிட்டுச் சென்றதை இன்னும் மறக்க முடியவில்லை.

இந்தியாவில் கிரிக்கெட்டை இவ்வளவு பிரபலமாக்கிய பெருமை சச்சினைத்தான் சாரும். சின்னக் குழந்தையும் ரசித்துப் பார்க்க ஆரம்பித்ததும் கட்டையில் செய்த பேட்டால் பந்தை அடித்து விளையாடிக் கொண்டு திரிவதும் சச்சினால்தான். கிரிக்கெட்டுக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். தன் மீது எந்த ஒரு தவறான செய்தியும் வராமல் விளையாண்டு காட்டியவர். எந்தப் போட்டியிலும் எதிரணியியனரிடமோ நடுவரிடமோ விக்கெட்டுக்காக சண்டையிட்டதில்லை. தனக்கு அவுட் என்று தெரிந்தால் அந்த இடத்தை விட்டு நகர்ந்து விடும் வீரர்களில் இவரே முதலாமவர்.

அனைவருக்கும் பிடித்த சச்சின்... தன் இறுதி மூச்சு வரை 'சச்சின்... சச்சின்...' என்ற ரசிகர்களின் குரல் கேட்டுக் கொண்டே இருக்கும் என்றார். எங்களுக்கும் கடைசிவரை சச்சின் சச்சின் என்ற உங்கள் நினைவு இருந்து கொண்டேதான் இருக்கும். 

சச்சின் சாதித்ததையும் செய்தாரா செய்யவில்லையா என்பதையும் பற்றிப் பேச எனக்குத் தோன்றவில்லை... சச்சின் என்ற மனிதனை எனக்குப் பிடிக்கும் என்பதை மட்டுமே சொல்லத் தோன்றுகிறது. சச்சின் உன்னை மட்டுமே எனக்குப் பிடிக்கும். இனி கிரிக்கெட் எனக்குள் மெல்லச் சாகும்.


-'பரிவை' சே.குமார்.