முன்னேறிய உலகில் பண்பாட்டின் தேவை குறித்த
தலைப்பிற்கான கவிதை
------------------------------------------------
பண்பாடு... அது படும் பாடு...
பள்ளி செல்லும் வயதினிலே
மது வாங்கிக் குடிக்கின்றோம்...
படிக்க வரும் மாணவனோடு
கலவிப் படம் பயில்கின்றோம்...
தனியே காணும் பெண்களை
துகிலுரித்து மகிழ்கின்றோம்...
விளைந்த வயலைக் கூறுபோட்டு
விற்று சொத்துச் சேர்க்கின்றோம்...
சாதி மதம் போற்றிக் கொண்டு
சண்டையிட்டு மகிழ்கின்றோம்...
கவர்ச்சி உலகின் கனவோடு
கண்ட ஆடை அணிகின்றோம்...
ரத்தம் பார்க்கும் வெறியோடு
கத்தி எடுத்து அலைகின்றோம்...
நாலு சுவற்றுக்குள் செய்வதை
மேடையேற்றி மகிழ்கின்றோம்...
உறவுகளின் உன்னதமிழந்து
கணினியிலே கிடக்கின்றோம்...
நாயை விடக் கேவலமாய்
நடுத்தெருவில் நடக்கிறோம்...
நாமெல்லாம் பண்பாட்டை
பாடாய்படுத்தி மகிழ்கின்றோம்...
பண்பட்டு வாழ நினைத்தால்
பண் பாடும் நம் பண்பாடு...
**************
"இப்படைப்பு எனது சொந்தப் படைப்பு, 'வலைப்பதிவர் திருவிழா-2015' மற்றும் 'தமிழ்இணையக் கல்விக்கழகம்' நடத்தும் “மின்தமிழ் இலக்கியப்போட்டிகள்-2015“க்காகவே எழுதப்பட்டது, இதற்கென எழுதப்பட்ட கவிதை இது, இதற்கு முன் வெளியான கவிதை அல்ல... முடிவு வெளிவரும் வரை வேறு எங்கும் பதியவோ இதழ்களுக்கு அனுப்பவோ மாட்டேன் என்று தெரிவித்துக் கொள்கிறேன்..."
**************
பதிவர் விழாவுக்கு இன்னும் 8 நாட்களே இருக்கிறது... புதுக்கோட்டை குலுங்கட்டும்... வலைப்பதிவர் புகழ் உலகெங்கும் பரவட்டும்... தமிழகத்தில் இருக்கும் பதிவர்களெல்லாம் தவறாது கலந்து கொள்ளுங்கள்... எழுத்தின் ஆற்றல் எட்டுத் திக்கும் தமிழைக் கொண்டு செல்லட்டும்...

-'பரிவை' சே.குமார்.