நேற்றிரவு ஆரம்பித்த மழை இன்னும் ஓய்ந்தபாடில்லை. சற்று நேரம் அமைதி காப்பதும் பின்னர் சோவென்று அடித்துக் கொண்டு ஊத்துவதுமாக தொடர்கிறது. வீதியெல்லாம் வெள்ளக்காடாக தண்ணீர் நிற்கிறது. இந்த மழை தூறலாக ஆரம்பிக்கும் போதே முதலில் போவது கரண்ட்தான். நேற்றிரவு போனது இன்னும் வரவில்லை. நல்லவேளை ஞாயிற்றுக் கிழமை என்பதால் வேலைக்கு செல்ல வேண்டியதில்லை. இல்லையென்றால் இந்த மழையில் ரொம்ப சிரமப்பட வேண்டியிருந்திருக்கும். சை இந்த மழை எப்பத்தான் விடுமோ தெரியலை. வெயில் தாங்க முடியாமல் மழை வந்தா பரவாயில்லையின்னு நினைப்பு வரும். ஆனா மழை தொடர்ந்து பெய்தால் ஏன் தான் இந்த மழை வருதோன்னு நினைப்பு வர ஆரம்பிச்சிருது என்று மனசுக்குள் நினைத்தபடி கட்டிலில் படுத்திருந்தான் கணேசன்.
திவ்யா, பிறந்த ஊர்க் கல்யாணத்துக்கு நேற்றுப் போனவள் நாளைதான் வருவதாக சொல்லியிருந்தாள். இந்த நேரத்தில் அவள் இருந்தால் மழை நேரத்தில் சாப்பிடுவதற்கென்றெ சில பதார்த்தங்களை செய்து தருவாள். வேலைக்காரப் பெண் காலையில் வந்து தோசை வார்த்துக் கொடுத்து மதியத்துக்கும் சமைத்து வைத்துவிட்டு மாலை வருகிறேன் என்று சொன்னபோது இந்த மழையில் இனி நீ வரவேண்டாம். நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லிவிட்டான். தண்ணீருக்குள் நீந்தி வரவேண்டியதில்லை என்பதில் அவளுக்கும் சந்தோஷம்தான்.
மழையின் சோவென்ற சப்த்தத்தை கேட்டபடி எவ்வளவு நேரம்தான் படுத்திருப்பது டிவி பார்க்கலாம் என்றால் கரண்டு வேறு இல்லை. பழைய புத்தகங்களை எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தான். அதுவும் கொஞ்ச நேரத்தில் அவனுக்குப் புளித்துவிட்டது. உடனே அவனது புத்தகங்கள் அடுக்கியிருக்கும் செல்பை திறந்து கல்லூரியில் அவனுக்கு மற்ற நண்பர்கள் போட்டுக் கொடுத்த ஆட்டோகிராப் டைரியை எடுத்துப் படிக்கலானான். எத்தனை முறை படித்தாலும் நண்பர்களின் எழுத்துக்கள் அலுப்பதேயில்லை. ஒவ்வொரு பக்கமாக படித்துக் கொண்டே வந்தவன் ஒரு நண்பன் எழுதியிருந்ததைப் படித்ததும் சிரித்துக் கொண்டே 'ஆம் நண்பா நீ சொன்னது சரிதான்... நீதி நேர்மை என்று போனால் நடுவீதிதான்' என்று சத்தமாக சொல்லிக் கொண்டான்.
அடுத்த பக்கத்தை திருப்பியவன் நீண்ட பெருமூச்சை விட்டான். எங்கே இருக்கிறாய்? எப்படியிருக்கிறாய்?? மனசுக்குள் கேள்வி கேட்டான். எனக்குள் விதைத்து நீயே அறுத்துச் சென்றுவிட்டாயே நியாயமா? அவனுக்கு மட்டும் கேட்கும்படி சொல்லிக் கொண்டான். என் உயிரின் உறவே ஆரம்பத்திலேயே படிப்பவர்களுக்குப் புரிந்துவிடும் அவன் உயிர் அவளென்று... தொடர்ந்து படித்தவன் அப்படியே அந்தப் பக்கத்தை நெஞ்சில் வைத்துக் கொண்டு படுத்தான்.
அந்த உயிரின் உயிர் காயத்ரி கல்லூரியில் மூன்றாண்டுகள் அவனுக்குள் அழிந்திருந்தவள். இப்படியிருப்போம்... அப்படியிருப்போம்... என்றெல்லாம் பேசியவள்... ஏனோ தெரியவில்லை... கரைந்து போனாள். காயத்ரியுடனான காதல் திவ்யாவுக்கு தெரியும். பல முறை அவள் இந்தப் பக்கங்களைப் படித்து இருக்கிறாள். இதெல்லாம் இல்லையின்னா கல்லூரி வாழ்க்கையே வேஸ்ட்டுங்க என்று அவனுக்கு ஆதரவாக பேசுவாள். அவர்களுக்குள் சண்டை வந்தால் கூட தப்பித்தவறி நீ ஒருத்திய காதலிச்சவந்தானேன்னு சொல்லமாட்டா. அவனுக்கு கிடைத்த அருமையான மனைவி. இவள் கிடைக்கத்தான் அவள் விலகினாளோ என்று அவன் பலமுறை நினைத்திருக்கிறான்.
சூடா காப்பி போட்டு சாப்பிடலாம் என்ற போது அவனது செல்போன் கூப்பிட்டது. எடுத்து யாரென்று பார்த்தவன் மச்சான் என்பதை பார்த்ததும் "என்னடா மச்சான்?" என்றான்.
எதிர் முனையில் சுரேஷ், "மாப்ளே என்ன பண்றே... தனியாத்தானே இருக்கே?"
"ஆமா... போரடிக்குதுடா... கரண்ட் வேற இல்லை... உன் தங்கச்சி வேற ஊருக்குப் போயிருக்காளா தனியா குர்றான்னு உக்காந்திருக்கேன். இப்பத்தான் காபி போட்டு சாப்பிடலாமுன்னு நினைச்சேன்."
"பீச்சுக்கு ஒரு டிரைவ் போகலாமா?"
"என்னடா சொல்றே இந்த மழையில பீச்சுக்கா?"
"ஆமா... நம்ம ஆளு ஒருத்தி இருக்கா. பேமிலி பிகர்தான்... அவளோட ஜாலியா பீச்சுக்குப் பொயிட்டு எஞ்சாய் பண்ணிட்டு வரலாம்..."
"பொண்ணு கூடவா... அய்யய்யோ..."
"என்ன நொய்யய்யோ... நீ இதுக்கு முன்னால் ஜாலி ட்ரைவ் வந்ததில்லையாக்கும்"
"அ...அது கல்யாணத்துக்கு முன்னாடி... உந்தங்கச்சி வந்ததுக்கு அப்புறம் இது மாதிரி ட்ரைவ் எல்லாம் விட்டுட்டேன்ல்ல..."
"இப்பதான் தங்கச்சி இல்லையில்ல... மழை வேற கொட்டிக்கிட்டு இருக்கு... நாம ஒரு முறை மகாபலிபுரம் போனோம் பாரு... அது மாதிரி ஒரு சூப்பர் ட்ரைவ்... எனக்கு ரொம்ப குளோஸ் இந்தப் பொண்ணு... மேரேஜ் ஆனவதான்... அவ பிரண்டையும் கூட்டிக்கிட்டு வாறேன்னு சொன்னா... என்ன சொல்றே... சும்மா மழையில ஒரு ஜாலி... அவங்கள கூட்டிக்கிட்டு வீட்டுக்கு வாறேன்... கிளம்பி இரு..."
"இல்லடா... நான் வரலை... நீ பொயிட்டு வா..." என்றபடி போனை கட் பண்ணினான்.
காபி போட்டவன் மனசுக்குள் நண்பன் சொன்னது டிக்காசனாக இறங்கியது. ஜாலி டிரைவ்... மகாபலிபுரம் போனது மாதிரி... ஆமா... அன்னைக்கு கூட வந்தது கிளாஸ்மேட் மல்லிகா, எஞ்சாய்ங்கிற வார்த்தைக்கு அன்னைக்குத்தான் அர்த்தமே புரிஞ்சது. அதுக்கப்புறம் அது மாதிரி ட்ரைவ் எதுவும் அமையலை. ஆனா இன்னைக்கு மறுபடியும்... யோசித்தான்... யோசனை அவனை வென்றது. போன் செய்து தானும் வருவதாக சொன்னான்.
வாசலில் காரை நிறுத்திக் கொண்டு சுரேஷ் மிஸ்டு கால் கொடுக்கவும் வேகவேகமாக் வீட்டை பூட்டிக்கொண்டு மழையில் ஒடிப்போய் காரின் முன்பக்கம் ஏறிக் கொண்டான்.
"என்னடா... ஆரம்பத்துல சாமியார் மாதிரி பேசினே... வெளக்கெண்ண... தங்கச்சியிருந்தா நாங்களே கூப்பிட்டிருக்க மாட்டோம்... சரி பின்னால பாரு... சிவப்பு சுடி மஞ்சு என்னோட பிரண்ட்... பக்கத்துல இருக்கது காயத்ரி... அவளோட பிரண்ட்... இது உன்னோட காயத்ரி இல்ல... இது வேற காயத்ரி..." சொன்ன சுரேஷ் பலமாக சிரித்தான்.
"ஹாய்" என்று ஒற்றை வார்த்தையில் முடித்துக் கொண்டான்.
"என்ன சுரேஷ் உங்க பிரண்ட் பேச காசு கேப்பாரு போல..."
"அவன் கொஞ்சம் மூடிடி... கொஞ்ச நேரமானா சரியாயிடுவான்..." என்ற போது கணேசனின் செல்போன் அடித்தது.
"டேய் உந்தங்கச்சிடா"
"மஞ்சு யாரும் பேசாதீங்க... பேசுடா... இது எதையும் உளறிடாதே"
"ம்..." என்றபடி போனை ஆன் பண்ணினான்.
"என்னம்மா... என்ன பண்ணுறே?"
"இருக்கேன். நீங்க என்ன பண்ணுறீங்க... மழை விட்டிருக்கா?"
"எங்க விடுறது...பேய் மழை பேயுது..."
"வேலக்காரப் பொண்ணு வந்தாளா?"
"ம் வந்தா... காலையில தோசை, மத்தியானத்துக்கு சமைச்சு வச்சா... பாவம் இந்த மழையில இனி வர வேண்டான்னு சொல்லிட்டேன்."
"நீங்க என்ன செய்வீங்க... தோசை சுடுறேன்னு கை கால்ல சுட்டுக்குவீங்க... நம்ம பஞ்சண்ணன் கடை நம்பர் பிரிட்ஜ் மேல இருக்க டைரியில இருக்கு, போன் பண்ணி எதாவது டிபன் நைட்டுக்கு வாங்கிக்குங்க..."
"ம்..."
"வீட்லயா இருக்கீங்க...?"
"இல்ல... அது வந்து..."
"என்ன வந்து... எங்க இருக்கீங்க?"
"உங்க அண்ணன் கூட பீச்சுக்குப் போறேன்..."
"சுரேஷ் அண்ணன் கூடவா... இந்த மழையிலயா... சரியாப் போச்சு... சாதரண குளிர் காத்து வீசினால ஆயிரத்தெட்டு தும்மல்... இதுல... ஏங்க எதையாவது இழுத்துக்காதீங்க... நானும் பக்கத்துல இல்ல..."
"இல்லம்மா...சும்மா மழை நேரத்துல பீச்சு எப்படியிருக்குன்னு பாத்துட்டு அப்படியே..."
"நீங்க அண்ணங்கிட்ட போனை குடுங்க"
"இந்தாடா உங்கிட்ட பேசணுமாம்..."
"என்னம்மா... அப்பா அம்மால்லாம் நல்லாயிருக்காங்களா?"
"ம்... ஏண்ணே... அவரைப் பத்திதான் உங்களுக்கு தெரியுமே... சைனஸ் வேற இருக்கு... மழையில நனஞ்சு எதையும் இழுத்துக்கிட்டுறாமா.... பேசாம அவரை வீட்டுல விட்டுடுங்கண்ணா... ப்ளீஸ்"
"இல்லம்மா... வண்டியவிட்டு இறங்கமாட்டோம்..."
"அவருகிட்ட கொடுங்க..."
"ஏங்க கீழ இறங்காதீங்க... காத்தும் மழையுமா இருக்கு... அங்க ரோடெல்லாம் தண்ணியா கிடக்கும். எது குழி எது ரோடுன்னு தெரியாம இருக்கும்... இந்த நேரத்துல பீச்சுக்குப் போகலைன்னு யாரு அழுதா... நீங்க திரும்பி வீடு போற வரைக்கும் எனக்கு படக்குப் படக்குன்னு இருக்கும்... வீட்டுக்குப் போனதும் போன் பண்ணுங்க.... கீழ இறங்காதீங்க... வீட்டுக்குப் போனதும் கையில சுட்டுக்காம சுடுதண்ணி வச்சி அதை குடிங்க... இல்ல வேணாம்... கெட்லர் இருக்குல்ல அதுல தண்ணி சூடு பண்ணிக்கங்க... சரி வக்கிறேன். பாத்துப் போங்க..." திவ்யா போனை வைக்கவும்
"என்னடா தங்கச்சிக்கிட்ட வீட்டுல இருக்கேன்ன்னு சொல்ல வேண்டியதுதானே... எரும..."
"இல்லடா அவகிட்ட பொய் சொல்ல வராது..."
"அப்புறம் நாங்க கூட இருக்கதை சொல்லலை... மறைக்கிறதும் பொய்தானே..." என்றாள் மஞ்சு.
"அது..."
"ஏய்... அவன வாறாதே... அவன் கல்யாணத்துக்கு அப்புறம் ரொம்ப நல்லபுள்ள..."
"உங்க பிரண்ட பின்னால வரச்சொல்லுங்க... அந்த நல்ல புள்ளய பாப்போம்."
"பின்னால போறியாடா..."
"வேண்டாம்... போடா..."
சிறுது நேரத்தில் அவனது செல்பேசி மீண்டும் அழைக்க... "அப்பா... தங்கச்சியாத்தான் இருக்கும்... வீட்டுக்கு போய்க்கிட்டு இருக்கேன்... போனதும் போன் பண்ணுறேன்னு சொல்லு... இப்ப பேசுனதோட பீச்சு பொயிட்டு வாற வரைக்கும் போன ஆப்பண்ணிப் போடு..."
"சரி இருடா... சத்தம் போடாம இருங்க..." என்றபடி போனை ஆன் செய்து "என்னம்மா... நீதான் சொல்லிட்டியல்ல... உங்க அண்ணன் கூடத்தான் வந்திருக்கேன். நீ சொன்ன பின்னால நான் இறங்க நினைச்சாலும் அவன் இறங்க விடமாட்டான். சும்மா ஒரு ரவுண்ட் பொயிட்டு மழை நேர பீச்சைப் பாத்துட்டு அப்படியே திரும்பிடுவோம்... நீ பயப்படாம இரு... வீட்டுக்கு வந்ததும் உனக்கு கூப்பிடுறேன். ஓகே... " என்றபடி போனை வைத்தவன்
என்ன நினைத்தானோ தெரியவில்லை. "மச்சான் ஒரு பஸ் ஸ்டாப் ஓரமா நிப்பாட்டு நான் பஸ் இல்லேன்னா ஆட்டோவுல வீட்டுக்குப் போய்க்கிறேன். நீங்க பீச்சுக்குப் பொயிட்டு வாங்க" என்றான்.
"என்ன மச்சான்... என்னடா ஆச்சு..."
"இல்லடா... ஏதோ பழைய சபலத்துல வந்துட்டேன்... உன் தங்கச்சிக்கு உயிரெல்லாம் இங்கதான் இருக்கும்... நான் வீடு திரும்பிப் போற வரைக்கும் அவ ஆயிரம் போன் பண்ணீருவா... எத்தனை சாமிக்கு நேர்த்திக்கடன் வச்சாளோ தெரியாது... கர்ப்பமா இருக்க அவ படபடப்போட டென்சனாவே இருப்பா... கல்யாணம் ஆகி இந்த ஆறு மாசத்துல அவ அப்பா, அம்மா எல்லாம் ரெண்டாம்பட்சமாயாச்சு... நாந்தான் அவளுக்கு உலகம். இன்னைக்கு ஒரு நாள் சந்தோஷத்துக்காக அவகிட்ட பொய் சொல்லிட்டு அவ கூட இருக்க ஒவ்வொரு நிமிசமும் மனசுக்குள்ள வச்சிக்கிட்டு புழுங்கணும். வேண்டான்டா... அவ ஊருக்குப் பொயிட்டு நான் ஒரு போன் பண்ணினதுதான்... ஆனா அவ எத்தனை தடவ பண்ணியிருப்பா தெரியுமா... எனக்குள்ள இருந்த ஜாலி ட்ரிப் ஆசை இன்னையோட செத்திருச்சிடா... சாரிடா... என்னய இங்கயே எறக்கிவிடு... இனி மழையில நனஞ்சாலும் எனக்கு ஒண்ணும் ஆகாது." என்ற அவனது பேச்சில் மனைவியின் நேசம் மறைக்காமல் தெரிந்தது.
-'பரிவை' சே.குமார்
கூகிள் : படத்துக்கு நன்றி