மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சந்தோஷம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சந்தோஷம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 10 டிசம்பர், 2014

பொன்னான சந்திப்பு... சிகரங்களுடன் மகிழ்வான தருணம்

டிசம்பர் - 3, புதன்கிழமை

அது ஒரு பொன்மாலைப் பொழுது... ஆம் வெயில் தாக்கும் அமீரகம் குளிருக்குள் தன்னை குந்த வைக்க ஆரம்பித்திருக்கும் குளிரான மாலை. அபுதாபியில் இரு பெரும் சிகரங்களுடன் சில மணித்துளிகள் பேசி மகிழ வைத்த பொன்னான மாலை... என்றும் மனசுக்குள் பூத்துச் சிரிக்கும் சந்திப்பாக மாற்றிய அழகிய மாலை...

(வசந்த மண்டபம், Killergee, மனசு)
வலையில் எழுத ஆரம்பித்து இணைய வழியாகவும் தொலைபேசி வழியாகவும் உறவு கொண்டிருந்தாலும் நேருக்கு நேர் சந்தித்து அளாவளாவும் வாய்ப்பு எட்டாமல்தான் கழிந்து கொண்டிருந்தது. சீனா ஐயா அவர்கள் என்னைச் சந்திக்கும் முன் அம்மாவுடன் என் இல்லம் சென்று வந்தார்கள். அதன் பின்னர் தேவகோட்டை எங்கள் இல்ல புதுமனை புகுவிழாவிற்கு வந்தபோதுதான் அவரை நேரில் சந்தித்தேன். விருந்து உபச்சாரம் என்று இருந்ததால் அதிக நேரம் பேசமுடியவில்லை. மதுரை வரும்போது கண்டிப்பாக வீட்டிற்கு வரணும் என்றார். நானும் மதுரை போனேன். ஆனால் ஐயா வீடு செல்லவில்லை. இப்பவும் அவருடன் பேசினால் நித்யா, ஸ்ருதி, விஷால் என தனித்தனியாக பெயர் சொல்லி நலம் விசாரிப்பார்.

மற்றபடி நிலவன் ஐயா, குடந்தை சரவணன் அண்ணன், ஜெயக்குமார் ஐயா, தனபாலன் அண்ணா என நிறையப் பேரை சந்திக்க நினைத்து இன்னும் வாய்ப்பு வராமல் தள்ளிக் கொண்டே போய்க் கொண்டிருக்கிறது. அண்ணன் கில்லர்ஜி அவர்களுடன் நட்பான பின் அவரும் அபுதாபியில் இருப்பதை அறிந்து சந்திக்க நினைத்திருந்த வேளையில் மதுரை பதிவர் சந்திப்புக்கு போய் வந்தவர் இங்கு வந்ததும் என்னைச் சந்திக்க ஒரு மாலையில்அன்போடு ஓடி வந்தார்.  முதல் சந்திப்பு... பரஸ்பரம் பேச்சுக்கள்... பின்னர் சந்திக்கும் போது ஒரு உரிமையுடன் பேச ஆரம்பித்தோம். அதில் இன்னொரு சந்தோஷம் என்னவென்றால் அவர் தேவகோட்டையைச் சேர்ந்தவர் என்றதும் ஊர்ப்பாசமும் சேர்ந்து கொண்டது.

தூத்துக்குடி முத்து 'வசந்த மண்டபம்' மகேந்திரன் அண்ணன் அவர்கள் இரண்டு மாதமாகவே சந்திக்க வேண்டும் எனச் சொல்லிக் கொண்டே இருந்தார். இங்கு இருக்கும் ஒரு மாதமும் அவருக்கு கடலுக்குள் வாழ்க்கை. அதனால நாங்கள் அவரைத் தேடிப் போகவோ அல்லது அவர் எங்களைத் தேடி வரவோ முடியாத சூழல். ஊருக்குச் செல்லும் போதோ அல்லது திரும்பி வரும்போதோ சந்தித்தால்தான். அதனால் அவர் சொல்லியபடி சந்திப்பதில் சிரமம் இருந்தது. ஆனால் போனில் எங்கள் உறவு தொடர்ந்து கொண்டுதான் இருந்தது.

(நான், சகோதரர்கள் மகேந்திரன், கில்லர்ஜி மற்றும் கண்ணன்)
போன வார புதன்கிழமை ஊருக்கு செல்வதற்காக அபுதாபி வருவேன். அப்போது நாங்கள் தங்கி இருக்கும் ஹோட்டலில் சந்திக்கலாம் என்று அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் போனில் சொன்னார்.  நானும் கில்லர்ஜி அண்ணாவும் அவரைச் சந்திக்கும் ஆவலுடன் இருந்தோம். புதன்கிழமை அங்கிருந்து கிளம்ப லேட்டாகி விட்டது. நீங்க அபுதாபி மாலுக்கு வாங்க ஒரு பத்து நிமிடமாவது உங்களுடன் பேசிவிட்டுப் போகிறேன் எனச் சொன்னார். அலுவலகத்தில் இருந்து இறங்கும் போது நீங்க நாங்க தங்கியிருக்க ஹோட்டல்கிட்ட வாங்க நான் அங்கே வந்துடுறேன்னு சொன்னார். இதற்கு இடையில் கில்லர்ஜி அண்ணா யாஸ் சென்றவர் அவரை அபுதாபி மாலில் பார்த்துவிட்டு எனக்கு போன் செய்து அவரைப் பார்த்துட்டேன். நான் யாஸ் பொயிட்டு ஹோட்டலுக்கு வந்துடுறேன். நீங்க வந்துருங்க என்றார்.

என்னைப் பொறுத்தவரை ஒரு இடத்துக்கு வருகிறேன் என்று சொல்லிவிட்டால் பத்து நிமிடம் முன்னர் போய்விடுவதுதான் வழக்கம். அப்படியே 20 நிமிடம் முன்னதாக மகேந்திரன் அண்ணா சொன்ன ஹோட்டலுக்குச் சென்று வாயில் ஓரமாக வேடிக்கை பார்த்தபடி நின்று கொண்டிருந்தேன். சைனா போன் விற்கும் பாகிஸ்தானிகள் சுற்றிச் சுற்றி வந்தார்கள். என் கையில் இருக்கும் போனையும் என்னையும் மாறி மாறி பார்த்தார்கள். எனக்கு அருகே நின்ற ஒரு சீனனிடம் போன் வேண்டுமா என்று கேட்க அவர் தனது மொபைலைக் காட்டி இது போதும் என்று சிரிக்க இடத்தைக் காலி பண்ணினார்கள். நேரம் கரைய என்னையே கூர்ந்து பார்த்த ஒரு பாகிஸ்தானி என்ன இங்கயே நிக்கிறே என்றான். அந்த ஹோட்டல் இரவு நடனங்கள், இரவுக்கிளிகள் என பெயர் போன கச்சடா ஹோட்டல் என்பது தெரியும். அவனின் கேள்வியில் மேலே சொன்னவை தொக்கி நிற்க, என்னோட பிரண்டுக்காக நிக்கிறேன்... உனக்கு என்ன வேணும் என்றதும் ஓகே... ஓகேன்னு சொல்லி நகர்ந்தான்.

சிறிது நேரத்தில் மகேந்திரன் அண்ணனும் அவரின் நண்பரும் மதுரைக் காளவாசல்காரருமான கண்ணன் அண்ணனும் வந்து சேர்ந்தார்கள். கண்ண அண்ணனை மதுரைக்காரர் என்று அறிமுகப்படுத்தியதும் அவரின் பேச்சும் செயலும் மனசுக்குள் ஒட்டிக்கொள்ள மிகவும் நெருக்கமானோம். என்னதான் இருந்தாலும் நம்ம மாமனார் ஊர்க்காரருல்ல.... அதுபோக என்னோட மூத்த அண்ணன் கண்ணன் என்பதாலும் ஒரு ஒட்டுதல் வந்தது. மதுரைக்குப் போனா மாமாவை கடையில் போய் பார்த்துட்டுப் வாங்கன்னு விவரம் சொல்லி விட்டேன்னா பார்த்துக்கங்க.

(தேசிய நாளுக்காக அமைத்த குடிலில் இப்படித்தான் உக்காரணும் எனச் சொன்ன கில்லர்ஜி மற்றும் நாங்கள்)
மகேந்திரன் அண்ணனுடன் பேசிக் கொண்டிருக்கும் போதே யாஸ் சென்ற கில்லர்ஜி அண்ணன் அவர்கள் தனது காரை பார்க் பண்ணிவிட்டு வர எல்லாருமாக அறைக்குச் சென்றோம். கண்ணன் அண்ணன் அவரது அறைக்குச் செல்ல நாங்கள் மூவருமாக அரட்டையில் அமர்ந்தோம். பல விஷயங்கள் பேச, இடையில் மகேந்திரன் அண்ணன் காபி போட்டுக் கொடுத்தார். குடித்தபடி பேசிக் கொண்டிருந்தோம். கடலுக்குள் அவரின் வாழ்க்கை பற்றிப் பேசினோம்... வலைத்தளங்கள் பற்றி பேசினோம்... கொஞ்ச நேரச் சந்திப்பு என்றாலும் நீண்ட நாள் உறவை எங்களுக்குள் தேக்கி வைத்தது.

எங்களுடன் பேசியபடியே கிளம்பிக் கொண்டிருந்த மகேந்திரன் அண்ணனுக்கு ஊரில் இருந்து அழைப்பு... தனது மனைவியுடன் பேசியவர் குமார் வந்திருக்கார்... கில்லர்ஜி வந்திருக்கார் என்று சொல்ல, எங்களைச் சொல்றாரே அவங்களுக்குத் தெரியுமா என்று ஆச்சர்யப்பட்டால் அவங்க எங்க வந்தாங்க... அங்கயா என்று ஆச்சர்யப்பட்டதுடன் கேட்டவரிடம் இந்தா நீயே பேசு எனக் கொடுக்க பல நாள் பழக்கம் போல திருமதி. மகேந்திரன் அவர்கள் எங்களுடன் போனில் பேசினார். எங்களை நல்லாத் தெரியும் என்றார். கூடுதலாக எங்கள் எழுத்துக்களை வாசிப்பேன் என்று சொல்லி சந்தோஷப்பட வைத்தார். எல்லாரையும் தெரியுங்க... ஒரு சிலர் இலக்கியம் இலக்கணம் குறித்த சந்தேகங்களுக்கு அவங்களுக்கு போன் போட்டுக் கேட்பாங்க என மகேந்திரன் அண்ணன் சொன்னார். ஆம் அவங்க தமிழாசிரியர்... எப்படிப்பட்ட உறவு பாருங்கள்... அண்ணனைச் சந்தித்ததே மூன்று மாத முயற்சிக்குப் பிறகுதான் நடந்தது. அவரைச் சந்தித்த அன்றே அண்ணியுடன் பேசும் வாய்ப்பு வேறு... எல்லாரையும் உறவாக்கி வீட்டில் சொல்லி வைத்திருக்கும் மகேந்திரன் அண்ணனின் நட்பு கிடைத்ததும் அண்ணியுடன் பேசியதும் எங்களுக்கு வரப்பிரசாதமே என்றால் அது மிகையில்லை. 

பின்னர் கண்ண அண்ணனை அழைத்து போட்டோ எடுக்கச் சொன்னால் அவர் ஒரு போட்டோ சூட்டே நடத்தி முடித்து விட்டார். பின்னர் மேலிருந்து கீழிறங்கி வந்து கில்லர்ஜி அண்ணாவின் ஆசைக்கு இணங்க ரிசப்ஷனில் வைத்து மேலும் போட்டோ சூட்... எல்லாம் முடித்து அவர்களை காரில் ஏற்றி விட்டு ஊருக்குப் போய் மிஸ்டு கால் கொடுங்க... கூப்பிடுறோம் என்று சொல்லி (ஒரு வாரம் ஆச்சு... இன்னும் மிஸ்டுகால் அடிக்க டிரைப் பண்ணுறாரு போல... ஹி.. ஹி... எஞ்சாய் அண்ணா...) நாங்க இருவரும் கிளம்ப, கில்லர்ஜி அண்ணா என்னை எனது அறைக்கு அருகில் இறக்கிவிட்டுச் சென்றார். ஒரு சந்தோஷ சந்திப்பை அனுபவித்த மகிழ்வுடன் அறைக்குச் சென்றேன்.

(சந்திப்பின் நிறைவாக ஹோட்டல் ரிஷப்சனில் அங்கிருந்த தமிழ் நண்பர் எடுத்த போட்டோ)
சொல்ல மறந்துட்டேனே... நானெல்லாம் தொடர்கதை என்றால் கூட அந்தந்த வார பகுதி அன்றுதான் எழுதிப் பதிவு செய்வேன். ஏன் சந்திப்பு குறித்து எழுதச் சொல்லி அடிக்கடி கில்லர்ஜி அண்ணா ஞாபகப்படுத்தினாலும் வேலை மற்றும் அசட்டையால் ஒரு வாரத்திற்கு மேல் ஆகிவிட்டது. ஆனால் நம்ம ஜீயோ இத்தனாம் தேதிக்கு இந்தப் பகிர்வு என எழுதி சேமித்து வைத்திருப்பதைச் சொன்னபோதுதான் வலையில் அவரின் ஆர்வமும் எழுத்து மீதான காதலும் எங்களுக்கு தெரிய வந்தது. உண்மையிலேயே கில்லர்ஜி பாராட்டுக்குரியவர்தான்.

எங்கள் சந்திப்பு குடும்பச் சந்திப்பாக தொடரும் என்ற நம்பிக்கையோடு நட்பின் சந்திப்பை அசை போட்டுக் கொண்டிருக்கிறேன்.
-'பரிவை' சே.குமார்.

புதன், 17 செப்டம்பர், 2014

சிங்கப்பூர் கிளிஷே இணைய இதழில் சிறுகதை



சில வாரங்களுக்கு முன்னர் சிங்கப்பூரில் இருந்து தங்கை அனிதா சிறுகதை ஒன்று வேண்டும் அதுவும் உடனே வேண்டும் என்றார். எதற்காக கேட்கிறார் என்றெல்லாம் கேட்கவில்லை... அப்போது சில மன வருத்தமான நிகழ்வுகள் நடந்தேறி இருந்தன... அந்தச் சூழலில் எழுதும் எண்ணமும் இல்லை... சரி தங்கை கேட்டிருக்கிறார் என நான் முன்னர் எழுதிய கதையில் இரண்டை அனுப்பி வைத்திருந்தேன். எது பிடிக்கிறதோ அதை எடுத்துக் கொள்ளுங்கள் என்ற வாசகத்துடன்... அதன் பின் அது பற்றிய செய்திகள் இல்லை... இடையில் கதை நல்லா இருக்கா... இல்லையா என்று சொல்லுங்கள் என்றேன். இன்னும் பார்க்கவில்லை பார்த்து ரெண்டொரு நாளில் சொல்கிறேன் என்றார். பின்னர் அது குறித்தான பேச்சு இல்லை. இன்று அலுவலகம் சென்று வந்து  முகநூலைத் திறந்தால் அதில் ஒரு இணைப்பு முகவரி அனுப்பியிருந்தார். அதன் வழியாகச் சென்றால் 'சிங்கப்பூர் கிளிஷே' என்ற இணைய இதழில் எனது சிறுகதை வெளியாகி இருக்கிறது.  ரொம்பச் சந்தோஷமாக இருந்தது.


மனச்சுமை

“நிம்மதியில்லாம இப்படி ஒரு வாழ்க்கை தேவையா?” கத்தினான் பாலா.

“தேவையா… தேவையில்லையான்னு இப்ப.. இங்க.. நீயே ஒரு முடிவு எடு” பதிலுக்கு கத்தினாள் நந்தினி.

“செய்யிறதெல்லாம் செய்துட்டு என்னைய முடிவெடுக்கச் சொல்லு… நல்லாயிருக்குடி…”

“என்ன செஞ்சாங்க… எப்பவும் நிம்மதியில்ல… விடிஞ்சா எந்திரிச்சா சண்டை… சை… வாழுறதுக்கு சாகலாம்ன்னு இருக்கு…”  லேசாக விசும்பினாள்.

“உன்னைய சாகடிச்ச பாவம் எனக்கு வேண்டாம்… எனக்குந்தான் என்னைக்கு உன்னைய கட்டுனனோ அன்னைக்கு சந்தோஷமெல்லாம் செத்துப்போச்சு… இப்பல்லாம் விடிஞ்சாவே பயமா இருக்கு…”

“பெத்தவங்க… கூடப் பிறந்தவங்க எல்லாரையும் உதறிட்டுத்தான் உன்னோட பின்னால வந்தேன். ஆசை அறுபது நாள்… மோகம் முப்பது நாள்ன்னு எண்ணிக்கிட்டு இருந்தே போல… அப்ப ஆரம்பிச்சே… முடியவே இல்லை… உனக்கு மட்டுந்தான் விடிஞ்சாப் பயமா… எனக்குந்தான் விடியவே கூடாதுன்னு நெனைப்பு வருது…”

“நானுந்தாண்டி எல்லாத்தையும் விட்டுட்டு உன் பின்னாடி வந்தேன். காதலிக்குப் போது சாந்த சொரூபினியா இருந்தே… இப்ப கொல்லங்குடி காளி உங்கிட்ட தோற்றுப் போயிடுவா போ… ஆட்டம்… எல்லாத்துக்கும் ஆட்டம்… உக்கிரமால்ல இருக்கே… ஒரு நாளாச்சும் சிரிச்சுப் பேசி… ம்க்கும்… நடக்கலையே”

“அன்னைக்கு காமாட்சியா தெரிஞ்ச நான் இன்னைக்கு உனக்கு காளியாயிட்டேன்… ஆனா நீ மட்டும் சாட்சாத் அந்த ராமனாவே இருக்கே…நீ ராமனாவே இரு… நான் இப்ப காளியாவே இருந்துட்டுப் போறேன்…எனக்குத் தேவை நீ எடுக்கப் போற முடிவு…”

“ஏன் முடிவை நீயே சொல்லுவே…”

என்னங்க இங்கயே வாசிக்காம அந்த இதழில் போய் வாசியுங்கள்... என் கதை மட்டுமின்றி சில ஜாம்பவான்களின் எழுத்தையும் வாசிக்கலாமே... 
அதற்கு இங்கு சொடுக்குங்கள்...

***********
ப்புறம் இந்த வாரத்தில் தேனக்காவின் சாட்டர்டே ஜாலி கார்னர், சகோதரர்கள் கில்லர்ஜி மற்றும் அ.பாண்டியன் அளித்த விருதுகள், தற்போது 'சிங்கப்பூர் கிளிஷே' இணைய இதழில் சிறுகதை என சந்தோஷங்களை சுமந்து மகிழும் வாரமாக அமைந்திருக்கிறது. அதற்கு எல்லாருக்கும் நன்றி.

'கலையாத கனவுகள்' தொடர்கதை முடிவில் சில நண்பர்களுக்கு திருப்தி இல்லை எனச் சொன்னார்கள். இப்படி முடித்திருக்கலாமோ என எழுதி வைத்தாயிற்று... இன்னும் பதியும் எண்ணம்தான் வரவில்லை... காரணம் தொடர்ந்து வாசித்த சகோதரர்கள் யோகராஜா, ரூபன், பகவான்ஜி, சகோதரி மேனகா, ஐயா ஜெயக்குமார் அவர்கள் என எல்லாருமே முடிவு சரியென்றே சொல்லியிருந்தார்கள். இனியும் மாற்றத்தோடு பதியணுமா என்று எண்ணம்... பதியலாமா வேண்டாம என்பதை நாளை முடிவு செய்யலாம்.

'சிங்கப்பூர் கிளிஷே' இணைய இதழின் பொறுப்பாசிரியர் தங்கை அனிதாதான் என்பதை அந்த இதழை வாசிக்கும் போதுதான் அறிந்தேன்.... தங்கைக்கு வாழ்த்துக்கள்... எனது சிறுகதையையும் பதிவிட்டமைக்கு நன்றி.
-'பரிவை' சே.குமார்.

திங்கள், 15 செப்டம்பர், 2014

சந்தோஷ விரு(ந்)து

நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் எனக்கு விருது. இம்முறை எங்கள் தேவகோட்டைக்காரரான சகோதரர் திரு.கில்லர்ஜி அவர்களிடமிருந்தும் மணப்பாறை ஆசிரியர் அ.பாண்டியன் அவர்களிடமிருந்தும் 'VERSATILE BLOGGER' (பன்முகப் பதிவர்) விருது கிடைத்திருக்கிறது. மிக்க மகிழ்ச்சி... சந்தோஷம்... நன்றி.

இந்த வாரத்தில் எனக்கு இரட்டிப்பு சந்தோஷம் என்றுதான் முதலில் பதிவை ஆரம்பித்து முடித்திருந்தேன். இந்தப் பதிவை பகிரப் போகும் போது எனக்கு ஒரு பின்னூட்டம் வந்திருக்க... ஆர்வக் கோளாறில் அதை முதலில் திறந்து பார்த்தால்... அட நம்ம சகோதரர் ஆசிரியர் பாண்டியன் அவர்கள் ஒரு விருதை அளித்திருப்பதைத் தெரிவித்திருந்தார். இரட்டிப்பு சந்தோஷத்தோட மூன்றாவதாய் ஒரு சந்தோஷம்... சகோதரருக்கு நன்றி.

முதலாவது சந்தோஷம் சனிக்கிழமை அன்று தேனம்மை இலட்சுமணன் அவர்கள் தனது சும்மா வலைப்பூவில் சாட்டர்டே ஜாலிகார்னர் என்ற பகிர்வுல் என்னைப் பற்றி பகிர்ந்திருந்தார்.  இரண்டாவது மற்றும் மூன்றாவது சந்தோஷம்  என்னவென்றால் கில்லர்ஜி மற்றும் பாண்டியன் எனக்களித்த விருது.  

இங்கு ஒன்று சொல்லிக்க நினைக்கிறேன். தேனக்கா போன்ற செட்டிநாடு கண்டெடுத்த மிகச் சிறந்த எழுத்தாளரின் மனதில் தம்பியாய் இடம் பிடித்து அவரது வலைப்பூவில் எனக்கான... என்னைப் பற்றிய கட்டுரை வரவும்... எங்க தேவகோட்டைக்காரரான கில்லர்ஜி மற்றும் ஆசிரியர். பாண்டியன் மனதில் எனக்குக் கொடுக்கலாம் என்று தோன்றவும் காரணமாக அமைந்த என் தாய்த் தமிழுக்கு நன்றி. 

இணையத்தில் சுற்றி வரும் இந்த விருது நம்மைப் பற்றி மற்றவர்களிடம் கொண்டு செல்லும் ஊடகமாக அமையும் விதமாக விருது பெற்றவர்கள் செய்ய வேண்டியது என்ன செய்ய வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள்... அதன்படி நாமும் செய்ய வேண்டுமல்லவா... சரி என்ன செய்யணும்... ஒன்றன் பின் ஒன்றாக பார்ப்போம்...

முதல்ல என்னைப் பற்றி...

என்னைப் பற்றி நிறையத் தடவை சொல்லிட்டேன்... இருந்தாலும் சபை நாகரீகம் கருதி மறுபடியும் சொல்லிவிடுகிறேன்.. தேவகோட்டைக்கு அருகில் இருக்கும் சிறிய கிராமமான பரியன்வயலில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவன். எழுவரின் நான் ஆறாவது... அதனால் குமாரசாமி என நாமகரணம் சூட்டப்பட்டு பள்ளிப் பதிவேட்டில் குமார் ஆனேன். படித்தது... எம்.சி.ஏ.,  தற்போது ஊரில் இருக்கும் அன்பான மனைவி (நித்யா) அழகான, அறிவான செல்லங்கள் (ஸ்ருதி, விஷால்) பற்றிய முழுநேர நினைவுகளுடன் அபுதாபியில் கணிப்பொறியோடு காலம் கழிக்கிறேன்.   அப்பா, அம்மா, அண்ணன், அக்கா, தம்பி என இறைவன் கொடுத்த சொந்தங்களுடன் சச்சரவுகள் இல்லாமல் கடைசி வரை அன்போடு வாழ வேண்டும் என்று நினைப்பவன் சராசரி விவசாய குடும்பத்தான்.  

மற்றபடி கதை, கவிதை. கட்டுரைகள் எழுதுண்டு... நல்லா எழுதுவேனான்னு எல்லாம் கேட்கக் கூடாது... ஏதோ எழுதுவேன்... எழுத்துக்கு கிடைத்த அங்கீகாரமாக சீனா ஐயா வலைச்சரத்தில் எனக்கு இருமுறை ஆசிரியப் பணி கொடுத்ததும் பலரால் பலமுறை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டதும் மறக்க முடியாத நிகழ்வுகள். மனசு நாங்கள் கல்லூரியில் நடத்திய கையெழுத்துப் பிரதியின் பெயர். அதையே வலைப்பூவுக்கு வைத்தேன். ஊர்ப் பெயரைச் சொல்வதில் சந்தோஷம் கொள்பவன் என்பதால் பேருக்கு முன்னே 'பரிவை' என சுருக்கமாக வைத்து எழுத ஆரம்பித்தேன். தற்போது வலை நட்புக்களுக்கு 'பரிவை' சே.குமார் 'மனசு' குமாராயிட்டேன். 

நான் கிறுக்கிய சில கிறுக்கல்கள் அவ்வப்போது பத்திரிக்கைகளில் வந்திருக்கின்றன. இதற்கு மேல் சொல்ல இன்னும் அப்படி ஒன்று பெரிதாக சாதித்து விடவில்லை. சிலதைச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது இருந்தும் அதற்கான நேரம் இன்னும் வாய்க்கவில்லை... காத்திருக்கிறேன்... காலம் சொல்லும் பதிலுக்காக...

(அப்ப முதலாவது படியைத் தாண்டியாச்சு...)

இரண்டாவதாக தளத்தில் விருதை பதியணும்...

நட்பு கொடுத்த விருதுல்ல... பதிஞ்சிட்டாப் போச்சு... 

(ரெண்டாவது படியை சுலபமாய் கடந்துட்டோமுல்ல..)

மூன்றாவதாக முத்தாக வருவது விருதினைக் கொடுத்த தளத்தைப் பற்றி...

சகோதரர். திரு. கில்லர்ஜி, முகத்தில் விருமாண்டி மீசையுடன் வீரனாய் நிற்கும் இவருக்குள் பொதிந்து கிடக்கும் சோகங்களைப் படித்த போது மனசு வலித்தது. மிகப்பெரிய சோகத்தோடு விலை மதிப்பில்லா இரண்டு பொக்கிஷங்களைச் சுமந்து வாழும் இவர் பூவைப் பறிக்க கோடாரி எதற்கு என்று கேட்டு தனது வார்த்தைகளால் தமிழைத் தழைக்கச் செய்கிறார். 

சகோதரர். ஆசிரியர். அ.பாண்டியன் அவர்கள் சாதாரண வலிப்போக்கனாய் வாழ்க்கையை கடந்து செல்கிறேன் என்று சொல்லி துடிப்புடன் வீரிய விதைகளாய் பகிர்வுகளைப் பகிர்ந்து தமிழ் அரும்புகளை மலரச் செய்து கொண்டிருக்கிறார். 

இவர்கள் இருவரிடமும் நாங்கள் பெற்ற விருதுக்காக என் சார்பாகவும் நண்பர்கள் சார்பாகவும் மீண்டும் நன்றி.

(மூன்றாவதாய் சொன்னது உதட்டளவில் அல்ல... மனசுக்குள் இருந்து... 
அப்படா மூணாவது படியையும் தாண்டிட்டோமுல்ல......) 

இனி கடைசிப் படியான நாலாவது... 10 பேருக்கு விருதைப் பகிரணும்...

இங்கதான் சிக்கலே ஆரம்பம்... யாருக்கு கொடுத்தாங்க... யாருக்கு கொடுக்கலைன்னு கண்டுபிடிக்கிறதுதான் ரொம்பக் கஷ்டம்... ஏன்னா இந்த விருது வலைப்பூவில் சுத்தி வருது... வர்ற பதிவெல்லாம் விருது... விருதுன்னு வந்துக்கிட்டே இருக்கு... இவருக்கு கொடுக்கலாம்ன்னு மனசு நினைச்சா அவரு 'ஹையா விருது வாங்கிட்டேன்னு' பதிவை பறக்க விட்டுடுறாரு... தேடித்தேடி பிடிக்கலாம் என்றாலும் நான் நினைக்கும் சிலருக்கு கிடைத்திருக்கலாம்... சிலருக்கு கிடைக்காமலும் இருக்கலாம்.... 

அதனால... 

அதனால... 

அதனால.... 

அட எத்தனை அதனால... என்ன சின்னப்புள்ளத்தனமா இருக்கு... எங்களை வச்சி காமடி கீமடி பண்ணலையேன்னு வடிவேலு கணக்கா நீங்க பாக்குறது தெரியிது... இருங்க சொல்றேன்...

என்னைத் தொடரும் அந்த '311' பேருக்கும் இந்த விருதைச் சமர்ப்பிக்க்றேன்.... எல்லோரும் எடுத்துக்கங்க... 

விருது எடுங்க... கொண்டாடுங்க...

(நாலாவது படியில குதிச்சு ஓடி தப்பிச்சாச்சு... டேய் குமாரு ஓடிருலே...)

அட சொல்ல மறந்துட்டேனே... நன்றி மறப்பது நன்றல்லவே... எனவே  இதுவரை மனசில் வைத்து விருது கொடுத்த பிரம்மாக்களை மீண்டும் ஒரு முறை நினைவில் கொள்கிறேன்

விருது கிடைத்த வரிசையில்...
பத்மாக்கா, பா.ராஜாராம் சித்தப்பா, 'சிநேகிதன்' அக்பர், நண்பர் ஸ்டார்ஜன் (ஷேக்), மனோ அம்மா, சகோதரி ஆனந்தி, சகோதரர் அப்துல்காதர், ஜலீலா அக்கா, சகோதரி. பிரஷா, ஆசியா அக்கா, முனைவர் குணசீலன், ரமா அக்கா, சாகம்பரி அக்கா, நண்பர் எல். கே, ஐயா வை.கோ, தற்போது இந்த வரிசையில் அண்ணன் கில்லர்ஜி, சகோதரர். அ.பாண்டியன்.

அப்புறம் இந்தப் பகிர்வின் முடிவாய்...

ஏதோ எழுதினோம்... பத்திரப்படுத்தினோம்... பத்திரிக்கைகளுக்கு அனுப்பினோம்... என்று இருந்த எனக்கு இன்று வலைப்பூவின் மூலமாக உலகின் மூலை முடுக்கெல்லாம் உறவுகள்... அறிஞர்கள், புலவர்கள், பேராசியர்கள், தமிழாசிரியர்கள், ஆசிரியர்கள், ஐயாக்கள், அம்மாக்கள், அண்ணன்கள், அக்காக்கள், தங்கைகள், தம்பிகள், தோழன்கள், தோழிகள் என உறவுகளைக் கொடுத்தும்... சந்தோஷத்திலும் துக்கத்திலும் முகம் தெரியாமல் மனம் கொடுத்து வாழும் உறவுகளொடு என்னைப்  பயணிக்கவும் வைத்த இறைவனுக்கும் தமிழுக்கும் நன்றி. 

(உங்கள் பார்வைக்காக வைக்கப்பட்ட இந்த விருது இன்னும் சில தினங்களில் விருது அலமாரியை அலங்கரிக்கப் போய் விடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்) 

-'பரிவை' சே.குமார்.

செவ்வாய், 3 டிசம்பர், 2013

மனசின் தோற்றமும் வளர்ச்சியும்...

ல்லோருக்கும் வணக்கம்...

எழுத்து... எழுத ஆரம்பித்ததும் வசந்தத்தை அள்ளி வீசிய சாமரம்... எழுத்து என்னும் மகரந்தம் எனக்குள் சூழ் கொண்டது கல்லூரி நாட்களில்தான். அதுவும் உன்னால் எழுத முடியும்... முயற்சி செய்து பார் என என்னை எழுத்துலகுக்கு ஒருவர் கைபிடித்து இழுத்ததால் கிறுக்க ஆரம்பித்து கொஞ்சம் கொஞ்சமாக எழுத்து வசப்பட ஆரம்பித்திருந்தாலும் இன்னும் நல்லதொரு எழுத்தாக உருவெடுக்கவில்லை என்பதே உண்மை. இந்த கிராமத்து மண்ணுக்குள்ளும் எழுத்து என்னும் விதை முளைக்கும் என்று வலுக்கட்டாயமாக எழுத்துக்குள் இழுத்து வந்தவர் என கல்வித் தந்தை பேராசன் மு.பழனி இராகுலதாசன் அவர்களுக்கு எனது முதல் நன்றியை உரித்தாக்குகிறேன்... கல்லூரிக் காலத்தில் நான் எழுதியவைகளை... இல்லையில்லை கிறுக்கியவைகளை எல்லாம் பொறுமையுடனும் பொறுப்புடனும் படித்துத் திருத்தி... நல்லாயிருக்கு என என்னை உற்சாகமூட்டிய தோழர் தோழியருக்கும் எனது சிரம் தாழ்ந்த நன்றியினைச் சொல்லிக் கொள்கிறேன்.


மனசு...

இந்தப் பெயருக்கு நான் மட்டுமே சொந்தக்காரன் அல்ல... எங்கள் அறுவர் குழுவுக்கு சொந்தமான பெயர் இது. ஆம் கல்லூரியில் நாங்கள் நடத்திய கையெழுத்துப் பிரதியின் பெயரே மனசு. நாங்கள் என்றால் மட்டும் போதுமா என்ன... மனசில் அங்கம் வகித்த நட்புக்களின் பெயரை இந்த நேரத்தில் சொல்வதே சாலச் சிறந்ததாகும். கையெழுத்துப் பிரதி உதயமாகக் காரணமாக இருந்தவன் என்னில் பாதியாய் இருந்த கரு.முருகன், இவனது முயற்சியால் கைகோர்த்தவர்கள் இளையராஜா, பிரபாகரன், அம்பேத்கார் என்ற மூன்று முத்தான நண்பர்கள். மற்றொருவர் பாரதி கண்ட புதுமைப்பெண்ணாய் எதற்கும் துணிச்சலுடன் பயணிக்கும் சுபஸ்ரீ இவர்களுடன் நான் என ஆறு பேர் சேர்ந்து மனசு இதழை ஆரம்பித்தோம்.

கல்லூரியில் அப்போது எங்களுக்கு முந்தைய ஆண்டு மாணவர்களில் அசோகன் மற்றும் நவநீதன் என்ற இரணடு அண்ணன்கள் நீ என்ற பத்திரிக்கை நடத்தி வந்தார்கள். நாங்கள் மனசு ஆரம்பிக்கும் போது எனது சகோதரர் மா.பழனியப்பன் தனது நண்பர்களுடன் இணைந்து ரோஜா என்ற இதழை நடத்தினார். கல்லூரியில் சிறுகதைப் போட்டியெல்லாம் நடத்தி 'பல்லக்கில் ஏறும் பட்டங்கள்' என்ற தொகுப்பைக் கொண்டு வந்த பரக்கத் அலி கவி'தா' என்ற இதழை நடத்தினார். ஒவ்வொரு இதழுக்கும் இடையில் போட்டி கடுமையாக இருந்தது. எங்கள் மனசு எல்லாப் பக்கமும் நல்ல பெயரைப் பெற்றது. 

வலையில் எழுத ஆரம்பித்த போது கவிதை, ஹைக்கூ, மனதில்பட்டது, சிறுகதைக்கென தனித்தனியாக வலைப்பூ ஆரம்பித்து எழுத ஆரம்பித்தேன். பின்னர் சில நண்பர்கள் ஒரே இடத்தில் பதியுங்கள் எதற்காக இத்தனை வலைப்பூக்கள் என உரிமையுடன் சொன்னார்கள். அவர்கள் சொன்னதும் சரியெனத் தோன்ற எல்லாவற்றையும் எழுத மனதில்பட்டதை எழுத பயன்படுத்திய எனக்குப் பிடித்த பெயரான மனசை பயன்படுத்திக் கொண்டேன். மனசு எனக்குள் எத்தனையோ இன்பத்தை விதைத்த பெயர். கல்லூரியில் கையெழுத்துப் பிரதியாய் ஆரம்பித்து இன்று எனது வலைப்பூவாய் வாசம் வீசிக்கொண்டிருக்கிறது 'மனசு'.

கல்லூரியில் படிக்கும் போது பத்திரிக்கைகளில் கதை, கவிதை என எழுதி வெளிவரும் போது கிடைத்த சந்தோஷத்தைவிட வலைப்பூவில் எழுதும் போது அதன் நிறைகுறைகளை அப்போதே நண்பர்கள் சுட்டிக் காட்டுவது மிகுந்த சந்தோஷத்தைக் கொடுக்கிறது. எழுதும் எழுதுக்கு உடனுக்குடன் நண்பர்களால் அங்கீகாரம் கிடைப்பது என்பது மிகப் பெரிய பாக்கியமே. அந்தப் பாக்கியத்தைக் கொடுத்தது இந்த வலைப்பூ உலகம் என்பது சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை.

வலைப்பூவில் எழுத ஆரம்பித்த உடன் கொஞ்ச நாட்களாக விட்டு விலகி இருந்த சிறுகதைகளை எழுத ஆரம்பித்தேன். வலையில் பதிந்து போக எழுதிய மொத்தக் கதைகள் 100க்கு மேல் போய்விட்டது. கவிதைகள், ஹைக்கூ என எழுத்து நீண்டு இருப்பது மிகுந்த மகிழ்ச்சியே. ஆரம்பத்தில் சாதாரணமாக எழுத ஆரம்பித்து தற்போது எங்கள் பக்க பேச்சு வழக்கில் கதைகளை எழுதும் போது கிடைக்கும் பாராட்டுக்கள் அதிகமாகவே தெரிகிறது. எல்லாம் சாத்தியமானது வலை நட்புக்களால்தான்...

வலைப்பூவில் எழுத காரணமாய் இருந்த என் இனிய நண்பன் மோ.கணேசனுக்கு என் மனமார்ந்த நன்றி. மேலும் இந்தக் காலகட்டத்தில் வலைச்சரத்தில் எனக்கு இரண்டு முறை ஆசிரியர் பொறுப்புக் கொட்டு என்னை பட்டை தீட்டிக்கொள்ள... வலையுலகுக்கு என்னை பிரகாசமாக தெரிய வைக்க உதவிய எங்கள் ஐயா திரு.சீனா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. ஐயா அவர்கள் எங்கள் குடும்ப நண்பராக குடும்ப விழாக்களில் கலந்து கொள்கிறார் என்றால் அது இந்த வலைப்பூ கொடுத்த மதிப்பான உறவு என்று நினைக்கும் போது மனம் சந்தோஷத்தில் குதிக்கிறது.

எனது எழுத்துக்களை வாசித்து நிறைகுறைகளைச் சுட்டிக் காட்டும் அம்மா, அக்கா, அப்பா, ஐயா, அண்ணன், தம்பி, தங்கை, சார், நண்பன், தோழன் என எத்தனையோ உறவுகளைக் கொடுத்தது இந்த வலைப்பூ. என்னில் இருந்து என்னை இயக்கும் எனது அன்பு நட்புக்களுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள். தொடர்ந்து தங்களது மதிப்புமிக்க கருத்துக்களைச் சொல்லி எனது எழுத்துக்களை மேம்படுத்துங்கள் உறவுகளே... இந்த இனிய உறவு வாழ்நாளெல்லாம் அன்போடு தொடரட்டும்...

சில சமயங்களில் வலைப்பூவை விட்டு விலக நினைத்து ஒதுங்கினாலும் உங்கள் அன்பு மட்டுமே அதற்கு அணை போட்டு மீண்டும் எழுதத் தூண்டுகிறது. எழுத மட்டுமில்லாமல் எத்தனை விதமான எழுத்துக்களை (சு)வாசிக்கவும் கொடுத்து வைத்திருக்கிறது என்று நினைக்கும் போது உண்மையிலேயே அளப்பரிய சந்தோஷம் மடை திறந்த வெள்ளமென கரை புரண்டு ஓடுகிறது.

என்னைத் தொட்டுத் தொடரும் உரிமையான 280 நட்புக்களுக்கும், தொடராவிட்டாலும் வாசிக்கும் எண்ணற்றா நட்புக்களுக்கும் என் அன்பான வணக்கங்களும் நன்றிகளும் உரித்தாகுக.

ஆமாம்... எதற்காக இம்புட்டு பெரிய நன்றிப் பகிர்வுன்னு பார்க்கிறீங்களா? மனசு வலைப்பூவில் இது எனது 500வது பகிர்வு. மொத்தத்தில் இது நான்கு வலைப்பூவிலுமாகச் சேர்த்து 695வது பகிர்வு. இதெல்லாம் எனக்குள் சாத்தியப்பட காரணம் நீங்கள் மட்டுமே.



படங்கள் உதவிய கூகிளுக்கு நன்றி.
என்றும் நன்றியுடன்....
-'பரிவை' சே.குமார்.

ஞாயிறு, 9 செப்டம்பர், 2012

மனசின் பக்கம்: 201வது பதிவை நோக்கி...



எல்லாருக்கும் வணக்கம்.
நான் வலைப்பூ ஆரம்பித்த போது ஆர்வக்கோளாறில் ஹைக்கூ, கவிதை, சிறுகதை, எல்லாம் எழுத என நான்கு வலைப்பூ அரம்பித்து எழுதி வந்தேன். ஒரு கட்டத்தில் எல்லா வலைப்பூவையும் நடத்துவது எளிதல்ல என்பதால் எல்லாத்தையும் மனசு வலைப்பூவில் மட்டும் எழுத ஆரம்பித்தேன். மனசில் இதுவரை 199 பதிவுகள் போட்டாச்சு இது 200-வது பதிவு. மொத்தத்தில் இது (நான்கிலும் சேர்த்து) 395வது பதிவு. எனது வலைப்பூவில் நான் கிறுக்குவதை படித்து கருத்துச் சொல்லும் நண்பர்களுக்கும்,  ஐயா, அம்மா, அண்ணன், அக்கா, தம்பி, தங்கை, தோழன், தோழி என என் மனசை பின்தொடரும் 209 பேருக்கும் தனித்தனியாக நன்றி சொல்லும் மனநிலையில் நான் இப்போது இல்லாத காரணத்தால் அனைவருக்கும் ஒட்டு மொத்த நன்றியை உரித்தாக்குகிறேன். உங்களின் ஆக்கப்பூர்வமான கருத்துக்கள் எனது எழுத்தை வளப்படுத்தி வருகின்றன என்பது 100% உண்மை. இந்த வலைப்பூவின் மூலமாகவும் முகப்புத்தகத்தின் மூலமாகவும் எனக்கு கிடைத்திருக்கும் உறவுகளான உங்கள் முகம் தெரியாவிட்டாலும் அந்த பாசமிக்க மனம் எனக்கு நன்றாக தெரிகிறது. உங்கள் நட்பு என்றும் தொடர வேண்டும் என்று இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.


**********

டந்த பதினைந்து நாட்களாக பொக்காலி அம்மா வந்து தனிமையில் கஷ்டப்பட்ட போது மனைவி குழந்தைகளின் அருகாமை எவ்வளவு முக்கியம் என்பதை உணர முடிந்தது. அடுப்புக்கிட்ட போகக்கூடாது என்று அம்மாவும் மனைவியும் ஊரில் இருந்து சொல்லிக் கொண்டே இருந்தாலும் அறை நண்பர்கள் சிறு உதவிகள் செய்தாலும் அம்மை வந்த உடம்போடு நானே கஞ்சி வைத்து குடித்த நாட்கள் மறக்கமுடியாதவை. இந்தக் கஷ்டம் என் எதிரிக்கு கூட வரக்கூடாது என்றுதான் வேண்டினேன்.  அதிகமாக அம்மை வராமல் போனதால் கொஞ்சம் கஷ்டம் குறைந்தது. இப்போ நான் எழுந்து வியாழன் அன்றுதான் வேலைக்குப் போனேன். நேற்று மனைவிக்கு டெங்கு காய்ச்சல் வந்து மதுரையில் மருத்துவமனையில் வைத்து பார்த்து வருகிறார்கள். மாமா வீடு மதுரை என்பதாலும் தற்போது வைத்திருக்கும் மருத்துவமனை மாமா கடைக்குப் பக்கத்தில் இருப்பதாலும் யார் பார்ப்பது என்ற கவலையில்லை. மாமாவின் நண்பரான மருத்துவரும் பரிசோதனைகள் செய்து இது ஆரம்பநிலைதான் பயப்பட வேண்டியதில்லை என்று சொல்லியிருக்கிறார். நேற்றுக் காலையில் அழுதபடி பேசிய மனைவியிடம் மாலையில் பேசும் போது சற்று நல்ல மனநிலையில் பேசினார். மனசுக்கு இதமாக இருந்தது.

**********

ம்மை வந்திருந்த போது எனக்காக வருந்தி அழுதது மனைவி, குழந்தைகள் மற்றும் எங்கள் ஊரில் இருக்கும் மாரி அம்மன் கோவிலில் தினமும் தண்ணீர் ஊற்றி தீபம் ஏற்றி கும்பிட்ட என் அம்மா ஆகியோர்தான். ஒரு சிலரைத் தவிர மற்ற உறவுகள் எல்லாம் இங்கிருப்பவர்களையும் சேர்த்து போன் பண்ணினால் வந்து விடும் என்று நினைத்தார்கள் போல முதல் இரண்டு மூன்று நாட்கள் போனே பண்ணவில்லை. அப்புறம்தான் போன் பண்ணினார்கள். ஆனால் முகம் தெரியாமல் பாசம் கொண்ட உறவுகள் எல்லாம் எப்படியிருக்கு என்று தினமும் மின்னஞ்சல் மற்றும் முகநூல் வழியாக கேட்டுக் கொண்டே இருந்தார்கள். உண்மையில் இந்த அன்புக்கு நிகர் ஏதும் இல்லை. உங்களது இந்த அன்புதான் எனக்கு ஆறுதலாக இருந்தது என்றால் மிகையில்லை.

**********

டந்த சில மாதங்களுக்கு முன்னர் இங்கு காருக்குள் பார்க்காமல் விட்டுச் சென்ற குழந்தைகள் இறந்த செய்தியை பத்திரிக்கையில் பார்த்தபோது  அவர்களது பெற்றோர்களின் அலட்சியம் மிகவும் வருத்தப்பட வைத்தது. ஆம் வெளியில் சென்றுவிட்டு வீட்டுக்கு வந்தவர்கள் காரை பார்க் செய்துவிட்டு வீட்டுக்கு சென்று குழந்தையை காணோம் என்று தேடி கடைசியில் காரில் வந்து திறந்து பார்த்தபோது தூங்கிய குழந்தையை தூக்காமல் காருக்குள் விட்டு விட்டு கார் கண்ணாடிகளை ஏற்றிவிட்டு கதவை சாற்றியதால் மூச்சடைத்து இறந்த நிலையில் கண்டு அழுதிருக்கிறார்கள். அழுது என்ன பயன்... இளமொட்டு கருகிவிட்டதே. இதே போல் மூன்று நிகழ்வுகள் அடுத்தடுத்து நடந்தது... என்ன கொடுமை பாருங்கள்.

**********



சிவகாசி வெடி விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கான மருத்துவ உதவிக்கு பணம் இருந்தும் மனம் இல்லாதவர்கள் யாரும் செய்ய முன்வராததை மலையாள நடிகர் மம்முட்டி செய்திருக்கிறார். அவரின் இந்தச் செயலுக்காக அவர் நல்லாயிருக்கணும் என்று சொல்வதில் தப்பேயில்லை. இங்க கோடிகளை சம்பளமாக வாங்கும் நம்ம நடிகர்கள் முடியாமல் கிடந்தால் மொட்டை அடிக்கிறோம், வேல் போடுறோம், அவர்களின் படங்களுக்கு பால் அபிஷேகம் பண்றோம். அவர்களும் உங்களுக்கு நான் என்ன கைமாறு செய்யப் போறேன் என்று அறிக்கை விடுகிறார்கள். அம்புட்டுத்தான் அதன் பிறகு அடுத்த படத்துக்கான வேலைக்குப் போய் விடுகிறார்கள். தமிழர்களே இனிமேலாவது நடிக, நடிகைகள் மேல் இருக்கும் அதீத பாசத்தைக் குறைத்துக் கொண்டு குடும்பத்தைப் பாருங்கள். உங்களுக்காக வருந்த உங்கள் குடும்பமும் நட்பும் மட்டுமே... நீங்கள் தலைவா என்று சாஷ்டாங்கமாக தொழும் நடிகர்கள் அல்ல என்பதை உணருங்கள்.

**********

மிழகத்தில் பேருந்து விபத்து என்பது வெகு சாதாரணமாகிவிட்டது. சமீபத்தில் காஞ்சிபுரத்துக்கு அருகில் நடந்த விபத்தில் 9 பேருக்கு மேல் இறந்தார்கள். அதில் எனது நண்பரின் தம்பியும் ஒருவர். திருமணமாகி 9 மாதங்கள் ஆன நிலையில் மனைவியை ஆடிக்கு அம்மா வீட்டில் விட்டிருந்தவர் கூட்டிக் கொண்டு திரும்பி வர, பேருந்தில் இடமில்லாததால் மனைவியை பின்புறம் அமர வைத்துவிட்டு அவர் முன்புறம் அமர்ந்திருக்கிறார். விபத்தில் சம்பவ இடத்திலேயே அவரது உயிர் பிரிந்து விட்டது. காயங்களுடன் தப்பிய அவரின் மனைவி, கணவன் இறந்தது அறியாமல் தீவிர சிகைச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். வேதனையான விஷயம்தானே... இதை எனக்கு மிக நெருக்கமான ஒருவர் சொன்னபோது துடித்துப் போனேன். விபத்துக்கள் தவிர்க்கப்பட வேண்டும்.

**********

என்னையும் வலையில் எழுத வைத்து என் எழுத்துக்களை உங்கள் பின்னூட்டம் என்னும் உந்து சக்தியால் மெருகேற்றி வரும் என் சொந்தங்களுக்கு இந்த 200வது பதிவின் மூலம் மீண்டும் ஒருமுறை நன்றி சொல்லிக் கொள்கிறேன். 

நன்றி பதிவுலக சொந்தங்களே...


-'பரிவை' சே.குமார்.

திங்கள், 20 ஜூன், 2011

உறவுகள் சுகந்தானே...



வணக்கம். எல்லாரும் நலம்தானே..? சில மாதங்களுக்குப் பிறகு மீண்டும் உங்களுடன் இணைவதில் மகிழ்ச்சி. உடல் நலம் மற்றும் சில காரணங்களால் நீண்ட விடுமுறை. நலம் விசாரித்த நட்புக்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். உடல் நலம் தொடர்பாக ஊருக்குப் போய் வந்த நிலையில் மனம் எதிலும் நாட்டமின்றி இருக்கின்றது.

சில மாதங்களுக்கு முன்பு வரை தினமும் அல்லது இரண்டு நாட்களுக்கு ஒருமுறை என்று எழுதி வந்த நான் இனி அடிக்கடி எழுதுவேன் என்று தோன்றவில்லை... அப்படி ஒரு எண்ணமும் எனக்குள் உதிக்கவில்லை. எனவே இனி இடைவெளியின் பின்னணியில் இயன்றவரை தொடருவேன். விரைவில் வருகிறேன்... எனது படைப்புடன்...



நட்புடன்,

சே.குமார்.

வெள்ளி, 12 நவம்பர், 2010

வளந்துட்டோமுல்ல...

கல்லூரிக் காலத்தில் கவிதை எழுதுகிறேன் என்ற பேரில் எதையாவது கிறுக்குவதும் அதைப் படித்த நண்பர்கள் ஆஹா... ஓஹோவென புகழவதும் என ஆரம்பித்த என் கிறுக்கல்கள் கல்லூரி கையெழுத்துப் பிரதிகளில் அரங்கேறியபோது எதையோ சாதித்துவிட்டோம் என்ற சந்தோஷம் மனசுக்குள்...

எங்கள் பேராசானின் நட்பு கிடைத்த போது அவரது எழுத்துக்களை வாசிக்கும் வாய்ப்புக்கள் கிடைத்தன. அவற்றைப் படித்த நான், எழுத்தென்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்... நாம் எதையோ கிறுக்கிவிட்டு கவிதை என்கிறோம்... அதையும் நண்பர்கள் சொல்லமுடியாமல் புகழ்கிறார்களே என்ற உண்மையை அப்போதுதான் உணர்ந்தேன்.

ஒரு மாலை வேளை எனது பேராசானுடன் கதைகள் பேசியபடி தேவகோட்டை திருப்பத்தூர் சாலையில் நடந்து சென்றபோது, எனது நண்பன் முருகன் எழுதிய கதை குறித்த விவாதம் வந்தது.. கதையின் நிறைகுறைகளை ஐயா சொல்லி இப்படி எழுதியிருந்தால் இன்னும் நல்லாயிருக்கும் என்று விளக்கமும் கொடுத்தார். எதுவும் பேசாமல் அவர்களின் உரையாடலை மட்டும் கேட்டுக் கொண்டு வந்து கொண்டிருந்தேன்.

அப்போது ஐயா 'என்ன பரியன்வயல் பண்ணையாரே (ஆரம்பத்தில் அப்படித்தான் அழைப்பார்... பின்னர் தம்பி... அப்புறம் குமார்) நீங்களும் எழுதலாமே' என்றார். 'நானா... இல்லய்யா எனக்கெல்லாம் கதை எழுத வராது...' என்று ஜகா வாங்கினேன். அவர் விடாமல் 'முயற்சி பண்ணினா வருமுய்யா... என்ன கம்ப சூத்திரமா... இது' என்றார். 'ஐயா வயல்வேலைகள் என்றால் செய்துவிடுவோம்... இதெல்லாம்... அதுக்குத்தான் முருகன் இருக்கானே... அப்புறம் நா வேற எழுதனுமா?' என்றேன். அந்த விவாதம் அத்துடன் முற்றுப் பெற்றது.

சில தினங்களுக்குப் பிறகு ஒரு மாலை நானும் முருகனும் கல்லூரியில் இருந்து வீடு திரும்பும் போது அன்று ஐயா கேட்ட கேள்வியை முருகன் கேட்டான். 'அட ஏண்டா... நீ வேற அந்தளவுக்கெல்லாம் இந்த அறிவுக்கு எட்டாது... நீ தமிழ் படிக்கிறே... இலக்கியமா எழுதுறே... நா எங்கிட்டு எழுதுறது...' என்றேன். 'சும்மா எழுதிப்பாரு ஐயாகிட்ட கொடுப்போம்.. அவரு என்ன சொல்றாருன்னு பாக்கலாம்...' என்று தூபம் போட்டான். சரி என்று நானும் ராத்திரி உக்காந்து 'இதுதான் காதலான்னு...' அப்பவும் பாருங்க நல்ல கதையா எழுதாம காதல்கதைதான் வந்துச்சி... நாலு பக்கத்துக்கு கட்டுரை மாதிரி ஆரம்பத்துல டீக்கடையில போடுற காதல் பாட்டோட ஆரம்பிச்சு... முடிவுல சுபம் போடுறதுக்கு முன்னால காதல் பாட்டோட முடிச்சாச்சு.

முருகன் வாங்கி பாத்துட்டு 'சூப்பரா இருக்குடா...' அப்படி இப்படி ஓவரா பில்டப் கொடுத்து நம்மளை ஒரு மாய வளையத்துக்கு கொண்டு பொயிட்டான். ஐயாகிட்ட கொண்டு போய் நீட்டினேன். 'என்னய்யா இது... கடுதாசி மாதிரி...' அப்படின்னு வாங்கினார். 'நான் கதை எழுதியிருக்கேன்னு மெதுவா இழுத்தேன். 'அட பண்ணையாரு... கதை எல்லாம் எழுத ஆரம்பிச்சாச்சா' அப்படின்னு வாங்கி படிச்சாரு... நான் அவரின் நெற்றிச் சுருக்கங்களை படித்தேன். ' காதல் கதைதான் வருது... பரவாயில்லை... நல்லாயிருக்கு... நிறைய எழுதுங்கள்...' என்று சொன்னார்.

அதன்பின் வசிஷ்டரின் வாக்கு கிடைத்த மகிழ்ச்சியில் கதைகள் என்ற பெயரில் சில அபத்தங்கள் அரங்கேறின. சில நல்லாயிருக்கு என்றும் சில சரியில்லை என்றும் ஐயாவால் அங்கீகரிக்கப்பட்டன. எனது சின்னம்மா பையன், என் சக வயது சகோதரன், நண்பன் பழனியப்பன் அருமையாக கதை எழுதுவான். அவன் கதைபூமியில் பாரத் வெற்றி குமார் என்ற பெயரில் கதைகள் எழுதி வந்தான். அந்த சமயத்தில் ராணுவ வீரனின் மனைவியை மையமாகக் கொண்டு நான் எழுதிய கதைக்கு ஐயா 'பூமாரங்' என்று பெயரிட தினபூமி -கதைபூமிக்கு அனுப்பி வைத்தேன். அதை முதல் பக்கத்தில் 'கெட்டும் பட்டிக்காடு சேர்' என்ற தலைப்பில் வெளியிட்டிருந்தார்கள். நான் அடைந்த சந்தோஷத்திற்கு அளவே இல்லை. அதன் பின் கதைபூமியில் எனது கதைகள் அடிக்கடி வந்தன. படம் கொடுத்து கவிதை எழுதச் சொல்வார்கள். அதிலும் எனது கவிதைகள் வாராவாரம் இடம் பெற்றன.

இன்னும் ஞாபகம் இருக்கிறது... மூன்றாம் ஆண்டு படிக்கும்போது 'கட் அவுட் நிழலுக்கு கீழே' என்று நான் எழுதி கவிதை ஐயாவுக்கு ரொம்ப பிடித்த காரணத்தால் 'தாமரை' இதழுக்கு அவரது செலவில் அனுப்பிவைத்தார். பொன்னீலன், கவிஞர் மீரா, தனுஷ்கோடி, ஐயா என்று ஜாம்பவான்கள் எழுதும் பத்திரிக்கையில் நம்ம படைப்பா... சான்சே இல்லை என்று நினைத்திருந்தேன்.

கல்லூரி விடுமுறை என்பதால் நண்பர்களுடன் தேவகோட்டை சரஸ்வதியில் நீண்ட நாட்களாக பார்க்க வேண்டும் என்று நினைத்த ரத்தக் கண்ணீர் படம் பார்த்துவிட்டு தியேட்டரை விட்டு வெளியே வரும்போது ரிசல்ட் வந்துவிட்டதாக ஒரு நண்பர் சொல்லிச் சென்றார். கல்லூரிக்கு சென்றால் எங்கள் பேராசிரியர் கே.வி.எஸ். அவர்கள் ஒவ்வொருவரின் மார்கையும் சொல்ல குறித்துக் கொண்டோம். எனக்கும் வாசிக்கிறார்... 82, 89,78, 87,29 என்றார். எனக்கு தூக்கி வாரிப் போட்டது. இதுவரை அரியரே இல்லை... இந்த செமஸ்டரில் எப்படி... பேசாமல் நின்னேன்...

'என்ன குமார் என்னாச்சு... நல்லாத்தானே எழுதுனீங்க...' என்றார் கே.வி.எஸ். 'ஆமா சார்.... எப்படின்னு தெரியலை...' 'சரி... கவலைப்படாதீங்க மறுகூட்டலுக்கு விண்ணப்பம் போடலாம்' என்றார். 'சரி' என்று கிளம்ப, ஐயாவிடம் இருந்து 'தம்பி குமார்' என்ற அழைப்பு. அவரிடம் சென்றால் ' தாமரை புத்தகத்தைக் கொடுத்து ' பிரிச்சுப் பாருங்க' என்றார். பார்த்தால் கவிதையின் கீழே 'ஒரு கல்லூரி மாணவனின் கவிதை' என்ற குறிப்புடன் எனது கவிதை இரண்டு பக்கங்களுக்கு படத்துடன் வந்திருந்தது. . கவிதை வெளியானதற்கு சந்தோஷப்படுவதா... முதல் அரியருக்காக கண்ணீர் வடிப்பதா தெரியவில்லை.

அதன் பிறகு நிறைய கிறுக்கினேன்.. கல்லூரி முடிந்து கணிப்பொறி நிலையம் நடத்திய போதும், சென்னையில் வேலை பார்த்த போதும் நிறைய எழுதினேன்... தினபூமி, பாக்யா, மாலைமலர்-தேன்மலர், உதயம், வாசுகி,ராணி, தினமணிக்கதிர், தினத்தந்தி குடும்பமலர், தங்கமலர், மங்கையர் சிகரம் என எனது எழுத்துக்கள் அச்சில் ஏறி இருக்கின்றன. அபுதாபி வந்த புதிதில் எழுத்துக்கான நேரம் குறைந்தது. சில மாதங்கள் எதுவும் எழுதாமல் இருந்தேன்.

ஒரு முறை நண்பனின் வலைப்பூவைப் பார்த்து அதுபோல் நாமும் ஆரம்பித்தால் என்ன என்ற யோசனையில் என் சென்னை நண்பன் தமிழ்க்கவிதைகள் மோகனனின் உதவியுடன் கிறுக்கல்கள் என்ற வலைப்பூ ஆரம்பித்து ஹைக்கூ வடிவ கவிதைகளை மட்டும் எழுதினேன். ஆர்வக்கோளாறில் பெரிய கவிதைகளுக்கு ஒன்று, சிறுகதைக்கு ஒன்று, மனதில் பட்டதை எழுத ஒன்று என நான்கு வலைப்பூவினை ஆரம்பித்து திரு. ஜாக்கி சேகர் அண்ணா சொன்னது போல நேரம் விழுங்கியின் முன் இரவு பகல் பாராது எதையாவது கிறுக்கினேன். அலுவலகம் செல்லுமுன்... வந்தபின்... வலைப்பூவே வாழ்க்கையானது.

எனது கிறுக்கல்களை வாசித்த நண்பர் நாடோடி இலக்கியன் எனது கவிதை குறித்து அவரது பக்கத்தில் பகிர்ந்திருந்தார். வேளைப்பளூ, சோர்வு எல்லாம் சேர்ந்து தாக்க எழுதுவது குறைந்தது... அந்த சமயத்தில் நண்பர் பலாபட்டறை சங்கர் உள்பட சிலர் ஒரே வலையில் எழுதுங்கள்... பின் தொடர சிரமமாக இருக்கிறது என்று சொல்லியிருந்தார்கள். அதன்படி சென்ற வருடம் இதே அக்டோபர் மாதம் 13ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்ட மனசு வலைப்பூவில் மட்டும் எழுதுவது என்று முடிவெடுத்து கலவையாய் இங்கு எழுத ஆரம்பித்தேன். நண்பர்கள் வட்டமும் நாளுக்கு நாள் பெருகியது.

இந்த ஒரு வருடத்தில் உங்கள் நட்பைத்தவிர நான் பெரிதாக எதையும் சாதித்து விடவில்லை. எனது எழுத்துக்கு கிடைத்த அங்கீகாரமாய் திரு.சீனா ஐயா அவர்களின் அழைப்பின் பேரில் ஒரு வாரம் ஆசிரியாராய் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. அந்த ஒரு வாரம் எனது வாழ்வில் மறக்கமுடியாத தருணங்கள்.

எனது படைப்புக்களை படிக்க முடியவில்லை என்பதால் எனக்கு மின்னஞ்சல் அனுப்பி உங்கள் படைப்பை பகிர்ந்ததும் எனக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள் நான் தவறாமல் படிக்க நினைக்கிறேன் என்று சொன்ன அன்புச் சகோதரி ஆனந்தி, எனக்கு உடல் நலமில்லை என்ற போது பின்னூட்டமிட்டு நலம் விசாரித்த நட்புக்கள் என இந்த ஒரு வருடத்தில் நான் பெற்ற உறவுகள் அதிகமே.

'நடைமுறை வாழ்க்கையுடன் பரிச்சயப்பட்டு எழுதுங்கள்' என்று எனது ஐயா அடிக்கடி சொல்வார். நான் எழுதும் கவிதைகள் எப்படியோ தெரியவில்லை பெரும்பாலான எனது சிறுகதைகள் நடைமுறை வாழ்க்கையோடு பரிச்சையப்பட்டுத்தான் இருக்ககின்றன என்று நினைக்கிறேன். இதை ஐயாவும் பலமுறை சொல்லியிருக்கிறார்.இந்தமுறை ஊருக்கு சென்றிருந்த போதுகூட உங்கள் கதைகளை புத்தகமாக்குங்கள் என்றார். 'ஐய்யய்யோ... அந்தளவுக்கெல்லாம் பெரிசா எதுவும் எழுதவில்லை' என்று சொல்லிவிட்டு வந்தேன்.

என் ஆறு வயது மகளுக்கு அப்பாவின் கதை புத்தகத்தில் வந்திருக்கு என்று சொல்லிக் கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி... சில மாதங்களுக்கு முன் மங்கையர் சிகரத்தில் கதை வந்த போது எங்கள் தெருவில் இருக்கும் எல்லாரிடமும் 'எங்கப்பா கதை வந்திருக்குப்பு' என்ற புத்தகத்தை காட்டி மகிழ்ந்தார்களாம். சில சமயங்களில் போன் செய்யும் போது 'அப்பா எதாச்சும் எழுதுங்கப்ப புத்தகததில...' என்பார் மழலையாய்... நான் சிரித்துக் கொள்வேன். அவர் எனது வாசகர் அல்ல... ஆனால் என்னை சுவாசிப்பவர்... அவருக்கு அப்பா பத்தி எதாவது பேசணும் அதுக்காகத்தான்.

சரிங்க... என்னடா இவன் என்னமோ பேசிக்கிட்டு போறானேன்னு நினைக்கிறீங்களா நாளைக்கு முதல் பிறந்தநாள் என் மனசு வலைப்பூவுக்கு... எல்லாரும் வந்துடுங்க... அபுதாபி கார்னிச்ல வச்சு கேக் வெட்டுவோம்.... மறந்துடாதீங்க... நீங்கதான் கைய பிடிச்சு கூட்டிக்கிட்டு போகணும் ஆமா சொல்லிப்புட்டேன்.

கதிர் அண்ணன் தனது சுயவிவரத்தில் 'நகரத்து மண்ணில் பாய்ந்த கிராமத்து வேர்' என்று எழுதிருப்பது போல கிராமத்துக் காற்றை சுவாசித்து பாலைவனப் பூமியில் வாழும் நான் இரண்டாம் வருடத்திலும் உங்கள் நட்போடும் அன்போடும் தொடர நினைக்கிறேன்.

உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.


ரொம்ப முக்கியமுங்க...:

நிறைய நண்பர்கள் நான் வாக்களிக்கவில்லை என்று மின்னஞ்சல் அனுப்புகிறார்கள். அவர்களுக்கெல்லாம் ஒன்று சொல்லிக்கொள்கிறேன். இண்ட்லியில் எனது பெயர் சே.குமார் என்றிருக்காது... 'shruvish' என்றிருக்கும் நண்பர்களே. நல்லா பாருங்க நான் கண்டிப்பாக வாக்களித்திருப்பேன். ஆமா... அப்புறம் சண்டைக்கு வரப்படாது... சொல்லிப்புட்டேன்.


என்றும் நட்புடன்,
-'பரிவை' சே.குமார்.

வியாழன், 28 அக்டோபர், 2010

மனசின் பக்கம் 28/10/2010

 சிவகெங்கை சோழபுரம் தந்த எங்கள் சித்தப்பு கருவேல நிழல் பா.ரா. அவர்கள் இல்லத் திருமண விழாவிற்கு சென்று வந்த சந்தோஷத்தைக் கொடுத்தது மாதவராஜ் அண்ணன் அவர்களின் பகிர்வும் போட்டோக்களும். அதில் அண்ணன் அவர்களை சித்தப்பா, தங்கையிடம் அறிமுகம் செய்யும்போது மாதவராஜ் என்றதாகவும் தங்கையும் அண்ணனை முன்பே அப்பா மூலம் அறிந்திருந்ததால் புன்சிரிப்புடன் பேசியதாகவும் தெரிவித்திருந்தார்.

வலையுலக நட்பு ஒரு பந்தமாக எப்படி இறுகிக்கிடக்கிறது என்பதற்கு இது ஒன்றே போதும். மேலும் திருமணப் போட்டோக்களை அகநாழிகை வாசு அவர்களும், பாசத்துடன் கூடிய நெகிழ்ச்சியான பதிவை சிவாஜி சங்கர் அவர்களும் பகிர்ந்துள்ளனர்.

இவர்களைப் போல் பலர் அந்தத் திருமண நிகழ்வைப் பகிர்ந்துள்ளனர். குறிப்பாக கவிதையில் வாழ்த்துச் சொன்ன தேனக்கா, ராகவன் அண்ணா எல்லோரிடமும் அன்புடன் பாசமும் பந்தமும் கலந்திருந்தது. நான் முன்பு ஒருமுறை எழுதியதுபோல் வலை நட்பை வாழ்நாளெல்லாம் கொண்டு செல்வோம்.

*****

எனக்கு சில நாட்களுக்கு முன் கல்லூரியில் நாங்கள் படிக்கும்போது படித்த அண்ணன் ஒருவர் புதுக்கோட்டையில் இருந்து பின்னூட்டமிட்டிருந்தார். எங்கள் ஆசானில் அரவணைப்பில் நாங்கள் எல்லாம் ஒன்றாக பாரதி விழாக்கள், கவியரங்கம் என எல்லாவற்றிலும் இணைந்திருந்தோம். அதை நினைவு கூர்ந்து என்னை நீங்கள் யார் என்று கேட்டிருந்தார்கள்.

பின்னர் நான் மின்னஞ்சலில் உங்களுடன் பழகியவன்தான் நான் என்பதையும் அந்த நாள் நினைவுகள் சிலவற்றையும் பகிர்ந்த உடன் மிகவும் மகிழ்வுடன் பதிலனுப்பினார். எங்கள் நட்பு நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் பூக்க இணையம் உதவியது.

*****


2010 – உலகின் தலை சிறந்த ஹீரோவாக ஒரு தமிழரை உருவாக்குவோம் வாருங்கள். நாம் திரை நாயகர்களுக்கு பாலாபிஷேகம், மதுக்குடம், பால்க்குடம் எல்லாம் எடுப்போம். அவர்கள் உண்மையில் ரியல் நாயகர்கள்தானா? கண்டிப்பாக இல்லை... இங்கே... மதுரையில் 29 வயதேயான இளைஞர், உலகப்புகழ் பெற்ற CNN இணையதளத்தில் உலகின் தலை சிறந்த ரியல் ஹீரோக்களில் முதல் பத்தில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.

அதற்கு காரணம்... அவருடைய 21 வயதில் சுவிட்சர்லாந்தில் வேலை கிடைக்க, தனது பெற்றோரிடம் சொல்லிக் கொள்ள வந்தவரின் வாழ்க்கை ஒரு மனநலம் குன்றியவர் மாற்றிவிட்டார். ஆம்... ஒரு மனநலம் குன்றிய வயதான மனிதர் அவரது மலத்தையே உணவாக உண்ணும் அவலத்தைக் கண்டு அவரை சுத்தப்படுத்தியதுடன் அவருக்கு உணவும் வாங்கி ஊட்டியிருக்கிறார். இன்றும் இவரது சேவை தொடர்கிறது மதுரையை சுற்றி நூறு கிலோமீட்டர் பரப்பளவில் கண்ணில் படும் இது. அன்று முதல் மனநலம் குன்றியவர்களுக்க்காக இவர் தன் வாழ்கையை முழுமையாக அர்பணித்துள்ளார்.

இந்த மனிதரின் பெயர் நாராயணன் கிருஷ்ணன். தலை சிறந்த மனிதரை தேர்ந்தெடுக்கும் வாக்குப்பதிவு வலையில் நடக்கிறது. வாக்குப் பதிவுக்கான கடைசி நாள் : 25/11/2010. எதற்காகவோ மணிக்கணக்கில் நம் நேரத்தைச் செலவழிக்கும் நாம் ஒரு வாக்கிற்காக சில நிமிடங்களை செலவழிக்கலாமே.

நான் என் வாக்கைப் பதிந்துவிட்டேன் நீங்களும் வாக்கைப் பதிய இங்கே சொடுக்குங்கள்.


இது குறித்த விரிவான இடுகைகள் நம் நண்பர்கள் பலரின் வலைப்பூவில் வந்துள்ளது. சகோதரி கௌசல்யா அவர்களின் பதிவைப் படிக்க....


*****




 சச்சின் மட்டும்தான் சதம் அடிப்பாரா... நாமளும் அடிச்சாச்சுல்ல... அதாங்க நம்ம நட்பு வட்டம் 100ஐ புடிச்சாச்சு... முகம் அறியாமல அம்மா, அப்பா, சித்தப்பா, சகோதரன், சகோத்ரி, நண்பன் என ஒரு அன்பு வளையத்துக்குள் நம்மை வரவைத்த வலைப்பூவில் என் உறவுகள் நான்கு வலையிலுமாக 200 தொட்டாலும் கடந்த சில மாதமாக வேலைப்பளூவின் காரணமாக மனசில் மட்டுமே எழுதுகிறேன். எனவே என் மனசைத் தொடரும் 100 உறவுகளுக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கங்களும்... நன்றியும்... தொடருங்கள் தொடரட்டும் நம் நட்பு என்றும் நட்போடும் சந்தோஷத்தோடும்....

-'பரிவை' சே.குமார்.

வியாழன், 20 மே, 2010

ஊருக்குப் போறேன்..!

அன்பான நட்புககு

இன்று மாலை நாற்பது நாள் விடுமுறையில் ஊருக்குப் போகிறேன்... அதற்காக கடந்த ஒரு வாரத்தில் அலுவலக பணிகள் அதிகம் செய்து வைக்க வேண்டிய நிலை. அதனால்தான் நண்பர்களுக்கு பின்னூட்டம் இடவோ, எனது பிளாக்கில் பதிவிடவோ முடியாத சூழல்.

இனி நாற்பது நாட்களும் என்னால் வலைக்குள் வரமுடியுமா என்பது தெரியவில்லை. நான் விடுமுறைக்கு விண்ணப்பித்து, கிடைத்த நாள் முதல் என் வரவை நாட்காட்டியில் மே-20 என்ற இடத்தை அம்மாவிடம் காட்டச் சொல்லி கலர் பென்சிலால் வட்டங்கள் இட்டு காத்திருக்கும் என் தங்கம் (ஸ்ருதி). ஒரு வருடமே ஆனாலும் என் முகம் ஞாபகத்தில் இல்லாவிட்டாலும் மழலையாய் அலைபேசியில் 'அ..ஆப்பா' என்றழைத்து முத்தமிடும் என் செல்லம் (விஷால்) , மற்றும் எனக்காக வாழும் என் அன்பு மனைவி இவர்களுடன் நாட்களை சந்தோசமாய் நிறைக்க இருப்பதால் அடிக்கடி வலைக்குள் வருவேன் என்பது இயலாத காரியம். வலைக்குள் வரும் பொழுது கண்டிப்பாக பின்னூட்டம் இடுவேன்.

அதுவரை பின்னூட்டம் இடுகிறேன் என்று படுத்தவோ.... பதிவிடுகிறேன் என்று உங்களை வதைக்கவோ செய்ய மாட்டேன் என்பதால் உங்கள் சந்தோஷத்தை சந்தோஷமாக அனுபவியுங்கள்.

என்னைத் தொடர்பு கொள்ள நினைக்கும் நண்பர்கள் 919659976250 என்ற எண்ணில் வெள்ளிக்கிழமை முதல் தொடர்பு கொள்ளலாம். காரைக்குடியிலும் தேவகோட்டையிலும் தான் அதிக நாட்கள் இருப்பேன் என்று நினைக்கிறேன்.



பாசங்களுடன்,

சே.குமார்.