எதற்கெடுத்தாலும்
குற்றம் சொல்லும் சுற்றம்
பூத்தது தவறா...
குமரியான சிறுமி..!
***
விடியலைத் தேடும்
பயணம்...
சோர்வாய் எரிந்தது
தெரு விளக்கு..!
***
மரம் நடுவிழா...
அமைச்சர் காருக்குப்பின்
ஊர்வலமாய் கார்கள்...
மாசுபட்டது காறறு...
***
கானகத்தில் மழை...
நனைந்த குருவிகளின்
சப்தத்தை கேலி
செய்தது மரங்கொத்தி
மரம் விழும் வரை..!
***
'அம்மா பசிக்குது'
அழுத குழந்தையை
அணைத்து அழுதாள்...
உடற்பசி அடங்கிய
திருப்தியில் உறங்கும்
கணவன்...
***
வலையுடன் நிற்பவனை
அறியவில்லை...
ஓடும் நீரில்
துள்ளும் மீன்..!
-------------
நட்பே வணக்கம்...
எனக்கு 'இலக்கியத்தேனீ' என்ற விருதினை அளித்து சந்தோஷப்பட்ட முனைவர் இரா.குணசீலன் அவர்களுக்கும், வலைமனையில் எனது தளத்தையும் அறிமுகம் செய்த அதீதம் இணைய இதழுக்கும் அதனை எனக்குத் தெரிவித்த திரு. எல்.கே மற்றும் நண்பர்களுக்கும், வலைச்சரத்தில் பலமுறை பலரால் அறிமுகமானாலும் ஒவ்வொரு முறை அறிமுகமாகும் போதும் அடையும் சந்தோஷத்திற்கு அளவேயில்லை... அந்த வகையில் சென்ற வாரம் என்னை அறிமுகம் செய்த சகோதரர் மாய உலகம் அவர்களுக்கும் உங்கள் அன்பின் முன்னால் என் நன்றி சிறியதுதான்... இருப்பினும் நன்றி மறப்பது நன்றல்ல என்பதால் நன்றி. (தனிப்பதிவாக சொல்ல ஆசைதான்... நேரமின்மை... பொறுத்துக் கொள்ளுங்கள் உறவுகளே...)
அலுவலகத்தில் எட்டு மணி நேர வேலைக்கான சம்பளத்தில் ஏறக்குறைய 15 மணி நேரப்பணி அதுவும் கணிப்பொறி முன்னால்...(சம்பளம் மட்டுமே... மற்ற சலுகைகள் இல்லை) என்ன செய்வது அடிமை வாழ்க்கை... எனவே மனவலியுடன் முதுகு வலியும் இம்சிக்கிறது. அதனால்தான் மனசு பொலிவிழந்து இருக்கிறது... விரைவில் மீண்டு வருகிறேன்...
-'பரிவை' சே.குமார்.