மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

ஞாயிறு, 26 ஏப்ரல், 2015

விழலுக்கு இறைத்த நீர் (முதல் பரிசு பெற்ற கதை)

(சேனைத் தமிழ் உலா நடத்திய சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு கிடைத்திருக்கிறது... இந்த சந்தோஷத்தை உங்களுடன் மகிழ்வுடன் பகிர்ந்து கொள்கிறேன். போட்டியை நடத்திய சேனை நிர்வாகத்தினருக்கும் பரிசு பெற்ற மற்ற எழுத்தாளர்களுக்கும் வாழ்த்துக்கள்...)

*******************************
தூக்கம் வராமல் படுக்கையில் புரண்டு கொண்டிருந்தார் நாகராஜ். அவருக்கு இப்பல்லாம் இரவில் தூக்கம் வருவதில்லை. படுத்ததும் அயர்ந்து தூங்க ஆரம்பிப்பவர் திடீரென விழித்துக் கொள்வார். அப்புறம் தூக்கம் அவ்வளவுதான். எப்பவும் கொஞ்ச நேரமாச்சும் தூங்குவார். இன்று தூக்கம் வரவேயில்லை... அதுக்கும் காரணம் இருந்தது... இரவு வாசலில் உக்கார்ந்து சாமிநாதனுடன் வெற்றிலை போட்டபடி பேசிக்கொண்டிருப்பது அவரது வாடிக்கை. இன்றும் பல விஷயங்களைப் பேசினார்கள்... சிரித்தார்கள்...

பேச்சு சந்தோஷமாய்ப் போய்க்கொண்டிருந்த வேளையில் சாமிநாதன், 'உன்னைய மாதிரி பிள்ளைகளை நாங்க யாரும் பாத்துப்பாத்து வளக்கலை... அப்படி வளர்த்தே.... நல்லா படிக்க வச்சே... ஆனா இன்னைக்கு என்னாச்சு... ஒருத்தன் வெளிநாட்டுல குடும்பத்தோட போயி செட்டிலாயிட்டான். இன்னொருத்தன் சென்னையில இருக்கான். ரெண்டு பேருமே வயசான காலத்துல உங்களுக்குத் துணையா இருக்கலை... என்ன வளத்து என்ன பண்ணப்பா... இந்த வயசுல துணையில்லாம நீயும் கமலமும் படுற கஷ்டம் பாக்கும்போது எங்களுக்கு ரொம்பக் கஷ்டமா இருக்கு' அப்படின்னு ஆரம்பிச்சாரு. உடனே இவரு மகன்களை விட்டுக் கொடுக்காம 'நீ வேறப்பா அவனுக வரச்சொல்லித்தான் நிக்கிறானுங்க... நாங்கதான் இந்த வாழ்க்கையை இழக்க விரும்பாம வரலைன்னு சொல்லிட்டோம்... இப்பவும் மாசாமாசம் எங்க செலவுக்கு கூடுதலாகவே பணம் அனுப்புறானுங்கன்னா பாத்துக்கோயேன்' அப்படின்னு பெருமையாச் சொன்னாரு.

'பணம் கெடக்குப்பா பணம்... எம்புட்டுப் பணம் அனுப்பி என்ன பலன். இந்த கமலம் இந்த வயசுல வெறகடுப்புல மாங்கு மாங்குன்னு ஊதிக்கிட்டு கிடக்குறதை என்ன சொல்றது. உம்பசங்களுக்கு வசதியா இல்லை... ஒரு கேஸ் அடுப்பு வாங்கிக் கொடுக்குறது. அது கூடவா முடியாது. சும்மா சப்பைக் கட்டு கட்டாதேப்பா....' என நறுக்கெனச் சொல்ல, 'எங்களுக்கு எதுக்குப்பா கேஸ் அடுப்பெல்லாம்... அவதான் அதெல்லாம் சரி வராதுன்னு சொல்லிட்டா... அவளுக்கு வெறகடுப்புல சமைக்கிறதுதான் பிடிச்சிருக்கு... இதுக்கு அவனுகளைக் குத்தம் சொல்லி என்ன பண்ணச் சொல்றே... சும்மா குத்தம் கண்டுபிடிச்சா நிறையக் கண்டுபிடிக்கலாம்ப்பா... நம்மமேல குத்தத்தத்தை வச்சிக்கிட்டு அவனுகளைச் சொல்றது நியாயமில்லையில்ல...' என சப்பைக்கட்டுக் கட்டினார்.

ரொம்ப நேரம் பேசிக்கிட்டு இருந்து விட்டு வந்து கட்டிலில் சமுக்காளத்தை உதறிப் போட்டவரிடம், 'வெறகடுப்புல சமைச்சிக்கிறேன்னு நான் சொன்னேனா.. இன்னமும் அந்த களவாணிப் பயலுகளுக்கு சப்பைக்கட்டு கட்டுறதை நீங்க விடவே இல்லையில்ல..' என்ற கமலாவின் கேள்வி தாக்கியதில் நிலை குலைந்துதான் போனார். ஆனாலும் 'நீ ஒரு இவ... அவன் வந்து நம்ம பிள்ளைகளைச் சொல்லுறான்... விட்டா கொடுக்க முடியும்... அவம்பிள்ளைக பாக்குறானுகளாக்கும்.... உனக்கு உடனே பொத்துக்கிட்டு வந்திரும்...' என்று அவளை அதட்டினார்.

'ஆமா பொத்துக்கிட்டு வருது...சாமிநாதண்ணனுக்கு என்ன கொறச்சல்... மூணு பெத்தாரு... மூத்தது ரெண்டு வெளியூர்ல இருந்தாலும் நல்லது கெட்டதுக்கு வருதுக.. செலவுக்கு மாசாமாசம் பணம் அனுப்புதுக... இங்க இருக்க சின்னவனும் அவம் பொண்டாட்டியும் தாங்குதாங்குன்னு தாங்குறாக... பொண்டாட்டியில்லைன்னாலும் புள்ளைக அவருக்கு ஆதரவாத்தான் இருக்குக... நமக்கு என்ன நாதியிருக்கு... ஒரு நல்லது கெட்டது இருக்கா... ரெண்டு மாசத்துக்கு ஒருக்கா பணம் அனுப்புனா போதுமா...? பாசத்துக்கு எங்கங்க போறது...?' என்றாளே பார்க்கலாம்.... அவருக்கு என்ன சொல்றதுண்ணே தெரியலை... சொம்பிலிருந்த தண்ணியை மடக்மடக்கென்று குடித்து விட்டு பேசாமல் படுத்தார்.

புரண்டு புரண்டு படுத்துப் பார்த்தார்… இரண்டு முறை எழுந்து போயி ஒண்ணுக்குப் பொயிட்டு வந்தார். அவள் கேட்ட கேள்வி சரிதானே... பாத்துப் பாத்துல்ல வளத்தேன்... சாமிநாதன்  பிள்ளைகளை ரொம்பல்லாம் படிக்க வைக்கலை... ஆனா நா... விவசாயம் பண்ணி வந்த வெளச்சலை வச்சி மூத்தவனை எம்.ஏ. எம்.எட் படிக்க வச்சேன். இன்னைக்கி சென்னையில ஒரு தனியார் கல்லூரியில புரபஸராக இருக்கான். மருமகளும் படிச்சிட்டு பேங்குல வேலை பாக்குற... கை நிறைய சம்பாரிக்கிறாங்க... ஆணென்னு பொண்ணொன்னு அளவான குடும்பம்... ஏன் சின்னவனைக்கூட இஞ்சினியருக்குப் படிக்க வச்சேன். இன்னைக்கு அவன் துபாயில கை நிறைய சம்பாதிக்கிறான். அவன் கூட வேலைபாத்த மலையாளியை அங்கிட்டே கலியாணமும் பண்ணிக்கிட்டான். ஒரு பய இருக்கான்... இதுவரைக்கும் பேரன் முகத்தைக் கூட பாத்ததில்லை.

நல்லது கெட்டதுக்கு கூட வர்றதில்லை... இங்க வாங்கன்னு ரெண்டு பேரும் ஒரு வார்த்தைக்கு கூட சொன்னதில்லை.... ரெண்டு மாசம் மூணு மாசத்துக்கு ஒருக்கா பணம் அனுப்புவானுங்க... அவ கேக்குறது நியாயந்தானே... பணம் அனுப்புனா மட்டும் போதுமா... பாசத்தை எந்தத் தபால்ல அனுப்புவானுங்க... நமக்கும் பெத்தபுள்ளைக பேரம்பேத்திகன்னு பாக்க ஆசையிருக்காதா... கோவில் வாசல்ல விளையாடுற நண்டு சிண்டையெல்லாம் பாக்கும் போது எம்புட்டுச் சந்தோஷமா இருக்கு... பாத்துப் பாத்து வளத்து நம்மளைப் பாக்க ஒரு புள்ளை இல்லையே... இப்ப கைகாலு நல்லாயிருக்கு ரெண்டு பேருமா ஓட்டுறோம். அவ விழுந்தா நா பாத்துருவேன்... நா விழுந்துட்டா... அவ... அவ.... நினைத்தவருக்கு திடுக்கென்றிருந்தது. தூக்கம் இல்லாமல் எழுந்து வாசலுக்கு வந்தவர் வேப்பமரக் காற்றை அனுபவித்தபடி பதினெட்டாம் படிக்கருப்பா எனக்கு முன்னால அவ கைகால் சுகத்தோட போயிறணும்.. நா போயி அவ கெடந்தா பாக்க நாதியிருக்காது....' என்று கருப்பர் கோவில் இருந்த மேற்குப் பக்கம் பார்த்து கையை உயர்த்திக் கும்பிட்டார்.

எங்கோ ஆந்தை அலறியது... தெருநாய்கள் எல்லாம் எதையோ பார்த்தது போல் வீதியில் ஓடி ஓடிக் குலைத்தன. 'ம்... என்ன போகுதோ யாருக்குத் தெரியும்... நாய்க்கு மட்டுமே தெரியும்...' என்று நினைத்தபடி வைக்கோலை இழுத்துப் போட்டு அதன் மேல் படுத்துக்கிடந்த கருத்தைப்பசுவை அதட்டி எழுப்பி வைக்கோலை எல்லாம் அரித்து ஒரிடத்தில் குவித்து வைத்துவிட்டு கன்றைச் சுமக்கும் அதன் வயிறைத் தடவிக் கொடுத்தார். இது அதுக்கு அஞ்சாவது கன்று... இதுக்கு முன்னாடி போட்டதுல மூத்தது மட்டுமே பொட்ட... மத்ததுக காளையாப் போக பால் வற்றியதும் அதுகளை வந்த விலைக்குத் தள்ளிவிட்டுட்டார். மூத்தது இப்ப கிடேரியா நிக்கிது... போன வாரந்தான் காளைக்கு கத்துச்சுன்னு மாட்டாஸ்பத்திரிக்கு கொண்டு போய் சினை ஊசி போட்டுக்கிட்டு வந்தாரு. ‘ம்... நீயும் பிள்ளைகளைச் சுமக்குறே... அதுக உதவியா இருக்கும்ன்னு நினைக்கிறியா இல்லையே... பால் கொடுக்குற வரைக்கும் பாதுகாப்பா பாத்துக்கிறே... அப்புறம் அதுகளுக்கும் உனக்கும் எதாச்சும் உறவு இருக்கா என்ன...? ஏன் இந்த மனுசனுங்க மட்டும் உறவுகளைத் தொங்கிக்கிட்டு கிடக்கானுங்க…’ என்று அதனிடம் வேதாந்தம் பேசினார்.

காலையில் கமலம் தட்டி எழுப்பவும்தான் எழுந்தார். எப்பப்படுத்தார்.... எப்படித் தூங்கினார் என்று தெரியவில்லை. 'இப்புடியா மனுசன் தூங்குறது... நல்லாத்தான்... மொகத்தைக் கழுவுங்க.. காபி குடிக்க' என்று சொல்லியபடி காபி டம்ளரை சன்னலில் வைத்தாள். 'ம்... ராத்திரியெல்லாம் தூக்கம் வரலை... விடிகாலையில கண்ணசந்துட்டேன் போல...' என்றபடி முகம் கழுவிவிட்டு  காபியை உறிஞ்சியவர், 'ஏய்... நம்ம புள்ளைக நம்மளைப் பாக்கலைன்னு கவலைப்படுறியா?' என்றார். 'நீங்க இருக்கும் போது எனக்கென்ன கவலை... பூவோட பொட்டோட போயிச் சேந்தாப் போதும்... ஆனா அதுக்கு அப்புறம் உங்கள நினைச்சாத்தான் வேதனையா இருக்கு... பாக்க நாதியில்லாமா....' கண்ணைக் கசக்கினாள். 'அட விடு... ஆண்டவன் கஷ்டப்பட விடாம பொசுக்குன்னு கூட்டிப்பான்... பாரேன்... ரெண்டு பேரையும் ஒண்ணாக் கூட்டிக்கிட்டாலும் கூட்டிப்பான்' என்று சிரித்தார்.

'எங்க இருந்தாலும் நாம பெத்ததுக நல்லாயிருந்தாப் போதும்... நம்மளைப் பாக்கலைன்னு நாம அதுகளை திட்டி அதுகளுக்கு ஒண்ணுன்னா என்ன பண்றது.. விடு... அவனுக நல்லாயிருக்கட்டும்... நம்மளை கருப்பன் பாத்துப்பான்... பாசத்தை கொரியர்லயா அனுப்பச் சொல்ல முடியும்... அவனுகளுக்காத் தெரிஞ்சி ஒருநா பாசத்தை மூட்டை கட்டிக்கிட்டு வருவானுங்க...' என்று மனைவியின் தலையை ஆறுதலாய்த் தடவினார். 'பயலுக மேல உங்களுக்கு உண்மையாவே வருத்தமில்லையாங்க' என்ற கேள்விக்கு சிரிப்பை பதிலாக்கிவிட்டு எழுந்தவர் அவளுக்குத் தெரியாமல் கலங்கிய கண்ணைத் துடைத்துக் கொண்டு படியிறங்க, அவரைப் பார்த்த கருத்தப்பசு 'ம்ம்மா' என்று பாசமாய் அழைக்க, வாசலில் நின்ற நாய் வாலாட்டிபடி அவருக்கு முன்னே 'வ்வ்...வ்...வீ...வ்' எனக் குழைந்து நின்றது.

-'பரிவை' சே.குமார்


புதன், 1 ஏப்ரல், 2015

மனசின் பக்கம்: மனசுக்கு விடுமுறை


வணக்கம்...


வாத்தியார் பாலகணேஷ் அவர்களின் 'டூ இன் ஒன்' புத்தகமான சரிதாயணம் ('சிரி'தாயணம்) + நான் இருக்கிறேன் அம்மாவை அண்ணன் கில்லர்ஜி அவர்களின் உதவியால் படித்தேன். அலைனில் இருக்கும் போதே வாசித்தாகிவிட்டது. இங்கு வந்ததும் வேலை மற்றும் சொந்த அலுவல்களால் எழுத்து மற்றும் வாசிப்பு குறைந்து போனதால் படித்ததை பகிர்வதற்கு நாளை... நாளை என தள்ளிப்போட்டு சென்ற வாரத்தில் புத்தகத்தை திருப்பிக் கொடுத்தாச்சு. அதனால் விரிவாக எழுதவில்லை என்றாலும் ரசித்துச் சிரிக்கும்படியான கதைகளுடனும் கொஞ்சம் வித்தியாசமான கதைகளுடன் அருமையாக இருக்கிறது.  ரசித்து வாசிக்கக் கூடிய புத்தகங்களில் வாத்தியாரின் இந்தப் புத்தகமும் முக்கிய இடம் பிடிக்கும். நீங்களும் வாசித்துப் பாருங்கள்... ரசிப்பீர்கள்.


கோவை ஆவி அவர்களின் ஆவிப்பா என்னும் கவிதைகளின்... இல்லையில்லை நஸ்ரியாவை நினைத்து எழுதிய அழகிய வரிகளின் தொகுப்பையும் புத்தகங்களை வாசிக்கக் கொடுக்கும் அண்ணன் கில்லர்ஜியே கொடுத்தார். நஸ்ரியாவுக்கும் கவிதைகளுக்கும் தொடர்பில்லை என்று சொல்லியிருந்தாலும் வாத்தியார் பாலகணேஷ் அவர்கள் வரிக்களுக்கு பொருத்தமாய் நஸ்ரியா படங்களை வைத்து அழகாய் வடிவமைத்திருக்கிறார். பக்கத்துக்கு பக்கம் கலரில் நஸ்ரியா... வாவ்... அழகு. அப்புறம் கவிதைகள் வாசிக்க ஆரம்பித்து கடகடவென முடித்துத்தான் வைக்கவிட்டன... பின்னூட்டமே பக்கம் பக்கமாய் அழுத்தமாய்... அழகாய்... ரசனையாய்... எழுதும் மஞ்சுபாஷினி அக்கா முன்னுரையில் கலக்கலாய் எழுதியிருக்கிறார். அவர் ரசித்துச் சொன்னதைப் போலவே அழகான வரிகள்... ஆவிப்பா குட்டியூண்டு புத்தகமாய் இருந்தாலும் நிறைவாய்...


தம் கதம் படம் பார்த்தேன்... பரவாயில்லை ரகம்தான் என்றாலும் நட்ராஜ் மனுசன் கலக்கியிருக்கிறார்... வசனங்கள் அருமை... படத்தின் கதையின் போக்கும்... முடிவும் அலுப்பை ஏற்படுத்தினாலும் வசனங்களுக்காகவும் நட்ராஜ்க்காகவும் பார்க்கலாம்.


மலின் உத்தம வில்லன் பாடல்கள் வெளியீட்டு விழாவை யூடியூப்பில் பார்த்தேன். எல்லாரும் கமலின் புகழ் பாடினாலும்... இயக்குநர் சிகரம் பாலச்சந்தர் அவர்கள் கமலுக்கு எழுதிய லெட்டர்,... கமல் பாலச்சந்தருக்கு எழுதிய மடல்... நாசரின் உருக்கமான பேச்சு... பார்த்திபனின் தொகுப்பு... வித்தியாசமான முறையில் பாடல் வெளியீடு... என அருமையாக இருந்தது. நீங்களும் ஒருமுறை பார்க்கலாம்.


ப்புறம் முக்கியமான சமாச்சாரங்க... நாளை இரவு எனது மனைவியும் குழந்தைகளும் ஒரு மாத காலத்திற்கு இங்கு தங்கும் விதமாக வருகிறார்கள்... மே மாதம் நான் அவர்களுடன் ஊருக்குப் போகிறேன்... அதனால் மனசு தளத்திற்கு மட்டுமல்ல நண்பர்களின் எழுத்துக்களை வாசிப்பதற்கும் விடுமுறை... விடுமுறை... அவர்களுடன் ஊர் சுற்றவே நேரம் சரியாக இருக்கும் என்பதால் இங்கு வரமுடியாது. சில நேரங்களில் சும்மா எட்டிப் பார்ப்பேன். முடிந்தால் 'வேரும் விழுதுகளும்' தொடர்கதை மட்டும் பதியப்படும்... மற்றவை இரண்டு மாத விடுமுறைக்குப் பின்னரே... அதுவரை...



இருங்க... இருங்க... போயிடாதீங்க... ஆங்... சொல்ல மறந்துட்டேனே... மனசு தளத்தில் இது 800-வது பகிர்வு... முன்பு கிறுக்கிய மற்ற மூன்று தளங்களிலும் (கிறுக்கல்கள் + நெடுங்கவிதைகள் + சிறுகதைகள்) சேர்த்து 1000-த்தை எட்டிப் பிடிக்க 5 குறைவாக 995 பகிர்வுகள்... எல்லாம் தங்கள் அன்பால்தான்... அதற்கு ஒரு...


நன்றி.
-'பரிவை' சே.குமார்.