இன்று தமிழ் வலைப்பூக்களின் வண்ணத் தேர் இணையத்தின் மூலமாக உலகெங்கும் வலம் வந்து கொண்டிருக்கிறது. முகமறியாத மனிதர்களை இணைக்கும் பாலமாக எழுத்து இருக்கிறது. எத்தனையோ விதமான எழுத்துக்களை வாசித்து சந்தோஷிக்கும் ஒரு இடமாக, ஒருவருக்கு ஒருவர் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளும் பாலமாக இருகிறது வலைப்பூக்கள். இந்த வலைப்பூக்களில் எழுதும் எண்ணற்ற எழுத்தாளர்கள் உறவுகளாய் ஒன்றிக் கிடக்கிறார்கள். எத்தனையோ உறவுகளையும் நட்புக்களையும் கொடுக்கும் வலைப்பூ உலகில் தமிழ் வலைப்பூக்களே முன்னணியில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழனாய்... தமிழ் வலைப்பதிவராய்... இணைய எழுத்தாளராய் வாழ்வது கூட ஒரு வரம்தான்.
சரி விஷயத்துக்கு வருவோம்... இன்று சாதிக்கொரு கட்சி... வீதிக்கொரு கட்சி என்று ஆகிவிட்ட தமிழகத்தில் தடுக்கி விழுந்தால் மாநாடு நடத்திக் கட்சி நடத்தும் காட்சிகளைக் கண்டு வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களின் முன்னே கடந்த சில வருடங்களாக வலைப்பதிவர்கள் மாநாடு என்ற ஒன்றை நடத்தி இது என்ன மாநாடு... இவர்கள் யார்... என்று சிந்திக்க வைத்தவர்கள் நம் வலைப்பதிவர்கள். தலைநகர் சென்னையில் தொடங்கி... சங்கம் வளர்த்த மதுரைக்கு வந்து... நான்காம் ஆண்டு பதிவர் திருவிழாவிற்காக கலைக்கோட்டையாம் புதுக்கோட்டையில் மையம் கொண்டிருக்கிறது.
வலைப்பதிவர்களில் புதுக்கோட்டை வலைப்பதிவர்கள் எல்லாருமே கணினித் தமிழச்சங்கம், முழு நிலா முற்றம் என எப்போதுமே ஒன்றிணைந்து மிக அழகாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். புதுக்கோட்டையில் வலைப்பதிவர் மாநாடு என்று போனவருடம் மதுரையில் சொன்னதில் இருந்தே அவர்கள் அதற்கான பணியில் இறங்கிவிட்டார்கள். இவர்களை எல்லாம் வழிநடத்தும் திரு. முத்து நிலவன் ஐயா அவர்கள் புதுகை வலைப்பதிவர்களுக்குக் கிடைத்த மிகச் சிறந்த தலைமை. இவர் எழுத்தாளர், வலைப்பதிவாளர், பட்டிமன்றப் பேச்சாளர் எனப் பன்முகம் காட்டுபவர். அவரின் தலைமையில் விழாவிற்கான வேலையை விரைந்து செய்து வருகிறார்கள்.
மதுரை விழாவிற்கு ஓடியாடி வேலை பார்த்த சீனா ஐயாவுக்கு உதவியாய் இருந்தவர்களில் குறிப்பாக திண்டுக்கல் தனபாலன் அண்ணாவைச் சொல்லலாம். ஏனென்றால் வலையுலகில் வலைச்சித்தர் என்று பெயர் எடுத்து வைத்திருக்கும் இவர், வலையுலக படைப்பாளிக்களுக்கு வலைப்பூ சம்பந்தமான பிரச்சினைகளை தீர்த்து வைப்பதில் இவருக்கு நிகர் இவர்தான். அதேபோல் வலைப்பதிவர் மாநாடு என்றால் முன்நின்று வேலை பார்ப்பதிலும் இவருக்கு நிகர் இவர்தான். இப்போது புதுக்கோட்டை விழாவிற்குக்கூட நிறைய மெனக்கெடல்களுடன் அழகான பகிர்வுகள்... தொழில் நுட்ப உதவிகள் என அடித்து ஆடிக் கொண்டிருக்கிறார்.
விழாவில் கலந்து கொள்பவர்கள் விவரங்களைச் சேகரித்துக் கொண்டிருக்கிறார்கள். ஏறத்தாழ 50 பேருக்கு மேல் வருவதாக பெயர் கொடுத்திருக்கிறார்கள். அதற்கான விவரக் குறிப்புக்களை தனபாலன் அண்ணா தனது தளத்தில் பகிர்ந்திருக்கிறார். மேலும் வலைப்பதிவர் மாநாடு குறித்த விவரங்களைப் பகிர்ந்து கொள்வதற்கென்றே புதிய வலைப்பூவை தயார் செய்திருக்கிறார்கள். விழாவில் பதிவர்கள் குறித்த விவரங்கள் அடங்கிய கையேடு ஒன்றை அனைவருக்கும் கொடுக்க இருக்கிறார்கள். இதற்கான விவரங்களையும் சேகரிக்கிறார்கள்... இதில் விழாவுக்கு வருபவர்கள் மட்டுமின்றி உலகெங்கும் இருக்கும் தமிழ் வலைப்பதிவர்கள் அனைவரும் தங்கள் விவரக் குறிப்புக்களைப் பகிர்ந்து கொள்ளலாம். அதற்கான பதிவும் நடந்து கொண்டிருக்கிறது.
4வது தமிழ் வலைப்பதிவர் திருவிழா குறித்த விவரங்களை முத்து நிலவன் ஐயா, திண்டுக்கல் தனபாலன் அண்ணா, தேவதா தமிழ் கீதா அக்கா உள்ளிட்ட பலர் தங்கள் வலைத்தளங்களில் பகிர்ந்து வந்து கொண்டிருக்கிறார்கள். அவற்றைப் படித்தால் விவரம் அறிந்து கொள்ளலாம். விழாவை வெற்றிகரமாக நடத்த வலைப்பதிவர்களின் அன்பளிப்பும் ஏற்றுக் கொள்ளப்படுகிறது.
-------------------------------------------------------
விழா இடம்... நாள்...
ஆரோக்கியமாதா மக்கள் மன்றம்
பீ வெல் மருத்துவமனை எதிரில்
பழைய பேருந்து நிலையம் அருகில்
ஆலங்குடி சாலை, புதுக்கோட்டை
அக்டோபர், 11 - 2015
ஞாயிற்றுக் கிழமை.
-------------------------------------------------------
விழாவில் பதிவர் கையேடு வழங்குவதுடன் ஜெயக்குமார் ஐயா, விமலன் அண்ணா ஆகியோரின் புத்தகங்கள் வெளியிடப் படுவதாகவும் பதிவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட இருப்பதாகவும் தற்போதுவரை வெளியிடப்பட்டிருக்கிற பதிவுகள் தெரிவிக்கின்றன. வலைப்பதிவர்களின் புத்தக வெளியீட்டில் இன்னும் பலரும் இணையலாம் என்றே தோன்றுகிறது.
விழா குறித்த விவரம் அறிய விழாவுக்காகவே தயார் செய்யப்பட்ட வலைப்பக்கம் செல்ல...
வலைப்பதிவர் சந்திப்பு-2015
விழா குறித்த் நிறைவான விவரங்களை அறிய திரு. முத்து நிலவன் ஐயா அவர்களின் வலைப்பூவிற்குச் செல்லுங்கள்...
வளரும் கவிதை
விழா விவரங்கள், பதிவு செய்தோர் விவரம், பணம் அனுப்பியோர் விவரம் என எல்லாமே உடனுக்குடன் புள்ளி விவரமாக அறிய் திரு. தனபாலன் அண்ணா அவர்களின் வலைப்பூவுக்குச் செல்லுங்கள்...
திண்டுக்கல் தனபாலன்
வலைப்பதிவர் கையேட்டில் உங்கள் விவரங்களும் இடம்பெற bloggersmeet2015@gmail.com என்ற மின்னலுக்கு உங்கள் விவரங்களை புகைப்படத்துடன் அனுப்பி வையுங்கள்.
வலைப்பதிவர் விழா அழைப்பிதழ் உங்கள் பார்வைக்காக...
விழா சிறக்க வாழ்த்துக்கள்... நாங்கள்தான் கலந்து கொள்ள முடியுமா தெரியவில்லை... ஊரில் இருக்கும் நண்பர்கள் அனைவரும் முடிந்தளவு கலந்து கொள்ள முயற்சியுங்கள்... விழா வெற்றி விழாவாகட்டும்... நாமும் கோட்டையைப் பிடிக்கும் நாள் விரைவில் வரும் என்பதைப் பறை சாற்றுவோம்... இது அந்தக் கோட்டையை அல்ல... தமிழ் எழுத்தாளர்களாய்... உலகம் போற்றும் வலைப்பதிவர்களாய்... வெற்றிக் கோட்டையைப் பிடிக்கும் நாள் விரைவில் வரும் என்று சொல்ல வந்தேன்....
சரிங்க... நம்ம தனபாலன் அண்ணன் எந்த ஊர்ல இருந்து எத்தனை பேர் வர்றாங்கன்னு விவரமெல்லாம் போட்டிருக்காரு.. எங்கெங்கோ இருந்தெல்லாம் வர்றாங்க... ஆனா தேவகோட்டை, காரைக்குடியில் இருந்து இதுவரை ஒரு பதிவர்கூட பெயர் கொடுக்கவில்லை. நிறையப் பேர் எழுதுறாங்க... ஆனா எல்லாரும் வெளியூர்களில் இருப்பார்களோ என்னவோ தெரியலை.... எது எப்படியோ கலந்து கொள்வோர் பட்டியியல் நம் ஊர் பெயரும் வரவேண்டும் நண்பர்களே... முயற்சியுங்கள்....
தேவகோட்டைப் பதிவர்கள் எல்லாம் வெளிநாடு வாழ் பதிவர்களாகிவிட்டோம் என்று நினைக்கிறேன்... வருவது குறித்து இன்னும் சரியான முடிவு கிடைக்காத சூழல்... எங்கள் ஆசை அண்ணன்... மீசை மன்னன்... தேவகோட்டை கில்லர்ஜி எல்லாருடைய சார்பாகவும் கலந்து கொள்வார் என்று நினைக்கிறேன்.... :).
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்....
வலைப்பதிவர் மாநாடு சிறக்கட்டும்...
வாழ்க தமிழ்... வளர்க நம் தமிழ்...
இந்தப் பாட்டையும் கேட்டுட்டுப் போங்க...
நட்புடன்....
-'பரிவை' சே.குமார்.