மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

புதன், 31 ஜூலை, 2019

பிக்பாஸ் : ஆடல் பாடல்

Image result for bigg boss day 37 reshma images
பிக்பாஸில் ஏன் இப்படி மொக்கை போடுகிறார்கள்..?

இதுவரைக்கும் கொடுத்த டாஸ்க்குகள் எல்லாமே அப்படி ஒன்றும் பிரமாதமானவை இல்லை.

இந்த வாரம் பாட்டுப் போட்டா ஆடணும்... அதுவும் என்ன செய்து கொண்டிருந்தாலும் அப்படியே விட்டுட்டு ஓடிவந்து ஆடணும்... இதுதான் பட்ஜெட் டாஸ்க்.

பிக்பாஸ் யார் யாருக்கு எந்த நடிகரின் வேடம் என்றும் என்ன பாடல் என்றும் சொல்லியபடி,  நடிகர்/ நடிகை போல் உடையணிந்து, அவர்களின் நடை, உடை, பாவனையோடு வலம் வர ஆரம்பித்தார்கள்.  

சொன்ன பாடல் ஒலிக்கும் போது யாருக்கான பாடலோ அவர் லிவிங்க் ஏரியாவில் போடப்பட்டிருக்கும் சிறிய ஸ்டார் வடிவ மேடையில் ஆட வேண்டும்.

காலையில் பள்ளி எழுச்சிப் பாடலுக்கு சாக்சி வலிப்பு வந்த வான்கோழி மாதிரி ஒரு ஆட்டம் போட்டாச்சு... பின்னே நாங்க நாமினேசன்ல இருக்கமுல்ல... ஆட்டத்தைப் பார்த்து கொஞ்ச நாள் ஆடட்டுமேன்னு விட்டு வைப்பாங்கன்னு கணக்குப் போட மாட்டோமா என்ன...

நடிகர் / நடிகையின் கெட்டப்பும்... நடை, உடை, பாவனையும்...  அய்யோ பாவம்... ஒரிஜினல் பார்த்தா ஊரை விட்டே ஓடினாலும் ஆச்சர்யமில்லை... 

சின்னக்கவுண்டர் விஜயகாந்தாய் சரவணன்... திடீர்ன்னு பார்த்தா கேப்டன்தான் உள்ள வந்துட்டாரோன்னு தோணும் அளவுக்கு மிகச் சிறப்பாக நடந்து கொண்டார்.

ஜானி ரஜினியை கொஞ்சமாய் தன் நடை உடையில் கொண்டு வந்தார் சேரன். மதுமிதாவும் உருளைக்கிழங்கு வெட்டும் இடம் செம.

அஜித்தாய் கவின்... அய்யோ பாவம்.

சிம்புவாய் சாண்டி... முடியல போதும். டான்ஸ் மாஸ்டர் என்றாலும் அவர் ஆடிய டான்ஸ் அந்தளவுக்கு இல்ல...

விஜய்யாய் முகன்... ம்ம்ம்ஹூம்.

கமலாய் தர்ஷன்... ஹிஹி.

பத்மினியாய் அபிராமி... பரதம் தெரியும் என்ற ஒரே காரணமாக இருக்கலாம்.

தமனாவாக சாக்சி... அய்யோ அய்யோ.

குஷ்புவாக ஷெரின்... சொல்வதற்கில்லை.

சரோஜாதேவியாக மது... ஒவருக்கும் ஓவர் நடிப்புடா சாமி.

த்ரிஷாவாக லாஸ்லியா... பாவம் த்ரிஷா. டான்ஸ் மட்டும் சூப்பர்.

ரேஷ்மாவுக்கு...?

சரவணன் பாத்ரூம் போனப்போ பாட்டுப் போட்டாங்க...

கவின் சாப்பிட்டப்போ பாட்டுப் போட்டாங்க...

எல்லாப் பாட்டுக்கும் எல்லாருமே கூட்டமா (குறிப்பா பெண்கள்) ஆடுறாங்க...

சரவணன் சாண்டியிடம் சாக்சிக்கும் ஷெரினுக்கும் நடிக்கவே தெரியலைன்னு குற்றம் சொல்கிறான் கவின்.

மேலும் அபி தாமதமாக வந்தால் மணி ஒலித்தது... இன்னும் பிரச்சினையெல்லாம் வரும்...கடைசியில நான் சரியாத்தானே வந்தேன்னு நாடகம் போடும் என்றும் சொன்னான் கவின்.  

அதே நேரம் லாஸ்லியாகூட அபிராமிக்கு பின்னேதான் வந்தார்... ஆனா கவின் கண்ணுக்கு அபிராமிதான் தெரிஞ்சிருக்கார். 

லாஸ்லியாவிடம் கடலை போட நேரம் பார்த்துக் காத்திருந்து தல போல ஒட்டியும் ஒட்டாமலும் பேசி தன் காதலை மெல்லக் கடத்திக் கொண்டிருந்தான் கவின்.

சரோஜாதேவி மாதிரிப் பண்ணுன மது, டாஸ்க் முடிஞ்சு இலங்கை மற்றும் மலேசியா பற்றி லாஸ்லியா மற்றும் முகன் சொல்லிக் கொண்டிருந்த போதும் கண்ணைப் படபடவென அடித்து செயற்கைப் புன்னகை செய்து கொண்டிருந்தது கடுப்பைக் கிளப்பியது.

மொத்தத்தில் இந்த வாரம் ஆடல் பாடல் வாரம்.

ஆடல் பாடல் நடந்து கொண்டிருக்கிறது... குத்தாட்ட நடிகைகளுக்கு எல்லாம் இன்னும் சான்சு வரலை... இன்று கிடைக்கும்... ஆட்டம் பாட்டம் கொண்ட்டாட்டம்.

பிக்பாஸ் தொடரணுமா..?
-'பரிவை' சே.குமார்.

அன்பை வலியோடு சுமக்கும் 'இஃக்லூ'

டம் பார்த்ததும் ஒரு தளத்திற்காக பத்து நாட்களுக்கு முன்னர் எழுதிய விமர்சனம். தளத்தில் ஏதோ மாறுதல் கொண்டு வர இருக்கும் காரணத்தால் தற்காலிகமாக மூடப்பட்டிருப்பதால் அதற்காக எழுதி அனுப்பிய பதிவுகளை எல்லாம் புதுப்பித்து வரும்போது பதிய முடியாது என்பதையும் சொல்லி, எப்போது மீண்டு வருகிறோமோ அப்போது உங்களுக்குத் தகவல் தருகிறோம்... புதிய பதிவுகளுடன் எங்களுடன் இணையுங்கள்ன்னு சொல்லிட்டாங்க. அதனால எப்பவும் போல் நம்ம பக்கத்துலயே பகிரலாமேன்னு பகிர்ந்தாச்சு.
Image result for இஃக்லூ
ஃக்லூ...

படத்தின் பெயரைப் பார்த்ததும் ஏதோ தெலுங்குப்பட டப்பிங் போலன்னு நினைத்தேன். சில நண்பர்கள் இஃக்லூவைக் கொண்டாடுவதை அறிந்து என்ன கதை, எப்படியான படம் என்பதெல்லாம் தெரியாமல் பார்க்க ஆரம்பித்து இடையில் நிறுத்தாமல் என்பதைவிட நிறுத்த விடாமல் இரண்டு மணி நேரத்திற்கு மேல் (2-மணி 18-நிமிடம்) என்னைக் கட்டிப் போட்டு இறுதியில் கண் கலங்கவும் வைத்தது. 

இஃக்லூ - அப்படின்னா என்ன?

படத்தின் மொத்தக் கதையையும் இந்த வார்த்தையைச் சுமக்கும் சில நிமிடக்காட்சி விளக்கிவிடுகிறது.

இஃக்லூ அதாவது பனிக்கட்டிக் குடில் கனடாவில் வாழும் இக்னூட் என்னும் பழங்குடி இனத்தவருடன் தொடர்புடையது. ஆர்க்டிக் பகுதியில் வாழும் எஸ்கிமோக்கள் பனி மலையில் மழைக்காலத்தில் வேட்டைக்குச் செல்லும் போது இம்மாதிரியான வீடுகளைக் கட்டி வாழ்கிறார்கள். இது அரைக்கோள வடிவம் கொண்டது என்றாலும் உண்மையில் சைவட்டம் (paraboloid) என்ற பாணியில்தான் இருக்கிறது.  

வெளியில் இருந்து காற்று உள்ளே புகாமலும் வெப்பம் வெளியேறாமலும் இருக்க சுரங்கப்பாதையும் விலங்குகளின் தோலும் பயன்படுத்தப்படுகிறது. மூன்று வகையான வீடுகளை வடிவமைக்கிறார்கள்... அதாவது சிறிய பனிக்கட்டி வீடுகள் ஒரு இரவுத் தங்கலுக்கானது. கொஞ்சம் பெரியதாய் அதாவது ஒரு அறையுடன் கூடிய வீடு மற்றும் ஐந்து அறைகளைக் கொண்ட மிகப் பெரிய வீடு.

இந்த வீடுகளின் கட்டிடக்கலை ஆச்சர்யமானது... எந்தவித தாங்கும் அமைப்புமின்றி அடுக்கப்படும் பனிக்கட்டிகளே ஒன்றுக்கொன்று தாங்கிக் கொள்ளும்படி அமைக்கப்படுகின்றன. வெளியில் இருக்கும் குளிர் இதன் உள்ளுக்குள் இருப்பதில்லை... மிதமான வெப்பத்தைத் தாங்கியே இதன் உள்ளமைப்பு இருக்கிறது. உள்ளிருக்கும் வெப்பம் வெளியே வருவதில்லை... காரணம் பனிக்கட்டிகள் வெப்பத்தைக் கடத்துவதில்லை. இக்னூட் மக்களின் இனுக்டிடுட் மொழியில் இஃக்லூ என்றால் வீடு என்று அர்த்தமாம்.

சரி இதற்கும் கதைக்கும் என்ன பொருத்தம்...?

கோபம், தாபம், துக்கம், வேதனை, வலி என எல்லாம் சுமக்கும் ஒரு பெண், தன் கணவனால் அன்பாகப் பார்த்துக் கொள்ளப்படுவதை இருவரும் இந்த இஃக்னோவில் தங்கும் அந்த சில நிமிடத்தில் வெளியில் இருக்கும் குளிரை உள்ளே வரவிடாது வெம்மையாக வைத்திருக்கும் இஃக்லூவுடன் ஒப்பிடுகிறாள்.

படம் முழுக்க தீராத காதல்... திகட்டத் திகட்ட அன்பு...  தித்திக்கும் கோபம்... என சுழற்றி அடிக்கும் திரைக்கதை. ஆரம்பமே அழகான இரண்டு கவிதைகள் கட்டிலில் அமர்ந்து பேசுவதாய்... வைஷ்ணவி, ஐஸ்வர்யா (வைசு, ஐசு). இவர்கள் நிஜ இரட்டையர்கள்... ரொம்பக் கேசுவலா... அதுவும் ஒரே டேக்கில் உச்சாப் போனதைப் பற்றிப் பேசுகிறார்கள். அக்காக்காரி படிப்பில் கெட்டி... தங்கச்சி சுமார் ரகம்... அப்பாவின் பாசம் அதிகமாய் தங்கைக்கு... அதுவே அக்காவுக்கு சில நேரங்களில் கோபத்தின் சாரல் அடிக்க காரணமாகிறது.

அம்மா இல்லாது அப்பாவிடம் வளரும் குழந்தைகள்... அப்பாவின் அன்பு அம்மாவின் அன்பினைப் போல் எல்லா நேரத்திலும் இருப்பதில்லை... அது பெரும்பாலும் கண்டிப்பு நிறைந்ததாகவே இருக்கும். எல்லாருக்கும் அம்மா இருக்காங்க... ஸ்கூலுக்கு வர்றாங்க... நமக்கு ஏன் அம்மா இல்லை... வரலை... அம்மாவின் போட்டோகூட வீட்டில் இல்லயே என்ற ஆதங்கம் மூத்தவள் மூலம் வெளிப்பட, சொல்ல முடியாமல் அவளைத் திட்டிப் படுக்க வைக்கிறான். தந்தையிடம் தங்கை கேட்டால் சொல்வான் என அவளிடம் பேச, அவளோ எனக்கு அப்பா,நீ, என்னோட சைக்கிள் போதும்... அம்மால்லாம் வேண்டாம்.. நான் கேட்க மாட்டேன் என்று சொல்லி விடுகிறாள். 

சைக்கிள் ஓட்டத் தெரிந்த தங்கையால் சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொடுக்கும் ஒரு விடுமுறை தினத்தில் அக்கா விபத்துக்குள்ளாகி கோமா நிலைக்குச் செல்கிறாள். ஹாஸ்பிட்டலில் இருக்கும் வைசுவிடம் அவள் என்ன கேட்க நினைத்தாலோ அதைச் சொல்லுங்கள் என டாக்டர் சொன்னதும் 'அம்மா'வைப் பற்றிச் சொல்ல ஆரம்பிக்கிறான் அவர்களுக்கு அம்மையப்பனாய் இருக்கும் சிவா. சின்னவளும் அக்கா அடிபட்ட வருத்ததுடன் அப்பாவின் கதையை எதிரே அமர்ந்து கேட்க ஆரம்பிக்கிறாள்.

விரிகிறது அந்தக் காதல் கதை...

ஆர்க்கிடெக்டாக இருந்தாலும் குடியே பிரதானம் என்பதான... ரவுடியைப் போன்ற நாயகனை அழகான ஒரு பெண் விரும்புவதென்பது தமிழ் சினிமாவுக்குப் புதிதல்ல என்றாலும் இவர்களின் காதல் ரொம்ப வித்தியாசமாய்ப் பயணிக்கிறது. அவனின் கோபம்... அவளின் காதல்... குடும்பம்... எதிர்ப்பு... கர்ப்பம்... எனப் பயணித்து கதை நிற்கும் இடம் 'கேன்சர்'.

அம்ஜத்கான் (சிவா) தாடியும் தண்ணியுமாக.. கோபமும் காதலுமாக... அலட்டலில்லாத நடிப்பு... மகளிடம் சத்தியம் செய்து சத்தியம் வாங்குமிடம்... அவர்களின் லூட்டியை கோபக்காரனைப் போல உள்வாங்கிப் பேசும் அழகு... காதல் மனைவியின் வலியைப் புரிந்து கொண்டாலும் வெளிக்காட்டாமல் இருக்கும் பாங்கு... மனைவிக்காய் தன் குணங்களைத் தொலைத்து நல்லவனாய் மாறி நிற்பது என நடிப்பில் பரிணமித்திருக்கிறார்.  

அஞ்சு குரியன் (ரம்யா) சாதாரண காட்டன் சேலையில் கூட அழகியாய்... காதலன் ஆடச் சொன்னதும் மாடியில் இருந்து அப்பா பார்க்கிறார் என்பதை அறிந்திருந்தாலும் அவனுக்காய் நடுரோட்டில் சல்சா ஸ்டெப் போட்டு ஆடுவதாகட்டும்... கோபப்படும் அவனைத் தேடித்தேடிச் செல்வதாகட்டும்... கருவைச் சுமப்பதை அம்மாவிடம் மெல்லச் சொல்வதாகட்டும்... தனக்கு இன்ன வியாதி என அறிந்த பின் அந்த வியாதியின் வலியை வயிற்றில் குழந்தையுடன் சுமப்பது.... அந்த வேதனையுடன் போராடுவது... என மிகச் சிறப்பாக, அந்தக் கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்.

தமிழ்ச் சினிமாவில் நாம் இதுவரை பார்த்திருக்கும் கேன்சர் நோயாளிகளுக்கும் ரம்யாவிற்கும் நிறைய வித்தியாசம் உண்டு. தன் நோயின் தீவிரம் கூடும் போதெல்லாம் அவர் படும் வேதனை... கோபம்... நிலையில்லாமை எல்லாமே கேன்சரால் பாதிக்கப்பட்ட ஒருவர் இப்படித்தானே தவிப்பார் என்பதை நம்முள்ளே உணர்த்திக் கொண்டே, அந்த வலியை நாமும் உணரச் செய்கிறார். கேன்சரின் வலி எத்தகைய கொடியது என்பதைக் கேள்விப்பட்டிருக்கிறேன் என்பதால் அவளின் வலி மனசுக்குள் பாராமாய்.

எதையும் செய்ய வேண்டும் என்ற துணிவு கடலில் குதிக்க வைக்கிறது... காரமாய்ச் சாப்பிடலாமா என்பவனிடம் உன் மனைவி உன்னுடன் சம்மதித்துத்தான் படுக்கிறாளா இல்லை நீ படுக்க வைக்கிறாயா..? எனக் கேட்க வைக்கிறது. உனக்கு என்னை விட குழந்தை முக்கியமாயிப் போச்சான்னு கோபப்பட வைக்கிறது. வலியின் உச்சகட்டத்தில் கர்ப்பிணிகள் சாப்பிடக்கூடாத, எடுத்துக் கொள்ளக் கூடாத மார்பினைக் கேட்க வைக்கிறது... எல்லாமே கேன்சர் என்னும் கொடிய நோயின் காரணமாகத்தான் நிகழ்கிறது. சிரிக்கிறாள்... அழுகிறாள்... தவிக்கிறாள்... துடிக்கிறாள்... கோபப்படுகிறாள்... எல்லாவற்றிற்கும் மேலாக சற்று வலி குறையும் போது தன் செயலுக்காய் மன்னிப்பும் கேட்கிறாள்.

வாழ வேண்டிய வயதில் சாவென்பதே கொடுமை... அதிலும் தான் பெற்ற இரண்டு குழந்தைகளையும் பார்க்காமல் இருப்பது அதைவிடக் கொடுமை. எங்கே பார்த்தால் சாக வேண்டாம் என்ற எண்ணம் வருமோ... சாவு பயம் வருமோ... என்றெல்லாம் எண்ணி சாகும்போது பயமில்லாமல் சாக வேண்டும் என நினைக்கும் ஒரு தாயின் மனம் எத்தனை ரணப்படும் என்பதை மெல்லப் புன்னகையுடன் ஆரம்பித்து உதடு துடிக்க, கண்ணீரை மறைக்கும் இடத்தில் மிக அழகாக, நடிப்பென்று அறியாத வண்ணம் செய்திருக்கிறார் அஞ்சு.

சாவினை நெருங்கும் சமயத்தில் தனக்காக குடியை விட்டொழித்த கணவனை, மீண்டும் குடிக்கச் சொல்கிறாள்... மறுத்துக் குடிக்கிறான்... அவனின் கோப குணம் கிளர்த்தெழுகிறது... அதைப் பார்த்து அந்த வேதனையிலும் அவள் இதைப் பார்த்துத்தான்டா உன்னை நான் காதலித்தேன்... இப்படி இருப்பதுதான் எனக்குப் பிடிக்கும் என்கிறாள். 

இறுதிக் காட்சியில்... சரி வேண்டாம் விடுங்க.... படத்தைப் பாருங்க... அப்பத்தான் ஒரு அன்னையின்... காதலியின்... பெண்ணின்... சாவு வந்து கொண்டிருக்கிறது என்பதை அறிந்தே வாழ்வை நகர்த்தும் ஒரு நோயாளியின் வாழ்வின் இறுதியைக் கண்ணீரோடு காணலாம். 

ஐசுக்கு மட்டுமே படிப்பில் கெட்டிக்காரி இல்லை என்ற போதிலும் அதீத செல்லம் கொடுக்கக் காரணம் அவளே மனைவியின் சாயலாய் என்பது போலீஸ் ஸ்டேசனில் இன்ஸ்பெக்டர் கேட்கும் கேள்வியின் மூலமும் அவளின் சில செய்கைகளின் மூலமும் பார்ப்பவர்களுக்குக் கடத்தப்படுகிறது.   

5000 பணத்தை லஞ்சமாய் ஒருவரிடம் கொடுக்கச் சொல்லும் இன்ஸ்பெக்டரின் பெயரை ரம்யா கேட்கும் போது அவர் சொல்வது 'பிச்சாண்டி'...

கதவை உங்கப்பனா சாத்துவான் என்பவனிடம் ஐசு சொல்வது 'அப்ப நீதானேப்பா சாத்தியிருக்கணும்'...

கொஞ்சமாய் சரக்கை ஊற்றும் கணவனிடம் 'என்னடா காக்காய் மாதிரி கல்லைப் போட்டுக் குடிக்கப் போறியா..?' எனச் சிரிப்பது...

படகோட்டி சிவாவிடம் பணம் வாங்க மறுத்து 'சார்... அந்தப்புள்ளைக்கு ஏதோ வியாதி இருக்கும் போல... சொத்தையெல்லாம் வித்தாவது காப்பாத்திரு சார்'

இப்படி நிறைய இடங்களில் வசனங்கள் ரசிக்க வைத்தன.

படம் நெடுக வாழ்ந்து செல்லும் காதலில் சில இடறல்களும் இருக்கத்தான் செய்கிறது. அத்தனை காதல் கொண்டிருக்கும் மனது 70-30 சான்ஸ் இருக்கு... கருவைக் கலைத்தால் ரம்யாவைக் காப்பாற்றலாம் என்று டாக்டர் சொல்லுமிடத்தில் கருவைக் கலைக்கக் கூடாது என நிற்பது தன்னோட வித்து முதல் முதலில் விளைந்து நிற்கிறது... அது பூமியில் தவழ வேண்டும்... என்னை அப்பா என்றழைக்க வேண்டும் என்ற ஆவலாக இருந்தாலும் மனைவியா குழந்தையா என்ற இடத்தில் மனைவிக்கான தராசே வெல்லும்... இதில் குழந்தைகள் மட்டுமே வெல்கிறார்கள்... நாங்கள் கேன்சரை வென்றுவிடுவோம் என்ற வெற்றுச் சம்பங்களுடன்.

மொட்டையாகி... வேதனைகளைச் சுமக்கும் மனைவிக்காக மொட்டை அடித்துக் கொள்ளும் சிவா அடுத்த காட்சியிலேயே ஆரம்பத்தில் இருந்த அதே முடியுடன் இருத்தல் இயக்குநர் கவனிக்கத் தவறிய இடம்.

மனைவியின் வேதனையும் வலியும் ரத்த வாந்தியும் பார்த்தும் கூட பிள்ளைக்காக பொறுத்துக்கோடி என்ற மனப்பாங்கைக் கொண்டிருத்தல் ஏற்புடையதாய் இல்லை.

கணவனும் மனைவியும் மேட்டர் படம் பார்க்கும் காட்சியில் ரம்யாவின் சேட்டைகள் ரசிக்க வைத்தன... அதைவிட வெளியிலிருந்து அந்தச் சத்தத்தைக் கேட்கும் அக்காவின் முகபாவம்... ஆஹா... ஆமா இப்பவுமா இந்தப் படங்களின் சிடியை வாங்கிப் போட்டுப் பார்த்துக்கிட்டு இருக்காங்க... இணையத்தில்தான் கொட்டிக் கிடக்கே... இந்த இடமும் ஒரு சறுக்கல்தான்... அதுவும் மருத்துவமனையில் வைத்துக் கொடுப்பதும் அது குறித்தான பேச்சும் சற்றே கூடுதலாய்த்தான் தெரிந்தது.

முரண்டு பிடித்துப் பின் மாறும் அப்பா, மகள் விரும்பிய இடத்தில் வாழ வைக்க மாப்பிள்ளை பார்க்கும் படலத்தை அடித்து நொறுக்கும் அம்மா, தம்பியின் வாழ்க்கை அவன் விரும்புபவளால்தான் நல்லாயிருக்கும் என நினைத்து ரம்யாவின் அப்பாவிடம் பேசும் விவாகரத்தான அக்கா, பணம் வாங்க மறுத்து வீட்டுக்குப் போனதும் குளிச்சிடும்மா... உப்புத்தண்ணி பாரு... எனக் கரிசனம் காட்டும் படகோட்டி, ரம்யா எல்லாரையும் எடுத்தெறிந்து பேசிய போதும் அதெல்லாம் பரவாயில்லைடா என்று சொல்லும் நண்பன் என எல்லாருமே அவரவர் பங்குக்கு எல்லாரும் சிறப்பாய்.

முழுப்படத்தையும் தன் தோளில் அனாயசமாய்ச் சுமக்கிறார் அஞ்சு குரியன்... உருவத்தில் மட்டும் அழகியில்லை நடிப்பிலும் அழகிதான். 

இவ்வகை மெல்லிய காதல் கதைகளை... மருத்துவமனைக்குள் கிடக்கும் கதைகளை எவரும் எடுக்க விரும்புவதில்லை என்றாலும் இப்படியான படங்கள் அடிக்கடி வரவேண்டும்... வந்தால் நன்றாக இருக்கும்.

எடிட்டிங்கும் (பிரசன்னா) ஒளிப்பதிவும் (குகன் பழனி) படத்துக்கு பெரும் பலம் என்றால் அரோல் கரோலியின் இசை படத்துக்கு உயிர்.

இப்படி ஒரு படத்தை இயக்கியதற்காகவே பரத் மோகனைப் பாராட்டலாம்... கேன்சர், கண்ணீர், சோகமென நகர வேண்டிய படத்தை தொய்வில்லாத திரைக்கதையில் நோய்தான் இப்ப என்ன என அவர்களின் வேதனையையும் வலியையும் மிகச் சிறப்பான காட்சிப்படுத்தலாலும் திரைக்கதையாலும் வெற்றி பெற வைத்திருக்கிறார்.

OTT முறையில் இணைய வெளியீடாக ZEE-5 தொலைக்காட்சி வெளியிட்டிருக்கிறது.

ஒவ்வொருவரும் கண்டிப்பாக பார்த்து உணர வேண்டிய படம்.

-'பரிவை' சே.குமார்.

செவ்வாய், 30 ஜூலை, 2019

பிக்பாஸ் : புலம்பவிட்ட நாமினேசன்

Image result for bigg boss day 36 images
நேற்றைய பிக்பாஸில் என்ன நடந்துச்சுன்னு எழுதலாம்ன்னா... இன்னைக்கு முழுவதும் வேலை கூடுதல்... கடந்த பத்து நாட்களாக வேலையில்லாததால் அலுவலகத்தில் உட்கார்ந்து ஆற அமர பதிவெழுத முடிந்தது. இன்று எங்கள் பிளாக்கில் சிறுகதை ஒன்று பகிரப்பட்டிருக்கிறது... எப்பவுமே எங்கள் பிளாக் சிறுகதை எழுதுபவர்களுக்கு விஷேசமான தளம்தான்... என்னைப் போல் வாசித்து நல்லாயிருக்கு என்று கடந்து செல்பவர்கள் அங்கில்லை... சரி, தவறென அக்குவேற் ஆணிவேராக கதையினைப் பற்றிக் கருத்துக்களும் அவர்களுக்கு இடையேயான கருத்துக்களுமாக நம்மைச் செதுக்க ஒரு நல் இடமாக அமையும். அங்கும் அவர்களின் கருத்துக்களுக்கு விரிவாக கருத்திட நேரமில்லை. நன்றி ஸ்ரீராம் அண்ணா.

பிக்பாஸ்ல என்ன நடந்தது..?

பிரச்சினைக்குரிய வனிதாவும் மீராவும் போயச்சு.. இனிப் பிரச்சினைகளை யார் ஆரம்பிப்பது..? கவினைப் பொறுத்தவரை பிரச்சினையைப் பெரிதாக்குவான்னு பார்த்தா எண்ணெய்க்குள்ள கிடக்கும் வரை 'புஸ்'ன்னு ஊதியும் வெளிய எடுத்துப் போட்டதும் காற்றுப் போன பலூன் மாதியும் மாறும் பூரி மாதிரித்தான் இருக்கான்... சக்களத்தி சண்டைக்கு காரணமாக இருப்பான்னு பார்த்தா மச்சான்னு மடியில படுத்துடுறான்.. அவன் வேலைக்கு ஆகமாட்டான்... நியூட்ரல் ரேஷ்மா நீ வேஸ்டும்மான்னு சொல்லிடலாம்.. மது எதை எடுத்தாலும் வேகமாக எடுத்து மெதுவா வச்சிடுது, சாக்சிக்கு கவின் பற்றி மட்டுமே பேச வாய்க்கிறது. லாஸ்லியா எப்பவோ கவினுக்கிட்ட லாஸ் ஆயிருச்சு... அப்புறம் ஷெரின், அபி, முகன், தர்ஷன், சாண்டி, சேரன், சரவணன்னு எல்லாருமே எதுக்கும் பயன்படமாட்டாங்க... அப்ப எப்படித்தான் டிஆர்பிக்காக அடிச்சிக்க வைக்கிறது அப்படின்னு தொழில் நடத்துறவனுக்கு யோசனை வரும்ல்ல... செமையா வந்துச்சே.

கூட்டுடா சபையை... எல்லாரையும் உட்கார வையுடா... நாமினேசனை ஆரம்பிப்போம்... எப்பவும் போல அறைக்குள்ள போயி அள்ளிவிட்டுட்டு வெளியில வந்து வெள்ளக்கோழி எப்பக் கூவுச்சுன்னு சீனைப் போட்டுக்கிட்டு சீட்டியா அடிச்சிக்கிட்டுத் திரியிறிய... இந்தா இவரை ஏன் நாமினேட் பண்றேங்கிற காரணத்தோட ரெண்டு பேரை எல்லாருக்கும் முன்னால சொல்லுங்கன்னு ஆட்டத்தை ஆரம்பிச்சி வச்சிட்டு அமைதியாயிட்டாரு பிக்பாஸ்.

எல்லாருடைய முகத்துலயும் கலவர ரேகை... என்னத்தைச் சொல்லி எப்படித் தப்பிக்கன்னு யோசனை முதல்ல வா மூத்தவளேன்னு சாக்சியை ஏத்திவிட அது முதல்ல சரவணனையும் அடுத்து கவினையும் சொல்லிருச்சு... கவினுக்கு என்னடா கிருஷ்ணனுக்கு வந்த சோதனையின்னு ஆயிருச்சு... அப்புறம் எல்லாரும் மாத்தி மாத்தி கவின், மது, ரேஷ்மான்னு அள்ளி வச்சாங்க... லாஸ்லியா மதுவை நாமினேட் செய்யச் சொன்ன காரணம் சம்பந்தமில்லாதது. சாண்டியுடன் சண்டை போட்ட சூழல்... அதன் பின்னான மன்னிப்பு என எல்லாமே கடந்து சென்ற பின்னும் முதல்நாள் சாண்டியை தப்பாச் சொன்னதைச் சரிக்கட்ட மதுவை மாட்டி விட்டுருச்சு... அதேபோல் சாக்சியைச் சொன்ன காரணமும் சாக்சி கவினை நாமினேட் பண்ணியதால்தான் என்பதாகவே இருந்தது.

அதேபோல் ரேஷ்மா சேரனைச் சொன்னதும் சேரன் ரேஷ்மாவைச் சொன்னதும் மொய்க்கு மொய் பாலிசிதான்... பெரும்பாலும் ஆண்கள் பெண்களையும் பெண்கள் ஆண்களையுமே சொன்னார்கள். எல்லாத்தையும் கூட்டிக் கழிச்சிப் பார்த்தப்போ கவின், மது, அபி, சாக்சி மற்றும் ரேஷ்மான்னு ஐந்து பேர் வெளியே போகக் காத்திருப்போர் பட்டியலில் இடம் பிடித்தார்கள்.

இதுக்கு அப்புறம் என்னாச்சுன்னா... பெண்கள் எல்லாம் தன்னை நாமினேட் பண்ணுனவங்ககிட்டப் போயி ஏன் அப்படிப் பண்ணுனே... என்னோட எப்படியெல்லாம் இருந்தே... என்னைய அத்தையின்னு சொன்னே... நான் உன்னை மகனா நினைச்சேன்... நீ இப்படிச் சொல்வேன்னு நினைக்கலைன்னு அரைமணி நேரத்துக்கு மேல அழுகாச்சிக் காவியம்தான் எல்லாப் பக்கமும்.. இதையெல்லாம் விரிவா எழுதி... அட அழுத கதைதாங்க... அதெதுக்கு விரிவா... என்ன அழுதாலும் ஆட்டையில எறக்கி விட்டுட்டானுங்க... போகமா இருக்க முயற்சிக்கணுமே... எனக்கென்னவோ இந்த வாரம் சாக்சியை வெளிய எடுத்து சீக்ரெட் ரூம்ல தள்ளி, கவின் பண்றதை எல்லாம் பாருன்னு சொல்லுவாங்கன்னு தோணுது. ரேஷ்மாவைப் பொறுத்தவரை டபுள் கேம் ஆடுதுன்னாலும் தனி மனுசியாய் வாழ்க்கைப் போராட்டம் செய்பவர் என்பதால் இன்னும் சில வாரம் இருக்க வைத்தால் ஏதோ தன் பிள்ளைகளின் வருங்காலத்துக்கான பணத்தைச் சம்பாரித்துக் கொள்ளும்.

மதுவுக்கு எப்பவுமே நாக்குல சனி... கவினுக்கு ஆண்கள் யாரும் ஓட்டுப்போடலை... அவன் பண்ணினது தப்புன்னு ரேஷ்மா, சாக்சியோட பேச, ரேஷ்மாதான் நியூட்ரலாச்சே... சரவணன்கிட்ட கேட்க, அவர் உடனே இன ஒற்றுமையின்னு சொல்லிட்டாரு... அப்புறம் பஞ்சாயத்து ஓடிக்கிட்டு இருந்துச்சு... கவின் மிக நீண்ட விளக்க உரை கொடுத்தான். கொஞ்ச நேரத்துல ரேஷ்மா, கவினைக் கட்டிப் பிடிச்சிக்கிட்டு சாரி சொல்லி, தன்னோட பையனுக்கு நீதான் காலேஜ் பீசெல்லாம் கட்டணும்ன்னு கட்டையைப் போட்டுக்கிட்டு நின்னுச்சு.

கவினைப் பற்றி மட்டுமே புகார்களைத் தள்ளிக்கொண்டு திருந்தார் சாக்சி, மனவலியோடு மல்லுக்கட்டுகிறார்... கவின் தன்னை விட்டு விலகி லாஸ்லியாவுடன் குடும்பம் நடத்த ஆரம்பித்திருப்பதை அவர் விரும்பவில்லை... மீண்டும் வேண்டும் கவின் என்பதாய்த்தான் திரிகிறார்... கிட்டத்தட்ட பைத்தியநிலை... ஏதோ கோபத்தில் நாமினேட் பண்ணிவிட்டார்... இப்போ அவன் பேசலைன்னு வருந்தப்படுகிறார். ரேஷ்மாகிட்ட அவந்தானே பிரச்சினை அவங்கிட்ட எல்லாரும் பேசி நல்லவங்களாயிடுறீங்க... நான் மட்டும் கெட்டவளான்னு கேட்க, ரேஷ்மாவோ உங்கிட்ட நடந்துக்கிட்டு எங்களுக்குப் பிடிக்கலை அவனை நாமினேட் பண்ணினோம்... அவங்கிட்ட பேசக்கூடாது எப்படிச் சொல்வே... எங்களுக்கும் அவனுக்கும் என்ன பிரச்சினை... உனக்கும் அவனுக்கும் உள்ளது வேற பிரச்சினை... புரிஞ்சிக்க என சரியான பதிலைச் சொன்னார். சாக்சியைப் பொறுத்தவரை எப்ப கவினோடு குலாவும்ன்னு எல்லாம் சொல்ல முடியாது. நேரங்காலம் எல்லாம் இரண்டுக்கும் இல்லை... கோபம் கூட அடுத்த நிமிடமே அப்பீட்டாயிரும்.

சேரன் தன்னோட கிளினிங் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தார். அவர்கிட்ட போயி லாஸ்லியா எங்கிட்ட பேசுறதில்லை... முகத்தைத் திருப்பிக்கிறா... என்னன்னு தெரியலை... நீங்க பேசிப்பாருங்களேன்னு கட்டையைப் போட்டார் சாக்சி, ஆரம்பத்துல பேசும் போது மீராவான்னு வேற கேட்டுத் தொலைஞ்சிட்டார்... இந்நேரம் மீரா இந்தாளு நான் வெளியில வந்தும் என்னைத்தான் போட்ரேய் பண்ணுறாருன்னு எத்தனை யூடிப் சேனலுக்குப் பேட்டி கொடுத்துச்சோ... தெரியலை. அப்புறம் சாக்சி லாஸ்லியான்னா... கவின்  என்ன சொல்லி வச்சிருக்கான்னு தெரியலைன்னு சொன்னதும் அவ எனக்கு மக மாதிரி... மக இல்லை என்பதாய் ஆரம்பித்து அவளை இந்தப் பாதையில போகாதேன்னு சொல்லலாம்... ஆனா போறவளை என்னால தடுக்க முடியாது. கவின் என்ன பேசி வச்சிருக்கான்னு தெரியலை... அவ என்ன மூடுல இருக்கான்னு தெரியலை... யாரையும் ரொம்ப நெருங்கிப் போய் கேள்வி கேட்க முடியாது. இந்த உறவுக்குன்னு ஒரு சில கோடுகள் இருக்கு... அந்தக் கோட்டை நான் தாண்ட விரும்பலை.... அது நல்லதும் இல்லைன்னு ரொம்பத் தெளிவாச் சொல்லிட்டாரு. சாக்சி எந்தப் பக்கம் பால் போட்டாலும் கட்டை போட்டுடுறானுங்களேன்னு ஆயிருச்சு.

ரேஷ்மா அழுததுல முகினும் நாம நாமினேட் தப்பாச் செஞ்சிட்டோமோன்னு அழுக ஆரம்பிச்சிட்டான். அபி ஒரு பக்கம் அழுதுட்டு முகினோட தோள் தேடி வந்தா கக்கூஸ்ல எப்பவும் காத்திருக்கும் கவினுக்குப் பதிலா முகின் அழுதுக்கிட்டு கிடக்கான். அபி ஆறுதல் சொல்லி கட்டி அணைச்சி அவனைத் தேத்துது... முகின் அணைச்சிக்குவான்னு வந்த புள்ள முகினை அணைச்சிக்கிற மாதிரி ஆயிருச்சு என்றாலும் எப்படியோ அணைப்புக் கிடைத்ததில் அபிக்கு மகிழ்ச்சி.

சரவணன் சாண்டிக்கிட்ட சாக்சி பண்ணினதைப் பொங்கிப் பொங்க வச்சான் கவின். அப்ப சாண்டி கொஞ்ச நாள் ஒதுங்கியிருன்னு சொல்ல, இவந்தானே அவளை விட்டுட்டு இப்ப இன்னொருத்தி பின்னால திரியிறான்னு சரவணன் சொல்ல, அது நட்புண்ணான்னு சொன்னதும் இங்கேருடி நீ ஒண்ணும் தங்கப்பதக்கம் சிவாஜியில்லை நடிச்சி நல்ல நடிகன்னு பேரு வாங்க... உன்னோட கதையெல்லாம் எனக்குத் தெரியும்... நீ எப்படிப்பட்ட தில்லாங்கடின்னு... இவளைவிட வெளிய உனக்காக நிறையப்பேரு இருப்பாளுங்க... அதைத் தெரிஞ்சிக்க.... வீணாவுல லாஸ்லியா மனசுல காதலை வளர்க்காதேன்னு சொல்ல, நானே சாக்சியை கட்டம் கட்டுறதே லாஸ்லியாவுக்குத்தானேய்யா... இதுல அவளையும் விட்டுடுன்னா எப்படிங்கிற மாதிரி பார்த்தான்.

காலையில எம்ஜியார் பாட்டுப் போட்டதால சாண்டி எம்ஜிஆரா மாறி செம கலக்கு கலக்கினார்... கவினைக் கலாய்த்து... லாஸ்லியாயை ஓட்டி... ஷெரினை டபாய்த்து... சேரனுக்குப் பேர் வைக்க முடியலைன்னு வருத்தப்பட்டு  'சன்' சீரியலா இருந்த வீட்டை ஒரு பத்து நிமிசத்துக்கு மேல 'சிரிப்ப்பொலி' யாக மாற்றினார். 

சரவணன் பேருந்தில் பெண்களை உரசவே காலேஜ் படிக்கும் போது போனேன்னு கமல்கிட்ட சொன்னதுக்கு வலைத்தளப் பொங்கல்... என்னமோ எவனுமே செய்யாத மாதிரி... காலேஜ் படிக்கும் போது பஸ்ல வர்ற பசங்களும் பொண்ணுங்களும் பண்ணாத அலும்பு என்ன இருக்கு... எல்லாத்துக்கும் பொங்க மாட்டாங்க ஆனா சினிமா, தொலைக்காட்சி நிகழ்ச்சியின்னா பொங்கிருவோம்... உடனே பிக்பாஸ் சரவணனைக் கூப்பிட்டு மன்னிப்புக் கேட்க வச்சி, அவரும் நான் பண்ணின மாதிரி யாரும் பண்ணாதீங்கன்னு சொல்ல வந்தேன்... அதுக்குள்ள கமல் சார் அப்படியே கட் பண்ணிட்டு அடுத்ததுக்குப் பொயிட்டாங்கன்னு என்னமோ உளறி மன்னிப்புக் கேட்டார். சமூக வலைத்தளப் பொங்கலை எல்லாம் நாங்க உன்னிப்பாக் கவனிக்கிறோம்ன்னு விஜய் டிவி காட்டிக்கிட்டாலும் உடனடி அப்டேட் உள்ளிருப்பவர்களை மக்கள் கவனிக்கிறார்கள் என்பதை உணர்த்தியிருக்கும். உடனே சில இணையப் பத்திரிக்கைகள் கமல்தான் மன்னிப்புக் கேட்க வைத்தார்ன்னு கதைகதையா கட்டுரை எழுதிட்டாங்க... அட நொன்னைங்களா கமல் அன்னைக்கே மேடையில சரவணனை அப்படிச் சொல்லாதீங்க... பெண்கள் எல்லாம் பார்க்கிறாங்கன்னு சொல்லி மன்னிப்புக் கேட்கச் சொல்லியிருக்கலாமே... அவரும் இதை ரசிச்சிச் சிரிச்சிட்டுத்தானே போனாரு... இப்ப எதுக்கு மன்னிப்பு கேளுன்னு நிக்கிறாரு... அளக்கிறதுக்கும் ஒரு அளவு இருக்குடே... நினைச்சிக்கங்க.

அப்புறம் மதுவுக்கு பிறந்தநாள்... கேக் வந்துச்சு... கணவர் அகம் டிவி வழியே வாழ்த்துச் சொன்னார்.... மதுவும் பிக்பாஸ் வீட்டுக்கே உரிய பிறந்தநாளை எழவு வீடாக்குவதைச் செய்து அப்படியே கொஞ்சம் சிரித்து சரவணன் சேரனுக்கு கேக் ஊட்டி, இருவரின் காலிலும் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி மகிழ்ந்தார்.

நேற்று சாக்சி ஆடலை... இன்னைக்கு காலையில குட்டை டவுசர் மாட்டி ஆடியிருக்கும்... காரணம் நாமினேசன்ல இருக்கோம்ல்ல.

கவின் ஆட்டையை ஆரம்பிச்சிருப்பான்... ஏன் மச்சான் என்னை நாமினேட் பண்ணுனேன்னு குடையாக் குடைஞ்சிருப்பான்.

என்ன பண்ணுனாங்கன்னு நாளைக்குப் பார்ப்போம்.

பிக்பாஸ் தொடரும்.
-'பரிவை' சே.குமார்.

திங்கள், 29 ஜூலை, 2019

பிக்பாஸ் : வெளியே போன 'மாறாத' மீரா

Image result for bigg boss day 35 meera images
நேற்றைய பிக்பாஸ் ஆரம்பிக்கும் போது மீரா தான் சொன்னது தப்பில்லை... சேரன் தப்பானவர்தான்... கமல் ஆடுனது போங்காட்டம் எனச் சொல்லிக் கொண்டிருந்தார். சாண்டி கூட இத்தனை கேமரா இருக்குடா... அதுல தெளிவாத் தெரியுதுடா... அவர் தப்பில்லைன்னு தெரிஞ்சிருச்சுடா... பின்னே நீ அவர்கிட்ட சாரி கேட்டிருக்கலாம் என்று சொன்னபோதும் இல்ல அந்த வலியை நான் உணர்ந்தேன்... என்னால சாரி கேட்க முடியாது. நான் யார் மேலயும் தப்புச் சொல்லி உயரணும்ன்னு நினைக்க மாட்டேன் என்று பிடித்த முயலுக்கு அம்பது கால்தான்டான்னு நின்னார். இதுக்கு மேல இதுக்குப் புரிய வைக்கணும்ன்னா நம்ம தலைகீழா நின்னு தண்ணி குடிச்சாலும் முடியாதுன்னு அந்த வானத்தை பார்... உன் மூடு மாறும்ன்னு சொல்லிட்டு வாயை மூடிக்கிட்டார்.

அடுத்து கமலின் வருகை... ஒரு நாள் அழகான உடையில் அம்சமாய் மனம் கவர்வார்... அறுபது வயதிலும் ஆணழகன் என்று தோன்றும்... சில நாள் மொக்கையாய் உடை அணிந்து வருவார்.... அப்படி மொக்கையான உடையில் நேற்று... கண்ணால் காண்பதும் பொய்... காதால் கேட்பதும் பொய்... தீர விசாரிப்பதே மெய்... என்பதற்கிணங்க படம் போட்டுக் காட்டினாலும், ஏன் செய்தியில் சொன்னால் கூட ஒத்துக்கமாட்டாங்க போல என்றார்... உடனே கூட்டத்தில் கைதட்டல்... எதுக்கு இப்ப கை தட்டுறீங்க... நான் வீட்டுக்குள் இருப்பவர்களைச் சொன்னேன்... நீங்க வேறு எதையாவது நினைச்சிக்கிட்டா நான் பொறுப்பில்லை என்றார்... எதுக்குக் கை தட்டினார்கள்... கமல் வேறு என எதைச் சொன்னார் என எனக்கெல்லாம் ஒண்ணும் புரியலை.

அப்புறம் சீக்ரெட் அறையை பயன்படுத்துவார்களா...? பயன் படுத்த வேண்டுமா...? என்றெல்லாம் கேட்க, செம்மறி ஆட்டுக் கூட்டம் ஆமென்று சொல்ல, உங்களை எல்லாம் திருத்த முடியாதுன்னுட்டு அகம் டிவி வழியே அகத்துக்குள் பொயிட்டார். கூட்டமாக் கோரஸ் போட்டுக்கிட்டு செம்மறி ஆடா இருக்கீங்களேன்னு திருத்த முடியாதுன்னு சொன்னாரா.. இல்ல வேற எதுக்காச்சும் சொன்னாரா... அப்படின்னு மூளையைப் போட்டுக் குழப்புறதைவிட நாமளும் அவர் பின்னே அகம் டிவி வழியே அகத்துக்குள்.

அம்புட்டுப் பேரும் செமையான மேக்கப்போட கமலுக்காய் காத்திருந்தார்கள்... சேரன் நீக்கம் மற்ற ஐவரும் கவலையோடு இருந்தார்கள்... சரவணன் என்னை போச் சொல்லுங்கள் என்று சொன்னாலும் அப்படித்தான் சொல்லுவேன் அதுக்காக போகச் சொல்லிடாதீங்கடா என்பது போல் உட்கார்ந்திருக்க, எல்லாருக்கும் வணக்கம் சொல்லி இந்த வாரம் தொலைபேசி வழி தொல்லை கொடுக்க வந்த பெண் பேசியது சாண்டியிடம்... கேட்டது எல்லாரையும் சிரிக்க வைக்கிறீங்க... ஆனா சண்டையின்னா ஒதுங்கி நிக்கிறீங்களே ஏன்..? என்பது. இனி இறங்கி ஆடுறேன் என்று மொக்கையாய் பதில் சொல்ல, அதை வைத்துக் கமல் கலாய்க்க, உள்ள போனா சேதாரமில்லாமல் திரும்ப முடியாது சார் என ஒரு வழியாக ஒரு பதிலைச் சொல்லித் தப்பித்தார்.

அடுத்ததாக வெளியேற்றப் படலத்துக்கான காட்சிகள் என்பதாய் அபிராமி, சாக்சியிடம் பேசி யார் நாமினேட் பண்ணியிருப்பாங்கன்னு நினைக்கிறீங்கன்னு கேட்க, எல்லாரும் ஒவ்வொன்றைச் சொல்ல, சரவணன் மட்டும் நாம ரெண்டு பேரை போட்டுக் கொடுக்கும் போது நம்மளை ரெண்டு பேர் போட்டுக் கொடுப்பானுங்கதானே என எதார்த்தமாய்ப் பேச, கமல் பதார்த்தமாய்ச் சிரித்தார். சரவணன் போல் மேனரிசமெல்லாம் செம... கலைஞானியின்னு கலைஞர் சும்மாவா சொன்னாரு... நடிகனய்யா.

பார்வையாளர்களிடம் யாரைக்  காப்பாற்றலாம் என்று கேட்டதும் கவின் என்று கத்தினார்கள்... மேலே சொன்னது போல் இந்தச் செம்மறி ஆட்டுக்கூட்டம் தானாக கூடிய கூட்டமல்ல... விஜய் டிவி கூட்டிய கூட்டம் என்பது தெள்ளத்தெளிவாய்த் தெரிந்தது. கவின் காப்பாற்றப்பட, அடுத்தது சித்தப்பும் காப்பாற்றப்பட்டார். முப்பெரும் தேவியர் மட்டும் களத்தில்... மூவருக்கும் மரண கலை முகத்தில்.

கமல் ரொம்ப நேரமெல்லாம் இருக்க வைத்து இதயத் துடிப்பை எகிற விடாமல் அபிராமி நீங்கதான் வெளியேறணும்ன்னா என்ன செய்வீங்க என்றதும் நான் போகமாட்டேன்... போகமாட்டேன் எனச் சின்னப்பிள்ளை போல் சொன்னதும் அப்ப மீரா வாங்கன்னு படக்குன்னு சொல்லிட்டார். எல்லாருக்கும் ஆச்சர்யம்... இங்க பிரச்சினைக்கே அவ ஒருத்திதான் அதெப்படி அவளைப் போகச் சொல்வாங்க என்ற விவாதத்தில் சீக்ரெட் அறையில் போடவா இருக்கும் என்றார் ஷெரின்... நமக்குமே ஆரம்பத்தில் சீக்ரெட் அறை குறித்த கமலின் பேச்சின் அடிப்படையில் அப்படியும் இருக்கக் கூடும் என்றே தோன்றியது.

கிளம்பும் போது கூட மனசுக்குள்ள எதையும் வச்சிக்காதிங்கன்னு யார்க்கிட்டயும் அணைச்சிக்கலை... கவின், சாண்டி, சித்தப்பு, ரேஷ்மான்னு சின்ன வட்டத்துக்குள்ளதான்  மீரா நின்னாங்க... போட்டோவுக்கு கூட யாரையும் அழைக்கலை... சாண்டியை மட்டுமே அழைத்தார்... முகனின் அழைப்பின் பேரிலே அனைவரும் வந்தார்கள். நீங்க சொன்னபடி என்னைய அனுப்பிட்டீங்க சார் அப்படின்னு சேரனிடம் மீண்டும் ஒரு முட்டுதலை வைத்தார். சேரன் சொன்னது நான் போகணும் இல்லேன்னா அந்தப் பொண்ணு போகணும் என்பதே... கடைசி வரை திருந்தாத ஜென்மமாய் மீரா.

மேடைக்குப் போனதும் மீராவைப் பேச விட்டால் தன்னை மீளாத கோமாவில் தள்ளி விடுவார் என்ற எச்சரிக்கை உணர்வுடன் கமலே பக்கம் பக்கமாகப் பேசினார்... மீராவைப் பாதுகாப்பது நம் கடமை என்பதாய்ச் சொன்னார். எங்கே ஜூலியை விரட்டியது போல் மீராவும் பார்க்குமிடத்திலெல்லாம் மக்களால் விரட்டப்படுவாரோ என்ற பயமே காரணமாக இருக்கக் கூடும். வரும் போது கூட சேரனை நேரடியாத் தாக்கிட்டு வாரீங்க... அவர் என்னங்க பண்ணினார்... வீட்டில் போய் உட்கார்ந்து இதையெல்லாம் பாத்தீங்கன்னா உங்களுக்குப் புரியும்... அப்படிப் புரிந்து கொண்டீர்கள் என்றால் இங்கு நூறு நாள் இருந்ததற்குச் சமம் என்றார்.

உங்களுக்காக ஒரு குறும்படம் என்பதில் மீராவின் மகிழ்ச்சி, சோகம், கண்ணீர், ஆட்டம் பாட்டம் எல்லாம் கலந்து காட்டி உணர்ச்சிக் குவியலுக்குள் அவரைத் தள்ளினார். அந்த அழகிய குறும்படத்தில் 'அவ நடிக்கிறா'ன்னு ரேஷ்மா சொன்னதும் இருந்துச்சு... மீரா நடிக்கலை... சேரனை வஞ்சம் தீர்க்கப் பிரயத்தனம் செய்து எதிலும் முடியாமல் இறுதியாக எந்தப் பெண்ணும் அவ்வளவு எளிதில் சொல்ல விரும்பாத குற்றச்சாட்டை வைத்தார். நேற்று வரை நான்காம் இடத்தில் இருந்தீர்கள் அதன் பிறகே உங்கள் நிலை மாறியது என கமல் சொன்னது உண்மையே... சாக்சியே வெளியேறுவார் என்ற நிலை... இடுப்பைப் பிடிச்சார் கதையினால் மீரா வெளியே... சாக்சி உள்ளே.

மீரா அகம் டிவி வழியே அகத்துக்குள் போய் எல்லாருக்கும் நன்றி சொல்லி நல்லா விளையாடச் சொன்னார். தர்ஷனை நீதான் ஜெயிக்கிறாய்... ஜெயிச்சிட்டு வான்னு சொன்னார்... அப்புறம் கமல் காட்டிய வழியில் மாடலாய் நடந்து போனார். இன்றைக்கு மீராவின் உடை அவ்வளவு கேவலமாய்.... அதுவும் வீட்டிற்குள் உட்கார்ந்திருக்கும் போது பெண்களுக்குரிய அச்சம், மடம், நாணமெல்லாம்... சேச்சே... அதெல்லாம் எங்ககிட்ட எதிர்ப்பார்ப்பது பார்வையாளர்கள் தப்பு என்பதை மீரா, சாக்சி இருவரும் சொல்லாமல் சொல்லிக் கொண்டுதான் இருந்தார்கள்.

அப்புறம் கமல் ஒரு விளையாட்டு வைத்தார்... ஹூரோ, வில்லன், ஜீரோ என்ற மூன்று பேட்சை ஒவ்வொருவரும் போர்டில் இருக்கும் போட்டியாளர்களில் மூவருக்கு வைத்து அதற்கான காரணத்தைச் சொல்ல வேண்டும். இந்த விளையாட்டு மீராவுக்கானதாக இருக்கக் கூடும்... எதுக்குடா தேவையில்லாம ஓணானைப் பிடிச்சி வேட்டிக்குள்ள விட்டுட்டு குத்துதே குடையுதேன்னு சொல்லணும்ன்னு தப்பிச்சி, வீட்டுக்குள்ள விளையாட வச்சிட்டாரு போல.

அதில் திறம்பட போட்டி போடும் வில்லன் என பலர் தர்ஷனைச் சொன்னாங்க.... எங்களுக்கு பல விஷயங்களைச் சொல்லிக் கொடுக்கும் நல்ல ஹூரோவெனச் சேரனைச் சொன்னாங்க... லாஸ்லியா எப்பவும் எனக்கு சேரப்பாதான் நாயகன் என்றார்... எனக்கு என் மகளே தேவதை என்றார் சேரன். ஒரு வழியாக அந்த விளையாட்டு முடிவுக்கு வந்தது.

லாஸ் எங்கிட்ட பேச மாட்டேங்கிறா... என்னதான் இருந்தாலும் நாந்தானே மூத்தவ... அவ ரெண்டாவதுதானேங்கிற நினைப்புல கவின் கிட்ட கவிபாடுது சாக்சி, மூத்தவ அபிராமிடி... நீயே ரெண்டாவதுதான்... அவ மூணாவது... ஆனா அவதான் இனி எனக்கு முதல்ங்கிற முடிவோட நீ சாண்டியைச் சொல்லாம என்னைய கொள்கை பரப்புச் செயலாளர்ன்னு சொன்னதுல அவளுக்குக் கோபம் போலன்னு எதுக்கும் எதுக்குமோ முடிச்சிப் போட்டு ஒரு சிண்டை முடித்து விட்டிருக்கிறான்.

அதன் பின் கமல் விடை பெற, வீட்டுக்குள் சேரன் என் குழந்தைகள் என்னைத் தவறாக நினைத்திருக்க மாட்டார்கள் என்றார். நான் அபிராமியை விரும்பலை ஆனா அவ விரும்புறா... எனக்கு ஒருத்தி வெளியில இருக்கா... நீ என்னோட பிரண்ட்டுன்னு சொல்லிட்டேன் என்று முகன் சாண்டியிடம் சொல்கிறார். இதையும் தாண்டி ஒரு வாழ்க்கை இருக்கு... அதுல நீ, முகன் எல்லாரும் வெற்றி பெறணும்... உனக்கு முகன் மட்டும் வாழ்க்கையில்லை... நீ வெளியில நிறையப் படங்களில் நடிக்கணும் என சாக்சி, அபிக்கிட்ட தூபம் போடுறார். அபி அதே தூபத்தை எடுத்துப் பட்டி டிங்கரிங் பார்த்து முகனுக்குப் போடுது. அப்படியே நெல்லுக்குப் பாயும் தண்ணி புல்லுக்கும் பாயட்டும்ன்னு லாஸ்லியாவுக்கும் அட்வைஸ்... உன்னோட பிரச்சினையை சேரன், தர்ஷன்கிட்ட பேசுன்னு சொல்ல, என்னோட பிரச்சினை எனக்குத் தெரியும்... அதை அவங்க சரி பண்ண முடியாது நாந்தான் பண்ணிக்கனும் அதுக்கு சில நாள் ஆகும்ன்னு சிரிச்சிக்கிட்டே லாஸ் சொல்லியாச்சு.

ரேஷ்மா, சாக்சி மற்றும் ஷெரின் புல்வெளியில படுத்துக்கிட்டு நட்சத்திரம் பார்க்கிறாங்க... லாஸ்லியா இப்பல்லாம் ரொம்ப ஓவராப் பண்ணுறாங்கிற செய்தியைப் பகிர்ந்து கொண்டு... அப்ப அங்க வர்ற சாண்டி, எங்க வீட்டுல சண்டையின்னாக்கூட போனை எடுத்துக்கிட்டு நான் பாட்டுக்கு சண்டைக்கு இடையில புகுந்து பேசிக்கிட்டுத்தான் போவேன்... சமாதானமெல்லாம் பண்ண மாட்டேன்... அதுதான் நான்... அப்படின்னு கமல் மாதிரிச் சொல்லிட்டு, மீரா ரொம்ப நல்லவ... என்ன கலாய்ச்சாலும் ஏத்துப்பா... இங்கயின்னு இல்ல... வெளியிலயும் கலாய்ப்பேன்... இனி யாரைக் கலாய்ப்பேன்... இனி நாங்க மூணு பேருமாக் கலாய்ச்சுக்க வேண்டியதுதான்னு சீனைப் பலமாப் போட்டாரு.

வனிதா, மீரான்னு ரெண்டு வில்லிகளையும் விரட்டிட்டியா... இனி டிஆர்பிக்கு எங்க போவோம்... உங்களை வச்சே உங்களைச் சாத்துனாத்தான் நாங்க கல்லாக் கட்ட முடியும் என்பதால் இன்று முகத்துக்கு நேரே திறந்த மனதுடன் திறந்த வெளியில் நாமினேசனாம்... குத்திக்கிட்டு சாகுங்கடா... 

பிக்பாஸ் தொடரும்.
-'பரிவை' சே.குமார்.

ஞாயிறு, 28 ஜூலை, 2019

மனசு பேசுகிறது : தங்க மீன்

Image result for பெண்

பெரும்பாலான பெண் குழந்தைகள் எப்போதும் அப்பா செல்லமாகத்தான் இருப்பார்கள்... இருக்கிறார்கள். தானாகவே தோன்றும் எதிர்பாலின அன்பா அல்லது அப்பாக்களின் மீதான தனித்த நேசமா என்றெல்லாம் பட்டிமன்றம் நடத்தத் தேவையில்லாத அன்பு அது... அந்த அன்பிற்கு உலகில் எதுவும் ஈடாகாது. எதையும் எதிர்பார்த்து கொடுக்கப்படும் அன்பல்ல அது... எதையும் எதிர்பார்க்காமல் நேசத்தை மட்டுமே யாசிக்கும் அன்பு அது.

எத்தனை வயதானாலும் அப்பாவின் அன்புக்கு ஏங்கும் குழந்தையாகத்தான் பெண்கள் இருக்கிறார்கள்... அப்பாக்களும் அப்படியேதான். அம்மாக்களிடம் அதீத ஒட்டுதல் இல்லாது போகக் காரணியாய் அமைவது பெரும்பாலும் உடன் பிறந்தவன் அம்மாவின் நேசத்தை அப்படியே லவட்டிக் கொள்வதால்தான்... ஆண் குழந்தைகள் என்னதான் அப்பா மீது பாசமாக இருந்தாலும் அதெல்லாம் ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேல் அதிகம் தொடர்வதில்லை... அப்படியே தொடர்வதென்பது அரிது.

எங்கள் வீட்டில் இருவருமே அப்பா மீது அதீத பாசம் கொண்டவர்கள்தான் என்றாலும் விஷாலை விட ஸ்ருதியே வெறித்தனமான பாசத்தை மனசுக்குள் வைத்திருக்கும். எத்தனை திட்டினாலும் அடுத்த நொடியே மறந்து விடுபவர்கள்தான் இருவரும் என்றாலும் ஸ்ருதியின் பாசம் எப்போதுமே விஷாலை முந்திக் கொள்ளும். விஷால் மிகவும் நெருக்கமாய் இருக்கும் சமயத்திலெல்லாம் எப்பவும் அவன் கூடத்தான்.... எங்களை எல்லாம் கண்ணுல தெரியாது உங்களுக்கு என்ற கோபம் ஸ்ருதிக்குள் எட்டிப் பார்க்கத் தவறுவதில்லை.

விஷாலைப் பொறுத்தவரை வீட்டில் விகடகவி அவன்... அலுவலகம், கவலை, கஷ்டம் என எல்லாம் மறந்து சிரிப்பதென்பது இரவு ஊருக்குப் பேசும் அந்த ஒரு மணி நேர வீடியோ அழைப்பில்தான்... நல்ல மூடில் இருந்தான் என்றால் அவன் நம்மைச் சிரிக்க வைத்துக் கொண்டே இருப்பான். அதனாலேயே ஸ்ருதியை விட அவன் மீது அதீத நேசம் இருப்பது உண்மைதான். தற்போதெல்லாம் அம்மாவும் மகனுமான வாழ்க்கையில் பெரும்பாலும் அம்மாவுக்கான பேச்சுக்குத்தான் முன்னுரிமை கொடுக்கிறான். அப்பாவை விட அம்மாதான் பெரிதென்பதாய் பேசுபவனை எங்கே சிரிக்காமல் பேசு என்றால் சிரித்து விடுவான்.

நாம் பேச வந்தது தங்க மீன்களைப் பற்றி என்பதால் விஷாலை விடுத்து ஸ்ருதியோடு பயணிக்கலாம்.

பதினொன்றாம் வகுப்புக்கு மதுரையில் ஹாஸ்டலில் விட்டு வந்தபின் எழுந்த வேதனைகள் சொல்லி முடிவதில்லை. என்னை விட மகளையும் மகனையும் அருகில் வைத்து பார்த்துப் பார்த்து வளர்த்த மனைவிதான் அழுது கொண்டே இருந்தார். வீட்டுக்குள்ளயே வளர்ந்த பிள்ளை... தனியிடத்தில் அதனுடைய தேவைகளை அதுவே பூர்த்தி செய்து கொள்ள வேண்டிய சூழலில் என்பதையெல்லாம் எண்ணிக்கூடப் பார்க்க முடியவில்லை. 

செல்லமாய் வளர்ந்தாலும் அடுத்த வருசம் ஹாஸ்டல்லதான் விடணும்... வீட்டுல வச்செல்லாம் என்னால பார்க்க முடியாது என்று சொன்னவர் எம்மகளைப் பார்க்காமல் இருக்க முடியலைன்னு அழுது என்னிடம் திட்டெல்லாம் வாங்கினார். விஷால் கூட வீட்டுக்குள் தனிமையை உணர்ந்தான். யாருமற்ற வீட்டுக்குள் அடைபட்டுக் கிடப்பது போல் எண்ண ஆரம்பித்தான். சண்டைக்கோ சமாதானத்துக்கோ ஆளில்லை... எதுவென்றாலும் அம்மா மட்டுமே என்ற நிலையில் ஸ்ருதி மீதான நேசம் அவனுக்குள்ளும்... தனியே ஒரு அறையில் நான்கு வெவ்வேறு சூழலில் வளர்ந்த பெண் பிள்ளைகளுடன் தங்கியிருப்பதால் தம்பி மீதான் கோபமெல்லம் போய் மெல்ல நேசக்கரம் நீட்டும் பாசம் ஸ்ருதிக்குள்ளும் துளிர் விட ஆரம்பித்து இரண்டு மாதத்தில் அதீதமாய் வளர்ந்தும் விட்டிருக்கிறது. கறை நல்லதென்பதைப் போல பிரிவு நல்லதெனக் காட்டியது... எலியும் பூனையுமான அவர்களின் ஒட்டுதல் பாசத்தைக் காட்டிக் கொண்டிருக்கிறது.

வெள்ளிக்கிழமை மாலை நான் பேசலாம் என்று சொல்லியிருப்பதால் விடுமுறை தினம் என்பதால் மதிய உணவுக்குப் பின் எல்லாரும் தூங்கினாலும் நான் மட்டும் விழித்திருப்பேன்... எங்கே தூங்கினால் மகளுடன் பேச முடியாமல் போய்விடுமோ என்பதாலும் பெரும்பாலும் மதிய தூக்கத்தை விரும்பமாட்டேன் என்பதாலும்... என் குரல் கேட்பதற்காகவே என் மகள் அங்கே காத்திருப்பார் என்பதும் கூட இமை மூட மறுக்கும் காரணியாய்.

வார்டனின் நம்பரில்தான் அழைக்க வேண்டும் என்பதால் அழைத்ததும் அவர் ஸ்ருதியை அழைப்பார். பால் பீய்ச்சும் போது கன்றை அவிழ்த்து விட்டதும் ஓடிப்போய் அன்னையின் மடியில் காம்பைத் தேடி வாய் வைக்கும் கன்றை 'அப்ப்ப்பா' என்றழைப்பதில் காண்பேன்... தங்க மீனாய்... கண்ணான கண்ணாய்... அந்தப் பாசம் உயர்ந்து நிற்கும்.

மகிழ்வாய்ப் பேசிக்கொண்டிருக்கும் போதே போனைக் கட் பண்ணிருவானே என்ற நினைப்பு மனதில் தோன்ற ஆரம்பித்ததும் அழுகையுடன் பேச ஆரம்பிப்பார்... பின்னர் மெல்லத் தேற்றி, ஒரு வழியாக அந்த வாரப் பேச்சை முடித்துக் கொள்வேன். பின்னர் சில வாரங்களில் அம்மாவுடன் பேசும் புதன் இரவில் நானும் கலந்து கொள்வதுண்டு.

ஞாயிறன்று பெற்றோர் பார்க்க அனுமதித்திருந்ததால் வீடியோ காலில் மகளைப் பார்த்துப் பேசலாம் என்பதாலும் வெள்ளி சில காரணங்களால் கூப்பிட இயலாதென்றும் மனைவியிடம் சொல்லியிருந்தேன். அவரும் சரி என்று சொல்லிவிட்டார். 

இரவு எட்டு மணியைப் போல் வார்டன் வீட்டுக்குப் போன் பண்ணி 'ஸ்ருதி அப்பா ஏன் பேசலை...? அவரைப் பேசச் சொல்லுங்க... ஸ்டெடிக்குப் போச்சொன்னா ப்ளீஸ் மிஸ் அப்பா இப்பப் பேசிடுவாங்க... பேசுன உடனே போறேன்னு சொல்றா... பார்க்கப் பாவமா இருக்கு... அப்பா மேல இம்புட்டுப் பாசம் வச்சிருக்கா' அப்படின்னு சொல்ல, 'இல்லை அவரு ஏதோ வெளியில இருக்காராம்... பேச முடியலைன்னு சொன்னார்.... ஞாயிற்றுக்கிழமை பேசச் சொல்றேன்'னு சொல்லியிருக்காங்க. 'ஞாயிற்றுக்கிழமையா..? நாளைக்காச்சும் பேசச் சொல்லுங்களேன்... அவ ரொம்ப ஏங்கிப் போயிருவா போல'ன்னு சொன்னதும் சரி சொல்றேன்னு சொல்லியிருக்காங்க.

அவங்க பேசிட்டு வச்சதும் எனக்கு என்னவோ மகள்கிட்ட பேசணும்ன்னு தோண, அவங்க சித்தப்பா (சித்தியின் கணவர்) போனில் இருந்து அழைத்தேன்... அப்பவே வார்டன் நல்லவேளை பேசுனீங்க.... காத்துக்கிட்டே இருந்துட்டு இப்பத்தான் ஸ்டெடிக்குப் போனான்னு சொன்னாங்க... எனக்கு சூழலின் தீவிரமெல்லாம் தெரியாது... வார்டன் மனைவியிடம் சொன்னது தெரியாது... அப்பா பேசுவாங்கன்னு காத்திருந்தது தெரியாது... ஆனா பேசாம இருக்க வேண்டாம் ரெண்டு வார்த்தையாவது பேசலாம்ன்னு மட்டும் தோணியதாலேயே பேசினேன்.

எப்பவும் போல் மகிழ்வாய்ப் பேசினார்... நீண்ட நேரம் பேசினார்... இடையில் சித்தப்பாவுடனும் பேசினார்... பேசி முடிக்கப் போகும் தருவாயில் வெடித்து அழுதார்... ஏய் என்னடா ஆச்சி.... அதான் அப்பா பேசினேனுல்ல... ஞாயிற்றுக்கிழமை வீடியோ கால் பண்ணுறேன் என்றெல்லாம் சமாதானம் சொல்லி... முத்தம் கொடுத்து, முத்தம் வாங்கி முடித்துக் கொண்டேன். அதன் பின் என் வேலைகள் முடித்து மனைவிக்குப் போன் பண்ணியபோது பாப்பாக்கிட்ட பேசிட்டேன்னு சொன்ன போது எப்பப் பேசினீங்க... பேசலைன்னு சொன்னீங்க... வார்டன் போன் பண்ணினப்போ அவரு வெளியில இருக்கார் பேச மாட்டாருன்னு சொன்னேன்னு சொன்னாங்க.

வார்டன் பேசுனாங்களா... எதுக்குன்னு கேட்டதும் மேலே சொன்ன காத்திருந்த கதையைச் சொன்னார்... வார்டன் சொன்னதும் எனக்கு அழுகை வந்திருச்சு என்றார்... நானும் அழுதிட்டேன்... என் போனுக்காக... குரலுக்காக காத்திருக்கும் குழந்தையின் மனசு தெரியாமல் நாளை பேசிக் கொள்ளலாம் என்று இருந்தது எவ்வளவு பெரிய தவறென்பதை உணர்ந்தேன். பெண் குழந்தைகள் அப்பாவின் அன்புக்காக ஏங்குபவர்கள்தான் என்பதை என் மகள் எனக்குக் காட்டினார்.

இன்று காலை மகளை பார்க்கப் போன மனைவியிடம் பேசி மகளுடம் பேசும் போது அப்பா ஊருக்கு வரவாடா என்றதும் வாங்க இங்க வந்து ஜென்ஸ் ஹாஸ்டல்ல தங்கிக்கங்க.... நான் தினமும் உங்களைப் பார்த்துப்பேன் என்றார் கண்ணீருடன்.. விஷாலுக்கு அப்பா வரணும் என்ற எண்ணம் மனசுக்குள் இருந்தாலும் அங்கயே இருங்க என்று சத்தமாய்ச் சொல்வான் அம்மா பிள்ளை என்பதை நிரூபிக்கும் பொருட்டு. மகளோ வா என்கிறார் அப்பா பெண்ணாய்...

தங்க மீன்களுக்கு எப்பவும் அப்பாதான் நாயகன்... அப்பாதான் உலகம்... அப்பாதான் கடவுள்...

அப்பாக்களுக்கு அவர்கள் ஆத்தாக்கள்.
-'பரிவை' சே.குமார்.

பிக்பாஸ் : அடித்து ஆடிய கமல்

Image result for bigg boss day 34 cheran images
சேரன் கெட்டவர் என்ற மீராவின் பேச்சுக்களும் சேரன் ஒழுங்காவே விளையாடலை என்ற கவினின் கல்லெறியுமாகக் நகர்ந்த பிக்பாஸ் சுவை கூட்டவில்லை என்பதை என் நேற்றைய பதிவிற்குத் தனபாலன் அண்ணனின் கருத்தும் பிரதிலிபியில் சகோ. புவனா ராஜபாண்டியின் கருத்தும் உணர்த்தியது. சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்... அங்க குண்டுசட்டிக்குள்ளதான் குதிரை ஓட்டினார்கள் பின்னே என்னத்தை எழுதுறது..? பிக்பாஸ் பார்ப்பதும் எழுதுவதும் பெருங்குற்றம் என்போர் மத்தியில் என் பதிவை வாசித்தும் கருத்து இட்டும் தொடரச் சொல்லும் நட்ப்புக்களுக்கு நன்றி.

சனி, ஞாயிறு என்பது ஆண்டவரின் அட்டகாசத்துக்கான நாட்கள்... நேற்றைய நாளிலும் அந்த அட்டகாசம் தொடர்ந்தது... சாண்டி - மது விவகாரத்தில் சறுக்கிய கமல், சேரன் - மீரா விவகாரத்தில் உலககோப்பை அரையிறுதியில் அசராது அடித்து ஆடிய ஜடேஜா போல் களத்தில் கலக்கினார். அதுவும் செய்த தவறை மீராவின் பேச்சின் மூலமாகவே வெளிக் கொண்டு வந்தது செம.

எப்பவும் போல் மேடைக்கு வரவில்லை கமல், தொழில்நுட்பக் கலைஞர்கள் பயன்படுத்தும் சுரங்கப்பாதைக்குள் நின்று இருட்டுக்குள் வெளிச்சம் காட்டினார். இங்கிட்டு நான்... அங்கிட்டு அவங்க... இரண்டுக்கும் இடையில் ஒரு சின்னத் தடுப்புத்தான்... தடுப்புக்கு அங்கிட்டு அவங்க என்ன பண்ணுறாங்கன்னு பாருங்கன்னு அஸ்கீ வாய்ஸ்ல பேசினார். 

கேமரா இங்கிட்டு இருந்து அங்கிட்டுப் போச்சு.

அங்கே கரகாட்டக் கோஷ்டியெல்லாம் மேக்கப் போட்டுக்கிட்டு இருந்துச்சு... கமலைக் காண பரபரப்பாகத் தயாராகிக்கிட்டு இருந்தாங்க... மறுக்கா கேமரா அங்கிட்டு இருந்து இங்கிட்டு வந்துச்சு... அப்போ கமல் சீக்ரெட் ரூமூக்குள்ள நின்னுக்கிட்டு இது என்னன்னு உங்களுக்குத் தெரியும்... இதுக்கு கண்ணாடி... முன்னாடி... பின்னாடியின்னு குணா கமல் மாதிரி ஏதோ பேசி, இங்க இந்த வாரமே யாராவது வரலாம்... அல்லது அடுத்த வாரம் வரலாம் என்றெல்லாம் சொன்னார். 

இந்தப் பீடிகைக்குப் பின்னே இன்று மீரா வெளியேற்றப்படும் பட்சத்தில் இங்கு தங்க வைக்கப்படலாம் என்றே தோன்றுகிறது. மீராவையும் வெளியேற்றிவிட்டால் வீட்டில் யாரும் பிரச்சினையைக் கிளப்ப வழியில்லை என்பதை பிக்பாஸ் உணராமலா இருப்பார். இங்க குந்திக்கின்னு உள்ள உன்னையை என்ன பேசுறாங்கன்னு பாருன்னு சொல்லப் போறாங்கன்னு தோணுச்சு.

அப்புறம் மேடைக்கு வந்த ஆண்டவரை அத்திவரதரைக் கண்ட மக்கள் போல், விவிஜபிகளைப் பார்த்த அத்திவரதரின் அர்ச்சகர்களைப் போல் ஆராவாரமாய் வரவேற்க, கிராமப் பஞ்சாயத்து என்பது எனக்குப் பிடித்தது... அதை நான் செய்து வருகிறேன்... அதைப் போல் ஒரு நிகழ்ச்சி இடம்பெற வேண்டும் என்று நினைத்தால் நல்லாத்தான் நடிச்சாங்க... ஆனா செமை சூடு அந்த இடத்தில்... இன்னமும் அந்தச் சூடு தொடருதுங்க... நீங்களே பாருங்கன்னு அகம் டிவி வழி நம்மை உள்ளே போச் சொல்லிட்டு அவர் நகர்ந்து கொண்டார்.

அங்கே 'போட்ரேய்' மீரா 'என்னோட மேக்கப் பாக்சைத் திருடி ஒளிச்சி வச்சிட்டு, டாஸ்க் முடிஞ்சிம் தரலை தெரியுமா... ஆனா லாஸ்லியாவுக்கு மட்டும் அப்பவே கொடுத்துட்டாங்க... அப்புறம் கவின்தான் எடுத்து ஒளிச்சி வச்சிருக்கான்னு ரேஷ்மா சொன்னதும் அவங்கிட்ட கேட்டா, எடுத்துக் கொடுத்துட்டு மச்சீ இதை நானா எடுத்து ஒளிக்கலை சாக்சிதான் ஒளிச்சி வைக்கச் சொன்னான்னு போட்டுக் கொடுத்துட்டும் போறான். இந்த வீட்டுல லாஸ்லியா செல்லப் பொண்ணு... நான் செல்லாத பொண்ணு' அப்படின்னு புலம்ப, மேக்கப் போட்டாலும் போடலைன்னாலும் நீ ஒரே மாதிரித்தான் இருக்கே... முகத்துக்கு மேக்கப் போடுறதைவிட வாய்க்கு ஒரு பூட்டப்போடு என மனசுக்குள் சொல்லிவிட்டு மழங்க விழித்தபடி சாண்டி உட்கார்ந்திருந்தார்.

அந்தப்பக்கமா கவின்கிட்ட 'மீராவோட மேக்கப் பாக்சை நான்தான் ஒளிச்சி வைக்கச் சொன்னேன்னு சொன்னியா..?' அப்படின்னு சாக்சி கேட்டதும் 'ஆமா மச்சி... இல்லேன்னா அவ வீணாவுல உங்கிட்டச் சண்டைக்கு வருவா... அதான் உன்னைக் காப்பாத்த அப்படிச் சொன்னேன்...' அப்படின்னு உன்னோட நலம் விரும்பி நானுங்கிற மாதிரிச் சொன்னான். 

சாக்சிக்கு உண்மையில் மொழிப் பிரச்சினை இருப்பது இவனுக்குச் சாதகமாயிருச்சு இல்லேன்னா, 'அடேய் மூதேவி நீ எம்பேரைச் சொல்லாம ஜாலிக்காக நாந்தான் எடுத்து ஒளிச்சி வச்சேன்ன்னு சொல்லிட்டு வந்திருந்தியன்னா என்னையக் காப்பாத்துனதா அர்த்தம்... இப்பப் பண்ணிட்டு வந்தது போட்டுக் கொடுக்கிறதுடா என் டுபுக்கு'ன்னு நாலு விளாசு விளாசியிருக்கும்.

அப்புறம் மொழிப்பிரச்சினையை நீயும் மீராவும் சேர்ந்து பேசித்தானே எடுத்தீங்கன்னு சொன்னதும் பய ரொம்பக் கோபமாக் கம்பு சுத்திட்டு எந்திரிச்சிப் பொயிட்டான்... அப்புறம் மறுபடியும் லிவிங்க் ஏரியாவுல ராத்திரி ஒரு மணிக்கு சாக்சி சமாதானம் பேசுது... விட்டா எங்க லாஸ்கூட லவ்விருவானோன்னு மறுபடியும் கக்கத்துல வச்சிக்கப் பாக்குது. ஆனா அவனோ லாஸூக்கா சாக்சை கழட்டி குப்பையில போட்டுட்டு கக்கூஸ்ல கானா பாட நேரம் பார்த்துக் காத்திருக்கிறான் என்பது உலகறிந்த உண்மை.

மதுவும் ரேஷ்மாவும் இன்னைக்கு யார் வெளியேறுவாருன்னு பேசுறாங்க...  சாக்சியாம்... கவினாம்... அவங்களோட கணிப்புல கல்லைத் தூக்கிப் போட, இப்படித் தத்திகளா இருந்துக்கிட்டு நாங்க முழிப்பானவங்கன்னு முழி பிதுங்கப் பேசுறீங்களேம்மா.

ஜாலிக்காக ஜெயிலுக்குப் போன புள்ளைங்களை பிக்பாஸ் வச்சி தாளிச்சிக்கிட்டு இருந்தார். கஞ்சி, கூழ் அப்படின்னு கொடுத்து, சப்பாத்தி மாவைப் பிசைந்து சப்பாத்தி தேய்த்துக் கொடுங்க ஆனா உங்களுக்கு அதுல பங்கில்லை... நான்தான் சாப்பாடு கொடுப்பேன்னு சொல்ல, பூவான புள்ளைங்க ரெண்டும் பாலை வெயில்ல மல்லாக்கப் படுத்த மாதிரி காய்ஞ்சு போயி பிக்பாஸ்க்கிட்ட கெஞ்ச ஆரம்பிச்சிருதுங்க... இரவுதான் பிக்பாஸ் மனம் வருந்தி வெளியில விட்டாரு. இனி ஒரு பயபுள்ள ஜெயில் போறேன்னு சொல்ல மாட்டானுங்க.

கமல் மேடைக்கு மீண்டும் வந்து அகம் டிவி வழியே அகத்துக்குள் போனார்... அங்கே மேக்கப் சகிதம் எல்லாரும் அகம் மகிழ அமர்ந்திருந்தார்கள். நாட்டாமை டாஸ்க்கை எல்லாரும் அருமையாப் பண்ணுனீங்கன்னு சொல்லிட்டு தர்ஷனுடைய ஒன்லைனரைப் பாராட்டி, ரேஷ்மாவின் திருட்டுத்தனத்தைப் பாராட்டி மது - சாண்டி பிரச்சினைக்கு வந்தார்.

சாண்டியிடம் நகைச்சுவையைத் தொடருங்கள்... ஆனா அது மத்தவங்க மனசைப் பாதிக்கக் கூடாது... ஒருத்தரைத் தாக்கிச் செய்யிறது காமெடி... அதுவே நமக்குத் திரும்பும் போது டிராஜடியின்னு எல்லாம் சொல்லி மதுவின் பிரச்சினையை மதுவிடமே கேட்டார். மது பேசும் போது நீங்களும் நகைச்சுவையாய் எடுத்துக்கணும்... நீங்க போட்ட சண்டையின் இறுதியில் காமெடி ஆயிருச்சு... எல்லாருமே பேசுறீங்க... ஆனா ஒருத்தர் பேசும் போது அடுத்தவர் குறுக்கீடு... அப்புறம் மற்றொருவர்... இப்படி மாறிமாறித்தான் நகருது என்றவர் 'என்னைப் பேச விடுறீங்களா..?' வசனத்தை மெல்ல ஆரம்பித்து கோபமாய் முடித்தார். நானே நவரச நாயகன்... கலைத்தாயின் செல்லப்பிள்ளையும் நாந்தாய்யா... என்னை மிஞ்ச ஒருவன் உண்டோ என்பதாய் இருந்தது அது... சூப்பர் கமல்.

மது பேச... சாண்டி பேச... கமல் சாண்டி பக்கமாகவே நின்றார்... ஒரு கட்டத்தில் மது நேரடியாகவே அவரைக் கண்டிக்க மாட்டேங்கிறீங்களே சார்... என்னையவே குத்தம் சொல்றீங்கன்னு கேட்டுட்டாங்க.... உடனே சாண்டி ஒரு டான்ஸ் ஆடுங்க... என்று ஆடச் சொல்லி... இன்னும் வேகமா... இன்னும் வேகமாவென மதுவைச் சாண்டி சொல்லியது போல் சொன்னார். மதுவின் முகத்தில் மகிழ்ச்சியில்லை... சாண்டிக்கு கொண்டாட்டம்... 

ஏன் இப்படிப் பண்ணினார் கமல்..? பெண்ணுக்கே உரிய உபாதையுடன் தான் அடைந்த வலி, அவமானம், வேதனை எல்லாமுமாய் தன் கோபத்தைக் கொட்டித் தீர்த்த மதுவுக்கு ஆறுதலாய் மற்றவரின் மனதைப் புண்படுத்துதல் தவறு... அந்த விஷயத்தில் நீங்கள் செய்தது தவறுதான் என சாண்டியை ஏன் கடிந்து கொள்ளவில்லை கமல்..? சாண்டிக்கு என்றால் ஒரு நியாயமா இந்த வீட்டில்..? அப்போ எனக்கு எல்லாரும் ஒன்றுதான் என்று சொல்லும் கமல் மதுக்களுக்கு ஏன் நியாயம் பேசவில்லை..? 

இந்த இடம்... இந்தப் பஞ்சாயத்தின் தீர்ப்புத்தான் ஆண்டவர் சறுக்கிய இடம்... கமல் செய்தது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாய்த்தான் இருந்தது... அது மதுவுக்கு மட்டுமில்லை... சாண்டியால் பாதித்த எவருக்கும் மருந்து இடவில்லை... மாறாக சாண்டியை உச்சாணிக் கொம்பில் ஏற்றி வைத்தது. இதில் சாண்டியின் செய்கை குறித்து மற்றவர்கள் யாருமே கருத்துச் சொல்லாமல் இருந்தது அவரைப் பகைத்துக் கொள்ளக் கூடாது என்பதாய்த்தான் இருந்தது என்றாலும் தன் மனக் கருத்தைத் தனிமனிதனாய் சேரன் சொன்னதற்கு.... சல்யூட் சேரன்.

அடுத்ததாக சேரன் குறித்த மீராவின் புகாருக்குள் நுழைந்தார் கமல்.... அவரின் படம் நல்லாயில்லைன்னு சொல்லியிருந்தா அவர் கொஞ்ச நேரம் நின்னுட்டு அப்படியா சரியின்னு போயிருப்பார்... நானெல்லாம் அப்படித்தான் கடந்திருக்கிறேன்... ஆனா அவரே சரியில்லை என்னும் போது அவர் எப்படிக் கடக்க முடியும்..? சேரனை எதிர்க்கும் சரவணன் கூட இந்த விஷயத்தில் சேரன் பின்னே நின்றது சிறப்பு என்றார்.

அந்த விஷயத்தில் என்ன நிகழ்ந்தது என்பதை நாங்கள் பார்த்தோம்... ஆனா பாதிக்கப்பட்ட நீங்க சொல்லுங்க என மீராவிடமே விடையைத் தேடி கேள்வியை இறக்கினார். மீரா எப்பவும் போல ஒரு சட்டிக்குள்ள வார்த்தைகளைப் போட்டுக்  குலுக்கி எடுத்துப் பேச ஆரம்பித்தது... சேரன் தப்பானவர் என்பதை மட்டும் நண்டுப்பிடியாக பிடித்து நின்றது. 

இது ஒரு விளையாட்டு... அங்கு அவர் விளையாடுபவராகத்தான் இருந்தாரே ஒழிய சேரனாக இல்லை என்ற கமல் பஸ்ல போகும் போது எதார்த்தமாக இடிபடுவதில்லையா... அவரவருக்கு அலுவலகம் செல்ல வேண்டிய அவசரம்... கூட்டத்துக்குள் கைகால் படத்தான் செய்யும் ஆனாலும் சிலர் இடிக்கவே வருவார்கள் நான் இல்லை என்று சொல்லவில்லை எனச் சொன்னதும் சரவணன் சிரித்தார்... பாருங்க அவருக்கு கொண்டாட்டத்தை என்றதும் இல்லை சார் நான் காலேஜ் படிக்கும் போது இடிக்கவே போயிருக்கிறேன் என்றாரே பார்க்கலாம். பார்வையாளர் பகுதியில் இருந்து கைதட்டல்... சித்தப்பு எதார்த்தமாய் இருத்தல் காரணமாக அவ்வளவு சீக்கிரமெல்லாம் வெளியில் வரமாட்டார்.

கமல் எவ்வளவு சொல்லியும் மீரா தன் நிலையில் இருந்து இறங்கவில்லை... நீங்க உணரலை.. ஆனா அவரோட பிடியின் வலியை நான் உணர்ந்தேன்... கட்டித்தான் தூக்கினார்... வீசி எறிந்தார்... பிடி சரியில்லை என்றதும் எங்கே நடித்துக் காண்பியுங்கள் என்றார் கமல். சாண்டியை மீராவாக்கி, தான் சேரனாகி நடித்துக் காண்பித்தார்... அவர் சொன்னதில் பாதி கூட அந்த நடிப்பில் இல்லை... சட்டையைக் கசக்கியதற்காக சாண்டி கோபப்பட்டார்.

ஒரு  கையில் வெத்தலைப் பெட்டி மறு கையால் லாஸ்லியாவைப் பிடிக்க முயற்சி அப்படியிருக்க அவர் எப்படி உங்களை அவ்வளவு வேகமாகத் தள்ள முடியும்..? கட்டித் தூக்க முடியும்..? கவனித்துப் பார்த்தால் நீங்க அவரை வேகமாக அடிக்கிறீர்கள்.. ஆனா அதைச் சேரன் கண்டுக்கவேயில்லை என்றும் சேரன் சாரி எதற்காகக் கேட்டார்... எல்லாரிடமும் வேறு கேட்டார்... விட்டால் தூக்கத்தில் தட்டி எழுப்பினாலும் சாரி கேட்டிருப்பார் என்றெல்லாம் சொல்லியும் மீராவிடமிருந்து சேரனை நோக்கி ஒரு சாரியை பறக்கவிட கமல் பிரயத்தனம் பண்ணியும் மீரா தரையிறங்கவில்லை என்ற போது நீங்கள் கேட்ட குறும்படம் உங்களுக்காக என்று சொல்ல, மீராவை விட கவினின் முகம்தான் கவலை தோய்ந்து இருந்தது.

குறும்படம் மிகச் சிறப்பாக சேரனின் செய்கையைக் காட்ட, சேரன் கண்ணீர் மல்க கும்பிட்டார்... மீராவைப் பொறுத்தவரை குறும்படம் கூட பிக்பாஸால் மாற்றப்பட்டதாய்த்தான் நினைக்கிறார் என்பதான முக ரேகைகள்... சேரன் தவறிழைக்கவில்லை என்பதை எல்லாரும் சொன்னார்கள்... கவின் கூட சரியாகத் தெரிகிறது அவரிடம் ஒரு மன்னிப்புக்கேள் என்றும் சொல்லிப் பார்த்தான்... ஆனா மீராவைப் பொறுத்தவரை சேரன் கெட்டவர்... அதிலிருந்து மாறவில்லை... மாறவும் மாட்டார்... அவரின் மனம் அப்படித்தான் பழகியிருக்கிறது. உண்மை ஒருநாள் வெளிவரும் என்றெல்லாம் பேசினாரேயொழிய தன் உண்மை உடைந்து விழுந்ததில் இருந்து கற்றுக் கொள்ளவோ கழண்டு கொள்ளவோ நினைக்கவில்லை.

மீராவே சிரித்தபடிதான் அந்த இடத்தில் கடந்து வருகிறார்... எப்பப் பார்த்தாலும் உண்மை வெளிவரும்ன்னு சொல்றது சிரிப்பாத்தான் சார் இருக்கு... ஒரு குறும்படம் தனக்குச் சாதகமாகியதால் எல்லாக் குறும்படமும் அப்படியே இருக்கும் என்ற மிதப்புத்தான் பொழைப்பைக் கெடுக்குது என அபி பேசியது அருமை. லாஸ்லியாவைப் பொறுத்தவரை சேரப்பா... அப்பாதான்... அவர்கிட்ட மகள்கள் மீதான பசத்தைத்தான் தான் காண்பதாவும் அவரைப் போயி இப்படி... என வார்த்தைகள் வராது கலங்கி நின்றார். 

ஒரு மனிதன் தானே கெட்டவனாவது சுலபம்... ஆனால் அவனைக் கெட்டவனாக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகள் எப்போதும் வெற்றி பெறுவதில்லை. சேரனைப் பொறுத்தவரை விளையாட்டின் போது அந்தப் பெண்ணின் வயிற்றில் கை வைத்துத் தள்ளியிருக்கிறார்... அது விளையாடில் இயற்கை... ஆனா அந்தத் தொடுதல் தன் வயிற்றுப் பகுதி கடந்து மார்பினடியில் இருந்ததாய்ச் சொல்லும் முன் கேமராக்கள் சூழ்ந்த இடத்தில் இருக்கும் போது இதனால் பாதிப்பு யாருக்கு என்பதை உணர்தல் நலம்... அதை கமல் அவ்வளவு பேசியும் மீரா உணரவில்லை என்பதிலிருந்து அவரின் குணம் 'கெட்ட குணம்' என்பதை உணரமுடிந்தது.

சேரன் ஏன் அழுதார்...? அழுதிருக்கக் கூடாது என்றார் கமல், அப்போது சேரன், 'சார் நான் ரெண்டு பெண் குழந்தைகளின் தகப்பன்... ஒரு இயக்குநராய் வெற்றி, தோல்வி, அவார்டுகள் எல்லாம் வாங்கியிருப்பதல்ல என் வாழ்க்கை... அது ஒருபுறம் என்றால் அதைக் கடந்த மறுபுறம் இருக்கிறது... அது தந்தையாய் என் பிள்ளைக்களுக்குச் சேர்த்து வைக்கும் மரியாதை... அதுவே வாழ்வு... அதுதான் நிரந்தரம்... என் குழந்தைகளுக்கு என்னைத் தெரியும்... ஆனாலும் பொதுவெளியில் இப்படியான குற்றச்சாட்டு நாளை என் மகள்களுக்கு மாப்பிள்ளை பார்க்கும் போது இந்தாளு கைபோட்டுத்தான் வெளியே வந்தான் அப்ப அவனோட பிள்ளைகள் எப்படியிருக்கும்ன்னு என்னோட வளர்ப்பைக் கேள்விக்கு உரியதாகும். அதனால்தான் சார் அழுதேன்... இப்பக்கூட உங்களை எப்படி எதிர்க் கொள்வதென்ற தயக்கத்துடனும் பயத்துடனும்தான் வந்தேன்... இன்னைக்கு என் மனைவிக்குப் பிறந்தநாள்... எப்பவும் அவங்க கூடவே இருப்பேன்... இந்த முறை இல்லை... இந்த நிகழ்வை அவங்க எப்படி எதிர்க்கொண்டாங்களோ... ஆனாலும் என் மனைவிக்கு என்னைத் தெரியும்' என்றபோது ஒரு தகப்பனாய்... கணவனாய்... தான் தப்பானவன் என ஒரு பெண் சொல்லியதில் ஏற்பட்ட வலியை உணர முடிந்தது. சேரனின் கண்ணீரில் வழிந்தோடியது சில நாட்களாய்ச் சுமந்த மிகப்பெரிய வலியின் வேதனை.

மேலும் எல்லாரோடவும் நல்லாத்தான் பழகுறேன்... என்னமோ தெரியலை மீரா கூட மட்டும் ஒத்துப் போகலை... சரியாகும்ன்னு காத்திருக்கிறேன் சார் என்று சொன்னது உண்மையில் சேரன் தப்பானவரில்லை என்பதைக் கோடிட்டுக் காட்டியது என்றாலும் மீரா தான் கிழித்திருக்கும் கோட்டுக்குள் இருந்து வெளியே வரவேயில்லை என்பதுதான் எல்லாருக்கும் மிகப் பெரிய ஏமாற்றம்.

ஒரு வழியாக சேரனின் பிரச்சினையை முள்ளை முள்ளால் எடுப்பது போல் பிராது கொடுத்த மீராவை வைத்தே முடிவுக்குக் கொண்டு வந்த கமல், எனக்கு இங்க எல்லாரும் ஒண்ணுதான் சேரனுக்குப் பரிந்து பேசவில்லை... அதற்காக மீரா எனக்கு எதிரியும் இல்லை என்று சொன்னார். மிகச் சிறப்பான நிகழ்வு... கமல் ராக்ஸ்.

மீராவைப் பொறுத்தவரை சராசரி மனுசி கிடையாது... மனதளவில் பாதிக்கப்பட்ட பெண்ணாகத்தான் தெரிகிறார். இவரைச் சீக்ரெட் ரூமுக்கு அனுப்பும் பட்சத்தில் தனிமை இன்னும் தீவிரமான மனநோயை உண்டாக்கும்.... அதன் விளைவுகள் அடுத்தடுத்த வாரங்களில் இன்னும் தீவிரமாகும். அவருக்குத் தற்போதைய தேவை கவுன்சிலிங். வெளியாகிறார் என்றால் வீட்டுக்கு அனுப்புதலே நலம்... 

மீரா வெளியே வந்தால் யூடியுப் சேனல்கள் பேட்டி என்ற பெயரில் சேரனின் வேட்டியை அவிழ்க்கக் காத்திருப்பார்கள்... பத்து நாளைக்கு மீரா பிஸியாவார்... சேரன் மீது எவ்வளவு சேற்றை வாரி இறைக்க முடியுமோ அவ்வளவு இறைப்பார்... 

எது எப்படியோ தப்புச் செய்யாத மனிதனைப் பற்றி தவறாகச் சொன்னதற்காக மன்னிப்புக் கேட்க மறுத்தல் என்பது என்ன வகை..? மன்னிப்புக் கேட்பதால் அவர் முன் மண்டியிட்டு விட்டோம் என்பதல்ல.... அவர் மனதில் உயர்ந்துவிட்டோம் என்பதே நிகழும் என்பதை உணரா மனமும் உண்டோ..? அப்படி உண்டெனில் அது மிகவும் ஆபத்தானது... அப்படியான மனம் மீராவுக்கு இருக்கிறது.

சிறந்த நடிகன் முகன் என்றதை யாராலும் ஏற்க முடியாது என்பதை கமலும் சொல்லாமல் சொல்லி கடைசிப் பெஞ்சில் அமர்ந்திருக்காதீர்கள் முன்னாடி வாருங்கள் என்று சொன்னதுடன் லாஸ்லியாவின் மனம் அங்கில்லை என்பதைச் சுட்டிக்காட்டி நீங்களும் முன்னாடி வரணும் என்றார்.

அடுத்து அறுவரில் யார் அறுவடை...? என்பதான கமலின் கேள்விக்கு எல்லாரிடமும் அமைதி... சேரனைப் பொறுத்தவரை தன் அறுவடையை விரும்பினார் என்றாலும் உள்ளிருக்க வேண்டும் என்ற எண்ணமும் மனசுக்குள் இருப்பதை முகம் காட்டியது. சரவணன் போகும் எண்ணத்தில் இருந்து விலகியிருப்பதை அவரின் புன்னகை காட்டியது. கவினுக்கு எப்படியும் நிற்போம் என்ற நம்பிக்கை கண்ணில் தெரிந்தது.  சேரன் விவகாரத்தில் தனக்கு கண்டிப்பாக வெளியேற்றம்தான் என்பதை மீரா உணர்ந்திருந்ததை உலர்ந்த புன்னகை சொல்லியது. மற்றவர்களுக்கு கொஞ்சம் பயமிருந்தது.

உங்களில் ஒருவர் காப்பாற்றப்படுவார் என்ற கமல், என்ன சேரன் சொல்லிடலாமா என்றதும் சேரன் சொல்லலாம் சார் என்க, அதான் சொல்லிட்டேனே என்றபடி கடையை மூடினார்.

முன்னதாக தலைவரைத் தேர்ந்தெடுக்கும் டாஸ்க், இப்படியான அறிவாளித்தனமான டாஸ்க்கெல்லாம் பிக்பாஸ்தான் தேர்வு செய்கிறாரா... அல்லது தனியாக ஆட்களை வேலைக்கு அமர்த்தியிருக்கிறார்களா... என்ன ஒரு கேனத்தனமான டாஸ்க்... தர்ஷன் தலைவரானார்... வேலைக்குப் பிரித்து விட்டுவிட்டு எதாயிருந்தாலும் அப்பவே வந்து பேசுங்கடா... முதுகுக்குப் பின்னாடியோ மூணு நாள் கழித்தோ பேசாதீங்க... அப்படின்னு ரொம்ப முன்னெச்சரிக்கையோட பேசினான்.

மொத்தத்தில் இன்று நவரச நாயகனின் உலகத்தரமான நிகழ்ச்சியாய் இருந்தது. மீரா - சேரனில் அடித்து ஆடியவர் சாண்டி-மதுவில் ஒரு பக்கமாய் நின்றதுதான் தவறாகத் தெரிந்தது. சாண்டிக்கு அவ்வளவு இடம் கொடுக்கத் தேவையில்லை. கமல் அதிலும் சரியாகப் பேசியிருந்தால் 'அடிதூள்'ன்னு சொல்லலாம்... ஆனால் அங்கு கோட்டை விட்டுவிட்டார் என்பதால் 'தூள்' மட்டுமே.

இன்று வெளியாவது மீராவா / சாக்சியா?

வீட்டுக்குப் போவார்களா... அல்லது சிறப்பு அறைக்கு போவார்களா...?

பிக்பாஸ் தொடரும்.
-'பரிவை' சே.குமார்.

சனி, 27 ஜூலை, 2019

பிக்பாஸ் : காட்டுச் செடி கவின்

Image result for bigg boss 3 day 33 images

பிக்பாஸில் ஒரு வழியாக கிராமத்து நாட்டாமை டாஸ்க்கை முடிச்சிட்டாங்க... அப்புறம் எப்பவும் போல சிறந்த இருவரை எடுக்கச் சொல்ல, லாஸ், அபி, ஷெரின் மூவரும் மீராவை முன் மொழிந்ததால் இந்தப் புள்ளைங்க சொன்னாச் சரியாத்தானிருக்கும்ன்னு எல்லாரும் ஒண்ணாமண்ணா நின்னு மீராவையும் தர்ஷனையும் சொன்னாங்க... எல்லாரும் சொல்லும் போது நாம எதுத்து நின்னா வயித்தைப் புடிச்சி இழுத்தேன்னு வண்டி வண்டியாக் கதை விட்ட காண்டுல சொல்றேன்னு எல்லாப் பயபுள்ளயும் நம்மளப் பிராண்டு வாங்கன்னு சேரனும் பேசாம இருந்துட்டாரு...  என்னடா நடக்குது இங்கன்னு புரிந்தும் புரியாமல் மீரா பார்த்துக்கிட்டு இருந்துச்சு... பின்னே தன்னை சிறந்த நடிகைன்னு சொன்னா... படுத்தே கிடந்த புள்ளைக்கு பக்குன்னு இருக்காதா..?

அடுத்து ரொம்ப நல்லாச் செஞ்சவங்க யாருன்னதும் டக்குன்னு அபிராமியை குளிர்விக்க முகின்னு சொல்லிட்டானுங்க... அவன் என்னடா பண்ணுனான்... அபி கூடவேதானே திரிஞ்சான்... இவனுக்கு எதுக்குக் கொடுத்தாய்ங்கன்னு அம்புட்டுப் பேருக்கும் ஆச்சர்யம். சரி மூணு பேரும்தான் இந்த வார தலைவர் பதவிக்கான ஆளுங்கன்னு சொல்லிட்டு பிக்பாஸ் அடிச்சிக்கிட்டு நாறுவீங்கன்னு பாத்தா பேசாமலா இருக்கீங்க... இப்ப பாருங்கடான்னு மனசுக்குள்ள சொல்லிக்கிட்டே யாரு ரெண்டு பேருடா சரியாவே விளையாடலைன்னு கேட்டாரு... அபியும் லாஸூம் நாங்கதான்னு எந்திரிச்சி நிக்கி, கவின் ஆட்டத்தை ஆரம்பிச்சான்... அவனுக்கு லாஸ் என்னவோ புழல் ஜெயிலுக்குப் போற மாதிரி நினைப்பு... ரெண்டு நாளாவே வடிவேலுவின் நானும் ரவுடி கணக்கா, நாஞ்  ஜெயிலுக்குப் போறேன்னு நின்ன லாஸூக்கிட்ட அதெல்லாம் விடமாட்டேன்னு நின்ன பய, சேரன் தான் சரியில்லைன்னு ஆட்டையை ஆரம்பிச்சான். சொம்பைத் தூக்கி வீசினேன்னு சொன்னதும் சேரன் என்னோட வேலை என்னவோ அதைத்தான் செய்தேன். நான் கோபப்பட காரணமாக இருந்தது லாஸோட வேலையாலதான்னு விளக்கினார்.

அவன் அத்தோட விடலை... சேரனை கட்டம் கட்டி லாஸை பக்கத்துல உக்கார வச்சிக்க ரொம்பப் பிரயத்தனம் பண்ணினான். பத்தாததுக்கு ரேஷ்மா வேற வடிவேலா மாறுறேன்னு சேரனோட மோதுச்சு... எல்லாப் பக்கமும் அடி வாங்குன சேரன் ஏதோ கட்டிச் சேருங்கடான்னு சொல்ல, கவின் மெல்ல ஷெரின், சாக்சிதான் மொழி தெரியாமத் தப்புப் பண்ணுனாங்கன்னு சின்னவளைக் காப்பாத்த மூத்தவளைக் காவு கொடுத்தான். இதுதான் சாக்குன்னு தலைவராவே ஆயிட்ட பீல்ல இருந்த மீரா, சைக்கிள் கேப்புல பிளேன் ஓட்டி, ஷெரின், சாக்சிக்கு நடிப்பே வரலைடாங்கிற மாதிரி ஒரு போடு போட்டுச்சு... விடுமா ஷெரின்...?

கலாச்சாரம் , மொழியின்னு எல்லாம் ஏன்டா பேசுறீங்க கருமம் பிடிச்சவனுங்களா... மொழி தெரியாதுன்னு இந்த பிக்பாஸ் நாயிக்குத் தெரியாமயா பதினாறு நாயில்ல எங்களையும் கூட்டியாந்துச்சு... கலாச்சார காவலர்களா நிக்காதீங்கடா... மொழி தெரியலைன்னாலும் நாங்க உங்க கூட வெள்ளாடலையாடா வெண்ணைங்களா... எவளுக்கோ பல்லக்குத் தூக்க எங்களை ஏன்டா பாடையில ஏத்துறீங்கன்னு கவினைக் காய்ச்ச, லாஸைக் காப்பாத்த நாம பேசினது நம்ம மானத்தைக் காத்துல போ விட்டுருச்சேன்னு மச்சி... புரிஞ்சிக்கடா... நா அப்படி... மச்சி... சாரிடா... என்ன சொன்னென்னா... புரிஞ்சிக்கடா... மச்சி... அப்படியில்லடா... சேரன் ஒண்ணுமே செய்யலையா... அதைத்தான்... ரேஷ்மா.... பாத்தியா.... பேசாம நிக்கிறா... மச்சி... இங்கருடா... புரிஞ்சிக்கடா... அப்படின்னு ரொம்ப நல்லவனாட்டம் நாடகம் போட்டான்.

அப்புறம் அழுத சாக்சிக்கிட்ட மறுபடியும் பேச, நீ ஏன்டா அப்படிப் பேசினேன்னு அவங்க அழ, இவன் கெஞ்ச... ஒரு கட்டத்துல நீதான்டா தப்புன்னு சொன்னதும் பய கோபத்துல கத்தினான். இதுக்கு இடையில மீராவை எப்படிச் சொல்லுவீங்கன்னு ஒரு பஞ்சாயத்து சேரன், மது, தர்ஷன் கொடி பிடிக்க, மீராவை விட நான் நல்லா வெளாண்டேனா... ஆமா... அப்ப மீராவை விட நீ நல்லா விளையாண்டியா... ஆமா.. அதுக்கு அப்புறம் மீராவை விட சேரன் நல்லா விளையாண்டாரா... அட ஆமா... அப்புறம் மீரா நம்மளை விட நல்லா விளையாடலைதானே... அதுதான் நானும் சொல்றேன்... ஷெரின் எப்படி நடிக்கணுமோ அப்படி நடிச்சிச்சு இல்லையா... அதுவும் சரிதான்... இப்ப யாரைச் சொல்லணும்...? எல்லாருமாப் பேசி நின்னாங்க... நமக்குத்தான் என்ன பேசுறாங்கன்னு தெரியாம நின்னோம்.

நாங்க சொன்னப்போ ஏன் எதுக்கலை... பெஞ்சு மேல ஏறி நின்னு கத்தலைன்னு லாஸூம் அபியும் கேட்க, மீரா என்னைய எப்பவும் நாமினேட்தான் பண்ணுவீங்க... இன்னக்கித்தான் என்னை தலைவியாக்க நல்லவள்ன்னு சொன்னீங்க... அப்பவே எனக்குத் தோணுச்சு... ஏதாவது பர்னிச்சரை உடைப்பீங்கன்னு... இந்தா உடச்சிட்டீங்கதானே... நல்லாயிருங்கன்னு மீரா எப்பவும் போல ஏரியாவுல இருந்து வெளியாகி படுக்கப் போயாச்சு. அப்புறம் பேசி மதுதான் நல்லா வெளாண்டுச்சுன்னு சொல்லும்மான்னு தலைவி ரேஷ்கிட்ட சொல்லி, பிக்பாஸ்க்கிட்ட பேசிட்டு வான்னு சொன்னதும் அது நேரா மீராவோட மின்னல் குரூப்புல போயி பத்த வக்கிது. கவின் குதிக்கிறான்... அப்படி ஒரு குதி.

எல்லாத்தையும் பார்த்துக்கிட்டு நின்ன சரவணன்... முகின் நல்லா விளையாண்டான்னு சொன்னப்ப முழிச்ச சரவணன், ஏன்டா நொன்னைங்களா... பொட்டச்சி ஜெயிலுக்குப் போறான்னு பொங்கிக்கிட்டு சேரன் விளையாடலை... பூரான் விளையாடலைன்னு குதிக்கிறீங்களே... அன்னைக்கு என்னை ஜெயிலுக்குப் போகச் சொன்னப்போ சூத்தை மூடிக்கிட்டுத்தானேடா உக்காந்திருந்தீங்க... அப்ப ஏன் குதிக்கலை... இங்க எல்லாரும் விளையாடத்தான் வந்திருக்கோம்... நாளைக்கு வேற ஆளுக்கு ஒண்ணுன்னாலும் எல்லாரும் பேசாமத்தான் இருப்போம்ன்னு சொல்ல, அண்ணே அதுல பாடம் கத்துக்கிட்டோம்... அதுக்காக வெளாடாத ஆளை எதுக்கு வெளிய விடணும்ன்னு கம்பு பலமாச் சுத்தினான்.... ஒரு தடவை கூட நான் லாஸ், சாக்சி பின்னாலதான் சுத்தினேன்... வெளாடவே இல்லை அதனால நான் ஜெயிலுக்குப் போறேன்னு சொல்லவே இல்லை. இவன் நல்லவன்னு கம்பு சுத்துறவங்கள்லாம் யோசிச்சுச் சுத்துங்கப்பு... இது வெசக் கம்பு.

அப்புறம் என்ன பண்ணுனானுங்க... ஏது பண்ணுனானுங்கன்னு தெரியாது. மொத்த பட்ஜெட் 2600 கிடைச்சும் 500 செஞ்ச தவறுகளுக்காகப் போயி 2100 கிடைச்சும்... கணக்கு சரியாப் போடாம மொத்தப் பட்ஜெட்டையும் தொலச்சிட்டு உக்கார்ந்திருந்தானுங்க... பிக்பாஸ் எல்லாத்தையும் கொடுக்கத்தான் போறாரு... கொடுக்காம பட்டினியா போடப் போறாரு... ரொம்பச் சோகமா இருந்தானுங்க.

சாக்சிகிட்ட ரேஷ்மா கவின் லாஸூக்காக கம்பு சுத்துறான்... அதுதான் உன்னைய தூக்கி ஜெயில்ல போடச் சொன்னான்னு உண்மையை சொல்லி, இன்னமும் அவன் பின்னால சுத்தினா நீதான் லூசு... அவனுக்குத் தேவை லாஸூன்னு சொல்ல, சாக்சி புரிஞ்ச மாதிரி தலையாட்டுது.

அபியும் லாஸூம் ஜெயிலுக்குப் போக, காபி கொடுக்கப்பட பிக்பாஸ் ஜெயிலுக்கு சாப்பாடு கொடுப்போம்ன்னு சொல்லி கஞ்சி அனுப்புறாரு... ரெண்டு பேரும் சாப்பிட்டுட்டு அபி பாட்டுப் பாட... ஷெரினும் சாக்சியும் முகத்தைத் தூக்கி வச்சிக்கிட்டு உக்கார்ந்திருக்குதுங்க.

பிக்பாஸ் தொடரும்.
-'பரிவை' சே.குமார்.

சினிமா: ஆடும் கூத்து

Image result for Aadum Koothu
சேரனின் தயாரிப்பில் டி.வி.சந்திரன் திரைக்கதையில் 2005-ல் உருவாக்கப்பட்டு பல திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு  2008 டிசம்பர் 26-ல் சில தியேட்டர்களில் மட்டும் வெளியிடப்பட்ட,  சிறந்த திரைப்படத்துக்கான தேசிய விருது பெற்ற படம் 'ஆடும் கூத்து'.

கதையின் கதையாய் கடையநல்லூரில் தலித் பெண்ணைத் தனது பகையின் காரணமாக ஊரார் முன் கட்டி வைத்து தலையை மொட்டையடித்து விடுகிறார் ஒரு ஜமீந்தார். அந்தக் கதையை 1975-ல் படமாய் எடுக்க நினைத்து படமும் எடுக்க ஆரம்பிக்கிறார் புரட்சிகர இயக்குநரான சேரன், படத்தின் நாயகனாய் அவரும் நாயகியாய் நவ்யா நாயரும் ஜமீந்தாராய் பிரகாஷ்ராஜூம் நடிக்கிறார்கள். அந்தப் படம் முழுவதும் எடுக்கப்பட்டதா இல்லையா என்பதை பேசும் படம்தான் என்றாலும் இந்தக் கதைகளைக் கடந்து நிகழ்காலக் கதைக்குள் பயணிக்கிறது 'ஆடும் கூத்து'.

கல்லூரி மாணவி மணிமேகலை... அப்பாவை 'அழகிய நம்பியாப் பிள்ளை' எனப் பேர் சொல்லி அழைக்கும் அளவுக்கு வீட்டில் செல்லம். வாழாவெட்டியாய் வீட்டில் அத்தையும்... திருமணமே செய்து கொள்ளாத சித்தி, காது கேட்காத ஆச்சி, திருமணமாகியும் கணவன் பிரச்சினையால் வீட்டில் இருக்கும் அத்தை பெண், தன்னைத் திருமணம் செய்து கொள்ள இருக்கும் அத்தை பையன் முத்து எனப் பலரும் வீட்டுக்குள்... எல்லாருக்கும் செல்லமாய் மணிமேகலை.

மணிமேகலை எதையாவது பார்த்துச் சொல்லும் போது அவள் ஏதோ சொல்கிறாள் என்பதாய் பார்க்கும் குடும்பத்தின் முன் அவள் பைத்தியக்காரியாகவும் தெரிகிறாள். படத்தின் முதல் காட்சியில் ஒரு கொலையைப் பார்த்துச் சொல்கிறாள்... அங்கு சென்றால் கொல்லப்பட்ட தடையமே இல்லை... வீட்டில் திட்டு... இப்படித்தான் நகர்கிறது அவளின் வாழ்க்கை... ஆனாலும் அவள் சொல்வதெல்லாம் எப்படியும் நிகழ்ந்துதானிருக்கிறது என்பதை கொல்லப்பட்டதாய்ச் சொன்னவன் தலையில்லாமல் ஆற்றில் இருந்து எடுக்கப்படுகிறான்.

முத்து ஆன்பாய் ஆசையாய் வாங்கிக் கொடுக்கும் வளையல் பழைய பிலிம் சுருளை உருக்கி உருவாக்கப்பட்டது என்பதை அவளிடம் சொன்ன போது அதைக் கேலி செய்கிறாள். குளக்கரையில் துணி துவைக்கும் போது அந்த வளையலில் இருந்து விரிகிறது கருப்பு வெள்ளையாய் 'ஆடும் கூத்து'... அதில் ஆடிக் கொண்டிருக்கிறார்கள் நவ்யாவும் சேரனும்... பயந்து வீட்டுக்கு வருபவளுக்கு அன்று அம்மாவின் அணைப்பில் தூங்கத் தோன்றுகிறது.

அதன் பின் அவ்வப்போது அந்தக் கதையை விரிக்கிறது வளையல். அவளும் பித்துப் பிடித்தவள் போலாகிறாள். நண்பரின் ஆலோசனைப்படி அவளின் அப்பா மனோதத்துவ மருத்துவரிடம் கொண்டு செல்கிறார். அவரும் அவளுக்கு ஒன்றும் இல்லை திருமணம் செய்து வையுங்கள் என்று சொல்ல, திருமண மண்டபத்தில் மணப்பெண்ணாய் அமர்ந்தவளின் முன்னே விரிகிறது 'ஆடும் கூத்து' படத்தின் மொட்டை அடிக்கும் காட்சி... மணிமேகலை பித்துப் பிடித்தவள் போலாகிறாள்... திருமணம் நிற்கிறது. மருத்துவமனையில் கதை சொல்கிறாள்... மொட்டை அடிக்கப்பட்டது எனக்குத்தான் என்று சொல்லும் போது அப்பா முடிவுக்கு வருகிறார் இவள் முழுப் பைத்தியமென.

Image result for Aadum Koothu

திருமணம் நின்றதால் ஊரில் மாமாவின் துணிக்கடையிலும் வீட்டிலும் இருக்க விரும்பாத முத்து பத்திரிக்கையில் வேலைக்குச் சேருகிறான். அங்கு பழைய பேப்பர்களைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது ஆடும் கூத்து குறித்த ஒரு செய்தி...  மணிமேகலை சொன்னது உண்மைதான் என்பதால் அவளிடம் ஓட. அவளோ அவனையும் இழுத்துக் கொண்டு அந்த ஊரைத் தேடிப் பயணிக்கிறாள்.

விபரம் விசாரித்து பிரகாஷ்ராஜைப் பார்த்து கதையைக் கேட்கிறார்கள்... மணிமேகலை பிறந்தது 1985... படம் எடுக்கப்பட்டது பத்தாண்டுக்கு முன்னர்... ஆனால் கதையின் நாயகி மாதிரி ஒருத்தி தன் முன்னே நிற்கிறாளே என்ற வியப்புடன் கதையை விரிக்கிறார் பிரகாஷ்ராஜ்... ஜமீந்தாரின் மகன் பிரச்சினையால் படம் பாதியில் நிற்கிறது. மொட்டையடித்த நாயகின் நிலை என்ன..? இயக்குநர் என்ன ஆனான்..? ஜமீந்தார் மகன் என்ன ஆனான்..? என்பதை எல்லாம் விவரிக்க, அந்தத் தலித் பெண்ணைத் தேடிப் போகிறாள் மணிமேகலை.

நின்று போன ஆடும் கூத்தின் முக்கிய கதை நாயகியான தலித் பெண்ணை வைத்து ஒரு சிறு குறும்படமாகத் தயாரித்து அதை வெளியிடுகிறாள். ஜமீந்தார் செய்ததை ஊரறியச் செய்கிறாள்.

மணிமேகலையை விரும்புவதாகச் சொல்லிக் கொண்டு வீடு தேடி வரும் அவளின் ஆசிரியர் தேவையில்லாத கதாபாத்திரம்.

மணிமேகலை மற்றும் நடிகையாக நவ்யா நாயர்... மிகச் சிறப்பான நடிப்பு. இயக்குநர் ஞானசேகரனாக சேரன், சினிமாவில் ஜமீந்தாராக நடித்த வாத்தியார் பிரகாஷ்ராஜ், ஜமீந்தாரின் மகனாக, பேரனாக சீமான், அப்பாவாக தலைவாசல் விஜய், அம்மாவாக ரேகா, டாக்டராக ஜெகதி (நடிப்பு செம ரகளை), ஆச்சியாக சுகுமாரி, அத்தை பையனாக ஆரி, அத்தை பெண்ணின் குடிகார கணவனாக பாண்டியராஜன், தலித் பெண்ணாக மனோரம்மா என எல்லாருமே மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு மது அம்பாட், இசை இசாக் தாமஸ் கொட்டுக்காப்பள்ளி இருவரும் மிகச் சிறப்பாக தங்களது வேலையைச் செய்திருக்கிறார்கள்.

பலர் பார்த்திருக்கலாம்... பார்க்காதவர்கள் பாருங்கள்... ஆடும் கூத்து அசர வைக்கும். இப்படியான படங்களை இயக்கியும் தயாரித்தும் தமிழ்ச் சினிமாவில் கோலோச்சிய சேரன், வாழ்வியல் சிக்கலால் பிக்பாஸ் வீட்டுக்குள் கேவலப்பட்டுக் கேவிக்கேவி அழுவதைக் காணும் போது சிக்கல்கள் மனிதரைச் சின்னாபின்னம் ஆக்குவதைக் கண்டு கஷ்டமாகத்தான் இருக்கிறது. நாமும் அப்படித்தானே நகர்ந்து கொண்டிருக்கிறோம்.
-'பரிவை' சே.குமார்.

வெள்ளி, 26 ஜூலை, 2019

பிக்பாஸ் : 'சேரன் அயோக்கியன்' சொன்னது மீரா

Image result for bigg boss 3 day 31 images
சேரன் இரவில் அழுதிருக்கக் கூடும் என்றும் அவமானங்களால் ஒரு நல்ல கலைஞன் அடிபட்டுக் கொண்டிருத்தல் வலியைக் கொடுக்கிறது என்றும் நேற்றுத்தான் எழுதியிருந்தேன். தனபாலன் அண்ணா கூட அதற்கு யாரும் இருக்கும் இடத்தில் இருந்தால் எல்லாம் சௌக்கியமேன்னு கருத்தும் இட்டிருந்தார்... அது உண்மைதான். அதைவிட பெரிய அவமானமும் எல்லாரின் முன்னால் உடைந்த அழுதலும் அடுத்த நாளே நிகழ்ந்திருக்கிறது.

மீரா தன்னை எப்படியாகிலும் முன் நிறுத்த எடுக்கும் ஆயுதங்களெல்லாம் அவருக்கு எதிராகவே திரும்புவதால் ஒவ்வொரு முறையும் அதன் வீச்சை அதிகமாக்கிக் கொண்டே இருக்கிறாரே ஒழிய, அதை விட்டு எல்லாருடனும் சேர்ந்து நிகழ்வுகளைக் கலகலப்பாகக் கொண்டு போவோம் என்றெல்லாம் சிந்திப்பதே இல்லை... யாருக்கு ஓட்டு அதிகமிருந்தாலும் பிக்பாஸ் மீராவை வெளியேற்றுதல் நலம்... அல்லது சேரனின் ஆசைப்படி அவரை வெளியில் கொண்டு வந்து விடலாம்... இதைவிட இன்னும் கேவலமான பிரச்சினையைக் கூட மீரா கிளப்பக் கூடும்.

இரண்டு நாட்களாக மோசமாகப் போய்க் கொண்டிருக்கும் நிகழ்ச்சியைத் தூக்கி நிறுத்தும் பொருட்டாக சரவணன் ஒரு கதையை கவின், சாண்டியிடம் சொல்கிறார். அதாவது உங்க நாட்டாமையும் எங்க நாட்டாமையும் கணவன் மனைவிதான்... எங்க நாட்டாமைக்கு தான் தலமையாக இருக்கணும்ன்னு ஆசை... ஆனா உங்க நாட்டாமை விட்டுக் கொடுக்கலை... அதுல பிரச்சினையாகி தன்னோட பெண் குழந்தையோட அவ பொறந்த ஊருக்கே வந்து நாட்டாமை ஆயிருச்சு... அதோட குழந்தைதான் லாஸ்லியா... ரெண்டு பேரையும் பேசி சேர்த்து வைக்கணும்டான்னு சொல்றாரு.

இதைச் சேரன் மற்றும் மதுவிடம் சொன்னதும் அவர்களும் நடிக்க ஒத்துக் கொள்கிறார்கள். நாடகம் அரங்கேறுகிறது... எல்லாருமே மிகச் சிறப்பாக நடிக்க, லாஸ்லியா சொம்பத் திருட, முந்தாநாள் நடந்தது மாதிரி திருடி... அதைக் கொடுடின்னு எல்லாரும் விரட்ட... நாட்டாமை அதுவும் சொம்பு தொலைத்த நாட்டாமை என்பதால் சேரனும் போய் இழுத்து வர, மது இது நம்ம புள்ளைங்கன்னு சொன்னதும் மன்னிச்சு விட்டுடுறாரு... நாட்டாமை பாசத்துக்கு கட்டுப்பட்டுட்டாருன்னு கவின் கேலி பண்றான். இந்தக் கேப்புல ரேஷ்மா வெத்தலைப் பொட்டி மற்றும் சொம்ப எடுத்து மறைச்சு வச்சிருது. அதைத் தேடிக்கிட்டு சேரன் அலைய, மணிக்கொருதரம் சொம்பத் தொலைக்கிறதே நாட்டமைக்கு வேலையாப் போச்சுன்னு கவின் கவுண்டர் கொடுக்க எல்லாரும் ரசிக்கிறாங்க.

அப்பத்தான் மீரா ஒரு பிரச்சினையைத் தூக்கிட்டு தலைவிக்கிட்ட போகுது... உடனே தலைவி டாஸ்க்கை விட்டுட்டு மீராவோட கதையைக் கேளுங்கன்னு ஏத்திவிட்டுட்டு பேசாம உக்காந்துருச்சு... லாஸ்லியாவை பிடிச்சப்ப எல்லா ஆண்களும் ஒதுங்கி நிற்க, சேரன் மட்டும் உள்ள வந்து என்னைப் பிடிச்சி இழுத்தாரு... அதுவும் இங்கன்னு வயித்தைக் காட்டுச்சு... அப்புறம் அவரோட செயல் விளையாட்டாய் இல்லை... தொடக்கூடாத இடத்தில் தொட்டார்ன்னு சொல்லுச்சு... சேரன் மறுத்தார்... சரவணன் அந்த இடத்தில் சரியாய்ப் பேசினார்... இது விளையாட்டு... இதுல போயி அங்க தொட்டார் இங்க தொட்டார்ன்னு பேசுறதெல்லாம் தப்பு... இதை நீ அவர்கிட்ட தனியாப் பேசியிருக்கணும்... எல்லார் முன்னாடியும் சொல்லக்கூடாதுன்னு சொன்னார். ஆனா இதுதான் எனக்கு தெரியும்... அவர் தப்பானவர்ன்னு எப்பவும் போல அடுத்தவங்களைப் பேச விடாமல் கத்த ஆரம்பிக்க, நான் அங்கு வந்தது டாஸ்கின் அடிப்படையில்தான்... உன்னைத் தள்ளியது உண்மை... என்னோட வேகம் என்னன்னு தெரியும்... அதுக்கு என்னை மன்னிச்சுக்க... ஆனா தப்பாத் தொட்டேன்னு சொல்லாதேன்னு சொல்ல, மதுவும் சரியாகப் பேச, மீரா எப்பவும் போல் கன்னியமில்லாத பேச்சைத் தொடர்ந்தது.

Image result for bigg boss 3 day 31 losliya with cheran images

நீ அன்னைக்கு ரெமோ டான்ஸ் ஆடுனியே அப்ப எங்க தொட்டு ஆடுனாங்கன்னு லாஸ்லியா கேட்டதுக்கு அவங்க என்னோட பிரண்ட்ஸ் அப்படின்னு சொன்னுச்சு... பிரண்ட்டுன்னா ஒண்ணு மத்தவங்கன்னா ஒண்ணான்னு கேட்க, அப்படித்தான்னு மீரா ஆணி அடிச்சிச்சு. அதோட விடாம நான் இருக்கிற துறையில தொட்டுப் பேச மாட்டாங்க தெரியுமான்னு சொல்லுச்சு பாருங்க... பார்த்தவங்களுக்கெல்லாம் மயக்கமே வந்திருக்கும்... ஆமா அம்மணி இருக்கிறது மாடலிங் துறை... ரொம்ப மரியாதையான துறைதான்... அப்புறம் எல்லாரும் பேசியும்... வீராயி விதண்டவாதம்தான் பேசுவாள்... வீணாவுல எதுக்குப் பேசிக்கிட்டுன்னு எல்லாரும் முடிவுக்கு வந்தப்போ சேரன் எழுந்து எல்லாரும் மன்னிச்சுக்கங்க... இனி நான் இல்லை... யார்க்கிட்டயும் பேசலைன்னு சொல்லிட்டு உள்ள போயிட்டார். பின்னாலயே போன லாஸ்லியாவும் ரேஷ்மாவும் சேரனைச் சமாதானப்படுத்த, நீங்க எதுக்கு எல்லார்க்கிட்டயும் மன்னிப்புக் கேட்கணும்... அப்படின்னு லாஸ் கேட்டுக்கிட்டு நின்னுச்சு... லாஸ் உடைந்து அழத்தயாராய் இருக்க, அந்த இடத்தில் சேரன் உடைந்தார்.

என்னோட பொண்ணுங்களுக்கு அப்பனைத் தெரியும்... ஆனா அவங்களுக்கு கல்யாணம் பண்ணனுமே... அப்பன் தப்புன்னு சொல்லிட்டா... என்னை விட்டுடுங்கம்மா... போதும்... நான் போறேன்னு உடைந்து அழுதார். அவரின் கேவல் கேட்டு எல்லாரும் ஓடி வந்து பேசி, அவ சொன்னா... நாங்க எல்லாரும் இருக்கோமே... நாங்க சொல்றோமே... நீங்க நல்லவருன்னு... கமல் சார் வரட்டும்ன்னு சொன்னாங்க... அப்ப நேரன் சரி எனக்கு நீங்க எல்லாம் ஒரு உறுதி தரணும்... இந்த வாரம் நானிருக்கேன்... ஆனா அடுத்த வாரம் ஒண்ணு நானிருக்கணும் அல்லது அவ இருக்கணும்ன்னு சொன்னார். எல்லாரும் ஏற்றுக் கொள்ள, அழுதவர் கொஞ்சமே ஆறுதலானார்.

சரவணன் தான் எப்பவும் மீராவுடன் இருப்பேன் என்றாலும் இந்த இடத்தில் அவளுக்காக பேசலை... சேரனுக்காகத்தான் பேசினேன்... ஏன்னா ஒரு ஆணோட மனநிலை இப்படியான் ஒரு பழி சுமத்தப்படும் போது எப்படியிருக்கும்ன்னு எனக்குத் தெரியும்... அதான் என்றவரின் பேச்சில் சேரன் தப்பானவர் இல்லை என்பது தெளிவாகத் தெரிந்தது. மீரா பிடிச்ச முயலுக்கு அம்பது காலுன்னு அழிச்சாட்டியம் பண்ண, நீ தர்ஷன் கூட கட்டிப்பிடிச்சி ஆடலை... அவன் இந்த டாஸ்க்ல உனக்கு மகந்தானேன்னு சேரன் கேட்டதும் அவன் என் நண்பன்னு சொன்னுச்சு... கவின் வந்து பேசிப்பாத்து உனக்கு நல்லது சொல்றவங்க நாலு பேரு இருக்கோம்ன்னா அதையாவது காது கொடுத்து கேளுன்னு சொன்னான்.... சாண்டி அவர் பங்குக்குப் பேச, முகன் போட்ரேய் பண்ணுறாங்கன்னு சொல்ல நீ இப்பச் சொன்னது தப்பில்லை ஆனா சொன்ன விதம் தப்பு அது அவரை எப்படிப் போட்ரேய் பண்ணியிருக்கும்ன்னு யோசின்னு சொன்னதுக்கும் மீரா தப்பை ஒத்துக்கலை... எல்லாரும் சரியாப் பேசுறானுங்க... நாம போட்ட நாடகத்தை எவனும் நம்ப மாட்டேங்கிறானேன்னு எந்திரிச்சுப் போயிருச்சு... முகன் கோபமாக அவனைத் தேற்றினார்கள். அபி டாஸ்க்லதானே மனைவி, உண்மையில் அப்படியே நடந்து கொண்டது.

அதன் பின் ஆறுதலான எல்லாருமாய் மீண்டும் டாஸ்க்குக்குள் போனார்கள்...  பாம்புப்பட்டித் திருவிழா... கீரிப்பட்டிக்கு அழைப்பு.., சரவணன் சிறப்புப் பேச்சாளார்.... முகன் தொகுப்பாளர்... சாண்டி, கவினுடன் அந்த அணியின் பெண்களின் ஆடல் பாடல்... அப்புறம் லாஸ்லியாவின் டான்ஸ்... சூப்பர்... தினமும் கேமரா வழி ரசித்த பிக்பாஸ் தனி மேடையே அமைத்துக் கொடுக்க... லாஸ் கலக்கல்... அந்தச் சிரிப்புக்கே எல்லாரும் காலி அப்படின்னு பார்த்துக்கிட்டு இருந்தா அடுத்து ஆடிய ஷெரினின் கண் போட்ட தூண்டிலில் அம்புட்டுப் பயலும் காலி... அப்புறம் மது, மீரான்னு எல்லாரும் ஆட்டம்... ரொம்பச் ஜாலியா நிகழ்ச்சியை முடிவுக்குக் கொண்டு வந்தாங்க.

Related image

மீரா போன்றவர்களுக்கு இந்த பிக்பாஸ் இல்லம் மட்டுமே வாழ்க்கையில்லை... இதையும் தாண்டிய வாழ்க்கை வெளியில் விரிந்து கிடக்கிறது... இப்படியான மனநிலை உள்ள ஒரு பெண் எப்படி வாழ்க்கையை நகர்த்துவார்... இவரை மணமுடிப்பவனுடன் சந்தோஷமான வாழ்க்கை அமையும் என்று என்ன நிச்சயம்..? தனக்கும் ஒருவருக்கும் பிடிக்கவில்லை எனும் போது ஒதுங்கியிருத்தல் நலம். அதை விடுத்து அபாண்ட பழி சுமத்தல் என்பது எவ்வளவு கீழ்த்தரமானது.

நான் ஒரு இயக்குநர்ன்னு இதுவரை இங்கு காட்டிக்கலை... என்னோட படத்துல மார்பு தொப்புள் தெரியிற மாதிரி ஒரு காட்சி வச்சிருப்பேனா... என்னோட குணம் உங்களுக்குத் தெரியாது... கோபம் வந்தா சாப்பிட மாட்டேன்... இங்க வந்து எல்லாரோட சேர்ந்து எல்லாத்துலயும் இணைஞ்சி போறேன்னா நான் யார்ன்னு என்னைத் தெரிஞ்சிக்கணுங்கிறதுக்காகத்தான் என்று சேரன் சொன்னதில் உண்மை இருந்தது... நடிப்பு துளியும் இல்லை.

சேரன் அழும் போது எனக்கும் அழுகை வந்தது... ஒரு தகப்பனாய்  அவரின் வேதனை... நான் என்ன நிலமையில் இங்கு வந்தேன் தெரியுமா என்ற அவரின் வாழ்க்கை அவலம்... அதுவும் மகள்களாய் நினைக்கும் பெண்களின் முன் இத்தகைய அவமானம்... என எல்லாமாய் அவரை உடைந்து அழ வைத்ததுடன் மனதளவில் மிகவும் பாதிப்படையச் செய்து விட்டது.  இந்த வாரம் கமல் குறும்படம் போட்டு சேரன் மீது தவறா இல்லையான்னு நிரூபித்தலும் இருவரில் ஒருவரை வெளியேற்றுதலும் செய்தால் நலம். செய்வாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கணும்.

அதுக்கு முன் இன்றைய நிகழ்வில் மீராதான் சிறப்பாக விளையாண்டார் என்று சொல்வது போலும் அதற்குச் சேரனும் மதுவும் எதிர்ப்பது போலும் காட்டப்பட்டிருக்கிறது. சேரன் சண்டை போட்டார்... மது தன்னை அவமதிப்பதை எதிர்த்தார்... ரேஷ்மா நல்லாத்தான் நடித்தார்... இதில் மீராவின் நடிப்பு எப்போது நல்லாயிருந்ததுன்னுதான் புரியலை... இந்தப் பயலுக மீராவுக்கிட்ட நல்லா பேர் வாங்கலைன்னாச் சேரனைச் சொன்னது போல் தங்களையும் சொல்லிடுமோன்னு அஞ்சுறானுங்க போல.

பிக்பாஸ் தொடரும்.
-'பரிவை' சே.குமார்.

வியாழன், 25 ஜூலை, 2019

பிக்பாஸ் : 'காளி'யான மது 'காலி'யான சாண்டி

Related image
பிக்பாஸ் நாட்டாமை டாஸ்க் முதல்ல் நாள் 'ஆமை' வேகத்தில்தான் பயணித்தது... நேற்றைய பகுதியிலாவது சூடு பிடித்ததா என்றால் நல்லாவே சூடு பிடித்தது... நாட்டாமை டாஸ்கில் சூடு இல்லை என்றாலும் மனிதர்களுக்கு நல்லாவே சூடு பிடித்தது.

நிகழ்ச்சியில் என்ன நிகழ்ந்தது என்பதைவிட மனிதர்களின் மனநிலை மாற்றம் ஏன்..? எதனால்..? என்றுதான் இந்தப் பகுதியைப் பார்க்க வேண்டும். பதினைந்து மனிதர்கள் ஒரு வீட்டுக்குள் அடைந்து கிடப்பதில் உளவியல் சிக்கல் இருக்கத்தான் செய்யும். பாசம், நேசம், கோபம், துக்கம், அழுகை, ஆர்ப்பாட்டம் என்பதெல்லாம் மாறிமாறித்தான் நிகழ்கிறது என்றாலும் ஒருவரை மட்டுமே கட்டம் கட்டுதலும் அதன் விளைவாக ஒரு கட்டத்தில் அவர் வெடித்தலும் அடிக்கடி நிகழத்தான் செய்கிறது.

நாட்டாமையாக சேரன் இப்படித்தான் இருக்க வேண்டுமென பிக்பாஸ் சொன்னபடி செய்தாலும் அவரின் முக அமைப்புக்கு சொல்ல மறந்த கதை, ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து கதை நாயகன்தான் சரியாக இருக்கும்... நாட்டாமையெல்லாம் ஒத்தே வராது என்றாலும் நாய் வேசம் போட்டால் குரைத்துத்தான் ஆக வேண்டும் என்ற கோட்பாட்டின்படி உண்மையாக விளையாடுகிறேன் என சில இடங்களில் நிஜ முகத்தையும் காட்டிவிடுகிறார். 

இது இயற்கையாய் எல்லாருக்குமே ஏற்ப்படுவதுதான். ஒரு இயக்குநராய், கதையாசிரியனாய் அவருக்கு உரிய திரைக்கதையை மிகச் சரியாக எழுதியதுடன் அதில் ஒவ்வொருவரும் இப்படித்தான் நடிக்க வேண்டும் என்றும் நினைக்கிறார். அந்த நினைப்பும் அவருக்கு மரியாதை கொடுக்க மாட்டோமென இருக்கும் நபர்களுமே அவருக்கு மிகப்பெரிய பிரச்சினையாய்...

கத்திப் பேச வேண்டும் என்பதில் தன்னுடைய அணி, எதிரணி என்றில்லாமல் எல்லாரிடமும் சரிசமமாகவே நடக்க முயற்சிக்கிறார். அதுவே அவருடைய அணியினாரால் அவர் கட்டம் கட்டப்படுவதற்கான காரணியாக அமைகிறது. இந்த வீட்டுக்குள் வயதுக்கு மரியாதை என்பதையெல்லாம் எதிர்பார்த்தல் என்பது நாய் வாயில் இருக்கும் தேங்காய்க்குக் காத்திருப்பது போலாகும் என்பதைத் சேரன் புரிந்து கொள்ள வேண்டும்.

கவினும் சாண்டியும் 'வ.வா.ச' செயலாளர் பதவிக்கு முயற்சிக்க வேண்டும் என்பது டாஸ்க்... ஆனால் இருவரும் எதற்கு முயற்சிக்கிறார்கள்..? கவினைப் பொறுத்தவரை லாஸ்லியாவுடனும் சாக்சியுடனும் மீண்டும் ஒரு காதல் கதைக்கான பயணத்துக்கு முன்னுரை எழுதவே இந்த வாரம் தேவைப்படுகிறது.  அதேபோல் சாண்டியைப் பொறுத்தவரை அடுத்தவரை கேலி செய்து தன்னை முன்னிறுத்தும் பணியில் மட்டுமே கவனம் செலுத்துகிறார்.

கிராமத்துக் கதைக்களம் என்பதால் கிராமத்துப் பாடலுடன் தொடங்கிய நாளில் எப்பவும் போல் எல்லாரும் குத்தாட்டம்... என்னைக்கும் இல்லாத திருநாளா சரவணன் ஆட்டம் போட்டார். எப்பவும் வேலை பாக்காம இருந்துட்டு ஒருநாள் தீவிரமா வேலை பார்த்தால் 'ஆத்தாடி... இன்னைக்கு மழை கொட்டப்போகுது போ'ன்னு ஊர்ல சொல்லுவாங்க... அப்படித்தான் சரவணன் ஆடியதும் இன்னைக்கு என்னமோ நடக்கப் போகுதுன்னு தோணுச்சு. அதுவும் சிறப்பாகவே நடந்துச்சு.

லாஸ்லியா ஒரு பக்கமும் மீரா ஒரு பக்கமும் கோலம் போட, கவின் லாஸ்லியாவோட வறுத்துக்கிட்டே மீராவை 'உன்னைய மாதிரித்தான் உன் கோலமும் இருக்கு'ன்னு கிண்டிக்கிட்டு இருந்தான். அதுக்கு அப்புறம் சாண்டி மீரா எழுதிய 'வருக வருக'வை 'வாந்தி வாந்தி'யின்னு மாத்திட்டார். இந்தப் பிரச்சினை பஞ்சாயத்துக்குப் போக, பெண்களிடம் மன்னிப்புக் கேட்கச் சொன்னதும் நான் பிரச்சினை பண்ணின மீராக்கிட்டதான் மன்னிப்புக் கேட்பேன் என்றார் சாண்டி.

அந்தப் பஞ்சாயத்து ஒரு பக்கம் நடக்கும் போதே லாஸ்லியா நாட்டாமையின் சொம்பைத் தூக்கி மறைத்து வைக்க, சேரன் களவாணி நீதான்னு லாஸ்லியாவைப் பிடித்து செம்பு கிடைக்கும் வரை கட்டி வைப்பேன்னு சொல்லி, ஜாலியாக சேலையை வைத்துக் கட்டி வைத்ததில் ஆரம்பித்த சிறு பிரச்சினை... மெல்ல விஸ்வரூபமெடுத்து... சூறைக்காற்றாய் சுற்றி அடித்தது.

தன்னை டாஸ்கிற்காக ஜாலிக்காக கட்டிப் போட்டிருக்கிறார் சேரப்பா என்பதால் லாஸ்லியாவுக்கு அதிலொன்றும் வருத்தமில்லை... கவின்தான் ரொம்ப வருந்தினான்... சேரனுடன் மோதவும் செய்தான்... லாஸ்லியா மறைத்த சொம்பை முகன் எடுத்து வர, தண்டனை விலக்கப்பட்டாலும் பிரச்சினையின் முள் காலில்தான் இருந்தது... மகளாக நினைத்தாலும் விளையாட்டு என்ற போது லாஸ்லியாவுக்கென தனி முகமெல்லாம் காட்டாத சேரன் இனி உனக்கும் எனக்கும் ஒண்ணுமேயில்லை என்று சொன்னது தான் சுற்றத்தாரிடம் பட்ட வேதனையினால் வந்த வார்த்தைதான்... அது விளையாட்டுக்கானதாய் இல்லை.

கவினைப் பொறுத்தவரை விளையாட்டுக்கு எனச் சொல்லி இரண்டு பேரை காதலிக்க வைத்து காலை வாரியவன்... சேரனை எப்போதுமே வெறுப்பாய்ப் பார்க்கும் கூட்டத்தில் ஒருவன்... லாஸ், சாக்சியை மட்டுமே சுற்றிக் கொண்டு விளையாட்டைப் பற்றிச் சிந்திக்காதவன்... மெல்ல மெல்லக் கொல்லும் விஷம் இவன்... நம்பிச் சுற்றுவோரெல்லாம் இவனால் கடிபடுவது உறுதி.

மீராவைப் பொறுத்தவரை வேலை பார்க்க மாட்டேன்... ஒழுங்கா விளையாட மாட்டேன்... ஆனா சண்டை போட்டு ஊரைக் கூட்டுவேன்... நீ என்ன பேசுறேன்னு எனக்குத் தேவையில்லை.... ஆனா நான் என்ன பேசுறேன்னோ அதை நீ கேட்கணும் என்ற மனநிலைக்குச் சொந்தக்காரி... பாத்ரூம் போனப்போ விடமாட்டேன்னு சொன்னதுக்காக புலம்ப, சரி விடு கழுதையை... உன்னைப் பேல விடலையில்ல... நீ திங்க விடாதே... டாஸ்க் கொடுன்னு சித்தப்பு கூர் தீட்ட, நாந்தான் டாஸ்க் கொடுப்பேன் என மீரா துள்ள, மது களம் இறங்கிடுச்சு. சரவணன் ரொம்பச் சாதாரணமாக அந்தப்புள்ளைய பீ பேல விடலைன்னு கோபம் எனப் பேசியதை அந்தச் சூழலி யாரும் கவனிக்காததால் 'அய்யே.. இந்தாளு கிராமத்தான்' அப்படின்னு கஞ்சாக் கருப்பைச் சொன்னது போல் சொல்லவில்லை.

மீராவுக்கும் மதுவுக்கும் வாய்க்கால் தகராறு முத்தி நாந்தான் நாட்டாமை... 'நான் சொல்றேன் டாஸ்க்.... நீ சாப்பிடு ரஸ்க்'குன்னு சேரன் குழுவுக்கு மீரா சாப்பாடு போடுது... இதுதான் உனக்கு டாஸ்க் என 'முத்தம் கொடு... முட்டை தின்னு'ன்னு சொல்லி முத்தம் வாங்கி சாப்பிட விட, எனக்கும் பசிக்கிது... நானும் முத்தம் என சித்தப்பு அடிச்சாரு பாரு ஒரு அடி... செம டைமிங்க். 

இந்தச் சூழலில் செந்திலாய் இருக்கியே வடிவேலாய் எப்ப மாறுவேன்னு எவனோ போன்ல கேட்டுத் தொலைச்சதுக்காக, சந்திரமுகியாகவே மாற முனைப்போடு இருக்கும் ரேஷமா நானும் திங்கனும் எனக்கு வேணும் டாஸ்க்குன்னு நிக்க, பிரச்சினை வெடிக்கும்ன்னு தெரியாம மது ஒரு டாஸ்க் கொடுக்கிறார். ரேஷ்மாவும் களத்துல இருக்கேன்னு காட்ட அதைத் தூக்கிக்கிட்டு தன்னைத் திட்டிய சேரனுக்கிட்ட போகுது... சொன்னுச்சா சொல்லலையான்னு பாக்க பின்னால போகுது லாஸ்லியா.

தேமேன்னு உக்கார்ந்திருந்த சேரனுக்கிட்ட போயி 'இன்னைக்குச் செத்தா நாளைக்குப் பாலு... இங்க இருக்க ஆளுங்களுல்ல நீதான் பூல்(FOOL)' அப்படின்னு சொல்லிட்டு வர... தமிழில் வார்த்தை உச்சரிப்பு என்பது ரொம்ப முக்கியம்... நடிகைகள் தமிழ் பேசுறதுங்கிற கொலைதான்... அப்படி ரேஷ்மா சொன்னது 'ஃபூலு'... இதன் அர்த்தம் கோட்டுக்கு வெளியேயும் உள்ளேயும் வேறுவேறாக இருக்கலாம்.. அதை கேட்பவர் எடுக்கும் விதத்தில் இருக்கு... 

சேரன் முகத்தில் ஈயாடலை... நேரே உள்ளே வந்து ரேஷ்மாக்கிட்ட ஏன் அப்படிச் சொன்னேன்னு கேட்டதும்... அப்படித்தான் சொல்வேன் இப்ப என்ன... நீ மட்டும் கத்துறே... என்பதாய்ப் பேச, இது டாஸ்க்கும்மா... உங்களை எப்படி நடிக்கச் சொலியிருக்காங்களோ அப்படித்தான் என்னையும் நடிக்கச் சொல்லியிருக்காங்க என எதார்த்தத்தை எடுத்துச் சொல்லியும் ரேஷ்மா அடங்கலை... மற்றவர்களும் அடக்கலை... சேரன் தன் நிலை இறங்கி பலமுறை மன்னிப்புக் கேட்டார். மன்னிப்புக் கேட்பதைவிட அதை ஏற்றுக் கொள்ளுதல் என்பது உயர்வானது ஆனால் ரேஷ்மா அதைச் செய்யவில்லை.

தன் மீது தவறெனில் சிறியவர் பெரியவர் என்றில்லாமல் மன்னிப்புக் கேட்கும் இந்தக் குணவார்ப்பு சேரனிடம் அதிகமாகவே இருப்பது சிறப்பு. நாம் விரும்பும் இயக்குநர் இப்படியான சூழலில் தவித்து நிற்பதைக் காண வருத்தமே மேலிட்டது. கேமரா முன்னால் சேரனின் புலம்பலும் தனியான புலம்பலும் பார்க்க பரிதாபமாக இருந்தது. நாலு தேசிய விருது வாங்கிய மனுசன்... நாயைவிடக் கேவலமாய்ப் பார்க்கபடுதல் வலி... ப்ளீஸ் கமல் சார்... தயவு செய்து சேரனை இந்த வாரம் வெளியில் கொண்டு வாருங்கள். தன் மானத்துடன் தளராத மனதுடன் நல்ல படங்களை இயக்கட்டும்.

அடுத்த ஆட்டம் மதுவுக்கானதாக அமைந்தது... பாத்ரூம் போக டாஸ்க்.... மாரியம்மா... மாரியம்மா பாட்டுக்கு ஆடணும்... முகத்தில் லிப்ஸ்டிக்கால் கோலம் வேறு சாக்சி கை வண்ணத்தில்... ஆடச் சொன்னவன் கவின்... ஆட்டுவித்தவன் சாண்டி... எரியுது விடுங்கடான்னு சொல்லியும் நல்லா ஆடுன்னு நிக்கிறார் சாண்டி... கவின் என்னும் விஷமும் கமுக்கமாய்ச் சிரிக்கிறது. ஒரு கட்டத்தில் மது மாரியம்மாவாய் இல்லாமல் பத்ரகாளியாக மாறினார்.

காளியான பின் சாண்டியையும் கவினையும் வச்சிச் செஞ்சிட்டார்... தன் ஆத்திரங்களை எல்லாம் அள்ளிக் கொட்டிட்டார்... உடம்பு முடியலைன்னு சொன்ன பொண்ணைப் படுத்தியெடுத்தல் என்பது மோசமான செயல்... சாண்டியிடம் சரவணன் சொல்லியதையும் மது உடம்பு முடியலை என்று சொன்னதையும் வைத்துப் பார்க்கும் போது மதுவுக்கு பெண்களுக்கு உரிய உபாதை என்றுதான் தோன்றுகிறது.... அப்படியெனில் அதை அங்கிருக்கும் ஆண்கள் அறிந்திருந்தார்களோ இல்லையோ பெண்கள் கண்டிப்பாக அறிந்திருப்பர். அப்படியிருந்தும் யாரும் அவ்வளவாகப் பேசலை என்பதே வருத்தமான விஷயம்... சாக்சி தன் செயலுக்கு மன்னிப்புக் கேட்டார்... லாஸ்லியா அணைத்துக் கொண்டார்... அவ்வளவே.

அந்த நாட்களின் வலி, வேதனை, படபடப்பு என எல்லாமுமாய் ஒரு பெண்ணை ஆட்கொண்டிருக்கும்... எது சொன்னாலும் அவர்களுக்கு அப்போது கோபமும் ஆற்றாமையுமே ஏற்ப்படும். அப்படியான நிலையில் அவர் பாத்ரூம் போக வேண்டிய அவசிய சூழலில் ஜாலியான டாஸ்க் என்றில்லாமல் ஏதோ பழி வாங்கலுக்கான நிகழ்வாய்... ஆடச் சொன்னதும்... அதுவும் சாமி மீது தீராத காதல் கொண்டவரை அப்போதைய நிலையில் சாமிப் பாடலுக்கு ஆடச் சொன்னது என எல்லாமாய்ச் சேர்ந்து வெடித்து வானவேடிக்கை நிகழ்த்தி விட்டார். மது 'காளி'யானதில் சாண்டி 'காலி'யானார்.

ஒருவரைக் கேலி செய்து அதன் மூலம் தன் இடத்தைத் தக்க வைத்துக் கொள்ளுதல் தமிழ்ச் சினிமாவில் நகைச்சுவை என்ற பாணியில் ஆண்டாண்டு காலமாய்த் தொடரும் இழிசெயல்தான்... இதைப் பார்த்துச் சிரித்தே பழக்கப்பட்ட நாம் சாண்டி மற்றவர்களைக் கிண்டல் செய்து தன் இடத்தைச் சரியாக தக்க வைக்க எடுத்த முயற்சிகளையும் நாமெல்லாம் ரசித்து சாண்டிதான் பிக்பாஸ்-3யைத் தாங்க வந்த கடவுள்ன்னும் வடிவேலுன்னும் சொன்னோம். அவர் செய்யும் சின்னச் சின்ன விஷயங்கள் எல்லாம் அவரை மேலே கொண்டு சென்ற போது அதனால் பலரின் மனசு குமைந்து கொண்டிருந்ததை அறியாமல் கைதட்டிக் கொண்டிருந்தோம். மது எல்லாத்தையும் புட்டுப்புட்டு வைத்துவிட்டார்.

தன்னைக் குட்டை என்று கேலி பேசியது முதல் வைத்யாவை வைத்துச் செய்தது வரை அள்ளிக் கொட்டினார். அடுத்தவங்களைக் கேலி செய்யும் நாம் நம்மை அடுத்தவர் கேலி செய்யும் போது ஏற்றுக் கொள்ளும் மனநிலை கொண்டிருக்க வேண்டும் என்பது மதுவின் வைர வரிகள்... நிச்சயம் ஏற்றுக் கொள்ள வேண்டிய வரிகள். அதன் பின் சாண்டி மன்னிக்கப்பட்டார் என்றாலும் மதுவின் மனவேதனை வெடித்துச் சரிந்ததில் சற்றே வடிந்திருக்கலாம்... ஆனால் கண்டிப்பாக மோகனுக்கு நிம்மதியான் உறக்கத்தைக் கொடுத்த இரவாய் அமைந்திருக்கும்.

இதற்கிடையில் 'எல்லாரும் ஆடுறாங்க சாமியாட்டம் நானெதுக்கு இருக்கணும் மாமியாட்டம்'ன்னு சாக்சி தன் பங்குக்குக்கு மது பிரச்சினையின் போது 'மதுவை அமைதியா இருக்க விடுங்க'ன்னு சேரன் சொன்னதும் 'எங்கயோ போற மாரியாத்தா... இந்தாளு மேல வந்து ஏறாத்தா'ன்னு சேரனைப் பார்த்து ஒரு கத்து... என்ன சொல்றதுன்னு தெரியாம... சொல்ல மறந்த கதையில பிரமிட் நடராஜன் செருப்பால் அடித்து விரட்டுமிடத்தில் நிற்பது போல் பரிதாமாக நின்றார். 

உண்மையில் மனசு வலித்தது சேரனுக்காக... ஒரு மனிதனை வாழ்க்கைப் போராட்டம் எங்கெல்லாம் கொண்டு போய் நிறுத்துகிறது பாருங்கள்... யாரிடமெல்லாம் கேவலப்பட்டு நிற்கச் சொல்கிறது... இதில் பணக்காரன் ஏழை என்பதெல்லாம் இல்லை... இந்த வலிகளைச் சுமந்தவர்களுக்கு இதன் வேதனை புரியும். எல்லாருமே அவரவர் வாழ்க்கையில் பணத்துக்கான பரிதாப நிலையில் இப்படித்தான் கேவலப்பட்டு நிற்கிறோம்.

மதுவிடம் மன்னிப்புக் கேட்டுவிட்டு வந்தபின் அவ உன்னையை கெட்டவனாக் காட்டவே இப்படிப் பண்ணிட்டான்னு கவின் என்னும் விஷம் மெல்லக் கக்க ஆரம்பித்தது. மது மனதில் உள்ளதை அள்ளிக் கொட்டியதை இவர்கள் எல்லாம் நடிப்பு எனக் காட்சிப் படுத்துகிறார்கள். நடிக்க முடியாமல் தவிக்கும் சேரனை, ரொம்பப் பண்ணுறாருன்னு ஆளாளுக்குத் திட்டுகிறார்கள்... இதுதான் நிஜம்.. அங்கு யாருமே உண்மையான மனிதர்களாய் இல்லை... எல்லாருமே நடிக்கிறார்கள்... அவ்வப்போது சுயரூபமும் வெளிப்படத்தான் செய்கிறது.

மீரா, சரவணன் எல்லாம் பேசிக்கிட்டு இருக்கும் போது ஆறாம் அறிவு அது இதுன்னு மீரா உரை ஆத்துச்சு... அப்ப சரவணனின் முழி போன போக்கு இருக்கே.... ரசிக்க வைத்தது. முத்தாய்ப்பாய் நீ வரும்போதே கோனார் நோட்ஸோட வந்திருக்கலாம் என்றது சிறப்பு.

இந்தப் பெண்களுக்கெல்லாம் பின் கொசுவம் வைத்து சேலை கட்டிவிட்ட புண்ணியவான்/வதிகள் யாருன்னு தெரியலை... நாட்டுக்கட்டு சேலையில் ஊரில் ஆயாக்களையும் அப்பத்தாக்களையும் அம்மாக்களையும் அத்தைகளையும் பார்த்துவிட்டு இவர்களைப் பார்க்கும் போது. அந்தச் சேலைக்குரிய மரியாதையைக் கெடுப்பதாகவே தெரிகிறது... அவர்கள் பாதம் தெரிய பின் கொசுவம் வைத்துக் கட்டி அழகாக இருந்தார்கள்... இவர்கள் முழங்கால் வரை தெரிய வைத்து கவர்ச்சியாய் இருக்கிறார்கள். அதுவும் கொசுவத்தின் அழகை தூக்கிச் சாப்பிடும் முதுகழகைக் காட்டியபடி வலம் வருகிறார்கள்... கேமாராக் கண்கள் அதன் பின்னே அலைகின்றன... எல்லா முதுகும் திரையை அலங்கரிக்கிறது. கண்டென்ட் இல்லைன்னா என்ன அதுதான் களமாட முதுகு இருக்கிறதே எனச் சொல்லாமல் சொல்கிறது காமிராக் கண்கள்... அகண்ட பார்வை.

அடுத்த வார நாமினேசனில் சேரனும்... மதுவும் இருப்பது உறுதி செய்யப்பட்டுவிட்டது.

நேற்று சித்தப்பு செவ்வாழைக்கான நாள் போலும்.... அப்பப்ப கவுண்டர் அடித்து விட்டுக் கொண்டேயிருந்தார்.

சாண்டியின் செயல்கள் தவறு என்பதை சொல்லாமல் பலர் இருக்க, மது விளக்கேற்றினார்.

கண்டிப்பாகச் சேரன் இரவில் அழுதிருக்கக் கூடும்... அழுதிருப்பார்.

பிக்பாஸ் டாஸ்க்கை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாய்ச் சொன்னார். இன்று மாற்றங்களுடன் வந்தால் நல்லது.

பிக்பாஸ் தொடரும்.
-'பரிவை' சே.குமார்.