நண்பன் தமிழ்வாசியுடன் முகப்புத்தகத்தில் இணைந்து இன்று மூன்றாம் வருடமாம்... அதற்கு முன்னரே வலைச்சரம் மூலமாக எங்கள் நட்பு ஆரம்பித்திருந்தது... ஆனாலும் வந்தியத்தேவனை வாசிக்க வைத்த போதுதான் இன்னும் இறுக்கமானது. அவர் நிறைய புதினங்களை வாட்ஸ்-அப் மூலமாக அனுப்பி, முகநூலில் பேசி, வாசித்த புதினத்தைப் பற்றி முகநூலில் கிறுக்கி, அங்கு தினேஷ், நிஷா அக்கா, கணேஷ்பாலா அண்ணன் எனக் கூடி விவாதித்து இப்படியாக நம்மை நிறைய வாசிக்க வைத்தார் என்று சொல்வது மிகப்பெரிய சந்தோஷம்.
பல நேரங்களில் மனச்சுமைக்கு மருந்தாய் இந்த வாசிப்பு இருந்திருக்கிறது... இப்பவும் இருக்கிறது. சில பல காரணிகளால் மிகுந்த சோர்வு, எழுத்தில் நாட்டமில்லாத மனம், சல்லிக்கட்டு போராட்டம் என கடந்த சில வாரங்கள் கடந்தாலும் பேருந்தில் அலுவலகம் செல்லும் போதும் திரும்பி வரும்போதும் கொஞ்சம் கொஞ்சமாக வாசித்து சாண்டில்யனின் ராஜமுத்திரையை வாசித்து முடித்து அதன் பின் கல்கியின் குமாரர் எழுதிய ரவிகுலதிலகன் வாசித்து தற்போது விக்கிரமனின் சோழ இளவரசன் கனவு வாசித்துக் கொண்டிருக்கிறேன்,
ராஜ முத்திரை பாண்டியர்களின் கதைக் களம்... வீரபாண்டியனுக்கும் சேரன் வீரரவிக்கும் நடக்கும் பிரச்சினைகளே கதைக்களம்... இதில் மதுரை மன்னனும் வீரபாண்டியனின் அண்ணனுமான ஜடாவர்மன் சாதாரண மன்னனாக சேரனின் முன் நின்று சக்கரவர்த்தியாக திரும்புவதாய் கதை சுபம் பெறுகிறது. அவரின் மகள் முத்துக்குமரியை கடத்திச் சென்று சிறை வைக்கிறான் வீரரவி, முத்தை மட்டுமல்ல முத்துக் குமாரியையும் கவர்வதே அவனுக்கு எமனாகிறது. இலங்கை மன்னன் வீரரவிக்கு உதவியாய் இருக்கிறான் என்ற போதிலும் அவனின் மைந்தனும் இளவரசனுமான இந்திரபானு வீரபாண்டியனின் மீது கொண்ட பற்றுதலால் அவனின் படைத்தளபதியாய் பயணித்து முத்துக்குமரியை காதலித்து அவளுக்காக சேரநாட்டில் பரதப்பட்டன் என்னும் துறவி (வீரரவி மதிக்கும் குரு) உதவியால் முகம் மாற்றி... வேவு பார்த்து... சிறைப்பட்டு... முத்துக்குமாரியை மீட்டு வீரபாண்டியனுக்கு போரில் உதவி பரலியைக் கைப்பற்றி, பரலியின் நிர்வாகத்தோடு முத்துக்குமரியையும் மன்னனின் அனுமதியுடன் கரம்பிடிக்கிறான்.
படைத்தலைவன் மகளாக வந்து வீரபாண்டியனுக்கு உதவப் போய் வீரரவியிடம் மாட்டி அதிலிருந்து தப்பி, வீரபாண்டியனுக்கு காதலியாய்... படைத்தலைவியாய்... மனைவியாய்... இரண்டு போரில் துணை நின்று வெற்றி பெற்றுக் கொடுத்து பரலி நோக்கிச் செல்லும் போது கர்ப்பிணியான காரணத்தால் போருக்கு வரவேண்டாம் என மீண்டும் கோட்டைக்குத் திருப்பி அனுப்புவதால் கோபம் கொண்டு தனியே குதிரையில் பயணிக்கும் இளநங்கை இறுதியில் வெற்றிவாகை சூடிவரும் கணவனுடன் கொஞ்சி மகிழ்கிறாள். வீரபாண்டியனுக்கு இளநங்கை மற்றும் இந்திரபானு உதவியுடன் மிகப்பெரிய உதவியாய் மலைசாதிப் பெண் குறிஞ்சி இருக்கிறாள். மருத்துவம் தெரிந்த அவள் அவனுக்காக ஒற்றன் வேலை பார்க்கிறாள்.வீரரவியிடம் வேலைக்குச் சேர்ந்து ஒற்றறிகிறாள். எங்கே தன் கணவனைக் கொத்திப் போய் விடுவாளோ என்று இவள் மீது இளநங்கைக்கு வெறுப்பு... இருந்தாலும் குறிஞ்சி முத்துக்குமரியின் பணிப்பெண்ணாக பரலியில் தங்கிவிட இவளுக்கு மகிழ்ச்சி.
ராஜமுத்திரை கதை மிகவும் விறுவிறுப்பாக நகரும். சாண்டியல்யனுக்கே உரிய போர்த் தந்திரக் காட்சிகள் இதிலும் அழகிய விவரணைகளுடன்... இதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய நிகழ்வு நம்ம ஜல்லிக்கட்டு போல் செண்டு வெளிக்களியாட்டம்... இதைப்பற்றி 'எங்கள் பிளாக்' ஸ்ரீராம் அண்ணன் தனிப்பதிவே எழுதியிருந்தார். அர்த்தச் சந்திர வடிவம் கொண்ட செண்டு வெளிக்குள் வீரர்கள் குதிரையில் இறங்கி சுற்றி வந்தபடி பாண்டிய மீன் கொடியின் மீது (எதாவது இரு இலக்கு இருந்திருக்கும்... இது பாண்டியருக்கும் சேரருக்குமான மோதல் கதை என்பதால் பாண்டியக் கொடி என்று எழுதியிருக்கிறார் என நினைக்கிறேன்) வேலெறிவார்கள்... அதில் வென்றால் பின்னர் அதன் எதிர்த்திசையில் இருக்கும் பாண்டிய முத்திரை மீது வேலெறிவார்கள். வேல் குறி தவறும் பட்சத்தில் இன்னும் சில வீரர்கள் இறங்க, தோற்றவர்களுக்கும் ஜெயித்தவர்களுக்கும் செண்டு வெளிக்குள் சண்டை போட, மாடு முட்டி ரத்தம் சிந்தும் வீரர்களை தூக்கிச் சென்று மருத்துவம் பார்ப்பது போல் இவர்களைத் தூக்கிச் சென்று மருத்துவம் பார்ப்பார்களாம்.
ராஜமுத்திரைக்குப் பின் வாசித்தது கல்கி இராஜேந்திரனின் ரவிகுலதிலகன், விஜயாலயச் சோழனின் வரலாற்றைப் பேசியது... பல்லவர்களுக்கு கப்பம் கட்டிக் கொண்டிருந்த சோழர்களின் ராஜ்ஜியத்தை பேரரசாக்க விரும்பும் இராசகேசரி குமாரங்குசன் தன் மகன் விஜயாலயனை மிகுந்த வீரம் மிக்கவனாக வளர்க்கிறான். பதின்ம வயதில் ஒரு தீ விபத்து ஏற்பட மக்களைக் காக்க அனுப்புகிறான்... விஜயாலயனின் அன்னையோ அதை எதிர்க்கிறாள்... தீ விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றும் போது ஒரு சிறுமியையும் சிறுவனையும் காப்பாற்றி அவர்களின் அன்னையை காப்பாற்றச் செல்லும் போது தீயால் தாக்கப்படு தலைமுடி இழந்து ஒரு பக்க கண்ணையும் இழக்கிறான். அவனுக்கு தஞ்சையை ஆளும் முத்தரையர் மகள் உத்தமசீலி மீது ஆசை, அவளோ இவனை வெறுக்கிறாள். அந்தக் கோபம், சிற்றரசான சோழ அரசை சாம்ராஜ்யமாக மாற்ற வேண்டும் என்ற வெறி என பல்லவர்களுக்குத் தெரியாமல் வீரர்களை தயார் செய்து தஞ்சையைப் பிடிக்கிறான்... அவனுக்கு உதவியாய் காட்டுவாசிப் பெண்ணும் மருத்துவச்சியுமான குவளை இருக்கிறாள். உத்தமசீலியை கரம் பிடிக்கும் முன்னர் குறிஞ்சியை விரும்புகிறான். ஆண் குழந்தையைப் பெற்றுக் கொடுத்துவிட்டு உத்தமசீலி இறப்பதுடன் கதை முடிகிறது.
அதன் தொடர்ச்சியாய் தாத்தாவின் கனவின்படி தஞ்சையைப் பிடித்து அதில் கோட்டை கட்டி, பல்லவனுக்குப் பிடித்த மன்னனாக வாழும் விஜயாலயனின் மகன் ஆதித்தன் பல்லவர்களை எதிர்த்து தங்கள் அரசை பேரரசாக நிர்மாணிக்க முயலும் கதைத்தான் விக்கிரமன் எழுதியிருக்கும் சோழ இளவரசன் கனவு... பல்லவநாட்டைப் பற்றி நேரில் பார்த்து அறிய நண்பன் விக்கியண்ணனுடன் செல்லும் ஆதித்தனுக்கு இளங்கோபிச்சி என்னும் மனைவி இருக்கிறாள்... இருந்தும் நடனப்பெண், சிற்பி மகள், பல்லவ இளவரசி என சாண்டில்யன் கதை போல் ஒரே பெண்கள் மயம்... பல்லவ நாட்டைப் பற்றி அறிந்து அவர்கள் மீது போர்தொடுத்து ஆதித்தன் வென்றானா...? தாத்தாவின் கனவுப்படி, தந்தையின் ஆசைப்படி சோழ பேரரசை கட்டமைத்தானா...? என இப்போதுதான் ஆவலோடு வாசித்துக் கொண்டிருக்கிறேன். எனவே இன்னுமொரு பதிவில் பார்ப்போம்.
-'பரிவை' சே.குமார்,