பள்ளிப்படிப்பு முடிந்ததும் கல்லூரியில் சேர காரணமாக இருந்தவர் எனது மூத்த அண்ணா. இல்லையென்றால் பனிரெண்டாம் வகுப்பு முடிக்குமுன்னரே எனது தந்தை எங்கள் ஊருக்கு அருகிலிருக்கும் நூற்பாலையில் எனக்கு வேலைக்கு ஏற்பாடு செய்துவிட்டார். எனது அண்ணாவிடம் அழுது புலம்ப, அவர் நாங்கள்தான் படிக்கவில்லை (அவர் +2 வரை படித்தார். குடும்ப கஷ்டத்தால் மேல படிக்கவில்லை) அவங்க ரெண்டு பேரும் (நானும், தம்பியும்) நல்லா படிக்கட்டும் என்று சப்தம் போட, அப்பா அதற்கு மேல் ஒண்றும் சொல்லவில்லை.
ரிசல்ட் வந்ததும் கல்லூரியில் விண்ணப்பம் செய்தோம். கணிப்பொறியியல் துறைக்கும் விண்ணப்பித்தேன். 6000 ரூபாய் கட்டினால் இடம் தருவதாக தெரிவித்தனர். குடும்ப சூழல் இடம் தரவில்லை. (சில காலங்களுக்குப் பிறகு அதே கணிப்பொறியியல் துறையில் நான்கு வருடம் வேலை செய்து எனது ஆசையை தீர்த்துக் கொண்டேன்) கல்லூரியில் இடம் கிடைத்து. என்னுடன் படித்த நண்பர்கள் ஒரு சிலரைத்தவிர மற்றவர்கள் வேறு பாடப்பிரிவுகள், வேறு கல்லூரி என பிரிந்து சென்றனர்.
எனது கல்லூரி வாழ்வின் முதல் நாள் எனது அட்லஸ் சைக்கிளில் கிளம்பினேன்.வகுப்பறைக்கு சென்றால் எல்லோரும் புது முகம். எனக்கு கடைசி பெஞ்சில் உட்காரும் பழக்கம் இல்லை என்பதால் இரண்டாவது பெஞ்சில் அமர்ந்தேன். வகுப்பு தொடங்கிய போது என்னுடன் படித்த சிவபால மூர்த்தி வந்தான் (என்னுடன் ஒண்ணாப்பு முதல் கல்லூரி வரை படித்த நண்பன்). அப்பா ஒருத்தன் வந்துட்டான் என்று நினைத்த மனசு அவனுக்கு உட்கார இடம் கொடுத்தது. ஆனால் அவனோ ஒரு புன்னகையுடன் கடைசி பெஞ்சுக்கு போய்விட்டான். (மூன்று வருடங்கள் அவனுக்கும் எனக்குமான உறவில் அதிகம் பேசியதென்னவோ புன்னகை மட்டும்தான்.)
பிறகு மரியக்கண்ணு, தேவசகாயம் என எனது பள்ளித்தோழர்கள் வந்தனர். எனக்கு அருகில் அமர்ந்திருந்த்வர்கள் இருவரும் (அண்ணாத்துரை மற்றும் சேவியர்) எனக்கு அறிமுகமாயினர். எனக்குள் ஒரு புதிய நட்பு வட்டம் உருவாகியது. எங்கள் வகுப்பில் பத்து பெண்கள் உள்பட 33 பேர் சேர்ந்திருந்தோம் (பின்னர் 3 பேர் விலகி சென்றுவிட 30 ஆனோம்).
எல்லாக் கல்லூரியையும் போல எங்கள் கல்லூரியிலும் ராகிங் நடந்தது. பாடவேளை முடிந்து அடுத்த ஆசிரியர் வருவதற்குள் வந்து எங்களை ஒரு வழி பண்ணிவிட்டார்கள். அன்று மதியம் சாப்பாட்டு இடைவேளையில் ஒரு பெண்கள் குழு வந்தது, எல்லோரிடமும் பேரு என்ன அப்பா பேரு என்ன என்று கேட்டது. (அப்பா... காளிக் கூட்டம்) என்னிடம் கேட்க, அமர்ந்தபடி சொல்ல,எந்திரிடா என் டுபுக்கு என்றது ஒண்ணு... எழுந்து சொன்னேன். (ம்... என்ன செய்ய... அவள்கள் அனுபவித்ததன் எதிரொலி.... என்ன செய்யட்டும். ) பெண்களிடம் கேள்வி கேட்கும் போது பல புரியாத கேள்விகள். (ஹி.... ஹி.... இப்ப புரியும்) ஒருவழியாக சமாளித்தாயிற்று.
கல்லூரி முடிந்து வீட்டிற்கு கிளம்ப எத்தனித்தபோது நாலு பேர் வந்து எங்களை அப்படியே கல்லூரிக்குப் பின்னால் இருக்கும் முந்திரிக் காட்டுக்கு ஓட்டிச் சென்றனர். (பசங்களை மட்டும் தான்). அங்கு எங்களுக்கு முன்னர் பல பேர் ராகிங்கில் சிக்கி சீறழிந்து கொண்டிருந்தனர். என்னவோ தெரியவில்லை நான் சின்ன ஆளாக் இருக்கவும் என்னை பேர் கேட்டதோடு ஓரமாக நிற்க சொல்லி விட்டனர் (சத்தியமா உண்மைங்க. நம்பினால் நம்புங்க).
என்னுடன் வந்த மரியக்கண்ணு பெரிய ஆளா இருப்பான். அவனை எல்லோருக்கும் ஒரு யுனிவர்சிட்டி சல்யூட் அடி என்றனர். அவன் முழிக்க, ஒருவன் எழுந்து எப்படி என்று சொல்லிக் கொடுத்து அவனை அடிக்கச் சொல்ல, அவனும் அடித்தான். (கருமம்... கண்றாவி...).
இன்னொருவனை பாடச் சொல்ல, அவனும் 'ஆயிரம் நிலாவே வா...' என்ற பாடலை பாடினான். என்னடா ஆயிரம் நிலவைக் கூப்பிடுறே... சரி அப்படியே இற்ங்கு வரிசையில ஒரு நிலா வரைக்கும் வா என்று ஒருவன் கூற். 999 நிலவே வா... 998 நிலாவே வா... என்று ஒரு ஒரமாக நின்று அவன் பாடினான். ஒருவனை கோழி பிடிக்கச் சொன்னார்கள். அவனும் 'பேக்.. பேக்.. என்று ஓடினான். என்னும் எத்தனை..? (சில நாட்களில் அவர்களெல்லாம் நண்பர்களாக மாறினர்).
மறுநாள் காலை ஒரு கூட்டத்திடம் மாட்டிக் கொண்டோம். அவர்கள் சட்டையை இன் பண்ணி வந்தவர்களை எடுத்து விடச்சொன்னதோடு முதலாம் ஆண்டில் இன் செய்யக் கூடாது என மிரட்டல் வேறு விட்டனர். (நம்ம எப்பவும் இன் பண்றதேயில்லை. அதனால கவலையே படலை). இந்த மிரட்டல் ஒரு வாரம் மட்டுமே தாக்குப் பிடித்தது என்பது வேற விஷயம்.
ஒருவன் ஒரு பொண்ணை (இரண்டாம் ஆண்டு மாணவிகளில் அழகான பெண் என்ற வர்ணனை வேறு) எனது வகுப்புத் தோழனிடம் காட்டி ரோஸ் கொடுக்கச் சொல்ல, அவனும் அந்த அண்ணன் கொடுத்ததாக சொல்லி கொடுத்து விட்டான்.(சில நாளில் ரோஸ் கொடுத்தவனுக்கும் வாங்கியவளுக்கும் லவ்விருச்சுங்க...)
ராகிங்கெல்லாம் முடிந்து கல்லூரி ஸ்டிரைக், அடிதடி எனத் தொடர்ந்த போது அண்ணாத்துரை, ராமகிருஷ்ணன், பிரான்சிஸ், முத்தரசு பாண்டியன், ஆதி ரெத்தினம், நவனீதன், திருநாவுக்கரசு, சேவியர் என புதிய நட்புவட்டம் உருவாகியது. இந்த நட்பு வட்டம் எனக்கு கிடைத்த வரம் என்றே சொல்லலாம்.
கல்லூரிக்காலம் தொடரும்.
-சே.குமார்