முந்தைய பகுதிகள் :
"இல்லம்மா... கண்ணண்ணே அந்தாளு கால்ல விழுந்து..." அவன் முடிக்கும் முன்னர்...
"என்ன கண்ண கால்ல விழுந்தானா...?" - காளியம்மா
"இவன் எதுக்குடா அவன் கால்ல..." - மணி.
"மாமா... கால்ல விழுந்தாகளா?" - அபி.
"கண்ண மச்சானுக்கு என்ன கிறுக்கா... அந்தாளு வரலைன்னா போகட்டுமே... வந்து என்னத்தை தாங்கப் போறாரு..." - சித்ரா.
"கண்ணா... அடேய் கண்ணா..." வாசலில் நின்று கத்தினார் கந்தசாமி.
இனி...
'கண்ணா... அடேய் கண்ணா...' என கந்தசாமி கத்தவும் பொங்கல் வைப்பதற்கு தயாராகிக் கொண்டிருந்த மனைவிக்கு சுப்பிக்கட்டை எடுத்துக் கொண்டு வந்து வைத்த கண்ணன் 'எதுக்கு இப்படி கத்துறாரு... ' என்று நினைத்தபடி 'இந்தா வாறேன் சித்தப்பா' என்று திருப்பிக் கத்தினான்.
மனைவியிடம் "இரு எதுக்கோ கத்துறார்... என்னன்னு கேட்டுட்டு வாறேன்...." என்றவன் இடுப்பில் கட்டியிருந்த துண்டை எடுத்து வியர்வையைத் துடைத்தபடி செல்ல, வாசலில் நின்ற கந்தசாமியின் முகம் கடுகடுவென்று இருப்பதைப் பார்த்ததும் 'என்ன பிரச்சினையோ தெரியலையே' என்று நினைத்தபடி "என்ன சித்தப்பா?" என்றான்.
"தம்பி சொல்றது உண்மையா?"
"என்ன சொன்னான்... எது உண்மையா...? அடியுமில்லாம... முடியுமில்லாம கேட்டா எனக்கு என்ன சித்தப்பா தெரியும்?"
"நடிக்காதடா... அங்க என்ன நடந்துச்சு?" கோபமாகக் கேட்டார்.
'அட அந்த லூசுப்பய் இங்க வந்து சொல்லிட்டானா... இவரு விடமாட்டாரே' என்று நினைத்தவன் "அதுவா... உள்ள வாங்க சித்தப்பா சொல்றேன்..." என அவரை விலகிக் கொண்டு உள்ளே செல்ல, அவனது கையைப் பிடித்து இழுத்து நிறுத்தியவர் "என்ன நடந்துச்சுன்னு சொல்லிட்டுப் போ" கத்தினார். இவரின் சத்தம் பெரிதாவதைக் கேட்டதும் பொங்கல் வைக்கப் போன கண்ணகி அப்படியே வைத்து விட்டு முந்தானையில் கையைத் துடைத்தபடி வேகமாக அங்கு வந்தாள்.
"இப்ப என்ன சித்தப்பா அங்க என்ன நடந்துச்சுன்னுதானே சொல்லணும்... உள்ள வாங்க சொல்றேன்... எல்லாரும் பாக்குறாங்க... நம்ம வீட்டு விஷயம் நாலு பேரு நாலு விதமாப் பேசணுமா என்ன.... வீட்டுக்குள்ள வச்சிப் பேசுவோமே" என்றான் மெதுவாக... அவனின் கைப்பிடியை விட்டவர், "இந்தப்பய என்ன பண்ணிட்டு வந்திருக்கான் தெரியுமா... வாத்தா நீயும் வந்து என்ன பண்ணுனான்னு தெரிஞ்சிக்க... நம்ம வீட்டுப் புள்ளைக நாலும் நாலு விதம்... " என கண்ணகியிடம் சொல்லியபடி அவன் பின்னே சென்றார்.
மணி நிலைப்படியில் அமர்ந்திருக்க, அவனுக்கு அருகே அமர்ந்திருந்த குமரேசன் இவனைப் பார்த்ததும் எழுந்தான். காளியம்மாள் அடுப்படி சுவற்றில் சாய்ந்து அமர்ந்திருக்க சித்ராவும் அபியும் அடுப்படி வாசலில் நின்று கொண்டிருந்தார்கள்.
"என்னடா வந்ததும் வத்தி வச்சிட்டியா..?" குமரேசனிடம் கடுப்படிக்க, அவன் பேசாமல் நின்றான்.
"அவனுக்கிட்ட ஏன்டா கத்துறே..? சொல்லு என்ன நடந்துச்சு..."
"என்ன நடந்துச்சு... என்ன நடந்துச்சுன்னா... உச்சாணிக் கொம்புல ஏறி இருக்கவரை இறங்கி வர வைக்கணுமின்னா நாம உச்சாணிக் கொம்புல ஏறுனா சரியா வராது... நாம் கீழ இருந்து அவரை இறங்கி வர வைக்கணும்... அதைத்தான் நான் செஞ்சேன்..."
"என்னடா... செஞ்சேன்... செஞ்சேன்னா... என்ன செஞ்சே அதை உன் வாயால சொல்லு..." மணி கத்தினான்.
"இப்ப எதுக்குண்ணே அவரு மாதிரி நீயும் கத்துறே...? அதான் அவன் சொல்லிட்டானுல்ல... அப்புறம் நா வேற சொல்லணுமாக்கும்... சும்மா இருண்ணே..."
"என்ன நடந்துச்சுன்னு சொல்லுடான்னா... அதைவிட்டுட்டு ஒவ்வொருத்தனுக்கிட்டயும் கத்துறே...?" கந்தசாமி கோபமாகக் கேட்டார்.
"சித்தப்பா... நம்ம கண்மணி வீட்டுக்காரரைப் பற்றித்தான் எல்லாருக்குந் தெரியுமே... ஆரம்பத்துல இருந்து விடாப்பிடியா நின்னாரு... எவ்வளவோ பேசிப்பாத்தோம்... ஏன் ஆச்சர்யமா அந்த அயித்தை கூட நமக்கு ஆதரவாப் பேசுச்சு... எல்லாத்துக்கும் பதில் சொல்லிக்கிட்டு முறுக்கிக்கிட்டு நின்னாரு... அவரை இறங்க வைக்க அதைவிட வேறு வழி தெரியலை... அதான் கால்ல விழுந்தேன்..."
"யாரு கால்ல யாருடா விழுகுறது...?" காளியம்மாள் கோபமாய்க் கேட்டபடி எழுந்தாள்.
"ஐய்யோ... சின்னம்மா... இப்ப என்ன வந்துச்சு... சபையில யார் கால்லயாச்சும் விழுந்துட்டு வந்தா கேவலம்... நான் தங்கச்சி வீட்டுக்காரர் கால்ல அவங்க வீட்லதானே விழுந்தேன்... உங்களுக்குத் தெரியுமா... அவரே என்ன மச்சான் நீங்க எங்கால்லன்னு பதறிட்டாரு... அப்புறம் தான் எங்ககிட்ட ஓழுங்க பேசினார்.... இங்க வாறேன்னு சொன்னார்..."
"அதுக்காக... அன்னைக்கு அவரு பண்ணுனது தப்புன்னு தெரிஞ்சும் பொண்ணக் கொடுத்துட்டோம்ன்னு சண்டைக்குப் போன இவனுகளைத் திட்டிக்கிட்டு இருக்கேன்... இவனுக இல்லை எவனா இருந்தாலும் கூடப் பொறந்தது கண்ணக் கசக்கிக்கிட்டு வந்து நின்னா அப்படித்தான் நடந்துப்பானுங்க... அந்தப் பிரச்சினையப்போ நீ இல்லை... மாமியா வீட்டுக்குப் போயிருந்தே... கோபம் வராத நீயே திரும்பி வந்து என்ன சொன்னே... அந்தாளை வெட்டாம ஏண்டா வீட்டீகன்னு கேட்டே... கேட்டேல்ல... ஏன்னா கூடப்பொறந்தவளுக்கு பிரச்சினை... கொஞ்ச நாளைக்கு அப்புறந்தானே என்ன இருந்தாலும் அவரை அடிக்கப் போயிருக்கக்கூடாதுன்னு இவனுங்களைத் திட்டினே..."
"ம்..."
"அவரு கால்ல நீ எதுக்குடா விழுகணும்... அதுக்காகவா உன்னைய அனுப்பினேன்..."
"ஐய்யோ சித்தப்பா... இப்ப என்ன நடந்துச்சு... விடுங்க... எல்லாம் நல்லா முடிஞ்சிருச்சு..."
"எல்லாம் முடிஞ்சிருச்சு... எல்லாம் முடிஞ்சிருச்சின்னு சொல்றே... அந்தாளு கால்ல போயி விழுந்துக்கிட்டு... போடா..."
"சித்தப்பா... நா உங்க பிள்ளை... எது செஞ்சாலும் நல்லதுக்குத்தான் செய்வேன்... எதுக்கு இப்ப எல்லாரும் முகத்தைத் தூக்கிக்கிட்டு உக்காந்திருக்கீக... பொங்கலை வைக்க ஆரம்பிங்க... நல்ல நேரம் முடிஞ்சிடப்போகுது... நீ வா... நம்ம பொங்கலை வைப்போம்.." என்றபடி கந்தசாமியின் கைகளைப் பிடித்து "எல்லாம் நல்லதுக்குத்தான்... டென்சனாயி எங்களை ஆஸ்பத்ரிக்கு ஓட வச்சிடாதீங்க... சந்தோஷமா இருங்க..." என்று கிளம்பினான்.
"இவனைப் பாத்தியாலா... கால்ல விழுந்துட்டு வந்து அதுக்கும் கதை சொல்றான்... என்ன பிள்ளை இவன்..." என்று காளியம்மாளிடம் சொன்னவர் "ஆத்தா பொங்கலை வையிங்க... " என்றபடி கண்ணைத் துடைத்துக் கொண்டு தண்னீர் மோந்து குடித்து விட்டு புகையிலையை வாயில் அதக்கினார்.
"ஏங்க அவரு கால்ல எதுக்கு விழுந்தீக..." கோபமாய்க் கேட்டாள் கண்ணகி.
"ஆமா அவரு விட்டுட்டாரு... அடுத்து நீ கேளு... வேலையைப் பாரு..."
"அதுக்காக... எம்புருஷன் எவன் கால்ல வேணுமின்னாலும் விழுகட்டும்ன்னு விட்டுட்டு இருக்கச் சொல்றீங்களா... நீங்க என்ன தப்புங்க பண்ணுனீங்க... அந்தாளு கால்ல விழ.... தப்புப்பண்ணின குமரேசன்தானே விழுந்திருக்கணும்..."
"அட சும்மா இருக்க மாட்டே... அவன் விழுந்தா என்ன நான் விழுந்த என்ன... இப்ப எதுக்கு இந்தப் பேச்சு..."
"எல்லாருக்கும் நல்லவகளா இருந்தா தலையில மொளகாய் அரச்சிருவாங்க பாத்துக்கங்க..."
"இப்ப என்ன... எதுக்கு தேவையில்லாம பேசுறே... விட்டுட்டு பொங்க வைக்கிற வேலையப் பாரு..."
"யாருக்காகவோ எம் புருஷன் அடுத்தவனோட கால்ல விழுகுறது எனக்குப் பிடிக்கலை..."
"சரி... சரி... யாருக்காகவோ விழுகலையே... நம்ம குடும்பத்துக்காகத்தானே விழுந்தேன்... விடு..."
"என்ன விடு கற்பகத்தாச்சி புருஷன் பிரச்சினை பண்ணியிருந்தா குமரேசனோ இல்ல மணி மச்சானோ அவரு கால்ல விழுவாங்களா?"
அவளின் கேள்வி சுருக்கென்று உரைக்க, "இங்க பாரு... அவங்க விழுறாங்களா... இவங்க விழுறாங்களான்னு எனக்குத் தெரியாது... எனக்கு எல்லாரும் நல்லா ஒத்துமையா இருக்கணும்... அதுதான் வேணும்... நீ எங்கப்பாவைப் பாத்ததில்லை... எங்கம்மா நீ வந்த கொஞ்ச நாள்ல போயிருச்சு... எனக்கு... உனக்கு... ஏன் நம்ம புள்ளகளுக்கு எல்லாருக்குமே அவுக ரெண்டு பேருந்தான் எல்லாமே.... இன்னைக்கி வரைக்கும் சித்ரா வேற, அபி வேற, நீ வேறன்னு பிரிச்சிப் பாத்திருக்காங்களா..? இல்ல மணிதான் முக்கியம் குமரேசந்தான் முக்கியம்ன்னு சொல்லியிருக்காரா... அவரைப் பொறுத்தவரை எல்லாமே நாந்தான்... எங்க சித்தப்பா மகனைக்கூட தள்ளித்தான் பாப்பாரு... ஏன்னா அவன் ரொம்ப ஒட்டமாட்டான்... என்னைய மகனா... தகப்பனாப் பாப்பாரு... நா என்ன சொன்னாலும் சரியா இருக்கும்ன்னு சொல்லி எதுக்குமே என்னத்தான் போகச் சொல்லுவாரு... இதே பெரியத்தானுக்கிட்ட உங்க மச்சான்கள்ல கண்ணதாசனை மாதிரி நீங்க பாக்கவே முடியாதுன்னு எத்தனை தடவை சொல்லியிருக்காரு... உனக்கு முன்னாடிக்கூட சொல்லியிருக்காருல்ல... இப்பக்கூட நா அந்தாளு கால்ல விழுந்துட்டு வந்துட்டேன்னதும் அந்தக் குடும்பமே குதிச்சிச்சி... குமரேசன்... எங்கூடத்தான் வந்தான்... நீ பண்ணியிருக்கக் கூடாதுண்ணேன்னு புலம்பிக்கிட்டு வந்தான்.... இங்க வந்து சின்னப்பிள்ளை மாதிரி அழுதுருக்கான்... இதுதான்டி பாசம்... இதுதான் எனக்கு வேணும்... பாத்தியே அந்த மனுசன் கத்துனதை... அவரு கத்துனாருன்னு தெரியும்... அழுதாருடி... அழுதாரு... அது எனக்கு மட்டுந்தான் தெரியும்... உன்னைய மருமகளா இல்லாம மகளாப் பாக்குறாங்க... இந்த பிரச்சினையில விரிசல் வர நீ காரணமாயிராதே... என்னைப் புரிஞ்சவ நீ... உன்னைப் புரிஞ்சவன் நான்.... உன்னோட வலி தெரியுது... விடு... எல்லாம் நல்லதுக்குத்தான்..." சித்தப்பா வீட்டுக்கு கேக்காதவாறு மெதுவாகவும் இல்லாமல் வேகமாகவும் இல்லாமல் படபடவென்று கண் கலங்க கண்ணதாசன் பேசினான்.
அவன் கலங்கவும்... நல்ல நாளும் அதுவுமா இதுவரைக்கும் கலங்காத மனுசன் நம்மளால கலங்கிட்டாரே... ஆத்தாளுக்கு ஆத்தாவா அப்பனுக்கு அப்பனா என்னையத்தானே பாப்பாரு... அவரு சொல்ற மாதிரி மாமா, அத்தை பிரிச்சிப் பாக்கலையே... ஏன் மணி மச்சான், குமரேசன், வீட்டுக்கு வந்த சித்ராக்கா, அபி யாருமே இவரைப் பிரிச்சிப் பாத்ததில்லையே... கோழிக் குழம்பு வச்சாக்கூட நாட்டுக்கோழி ரசம்ன்னா அந்தப்பய நல்லாச் சாப்பிடுவான்னு சொல்லி கத்திக்கிட்டே இருந்து சாப்பிட்டாத்தானே விடுவாரு... நான் ஏன் இப்படி பிரிச்சிப் பாத்தேன்... சை... பொட்டச்சி மனசு எதையுமே யோசிக்கிறதில்லைதான்... எடுத்தோம் கவித்தோம்ன்னு பேசினா... என யோசித்தவள். "சரி விடுங்க... ஏதோ பேசிட்டேன்..." என்றபடி பொங்கலை ஆரம்பிக்க சுப்பியை ஒடித்தவள் கையில் முள் குத்தி ரத்தம் வர. "ஏய் அசடு... கையில முள்ளைக் குத்திக்கிட்டு..." என்று அவளின் விரலை வாயில் வைத்து ரத்தத்தை உறிஞ்சியவன் "நீ தள்ளு நான் அடுப்பை பாக்குறேன்... அரிசியை கலைஞ்சி பாலை எடு..." என இதுவரை எதுவுமே நடக்காதது போல் கண்ணதாசன் பேச, "எப்படிங்க உங்களால் இப்படி இருக்க முடியுது..." என அவன் தலை கலைக்க, அங்கே ஆனந்தப் பொங்கல் பொங்க ஆரம்பித்தது.
(வேரும் விழுதுகளும் வளரும்)
-'பரிவை' சே.குமார்.