மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

திங்கள், 29 ஆகஸ்ட், 2011

நாயகன்:தல... '50'

காலங்காலமாக ஜொலிக்கும் நட்சத்திரங்களில் இரண்டு நட்சத்திரங்களை மட்டும் உச்சத்தில் மட்டுமல்ல இரு துருவங்களாகவும் தமிழ்த் திரையுலகம் வைத்திருக்கும். எம்.ஜி.ஆர் - சிவாஜி, கமல் - ரஜினி வரிசையில் இன்று அஜீத் - விஜய் இன்னும் சொல்லப் போனால் இவர்களுக்கு அடுத்து வந்தவர்களில் எத்தனையோ பேர் நல்லா நடித்தாலும் இந்த வரிசையில் இணைந்திருப்பவர்கள் சிம்பும் தனுஷும்தான். இந்த துருவ நட்சத்திரங்கள் தாங்களுக்குள் எந்த பிரச்சினையும் இல்லை என்பது போல் சந்தித்துக் கொள்ளும் போதெல்லாம் சந்தோஷங்களைப் பகிர்ந்து கொண்டாலும் இவர்களை தலையில் வைத்து ஆடும் ரசிகர்களுக்குள் எப்பவும் கார்கில் போர்தான்.

இந்த முறை அஜீத்தின் மங்காத்தாவும் விஜயின் வேலாயுதமும் ஒரே நேரத்தில் களம் இறங்கலாம் என்று பலத்த எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் தற்போது இரண்டும் சில நாட்கள் இடைவெளியில்தான் வெளியாகும் என்று தெரிகிறது.

என்னடா தலைப்பு 'தல...50'ன்னு வச்சிட்டு வேற மாதிரி மொக்கை போடுறானேன்னு நினைக்காதீங்க... தலக்குள்ள...மன்னிக்கனும் தலைப்புக்குள்ள் போகலாம்.

தமிழ் திரையுலகில் மனதில்பட்டதை மறைக்காமல் பேசும் நடிகர் அஜீத்தின் சினிமா வாழ்க்கை 1992ல் வெளியான 'பிரேம புஸ்தகம்' என்ற தெலுங்குப் படத்தின் மூலமாக ஆரம்பமானது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் இந்தப் படத்தில் இவருக்கு சிறந்த புதுமுகத்திற்கான விருது கிடைத்தது.

அஜீத்தின் முதல் தமிழ்ப்படம் 'அமராவதி', இந்தப் படத்தில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டானது. ஆனால் படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. இருப்பினும் தமிழ் திரையுலகில் தனக்கு உதவி செய்ய யாரும் இல்லாத நிலையிலும் மனம் தளராமால் போராடி 'பாசமலர்கள்', 'பவித்ரா', 'ராஜவின் பார்வையிலே' போன்ற படங்களில் நடித்தார். இதில் பவித்ரா மட்டுமே பெயர் சொல்லும் படமாக அமைந்தது.

இன்னொரு மைனஸ் என்னவென்றால் நடிக்க வந்த புதிதில் சூர்யா எப்படியோ அப்படித்தான் அஜீத்தும் இருந்தார். அவர் நடித்த ஆரம்ப கால தமிழ் திரைப்படங்களை பார்ப்பவர்கள் நடிக்கவே தெரியாத இவனெல்லாம் நடிகனா என்றே நினைத்தனர்.

கார், பைக் ரேஸ் பிரியரான அஜீத், சினிமாவைவிட பந்தயங்களையே அதிகம் நேசித்தார். அடிக்கடி மோட்டார் பந்தயங்களில் கலந்து கொள்ளும் அவர் ஒரு போட்டியின் போது படுகாயம் அடைந்தார். இந்த காயத்தில் இருந்து மீண்டு வர நீண்ட நாட்களானது.

அஜீத்தின் திரையுல வாழ்வில் முதல் வெற்றிப் படமாக சுவலெட்சுமியுடன் இணைந்து நடித்த 'ஆசை' அமைந்தது. அகத்தியனின் 'காதல் கோட்டை' இவரை முக்கிய நடிகராக உயர்த்தியது. பின்னர் அவர் கொஞ்சம் கொஞ்சமாக வெற்றிப் படிக்கட்டில் ஏற ஆரம்பித்தார்.

அதன்பின் காதல் மன்னன், வாலி, அமர்க்களம், தீனா,சிட்டிசன், வரலாறு என பெயர் சொல்லும் படியான படங்கள் இவரை உயரத்தில் ஏற்றி வைத்தன. இருந்தாலும் எத்தனை படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்தனவோ அதே அளவுக்கு திருப்பதி, அசல் போன்ற மொக்கைப் படங்களில் நடித்து தனது வளர்ச்சியை தானே அழித்துக் கொள்வார்.

சில வருடங்களுக்கு முன் ரஜினியின் சூப்பர் ஸ்டார் நாற்காலி, அவருக்குப் பின் யாருக்கு என்ற பேச்சு அடிபட்ட போது நான்... நீ என்று எல்லோரும் போட்டி போட்டு அறிக்கைகளை அள்ளிவிட, அது குறித்து மனதில் பட்டதை சொல்லி ரஜினி ரசிகர்களிடம் தனது பெயரை கெடுத்துக் கொண்டார். ஆனால் மனதில் பட்டதை சொல்லும் இவரது குணம் சூப்பர் ஸ்டாருக்கு மிகவும் பிடித்துப் போனதால் சூப்பர் ஸ்டாரின் செல்லப்பிள்ளையாக மாறினார். அதன் மூலமாக இவருக்கு பில்லாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. கிடைத்த வாய்ப்பைப் பயன் படுத்தி வெற்றி வாகை சூடினார். இன்று சூப்பர் ஸ்டாரின் ஆசியுடன் பில்லா-II, சந்திரமுகி-II போன்ற படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றிருக்கிறார்.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி கதாநாயகியாகி இவருடன் அமர்க்களம் படத்தில் நடித்த ஷாலினியை காதலித்து கரம் பிடித்து அனோஷ்கா என்ற பெண் குழந்தைக்கு தந்தையான அஜீத் மிகவும் சந்தோஷமான குடும்பஸ்தராக வாழ்ந்து வருகிறார்.

அஜீத் மனதில் உள்ளதை அப்படியே பேசுபவர் என்பதற்கு உதாரணமாக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அன்றைய தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கு தமிழ்த் திரையுலகம் சார்பில் நடந்த பாராட்டு விழாவில் பேசும்போது திரையுலகினரை அரசியல் இயக்கங்களில் பங்கெடுக்குமாறு சிலர் மிரட்டுவதாக பகிங்கரமாக புகார் கூறினார். முதல் வரிசையில் அமர்ந்திருந்த ரஜினி அவர்கள் எழுந்து நின்று கைதட்டினார். இந்தப் பேச்சு அவருக்கு ஆதரவையும் எதிர்ப்பையும் சம்பாதித்துக் கொடுத்தது. அதன்பின் அவருக்கு ஏற்பட்ட மனவருத்தத்தால் மீண்டும் கார்பந்தயத்தில் கலந்து கொள்ள ஆர்வம் காட்டினார்.

ஆனால் இந்த ஆர்வம் நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை மீண்டும் சினிமா உலகிற்கே வந்தார். கலைஞர் கருணாநிதியின் பேரன் துரை தயாநிதி அழகிரி தயாரிப்பில் கங்கை அமரனின் மகன் வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜீத்தின் அம்பதாவது படமாக வெளிவர இருக்கும் மங்காத்தாவை அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

மங்காத்தா - சீட்டாடத்தில் ரம்மி, மூணு சீட்டு, செவன்ஸ் என்ற வரிசையில் ஒரு விளையாட்டு என்பதாலோ என்னவோ வெளிவரும் முன்னரே நிறைய ஆட்டங்களை பார்த்துவிட்டது. யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. அதிகம் எதிர்பார்க்கப்படும் இந்தப் படம் ஆட்சி மாற்றத்தால் வெளிவருமா... இல்லையா என்ற ஆட்டத்தில் எத்தனையோ போராட்டங்களை சந்தித்து தற்போது சன் பிக்ஸர்ஸ் கலாநிதி மாறன் கைகளில் தவழ்வதால் எப்படியும் சொன்ன தேதியில் திரையில் வினாயக்கை (அஜீத் கதாபாத்திரத்தின் பெயர்) பார்த்துவிடலாம் என்று சந்தோஷத்தில் இருக்கிறார்கள் தல ரசிகர்கள்.

சில மாதங்களுக்கு முன்னர் உங்கள் குடும்பங்களை பாருங்கள்... என் படம் பிடித்திருந்தால் தியேட்டரில் போய் பாருங்கள் என்று சொல்லி தனது ரசிகர் மன்றங்களை திடீரென கலைத்தார். இவர் மன்றம் இல்லை என்று சொன்னாலும் தலயின் விசிறிகள் மாறுவார்கள் என்று தெரியவில்லை.

இதுவரை தல பெற்ற விருதுகள்:

சிறந்த புதுமுக நடிகருக்கான விருதை பிரேம புஸ்தகம் படத்தில் நடித்ததற்காக பெற்ற அஜீத், நாயகன் மற்றும் வில்லனாக இரட்டை வேடத்தில் நடித்த வாலிக்காக பிலிம்பேர், சினிமா எக்ஸ்பிரஸ் மற்றும் தினகரன் விருதுகளைப் பெற்றுள்ளார் மேலும் பிலிம்பேர் விருதை வில்லன் மற்றும் கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் படங்களுக்காக பெறறிருக்கிறார்.வில்லன் படத்திற்காக சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது மற்றும் தினகரன் சினிமா விருதைப் பெற்றுள்ளார். முகவரிக்காக சினிமா எக்ஸ்பிரஸ் விருதையும் பூவெல்லாம் உன் வாசம் படத்திற்காக 2001 ஆம் ஆண்டு சிறப்பு நடிகருக்கான மாநில விருதையும் வென்றுள்ளார்.

'தல... 50' ஒரு பார்வை:

1. பிரேம புஸ்தகம் (1992 - தெலுங்கு அறிமுகம்)

2. அமராவதி(1993 - தமிழில் அறிமுகம்)

3. பாசமலர்கள்

4. பவித்ரா

5. ராஜாவின் பார்வையிலே

6. ஆசை

7. வான்மதி

8. கல்லூரி வாசல்

9. மைனர் மாப்பிள்ளை

10. காதல் கோட்டை

11. நேசம்

12. ராசி

13. உல்லாசம்

14. பகைவன்

15. ரெட்டை ஜடை வயசு

16. 1998 காதல் மன்னன்

17. அவள் வருவாளா

18. உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்

19. உயிரோடு உயிராக

20. தொடரும்

21. உன்னை தேடி

22. வாலி

23. ஆனந்த பூங்காற்றே

24. நீ வருவாய் என

25. அமர்க்களம்


26. முகவரி

27. கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்

28. உன்னை கொடு என்னை தருவேன்

29. தீனா

30. சிட்டிசன்

31. பூவெல்லாம் உன் வாசம்

32. அசோகா (ஹிந்தியில் அறிமுகம்)

33. சாம்ராட் அசோகா (தமிழ்)

34. ரெட்

35. ராஜா

36. வில்லன்

37. என்னை தாலாட்ட வருவாளா

38. ஆஞ்சநேயா

39. ஜனா

40. அட்டகாசம்

41. ஜீ

42. பரமசிவன்

43. திருப்பதி

44. வரலாறு

45. ஆழ்வார்

46. கிரீடம்

47. பில்லா

48. ஏகன்

49. அசல்

50. மங்காத்தா

தற்போது நடிப்பில்... லிங்குசாமி தயாரிப்பில் பில்லா-II மற்றும் சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் சந்திரமுகி-II ஆகியவை.

தலயின் 50வது படம் வெற்றிப் படமாக அமைவதுடன் தொடர்ந்து வெற்றிப் படங்களையே கொடுக்கட்டும்.மீண்டும் ஒரு நடிகர் பற்றிய பார்வையோடு அடுத்த நாயகனில் சந்திப்போம்.

அஜீத் குறித்த தகவல்களுக்கு உதவிய தமிழ் விக்கிபீடியாவிற்கும் அஜீத் படங்களைக் கொடுத்த இணைய தளங்களுக்கும் நன்றி.

-'பரிவை' சே.குமார்.

சனி, 27 ஆகஸ்ட், 2011

அர்த்தமுள்ள வாழ்க்கை

பேருந்து நிறுத்தத்தின் அருகில் இருக்கும் அந்த ஆட்டோ நிறுத்தத்தில் பத்து ஆட்டோக்கள் இருக்கின்றன. வரிசையாக சவாரி எடுப்பது என்ற எழுதப்படாத சட்டம் சில வருடங்களாக அவர்களுக்குள் கடைபிடிக்கப்படுகிறது. முதலாமவரில் ஆரம்பித்து பத்தாவது நபர் முடித்ததும் மறுபடியும் முதலாமவர் சவாரி எடுப்பார். இதுவும் நல்ல சட்டம்தான், ஒருவரே சவாரி எடுக்காமல் எல்லாருக்கும் ஒன்று போல் வாய்ப்பு கொடுத்து வந்தனர். ஆனால் இதிலும் ஏமாற்று வேலை நடக்கத்தான் செய்தது. தனக்கு வேண்டியவர்கள் என்றால் செல்பேசியில் பேசி, வீட்டு வரைக்கும் போய் வருவதாக சொல்லி சவாரி எடுப்பவர்களும் உண்டு. இருந்தாலும் எல்லாருக்கும் அது போன்ற எண்ணம் வருவதில்லை.

"என்ன மாரியப்பண்ணே... காலையில என்ன சோகம்?" என்றபடி அவரின் ஆட்டோவில் வந்து அமர்ந்தான் சுந்தர்.

"ஒண்ணுமில்லேப்பா..."

"அட முகந்தான் காட்டிக் கொடுக்குதே... என்ன பிரச்சினை உனக்கு"

"பெரியவ வந்திருக்கா சுந்தர்..."

"அதுக்கென்ன சந்தோஷமா விஷயம்தானே... இதுக்குப் போயி அலுத்துக்கிறே... மகளுக்கு கறி வாங்கி சமைக்கச் சொல்லவேண்டியதுதானே... அத்தாச்சிக்கிட்ட சொல்லிட்டு வந்தியா... இல்லேன்னா இந்தா காசு வாங்கிக்கிட்டு போயி கொடுத்துட்டு வா..."

"கறி சாப்பிடுற மூடுல அவ இல்லை சுந்தர்..." சொல்லும் போதே கண் கலங்கியது.

"என்னாச்சிண்ணே... எதாவது பிரச்சினையா..?"

"இதுவரைக்கும் காசு பணம் கேட்டு பிரச்சினை பண்ணினாங்க... கடனை உடனை வாங்கி சரி பண்ணிட்டேன்... ஆனா இப்ப..." கண்ணீர் வழிந்தது.

"கண்ணத்தொடை ஆம்பளை அழுகக்கூடாது... என்ன பிரச்சினை எனக்கிட்ட சொல்லலாமுன்னா சொல்லு..."

"அது...."

"மாரிமுத்தண்ணே.... சவாரி வந்திருக்கு நீதான் போகணும்..." என்று கத்தினான ராஜா.

"இல்ல ராஜா... எனக்கு மனசு சரியில்ல... அடுத்த ஆளை போகச் சொல்லு... நா அப்புறம் போறேன்..."

"என்னண்ணே பேசுறே... பத்துப் பேரு முடிஞ்சு உனக்கு மறுபடியும் எப்ப வாய்ப்பு வருமுன்னு தெரியாது... வீட்டுக் கவலைய விட்டுட்டு சவாரிய பாரு... " என்றான் சுந்தர்.

"இல்ல சுந்தர் மனசு சரியில்ல.... வீட்டுல இருக்க புடிக்காமத்தான் இங்க வந்தேன்.. எனக்கு அடுத்து சேகர்தானே அவனே போகட்டும்..."

"நீ என்ன பேசுறே... சேகர் நீ இரு... இந்த சவாரிய மாரிமுத்தண்ணனுக்காக நான் எடுத்துக்கிட்டுப் போறேன். அண்ணே நீ ஏ.. வண்டியில போயி உக்காரு... இறங்கு..." என்றவன் அவரது வண்டியில் சவாரிய ஏற்றிக் கொண்டு கிளம்பினான். வரும்போது ஒரு சவாரியை பேருந்து நிறுத்தத்தில் இறக்கி விட்டுவிட்டு வந்து அவரிடம் நூறு ரூபாயை கொடுத்தான்.

"என்ன சுந்தர் போன சவாரிக்கு நாப்பதுதானே பேசினே..."

"ஆமா... வரும்போது அறுவது ரூபான்னு பஸ் ஸ்டாண்டுக்கு ஒரு சவாரி கொண்டு வந்தேன் அதான்."

"அதை நீ வச்சுக்க..."

"நல்ல கதையா இருக்கே... அதுவும் உன் சவாரிதான்... பேசாம வை... ம்... இப்ப சொல்லு என்ன பிரச்சினை."

"கவிதாவுக்கு பிள்ளை இல்லைங்கிறது உனக்குத் தெரியுமில்ல..."

"ஆமா... அதுக்கென்ன இப்ப..."

"அதுதான் பிரச்சினையே... இப்ப பிள்ளை இல்லாததை காரணம் காட்டி சபீதாவை கட்டித் தரச்சொல்றாங்க... இல்லன்னா வெளியில பாத்துக்கிறோமுன்னு சொல்லி அவளை வீட்டுக்கு அனுப்பிட்டாங்க..."

"என்னண்ணே... அநியாயமா இருக்கு. ரெண்டு பேரும் டிரீட்மெண்ட் எடுக்கிறாங்கன்னு நீங்கதானே சொன்னீங்க."

"ஆமா... இன்னம் எடுத்துக்கிட்டுத்தான் இருக்காங்க... அதுக்குள்ள இப்படி புத்தி மாறி பேசுறாங்க..."

"உங்க மாப்பிள்ளையா இத சொன்னது..."

"ஆமா அவருதான் கவிதாவை கொண்டாந்து விட்டுட்டு சபீதாவை ரெண்டாந்தாரமா கட்டிக்கொடுத்தா அக்காவும் தங்கச்சியும் எங்கூட வாழலாம்.... இல்லாட்டி உங்க மக வாழாவெட்டியா இங்கயே இருக்கட்டும்... நான் வேற பொண்ணை கட்டிக்கப் போறேங்கிறார்... நான் என்ன செய்யட்டும். பெரியவளை கட்டிக்கிட்டு சின்னவ அழுவுறா.... எனக்கு ஒண்ணும் புரியலை... ராப்பகலா ஆட்டோ ஓட்டி புள்ளைய கட்டிக்கொடுத்தும் நிம்மதியில்லையே சுந்தர்..." உடைந்து அழுதார்.

"விடுண்ணே... அழுகாத... நாங்கள்ளாம் இல்ல.... இருங்க பார்ப்போம்... " அவருக்கு ஆறுதல் கூற, அவரின் அழுகையால் மற்றவர்களும் அருகில் வந்தனர்.

"சுந்தர் என்னாச்சு..." என்றான் ராஜா.

"பேமிலி பிரச்சினை..." என்றதும் "எதா இருந்தாலும் நாங்க இருக்கமுண்ணே... விட்டுத்தள்ளு சின்னப்புள்ள மாதிரி அழுவுறே..."

"இல்ல ராஜா.... கவிதா வீட்டுக்காரன் சபீதாவை கட்டித்தரச் சொல்றானாம்."

"கொய்யால... அவருக்கு ரெண்டாவது பொண்டாட்டி...அதுவும் பொண்டாட்டியோட தங்கச்சி வேணுமாமோ.... விடுண்ணே... கோத்தா அவனை வகுந்து போட்டுடுவோம்" கோபமாய் வார்த்தைகளை வீசினான் சேகர்.

"ஏய் சேகர் இருடா... இது மத்த விசயம் மாதிரி இல்லை பொண்ணுபுள்ள விசயம்... மெதுவாத்தான் டீல் பண்ணனும்... எடுத்தோம் கவித்தோமுன்னு பேசக்கூடாது. அண்ணே... நீ கவலையவிடு உம்மாப்பிள்ளை உங்கிட்ட மன்னிப்பு கேட்பான்..."

"சுந்தர் அவங்கிட்ட எதுவும்..."

"ஒண்ணும் நடக்காதுண்ணே.... நீ கவலைப்படாதே... ராஜா சாப்பாட்டு நேரத்துல ஒரு எட்டு மாப்பிள்ளை வீட்டு வரைக்கும் பொயிட்டு வருவோம்..."

"நானும் வாரேண்டா..." என்றான் சேகர்.

"நீ வேணான்டா... கோபத்துல கைய கிய்ய நீட்டிட்டியன்னா நம்ம பொண்ணு வாழ்க்கை பிரச்சினையாயிடும்... இப்ப நாங்க ரெண்டு பேரும் போயி பேசிப் பார்க்கிறோம். சரியா வரலைன்னா அப்புறம் உன் மெத்தடுதான் சரியா வரும்... அப்ப நீயி, அழகர், சாமினாதன் எல்லாம் போகலாம்... நீ அண்ணன் கூட இரு."

"சரி... பேசுங்க சரியா வரலைன்னா உடனே போன் பண்ணு... கோத்தா அப்பவே ஆளைத் தூக்குவோம்."

"சரிடா... டென்சனை கொற"


"வாங்க.. நீங்க மாமா இருக்க ஸ்டாண்ட்ல இருக்கவங்கதானே..."

"ஆமா..."

"உள்ள வாங்க..."

"வேலைக்குப் போகலையா..."

"இப்பத்தான் வந்தேன்... இனி நாலு மணிக்குப் போகணும்... என்ன விசயம்?"

"அது வந்து நேர விசயத்துக்கு வாரேன்... சபீதாவை கட்டிக்கிறேன்னு கேட்டியலாமே..."

"ஓ... அதுவா... அவரு வராம உங்களை அனுப்பி வச்சாரா... ஆமா.. இதுல என்ன தப்பு குழந்தையில்லை கொழுந்தியாளை கட்டி வைக்கச் சொன்னேன்.... அதுக்கென்ன..."

"வீட்டுக்கு மூத்த மாப்பிள்ளை நீங்க... கொழுந்தியா உங்க மக மாதிரி..."

"மக மாதிரியா... எனக்கு ஒரு மக வேணுமின்னுதான் அவளை கட்டித் தரச் சொன்னேன். முடியாதுன்னா நான் வேற பொண்ணு பாத்துக்கிறேன்... கவிதா அங்கயே இருக்கட்டும்..."

"என்னங்க பேசுறீங்க... அந்தக் குடும்பத்தை பாக்கவேண்டிய நீங்களே இப்படி பேசலாமா..?"

"என்ன தம்பி அவன் கேக்கிறது தப்பில்லையே... நீங்க வக்காலத்து வாங்கிக்கிட்டு வாறீங்க..."

"நீங்க அம்மாதானே உங்க மகளை கட்டிக்கொடுத்த எடத்துல இப்படி பேசினா ஒத்துக்குவீங்களா?"

"அது..."

"பதில் வராது... ஏன்னா அது உங்க புள்ளை வாழ்க்கை...அதானே... ரெண்டு பேரும் டிரீட்மெண்ட் எடுக்கிறாங்க... அதுக்குள்ள திடீர்ன்னு ஏன் இப்படி ஒரு முடிவு..."

"எனக்கு எந்தக் குறையும் இல்லைங்க..."

"டாக்டர் சொன்னாரா உங்க பொண்டாட்டிக்குத்தான் குறைன்னு... இல்ல உங்க மூலமா வேற யாருக்காவது குழந்தை பொறந்திருக்கா..." கோபமானான் ராஜா.

"அலோ... என்ன பேசுறீங்க... நீங்க யாருங்க எங்க குடும்ப பிரச்சினையில பேச மாமனா... மச்சானா..."

"ராஜா... அவசரப்படாதே... நாங்க மாமன் மச்சான் இல்லைங்க... அவருகூட ஒண்ணா மண்ணா பழகினவங்க... அந்த தகப்பன் மனசொடிஞ்சு அழுகிறதைப் பார்க்க எங்களால முடியலை... ஏன்னா எங்களுக்கும் அக்கா தங்கச்சிங்க இருக்காங்க... அவங்க மாதிரித்தான் அவரு பொண்ணுங்களையும் பார்க்கிறோம். அந்த எண்ணத்துலதான் உங்ககிட்ட பேச வந்தோம். நீங்க மனிதரா நடந்துப்பிங்கன்னு நம்புறோம்."

"என்னங்க மலடிய கட்டி வச்சதுக்கு பரிகாரமா ரெண்டாவது பொண்ணை கேக்கிறேன்... கட்டி வச்சிட்டா அக்காவும் தங்கச்சியும் எங்கூட சந்தோஷமா இருக்கலாமே... இது புரியாமா..."

"என்ன சொன்னே..." ராஜா எதோ சொல்லவர செல்போன் கூப்பிட்டது.

"அலோ..."

"....."

"ம்... சொல்லு... இல்ல மாப்ளே... பேசிக்கிட்டு இருக்கோம்.. சரி வரலைன்னா உன் மெத்தடுத்தான் தூக்கிருவோம்... நம்ம ஆளுகளை ரெடிபண்ணி வை.... கூப்பிடுறேன்..."

"யாருடா சேகரா... அவசரப்படாதீங்கடா... காரியம் கெட்டுட்டும்... ஆமா என்ன சொன்னீங்க... மலடிய கட்டி வச்சிட்டமா... நீங்க மலடன் இல்லைன்னு அடிச்சுச் சொல்ல முடியுமா? அப்புறம் ஏன் உங்களுக்கும் டிரீட்மெண்ட் எடுக்கணும். மலடியோட தங்கச்சிய கட்டி அதுவும் மலடியா இருந்தா அடுத்த பொண்ணு பாப்பீங்களோ...?"

"அது... அது...."

"வார்த்தைய விடாதீங்க... அள்ள முடியாது... எங்களுக்கு நல்லவிதமா பேசவும் தெரியும்... நாரத்தனமா நடக்கவும் தெரியும்... இவ்வளவு தூரம் எறங்கி பேசுறோமுன்னா ஒரு பொண்ணோட வாழ்க்கைக்காகத்தான்... அதை புரிஞ்சுக்கங்க... இப்பவே உங்களை தூக்க முடியும்... போன்ல பேசினத கேட்டிங்களா.... ஒரு ஆட்டோக்காரனுக்கு பிரச்சினையின்னா சிட்டியில இருக்க எல்லா ஆட்டோக்காரனும் வருவான் தெரியுமில்ல... உங்களை தூக்கிக்கிட்டுப் போயி அடிச்சு... மெரட்டி எங்க பொண்ண வாழவைக்க விரும்பலை... இன்னும் உங்களுக்கு வயசிருக்கு... டாக்டர் சொன்னபடி ரெணடு பேரும் டிரீட்மெண்ட் எடுங்க... அதுக்கப்புறமும் குழந்தைக்கான அறிகுறியில்லைன்னா எங்க பொண்ண நாங்களே வந்து கூட்டிக்கிறோம். நீங்க நல்லா வேற பொண்ண கட்டிக்கங்க... நாங்களும் நல்ல மாப்பிள்ளையா பாத்து கட்டி வச்சிக்கிறோம். அந்தப் பொண்ணுக்கு குழந்தை இல்லாத குறையத்தவிர உங்கிட்ட ஒரு மனைவியா, தாயா நடந்துக்கலைன்னு சொல்லு இப்பவே அது சார்பா நான் எழுதிக் கொடுத்துட்டுப் போறேன்... நீ யாரை வேணுமின்னாலும் கட்டிக்க..."

"என்ன சுந்தர் இவங்கிட்ட இப்படி எறங்கிப் பேசிக்கிட்டு..."

இரு ராஜா... கவிதா உங்கிட்ட நல்ல மனைவியாத்தான் நடந்திருக்கும் ஏன்னா அது மாரிமுத்தண்ணன் பொண்ணு... தன்னோட ஆட்டோ ஓடாட்டியும் எவனாவது கஷ்டமுன்னு சொல்லிட்டா அவரு முறையிலயும் அவனை ஓட்டச் சொல்றவரு அவரு... அவரு பொண்ணும் உனக்கு நல்ல மனைவியாத்தான் இருந்திருப்பா... இல்ல அவ என்னை மதிக்கலை... எங்க அம்மாவை மதிக்கலை... நாங்க இதுவர மனசறிஞ்சு அர்த்தமுள்ள வாழ்க்கை வாழலைன்னு சொல்லு... நீ கேக்கிறதுக்கு நான் உனக்கு சப்போர்ட் பண்றேன்..."

"அது... அதெல்லாம் இல்ல..." முணங்கினான் மாப்பிள்ளை.

"சரி நல்லா யோசிச்சு நல்ல முடிவா எடு... வா ராஜா போகலாம்"

இருவரும் கிளம்ப-

"என்ன சுந்தர்... அவங்கிட்ட செண்டிமெண்டா பேசிக்கிட்டு... நாலு விட்டுருந்தா பேசாம நம்ம வழிக்கு வாறான்..."

"இங்கதான் தப்பு பண்றே... அடிச்சுப் பணிய வைச்சா அவங்க வாழ்க்கை எவ்வளவு நாளைக்கு நல்லாயிருக்கும் சொல்லு... நமக்கு பயந்து வாழ ஒத்துக்கிட்டாலும் அந்தப்புள்ளையை தினமும் கஷ்டப்படுத்துவான். இப்பப்பாரு... நான் பேசும்போது கவனிச்சேன்... ஆரம்பத்துல வேகமா பேசினவனுக்கு கடைசியில பேச்சே வரலை... அது போக முகமும் மாறியாச்சு... கண்டிப்பா கவிதாவோட வாழ்ந்த நாட்களை நினைச்சுப் பார்ப்பான். அந்த சந்தோஷ நாட்கள் அவன் கண்முன்னே வரும். கண்டிப்பா திருந்தி வருவான்."

"எனக்கு நம்பிக்கையில்லை..."

"எனக்கு நம்பிக்கை இருக்கு... வா..."

"மாப்பிள்ளை என்ன சொன்னாரு சுந்தர்..." கையைபிடித்துக் கொண்டு மாரியப்பன் கேட்க,

"அவரு உங்களை பார்க்க வருவாருண்ணே... கவலைப்படாதீங்க..." என்றான் ஆறுதலாக...

"அண்ணே... அது..." என்ற ராஜாவை திரும்பிப் பார்த்து "என்ன ராசா... நான் சொன்னது சரிதானே... சவாரி வருது பாரு... ஒன்னோட முறைதான்னு நினைக்கிறேன்" என்றான்.

தூரத்தில் மாரியப்பண்ணன் மாப்பிள்ளை பைக்கில் வந்து கொண்டிருந்தான்.

-'பரிவை' சே.குமார்.

படம் உதவிய கூகிளுக்கு நன்றி

புதன், 24 ஆகஸ்ட், 2011

திருமகள் முதல் அஞ்சலி வரை...

தெய்வத் திருமகள் படம் பார்த்தோம். ஆரம்பத்தில் மிகவும் மெதுவாக படம் நகர ஆரம்பித்தது. 'என்னடா இது ரொம்ப பொறுமை வேண்டுமோ?' என்ற எண்ணம் மனதிற்குள் ஓடிய போது எனது நண்பர் அப்பா சாமி நமக்கு இது சரியா வராது... கதை இருக்கோ இல்லையோ வேங்கை மாதிரி சும்மா விறுவிறுன்னு போகணும்... செத்தவன் கையில வெத்தலை பாக்க கொடுத்த மாதிரி... சவச்சவன்னு போகுது... நான் தூங்குறேன்னு படுத்துவிட்டார்.

கதையின் நேர்த்தி கொஞ்சம் கொஞ்சமாக படத்தோடு ஐக்கியமாக்கியது. படத்தின் இறுதியில் நீதிமன்றத்தில் நிலாவும் விக்ரமும் தங்களது பாவனை மூலமாக பேசிக்கொள்வது மொத்த படத்தையும் ஒரே இடத்தில் நிறுத்திவிட்டது. அதுவும் நிலாவின் பாவனைகளும் அந்த அப்பாவித்தனமான முகமும் கண் கலங்க வைத்துவிட்டது.

'ஐ ஆம் சாம்' என்ற படத்தின் அப்பட்டக் காப்பிதான் தெய்வத் திருமகள் என்பது எல்லாரும் அறிந்ததே. விக்ரம் கஷ்டப்பட்டிருக்கிறார்... நல்ல உழைப்பாளி... தான் ஏற்று நடிக்கும் கதாபாத்திரமாகவே மாறிவிடுவார் என்பது எல்லாரும் அறிந்ததே. ஆனால் இந்தக் கதையின் அசல் பதிப்பில் சாம் வாழ்ந்திருப்பதை பார்த்துப் பார்த்து தன்னை தயார் படுத்தியிருந்தாலும் அவரது செய்கைகள் நமக்கு சில நேரங்களில் எரிச்சலைத்தான் தருகின்றது.

நிலாவாக வரும் சாரா தனது கதாபாத்திரத்தை அருமையாக செய்திருக்கிறார், அழகான நடிப்பு... கடைசிக் காட்சியில் தனது முகத்தில் அவர் காட்டும் பாவங்கள் சூப்பர். அவர் அளித்த தொலைக்காட்சிப் பேட்டி ஒன்றில் நீதிமன்றக் காட்சியை அப்படியே நடித்துக் காண்பித்தார். படத்தில் எல்லாரையும் பின்னுக்கு தள்ளி தானே முதலாவதாய் நிற்கிறார்.

அனுஷ்காவுக்கு சற்றே வித்தியாசமான கதாபாத்திரம்... 'விழிகளில்...' பாடலில் மழைத்துளிகளுக்கு இடையில் அனுஷ்காவை அழகாகக் காட்டியிருக்கிறார்கள். சந்தானம், அமலாபால் என எல்லாரும் அளவாய் நடித்திருக்கிறார்கள்.

இயக்குநர் விஜய் நல்லதொரு படைப்பை கொடுத்திருக்கிறார் என்று சொல்ல முடியாது... ஏனென்றால் ஒரு படத்தின் ஒரு சில காட்சிகளை உருவினால் பரவாயில்லை. படத்தையே உருவி இருக்கிறார். ஒரு சில காட்சிகளை உருவினாலே அங்கயிருந்து திருடியிருக்கான்... இங்கயிருந்து திருடியிருக்கிறான்னு எல்லாரும் பேசுவோம். ஆனா மொத்தமா திருடுனவனுக்கு தேசிய விருது கிடைக்குமுன்னு சொல்லிக்கிட்டு திரியுறோம். என்ன கொடுமை சார் இது.

***

ராகவா லாரன்ஸின் காஞ்சனா, பேய்க்கதை என்றால் பயமுறுத்தல்கள் மட்டுமே இருக்க வேண்டும்... நகைச்சுவை கலந்தால் படத்தின் சுவராஸ்யம் கெட்டுவிடும் என வரும் விட்டாலாச்சாரியா வகை படங்களுக்கு மத்தியில் நகைச்சுவையை எப்படிப் பயன்படுத்தினால் பேய்க்கதையையும் சுவராஸ்யமாக கொண்டு செல்லலாம் என்பதை புரிய வைத்திருக்கும் படம்.

படம் முழுவதும் நகைச்சுவை... நகைச்சுவை... நகைச்சுவை... பல நாட்களாக காணாமால் போன தமிழ்த் திரையுலகின் நகைச்சுவை அரசி கோவை சரளா இந்தப் படத்தில் புகுந்து விளையாடியிருக்கிறார். மருமகள் தேவதர்ஷினியுடன் அடிக்கும் லூட்டியாகட்டும், இரவில் தூக்கத்தில் எழுந்து சிரித்துவிட்டு படுப்பதாகட்டும், லாரன்ஸின் பேய்ச் சேட்டைகளின் போது ஒரு ஓரமாக உக்காந்து ரசிப்பது போல் பயத்தோடு சிரிப்பதாகட்டும்... கலந்துகட்டி அசத்தியிருக்கிறார். ஆச்சிக்குப் பிறகு நகைச்சுவை அரசியென்றால் அது கோவை சரளாதான்.

நம்ம சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் திருநங்கையாக வந்து வில்லன்களால் கொல்லப்பட்டு பேயாக மாறுகிறார். அளவாக கொடுத்த வேடத்தில் அருமையாக நடித்திருக்கிறார். படத்தின் கடைசிப் பாடலில் ராகவா லாரன்ஸின் நடனமும் பாடலின் வேகமும் இதயத்துடிப்பை எகிற வைக்கின்றன.

***

மானாட மயிலாட புகழ் மச்சான் நடிகை நமீதா, அன்னா ஹசாரே உண்ணாவிரதம் குறித்து பெரிய பேட்டி கொடுத்திருக்காக... அதுவும் எப்படி அவுக காந்தி பொறந்த ஊர்ல இருந்து வந்திருக்காங்களாம். அதான் அவரு கோவணம் கட்டின மாதிரி அம்மணி உடை உடுத்துது போல... அவரு கவர்ச்சியா நடிடி பேத்தின்னு சொல்லி அனுப்பி வச்சாரோ...

சரி...விஷயத்துக்கு வருவோம், போராட்டம் பண்ற எல்லாரும் காந்தியாக முடியாதாம். ஊழலை ஒழிக்க முடியாதாம்... மொத்தத்தில் இது தேவையில்லாத வேலையின்னு சொல்லியிருக்கு அம்மணி... இளைஞர் சமுதாயமே அன்னா ஹாசாரே பின்னாடி நிக்கிறத பாத்து நம்ம மார்க்கெட் (இருந்தாத்தானே) இளைஞர்களை நம்பித்தானே இருக்கு அவங்களும் அவரு பக்கம் பொயிட்டா என்ன ஆகுறதுன்னு பயப்படுதோ என்னவோ தெரியலை.

***

மங்காத்தாவும் வேலாயுதமும் ஒரே நாளில் வருமான்னு ரசிகர்கள் எதிர்பார்ப்பு. ஆனால் எப்ப வருமுன்னே இன்னும் தெரியாத நிலையிலதான் இருக்கு. தல அஜீத்துக்கு அம்பதாவது படம், அதிகம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படம் மங்காத்தா, பாடல்கள் நல்லா வந்திருக்கு... தளபதி விஜய்க்கு தொடர் தோல்விகளை மறக்கச் செய்யும் படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படும் படம் வேலாயுதம். ஜெயிக்கப் போவது தலயா... தளபதியா... என்பதை விரைவில் பார்க்கலாம்.

முக்கியமான விஷயம் என்னான்னா, மங்காத்தா பாடல்கள் வெளியீட்டு விழாவுக்கு தயாரிப்பாளர் தயாநிதி அழகிரியும், அஜீத்தும் வரவில்லை. இயக்குநர் வெங்கட் பிரபு ஒரு பண்பலை வானொலியில் வைத்து பாடல்களை வெளியிட்டார். ஆனால் வேலாயுதம் பாடல்கள் மதுரையில் நடக்கும் பிரமாண்ட விழாவில் வெளியிடப்படுகின்றனவாம். விமான நிலையத்தில் இருந்து விழா மேடைக்கு வரும் விஜயின் காருக்குப் பின்னால் நூற்றுக் கணக்கான கார்கள் வர ஏற்பாடாம். அம்மாவுக்கு ஆதரவா பேசினதுக்காக ரொம்பத்தான் அலப்பறை பண்ணுறாங்க... ம்ம்ம்.... ஆடட்டும்... ஆடட்டும்...

***

கலைத்தாயின் மைந்தர்கள்... (போட்டோ மட்டும்)


***
ச்ச்ச்ச்ச்சும்மா....


***
இப்ப புரிஞ்சிருக்குமே தலைப்பு எப்படி வந்துச்சின்னு.... என்ன பண்றது எதாவது மொக்கை போட்டாத்தானே மனசுங்கிற பேர்ல ஒருத்தன் கிறுக்கிக்கிட்டு இருக்கான்னு எல்லாருக்கும் ஞாபகம் வருது.

-'பரிவை' சே.குமார்.

படங்கள் உதவிய கூகிளுக்கு நன்றி

புதன், 17 ஆகஸ்ட், 2011

இந்திய கிரிக்கெட்: வீழ்ச்சியின் ஆரம்பமா?



கடந்த ஓராண்டுக்கும் மேலாக டெஸ்ட் அரங்கில் முதலிடத்தை தக்க வைத்திருந்த இந்திய அணி இங்கிலாந்துடனான நான் கு போட்டிகள் கொண்ட தொடரில் 3-0 என்ற கணக்கில் தோல்வியை சந்தித்துள்ள நிலையில் முதல் இடத்தையும் இழந்துள்ளது கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகுந்த வருத்தத்தைத் தந்துள்ளது.

கிரிக்கெட்டில் வெற்றி தோல்வி என்பது சகஜம்தான். ஆனால் நம்பர்-1 அணி மோசமான தோல்வியைச் சந்தித்ததுதான் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இவ்வளவு மோசமான தோல்விக்கு காரணம் என்ன?

இந்திய அணியைப் பொறுத்தவரை திராவிட்,சச்சின்,லெட்சுமணன், தோனி, காம்பீர், ரெய்னா, ஜாகீர்கான்,ஹர்பஜன் சிங் என பெரிய நட்சத்திரப் பட்டாளம் இருந்தும் அணியின் வெற்றிக்கு உதவும் நட்சத்திரமாக ஒருவர் கூட ஜொலிக்க முடியாதது துரதிஷ்டமே. (இவர்களை ஜொலிக்கவிடாமல் செய்த பெருமை காயத்தையே சாரும்.)

இரண்டு போட்டியில் தோற்றவுடன் அணியில் அறிவிக்கப்பட்டிருந்தும் காயம் காரணமாக விளையாடாமல் இந்தியா திரும்பியிருந்த சேவாக் வேகவேகமாக அனுப்பப்பட்டார். அவரும் சாதிப்பார் 2-2 என்று தொடரை சமன் செய்து இந்தியா முதல் இடத்தை தக்க வைத்துக் கொள்ளும் என்று முட்டாள் ரசிகன் மூடத்தனமாக நம்பினான். ஆனால் நடந்தது என்ன? இங்கிருந்து போனவர் பயிற்சிப் போட்டியில் 8 ரன் எடுத்து போதும் என்று போய் அமர்ந்து வேடிக்கை பார்த்தார்.

இரண்டு போட்டிகளிலும் எதோ கொஞ்சம் ரன் அடித்திருந்தாலும் சேவாக் வருகையால் தனது மூன்றாவது டெஸ்டில் இடம் கிடைக்காது என்பதை நன்கு அறிந்த முகுந்த், பயிற்சிப் போட்டியில் சதமடித்தார். இருந்தாலும் வாய்ப்பு சேவாக்கிற்கே கிடைத்தது. இங்கிருந்து இந்திய அணியை தூக்கி நிறுத்தப் போனவர் இரண்டு இன்னிங்ஸிலும் ரன் எதுவும் எடுக்காமல் நடையைக் கட்டி அவரை அவசரம் அவசரமாக அனுப்பிய இந்திய கிரிக்கெட் சங்கத்தின் முகத்தில் கரியைப் பூசியதுடன் இந்தியாவின் மானத்தையும் காற்றில் பறக்க விட்டார்.

இந்திய கிரிக்கெட்டின் பெருஞ்சுவர் என்று வர்ணிக்கப்படும் திராவிட், அவர் பங்குக்கு இரண்டு சதம் அடித்து களத்தில் போராடினாலும் அவருக்கு உதவியாக களத்தில் யாரும் நிற்கவில்லை... நிற்கவில்லை என்பதைவிட நிற்க நினைக்கவில்லை என்பதே உண்மை.

லெட்சுமணன் இந்த முறை ஜோபிக்கவில்லை. யுவராஜ் காயத்தால் அணியில் நிரந்தர இடம் பிடித்த ரெய்னா டுவெண்டி 20 விளையாடுவது போல் விளையாடி தனக்கான இடத்தை தானே இழக்க தயாராகிவிட்டார். இதே போல் காம்பீர் அனுவவ வீரர் போலில்லாமல் அவசரத்துக்கு பொறந்தவன் மாதிரி விளையாண்டு விரைவாக வெளியேறியது கேவலமானது. முதல் விக்கெட்டுக்கான கூட்டணி விரைவாக வெளியேறியதால் அடுத்தடுத்த விக்கெட்டுக்கள் விரைவாக சரிந்தன.

பந்துவீச்சைப் பொறுத்தவரை ஜாகீர்கானின் காயம் அணிக்கு பின்னடைவை கொடுத்தது என்பதே உண்மை. பிரவீன் குமார், இஷாந்த், ஸ்ரீசாந்த் போன்ற வேகங்களின் கேவலமான பந்து வீச்சு மூன்றாவது போட்டியின் இரண்டாம் மற்றும் மூன்றாம் நாட்களின் இந்த அணியா உலக அரங்கில் நம்பர் -1 அணியாக இருக்கிறது என்ற கேள்வியை பார்வையாளர்கள் மத்தியில் விதைத்துச் சென்றது.

ஆக்ரோஷமாக விக்கெட் எடுக்க வேண்டும்... ஸ்டம்பை தகர்க்க வேண்டும் என்று விளையாடும் இங்கிலாந்து பந்து வீச்சாளர்களுக்கு மத்தியில் இந்தா நாலு எடு, ஆறு எடு என்று பந்து வீசினார்கள் இந்திய பவுலர்கள். பள்ளிக்கூட மைதானத்தில் விளையாடும் சிறுவர்கள் கூட இதைவிட அருமையாக பந்து வீசுகிறார்கள்.

சச்சினைப் பொறுத்தவரை, வினோத் காம்ளி சொன்னதுபோல் இதுதான் அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் மோசமான தொடராக இருக்கும். இந்தியர்கள் மட்டுமல்ல உலகமே தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் சச்சின் அரை சதம் எடுப்பதே பெரிய விஷயமாக இருக்கிறது. இந்நிலையில் நாளை தொடங்கும் கடைசி டெஸ்டிலாவது சதத்தில் சதமடிப்பார் என்று ஒவ்வொரு இந்தியனும் நினைத்துக் கொண்டிருக்கிறான்.

மோசமான தோல்வியால் துவளாமல் அடுத்த போட்டியில் வெற்றி வேண்டும் என்பதைவிட சதம் வேண்டும் என்று விளையாண்டால் சதமும் வெற்றியும் கிட்டும் என்பதில் சந்தேகமில்லை. மேலும் கேவலமாக பேசும் இங்கிலாந்து அணியினருக்கு எதிராக சதத்துடன் வெற்றியைபும் எட்டி அவர்களது கொட்டத்தை அடக்கலாம். அவரது சாதனை மைல்கல்லில் மீண்டும் ஒரு கிரீடம் சூட்டிக் கொள்ளலாம்.

இறுதியாக, கேப்டன் தோனி, இரண்டு போட்டிகளில் இவர் சோபிக்கவே இல்லை என்றால் மூன்றாவது போட்டியில் இவர் மட்டுமே விளையாண்டார். அவர் மீண்டும் விளையாட ஆரம்பித்திருப்பது ஆறுதலான விஷயம்தான் என்றாலும் எப்பவும் பீல்டிங்கில் அதிக சிரத்தை காட்டும் இவர் இந்த முறை பீல்டிங் வியூகம் வகுப்பதில் கோட்டைவிட்டார் என்றே சொல்ல வேண்டும்.

இந்த தோல்வியில் இருந்து மீள வேண்டும் என்றால் நேற்றைய தோல்விகளை நினைத்து வருந்தாமல் நாளைய வெற்றியை நோக்கி பயணிக்க வேண்டும். அப்படிப் பயணித்தால் மீண்டும் தமது வெற்றி நடையை இந்திய அணி தொடரலாம்.

இந்த தோல்வி குறித்து பிசிசிஐ ஆராய்ந்து என்ன செய்யப் போகிறது என்று தெரியவில்லை. எவனுமே சரியாக விளையாடாத ஒரு போட்டியில் இவன் சரியில்லை ... அவன் சரியில்லை என்று எப்படி ஒதுக்க முடியும். அப்படி ஒதுக்க நினைத்தால் புதிய இந்திய அணியைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும்.

ஐபிஎல் போட்டிகள் விரர்களின் உடல் நலத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதே உண்மை. ஐபிஎல்தான் நிறைய வீரர்களை காயத்தால் அவதிப் பட வைத்தது. இது போன்ற போட்டிகளைக் குறைத்து நாட்டுக்கான போட்டிகளில் வீரர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றால் ஐபிஎல் குறித்து பிசிசிஐ முக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டும்.

வெற்றி பெற்றால் ஆஹா... ஓஹோ என்று புகழ்வதும் ஒரு முறை தோற்றால் போச்சு... அம்புட்டுத்தான்... இந்திய அணி அதாள பாதாளத்தை நோக்கி போகிறது, மூத்த வீரர்களுக்கு கண் சரிவர தெரியாது, தோனியின் தலைமை சரியில்லை... அது இது என்று பேசுவதை விடுத்து அணியின் வெற்றிக்கான வழிகளைத் தேட வேண்டும்.

இதே தோனி தலைமையிலான அணிதான் உலக கோப்பையை வென்றது. இதே தோனி தலைமையிலான அணிதான் டெஸ்ட் தொடரை இதுவரை தோற்காமல் இருந்தது... அப்பல்லாம் நாம் எங்க தல தோனி போல வருமான்னு புகழ்ந்தோம். இனியும் புகழும் காலம் வரும் அதுவரை தூற்றாமல் இருப்போம்.

இது இந்திய அணியின் வீழ்ச்சிக்கான காலத்தின் ஆரம்பம் என்று பல ஜாம்பவான்கள் ஆருடம் சொல்கிறார்கள்... அப்படி ஏன் சிந்திக்க வேண்டும்... இதுதான் அடுத்த எழுச்சிக்கான ஆரம்பம் என்று எடுத்துக் கொள்ளலாமே...

இந்த தோல்வி மறந்து வரும் போட்டியில் வெற்றிக்கனியை நமது அணி பறிக்கட்டும். அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி பெற்று இழந்த பெருமையை மீண்டும் மீட்கட்டும்.

இந்தியா நமது நாடு... நாம் இந்தியர்கள்... வென்றால் புகழ்வதும் தோற்றால் இகழ்வதும் இனி வேண்டாம்.... எப்போதும் இந்தியா ஒளிரட்டும். இது கிரிக்கெட்டுக்கு மட்டுமல்ல... எல்லா விளையாட்டுக்கும், எல்லா விசயங்களுக்குமான வரிகள்தான்...

-'பரிவை' சே.குமார்.

படங்கள் உதவிய கூகிளுக்கு நன்றி

ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2011

எது சுதந்திரம்..?



ரயில் நிலையம்...
பேருந்து நிலையம்...
விமான நிலையம்...
என எல்லா இடத்திலும்
தொடரும் பாதுகாப்பு
சோதனைகள்...

இந்தியத்
தொலைக்காட்சிகளில்
முதல் முறையாக
போட்டி போடும்
சினிமாக்கள்...

சுதந்திர போராட்டத்
தியாகிகளாம்
கதாநாயகன்
கதாநாயகியின்
பேட்டிகள்...

சமச்சீர் கல்வியால்
வகுப்பறையில்
தூங்கிய மாணவருக்கு
விடுமுறையுடன்
சாக்லெட்டு கொடுக்கும்
கொடியேற்றம்...

இவற்றிற்கெல்லாம்
முத்தாய்ப்பாய்...
குண்டு துளைக்காத
கூண்டுக்குள் இருந்து
சுதந்திரக் கொடியேற்றும்
பிரதமர்...

இப்படிப்பட்ட
சூழலில் தியாகிகளை
நினைக்க நமக்கு
நேரமிருக்கிறாதா..?

இதில் எங்கே
இருக்கிறது சுதந்திரம்...?

-'பரிவை' சே.குமார்.





படம் உதவிய கூகிளுக்கு நன்றி

புதன், 10 ஆகஸ்ட், 2011

சிறு துளி


டீக்கடை, இட்லிக்கடை மட்டுமே இருந்த அந்தப் பகுதியில் புதிதாக முளைத்தது 'முருகன் சவுண்ட் சர்வீஸ்'. அது ஒரு சிறிய கடைதான் கடைக்கு உள்ளே சில குழாய்கள், மைக்குகள், வயர்கள் எல்லாம் நிறைந்து கிடக்க, வெளியே சிறிய ஜெனரேட்டர் ஒண்ணு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

கடை முதலாளி முருகன் உள்ளூர்க்காரந்தான்... இதுவரை திருமயத்தில் இருக்கும் மைக் செட் கடையில் வேலை பார்த்தான். அவன் கடையில் வேலையில்லாத நேரத்தில் அவனும் அவன் முதலாளியும் பெரிய அளவில் தொழில் நடத்தும் முத்துச் செட்டியார் அழைப்பின் பேரில் அவரிடம் வேலைகளுக்கு செல்வதுண்டு. சம்பளமும் சாப்பாடும் கிடைக்கும்.

அப்படி சில நாட்களுக்கு முன்னர் நேமத்தான்பட்டி சுப்பையா செட்டியாரின் சாந்திக்கு மைக் செட், விளக்குகள் கட்ட போகணும் வாரீங்களான்னு முத்து செட்டியார் கேட்க அவருடன் கிளம்பினர்.

வேலையில் மும்மரமாக ஈடுபட்டிருந்த முருகனை கூப்பிட்ட முத்து செட்டியார், முருகா... வெளியில பாக்ஸ்தான் வைக்கப்போறோம். சீரியல் நல்லா இருக்கணும் ... நல்லா மேல ஏறிப் போடுன்னுனார்.

"சரிண்ணே... அதெல்லாம் நான் பாத்துக்கிறேன்.... டியூப் லைட்டை வேகமாக கட்டிட்டு வரச் சொல்லுங்க..." என்றான்.

முத்து செட்டியாருக்கு எப்பவும் முருகன் மேல தனி மரியாதை உண்டு. வேலையில இறங்கிட்டா சோறு தண்ணி எதிர்பார்க்க மாட்டான். எடுத்த வேலைய சிரத்தையோடு முடிக்கணும்... அதுக்குப் பிறகுதான் எல்லாம் என்பது அவன் எண்ணம். அது போல செய்யும் வேலையில் ஒரு நேர்த்தியிருக்கும். அதனால் அவர் அவனை நம்பி விட்டுவிட்டு எங்கு வேண்டுமானாலும் செல்வார்.

எல்லா பணிகளும் முடித்து அமர்ந்து சாப்பிட்டனர். அப்போது முருகனோட முதலாளி, "ஏண்டா... முருகா... ரெண்டு மூணு நாளைக்கு பெரிசு எப்படியும் ஒரு தொகை பாத்திருக்கும் இல்லையா?" என்றான்.

"பின்னே... சும்மாவா... எவ்வளவு லைட்டு.... சீரியல்லயே பாத்தியளா... அள்ளித் தெளிச்சிருக்கு....சும்மா நிப்பாட்டியிருக்க பாக்ஸப் பாருங்கா.... ஊரே அதிருமில்ல... முத்து அண்ணனுக்கு பேரு இருக்குன்னா சும்மாவா? நல்ல காசு பேசியிருப்பாரு."

"நீதான் அவர்கிட்ட நல்லா பேசுவியல்ல... லைட்டா அமௌண்ட் எவ்வளவுன்னு கேட்டுப் பாருவே..."

"ஏண்ணே... நாம வந்த வேலைய பாத்துட்டு துட்ட வாங்கிக்கிட்டு போறதை விட்டுட்டு வேண்டாத வேலை எதுக்கு..."

"சும்மா தெரிஞ்சுக்கத்தான்..."

"தெரிஞ்சு என்ன பண்ணப் போறீங்க... அடுத்த கான்ட்ராக்டை நீங்க புடிக்க போறீங்களா... சேந்தாப்புல நூறு லைட் கட்டின ஜெனரேட்டருக்கு அவருகிட்டதான் போகணும்... இதுல அவரு கான்ட்ராக்டைப்பத்தி கேட்டு என்னாகப் போகுது...."

"நாமளும் ஒரு நாள் அவரு மாதிரி வராமலா போயிடுவோம்..."

"வாரப்ப அவருகிட்ட கேக்கலாம்.... இப்ப பேசாம சாப்பிடுங்க..." என்றதும் மற்றவர்கள் சிரித்தனர்.

'முத்தண்ணன் மாதிரி நம்ம முதலாளி வாறாரோ இல்லையோ நாம ஒரு நாள் பெரியா ஆளா இருக்கணும்' மனதிற்குள் நினைத்துக் கொண்டான் முருகன்.

***

"என்ன முருகா... என்ன சிந்தனை..." என்றபடி அவனருகில் வந்து அமர்ந்தார் முத்து.

"ஒண்ணுமில்லேண்ணே... சும்மா உக்காந்திருந்தேன்..."

"சரி நான் கேக்குறேன்னு தப்பா நினைக்காதே... உன் மேல உள்ள அன்பாலதான் கேக்குறேன்... இதுல வர்ற வருமானம் உனக்குப் போதுமா... இதுவரைக்கும் சின்னப் பையனா இருந்தே... இனி அப்படியில்லையில்ல வயசு ஏறிக்கிட்டே போகுதுல்ல.... கல்யாணம் காச்சி பண்ண வேண்டாமா... ஒண்ணு வேற ஒரு நல்ல வேலையா பாரு... இல்ல இதுதான் தலையில எழுதுனதுன்னா நீயே ஒரு கடை ஆரம்பி...."

"என்னண்ணே சொல்றீங்க... நான் கடை ஆரம்பிக்கிறதா.... அட ஏண்ணே... அம்புட்டு பணத்துக்கு நான் எங்க போறது...? "

"இங்கபாரு எதையுமே மலைப்பா நினைச்சா மலப்பாத்தான் இருக்கும்... நான் வருஷா வருஷம் பழைய சாமாங்களை எதாவது ஒரு மைக்செட் காரனுக்கு பாதி விலைக்கு கொடுப்பேன்... அது மாதிரி உனக்கு வேணுங்கிறதை தாரேன்... இப்ப இருக்கதை கொடு... பின்னால பாக்கியத்தா..."

"அது சரிண்ணே... கடையெல்லாம் பாத்து வாடகை கொடுத்து...நடக்கிற காரியமா?"

"என்னப்பா உங்க ஊரு வெளக்குலதான் நாகமணி கடை கட்டிவிட்டிருக்கான்ல.... எம்புட்டு வாடகை கேக்கப்போறான்... உள்ளூர்காரன் நீயி... அதுவுமில்லா அவனுக்கு நெருங்கிய சொந்தம் அட்வான்ஸ் இல்லாம பேசிப்பாரு.... இந்த வேலையை உடனே ஆரம்பி..."

"எங்க விளக்குலயா... ஏண்ணே நீங்க..." சிரித்தான்.

"ஏன் சிரிக்கிறே... உங்க விளக்குல இருந்து திருமயம் பத்து கிலோமீட்டர்... அந்தப் பக்கமும் பெரிய சிட்டியெல்லாம் இல்ல.... சுத்துப்பட்டு கிராமங்கள்ல உன்னைய தெரிஞ்சவங்க நிறையப் பேரு... அப்புறம் என்ன நம்பிக்கையோட ஆரம்பி..."

"எங்க முதலாளி சுந்தரண்ணன் சிட்டிக்குள்ள ஆரம்பிச்சு... தட்டுத்தடுமாறி கொஞ்சம் கொஞ்சமா வளர்றாரு... நான் கிராமத்துல போயி ஈதான் ஓட்டணும்...."

"அட... போடா பைத்தியக்காரா... நான் முதன் முதல்ல ரெண்டே ரெண்டு குழாயோட ஆரம்பிக்கும் போது இந்த திருமயம் எந்த வசதியும் இல்லாத கிராமாமாத்தான் இருந்துச்சு... இப்ப அதுவும் வளர்ந்தாச்சு... நானும் வளர்ந்தாச்சு... பேரை சம்பாதிச்சா அப்புறம் பணம் தேடி வருமுடா...."

"சரிண்ணே... கேட்டுச் சொல்றேன்..." என்றவனை கடந்த ஒரு வாரகாலமாக முத்து செட்டியாரின் பேச்சு ஆட்டிப் படைத்தது... இறுதியில் தைரியத்துடன் கடை ஆரம்பித்துவிட்டான்.

***

ஒரு வாரத்திற்கும் மேலாகி யாரும் அவனை நாடவில்லை... அவர்கள் ஊருக்கு அருகில் இருக்கும் சமத்துவபுரத்தில் நேற்று நடந்த திருவிழாவிற்கு கூட முத்து செட்டியார்தான் மைக் செட் கட்டினார். இந்த முறை அவரும் அழைக்கவில்லை அவனும் செல்லவில்லை.

தினமும் கடையை திறப்பதும் சாமி பாட்டில் ஆரம்பித்து விதி கதை வசனம் வரை அந்தப் பகுதி மக்களுக்கு இலவசமாக வழங்கிவிட்டு இடையில் நாலைந்து டீயை குடித்துவிட்டு இரவு வீட்டிற்கு செல்வது வாடிக்கையானது.

தேவையில்லாம கடைய ஆரம்பிச்சிட்டோமோன்னு தோணுது... மாசாமாசம் எதோ செலவுக்கு கொடுத்தே... இப்ப அதுவும் போயி வாடகை, கரண்ட்பில்லு எல்லாம் கையில இருந்து கொடுக்கணுமேப்பான்னு அப்பா வருத்தப்பட்ட போது இல்லப்பா எல்லாம் சரியாகும்ப்பா என்றான் நம்பிக்கையோடு.

***

அன்று காலை வழக்கம் போல் கடையை திறந்து கூட்டி சாமி கும்பிட்டுவிட்டு சாமி பாடலை ஓடவிட்டுவிட்டு பக்கத்து டீக்கடையில் டீயை வாங்கிக் கொண்டு தினத்தந்தியை பிரித்தபோது ஒருவர் அவன் கடை முன் வந்து வண்டியை நிறுத்தி உள்ளே பார்க்கவும் டீயை வைத்து விட்டு ஓடினான்.

"வாங்கண்ணே... உள்ள வாங்க..." அவரை அழைத்தபடி உள்ளே நுழைந்து ரேடியோவை ஆப் செய்து அமர்ந்தான்.

"தம்பி நம்ம வீட்ல விசேசம்..."

"சந்தோஷமுன்னே... என்ன விசேசம்?"

"பொண்ணுக்கு சடங்கு..."

"ம்..."

"ரேடியோ கட்டணும்... அப்புறம் ரெண்டு மூணு லைட் போடணும்"

"போட்டுறலாமுண்ணே..."

"அப்புறம் எங்க ஊர்ல கரண்ட் கம்மியாத்தான் வரும்..."

"லோ வோல்டேஜா... எல்லா இடத்துலயும் அப்படித்தாண்ணே... இங்கயும் ஆறு மணிக்கு மேல டீப்லைட் எடுக்காது...ஜெனரேட்டர் வச்சிக்கலாம்..."

"எவ்வளவு தம்பி..."

"குழாய் போதுமா... பாக்ஸ் வேணுமா...?"

"குழாய் வேண்டாந்தம்பி... பாக்ஸே போதும்... பாத்துச் சொல்லுங்க... டவுனுக்குப் போக வந்தேன்... அப்பத்தான் சொன்னாங்க நீங்க இங்க வச்சிருக்கிறதா... நீங்க நம்ம ராமசாமி அண்ண புள்ளதானாமே... நா வெளி நாட்டுல இருக்கிறதால சின்ன வயசுப் புள்ளைங்களை தெரியலை அதான்..."

"ம்... உங்ககிட்ட அப்படி என்னத்தண்ணே கூட கேட்கப் போறேன்... எல்லா இடத்திலயும் ஜெனரேட்டர் கொண்டு வந்தாலே நூறு ரூபாய் சார்ஜ் பண்றாங்க... நைட் ஓடினா தனிக்காசு... இப்ப டீசல் ரேட் உங்களுக்கே தெரியும்..."

"அது சரி தம்பி நமக்கு நைட் ரொம்ப நேரம் ஓட்ட வேண்டியதில்லை... மாமக்காரளுக்கு சாப்பாடு போட்டோடணே அப்புறம் தேவையில்லை விடியக்காலைல சமைக்கத்தான் லைட் வேணும்.... அப்பக்கூட டீப் எடுக்கும்... ஜெனரேட்டர் தேவையில்லை..."

"சரிண்ணே எல்லாத்துக்கும் சேர்த்து ஆயிரத்தைனூறு கொடுங்க..."

"என்ன தம்பி ஒண்ணுக்குள்ள ஒண்ணு பாத்துக் கேளுங்க..."

"இல்லண்ண வேன் வாடகை இருக்கு... மத்த செலவும் இருக்கு... இதுல லாபம் பாக்க ஒண்ணும் இல்லேண்ணே... நல்லா பண்ணிக் கொடுக்கிறேன்..."

"சரி ஆயிரத்தெரனூறு வாங்கிக்கங்க..."

"கரெக்ட்டாத்தான் சொன்னேன்... முன்னூறு கொறச்சா எப்படிண்ணே..."

"சரி முன்னூறா வாங்கிக்கங்க..."

"என்னண்ணே..." தலையை சொறிந்தான்.

"புடிங்க.... நல்லா வருவீங்க... டீ சாப்பிடலாமா.?"

"சரிண்ணே... பக்கத்துல எதாவது விசேசமுன்னா நம்ம கடையை சொல்லுங்க... இந்தா நான் டீ சொல்றேன்..."

"கண்டிப்பா தம்பி நீங்க நம்ம புள்ளையாயிட்டிங்க... இருங்க நான் வடை கிடை வாங்கிக்கிட்டு டீ சொல்லிட்டு வாரேன்" என்றபடி அவர் டீக்கடைக்கு செல்ல....

அட்வான்ஸ் பணத்தை சாமி போட்டோ முன் வைத்து கும்பிட்டான். இந்த கிராக்கிக்கு நல்லா பண்ணி பேரை வாங்கிட்டா போதும்... அப்புறம் எல்லா பக்கமும் நமக்கு அழைப்பு வரும் என்று மனதிற்குள் நினைத்து சந்தோஷப்பட்டுக் கொண்டான்.

-'பரிவை' சே.குமார்.
போட்டோ வழங்கிய www.jackiesekar.com தளத்துக்கு நன்றி


ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2011

இதயத் துடிப்பே...


காலத்தின் பயணத்தில்
வசந்தங்களும்
கோடைகளும்
வந்து வந்து போகும்...

வாழும் வாழ்வில்
சொந்தங்கள் எல்லாம்
பல நேரம் சுடராகவும்
சில நேரம் சுடவும் செய்யும்...

எதிர்பார்ப்புகளைத் துறந்து
இதயத்தில் அமர்ந்து
இன்பத்தில் இணைந்தும்
துன்பத்தை தனதாக்கியும்
வாழும் உறவு...

மறைத்து வாழத் தெரியாமல்
மறுத்து வாழ நினைக்காமல்
உயிரோடு உயிராய்
வாழும் உறவு...

எத்தனை கோபம்
என்றாலும்
அத்துனையும் மறந்து
அரவணைக்கும் உறவு...

நீ...நான்...
உன்னது... என்னது...
உனக்கு.. எனக்கு...
என்ற பதங்கள் துறந்து

நாம்... நமது...
நமக்கு...
என வாழும் உறவு...

சுக துக்கத்தில்
நம்மோடு வாழும்
முகம் தெரிய
கணிப்பொறி உறவு...

ரத்த உறவுக்கு மத்தியில்
அழுத்த உறவாய் வாழும்
அமுத உறவே நட்பு...


(ஆகஸ்ட் முதல் ஞாயிறு (07/08-2011) நண்பர்கள் தினம். என் இனிய நட்புக்களுக்கு நம் நாள் வாழ்த்துக்கள்.)

-'பரிவை' சே.குமார்.
Thanks - Photos From Google

வெள்ளி, 5 ஆகஸ்ட், 2011

சொல்ல மறந்த கவிதைகள் - III




கண்மாயில் குளிக்கும்போது
நீரெடுக்க வரும் நீ...
இப்பொதெல்லாம் வருவதில்லை...
கண்மாயும் காய்ந்து கிடக்கிறது
என் மனம் போல..!


கடலில் குதூகலமாய் குழந்தை...
ஓடிவரும் அலையாய்
எத்தனை சந்தோஷங்கள்...
மனசுக்குள் சாரலாய்
உன் நினைவுகள் ..!



இப்போதெல்லாம் நீ
வருவதைத் தவிர்த்தாய்..
நான் வாழ்வதையே
தவிர்க்க நினைக்கிறேன்..!

-'பரிவை' சே.குமார்.

Thanks - Photos from Google