பஞ்சாத்தாவுக்கு தொண்டைக்கு நெஞ்சுக்குமா இழுத்துக்கிட்டு இருக்கு. இன்னைக்கு இல்ல... ரெண்டு நாளா இப்படித்தான் கஷ்டப்படுது... போற ஜீவன் உடனே பொயிட்டா நல்லது... இந்த மாதிரி 'கேவு... கேவு'ன்னு ரெண்டு நாளா அது கஷ்டப்படுறதைப் பார்க்க யாருக்கும் மனமொப்பலை.
பஞ்சாத்தாங்கிறது அதோட பேரில்லை... அதோட ஆயி அப்பன் வச்சது பஞ்சவர்ணம்... அதோட ஆத்தாதான் எப்பவும் 'ஏய் பஞ்சவர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ணனன'ன்னு நீட்டி முழங்கும். மத்தவங்க யாரும் அதை அப்படிக்கூப்பிட்டதில்லை. எல்லாருக்கும் அது பஞ்சுதான். வயசானதும் அத யாரோ ஒரு பய பஞ்சாத்தான்னு சொல்ல அவனுக்கு பின்னால வந்த எல்லாத்துக்கும் பஞ்சாத்தா ஆயி பஞ்சவர்ணமும் பஞ்சும் மறஞ்சாச்சி. பேருக்காரணத்தை பாக்கிற நேரம் இதுவல்ல என்பதால் பஞ்சாத்தாவை சுத்தியிருக்கும் உறவுகளுக்கு இடையே நாமும் செல்லலாம்.
"பாவம்... ரெண்டு நாளா இழுக்குது... பொட்டுன்னு கொண்டு போகாம கஷ்டப்படுத்துறானே"
"ஆமா... யாருக்கும் கடைசிவரைக்கும் தீங்கு நினைக்காதவங்க அயித்தை... ஆனா இப்படி கெடக்குதே..." என்றது நெருங்கிய உறவு.
"என்னப்பா... ரெண்டு நாளா போகவுமில்லாம எந்திரிக்கவுமில்லாம இழுத்துக்கிட்டு கிடக்கு... வயக்காட்டுல நடவு வேலைகளெல்லாம் அப்படியே கிடக்கு... நாமளும் இதுகிட்டே இருக்க வேண்டியதா இருக்கு... அது நெஞ்சுக்குள்ள என்ன இருக்கோ தெரியலையே..." என்றார் பஞ்சாத்தாவின் கொழுந்தன் முத்துக்காளை.
"அதாய்யா தெரியலை... இப்படி இழுத்துக்கிட்டு கிடக்குன்னா என்னவோ மனசுக்குள்ள இருக்குய்யா... அப்படியே செத்தாலும் நெஞ்சு அவ்வளவு சீக்கிரம் வேகாதுய்யா..." என்றார் பரந்தாமன்.
"பாவம்யா.. வயசு காலத்துல எல்லாருக்கும் நல்லா செஞ்ச மனுசிய்யா... அதோட பயலுகளுக்கு அப்பா இறந்த பின்னால அதை நல்லா கவனிச்சாங்கய்யா... இப்படி இழுத்துக்கிட்டு கிடக்காம பொசுக்குன்னு போன நல்லாயிருக்கும்... கொள்ளுப்பேரன் வரைக்கும் பாத்த மனுசிதானே இனி என்ன பாக்க வேண்டியிருக்கு..." என்றார் முத்துக்கருப்பன்.
"இப்பல்லாம் நல்லவங்கதான் இழுத்துக்கிட்டு கிடக்காங்க... கெட்டவங்களெல்லாம் பொட்டுன்னு போயிடுறாங்க இல்லன்னன்னா என் கவுண்டர்ல போட்டுடுறாங்க..." என்றான் சக்திவேல்.
"அட நீ வேற... எந்த நேரத்துல என்ன பேசுறா... பெரியவன் எங்கடா?"
"என்ன சித்தப்பா..."
"நீயி... தம்பி... தங்கச்சி எல்லாரும் இங்க இருக்கீங்க...புள்ள குட்டியெல்லாம் வந்தாச்சு... இருந்தும் உங்க ஆத்தா மனசுக்குள்ள எதோ இருக்கு... அது ரெண்டு நாளா படுற வேதனைய பாக்க சகிக்கலை..."
"ஆமா சித்தப்பா... எங்களை எப்படியெல்லாம் வளத்துச்சு... இன்னைக்கு அதோட சாவை எதிர்பார்த்து... சுத்தி உக்காந்து எப்ப சாகுமுன்னு பாத்துக்கிட்டிருக்கோம்..." சொல்லும் போதே தாய்ப்பாசம் அவனை உடைத்தது.
"சரி... அழுகாதே... ஆத்தா எல்லாத்தையும் அனுபவிச்சுட்டுத்தான்டா போகப் போகுது... அப்புறம் என்ன... வீட்டுக்குப் பெரியவன் நீ உடைஞ்சியன்னா மத்தவங்கள்ளாம்... என்னைக்கா இருந்தாலும் எல்லாரும் போறதுதானே... சரி.... கண்ணைத்தொட... ஆமா சிங்கராசு எங்க..."
"இங்கதான் இருந்தான் வெளிய போயிருப்பான்..."
"சரி... இப்படி கெடந்து அவஸ்தைப்படுறதை பாக்க சகிக்கலை... பேரனை விட்டு பாலூத்தச் சொன்ன உசிரு போகுமுன்னு சொல்லி எல்லாப் பேரணும் பாலூத்தியாச்சு... ம்... ஒண்ணும் நடக்கலை... அதனால..."
"....." ஒன்றும் பேசாது அவரை ஏறிட்டுப் பார்த்தான்.
"பாலுல கொஞ்சம் வெசத்தை..."
"சித்தப்பா... வேணாம் சித்தப்பா... எங்களுக்காக கஷ்டப்பட்ட அந்த மனுசிக்கு கடைசியில வெசத்தை கொடுக்கிறதா... எத்தனை நாளானாலும் பரவாயில்லை சித்தப்பா... "
"அட... இது ஊரு நாட்டுல கமுக்கமா நடக்கிற விஷயம்தாண்டா... இப்படி இழுத்துக்கிட்டு இன்னும் ரெண்டு மூணு நாள் கிடந்த தாங்கமுடியுமா உங்களால... இல்ல தூக்கிகீக்கி குளியாட்ட முடியுமா... முதுகெல்லாம் பிச்சிக்குமுடா... லேசா கலந்துட்டு அதுக்கு பாசமானவங்க ஊத்துன சட்டுனு நின்னு போகும்..."
"வேணாம் சித்தப்பா... இன்னைக்கு பாக்கலாம்..."
"பெரியவன் சொல்றதும் சரிதான்... பெத்த தாய்க்கு விஷம் கொடுக்க எந்தப் பிள்ளைக்கு மனசு வரும்... ம்... அதெல்லாம் இருக்கிற நாம அவங்களுக்கே தெரியாம கமுக்கமா செய்யணும்... அதை இப்ப விடு அப்புறம் பாக்கலாம்... கிழவி மனசுக்குள்ள ராமசாமி நினைப்பு இருக்குமோ..?" என்று மெதுவாக கேட்டார் பரந்தாமன்.
"என்ன பேசுறே... அவனோட உறவெல்லாம் எங்க அண்ணன் இருக்கும்போதே அத்துப்போச்சு... அவனை எதுக்கு அது நினைக்கப்போகுது..."
"இல்ல முத்து... நான் எதுக்கு சொல்ல வாரேன்னா... எல்லாரும் வந்தாச்சு... அவன் மட்டும்தான் வரலை... கிழவி இழுத்துக்கிட்டு கிடக்கதைப் பாத்தா எனக்கென்னவோ அதாத்தான் இருக்குமுன்னு..."
"சும்மா இருங்க மாமா... அவரு உறவே வேண்டான்னு ஒதுங்கி பல வருஷமாச்சு... இனி எதுக்கு அவரைப் பத்தி பேசிக்கிட்டு..."
"என்ன இருந்தாலும் ரத்த சொந்தம் அத்துப்போகுமா மாப்ளே... அவனக் கூட்டியாந்து பாலூத்தச் சொன்னா என்னங்கிறேன்.."
"ஏய்யா பகையாளிய கொண்டு வந்து பாலூத்துனாத்தான் கெழவி சாகுமுன்னா அதுக்கு வெசத்தை கொடுத்து நாமளே அனுப்பி வைக்கலாமே..."
"எதுக்கு முத்து வேகப்படுறே... பரந்தாமன் சொல்றதுல என்ன தப்பிருக்கு.. நாலு பேரு போயி அவன் கிட்ட பேசிப்பார்ப்போம்... அவன் வாரேன்னு சொன்ன கூட்டியாந்து பாலூட்டச் சொல்லுவோம். ஒருவேளை கெழவி அந்த நினைப்புல இருந்தா சந்தோஷமா சாகுமில்ல..." என்று பரந்தாமனின் கருத்தை ஆதரித்துப் பேசினார் முத்துக்கருப்பன்.
"எனக்கு இதுல விருப்பம் இல்லய்யா... நானும் எங்க பசங்களும் வரலை... பங்காளிக நீங்க வேணுமின்னா போயி பேசுங்க... அதுவும் நீங்க இவ்வளவு தூரம் சொல்றதுனால... அப்புறம் அவன் எடுத்தெரிஞ்சு பேசிட்டான்னு சொல்லிக்கிட்டு எங்ககிட்ட வராதீங்க... சொல்லிப்புட்டேன்..."
"நீ வரலைன்னா பரவாயில்லை... பெரியவனையாவது சின்னவனையாவது வரச்சொல்லு... அவங்க வந்து கூப்பிடணுமின்னு அவன் எதிர்பார்ப்பான்ல..."
"இல்ல மாமா அந்தாளு வீட்டுக்கு நாங்க வரலை... நீங்களே போயி பேசுங்க..."
"சரி... வா முத்துக் கருப்பா... ஏய் பழனிச்சாமி, வெள்ளையா வாங்கப்பா... ராமசாமி வீட்டு வரைக்கும் பொயிட்டு வருவோம்".
"வாங்க..." என்றபடி எழுந்தார் ராமசாமி, எழுவதை விழுங்கிய தேகத்தில் சுருக்கத்தின் ஆதிக்கம் இருந்தாலும் விவசாய வேலை பார்த்து திண்ணென்று இருந்த வெற்றுடம்புடன் இருந்தார். அவரது கண்கள் கலங்கியிருப்பது தெரிந்தது. ஒருவேளை கிழவியை நினைத்து அழுதிருப்பாரோ என்னவோ என்று வந்தவர்களை நினைக்கவைத்தது. சத்தம் கேட்டு உள்ளிருந்து தலைகள் எட்டிப்பார்த்தன.
"என்ன விஷயம்... எல்லாரும் வந்திருக்கீங்க..." அவரது குரலில் எப்போதும் இருக்கும் கணீர் குறைந்து சுரத்தில்லாமல் இருந்தது.
"ஏய் சவுந்தரம்... ஒரு நாளஞ்சு காபி போட்டுகிட்டு வா" என்றபடி அவர்களை திண்ணையில் அமரவைத்து கேள்விக்கான பதிலை எதிர்பார்த்தார்.
"உனக்கு விசயம் தெரிஞ்சிருக்கும்... பஞ்சாத்தா ரெண்டு நாளா தொண்டைக்கும் நெஞ்சுக்கும் இழுத்துக்கிட்டு இருக்கு..."
தெரியும் என்பது போல் தலையாட்டினார்... உள்ளம் அழுததை உதடுகள் காட்டிக் கொடுத்தன. மேல் துண்டால் கண்ணை துடைத்துக் கொண்டார். அவரிடமிருந்து பெருமூச்சொன்று எழுந்தது.
"அதான் நீ வந்து பாலூத்துனா..."
"நானா... எங்க உறவருந்து எத்தனையோ காலமாச்சி... எந்த நல்லது கெட்டதுக்கும் சேர்ந்துக்கலை... இப்ப நா எப்படி பாலூத்தறது..."
"இல்ல அது இழுத்துக்கிட்டு கிடக்கதப்பாத்தா உம்மேல உள்ள பாசத்துலதான்..."
அவர் எதோ சொல்ல வாயெடுக்க, "இந்தாங்க காபி எடுத்துக்கங்க... அவரு ரெண்டு நாளா எதுவும் சாப்பிடலை... என்ன செய்ய எங்க கால நேரம் இப்படி தனியா நிக்கிறோம்..." என்றபடி சேலைத்தலைப்பால் மூக்கைச் சிந்தினாள் சவுந்தரம்.
"என்ன சொல்றே... ராமசாமி..."
"பாசமெல்லாம் இருந்து என்ன பண்ண... இதுவரைக்கும் நல்லது கெட்டது எல்லாத்தையும் தள்ளியாச்சு... "
"இனிமேயா பொறக்கப் போறோம்... நாம எல்லாருமே இருக்கிற காலத்துல சண்டை சச்சரவுன்னு வாழ்க்கையை தொலச்சிட்டுதானே நிக்கிறோம்..."
"ஆமா... பயலுக கூட வரலை போல..."
"அ... அவங்க ஆத்தாகிட்ட அழுதுகிட்டு நிக்கிறாங்க... நீ வந்தியன்னா அதோட உயிரு சந்தோஷமா போகுமின்னு நினைச்சுத்தான் நாங்க உன்ன கூட்ட வந்தோம்... இதுல அவங்களுக்கும் சம்மதம்தான்"
தனது மனைவியைப் பார்த்தார். "போயிட்டு வாங்க... அவங்க பேசுறாங்க இல்ல அதப்பத்தி எல்லாம் யோசிக்க வேணாம்... ரெண்டு நாளா இழுத்துக்கிட்டு இருக்குங்கிறாங்க... பாவம் போறப்போ அவங்க மனசு சந்தோசமாப் போகணும்..."
"நீயும் வா...."
"இல்லங்க... நீங்க மட்டும் போங்க... எங்களை எல்லாம் அந்த மனுசங்களுக்கு பிடிக்காது... நாங்க யார்கிட்ட வந்து அழுகுறது..." சொல்லும் போதே கண்ணீர் எட்டிப்பார்த்தது.
"சரி அழுவாதே... இவுங்க வந்து கூப்பிட்டதுக்காக நான் போறேன்... அந்த வீட்டு மனுசங்களுக்காக இல்ல... சாவோட போறாடிக்கிட்டிருக்கிற பஞ்சாவுக்காக அந்த வீட்டுப் படி ஏறுறேன்..." என்றவர் குலுங்கி அழ ஆரம்பித்தார்.
"சரி அழுகாம வா ராமசாமி... மறுபடியுமா பொறக்கப் போறோம்..." என்று அவரை தேற்றினார் முத்துக்கருப்பன்.
"என்ன இருந்தாலும் ரத்த பாசம் விட்டுப் போகுமாய்யா... தானாடாட்டாலும் தன் சதை ஆடுமுன்னு சும்மாவா சொல்லியிருக்காங்க..." என்றார் ஒருவர்.
சிறு சிறு விசும்பல் ஒலிகளுடன் இறுக்கமான முகங்களின் விலாசத்துடன் இருந்த வீட்டிற்குள் தயங்கி நுழைந்த அவரைக் கண்டவுன் முத்துக்காளையும் பயலுகளும் முகத்தை திருப்பிக் கொண்டனர். அவர் யாரையும் சட்டை செய்யவில்லை. பஞ்சாத்தாவின் அருகில் சென்றதும் கலங்கிய கண்ணைத் துடைத்தபடி 'பஞ்சா...' என்றார் மெதுவாக.
"ஏய் பாலக் குடுங்க அவன் கையில... ராமசாமி சத்தமா கூப்பிட்டுக்கிட்டே பாலை அது வாயில ஊத்துப்பா..."
"என்ன பரந்தாமா... நான் பஞ்சாவுக்கு பாலூத்தி போவச் சொல்லணுமா... முடியலையே... என்னால முடியலையே... சண்டையா இருந்தாலும் வெளிய தெருவ இந்த முகத்தை பாக்கும்போது சந்தோஷப்பட்டுக்கிற நா... இனி எங்க பாப்பேன்..." உடைந்து அழுதார்.
'கேவ்...கேவ்..." என்று எதையும் அறியாமல் இழுத்துக் கொண்டேயிருந்தது. அவர் ஊற்றும் பாலுக்காகவும் அதன்பின் நடக்க இருப்பதையும் பாக்க எல்லா கண்களும் பஞ்சாத்தா மீது நிலைத்திருந்தன.
"பஞ்சா... அம்மாடி... நா... ராமசாமி வந்திருக்கேன்... பாலைக் குடிம்மா... ப..ஞ்..சாசாசா.... நா... ரா...ரா...ராமசாமி.... உன்..." முடியாமல் உடைந்து அழுதபடி பாலை வாயில் ஊற்றினார். உள்ளே சென்றதைவிட வெளியே வழிந்ததே அதிகமாக இருந்தது. தனது துண்டால் வழிந்த பாலை துடைத்தார்.
'கேவ்... கேவ்..."
"இதுக்கும் நிக்கிற மாதிரி தெரியலை.... இனி யாரை ஊத்தச் சொல்றது..." ஒரு உறவு குசுகுசுக்க...
"கே....வ்.... கே....வ்..." ஒரு மாதிரி இழுத்தது. 'கே....' அப்படியே நின்றது.
"பஞ்சா..." ராமசாமி கத்த அழுகுரல்களின் சப்தம் அதிகமானது.
"தன்னோட பொறந்தவனை மனசுக்குள்ள வச்சிக்கிட்டுத்தான் மூணு நாளா தவிச்சிருக்கு கிழவி" என்று யாரோ சொல்ல,
ராமசாமியை மாமா, அப்பா, மச்சான் என்று உறவுகள் கட்டிக் கொண்டு கதற ஆரம்பித்தன.
-'பரிவை' சே.குமார்.
போட்டோ உதவி : கூகிள்.... நன்றி