மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

அதீதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அதீதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 19 மார்ச், 2013

அதீதத்தில் 'கண்ணில் ஆடும் காலம்'


காலையில எங்கட  கிளம்புறே என்ற அப்பாவிடம் தம்மத்துல குளிச்சி எத்தனை வருசமாச்சு… தண்ணி நிறைய கெடக்குதாம், அதான் நானும் ராமுவும் குளிக்க போறோம் என்றேன். அப்படியே லெட்டர்  எதுவும் வந்திருக்கான்னு  தபாலாபீஸ் சாமிநாதன் செட்டியார்கிட்ட  கேட்டுட்டு வா எனச் சொன்னதும் இன்னும் லெட்டர் வருதா? என்ற ஆச்சர்யத்துடன் என்னப்பா இன்னும் லெட்டர் எல்லாம் வருதா? என்றேன் சிரித்துக் கொண்டே.
ஆமா…. கோர்ட்,இன்சூரன்ஸ்காரன் அனுப்புறது அப்படியிப்படின்னு சில லெட்டர் வரும். போயி இன்னார் மகன்னு சொல்லி கேட்டியன்னா வந்திருந்தா கொடுத்திருவாரு. மறந்துறாம கேட்டுட்டு வா… இல்லைன்னா சாயந்தரம் நான் நடந்து போய்  கேட்டுட்டு வரணும்… என்று அப்பா சொல்லிக் கொண்டிருக்கும் போதே வண்டி கிளம்பியது.
வண்டியில் போகும் போது “ஏன்டா  மச்சான்… இன்னமாடா நம்ம ஊருக்கு  லெட்டரெல்லாம் வருது… இப்போ போஸ்ட்மேன் யாருடா?” என்றேன் ஆவலாய்.
“எங்க மச்சான் எல்லாருக்குமெல்லாம் வர்றதில்லை. மாமா வாத்தியாரா இருந்ததால எதோ புக்கு அது இதுன்னு வரும். தபால்காரரெல்லாம் அதிகம் வர்றதில்லை.. நானும் பார்த்ததில்லை… யாராவது அங்கிட்டுப் போனா வாங்கிக்கிட்டு வந்திருவோம்.”
“பரவாயில்லையே… நம்ம ஊருக்கும் தபால் இன்னும் வருதுன்னா சந்தோஷமாத்தான் இருக்கு. நாம சின்னப் பிள்ளைகளா இருக்கும் போது ஒரு ஓட்டச் சைக்கிள்ல வயர்கூடைய தொங்கப் போட்டுக்கிட்டு தலையில வெயிலுக்கு துண்டை சுத்திக்கிட்டு வருவாரே குமாரசாமி ஐயர் ஞாபகத்துல இருக்காராடா”
“மறக்க முடியுமா மச்சான்… உடம்புல சட்டைய ஒரு பக்கம் மட்டும் போட்டுக்கிட்டு பூணூல் தெரிய வருவாரே… அதுவும் மழை பேஞ்சு கம்மா நெறஞ்சிருக்கும் போது குறுக்கால முழங்காலு தண்ணிக்குள்ள நடந்து வந்து தருவாரே… அவர மறக்க முடியுமா…”
“ம்… மாமா, சின்னத்தா, அப்பா, அண்ணன் , அக்கா, தம்பியின்னு எல்லாருக்கும் முறை வச்சித்தான் கூப்பிடுவாரு.”
“ஆனா என்னய எண்ணக்கடை முதலாளிம்பாரு… உன்னைய சின்ன வாத்தியாருன்னு சொல்வாரு… நம்ம கட்ட சுரேசுப் பயல பஞ்சாயத்து மவனேன்னு கூப்பிடுவாரு… பாண்டிய மட்டும் நாம எல்லாரும் கூப்பிடுற மாதிரி பொத்தமுட்டின்னுதான் சொல்லுவாரு…”
“அவரு மணக்குடிதானேடா… இப்ப அங்கதான் இருக்காரா… நீ பாத்திருக்கியா…”
“முன்னாடி பாத்திருக்கேன்… இப்ப முடியாம இருக்காருன்னு ஒரு தடவ மாமா சொன்னாங்க… ஒரு தடவ பாத்தப்போ என்னை அடையாளம் தெரியலை… இன்னார் மகன்னு சொன்னதும் அடேய் களவாணிப் பயலே… வளர்ந்துட்டியல்ல அதான் அடையாளாம் தெரியலை… எல்லாப் பயலுவலும் நல்லா இருக்காங்களா… ஆமா உங்க ஊரு எழுத்தாளன், அதான்டா சின்ன வாத்தியார் எப்படிடா இருக்கான்… இன்னும் எதாவதுதான் எழுதிக்கிட்டுத்தான் இருக்கான் போல… ரெண்டு மூணு தடவை புத்தகத்துல ஊர் போரோட பாத்திருக்கேன்… எங்கடா இருக்கான்னு கேட்டார்.”
“அவருக்கு எல்லாரையும் பிடிப்பதைவிட என்னை கொஞ்சம் கூடுதலா பிடிக்கும். நான் படிக்கும் போது கதை எழுதி வந்தப்போ பத்திரிக்கை அனுப்புற பணத்தை நா இல்லாதப்போ அவரே கையெழுத்துப் போட்டு அம்மாகிட்ட கொடுத்துட்டுப் போயிருக்கார்… ம்… நல்ல மனுசன்…”
“காலம் நம்மகிட்ட இருந்து எத்தனையோ பேரை பிரிச்சிடிச்சிடா… பள்ளிக்கூடத்துல உம்மேல பாசமா இருக்குமே வாசுகி டீச்சர்… ரெண்டு மாசம் முன்னால இறந்து போச்சுடா… அப்புறம் பெட்டிக்கடை முருகேசு அண்ணன்… அதான்டா பள்ளிக்கூடம் விட்டா அங்கதானே நிப்போம்… போன மாசம் திடீர்ன்னு செத்துப் போச்சுடா… இவ்வளவு ஏன் நம்ம கூட படிச்சிச்சுல்ல கவிதா, கொஞ்ச நாளைக்கு முன்னால அரளி விதையை அரச்சிக்குடிச்சிட்டு செத்துப் போச்சுடா…”
எவ்வளவு பிரிவுகள்… இழப்புக்கள்… நல்லது கெட்டது எதுவுமே தெரியாமல் வெளிநாட்டில் வாழ்ந்து இரண்டு மூன்று வருசத்துக்கு ஒரு முறை ஊருக்கு வரும் போது இதுபோல் கேள்விப்பட்டு வருத்தப்பட மட்டுமே முடிகிறது என் போன்ற வெளிநாட்டு வாசிகளால் என்று நினைக்கும் போது மனசுக்குள் ஒரு அழுத்தம் வந்து அமர்ந்தது.
“என்னடா சொல்றே… எதுவுமே தெரிஞ்சிக்க முடியாம போகுதுடா… சொந்தத்துல நல்லது கெட்டதுன்னா அம்மா சொல்லிடும்… மத்ததெல்லாம் தெரிய வாய்ப்பில்லாம போகுதுடா… டீச்சர், கவிதா, முருகேசண்ணன் செத்ததை நீயாவது சொல்லியிருக்கலாமுல்லடா…” வருத்தம் தோய்ந்த குரலில் வார்த்தைகள் நொறுங்கி வெளியே வந்தன.
“ஆமா… அப்படியே போன் பண்ணி கிழிச்சிட்டே… அதான் இப்போ சொல்லிட்டோமுல்ல… செத்தவங்களைத் தவிர அவங்க வீட்ல நமக்கு யாரையும் தெரியாது… சரி வா குளியலைப் போடு… இப்படி குளிச்சி வருசக் கணக்காயிருச்சுல்ல உனக்கு… நல்லா அழுக்கை தேச்சுக்குளி…”

கதையை இனி அதீதத்தில் தொடர்ந்து படித்து உங்களின் கருத்தை அங்கும் இங்கும் பதியுங்கள்... 
அதீதத்தில் தொடர.... 'கண்ணில் ஆடும் காலம்'
  – “பரிவை” சே குமார்.

சனி, 17 நவம்பர், 2012

விசாலம் அக்கா - அதீதத்தில்...

அதீதம் இணைய இதழில் வெளியான எனது 'விசாலம் அக்கா' என்ற சிறுகதையை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அதீதத்தில் வெளியாகும் மூன்றாவது சிறுகதை இது. 
கதையை வெளியிட்ட ஆசிரியர் குழுவிற்கு நன்றி.

-----------------------------------------------------------------------------------------------------------

நல்ல உறக்கத்தில் இருந்த என்னை திடுக்கிட்டு விழிக்க வைத்தது கனவு. நெஞ்சு படக் படக்கென அடித்துக் கொள்ள எழுந்து அமர்ந்தேன். தண்ணீர் அருந்தினால் கொஞ்சம் ஆசுவாசம் கிடைக்கும் என்பதால் அருகில் இருந்த ஜக்கை எடுத்து தண்ணீர் அருந்தினேன். கொஞ்சம் படபடப்பு குறைந்தது. சின்ன வயதில் என்னைப் பாதித்த நபர்களை அவ்வப்போது நினைப்பதுண்டு. எங்க வீட்டில் வேலை பார்த்த கருப்பண்ணன், பால்கார வீராயி, மீன்காரி முனிம்மா, எனக்கு ரொம்ப பிடித்த விசாலம் அக்கா என எல்லோரும் கனவில் வந்து செல்வார்கள். அடுத்த நாள் கனவில் வந்தவரின் நினைவுகள் எனக்குள் எட்டி எட்டிப் பார்க்கும் அதன்பின் நான் அவர்களை மறந்துவிடுவேன் என்பதே உண்மை.  ஆனால் இன்று வந்த கனவு ஏனோ என் மனதை கஷ்டப்படுத்தியது.  கொஞ்ச நேரம் அப்படியே உட்காந்திருந்தேன். படபடப்பு குறைய  என்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு மீண்டும் படுத்தேன்.
கண்களை மூடியபடி வந்த கனவை மீன்டும் மீட்டிப் பார்த்தேன். கனவில் வந்த விசாலம் அக்கா என் கைகளைப் பிடித்துக் கொண்டு, “பாப்பா, நான் ரொம்ப கஷ்டப்படுறேன்”னு அழுகுறா… மறுபடி மறுபடி அதையே மீட்டிப் பார்க்க எனக்கு ஒண்ணுமே புரியலை… விசாலம் அக்காவுக்கு என்னமும் ஆகியிருக்குமோ இப்ப எங்க இருக்கு என்ன பண்ணுது என்று யோசித்து விடை கிடைக்காமல் சரி கனவுதானே என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டு உறக்கதை அணைத்துக் கொள்ள கண்களை மூடினேன். உறக்கம் வருவதற்குப் பதில் விசாலம் அக்காவின் நினைவுகள் மெல்ல எட்டிப் பார்த்தன.
எங்க பிரேமா அத்தை கல்யாணத்துக்கு முறுக்குச் சுடத்தான் விசாலம் அக்கா எங்க வீட்டுக்கு முதன்முதலில் வந்தாள். எப்பவும் பொன்னம்பல மாமாதான் விசேசங்களுக்கு முறுக்கு சுடுவார். எங்க ரெண்டு குடும்பத்துக்குள்ளயும் சின்னதா ஒரு வருத்தம் சரியா பேசிக்கிறதில்லை. அதனால பாட்டி முறுக்கு சுட ஆளு வேணுமின்னு எல்லார்கிட்டயும் சொல்லி வச்சிருந்தாங்க. மீன்கார முனிம்மாக்காதான் கூட்டி வந்துச்சு.
என்ன முனிம்மா முறுக்கு சுட ஆள் கூட்டியார சொன்னா சின்ன புள்ளய கூட்டியாந்து இருக்கே… சும்மா சுட்டுப் பாக்க ஆள் கேக்கலை ஒரு கல்யாணத்துக்கு செய்யணும்… இவ செஞ்சிருவாளான்னு பாட்டி சந்தேகமாக் கேக்க… என்ன ஆத்தா அப்புடிக் கேட்டுப்புட்டே… விசாலத்தோட கைப் பக்குவத்துக்குப் பக்கத்துல யாரும் நிக்கமுடியாது தெரியுமா… இவ சுத்துற முறுக்கை சாப்பிட்டுப் பார்த்தா அப்புறம் இவதான் வேணுமின்னு கேப்பே அப்படின்னு முனிம்மா சொல்ல, என்னமோ போ பேசிப்பேசி மீன் விக்கிற உங்கிட்ட பேசி ஜெயிக்க முடியுமா என பாட்டி சலித்துக் கொண்டாள்.
மாவைப் பிசையும் விசாலம் அக்காவைப் பார்த்தேன்… முப்பத்தஞ்சு வயசுக்குள்தான் இருக்கும். கண்டாங்கி சேலையை நாட்டுக்கட்டு கட்டியிருந்தாள். பெரிய கொண்டையும் வட்டப் பொட்டுமாய் அக்மார்க் கிராமத்துப் பொம்பளையாய் தெரிந்தாள். யாருடனும் பேசாமல் மாவைப் பிசைவதில் கவனம் செலுத்தினாள். தலையைத் தூக்கும் போது எங்களைப் பார்த்து உதடு பிரியாமல் சிரித்தாள். அவளின் கழுத்தில் மஞ்சள் இழந்த நூல் கயிறு கிடந்தது.
ஏன்டியம்மா உனக்கு கல்யாணம் ஆயிருச்சில்ல… வீட்டுக்காரன் என்ன பண்றான் என்ற பாட்டியின் கேள்விக்கு ஏறிட்டுப் பார்த்து சிரித்தாள். என்னடி ஆத்தா பேச காசு கேட்பே போல கலகலன்னு பேசிக்கிட்டு வேலை பார்த்த வேலை போறது தெரியாது…. அலுப்பும் இருக்காதுல்ல என்று பாட்டி சொல்ல என்ன பெரியம்மா கேட்டே கண்ணாலம் ஆயிருச்சான்னா அதெல்லாம் ஆயி முடிஞ்சு போச்சும்மா என்றபடி வேலையை தொடர்ந்தாள்.
என்னடி சொல்றே… ஆயி முடிஞ்சு போச்சா… அப்படின்னா நீ இப்போ புருசன் கூட இல்லையா… என்ன? என அம்மா கேட்கவும் எங்களை எல்லாம் ஏறிட்டுப் பார்த்தவள் எங்க வூட்டுல கடனவொடன வாங்கி கஷ்டப்பட்டு என்னய கட்டிக்கொடுத்தாங்க… மொத ராத்திரி அன்னைக்கே அந்த ஆளு புல்லா குடிச்சிட்டு வந்தான்… எங்க சாதி சனத்துல நண்டு சிண்டு எல்லாம் குடிக்குதும்மா அதனால நான் அதை பெருசா எடுத்துக்கல… ரெண்டு மாசம் நல்லாத்தான் போச்சு… அதுக்கப்புறந்தான் தெரியும் அந்தாளுக்கு பக்கத்தூருல கூத்தியா இருக்கது… என்ன செய்ய… நாயா கத்திப் பாத்தேன்… சண்ட போட்டுப் பாத்தேன்… என்னால முடியல… அவன் அதுக்கு அப்புறம் அவளை வீட்டுக்கே கூட்டியாந்து ஒண்ணா இருக்கச் சொன்னான்… அவளும் இளிச்சுக்கிட்டு வந்தா… நான் வெளிய வந்துட்டேன். ஆயி அப்பன்கூட இருந்தாலும் அவுகளுக்கு பாரமா இருக்க கூடாதுன்னு இப்படி வேலக்கிப் போறேன்… எதோ வருமானம் வருது…” அவள் பேச்சை நிறுத்தியதும் சினிமாவுல மாதிரி கண்ணு கலங்கியிருக்கான்னு ஊடுருவிப் பார்த்தேன் ஆனால் அது தீர்க்கமாய் இருந்தது.

தொடர்ந்து படிக்க இங்கே  சொடுக்குங்கள் உறவுகளே...


-'பரிவை' சே.குமார்

செவ்வாய், 3 ஜூலை, 2012

அதீதத்தில் "தங்க விழுதுகள்" - சிறுகதை

“என்னப்பா ஆகுற காரியத்தப் பாக்க வேண்டியதுதானே… அதுதான் வர வேண்டிய சொந்த பந்தமெல்லாம் வந்தாச்சில்ல… அப்புறம் என்ன… ஏம்ப்பா… சொர்ண… நீ என்ன சொல்றே…” என்றபடி சொர்ணம் அருகில் வந்தார் சுதர்சனம்

“செய்ய வேண்டிய காரியத்தை செஞ்சுதானே ஆகணும்… பயலுககிட்ட கேளுங்க வேற யாரும் வரவேண்டியது இருக்கான்னு…” அருகில் நின்ற சின்னையாவிடம் “ஏப்பா… வெளிய நிக்கிற குமரேசனக் கூப்பிடு…” என்றார்.

குமரேசன் சோகம் தாங்கிய முகத்துடன் அவர் அருகில் வந்து “என்ன மாமா…” என்றான்.

“என்ன மாப்ளே… யாரும் வரணுமா… நேரமாகுதுல்ல ஆக வேண்டியதப் பாத்தாத்தானே இருட்டுறதுக்குள்ள முடிக்க முடியும்…”

“பாக்கலாம் மாமா… யாரும் வரவேண்டியதில்லை…”

“சின்னவன் எங்கே…?”

“வெளியிலதான் இருக்கான்…”

“அவன கூப்பிடு”

“நீங்கதானே கூப்பிடுங்க… நா அவங்கிட்ட பேசுறதில்ல மாமா…”

“ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தன் பேசாம இருந்தா எப்படிப்பா… மறுபடியுமா பொறக்கப் போறீங்க…”

“மாமா… அவங்கிட்ட பேச என்ன இருக்கு… நானும்தான் மாசாமாசம் பணம் அனுப்புறேன்… கேட்டா ஒண்ணுமே கொடுக்கலைம்பான்… நீங்களே அவங்கிட்ட கேட்டுட்டு ஆக வேண்டியதப் பாருங்க…”

“சரி அதெல்லாம் இப்ப எதுக்கு… அதை பேச நேரம் காலம் இருக்குப்பா…” என்றவர் வெளியே வந்து கதிரேசனிடம் “என்ன கதிரேசா… உனக்கும யாரும் வரவேண்டியது இருக்கா… இல்ல ஆக வேண்டியதைப் பாக்கலாமா…”

“பாக்கலாம் மாமா… அதுக்கு முன்னாடி கொஞ்சம் பைசல் பண்ணிக்கிட்டா நல்லதுன்னு நினைக்கிறேன்…”

“உனக்கு என்னப்பா பைசல் பண்ணனும்?”

“இங்க பாருங்க ஆத்தாவுக்கு இம்புட்டு நாளா நாந்தான் பாத்தேன்… மூத்தவன் சல்லிக்காசு தரலை…”

“சரிப்பா… அதுக்கு என்ன இப்போ… அதை பேசுறதுக்கு இது நேரமில்லைப்பா… எதா இருந்தாலும் காரியம் முடிஞ்சதும் நாலு பேரு உக்காந்து பேசலாம்ப்பா…”

“இல்ல மாமா… இதுவரைக்கும் ஆத்தா எப்படியிருக்கான்னு கூட கேக்காதவன் இன்னைக்கு வந்துக்கிட்டு வாடிப்பட்டி மேளத்த வச்சி பேரெடுத்துட்டுப் போகலாமுன்னு பாக்கிறான்… இப்பவே அவனையும் வச்சி எல்லாத்தையும் பேசிடுறது நல்லது… எம்பொண்டாட்டி மூத்தரம் பீயெல்லாம் அள்ளி குளிப்பாட்டி பாத்துக்கிட்டா இன்னைக்கு மூத்தவ பவுசா வந்து தலமாட்டுல உக்காந்து அழுவுறா… எல்லாரும் பாத்துக்கிட்டுதானே இருக்கீங்க…”

“அவந்தான் பாக்கலை… உன்னய பெத்த மாதிரித்தானே அவனையும் பெத்தா… பெத்தவங்களுக்கு பாக்க எல்லாரும் கொடுப்பினை இருப்பதில்லை… அதுக்கு நீ சந்தோசப்படணும்ப்பா… சரி வா… நீர்மாலை எடுக்கப் போகணும்… காரியம் முடிஞ்சதும் நானே எல்லாத்தையும் பேசி சரி பண்ணுறேன்…”

“இல்ல மாமா… நாளைக்கி பேசலாம்ப்பான்னு சொல்லுவீங்க… வேல முடிஞ்சா எல்லாரும் போயிருவீங்க… எனக்கு இப்பவே பேசணும்…”

“என்னப்பா நீ… இங்க பாரு நாலு சனம் வந்திருக்கயில வரவு செலவப் பத்தி பேசினா யாருக்கு அசிங்கம்… உங்க ரெண்டு பேருக்கும் அசிங்கமாத் தெரியலைன்னாலும் பெத்த உசிரு ரெண்டுக்கும் அசிங்கமில்லையா… பெத்தவ பொயிட்டா… உங்கப்பன உசிடரோட கொல்லுற மாதிரி இல்லையா… நீ புரிஞ்சுக்குவேன்னு நினைக்கிறேன்.”

அவர் அப்படி சொன்னதும் கதிரேசன் ஒன்றும் சொல்லாமல் அவருடன் சென்றான்.

ல்லாம் முடிந்து மூன்றாவது நாள் எண்ணெய் தேய்த்து குளித்துவிட்டு எல்லாரும் சாப்பிட்டு சென்றதும் சொர்ணத்துடன் சில சொந்தங்கள் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது வெற்றிலை காம்பைக் கிள்ளியபடி வந்த சுதர்சனம், “ஏம்ப்பா சொர்ணம், கதிரேசன் ஏதோ பைசல் பண்ணனுங்கிறான்…”

“என்னவாம் அவனுக்கு…” என்றார் நெற்றியை சுருக்கியபடி.

“உங்க ரெண்டு பேருக்கும் அவந்தான் இதுவரைக்கும் நல்லது கெட்டது பாத்திருக்கான்…”

“ஆமா… பெத்தவங்களுக்குத்தானே பாத்தான்…”

“ஆமா… ஆமா… இல்லேன்னு சொல்லலை… ஆத்தவோட நகையெல்லாம் அவனுக்கு வேணுங்கிறான்”

“….”

“என்னப்பா ஒண்ணும் பேசமாட்டேங்கிறே…?”

“அவரு என்ன சொல்றது. ஆத்தாவோட நகையை ரெண்டு பங்கா வைக்கணும்” என்றான் குமரேசன்.

“பாத்ததெல்லாம் நானு… பங்கு போட வந்திட்டிட்டாரு… பங்கு போட…” கோபமாக வார்த்தைகளை விட்டான் கதிரேசன்.

“நானும்தான் மாசா மாசம் பணம் அனுப்பியிருக்கேன்… இப்ப ரெண்டு நாளா எம்புட்டு செலவு தெரியுமா?”

“இப்ப பாத்தது ரெண்டு பேருக்கும் பாதி பாதிதானே… அதை கணக்குப் பண்ணி வாங்கிட்டுப் போயிடுவேயில்ல… அப்புறம் என்ன…”

“ஏம்ப்பா என்னது… பாசத்தை வெல பேசிக்கிட்டு… அதுக்கு சண்டை வேற போட்டுக்கிட்டு… உக்காருங்கடா… ” கோபமாக கத்திய சுதர்சனம், “இங்க பாரு சொர்ணம்… உம்பொண்டாட்டி நகையை நீயே ஒங்காலத்துக்கும் வச்சிக்க… நீ யாருக்கு கொடுக்கணுமின்னு நினைக்கிறியோ… அவங்களுக்கு கொடுத்துக்க… இப்ப இருக்க சூழ்நிலையில இதுதான் நல்லது”

“வேணாம் சொர்ணம்… அவ கிடந்த கஷ்டப்படும் போது போய் சேரக்கூடாதான்னு நானே சத்தம் போட்டிருக்கேன். ஆனா இன்னைக்கு அவ இல்லாத உலகத்துல நா தனிச்சிருக்கணுமேன்னு நினைக்கும் போது… இப்ப நடக்கிறதைப் பார்க்கும் போதும் பேசாம அவ கூட போயிருக்கலாமோன்னு தோணுது. இதையெல்லாம் பாக்க வேண்டியது இல்லாம போயிருக்குமே…” பேசமுடியாமல் துண்டால் வாயை பொத்திக் கொண்டு அழுதார்.

“சரி விடு… அவனுகளுக்கு தெரிஞ்சது அவ்வளவுதான்… நாந்தான் பாப்பேன்… இல்ல நாந்தான் பாப்பேன்னு பாசத்தை பங்கு போட்டுக்கிட்டாங்கன்னா சந்தோஷப்படலாம்… சரி விடு… என்ன பண்ணலாம் அதை சொல்லு…”

“இதுல நா சொல்றதுக்கு என்ன இருக்கு… பொம்பளப்புள்ளைக்கு இனி இவங்க எதுவும் செய்ய மாட்டாங்க… அதனால அதுகிட்ட எதாவது ஒரு தங்கத்தை கொடுத்திடுப்பா”

“அதெப்படி முடியும்… அதுக்கெல்லாம் கொடுக்க முடியாது… நாளக்கி அவரு வாங்கி வச்சிருக்க கடனை அவ அடைக்க வருவளா… நாங்கதானே அடைக்கணும் ரெண்டு பங்கா மட்டும் வையிங்க மாமா” குமரேசன் வேகமாக பேசினான்.

“எனக்கு ஒண்ணும் வேண்டாம்… எங்க ஆத்தாவுட்டு நகையின்னு ஒண்ணு கொடுத்தா கொறஞ்சா போயிடுவீங்க… என்னத்தை செஞ்சிட்டிங்க…” என்று கத்தியவள், “ஒரு நகை கொடுக்க மனசில்ல… இவனுகளோட என்ன உறவு வேண்டிக்கிடக்கு… இனி இவனுக கூட எனக்கு ஒட்டும் இல்ல… உறவும் இல்ல… நா இப்பவே போறேன்” என்று கிளம்ப… பார்த்துக் கொண்டிருந்த மாப்பிள்ளை, “ஏய் இருக்க பிரச்சினை பத்ததுன்னு நீ வேற… சும்மா கத்தாம உள்ள போ…”

“ஆமா… இப்ப நா என்ன சொல்லிப்புட்டேன்…”

“போடின்னா… போ… நாலு பேர் பேசிக்கிட்டு இருக்கும் போது வாய்க்கு வாய் பேசிக்கிட்டு… நீங்க பேசுங்க சித்தப்பா…”

“குமரேசா… நான் சொல்றதை கேளு… உனக்கு பசங்கதான்… சின்னவனுக்கு ரெண்டு பொம்பளப்புள்ளங்க இருக்கு… அதுக அப்பத்தாவுட்டு தங்கமுன்னு போட்டுட்டுப் போகட்டுமே… சின்னவங்கிட்ட செயினை கொடுப்போம்… அப்புறம் பொம்பளப்புள்ள… அதுக்கு இனி உங்க அப்பனாலயும் ஒண்ணும் செய்ய முடியாது… நீங்களும் இனி செய்வீங்கன்னு சொல்ல முடியாது அதனால அதுக்கிட்ட காப்பை கொடுக்கலாம்… ஆத்தாவிட்டு தங்கமுன்னு பொம்பளப்புள்ளக்கி கல்யாணம் பண்ணும் போது போடுமில்ல… உனக்கு மோதிரத்தை வச்சிக்க… என்ன குமரேசா…”

“அதுவும் எதுக்கு… அதையும் சின்னவனுக்கே கொடுங்க… நாங்க இனி நல்லது கெட்டது எதுக்கும் வரலை… ” கோபமானான் குமரேசன்.

“ஏய் என்னப்பா நீயி… இன்னும் ஒரு முடிவுக்கு வரலை… கேட்டதுக்கே இம்புட்டு கோபப்படுறே…”

“மாமா நா… ஆத்தாவுக்கு பாத்ததுக்காக நகையை கேக்கலை… அவன் பாக்கலையேங்கிற கோவத்துலதான் கேட்டேன்… அவங்கிட்டே கொடுத்திருங்க… எனக்கு வேண்டாம்” திடீரென கதிரேசன் நல்லவனாக மாறினான்.

“இல்லப்பா… பஞ்சாயத்துன்னு வந்திட்டா மூணு பேருக்கும்தான் கொடுக்கணும்… நீ காப்ப வச்சிக்க… பெரியவன் செயின எடுத்துக்கட்டும்… அக்காவுக்கு அந்த ரெண்டு மோதிரத்தையும் கொடுத்திடுங்க… என்ன சொர்ணம் நாங்க சொல்றது சரிதானே…”

சொர்ணம் பதில் சொல்லாமல் சிரித்தார்.

“என்னப்பா ஒண்ணும் சொல்லாம சிரிக்கிறே?”

“இல்ல… அவ இழுத்துக்கிட்டு கெடந்தப்போ இதுவரை பாத்த சின்னவன் பால ஊத்தியும் உயிரு போகலை… நா… பேரப்பய… எல்லாரும் ஊத்தியாச்சு…ம்… பாவி மனுசி போகமாட்டேனுட்டா… அப்ப நீதான் சொன்னே பெரியவனை நெனச்சுக்கிட்டே இருக்கு போல… அவன் பேரை சொல்லி ஊத்துங்கன்னு… அப்புறம் சின்னவன் நான் குமரேசன் வந்திருக்கேந்தான்னு….” பேசமுடியாமல் அடைத்த அழுகையை அடக்கிக் கொண்டு “வந்திருக்கேந்தான்னு ஊத்துனதும்தான் அந்த மூச்சி நின்னுச்சு… பாவி மனுசி பாசத்தை வச்சிக்கிட்டு தவிச்சா… ஆனா இதுக தங்கத்தைத்தானே பாக்குதுக… சுதர்சனம் அப்படியே என்னய மூணு பங்கா வக்கிறாகளா இல்ல யாராவது ஒருத்தர் எடுத்துக்கிறாங்களான்னு கேட்டு சொல்லுப்பா… அவ இல்லாத உலகத்துல அவதிப்படணுங்கிறது என் தலையெழுத்து… மகராசி கஷ்டப்பட்டாலும் நான் இருந்தேன் பாக்க… இப்ப எனக்கு இனி யாரு இருக்கா… கஷ்டப்படணுங்கிறது எந்தலையெழுத்து… அதை மாத்த முடியாதே…” உடைந்து அழுதார்.

பஞ்சாயத்து பேசியவர்கள் எல்லாரும் என்ன சொல்வது என்று தெரியாமல் பேசாமல் இருந்தனர். அவரது வாரிசுகள் வாயடைத்துப் போயி நின்றனர்.

*************************

குறிப்பு : இந்தக் கதை ஜூலை-01 அதீதம் இதழில் வெளியாகி இருக்கிறது. எனது கதையை வெளியிட உதவிய  திருமதி.ராமலக்ஷ்மி அக்கா அவர்களுக்கும் நண்பர். எல்.கே உள்ளிட்ட அதீதம் குழுவினருக்கும் என் நன்றிகளை உரித்தாக்குகிறேன்.

அதீதத்தில் படிக்க... "தங்க விழுதுகள்" 

உங்கள் கருத்துக்களை இங்கும், மறவாமல் அதீதத்திலும் பதியுங்கள் உறவுகளே... கருத்துக்களே எனது ஆக்கங்களை செப்பனிடும் கருவி.

-’பரிவை’ சே.குமார்.

Thanks ----  Google (PHOTO)

செவ்வாய், 5 ஜூன், 2012

மூடு பனி - அதீதத்தில்

அதீதம் இதழில் வெளியாகும் இரண்டாவது சிறுகதை இது. இந்தக் கதையை வெளியிட்ட ஆசிரியர் குழுவிற்கும் நண்பர் எல்.கே அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

என்னைப் பற்றி, அதுவும் என் கல்வித் தந்தையின் பெயரோடு  சிறு குறிப்புடன் என் கதை வெளிவந்திருப்பதில் எல்லை இல்லா சந்தோஷம். அதீதம் ஆசிரியர் குழுவிற்கு சிரம் தாழ்ந்த நன்றி.

அதுவும் அப்பாதுரை, கோபால்கண்ணன் (மனவிழி - சத்ரியன்)  போன்ற மலைகளுடன் எனது கதையும் வெளியாகியிருப்பது மட்டற்ற மகிழ்ச்சி.

இனி மூடுபனிக்குள் பயணிப்போம்.

ழைய அட்லஸ் சைக்கிள் வேலுச்சாமியின் மிதிக்கிணங்க ‘கீச்… கீச்…’ என்று தாளநயத்துடன் போய்க் கொண்டிருந்தது. ஆனால் எப்பவும் சைக்கிளை வேகமாக மிதிக்கும் அவர் இன்று வேண்டா வெறுப்பாக மிதித்துக் கொண்டிருந்தார். அதற்கும் காரணம் இருந்தது. அதை நினைக்கையில் நெஞ்சு தடக் தடக்கென்று எக்ஸ்பிரசாக மாற, வாய் ‘சை என்ன வாழ்க்கை … எவன் எவங்கிட்டயோ பேச்சு வாங்கி… நாறப்பொழப்பு பொழக்க வேண்டியிருக்கு…’ என்று தானாக முணுமுணுத்தது.

படபடப்பாக வரவும் சைக்கிளை விட்டு இறங்கி ஸ்டாண்ட் போட்டுவிட்டு ரோட்டோரம் இருந்த வாகமரத்தடியில் ஒண்ணுக்கு இருந்துவிட்டு சொக்கலால் பீடியை பத்தவைத்து இழுத்ததும் கொஞ்சம் ஆசுவாசமாக இருப்பதுபோல் தோன்ற மீண்டும் சைக்கிளை மெதுவாக மிதிக்க ஆரம்பித்தார்.

சைக்கிள் முன்னால் செல்ல அவரின் மனசு மெல்ல பின்னால் சென்றது…

தொடர்ந்து வாசிக்க இந்த சுட்டியை தட்டுங்கள்.


-'பரிவை' சே.குமார்.

சனி, 22 அக்டோபர், 2011

அதீதத்தில் 'கூழாங்கல்'



"நாஞ் சொல்லிக்கிட்டே இருக்கேன்... நீ எரும மாட்டுல மழ பேஞ்ச மாதிரி நிக்கிற... என்ன நாஞ் சொல்றது புரியுதா... "
"ம்..." அழுகையினூடே தலையாட்டினாள் சுதா.
"மறுபடியும் நீ அவங்கூட பேசுறதப் பாத்தேன்னு எவளாவது சொன்னா, அன்னக்கே உன்னய கொன்னு போட்டுருவேன்...கொன்னு... நாஞ் சொன்னதை செய்வேன்னு உனக்குத் தெரியுமில்ல..."
"..."
"போ... போயி வேலயப் பாரு..."
"...."
"சொல்லுறேன், மரமாட்டம் நிக்கிற... போ... போயி சந்திரா தண்ணிக்குப் போறதாச் சொன்னா... போயி நல்ல தண்ணி தூக்கிட்டு வா.. போ... அப்புறம் போகும் போது எவகிட்டயும் எங்காத்தா திட்டுச்சுன்னு சொல்லி வைக்காதே... புரியுதா."
"ம்..." கண்ணைத் துடைத்தபடி குடத்தை எடுத்துக்கொண்டு சந்திரா வீடு நோக்கி நடந்தாள்.
"சந்திரா... ஏய் சந்திரா..."


மேலும் படிக்க அதீதம் போங்க.. 'கூழாங்கல்'

இந்தக் கதை அதீதம் தீபாவளி சிறப்பிதழில் வெளிவந்துள்ளது.முதல் முறை இணைய இதழில் என் சிறுகதையை வெளியிட்ட அதீதம் ஆசிரியர் குழுவுக்கு நன்றி.

---------------


என்ன நண்பர்களே கோவை கின்னஸ் கவியரங்கத்துக்கு 28 வரிகளுக்குள் 3 கவிதையும் உங்க போடவும் அனுப்பிச்சா... அனுப்பாத கவிஞர்கள் உடனே அனுப்புங்க... விவரங்களுக்கு இந்த இடுகையை பாருங்க...



-'பரிவை' சே.குமார்
Thanks: Photo from இளையராஜா