மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வியாழன், 25 அக்டோபர், 2018

சினிமா விமர்சனம் : வட சென்னை

Image result for வடசென்னை

'சந்திரா... அது யாருன்னு தெரியுதா... அதுதான் அன்பு' என்பதாய் ஆண்ட்ரியாவுக்கு அறிமுகப்படுத்தப்படும் தனுஷ், கடலோரப் பகுதியான வட சென்னையின் கள்ளங்கபடமில்லாத பையனாய்... அதே அன்பு சிறுவனாய் இருக்கும் போதே சந்திராவுக்குத் தெரிந்தவன்தான் என்றாலும் கால மாற்றத்தில் அன்புவை மறந்திருக்கலாம் ஆனாலும் அன்புதான் அவளின் சபதத்தை பூர்த்தி செய்ய வந்தவன் என்பதில் அந்த அறிமுகத்துக்குப் பின் அவள் தீவிரமாக இருக்கிறாள் என்பதை அடுத்தடுத்த காட்சிகள் எடுத்துச் சொல்லிக் கொண்டே செல்கின்றன இறுதிவரை.

அன்புக்கு பத்மா (ஐஸ்வர்யா ராஜேஸ்) மீது காதல்... பத்மா அன்புவைப் பார்ப்பது... இல்லையில்லை பத்மாவை அன்பு பார்ப்பது ராஜீவ்காந்தி செத்த தினத்தில் கடைபுகுந்து கிடைத்ததை அள்ளிக் கொண்டு செல்லும் தருணத்தில் முகம் மறைத்தவளாய்... மனசை மறைக்காதவளாய்... அதன் பின் பைனாக்குலர் வழி... அவளின் பட்டன் இல்லா சட்டை வழி... பார்வையெல்லாம் மனசில் மட்டுமே...  அன்பு மீது அவள் பிரவகிக்கும் முதல் வார்த்தையே பெண்கள் சொல்லத் தயங்கும் வார்த்தைதான் என்றாலும் அது அவள் வளர்ந்த சூழலில் சாதரணமே... அதை அவனும் மனசைப் பிடித்துப் பார்த்ததில் பட்ட சந்தோஷத்தின் வழி சிரித்தபடி கடந்து போகிறான் மொக்கைச் சிரிப்போடு... அதான் அவள் அப்படியொரு வார்த்தையைச் சொல்லியிருக்கிறாள்.

படம் முழுக்க எல்லாரும் கெட்ட வார்த்தைகளையே பேசுகிறார்கள் என்பது மிகப்பெரிய குற்றச்சாட்டாய்... குறியிடுகளைச் சுமக்கும் படங்களை புகழ்பவர்கள்தாமே நாம்...  இங்கு வடசென்னை மக்களின் வாழ்க்கை காட்டப்படவில்லை... ஒரு சாராரின் வாழ்க்கையும் அவர்களின் பேச்சு மொழியுமே காட்டப்படுகிறது. அவர்களில் கூட முன்னால் நிற்பவர்களே பேசுகிறார்கள்... பின்னால் நிற்பவர் எவரும் கெட்ட வார்த்தைகளைப் பேசவில்லை.

இந்தக் கெட்டவார்த்தை என்பது புதிதாக கேட்கும் போது நாரசமாய்த் தெரியும்... அதுவே பேச்சு வழக்காகிப் போகும் போது அது நாரசமாய்த் தெரிவதில்லை... சிரிப்போடு கடந்து போகும் வார்த்தையாய் ஆகிப் போய்விடும்.... எங்க பக்கம் கிராமங்களில் பல வார்த்தைகள் சரளமாகப் பேசப்படும். கேலி முறைக்காரியின் பையன் என்றால் அம்மாவுடன் இணைத்தும் மச்சான் முறை என்றால் அக்காவுடன் இணைத்தும் கோபத்தில் முன்னால் இருப்பதை பின்னால் இருப்பதாகவும்... இப்படி நிறைய வார்த்தைகள் வந்து விழும்...  இன்னும் அதைக்குடி... இதைக்குடி என்பதெல்லாம் சண்டைகளில் சரளமாய் வரும் வார்த்தைகள்தான். அப்படித்தான் இங்கு மீனவ மக்களில் முன் நிற்பவர்கள் பேசுகிறார்கள். ஏன் சந்திராவும் கேட்கிறாள் நான் என்ன தேவடியாவா என்று...

இதே போன்றொரு வார்த்தையைத்தான் சண்டைக்கோழி-2 வரலெட்சுமி சொல்கிறார் சற்றே மாறுதலுடன். நாம் தலையில் வைத்துக் கொண்டாடும் எழுத்தாளர்கள் வாழ்க்கைக் கதைகள் என்றாகும் போது அப்படித்தான் வசனங்கள் எழுதுகிறார்கள். மொக்கையும் மோசமான வசனத்துக்கும் சண்டைக்கோழி-2 ஒரு சான்று. எழுதிய வசனத்தை படம் முழுக்க பேசத்தான் செய்வார்கள்... சரளமாய் வரத்தான் செய்யும்... ஏதோ இந்தப் படங்கள்தான் சமூகத்தை சீரழித்துவிட்டதாய் பொங்குதல் என்ன நியாயம்..?

டார்ச்லைட் என்றொரு படம்... ரோட்டோரத்தில் நின்று விபச்சாரம் செய்யும் பெண்கள் பற்றிய கதை... கதை சொன்ன விதத்தில் நல்ல படம்தான்... படம் முழுக்க மோசமான காட்சிகளும் வசனமும்... இருந்தும் யாரும் கூவவில்லை... நாம் வெற்றிமாறன்கள் மட்டுமே நல்ல படங்களைத் தரவேண்டும் என்று விரும்புபவர்கள்... சாதியைச் சொல்லி படமெடுத்தால் தலையில் வைத்துக் கொண்டாடுவோம்... இப்படியான ஒரு வாழ்க்கையும் இருக்கிறது என்பதைச் சொல்லப் போனால் ஏன் இப்படித்தான் பேசுவார்களா என்ற கேள்வியை முன் நிறுத்தத் தவறுவதில்லை.

இங்கே அன்பு... இவன் சிறுவனாக இருக்கும் போது அந்தப் பகுதி மக்களுக்கு நாயகனாய்த் தெரிகிறான் ராஜன் (அமீர்), அரசியல்வாதி முத்துக்கு (ராதாரவி) திரைமறைவு வேலைகள் செய்பவன் என்றாலும் தன் பகுதி மக்களுக்கு தீங்கு நினைக்காதவன்... அவனின் மனைவியாகிறாள் சந்திரா. எட்டுவழிச்சாலை பிரச்சினை மையங்கொள்ள ஆரம்பித்தபின் தமிழ்ச் சினிமாவில் பிரச்சினை என்றால் சாலை விரிவாக்கம்தான்... அதுதான் இதிலும் என்பதால் முத்துவை எதிர்க்கிறான் ராஜன். அரசியல்வாதிகளைப் பொறுத்தவரை தனக்கு வாலாட்டும் வரை ரவுடியை பக்கத்தில் வைத்திருப்பார்கள். கொஞ்சம் முரண்டு பிடித்தால் அவனுக்கு கீழிருப்பவனை அந்த இடத்தில் அமர வைக்கிறேன் என்று பிஸ்கட்டைப் போடுவார்கள்... அதுவரை அண்ணே, தல என்று திரிந்தவன் ஒரு நாளை எதிர்பார்த்திருந்து காரியத்தை நிறைவேற்றிக் கொல்(ள்)வான். அப்படித்தான் நிகழ்கிறது இதிலும் அந்தச் சம்பவம். அதுவே படத்தின் மையப்புள்ளி.

குணா(சமுத்திரகனி), செந்தில் (கிஷோர்), பவன் (வேலு), தம்பி (டேனியல் பாலாஜி) என நால்வர் குழு அந்த மையப்புள்ளியில் இருக்கிறது. அந்தப்புள்ளியில் வெடித்தெழுகிறது சந்திராவுக்குள் இருக்கும் ராஜன் மீதான காதல்... அதன் பின்னான நாட்களில் குணாவுக்கும் செந்திலுக்கும் இடையில் பனிப்போர் ஆரம்பித்து மோதல் வெடிக்கிறது. எதிர் எதிர் துருவங்கள், அங்கும் இங்கும் சம்பவங்ளை நிறைவேற்றத் துடிக்கும் மனதுடன்.

இவர்களுக்கே தெரியாமல் நால்வர் குழுவை எப்படியும் கழுத்தறுப்பேன் என்பதாய் திரியும் சந்திரா, இரண்டாவது கணவனாய் அடைகிறார் குணாவை... எல்லாமே எதிர்பார்த்தலின் ஆரம்பம்தான். இதே போன்ற கழுத்தறுப்பேன் சூளுரைதான் சண்டைக்கோழி-2விலும் ஆனாலும் அதில் அவள் ஆட்டம் போட்டு இறுதியில் அடங்கிப் போகிறாள்... அடக்கப்படுகிறாள்... தாய்ப்பாசம் திருந்த வைக்கிறது. அதற்காக ச.கோ. நல்லபடம்ன்னும் வ.செ. கெட்ட படம்ன்னு எல்லாம் முடிவுக்கு வந்துடாதீங்க... திருவிழா என்பது சந்தோஷத்துக்கே... அதை வைத்தே நம் கழுத்தறுத்தலை ச.கோவில் காணலாம். நாம வடசென்னைக்குள் இருக்கும் போது எதுக்கு தென் மாவட்டம் பக்கம் போறோம் என யோசித்தாலும் போக வேண்டிய சூழல் இருக்கே என்ன செய்வது...

மதுரைப் பக்கத்துக் கதையா.... அரிவாளை எடுங்கடா... பங்காளி சண்டை... பலி வாங்கல்ன்னு போட்டுத் தாக்குங்கடா... தலையும் உருளணும் ரத்தமும் தெரிக்கணும்... அப்படித்தான் இதுவரை காட்டப்படுது...  வட சென்னையில் மட்டும் ரவுடிகள் மட்டுமேவா இருக்காங்கன்னு பொங்குறோமுல்ல.... ஏன் தென்மாவட்டத்தைப் பற்றி பொங்கவில்லை... அங்கு நல்லவர்களே இல்லையா... சென்னை என்றால் மட்டுமே பிரச்சினை... மற்ற இடங்கள் என்றால் பிரச்சினையில்லை என்பதே நம் எண்ணமாய்.

இந்த அன்பு கேரம் போடுல வெற்றி பெறணும்ன்னுதான் குறிக்கோள்... ஆனா காதல்ல வெற்றி பெறுகிறான்... அதுவும் அடிக்கடி உதடு உதடும் கொஞ்சும் ஆங்கிலப் பட பாணியிலும் சேர்த்தே... ஐஸ்வர்யா ராஜேஷா இப்படின்னு பொங்க வைக்கவெல்லாம் வேண்டாம்... விரும்பித்தானே சுவைக்குது உதடை... விரும்பித்தானே ரசிக்கிறோம் அந்த உதடு கடியை...

வாழ்வில் நாம் இப்படித்தான் ஆகவேண்டும் என்று நினைத்து அதேபோல் ஆவதெல்லாம் அபூர்வம்... பெரும்பாலும் நினைவுகள் சிதறித்தான் போகும் சிக்குண்டு தவிக்கும் வாழ்க்கையில்... அப்படித்தான் ஆகிறான் அன்பு... கேரம்போர்டு கனவு ஒரு வருடம் தகர்ந்து போக... ஓளியும் ஒலியும் இருட்டில் உதட்டு ஆராய்ச்சி செய்யப் போய்... மின்சாரம் வந்ததால் ஊரெல்லாம் ஆராய்ச்சி குறித்துப் பேசப்பட, அதன் பின்னான நகர்த்தல் கத்தி எடுக்க வைக்கிறது... அந்த இரவில் சம்பவமும் நடந்தேறுகிறது... தம்பியின் அன்புக்குப் பாத்தியப்பட்ட அன்பு, காக்கப்படுகிறான் குணாவால்.... குணாவுக்கு ஜெயிலில் இருக்கும் செந்திலை சம்பவம் ஆக்கணும்... அதுக்கு... ஆமா அதே... ஜெயிலுக்குள் அன்பு... செய்தானா சம்பவத்தை என்பதைச் சொல்கிறார்கள்... நாம் சொல்ல வேண்டாமே அதை.

இப்படியாக சம்பவங்களோடு நகரும் வடசென்னை வாழ்க்கையில் அன்பு ரவுடியாகிறான்... பத்மாவை மணக்கிறான்... அவளின் தம்பி அப்பாவுக்கு அறை விடுகிறான்... நல்ல குடும்பம்... அதையும் சிரித்து ரசிக்கிறோம் நாமும் நல்லவர்கள்... ரவுடியா ஆயிட்டோமுல்ல... அப்புறம் குரல் எல்லாப் பக்கமும் கேக்கணுமா இல்லையா... மக்கள் பிரச்சினைக்காக குரல் கொடுக்கிறான்... ராஜனைப் போல பிறருக்கு ரவுடி... தன் பகுதி மக்களுக்கு நாயகனாய்... சந்திரா வில்லன்களுடன் இருந்து கொண்டே வில்லியாய் காய்களை நகர்த்துகிறாள்... தேவையில்லாமல் வரலெட்சுமியைப் போல ஆய்... ஊய்ன்னு கத்தலை... அரிவாளை எடுத்துக் கொண்டு வெட்ட ஓடிவரலை... அந்த வகையில் சந்திரா பாந்தமாய்...

வெற்றிமாறனின் திரைக்கதையில் எப்பவுமே ஒருவித ஈர்ப்பு இருக்கும்... அதைக் கொண்டு செல்லும் விதத்தில் அவர் சோடை போவதில்லை... அப்படித்தான் இதிலும் முன்னுக்குப் பின்னும் பின்னுக்கு முன்னுமாய் நகர்த்தி நகர்த்தி மிகச் சிறப்பாக கதை சொல்லியிருக்கிறார். படமும் விறுவிறுப்பாய் நகர்கிறது.

ஏகப்பட்ட கதாபாத்திரங்கள்... எல்லாரையும் கட்டி மேய்த்திருப்பது சிறப்பு...

தனுஷ் நடிப்பு அரக்கன் என்றால் கிஷோரையும் டேனியலையும் சொல்லவா வேண்டும்... ஆனாலும் டேனியலின் பாத்திரப் படைப்பு மிகச் சிறப்பானதாய் கெத்தாய் பயணிக்கும் தருணத்தில் ராஜன் கதையில் உடைபடுகிறது... பின் ஒட்டவே இல்லை...

ஆண்ட்ரியா தாவணி, சேலையில் பாந்தமாய் வருகிறார்... அமீருடன் குலாவும்போது ரவிக்கை துறந்து முதுகு காட்டுவதுடன் தனக்கான கதாபாத்திரத்தை சிறப்பாகவே செய்திருக்கிறார். ஐஸ்வர்யாவும் கூட மற்ற படங்களில் இருந்து இதில் வேறுபட்டிருக்கிறார்... பட்டன் இல்லாத பனியனும் அடிக்கடி உதடு கடித்தலுமாய் இருந்தாலும் கதை ஓட்டத்தில் அதற்க்குத் தகுந்த மாதிரி மாறி விடுகிறார்.

அந்தந்த காலகட்டத்துக்குத் தகுந்த மாதிரி கதைக்களம் மாற்றப்பட்டிருக்கிறது. தனுஷின் தலைமுடி மாற்றம், மீசை தாடி என காலகட்ட மாற்றம் அருமையாய்....

பின்னணி இசையும் பாடல்களும் அருமை... ஒளிப்பதிவு கலக்கல்.

நமக்கு முடி முக்கியம்... எனக்கு அரிக்குது... பொடுகு சார்.... முடிக்கு கலர் அடிச்சி கெடுத்துட்டாங்க என்றெல்லாம் அப்பிராணியாய் பிக்பாஸில் நடித்த செண்ட்ராயன் கொஞ்ச நேரம் படிய வாரிய தலையுடன் அப்பிராணியாவே வர்றார்.

அன்பு ரவுடியாகக் கிளம்பும் போது அவன் பின்னே சந்திரா நிற்கிறாள்... ஒரு கட்டத்தில் அவள் கழுத்திலும் கத்தியை வைக்கிறான்...  காதலும் ரவுடியிசமும் அரசியலும் துரோகமும் வன்மமும் கலந்து சொல்லப்பட்டிருப்பதால் விறுவிறுப்பு இருந்தாலும் காரம் கம்மியே...அடித்து ஆடவில்லை வடசென்னை முதல் பாகம் என்பதே உண்மை என்றாலும் ஆடாமலும் இல்லை... ஒருவேளை வடசென்னை டூவில் அடித்தும் ஆடலாம் அசரவும் அடிக்கலாம் தனுஷும் வெற்றிமாறனும் ஆண்ட்ரியாவும்... இருப்பினும் ஏகப்பட்ட கதாபாத்திரங்களும் அவர்களுக்கான கதை விவரித்தலும் இல்லாது இருந்தால் நல்லது... செய்வார்களா...? காத்திருப்போம்.

இப்ப லைக்கா இல்லாம ஒரு படமும் இல்லை போல... ஆரம்ப காலத்தில் இலங்கையில இருந்து வந்திருக்கானுங்க... ராஜபக்சேயின் உறவுக்காரனுங்க... என்றெல்லாம் பொங்கிக் கொண்டிருந்தோம்... இப்ப அவர்கள்தான் தமிழ் சினிமாவுக்கு பொங்கிப் போடுகிறார்கள்... கிரிக்கெட் போட்டி நடக்கக் கூடாதுன்னு இலங்கையை விரட்டினவனுங்கதானே நாம என்றால் நமட்டுச் சிரிப்புடன் கடந்து செல்வோம்... இது சினிமால்ல.... அமலா பால்களையும் ஐஸ்வர்யா ராஜேஷ்களையும் ரசிக்க வேண்டும் அல்லவா... அப்ப லைக்கா மாதிரி ஆளுங்க அள்ளிக் கொடுத்தாத்தானே முடியும்...

அமீரின் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாய்த்தான் முதலில் செய்திகள் வந்தன... பின்னர் மாற்றம்... ஒருவேளை வி.சே. நடித்திருந்தாலும் இன்னும் அந்தப் பாத்திரம் பேசப்பட்டிருக்கும்... நமக்குத்தான் ஒரு மாசத்துல மூணு படம் வந்திருக்கே எப்படிப் பாக்குறதுன்னு கஷ்டமாயிருந்திருக்கும். நல்லவேளை வி.சே. நடிக்கலை.... 96 இன்னும் மனச விட்டு அகலலை... வி.சே.க்கு ஒரு கடிதம் எழுதணும் போலிருக்கு.

வடசென்னை வெற்றிமாறனின் மைல்கல் படம்தான்... அதில் மாற்றுக் கருத்து இல்லை.

கெட்ட வார்த்தை பேசுறாங்க எனக்குப் பிடிக்காது என்பவர்கள் ஒதுங்கிக் கொள்ளலாம்...

இதெல்லாம் ஒரு கெட்ட வார்த்தையா... இதைவிட அதிக வார்த்தைகளைக் கேட்டிருக்கிறேன் என்பவர்கள் தாராளமாக படத்தைப் பார்க்கலாம்...

கதை சொன்னவிதம் எனக்குப் பிடித்திருந்தது.

பாருங்கள்... உங்களுக்கும் பிடிக்கலாம்.
-'பரிவை' சே.குமார்.

ஞாயிறு, 21 அக்டோபர், 2018

19. என்னைப் பற்றி நான் : நிஷா

சென்ற ஆண்டில் தொடர்ந்து பதினெட்டு வாரங்கள் 'என்னைப் பற்றி நான்' என்ற தலைப்பில் வலை நட்புக்களைப் பற்றி அவர்களே எழுதிய பகிர்வைப் பகிர்ந்து வந்தேன். கேட்டவர்கள் எல்லாருமே உடனே அனுப்பிக் கொடுத்தார்கள். வலைப்பூவில் தீவிரமாக இயங்கிக் கொண்டிருந்த காலம் அது.

இந்த வருடம் பிரச்சினைகளுக்கான வருடமாக ஆகிவிட்டது. எதிலிருந்தும் மீளமுடியாமல் மாற்றி மாற்றி சுற்றிச் சுற்றி அடிக்கிறது. எழுதவே எண்ணாத நிலைக்குத் தள்ளிவிட்டது. தினம் தினம் நிம்மதியைத் தேடி கிடைக்காமலேயே நகரும் நாட்களைக் கடப்பது என்பதே வாடிக்கையாகிவிட்டது. எப்போதே எழுதிய கதைகள் மின்னிதழ்களில் வருகின்றன. அவற்றைப் பகிரும் இடமாக, சினிமா குறித்து எழுதும் இடமாக 'மனசு' மாறிப் போனது.

இந்நிலையில்தான் 'வெள்ளந்தி மனிதர்கள்' பகுதியை சகோதரர் பாலாஜியை பற்றி எழுதி தூசி தட்டினேன். இதோ இப்போது ஏறத்தாழ ஒண்ணேகால் வருடத்துக்குப் பிறகு 'என்னைப் பற்றி நான்' பகுதியை தூசி தட்டும் வாய்ப்பு ஆல்ப்ஸ் தென்றல் நிஷா அக்கா மூலம் கிடைத்திருக்கிறது.

அக்காவிடம் கேட்டபோது தர்றேம்ப்பா என்ற வார்த்தை வந்தது. தருவதற்குத்தான் நேரம் வாய்க்கவில்லை. அவரின் வேலையும்... உடல்நலமும் எப்போதும் அவரை பரபரப்பாக வைத்திருக்க, அவரைப் பற்றி எழுத ஏது நேரம்...?

முகநூல்ல போடலாம்ன்னு பார்க்கிறேன் என எனக்கு அனுப்பிய பகிர்வை ஏன் என்னைப் பற்றி நானாக மாற்றக்கூடாது என்பதாய் இதை மனசில் பகிர்வோம் அக்கா என வாங்கிக் கொண்டேன். விரிவாய் எழுதியிருக்கிறார் வலிகளையும் அதைக் கடந்து வந்து பெற்ற வெற்றியையும்...

கேட்ட போது கிடைக்கவில்லை என்றாலும் கிடைத்த போது சிறப்பானதாய்... நீங்களும் வாசிங்க....

நன்றி நிஷாக்கா...

ன்னை நான் சீர் தூக்கி, ஆராய்ந்து பார்க்கின்றேன்.
நேர்காணல், சுய அறிமுகக் கட்டுரைகளுக்கு மக்கள் கொடுக்கும் முக்கியத்துவத்தினைக் காணும் போதுதான் நான் எனக்கான எத்தனையோ சந்தர்ப்பங்களைத் தவற விட்டிருக்கின்றேன் என புரிந்திட முடிகின்றது. சமுதாயத்தில் நல்லதை விதைக்க நினைக்கும் சிந்தனைக்கும் செயல் பாட்டுக்கும் இம்மாதிரி புகழ்ச்சிகளும் போலித்தனங்களும் அவசியம் என உணரத்தவறி விட்டேனா? கண்ணதாசன் சொன்னது போல் எழுதப்படும் கருத்தை விட எழுதியவர் தலையைச் சுற்றும் வெளிச்சத்தை நம்பும் சமூகத்தின் சிந்தனையை உணராமல் போனேனா..? எனக்கான வாய்ப்புக்களை நான் சரியாக பயன் படுத்த தவறி விட்டேனோ? எல்லாமும் பேசலாம் இங்கே.... நான் என்னும் நிஷாவின் பாதங்கள் மூன்று வயது வரை பஞ்சு மெத்தைகள் மேல்தான் நடை பயின்றது. தரையில் விட்டால் பாதம் வலிக்குமோ என மாமாக்களும் அப்பாவின் நண்பர்களும் மாறிமாறி தூக்கி வைத்திருப்பார்களாம். ஆறு வயது வரை இனிக்கும் நினைவுகள் தான் எனக்குள்... தங்கக்கரண்டி வாழ்க்கைதான் வாய்த்திருந்தது. எல்லாமிருந்தும் எதுவுமே இல்லாமல் போவதை உணர்ந்தவள் நான். நிஷாவின் வாழ்க்கையில் கடந்து வந்த பாதை முழுமைக்கும், தரை விரிப்புக்கள் விரிக்கப்பட்டோ பூக்கள் தூவப்பட்டோ இருந்து விடவில்லை. கரடு முரடான, செங்குத்தான மலைகளும் மேடு பள்ளங்களுமே நிரம்பியிருந்தன. அவற்றைத் தாண்டிட என்னை நான் உருக்கி இருக்கின்றேன், உருகியும் இருக்கின்றேன். எனக்கான வாய்ப்புக்கள் இங்கே கொட்டி கிடக்கவில்லை. பட்டாம்பூச்சியாய் பறந்த என் வாழ்க்கை சிறகொடிக்கப்பட்டும் இருக்கின்றது. சிறகொடிந்து விட்டதே என ஓய்ந்திடாமல் எழும்பிப் பறக்க முயற்சித்தேன். இன்னும் முயற்சித்து கொண்டே இருக்கின்றேன்... ஓய்வொன்றை நாடாமல். என் சிறகுகளை ஒடிக்க முனைந்தோரும், முனைவோரும் என்னைச் சுற்றிக் கொண்டே இருக்கின்றார்கள். அவர்கள் கைகளில் என் இறகுகளில் ஒன்று எப்படியோ சிக்குப்பட்டும் விடுகின்றது. ஆனாலும் நான் என்னை நிருபிக்க மீண்டும் எழும்பிப் பறக்க போராடிக்கொண்டே இருக்கின்றேன். மரணத்தின் இறுதி நொடி வரை இயங்கிக்கொண்டே இருப்பேன். அதுவே என் இலக்கு ஆகும். என்னைக்குறித்து எழுத ஏன் இத்தனை தாமதம்? ஏறத்தாழ ஒன்னறை வருடத்தை நான் ஏன் எடுத்துக்கொண்டேன்? சோதனைகளை சாதனைகளாக்குதலுக்கு இலட்சியங்களுடன் இலக்கை நோக்கிய பயண திட்டம் தேவையாக இருந்தது. அர்ஜுனனை போல் இடப்பக்கமோ, வலப்பக்கமோ சாயாமல் எனக்கான கடமைகளை முடிக்கவும், என் இலக்கை அடையவும் நான் பயன்படுத்தும் ஒவ்வொரு மணித்துளியும் முக்கியமாக இருந்தது. இப்போதும் என் நேரம் எனக்கு பொன்னானதாகவே இருக்கின்றது. என் கவனம் ஒரு நொடி பிசகினாலும் தலைக்குப்புறத் தள்ளி கேலி செய்து கை கொட்டிச் சிரிக்க சந்தர்ப்பத்துக்காக காத்துகொண்டிருக்கின்றார்கள் பலர். அப்படி தள்ளி விட்டதாக நினைத்து அவர்களில் சிலர் பெருமிதமடைந்தும் இருக்கின்றார்கள். நானோ... மேலே மேலே பறந்து கொண்டே இருக்கின்றேன். எவர் கைக்கும் அகப்படாத மின்மினிப் பூச்சி போல் வெளிச்சம் தந்து கொண்டே இருக்கின்றேன். இணையத்தில் இருந்தாலும் என் எழுத்து எங்கோ ஒருவரை சிந்திக்க வைக்கின்றது என்பதை என்னுடன் நேரில் உரையாடுவோரும், இன்பாக்சில் வந்து தங்கள் உணர்வை வெளிப்படுத்துவோரும் நிருபிக்கின்றார்கள். கடந்த பத்து வருடங்களாக இந்த இணையத்தை என்னை வளர்த்தெடுக்கும் ஆரோக்கிரமான் களமாகவே பயன்படுத்தி இருக்கின்றேன் என நம்புகின்றேன். ஏனையோர் சொல்வது போல் இணைய நட்புக்கள் நம்பிக்கைக்கு அப்பாட்பட்டவர்கள், தூரமாக நிறுத்தபப்ட வேண்டியவர்கள் என்பதை நான் மறுதலிக்கின்றேன். என்னுடைய ஒவ்வொரு செயல்பாட்டின் பின்னும் இந்த இணையம் தந்த நட்புக்களே இருந்தார்கள்... இருக்கிறார்கள்... இனிமேலும் இருப்பார்கள். என்னைப்போல் எல்லோருக்கும் இந்த நன்மை வாய்க்கும் என என்னால் எந்த உறுதியும் தர முடியாது. நிஷாவும்... நிஷாவின் அணுகுமுறையும் வேறு. என்னை அறிந்த ஒவ்வொருவருக்கும் எனது தனித்தன்மை புரியும். என்னை உணர்ந்தோர் எவரும் அத்தனை சீக்கிரம் என் நட்பை விட்டு செல்ல விரும்ப மாட்டார்கள். இது திமிர் அல்ல தன்னம்பிக்கை. இந்த இணையம் மூலமாக என்னை வெளிக்காட்டக் கூடிய பல வாய்ப்புக்களை நானே தவற விட்டிருக்கின்றேன் என்பது என்னை அணுகிய ஒவ்வொருவருக்கும் தெரியும். ஆயிரக்கணக்கில் நட்புக்களை இணைத்து நாம் இடும் பதிவுகள் எவ்வித புரிதலும் இல்லாமல் கொடுக்கப்பட்ட லைக் எண்ணிக்கையை வைத்து அக்கருத்தை சமுதாயம் ஏற்று கொண்டிருப்பதான மாய உலகில் நான் என்னை அமிழ்த்த விரும்புவதே இல்லை. என் பதிவை வாசிக்கும் ஒருவராக இருந்தாலும் வாசிப்பவரை அப்படியும் இருக்குமோ... ? என சிந்திக்க வைக்குமானால் அதுவே என் எழுத்துக்கான வெற்றி. இந்த வெற்றியை நான் அடைந்திருக்கின்றேன். உங்கள் எழுத்துக்கு நான் விசிறி. என்னுள்ளத்தை அப்படியே உங்கள் பதிவுகளில் காண்கின்றேன் என மறைவாய் வந்து சொல்வோர் எவரும் பொதுவில் என்னை ஆதரிப்பதில்லை. கும்பலோடு கோவிந்தா போட்டே பழக்கப்பட்ட எம் சமூகத்து சிந்தனை எனக்காக அத்தனை சீக்கிரம் மாறி விடும் என எதிர்பார்க்க முடியுமா? ஈழத்தை ஆதரிக்க வேண்டும்... இல்லாது போனால் விரோதியாக்கபபடுவேன். ஆம்... ஆக்கப்பட்டேன். விடுதலைபுலிகளின் சாதனையை மட்டுமே வெளிப்படுத்த வேண்டும் என்போர் மத்தியில் அவர்களின் தவறுகளையும் எடுத்தியம்பியதனால் நான் துரோகி ஆக்கப்பட்டேன். சமுதாயத்துக்கான நற்கருத்தினை, தெளிவினை தருவோரின் பதிவுகளை நான் ஏற்பதனாலும், அப்படியானவர்கள் எதிர்த்தரப்பாராக இருப்பதனாலும், என் நட்பில் அவர்கள் இருப்பதனாலும் நான் ஒதுக்கப்பட்டே ஆகவேண்டும் என்போர் பலர். அவர்களிடமிருந்து நானே ஒதுங்கி கொண்டேன் . ஈழம் தான் தேவை என்றாலும் அதற்குள் பிரதேச வாதம், பிரிவினை வாதம் நிறைந்திருக்கு. என் ஊர் தான் உசத்தி, உன் ஊர் சொத்தி என சொல்லவும் வேண்டும். அப்படி சொல்பவர்களுக்கு ஜால்ரா போட வேண்டும். தப்பைச் சொல்லவே கூடாது. சொன்னால் நான் அரை லூசு. அப்படித்தான் ஆக்கப்பட்டிருக்கிறேன். அவ்வப்போது டிரெண்ட் ஆகி மக்களையும் சிந்தனைகளையும் திசை திருப்பும் மீம்ஸ்கள் குறித்துப் பெரும்பாலோனோரின் கருத்தினையே நானும் பின்பற்ற வேண்டும். எனக்கென சொந்தக்கருத்து இருக்கவே கூடாது. ஆட்டு மந்தைகளாய்ச் செல்லும் எல்லோர் போலும் நானும் செல்ல வேண்டும். சுய சிந்தனை அறவே இருக்க கூடாது. எதையும் மேலோட்டமாக அணுகி கனவு வாழ்க்கையை கற்பனையில் வாழ கற்றுக்கொடுக்கும் பணியை செய்வோருக்கு நான் ஆதரவு கொடுத்தால் நானும் வீரத்தமிழ் பெண்ணாகி இருப்பேன். என்னால் அது முடியாமல் போனது ஏன்..? அவ்வப்போது நடக்கும் மேடை ஏற்றல்கள். விருதுகளுக்கு ஓரு ஓரமாக ஒதுங்க... அவர்கள் கேட்கும் ஸ்பான்சர்களை நானும் கொடுக்க வேண்டும். கொடுத்து விட்டால் இந்த உலகில் சாதனை நாயகியே நான் தான். முதலும் முக்கியமுமாக நானும் தினமும் விதவிதமாக மேக்கப் செய்து புகைப்படம் எடுத்து பேஸ்புக்கில் பகிர வேண்டும். இத்தனையும் செய்தால் நானும் பிரபலம்தான் எனில் அப்படி என்னை மாற்ற என்னால் முடியாது. இதில் எதையும் என்னால் இதுவரை பின்பற்ற முடியவில்லை. இனியும் முடியாது. எனக்கான அஸ்திவாரம் என்பது நான் வாழும் காலத்தில் கட்டப்பட்ட கூடாரமானதாக பயன்படுத்தப்படுவதாக இருக்க கூடாது. நான் மாண்ட பின்னும் நிலைத்து நிற்கும் கான்கிரிட் அஸ்திவாரமாக இருக்க வேண்டும். என்னை நேசிப்போர் மனதில் வாழும்படி அது கட்டப்பட வேண்டும் என்பதே என் எண்ணம்... ஆசை. அந்த அஸ்திவாரத்தை இட்டிருக்கின்றேன் என நம்புகின்றேன். இந்த நம்பிக்கை தான் நிஷா... என்னை பற்றியும், நான் கடந்து வந்திருக்க கூடிய பாதைகள் குறித்தும் அறிய என்னை நானும் என்னை அறிந்த நட்புக்களும் சொல்லி இருக்கும் பதிவுகளை இங்கே இணைக்கின்றேன் படியுங்கள்.


தாங்கள் எழுப்பும் கேள்விகளுக்கு என்னாலான பதிலை இங்கு தருவேன் என்பதையும் சொல்லிக் கொள்கிறேன்.

நன்றி அக்கா... காலம் தாழ்த்திக் கொடுத்தாலும் உங்க மனசை என் 'மனசு'க்கு கொடுத்தமைக்கு...

குறிப்பு : என் வலை நட்புக்கள் என்னைப் பற்றி நான் பகுதியில் இடம் பெற விரும்பினால் kumar006@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு தங்களைப் பற்றி எழுதி அனுப்புங்கள்... உங்கள் ஆதரவு இருந்தால் இதை மீண்டும் தொடரலாம்.


**************

ப்படியே  கானல் அமீரக யூடியுப் சேனலில் என்னோட இரண்டாவது வீடியோவான 'சுனை நீர்' சிறுகதை குறித்த பகிர்வையும் பார்த்து எப்படி பேசியிருக்கேன்னு சொல்லுங்க... நன்றி.

-'பரிவை' சே.குமார்.

வியாழன், 18 அக்டோபர், 2018

மனசு பேசுகிறது : மீராவின் கடிதம்

ந்த ராம் - ஜானு கடிதப் போக்குவரத்துக்கு முற்றுப்புள்ளி வச்சிடலான்னு தோணுது. சினிமாங்கிறதால சிலாகிக்கிறோம்... இதுவே உண்மையாக வாழ்க்கையில் நிகழ்ந்திருந்தால்... அதுவும் நம் வாழ்க்கையாக இருந்திருந்தால்... எத்தனை பேர் இதைச் சிலாகிப்போம். 

ஒரு இரவு ஆத்மார்த்தமான அன்புடன் நிறையப் பேசி மகிழ்ந்திருந்தாலும் அவர்களுக்குள் வேறெதுவும் நிகழ்ந்திருந்தால் என்பதே நம் எண்ணமாக இருக்கும் இல்லையா... இப்படியான சந்திப்பு நிகழும் ஆங்கிலப் படங்களில் உதடுடன் உதடு மோதிக்கொள்ளும் முத்தமும் காமமும் அதன் பின்னான கலவியுமே காட்சிப்படுத்தப்படுகிறது. 

ராம் திருமணம் செய்யவில்லை... ஜானு உருகினாள்... சரி... இதையே மாற்றிப் பாருங்கள்... ராமுக்கு திருமணம் ஆகியிருந்தால் ஜானு உருகியிருப்பாளா..? இல்லை ராம்தான் ஜானுவுடன் சுற்றியிருப்பானா...? அப்படியே சுற்றினாலும் வீட்டுக்கு கூட்டிப் போயிருப்பானா..?

இவர்கள் ஊர் சுற்றிய விவரம் எப்படியோ ராம் மனைவிக்கோ அல்லது ஜானுவின் கணவனுக்கோ தெரிய வரும்போது அந்தக் குடும்பங்களில் நிகழ்வது என்னவாக இருக்கும்... சூறாவளிதானே... நம்மில் எத்தனை பேர் இது போன்றதொரு நிகழ்வை டேக் இட் ஈஸியாக எடுத்துப்போம்.

ஜானுவின் கடிதம் தட்ஸ் தமிழிலும்(One India - இணைப்பு இங்கே) பிரதிலிபியிலும் பகிரப்பட்டபோது பலர் ஆஹா ஓஹோ என்ன எழுத்து என்றார்கள். சிலர் மேலே சொன்னது போல் சிந்தித்திருந்தார்கள். சினிமா சினிமாதான்... எதார்த்தம் எப்போதும் வேறுதான்.  

 அதன் பாதிப்புத்தான் இந்த மீராவின் கடிதம்...

Image result for 96 movie hd images

திப்பிற்குரிய ராம் சார்...

நான் மீரா... உங்கள் பள்ளித் தோழி ஜானகியின் மகள்.

உங்களை எந்த உறவு முறையில் அழைப்பது என்பதே மிகப்பெரிய குழப்பமாய் எனக்குள்... அதனாலயே 'மதிப்பிற்குரிய' என மரியாதைக்குரியவராக உங்களை மாற்றிக் கொண்டுள்ளேன்.

உங்களுடன் கொஞ்சம் பேச வேண்டும்... 

இவள் என்ன பேசப் போகிறாளென்று உங்களுக்குத் தோன்றலாம். நான் சிறுமி அல்ல... உலக விஷயங்கள்.. நல்லது கெட்டது என எல்லாம் அறிந்து அதற்கேற்றவாறு வாழக்கூடிய இளைஞிதான்... எனவே வாழ்க்கை குறித்தும் பேசலாம் தப்பில்லை.

பெரும்பாலும் தோற்ற... இங்கே தோற்ற என்பதைவிட முழுமையடையாத என்பதே சரியாகும் என்பதால் முழுமையடையாத காதல்களின் பின்னே காலச் சூழலில் காதலர்கள் சந்திக்கும் பட்சத்தில் தன் குழந்தையிடம் ஒருவருக்கு ஒருவர் 'மாமா', 'அத்தை' எனத்தான் அறிமுகம் செய்து வைப்பார்கள்... இது அவர்களை ஏமாற்றிக் கொள்ளும் முயற்சி என்பது தெரிந்தும் சமூகத்தின் பார்வைக்காக அப்படித்தான் நடந்துகொள்ள முடியும்.

சில மாதங்கள் முன்பு அம்மாவுக்கு நீங்க எழுதிய கடிதத்தில் மாமான்னு அறிமுகம் செய்து விடுவாயோ என்று பயந்தேன் எனச் சொல்லியிருந்தீர்கள். அதான் உங்களை முறை சொல்லி அழைக்க முடியாமல் தவிக்கிறேன். சார் என்பதே இருக்கட்டும் பொதுவாய்...

அம்மாவுக்கு நீங்கள் எழுதிய கடிதத்தை வாசித்தேனா என்றுதானே நினைக்கிறீர்கள்..? 

வாசித்தேன் சார்... நீங்ககூட என்னிடம் எல்லாம் சொல்லச் சொல்லியிருந்தீர்கள்தானே,,, அம்மா கடிதத்தை மட்டும் காட்டவில்லை... எல்லாம் சொன்னாள்... இங்கு காதல் குற்றமெல்லாம் இல்லை... அதெல்லாம் நம்மூரில்தான்... ஆணவக்கொலைகள் கூட நடப்பதுண்டுதானே... நேற்றுக் கூட ஒரு செய்தி பார்த்தேன் பள்ளிச் சீருடையுடன் பேருந்து நிலையத்தில் காதலனுடன் குலாவிய மாணவி என... இங்கு காதல் தவறில்லைதான் என்றாலும் பொது இடங்களில் எல்லை மீறல் எல்லாம் கிடையாது... ஒருவேளை அடைத்து வைத்தால் அதுபோல நிகழலாம்... என் வீட்டில் நான் சிறைப்பறவை அல்ல.

எனக்கு அம்மாவைப் பிடிக்குமா..? அப்பாவைப் பிடிக்குமா..? என்றால் அம்மாதான். பெண் பிள்ளைகளுக்கு அப்பாவைத்தானே பிடிக்கும் என நீங்கள் நினைக்கலாம்... எனக்கு அம்மாவைத்தான் பிடிக்கும்... அப்பாவுக்கு எப்பவும் பிஸினஸ்தான்... ஆனாலும் அவருக்கு என்னை ரொம்பப் பிடிக்கும்... அம்மாவையும்தான்...

நீங்கள் ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை..? 

என் அம்மாவிடம் சொல்லாத காதலையா இத்தனை வருடமாகத் தூக்கிச் சுமந்தீர்கள்...? 

எனக்கு அதை நினைத்தால் சிரிப்பாகவும் பரிதாபமாகவும் இருக்கிறது.

அம்மா வேறு உங்களைப் புகழ்ந்து தள்ளுகிறாள்... இத்தனை வருடமாக நீங்க வெர்ஜினாமே... ஆம்பளை நாட்டுக்கட்டை என்று வேறு சொன்னாள்... எனக்கு நாட்டுக்கட்டைக்கு அர்த்தம் புரியலை.. அம்மாவே விளக்கினாள். 

ஆமா அம்மாவைப் பத்தாவதோடு விட்டு விட்டுச் சென்னை போனவர் பின் தொடர்பே இல்லாமல் வருடங்கள் கடந்த நிலையில் காலேஜ் படிக்கும் போது தேடி வந்ததாய் சொல்லியிருக்கிறீர்கள்... 

அதுவரை உங்களை தஞ்சாவூருக்கு இழுக்காத அம்மா நினைவு திடீரென இழுத்தது எப்படி..? ஏன் தஞ்சாவூரில் இருந்து கிளம்பும் போது அம்மாவிடமோ உங்க நட்புக்களிடமோ சொல்லாமல் போனீர்கள்..?

உங்க வாழ்கையில் எதுவும் மேஜிக் நிகழ்ந்ததா என்ன..?

ஏதோ ஒரு பெண் உங்களைக் காதலித்ததாகவும் அவளிடம் அம்மா மீதான உங்கள் காதலைச் சொன்னதாய் அம்மாவிடம் சொன்னீர்களாம்... அம்மா விரும்பி விரும்பிக் கேட்டபோதெல்லாம் சொல்லாத காதலை எவளோ ஒருத்தியிடம் சொல்லியிருக்கிறீர்களே... அதெப்படி... கேட்டால் வயதும் வாழ்வும் மாற்றங்களைச் சந்தித்ததே காரணம் என நீங்கள் சொல்லலாம்...

உண்மையில் பயம் உங்கள் காதலைத் தின்றிருக்கிறது என்பதை ஏற்றுக் கொள்வீர்களா..?

அப்பாவுக்கு அம்மாவின் காதலும் அது நிறைவேறாமல் போனதும் தெரியும்... அவருக்குள்ளும் ஒரு நிறைவேறாத காதல் உண்டு... அதை அம்மாவும் அறிவார்... நானும் அறிவேன்... அவர் உங்களைப் போல் தூக்கிச் சுமக்கவில்லை.... இவ்வளவுக்கும் கல்லூரியில் படிக்கும் போது காதலைச் சொல்லி சில ஆண்டுகள்  வாழ்ந்த காதல் என்றபோதிலும்...

உங்ககிட்ட ஒண்ணு கேக்கணும்... கோபப்பட மாட்டீங்கதானே... நான்தான் ஜானகியின் பொண்ணாச்சே... எப்படிக் கோபிப்பீங்க...?

உங்களுக்குத் திருமணம் ஆகி என்னைப் போல் ஒரு பையனோ பெண்ணே இருந்திருந்தால் அம்மாவைப் பார்த்தபோது எப்படி நடந்து கொண்டிருப்பீர்கள்...? 

அம்மாவுடன் அந்த மழை இரவில் ஊர் சுற்றியிருப்பீர்களா..?

அம்மாவை உங்க விட்டுக்கு கூட்டிப் போயிருப்பீர்களா...?

உங்கள் மனைவி அதை ஏற்றுக் கொண்டிருப்பாங்களா..?

அதையெல்லாம் விடுங்க... எனக்குள்ள ஒரு மறக்க முடியாத காதல் இருக்குன்னு உங்க மனைவிக்கிட்ட சொல்லி இருப்பீங்களா..?

எங்கம்மாவை எங்கிட்ட சொல்லச் சொன்ன நீங்க உங்க பிள்ளைகளிடம் சொல்லியிருப்பீர்களா...?

ஒருவேளை நான் காதலித்தால்... அப்படி எதுவும் செய்யமாட்டேன்... நான் ஜானகியின் வளர்ப்பு... அம்மாவின் காதல் வலி எனக்குத் தெரியும்... ஒருவேளை காதலித்தால் என் வீட்டில் ஏற்றுக் கொள்வார்கள்... இருக்கும் நாடு அப்படி... இதே உங்க பிள்ளைங்க காதலிச்சா ஏத்துப்பீங்களா...?

என்னடா இந்தப் பெண் இத்தனை கேள்விகளை முன் வைக்கிறாள் என்று உங்களுக்குத் தோன்றலாம்... இதெல்லாம் முடியுமா..? என்ற கேள்வியை உங்கள் முன் வைத்துப் பாருங்கள்... பதில் கிடைப்பதில் இருக்கும் சிக்கலை அறிவீர்கள். 

எல்லாமே என்னால் முடியும் என்பதெல்லாம் வெறும் வார்த்தைகளாய் மட்டுமே வரலாம்...செயலாய் அதெல்லாம் அவ்வளவு எளிதாய் முடியாது சார்.

நீங்க சிங்கப்பூர் வந்திருந்தால்... அம்மா உங்க கூட சுற்றியிருக்க முடியாது... வீட்டுக்கு வேண்டுமானால் அழைத்திருக்கலாம் அதுவும் நள்ளிரவில் அல்ல... பகலிலேயே சாத்தியமாகியிருக்கும்...

அப்பாவுக்கும் அறிமுகம் செய்து வைத்திருக்கலாம்... பள்ளித் தோழனாக...

இன்னொன்னு கேட்க மறந்துட்டேன் பாருங்க... 

அந்தப் பொக்கிஷப் பெட்டியை எவ்வளவு நாள் பத்திரப்படுத்துவீர்கள்...? 

உங்களுக்குத் திருமணம் ஆனால் அதைக் கொண்டாடுவீர்களா..? 

உங்கள் மனைவி முன் இன்னொருத்தியின் துப்பட்டாவையும்... குர்தாவையும்... ஜீன்ஸையும்... ஏன் காய்ந்து போன பூவையும் எடுத்து வைத்து நினைவுகளில் நீந்த உங்களால் முடியுமா..?

அப்பாவின் முன் இதெல்லாம் செய்ய முடியாமல் மனசுக்குள்ளேயே தவிக்கிறாள் அம்மா.. இதுதான் உண்மை... பல நாள் யாருமற்ற தனிமையில் 'யமுனை ஆற்றிலே' பாடியிருக்கிறாள் கண்ணீரோடு... எனக்கான தாலாட்டே அதுதான் தெரியுமா..?

தஞ்சாவூர் செல்லும் போதெல்லாம் நீங்க படித்த பள்ளியின் வாசலுக்கு ஓடிச் சென்று பார்த்து தன் நினைவுகளை மீட்டியிருக்கிறாள்.

அம்மாவைச் சுமந்து திரிந்தேன் என்று சொல்லும் நீங்கள் எத்தனை முறை அந்தப் பள்ளிக்குப் போயிருக்கிறீர்கள்...? 

ஏதோ மாற்றுப் பாதையில் செல்ல வேண்டிய சூழலாம் அந்த வழி சென்றீர்கள்... நினைவை மீட்டீர்கள்... இல்லையென்றால்...?

நெருங்கிய நண்பர்கள் வாட்ஸ் அப் குழுமம் வைத்திருந்தும் அதில் உங்களை இணைக்கவில்லை... அம்மாவை இணைத்திருக்கிறார்கள்... இதெல்லாம் எப்படி... நம்பும்படியாகவா இருக்கிறது.... 

இன்னொன்றும் கேட்கிறேன்.. 

இதே ரீயூனியன்... இரவு முழுவது தனிமை ஊர் சுற்றல் என என் அப்பாவோ... உங்கள் மனைவியோ... செய்திருந்து தெரிய வந்தால் இதிலென்ன இருக்கு... அவங்க மனசுக்குள்ள வாழ நினைத்த வாழ்க்கைன்னு நீங்க ரெண்டு பேரும் ஏத்துக்கிட்டிருப்பீங்களா..? இல்லை எப்படி நானிருக்கும் போது இன்னொருத்தனுடன் / இன்னொருத்தியுடன் ஊர் சுற்றலாம் என  மல்லுக்கு நின்றிருப்பீர்களா..?

அம்மா... இப்போது மிகவும் சோர்ந்து... எப்போதும் எதையோ இழந்தது போல் இருக்கிறாள்... காரணம் மீண்டும் பார்க்க நேர்ந்த நீங்களும்... அந்த இரவுத் தனிமையும்...

அந்த இரவில் எதை மீட்டுக் கொடுத்தீர்கள் அம்மாவிடம்... பால்யத்தையா... காதலின் வேதனையையா...

முதலில் நீங்கள் ஒரு திருமணம் செய்யுங்கள்... உங்களுக்கான வாழ்வை வாழுங்கள்...

அம்மா ஒன்றும் திருமணம் செய்ய மறுத்து... அப்பா அவரைக் கட்டாயப்படுத்தி... திருமணம் செய்து கொள்ளவில்லை. விருப்பத்துடந்தான் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். 

தொலைந்த காதலை தூக்கிச் சுமக்காதீர்கள்... தொலைந்தது தொலைந்ததாகவே இருக்கட்டும்... அதைச் சுமந்தது போதும்.... உங்களுக்கான வாழ்வைச் சுமக்கப் பாருங்கள்.

எனது கேள்விகளுக்கான பதிலெல்லாம் நீங்கள் எனக்கு எழுத வேண்டாம்...

நீங்கள் திருமணம் செய்தால் மட்டுமே... எனக்கும் அப்பாவுக்குமான அம்மா கிடைப்பாள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

நான் உங்களுக்குச் சொல்ல வேண்டியதில்லை.... வாழ்க்கை நிறைய கற்றுக் கொடுக்கும் சார்...

இறுதியாக, என்னைப் போல் உங்களுக்கு ஒரு மகனோ / மகளோ இருந்திருந்தால் என் அம்மாவுக்கு லெட்டர் எழுதுவார்களா இதுபோல...

அதுவும் ஆண் பிள்ளை என்றால் என் அம்மாவை எவ்வளவு கேவலமாக பேசியிருக்கக் கூடும்..? 

எதார்த்தத்தை யோசியுங்கள்.

வாழ்ந்து பாருங்கள்.... ராமாக இல்லை ராமச்சந்திரனாக...

அம்மாவை நீங்கள் அழைப்பது போல் எழுதிவிடக் கூடாது என்பதாலே கடிதத்தில் அம்மாவின் முழுப் பெயரையும் எழுதினேன்.

அப்பாவுக்கு அம்மா எப்போதும் அம்முதான்.... ஜானு என அழைப்பதை அவர் ஏனோ விரும்பவில்லை... 

அவரிடமும் அம்மாவுக்காக நிறைய காதல் இருக்கு சார்... பிஸினஸ் பிசியிலும் அவர் அதைக் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்... அம்மா பெற்றுக் கொண்டுதான் இருக்கிறாள்... திருப்பிக் கொடுக்காவிட்டாலும்...

நினைவுகளை தூக்கி எறிந்துவிட்டு நிஜத்துடன் வாழப் பழகினால் எல்லாம் சுகமாகும்.

நன்றி.
ஜானகியின் மகள் மீரா.
-'பரிவை' சே.குமார்.

சனி, 13 அக்டோபர், 2018

மனசு பேசுகிறது : 'ப்ரிய' ஜானு - ராம்

Image result for vijay sethupathi hd images in 96

'ப்ரிய' ஜானு...

மனமின்றிப் பறந்தாய்... மகிழ்வின்றி இறங்கி இருப்பாய் என்றாலும் நலமுடன் சிங்கப்பூர் போயிருப்பாய் என்று நம்புகிறேன்.

தனிமையும்... வெறுமையும்... எத்தனை கொடுமையானது என்பதை உணர்ந்த தருணம் அதை விடக் கொடுமையானது... நீ சென்ற பின் நான் சென்னை நோக்கிப் பயணித்த அந்த நிமிடங்கள் என் எதிரிக்கும் வரக்கூடாது ...

இந்த ரீயூனியனும் அதில் நீ கலந்து கொண்டதும் எதிர்பார்த்து நிகழ்ந்தல்ல... எதேச்சையான நிகழ்வுதானே... பின் ஏன் உன் வரவை என்னிடம் மறைக்க நினைத்தான் முரளி...

நீ எப்படியும் வரப்போறே... பின் மறைத்து என்ன செய்யப் போகிறார்கள்... என்னிடம் சொல்லி விட்டார்கள்... கேட்ட நிமிடத்தில் இருந்து நீ என்னை முதலில் தொட்டபோது சுமந்த படபடப்பை மீண்டும் சுமக்க ஆரம்பித்தேன்...

நீ என்னருகே வரும் வரை பைத்தியமாய் ஒதுங்கி நின்றேன் என் கையில் வைத்திருந்த பலூனில் அடைப்பட்டிருந்த காற்றைப் போல...

என் பயணம் தஞ்சைக்குள் நுழைந்தது மாற்றுப் பாதையில் செல்ல வேண்டிய சூழலால்தான் என்றாலும் அதுதானே நம்மை ஒரு இரவில் மடை திறந்த வெள்ளமென எல்லாம் பேச வைத்தது...

என் மாணவி காரோட்ட, நாம் கடைசியாய் சந்தித்த பாலத்தைக் கடந்த போது  நீ என் மீது மை அடித்து இதை பத்திரமா வச்சுக்க என்று சொன்ன அந்த நாள் ஞாபகம் வந்து படுத்தியது... அதுதானே நம் கடைசி சந்திப்பு...

என் குதூகலம் அவளுக்குள்ளும் ஓட்டிக் கொள்ள, நான் சொன்ன படி காரோட்டினாள். தஞ்சையின் அடையாளங்களைக் காட்டிக் கொண்டு வந்த போதே நம் பள்ளி வராதா என்று ஏங்கியபடியே வந்த நான் அதைக் கண்ட போது என் அடையாளத்தை மீட்டுக் கொண்டேன் என்பதை விட பத்தாப்பு ராமாக பயணித்தேன்... உன்னை எனக்குள் மீட்டிப் பார்த்தேன்.

வாட்ச்மேன் அண்ணனிடம் கேட்டு உள்ளே சென்றவனுக்குள் ஆயிரம் பட்டாம்பூச்சிகள்... ஊர் சுற்றல், டென்சன் எல்லாம் மறந்து பறக்க ஆரம்பித்தேன்.

இந்த சந்தோஷங்களையெல்லாம் புதைத்து வைத்துவிட்டுத்தானே தாடியும் மீசையுமாய் ஊர் ஊராய் சுற்றிக் கொண்டு கண்டிப்பான ஆசிரியனாகவும் வாழ்க்கிறேன்... இது என்னை நானே ஏமாற்றிக் கொள்ளுதல்தானே ஜானு...

பள்ளிக்குள் உன்னுடன் சுற்றி வர வேண்டும் என்ற என் ஆசை நிராசையாய் ஆகிவிட்டது... ஆம் சென்னையில் கூடலாம் என  என் ஆசைக்கு அணை போட்டு விட்டார்கள் பாவிகள்... அதுவும் கூட நல்லதுதான்... என் வீட்டில் எனக்காக மட்டும் சில மணி நேரங்கள் வாழ்ந்துவிட்டுச் சென்றாயே... யாருக்குக் கிடைக்கும் இது போன்றதொரு பாக்கியம்...

வகுப்புக்குள் போனதும் உன் இடத்தில்தான் அமர்ந்தேன்... என்னருகே நீ இருப்பது போல் உணர்ந்தேன்... என்னை இழந்து உன்னைச் சுமந்தேன் என்பதே உண்மை ஜானு.

வகுப்பிற்கு நீ வராத அந்த நாட்கள் எனக்கு எத்தனை கொடுமையாக இருந்தது தெரியுமா..? காய்ச்சல் குறையுமுன்னே எனக்காய்தான் நீ வந்தாய் என்று தெரியும்... எல்லாரும் உன்னிடம் பேச நான் மட்டும் ஒதுங்கியே நின்றேன்... என் படபடப்பும் துடிதுடிப்பும் நீ அறிவாய் என்பதை உணர்ந்தேன்... என்னைத் திரும்பிப் பார்த்த அந்த ஒற்றைப் பார்வையில் அதை நீ உணர்த்தினாய்....

அதுதான் மீண்டும் மீண்டும் என் நினைவுக்குள்... எப்படி மறக்க முடியும் அந்தப் பார்வையை...

நம் நண்பர்களின் வாட்ஸ்அப் குழுமத்தில் என்னைச் சேர்க்காமலேயே இருந்திருக்கிறார்கள்... அது ஏன்... நீ அதில் இருந்ததால்தானோ...? எல்லாரும் பார்க்கணும் என்றதும் என்னைச் சேர்த்து மாப்ள, மச்சான், தலைவான்னு உருகுறாங்க ஜானு... நீமட்டும் ஹாய் கூட சொல்லலை.... எனக்குத் தெரியும் உண்மையான அன்பு உன்னிடம் மட்டுமே என்பது... சுபா... அவள விடு அவ எந்தங்கச்சி... அந்தப் பாசம் வேற...

குழுமத்தில் இணைந்ததும் பத்தாம் வகுப்பு போட்டோ பகிரப்பட்டது... அதில் உன்னைப் பார்த்து உருகித்தான் போனேன்.... 'சின்னப் பொண்ணு நான் ஒரு செந்தூரப் பூ நான்...' பாட்டை நீ பாடிய போது வெல்லக்கட்டி நான் என்றபோது புருவம் உயர்த்தி என்னைப் பார்த்த ஞாபகம் மனசுக்குள் மணியடித்தது தெரியுமா....?

ம்....

அன்றைய இரவை நீங்கா இரவாக மாற்றிய நீ தங்கியிருந்த ஹோட்டலைத் தாண்டி வரும் போது என்னை அறியாமல்  கண்ணீர்... எல்லாரையும் போல் ஆண்பிள்ளை அழலாமா என்பாய் நீயும்... காதலின் கண்ணீருக்கு ஏது வேறுபாடு..?

அது போக அழுகை துக்கத்துக்கு மட்டுமானதல்ல...  சுகத்துக்கும்தானே...

உண்மையைச் சொன்னா வீட்டுக்குப் போகணுமா என்று தோன்ற,. எங்கெங்கோ சுற்றிவிட்டு இரவுதான் வீட்டுக்குப் போனேன்... மின்சாரம் இல்லை.... யமுனை யாற்றிலே வீடெங்கும் கேட்கிறது... எப்படியிருந்திருக்கும் எண்ணிப் பார்.... ஓவென்று அழுதேன்... மெல்ல மெல்லக் கரைகிறேன் நான்... மின்சாரம் வந்துவிட்டது...

வீடெங்கும் நிசப்தம்... வீடும் வெறுமையாய் இருந்தது ஆனால் அதில் உன் வாசம் நிறைந்திருந்தது ஜானு... அது போதுமே எனக்கு ஆயுசுக்கும்...

அந்த வாசனையை மீண்டும் மீண்டும் சுவாசிக்கிறேன்...

இன்னொருவனின் மனைவியின் வாசத்தைச் சுவாசிக்கலாமா என்றெல்லாம் எனக்குத் தோன்றவில்லை... அந்த வாசம் எனக்காய் நீ விட்டுச் சென்றதுதானே... அதில் என் பத்தாப்பு ஜானுதான் தெரிந்தாள்... இன்னொருவனின் மனைவி சத்தியமாய்த் தெரியவில்லை எனக்கு...

இனி

மெட்ரோ ரயில்...

காபிக்கடை...

மழை இரவு...

அவ்வளவு ஏன்... என் காரில் தனிமைப் பயணம் கூட

எனக்கு உன் அருகாமையைச் சொல்லிக் கொண்டே இருக்குமே ஜானு... எப்படி மீள்வேன்..?

என் மோட்டார் சைக்கிளில் போகும் போது என் தோள் பிடித்து நீ அமர்ந்திருப்பதாய் நினைத்து பேசிக் கொண்டே போகிறேன்... பைத்தியம் போல....

22 ஆண்டுகளுக்குப் பிறகு என்னைப் பைத்தியமாய் அடித்திருக்கிறது உன் நினைவுகள்...

காரின் கியரில் கை வைக்கும் போது உன் ஞாபகம் சுடுகிறது என்னை... அழுகிறேன் நான்...

நீ வேதனையோடு அதைப் பிடித்திருக்க... எங்கே நானும் நேசமாய் பிடித்து விடுவேனோ என்பதாலேயே அத்தனை முரட்டுத்தனம் காட்டினேன்...

அத்தனை அழுத்தம் கூடாதுதான் என்று இப்போது நினைத்து வெட்கப்படுகிறேன்...

என் முரட்டுத்தனம் உன் கையில் வலியாய் இறங்கியிருக்கும் என்றாலும் அந்த சில நிமிடங்கள் ஏதோ ஒரு உணர்வு எனக்குள் பூத்தது என்பதை மறைக்க முடியவில்லை... அதில் எனக்கான வாழ்வு இருந்தது ஜானு..

என்னைப் பார்த்து 'நாட்டுக்கட்டை' என்றாயே... உன்னை... இப்ப நினைத்தால் சிரிப்புத்தான் வருகிறது போ... இந்தத் தஞ்சாவூர்க்காரியை சிங்கப்பூர் வாழ்க்கை  கொஞ்சம் கூட மாற்றவில்லையே எப்படி..?

அதென்ன படக்குன்னு நீ வெர்ஜினாடான்னு கேட்டுட்டே... போட்டோ எடுப்பவனாய் ஊர் ஊராய் சுற்றி வருபவன் என்பதால் கேட்டாயோ... இதை முரளியிடம் சொன்னால் சிரிப்பான்...22 வருசமா நான் கற்போடு இருந்தேன் என்றால் சிரிக்கத்தானே செய்வார்கள்... நான் சோகங்களைச் சுமப்பவன்... எனக்கான வாழ்க்கையில் மற்றவற்றைச் சுமக்க... ரசிக்க... தருணம் ஏது ஜானு..?

அப்பா... அம்மா.... நீ கேட்கவில்லை... நானும் சொல்லவில்லை... நீ கடந்து போனாய்... அவர்கள் கடனில் போனார்கள்... இப்ப நான் மட்டும் தனிமரமாய்...

உன் துப்பட்டா,  நீ வைத்த பூ என நான் சேகரித்து வைத்திருந்த பொக்கிஷங்களைப் பார்த்து நீ ஆச்சர்யப்பட்டாய்...  அதுதானே நம் காதலின் முகவரி... அதை எப்படித் தொலைப்பேன்... ஒருவேளை இன்றைய தலைமுறை பார்க்க நேர்ந்தால் சிரிக்கக் கூடும்... சிரிக்கட்டுமே... அந்தக் காலக் காதலை இன்றைய செல்போசி சேமிப்பில் சேர்க்க முடியுமா...?

பொக்கிஷப் பெட்டியில் புதிதாய் நீ மழையில் நனைத்து, நான் காயப்போட்ட உன் குர்தாவும்... பேண்ட்டும்... என்றாவது ஒரு நாள் மீண்டும் எடுத்துப் பார்ப்பேன்... அப்போது உன் வாசத்தையும் நேசத்தையும் மீண்டும் சுவாசித்துக் கொள்வேன்... அன்னையின் மார்பில் பசியாறும் குழந்தையென...

உன்னைத் தேடி பல வருடங்களுக்குப் பிறகு கல்லூரிக்கு வந்த நான் வசந்தி சொன்னதை வைத்து உன்னைப் பார்க்காமலே வந்துவிட்டேனே... அந்த இடத்தில் நான் சந்திரனாக இருந்திருக்கலாம்... வீம்பு பிடித்த ராமாக இருந்து விட்டேனே.... தவறு என் மீதுதானே...பிறகு ஏன் நீ அப்படி அழுதாய்...?

காபிக்கடையில் என் மாணவிகளிடம் நீ பொய்க்கதை சொன்னாலும் அந்தக் கணத்தில் உன் முகத்தில்தான் எத்தனை பூரிப்பு... எத்தனை சந்தோஷம்... உன் கண்களில் அவர்கள் ஆனந்தத்தைக் கண்டிருக்கலாம்... நானோ சொல்ல முடியாத வலியின் பிரவாகத்தை... வாழ முடியாத வாழ்வைக் கண்டேன்.

அந்த இரவில்... நான் காதலில் தோற்றதைவிட உன்னைத் தொலைத்ததை எண்ணி வருந்தினேன்...

இதோ இப்போது நீயும் நானும் காபி சாப்பிட்டபடி பேசிக் கொண்டிருந்த என் வீட்டுப் பால்கனியில்தான் நிற்கிறேன் தனியாய்...

இப்போதும் மழை பெய்கிறது...

மஞ்சள் குர்தா அணிந்த பெண் ஒருத்தி சாலையைக் கடந்து போகிறாள்...

என்னையறியாமல் அழுகிறேன்.... இடி இடிக்கிறது... ஓவெனக் கதறுகிறேன் அந்த இடியோடு...

ஆம்பளை அழலாமா என்று மறுபடியும் நினைக்காதே...

ப்ளீஸ்... நான் அழ வேண்டும் ஜானு...

என்னுள் இருக்கும் துக்கத்தை... சந்தோஷத்தை நான் அழுது தீர்க்க வேண்டும் ஜானு...

உன்னை இறக்கிவிட்ட நொடியில் என் உயிரே போனதாய்தான் நினைத்தேன்... எப்படிச் சொல்வேன் உன்னிடம் அதை... குற்றவாளியாய் நின்றிருந்தேன்.

அப்போதுதான் 'ரொம்பத் தூரம் பொயிட்டியா ராம்'ன்னு உன் குரல்... அதில் எத்தனை ஏக்கம்...?  அதே இடத்தில்தான் இடத்தில்தான் நிற்கிறேன் என்றவனுக்கு உன்னைத் தேடி ஓடி வரத் தோணலை... ஆனால் நீ ஓடி வந்தாயே... தொலைந்து கிடைத்த குழந்தையை காண ஓடிவரும் அம்மாவைப் போல வந்தாயே...

என்னை எடுத்துக் கொஞ்ச முடியாத சூழலில் நீ... அடித்துத் தீர்த்துக் கொண்டாய்....

அந்த ஹோட்டல் செக்யூரிட்டி எத்தனை முறை கதவைத் திறந்து மூடுவான்....  கண்டிப்பாக அவன் உன்னையும் என்னையும் வேறு மாதிரி நினைத்திருக்கக் கூடும்...  தினத்தந்தியில் போடப்படும் கள்ளக்காதல் செய்தி போல.... மனங்களின் வலி அவர்களுக்கு எப்படித் தெரியும்... நினைத்துவிட்டுப் போகட்டும்... அதனால் நாம் கெட்டா போய்விடுவோம்.

என் மாணவி ஒருத்தி எனக்கு மிக நெருக்கமாய்... அவள்தான் என் காரை ஓட்டிச் சென்றவள்...  அவளால்தான் ரீயூனியன்... நம் சந்திப்பு எல்லாமே நடந்தேறியது... யார் அவள் என்று யோசிக்கிறாயா... உன்னிடம் கூட சாரை பத்திரமாப் பாத்துக்கங்கன்னு சொன்னாளே அவதான்... அப்படியே பேச்சிலும் செயலிலும் உன்னைப் போல்... அதனால்தான் அவளை மனசுக்குள் மகளாய் வைத்தேன்...

சுபாவுக்கு என்னால் உன் திருமண வாழ்வில் பிரச்சினை வந்துவிடப் போகிறதோ என்ற பயம் மனசுக்குள்... அதான் போன் பண்ணிக் கொண்டே இருந்தாள்... கல்யாணம் ஆகாத நான்... கல்யாணம் ஆகியும் நினைவுகளைச் சுமக்கும் நீ... பயம் வரத்தானே செய்யும்... மனித மனம் நிலையில்லாததுதானே....

அவளிடம் இருவரும் அருகருகே இருந்தும் போனில் பொய்யாகப் பேசினோமே... எதனால்... அந்த இரவில் நாம் நமக்காக வாழ வேண்டும் என்பதால்தான்... பாவம் தெரிந்தால் வருந்துவாள்... மறந்தும் சொல்லி விடாதே...

உன் மகள் போட்டோ பார்த்து மகிழ்ந்த மனசு நீ வரும் வரை எங்கே உன் குடும்பத்துடன் வருவாயோ என்ற பயத்தோடுதான் இருந்தது... ஏன் தெரியுமா..?

உன் மகள் என்னை யாரென்று கேட்க... நீ 'மாமாடா' என்று எல்லாத் தோற்ற காதலர்களின் சந்திப்பில் நிகழ்வது போல் சொல்லிவிட்டால்...

நல்லவேளை நீ மட்டும் வந்தாய்...

எனக்கான... மன்னிக்கவும்... நமக்கான 'நல்'ளிரவைத் தந்தாய்...

உன் எச்சில்பட்ட சாப்பாட்டை சாப்பிடும் முன் யாரேனும் பார்க்கிறார்களா என்று பயத்தோடு பார்த்துக் கொண்டேன் நான்... எங்கே விட்ட இடத்தில் தொடர்கிறான் என்று நண்பர்கள் நினைத்து விடுவார்களோ என்ற பயமும் முதிர்ச்சி அடைந்த வயசும்தான் அப்படி பார்க்கச் சொன்னது.

நான் உன்னை வீட்டுக்கு கூப்பிட்டபோது என்னை விஸ்வாமித்திரன் என்றாய்... எனக்குச் சிரிப்புத்தான் வந்தது... எடுக்கும் போட்டோக்களில் எல்லாம் நீதானே தெரிகிறாய்... இல்லேன்னா இவன் பெரிய ரவுடியாய்த்தான் இருந்திருப்பான் தெரியுமா...?

நீயும் நானும் ஒரே கட்டிலில் இருந்தோம் என்று முரளியிடம் சொன்னால் நம்புவான்னு நினைக்கிறியா...? அப்ப எல்லாம் முடிஞ்சிருச்சா என்பதுதான் அவனின் கேள்வியாய் இருக்கும்... அவனின் பார்வை அப்படித்தான்... பார்வைகளில் வித்தியாசம் இருக்கத்தானே செய்யுது ஜானு.

இது அவசர உலகம் ஜானு... காதலின் ஆத்மா இங்கிருப்பவர்களுக்குப் பிடிபடுவதில்லை. இப்ப கள்ளக்காதல் வேறு தவறில்லை என்று சொல்லி வைத்துத் தொலைத்திருக்கிறது கலாச்சார இந்தியா... நம் நேசத்தையும் அதில் சேர்த்தாலும் ஆச்சர்யமில்லை ஜானு...

உனக்கொன்று தெரியுமா... திருமணம் முடிந்து சில மாதங்களுக்குப் பிறகு பெண்ணொருத்தி காதலனுடன் ஓடியிருக்கிறாள்... இன்னொரு பெண்ணே போலீஸே காதலனுடன் சேர்த்து வைத்திருக்கிறது இங்கே... காரணம் கள்ள உறவுக்கு அரசு கொடுத்த மரியாதை... இதில் வாழ்வும் காதலும் அல்லவா தொலைகிறது... சை... இதையெல்லாம் பார்க்கும் போது பப்பி ஷேமாகத் தெரிகிறது ஜானு...

எத்தனை முறை கேட்டும் கிடைக்காத 'யமுனை ஆற்றிலே' பாடலை மின்சாரம் போன நேரத்திலா பாடுவாய்..? கள்ளி...

யமுனை ஆற்றில் நீ இறங்கிய போது எதிர்க்கரையில் இருந்து நான் அடித்துப் பிடித்து ஓடி வந்து கைவிளக்கு வெளிச்சத்தில் உன் முகம் பார்க்க, விழி மூடிய அதில்தான் எத்தனை உணர்ச்சிகள்.... என் கண்ணுக்கு நீ தேவதையாய்...

அந்தத் தருணத்தை... அந்தச் சந்தோஷத்தை  வார்த்தையில் சொல்லிவிட முடியாது... அனுபவிக்கணும்... நான்... நான் மட்டுமே ஆத்மார்த்தமாக அனுபவித்தேன் ஜானு...

அந்த நிமிடம் அப்படியே நீடிக்கக் கூடாதா என்ற பேராசை கூட எனக்குள் எட்டிப் பார்த்தது... ஆசைகள் எப்போதும் ஆசைகளாய் மட்டுமேதானே ஜானு.

'ஆயர்பாடியில் கண்ணன் இல்லையோ...
ஆசை வைப்பதே அன்பு தொல்லையோ...
பாவம் ராதா...'

என்ற வரிகளில் உன் வலியும் வேதனையும் எனக்குள்ளும்...

உன் திருமணத்தில் ஓரமாய் ஓளிந்து நின்றேன் என்றேன் நான்... நீயோ உரிமை கொண்டாடி கூட்டிப்போக மாட்டாயா என்று காத்திருந்தேன் என்றாய்...  அப்பவும் நான் கோழையாய்த்தான் இருந்திருக்கிறேன் என்று இப்போது நினைக்கும் போது வெட்கத்தைவிட வேதனையே என்னைக் கொல்கிறது ஜானு...

உன்னை முதன் முதலில் சேலையில் பார்த்தப்போ அப்படியே தூக்கிட்டுப் போய் தாலி கட்டணும்ன்னு தோணுச்சின்னு சொல்லிக் காட்டியபோது உனக்குள்தான் எவ்வளவு மகிழ்ச்சி... மீண்டும் மீண்டும் சொல்லச் சொன்னாயே... அதை நீ ரசித்தாயா..? இல்லை வாழ்ந்தாயா..?

சேலையில் நீ தேவதை ஜானு... அந்த இரவில் உன்னைச் சேலையில் பார்க்க ஆசை... சிங்கப்பூர் வாழ்க்கை நாகரீக உடைக்குள் உன்னைத் தள்ளியிருக்க... கேட்க நினைத்ததை கேட்காமலே விட்டுவிட்டேன்.... நீயேனும் அவ்வளவு விருப்பமா சேலையில் பார்க்க என ஒருமுறை கட்டிக் காட்டியிருக்கலாம்... எங்கே தூக்கிக்கிட்டு கோயிலுக்கு அந்த நள்ளிரவில் போய்விடுவேனோ என்று நினைத்து விட்டாய் போலும்...  ஹா...ஹா... சும்மா... நீ ரசிப்பாயே.... அதான்...

ஒரு இரவுக்குள் ஓராயிரம் நாள் வாழ்வைக் கொடுத்துச் சென்றிருக்கிறாய்....

காட்டுச் செடிக்கு தண்ணீர் விட்டது போல...  நினைவுகளைச் சேமித்து அசைபோட்டபடி வாழப்போகிறேன் வரும் நாட்களை...

ஏர்போர்ட்டில் நீ முகம் மறைத்து அழுதாய்.. இங்கே இப்போது நான் முகத்தில் அடித்து அழுகிறேன்...

கரையும் கண்ணீரெல்லாம் நீயாக... நாமாக... நம் நினைவுகளாக...

உன் மகளிடம் என்றாவது ஒரு நாள் நாம் காதலைச் சொல்லி விடு... மறக்காமல் நாம் வாழ்ந்த அந்த மழை இரவையும்... அவள் உணரட்டும் நம் காதலின் உன்னதத்தை...

நான் மீண்டும் தாடிக்குள் ஒரு கண்டிப்பான ஆசிரியனாய் மெல்ல மெல்ல மாறிக் கொண்டிருக்கிறேன்...

தாடி மீசை இல்லாத பத்தாப்பு ராம் அதே பத்தாப்பு ஜானுக்கானவன்... அவனை நீ மீண்டும் சந்திக்க நேர்ந்தால் உன் முன் நிறுத்துகிறேன் அப்படியே... என்ன சந்தோஷம்தானே...

ஜானு...  என்னில் உன்னைத் தொலைத்து விடாதே.... ப்ளீஸ்...

உன் வாழ்க்கையை நீ வாழ்...

உனக்காக நான் திருமணம் செய்து கொள்கிறேன் ஜானு...

மழை இரவு நினைவுகள் தாலாட்டட்டும்... கோபமாகவோ... துயரமாகவோ அதை மாற விட்டு விடாதே... அது உன்னை.... உன் வாழ்க்கையைக் கொன்று விடும்... நீ வாழணும்... மகிழ்வாய்... நிறைவாய்...

இந்தக் காதல் தவிர்த்து வாழ வேண்டிய வாழ்க்கை நிறைய மீதம் இருக்கிறது ஜானு...

மீண்டும் சந்திக்க நேர்ந்தால் உன் விருப்பப்படி என் மகளுடன் சந்திக்கிறேன்... அப்போது அவளிடம் சொல்வேன்... உனக்கு அம்மாவா இருக்க வேண்டியவள் இந்த ஜானு என...

கண்டிப்பாக அவளுக்கு உன் பெயர் வைக்க மாட்டேன்... அது எனக்கான பெயர்.... அதை மற்றவர்கள் என் முன்னே அதட்டியோ... மிரட்டியோ... கூப்பிடுவதை என்னால் கேட்க முடியாது ஜானு...

ரொம்ப பேசிட்டேன் போல... எல்லாத்தையும் இறக்கி வச்சிட்டேன் போல...

நீ சமைத்த பாத்திரங்கள் இன்னும் கழுவப்படாமலே... என்ன சமைக்க... என்ன சாப்பிட.... தோணலை ஜானு...

கண்ணீர் வடிக்காதே ஜானு... நான் அழுதேன் என பலமுறை எழுதிவிட்டு உன்னை கண்ணீர் வடிக்காதே என்கிறேன் பார்...

அழுது விடு ஜானு...

உன்னில் இருந்து இந்தச் சுமை இறங்கும் வரை அழுது விடு...

அதுதான் நகரும் உன் வாழ்க்கைக்கு நல்லது ஜானு...

காலம் எதையும் தவறாகச் செய்வதில்லை...

உன் வாழ்வில் சந்தோஷம் குடி கொள்ளட்டும்...

'ராம் என்ன இறக்கி விடப் போறியா'ன்னு கேட்டியே ஜானு... எப்படி இறக்கி விடுவேன் சொல்லு.

இறக்கி விடத் தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கும்...


ராமச்சந்திரன்.

('ஆல்ப்ஸ் தென்றல்' நிஷா அக்கா எழுதச் சொல்லி கேட்டதற்காக எழுதிய பகிர்வு - ஒரு பதிவு எழுத வைத்தமைக்கு நன்றி அக்கா)


-'பரிவை' சே.குமார்.

செவ்வாய், 9 அக்டோபர், 2018

மனசு பேசுகிறது : 'ஜானுவாக மாறிய நான்' -நிஷா

முந்தைய பகிர்வான 'ஜானுவின் கடிதம்' முகநூலில் பகிரப்பட்ட போது பலரின் பாராட்டைப் பெற்றது. என்னைப் பொறுத்தவரை எனது எழுத்து கிராமியப் பாணியில்தான் இருக்கும். எனது கதைகள் எல்லாமே அந்த வாழ்க்கையைத்தான் பேசும். எழுத்தாளர் / நடிகர் வேல. ராமமூர்த்தி ஒரு பேட்டியில் 'எனது சிறுகதைகள் எங்க ஊர் கண்மாயைத் தாண்டி வெளியில் செல்லவில்லை... எழுதிய சொற்பக் கதைகளும் (25 என்று சொன்னதாய் ஞாபகம்) எங்க ஊருக்குள்ளயே சுற்றி வந்தவைதான்' என்று சொல்லியிருந்தார். அப்படித்தான் என் எழுத்தும் எங்கள் ஊருக்குள் மட்டுமே சுற்றவில்லை என்றாலும் பெரும்பாலும் கிராமத்து வாழ்க்கையையே பேசும்.

அப்படிப் பேசிய எனது தொடர்கதைகளான 'கலையாத கனவுகள்', 'வேரும் விழுதுகளும்',' நெருஞ்சியும் குறிஞ்சியும்' பலரால் பாராட்டப்பட்டன. இதை பெருமைக்காக சொல்லவில்லை... என் எழுத்து எங்கிருந்து வந்ததோ அதே பாணியில்தான் பயணிக்கிறது... அதில் பழைய காலம் மாதிரி எழுதாதே என்று சொல்வதை ஏற்கமுடியவில்லை... எழுத்தில் என்ன பழமை... புதுமை... எனக்குப் புரியவில்லை. வார்த்தைகளில் நவீன யுகத்திற்குத் தகுந்தாற் போல் மாற்றம் வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. கதையோ...கட்டுரையோ... கவிதையோ... சினிமா விமர்சனமோ... அது எதுவாகினும் வாசிப்பவரை ஈர்க்க வேண்டும். அதை எனது எழுத்துச் செய்கிறது என்பதில் எனக்குச் சந்தேகமில்லை.

அப்படித்தான் 96 படத்திற்கான விமர்சனம் எழுதிய பின்னர் 'ஜானுவின் கடிதம்' எழுதப்பட்டது. முழுக்க முழுக்க நீண்ட நாட்களுக்குப் பிறகு ரசித்து எழுதப்பட்ட பகிர்வு அது. முதலில் முகநூலில்தான் பகிரப்பட்டது, பின்னரே இங்கு பகிர்ந்தேன். முகநூலில் நிறையக் கருத்துக்களும் விருப்பக்குறிகளும்... முத்தாய்ப்பாய் 'ஆல்ப்ஸ் தென்றல்' நிஷா அக்காவின் கருத்து இருந்தது.

அக்காவைப் பொறுத்தவரை என் எழுத்தை மட்டுமல்ல என்னையும் தம்பியாய் எப்போதும் நேசிப்பவர். எனது தொடர்கதைகளை வாசித்து தனிப்பட்ட முறையில் முகநூல் உள்டப்பியில் வந்து விரிவாகப் பேசி, உற்சாகமும் உத்வேகமும் கொடுத்தவர்... இப்போதும் கொடுப்பவர். அவரின் இந்த முகநூல் கருத்தை பதிவின் கருத்துப் பகுதியில் போடுவதை விட, தனிப்பகிர்வாக போட்டால் நல்லாயிருக்கும் என்பதாலே இந்தப் பகிர்வு.

அவர் புகழ்ந்த அளவுக்கு எல்லாம் பெரிய எழுத்தாளன் இல்லை என்றாலும் அதில் பாதியேனும் எழுதுவேன். பெரிய எழுத்தாளனாகி எல்லாரும் புகழணும் என்ற ஆசையில் எழுத ஆரம்பிக்கவில்லை... என் பேராசான்... எங்க ஐயா எழுதச் சொல்லி வற்புறுத்தியே எழுத வந்தவன் நான். எனது முதல் கவிதை யாருக்குமே கிடைக்காத வாய்ப்பாய் 'தாமரை'யில் வெளிவந்தது... இரண்டு பக்கத்தில் 'கல்லூரி மாணவன் எழுதிய கவிதை' என்ற அடைமொழியுடன்... ஜெயலலிதாவின் கட்-அவுட் கலாச்சாரத்தை எதிர்த்து எழுதப்பட்ட அந்தக் கவிதையின் தலைப்பு 'ஒரு கட்-அவுட் நிழலுக்கு கீழே'.

நான் எழுதியதும் முதலில் வாசிக்கக் கொடுப்பது ஐயாவிடமும் இன்னொரு நட்பிடமும்... ஐயா 'நல்லாயிருக்கு..' என்றவர் எனக்குத் தெரியாமல் தாமரைக்கு அனுப்பி வைக்க, அது வெளியானதும் என்னிடம் புத்தகத்தைக் கொடுத்து கவிதை வந்திருக்கு என்று சொன்ன அந்தநாள் எனக்கு இன்னும் ஞாபகமிருக்கிறது... அன்று ஐந்தாவது செமஸ்டர் ரிசல்ட்... காலையில் சரஸ்வதி திரையரங்கில் ரொம்ப நாளாக பார்க்க விரும்பிய 'ரத்தக் கண்ணீர்' படம் நண்பர்கள் சூழ பார்த்த நாள். அதன் பின் கதைகள், கவிதைகள் என நிறைய பத்திரிக்கைகளில் எழுதியாச்சு... எல்லாம் அந்த 50 ரூபாய் ஆசையில்தான்.. :)

இப்ப அதெல்லாம் விட்டாச்சு... மின்னிதழ்கள் விரும்பிக் கேட்பதால் எழுதிக் கொடுப்பதுதான் அதிகம்.. இது முழுக்க முழுக்க பாசத்துக்காகவே... ஸ்ரீராம் அண்ணன் கூட 'நீயே அனுப்ப மாட்டாயா... ஒவ்வொரு முறையும் நான் கேட்கணுமா...?' எனச் செல்லமாக கடிந்து கொண்டார். அப்படியும் அவர் கேட்கும் போதுதான் அனுப்ப முடிகிறது. இப்ப 'தேன் சிட்டு' மின்னிதழ் சகோதரர் 'தளிர்' சுரேஷும் அண்ணனைப் போலவே 'நீ அனுப்புறியா.. இல்ல வலைப்பூவில் இருந்து எடுத்துக்கவா' என உரிமையோடு கேட்க ஆரம்பித்து விட்டார். அதனால்தான் இந்த மாதம் 'மனிதர்கள்' அவர் மின்னிதழில் வந்தது.

இதேபோல் நெல்லை பரணி இதழ் ஆசிரியர் மே மாதம் மின்னஞ்சல் அனுப்பினார் கதை வேண்டுமென... பிரச்சினைகள் சூழ் வாழ்வில் மறந்துவிட்டேன். சென்ற வாரம் 'படைப்புக் கேட்டேன் அனுப்ப மாட்டேங்கிறீங்க... உடனே எனக்கு ஒரு கதை வேண்டும்...' என ஞாபக மின்னஞ்சல் அனுப்பினார். அந்த அன்பிற்கு அனுப்பிக் கொடுத்தாச்சு. இதுதான் வேண்டும்... என் கதைகள் ஆஹா... ஓஹோ... என்றெல்லாம் நான் ஆடவில்லை... ஆனாலும் அது  படிப்பவருக்குப் பிடிப்பதால்தானே உரிமையோடு கேட்கிறார்கள்.

என் எழுத்து இப்படித்தான்.. தவறாக இருந்தால் சொல்லுங்கள் திருத்திக் கொள்கிறேன்... கிராமத்துப் பாணியில் எழுதாதே... வட்டார வழக்கில் இருந்து வெளியே வா... அழுகாச்சி கதை எழுதாதே... என்றெல்லாம் சொல்லாதீர்கள். எனக்குத் தெரிந்ததில் எழுதுவதே ஆத்ம திருப்தி எனக்கு... அதில் மாற்ற விருப்பமில்லை... கிராமத்து வாழ்க்கை மென் சோகம் நிரம்பியதுதான் என்பதை வாழ்வில் அறிந்தவன்... வாழ்ந்து கொண்டிருப்பவன் நான்.

அக்காவின் கருத்து ஜானுவின் போட்டோவுக்கு கீழே...


ரு கடிதம் என்பது கதை போலில்லை. அதில் கற்பனைகள் இருக்காது. 

ஒரு ஆண்,ஆணாய் தன் மன நிலையை எழுத முடிவது போல், ஒரு ஆண், பெண்ணின் நிலையில் அவள் உணர்வுகளை எழுத்தில் வடிப்பது இயல்பாக வரக்கூடியதல்ல. பெண், ஆணாய் தனை உணர்ந்து எழுத முடிவது போல் ஆண்களால் பெண் மன நிலையை உணர்ந்து எழுத முடிவதில்லை. ஆனால் இக்கடிதமெனும் உணர்வில் கொட்டும் வார்த்தைகள் பெண்ணின் உணர்வை சொல்லும் நொடியில் என் கண்களும் கலங்கியது. 

நானும் ஜானுவானேன். எனக்குள்ளும் கடந்தகால நினைவுகள் உருண்டோடியது. 

ஜானுவிற்கும் மனம் உண்டு, அதில் நினைவுகளும் நிஜங்களும் மறைந்திருக்கும் எனும் ஜானுக்களின் உணர்வை எழுத்தாக்கி இருப்பது அருமை. 

சினிமாவில் காட்டப்பட்ட சம்பவங்களை வைத்து ஜானகி எனும் பெண்ணின் மன உணர்வுகளை, அவள் கடந்த கால நினைவு பெட்டகத்திலிருந்து பதின்ம வயதுக் காதல், நிகழ் கால வாழ்க்கை நிஜங்களிலிருந்தும், அவள் தன்னிலை மறவாமையிலிருந்தும், சமூகத்துக்கான கட்டுப்பாடுகளை அவளால் மீற முடியாத நிலையையும் எத்தனை அழகாக எடுத்து வைத்திருக்கின்றீர்கள் குமார். 

22 வருடங்களுக்கு முன் கடந்து போன நினைவுகள். இன்றைய தன் வாழ்க்கை தரும் கட்டுப்பாடுகள். அத்தனையையும் ஒரே கடிதத்தில்...

அப்ப்பப்பா எதை சொல்ல எதை விட? 

நீ இறக்கி விட்ட தருணத்தில் நான் இறந்து விட்டதாய் நினைத்தேன் எனும் ஒரே வார்த்தை போதும் அத்தனையும் உணர...... 

வார்த்தைகளில் சொல்ல முடியாத காதலை ஒவ்வொரு பெண்ணும் தன் உள்ளத்தினுள் பொக்கிஷமாய் பொத்தி வைத்திருப்பாள். 

உங்கள் வரிகளில் நானும் ஜானுவாய் மாறினேன்... 

ஜானுவைப் போல் வாழ்ந்தேன்....

ஜானுவாக உணர்ந்தேன்... 

எழுத்தென்பது வாசிப்போர் புரியாத மொழியில், விளங்கா நடையில் எழுதுவதில்லை. மனசோடு கரைந்து நம்மை அதற்குள் மூழ்க வைத்து, அழச்செய்து, அங்கே நாமாய் இருந்தால் எனும் உணர்வை உருக வைக்க வேண்டும். 

கிராமத்து எளிய மக்களின் வாழ்க்கை, வாசனை சொல்லும் கதையாகட்டும், கட்டுரையாகட்டும், கடிதமாகட்டும், இயல்பான வாழ்க்கையை எந்த வித பூச்சூடலும் இல்லாமல் அப்படியோ ஒன்றி எழுதுவது உங்கள் சிறப்புப்பா. 

சூப்பர்ப் குமார். 

அடுத்து பட நாயகன் உணர்வை எப்படி எழுதுவான் எனவும் உங்கள் பார்வையில் எழுதி விடுங்கள்.

நன்றி அக்கா... ராமின் கடிதம் விரைவில் உங்களுக்காக...

**************

சொல்ல மறந்துட்டேன்... இங்கு வாசிப்பை நேசிப்போம் என்று சொல்லும் 'தமிழ் வாசிப்பாளர் குழு' என்ற வாட்ஸ் அப் குழுமத்தில் இருக்கிறேன். புதிதாக 'கானல்' என்ற யுடியூப் சேனல் தொடங்கி... ஒவ்வொருவரும் வாசித்த கதை பற்றி பேச வேண்டும் என பட்டியல் போட்டு விட்டார்கள். நானெல்லாம் குழும கூட்டத்தில் கூட பேச மாட்டேன். இது நழுவ முடியாத ஒரு வலை... சரி பேசுவோமே என என் பேராசானின் கதையையே பேசியிருக்கிறேன். பாருங்க இந்தக் குழந்தையின் பேச்சு எப்படியிருக்குன்னு...



என் எழுத்தில் குறைகள் இருப்பின் சொல்லுங்கள்... கண்டிப்பாக திருத்திக் கொள்கிறேன்... அதேபோல் எப்படி எழுத வேண்டும் என்பது என் விருப்பம் என்பதையும் சொல்லி விடுகிறேன். 
-'பரிவை' சே.குமார். 

ஞாயிறு, 7 அக்டோபர், 2018

மனசு பேசுகிறது: ஜானுவின் கடிதம்...



ன்பின் ராம்...

நலம்தானே..?

இதென்ன கேள்வி என்று நீ சிரிக்கக் கூடும்... ஆனாலும் இப்படித்தானே ஆரம்பிக்க வேண்டும் இல்லையா..?

சரி... சரி... நல விசாரிப்பு நம்முள் எதற்கு...

எத்தனை அன்பை... நேசத்தை... பாசத்தை... பரிவைக் கண்டேன் அந்த இரவில் உன்னிடத்தில்... 

அந்த ஒற்றை இரவு போதுமே இனிமேலான வாழ்க்கையை மழைச்சாரலாய் மகிழ்விக்க...  

அந்த இரவு நீண்டு கொண்டே போகக்கூடாதா என்று ஏங்கிக் கொண்டேதான் உன்னருகில் நானிருந்தேன்... காலத்துக்குத் தெரியாதே நம் கண்ணீரூம் காதலும்...

ஆமா... நீ இவ்வ்வ்வளவு பேசுவாயா ராம்..? ஆச்சர்யத்தில் பூத்துப் போனேன் தெரியுமா?

ரீயூனியனுக்கு வா என்று சுபாவும் பிரண்ட்சும் கூப்பிட்டப்போ வரும் எண்ணமில்லை எனக்கு... நீ வரக்கூடும்.. உன்னைப் பார்த்து ஏன் என்னிடம் சொல்லாமல் தஞ்சாவூரை விட்டுப் போனாய்..? உனக்கு என் நினைப்பே இல்லாமல் போனதெப்படி..? என்றெல்லாம் கேட்டு உன்னிடம் உரிமையுடன் சண்டை போட வேண்டும் என்றுதான் கனெக்சன் ப்ளைட் பிடித்து ஓடி வந்தேன்.

உன்னைக் கண்ட அந்த நிமிடம்... அப்பப்பா... என் வாழ்வின் அற்புத தருணம்... உன்னைக் கண் தேட, நீ ஒளிந்திருக்கிறாய் என்றார்கள்.. என் முன்னே என் உள்ளம் உன்னருகே ஓடிவந்ததை நீ அறிவாயா..?

பத்தாம் வகுப்பில் கருவாயனாய்.. என்னைப் பைத்தியமாய்க் காதலித்தாலும் சொல்லத் தயங்கி படபடக்கும் இதயத்துடன் வலம் வந்தவனா இவன் என தாடி மீசையுடன் ஆஜானுபாகுவாய் உன்னைப் பார்த்து யோசித்தேன்.... இருப்பினும் இன்னும் படபடப்பில் பத்தாம் வகுப்பு பையனாய் நீ என்பதை உணர்ந்த போது யோசனை காற்றுப் போன பலூன் ஆனது... நீ கையில் பலூன் வைத்திருந்தாய்தானே அப்போது....

ஆமா என்னைப் பார்த்ததும் அன்று போல் இப்பொழுதும் ஏன் மயங்கினாய்...?

என்னடி செய்தாயென நட்புக்கள் கேட்டார்கள்... என்ன பதில் சொல்ல... இன்னும் அவன் காதல் கோழை என்றா..? உன்னைப் பார்த்தே சிரித்து மழுப்பினேன்.

உன்னைப் பார்த்து கேட்க நினைத்த கேள்வியை எல்லாம் மறக்கடித்து விட்டது நீ ஓடிச் சென்று எடுத்து வந்து கொடுத்த சாப்பாடு... நீ சாப்பிடு எனக் கொடுத்ததும் என் எச்சில் என்பதால் எத்தனை சந்தோஷம் உனக்கு... விட்டால் ஸ்பூனைக் கூட சாப்பிட்டிருப்பாய் போல....

அந்த இரவு.... 

கார்... இரயில்.. பைக் என மாறி மாறிப் பயணம்... 

வயசானால் என்ன... அந்த மணித்துளிகள் எத்தனை இளமையாக இருந்தது தெரியுமா..?

என்னை நினைத்தபடி நீ... உன்னைப் பருகியபடி நான்.... ஆஹா... சொர்க்கம்...

நீ இறக்கிவிட்ட தருணத்தில் நான் இறந்து விட்டதாய் நினைத்தேன்...

'என்னை விட்டு ரொம்பத் தூரம் பொயிட்டியா ராம்..?' என்று அழுகையுனூடே நான் கேட்ட போது 'இறக்கிவிட்ட இடத்தில்தான் நிற்கிறேன்' என்று நீ சொன்னதும் எப்படி இறங்கி வந்தேனென்றெல்லாம் தெரியாது... வந்தேன் உன்னிடம்... அந்த அன்பு... பிரிதலின் வலி எல்லாமாய் சேர்ந்ததில்தான் உன்னை அடித்தேன்... ஒரு பெண் குழந்தைக்கு அம்மா என்பதை மறந்து... அதில் எனக்கு குற்ற உணர்வில்லை ராம்... நீ என் குழந்தை...

உனது கரடிக்குட்டி தாடியை எடுத்து உன்னை பத்தாம் வகுப்பு ராமாக பார்க்க ஆசைப்பட்டேன்... ஆமா முடிவெட்டியவர் எல்லாம் தெரியும் எனச் சிரித்தாரே... எல்லாவற்றையும் எல்லாரிடமுமா சொல்லியிருக்கிறார்...?

தாடி... மீசை... இல்லாத ராம் எத்தனை அழகு தெரியுமா... அதை நான் மட்டுமே பருகினேன் ஆசை தீர அந்த இரவில்...

ஆம்பளை நாட்டுக்கட்டைடா நீ என்றதும் உனக்கென்ன அத்தனை வெட்கம்... நாட்டுக்கட்டை பெண்களுக்கு மட்டுமான வாசகமா என்ன..? நீ நாட்டுக்கட்டைதான்... அதிலும் கடைந்தெடுக்கப்பட்ட கருவேலங்கட்டை.

அந்த இரவு இரயில் பயணம் மறக்கக் கூடியதா சொல்... எத்தனை இன்பத்தை அந்தப் பயணம் அள்ளிக் கொடுத்தது... திகட்டத் திகட்டக் கிடைக்கவில்லை என்றாலும் தித்திப்பாய் கிடைத்ததே..

உன் மாணவிகளில் அவள் ரொம்பச் சூட்டிகை.... அவள் தயங்கி நின்றதைப் பார்த்ததும் எங்கே சார் மேல எனக்கு கிரஷ் இருந்துச்சுன்னு சொல்லி விடுவாளோ என்று நினைத்தேன்.. நல்லவேளை உன்னை ரொம்ப நல்லவன் என்பதோடு நிறுத்திக் கொண்டாள். நீ நல்லவன் என்பதை அவள் சொல்லித்தான் அறிய வேண்டுமா என்ன..?

நான் அவர்களிடம் நம் காதல் குறித்தும் திருமணம் குறித்தும் சொன்ன பொய் தப்பென்று மற்றவர்களைப் போல் நீயும் நினைத்தாயா ராம்..? நான் வாழ நினைத்த வாழ்க்கையை... வாழாத வாழ்க்கையை அந்த நள்ளிரவில் சில நிமிடங்களேனும் வாழ்ந்து பார்த்தேன்... அது தவறா..? 

நீ அதை தவறாய் நினைக்கவில்லை என்பதை உன் சிரிப்புச் சொன்னதில் அறிந்தேன்... எனக்குத் தெரியாதா என் ராமை. ராம்... நீ வெள்ளந்தி... இப்படி இருக்காதே இந்த உலகம் உன்னை வஞ்சித்து விடும்.

ரம்பை... ஊர்வசி பற்றியெல்லாம் பேசும் போது எத்தனை வெட்கம் உனக்கு... இதையெல்லாம் எங்கே வைத்திருந்தாய்... 37 வயது ஆம்பிள்ளைக்குள் இத்தனை வெட்கத்தை அந்த இரவில்தான் பார்த்தேன்.

உன் வீட்டில் என் சமையல்.... சுமாராய்த்தான் சமைப்பேன்... சூப்பர் என்றாய்.. என் வீட்டில் சமைக்க ஆளுண்டு... என் கணவருக்கு ஒரு முறை கூட என் சமையல் இல்லை தெரியுமா...? .

நண்பர்கள் மூலமாக எத்தனை முறை கேட்டிருப்பாய் 'யமுனை ஆற்றிலே' பாடச் சொல்லி... ஏன் பாடவில்லை தெரியுமா...? உன் தவிப்பை... உன் மகிழ்வை... நான் மட்டுமே அனுபவிக்க வேண்டும் என்ற சுயநலமே.. அந்த இரவில் மின்சாரம் போன நேரத்தில் நான் பாடியதே உன் தவிப்பையும் மகிழ்வையும் ஒரு சேர நீ கொண்டு வரும் விளக்கொளியில் அனுபவிக்க வேண்டும் என்பதாலேயே... அனுபவித்தேன் ஆயுசுக்கும் சேர்த்து.

ராம்... உனக்கொன்று தெரியுமா...?

என் தனிமையில் இந்த 'யமுனை ஆற்றிலே' பாடலை எத்தனை முறை பாடியிருக்கிறேன் தெரியுமா ... அப்போதெல்லாம் என் எதிரே நீ இருப்பாய்...?

என் துப்பட்டாவும்... தலையில் வைத்த பூவும் உன் டிரங்குப் பெட்டிக்குள்... உன் நினைவுகள் எல்லாம் என் மனசுக்குள்...

என் மஞ்சள் குர்தாவும்... ஜீன்ஸ் பேண்டும் இனி உன் டிரங்குப் பெட்டிக்குள் பத்திரமாகும் என்பது எனக்குத் தெரியும்... உனது சட்டையின் வாசம் என் மனமெங்கும் நிரம்பியிருப்பது உனக்குத் தெரியுமா..?

நீ எவ்வளவு பேசினாய்..? என்னைப் பின்தொடர்ந்த பையனை அடித்து போலீஸ் கேஸ் ஆனது.... என்னைத் தேடி கல்லூரி வந்தது... என நிறையப் பேசினாய் ராம்...  

அந்த மழை இரவு எத்தனை சுகமாய் இருந்தது தெரியுமா..? 

உனக்கு பெண் பார்க்க வேண்டும் என நான் சொன்ன போது ஏன் நீ அப்படி மறுத்தாய்... உனக்கும் ஒரு வாழ்க்கை வேண்டும் ராம்... அதை நான் பார்த்து ரசிக்க வேண்டும்.

என் மகளின் போட்டோ பார்த்ததும் எத்தனை மகிழ்வு உனக்கு... அப்படி ஒரு மகிழ்வு உன் மகளைப் பார்க்கும்போது எனக்கும் வேண்டும் ராம்...

என் திருமணத்தில் ஒரு ஓரமாய் ஓளிந்து நின்றாயா நீ.... வலித்தது ராம்.... உண்மையில் வலித்தது. இதற்காக எத்தனை முறை அழப்போகிறேனோ தெரியவில்லை.

என்னை முதன் முதலில் சேலையில் பார்த்தபோது தூக்கிக் கொண்டு போய் கோவிலில் வைத்துத் தாலி கட்டணும் போல் இருந்ததென்றாயே... திருமணத்தன்றே சினிமா ஹீரோவாய் தூக்கிச் சென்றிருக்கலாமே... ஏன் ராம் கோழையாய் இருந்தாய்...? நீ வந்து என் ஜானு எனக்குத்தான் என கேட்பாய் எனக் காத்திருந்தேன் என்று உன்னிடம் சொன்னேன்தானே அந்நள்ளிரவில்...

அந்த வசந்தி உன் பெயரைச் சொல்லியிருந்தால் வாழ்க்கை நமக்கு வசப்பட்டிருக்கும்... ஆனால் இந்த நள்ளிரவு வசமாகியிருக்குமா..?

கேட்க நினைத்தேன் ராம்... எங்கே உன் பெற்றோர் என... அவர்களும் என்னைப் போல் உன்னை விட்டுப் போய்விட்டார்களா..? 

ராம்... உன் நெஞ்சில் சாய்ந்து அழத்தான் ஆசை எனக்கு... ஒரு குழந்தையின் தாய் என்பதைவிட இந்த சமூகத்தின் பார்வை நம் மீது சேற்றை வாரி வீசுமே என்ற பயமே தடுத்தது... மாதர் சங்கங்கள் உன்னை மாறி மாறி வசைபாடுமே... திருமணம் ஆனவளை நீ எப்படித் தொடலாமென... 

ஆமா... காரின் கியரில் என் கை வைத்தழுத போது உன் கையும் கியர் பிடித்ததே... அத்தனை அழுத்தம் ஏன் உனக்குள்... கை வலிக்கிறது தெரியுமா...?

உன் முகம் மூடி அழுதேனே அந்த ஒரு நிமிடம் போதுமெனக்கு வாழ்நாளெல்லாம் வாழ.... 

அந்த இரவு போதும் ராம் இனி வரும் இரவுகளில் இனிமையைச் சுமக்க...

திருச்சி வரைக்கும் வந்த நீ சிங்கப்பூர் வரைக்கும் வந்திருக்கலாமே என்று தோன்றியது ராம்... விமானத்தில் நீயில்லா வெறுமையை உணர்ந்தேன்.

இனி 'யமுனை ஆற்றிலே...' பாடலை எங்கும் எப்போதும்  பாடவே மாட்டேன் ராம்... சேர்க்க வேண்டிய இடத்தில் அதைச் சேர்த்துவிட்டேன்... பத்திரமாக வைத்துக் கொள்... அந்த பரபரப்பான முகத்தை பத்திரமாய் வைத்துக் கொள்வேன் என்னுள் எப்போதும்...

அடுத்த சந்திப்பு எப்போது... எப்படி நிகழும்..? 

தெரியாது... நிகழாது போனாலும் போகலாம். 

அதுவரை மீட்ட என்னிடம் ஏராளமான நினைவுகளைக் கொடுத்திருக்கிறாய் ராம்.

மறக்காமல் நீ மீண்டும் தாடி வளர்த்துக் கொள் ராம்... 

பத்தாம்வகுப்பு ராமை நான் மட்டும்தான் பார்க்க வேண்டும்... அது எனக்கே எனக்கான ராம்... இது சுயநலம்தான்... என்ன செய்ய... என் ஆசையில் இதுவும் கூட...

என்னைப் போல் காதலித்த பெண்கள் எல்லாம் திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக இருப்பதாக மற்றவர் போல் நீயும் நினைக்கமாட்டாய் என்று தெரியும்... என் வலி எத்தகையது என்பதை உணர்ந்தாய்தானே...

ராம்களின் உணர்ச்சி சொல்ல மாளாதாம்... அப்ப ஜானுக்களின் வலி...?

சரி விடு... நீ அப்படிச் சொல்லவில்லைதானே...

மீண்டும் பார்ப்பேன் என்ற நம்பிக்கையில்...

உன்....

ஜானு (மு.ஜானகி)
-'பரிவை' சே.குமார்.

சனி, 6 அக்டோபர், 2018

சினிமா விமர்சனம் : 96

96 ரீயூனியன்...

ராம் - ஜானுவின் காதலுடன் பயணிக்கும் ஓர் இரவு....



'யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே
கண்ணனோடுதான் ஆட...
பார்வை பூத்திட பாதை பார்த்திட...
பாவை ராதையோ  வாட...'

இந்தப் பாடலை  பாடச் சொல்லும் போதெல்லம் வேறொரு பாடலைப் பாடி ஏங்க வைப்பவள், எப்போது பாடப் போகிறாள்... அவளின் குரலில் அவன் இதை எப்போது கேட்பான் என ஏங்க வைத்து மின்சாரம் போன அந்த மணித்துளியில் விளக்குத் தேடி அவன் போக, மனக்குமுறலாய் இந்த யமுனை ஆறு வழிகிறது அவள் குரலில்... அடித்துப் பிடித்து ஓடிவரும் அவனுக்கு முன்னே நாம் ஜானுவின் முன்னால் ஆஜராகி விடுகிறோம் காதலோடு.

ஒற்றைப் பார்வையும் உதிர்த்த சில சிரிப்புக்களும்... என்னைக்கும் மறக்கக்கூடாதென அடிக்கப்பட்ட இறுதி பள்ளி நாள் பேனா மையுமாய் காதல் ஊறிக்கிடக்க, அவள் நினைவுகளால் திருமணம் செய்யாமல் முதிர் கண்ணனாய் நிற்கிறானா... இல்லை குடும்ப உறவுகள் அற்ற வாழ்க்கையாலா... எது எப்படியோ அவனுக்குள் ஜானு வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறாள். அவளுக்குள்ளும் ராம்...

ஒற்றை இரவு... எத்தனை நினைவுகளை வருடிச் செல்கிறது... பெய்யும் மழையும் பேசும் பயணங்களுமாய்...

அழகன் படத்தில் பானுப்பிரியாவும் மம்முட்டியும் 'சங்கீத ஸ்வரங்கள்... ஏழே கணக்கா இன்னும் இருக்கா என்னவோ மயக்கம்... என் வீட்டில் இரவு அங்கே இரவா இல்லே பகலா எனக்கும் மயக்கம்...' அப்படின்னு இரவெல்லாம் பாடிய பாடல் எத்தனை பேரின் தூக்கதைக் கெடுத்ததோ அதே போல்தான் ஜானுவின் தவிப்பும்... ராமின் பூட்டி வைக்கப்பட்ட நினைவுகளும்....

நீண்ட நாட்களுக்குப் பிறகு சொந்த ஊருக்குப் போகும் போது எதைப் பார்த்தாலும் நமக்குள் ஒரு பிரியம் பூப்பூக்கும்... அப்படியான பிரியத்தில் அவன் படித்த பள்ளியும் காதல் நினைவுகளும் பள்ளி வாட்ச்மேன் ஜனகாராஜை காரை வைத்து மோதுவது போல் செய்யும் இடத்தில் பூக்கிறது.

பள்ளிக்குள் ஓடும் அவன் பின்னே இசையும் ஓடுகிறது காதல் குழந்தையாய்... தான் படித்த வகுப்பறையில் அவள் அமர்ந்த இடத்தில் முதலில் அமர்கிறான். பின் தன் இருக்கை போய் அமர்கிறான். அதன் தொடர்ச்சியாய் நண்பர்களின் வாட்ஸ் அப் குழுமத்தில் இணைந்து 22 வருடங்களுக்குப் பிறகு நண்பர்களின் கூடலுக்கு ஏற்பாடு செய்கிறார்கள்.

இது போன்றொரு கூடலை எங்கள் கல்லூரியில் சென்ற ஆண்டு எங்களுக்கு முன்னே படித்தவர்கள் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு நிகழ்ந்த வீடியோ மூலம் பார்க்க நேர்ந்தது. நம் நட்புக்களையும் சந்திக்கலாமே என்ற ஆவல்... பாலையில் இருந்து ஏற்பாடு செய்து அந்த நாளில் ஓடிச் செல்லும்படியான கம்பெனியில் நமக்கு வேலை இல்லையே... பெரும்பாலும் என் பள்ளி நட்புக்கள் தொடர்பில் இல்லை... கல்லூரி நட்பில் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் எல்லாமே வாழ்வின் நிமித்தம் வெளிநாடுகளில்... பின் எப்படி...? அதனால் அது நினைவாய் மக்கிப் போனது.

அந்த தினம் நண்பர்கள் எல்லாம் குடும்பத்தோடும் தனியாகவும் வந்து சேர, ராமும் வருகிறான். ஜானு வரமாட்டாள் என்பதாய் சொல்லப்பட்டிருக்க, அவள் சிங்கப்பூரில் இருந்து வருகிறாள் என்பது அறிய வரும் போது பள்ளியில் அவள் காதலுக்காக ஏங்கித் தவித்த நினைவில் தனியே நிற்கிறான்... அவளைப் பார்க்க முடியாதென ஒளிந்திருக்கிறான் என்பதே உண்மை.

படம் ஆரம்பித்து முதல் அம்பது நிமிடங்கள் பள்ளிக்கால வாழ்க்கையாக விரிகிறது... அந்தக் காதலை அவ்வளவு அழகாகச் சொல்லியிருக்கிறார்கள்... அதில் நடித்த அனைவரும் மிகச் சிறப்பு... யாருமே சோடை போகவில்லை.... ராமாக எம்.எஸ்.பாஸ்கரின் மகன் ஆதித்யா, ஜானகி தேவியாக கௌரி கிருஷ்ணன், தோழியாக வரும் தேவதர்ஷினியின் மகள் (தேவதர்ஷினியின் சிறுவயது கதாபாத்திரம்), நண்பர்களாக வருபவர்கள் (ஆடுகள் முருகதாஸ் மற்றும் பகவதி பெருமாளுக்கான கதாபாத்திரம்) என எல்லாருமே அந்தக் காதலுக்குள்... காலகட்டத்துக்குள் நம்மை இழுத்துச் செல்கிறார்கள்.

எங்கே இவர்களின் காதல் மீண்டும் பற்றிக் கொள்ளுமோ என்று நினைக்கும் நண்பர்கள் சுபாவை (தேவதர்ஷினி) இவர்களுடனே அனுப்பி அவளை ஹோட்டலில் விட்டதும் நீ வீட்டில் போய் இறங்கு என்று சொல்லி அனுப்ப, ஆனால் ராமோ அவளை முதலில் இறக்கிவிட, அவள் இவனைக் கிள்ளி அவளை விட்டுட்டு வீடு போய்ச் சேரு என்று சொல்லிச் சென்றாலும் என்னாச்சோ என்ற பயத்தில் இருவருக்கும் மாறி மாறி போன் செய்கிறாள். இருவருமே பொய் சொல்கிறார்கள். பற்றிக் கொள்ளாத காதல் தென்றலாய் அந்த இரவு முழுவதும் பயணிக்கிறது... நம்மைப் படுத்தி எடுக்கிறது.



விஜய் சேதுபதி நடிப்பு அரக்கன்... சின்னச் சின்ன முகபாவங்களைக் கூட மிக அருமையாகச் செய்திருக்கிறார். ஜானு முன்னால் அமர்ந்து கவிதை வாசிக்கும் போது.... அவள் தூங்கியதும் அவளுக்கு திட்டி சுற்றி நெட்டி முறிப்பது... தாலியைத் தொட்டுக் கும்பிடுவது... பெட்டின் மேலே ஏறி வா என்றதும் யோசித்து மழுப்புவது... யமுனை ஆற்றிலே பாடலுக்கு விழுந்தடித்து ஓடிவந்து அவள் முகம் பார்ப்பது...  ஆம்பள நாட்டுக் கட்டடா நீ என்று சொல்லும் இடத்தில் முகத்தில் வரும் நாணம்... என மனிதன் கலக்கல் சேதுபதி... இந்தக் கதாபாத்திரத்துக்கு இவர்தான் பொருத்தமானவர்.

த்ரிஷா... இதுவரை கமலா காமேஷ் என்று அறியப்பட்டவர் முகநூலெங்கும் ஜானுவாய் நிரம்பி வழிகிறார். ஜெஸ்ஸிக்குப் பிறகு ஒரு ஆத்மார்த்தமான கதாபாத்திரம்... ஜானுவாய் வாழ்ந்திருக்கிறார் என்பதைவிட அந்த வேதனை, மகிழ்ச்சி, உருகுதல், காதல் என மனுஷி அடித்து ஆடியிருக்க்கிறார். 52 நிமிடத்தில் கதைக்குள் வரும் த்ரிஷா, இடைவேளைக்குப் பின்னான பொழுதுகளை ஓர் இரவாய் விஜய் சேதுபதியுடன் பகிர்ந்து கொள்ள திரையில் விரியும் கதையின் பின்னே நம்மையும் நகர்த்துகிறார்... ஜானு... ஜானு... என நம் ஜானுக்களை நினைத்தபடி.

அவருக்கு குரலும் அவ்வளவு அழகாய் பொருந்திப் போகிறது... ஜானுவின் குரலாய் வாழ்ந்தவர் சின்மயியாம்... அருமை.

இறுதிக் காட்சியில் அவரின் தவிப்பும்... வேதனையும்... அப்பப்பா... செம.. அதுவும் தான் அழுவதை அவன் பார்க்கக் கூடாது என்பதற்காய் அவன் முகம் மறைத்து அழுது... விலகி... நம்மையும் அழ வைத்து விடுகிறார்.

இது 96க்கான படம் மட்டுமல்ல... அதற்கு முந்தைய இன்றைய கூடாமல் போன காதலுக்கான படம்தான்... மெல்லத்தான் நகர்கிறது இடைவேளைக்குப் பின்... நகரட்டுமே அதனால் என்ன... அவர்கள் எவ்வளவு பேசுகிறார்கள்... நாம் கடந்த காலத்துக்குள் பயணிக்கிறோம்... இன்னும் கொஞ்ச நேரம் ஜானு இருக்க மாட்டாளா... என்ற ஏக்கத்தோடுதானோ விமானத்தில் பறக்கும் ஜானுவைப் பார்க்கிறோம்... பின் என்ன மெதுவாக நகர்கிறது என்ற பொய்யைத் தூக்கிச் சுமக்கிறோம்.

விஜய் சேதுபதி என்னய்யா நடிக்கிறான்... டெம்ப்ளட் வசனம் பேசிக்கிட்டு... இதெல்லாம் ஒரு காதல் கதையா... அவளுக்காக 37 வயசு வரைக்கும் காத்திருந்தானாக்கும்... கடுப்பாகுது என்று சொல்லும்  உலக சினிமா ரசிகர்களுக்கான படமில்லை இது... உள்ளூரில் ஒருத்தியைப் பார்த்துச் சிரித்து அவ என்னைப் பார்த்து சிரித்தாடா என்று குதூகலித்து கொண்டாடி... பின் காணாமல் போன பாமரக் காதலர்களுக்கான படம் இது.

சொல்ல மறந்துட்டேனே... விஜய் சேதுபதியின் மாணவியாய் வந்து... எங்க சாரை நல்லாப் பாத்துங்கங்க மேடம் என காபி ஷாப்பில் சொல்லிச் சொல்லும் அந்தச் இளைஞியும் மிகச் சிறப்பாய் நடித்திருக்கிறார்.

நள்ளிரவில் ஒரு நடுத்தர வயதுப் பெண்ணுடன் நம்ம சார் காபி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறாரே என்ற எண்ணம் வரக்கூடாது என்பதற்காக சேராத காதலை சேர்ந்ததாய் ஜானு விவரிக்கும் கல்லூரிக் காட்சிகள் எத்தனை உணர்ச்சிகரமானவை.... ஜானு ஏன் பொய் சொன்னாள் என்று கேட்பவர்களுக்கு வாழாத அந்த வாழ்க்கையை... அவள் அந்த நிமிடத்தில் வாழ்ந்து முடித்து விடுகிறாள். இதில் என்ன பொய் இருக்கிறது.

படத்துக்கு  இசையும் (கோவிந்த்) ஒளிப்பதிவும் (சண்முக சுந்தரம்) மிகப்பெரிய பலம்.

நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம் பட ஒளிப்பதிவாளரான பிரேம் குமார் இயக்குநராய் மாறி இருக்கும் படம் இது. இப்படியான ஒரு வாழ்க்கையை அவர் வாழ்ந்திருப்பாரோ என்று தோன்ற வைக்கிறது. ஒரு சில படத்தில் தனது சரக்கை முழுவதுமாக இறக்கி வைத்து விட்டு அடுத்த படத்தில் கோட்டை விடும் இயக்குநர்கள் நிறைந்த தமிழ் சினிமாவில் இதுபோல் இன்னும் சிறப்பான படங்களைக் கொடுக்க வாழ்த்துக்கள்.

96 - சேராத காதலை காதலாய்ச் சொல்லும் படம்.
-'பரிவை' சே.குமார்.

வெள்ளி, 5 அக்டோபர், 2018

மனசு பேசுகிறது : பரியேறும் பெருமாள் - ஒரு பார்வை

Related image

கொஞ்சம் பெரிய பதிவுதான்... நிறைய எழுத ஆசை நீளமே (நீலம் அல்ல) போதுமென்றது...  பொறுமையாக வாசித்து உங்களின் மனக் கருத்தைச் சொல்லுங்கள்.

ரியேறும் பெருமாள்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், இயக்குநர் பா.ரஞ்சித்தை தயாரிப்பாளராக மாற்றியிருக்கும் படம்.  

சா'தீ'யம் பேசும் படம் மட்டுமின்றி அதன் வலிகளைச் சொல்லும் படம்.

'இப்பல்லாம் எங்க சார் சாதி பாக்குறாங்க...?' என்று பெருமைக்காக பேசினாலும் இன்னும் சாதி வெறி என்பது ஊறித்தான் கிடக்கிறது மனித உள்ளத்துக்குள்...

விமர்சனங்கள் எல்லாமே ஆஹா... ஒஹோ என்றுதான் புகழ்கின்றன... அந்தப் புகழ்ச்சிக்கு ஏற்ற படமே இது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை... சாதியை தொட்டுக் கொண்டு கோபுரமாக ஆக்கியதைத் தவிர்த்து... 

ஆமா.. அதென்ன ஆதிக்கச் சாதிப் பெண்களை மட்டும் எப்போதுமே தேவதையாகக் காட்டுகிறார்கள் என்ற விவாதம் வாட்ஸப் குழுமத்தில் ஓடியது... அதானே... ஏன்..?. தேவதைகள் எல்லாச் சாதியிலும் இருக்கத்தானே செய்கிறார்கள்... காட்டலாமே... எது தடுக்கிறது..? 

அதென்ன படத்தில் ஆதிக்க சாதிப் பெண்கள் மட்டுமே வழியக்கப் போய் காதலிப்பதாய் காட்டுகிறார்கள் என்ற விவாதம் எங்கும் ஓடவில்லை... ஓடாது... காரணம் நாம் 'ஆதிக்க' சாதிக்கு எதிரானவர்கள்... தப்பென்றால் எல்லாமே தப்புத்தான் என்னும் எண்ணம் நமக்குள் வருவதில்லை... இவன் நல்லவன், அவன் கெட்டவன் என்ற பகுப்பாய்வில் நாம் கில்லாடிகள்தான் எப்போதும்... பகுப்பாய்வில் கூட நாம் சாதி பார்ப்போம்தானே... 

இந்தச் சாதிப் பெண்ணைக் காதலிக்க வேண்டும்... திருமணம் செய்ய வேண்டும்... என்பதெல்லாம் வாய்வழிச் செய்தியாக தென் மாவட்டங்களில் குறிப்பிட்ட சாதி இளைஞர்களுக்குச் சொல்லப்பட்டு அப்படி நடக்கும் பட்சத்தில் பணமும் கொடுக்கப்படுகிறது என்பதையும்... அது அதே சாதி இளைஞிகளுக்குச் சொல்லப்படுவதில்லையே ஏன் என்பதையும்... நாம் யாருமே விவாதப் பொருளாக எடுத்துக் கொள்ளமாட்டோம். காரணம் தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியா முழுவதுமே சாதி வியாபாரப் பொருள்.

இந்தக் காதல் என்பது இரண்டு சாதிக்குள் மட்டும் நிகழ்வதில்லை... எல்லாச் சாதிகளுக்குள்ளும்தான் நிகழ்கிறது. நாம் நீலக் குறீட்டை படத்தில் நடித்த நாய்க்கும் வைக்கும் இடத்தில் இன்ன சாதியெனச் சொல்லி மார்தட்டிக் கொள்கிறோம்... குலம் காக்க வந்த குலவிளக்கு நான் என் சாதி மக்களில் கெட்டவர்களே இல்லை என்பதாய்... அப்ப எதிர் தரப்பு...அதுதான் ஆதிக்க சாதி.... ஆமா... ஆதிக்க சாதி என்றால் 'நீலம்' தவிர்த்து அனைவருமா..?

இங்கு எந்த சாதிக் காதல் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது..? ஒரே சாதிக்குள் காதலித்தாலும் பிரிவினைகளும் அடிதடிகளும் உண்டுதான் என்பதை நாம் மறந்துவிட்டு ஏதோ இரு சாதிகளுக்குள் மட்டுமே இது பரவிக் கிடப்பது போலவும்... அவர்களுக்குள் மட்டுமே ஆணவக் கொலைகள் நிகழ்த்தப்படுவது போலவும் பாவனை செய்வது ஏனோ..?

ஒவ்வொரு சாதிக்கும் மேலும் கீழும் சாதிகள் உண்டு... மேலே இருப்பவனுக்கு கீழே இருப்பவன் அடிமை சாதி... கீழே இருப்பவனுக்கு மேலே இருப்பவன் ஆதிக்க சாதி... இதில் எதற்காக படம் முழுவதும் சாதீயக் குறியீடுகள்... அதுவும் இரு பக்கத்து வலியைச் சொல்லும் படத்தில் ஒரு பக்கம் மட்டுமே குறியீடுகளாய் நிரம்பி வழிகிறது... மறுபக்கம் அதெல்லாம் தேவையில்லை... அவங்க பூராவும் ஆதிக்கம்தான் என்பதாய்... 

ரஞ்சித்தின் படங்கள் எப்போதுமே 'சாதீ'யத்தை சவுக்கு கொண்டு அடிப்பது போல் ஆளாளுக்குப் பேசுவோம்... அது எப்போதும் சவுக்கு எடுப்பதில்லை... சாதியை மட்டுமே உரக்கப் பேசும். இப்படி சாதியை வைத்துப் படமெடுத்துப் பெயர் வாங்கலாம் என்ற நினைப்பு மட்டுமே அவருக்குள் இருப்பதால்தான் அந்த வட்டத்துக்குள் இருந்து வெளிவர மறுக்கிறார்.. அதையே அவரின் படங்களும் பறை சாற்றுகின்றன.

மாரி செல்வராஜ்க்கு ரஞ்சித் கிடைத்ததால்தான் சுதந்திரமாக படமெடுக்க முடிந்திருக்கிறது என்று ஆளாளுக்குப் புகழ்கிறார்கள்...  ரஞ்சித் இல்லாது வேறொரு தயாரிப்பாளர் கிடைத்திருந்தால் கண்டிப்பாக 'நீலம்' பாய்ச்சாது இன்னும் சிறப்பாக எடுத்திருப்பார் என்றே தோன்றுகிறது.

சரி... படம் எப்படி...?

அருமையான படம்... 

இப்படித்தான் காதல்கள் கொல்லப்படுகின்றன என்பதைத் தைரியமாகச் சொன்ன படம். அதுவும் ஆணவக்கொலை செய்வதற்கென்றே ஒரு கிழவன் ஊருக்குள்... அவர் செய்யும் கொலைகள் நம்மைப் பதற வைக்கின்றன. ஆற்றுக்குள் சிறுவன் கொலை கதைக்குத் தேவையில்லாதது என்பதைத் தவிர.

ஒரு நட்பு... அது காதலாகுமா... ஆகாதா... என்பதான கதையில் அதை காதலாக்கி... அவனை அடித்து... உதைத்து... சிறுநீர் கழித்து.... என்ன ஒரு கொடூரம்... எத்தனை வக்கிரமானது இந்தச் சாதி வெறி..

அதன் பின் அவன் அவளிடம் நடந்ததைச் சொல்லி... அவள் கட்டியழுது... ஒரு காதல் பாடல்... பின்னர் 'சாதி' வெறியர்களால் பிரச்சினை... இப்படியாகத்தானே எப்போதும் நகரும் தமிழ் சினிமா, ஆனால் இதில் தான் பட்ட அவமானத்தை கடைசி வரை சொல்லாமலே மனசுக்குள் போட்டுப் பூட்டி மறுகும் அவனும்... அதனால் அவளும் படும்பாட்டை நம் வாழ்க்கைக் கதையாக முன்னிறுத்தியிருக்கிறார் மாரி செல்வராஜ். வாழ்த்துக்கள் மாரி.

'இந்தப் பையனா... நல்ல பையனாச்சே... நான் வேணுமின்னா பேசிப் பாக்கட்டுமா...?' என்று சொல்லும்போது அட ஆணவக்கொலை செய்யும் கிழவனுக்குள் சிறிய மனசு கூட இருக்கே என்று தோன்றினாலும் அதற்கு முன்னான ஒரு காட்சியில் பேருந்தில் அதே இளைஞனை கூப்பிட்டுப் பக்கத்தில் அமரச் செய்து ஊர் பேரைக் கேட்டதும் ஏதோ தொடக்கூடாததைத் தொட்டது போல் எழுந்து... நகர்ந்து செல்லும் அந்தக் கிழவன் மீது ஏற்பட்ட கோபம் இறுதிவரை நீடிக்கவே செய்கிறது.

தன் பெண் ஒருவனை ரொம்பப் பிடிக்கும் அவனுக்கு மட்டுமே திருமணப் பத்திரிக்கை கொடுப்பேன் என்று சொல்லும் போதே அவனைக் காதலிக்கிறாள் என்று நினைக்கும் பெற்றோரை என்ன சொல்வது..? ஏன்... எதற்கு... எப்படி... என்றெல்லாம் கேள்விகள் கேட்காமல் முடிவுகளை எடுப்பது எல்லாச் சாதியிலும் இருக்கத்தான் செய்கிறது... அதில் சாதிப் பாகுபாடெல்லாம் இல்லைதானே.

இது போன்ற ஆட்கள் ஆதிக்க சாதியில் மட்டுமே இருக்கிறார்கள் என்று காட்டுவது தீவிரவாதி என்றால் முஸ்லீம்தான் என்ற தமிழ்ச் சினிமாவின் அழிக்க முடியாத கறைபோல்தான். 

ஒரு கிராமியக் கலைஞனை, அம்மணமாக்கி ஓட விடும் போது கண்ணீர் மட்டுமல்ல... வலியும் மனமெங்கும்... இன்னும் இப்படியான சாதீய வெறிகள் இருக்கத்தானே செய்கின்றன... குறிப்பாக இளைஞர்களுக்குள் சா'தீ' வளரத் தொடங்கியிருக்கிறது சமீப காலங்களில்...

காதலாகுமா... ஆகாதா.... என்பதை காலம் சொல்லுமென 'சரி வா... கப்பல் விடலாம்' என்று முடித்தாலும் அவனும் அவளின் தந்தையும் பேசும் காட்சிகளின் வசனம் செம... அருமையான இறுதிக்காட்சி... காலம்தான் பதில் சொல்லணும் என்றபோது காலம் எப்போது பதில் சொல்லும் என்னும் கேள்வி நமக்குள். 

நான் செருப்புத் தைப்பவனின் மகன்தான்... அன்னைக்கு ஒதுக்குனவன் இன்னைக்கு எங்கிட்ட வந்து நிக்கிறான் என்று முதல்வர் சொல்வது எதார்த்த உண்மை... என் நண்பனின் தந்தையை ஒதுக்கியவர்கள் அவன் அண்ணனின் முன் 'சார்' என போய் நின்றார்கள்... நிற்கிறார்கள்.. காரணம் படிப்பு... படிப்புத்தான் மாற்றத்திற்கான ஒரே வழி.

'நான் சாதி பார்த்தாடா பழகுறேன்...' என்ற ஆனந்தின் கேள்வியை நாம் நம் நட்பில் பலமுறை கேட்டிருப்போம்... என் கல்லூரி நாட்களில் எனக்கு பெரும்பாலும் சாப்பாடு கொடுத்தது என் நண்பனின் தாய்... அவர் எனக்கும் அன்னைதான்... அந்த வீட்டில் நீலவண்ணம் குடிகொண்டிருக்கவில்லை. இப்பவும் நாங்கள் எந்த வண்ணத்தையும் சுமக்கவில்லை. மனிதர்களாய்தான் தொடர்கிறோம் நட்பை.

எங்கள் பேராசான் ஆதிக்கசாதி மனிதர்தான்... கல்லூரிக் காலத்தில் விடுமுறை தினங்கள் எல்லாம் அவர் வீட்டில்தான்... நாங்கள் பத்துப் பேருக்கும் மேல்... எங்களில் ஆண்ட... ஆளப்போற... ஆதிக்க... நீல சாதிகள் எல்லாம் உண்டு... பிரிவினை இல்லை. அசைவம் சாப்பிடாத ஐயா வீட்டில் அம்மா எங்களுக்காக அசைவம் சமைப்பார்... நாங்கள் அனைவரும் ஒன்றாய் அமர்ந்து சாப்பிடுவோம்.. என்னருகே பிராமணப் பெண்ணான என் தோழி அமர்ந்து சாப்பிடுவார்... நாங்கள் நாங்களாக இருந்தோம்... ஐயா வீடு ஒரு நாளும் சாதீய ஏற்றத்தாழ்வைப் போதிக்கவில்லை. அது சமத்துவபுரமாகத்தான் இன்றும்.

சித்தப்பனின் மகள் வேறொருவனுடன் பழகும்போது, அதுவும் ஊர்ப் பேரைச் சொன்னாலே இன்ன சாதிக்காரன் என்று தெரியும் நிலையில் அவன் திருமணத்துக்கு வரும்வரை வீட்டில் சொல்லவோ, அவனுடன் மோதவோ செய்யாத வகுப்புத் தோழன் திடீர் வில்லனாதல் சினிமாவுக்கானது... குறிப்பாக தமிழ் சினிமாவுக்கு.

2005-களில் வேட்டையாடித்தான் பொழப்பு நடத்தினார்கள் என்பது சினிமாவுக்கானது... வேட்டையாடுதல் என்பது இப்போதும் இருக்கும் ஒரு பொழுதுபோக்குத்தான்.

'வா கருப்பி...' என்றதும் அது அவனுடன்தான் போகிறது... பின் எப்படி சாதி வெறியர்களின் கையில் மாட்டுகிறது..? இருப்பினும் சாதீயக் குரூரம் நாயின் சாவில்.... டைரக்டரின் டச்... செம... அவன் கைலி அவிழ்ந்து விழ, கதறி ஓடி வந்து புழுதியில் விழுந்து அழுவது... மனசைப் பிழிந்தது. இன்றைய இளவட்டங்கள் சாதியைத் தூக்கி சட்டைப் பையில் வைத்துக் கொண்டு அலைகிறார்கள்... மாற்றம் அவர்களில் இருந்து ஆரம்பிக்க வேண்டும்.

எங்க பக்கம் சல்லிக்கட்டு மாடு செத்தால் நடக்கும் நிகழ்வுகள் நாயின் இறப்பில்... மாரடித்தல்.... ஒப்பாரி என வித்தியாசமாய் சிலவும் அதனோடு.... அப்படியிருக்கிறதா..?

'டாக்டர்' ஆவேன் என்று சொல்பவன் முதல்வர் இது சட்டக் கல்லூரி... டாக்டராக முடியாது வக்கீலாத்தான் ஆகலாம் என்ற பின்னே 'அம்பேத்காராவேன்' என்பது சாதீய மனிதர்களுக்கானது... சாதிப் பற்றாளனின் கைதட்டலுக்கானது. அவன் சொல்லும்போதே டாக்டர் அம்பேத்கார் போல் ஆவேன் என்று சொல்லியிருக்கலாம். இங்கே பாரதி, அம்பேத்கார், அப்துல்கலாமை எல்லாம் சாதி மத வட்டத்துக்குள் வைத்துப் பார்க்கவில்லை. அவர்களைச் சார்ந்தோரே வட்டமிடுகிறார்கள்.

குடத்தின் மூடி திறந்து கண்மாயில் தண்ணீர் குடிப்பது போல் வாய் வைத்து தண்ணீர் குடிக்கும் பழக்கம் பார்க்கப் புதுசு... அப்படி இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலும்.

எந்தச் சிறிய கிராமத்திலும் 12வது வரை பள்ளிகள் இருப்பதில்லை... பக்கத்துச் சிறு நகரங்களில்தான் படித்து கல்லூரிக்கு வந்து சேர்வோம்... ஆங்கிலத்தில் புலியாக இல்லை என்றாலும் ஓரளவேனும் தெரிந்திருக்கும்... விவரமானவனாக இருப்பவன் ஏ பார் அம்பிகா என்பானா..? 

கருப்பியைக் கொல்லும் இரயில்தான் இறுதியில் ஆணவத்தையும் கொல்கிறது... ஆணவம் அத்துடன் செத்துவிடுமா என்ன... அது எப்பவும் போல் எல்லா இடத்திலும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கும்.

இந்த இரயில்கள்தான் எத்தனை காதல் கொலைகளைச் செய்து இருக்கின்றன... இருந்தும் இன்னும் உயிர்போடு ஓடிக்கொண்டுதான் இருக்கின்றன காதலிக்கும் உயிர்களைத் தேடி...

சமரசமாப் போங்கடே என்று கை கொடுக்கச் சொன்னால் ஆளுக்கு ஒரு பக்கம் முகத்தை வைத்துக் கொண்டு கை கொடுக்கிறார்கள்... அப்புறம் அங்க எப்படி சமரசம் வரும்..?

பிடித்த நடிகையின் அட்டைப் படம் போட்ட நோட்டு, வீட்டுப் படிக்கல்லில் வைத்து எழுதுதல்... என பால்யத்தைப் புரட்டிப் பார்க்க வைத்த காட்சிகள் அழகு.

சினிமாத்தனமும் குறியீடுகளும் நிறையயிருந்தாலும் வாழ்க்கையை... வலியை... அவரவர் பார்வையில் சொல்லும் கதைக்களத்துக்காக கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.

கதிர்... எதார்த்த நடிகன்... தமிழ் சினிமாவின் நம்பிக்கை விதை.

ஆனந்தி... அழகான, நடிக்கத் தெரிந்த பெண்... G.V.பிரகாஷைப் போல் குட்டைப் பாவாடை மாட்டிவிடவில்லை என்றால் கண்டிப்பாக ஜொலிப்பார்.

சூரி, சந்தானம் போன்றவர்களின் நகைச்சுவை நம்மைக் கொல்லும் காலத்தில்தான் யோகிபாபுக்கள் இயற்கையாய் வந்து போகிறார்கள்.

படத்தை நகர்த்திச் சென்றிருக்கும் விதம் அருமை... காட்சிகள் கண் முன்னே நிற்கின்றன.

சந்தோஷ் நாராயணனின் இசை படத்துக்கு பெரிய பலம்.

படம் முழுவதும் சா'தீ'ய வன்முறையைச் சொல்லி இறுதியில் புள்ள குட்டிகளைப் படிக்க வையுங்கடா என்ற தேவர் மகனையும் கொண்டாடினோம்... ஆணவக் கொலைகளைச் சொல்லும் போது சா'தீ'யக் குறியீடுகளை அள்ளித் தெளித்திருக்கும் பரியேறும் பெருமாளையும் கொண்டாடுவோம்... இன்னும் வர இருக்கும் சாதிப்படங்களை எல்லாம் வரவேற்போம்.

நாம் சா'தீ'யத்தை உயிர்ப்போடு வைத்திருக்க வேண்டும் என்பதில் அரசியல்வாதிகளைவிட ஆபத்தானவர்கள் இந்த சினிமாக்காரர்கள் என்பதை நாம் எப்போது உணரப் போகிறோம்..? 

தமிழ் சினிமா சா'தீ'யத்தை விட்டு வெளியே வந்தாலே போதும்... சாதி மெல்லச் சாகும் என்பதே உண்மை.

ஆமா... பரியன்.... 

மிகச் சிறப்பான படம் என்பதைச் சொல்லவும் வேண்டுமா... 

மாரி செல்வராஜ்கள் சா'தீ'ய சமரசம் செய்யாமல் இன்னும் நிறைய வாழ்க்கைப் படங்களைக் கொடுக்க வேண்டும்... அது சினிமாவில் மட்டுமல்ல மக்கள் மத்தியிலும் மாற்றங்களைக் கொடுக்கும் படமாக அமைய வேண்டும்.

வாழ்த்துவோம் மாரியை...
-'பரிவை' சே.குமார்.