மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

ஞாயிறு, 20 அக்டோபர், 2013

தாயீ

ட்டிலில் இருந்து எழுத்த வேதாசலம் அருகில் அவளைக் காணாது 'என்ன இன்னைக்கு இன்னம் அவளக் காணோம். எப்பவும் கருக்கல்ல வந்து குரல் கொடுப்பாளே... என்னாச்சி... இன்னம் காணல... ம்... அவ வரலன்னா இன்னிக்கு ஒரு வேலயும் ஓடாம போட்டது போட்டபடி கெடக்குமே...' என்று நினைத்துக் கொண்டே கண்களை கசக்கியபடி "தொரச்சாமி... அடேய்... தொரச்சாமி..." என்று சற்று உரக்கக் கத்தினார்.

"என்ன தாத்தா... மாட்டுக்கு தண்ணி வச்சிக்கிட்டு இருக்கேன்... சத்த இருங்க வாரேன்..." என்று கசாலைப்பக்கம் இருந்து குரல் மட்டும் வந்தது. துரைச்சாமி, பத்துப் பதினைந்து வருடமாக இங்குதான் இருக்கிறான். அவனுக்கு சொந்தம் என்று சொல்ல இருந்த சித்தப்பா ஒருத்தர் பக்கத்து ஊருலதான் வேலை செஞ்சுக்கிட்டு இருந்தாரு. போன மாசம் வயல்ல தண்ணி பாச்சிக்கிட்டு இருந்தப்போ எதோ கடிச்சி இறந்துட்டாரு. இப்ப அவனுக்கு எல்லாமே இந்த வீடுதான். துரைச்சாமியா வந்தவன் இந்த வீட்டுல எல்லாருக்கும் தொரச்சாமியாயிட்டான்.

"எதுக்கு எந்திரிக்கும் போதே இப்படி கத்துறிய... போயி மூஞ்சி கீஞ்சி கழுவிட்டு வந்து காபிய குடிங்க... எப்பயும்போல சீக்கிரம் எந்திரிச்சு வருவீங்கன்னு நெனச்சு லெட்சுமி காபிய போட்டு வச்சிட்டா... ஆறிப்போயிறப் போகுது... அப்புறம் சூடு இல்லன்னு அதுக்கும் கத்துவீங்க... எப்பவும் போல அவ வந்து குரல் கொடுத்தா எந்திரிச்சிருப்பீங்க... அதான் அவ இன்னிக்கு வரலன்னதும் ஐயா நல்லா தூங்கிட்டீக போல..." குளித்து முடித்து கோவிலுக்குப் போய் திரும்பிய மனைவி சற்குணம் சொல்லிக் கொண்டே வெளியே போனாள்.

"அதுக்குத்தான் கத்துறேன்... அவ எதுக்கு வரல... எங்க போனா... ஒடம்புக்கு எதுவும் முடியலயா என்ன... அவ வராம இருக்க மாட்டாளே..?"

"எனக்கு என்ன தெரியும்... எதுக்கு வரலன்னு இனித்தான் தொரச்சாமிய விட்டு பாத்துட்டு வரச் சொல்லணும்... எந்திரிச்சி வாங்க... மேக்கால செய்யில தண்ணியில்லயாம்... பரமசிவம் வயலுக்கு தண்ணி போய்கிட்டு இருக்காம். மூத்தவன் இப்பத்தான் பாத்துட்டு வந்து சொன்னான். அப்படியே போயி பரமசிவத்துக்கு பாஞ்சோடனே நம்ம வயலுக்கு அடச்சி விட சொல்லிட்டு வாங்க... போங்க...."

"ம்... போறேன்... அவ வராம எனக்கு எதுவும் ஓடல... காலயில எந்திரிக்கும் போதே சலிப்பா வருது போ... உடனே தொரச்சாமிய போயி பாத்துட்டு வரச் சொல்லு... எதுக்கும் அங்க ஒரு போனப் போட்டு கேட்டுப்பாரு..."

"ஆமா ரொம்ப முக்கியம்... காலயில திட்டு வாங்க நான் தயாராயில்ல... நீங்க வேணா அடிச்சிக் கேட்டுப் பாருங்க..." என்றபடி அவர் முகத்தைப் பார்த்தாள் சற்குணம்.

எதுவும் பேசாமல் மோட்டு வலையைப் பார்த்துக் கொண்டு இருந்தார். அவரிடம் காபியைக் கொடுத்தபடி "என்ன மாமா அவ ஏன் வரலன்னு அத்த உங்கள போன் பண்ணி கேட்க சொன்னா மோட்டு வலயப் பாத்துக்கிட்டு இருக்கீக.." என்றாள் மருமகள் லட்சுமி.

"நானா... நா போன் பண்றதா... சரித்தான் போ... அந்த வூட்டு ஆளுககிட்ட எனக்கென்ன பேச்சு இருக்கு... தொரச்சாமிய போயி பாத்து என்ன ஏதுன்னு கேட்டுட்டு வரச்சொல்லுங்க... நான் வயக்காட்டுப் பக்கம் பொயிட்டு வாரேன்..."

"அதானே... அவளக் காணோமின்னு மட்டும் தேடச் சொல்லுது... ஆனா அவளுக்கு என்னாச்சுன்னு போயி பாக்க மனசு வரல... சரி... சரி.... தொரச்சாமி பொயிட்டு வருவான்... நீங்க போங்க..."

துண்டை உதறி தோளில் போட்டுக் கொண்டு மண்வெட்டிய எடுக்கும் போது "என்ன தாத்தா... எதுக்கு கூப்பிட்டே..?" கைகளை கைலியில் துடைத்தபடி உள்ளே நுழைந்தான் துரைச்சாமி.

"ஒண்ணுமில்லடா... இன்னிக்கு அவளக் காணோமுடா... என்னாச்சின்னு தெரியலை... கருக்கல்லயே அவ வந்துருவா... இன்னிக்கு இன்னும் காணல... ஒரு எட்டு அங்க போயி அவளுக்கு என்னாச்சின்னு பாத்துட்டு வாடா... மனசு கேட்கலடா..."

"இதுக்குத்தான் கத்துனியா என்ன... அதுக்கு எதாவது வேலயா இருக்கும்.... இல்ல உடம்புக்கு நல்லா இல்லாம இருந்திருக்கும்... அப்பறம் வரும்... விடு தாத்தா..."

"அடேய்... போடான்னா போயி பார்த்துட்டு வாடா... எனக்கிட்ட கத சொல்லாம... அவளக் காணோமின்னு மனசு பதயா பதைக்குது..."

"அப்ப நீங்க..." எதோ சொல்ல வந்த துரைச்சாமியை சற்குணத்தின் குரல் தடுத்தது. "அடேய் ரெண்டு பிள்ளைங்க... மருமக்க... பேரன்... பேத்திக... எல்லாரும் இங்கன இருந்தாலும் அவ ஒருநாள் வரலன்னா இவரு அன்னிக்கு பூராம் புலம்பிக்கிட்டே இருப்பாருங்கிறது எல்லாருக்கும் தெரியுமில்ல... போடா போயி அவளுக்கு என்னாச்சுன்னு பாத்திட்டு வாடா..."

"சரி ஆச்சி.." என்றபடி அவருக்குப் பின்னே படியிறங்கினான் துரைச்சாமி. இருவரும் எதிர் எதிர் திசையில் நடக்க ஆரம்பித்தனர்.

***********

"தொரச்சாமி எங்க போயி தொலஞ்ச்சான்... அவளுக்கு என்னாவாம்....  எதாவது தெரியுமா... நல்லாயிருக்காளாமா?" கேள்விக்கணையை தொடுத்தபடி வீட்டிற்குள் நுழைந்தார் வேதாசலம்.

"எதுக்கு இத்தன அவசரம்... வெயில்ல அலஞ்சிட்டு வந்திருக்கீக... வந்து காலக்கையை கழுவிட்டு சாப்பிடுங்க... அவளுக்கு ஒண்ணுமில்லயாம்... ஒடம்புக்கு முடியலயாம்... நாளக்கி வருவா.."

"நெஜம்மாவா... நீ சொல்லுறதுல எதயோ மறைக்கிறாப்ல தெரியுது..."

"ஆமா... மறைக்கிறாக... என்னத்த மறைக்கிறாக... அட வந்து சாப்பிட்டு விடுங்க... எங்களுக்கு வேல கெடக்கு..."

"கைய கழுவிட்டு வாரேன்" என வீட்டின் பின்பக்கம் போனவர், வேப்ப மரத்தடியில் படுத்திருந்த துரைச்சாமிய பார்த்து "கிறுக்கா சொகமா தூக்கம் கேக்குதோ... ஆமா அவளுக்கு என்னாச்சுடா... உனக்கு எதாவது தெரியுமா.... இந்த பொம்பளங்க எதயோ மறைக்கிறாங்க..."

"அது... அது...."

"என்னடா இழுக்கிறே... அவளுக சொல்லக்கூடாதுன்னு சொன்னாளுகளா..." கோவத்தில் மூக்கு சிவக்க-

"தாத்தா... அது கொஞ்சம் அப்படியிப்படி இருந்துச்சில்ல..."

"என்ன பைத்தியமா இருந்துச்சின்னு சொல்ல வாறியா... அவ எங்க ஆத்தாடா... அவளைப் போயி கிறுக்குன்னு... சரி விடு எல்லாரும் சொல்லுறாக நீயும் சொல்லுறே... அதுக்கு என்ன இப்போ... என்னாச்சு அவளுக்கு..."

"எங்கயோ நாட்டு வயித்தியங்கிட்ட ரெண்டு நாளக்கு முன்னால கூட்டிப் போனாங்களாம்... அவனும் பாத்துட்டு கால்ல மூலிகை வேரால சூடு வச்சா..."

"ஆத்தி... சுட்டுப்புட்டாய்ங்களா... பிஞ்சுக்கால்ல சுட்டுட்டாய்ங்களா... அவ தாங்கமாட்டளேடா..." அவன் முடிக்கும் முன்னரே பதறினார்.

"ம்... ரெண்டு காலுலயும் சுட்டு மருந்து வச்சிருக்காக... காச்சலும் இருக்கு... அது காயுற வரைக்கும் நடக்கப்படாதாம்..."

"அய்யோ... பாவிய... எங்க ஆத்தா துடிச்சிருப்பாளே...." புலம்பியபடி வீட்டுக்குள் நுழைந்து தெருவில் இறங்க... 'எங்க போறிய சாப்பிடாம... சாப்பிட்டுப் போங்க...' என்று கத்திய மனைவியின் குரலுக்கு செவி சாய்க்க எண்ணமின்றி பதட்டமாய் நடக்கலானார்.


ஒரு உக்கிரமான தருணத்தில் அவன் கேட்ட கேள்விகள் அவரை அந்த வீட்டுக்குள் நுழைய விடாமல் தடுத்து வைத்திருந்தது. எத்தனையோ முறை அவனும் கூப்பிட்டுப் பார்த்தான்... இவர் போகவேயில்லை... 'செத்தாலும் நீ கேட்ட கேள்வி மறக்காதுடா... இனி உன் படிவாசல் மிதிக்கமாட்டேன்' என்று வீராப்பாய் இதுவரை இருந்தவர் இன்று அவளுக்காக அந்த வீட்டு வாசலில் நின்று 'தாயீ....' என்று கூப்பிட்டதும் முற்றத்தில் உட்கார்ந்து இருந்த அவள் 'பெரீப்ப்ப்ப்ப்பா....' என்று உரக்க குரலெடுத்து அழலானாள்.
-'பரிவை' சே.குமார்.

சனி, 19 அக்டோபர், 2013

தொடர்கதை : கலையாத கனவுகள் - 23

முந்தைய பதிவுகளைப் படிக்க...



-----------------------------------------------------------------------

23. சந்தோஷம்...  சங்கீதம்...

முன்கதைச் சுருக்கம்: 

கிராமத்து ஏழைக் குடும்பத்துப் பையனான ராம்கி, கல்லூரி ரவுடி வைரவனின் தங்கை புவனாவுடன் நட்பாக பழகுகிறான்.  அக்காவுக்கு விருப்பமில்லாத மாப்பிள்ளையை பேசி வைத்திருக்கும் அம்மாவுடன் மல்லுக்கு நிற்கிறான். கல்லூரியில் வைரவனைத் தாக்க வந்தவர்களுடன் ஏற்பட்ட தகராறின் காரணமாக கெட்டபெயர் ஏற்படுகிறது. இதன் பின்னான நிகழ்வுகளில் புவனா தன் காதலை ராம்கியிடன் சொல்கிறாள். ராம்கியும் அவளைக் காதலிக்கிறான். இளங்கோவுடன் மோதல் ஏற்படுகிறது. 

இனி...

ரண்டு நாட்களாக புவனாவைப் பார்க்காததால் திங்களன்று கல்லூரி சென்றதும் அவளைத் தேடினான். காலை முழுவதும் அவளைப் பார்க்க முடியவில்லை. மதியம் சாப்பிட்டுவிட்டு நண்பர்களுடன் அரட்டை அடித்துக் கொண்டிருந்தாலும் அவள் லைப்ரரிக்கு வருகிறாளா என்று கண்கள் தேடிக்கொண்டே இருந்தன. ஆனால் அவள் வரவேயில்லை. அப்போது அந்தப் பக்கமாக அவளது தோழி வரவே, நண்பர்களிடம் இந்தா வாறேண்டா என்று சொல்லிவிட்டு வேகமாகச் சென்று அவளிடம் 'புவனா வரலைங்களா?' என்று கேட்டான்.

"வந்திருக்கா... இண்டர்னெல் எக்ஸாம் இருக்கு. காலையிலயும் எக்ஸாம் இருந்துச்சு. இப்பவும் இருக்கு... அதான் எல்லாரும் படிச்சிக்கிட்டு இருக்கோம். நான் புரபஸரைப் பார்க்க வந்தேன். ஏன்  அவகிட்ட எதாவது சொல்லணுமா... வேணுன்னா வரச் சொல்லவா... இல்லேன்னா நீங்க எங்க கிளாஸ்க்கு வாங்களேன்..." என்றாள்.

"இல்ல... பரவாயில்லை... அவங்க படிக்கட்டும்... ஒண்ணும் முக்கியமானதில்லை... ரெண்டு நாளா வீட்ல கொஞ்சம் வேலை அதான் ஐயா வீட்டுக்கு புக் ஒர்க் பண்ணப் போகலை... அவங்க போனாங்களா... ஒர்க் முடிஞ்சிருச்சான்னு கேட்கத்தான்... பரவாயில்லை... சாயந்தரம் நான் பாக்கணுமின்னு சொல்லுங்க..."

"இதை அவகிட்டதான் கேட்கணுமா... ஐயாகிட்ட கேட்டிருக்கலாமே... ம்... அவகிட்ட பேச ஒரு காரணம்... என்னமோ நடக்குது... நடக்கட்டும்... கத்திரிக்காய் முத்தின கடைக்கு வந்துதானே ஆகணும்.. சரி சாயந்தரம் வெயிட் பண்ணச்  சொல்றேன்..." என்றபடி சென்றாள்.

மீண்டும் நண்பர்களிடத்தில் வந்து அமர, "எங்கடா அம்புட்டு அவசரமா ஓடுனே..?" என்றான் அறிவு.

"இல்ல புவனாவோட பிரண்ட் வந்தாங்க... அதான் பார்த்துப் பேசிட்டு வாறேன்..." பொய்யாக எதாவது சொல்லி மாட்டிக்க விருப்பமில்லாமல் உண்மையைச் சொன்னான்.

"அப்படி என்ன தலைபோற அவசரம்..?" 

"தலை போற அவசரமெல்லாம் இல்லை சரவணா... ஐயா வீட்டுக்கு ரெண்டு நாளா போகலை... வீட்ல பொங்கல் வேலை, அப்புறம் சினிமான்னு அங்கிட்டுப் போகவேயில்லை... அதான் புக் ஒர்க் முடிஞ்சிருச்சா இல்லை இன்னைக்குப் போகணுமான்னு கேட்கலாம்ன்னுதான் புவனா வந்திருக்காங்களான்னு கேட்டேன்..."

"என்னடா... எலி அம்மணமா ஓடுதேன்னு பாத்தோம்... இப்பத்தான் தெரியுது அவ வந்திருக்காளா வரலையான்னு கவலையில கேட்கப் போயிருக்கேன்னு..." பழனி நக்கலாகச் சொன்னான்.

"அப்படியெல்லாம் இல்லடா... உண்மையிலுமே இதைக் கேட்கத்தான் அவங்க வந்திருக்காங்களான்னு கேட்டேன்..."

"அட வெளக்கெண்ணை எங்களுக்கு காது குத்தியாச்சு... இதை ஐயாக்கிட்ட கேட்க வேண்டியதுதானே... அதைவிட்டுட்டு அவகிட்டதான் கேட்கணுமோ... வைரவன் காலேசுக்குள்ள வராதது உனக்கு யோகம்டி மாப்ள... நடத்து நடத்து... இப்ப உன்னோட காட்டுல மழை... கொட்டுற மழையில குடை பிடிச்சாலும் கால் நனையத்தாண்டி செய்யும்... என்னைக்கு இருந்தாலும் எங்களுக்கு உங்ககதை தெரியாமப் போகாது..."

"அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல... உங்களுக்குத் தெரியாம நான் என்னடா பண்ணப்போறேன்..."

"இந்தப் புள்ளையும் பால் குடிக்குமான்னு முகத்தை வச்சிக்கிட்டு நீ மோரே குடிச்சிக்கிட்டு இருக்கே மச்சான்..." என்றான் சேவியர்.

இவர்களின் அரட்டை தொடர்ந்து கொண்டிருக்கும் போது தூரத்தில் புவனா வேகமாக வருவது தெரிந்தது. 'ஆஹா... இவனுக இருக்கும் போது இங்க வந்து பேசினா தேவையில்லாம பேசுவானுங்களே... இப்ப என்ன பண்றது' என்று யோசிக்கும் போதே "அடேய்... ரொம்ப நல்லவனே... உன்னோட தேவதை தேடி வர்றா... போய் பேசிட்டு வா... நாங்க நீ அவகிட்ட இதை மட்டும்தான் கேட்கப் போறேன்னு நம்பிட்டோம்... வாங்கடா அவன் பேசிட்டு வரட்டும்... நாம  போகலாம்... " என்ற அண்ணாத்துரை நண்பர்களைக் கூட்டிச் செல்ல ஒரு பெருமூச்சை விட்டபடி அவளை நோக்கி நடந்தான்.

"என்ன புவி... எக்ஸாம் இருக்குன்னு சொன்னாங்க... சாயந்தரம் பாக்கலாம்ன்னு சொன்னேனே... அப்புறம் ஏன் வந்தே... ஒண்ணும் அர்ஜெண்ட் இல்லை..."

"ம்... ரெண்டு நாள் எங்க போனீங்க... இன்னைக்கு காலையில இருந்து பார்க்கலைன்னதும் அவகிட்ட ஓடிப்போயி கேட்டிருக்கீங்க... ரெண்டு நாளா நான் எப்படி தவிச்சிருப்பேன்..."

"சாரிம்மா... பொங்கல் வேலை... வீடெல்லாம் பிரிச்சு சுத்தம் பண்ணினோம்... அப்புறம் நேத்து பிரண்ட்ஸோட படத்துக்குப் பொயிட்டேன். சும்மாவே நம்மளைப் போட்டு கிண்டுறானுங்க... படத்துக்கு வரலைன்னு சொன்னா வீணாவுல கோபப்படுவானுங்க... அதான்... சாரிடா..."

"ம்... எதுக்கெடுத்தாலும் சாரி... சாரின்னுக்கிட்டு... சரி நான் கிளம்புறேன்... சாயந்தரம் பாக்கலாம்..."

"இப்ப எதுக்கு வந்தே... சும்மா பாத்துட்டுப் போகவா?"

"பாவம் நம்மளைப் பாக்காம நம்ம ஆளு ரொம்ப தவிச்சிப் பொயிட்டாரேன்னு வந்தா... ரொம்ப கொழுப்புத்தான்... எதாவது விசேசமா?"

"சரி... நீ போய் எக்ஸாமை முடி... சாயந்தரம் ஐயா வீட்ல பார்க்கலாம்..."

"இன்னைக்கு ஐயா வீடு வேண்டாம்... தினமும் அங்க போயி உக்காந்து இருந்துட்டு போறதுக்கு பேர் லவ் இல்லை... இன்னைக்கு பக்கத்துப் பார்க்குப் போகலாம்... ப்ளீஸ்..."

"ம்..."

"என்ன ம்... யாராவது பாத்துடுவாங்கன்னு பயமா? என்னைக்கா இருந்தாலும் தெரியத்தான் போகுது... எத்தனை நாளைக்கு மறைக்க முடியும்... எது வந்தாலும் பாத்துக்கலாம்..."

"ஓகே... கிளாஸ் முடிந்ததும் பார்க்குக்குப் போகலாம்... யார் முன்னாடி போனாலும் அங்க வெயிட் பண்ணலாம்... ஓகே..."

"அப்பா... முடியாதுன்னு சொல்லாம ஒத்துக்கிட்டதுக்கு ரொம்ப சந்தோஷம்... பை..." என்றபடி அங்கிருந்து சென்றாள்.

மாலை நண்பர்களிடமிருந்து ஒருவழியாக தப்பித்து பார்க்குக்கு சென்றான் அங்கு முன்னரே சென்று நின்று கொண்டிருந்த புவனா இவனைப் பார்த்ததும் புன்னகைத்தாள். சைக்கிளை வைத்துவிட்டு இருவரும் உள்ளே சென்று ஒரு வேப்பமர நிழலில் இருந்த மரப்பெஞ்சில் அமர்ந்தனர். புவனா ஒரு குச்சியால் பெஞ்சின் மீது கிறுக்கிக் கொண்டிருந்தாள்.

"என்ன புவி... ஐயா வீடு பேசுறதுக்கு சரியா இல்லைன்னு இங்க வரச் சொல்லிட்டு பேசாம இருக்கே?"

"பேசுறதுக்கு என்ன இருக்கு... உங்ககூட கொஞ்ச நேரம் தனிமையில இருக்கணுமின்னு தோணுச்சு... ஆமா உங்க வானரப்படை எப்படி உங்களை விட்டுச்சு... நான் வரும் போது உங்க பிரண்ட்ல ஒருத்தன் உயரமா இருப்பானே... அவன் பேர் என்ன..?"

"யாரு... சேவியரா?"

"ம்... அதுதான் பாத்ரூம் போச்சு போல... என்ன தங்கச்சி மச்சானை வரச்சொல்லவான்னு கேட்டுட்டுப் போகுது..."

"அவனுகளுக்கு வேற வேலையில்லை... எப்படி மறைச்சாலும் நோண்டிக்கிட்டே இருக்கானுக... ஆமா உன்னோட பிரண்ட்ஸ்க்கு தெரியாதுல்ல..."

"அவளுக பேசுறதைப் பார்த்தா சந்தேகமாத்தான் இருக்கு... ரெண்டு பேரும் லவ்வை சொல்லிக்கிட்டோம்ன்னு தெரியாது. ஆனா லவ் பண்றோம்ன்னு தெரியும்..."

"புவி நாளைக்கு எங்கண்ணன் வர்றார்... மத்தியானம் கூட்டப் போகணும். மதியம் கிளாஸ்க்கு வரமாட்டேன்..."

"பெரிய மச்சான் வார்றாராக்கும்..." என்று சிரித்தவள் " அப்ப நாளைக்குப் பார்க்க முடியாதாக்கும்..."

"ம்... அவனுகளுக்கு தெரிஞ்சா அம்புட்டுத்தான்... நீ இப்பவே மச்சான் போடுறே... வைரவண்ணன் எப்படியிருக்கார்... இந்தப் பக்கமே வரக்காணோம்... இல்லைன்னா அந்தக் கடையிலதான் வந்து உக்காந்திருப்பாரே..?"

"அண்ணனா... நான் எப்படி மச்சான்னு சொன்னேன்... இனி அவன் மச்சான்... அண்ணன் நொண்ணன்னு சொல்லி முறையை மாத்தாதீங்க... அப்ப நான் என்ன தங்கச்சியா? அவனை அப்பா காலேசுப்பக்கமே போகக்கூடாதுன்னு கண்டிசன் போட்டு வச்சிருக்கார்... மாமா வீட்டுக்குப் பொயிட்டான். அவன் இங்க இருந்தா பார்க்குக்கு வாங்கன்னு கூப்பிட்டு இருக்கமாட்டேன்..."

"அவருக்குத் தடையா? ஏத்துக்கிட்டாரா என்ன?"

"எங்க ஏத்துக்கிட்டான்... அத்தை வந்துருந்துச்சு... அதான் வாடான்னு இழுத்துக்கிட்டுப் போயிருக்கு... பொங்கலுக்கு வந்துருவான்..."

"ம்... அப்புறம் எங்க வீட்டுக்கு வாறியா?"

"உங்க வீட்டுக்கா? எப்போ...? எப்படி...?"

"மாட்டுப் பொங்கல் அன்னைக்கு... எங்க ஊர்ல மாட்டுப் பொங்கல் ரொம்ப சிறப்பா இருக்கும்... நீ வந்தியன்னா ரொம்ப சந்தோஷமா இருக்கும்..."

"மாட்டுப் பொங்கல் எங்க ஊர்லயும் சிறப்பாத்தான் இருக்கும். அன்னைக்கு எப்படி வர்றது. வேற யாரு வாறாங்க...?"

"பசங்க வாறாங்க..."

"உங்க பசங்க கூடவா... அப்பா சாமி நான் வரலை..."

"இல்ல நீ வர்றதா இருந்தா நான் மல்லிகாவையும் இன்னும் சில தோழிகளையும் கூப்பிடலாம்ன்னு இருக்கேன்.."

ஒன்றும் பேசாமல் அவனை முறைத்தாள்.

"என்னாச்சு புவி... எதுக்கு இப்போ முறைக்கிறே?"

"அவகூட நான் வரணுமா? எதுக்கெடுத்தாலும் அவ... அவ..."

'ஏய் எதுக்கு கோபப்படுறே... அவகூட பழகிப் பாரு... அவளோட குணம் புரியும்... நீ மட்டும் தனியா வரமுடியுமா என்ன... அதுக்குத்தான்..."

"அதுக்காக..?"

"இங்க பாரு... என்னோட மனசுல நீ மட்டும்தான் இருக்கே... மத்தவங்க எல்லாம் நல்ல தோழிங்கதான்... எல்லாருமா வந்தா நல்லாயிருக்கும்... நீ வந்தியன்னா எனக்கு இந்தப் பொங்கல் ரொம்ப சந்தோஷத்தைக் கொடுக்கும்... இல்லேன்னா பரவாயில்லை விடு இன்னொரு நாள் பாத்துக்கலாம்..."

"சரி... சரி... எப்படியாச்சும் வரப்பாக்குறேன்... மல்லிகாவை எங்க வந்து பாக்கணுமுன்னு முன்னாடியே சொல்லிருங்க...."

"ரொம்ப சந்தோஷம் புவி..." என்று அவளது கைகளைப் பிடித்துக் கொண்டான்.

"எங்க வீட்டுக்கும் வரணும்... சரியா?"

"கண்டிப்பாக வர்றேன் என்னோட ஆளு கூப்பிட்டு வரமாட்டேனா என்ன..." என்றதும் "ஆமா... பேசுறதுக்கே பயப்படுறோம்... எங்க வீட்டுக்கு வந்துட்டாலும்...." என்று சீண்டினாள்.

"வரச்சொன்னா கண்டிப்பா வருவேன்... எனக்கென்ன பயம்... என்னோட கண்மணி இருக்கும் போது..." என்றபடி அவள் தோளில் கை வைத்தான்.

"என்ன சார் இன்னைக்கு ரொம்ப சந்தோஷம் போல... கையெல்லாம் கண்ட இடத்துக்கு வருது..."

"கண்ட எடத்துக்கு எல்லாம் வரலை... டீசண்டா தோள்மேலதான் நிக்குது... பொங்கலுக்கு அம்மணி வருதுன்னு சந்தோஷந்தான்..."

"ம்... ஏதோ பாவம்ன்னு வாறேன்னு சொன்னேன்.." என்றவள் அவன் மடியில் படுத்துக் கொண்டாள். அது சந்தோஷத்தைக் கொடுத்தாலும் மற்றவர்களின் பார்வைகள் அவர்களைத் தின்று கொண்டிருப்பதைப் பார்த்ததும் ராம்கிக்கு என்னமோ போல் இருந்தது. ஆனால் புவனா அதைப்பற்றி எல்லாம் யோசிக்கவும் இல்லை... கண்டுகொள்ளவும் இல்லை...

நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு இருவரும் மனம் நிறைந்த சந்தோஷத்துடன் கிளம்பினார்கள்.

(புதன்கிழமை தொடரும்)
-'பரிவை' சே.குமார்.

வெள்ளி, 18 அக்டோபர், 2013

மனசின் பக்கம் : நய்யாண்டியில்லை உண்மைதான்...

ந்த வாரம் முழுவதும் விடுமுறையில் கழிந்துவிட்டது. விடுமுறைக்கு எங்கெங்கோ போக வேண்டும் என்று திட்டம் வகுத்திருந்தோம். ஆனால் எங்கும் செல்லாமலேயே முடிந்துவிட்டது. துபாய்க்குச் சென்றால் தேவா அண்ணனைச் சந்திக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். விடுமுறை ஆரம்பிப்பதற்கு முதல்நாள் தேவா அண்ணன் போன் செய்து அபுதாபி வந்தால் கட்டாயம் உன்னைப் பார்க்க வருகிறேன் என்றார். அவரும் வரவில்லை... நானும் போகவில்லை. விரைவில் தேவா அண்ணனைச் சந்திக்க வேண்டும் என்ற ஆவல் இருக்கிறது. முன்கூட்டியே திட்டமிட்டிருந்தால் இந்த ஒரு வாரகால விடுமுறைக்கு ஊருக்குச் சென்றிருக்கலாம். எல்லாம் முடிந்தபின் யோசனை செய்து என்ன லாபம். வரும் ஞாயிற்றுக்கிழமை மாட்டைப் பூட்டினால் இனி விடுமுறையின்றி பாரம் சுமக்க வேண்டியதுதான்.

ந்த விடுமுறையில் நிறைய படங்கள் பார்த்தாச்சு... அவற்றில் புதியவை நய்யாண்டியும் வணக்கம் சென்னையும்... நய்யாண்டிக்கு நல்ல விமர்சனம் இல்லாத போதிலும்... தனுஷுக்கு நடிப்பதற்கு வாய்ப்பில்லாத படமாக இருந்த போதிலும்... களவாணி, வாகைசூடவா அளவிற்கு இல்லை என்று எல்லாரும் சொன்ன போதிலும்... நய்யாண்டி என்னைப் பொறுத்தவரை ஒருமுறை பார்க்கலாம். களவாணியையும் வாகைசூடவாவையும் இப்போது தூக்கி வைத்துப் பேசினாலும் வாகை சூடவாவை நாம் வெற்றிப்படமாக்கினோமா? இல்லையே அப்புறம் அந்த இயக்குநர் தனது லாபத்திற்காக இப்படி ஒரு படமெடுப்பதில் என்ன தவறு. தனுஷுக்கு விஜய் பில்டப்புக்கள் தேவையில்லைதான். இருந்தும் கொஞ்சம் ரசிக்க வைத்தது.

ணக்கம் சென்னை... கலைஞர் குடும்பத்தில் இருந்து இன்னுமொருவர் சினிமாவிற்குள் பிரவேசம். நடிக்கத் தெரியாத சிவாவை வைத்து இந்தப் படத்தை எடுத்ததற்கு வேறு யாரையாவது வைத்து எடுத்திருக்கலாம். ரொம்பப் போர் அடிக்கும் ஒரு கதை, வழவழ கொழகொழ நாயகன் என இடைவேளை விடுவதற்கு முன்னரே தூங்க வைத்துவிட்டது. விமர்சனங்கள் சொன்ன அளவிற்கு கிருத்திகா வெற்றி பெற்றாரா என்பது முழுப் படத்தையும் பார்த்திருந்தால் தெரிந்திருக்கும்.

லைச்சரத்தில் ஒரு வார ஆசிரியனாய் இருந்தபோது திரு. சீனா ஐயா அவர்களின் நீண்டதொரு கருத்து எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது. ஏனென்றால் ஐயா அவர்களின் கருத்து பெரும்பாலும் ஒற்றை வரியில்தான் இருக்கும் ஆனால் எனக்கு நீண்டதொரு கருத்து கிடைத்தது எனது பாக்கியமே. இதே சந்தோஷத்தை இரு தினங்களுக்கு முன்னர் எழுத்தாளர் திரு. முத்துநிலவன் அவர்கள் எனது கவிதையைப் படித்துவிட்டு எழுதிய கருத்து கொடுத்தது. பிரபலமானவர்களின் கருத்துக்கள் நம்மை சந்தோஷப்படுத்தும் அளவிற்கு இருக்கிறது என்றால் நமது எழுத்து அவர்களைக் கவர்ந்திருக்க வேண்டும்தானே... ஆனால் அந்தளவுக்கா நாம எழுதுறோம் என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. இருந்தும் எனது எழுத்துக்கு தங்கள் எண்ணத்தில் தோன்றிய கருத்தை எழுத்தாக்கிய இரண்டு இமயங்களுக்கும் நன்றி.

விஜய் தொலைக்காட்சி சூப்பர் சிங்கரில் பாடகர் மனோவின் மனைவி மற்றும் மகள் வந்திருந்தனர். மனோ தன் மனைவி குறித்து சிலாகித்துப் பேசினார். அப்போது அங்கு இருந்த டி.எல்.மகராஜன் அவர்கள் ஒரு நிகழ்வைச் சொன்னார். ஒருமுறை மனோ வீட்டிற்கு வருமான வரித்துறையில் இருந்து சோதனைக்கு வந்திருக்கிறார்கள். அவர்களிடம் கணக்கில் இருக்கும் நகை, பண விபரங்களை திருமதி.மனோ அவர்கள் கொடுத்ததும் ஒரு பெண் அதிகாரி பெரிய பாடகர் வீடு... நகை பணமெல்லாம் இம்புட்டுத்தானா? ஆமா வைரமெல்லாம் எங்க இருக்கு என்று கேட்டு தொந்தரவு செய்ய, ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த திருமதி. மனோ அவரது கையைப் பிடித்து மனோ இருக்கும் இடத்துக்கு இழுத்துச் சென்று 'இதோ இவர்தான் என்னோட வைரம்' என்று சொன்னாராம். கணவன் மனைவிக்குள்ளான அன்பிற்கு இதைவிட வேறு என்னத்தைச் சொல்வது என்றார். 

மிழ்மணம் முன்னணி வலைப்பதிவுகளில் 350க்கு மேல் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி 100, 101 என்ற இடத்திற்கு வந்தபோது அட நூறாவது இடத்துக்கு வந்துட்டமேன்னு சந்தோஷமாக இருந்தது. அதன் பிறகு வலைச்சர ஆசிரியனாய் இருந்த வாரத்தில் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து 50க்கும் 75க்கும் இடையில் ஏற்ற இறக்கமாய் வந்து நின்றது. தற்போது மேலும் முன்னேறி 30க்குள் வந்துவிட்டது. இதற்கு எனது எழுத்துக்களை வாசிக்கும் உங்களுக்குத்தான் முதல் நன்றி. ஏதோ கிறுக்கினாலும் அதைப் பொறுமையாகப் படித்து கருத்துச் சொல்லும் அனைவருக்கும் நன்றி. அனைவரின் எழுத்துக்களையும் எல்லாரும் படிக்கும் விதமாக பரந்தவெளிக்குக் கொண்டு செல்லும் தமிழ்மணத்துக்கு நன்றி.

கோதரர் ரூபன் அவர்கள் தீபாவளித் திருநாளை முன்னிட்டு சிறப்புக் கவிதைப் போட்டி ஒன்றை அறிவித்துள்ளார். போட்டிக்கான தேதியை நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க 31.10.2013 வரை கால நீட்டிப்புச் செய்திருக்கிறார். வலைப்பூ வைத்திருப்பவர்கள் மட்டுமின்றி இல்லாதவர்களும் கலந்து கொள்ளலாம் என்று சொல்லியிருப்பது சிறப்பு. கவிதைப் போட்டி பற்றி விரிவான விளக்கம் அறிய கீழே இருக்கும் சுட்டியில் போய் தெரிந்து கொள்ளுங்கள்.


2013-10-18_082010

ன்ன உறவுகளே எல்லோரும் எங்கே கிளம்பிட்டீங்க..? ரூபனின் தளத்துக்குத்தானே... ஆம் உறவுகளே எல்லோரும் எழுதுங்கள்... பரிசு என்ற இலக்கை நோக்கி எழுதாமல்... நம்மாளும் முடியும் என்று எழுதுங்கள்... வெற்றி நிச்சயம்... கலந்து கொள்ளும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

தொடர்வோம்...
-'பரிவை' சே.குமார்.

வியாழன், 17 அக்டோபர், 2013

வீடியோ : கலவையாய் சில பாடல்கள்...

இன்றைய பாடல் பகிர்வில் ஒரு நடிகர், நடிகை படத்தில் இருந்து பாடல்களைத் தேர்வு செய்யாமல் சில பிடித்த பாடல்களை இங்கு பகிர்ந்திருக்கிறேன்..  கொஞ்சம் கலவையான பாடல்கள் பகிர்வு உங்களுக்கும் பிடிக்கும்.


படம் : ரோஜா
பாடல்: புது வெள்ளை மழை...



படம் : வாரணம் ஆயிரம்
பாடல் : அனல் மேலே பனித்துளி...




படம் : வெயில்
பாடல் : உருகுதே... மருகுதே...




படம் : வாகை சூடவா
பாடல் : சரசர சாரக்காத்து...




படம் : மயக்கம் என்ன
பாடல் : பிறை தேடும் இரவிலே...




படம் : 3
பாடல் :  போ நீ போ...




படம் : எங்கேயும் எப்போதும்
பாடல் : சொட்டச் சொட்ட...



படம் : அங்காடி தெரு
பாடல் : உன் பேரைச் சொல்லும் போது...




படம் : மானஸ்தன்
பாடல் : ராசா ராசா உன்னை...



பாடல்கள் உங்களைக் கவர்ந்தனவா? மீண்டும் அடுத்த பாடல் பகிர்வில் தொடர்வோம்...

-'பரிவை' சே.குமார்.

புதன், 16 அக்டோபர், 2013

தொடர்கதை : கலையாத கனவுகள் - 22

முந்தைய பதிவுகளைப் படிக்க...



-----------------------------------------------------------------------

22. நண்பர்கள் சங்கமம்

முன்கதைச் சுருக்கம்: 

கிராமத்து ஏழைக்குடும்பத்துப் பையனான ராம்கி, கல்லூரி ரவுடி வைரவனின் தங்கை புவனாவுடன் நட்பாக பழகுகிறான்.  அக்காவுக்கு விருப்பமில்லாத மாப்பிள்ளையை பேசி வைத்திருக்கும் அம்மாவுடன் மல்லுக்கு நிற்கிறான். கல்லூரியில் வைரவனைத் தாக்க வந்தவர்களுடன் ஏற்பட்ட தகராறின் காரணமாக கெட்டபெயர் ஏற்படுகிறது. இதன் பின்னான நிகழ்வுகளில் புவனா தன் காதலை ராம்கியிடன் சொல்கிறாள். ராம்கியும் அவளைக் காதலிக்கிறான்.

இனி...


"என்னடா ரெண்டு மூணு நாளா எங்க கூட வரலை... எங்க போறே..?" கடுப்பாகக் கேட்டான் அண்ணாத்துரை.

"ஐயா வீட்ல கொஞ்சம் புக் ஒர்க் இருக்குது... அதான் காலேஸ் முடிஞ்சதும் அங்க போயிடுவேன்..."

"நீ புக் ஒர்க்குக்குப் போற மாதிரி தெரியலையே... உனக்கிட்ட என்னமோ மாற்றம் வந்திருக்க மாதிரி தெரியுது... என்னடா விஷயம்?" சரவணன் கொக்கி போட்டான்.

"ஒண்ணுமில்லேடா... உங்களுக்குத் தெரியாம என்னடா பண்ணப் போறேன்."

"டேய் அறிவு, இவரு நமக்குத் தெரியாம எதுவுமே பண்ண மாட்டாராம்... கேட்டியா..."

"நடிக்கிறான்டா... முன்னெல்லாம் லீவு நாள்ன்னா மாடு மேய்க்கப் போகணுன்டா... இன்னைக்கு ஒரு நாளாச்சும் அக்கா, அம்மாவுக்கு ரெஸ்ட் கிடைக்குமேன்னு சொல்லுவான். ஆனா லீவு நாளெல்லாம் ஐயா வீடுதானாம்... எங்க கிளாஸ் சண்முகம் அதே காம்பவுண்ட்டுக்குள்ளதான் இருக்கான். என்னடா உன்னோட பிரண்ட் ராம்கி எப்பவும் ஐயா வீட்லதான் இருக்கான்னு எனக்கிட்ட கேட்கிறான்... "

"அதான் புக் ஒர்க்குன்னு சொன்னேனே... அப்புறம் என்னடா... சரி இந்த சண்டே படத்துக்குப் போவோமாடா..."

"பேச்சை மாத்தாதே... எப்பவும் நீங்க ரெண்டு பேர்தான் ஐயா வீட்டுக்குப் போறீங்களாம்..." பழனி எகிறினான்.

"யார் ரெண்டு பேரும்..?"

"டேய் நடிகாதேடா... நீ என்ன பண்ணினாலும் எங்களுக்குத் தெரிஞ்சிடும்... உண்மையைச் சொல்லு... அவளும் நீயும் ஐயா வீட்டுல உக்காந்து அப்படி என்ன பேசுவீங்க... இங்க பேசுறது பத்தாதுன்னு..." சரவணன் மண்டையில் தட்டியபடி கேட்டான்.

"டேய் அய்யா வீட்ல புக் ஒர்க் அவருக்கு ரொம்ப நெருக்கமான எல்லாரும் பண்ணிக் கொடுக்கிறோம்... அதுக்காக அந்தப் பொண்ணும் வரும் ஐயா, அம்மா எங்ககூட இருப்பாங்க... நாங்க என்ன தனியாப் பேசப் போறோம்... அப்படி பேசுறதுக்கு என்ன இருக்கு... எனக்கு அவங்க ஒரு பிரண்ட் அவ்வளவுதான்... போதுமா... விட்டுத் தொலைங்கடா..."

"காதலில் விழுந்தவனுக்குத்தான்டா கோபம் வரும்... எங்ககிட்ட மறைக்கிறியா... என்னைக்கா இருந்தாலும் சந்திக்கு வந்துதான் ஆகும். புரிஞ்சுக்க..." என்றான் அண்ணாத்துரை.

"நம்ம பிரண்ட்ஷிப்புக்குள்ள புவனா ஒரு கேள்விக்குறியா வந்துட்டாளே..." என்ற சேவியர், "வர வர பிரண்ட்ஷிப் கசக்குதய்யா... மனம்தான் புவனா... புவனான்னு புலம்புதய்யா..." என்று பாட ஆரம்பித்தான்.

"அடேய்... ஏன்டா... இப்ப உங்களுக்கு என்ன வேணும்? உங்களுக்குத் தெரியாம ஒண்ணும் இல்ல போதுமா... இப்ப மல்லிகாகிட்ட சிரிச்சுப் பேசுறேன் அதுக்காக அவளைக் காதலிக்கிறேன்னு அர்த்தமா? கதை, கவிதையின்னு இலக்கியம் பேசுவாங்க... எனக்கு பிடிச்சிருக்கு... அவங்ககிட்ட திறமை இருக்கு... அதை மதிக்கிறேன்... அதுக்காக காதல் அது இதுன்னு ஏன்டா சும்மா.... வாங்க போகலாம்..."

"ஓகே... நம்பிட்டோம்... போகப்போகத் தெரியும்... வாங்கடா போகலாம்..."

அவர்கள் நடந்து செல்லும் போது மரத்தடியில் இளங்கோ மற்றும் அவனது நண்பர்கள் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். இவர்களைப் பார்த்ததும் " மாப்ளே... வைரவனைப் போடப்போன நம்ம ஆளுங்களை அடிச்சவன் நடுவுல சைக்கிள்ல வர்றானுல்ல அவன்தான்..." என்று ஒருவன் எடுத்துக் கொடுக்க "அவனைத்தான் எனக்குத் தெரியுமே... குச்சிக்கணக்கா இருந்துக்கிட்டு இது நம்ம ஆளுகளை அடிச்சிருக்கு... சமயம் வரட்டும்... பாத்துக்கலாம்..." என்றான் இளங்கோ.

"இல்ல மச்சான் கூப்பிட்டு மிரட்டி விடலாம்..." என்றான் ஒருவன்.

"அப்படிங்கிறே... சரி... டேய்... அடேய் உங்களைத்தாண்டா இங்க வாங்க..." என்று இளங்கோ அழைக்கவும் , "டேய் அவனுக நம்மளை வம்பிழுக்க கூப்பிடுறாய்ங்க... இருங்க நான் பேசுறேன்..." என்ற அண்ணாத்துரை "என்ன சொல்லுங்க..." என்றான்.

"என்னடா நீதான் இந்த டீமுக்கு லீடரா?" என்றான் ஒருவன்.

"அப்படியெல்லாம் இல்ல... கூப்பிட்டீங்களே என்னன்னு கேட்டேன்..." என்றதும் "ஏன் நம்ம காலேசோட புதிய ரவுடி பேச மாட்டாரா?" என்றான் இளங்கோ.

"நாங்க யாரும் ரவுடி இல்லை... ரவுடிங்க அடிச்சிக்கிட்டப்போ அங்க இருந்ததால அவன் அடிச்சிருக்கான்... போதுமா... தேவையில்லாம பேசாதீங்க... வாங்கடா போகலாம்..."

"என்ன துள்ளுறே... எல்லாரும் பேசாம இருக்கும் போது உனக்கென்ன குதிக்கிறே... செட்டையை ஒடிச்சிருவோம்..." என்று முன்னால் வந்தான் ஒருவன்.

"ஒடிச்சிப் பாருங்க... யாருக்கு ஒடியுதுன்னு பார்ப்போம்..." அண்ணாத்துரையும் பதிலுக்குப் பேச, அந்த இடம் ஒரு சண்டையை நோக்கி நகர ஆரம்பிக்க.

"டேய் சும்மா இருடா... என்னங்க எங்கிட்ட என்ன பேசணும்... சொல்லுங்க. அன்னைக்கு அந்த இடத்துல நீங்க இருந்து வேற யாராவது ஆள் அனுப்பியிருந்தாலும் நான் அடிச்சித்தானிருப்பேன். ஏன்னா எனக்கு முன்னாடி யாரை அடிச்சாலும் பாத்துக்கிட்டு இருக்கமாட்டேன்... தெரியுமா?" என்றான் ராம்கி.

"என்ன உன்னோட பிரண்டு குதிக்கிறான்.... இங்க வாடா... எங்ககிட்ட இனி வச்சிக்கிட்டேன்னு வச்சுக்கோயேன்... காலைக் கையை ஒடிச்சிப் போட்டுருவோம்... தெரியுதா..?"

"என்னைய யாரும் தொடாத வரை நான் யாரு வம்புக்கும் போகமாட்டேன்..."

"தொட்டா பொங்கிருவீங்களோ?" என இளங்கோ நக்கலாகக் கேட்க

"அவனில்லை... நானே பொங்குவேன்..." சூடாகச் சொன்னான் அண்ணாத்துரை.

"என்னடா... எதுக்கெடுத்தாலும் நீ துள்ளுறே... செட்டைய ஒடிச்சாத்தான் சரியா வரும் போல..."

அண்ணாத்துரை சிரித்தபடி "ஒடிச்சிப்புட்டு காலேசு வாசல் தாண்ட முடியாது... தலை தனியா விழுந்திரும்... தெரிஞ்சுக்கங்க... ஆழம் தெரியாம எதுலயும் காலை விடாதீங்க... சும்மா ரவுடி ரவுடின்னு பீத்திக்கிட்டுத் திரியாதீங்க... டேய் வாங்கடா போவோம்... சும்மா டயத்தை வேஸ்ட் பண்ணிக்கிட்டு..."

"அட இங்க பார்றா.... தலையை எடுத்துருவாங்களாமுல்ல... இருடி போட்டுப் பார்ப்போம்..." என்று வண்டியில் இருந்து இளங்கோ இறங்கினான். அப்போது அவர்களை வண்டியில் கடந்த மூன்றாம் ஆண்டு மாணவன் ஒருவன், "என்ன அண்ணா... எதுவும் பிரச்சினையா?" என்றான்.

"அதெல்லாம் ஒண்ணுமில்லேண்ணே... சும்மா பேசிக்கிட்டு இருக்கோம்... நீங்க போங்க..." என அண்ணாத்துரை சொன்னதும் "இளங்கோ.... அவன் யாருன்னு நெனச்சே... நம்ம பூபாலண்ணன் தம்பி..." என்று போகிற போக்கில் சொல்லிச் செல்ல இளங்கோ மீண்டும் வண்டியில் அமர்ந்தபடி "நீ பூபாலண்ணன் தம்பியா? அதான் வேகமா இருக்கே.... சரி... சரி... அவன் எங்க ஆளுகளை அடிச்சது ஒரு ஆக்ஸிடெண்ட்தான்... இனி நமக்குள்ள பிரச்சினை வேணாம்... அதுவும் பூபாலண்ணன் மேல எனக்கு தனி மரியாதையே உண்டு. எனக்காக எம்புட்டோ செஞ்சிருக்கு... அது தம்பியின்னு இதுவரை எனக்குத் தெரியாமப் போச்சு...அண்ணனும் இங்கிட்டு வரலையில்ல அதான். அண்ணன் எப்படியிருக்கு..? கேட்டேன்னு சொல்லு..." என்றதும்

"சரிண்ணே... இவன் பண்ணுனது அந்த நேரத்துல அவரைக் காப்பாத்தத்தான்... மற்றபடி உங்க மேலயோ மற்றவங்க மேலயோ எந்த முன் விரோதமும் இல்லை... கஷ்டப்பட்டு படிக்க வந்திருக்கான். இனி இவன்கிட்ட உங்க பிரண்ட்ஸ் யாரும் முறைச்சிக்காம இருக்கச் சொல்லுங்க..."

"ஓகே... இனி நாம பிரண்ட்ஸ்... சரி போங்க..." என்ற இளங்கோவிடம் "என்ன மாப்ளே... சட்டுன்னு மாறிட்டே..." என்றான் ஒருவன்.

"சும்மா இருங்கடா.... பூபாலண்ணன் மாதிரி ஒரு ஆளோட தம்பிங்கிறதாலதான் அவன்கிட்ட அந்த எதிர்ப்பு ரத்தம் ஓடுது... பாத்தியல்ல அடிச்சிப்பாரு காலேசை விட்டுப் போகும்போது தலையிருக்காதுன்னு சொல்றான்... அப்படியே நடக்கும்... நேரம் வரும் போது அந்த ராம்கியை தனியா பாத்துக்கலாம்... விடுங்க..." என்றபடி கிளம்பினான்.

"எதுக்குடா அவங்ககிட்ட முறைச்சிக்கிட்டு... " என அறிவு கேட்க,
"இல்ல மச்சான்... அவனுகளை விட்டா நம்மளை தினம் வம்பிழுப்பாய்ங்க... அதான் நம்ம எதிர்ப்பையும் காட்டிப் பார்த்தேன்... இல்லைன்னா ராம்கியை எப்படியும் அடிக்க நினைப்பாய்ங்க... இனி நாமல்லாம் இருக்கதால யோசிப்பாய்ங்க... சரி விடுங்க... அடேய்... ஐயா வீடு போறேன்... நொய்யா வீடு போறேன்னு சுத்தாம ஒழுங்கா காலாகாலத்துல வீடு போய் சேரு... புவனாவை காலேசுல பாத்துக்கலாம்... சரியா"

"எதுக்குடா சும்மா சும்மா அதையே சொல்றீங்க.. புக் ஒர்க் அதனால போனேன். சரி வாங்க... ஞாயிற்றுக்கிழமை படத்துக்கு போறோம்... பொங்கலுக்கு அண்ணன் செவ்வாய்க்கிழமை வருது. அப்புறம் பொங்கல் வேலை அது இதுன்னு அந்த வாரம் ஓடிடும்... எல்லாரும் பொங்கலுக்கு எங்க வீட்டுக்கு வாறீங்கதானே... அம்மாகிட்ட சொல்லிட்டேன்..."

"வர்றோமுடா... உன்னோட பொங்கலுக்குத்தானே வரச்சொன்னே?"  என்றான் சேவியர்.

"என்னோட பொங்கலா?"

"அதான்டா மாட்டுப் பொங்கல்..." என அண்ணாத்துரை எடுத்துக் கொடுத்தான்.

"ம்.. பொண்ணுங்களையும் கூட்டிக்கிட்டுப் போகலாம்டா..."

"பொண்ணுங்களா... எல்லாரும் வரமாட்டாளுங்க... எதுக்கு தேவையில்லாத வேலை...நாங்க மட்டும் வந்தா போதும்" என்றான் சரவணன்.

"இல்லடா... மல்லிகாவும் இன்னும் ரெண்டு மூணு பேரும் வந்தா பிரச்சினையில்லடா..."

"வரலைன்னா என்ன பிரச்சினை?" என்றான் அறிவு.

"இருக்குடா... புவி... "

"புவியின்னா..?" இடைமறித்தான் அண்ணாத்துரை.

"புவியா... என்னமோ சொல்ல வந்தேன்... மறந்துட்டேன்... இல்லடா... மத்த பிரண்ட்ஸ் வாறேன்னு நிக்கிறாங்க... அதான்... மல்லிகாவும் மற்றவங்களும் வந்தா கொஞ்சம் நல்லாயிருக்கும்..."

"மத்த பிரண்ட்ஸ்ன்னா..?"

"புவனாவும் அவங்க பிரண்ட்டுந்தான்...."

"அவ எதுக்கு பொங்கலுக்கு..."

"இது தலைப் பொங்கல்டா மச்சான்..."

"சும்மா கேலி பேசிக்கிட்டு... பிரண்ட்லியா வாறேன்னு சொன்னாங்க அதான் மல்லிகாவைக் கூப்பிடலாம்ன்னு..."

"மச்சான் சக்களத்தி சண்டை வந்துறாம... பாத்துக்க..." என்றான் பழனி.

"சும்மா போங்கடா... மல்லிகா என்னோட நல்ல தோழி போதுமா?"

"சரி பொங்கல்ல பொங்குறதைப் பார்ப்போம்..." என்றபடி சைக்கிளை மிதிக்க, "சரிடா ஐயா வீட்டுக்குப் பொயிட்டுப் போகணும்... வாறேன்டா..." என்று ஐயா வீட்டை நோக்கி சைக்கிளை ராம்கி திருப்ப, "பாத்துடா மாப்ளே... எங்க போய் முடியப் போகுதோ... உனக்காக நாங்க அடி வாங்குறது உறுதிடோய்.." என்று கத்தினர்.

(சனிக்கிழமை தொடரும்)
-'பரிவை' சே.குமார்.

செவ்வாய், 15 அக்டோபர், 2013

நண்பேன்டா : அண்ணாத்துரை


ல்லூரியில் சேர்ந்த முதல் நாள்... அதுவரைக்கும் பள்ளியில் நண்பர்களாக இருந்தவர்கள் ஆளாளுக்கு ஒரு பிரிவுக்குச் சென்றுவிட தனித்து விடப்பட்டவன் போல் உணர்ந்தேன். எங்கெங்கோ இருந்து வந்திருந்தார்கள். எல்லா முகமும் புதியது. பனிரெண்டாம் வகுப்புவரை ஆண்கள் பள்ளி, கல்லூரியில் இருபாலரும் படிக்கும் இடம்... வித்தியாசமாக இருந்தது.

புதியவர்கள், துறைத்தலைவரின் முதல் வகுப்பு, அடுத்து வந்தவர் ஆங்கிலத்தில் முழு வகுப்பையும் எடுத்தது என வித்தியாசமான ஒரு பயணம் ஆரம்பமானது. எனக்கு அருகில் இருந்தவன் சினேகமாக சிரித்தான்... பின்பு பேசினான்... நான் சேவியர், ஆனந்தூருக்குப் பக்கம்... நீங்க...? என்றதும் நானும் சொன்னேன். பின்பு எங்களுக்குள் பேச்சில்லை.... மதியம் வகுப்புக்கள் இல்லை என்றதும் சைக்கிளில் வீட்டை நோக்கிப் பறந்துவிட்டேன். இது சேவியரைப் பற்றிய பகிர்வு இல்லை... சேவியர் பின்னால் வருவான்.

மறுநாள் கல்லூரிக்குச் சென்றதும் சேவியர் சினேகமாகச் சிரிக்க, நானும் சிரித்தேன்.கொஞ்சமாய்ப் பேசினோம். அப்போது சற்றே கருப்பாக... ஒல்லியாக ஒருவன் வந்து சேவியருக்கு அருகில் அமர்ந்தான். 

"அலோ... நான் அண்ணாத்துரை... கடம்பங்குளம்..." என்று சேவியருக்கும் எனக்கும் கை கொடுத்தான். அவனது கையைப் பிடிக்கும் போது அந்த ஒல்லி உடம்புக்குள் திடகாத்திரமான ஆள் இருக்கிறான் என்று தெரிந்தது. ஆம் விவசாயம் பார்த்து காய்த்துப் போன கை சொறசொறப்பாக இருந்தது. 

"கடம்பங்குளம்... காளையார் கோவிலா?" - இது சேவியர்

"ஆமா... பரமக்குடி ரூட்ல..."

"அப்பிடியா... அப்போ காளையார்கோவில்லதான் படிச்சீங்களா?..."

"ஆமா"  - இப்படியாக அவர்களுக்குள் பேச்சு நடந்தது. இருவரும் நெருக்கமான நட்பில் வர நான் தனித்து நின்றேன். அப்போது என்னுடன் முதல் வகுப்பில் இருந்து பனிரெண்டாம் வகுப்பு வரை  ஒன்றாகப் படித்த சிவபாலமூர்த்தி எங்கள் வகுப்பிற்குள் நுழைந்தான். எனக்கு சந்தோஷமாக இருக்க, "என்னடா... காரைக்குடி போறேன்னு சொன்னே... இங்க வந்துட்டே" என்றதும் "அங்க இடம் கிடைக்கலை... அதான் ஆளைப் பிடிச்சி இங்க வந்துட்டேன்..." என்றபடி பின்னால் போய் அமர்ந்தான். அதுக்கு அப்புறம் முன்னே வரவேயில்லை. அவன் அடிதடி குரூப்பில் இணைந்துவிட்டான்.

சில நாட்களில் எனக்கும் சேவியருக்கும் இடையில் அமர்ந்த அண்ணாத்துரை, என்னுடன் மிகவும் நெருக்கமானான். அவர்கள் இருவரும் சேர்ந்து ஒன்றாக அறை எடுத்துத் தங்கினார்கள்... பெரும்பாலான பொழுதுகள் அவர்கள் அறையில் அவர்கள் சமைத்த சமையலை சாப்பிட்டு... அவரகளுடன் தங்கி... சந்தோஷமாகக் கழிய ஆரம்பித்தது.

அண்ணாத்துரை எங்க வீட்டுக்கு வந்து தங்கி எங்கள் குடும்பத்தில் ஒருவனாய் ஆனான். அண்ணன் திருமணம்... அக்கா திருமணம் எல்லாவற்றிலும் ஓடியாடி வேலை பார்த்தான். ஒரு வேலையாக காளையார்கோவில் போன எங்கப்பாவை அவர்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்று தங்க வைத்து அனுப்ப, திடீரென ஒருநாள் அவனது அப்பா விளைந்த காய்கறிகள், அரிசி, கொள்ளு என எல்லாம் அள்ளிக் கட்டிக்கொண்டு வந்து இரண்டு நாட்கள் தங்கிச் செல்ல, கல்லூரி நட்பு குடும்ப நட்பானது.

விடுமுறையில் கடம்பங்குளத்தில் நான்கைந்து நாட்கள் தங்கியிருந்தேன். அக்கா, தங்கை, அண்ணன், தம்பி என எல்லாரும் பாசத்துடன் பழகினார்கள். என் மகன் வந்திருக்கான் என அண்ணாத்துரையின் அம்மா நாட்டுக்கோழி அடித்து ரசம் வைத்து சாப்பிடு... சாப்பிடு... என்று பார்த்துப் பார்த்து கவனித்தார்கள். 

தொடர்ந்து சென்ற எங்கள் நட்பு, கல்லூரி வாழ்க்கைக்குப் பிறகு நீடித்தாலும் அப்புறம் வாழ்க்கை ஓட்டத்தில் சற்று இடைவெளியானது. பின்னர் அவனது திருமணம், எனது திருமணம் என மீண்டும் இணைந்து பயணித்தோம். அதன் பிறகு அபுதாபி வந்ததும் அவனது நம்பரில் தொடர்பு கொள்ள முயன்றபோது அது உபயோகத்தில் இல்லை. ஒவ்வொரு முறை ஊருக்குச் செல்லும் போதும் காளையார் கோவில் ஒரு எட்டு பொயிட்டு வந்துடலாம் என்று நினைப்பதுண்டு... ஒரு மாத விடுமுறை எங்கும் பயணிக்கவிடாமல் பண்ணி விடுகிறது.

அண்ணாத்துரை, நீ எங்கிருந்தாலும் நன்றாக இருப்பாய் என்று மட்டும் எனக்குத் தெரியும். விரைவில் உன்னை சந்திப்பேன் என்றும் நம்புகிறேன், நம் நட்பின் வாசம் நம்மோடு மட்டும் போகாமல் குடும்ப உறவாய் ஆனது. அது மீண்டும் பூக்கும் என்ற நம்பிக்கையுடன்....


நண்பேன்டா தொடரும்...
-'பரிவை' சே.குமார்.