மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 11 ஜூலை, 2015தொடர்கதை : வேரும் விழுதுகளும் (பகுதி - 26)

முந்தைய பகுதிகள் :


"சரித்தான்... இப்ப பிரிச்சது அப்படியே இருக்கட்டும்... அப்புறம் பாத்துக்கலாம்..." 

"சரி.. மாப்ள... மாமாக்கிட்ட பேசினியா... என்னதான் சந்தோஷமா சொத்தைப் பிரிச்சிக் கொடுத்தாலும் ரெண்டு பேரு மனசுக்குள்ளயும் எதோ சஞ்சலம்... அதை முகத்துல பார்த்தேன்... கொஞ்சம் பிரியாப் பேசுங்க... மணிக்கிட்டயும் சொல்லி பேசச் சொல்லு... ஏன்னா அவரு எதையாவது நினைச்சி ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆயிடாம..."

"சரித்தான்... நாளைக்கு கூப்பிட்டுப் பேசுறேன்... உடம்பைப் பாத்துக்கங்க..." என்றான் குமரேசன்.

இனி...

"என்னங்க சாப்பிட வாங்க... வேலைக்குப் பொயிட்டு வந்தா குளிச்சிட்டு சாமி கும்பிட்டு காலாகாலத்துல படுக்கலாமில்ல... பிள்ளைங்க மாதிரியே டிவிய கட்டிக்கிட்டு அழுகிறீங்க..?" சமயலறையில் இருந்து கத்தினாள் அபி.

"அட கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்கிறேனே... நீயுந்தான் வந்த உடனே சீரியல் எல்லாம் பாக்குறே...? நா என்ன நியூஸ் பாப்பேன், இல்லேன்னா இதுகளோட சேர்ந்து சிரிப்பொலி பாப்பேன்... அது பிடிக்கலையா...." பதிலுக்கு குமரேசனும் கத்தினான்.

"ஆமா... உங்க பிள்ளைங்கக்கிட்ட நா சீரியல் பாத்துட்டாலும்... எந்த நேரமும் சுட்டி டிவியை கட்டிக்கிட்டு அழுகுறான்... சாப்பிட்டுப் போயி எவ்வளவு நேரம் வேணுமின்னாலும் பாருங்க... எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு... சீக்கிரமே படுக்கணும்..."

"சரி... சரி.... வர்றோம்... டேய் வாங்கடா... அம்மாவுக்கு முடியலை போல... பாவம்... எல்லாருமா எடுத்து வச்சி சாப்பிட்டு வருவோம்.." என்றபடி டிவியை அணைத்துவிட்டு எழுந்தான்.

அபி வைத்த தோசையை சாப்பிட்டபடி "அபி இன்னைக்கி அத்தாங்கிட்ட பேசினேன்..."

"ம்..."

"என்ன ம்...?"

"அப்புறம் என்னங்க... நேத்துத்தான் அண்ணனைப் பாத்துட்டு வர்றோம்... இன்னைக்கி பேசினா... அப்படி என்ன முக்கியமா பேசியிருக்கப் போறீங்க?"

"இல்ல முக்கியமான மேட்டராத்தான் பேசினேன்..."

"தோசையை பிய்த்து வாய்க்கு கொண்டு போனவள் அதை வாயில் வைக்காமல் "அப்படி என்னங்க தலை போற விஷயம்?"

"இல்ல... அண்ணி பேசுச்சுல்ல.."

"அக்கா என்ன சொன்னுச்சு...?"

"ஒண்ணுமே தெரியாது உனக்கு... அசடு மாதிரி கேள்வி கேப்பே... நேத்து சொத்துப் பிரிக்கும் போது மாமரத்துக் கொல்லையைக் கேட்டு பிரச்சினை பண்ணலை..."

"ஓ அதுவா... நமக்கு வீட்டைக் கொடுத்துட்டாங்கன்னு கேட்டுச்சு... அதுக்கென்ன இப்போ..?"

"அதான் அந்த இடத்தை அண்ணன்கிட்டயே கொடுத்துடலாம்ன்னு அத்தான்கிட்ட பேசினேன்..."

"ஆமா... நாம என்ன அங்க போயி தோட்டந்தொரவா போட்டுக்கிட்டு இருக்கப் போறோம்... அவுங்களுக்காச்சும் பயன்படட்டுமே..."

"அம்மா சட்னி கொடுங்க..." என்று கேட்ட முகேஷூக்கு சட்னி வைத்தவள் "ஏய் வச்சதே ஒரு தோசை... அதையும் கொறிச்சிக்கிட்டே இருக்கே... பொம்பளப்புள்ள நல்லாச் சாப்பிடு... " என திவ்யாவை அதட்டி விட்டு "இவளைச் சாப்பிட வைக்கிறதுதாங்க எனக்கு பெரிய பிரச்சினை... ஸ்கூலுக்கு கொண்டு போற சாப்பாட்டை அப்படியே கொண்டுக்கிட்டு வந்துடுறா..." என்றாள் குமரேசனிடம்.

"திவ்வி... வயசுப்புள்ள நல்லாச் சாப்பிடணும்...உன்னோட வயசுல எல்லாம் சுந்தரி அத்தை... கண்மணி அத்தையெல்லாம் எத்தனை தோசை சாப்பிடுவாங்க தெரியுமா... அப்பத்தாவால எங்களுக்கு பலகாரம் பண்ணிப் போடமுடியாது... அதுனால பெரும்பாலும் கஞ்சியே வச்சிரும்..." என்றான் மகளிடம்.

"சாப்பிட்டுக்கிட்டுத்தானேப்பா இருக்கேன்..."

"சரி.. சரி.. சாப்பிடு..."

"நீங்க கதையை பாதியில விட்டுட்டீங்களே... சொல்லுங்க..."

"நீ என்ன சொன்னே?"

"நீங்கதானேங்க சொன்னீங்க?"

"இல்ல கடைசியா என்னமோ சொன்னியே... அது தெரிஞ்சாத்தானே ஒரு கண்டினியூட்டி வரும்..."

"ரொம்ப ஓவரு இதெல்லாம்... நாம என்ன பண்ணப்போறோம்... அவங்களுக்காச்சும் பயன்படட்டுமேன்னு சொன்னேன்."

"இதுதான்... இதைத்தான் அவருக்கிட்ட சொன்னேன்... ஆனா அவரு அதுக்கு விவரமா பேசி... அதெல்லாம் வேணான்னுட்டு சொல்லிட்டார்"

"அண்ணன் வேணான்னு சொன்னாரா...? ஏன்...? அப்ப அண்ணனுக்கு சின்ன மச்சினன் மேலதான் ரொம்ப பிரியம் போல... பேசாம திவ்வியை அந்த வீட்டு மருமகளாக்கிடுவோம்..."

"அம்ம்ம்ம்மா..."

"ஆமா என்னமோ நாளைக்கே கட்டிக் கொடுக்கப் போறமாதிரித்தான் கத்துறே... ஏய் வாயை மூடிக்கிட்டு சாப்பிடுடி..." என்றாள் அபி.

"வாயை மூடினா எப்படிம்மா சாப்பிடுறது... நீங்க செஞ்சு காமிங்க..." கேட்டு விட்டு சிரித்தான் முகேஷ்.

"அப்பன மாதிரியே தரித்திரம் இல்லாமப் பேசு..."

"ஆமா அவன் கேக்குறதுல என்ன தப்பு... வாயை மூடிக்கிட்டு எப்படி சாப்பிட முடியும்...?"

"சாமி... நீங்க ஆரம்பிக்காதீங்க.... "

"சரி... அவரு என்ன சொல்றாருன்னா... அபிக்கு மன வருத்தம் வந்துடாமன்னு சொல்லுறாரு..."

"எனக்கென்னங்க மன வருத்தம்... உங்க அண்ணன்... அவருக்கு கொடுக்கிறதுக்கு தடை போட நான் யாரு... எனக்கு எல்லா உறவுகளும் எங்கூட எப்பவும் சந்தோஷமா இருக்கணும் அதுதான் வேணும்... இந்த சொத்து பத்துகாக அத்துக்கிட்டு நிக்கக்கூடாது..."

"உன்னையப் பத்தி என்னைவிட அத்தானுக்கு நல்லாத் தெரியும்... உன்னையே நம்பி வந்தவடா அவ மனசு கோணம நடந்துக்கன்னுதான் சொல்லுவாரு... அவரு சொன்னதும் சரிதானே...?"

"எப்படி சரியாகும்? இடத்தைக் கொடுத்தா என்னவாம்?"

"இல்ல ரோட்டோரத்துல இருக்கது அது ஒண்ணுதான்.... அதையும் தூக்கிக் கொடுத்துட்டா...நாளப்பின்ன நாம வீடு கட்ட நினைச்சாலும் முடியாதுல்ல..."

"அதுதான் நமக்கு பழைய வீடு இருக்குல்ல..."

"இருக்குதான்... ஆனா செட்டியாரு கொல்லையில இஞ்சினியரிங் காலேசு வருதாமே... அப்ப நமக்கு அங்கன ஒரு வீட்டைக் கட்டினா வாடகைக்கு விடலாம்ன்னு தோணுமில்ல..."

"ஓ... அப்படியா..."

"இதெல்லாம் அண்ணிக்குத் தெரிஞ்சுதான் பிளான் பண்ணுதுன்னு அத்தான் சொல்றாரு..."

"அடேங்கப்பா... அக்கா பயங்கரமா கணக்குப் போடுதே.... சரி... இதுக்காக சண்டை வம்புன்னு வராம கொடுத்துருங்களேன்..."

"நானும் அதான் சொன்னேன்.. ஆனா அத்தான் அது கிடக்கட்டும்... மகா கல்யாணத்துக்கு நீ நல்லாச் செய்யின்னு சொல்றாரு... அதுவும் சரியின்னு படுது... இப்ப கொடுக்க வேண்டாம்... பின்னால சூழ்நிலை எப்படின்னு பாத்துக்கிட்டு கொடுக்கலாம்..."

"ம்... அண்ணன் சொன்னா சரியாத்தான் இருக்கும்... கிடக்கட்டும்... மகா கல்யாணத்தப்போ பாத்துக்கலாம்...." என சாப்பிட்ட தட்டுக்களை எடுத்துக் கொண்டு எழுந்தாள்.

"அப்பறம் அப்பா, அம்மா முகமே சரியில்லையாம்... பேசச் சொன்னாரு..."

"ஆமாங்க நேத்தே மாமா முகம் நல்லாயில்ல... பேசினீங்களா...? என்ன சொன்னாங்க...?"

"பேசலை..."

"ஏன்? பேசியிருக்கலாமே...?"

"இல்ல பிள்ளைங்ககிட்ட பேசினாங்கன்னா மனசு கொஞ்சம் ரிலாக்ஸாகும் இல்லையா... அதான் வீட்ல வந்து பண்ணலாம்ன்னு நினைச்சேன்..."

"ம்... இப்ப பண்ணினா என்னமோ ஏதோன்னு பதறிருவாங்க... காலையில பேசலாம்..."

"ம்..."

"ஏலா... இந்தப் பயலுவ ரெண்டு பேரும் ஒரு போனு கூட பண்ணலையே...?" கயிற்றுக் கட்டிலில் படுத்துக் கொண்டு பனை விசிறியால் வீசியபடி மோட்டு வலையை பார்த்துக் கொண்டே கேட்டார் கந்தசாமி.

"நல்லாத்தேன்... நேத்துத்தானே போனானுங்க... இன்னைக்கி எப்படி போனு பண்ணுவாய்ங்க... ரொட்டா ரொட்டான்னு போனு பண்ணிக்கிட்டே இருக்கனுமாக்கும்..."

"ஏலா உனக்கு இம்புட்டுக் கோவம் வருது...?"

"பின்ன என்ன... மொத நா வேலை... கொஞ்சம் கூடக் கொறய இருக்கும்... இதுல போனு எங்கிட்டு பண்றது போனு..."

"சரிலா... எதுக்கு ராவுல கத்துறே...?"

"கத்தலை.... சொன்னேன்..."

"சொன்னதே ஆந்த அலறுன மாதிரி இருக்கு..." மெதுவாக முணங்கினார்.

"என்ன...?"

"ஒண்ணுமில்ல... அதைவிடு... எனக்கு ஒண்ணு தோணுதுலா..."

"மோட்டு வலையைப் பாத்தா?"

"நக்கலா... இந்த கண்ணதாச பயலுக்கு நாம ஒண்ணுமே கொடுக்கலையே... ஏதாவது கொடுத்தா என்னன்னு தோணுதுலா..."

"அதான் சொத்த சரிபாதியா பயலுகளுக்கு பிரிச்சிக் கொடுத்தாச்சே... சும்மாவே ஏ நண்ணமக சொத்துக்கு ஏழரையைக் கூட்டப் பாத்தா... இதுல கண்ணதாசனுக்கு கொடுக்கணுமின்னு சொல்லியிருந்தா பத்ரகாளி ஆயிருக்கமாட்டா...."

காளியம்மாள் இப்படிக் கேட்டதும் கண்ணதாசனுக்கு எதாவது செய்யணுமின்னு சொன்னா மீண்டும் ஒரு பிரச்சினை வருமோ என்ற ஐயம் அவருக்குள்ளும் ஒட்டிக் கொள்ள, மேற்கொண்டு பேசாமல் அமைதியாக எங்கோ ஆந்தை அலறும் சத்தம் கேட்க, நாய்கள் குரைக்க ஆரம்பித்தன.

(வேரும் விழுதுகளும் வளரும்)
-'பரிவை' சே.குமார்.

1 கருத்து:

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...