சனி, 29 ஆகஸ்ட், 2015

வலைப்பதிவர் திருவிழா - 2015

ன்று தமிழ் வலைப்பூக்களின் வண்ணத் தேர் இணையத்தின் மூலமாக உலகெங்கும் வலம் வந்து கொண்டிருக்கிறது. முகமறியாத மனிதர்களை இணைக்கும் பாலமாக எழுத்து இருக்கிறது. எத்தனையோ விதமான எழுத்துக்களை வாசித்து சந்தோஷிக்கும் ஒரு இடமாக, ஒருவருக்கு ஒருவர் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளும் பாலமாக இருகிறது வலைப்பூக்கள். இந்த வலைப்பூக்களில் எழுதும் எண்ணற்ற எழுத்தாளர்கள் உறவுகளாய் ஒன்றிக் கிடக்கிறார்கள். எத்தனையோ உறவுகளையும் நட்புக்களையும் கொடுக்கும் வலைப்பூ உலகில் தமிழ் வலைப்பூக்களே முன்னணியில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழனாய்...  தமிழ் வலைப்பதிவராய்... இணைய எழுத்தாளராய் வாழ்வது கூட ஒரு வரம்தான்.

சரி விஷயத்துக்கு வருவோம்... இன்று சாதிக்கொரு கட்சி... வீதிக்கொரு கட்சி என்று ஆகிவிட்ட தமிழகத்தில் தடுக்கி விழுந்தால் மாநாடு நடத்திக் கட்சி நடத்தும் காட்சிகளைக் கண்டு வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களின் முன்னே கடந்த சில வருடங்களாக வலைப்பதிவர்கள் மாநாடு என்ற ஒன்றை நடத்தி இது என்ன மாநாடு... இவர்கள் யார்... என்று சிந்திக்க வைத்தவர்கள் நம் வலைப்பதிவர்கள்.  தலைநகர் சென்னையில் தொடங்கி... சங்கம் வளர்த்த மதுரைக்கு வந்து... நான்காம் ஆண்டு பதிவர் திருவிழாவிற்காக கலைக்கோட்டையாம் புதுக்கோட்டையில் மையம் கொண்டிருக்கிறது.

வலைப்பதிவர்களில் புதுக்கோட்டை வலைப்பதிவர்கள் எல்லாருமே கணினித் தமிழச்சங்கம், முழு நிலா முற்றம் என எப்போதுமே ஒன்றிணைந்து மிக அழகாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். புதுக்கோட்டையில் வலைப்பதிவர் மாநாடு என்று போனவருடம் மதுரையில் சொன்னதில் இருந்தே அவர்கள் அதற்கான பணியில் இறங்கிவிட்டார்கள். இவர்களை எல்லாம் வழிநடத்தும் திரு. முத்து நிலவன் ஐயா அவர்கள் புதுகை வலைப்பதிவர்களுக்குக் கிடைத்த மிகச் சிறந்த தலைமை. இவர் எழுத்தாளர், வலைப்பதிவாளர், பட்டிமன்றப் பேச்சாளர் எனப் பன்முகம் காட்டுபவர். அவரின் தலைமையில் விழாவிற்கான வேலையை விரைந்து செய்து வருகிறார்கள்.

மதுரை விழாவிற்கு ஓடியாடி வேலை பார்த்த சீனா ஐயாவுக்கு உதவியாய் இருந்தவர்களில் குறிப்பாக திண்டுக்கல் தனபாலன் அண்ணாவைச் சொல்லலாம். ஏனென்றால் வலையுலகில் வலைச்சித்தர் என்று பெயர் எடுத்து வைத்திருக்கும் இவர், வலையுலக படைப்பாளிக்களுக்கு வலைப்பூ சம்பந்தமான பிரச்சினைகளை தீர்த்து வைப்பதில் இவருக்கு நிகர் இவர்தான். அதேபோல் வலைப்பதிவர் மாநாடு என்றால் முன்நின்று வேலை பார்ப்பதிலும் இவருக்கு நிகர் இவர்தான். இப்போது புதுக்கோட்டை விழாவிற்குக்கூட நிறைய மெனக்கெடல்களுடன் அழகான பகிர்வுகள்... தொழில் நுட்ப உதவிகள் என அடித்து ஆடிக் கொண்டிருக்கிறார்.

விழாவில் கலந்து கொள்பவர்கள் விவரங்களைச் சேகரித்துக் கொண்டிருக்கிறார்கள். ஏறத்தாழ 50 பேருக்கு மேல் வருவதாக பெயர் கொடுத்திருக்கிறார்கள். அதற்கான விவரக் குறிப்புக்களை தனபாலன் அண்ணா தனது தளத்தில் பகிர்ந்திருக்கிறார். மேலும் வலைப்பதிவர் மாநாடு குறித்த விவரங்களைப் பகிர்ந்து கொள்வதற்கென்றே புதிய வலைப்பூவை தயார் செய்திருக்கிறார்கள். விழாவில் பதிவர்கள் குறித்த விவரங்கள் அடங்கிய கையேடு ஒன்றை அனைவருக்கும் கொடுக்க இருக்கிறார்கள். இதற்கான விவரங்களையும் சேகரிக்கிறார்கள்... இதில் விழாவுக்கு வருபவர்கள் மட்டுமின்றி உலகெங்கும் இருக்கும் தமிழ் வலைப்பதிவர்கள் அனைவரும் தங்கள் விவரக் குறிப்புக்களைப் பகிர்ந்து கொள்ளலாம். அதற்கான பதிவும் நடந்து கொண்டிருக்கிறது.

4வது தமிழ் வலைப்பதிவர் திருவிழா குறித்த விவரங்களை முத்து நிலவன் ஐயா, திண்டுக்கல் தனபாலன் அண்ணா, தேவதா தமிழ் கீதா அக்கா உள்ளிட்ட பலர் தங்கள் வலைத்தளங்களில் பகிர்ந்து வந்து கொண்டிருக்கிறார்கள். அவற்றைப் படித்தால் விவரம் அறிந்து கொள்ளலாம். விழாவை வெற்றிகரமாக நடத்த வலைப்பதிவர்களின் அன்பளிப்பும் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. 

-------------------------------------------------------

விழா இடம்... நாள்...

ஆரோக்கியமாதா மக்கள் மன்றம்
பீ வெல் மருத்துவமனை எதிரில்
பழைய பேருந்து நிலையம் அருகில்
ஆலங்குடி சாலை, புதுக்கோட்டை

அக்டோபர், 11 - 2015
ஞாயிற்றுக் கிழமை.

-------------------------------------------------------

விழாவில் பதிவர் கையேடு வழங்குவதுடன் ஜெயக்குமார் ஐயா, விமலன் அண்ணா ஆகியோரின் புத்தகங்கள் வெளியிடப் படுவதாகவும் பதிவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட இருப்பதாகவும் தற்போதுவரை வெளியிடப்பட்டிருக்கிற பதிவுகள் தெரிவிக்கின்றன. வலைப்பதிவர்களின் புத்தக வெளியீட்டில் இன்னும் பலரும் இணையலாம் என்றே தோன்றுகிறது.


விழா குறித்த விவரம் அறிய விழாவுக்காகவே தயார் செய்யப்பட்ட வலைப்பக்கம் செல்ல...
வலைப்பதிவர் சந்திப்பு-2015 

விழா குறித்த் நிறைவான விவரங்களை அறிய திரு. முத்து நிலவன் ஐயா அவர்களின் வலைப்பூவிற்குச் செல்லுங்கள்...
வளரும் கவிதை 

விழா விவரங்கள், பதிவு செய்தோர் விவரம், பணம் அனுப்பியோர் விவரம் என எல்லாமே உடனுக்குடன் புள்ளி விவரமாக அறிய் திரு. தனபாலன் அண்ணா அவர்களின் வலைப்பூவுக்குச் செல்லுங்கள்...
திண்டுக்கல் தனபாலன்

லைப்பதிவர் கையேட்டில் உங்கள் விவரங்களும் இடம்பெற bloggersmeet2015@gmail.com என்ற மின்னலுக்கு உங்கள் விவரங்களை புகைப்படத்துடன் அனுப்பி வையுங்கள்.

வலைப்பதிவர் விழா அழைப்பிதழ் உங்கள் பார்வைக்காக...

திண்டுக்கல் தனபாலன்

விழா சிறக்க வாழ்த்துக்கள்... நாங்கள்தான் கலந்து கொள்ள முடியுமா தெரியவில்லை... ஊரில் இருக்கும் நண்பர்கள் அனைவரும் முடிந்தளவு கலந்து கொள்ள முயற்சியுங்கள்... விழா வெற்றி விழாவாகட்டும்... நாமும் கோட்டையைப் பிடிக்கும் நாள் விரைவில் வரும் என்பதைப் பறை சாற்றுவோம்... இது அந்தக் கோட்டையை அல்ல... தமிழ் எழுத்தாளர்களாய்... உலகம் போற்றும் வலைப்பதிவர்களாய்... வெற்றிக் கோட்டையைப் பிடிக்கும் நாள் விரைவில் வரும் என்று சொல்ல வந்தேன்....

சரிங்க... நம்ம தனபாலன் அண்ணன் எந்த ஊர்ல இருந்து எத்தனை பேர் வர்றாங்கன்னு விவரமெல்லாம்  போட்டிருக்காரு.. எங்கெங்கோ இருந்தெல்லாம் வர்றாங்க... ஆனா தேவகோட்டை, காரைக்குடியில் இருந்து இதுவரை ஒரு பதிவர்கூட பெயர் கொடுக்கவில்லை. நிறையப் பேர் எழுதுறாங்க... ஆனா எல்லாரும் வெளியூர்களில் இருப்பார்களோ என்னவோ தெரியலை.... எது எப்படியோ கலந்து கொள்வோர் பட்டியியல் நம் ஊர் பெயரும் வரவேண்டும் நண்பர்களே... முயற்சியுங்கள்.... 

தேவகோட்டைப் பதிவர்கள் எல்லாம் வெளிநாடு வாழ் பதிவர்களாகிவிட்டோம் என்று நினைக்கிறேன்... வருவது குறித்து இன்னும் சரியான முடிவு கிடைக்காத சூழல்... எங்கள் ஆசை அண்ணன்... மீசை மன்னன்... தேவகோட்டை கில்லர்ஜி எல்லாருடைய சார்பாகவும் கலந்து கொள்வார் என்று நினைக்கிறேன்.... :).

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்....
வலைப்பதிவர் மாநாடு சிறக்கட்டும்...
வாழ்க தமிழ்... வளர்க நம் தமிழ்...

இந்தப் பாட்டையும் கேட்டுட்டுப் போங்க...


நட்புடன்....
-'பரிவை' சே.குமார்.

வெள்ளி, 28 ஆகஸ்ட், 2015

அப்பாவா இப்படி..!

ப்பா அம்மாவிடம் சொன்னதைக் கேட்டதும் வருணுக்கு ஆச்சர்யமாக இருந்தது. ஆனாலும் உடனே எழுந்து போனால் சரியா வராது என்று நினைத்தபடி டிவி பார்த்துக் கொண்டிருந்தான். ஆனால் மனசுக்குள் மட்டும் எப்படி இப்படி என்ற எண்ணம் வினாக்களை எழுப்பிக் கொண்டே இருந்தது.

இது நடக்கக்கூடிய காரியமா...? இது எப்படி சாத்தியமானது..? அப்படியா... இப்படியா... என எப்படி யோசித்துப் பார்த்தாலும் அவனுக்கு எப்படி நடந்திருக்கும் என்ற விடை மட்டும் தெரியவில்லை. அதற்கான விடை தெரியவில்லை என்றால் மண்டைக்குள் எழும் அப்படி இப்படியான கேள்விகளால் மூளை சிதறிவிடும் போல் இருந்ததால் கொஞ்சம் ரிலாக்ஸிற்காக வடிவேலு காமெடி பார்க்க ஆரம்பித்தான். அதில் இவன் அதுக்கு சரிவரமாட்டான் என்ற காமெடி ஓடிக்கொண்டிருக்க எதுக்கு சரிவரமாட்டான்னு வடிவேலு தெரிஞ்சிக்க அலைஞ்சிக்கிட்டுருந்தாரு... அதைப் பார்த்ததும் இது எப்படி நடந்திருக்குமென மீண்டும் சிந்திக்க ஆரம்பித்தான்.

நம்ம அப்பா எப்ப சிம்புவோட அப்பாவா மாறுனாருன்னு யோசிச்சான்... நீங்க டிஆர்ன்னு நெனச்சா அது தப்பு... என்னா அவரு ரொம்பக் கூவுறாரு... இவரு கூவவே மாட்டாரு... எதையும் கமுக்கமாத்தான் செய்வாரு... ஆனா இவனைத் திட்டுறதை மட்டும் பக்கத்து வீட்டு நந்தினிக்கு கேக்குற மாதிரித்தான் திட்டுவாரு... அதுவும் கரெக்டா அவ காலேசுக்குப் போகும்போது வாசல்ல நின்னு அத்தனை மாட்டையும் கூப்பிடுவாரு. .. இவனுக்கு அவ மேல ஒரு இது... அவளுக்கும் இவன் மேல கொஞ்சம் இது இருக்குங்கிறதை பார்வையும்... சிரிப்பும் சொல்லும்... இருந்தாலும் சொல்லவோ கேக்கவோ பயம்... என்னைக்காச்சும் ஒரு நாள் சொல்லிப்பான்... சரி விடுங்க... இது காதல் கதையில்லையே... எதுக்கு நாம அவன் காதல் பின்னால போகணும்... இங்க சிம்பு அப்பான்னு இவன் சொன்னது வாலு படத்துல சிம்புவுக்கு வர்ற அப்பா... ரொம்ப எதார்த்தவாதி... பையனைத் திட்டாத ஒரு நல்ல அப்பா... அப்பா அந்தப் படத்தைப் பார்த்துட்டு மாறிட்டாரோன்னு நினைச்சிக்கிட்டான். இருந்தாலும் அதற்கான சாத்தியக்கூறுகள் ரொம்பக் கம்மியேன்னு அவன் மனசு சொல்லிச்சு... காரணம் அப்பாவுக்கு சினிமா பிடிக்காது.


டிவியிலும் மனசு ஓடலை... எல்லாரையும் சிரிக்க வைக்கிற வடிவேலுவே அவனுக்கு போரடிக்க ஆரம்பிக்க, ஒவ்வொரு சானலாக மாற்றினான். 'ஏன்டா இப்படி மாத்திக்கிட்டே இருக்கே... கொஞ்ச நேரம் ஜோக் வையிடா'ன்னு கத்திய தங்கையை எப்போதும் கொலை வெறியோடு பார்ப்பவன், இன்று கொள்ளை அன்போடு பார்த்தான்.... சிநேகமாய் சிரித்தான்... 'ம்க்கும்.. இது இப்ப சிரிக்கும் அப்புறம் அடிக்கும் பேசாம எந்திரிச்சிப் போயிடலாம்' என்று எழுந்தவளை கையைப் பிடித்து இழுத்தான். என்னடா ரொம்ப பாசம் வழியுது என்றாள் பார்வையால்... 'அப்பா சொல்றது நிஜமாடி' கண்கள் விரியக் கேட்டான். 'எங்கிட்டே கேக்குறே... அப்பா அங்கதான் நிக்கிறாரு அவருகிட்ட கேளு... நீ ஒரு தண்டம்... அவரு ஒரு...' அதுக்கு மேல பேசாமல்   படக்கென்று எழுந்து சென்றாள் .அவளுக்கு இன்று அப்பா மேல் தனிப்பட்ட முறையில் கோபம்... எது கேட்டாலும் படிக்கிற புள்ளைக்கு எதுக்குன்னு திட்டுவாரு... ஆனா இன்று அவர் செய்த காரியம்... படிக்காத எருமைக்கு.... அதான்  அப்பாவை '.......' என்று சொல்ல வைத்தது.

எப்படி என்று யோசிக்கவெல்லாம் நேரமில்லை... எது எப்படியோ நடந்தவை நடந்ததாகவே இருக்கட்டும். இனி... அதாவது இன்று முதல் நடப்பவை நல்லதாக அமையட்டும் என்று நினைத்தபடி அப்பா அம்மாவை விட்டு நகரும் வரை காத்திருந்து அவசரமாக எழுந்து அவளிடம் ஓடினான். ' எப்படிம்மா...?அவரு சொல்றது உண்மைதானா...?'என்று அவளின் தோள் சாய்ந்து கேட்டான். 'ரொம்பக்  கொஞ்சாதே அவரு சொன்னது கேட்டுச்சுல்ல... உனக்கு கேக்கணுமின்னுதானே சத்தமாச் சொன்னாரு.... எங்கிட்ட வந்து உண்மையா பொய்யான்னு விசாரிக்கிறே?' என்று அவனைச் சீண்டினாள்.

'அப்பா.... அதுவும் நம்ம அப்பாவா... ஹிட்லராவுல்ல இருந்தாரு... எப்படி இப்படி மாறினாரு... எனக்குப் புரியவேயில்லை... அவருக்கிட்ட எப்பம்மா நான் பேசியிருக்கேன்...  இல்ல அவருதான் எப்ப எங்கிட்ட நல்லாப் பேசியிருக்காரு... என்னைய பாத்தாலே அவருக்கு உள்ளுக்குள்ள எரிச்சல்  எடுக்குது... நானா படிக்க மாட்டேன்னு சொன்னேன்... அது எங்கிட்ட வரலையின்னு சொல்லிருச்சு... சரி போன்னு விட்டுட்டேன்...  வேலைக்குப் போ... வேலைக்குப் போன்னா... சிம் கார்டு மாதிரி வீதி வீதியா போட்டு ஒண்ணு வாங்குனா ஒண்ணு ப்ரின்னு வேலையை விக்கிறானுகளா என்ன... போயி புரூப் கொடுத்து வாங்கிக்கிட்டு வர, நானுந்தான் அலையிறேன்...  கிடைக்கலை...' விஜபி தனுஷ் மாதிரி முகபாவனையை வைத்துக் கொண்டு பேசினான்.

'அப்பா... தம்பி... ராசா... உங்கப்பாரு முகம் கால் கழுவிட்டு சோபாவுல வந்து உக்காந்து டிவி பாக்குறாரு... நான் அவருக்கு காபி கொடுக்கணும்... நீ வேணுமின்னா அவருக்கிட்டே போயி கேளு' என்று அம்மா ஜகா வாங்க, 'ஆமா நா போயிக் கேட்டா கழுவிக் கழுவி ஊத்துவாரு... எனக்குத் தேவை பாரு...' என்று அகன்றாலும் இது எப்படி... அப்பாவா இப்படி... என்ற கேள்வி மட்டும் தொண்டைக்குள் தொக்கி நின்றது.

அப்போது வாசலில் சத்தம் கேட்டதும் எல்லோரும் எழ, முதல் ஆளாய் ஓடினான். அங்கே அப்பா அவனுக்காக வாங்கிய பைக்கை ஷோரும் பையன் ஓட்டி வந்து நிறுத்தினான். மாலை போட்டு பொட்டு வைத்திருந்த வண்டியைப் பார்த்ததும் அவனுக்கு சந்தோஷம் தாங்கவில்லை... 'என்னடா கலரு பிடிச்சிருக்கா...?' என்று பின்னாலிருந்து கேட்ட அப்பாவின் வாயில் முதன் முதலாக 'தண்டச் சோறு... முண்டம்... தறுதலை... வெட்டிப்பய... ஊருசுத்தி... ' எல்லாம் வரவில்லை... அப்பாவிடம் நிறைய மாற்றம்... எப்படி இது நடந்தது...? என்ற கேள்வி எழ, இனி எதுக்கு அதெல்லாம் எப்படியோ நடந்திருச்சு... என்று கேள்வியை அடக்கி ஆச்சர்யக்குறியாக்கி அப்பாவை ஒரு பார்வை பார்த்து மீண்டும் வண்டிக்கு திரும்பினான். மனசு மட்டும் வண்டியில் கை வைக்கத் துடித்தது, ஆனால் அவரு பாட்டுக்கு அர்ச்சனையை ஆரம்பிச்சிட்டான்னு யோசிச்சு பேசாமல் நின்னான்.

 சாவி நீட்டிய பையனிடம் காசு கொடுத்தபடி' தம்பிக்கிட்ட கொடுப்பா' என்றவர், 'போயி சாமிய கும்பிட்டுட்டு வா' என்றார். ஓடிப்போய் தீபாவளி அன்று பலகாரம் சுட்டதும் சாமிக்கிட்ட வச்சி கும்பிடு என்று அம்மா சொல்லும் போது வேகமாகப் போயி சாமிக்கு முன்னாடி வச்சிம் வைக்காமலும் விபூதியை பூசிக்கிட்டு வாய்க்குள் வைக்கும் அதே வேலையை படபடவென செய்து விட்டு வண்டிக்கு ஓடியாந்தான். அவனது பரபரப்பு அவர்களுக்கு இதழோரத்தில் சிரிப்பை வரவைத்தது.

'வண்டியை எடுத்துக்கிட்டு சுத்தாமா...இனியாச்சும் ஒரு வேலை தேடிக்கச் சொல்லு... அவனுக்கு பின்னால பொட்டப்புள்ள ஒண்ணு இருக்குங்கிற நினைப்பு இருக்கட்டும்...' என்று அம்மாவிடம் அப்பா சொல்லிக் கொண்டிருக்க, அதை எல்லாம் கண்டுக்காமல் தங்கையை தேடினான்... முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தவளைப் பார்த்து குரூரமாய் சிரித்தபடி எல்லாம் மறந்து பறக்கலானான்... எதிரே அதே புன்னகையில் நந்தினி... அவளைப் பார்க்கும் வரை அவனது அப்பா ஹீரோவாகத் தெரிய, பார்த்த பின் வருண் ஹீரோவானான்.

-----------------

(இது முதலில் கவிதையாய்த்தான் உருவானது. கவிதையை அப்படியே கதையாக மாற்றுவோமே என்ற முயற்சியில் கவிதையில் விதை எடுத்து கதை ஆக்கியாச்சு... என்ன அங்கங்கே மானே தேனே பொன்மானே போடுற மாதிரி நந்தினி, அம்மா, தங்கை கதாபாத்திரங்கள் இணைத்தாச்சு... கவிதையில் அப்பா வாங்கி வந்ததைப் பற்றி உண்மையா என்று மகன் யோசிப்பதாய் எழுதி கடையில் வாசலில் ஸ்கூட்டர் என்று எழுதியிருந்தேன்...)

-'பரிவை' சே.குமார்.

வியாழன், 27 ஆகஸ்ட், 2015

மனசின் பக்கம் : கொஞ்சமாய் பேசி... நிறைய வாழ்த்துவோம்

ணக்கம் உறவுகளே...!

ரம்பத்திலேயே சொல்லிக் கொள்கிறேன்... அலுவலகத்தில் கொஞ்சம் வேலை அதிகம்... அதனால் உங்கள் பதிவுகளை எல்லாம் இன்றில்லாவிட்டாலும் நாளை என்ற நிலையில் வாசித்து விடுகிறேன். ஆனால் கருத்து இடுவது ரொம்ப குறைந்து விட்டது. காரணம் அலுவலகத்தில் இருந்து வந்து சமைத்துச் சாப்பிட்டு பெரும்பாலும் இரவு பத்து மணிக்கு மேல் படுத்துக் கொண்டே வாசிப்பதாலும் மற்றவர்கள் உறங்கும் காரணத்தால் லைட் ஆப் செய்து விடுவதால் கருத்து இடுவதில் சிரமமாகி விடுகிறது. மற்றபடி உங்கள் பதிவுகளை எல்லாம் தொடர்ந்து வாசித்துக் கொண்டுதான் இருக்கிறேன். வார விடுமுறையில் கண்டிப்பாக வாசிக்கும் பதிவுகளுக்கு கருத்து இட்டுவிடுவேன். கொஞ்ச நாள்தான்... பின்னர் எல்லாம் சரியாகும் என்ற  நம்பிக்கை இருக்கிறது.

கைச்சுவையில் வைகைப்புயல் வடிவேலு களத்தில் இல்லாததால் விஜயகாந்தை வைத்து பெரிய காமெடி தர்பாரே முகநூலில் நடக்கிறது. இது அம்மாவுக்காக சிலர் செய்யும் செயல் என்று கூட என் நண்பர் என்னிடம் வாதிட்டார். விஜயகாந்த் நின்றால்... உக்கார்ந்தால்... சிரித்தால்... முறைத்தால்... என எல்லாமே நகைச்சுவையாகிறது. ஒரு மனிதரை கேலி பண்ணும் சுதந்திரம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் இதே ஜெயலலிதாவை எதிர்த்து சட்டசபைக்குள் குரல் கொடுத்த ஒரே ஆம்பளை விஜயகாந்த்தான்.... தன்னால் முடிந்த நல்ல செயல்களை செய்பவரும் விஜயகாந்த்தான்... தான் செய்ததை வெளியில் சொல்லாதவரும் அவர்தான்... ஆனால் சமீபகாலமாக தனது கட்சிக்கான முகநூல் பக்கத்தில் அவருக்காக தமிழில் டைப் செய்யும் நபர், விஜயகாந்த் செய்த செயல்களைப் பதியும் போது நான் இன்று இவருக்கு இவ்வளவு கொடுத்தேன் என்று  எழுதி வைக்கிறார். இங்கே நான் என்பது விஜயகாந்தைக் குறிக்கும்... ஒரு கை செய்வது மற்றொரு கைக்கு தெரியக் கூடாதுன்னு சொல்லுவாங்க.... ஆனால் இங்கு 'நான்...' 'நான்...' என்ற பெருமையே தலை தூக்கி நிற்கிறது. அதை மாற்றினால் நல்லது. சரி விஷயத்துக்கு வருவோம். விஜயகாந்த்  அரசியலில் எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும். தனி மனிதராப் பாருங்கள்.... எதற்காக அவர் மீது அப்படி ஒரு வன்மம்... விஜயகாந்த் பிறந்தநாள் அன்று ஒரு பெரிய கட்டுரை எழுதலாம் என்று நினைத்து வேலைச் சோர்வினால் முடியாமல் போக இங்கு ஒரு பாராவிற்குள் சுருக்கியிருக்கிறேன். என்னடா இவன் விஜயகாந்துக்கு சொம்பு தூக்குறானேன்னு நினைக்காதீங்க... அரசியல்வாதியாய் நான் விஜயகாந்தைப் பார்க்கவில்லை... காரணம் இக்கரைக்கு அக்கரைப் பச்சை என்று நினைத்தாலும் அங்கும் மாமன் மச்சான்தானே இருக்கானுங்க.... சரி விடுங்க... கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்த ஒரு நடிகனாய்... நல்ல மனிதனாய்... எனக்குப் பிடிக்கும்... அவருக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.



ரஞ்சு மிட்டாய் படம் பார்த்தேன்.... ஒரு நல்ல நடிகராய் விஜய் சேதுபதியைப் பிடிக்கும். குறைந்த செலவில் தானே படத்தை எடுத்து பாடல்களும் பாடி வெளியிட்டிருக்கிறார்.  ஆனால் அழுத்தமில்லாத கதையோட்டமும்.... உப்புச்சப்பில்லாத பாத்திரப் படைப்புக்களும் படத்தை பார்க்கும் போது நமக்கு ஒரு அயற்சியை ஏற்படுத்துவதைத் தவிர்க்க முடியவில்லை. மேலும் வளர்ந்து வரும் போது நல்ல பாத்திரங்களை எடுத்து செய்ய நினைப்போர் மத்தியில் இரண்டு கதாநாயகர்கள் கதை... இது போன்ற வீணாப்போன கதைகளை எடுத்து நடிப்பதைவிட அவரது திறமையை வெளிப்படுத்தும் விதமான கதாபாத்திரங்களில் நடித்தால் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்த இடத்தை தக்கவைத்துக் கொள்ளலாம். இல்லையேல் அடுத்த சூப்பர் ஸ்டார் நாங்கள்தான் என சிவகார்த்திகேயர்கள் அவரைப் பின்னுக்குத் தள்ளிவிடுவார்கள் என்பது சர்வ நிச்சயம். மாற்றங்கள் செய்து மீண்டும் மலர்வாரா பார்ப்போம்.

ம்மா அம்மான்னு நம்ம டவுசர் ராஜன் மதுரையில கூவியிருக்காரு கூவு எப்பா நம்மளாலே பாக்க முடியலை... எல்லாருக்கும் ஒரு அம்மா... ஆனா தமிழகத்துல இருக்க ஆறுகோடி மக்களுக்கும் அம்மாவாம் மக்கள் முதல்வர்.... அப்துல்கலாம் அவர்களின் இறுதி அஞ்சலிக்குக் கூட போகாத அம்மா ஒருவாரம் அரசு அலுவல்களை எல்லாம் அஞ்சலிக்காக நிறுத்திவைத்தாராம்...  சசிபெருமாள் ஐயா, டிராபிக் இராமசாமி ஐயா, இளங்கோவன், விஜயகாந்த், குஷ்பு என எல்லாரையும் கேவலமாகப் பேசுகிறார். கொடுத்த காசுக்கு நல்லா கூவியிருக்காரு.. ஆனா சினிமாவில் அம்மாவுக்கு நல்ல பிள்ளையாக... அம்மாவுக்காக ஒரு தனிப் பாடல் என நடித்தவர் இன்று கேடுகெட்ட அரசியலுக்காக அம்மாவைப் புகழ்கிறார். ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் வெள்ளிவிழா நாயகன்... பல அம்மாக்களின் மனம் கவர்ந்த நாயகன்... இவ்வளவு கேவலமாக... எல்லாம் அரசியல்... இதை வேற அம்மா புகழ் பாடும் தினமலர் 'மதுரையில் ராமராஜன் டமால் டுமீல்' அப்படின்னு போட்டு விடியோ பதிவேற்றம் செய்து வைத்திருக்கிறார்கள். என்ன டமால் டூமீலு.... இவனுக கலாம் ஐயா செத்தப்பவே 'காலமானார் கலாம்' அப்படின்னு போட்டவனுங்கதானே.... என்ன இருந்தாலும் எனக்கு கிராமத்து ராஜாவான ராமராஜனை ரொம்பப் பிடிக்கும். இப்ப இல்லைங்க நாயகனாய் ஜொலித்த காலத்தில்.... அதே மாதிரி அம்மாவையும் ரொம்பப் பிடிக்கும்... ஆமா என்னைப் பெற்ற அம்மாவையும்... என்னை மகனாகப் பார்த்த அம்மாக்களையும்...

வேரும் விழுதுகளும் தொடர்கதையை 33 அத்தியாயங்களோடு முடித்து விட்டேன். இன்னும் இழுக்கலாம்... கலையாத கனவுகள் போல் நீண்டு கொண்டே போய்விடுமோ என்பதால் சரியான சமயத்தில் முடித்தேன். முதல் தொடருக்கு இந்தளவுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இந்தக் கதையை பேராசியர்களும். பெருந்தகைகளும், அம்மாக்களும் அக்காள் தங்கைகளும், அண்ணன் தம்பிகளும், தோழர் தோழிகளும் வாசித்து கருத்துச் சொல்லியிருந்தது எனக்கு மிகுந்த சந்தோஷத்தைக் கொடுத்தது. இந்தக் கதையை புத்தகமாக கொண்டு வரும் எண்ணம் இருக்கிறது. எனது நலம் விரும்பும் அண்ணன் ஒருவர் வாசித்துச் சொல்கிறேன் என்று சொல்லியிருக்கிறார். பார்க்கலாம்... அவரின் மனதை எனது கதை கவர்ந்தால் புத்தகம் ஆக்கும் எண்ணத்தை பூர்த்தி செய்யலாம். பார்ப்போம்... சகோதரி மேனகா அவர்கள் க்ரைம் தொடர் எழுதுங்கள் என வற்புறுத்திக் கொண்டே இருக்கிறார். சரி ஒரு குறுநாவல் எழுதலாம் என்று யோசித்தால் கொலை செய்யவே வரமாட்டேங்குது... :( எப்படி சஸ்பென்ஸாக் கதை எழுதுறது... ரொம்பக் கஷ்டம்... இப்போதைக்கு தொடர் ஆரம்பிக்கும் எண்ணம் இல்லை... பார்க்கலாம். சொல்ல மறந்துட்டேனே... என்னை ஊக்கப்படுத்தி உற்சாகமூட்டிய அனைவருக்கும் நன்றி.

ல்கி சிறுகதைப் போட்டிக்கு குறுநாவல் எழுத எண்ணம்.... ஆனால் இன்னும் ஒன்றும் தோன்றவில்லை... எதாவது வித்தியாசமான கரு தோன்றினால் நானும் போட்டியில் கலந்து கொள்வேன். நீங்களும் எழுதுங்கள் நண்பர்களே...

ன்னைச் சகோதரனாகப் பாவிக்கும் சகோதரிகளில் 'தம்பி எப்படியிருக்கே?' என்று விசாரித்துக் கொண்டே இருக்கும் காயத்ரி அக்காவைப் போல் சேனைத் தமிழ் உலா என்ற இணையப் பக்கத்தின் மூலமாக எனக்கு அறிமுகமாகி... (அவருக்கு என்னை அதற்கு முன்னே எனது எழுத்துக்கள் மூலமாகத் தெரியும் என்பதை பின்னர்தான் சொன்னார்) இன்று இரவு பத்து, பதினோரு மணிக்கெல்லாம் முகநூலில் இருந்தால் 'தம்பி என்ன பண்ணுறே...? மருமக்கள் நலமா?' என இலங்கைத் தமிழில் டைப்பும் அன்பு அக்கா நிஷா அவர்களுக்கு இரண்டு தினங்களுக்கு முன் திருமண நாள்... திருமண நாளுக்கு முன்னர்  அக்காவுக்கு கையில் சிறிய காயம்... காயம் குணமாகியிருக்கும் என்று நினைக்கிறேன். அக்காவின் திருமண நாளுக்கு... இந்தச் சந்தோஷம் என்றும் தொடரட்டும் என வாழ்த்துவோம். 

ண்பர் ஆவியின் தலைவாரி பூச்சூடி என்ற குறும்படத்தைப் பற்றி தில்லையகத்து துளசி சார் தனது பதிவில் சொல்லியிருந்தார். உடனே அதிகாலை முதல் வேலையாக படத்தைப் பார்த்தேன். அஞ்சரை நிமிடங்கள் ஓடும் படம். இருவரை வைத்து எடுத்திருக்கிறார். மிக நல்லதொரு கருத்து அதுக்கு ஆவிக்கு ஒரு சபாஷ். அம்மாவாக வரும் சகோதரி அனன்யா மகாதேவன் சிறப்பா செய்திருக்கிறார்கள்.  பேசுவதற்கு முன்னரே வரும் ஆங்கில சப்டைட்டில்... மொபைலை கையில் எடுத்த பின்னரே ரிங்க் ஆவது... பின்னணி இசையும் இன்னும் சரிபார்த்திருக்கலாம்.... என்ற எண்ணங்களை எனக்குள் விதைத்தது. என்னடா இவன் குறை சொல்றானேன்னு நினைக்காதீங்க... குறை அல்ல... ஒரு நல்ல கரு... அழகான படப்படிப்பு... எல்லாம் இருந்தும் இதுபோன்ற சின்ன விஷயங்கள் கொஞ்சமாய் சொதப்பிவிடுகின்றன... எனக்குப் பிடிச்சிருக்கு... நீங்களும் பாருங்கள்.


கொஞ்சம் ரிலாக்ஸாக ஒரு பாட்டுக் கேட்கலாம்... எவ்வளவு அருமையா இருக்கு பாருங்க...


மனசின் பக்கம் மீண்டும் மலரும்...
-'பரிவை' சே.குமார்.

திங்கள், 24 ஆகஸ்ட், 2015

முயற்சியின் முடிவில்...


து நடந்திருக்கக் கூடாதுதான்
ஆனால் நடந்துவிட்டது...

தொடரும் முயற்சிகள் எல்லாமே
தோல்வியின் பிடியில்...

அப்படியிருந்தும் துவளவில்லை
முயற்சிகளின் எண்ணிக்கை
கூடிக்கொண்டேதான் இருந்தது...

இருப்பினும் மனதில் மட்டும்
அது நடந்திருக்க கூடாதென்ற
எண்ணம் வட்டமிட்டுக் 
கொண்டுதானிருந்தது...

மீண்டும் மீண்டும் எகிறினாலும்
ஏனோ எட்டமுடியவில்லை...

மற்றவர்களின் கிண்டல்களை
மனதுக்குள் செல்ல விடவில்லை
முயற்சியின் வேகம்...

'முயன்றால் முடியும்...'  என்ற 
தாயின் கூவல் இன்னும்
உத்வேகத்தைக் கொடுத்தது...

முயற்சிகள் எல்லாம் 
முடிவில் பூஜ்ஜியமாய்...
விடாது தொடரும்
முயற்சிக்கு இறுதியில்
வெற்றி கிடைக்கலாம்...

எதிர்மறையாகும் போது
பரிதவிக்கும் தாயின் கரம் 
எளிதாக தூக்கியும் விடலாம்...

எது எப்படியோ...
வீழும் போதெல்லாம்
விரிக்கும் சிறகுகளில்
விண்ணைத் தொடும் வேகம்...

வெற்றியைச் சுவைக்கும்
வேகத்தில் சிறகை விரித்தது
தவறுதலாய் குழிக்குள் 
விழுந்த கோழிக்குஞ்சு..!
-'பரிவை' சே.குமார்

ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2015

தொடர்கதை : வேரும் விழுதுகளும் (பகுதி - 33)

முந்தைய பகுதிகள் :


     பகுதி-1     பகுதி-2     பகுதி-3     பகுதி-4      பகுதி-5      பகுதி-6     பகுதி-7           பகுதி-8      பகுதி-9     பகுதி-10  பகுதி-11    பகுதி-12    பகுதி-13    பகுதி-14   பகுதி-15   பகுதி-16   பகுதி-17   பகுதி-18   பகுதி-19    பகுதி-20     பகுதி-21 

பகுதி-22   பகுதி-23   பகுதி-24   பகுதி-25   பகுதி-26     பகுதி-27  பகுதி-28 

பகுதி-29   பகுதி-30   பகுதி-31   பகுதி-32

---------------------------------

32-வது பகுதியின் இறுதியில்...

"அண்ணே... உன்னைப் பத்தி தெரியும்... இதே கண்மணி வீட்டுக்காரர் ஒரு பிரச்சினைக்காக பேசப்போகும் போது நடந்துக்கிட்ட விதமும் அதுக்கு நீங்க நடந்துக்கிட்டதும் என்னால மறக்கவே முடியாதுண்ணே.... உலக நடப்புன்னு பேசும்போது உனக்கு வருத்தமாயிருமேன்னுதான் சொன்னேன்..."

ரமேஷின் முகம் மாறுதலாவதைக் கண்ட அழகப்பன் "மாப்ள எதுக்கு பழசெல்லாம் பேசிக்கிட்டு... இப்ப மாமா எங்க இருக்கணும் அதை மட்டும் பேசுங்க... சும்மா  தேன் கூட்டுல கல்லெறிஞ்ச கதையா சம்பந்தமில்லாம பேசிக்கிட்டு..." என்று அதட்டினார்.

"அத்தான்... நீங்க பேசுங்க.... எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு.... முடிச்சிட்டு வாறேன்..." என்று எழுந்த கண்ணதாசன், கண்ணகியைப் பார்த்து "வா... போகலாம்..." என்றான்.

இனி...

'கண்ணதாசன் வேலை இருக்கு... நீங்க பேசுங்க...' என்று கிளம்பவும் மற்றவர்கள் ஒன்றும் பேசாமல் அமர்ந்திருந்தனர்.

"என்ன கண்ண மச்சான்... என்னாச்சு திடீர்ன்னு கிளம்புறீங்க... இங்க யாரும் உங்க மனசு புண்படும்படியா பேசலையே... உலக நடப்பைத்தானே சொன்னோம்..." பதறினார் அழகப்பன்.

"ஏன்டா.... என்னடா... படக்குன்னு கிளம்புறே...? இந்தக் கிழவன் இங்க இருக்கது உனக்கும் பிடிக்கலையா?" கந்தசாமி தழுதழுக்க கேட்டார்.

"என்ன சித்தப்பா நீங்க... உண்மையாவே எனக்கு டவுன்ல சின்ன வேலை... கண்ணகியோட அக்கா மகளுக்கு நகை செய்யச் சொல்லியிருந்தோம். சின்னம்மா சம்பவத்தால அங்கிட்டு போகலை... அது காலையில இன்னைக்கி வாறீகளா சித்தப்பான்னு கேட்டுச்சு... வாறேன்னு சொல்லிட்டுத்தான் இங்க வந்தேன்... பேச்சு ஆரம்பிக்கும் போது கிளம்பியிருந்தா... இவனை நம்மள ஒருத்தனாப் பாத்தோம்ன்னு எங்கூடப் பொறந்ததுகளும், மச்சான் இப்படி படக்குன்னு கிளம்பிட்டாரேன்னு அத்தான்களும், இந்தபய எதுக்கு இப்ப இப்படி ஒடுறான்னு நீங்களும் நினைப்பீங்க... அதனாலதான் இருந்தேன்... நேரமாச்சு... அது வந்து காத்திருக்கும்... நா இருந்தா எல்லாருமே கண்ணாடிமேல நிக்கிற மாதிரி யோசிச்சுப் பேசுவாங்க... எங்க என்னோட மனசுல கல்லெறிஞ்சிடுவோமோன்னு யோசிப்பாங்க... நீங்க புடிச்ச புடியில நிப்பீங்க... " என்று கந்தசாமியிடம் சொன்னவன் "அத்தான்... உங்களுக்குத் தெரியாததில்லை... எத்தனையோ குடும்பத்தைப் பார்த்திருப்பீங்க... ஏன் நம்ம ராமசாமி ஐயா கடைசி காலத்துல மக வீட்டுலதான் இருந்தாரு... சிவசாமி சித்தப்பாவுக்கு அது புடிக்கலை... என்னாச்சு... அவரு செத்தப்போ காசு பணத்தை எல்லாம் மககிட்ட கொடுத்துட்டாருன்னு சண்டை போட்டு பொணத்தைக் கூட எடுத்துக்கிட்டுப் போக மாட்டேன்னு சொல்லிட்டாரு... அப்புறம் பஞ்சாயத்து... அது இதுன்னு... நம்ம குடும்பத்துல அதுக்கெல்லாம் வேலையில்லை... எல்லாரும் ஒண்ணுதான்... மனஸ்தாபம் வர வழியில்லை...எதாயிருந்தாலும்... எந்த முடிவா இருந்தாலும் எல்லாருமாக் கூடி எடுங்க... எனக்குச் சந்தோஷம்... சித்தப்பாக்கிட்ட மனம் விட்டுப் பேசுங்க... நான் பொயிட்டு சீக்கிரம் வந்துருவேன்..." என்றபடி கிளம்பினான்.

"நாம பேசினது அவனுக்கு மனசுக்குள்ள வருத்தம்... அதான் பொண்டாட்டியையும் கூட்டிக்கிட்டு பொயிட்டான்..." என்றான் மணி.

"அண்ணே... கண்ணண்ணன் அப்படியெல்லாம் நினைக்காது... வேலையாத்தான் போகுது... விடு... இப்ப அப்பா எங்க தங்குறாங்கன்னு கேட்டு முடிவு பண்ணலாம்... அதை விட்டுட்டு அது போனதை பெரிசாக்க வேண்டாம்."

"இங்க பாருங்கடா.... உங்களைவிட கண்ணதாசந்தன் எல்லாத்துலயும் ஒசந்தவன்... என்னடா கூடப்பொறந்தவங்களை விட்டுட்டு பெரியப்பா மகனை தூக்கிப் பேசுறேன்னு நினைக்காதீங்க.... எல்லா விஷயத்துலயும் அவந்தான் முன்னால நிப்பான்... அது நல்லதோ கெட்டதோ... அக்கா அத்தான்னு எல்லாத்துக்கும் ஓடியாருவான்... ஒரு சின்ன சந்தோஷமுன்னாலும் எனக்குப் போன் பண்ணி  சொன்னாத்தான் அவனுக்கு மனசு சந்தோஷப்படும்... அவன் எதையும் பெரிசா எடுத்துக்கமாட்டான்... சும்மா சுத்தமாக் கெடக்க தண்ணியில கல்லெறிஞ்சு கலக்கி விடாம இருங்க... நீங்க நாளைக்கே ஓடிருவீங்க... இங்க அவந்தான் எல்லாத்துக்கும் ஓடியாரணும்... சும்மா வளவளன்னு பேசாம அப்பா இங்க இருக்கமுன்னு சொன்னா விட்டுட்டு வேலையைப் பாருங்க... நானும் தங்கச்சியும் பக்கத்துலதானே இருக்கோம்... அடிக்கடி வந்து பாத்துக்கிறோம்... இன்னொன்னு நம்மளைவிட கண்ணகி அப்பாவை ரொம்ப நல்லாப் பாத்துப்பா... அம்மா இருக்கும்போது கூட நம்மமேல இருக்க பாசத்தைவிட அவமேல கொஞ்சம் கூடுதலாத்தான் பாசம் வச்சிருக்கும் தெரியுமா?" படபடவென பொரிந்து தள்ளினாள் சுந்தரி.

"இல்லக்கா... அப்பா எங்க கூட இருந்தா எங்களுக்கும் சந்தோஷமா இருக்குமுல்ல... படிச்சி முடிச்சிட்டு வேலை... வேலையின்னு குடும்பம் குழந்தைகளோட அங்கிட்டே கிடந்துட்டோம். அவங்களை எங்க கூட வச்சி பாத்துக்கவேயில்லை... அம்மா இருக்கும் போது எங்கிட்டும் வராது... அதுக்கு இந்த வீடு, ஆடு மாடுகதான் உலகம்... அப்பாவாச்சும் இந்த உலகத்தைவிட்டு எங்க கூட பேரன் பேத்தியின்னு சந்தோஷமா இருக்கட்டுமே..." என்றான் குமரேசன்.

"அவருக்கு இங்க இருக்கதுதான் சந்தோஷம்ன்னா அந்த சந்தோஷத்துக்கு நாம ஏன் தடை போடணும்... கொஞ்ச நாள் இருக்கட்டும்... அப்புறம் நீங்க கூட்டிப் போகலாம்..." என்றாள் கண்மணி.

"இங்க பாருங்கப்பா... எனக்கு உங்க கூட வரக்கூடாதுன்னு எல்லாம் இல்லை.... என்னோட பிள்ளைகளைப் பத்தி தெரியும்... எனக்கு வாச்ச மருமகன்களும் மருமக்களும் எனக்கு பிள்ளைங்க மாதிரித்தான்... கடவுள் எனக்கு எல்லா விதத்துலயும் சந்தோஷத்தைத்தான் கொடுத்தான். எல்லாரும் விரும்பிக் கூப்பிடுறீங்க... வந்து இருக்கலாம்தான்... ஆனா இந்த ஊரு... இந்த வீடு... இந்த ஆடு மாடுக... இந்த வயலுக... இங்க இருக்க மக்க... இப்படி எல்லாத்தையும் விட்டுட்டு டவுன்ல வந்து வீட்டுக்குள்ள உக்காந்து டிவி பாத்துக்கிட்டு கெடக்க என்னால முடியாது... இருக்கப்போறது எம்புட்டு நாளுன்னு தெரியாது... இங்கயே இருந்து காலத்தை ஓட்டுனேன்... இந்த ஊரோட காத்தை சுவாசிச்சிக்கிட்டு இங்கயே கடைசி மூச்சை விடணும்... இது என்னோட ஆசை மட்டுமில்ல... பேராசையும் கூட.... கண்ணனும் எனக்கு மகந்தான்... ராத்திரியில கொஞ்சம் சத்தமா இருமினாக்கூட 'என்ன சித்தப்பா... இப்புடி இருமுறீங்கன்னு வந்து நிப்பான்... அப்படிப்பட்டவந்தான் அவன்... எங்க அண்ணன் மாதிரி.... அவரு நிழல்ல வளந்தவனுங்க நாங்க... இப்ப இவனுக்கிட்ட இருக்கேனே... அங்க போயி இருக்கலை... நம்ம வீட்டுல உங்க அம்மா நடந்து... சிரிச்சு... படுத்து வாழ்ந்த இந்த வீட்டுக்குள்ள அவ நினைவோட இருக்கேன்... என்ன சாப்பாடு, காபிக்கு மட்டுந்தானே கண்ணகிகிட்ட கேக்கப் போறேன்... கண்ணகி எனக்கு சுந்தரியும் கண்மணியும் எப்படியோ அப்படித்தான்... இந்தா சித்ரா அப்ப அப்ப கோபப்பட்டாலும் மாமான்னு கண்ணக் கசக்கிட்டு நிக்கிது... அதுதான் பாசம்... அபி சொல்ல வேண்டாம்.... கட்டகூடாதுன்னு நின்னவன் நான்... ஆனா என்னைய அதோட அப்பனாத்தான் பாக்குது... இதுக்கு மேல என்ன வேணும்... என்னை நீங்க கூட்டிக்கிட்டுப் போயிட்டா.... அவன் ரொம்ப வெறுமையா உணருவான்... நீங்க அப்படி இருந்து பழகிட்டீங்க.... ஆனா அவன் விடிஞ்சி எந்திரிச்சா சித்தப்பா, சின்னத்தான்னு எங்க மடியிலயே கிடந்தவன்... அதையும் யோசிங்க... ஊரு கெடக்கு ஊரு... நரம்பில்லாத நாக்கு என்ன வேணுமின்னாலும் பேசும்... கோளாறாப் பாத்தா பாக்கட்டும்... நம்மக்கிட்ட கோளாறு இல்லை... பாக்குறவன் கண்ணுலதான் கோளாறு... இதுக்கெல்லாம் பாத்தா நம்ம உறவுகளை இழந்துக்கிட்டுத்தான் நிக்கணும்... எனக்கு இனி எல்லாமே எம் பேரம்பேத்திகதான்... அதுகளை விட்டுட்டு எங்க போகப்போறேன்... அடிக்கடி வாறேன் பாக்குறேன்... நீங்களும் வாங்க பாருங்க... நாஞ் சொல்றது தப்பாத் தெரிஞ்சா மேக்கொண்டு நீங்க என்ன முடிவு பண்ணுறீங்களோ... அதுக்கு நா கட்டுப்படுறேன்..." என்று நீளமாகப் பேசியவர் அருகிலிருந்த செம்பிலிருந்த தண்ணீரை எடுத்து மடக்.... மடக்கெனக் குடித்துத் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டார்.

"மாமா... தெளிவாச் சொல்லிட்டாங்க... அப்புறம் மேக்கொண்டு இதுல சொல்றதுக்கு என்ன இருக்கும் மாப்ள...." என்று மணியைப் பார்த்து அழகப்பன் கேட்க, "எங்க இருந்தா என்ன அப்பா சந்தோஷமா இருந்தாப் போதும்... இனி இதுல பேசுறதுக்கு என்ன இருக்கு" என்றாள் சுந்தரி.

"அதான் அப்பா தீர்மானமாச் சொல்றாங்களே... அப்புறம் என்ன.... இங்கயே இருக்கட்டும்... கொஞ்ச நாள் போகட்டும் ஆடுமாடுகளை வித்துட்டு வயலை கண்ணதாசனுக்கிட்ட சொல்லி போடச் சொல்லலாம்... இல்லைன்னா வேற யாருக்கிட்டயாச்சும் பங்குக்கு விடலாம்... அப்பா இங்கயே இருக்கட்டும்... அதுதான் சரியின்னு படுது.... அவரை வற்புறுத்திக் கொண்டு போயி வச்சிருந்தாலும் அவருக்கு இங்க கிடைக்கிற சந்தோஷம் கிடைக்காதுல்ல... " மணி சொல்ல, குமரேசன் அதை ஆமோதித்தான்.

"சரி... மாமா... நீங்க இங்கயே இருங்க... கண்ண மச்சான் பாத்துக்கட்டும்... எல்லாரும் பக்கத்துலதானே இருக்கோம்... வந்து பாத்துக்கிறோம்... இடையில ஒருநா... ரெண்டு நா எங்க வீடுகளுக்கு வாங்க... தங்குங்க... உங்களுக்கும் மனசுக்கு ஒரு மாற்றம் இருக்கும்.... சரித்தானுங்களா?"

"ரொம்பச் சந்தோசம் மாப்ள.... என்னைய புரிஞ்சிக்கிட்ட பிள்ளைங்க கிடைச்சது என்னோட பாக்கியம்... எல்லாரும் நல்லா இருக்கணும்.... அந்தக் கருப்பந்தான் பிள்ளைங்க தலமாடு காத்து கஷ்ட நஷ்டமில்லாம வாழ வைக்கணும்.... இங்கிட்டு எங்கிட்டாச்சும் காத்தா வந்து நின்னு நாம பேசினதைக் கேட்டுக்கிட்டு நிப்பா அவ.... கண்டிப்பா இந்த மாதிரி பிள்ளைகளை பெத்ததுக்கும் மருமக்களை அடைஞ்சதுக்கும் அவ ரொம்ப சந்தோஷப்படுவா... எல்லாருக்கும் அவ தெய்வமா நின்னு வழி நடத்துவா...." என்றார் கண்கள் கலங்க.

"சரி... சரி... மத்தியான சாப்பாட்டுக்கு ரெடி பண்ணுங்கத்தா... நாளைக்கு அவுக அவுக பொழப்புத் தழப்பைப் பாக்க கிளம்புற வேலையைப் பாருங்க...." என்றபடி எழுந்தார் அழகப்பன்.

தேநேரம்...

"இன்னுங் கொஞ்ச நேரம் நின்னுருக்கலாமுல்ல... எதுக்கு அவசரமா ஓடியாந்தீக..." வண்டியின் பின்னால் இருந்து கண்ணதாசனின் இடுப்பில் குத்தினாள் கண்ணகி.

"இருக்கலாமுன்னுதான் நெனச்சேன்.... சித்தப்பா இங்கதான் இருப்பேன்னு நிக்கிறாரு... அண்ணனுக்கும் குமரேசனுக்கும் அவரை இங்க விட மனசில்லை.... என்னதான் இருந்தாலும் பெத்த அப்பனை அநாதையாட்டம் விட மனசு வருமா என்ன... அதே எண்ணம்தான் சித்ராவுக்கும் அபிக்கும்.... பெரியத்தானோ பல இடங்கள்ல இது மாதிரி பாத்து பஞ்சாயத்துப் பண்ணியிருக்காரு... விவரம் தெரிஞ்சவரு... நாளைக்கு நமக்குல்ல பிணக்கு வந்துடக்கூடாதுங்கிறதுல தெளிவா இருக்காரு... சின்னவரு எதுலயும் படக்குன்னு பேச முடியாம அண்ணஞ் சொல்றது சரியின்னு சொல்றாரு.... அக்காவுக்கும் கண்மணிக்கும் இதுல என்ன பேசுறதுன்னு தெரியலை... நா இருக்கதால சில விஷயங்களை நேரடியாப் பேச யோசிக்கிறாங்க.... அதான் அவங்களே முடிவெடுக்கட்டும்ன்னு வந்துட்டேன்... ஆனா உண்மையாப் போற காரணத்தைத்தானே சொல்லிட்டு வந்தேன்... பொய் சொல்லலையே..." என்று கண்ணகியைப் பார்த்து சிரித்தான்.

"மாமா பாவங்க... டவுனுல போயி கஷ்டமுங்க... வெளிய தெருவ போறதுக்கு கூட சிரமப்படுவாரு.... எதையும் யாருக்கிட்டயும் பேசவும் முடியாது... மனசு தளர்ந்து போயிருவாரு... இங்க இருந்தா அவருக்கு ஒரு சந்தோஷம் கிடைக்கும்... இன்னும் கொஞ்ச நாளைக்கு நல்லாயிருப்பாரு... என்ன அவருக்குன்னு தனியாவா சமைக்கப் போறோம்... போடுற ஒலையில ரெண்டரிசி சேத்துப் போடப்போறோம்.... அம்புட்டுதானே... ஆமா மாமா குமரேசன் கூட போக ஒத்துக்கிட்டா நீங்க வருத்தப்படுவீங்களா மாட்டீங்களா?" என்று பின்னாலிருந்து கேட்டாள்.

"இங்கயே இருந்தவரு... அவரு கைக்குள்ளயே கிடந்துட்டேன்... கை ஒடிஞ்ச மாதிரி ஆயிரும்.... என்ன பண்ண... இந்தா சின்னம்மா செத்துச்சு அழுது புலம்பிட்டு அவுக அவுக வேலையைப் பாக்கப் போகலையா... அப்படித்தான்... கொஞ்ச நாள் சித்தப்பா நெனப்பா இருக்கும்.... அப்புறம் தம்பி வீட்டுலதானே இருக்காரு... நெனச்சா போயி பாத்துட்டு வரலாம்ன்னு மனசை தேத்திக்கிட்டு இருக்கப் பழகிக்க வேண்டியதுதானே..." என்றவனின் கலங்கிய கண்களை அவள் பார்க்கவில்லை என்றாலும் கைகளை மேலே தூக்குவது போல் துடைத்துக் கொண்டு 'ம்ம்ம்ம்ம்....' என்று பெருமூச்சை விட்டுவிட்டு 'முனீஸ்வரா.... எங்க சித்தப்பா இங்கயே இருக்கணும்... எல்லாரும் ஒத்துக்கணும்...' என்று வாய்விட்டு சொல்லிவிட்டு வண்டியைச் ஓட்டுவதில் கவனம் செலுத்த, பின்னாலிருந்த கண்ணகி அவனை நினைத்துச் சிரித்துக் கொண்டாள்.

சுபம்.

வேரும் விழுதுகளும் நிறைவுற்றது.

--------------------


[ வேரும் விழுதுகளும் தாங்கி வந்த உறவுகளின் வசந்தத்தை தொடர்ந்து வாசித்து எனக்கு தொடர்ந்து ஊக்கமளித்த ஐயாக்கள், அம்மாக்கள், அண்ணன்கள், அக்காள்கள், தம்பிகள், தங்களைகள், தோழர்கள், தோழிகள் என அனைத்து வலை நட்புக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி.... விரைவில் மீண்டும் ஒரு வாழ்க்கைக் கதையுடன் தொடர்ந்து பயணிப்போம் ] 

என்றும் பாசங்களுடன்...
-'பரிவை' சே.குமார்.

சனி, 22 ஆகஸ்ட், 2015

தொடர்கதை : வேரும் விழுதுகளும் (பகுதி - 32)

முந்தைய பகுதிகள் :


31-வது பகுதியின் இறுதியில்...

"ஆமா... ஆமா... இங்கயே உக்காந்திருந்தாலும் அத்த நினைப்புல இருந்து யாரும் மீளாதுக... அங்கிட்டு அங்கிட்டு போனாத்தான் கொஞ்சம் மறந்து... தெளிவாகுங்க..." என்றான் ரமேஷ்.

"அத்தான்... அப்பாவை எங்க கூட கூட்டிப் போகலாம்ன்னு பாக்குறேன்... ஏன்னா அண்ணன் வீட்ல அவரை வச்சிக்கிறது கொஞ்சம் கஷ்டம்... சின்ன வீடு வேற... எங்க வீடுன்னா கொஞ்சம் பிரியா இருப்பாருல்ல..." என்றான் குமரேசன்.

அதுவரை பேசாமல் இருந்த கந்தசாமி, "இல்ல... நா வரலைப்பா... எங்கயும் வரலை..." என்று அழுத்தந் திருத்தமாகச் சொல்ல எல்லோரும் அவரையே பார்த்தனர்.

இனி...

ந்தசாமி 'இல்லை நா வரலைப்பா... எங்கயும் வரலை...' என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னதும் எல்லோரும் அவரையே பார்க்க, மணிதான் அவரிடம் "ஏன்...?  எதுக்கு வரலைங்கிறீங்க...? தம்பி வீட்டுக்குப் போகலைன்னா எங்க வீட்டுக்கு வாங்க..." என்றான்.

"என்னப்பா நீ... நாங் குமரேசன் வீட்டுக்கு போகப் பிடிக்கலைன்னு சொல்லலையே... எங்கயும் வரலைன்னுதான் சொல்றேன்..."

"அதுதான் ஏன்னு கேக்குறோம்...?" குமரேசன் தளர்வாய்க் கேட்டான்.

"இல்லப்பா வேண்டாம்... இங்கே இருந்துடுறேன்..."

"என்ன மாமா நீங்க... அயித்த போயாச்சு... டவுன்ல போயி இருக்க சிரமமா இருக்கும்ன்னு நினைச்சா... நம்ம வீட்டுக்கு வந்திருங்க... நாங்க பாத்துக்கிறோம்... இங்க இருந்து எப்படி தனியா..." அழகப்பன் பேச்சை நிறுத்தி அவரைப் பார்த்தார்.

"ஆமா மாமா... அண்ணன் சொல்றதுதான் சரி... எங்க வீட்டுக்கு வாங்கன்னு சொல்லிடலாம்... ஆனா அங்க எங்கம்மா இருக்கு... சும்மாவே எதாவது சொல்லும்... நீங்க வந்தா அது பாட்டுக்கு உங்கள குத்திகுத்திப் பேசி மனச நோகடிச்சிடும்... மச்சான்களோட போங்க... இல்லேன்னா அண்ணன் வீட்ல இருங்க... நாங்கள்லாம் வந்து பாத்துக்கிறோம்..." என்றான் ரமேஷ்.

"இல்லப்பா... இருக்கப் போறது கொஞ்ச நாள்தானே.... அவ பொயிட்டா... இனி நானும் நாளை எண்ண வேண்டியதுதானே... அதுவரைக்கும் அவளோட வாந்த இந்த வீட்லயே இருக்கேனே.... நா யாரு வீட்டுக்கும் வரலைன்னு சொல்லலை... எல்லாரு வீட்டுக்கும் வாறேன்... ஆனா இங்கயே இருந்துக்கிறேன்..." என்றார் நிதானமாக.

"இங்க உங்களை யார் பாத்துப்பா...? நாங்களும் அடிக்கடி ஓடியார நிலையிலயா இருக்கோம்..." மணி கொஞ்சம் வேகமானான்.

"இப்ப எதுக்கு கத்துறீங்க..? மெதுவாப் பேசுங்க... மாமா மனசு இன்னும் அயித்தையோட இழப்புல இருந்து மீளலை... கொஞ்ச நாள் இருக்கட்டும்... அப்புறம் யாராச்சும் ஒருத்த கூட்டிக்கிட்டுப் போகலாம்..." சித்ரா சொல்ல மணி அவளை முறைத்தான்.

"சரிண்ணி இங்க இருக்கட்டும்... ஒண்ணு கெடக்க ஒண்ணுன்னா யாரு பாப்பா..." குமரேசன் அவளைப் பார்த்துக் கேட்டான். இவற்றை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த கண்ணதாசனுக்கு நாம எதாவது சொல்லி அதை தப்பா எடுத்துக்கிட்டா இருக்க சந்தோசம் போயிடுமேன்னு கவலையோட சித்தப்பாவைப் பார்த்தான்.

"எதுக்கு மாப்ள இப்ப கோபப்படுறே... இரு... " என்று மணியைப் பார்த்துச் சொல்லிவிட்டு "மாமா... ஒண்ணு அவனுக கூட போங்க... இல்ல எங்க கூட வாங்க... ஆடு மாடெல்லாம் கண்ண மச்சான் பாத்துக்கட்டும்... அப்புறம் வித்துக்கலாம்... தனியா விட்டுட்டுப் போறது நல்லாவா இருக்கும்... பெரியவுக உங்களுக்கு நாங்க புத்தி சொல்லக் கூடாது..." அழகப்பன் அமைதியாகப் பேசினார்.

"ஆமா சித்தப்பா... அத்தான் சொல்றதுதான் சரி... நீங்க கொஞ்சநாள் அங்கிட்டுப் போயி இருங்க... ஆடு மாட்டை நா பாத்துக்கிறேன்.... நல்ல வெலக்கி யாராவது கேட்டா கொடுத்துடலாம்... இப்ப அத்தானோட முடிவுதான் சரியின்னு படுது... இங்க இருந்து தனியா கஷ்டப்படணுமில்ல..." கண்ணதாசன் சித்தப்பாவின் கைகளைப் பிடித்துக் கொண்டு சொன்னான். அப்படிச் சொல்லும் போது அவனின் கண்கள் கலங்கியதை மற்றவர்கள் கவனித்தார்களோ இல்லையோ கந்தசாமி கவனித்தார் என்பதை அவரின் கைகள் அழுந்தப் பிடித்ததில் அறிந்து கொண்டான்.

"என்ன மாமா... எதுக்கு யோசிக்கிறீங்க... நாங்களும் உங்க பிள்ளைங்கதான்... ஒரு குறையும் இல்லாமப் பாத்துப்போம்... அத்தையைத்தான் பாத்துக்கிற சந்தர்ப்பம் எங்களுக்கு கிடைக்கலை... உங்களையாவது எங்ககூட வச்சிப் பார்த்துக்கிறோமே..." அபி இடையில் புகுந்தாள்.

"இல்லத்தா எனக்கு எல்லாரோடவும் இருக்கத்தான் ஆசையா இருக்கு.... ஆனா இங்க இருக்கதுல கிடைக்கிற ஒரு சந்தோஷம்...  திருப்தி... எங்கயும் கிடைக்காதேத்தா... அவ மூச்சுக்காத்தை சுவாசிக்கிட்டு இங்கயே கிடந்துடுறேனே... நல்லநாள் பெரியநாள்ன்னா அவ இருக்கும்போது எப்படிக் கூடினமோ அப்படிக் கூடலாமுல்ல... அது போதுமே..."

"இல்ல... மாமா... நா என்ன சொல்ல வாறேன்னா...." அழகப்பன் பேச ஆரம்பிக்க "இல்ல மாப்ள..." என அவரை இடைமறித்த கந்தசாமி, "தனியா இருக்கேன்... தனியா இருக்கேன்னு எல்லோரும் புலம்புறீங்களே... ஏன் இதுவரைக்கும் மகனுக்கு மகனா இங்கன இருந்த கண்ணதாசன் இன்னும் கொஞ்ச நாள் பாக்க மாட்டானா..?"

"சி... சித்தப்பா...." கண்ணதாசன் அதற்கு மேல் பேசமுடியாமல் தவித்தான்.

"என்ன மாமா நீங்க... பெத்தபுள்ளைங்க ரெண்டு பேரு இருக்கும் போது கண்ணதாசன் மச்சான் வீட்ல தங்குனா ஊரு உலகம் என்ன பேசும்... அது நல்லாவா இருக்கும்... சாதி சனம் பெத்த அப்பனுக்கு கஞ்சி ஊத்த வக்கில்லைன்னு மாப்பிள்ளைகளைப் பேசாது..." ரமேஷ் படக்கென்று சொல்லிவிட்டான்.

"ஆமா மாமா... தம்பி சொல்றது உண்மைதானே.... நீங்க மாப்ளங்க வீட்டுக்கு போங்க... இல்லாட்டி எங்க வீட்டுக்கு வாங்க... கண்ண மச்சானை நமக்குத் தெரியும்... ஆனா அவரு வீட்ல இருந்தா அது நல்லாயிருக்காதுல்ல.. என்ன கண்ண மச்சான்... நா பேசுனது உங்களுக்கு வருத்தமா இருக்கா?" என்றார் அழகப்பன்.

"அய்யய்யோ... அதெல்லாம் இல்லை அத்தான்... நீங்க சொல்றதுதான் சரி..."

"என்னடா சரி... அப்ப இந்த அப்பனுக்கு ஒரு நேரம் கஞ்சி ஊத்த மாட்டியா? சித்தப்பா... சித்தப்பான்னு சுத்தி வந்ததெல்லாம் பொய்யா.... உன்னையும் என்னோட மகனாத்தானேடா பாத்தேன்..."

"என்ன சித்தப்பா இது... உங்களுக்கு கஞ்சி ஊத்த மாட்டேன்னு சொல்வேனா... உங்களை எங்கூட வச்சிக்கிறதுங்கிற சந்தர்ப்பம் கிடைச்சா அது என்னோட பாக்கியம்... ஆனா ஊரு உலகத்தையும் பாக்கணுமில்ல... மணி அண்ணனும் தம்பியும் நல்லா இருக்கும் போது நீங்க இங்க இருந்தா நரம்பில்லாத நாக்கு அத்தான் சொன்ன மாதிரித்தானே பேசும்... இதுவரைக்கும் சந்தோஷமா இருந்த நமக்குள்ள இந்த ஏச்சும் பேச்சும் பிரச்சினையை ஆரம்பிச்சி வச்சிடாதா... பேசாம தம்பி கூட போங்க... அப்புறம் வரலாம்..."

"மச்சான்... உன்னோட பெரிய மனசு எனக்குத் தெரியும்... ஊரு பேசும்ன்னுதான் சொன்னேன்... உன்னைய தப்பாச் சொல்லலை..." ரமேஷ் வேகமாக எழுந்து கண்ணதாசனின் கையைப் பிடித்துக் கொண்டான்.

"என்னத்தான் நீங்க... இதுல என்ன தப்பிருக்கு... அவரு ஆசை அவரு சொல்றாரு... இனி நாமதான் முடிவெடுக்கணும்..." என்றபடி கண்களைத் துடைத்துக் கொண்டு கண்ணகியைப் பார்த்தான். அவளோ 'என்ன இது சின்னக் குழந்தையாட்டம்... கண்ணைத் துடைங்க....' என்று கண்களால் ஜாடை செய்தாள்.

"இங்க பாருங்க மாப்ள... இங்கயே வளந்து... இங்கயே வாந்து... இன்னைக்கோ நாளக்கோ போயிச் சேரப் போறவன்... இனி புது எடம்... புது வாழ்க்கையின்னு வாழப் பழகுறது கஷ்டம்... இந்த வீட்டுக்குள்ளயே கிடக்கேனே... இங்கயே இருந்து இங்கயே சாகணும் மாப்ள... என்னோட நெலையைப் புரிஞ்சிப்பீங்கன்னு நினைக்கிறேன். நா கண்ண விட்டுல போயி இருக்கேன்னு சொல்லலை...  என்னால முடிஞ்ச வரைக்கும் இந்த ஆடு மாடுகளை பாத்துக்கிட்டு கெடக்கேன். என்ன மூணு வேலைக்கும் கண்ணகி எனக்கு சாப்பாடு கொடுக்கப் போறா... அதுக்குவேனா கொஞ்சம் பணத்தைக் கொடுத்துடலாம்... அந்தக் கெழவிக்கிட்ட சாகுறதுக்கு மொதநா ராத்திரி கண்ணனுக்கு எதாவது செய்யணுமின்னு சொன்னேன்.... காசாக் கொடுத்தா அவனுக்கும் உதவியா இருக்குமுல்ல..."

"சி... சித்தப்பா... உங்களுக்கு சோறு போட எனக்கு காசா? காசு பணம் கொடுத்து பாசத்தைப் பிரிச்சிப் பாக்குறதுன்னா எனக்கு வேண்டாம்... நீங்க தம்பி கூடவே போயிடுங்க... போயிருங்க..." கண்ணதாசன் தழுதழுத்தான்.

"என்ன மாப்ள... மாமா சொல்றது சரியின்னுதான் படுது... கண்ணனும் நம்மள்ல ஒருத்தந்தான்... அவரோட விருப்பப்படி இங்கயே இருக்கட்டுமா என்ன சொல்றீங்க"  மணியைப் பார்த்து அழகப்பன் கேட்டார்.

"என்னத்தான் நீங்க... எல்லாரும் இருக்கும் போது அநாதை மாதிரி இங்க அவர விட்டுட்டு... கண்ணதாசன் வீட்டுல சாப்பிடுங்கன்னு சொல்லிட்டு போறது நல்லாவா இருக்கு... எனக்கென்னவோ இது சுத்தமாப் பிடிக்கலை... நீ என்னடா சொல்றே..?" என்று தம்பியைப் பார்த்தான்.

"இதுல நான் சொல்ல என்ன இருக்கு... அவரோட முடிவு அதுவா இருக்கும் போது என்னத்தைச் சொல்ல... சித்தப்பா மகன் நம்மகிட்ட அன்னியப்பட்டு நின்னாலும் நாம மூணு பேரும் ஒண்ணாத்தானே வளர்ந்தோம். இதுவரை எல்லாத்துலயும் நம்மளைவிட அதிக ஈடுபாட்டோட இருந்தது அண்ணந்தான்... அப்பா இங்க இருக்கேன்னு சொல்றதை எதிர்த்துப் பேசுறதா நினைச்சிக்கிட்டு நாம எல்லாருமே அண்ணனோட மனசை நோகடிக்கிற மாதிரித் தெரியுது... எனக்கு அது புடிக்கலை... இதுவரைக்கும் ஒண்ணா மண்ணா இருந்துட்டு... இப்பக் கண்ணைக் கசக்கிக்கிட்டு... சரியில்லைண்ணே.... அவரு போக்குலயே விட்டுடலாம்..." என்றான் குமரேசன்.

"டேய் நீ என்னடா நீயி... ஊரு உலகத்துல நடக்குறதைத்தானே பேசுறாக... இதுல நா வருந்த என்ன இருக்கு...  எனக்கு அப்பா, அண்ணன், தம்பி, அக்கா, அத்தான், தங்கச்சி, மச்சான்னு இந்த உறவு எப்பவும் தொடரணுமின்னுதான் ஆசை... நீங்க பேசுறதை எல்லாம் நா எதுக்கு தப்பா எடுத்து வருத்தப்படணும்... எனக்கு எப்பவுமே உறவுகளுக்குள்ள நடக்குற சின்னச்சின்ன மனஸ்தாபங்களை எல்லாம் பெரிசாக்கிப் பாக்கணுங்கிற நினைப்பு வராது. நான் பொறந்ததும் வளந்ததும் அப்படிப்பட்ட மனுசங்ககிட்டதான்..." என்றான் கண்ணதாசன்.

"அண்ணே... உன்னைப் பத்தி தெரியும்... இதே கண்மணி வீட்டுக்காரர் ஒரு பிரச்சினைக்காக பேசப்போகும் போது நடந்துக்கிட்ட விதமும் அதுக்கு நீங்க நடந்துக்கிட்டதும் என்னால மறக்கவே முடியாதுண்ணே.... உலக நடப்புன்னு பேசும்போது உனக்கு வருத்தமாயிருமேன்னுதான் சொன்னேன்..."

ரமேஷின் முகம் மாறுதலாவதைக் கண்ட அழகப்பன் "மாப்ள எதுக்கு பழசெல்லாம் பேசிக்கிட்டு... இப்ப மாமா எங்க இருக்கணும் அதை மட்டும் பேசுங்க... சும்மா  தேன் கூட்டுல கல்லெறிஞ்ச கதையா சம்பந்தமில்லாம பேசிக்கிட்டு..." என்று அதட்டினார்.

"அத்தான்... நீங்க பேசுங்க.... எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு.... முடிச்சிட்டு வாறேன்..." என்று எழுந்த கண்ணதாசன், கண்ணகியைப் பார்த்து "வா... போகலாம்..." என்றான்.

-(வேரும் விழுதுகளும் நிறைவு  அடுத்த பகுதியாக)

[ இன்று முடிக்கும் எண்ணத்தில்தான் சென்ற வாரமே அடுத்த பகுதி நிறைவுப் பகுதி என்று போட்டிருந்தேன்... ஆனால் எழுத்தாக கொண்டு வரும் போது இறுதிப் பதிவு நீளமாகிவிட்டது. அதனால் இரண்டாக்கி விட்டேன். நிறைவுப் பகுதி வாசிக்க அடுத்த சனிக்கிழமை வரை காத்திருக்க வேண்டாம்... நாளை மாலை பகிர்கிறேன். ஆம் வேரும் விழுதுகளும் நாளை நிறைவடையும் --- நன்றி ]
-'பரிவை' சே.குமார்.