மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

புதன், 10 செப்டம்பர், 2014

தொடர்கதை: கலையாத கனவுகள் - 81

முந்தைய பதிவுகளைப் படிக்க... 



81.  நிறைவாய் நிறைவு செய்வோம்...

முன்கதைச் சுருக்கம்

கிராமத்து ஏழைக் குடும்பத்துப் பையனான ராம்கி, கல்லூரி ரவுடி வைரவனின் தங்கை புவனாவைக் காதலிக்கிறான். பிர்ச்சினைகள், சந்தோஷம், போராட்டம் என அவர்களின் காதல் எல்லாவற்றையும் சந்தித்து புவனா குடும்பத்தில் ஏற்கமாட்டார்கள் என்பதால் ஊரை விட்டு ஓட முடிவு பண்ண அம்மா ஆசிர்வாதத்தில் அண்ணன் வழியனுப்ப ராம்கியின் நண்பர்கள் உதவியுடன் வீட்டை விட்டு வெளியாகி திருமணம் செய்து கொள்கிறார்கள்.

இனி...

ம்மாவின் குரலைக் கேட்டதும் புவனா பெருங்குரல் எடுத்து அழுதாள். அவள் அழுவதைப் பார்த்ததும் சுற்றியுள்ளவர்கள் ஒரு மாதிரி பார்க்க ஆரம்பித்தனர். கண்ணீரோடு "அம்மா..." என்று மீண்டும் அழைத்தாள். ராம்கி அவளது தோளில் ஆதரவாய்ப் பிடித்து 'புவி கண்ட்ரோல் யுவர் செல்ப்' என்று மெதுவாகச் சொன்னான். அதேநேரம் மகளின் குரலைக் கேட்டவளுக்கு தொண்டை அடைத்தது... கண்கள் நீரை வார்க்கத் தயாராயின... 'அம்மாடி..' எனச் சொல்ல வாயெடுத்து சூழல் கருதி "என்னப்பா... எதுக்கு வருத்தப்படுறே... நினைச்ச வாழ்க்கை கிடைச்சிருச்சில்ல.... இப்ப சந்தோஷம்தானே... பின்ன என்ன... " என்று மெதுவாகச் சொன்னாள்.

'யாருக்கா...? யாருக்கிட்ட பேசுறே...?' சித்திக்காரி கேட்பது புவனாவுக்குக் கேட்க, 'ஐய்யோ அம்மா மாட்டிருவாங்களோ?' என்ற பயத்தில் போனை வைக்கலாமா என யோசித்தாள். அவளது யோசனையின் ஊடே 'அது... நம்ம... வைரா... பிரண்டு...' என அம்மா மெதுவாக இழுப்பது கேட்டது.

'சித்தி... என்னோட பிரண்ட்... திடீர்ன்னு கல்யாணமாயிருச்சு... யாருக்குமே சொல்லலை... அம்மாக்கிட்ட ஆசி வாங்கணுமின்னு சொன்னான்.... உங்களுக்குச் சொல்லலையேம்மான்னு அம்மாக்கிட்ட வருத்தப்பட்டிருப்பான்... அம்மா... அவனுக்கு நம்ம சூழல் தெரியாது... அவன வாழ்த்திட்டு போனை வையுங்க... அப்புறம் பேசிக்கலாம்... ' என்ற வைரவனின் குரல் அவளுக்கு சற்று பயத்தைப் போக்கியது. வைரவன் என்றால் சித்திக்கு அலர்ஜி என்பதால் அம்மா மாட்டமாட்டாள் என சந்தோஷப்பட்டாள்.

"எல்லாம் நல்லா முடிஞ்சதுல்ல... நல்லாயிருங்க..." என அம்மா பொத்தாம் பொதுவாய் வாழ்த்த, "அம்மா, ராம்க்கிட்ட ஒரு வார்த்தை பேசுங்க.." என்றவாறு ராம்கியிடம் கொடுத்தாள்.

"அலோ... அ...ம்.... அத்தை எங்களுக்கு உங்க ஆசி வேணும்..."

"அதான் சொன்னேனா... நல்லாயிருங்கப்பா... வச்சிடுறேன்..." என போனைக் கட் பண்ணியவள் கண்கள் கலங்க அப்படியே சோபாவில் சரிந்தாள்.

"என்னாச்சு... யாரு போன்ல?" மனைவியைப் பார்த்துக் கேட்டார் புவனாவின் அப்பா.

"வைரவனோட பிரண்டு... திடீர்ன்னு கல்யாணம் முடிஞ்சிருச்சாம்.... ஆசி கேட்டான்... வாழ்த்திட்டேன்... நம்மபுள்ளையைத்தான் வாழ்த்த முடியலை... இப்படிப் பண்ணிட்டுப் பொயிட்டா.. யாரோ ஒரு புள்ளை எங்கிட்ட ஆசி கேட்டதும் என்னால அழுகையை அடக்க முடியலைங்க..." என்று அவரது கரம் பிடித்து அழுதாள்.

"இங்கரு... அவதான் நாம வேண்டான்னு பொயிட்டால்ல அப்புறம் என்ன... சனியன் தொலஞ்சதுன்னு விட்டுட்டு வைரவனுக்கு ஒரு கலியாணத்தைப் பண்ணி கவலையை மறக்கலாம்... நீ இன்னைக்கே உந்தங்கச்சியோட திருப்பத்தூரு போயிரு... இங்க இருந்த எல்லாத்தையும் நெனச்சி மனசைப் போட்டுக் குழப்பி உடம்புக்கு எதாவது இழுத்துப்பே... அவளுக்கு நீயோ நானோ வேண்டாம்... எனக்கு நீ வேணும்... புரியிதா?"

"உங்கள இங்க விட்டுட்டு... நா மட்டும் எப்படிங்க?"

"கொஞ்ச நாள்தானே... நானும் அவனும் இருந்துப்போம்... ஒரு வாரம் பத்து நாள் சீக்கிரம் ஓடிடும்... என்ன சரியா?"

"ம்..."

"ஏய் உங்கக்காவை கூட்டிக்கிட்டு நீ திருப்பத்தூருக்கு கிளம்பு... நானும் தம்பியும் அந்த ஓடுகாலி விஷயமாப் பேசிட்டு முடிஞ்சா சாயந்தரம் அங்க வாறோம்... இல்லேன்னா தம்பி நாளைக்கு காலையில வருவான்" என கொழுந்தியாளிடம் சொன்னார்.

"சரித்தான்.... வைரா...." மெதுவாகக் கேட்டாள்.

"அவன் அங்கெல்லாம் வரமாட்டான்... அவன் பாட்டுக்கு இங்க இருக்கட்டும்..."

"ம்..."

"ராம்.... அம்மா பேசினது எனக்குச் சந்தோஷமா இருக்கு?"

"உன்னோட சந்தோஷம் எனக்கு சந்தோஷத்தைக் கொடுக்குது... " என்றவாறு அவளை அணைத்தான்.

"அப்பா... இது ரோடு... வா காருக்குப் போவோம்... எல்லாரும் ஒரு மாதிரி பாக்குறாங்க... விட்டா இங்கயே... ம்ம்ம்ம்...." சிரித்தான் சேகர்.

"ஆமா இவரு செய்யமாட்டாரு.... புதுச்சோடியின்னா அப்படி இப்படித்தான்... விட்டுட்டு வாங்க... வருவாங்க... என்னமோ பாக்குறவங்கல்லாம் எதுவுமே செய்யாத மாதிரி..." சேகரை விரட்டினாள் காவேரி.

"ம்க்கும்... லவ்வும் போதே நாங்க இருக்கோமுன்னு கூடப் பாக்காம கட்டிக்கட்டிப் பிடிப்பான்... இனி லைசென்ஸ் கெடச்சாச்சு.... சும்மாவா இருப்பான்..." சரவணன் சீண்டினான்.

"விடுங்கடா... வாங்க கிளம்பலாம்..." அண்ணாத்துரை சொல்ல சேகர் வீடு நோக்கி சந்தோஷமாக கிளம்பினர்.

"டேய்... வைரவன் பேச்சைக் கேட்டு அவனைப் போடாம விட்டது தப்புடா... அவளைக் கெளப்பிக்கிட்டு அவன் பொயிட்டான்... இவன் என்னடான்னா எங்க வீட்டு விஷயத்துல மூக்கை நுழைச்சா வெட்டிடுவேன்னு கத்துறான்... முதல்ல இவனைப் போடணுன்டா.." உள்ளே இறங்கிய பீரின் வேகத்தில் இளங்கோ ஆத்திரத்தைக் கக்கினான்.

"எதுக்கு நீ இப்ப அவனைப் போடணும்... இவனைப் போடணுமின்னு கத்துறே... உனக்குன்னு ஒரு வாழ்க்கை இருக்கு... அதை வாழப்பாரு.. அதை விட்டுட்டு அடிதடி அது இதுன்னு கத்திக்கிட்டு... வக்கீல் இளங்கோவா இருக்கப்பாரு..."

"என்னடா காலேசு படிக்கும் போது அடிதடின்னு இருந்தே... இப்ப என்னடான்னா இப்படிப் பேசுறே...?"

"இங்க பாரு இளங்கோ.... அது அந்த வயசு அப்படி இப்படி இருக்கச் சொன்னுச்சு... இப்போ வாழ்க்கை நமக்கு கத்துக் கொடுத்துக்கிட்டு இருக்கு... நமக்கு கிடைச்ச வாழ்க்கையை நாம அனுபவிச்சி வாழணும்... காலேசுல இருந்த மாதிரி அடிதடின்னு இருந்தா காக்காசுக்கு மதிக்க மாட்டானுங்க... புரிஞ்சிக்க... ஏன் இந்த மணிப்பயல எடுத்துக்க... எத்தனை பேரை வெட்டினான்... இன்னைக்கு அடுத்த வேலை சாப்பாட்டுக்கு அம்மாவை எதிர்பார்க்கிறான்... அவனால சுயமா சம்பாரிச்சு சாப்பிட முடியுமா..? சொல்லு... போட்ட ஆட்டம் இன்னைக்கு எந்திரிக்க முடியாமக் கிடக்கான்... அவனைப் போடணும்... அவனைப் போடணுமின்னு நிக்கிறியே... அவன் என்ன நீ காதலிச்ச பொண்ணை இழுத்துக்கிட்டுப் போனானா... இல்ல உன்னோட முறைப்பொண்ணை இழுத்துக்கிட்டுப் போனானா... அந்த புவனாவை அவன் எத்தனை வருசமா காதலிக்கிறான்னு உனக்குத் தெரியுமில்ல... காலேசுல அவங்க காதலிக்கும் போது நீ ஏன் பிரச்சினை பண்ணலை... இல்ல இத்தன வருசமா அவங்க பழகுனாங்களே அப்பல்லாம் நீ எங்க போனே...? உன்னோட பழைய பகையைத் தீர்க்கணும்... அதுக்காகத்தானே வைரவனுக்கு வலை விரிச்சி நீ உள்ளே புகுந்தே,... ஆமா நான் தெரியாமத்தான் கேக்குறேன்... அந்த ராம்கி அடிச்சது எனக்குத் தெரிஞ்ச ஆட்களைத்தானே... உன்னையோ என்னையோ இல்லையே... இப்பக்கூட வைரவன் விடுன்னு சொல்லிட்டான்... விட்டுட்டு வேலையைப் பாக்க வேண்டியதுதானே... இன்னும் கொல்லுவேன்... கொல்லுவேன்னு திரியிறியே... அப்படி அவனைக் கொன்னுட்டா.... புவனா உங்கிட்ட வந்துருவாளா என்ன... இத்தனை வருசமா காதலிச்சி பெத்தவங்களைக்கூட விட்டுட்டு அவனோட போனவடா அவ... அவனுக்கு எதாவது ஆச்சுன்னா செத்துருவாடா.... செத்துருவா... இங்கபாரு... வைரவன் கூட உன்னால மோத முடியாது... நீ அடிக்கணுமின்னு நினைப்பே... ஆனா அவனோ வெட்டிட்டுப் போய்க்கிட்டே இருப்பான்... இதையெல்லாம் விட்டுட்டு உனக்குன்னு ஒரு வாழ்க்கை அமைச்சிக்கிட்டு நல்ல பேரோட வாழப்பாரு...."

"என்னடா இப்படிப் பேசுறே... என்னால புவனாவை மறக்க முடியாதுடா..."

"டேய் என்னவோ அவள விழுந்து விழுந்து காதலிச்சி உன்னைய விட்டுட்டு ஓடுன மாதிரி பீல் பண்ணுறே... அவ உன்னைய சட்டை பண்ணுனதே இல்லைங்கிறது உனக்கே தெரியும்... இதெல்லாம் ரொம்ப ஓவருடா... இந்தப் புவனா இல்லாட்டி இன்னொரு பாவனா... ஆமா வக்கீலுக்குப் படிக்கும் போது ஒருத்தி விழுந்து விழுந்து காதலிச்சாலே அவளை மட்டும் எப்படி மறக்க முடியுது... எல்லாம் புவனா போதை அப்படித்தானே.... நல்லா சரக்கடிச்சிட்டு மல்லாக்கப் படு... காலையில எழுந்திரிக்கும் போது எல்லாம் பறந்து போயிருக்கும்... உன்னோட வழியைப் பார்த்து வாழ்க்கையை நகர்த்து... எல்லாம் நல்லா இருக்கும்..."

"என்னவோ போடா... எல்லாரும் என்னென்னவோ பேசுறீங்க... அம்புட்டுப் பேரும் எப்படிடா இப்படி மாறுனீங்க... ஆளாளுக்கு அட்வைஸ் பண்ணுறீங்க... ஆனா எனக்குத்தான் புரியல.... சரி விடுடா... நீ சொல்றதும் சரிதான்... ரொம்ப நாளா காதலிச்சு கையை பிடிச்சிருக்காக... இல்லல்ல... ஓடிப்போயிருக்காக... அவளுக்காக எதுக்கு நாம கொல்லுறேன்னு திரியணும்... அந்த புவனா இல்லன்னா இன்னொரு பாவனா... கரெக்ட்டுடா.... கரெக்ட்டு... ஆனா... அவளை வெட்டணும்டா.. ஓடுகாலிச் சிறுக்கி சாதிக்கு சாணி பூசிட்டாடா... அப்புறம் அவனை வெட்டணும்... எவனை தெரியுமா.... அந்த வைரவனை.... மாப்ள... மாப்ளன்னு சொல்லி  மண்ணக் கவ்வ வச்சிட்டான்டா.... எம்புட்டு கனவோட இருந்தேன் தெரியுமா... புதுசா புல்லட் வாங்கி அதுல புவனா கூட சும்மா டபடபடபன்னு  ஊருக்குள்ள சுத்தணுமின்னு... எல்லாம் போச்சு... அந்த ராம்கி... அது என்ன ராம்கி... பந்தாவா சுருக்கி கூப்பிடுறானுங்களாம்... ஏன் ரம்...கியின்னு கூப்பிட வேண்டியதுதானே... சும்மா கிக்கா இருக்குமுல்ல... அவன எங்க பாத்தாலும் வெட்டணுன்டா..." குழறலாய் பேசிக்கொண்டே போனான்.

"சரி... எல்லாரையும் வெட்டலாம்... ரொம்ப ஓவராப் போயிருச்சு... இனி இங்க இருந்து சண்டையை விலை கொடுத்து வாங்கிருவே... வா வீட்டுக்குப் போவோம் காலையில ஒரு முடிவு எடுக்கலாம்..."

"சரி... ஆனா மாப்ள நா... ஸ்டெடியா இருக்கேன்... நீனும் வர்றே... அவங்களப் போடுறோம்.... வண்டி எங்க... நா ஓட்டுறேன்... நா...ஓட்டுறேன்..."

"ஓட்டலாம்... ஓட்டலாம்..." என்றவன் அருகில் இருந்தவனிடம் "டேய் மச்சான்... நா ஓட்டுறேன்... இவன நடுவுல வச்சி நீ பின்னால உக்காரு... எங்கிட்டாவது விழுந்து கிழுந்து தொலையப் போறான்... " எனச் சொல்லி  இளங்கோவை ஒருவழியாக சம்மதிக்க வைத்து நடுவில் அமர வைத்து  மெதுவாக வண்டியைச் செலுத்தினான்.

காலமாற்றம் வாழ்க்கை மாற்றத்தையும் கொடுக்கத் தவறவில்லை. எல்லாருடைய வாழ்விலும் ஏற்ற இறக்கங்கள் வந்து போய்க் கொண்டிருந்தது.

புவனாவைத் தேடும் பணியைத் தீவிரமாக்கிய அப்பாவும் சித்தப்பாவும் அவர்களைப் பற்றிய எந்த ஒரு தகவலும் கிடைக்காமல் சோர்ந்து போயினர். ஒரு கட்டத்தில் சனியன் தொலைஞ்சது தொலைஞ்சதா இருக்கட்டும் இனி அதைத் தேடி ஆகப்போறது என்ன என்று விட்டு விட்டார்கள். மகள் சந்தோஷமாக இருப்பதை அவ்வப்போது வைரவனும் வெளியில் சென்று எஸ்.டி.டி போட்டு பேசித் தெரிந்து கொண்ட அம்மாவோ, தன் மகள் மீண்டும் இந்த வீட்டிற்குள் வரும் காலம் விரைவில் வர வேண்டும் என்று கோயில் கோயிலாகப் போய்க் கொண்டிருந்தாள். வைரவனுக்கு கல்யாணமாகி பேரன் பேத்தி வந்ததும் மகள் நினைவை முற்றிலும் மறந்து அவர்கள் உலகத்தில் தாங்களும் வாழ ஆரம்பித்தார்கள்.

ல்லோரையும் வெட்டுவேன் என்று திரிந்த இளங்கோவை அவனது திருமணம் முற்றிலும் மாற்றியது. குடும்பம், மனைவி, குழந்தை என அவனது உலகம் சுருங்கிப் போனது. மல்லிகா தன் கணவனுடன் மதுரையில் இருந்தாலும் புவனாவுடன் தினமும் போனில் பேசுவதைத் தொடர்ந்து கொண்டிருந்தாள்.

சேகர் - காவேரி தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் பிறக்க மகிழ்ச்சியாய் குடும்பம் நடத்தினார்கள். ராம்கியின் அண்ணன் ஊரில் வந்து செட்டிலாகி அம்மாவை தன்னுடன் வைத்துக் கொண்டான். நாகம்மாவும் இடையிடையே தனது மகனைப் பார்க்கப் போய் வந்து கொண்டிருந்தாள்.

மிழய்யா தனது மகளுக்கு திருமணம் முடித்து வைத்து விட்டு தன்னுடைய பணி நிறைவுக்குப் பின்னர் சொந்த ஊருக்குப் போய்விட, ராம்கியின் நண்பர்களும் பணி நிமித்தம் குடும்பத்துடன் பல ஊர்களில் வாழ்ந்து கொண்டிருந்தனர். எல்லாருடைய உறவும் போன் மூலமாகத் தொடர்ந்தது.

ன் மகன் படித்து நல்ல நிலையை அடைய வேண்டும் என்ற நாகம்மாவின் கனவுப்படி ராம்கி எழுதிய பி.எஸ்.ஆர்.பி கை கொடுக்க வங்கிப் பணி கிடைத்தது. புவனாவும் ஒரு தனியார் அலுவலகத்தில் வேலை பார்க்க கும்பகோணம் பக்கம் வீடு வாங்கி  செட்டிலாகி விட்டனர்.

ருவரும் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து தங்கள் காதல் குறையாது வாழ்க்கையை ரசித்து வாழ்ந்து கொண்டிருந்தனர். அவர்களது அன்பான வாழ்க்கையின் பரிசாக ஆசைக்கு ஒன்று... ஆஸ்திக்கு ஒன்று என இரண்டு முத்துக்களைப் பெற்றெடுத்தனர். 

ராம்கியுடன் வாழ்வது சந்தோஷம் என்றாலும் தனது அப்பாவுடன் பேசும் நாள் விரைவில் வராதா என நாட்களை... வாரங்களை... மாதங்களை... வருடங்களை... கடத்திக் கொண்டிருந்தாள் புவனா. அவளது எண்ணம் ஈடேற நாமும் அவளுக்காக பிரார்த்திப்போம்.

(தொடர்ந்து 80 பகுதிகளையும் வாசித்து கருத்திட்ட அனைவருக்கும் நன்றி - மீண்டும்  ஒரு சிறிய தொடரில் சந்திப்போம்)

முற்றும்.
-'பரிவை' சே.குமார்.

10 எண்ணங்கள்:

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

வாழ்த்துக்கள் நண்பரே
அருமை
அடுத்தத் தொடருக்காகக் காத்திருக்கிறேன்
தம 2

இராஜராஜேஸ்வரி சொன்னது…

அருமையான இனிமையான நிறைவான முடிவு,,பாராட்டுக்கள்.

Yarlpavanan சொன்னது…

இனிய படைப்பு
சிறந்த பகிர்வு
தொடருங்கள்

Unknown சொன்னது…

புவனாவை பேரக்குழந்தையுடன் பார்த்தால் அப்பா பேசாமலா போய்விடுவார் ?
அந்த நிறைவும் விரைவில் வரட்டுமே !
த ம 3

Menaga Sathia சொன்னது…

முடிவு மிகச்சிறப்பு...இந்த அளவு கதை தொய்வில்லாமல் சென்றதே மிகச்சிறப்பு.

புவனாவை பேரக்குழந்தையுடன் அப்பா ஏற்றுக்கொள்வார் என நன்புகிறேன்.

நேரமிருக்கும் போது இதேபோல் த்ரில்லிங் தொடர்கதை எழுதுங்கள் எதிர்ப்பார்க்கிறேன்.

அனைத்து பகுதிகலையும் விடாமல் படித்தேன்,அனைத்திலும் பின்னூட்டம் பொட்டிருப்பேனா என தெரியாது.

தங்களின் இந்த முயற்சிக்கு பாராட்டுக்கள் !!

விரைவில் தங்கள் கனவு அதான் சகோ தேனக்கா பதிவில் படித்தேன் உங்கள் சிறுகதைகள் அனைத்தும் புத்தகமக வெளிவரவும்,குடும்பத்தோடு ஒன்றாக வாழவும் வாழ்த்துக்கள்!!

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஜெயக்குமார் ஐயா...
தங்களின் தொடர் வாசிப்புக்கும் கருத்திடலுக்கும் நன்றி ஐயா.

வாங்க இராஜராஜேஸ்வரி அம்மா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க யாழ்பாவணன் ஐயா
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க பகவான்ஜி...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சகோதரி மேனகா...
திரில்லிங் தொடரா... ஐய்யய்யோ....
முயற்சிக்கிறேன்...
தேனக்கா அறிமுகம் செய்தது நீங்கள் சொல்லித்தான் தெரியும்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

கோமதி அரசு சொன்னது…

நல்ல முடிவு. முத்துக்களை பெற்றதை அப்பாவிடம் அறிவித்து இருந்தால் மனம் மாறி இருப்பார் இல்லையா?

அப்பாவுடன் பேசும் நாள் விரைவில் வரவேண்டும். வாழ்த்துக்கள்.
அம்மாவின் பிராத்தனைகளை கடவுள் சீக்கிரம் நிறைவேற்ற வேண்டும்.

Yoga.S. சொன்னது…

அருமையாக நிறைவு செய்தீர்கள்,குமார்!ஏக சந்தோஷம்.///(ஒரு வாரம் போல் வீட்டில் இல்லாததால்,படிக்கவோ கருத்திடவோ இயலவில்லை.)