மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

ஞாயிறு, 19 மே, 2019மனசின் பக்கம் : கறுப்பியில் கொஞ்சமாய்...

ழுதி முடித்திருக்கும் 'கறுப்பி' நாவலில் (குறு நாவல்) ஒரு பகுதி...

எப்படி இருக்குன்னு சொல்லுங்க...

************

னோ மனசுக்குள் யமுனா வந்தாள்.

இப்போது எங்கே இருப்பாள்…? ஊருக்குப் போயிருப்பாளா…? குடும்பம் குழந்தையின்னு சந்தோஷமா இருப்பாளா…? இல்லை இந்தச் சாக்கடையில்தான் இன்னும் கிடக்கிறாளா…? என்ற கேள்விகள் அவனுள் எழ, கணிப்பொறியை ஆப் பண்ணி வைத்துவிட்டு எழுந்தான்.

அறையின் ஏசிக்குள் பிரியாணியும் சரக்கும் கலந்த வாசனை அடித்தது.

குறட்டைச் சப்தம் மழைநாளில் அவன் ஊரில் இரவு நேரத்தில் வயல்களில் கத்தும் தொருக்கட்டையை ஞாபகப்படுத்தியது.

தண்ணீர்ப் பாட்டிலை எடுத்து ‘மடக்… மடக்…’கெனத் தண்ணீர் குடித்தான்.

ஏனோ தெரியவில்லை… சில வாரங்களாய் பிரியாணி சாப்பிட்ட பின் தண்ணீர் தாகமாய் இருக்கிறது. எதுவும் சேர்மானம் சரியில்லையோ என்னவோ… எவ்வளவு குடித்தும் அடங்கவில்லை… மீண்டும் தண்ணீர் பிடித்துக் குடித்தான்.

வயிறு நிறைந்தது… தாகம் அடங்கவில்லை.

மெல்ல வெளியில் வந்தான்.

ஹாலில் அன்பும் இலியாசும் தூங்கிக் கொண்டிருந்தனர்.

பால்கனிக்குப் போனான்… வெயில் அவனை விரட்டியடித்தது.

கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தான்.

வராண்டா வெறிச்சோடிப் போய்க் கிடந்தது… யாருமில்லை.

லிப்டில் கீழிறங்கி அருகிருக்கும் அபுதாபி மாலில் போய் சுற்றிவிட்டு வரலாமா எனத் தோன்றியது.

இந்த வெயில்ல… அங்க போகணுமா…? என்ற எண்ணம் அதற்குத் தடை போட்டது.

அதிக வெக்கையாக இருந்தது. ஏசியில்லாமல் ஒரு நிமிடம் கூட இருக்க முடியாது என்பதாய்ப்பட்டது. இந்த உடம்பு எப்படி மாறிவிட்டது என்று நினைத்துக் கொண்டான்.

மாடிப்படியில் போய் அமர்ந்தான்.

யமுனா ஞாபகத்துக்கு வந்தாள்.

பக்கத்தில் அவள் அமர்ந்திருப்பது போல் தோன்றியது.

தலையைச் சிலுப்பிக் கொண்டான்.

இதே போன்றோரு மாடிப்படியில்தானே அவளைப் பார்த்த கடைசித் தினத்தில்…

பெருமூச்சு விட்டான்.

எப்படியான வாழ்க்கைக்குள் மாட்டிக் கொண்டுவிட்டாள்.

அவளை அதிலிருந்து மீட்க வேண்டும் என்ற எண்ணம் ஏன் வரவில்லை.

அடுத்தவன் பொண்டாட்டிதானே என்பதாலா…?

அந்த வேலையை ஏற்றுக் கொண்டு விட்டாள் என்பதாலா…?

யாரோ ஒருத்திக்காக நாம் ஏன் போலீஸ் ஸ்டேசனுக்கு அலைய வேண்டும் என்பதாலா…?

யோசனைகள் அவனுக்குள் சுற்றிச் சுற்றி வந்தன.

ஊட்டிக்காரியும் சுதாகரும் இந்நேரம் என்ன செய்வார்கள்…? 

மனதை மாற்ற முயன்று தோற்றான்.

மீண்டும் யமுனா அந்த பச்சை நைட்டியில்…

படியில் இருந்து எழுந்தான்.

அவள் இழுத்து அணைத்து உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுத்தாள்.

அவளிடமிருந்து விலகி, வேகவேகமாக படியிறங்கி வெளியே போனான்.

அருகிலிருந்த சூப்பர் மார்க்கெட்டில் நுழைந்து ஒரு லைம் மிண்ட் சூஸ் எடுத்து காசு கொடுத்து விட்டு, குடித்துக் கொண்டே நடந்து பார்க்கை அடைந்தான்.

அந்த நேரத்தில் அங்கே சில குடும்பங்கள் குழந்தைகளுடன் வந்திருந்தார்கள்.

மொபைலில் மணி பார்த்தான் 4.45 ஆயிருந்தது.

ம்… மணி ஆச்சு… இனி கூட்டம் வரும் என்று நினைத்தபடி ஒரு சேரில் அமர்ந்து வேள்பாரியை வாசிக்க ஆரம்பித்தான்.

அவனக்கு இருபுறமும் யமுனாவும் மலாமாவும் வந்து அமர்ந்தார்கள்.

அவர்களின் மூச்சுக்காற்று அவனைச் சுட ஆரம்பிக்க, அவனுக்குத் மெல்லத் தலை வலி ஆரம்பித்தது.
***********
இது சற்றே என் பணியில் இருந்து மாறியிருக்கும்...


சில உண்மைகள் கலந்த கதை...

நல்லா இருக்கா?
-'பரிவை' சே.குமார்.

வெள்ளி, 17 மே, 2019மனசின் பக்கம் : இப்தார் விருந்தும் இனிய கலந்துரையாடலும்


த்தாண்டு கால அமீரக வாழ்க்கையில் நண்பர்களுடன் இப்தார் விருந்து சாப்பிட்டது நேற்றுத்தான். ஆசிப் அண்ணனின் இல்லத்தில் அமீரக எழுத்தாளர் குழுமத்தின் நண்பர்கள் கிட்டத்தட்ட நாற்பது பேருடன் கொண்டாட்டமான இப்தார் நாளாக / இரவாக நேற்றைய தினம் அமைந்தது.

நோன்பு திறப்புக்குப் பின் மனம் திறந்த உரையாடல்கள் எப்போதும் போலில்லாமல் சற்றே வித்தியாசமாய்... அதிக நேரம் எடுத்துக் கொள்ளாவிட்டாலும் எல்லாருமே பேசினார்கள். ஒரு வருடத்துக்கும் மேலான நட்பு வட்டத்தில் நான் கூட நேற்று ரெண்டு நிமிடம் பேசியிருக்கிறேன்.

சிலர் ரம்ஜான் குறித்துப் பேசினார்கள்... சிலர் பொதுவாகப் பேசினார்கள். இரண்டு மணி நேரத்துக்கு இந்தப் பேச்சு கேலியும் கிண்டலுமாய் நகர்ந்தது.

சிறப்பு விருந்தினராய்க் கலந்து கொண்ட இலங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் காப்பியக்கோ ஜின்னா ஷர்புத்தீன் ஐயா அவர்களைப் பற்றிய அறிமுகத்தில் இதுவரை பதினோரு காப்பியங்கள் எழுதியிருப்பதாகச் சொன்னார்கள். 

அவர் பேசும் போது நியூசிலாந்தில் இருக்கும் மகன் வீட்டுக்குப் போனபோது நாலு சுவற்றுக்குள் இருக்க வேண்டிய சூழலில் வலைத்தளத்தில் தேடி ரவிவர்மாவின் ஓவியம் ஒன்றை எடுத்து அதுக்கு விமர்சனத்தை கவிதை வடிவில் யாப்பிலக்கணத்தில் எழுதி முகனூலில் பகிர்ந்தபோது பெரிய வரவேற்ப்பு இருந்ததாகவும் அதன் பின் அந்த ஓவியங்களுக்கு நிறைய எழுதி வைத்திருப்பதாகவும் சொன்னார்.

யாப்பு குறித்த வகுப்பை நான் எடுக்கிறேன்... நீங்க ஏற்பாடு செய்யுங்கள்... எனக்குப் பணமெல்லாம் தர வேண்டாம்... என்னை இந்த நிலைக்குக் கொண்டு வந்தது தமிழ்... அதை நாலு பேருக்குச் சொல்லிக் கொடுத்துச் செல்வதில்தான் எனக்கு மகிழ்ச்சியே என்றார்.

அவரிடம் ஆசிப் அண்ணன் சில புத்தகங்களை நினைவுப் பரிசாக கொடுத்தபோது... எனது மனைவி தீவிர வாசிப்பாளர்... இரவில் வாசித்துவிட்டுப் படுக்க அதிக நேரமாகும்... பெரும்பாலான நாட்களில் புத்தகத்தையும் கண்ணாடியையும் எடுத்து வைப்பது நானாகத்தான் இருக்கும் என்றார். இந்த வயதில் வாசிப்பின் மீதான அவர்களின் நேசிப்பு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

எப்போது எங்களின் வாசிப்புக்காக நிறைய புத்தகங்களை எடுத்துச் செல்வோம். அடிக்கடி இங்கு வருபவன் என்றாலும் தற்போதைய இலங்கைச் சூழலில் புத்தகங்களைக் கொண்டு வந்து அதில் ஏதேனும் சின்னதாய் வித்தியாசம் தெரிந்தால் அதிக பிரச்சினையைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்பதால் எதுவும் கொண்டு வரவில்லை... இந்தப் புத்தகங்கள் என் மனைவிக்கு வாசிக்கக் கிடைத்ததில் மகிழ்ச்சி என்றார்.

இலங்கையில் தமிழ்ச் சங்கத்தில் முப்பது ஆண்டுக்கு மேல் பொறுப்பில் இருப்பதாகவும் அதில் இருக்கும் ஒரே ஒரு முஸ்லீம் நாந்தான் என்றும் சொன்னவர், நாலைந்து தமிழ்ப் புரபஸர்கள் இருப்பதாகவும் அவர்களுக்கு எல்லாம் யாப்பு குறித்துச் சொன்னதாகவும்  சொன்னார்.

அவரின் பேராசிரியர் ஹோட்டலில் சாப்பிட்டுக் கை துடைக்க கொடுக்கப்படும் தினசரி கட்டிங் பேப்பரை கை துடைக்கும் முன் வாசித்துப் பார் என்று சொன்னதை இன்று கடைபிடிப்பதாகவும், தன் மனைவி புத்தகம் இல்லாததால் தமிழ் பேப்பரை வாங்கிக் கொடுங்கள் என வாங்கி வாசிப்பதாகவும் சொன்னார். 

இங்கு நிறையப் பேர் எழுத்தாளர்களாய் இருக்கிறீர்கள்... எழுத்தாளனுக்கு முக்கியம் வாசிப்பு... அதிகமாக வாசியுங்கள் என்று சொன்னார்.

ஆசிப் அண்ணன் எழுதிய ஒரு சிறுகதைக்கு தான் ரசிகன் என்றும் அவர் சிறுகதைகள் நிறைய எழுத வேண்டும் என்றும் சொன்னார். 

சும்மா வார்த்தைகளை மடக்கிப் போட்டு எழுதுதல் என்பது கவிதை இல்லை.... யாப்புத் தெரியாமல் கவிதை எழுத முடியாது என சுரேஷ் அண்ணன் சொன்னதை காப்பியக்கோ அவர்களும் சொன்னார்கள். கண்டிப்பாக யாப்புத் தெரிந்திருக்க வேண்டும் என்று சொன்னார்.

தற்போது கம்பராமாயணத்தைப் பற்றி எழுத ஆரம்பித்திருப்பதாகச் சொன்னார்.  குறிப்பாக தமிழ் மீது இலங்கைத் தமிழர்களுக்கு எப்போதும் கூடுதல் மரியாதை உண்டு... தமிழ் மீதான காதல் அவரின் பேச்சில் வழிந்தோடியது. இலங்கைத் தமிழ் கேட்க அழகாக இருக்கும் என்பதும் சிறப்பு.

இலங்கையின் இன்றைய நிலை குறித்த பேச்சு வரும்போது அது குறித்து ஏதோ பேச வந்தவர், கண்கலங்கினார்... என்னால் பேச இயலாது என்று சொல்லிவிட்டார்.

இலங்கை மக்களுக்காய் இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலியுடன் நிகழ்வு முடிந்தது.

பிரியாணியை ஒரு கட்டுக் கட்டி விட்டு... வீட்டுக்கும் கட்டிக் கொண்டு நடையைக் கட்டினோம்.

அடுத்தது எப்பவும் போல் கீழே வந்து டீச்சாப்பிட்டபடி ஒரு மணி நேரத்துக்கும் மேல் பேச்சு சிரிப்பும் கோபமும் நகர்ந்தது.

அமீரக வாழ்க்கையில் வேலை, அறை. வாசிப்பு, வலைப்பூவில் கிறுக்கல் என நகர்ந்து கொண்டிருந்த காலத்தை அமீரக எழுத்தாளர்  குழுமத்துக்குள் இணைந்த பின்தான் சற்றே வெளியிடத்தில் நகர்த்திச் செல்ல முடிகிறது. மாதத்தில் இரண்டு முறையேனும் சந்திப்பு என்றாகிவிட்டிருக்கிறது.

வேலையின் சுமை, குடும்பப் பிரச்சினைகள் என எல்லாவற்றையும் சுமக்கும் விடுமுறை தினங்கள் இப்போது கொஞ்சமேனும் ஆசுவாசப்படுத்திக் கொள்ளும், அந்த வலிகளில் இருந்து சிறிது விலகி இருக்கச் செய்யும் நாட்களாய் மாறியிருக்கிறது.

இந்தக் குழுமத்துக்குள்ளும் பிரச்சினைகள் இல்லாமல் இல்லை... அடித்துக் கொள்வதும் அணைத்துக் கொள்வதும் இங்கும் இருக்கு... நேரில் பார்க்கும் போது பாசமாய் கட்டியணைப்பதில் கரைந்து விடுகிறது அதுவரை அடித்து ஆடிய  அத்தனை பிரச்சினைகளும்...  அதுதானே வேண்டும்.

இந்தப் பிரியம் சாதி, மதம் பார்த்து வருவதில்லை... அதற்கும் மேலானது...  இந்த நட்பைத் தவிர, நேசத்தைத் தவிர வேறென்னதைச் சுமந்து செல்லப் போகிறோம்... எனக்கெல்லாம் எப்போது நட்பு அதிகம்... இப்போதும் ஊருக்குப் போனால் உறவுகளைப் பார்ப்பதைவிட நட்புக்களைப் பார்ப்பதுதான் அதிகம்...

இருக்கும் வரை அன்போடு இருப்போம் என்பதை ஒவ்வொருமுறையும் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறது அமீரக எழுத்தாளர் குழுமத்தின் நண்பர்களின் நேசம்.

எங்களை எல்லாம் இடங்களுக்குத் தேடி வந்து அழைத்துச் செல்லும் பால்கரசு எப்போதும் நன்றிக்குரியவர். அவர் இல்லையென்றால் துபாய்/ ஷார்ஜா என்று சென்று வருதல் என்பது கடினமே. இரவு ரெண்டு மணிக்கு அபுதாபியில் கொண்டு வந்து விட்டுவிட்டு அவர் முஸாபா செல்லுதல் என்பது நேசத்தின் அடையாளமே ஒழிய வெறொன்றும் இல்லை.

தொடரட்டும் இந்த நட்பும் பாசமும்.
-'பரிவை' சே.குமார்.

ஞாயிறு, 12 மே, 2019காதலே... காதலே... (பிரதிலிபிக்கு எழுதிய கதை)

Image result for காதல்

"நீ அவளைக் காதலிக்கிறியா...?" அப்பாவிடமிருந்து இப்படி ஒரு கேள்வி என்னை நோக்கி வரும் என்பதை நான் எதிர் பார்க்கவில்லை.

பதில் சொல்லாது தரையைப் பார்த்தபடி நின்றேன்.

"உங்கிட்டதான் கேக்குறேன்... காது கேக்குமில்ல... கேட்டதுக்கு எனக்குப் பதில் இப்ப வரணும்..? இல்லைன்னா..." கோபத்தோடு பேசினார் என்பதைவிட கத்தினார் என்பதே பொருந்தும்.

அம்மா ஒரு பக்கம் பேசாமல் வாய் பொத்தி நின்றாள். எதாவது பேசினாள் என்றால் நீ வளர்த்த லட்சணம்தானே இதுன்னு தன் மீது பாய்ந்து விடுவார் என்பதை உணர்ந்தே ஒதுங்கி நின்றாள்.

அண்ணனோ தனக்கு இதில் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதைப் போல ஹெட்செட் மாட்டி பாட்டுக் கேட்டுக் கொண்டிருந்தான். அவன் அங்கு இருந்ததே அபூர்வம்... எப்பவும் அறைக்குள்ளயே அடைந்து கிடப்பதுதான் அவனுக்குப் பிடிக்கும். வீட்டில் இருந்தால் மொபைல்தான் அவனின் உலகம்.

அக்கா என்னை முறைத்துக் கொண்டு கதவோரத்தில் நின்றாள். அவள் அப்பா செல்லம் என்பதால் அவரிடம் திட்டே வாங்காதவள் என்ற பெருமை எங்கள் மூவரில் அவளுக்கு உண்டு.

எல்லாரையும் தலை தூக்கி ஒரு முறை பார்த்துவிட்டு நானும் அப்பா யாரையோ விசாரிக்கிறார் என்பதைப் போல அருகில் கிடந்த குமுதத்தின் அட்டைப் பட அஞ்சலியை ரசித்துக் கொண்டிருந்தேன்.

"என்னடா... தெனாவெட்டா உக்காந்திருக்கே... உன்னைத்தானே கேட்கிறேன்... என்னவோ எருமை மாட்டு மேல மழை பேய்ஞ்ச மாதிரி உக்காந்திருக்கே.... அவளை நீ விரும்புறியான்னு கேட்டேன்...? எனக்கு இப்ப பதில் தெரியணும்...பதில் சொல்லாம நீ இங்க இருந்து எந்திரிச்சிப் போகமுடியாது... சொல்லிப்புட்டேன்..." கர்ஜித்தார்.

'முதல்ல காதலிக்கிறியான்னு கேட்டீங்க... இப்ப விரும்புறியான்னு கேட்கிறீங்க.. உங்க வார்த்தையில் பிழை உள்ளது தந்தையே'ன்னு சொல்ல நினைத்தேன்... சொன்னா அவர் உட்கார்ந்திருக்கிற நாற்காலி எகிறி விழும்... எனக்கு அடி விழும் என்பதை அறிந்தவன் என்பதால் அதை எனக்குள்ளே சொல்லிக் கொண்டேன்.

இப்ப அவருக்கு ஏதாவது பதில் சொல்லியே ஆகவேண்டும்... தோளுக்கு மேல வளர்ந்துட்டேன்னோ என்னவோ இதுவரை கை ஓங்காமல் உட்கார்ந்த இடத்திலிருந்து கேட்கிறார்... எத்தனையோ தடவை பெல்ட் பிய்ந்து போற அளவுக்கு அடிச்சிருக்கார்...

சின்ன வயசுல ஒரு தடவை கோவிலுக்குப் பின்னால லதாவோட விளையாண்டுக்கிட்டு இருந்தப்போ அறியாத வயசுலங்கிறதைவிட ஆர்வக் கோளாறுல அவ மார்பை பிடிச்சதைப் பார்த்துட்டு இழுத்துக்கிட்டு வந்து கட்டி வச்சி உதைச்சவருதான் இவரு... எதையாச்சும் சொல்லித் தொலைக்கணுமே... இல்லைன்னு சொன்னா... நீ அவளை லவ் பண்றது எனக்குத் தெரியும்ன்னு ஆரம்பிப்பாரு... ஆமான்னு சொன்னா அவ என்ன ஆளுகன்னு தெரியுமான்னு கத்திக்கிட்டு இழுத்துப் போட்டு மிதிப்பாரு... இப்ப என்ன சொல்லுறது... சொல்லலைன்னா இங்க இருந்து போகவிடமாட்டாரு... ம்....' என்று யோசித்தபடி அஞ்சலியை அப்படியும் இப்படியும் திருப்பிப் பார்த்தேன்.

"பாருடி... எம்புட்டு நேரமாக் கத்துறேன்... பதில் சொல்றானா பாத்தியா... இப்பத்தான் அந்த நடிகையை அளவெடுக்குறான்... சொல்லுவானா... மாட்டானான்னு கேளுடி... செல்லங் கொடுத்து வளர்த்து கெடுத்து வச்சிருக்கேல்ல... மூத்தவனைப் பாரு... படிச்சி முடிச்சிட்டு வேலைக்குப் போறான்... இது மாதிரி எவ கூடவாச்சும் சுத்துனான்னு யாராச்சும் சொல்ல முடியுமா..?" என்றபடி அம்மா ஏன் ஒதுங்கி நிற்கிறாள் என அவளையும் சீனுக்குள் இழுத்துப் போட்டார்.

அப்பா சொன்னதும் காதில் மாட்டியிருந்த ஹெட்போனையும் மீறி மந்தகாசப் புன்னகையை என்னைப் பார்த்து வீசிவிட்டு மீண்டும் ராசாவுக்குள்ளோ ரஹ்மானுக்குள்ளோ ஐக்கியமானான் அண்ணன்.

"மூனையும் நாந்தானே வளர்த்தேன்... என்னமோ சனியன் இதுதான் இப்புடி வந்து பொறந்திருக்கு..." என்று ஆரம்பித்த அம்மா "அடேய் மூதேவி... அவரு கேட்டுக்கிட்டே இருக்காரு... நீ பேசாம உக்காந்திருக்கே.... அப்ப அவருக்கு என்ன மரியாதை இருக்கு... ஆமா இல்லைன்னு சொல்லித் தொலைய வேண்டியதுதானே..."

"என்ன சொன்னாலும் திட்டப் போறாரு... என்னத்தைச் சொல்லச் சொல்றே..?" சிரிக்காமல் கேட்டேன்.

சிரித்தால் அப்பா கையில் வைத்திருக்கும் காபி டம்ளர் குல்தீப் யாதவின் பந்து போல் என் முகத்தைப் பதம் பார்க்கலாம் என்பதை அறிந்தே வைத்திருந்தேன். சற்றே ஒதுங்கியும் அமர்ந்து கொண்டேன். அவர் வீசினால் வைடு பாலாகவும் வாய்ப்புண்டு இப்போது என்பதில் கொஞ்சம் நிம்மதி.

"எனக்கு அவளை இவன் விரும்புறானான்னு தெரிஞ்சாகணும்... அம்புட்டுத்தான்..." தீர்மானமாய்ச் சொல்லியவர் அக்காவிடம் "அந்த பெல்டை எடுத்துக்கிட்டு வா இங்க... இனி விசாரிக்கிற விதமா விசாரிச்சாத்தான் சரி வரும்" என்ற போது அவர் உக்கிரத்துக்குச் செல்கிறார் என்பதை உணர்ந்தேன்.

'ஆஹா... பதினெட்டாம் படிக்கருப்பன் தயாராயிட்டான்... எந்த நேரமும் இங்கு இடி முழங்கலாம்... ஆட ஆரம்பிச்சிட்டா அப்புறம் சிக்ஸும் போரும்தான்... கிரவுண்ட்டை ரணகளமாக்கிடுவாரு... மனுசன் அவ்வளவு சீக்கிரம் போல்ட் ஆகமாட்டாரு... ஆமா... இவரு இம்புட்டு உக்கிரமாகிற அளவுக்கு எவன் போட்டுக் கொடுத்திருப்பான்... அவன் மட்டும் கையில சிக்கினா மவனே தொலைஞ்சான்..' என்று மனசுக்குள் நினைத்தவன் "ஆமா..." என்றேன் சத்தமாக.

"ஆமான்னா.... என்ன அர்த்தம்..? பண்றேன்னு சொல்றியா பண்ணலைன்னு சொல்றியா...?" கர்ஜித்தார்.

'காதலிக்கிறியான்னு ஆரம்பிச்சீங்க... விரும்புறியான்னு கேட்டீங்க... நான் ஆமாங்கிறேன்... இப்ப பண்ணுறியாங்கிறீங்க... சீக்கிரம் முடிச்சி விடுங்க.. வேலை இருக்குல்ல...' இதெல்லாம் மைண்ட் வாய்ஸ்ங்க... சத்தமாச் சொல்லியிருந்தா சங்குதான்னு தெரியாமயா இருப்போம்.

அப்பாவின் கையில் பெல்ட் அமைதியாய் அமர்ந்திருந்தது... சில நாட்களுக்கு முன்னாலதான் புதுசு வாங்கியிருந்தார். எப்பவுமே சுத்தமான தோல் பெல்ட்த்தான் வாங்குவார். அடிச்சாருன்னா பிச்சிக்கும்ன்னு தெரியும். அவரோட யார்க்கர் பாலை எப்படித் தவிர்ப்பதுன்னு யோசிக்க ஆரம்பித்தேன்.

'பெல்ட்டையா எடுத்தாந்து கொடுக்கிறே... இரு... நம்ம செல்வி அத்தை மகன் வீட்டுக்கு அடிக்கடி வர்றதும் நீ குலையுறதும் எனக்குத் தெரியாதுன்னா நினைச்சே... இரு ஒரு நாளைக்கு ஆதாரத்தோட போட்டுக் கொடுக்கிறேன்...' என மனசுக்குள் திட்டியபடி அக்காவை முறைத்தான். அவள் நான் அடி வாங்குவதைப் பார்க்கும் ஆவலில் இருப்பதாய்க் காட்டிக் கொண்டாள்.

"அவரை வெறி ஏத்திப் பாக்காதே... அவரு வெறியானாருன்னா என்ன ஆகும்ன்னு உனக்கே தெரியும்ல்ல... கேட்டதுக்குப் பதில் சொல்லு.... அவளோட பேச மாட்டேன்னு சத்தியம் பண்ணிக் கொடு..." கோவில்ல சாமி ஆடுறவரைப் பார்த்து பக்கத்துல இருக்கவரு ஆத்தா உக்கிரமாயிருக்கான்னு ஏத்தி விடுற மாதிரி அம்மா அவ பங்குக்கு சாம்பிராணி போட்டாள்.

அப்பாவின் கண்கள் சிவப்பாக மாறியிருந்தது. எப்பவும் பந்து வீசலாம்... களத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

"அதான் சொன்னேன்ல ஆமான்னு..." கொஞ்சம் சத்தமாகச் சொன்னேன்... எனக்குப் பயமில்லை என்பதாய்க் காட்டிக் கொள்ள... ஆனால் உள்ளுக்குள் சோயிப் அக்தர் பாலை எதிர் கொள்ள இருக்கும் கும்ளேயின் மனநிலையில்தான் இருந்தேன்.

"என்னது ஆமாவா... உனக்கு முன்னாடி ரெண்டு பேரு இருக்குதுக... ரெண்டும் ரெண்டு டிகிரி படிச்சிருக்குக.. உங்கண்ணன் நல்ல வேலையில இருக்கான்... அக்கா வேலை தேடிக்கிட்டு இருக்கா... அதுகளே லவ்வுகிவ்வு சுத்தாம இருக்குதுக... உனக்கு இந்த வயசுல லவ்வு கேக்குதோ... லவ்வு..." எனக் கத்தியபடி எழுந்தார்.

'இப்பல்லாம் பள்ளிக்கூடம் படிக்கையிலையே லவ் பண்ணுதுக.. பப்ளிக்ல லிப் டு லிப் கிஸ் கொடுத்துக்கிட்டு நிக்கிதுக.. காலேசு படிக்கிற எனக்கு லவ்வு கேக்குற வயசில்லையாமே..' என நினைத்துக் கொண்டேன்.

பெல்டைக் கையில் பிடித்தபடி "படிக்க அனுப்புனா... காதல்... அதுவும் எவ கூட....ம்...." என்றவர் அதை கையில் லாவகமாச் சுற்றிக் கொண்டார்.

"கொக்கா மக்கா... குமுறப் போறாரு...' அடிபட்டுப் பிய்யிற இடம் வெளிய தெரியக்கூடாது என்பதில் கவனமாய் முதுகைக் காட்டியபடி, 'ஸ்டார்ட் மியூசிக்...' என மனசுக்குள் சொல்லிக் கொண்டேன்.

"இருங்க... வயசு வந்த புள்ளையை அடிக்க கை ஓங்காம... உக்காருங்க... அட உக்காருங்கன்னா...." எனக்கு விவரம் தெரிந்து அப்பாவை முதல் முறையாக அம்மா அடக்கி உட்கார வைத்தாள்.

யாருக்குமே அடங்காத அப்பாவும் முதல்முறையாக அடங்கிப் போனார். சை இத்தனை வருசமா இப்படிச் சொல்லாம வேஸ்ட் பண்ணிட்டோமேன்னு அம்மா நினைத்திருக்கக் கூடும்.

"டேய்... என்ன நெஞ்சழுத்தம் உனக்கு அவருக்கிட்டயே அவளை விரும்புறேன்னு தெனாவெட்டாச் சொல்லுறே.." அம்மா கோபமாகக் கேட்டாள்.

"அம்மா அவருதானே லவ் பண்ணுறியான்னு கேட்டார்... நான் பண்றேன்னு உண்மையைச் சொன்னேன்... இதிலென்ன தப்பு இருக்கு..."

"என்ன தப்பிருக்கா.... உனக்கு முன்னாடி ரெண்டு பேர் இருக்குதுகளே.... அதுக இப்புடியா தெருப் பொறக்குச்சுக... லவ் பண்றாராம் லவ்வு..." அம்மாதான் கத்தினாள்.

அப்பா பேசாமல் என்னை முறைத்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தார். அவருக்குள் பெல்ட்டுக்கு வேலை கொடுக்கும் ஆவல் அதிகமிருப்பது கண்ணில் தெரிந்தது.

"நானா அவங்க ரெண்டு பேரையும் லவ் பண்ணாதீங்கன்னு சொன்னேன்.... இந்த உம்முனா மூஞ்சிகளை யாருக்குப் பிடிக்கும்... அதுக்கெல்லாம் முகக்கலை வேணும்... எனக்கு அவளைப் பிடிச்சிச்சு... அவளுக்கும் என்னைப் பிடிச்சிச்சு... லவ் பண்றோம்... இதுல என்ன தப்பிருக்கு..." அப்பா அடங்கியிருக்கவும் பேச்சில் வேகத்தைக் கூட்டியதின் பலனை அடுத்த நொடியே உணர்ந்தேன்.

"அடங்க்......" என எழுந்தவர் அம்மாவும் அக்காவும் மறித்தாலும் அதையும் மீறி பெல்ட்டால் முதுகில் நாலைந்து அடி அடித்துவிட்டார்.

அடிபட்ட பின் எனக்கு வலியைவிட கௌரவமும் கோபமும்தான் அதிகமாகக் கல்லாக் கட்டியது.

"ஆமா... அவளைத்தான் லவ் பண்றேன்... அவளைத்தான் கட்டிப்பேன்... இப்ப அதுக்கு என்ன..." கத்தினேன். வயசின் வீரியம் முதல் முறை அப்பாவுக்கு முன் பொங்கியது.

என் சத்ததைக் கேட்டு காதிலிருந்த ஹெட்போனைக் கழட்டி வைத்துவிட்டு "அப்பா இதெல்லாம் திருந்தாது... நீங்க ஏன் வீணாவுல எனர்ஜியைப் போக்குறீங்க... அதுவா பட்டுத் திருந்தி வரும்... விட்டுட்டு வேலையைப் பாருங்க..." என அப்பாவை அடக்கினான் அண்ணன்.

என்னைத் திட்டினால் என்ன நடக்கும் என்பதை அறிவான் அவன். இரண்டு முறை அலுவலகத் தோழி ரம்யாவுடன் வண்டியில் போகும்போது பார்த்திருக்கிறேன். போட்டோவும் எடுத்து வைத்திருக்கிறேன். அது நட்பென்பதை அறிந்தவன்தான் என்றாலும் இங்கு ஆதாரத்துடன் வேறு விதமாகப் போட்டுக் கொடுக்கவும் தயங்கமாட்டேன் என்பதை அவன் உணர்ந்தே இருந்தான்.

அப்பாவை அடக்கியதில் தன் கடமை முடிந்ததென அறைக்குள் சென்று தாழிட்டுக் கொண்டான்.

"வாயை மூடிக்கிட்டு இருக்க மாட்டியாடா... அப்பாக்கிட்ட எதுத்துக்கிட்டு நிக்கிறே.... அப்பா.. நீங்க உக்காருங்கப்பா... அவன் என்ன சின்னப் பிள்ளையா.... பெல்ட்டெல்லாம் வச்சி அடிச்சிக்கிட்டு..." இருவரையும் சேர்த்துத் திட்டினாள் அக்கா.

'நீந்தானே பெல்ட்டை எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தே... இப்ப எங்கே அத்தை மகன் கதையை சொல்லிடுவேனோன்னு சப்பைக் கட்டு கட்டுறே...' என்று நினைத்தபடி அவளைப் பார்த்து அந்தச் சூழலிலும் சிரித்தேன். அவளுக்கு என் சிரிப்பின் பின்னணி புரிய வாயை மூடிக் கொண்டு வேறு பக்கம் பார்த்தாள்.

அதான் எல்லாம் முடிஞ்சிருச்சே.... எஸ்கேப் ஆவோம் என மெல்ல அங்கிருந்து எழுந்தேன்.

"அவளை இனிப் பார்க்க மாட்டேன்னு சொல்லி சத்தியம் பண்ணிட்டுப் போகச் சொல்லுடி அவனை..." அப்பா விடுவதாய் இல்லை.

"எதுக்கு சத்தியம் பண்ணனும்..? எதுக்கு அவளைப் பார்க்காம இருக்கணும்...? எனக்கு அவ முக்கியம்... என்னோட காதலை எல்லாம் உங்களுக்காக முறிக்க முடியாது... அடிச்சா பயந்திருவோமாக்கும்... அது அப்போ... இப்ப என்ன அவளைக் கூட்டிக்கிட்டா ஓடப் போறேன்... இந்த ரெண்டு முண்டங்களுக்கும் காலாகாலத்துல கல்யாணம் பண்ணி வையுங்க... என்னோட மனசுக்குப் புடிச்சவளை உங்க கௌரவம் கெடாம இவுக கல்யாணத்துக்கு அப்புறம்... என்னோட படிப்பு முடிஞ்சி... வேலைக்கும் சேர்ந்துட்டுத்தான் கட்டிப்பேன்...அப்ப சம்மதிக்கிறதும் சம்மதிக்காததும் உங்க விருப்பம்... சத்தியமெல்லம் பண்ண முடியாது..." சொல்லிக் கொண்டே வாசலுக்குப் போனேன்.

"இதெல்லாம் புள்ளையே இல்லை... இதெல்லாம் வாழ்க்கையில முன்னேறவா போவுது... அவ பின்னாடி சுத்தி கடைசியில தெருவுலதான் திரியப் போகுது"ன்னு அப்பா கத்திக் கொண்டிருந்தது வாசலுக்குக் கேட்டது.

"விடுங்க அவன் அப்படித்தான் பேசுவான்... நாளைக்கே இனி நான் அவளைப் பார்க்கமாட்டேன்னு சொல்லுவான் பாருங்க... அவன் நம்ம புள்ளைங்க..." அம்மா அப்பாவின் கோவத்தைக் குறைக்க முயற்சித்தாள்.

"அவன் எவளை விரும்புறான்னு தெரியுமாடி உனக்கு.... இதை நம்ம சாதி சனம் ஏத்துக்குங்கிறியா.. காறித் துப்பும் தெரியுமா... நாம இந்த ஊருக்குள்ளயே இருக்க முடியாது..." அப்பாவுக்கு கௌரவம் என்னும் கிரீடம் கீழே விழுந்து விடுமென இப்பவே பயம் வந்துவிட்டதை நினைத்து அந்தச் சூழலிலும் எனக்குச் சிரிப்பு வந்தது.

"அவ எவளாவோ இருக்கட்டும்.. நம்ம புள்ள அந்த இடையங்காளி புண்ணியத்துல நாளைக்கே அவகூட பேசுறதை நிறுத்திருவான் பாருங்க..." அம்மா அப்போதைய சூழலை மாற்ற அம்மனையும் துணைக்கு அழைத்தாள்.

அவர்களின் பேச்சுக்களைக் கேட்டபடி கொஞ்ச நேரம் வாசலருகே நின்றேன்.

வானம் இருட்டிக் கொண்டு எப்போதும் மழை வரலாம் என்பதாய் இருந்தது.

எங்கோ மழை பெய்கிறது போலும் மழை நேரத்து மண் வாசம் காற்றில் கலந்திருந்தது. அதைச் சுவாசித்தல் ஒரு சுகம்தான்... மூச்சை இழுத்து காற்றை நிரப்பிக் கொண்டேன். மனசுக்குள் ஏதோ விடை பெற்றது போலொரு விடுதலை.

வீட்டை ஒட்டி நிற்கும் மரங்களுக்குள் நுழைந்தேன். தென்னங்கீற்றும் தென்றல் காற்றும் கைகுலுக்க, மழைக்காற்று உடலைத் தழுவியதில் குளுமை இருந்தது.

அப்பா விளாசியதில் முதுகில் லேசாக பிய்ந்திருந்த இடத்தில் காற்றுப் பட்டதும் எரிந்தது.

'ஏய் லூசு ஏன் இப்படி அடி வாங்குறே...என்னைக் காதலிக்கலைன்னு பொய் சத்தியம் பண்ணியிருக்கலாமே...' என அவள் முன் உச்சி முடி களைத்துக் கேட்பது போல் மனக்கனவு எனக்குள்...

காற்று முடியைக் கலைத்திருந்தது... ரசித்துக் கொண்டேன்... இந்தக் காதல்தான் எத்தனை சுகமானது இந்த மண் மணக்கும் காற்றைப் போல.

ஏனோ அவளை அழைக்க வேண்டும் போல் தோன்ற...

அழைத்தேன்.

"என்ன இந்த நேரத்துல... அதுவும் லீவு நாள்ல ..." எதிர்முனையில் சிரித்தபடிக் கேட்டாள் அவள்.

"என்னமோ உனக்குப் போன் பண்ணனும்ன்னு தோணுச்சு.... அதான்... ஆமா... என்ன பண்ணுறே....?" .

"ம்... வீட்லதான் இருக்கேன்... சொல்லு..." என்றாள்.

"ஒண்ணுமில்லை... சும்மாதான்... அடிச்சேன்..." என்றேன்.

வீட்டு நிகழ்வுகளை அவளிடம் சொல்ல ஏனோ மனம் வரவில்லை... அவளை வருத்தப்பட வைப்பதில் மனசுக்கு விருப்பம் இல்லை.

"ம்... என் நினைப்பு உனக்கு வந்திருக்கு பாரு... அதான் ட்ரூ லவ்... இப்பத்தான் உனக்குப் போன் பண்ணனும்ன்னு நினைச்சேன்...."

"பாத்தியா மனசு ரெண்டும் ஒரே மாதிரி நினைக்கிது..." சிரிப்பை வரவழைத்துக் கொண்டு பேசினேன்.

"ம்..."

"என்ன ம்...?"

"நாம பழகுறது வீட்டுக்குத் தெரிஞ்சாச்சு..." என நான் மறைக்க நினைத்ததை விசும்பலுடன் மெல்லச் சொல்ல ஆரம்பித்தாள் மெஹருன்னிசா.

-'பரிவை' சே.குமார்.


நான் ஏன் எழுதுகிறேன்? (பிரதிலிபிக்கு எழுதியது)

ழுத்து எல்லாருக்குள்ளும் இருக்கக் கூடியதுதான்... என்னால் எழுத முடியும்... உன்னால் எழுத முடியாது... என்பதெல்லாம் உண்மையில்லை, எல்லாராலும் எழுத முடியும்... நாம் முயற்சிப்பதில்லை... அவ்வளவே.

நானெல்லாம் பிறவி எழுத்தாளன் கிடையாது... பள்ளிப்படிப்பு முடிக்கும் வரை எழுதவும் இல்லை... பள்ளிப் பருவத்தில் பலர் கவிதைகள் எழுதித் தள்ளுவார்கள்... சிலர் கதைகளைக் கண் முன்னே விரிப்பார்கள்... நமக்கு அதெல்லாம் வராதென ஒதுங்கியிருந்தவன் நான். ஐந்தாவதில் அழகாய் கவிதை எழுதியவனையும் பார்த்திருக்கிறேன்.

கல்லூரியில் படிக்கும் போது என் நண்பன் முருகன் அருமையாகக் கதை எழுதுவான்... கல்லூரிகளுக்கு இடையிலான போட்டிகள், துறைவாரியான போட்டிகளில் கதைகளுக்குப் பரிசும் பேராசிரியர்களிடம் பாராட்டும் பெறுவான். இரண்டாம் ஆண்டு படிக்கும்போது ஒரு மாலை நேரம் எங்கள் பேராசான் மு.பழனி இராகுலதாசனுடன் எப்பவும் போல் சைக்கிளை உருட்டிக் கொண்டு பேசிக் கொண்டு சென்றோம். இது தினமும் நடக்கும் செயல்தான்.

அப்போது என்னய்யா முருகன் கதையெல்லாம் எழுது பரிசுகளைக் குவிக்கிறாரு... ரொம்பச் சிறப்பா எழுதுறார்... நீங்களும் எழுதலாமே எனக் கேட்க, நானா எனச் சிரித்தபோது, எல்லாரும் எழுதலாம் இதில் நானா என்ற கேள்வி எதற்கு... நீங்க கதை எழுதுறீங்க என்றார்.

அதன் பின் நான் எழுதிக் கொண்டு போய்க் கொடுத்த காதல் கதை அபத்தம் என்று தெரிந்தும் நல்லாயிருக்கு இன்னும் எழுதுங்க என்றார். அவர் போட்ட விதைதான் அதன் பின் தொடர்ந்து எழுத வைத்தது. 

முதல் கவிதை தாமரையில் வந்தது. கதைகள் பத்திரிக்கைகளில் வர ஆரம்பித்தன... அதற்குச் சன்மானமாக 50 ரூபாய் கிடைப்பது பெரும் மகிழ்வைக் கொடுத்தது. எனது சிறுகதை பத்திரிக்கையில் வந்தால் அந்த மாத கலையிலக்கிய மன்றக் கூட்டத்தில் வாசிக்க வைப்பார். எது எழுதினாலும் திருத்திக் கொடுப்பார். அடிக்கடி மேடையேற்ற ஆசைப்படுவார். நான்தான் வெட்கத்தில் ஒதுங்கி நிற்பேன்.

வீட்டில் இருக்கும் போது கதை எழுதுகிறேன் என உட்கார்ந்தால் வயல்ல வேலை கிடக்கு, தம்பி இப்பத்தான் கதை எழுதுறேன்னு உக்காந்திருக்கு... இதுதானே நாளக்கி சோறு போடப்போகுது என அப்பா சத்தம் போடுவார். திட்டுக்கள்தான் அதிகம் வரும்... கதை பத்திரிக்கையில் வரும்போது மற்றவரிடம் சொல்லி மகிழ்வார். என்னை எழுத்தாளனாய் ஆக்கியதில் பெற்றோரைவிட என் கல்வித்தந்தைக்கே பெரும்பங்கு உண்டு.

கல்லூரிக்கால எழுத்தாளன் வாழ்க்கை அத்துடன் முடிவுக்கு வந்தது... எழுதும் எண்ணமில்லாமல் வாழ்க்கை நகர, திருமணத்துக்குப் பின் சென்னை வாழ்க்கை மீண்டும் எழுதும் எண்ணத்தை மனசுக்குள் மலர வைத்தது. அப்பப்ப கதைகள் எழுத ஆரம்பித்தேன்... பத்திரிக்கையில் வந்தது. நீண்ட கவிதைகள் எழுதிவதில் நாட்டம் குறைந்து ஹைக்கூ கவிதையில் நாட்டம் கூடியது.

வெளிநாட்டு வாழ்க்கையின் ஆரம்ப காலங்கள் வீட்டு நினைவுகளுடன் வெறுமையைச் சுமந்தன... எழுத்திலெல்லாம் நாட்டமில்லை... எதையோ இழந்தது போலான வாழ்க்கை... மகிழ்ச்சியில்லாத வாழ்க்கை... வெறுமையை வெறுக்க எதாவது செய்ய வேண்டும் என்ற சூழலில் படங்களாய் பார்த்துக் கழித்தவனுக்கு அதை விடுத்து வேறு பக்கமாக மனதைத் திருப்ப மீண்டும் எழுத ஆரம்பித்தேன்... ஒன்றுக்கு நான்கு வலைப்பக்கம் ஆரம்பித்து தொடர்ந்து எழுத ஆரம்பித்தேன். கதைகள், கவிதைகள், கட்டுரைகள், சினிமா என வெவ்வேறு விதமான களங்களில் எழுத ஆரம்பித்தேன்.

சிறுகதைப் போட்டிகளில் பரிசுகள்... மின்னிதழில் கதைகள், கவிதைகள் என என் களம் விரிந்தது. எனது கதைகளுக்கு என வாசிப்பவர்கள் தனியே இருந்தார்கள்... இருக்கிறார்கள் என்பது மகிழ்வைக் கொடுத்தது. எழுத்து என் வலியை, வேதனையை, வெறுமையைக் குறைத்தது. மனசுக்கு மகிழ்வைக் கொடுக்க ஆரம்பித்தது. எனது கதை, கட்டுரை என மின்னிதழ் நட்புக்கள் கேட்டு வாங்கிப் போடும் அளவுக்கு என் எழுத்து என்னை வளர்த்தது.

நிறைய எழுதினேன்... எழுதுகிறேன்... இப்போதெல்லாம் எழுதுவதென்பது அலுப்பாகத் தெரிவதில்லை... அது ஆனந்த அனுபவத்தையே கொடுக்கிறது. கதைக்கான கருவையோ... கதையின் போக்கையோ தீர்மானித்து எப்போதும் நான் எழுதுவதில்லை... என் எழுத்துத்தான் கதையின் போக்கையும் அதன் முடிவை தீர்மானிக்கிறது. எழுத வேண்டுமென அமர்ந்தால் எத்தனை பக்கம் என்றாலும் எழுதிவிட்டுத்தான் எழுவேன் என்பதைப் பெருமைக்காக அல்ல எழுத்து என்னை ஈர்த்து வைத்திருக்கிறது என்பதற்காகச் சொல்கிறேன்.

என் மகன் ஐந்தாவது படிக்கிறான்... சில நாள்கள் கதை எழுதினேன் என எதாவது எழுதி என்னிடம் வாசித்துக் காட்டுவான்... பெரும்பாலும் ஆங்கிலக் கதைகள்.. அது எப்படியான எழுத்தோ... அவனையும் கெடுங்க என அவனின் அம்மா திட்டினாலும் 'அருமை', 'செம' எனப் பாராட்டுவேன். சென்ற வாரத்தில் பள்ளியில் கொடுக்கப்பட்ட தலைப்புக்கு கதை எழுதி மூன்றாம் பரிசு பெற்றவன், அப்பாவுக்கு நான்தான் போட்டி என்று என் மகளிடம் சொல்லியிருக்கிறான். அதை நான் வரவேற்கிறேன்.

எனது எழுத்தை நல்லாயிருக்கு எனச் சொல்லி என்னை எழுத்தாளனாக்கிய எனது பேராசானும் தந்தையுமாகிய பேராசிரியர் பழனியைப் போல யாரேனும் உங்களுக்கு உரமாக, தூண்டுகோலாக இருக்கலாம். வெட்கமோ பயமோ இன்றி எழுதுங்கள்... ஒருநாள் உங்கள் எழுத்தும் பேசப்படும்.

நான் ஆரம்பத்தில் சொன்னது போல் எழுத்து என்பது எல்லாருக்குமானது... எல்லாராலும் எழுத முடியும்... ஆரம்பத்தில் ஒரு சில கதையோ... கட்டுரையோ... கவிதையோ... என்னடா எழுத்து இது என யோசிக்க வைக்கலாம். எழுத எழுத எழுத்து பட்டை தீட்டிய வைரமாகும். 

நீங்கள் நினைத்ததை எல்லாம் எழுத்தில் கொண்டு வரலாம். 

எழுத்து உங்களை கொண்டாட்ட மனநிலைக்கு கொண்டு செல்லும்... 

அது உங்களை மற்றவர்களால் கொண்டாடவும் வைக்கும்.

நான் எழுத ஆரம்பித்ததில் இருந்து தொடர்ந்து எழுதவில்லை என்றாலும் இப்போது தனிமை வாழ்க்கைக்கு மருந்தாக, வலி, வேதனை, வெறுமை, ஏக்கம், கவலை என எல்லாம் மறக்கடிக்கும் மருந்தாக இந்த எழுத்து இருக்கிறது என்பதே உண்மை. 

இன்றைய நிலையில் பலருக்கும் தெரிந்த எழுத்தாளனாய் என்னை ஆக்கி வைத்திருக்கிறது இந்த எழுத்து.

நன்றி.
-'பரிவை' சே.குமார்.

புதன், 24 ஏப்ரல், 2019மனசின் பக்கம் : அட்டு லவ்வும் அன்பு மனசும்

விடுமுறை தினத்தில் பொழுது போகலைன்னா என்ன பண்ணுவோம்... எதாவது படம் பார்ப்போம்... அப்படித்தான் அந்த 'ஒரு அடார் லவ்' மலையாளப் படத்தையும் பார்க்க நேரிட்டது.

பள்ளிக் கூடப் பிள்ளைகளுக்கு காதல் செய்யக் கற்றுக் கொடுக்கும் படம்... இப்படிப் படங்கள்தான் படிக்கும் பிள்ளைகளை அறியாத வயதில் காதல் என்னும் கத்திரிக்காய்க்குள் விழ வைக்கின்றன... அருமையான படங்களைக் கொடுக்கும் மலையாளத்தில் அரிதாய் வந்திருக்கும் நச்சுச் செடி இந்தப் படம்... நல்லவேளை தனிமையில் சந்திக்கும் போது பாடலுடன் முடித்துக் கொண்டார்கள். பள்ளிக்கூட வகுப்பறை, படிக்கட்டுக்கள் என எல்லா இடத்திலும் முத்தமழை பொழிந்தாலும் யாரும் கண்டு கொள்வதில்லை... எத்தனை அபத்தமாய் படமெடுக்கிறார்கள் இந்தக் கலாச்சார காவலர்கள்.

படம் வெளிவரும் முன்னரே பிரியா வாரியரின் கண் அசைவு மிகப் பிரசித்தி பெற்றிருந்தது... ஆனால் படமும் பிரியாவும்...? ஆமா அதென்ன சிகை அலங்காரம்...? வாந்தி எடுத்தது போல... இவர்தான் நாயகி என தயாரிப்பாளரோ / இயக்குநரோ போராடி வாய்ப்பைக் கொடுத்தார்களாம்... அப்படி என்ன அழகைப் பார்த்து விட்டார்கள்... பாவம் இனி பிரியாவுக்கு வாய்ப்பு வருமோ...?

நாயகியாய் நடிக்க வேண்டிய நூரின் ஷெரிப் நாயகனின் தோழியாய்... கிடைத்த கேப்பில் எல்லாம் அடித்து ஆடியிருக்கிறார்... செம.. அடுத்த படத்தில் நாயகியாய் நடிப்பதாய் செய்திகள்... பின்னே... அந்தச் சிரிப்பும் சீரான நடிப்பும் எல்லாரையும் கண்டிப்பாக ஈர்க்கும்தானே..!  இனி தமிழிலும் உடனே புக் பண்ணுவார்கள் பாருங்கள்... அடித்துக் கொண்டாலும் ஆச்சர்யமில்லை... ரஜினி மட்டும் அடுத்த பட நாயகியாக நூரின் வேண்டுமென கேட்காமல் இருக்க இறைவன் கருணை வேண்டும்.

படம் முடியும் போது பிரியாவைப் பின்னுக்குத் தள்ளி மனம் முழுவதும் நூரின் மட்டுமே நிற்கிறார்.

அட ஏன் அப்படி ஒரு முடிவு படத்தில்...?

Image result for நூரின் ஷெரிப்

சம்பந்தமே இல்லாத இறுதிக்காட்சி கடுப்பைத்தான் கொடுத்தது... அதிலும் பத்து நிமிடத்துக்கு மேல பின்னணிப் பாடலுடன்... நம்பியார் காலத்துப் படம் போல நாயகனும் நாயகியும் செல்லும் இடம் தெரிந்து வில்லன்கள் வருவது... முடியல...

துள்ளுவதோ இளமை தனுஷ் மாதிரி... ரோஷனுக்கு டபுள் தமாக்காதான்... பிரியாவோட உதடுகளில் விளையாடுகிறான்... நூரினும் கொஞ்சலோ கொஞ்சல்.

இப்படியான படங்கள்... அதாவது ஒரு அடார் லவ், 90ML போன்றவை சமூகத்தை சீர் திருத்த வந்த, கலாச்சாரத்தை காப்பாற்ற வந்த படங்கள்... இன்றைய இளம் இயக்குநர்களுக்கு ஏன் சாதியும், சிறுவயதுக் காதலும், காமமும் மட்டுமே கண்ணுக் தெரிகிறது என்பதுதான் தெரியவில்லை.

இது ஒரு அட்டு லவ் படம்... தயவு செய்து பதின்ம வயதுப் பிள்ளைகளைப் பார்க்க விடாதீர்கள்.

*********

ழுத்து அடைந்திருக்கும் இடம் மகிழ்வைக் கொடுத்தாலும் பயத்தையும் கொடுக்கிறது. அவனவன் புத்தகங்களாய் போட்டுக் கொண்டிருக்க, பொருளாதார சூழலின் நிமித்தம் பிரசுரங்களின் பக்கம் செல்லாத போதும் சேமித்த எழுத்தை வாசித்த நண்பர்கள் அது குறித்து எழுதும் போதும் பேசும் போதும் உண்மையிலேயே சங்கோஜமும் சங்கடமுமே எனக்குள்.

என்னடா இப்படி பேசுகிறார்கள்...? இவனே எழுதுங்க... பேசுங்கன்னு சொல்றானோன்னு யாரும் நினைப்பார்களோங்கிற எண்ணமும் வராமல் இல்லை... பேசப் பயம் எனக்கு என்பவன்தான் நான் என்ற போதிலும் எழுத எப்பவும் யோசிப்பதில்லை... ஆன இப்ப மற்றவர்கள் எழுதவதைப் பார்த்து இன்னும் நல்லா எழுதணுமோங்கிற எண்ணம் எழத்தான் செய்கிறது. எனக்கே தெரியாமல் என்னையும் உள்ளிழுத்து இது மாதிரிப் பகிரும் உறவுகள்தான் என்னை நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள். என் எழுத்து எப்படியோ சிலரையேனும் கவர்கிறதே என்பதே சந்தோஷம்தான். மகிழ்ச்சி இராஜாராம் (இது ஒரு வாரம் முன்பு முகநூல் அவர் பகிர்ந்தது அப்படியே கீழே).

ஆமா அவரு அப்படி எந்தக் கதையை மகளிடம் சொல்லியிருப்பார்...? யோசிங்க... இறுதியில் சொல்றேன்....

அண்ணே மாலை வணக்கம்!

முதல் தொகுப்பு முடிந்து அடுத்த தொகுப்பை ஆரம்பித்து விட்டேன், பத்து முடிந்தது.

படித்துக் கொண்டிருக்கும்போதே, ஒரு கதையை வாசித்துக் கொண்டிருக்கும்போதே அக்கதையை முடித்தவுடன் என் மகளுக்கு சொல்ல வேண்டுமென நினைத்தேன். 

பள்ளி விடுமுறையென்பதால் நல்ல நித்திரை போல மாலை ஐந்து மணிக்கு மேல்தான் கதை சொல்ல வாய்ப்பு கிடைத்தது, அலைபேசில்தான் சொன்னேன். சொல்வதற்கு முன் உங்களுக்கு எங்கெங்கு சந்தேகம் இருக்கிறதோ அதை கேட்கலாம், கேட்டு முடிந்தவுடன் கதையைப் பற்றி உங்கள் கருத்தையும் சொல்லலாம் என்றேன். 

கதை சொல்ல தொடங்கி... சொல்லிக் கொண்டிருக்கும்போதே கதை கேட்கும் சத்தம் கூட எனக்கு கேட்கவில்லை....

என்னம்மா...கேட்குதா..?

சொல்லுங்க கேட்குது என்றார்.

கதை சொல்லி முடிந்தவுடன், 

சூப்பர் கதைப்பா...

நல்லா இருக்கு... 

எங்க படிச்சீங்க..?

நல்லா இருக்கே...

யாரும்...சொன்னாங்களா..?

நீங்களாவே சொல்றீங்களா? 

அடுக்கிய கேள்விக்கு பதில் சொல்லுமுன்னே...அக்கதைக்கு ஒரு நீதியையும் சொல்லிவிட்டு..என் நண்பர்களுக்கும் சொல்வேன் என்றார். பிறகு நான் அக்கதையை எங்கு படித்தேன், யார் எழுதியது என்பதை பற்றிய விவரணைகளை தகப்பனும், மகளும் ஒரு பத்து நிமிட உரையாடல் நீண்டது.

இதுவும் எழுத்தின் வெற்றிதான்....

ஆனால் இக்கதையின் மூலம் ஆசிரியர் அண்ணன் நித்யா குமார் அவர்கள் யாருக்கு.. என்ன சொல்ல முற்பட்டாரோ? ஆனால் ஒரு ஒன்பது வயது சிறுமி ஒரு கதையைக் கேட்டவுடன் இது எனக்கான கதையென்றும் அதற்கான நீதியையும் சொல்வதும் வெற்றிதானே 

வாசிக்கும்போதே நம்மை கூட்டிச்செல்லும் எழுத்துநடை அருமை.....

இக்கதையையும் ஒலிவடிவில் கேட்க அருமையாக இருக்கும்... பெரியவர்களுக்கு மட்டுமல்ல குழந்தைகளுக்கும் பிடிக்கும்.

இதுபோன்ற கதைகளை வாசிக்க தந்தமைக்கு மிக்க நன்றிண்ணே!

என்ன கதையின்னு தெரிந்ததா...?

ம்... ஆமா அதேதான்...

சுபஸ்ரீ மிஸ் அடிச்சாங்களா..?

ஒரு குழந்தையிடம் சொல்லப்பட்டு, அவரும் ரசித்திருப்பதில் ரொம்பச் சந்தோஷம். இனி எழுதும் கதைகள் இன்னும் நன்றாக எழுத வேண்டுமே என்ற கவலையை விதைத்திருக்கும் பகிர்வு இது.

நன்றி.
-'பரிவை' சே.குமார்.

சனி, 20 ஏப்ரல், 2019மனசு பேசுகிறது : எழுத்தாளர் நௌஷாத்கான்

முனைவர் நௌஷாத்கான்...

எழுத்தில் சிகரம் தொட வேண்டுமென தொடர்ந்து பறந்து கொண்டிருப்பவர்... 

இதுவரை 18 புத்தகங்கள் போட்டிருக்கிறார். அதில் 11 புத்தகங்கள் மணிமேகலைப் பிரசுரம் மூலமாக. இன்னும் 4 புத்தகங்கள் அச்சில் இருக்கிறது. 40 புத்தகங்கள் போடுவதற்கான கதையும், கவிதையும் இவரிடம் இருக்கிறது.

தினமும் கதைகளும், கவிதைகளுமாக எழுதிக் கொண்டேயிருப்பவர். எழுத்தே மூச்சாய்... எழுத்தே உயிராய்... எழுத்தே உணர்வாய்... தினமும் எழுத வேண்டும் என்ற நினைப்புடனே வலம் வருபவர்.

படம் இதைக் கொண்டிருக்கலாம்: Nowsath Khan, அமர்ந்துள்ளார், தாடி மற்றும் குளோஸ் அப்

ஒவ்வொருவரின் நியாயப் பக்கங்கள்

நிறம் மாறும் மனிதர்கள்!

நாளைய பொழுதும் உன்னோடுதான்!

என்ற தனது மூன்று புத்தகங்களை வாசிக்கச் சொல்லி என்னிடம் கொடுத்தார்.

ஓவ்வொருவரின் நியாயப் பக்கங்களை மட்டும் முழுவதுமாக வாசித்தேன்... மற்ற இரண்டும் இன்னும் முழுமையாக வாசிக்கவில்லை.

நல்ல கதைகள் மூலம் நல்லதை விதைக்க முடியும் என்கிற எண்ணத்தோடான கருக்களையே கதையாக்க முயற்சித்திருக்கிறார். அதற்காகவே அவரைப் பாராட்டலாம். 

ஒவ்வொருவரின் எழுத்துப் பாணியும் ஒவ்வொரு விதமாக இருக்கும்... ஒருவரைப் போல் மற்றவர் எழுத முடியாது... அப்படி எழுத நினைத்துத் தோற்றவர்களே அதிகம். சிலர் வரலாறுகளை கதைக்குள் லாவகமாகச் சொருகுபவர்களாகவும், சிலர் செய்திகளைக் கதைக்குள் சொருகுபவர்களாகவும் சிலர் வெறும் கதை சொல்லிகளாகவும் இன்னும் இன்னுமாய் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாய்... நௌஷாத்தோ கருத்துச் சொல்வதைக் களமாகக் கொண்டிருக்கிறார்.

இப்படிக் கருத்துச் சொல்லுதல் என்பது... அதாவது ஒவ்வொரு கதையின் முடிவிலும் நீதி சொல்லுதல் என்பது குமுதம், ஆவியில் வரும் ஒரு பக்கக் கதைகளில்  காணலாம். அப்படித்தான் இவரின் ஒவ்வொரு கதைக்குப் பின்னும் கட்டாய நீதி சொல்லுதல் இருக்கிறது.

பெரும்பாலும் பார்த்த... கேட்ட... வாசித்த... விஷயங்களைத்தான் கதையாக எழுதியிருக்கிறார். சில உண்மைச் சம்பவங்களையும் கதையாக்கியிருக்கிறார். அவற்றைப் படிக்கும் போது நமக்கு அது கதையாகத் தெரியவில்லை... அப்பட்டமாக அந்த உண்மைச் சம்பவத்தை நினைவில் நிறுத்துகிறது. இது சமீபத்தில் அவர் எழுதிய டிக்-டாக் பரிதாபங்கள் என்ற கதை வரை தொடர்கிறது என்றே சொல்லலாம்.

வாசித்த கதைகளில் கருத்துச் சொல்லுதல் என்பது சில கதைகளின் ஆரம்பத்திலேயே ஆரம்பித்து விடுவது அலுப்பைத் தருகிறது. இது இப்போது எழுதும் கதைகளில் இல்லை எனலாம். நெருடா போன்றோர் திட்டிக் கொண்டே இருப்பது கூட மாற்றத்துக்கான வழிதான்... இந்தப் புத்தகங்களில் இருக்கும் கதைகளுக்கும் தற்போதைய எழுத்துக்கும் மாறுதல் இருக்கிறது... இன்னும் மாற வேண்டும்... மாற்றங்கள் மட்டுமே எழுத்தை கொண்டு செல்ல வேண்டிய இடத்துக்கு கொண்டு செல்லும்.

இந்தப் புத்தகங்களில் இருக்கும் கதைகளுக்கான களம் சிறப்பானது... சொல்லியிருக்கும் விதமும் ஆங்காங்கே கருத்துப் புகுத்தலுமே கதையோடு ஒன்ற முடியாத நிலைக்குத் தள்ளிவிடுகிறது என்பதே உண்மை. இந்தக் குறையும் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக களைக்கப்பட்டு வருவதை சமீபத்திய கதைகள் காட்டுகின்றன. அந்த வகையில் பாராட்டலாம்.

எழுத்தில் சாதிக்கணும்... புகழ் பெற வேண்டும்... குறிப்பாக சினிமாவில் காலூன்ற வேண்டும் என்ற ஆவல், வலி, வாழ்க்கை, கனவு என எல்லாவற்றையும் எழுத்தாக்கச் சொல்கிறது.  இந்த எண்ணமும் வேகமுமே கருவில் இருக்கும் அடர்த்தியைக் கதையில் கொண்டு வரமுடியாமல் செய்துவிடுகிறது என்பதையே இக்கதைகள் காட்டுகின்றன...  

நௌஷாத்கான்... இங்கு பனிரெண்டு மணி நேரம் வேலை செய்துவிட்டு இரவில் கிடைக்கும் சொற்ப நேரத்தில்தான் தன் எழுத்தை உயிர்ப்பிக்கிறார். இந்த நாட்டில் பனிரெண்டு மணி நேரம் வேலை செய்துவிட்டு, அதன் பிறகு அறைக்கு வந்து குளித்துச் சாப்பிட்டு மற்ற நண்பர்களுக்குத் தொந்தரவில்லாமல் கதை, கவிதை எழுதுதல் என்பது எல்லாருக்கும் சாத்தியமாவதில்லை... அதைச் சாத்தியமாக்கி நிறைய எழுதும் இவர் அதற்காக தன் தூக்கத்தைத் தொலைத்து இருக்கிறார் என்பதுதான் உண்மை... தொலைத்தவைகளைத் தேடும் கதைகளே அதிகமாய் வருவதும் தனிமை கொடுக்கும் வலியால்தான் என்பதுதான் நிதர்சனம்.

பேசும் போது உங்களிடம் பேசியதில் எனக்குச் சில கதைகளுக்கான 'நாட்' கிடைத்து விட்டது என்று சொல்லும் இவர் அவற்றை எல்லாம் கதையாக்கி விடுவதில் திறமைசாலிதான் என்றாலும் கதையிலும் யாருடன் பேசினாரோ அவர்களையே கதாபாத்திரமாக அலைய விடுவது அவ்வளவு சிறப்பானதாக இருப்பதில்லை... பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என்பதை பலமுறை நாங்கள் சொல்லியிருக்கிறோம்... சொல்லிக் கொண்டேதான் இருக்கிறோம்... ஏனோ அவ்வப்போது அப்படியான கதைகள் வந்து கொண்டுதான் இருக்கிறது.

வெளிநாட்டுக் காசு ஒன்றும் அட்சய பாத்திரம் மூலமாக வருவதில்லை என்பதை யாரும் உணர்வதில்லை... தகப்பன் இல்லாமல் தானே கையூன்றி... இங்கு கிடைக்கும் சொற்ப சம்பளத்தில் குடும்பத்தையும் பார்த்து... தன் கனவையும் நிறைவேற்றிக் கொள்ளத் துடிக்கும் நௌஷாத்தை, பணத்துக்காக அழகாகப் பயன்படுத்தியிருக்கின்றன பிரசுரங்கள்... எத்தனை அபத்தமான புத்தக வடிவமைப்பு... மிகப்பெரிய பிரசுரம்... அட்டைப்படமாய் நடிகர்களின் படங்களைப் போட்டு... சாமர்த்தியமாக தங்களின் பெயரை வெளியட்டையில் போடாமல்... பல லட்சங்களைச் சுருட்டியிருக்கிறார்கள். ஒருவனை ஏமாற்றிப் பிழைத்தல் எத்தனை கேவலமானது. அதுவும் கனவுகளோடு அலைபவனின் கனவைக் காசாக்கிப் பார்க்கும் எண்ணம் எப்படி அவர்களுக்கு வந்தது..? இதில் யார் தவறு அதிகம் என்று பார்க்க முடியவில்லை... தானே தேடி விளக்கில் விழுந்த விட்டில் கதைதான் ஞாபகத்துக்கு வருகிறது. தூண்டில்காரனின் புழுவின் வாசத்தில் சிக்கிய மீனாய்த்தான் தெரிகிறார். 

தங்களிடம் புத்தகமாக்கலாம் எனக் கொடுத்த கதைகளில் இவை இவை நல்ல கதைகள்.... இவற்றை இப்படி மாற்றினால் இன்னும் சிறப்பாகும் எனச் சொல்லி, அப்படிச் செய்திருந்தால் அவர் வெளியிட்ட புத்தகங்களின் எண்ணிக்கையில் சில குறைந்திருக்கலாம்... ஆனால் சிறப்பான கதைகளை எழுதி, எழுத்தாளனாய் தனக்கான இடத்தை எப்போதோ அடைந்திருக்க முடியும். இனியேனும் இத்தவறுகள் நிகழாது பார்த்துக் கொண்டார் என்றால் நிச்சயம் சிறப்பான இடத்தை அடைவார் என்பது என் நம்பிக்கை. பார்த்துக் கொள்வாரா என்பதை அவர்தானே தீர்மானிக்க வேண்டும்.

கதைகளைக் கொடுங்கள் புத்தகமாக்கலாம் என்றவுடன் ஏதோ நம்பிக்கையில் கொடுத்துவிட்டு அதற்கான பணத்தையும் கொடுத்துவிட்டு வருடக் கணக்கில் காத்திருத்தல் என்பது வேதனை... சும்மா வந்து விடுவதில்லை இந்தப் பணம்... வாழ்க்கையையும் நிம்மதியையும் தொலைத்து, எல்லாவற்றையும் இழந்து வாடும் வாழ்க்கையின் வலிகளை நிறைத்துத்தான் வருகிறது என்பதை ஏனோ அவர்கள் புரிந்து கொள்ளவில்லை... இவரும் அவர்களின் கைப்பாவையாய்... தலையாட்டிப் பொம்மையாய் இருந்துவிட்டது அவர்களுக்கு மேலும் சுலபமாகிவிட்டது... பணம் காய்க்கும் பேரிச்சையாகிவிட்டார்... முடிந்தவரை அறுவடை செய்திருக்கிறார்கள்.

நல்ல கதையை எழுதி தலைப்பை ஆபாசமாக வைக்கும் பழக்கத்தில் இருந்து விடுபட வேண்டும்... அதுதான் நிறையப் பேரை வாசிக்க வைக்கிறது என்று சொல்வது எல்லாம் ஏற்க முடிவதில்லை. நல்ல கதையாக, ஈர்க்கும் எழுதாக இருக்கும் பட்சத்தில் கண்டிப்பாக வாசகர்களைச் சென்றடையும் என்பதை மனதில் நிறுத்த வேண்டும். ஆபாசத் தலைப்புக்களே பலரை உள் நுழைய யோசிக்க வைக்கும் என்பதே உண்மை.

பிரதிலிபி போன்ற தளங்கள் இவரை நட்சத்திர எழுத்தாளர்களில் ஒருவராய் வைத்திருக்கின்றன...வாழ்த்துக்கள். ஆனால் அந்த ஹிட்ஸ்க்கள் என்னவோ தன்னை உயரத்தில் நிறுத்தியிருப்பதாக நினைப்பது அறியாமை. ஹிட்ஸ் மட்டுமே எழுத்தை முன்னிறுத்தும் என்ற நம்பிக்கையை மனசுக்குள் மிகப் பெரிதாய் அவருக்கு இருக்கிறது. ஹிட்ஸ்கள் அந்தத் தளங்களை வாழ வைக்குமே ஒழிய... எழுதுபவனை அல்ல என்பதை உணர வேண்டும். அதிலிருந்து முதலில் வெளிவரவேண்டும்... எழுத்துத்தான் தன்னைப் பற்றி பேச வைக்க வேண்டும் என்பதை அவர் மனதில் நிறுத்த வேண்டும் என்பதே என் ஆவா.

முதல் கதையே நிறையக் கருத்துக்களுடன் கட்டுரையாகப் பயணித்தால் அடுத்த கதைகளுக்கும் யாரும் பயணிக்க மாட்டார்கள் என்பதை உணர்ந்து புத்தகங்களை வடிவமைக்க வேண்டும்... இன்னும் சிறப்பான கதைகளுடன் நல்ல புத்தகங்கள் எழுதி, தன் ஆசையை... கனவை... அவர் அடைய வேண்டும் என்பதே என் ஆசையும் பிரார்த்தனையும்...

இப்போது நான்கு புத்தகங்கள் அச்சில் இருக்கின்றன... அதிலிருக்கும் கதைகள் எல்லாம் பேசப்பட வேண்டும். பேசப்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது. நம்பிக்கைதானே வாழ்க்கை.

இழப்புக்களை மனதில் நிறுத்தி, புகழ் மாயையில் இருந்து விடுபட்டு நல்ல கதைகளை எழுத வாழ்த்துக்கள்.

என்னடா இவன் புத்தகம் குறித்து எழுதச் சொன்னா... இப்படி எழுதியிருக்கிறான்னு தோன்றலாம்...  மனதில்பட்டதைச் சொல்வதில் என்னிடம் எப்போதும் தயக்கம் இருப்பதில்லை... அப்படித்தான் இதுவும்... இந்த மனநிலைதான் பலருக்குப் பிடிக்காமல் போகக் காரணமாகவும் இருக்கிறது என்றாலும் என் எண்ணம் எப்போது மாற்றுப் பாதையிலோ... முகமலர்ச்சிக்காக வாழ்த்தி எழுதவோ முயல்வதில்லை என்பதை என்னை அண்ணனாய் நினைத்து எல்லாம் சொல்லும் தம்பி நௌஷாத் அறிவார் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது.

ஒன்றே ஒன்றுதான் புகழை மட்டும் விரும்பாதே... எவ்விதமான  விமர்சனம் என்றாலும் ஏற்றுக் கொள்... கதையை அரதப் பழசு... கேவலம் என்று திட்டினாலும் அதை உரமாக எடுத்துக் கொள்... நான் எழுதினேன்... நீ எப்படிப் பேசலாம் என்ற மனநிலைக்குள் வந்துவிடாதே... விமர்சனங்களே உன் எழுத்தைப் பட்டை தீட்டும் என்பதை மறக்காதே... உன் எழுத்தை விமர்சகர்கள் முன் வை... விமர்சகர்கள் எப்படிப் பேசலாம் என எதிர் விவாதம் செய்யாதே... விமர்சனத்தால் நீ பட்டை தீட்டப்படுவாய்... இதிலிருக்கும் தவறுகளை அடுத்த கதையில் திருத்திக் கொள்ள அது வாய்ப்பாக அமையும்.

கடந்தவை கடந்தவையாகவே இருக்கட்டும்... இனி நடக்க இருப்பவை நல்லதாய் அமையட்டும்.

சிகரம் தொட வாழ்த்துக்கள் நௌஷாத்...
-'பரிவை' சே.குமார்.

வெள்ளி, 19 ஏப்ரல், 2019சினிமா : நெடுநல்வாடை

Image result for nedunalvaadai hd images
நெடுநல்வாடை... பேரே நல்லாயிருக்குல்ல... படமும்தான்... கிராமத்துக்குள்ள ரெண்டு மணி நேரம் சுத்திட்டு வந்த மாதிரி இருந்துச்சு...

ஒரு கிராமத்துக் கிழவனின் வாழ்க்கைக் கதை என்பதாய்த்தான் எனக்குப்பட்டது. 

வீட்டை விட்டு ஒருவனுடன் ஓடிப்போன மகள், காதல் கசந்து இரண்டு குழந்தைகளுடன்  போக இடமின்றி அப்பனைத் தேடி வருகிறாள். அவள் ஓடிப்போன போது பட்ட துயரத்தைவிட 'அய்யா' என வயலில் விழுந்து கதறும் போது அதிகமாக வலிக்கிறது அந்தக் கிழவனுக்கு.

போக்கத்தவளை வீட்டுக்கு கூட்டி வர, மதினி ஏற்றுக் கொள்கிறாள்... அண்ணன்காரன் அடித்து விரட்ட நினைக்கிறான்... அவனின் பயமெல்லாம் சொத்தில் பாதியைக் கொடுத்துருவாரோங்கிறதுதான்... ஓடிப்போனவள் கொடுத்த வலியைத் தூக்கிக்கிட்டு அலைபவனாய் கொடூர வார்த்தைகளை வீசிக் கொண்டேயிருக்கிறான். அதனாலேயே அப்பனுக்கும் மகனுக்கும் பிரச்சினை துளிர் விட ஆரம்பிக்கிறது.

தனது பேரனை ஒரு நல்ல நிலைக்குக் கொண்டு வரணும் என்பதற்காகவே பாடுபடுகிறார்... அவன் பேரில் மகனுக்குத் தெரியாமல் பணம் போட்டு வைக்கிறார். ஒரு கட்டத்தில் வீட்டையும் மகள் பேரில் எழுத, மகனின் கோபம் இன்னும் அதிகமாகிறது. அப்பனுக்கும் மகனுக்கும் சண்டை வலுக்கிறது.

அப்பன் இல்லாதவன்... ஒரு வீடு வாசல் இல்லாதவன்... எனச் சொல்லும் மாமனுக்கு முன் படித்து, நல்ல வேலைக்குப் போய் வீடு வாசல்ன்னு பேரன் நல்ல நிலையை அடையணுங்கிற தாத்தாவின் கனவை நோக்கி ஓடுகிறான் பேரன் இளங்கோ... மாமா மீதான கோபமும் அவனுள் தகிக்கிறது. அதனாலேயே முகத்தில் சந்தோஷமின்றித் திரிகிறான்.

Related image

இதற்கிடையே உள்ளூரில் அவனுடன் படிக்கும், சிறுவயது முதல் நட்பாய் இருக்கும் அமுதாவுடன் மோதலில் ஆரம்பித்து காதலில் முடிகிறது... தாத்தாவின் காதுக்குச் செய்தி வர, பேரனுக்கு அவன் எப்படி இந்த ஊருக்கு வந்தான் என்பதை எடுத்துச் சொல்லி, வேலைக்குப் போய் சம்பாரித்து இருக்க ஒரு வீடு, தங்கச்சி கல்யாணம் என அவன் முன் நிற்கும் தேவைகளைச் சொல்லி காதலுக்கு கட்டை போடுகிறார்.

தாத்தாவின் கனவைச் சுமக்கும் இளங்கோ தன்னைச் சுமக்கும் அமுதாவையும் விட்டுக் கொடுக்க முடியாமல் தவிக்கிறான்... கோபமாய் அவளைத் திட்டுவிட்டு விலக் நினைப்பவன் ஒரு கட்டத்தில் மீண்டும் அணைத்துக் கொள்கிறான்... அவர்களின் காதலும் தொடர்கிறது... 

சென்னைக்கு சொற்பச் சம்பளத்தில் வேலைக்குச் செல்கிறான். அமுதாவின் அண்ணன் தங்கையின் காதல் விவரம் தெரிந்து திருமணம் நிச்சயம் பண்ணுகிறான்... பேரனுக்காய் அமுதாவின் அண்ணனிடம் பேசப்போய் அவமானப்பட்டுத் திரும்புகிறார் தாத்தா.

காதல் பிரச்சினைக்காகவே வயலில் பாதியை விற்றாவது பேரனை வெளிநாட்டுக்கு அனுப்ப நினைக்கிறார். அவனோ அமுதாவை எப்படியும் அடைந்தே தீருவேன் எனத் திரிகிறான். எங்கே மகன் சொல்வதைப் போல ஆத்தா மாதிரி இவனும் கூட்டிக்கிட்டு ஓடி தன்னைத் தலைகுனிய வச்சிருவானோன்னு பயப்படுகிறார்.

ஒரு கட்டத்தில் அமுதாவின் அண்ணன் இளங்கோவை அடித்துக் கொல்ல முயற்சிக்கிறான்.

அமுதாவின் அண்ணனிடம் இருந்து தப்பித்தானா..?

வெளிநாடு சென்றானா...?

தாத்தாவின் கனவை நிறைவேற்றினானா..? 

காதலியைக் கரம் பிடித்தானா...? 

தங்களை மதிக்காத தாய் மாமனுடன் கூடினானா..?

இப்படி பல கேள்விகளுக்கு விடை படத்தைப் பார்த்து முடிக்கும் போது தெரியும்.

ஒரு கிராமத்து வாழ்க்கையின் வலியைச் சொல்லியிருக்கிறார் அறிமுக இயக்குநர் செல்வகண்ணன். கிராமத்து வாழ்க்கை எப்போதும் பட்டாடை கட்டி ஆடுவதில்லை... இதுதான் எதார்த்தம்... இந்த எதார்த்தம் எழுத்தாகவோ காட்சியாகவோ மாறும் போது அதில் ஆனந்தம் இருப்பதில்லை... அழுகையே அதிகமிருக்கும்... அதுதான் மன நிறைவைக் கொடுக்கும்... அதைக் கொடுத்திருக்கிறது நெடுநல்வாடை. 

எந்தச் ஜிகினாவும் சேர்க்காமல் இப்படி ஒரு அழகிய படத்தை எடுத்த இயக்குநருக்கும் , தோழனுக்குத் தோள் கொடுக்க ஒன்றாய் நின்று பணம் போட்ட அந்த 50 தயாரிப்பாளருக்கும் வாழ்த்துக்கள்.

Related image

கிழவனாக வாழ்ந்திருக்கிறார் பூ ராம்...  என்ன ஒரு நடிப்பு... அப்படியே ஊரில் வயல்களில் மண்வெட்டியுடன் திரியும் கரிய உருவ மனிதர்களைக் கண் முன் நிறுத்தியிருக்கிறார். அறிமுக நாயகன் இளங்கோவும் சிறப்பாக நடித்திருக்கிறார். அதேபோல் அறிமுக நாயகி அஞ்சலி நாயரும் கிராமத்துத் துறுதுறு பெண்ணாகவே வாழ்ந்திருக்கிறார்... வந்து போகும் நடிகையாக இல்லாமல் அருமையாக நடிக்கவும் செய்திருக்கிறார்... தொன்னூறுகளின் கிராமத்து நாயகிகளை நினைவில் நிறுத்துகிறார். மாமனாக வரும் மீம்கோபி, ஊர்க்காரராக கிழவனுடனேயே திரியும் ஐந்து கோவிலான், அம்மாவாக வரும் செந்திகுமாரி, வில்லனாக... நாயகியின் அண்ணனாக வரும் அஜய் நடராஜ் என எல்லாப் பாத்திரங்களுமே மிகையில்லாத நடிப்பை வெளிப்படுத்தியிருப்பது சிறப்பு.

பூ ராமை தமிழ்ச் சினிமா இன்னும் சரிவர பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றே தோன்றுகிறது. நெடுநல்வாடை அவருக்குச் சிறந்த படமாக மட்டுமின்றி, விருதுகளை வென்று கொடுக்கும் படமாகவும் அமையும் என்பது உண்மை.

காட்சிகளில் அவ்வளவு எதார்த்தம்... அதேபோல் நடித்திருப்பவர்கள் பலர் அறிமுகம் என்றாலும் துளி கூட மிகையாக நடிக்காமல் எதார்த்தமாய் நடித்திருப்பது படத்தின் வெற்றி... இப்படி இவர்களைப் பயன்படுத்தியிருப்பது இயக்குநரின் பலமும்... வெற்றியும் எனலாம்.
இசை அறிமுகமாக ஜோஸ் பிராங்க்ளின்... பின்னணி இசை மட்டும் கொஞ்சம் சோர்வைத் தருகிறது எனலாம்... ஆனால் பாடல்களில் இசை அருமை. பாடல் வரிகள் வைரமுத்து... கருவாத்தேவா பாடலின் வரிகள் கதை சொல்கிறது. காசி விஸ்வநாத் தனது ஒளிப்பதிவில் நெல்லையின் சிங்கிலிப்பட்டி கிராமத்தையும் அழகிய, பசுமையான வயல்வெளிகளையும் மிகச் சிறப்பாக உள்வாங்கியிருக்கிறார்... கிராமத்து வீடுகளும்... தெருக்களும்... வயல்வெளியும்... வெல்லம் தயாரிக்கும் இடமும் நம்மோடு கதாபாத்திரமாகவே பயணிக்கின்றன.

இயக்குநரின் தாத்தாவின் கதைதான் என்பதாய் இறுதியில் முடித்திருக்கிறார். வாழ்க்கைக் கதை என்பது எப்போதுமே சற்று கூடுதல் சுவையைக் கொடுக்கும் என்பதை நெடுநல்வாடை நிரூபித்திருக்கிறது.

படத்தில் சொல்லப்படும் சமூகத்தில் ஓடிப்போன மகளை உடனே ஏற்றுக் கொள்வார்கள் என்பது சற்று யோசிக்கக் கூடியதே. முறுக்கிக் கொண்டு திரியும் மாமனை கதாபாத்திரம் இறுதிவரை வராதது ஏனோ..? ஒரே சாதி எனும் போது தன் தங்கையைக் கொடுக்க மறுத்து அண்ணன் சொல்லுக் காரணம் அரதப்பழசானது என சில விஷயங்கள் எதிராய்த் தோன்றினாலும் நெடுநல்வாடை சிறப்பாகவே வந்திருக்கிறது.

அருமையானதொரு படம்... வாய்ப்பிருப்பவர்கள், விருப்பம் உள்ளவர்கள் பாருங்கள்.
-'பரிவை' சே.குமார்.

திங்கள், 15 ஏப்ரல், 2019யாரோ எழுதிய கதை - புத்தக விமர்சனம்


தேவா சுப்பையா...

இந்தப் பெயரை வலைப்பதிவரெல்லாம் மறந்திருக்க முடியாது. Warrior என்னும் தளத்தில் மிகவும் ரசனையான படைப்புக்களைப் பகிர்ந்து வந்தவர்தான் இவர். இப்போது தனது இயங்கு தளத்தை முகநூலுக்கு மாற்றிக் கொண்டு காதல் சொட்டும் வரிகளை எழுதிக் கொண்டிருக்கிறார். 

தேவா அண்ணனுடன் கிட்டத்தட்ட பத்தாண்டு சிநேகம்... படைப்புக்களின் எழுத்து நடை ஒரு மாவட்டத்தின் சுவாசமாக இருப்பதால் ஒட்டிக் கொண்ட உறவு இது. இன்னும் என்பதைவிட இறுதிவரை தொடரும் உறவாகத் தொடர வேண்டும். தனது தளத்தில் எழுதிய காதலே சுவாசமாக என்னும் தொடர் கட்டுரைகளையும் மற்றும் சில சிறுகதைகளையும் 'சுவாசமே காதலாக' என்ற காதல் கட்டுரைகளாகவும் 'யாரோ எழுதிய கதை' என்ற சிறுகதைத் தொகுப்பாகவும் வெளியிட்டிருக்கிறார்.

சுவாசமே காதலாக முழுக்க முழுக்க காதல் வடியும் கட்டுரைகள்... வார்த்தைகள் எல்லாமே தேனாய் உருகி காதலாய் ஓடுபவை... அதைக் கொண்டாட இங்கு ஒரு கூட்டமே இருக்கிறது. 

கொண்டப்பட வேண்டும் என நான் நினைக்கும் கிராமத்து எழுத்து... அதிலும் குறிப்பாக மண்ணின் மணத்துடன் எழுதும் எழுத்து... இன்னும் குறிப்பாக சிவகங்கை மண்ணின் மாந்தர்களின் பேச்சு வழக்கு என சிறுகதைகள் முன்பே வாசித்திருந்த போதிலும் புத்தகமாக என்னை எடுத்து வாசி என்றது.

தேவாவின் எழுத்து இலக்கணமாய்... இலக்கியமாய்... ரசனையாய்... எப்போதும் நம்மை  ஈர்த்து உள் வாங்கிக் கொள்ளக் கூடியது. அப்படியிருக்க நம்மை வாஞ்சையுடன் அணைத்துக் கொள்ளும் நடையுடனும் சிந்திக்க வைக்கும் வரிகளுடனும் கிராமத்து வெள்ளந்தி மனிதர்களுடனும்  இன்னும் நெருக்கமாய் வந்திருக்கிறது இச் சிறுகதைத் தொகுப்பு.

இந்தத் தொகுப்பில் மொத்தம் 11 கதைகள்... இதில் 'யாரோ எழுதிய கதை', 'முகமற்றவனின் மொழி' எனச் சில கதைகள் என்னை விட்டு கொஞ்சம் தள்ளியே நின்றாலும் 'சில்லறைப் பாக்கி', 'செவபாக்கியம் ஆயா', 'பேய் புடிச்சிருச்சு', 'தேனு' என பல கதைகள் நமக்கு மிகவும் நெருக்கமாய்... குறிப்பாக இக்கதைகள் என்னை ஈர்க்கக் காரணம் அதில் கையாளப்பட்டிருக்கும் கிராமத்து மொழி.

கிராமத்து வாழ்க்கையை... அவர்களின் எதார்த்த நிலமையை... பூசி மெழுகிச் சொல்லாமல் அதன் போக்கில்... எப்படி இருக்கிறதோ... அப்படிச் சொல்லும் போது பெரும்பாலும் சோகமே தூக்கலாகத் தெரியும்... அதுதான் உண்மையும் எதார்த்தமும்... என்ன சோகமாய்... அழுகாச்சி கதை எழுதுறேன்னு என்னைப் பலர் கேட்டதுண்டு... வாழ்க்கைக் கதைகள் எப்போதும் ஜிகினா பூசிக் கொண்டு நிற்பதில்லை... அவை வாழ்வின் வலிகளைச் சுமந்து கொண்டுதான் நிற்கும் என்பதே உண்மை.

அப்படியான கதைகள் தான் செவபாக்கியம் ஆயாவும் தேனுவும்... ஊருக்கு ஒரு அடாவடி பண்ணுறவன் இருக்கிற மாதிரி... ஆம்பளையாட்டாம் எல்லாத்துலயும் நாந்தான்னு முதல்ல நிக்கிற பொம்பள ஒண்ணு இருக்கும்.... எதுக்கும் அஞ்சாது... ஏர் ஓட்டும்... நாற்றுப்பாவும்... பறிக்கும்... உரம் போடும்... கட்டடிக்கும்... பொணையல் விடும்...  நெல்லுத் தூத்தும்...எரவா மரங்கட்டி தண்ணி இறைக்கும்... நல்லது கெட்டதுக்கு முன்னால நிக்கும்... சண்டையின்னு வந்துட்டா 'அடியே அவுசாரி முண்ட'ன்னு சேலையைத் தூக்கித் சொருகிக்கிட்டு அடிக்க ஓடும்... அப்படி ஒருத்தியான செவபாக்கியம்... ஒரு குடும்ப சாம்ராஜ்யத்தக் கட்டி ஆண்ட செவபாக்கியம்... சாகக் கிடக்கும் போது வீட்டை ஒட்டித் தனியே வாரமிறக்கி... அதில் கட்டப்பட்ட சிமிண்ட் திண்டில் கிடக்கும் போது கூட , நடைபொடையா இருக்கும் போது ஆடிய ஆட்டத்தை மறக்காது பேசிக் கொண்டே இருக்கிறது.

தேனு மாதிரி ஒரு அயித்த மக இல்லைன்னா கிராமத்துல பொறந்ததுக்கு என்ன அர்த்தம் இருந்துடப் போகுது. அந்தப் பாசம்... வாஞ்சையான பேச்சு... விடுமுறையில் ஊருக்கு வந்த மாமன் மகனுக்குப் பார்த்துப் பார்த்து சமைத்துப் போடுதல்... மாடு மேய்க்க கூட்டிப் போதல்... என வயதில் மூத்தவராக இருந்தாலும் பிரியத்தில் சோடை போகாத அயித்த மகளோ மாமன் மகளோ இப்படி ஒருவர் கண்டிப்பாக இருக்கக் கூடும். தன் பிரியத்துக்குரிய தேனுவின் மரணத்துக்கு உடைந்து அழுகின்ற அந்த 'நான்' என்னும் மனிதனுக்குள் இருக்கிறது அவளின் வெள்ளந்தியான அன்பின் பிடிமானம்.

ஊர்ல பேய் பிடிச்சி அதுக்குத் துணூறு போட்டு ஓட்டுறதைப் பார்த்தா சிரிப்புதான் வரும்... பேய் கோழி ரசம் கேக்குறதும்... சிகரெட்டுக் கேக்குறதும்... ரசிக்க வச்சாலும் ராத்திரியில முழிப்பு வந்த பின்னாடி தூங்க விடாம எல்லாத்தையும் மனசுக்குள்ள ஊர்வலமாக் காட்டி 'கருப்பா...'ன்னு மனசுக்குள்ள வேண்டிக்க வைக்காம போகாது. இந்தப் பேய் புடிச்சுருச்சு கதையில பூசாரி கோடாங்கி அடிச்சி பேய் ஓட்டுறாரு... எங்கூருல எல்லாம் ஊர்ல சாமியாடுற யாராச்சும்தான் துணூறு போடுவாங்க... அதுக்கு கட்டுப்படலைன்னாத்தான் பூசாரி வரைக்கும் போகும்... அப்படி பேய் புடிச்சதா நடிக்கிற மருமககிட்ட மிதி வாங்குற சேவாத்தாவை நினைச்சி சிரிச்சிக்கிட்டே இருக்கலாம்.

அப்படித்தான் சில்லறைப் பாக்கியும்... பஸ்ல பணத்தைக் கொடுத்துட்டு டிக்கெட் பின்னால எழுதிக் கொடுத்துட்டு கண்டக்டர் போகும் போதும் வரும் போது மொகத்த மொகத்தப் பாக்குறது இருக்கே... அதை அனுபவிச்சிருக்கணும்... அப்பத்தான் அந்த நிலமையை ரசிக்க முடியும்... கல்லூரியில் படிக்கும் போது நண்பன் ஒருவனுக்கு எழுதிக் கொடுத்ததை கண்டக்டர் மறந்துட்டுப் போயிட, மருதுபாண்டியர் செட்டுல போயி  டிக்கெட்டைக் காட்டி வாங்கி வந்ததை ஞாபகத்தில் நிறைத்தது. அப்படி எழுதாமல் தாரேன் சார் என்ற கண்டக்டரிடம் அவன் காசை வாங்கினானா இல்லையான்னு ரசிச்சுப் படிக்க வச்ச கதை இது.

இப்படித்தான் நிலா, உமான்னு ஒவ்வொண்ணும் ஒவ்வொரு விதமாய்... எந்தக் கதையும் வாசிக்கும் போது என்னடா இது என யோசிக்க வைக்கவில்லை என்பதே எழுத்தாளரின் எழுத்தின் வெற்றி. மிகச் சிறப்பான சிறியதொரு சிறுகதைத் தொகுப்பு இது.


முன்னுரை எழுதியிருக்கும் கவிதாயினி மனுஷி பாரதி, 'பிரதேசத் தன்மை கொண்ட படைப்புக்கள் தமிழில் இன்னமும் எழுதப்படாத களங்களாகத் தேங்கி நிற்கிறது. நம் அடையாளத்தைத் தொலைத்துக் கொண்டிருக்கிற தலைமுறை இப்போது உருவாகியிருக்கிறது. நம் மொழி அடையாளம், பண்பாட்டு அடையாளங்கள் குறித்த பிரக்ஞையற்ற தலைமுறைக்கு நம் மக்களை, அவர்களின் வாழ்க்கையைக் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டிய கடமை கதை சொல்லிகளுக்கு இருக்கிறது. அவை நிலம் பெயர்ந்து போன மனங்களில் படிந்துகிடக்கும் நினைவேக்கங்களின் வழியேதான் சாத்தியப்படக்கூடும்' என்று சொல்லியிருக்கிறார்.

உண்மைதான்... கிராமத்து வாழ்க்கையை... அந்த மக்களின் மனங்களை... அவர்களின் நேசத்தை... இப்படியான கதைகளின் மூலமேனும் நம் அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்ல வேண்டும்... அது என்ன எழவெடுத்த அழுகாச்சி கதையாக இருந்தாலும் சொல்ல வேண்டிய விதத்தில் சொல்லிச் செல்ல வேண்டும் என்பதே என் ஆசையும்... அதனால்தான் என் களங்கள் எல்லாமே கிராமங்களையே சுற்றி வருகிறது. 

ஆசிரியர் தனது என்னுரையில் 'புரிந்து கொள்ள முடியாத இவ்வாழ்வைப் புரியாமலேயே அணுகுவது எவ்வளவு உன்னதமானதோ அப்படியாய், சிவகங்கை மாவட்டத்தின் ஒரு குக்கிராமத்திலிருந்து நீண்ட இந்தக் கிளை தன்னை - தன் மூதாதையர்களின் வேர் அறிவித்துக் கொள்ள விரும்புவதாய் ஓர் உத்தேசமாய்க் கருதிக் கொள்ளுங்கள். எழுத்து நோக்கி நீண்டு கொண்டேயிருக்கும் கரங்களுக்குச் சொந்தக்காரன், சில புத்தகங்களை எழுதியவன், இன்னும் சில புத்தகங்களை எழுதித் தீர்க்க ஆவல் கொண்டவன் என்பதாயும் என் அடையாளம் வரையறுக்கப் படலாமென்றாலும்... காலத்தின் கைகளில் தன்னை முழுமையாய்க் கொடுத்தவன் நான் என்றுதான் என் பிரக்ஞை என்னை எனக்கு அறிமுகம் செய்கிறது' என்று சொல்லியிருக்கிறார்.

தேவா அண்ணன்  எப்படியான எழுத்துக்கு மாறினாலும் அவ்வப்போதேனும் தனது களமாக தம் மக்களின் வாழ்க்கைக் கதைகளை எழுதி வர வேண்டும் என்பது அன்பான வேண்டுதலாய். 

வாழ்த்துக்கள் அண்ணா.

யாரோ எழுதிய கதை
தேவா சுப்பையா
ஒரு துளிக் கவிதை வெளியீடு
விலை : ரூ.70 /-
-'பரிவை' சே.குமார்.

சனி, 13 ஏப்ரல், 2019'மணல் பூத்த காடு' - விமர்சனக் கூட்டம்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 30 பேர், Sanyo Daphne Pallikar, Suresh Babu, Tamilselvan Siva, Balaji Baskaran, Sheik Mohamed Sulaiman, Firdhous Basha, Dheva Subbiah, ஷோபியா துரைராஜ், Sasikumar Ssk மற்றும் 8 பேர் உட்பட, புன்னகைப்பவர்கள், பலர் அமர்ந்துள்ளனர் மற்றும் உட்புறம்

மீரக எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் குழும முன்னெடுப்பில் முஹம்மது யூசுஃப் அண்ணனின் 'மணல் பூத்த காடு' விமர்சனக் கூட்டம் வெள்ளி மாலை ஆசிப் அண்ணாச்சியின் வீட்டில் நடைபெற்றது.  இது 'ஆபாசக் குழுமம்' என முகம் மறைத்துச் சிலர் பேசினாலும் ஒவ்வொரு வாரமும் ஏதாவது ஒரு கூடுகையின் மூலம் வார நாட்களின் அயற்சியைப் போக்கும் 'ஆசுவாச'மான குழுமமாகத்தான் இது இருக்கிறது என்பதே உண்மை. இங்கு வைக்கப்படும் கருத்துக்கள் எப்படிப்பட்டது எனினும் அதை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் எல்லாருக்கும் இருப்பதுதான் சிறப்பு.

மணல் பூத்த காடு (நீளமா இருக்குதானே... இனி மபூகான்னு அண்ணாச்சி சொல்ற மாதிரி எழுதுவோம்...) - சௌதி பற்றி அறியாத செய்திகளைத் தாங்கிப் பயணிக்கும் நாவல். அது குறித்தான பார்வையை முன் வைக்கும் முன் 448 பக்கங்கள் கொண்ட நாவலை முழுவதுமாய் வாசித்து விமர்சனம் செய்வதுதான் நல்லது என்பதால் பேசியவர்களில் பலர் நாவலை மட்டுமின்றி அதன் ஊடாக இன்னும் தேடுதல் வேட்டையாகப் பலவற்றை வாசித்து வந்து மிகச் சிறப்பாகப் பேசினார்கள்.

எப்பவும் போல் அண்ணாச்சி அழகு தமிழில் விழாவை ஆரம்பிக்கும் முன்னர், சசி அண்ணனின் மகன் எனக்கு இலக்கியத்தில் ஆர்வம் உண்டு... இந்த மாதிரி நிகழ்வுகளில் நானும் கலந்துக்கணும்ன்னு அப்பாக்கிட்ட கேட்டேன் என்றபடி, ரொம்ப சங்கோஜப்பட்டு இன்னைக்கு வேண்டாமே என கொஞ்சலாய்க் கேட்டவன், வற்புறுத்தலுக்காக 'சத்தம் போடாதீங்கடா'ன்னு ஆரம்பிச்சதும் ஆடிப் பொயிட்டேன்... அப்புறம்தான் அது எம்.ஜி.ஆர். குரலுக்காக பேசியதுன்னு தெரிந்தது... என்னைய மாதிரி பலரும் ஆடியிருக்கலாம். அவனை நம்மாளுக பிலிப்பைனி மபூகா பற்றிப் பேசினா எப்படியிருக்கும்ன்னு சொல்லுன்னு கேட்டதுக்காக, பிலிப்பைனி மாதிரிப் பேசி எனக்கு மபூகா பற்றி எனக்கு எதுவும் தெரியாதுய்யா... ஆளை விடுங்கன்னு சொல்லி முடிச்சிக்கிட்டான். அருமை... தொடரட்டும்... வாழ்த்துக்கள்.

இன்னும் சிலர் வர வேண்டியுள்ளதால் அண்ணாச்சி நீங்க பாடுங்கன்னு... எல்லாரும் சொல்ல தனது செல்போனில் தான் பாடி சேமித்து வைத்திருந்த 'வெத்தல போட்ட சோக்குல...' பாட்டைப் போட்டுவிட்டு, நாந்தான் பாடுறேன் கேளுங்கன்னுட்டு அவரு வெளியில் போய்விட்டார்.

எப்பவும் போல் தமிழ்தாய் வாழ்த்துடன் விழா ஆரம்பிக்க, தமிழில் இது ஒரு முக்கியமான நாவல், இதைப் பற்றி முதலில் என்னிடம் சொன்னவன் பிரபு கங்காதரன்தான்... யூசுஃப் என்னிடம் கொடுத்து வாசிக்கச் சொன்ன போது எனது வேலைப்பளூவின் காரணமாக அதிக நாட்கள் எடுத்துக் கொள்வேன் என்று சொன்னதும் எவ்வளவு நாள் ஆனாலும் முழுவதும் வாசித்துச் சொல்லுங்க எனச் சொன்னதாகவும், தான் வாசித்து எழுத்துப் பிழைகளையும் சரி செய்து கொடுக்க இரண்டு மாதங்கள் ஆகியது என்றார். 

'காளி' விமர்சனக் கூட்டத்தில் சசி அண்ணன் அடுத்த முறை தொடக்க ஆட்டக்காரர் என்பதிலிருந்து எனக்கு விலக்கு வேண்டும் என்று கேட்டதால் நெருடா தான் இறங்குவதாகச் சொல்லியிருந்தார். அதன்படி நெருடாவைக் கேட்க, அவர் நான் பின்னால் இறங்குகிறேன் வேற யாருக்காச்சும் வாய்ப்புக் கொடுங்க என்று சொல்லிவிட, திடீரென களமிறக்கப்பட்ட எந்த நிலையிலும் அடித்து ஆடும் 'கரும்புனல்' சுரேஷ் அவர்கள், நாவலுக்காக யூசுஃப் அண்ணனின் உழைப்பைப் பாராட்டினார். கவிதை, சிறுகதை, நாவலுக்கென்று ஒரு வடிவம் இருக்கிறது... அந்த வடிவத்தின்படி எழுதினால்தான் அது முற்றுப்பெறும். அந்த வடிவம் மபூகாவில் இல்லை என்றவர், நாவலில் பல மொழிகள் பயன் படுத்தப்பட்டிருப்பதால் ஒரு வறட்டுத் தன்மை இருக்கிறது என்றும் என்னுடைய கரும்புனல் நாவல் நடக்கும் களம் முழுக்க முழுக்க இந்தி பேசும் பகுதி என்றாலும் தமிழில்தான் கொடுத்தேன் என்றும் சொன்னார். இறுதியாக யூசுஃபுக்குத்  தயவு தாட்சண்யம் பார்க்காமல் கத்திரி வைக்கும் எடிட்டர் கண்டிப்பாய் தேவை என்றார். 

அடுத்ததாய் களம் இறங்கிய தேவா அவர்கள் அந்த எழுத்துத் தன்மை உள் வாங்கிக் கொண்டதால் இரண்டு நாளில் முடித்ததாகவும், காபாவை மலை உச்சியில் இருந்து அனீஸ் பார்க்கும் போது ஆடு பார்த்ததையும் சிலாகித்துப் பேசியவர், மணல் மீது யூசுஃப்புக்கு எவ்வளவு காதல் இருக்கக் கூடும் என்றார்.இது நாவலாய் இல்லை இது ஒரு ஆவணம் என்றார். இஸ்லாத்துக்கும் தமக்குமான தொடர்புகளைச் சுட்டிக் காட்டிப் பேசினார். நாவலில் பல கதாபாத்திரம் இருந்தும் அது அனீஸின் பின்னே சுற்றுவதை மட்டுமே சொல்லாமல், ஒவ்வொருவரின் பார்வையிலும் பயணித்திருக்கலாம் என்றவர், இறுதியில் நீங்கள் சிங்கம் உங்களைக் கூண்டில் அடைக்கப் பார்ப்பார்கள் அதில் அடைந்து விடாமல் சிறை உடைத்து வெளியில் வாருங்கள் என்றார்.

தேவாவைத் தொடர்ந்து இறங்கிய நூருல் அமீன் அவர்கள், சௌதியைப் பற்றி படித்ததும் தனக்கு துபையை மீண்டும் ஒரு முறை சுற்றிப் பார்த்து ரசிக்க வேண்டும் என்று தோன்றியதாலேயே இங்கு இன்னும் சிலகாலம் தொடர்ந்து இருக்க வேண்டும் என்றார். தேவா பேசியதையும் மேற்கோள்காட்டிப் பேசினார். தான் எடுத்துக் கொள்ளும் உணவு செரித்துப் பின் தாய்ப்பாலாக கொடுத்தால்தான் சிறப்பு, அப்படியில்லாமல்  வாந்தியாய் எடுத்தால் எப்படி என்றவர் மபூகாவில் ஆசிரியர் வாந்தியாய் எடுக்கவில்லை என்றாலும் இன்னும் சிறப்பாக எழுத வேண்டும் என்றார். திருச்சியில் இருக்கும் பேராசியர் நண்பருக்கு புத்தகத்தை அனுப்பியதாகவும் அவர் வாசித்து சிறப்பாக இருப்பதாகவும் சொன்னதுடன் அவரின் மாணவர் ஒருவர் அடுத்த ஆண்டு மபூகாவை தனது முனைவர் ஆய்விற்கு எடுக்க இருப்பதாகவும் சொன்னார். நீண்ட உரையாடல் என்றாலும் மிகச் சிறப்பாய் பேசினார். 

அடுத்ததாகக் களம் இறங்கிய சசி அவர்களும் ஆசிரியரின் உழைப்புக்கும்  தேடுதலுக்கும் வாழ்த்துச் சொன்னார். கவிதை, சிறுகதை, நாவல் என்பதற்கு இவர் ஒரு வடிவம் காட்டினார். கவிதையை தேனின் ஒரு துளியாய் இருக்க வேண்டும் என்றும் சிறுகதையை நீரோடை போலிருக்க வேண்டும் என்றும் நாவலைக் காட்டாறாய் இருக்க வேண்டும் என்று சொன்னார். நாவலில் நாயகன் நடந்து கொண்டே இருக்கிறார். அவன் லாடம் கட்டிய குதிரையாய் நடந்து கொண்டே இருப்பதாய் யூசுப் சொல்லியிருக்கிறார் அது லாடம் அல்ல சேனை கட்டிய குதிரை என்றவர், தனது அப்பத்தா சிவாஜி படம் நல்லாயிக்கும் என தியேட்டருக்கு அழைத்துச் சென்று டிக்கெட் கிடைக்காமல் மீண்டும் நடந்தே வீட்டுக்கு கூட்டியாந்ததை நாவலுடன் ஒப்பிட்டுப் பேசிய போது அரங்கில் சிரிப்பலை. நிறையப் பக்கங்கள் இருந்தாலும் என்னை முழுமையாகப் படிக்க வைத்தது நாவலின் எழுத்து நடை என்றார். மேலும் எனக்கு ஏனோ ஒரு வீட்டுக்குள் நகரும் டூலெட்டை விட பரியேறும் பெருமாள் பிடித்திருந்தது என்றவர், மபூகா காட்டாறாய் இல்லை அது கால்வாயாகத்தான் இருந்தது என்றார். இறுதியில் முத்தாய்ப்பாய் மணல் பூத்த காடு... கனவுப் பிரியனைத் தேடு... என்று சொல்லி தனது உரையை எப்பவும் போல் அழகு தமிழால் பேசி முடித்துக் கொண்டார்.

அடுத்து வந்த கௌசர் அவர்கள் இந்தப் புத்தகத்தைக் கொடுங்க ரெண்டு மூணு நாள்ல வாசிச்சிருறேன் என வாங்கும் போதே இரண்டு மாதமாவது ஆகும் என்றார்கள். அப்படியென்ன இருக்கு என யோசித்து வாங்கினால் 448 பக்கம், நானெல்லாம் அவ்வளவாக வாசிப்பவன் இல்லை என்றாலும் வாசிக்க வேண்டும் என்பதால் செல்போன் லைட்டை ஆன் பண்ணி நெஞ்சில் போட்டுக் கொண்டு படித்தேன், சில நேரங்களில் புத்தகம் மூக்கில் எல்லாம் விழுந்தது என்றார். இவ்வளவு விளக்கம் தேவை இல்லை என்றவர் மிஷினின் நம்பர் முதக் கொண்டு எல்லாமுமா சொல்ல வேண்டும் என்றார். பதினெட்டுப் பாகம் முடித்த நான் இங்கு வந்தபின் 40வது பாகத்தைப் படித்தேன். அதுவும் அதே செய்திகளுடனும் நடையுடனுமே போகிறது என்றவர் தான் சௌதி சென்ற போது விமான நிலையத்தில் நடந்த கூத்தை விவரித்தார். 

அடுத்ததாகப் பேச வந்த கவிமதி அவர்கள், ஒட்டு மொத்தமான எல்லா நிகழ்வுகளுக்கும் வஹாபியிசக் கொள்கைகளையே குற்றம் சொல்லக்கூடாது. நிறைய நல்ல நிகழ்வுகளும் வஹாபியிசத்தால் நடந்திருக்கிறது என்றார். வஹாபியிசக் கோட்பாடுகள் அது குறித்து விரிவான அறிதல் இல்லாதவர்களின் தவறான வழிகாட்டுதலால் இன்று மாறிக் கிடக்கிறது என்றார். கோயம்புத்தூர் குண்டு வெடிப்புக்கும் வஹாபியிஸத்துக்கும் சம்பந்தம் இல்லை என்றார். எங்க ஊரில் வேறு வேறு தினங்களில் ரமதான் கொண்டாடப்படுகிறது. நான் இந்த வருடம் ரமதான் இல்லைடா என்று கூட அவர்களிடம் சொல்லியிருக்கிறேன். அப்போது அவர்கள் என்னை எப்படிப் பார்த்திருப்பார்கள்... எனக்கு என்ன கொடுத்திருப்பார்கள் என்பது உங்களுக்குத் தெரியும் அல்லவா என்றார். முஸ்லீம் கொள்கைகளை தீவிரமாகக் கடைபிடித்த ஒரு குடும்பத்தில் பிறந்து 23 வயதில் சௌதி போனவன், அங்கு கடைபிடிக்கப்படும் கொள்கைகளை பார்த்து வியந்தேன் என்றார், தலை வெட்டு இல்லை என்றெல்லாம் சொல்ல முடியாது... ஆறு மாதம் முன்னர் வேலைக்காரப் பெண்ணான இலங்கைச் சிறுமியின் தலை வெட்டப்பட்டது எல்லாருக்கும் தெரியும் என்ன பொது வெளியில் கூடாது என்பதால் சிறைச்சாலையிலேயே வைத்துச் செய்தார்கள் என்றதுடன் தான் வேலை பார்த்த போது வேலை முடிந்து திரும்புவதற்குள் தலை வெட்டப்பட்டு சுத்தம் செய்யப்பட்டிருப்பதைப் பார்த்திருப்பதையும் நினைவு கூர்ந்தார். இன்னும் நிறைய சௌதி குறித்தும் வஹாபியிஸம் குறித்தும் பேசினார். 

மபூகா பற்றி ஆண் விமர்சகர்களே பேசிக் கொண்டிருந்ததால் அண்ணாச்சி ஜெசிலா அவர்களை அழைத்தார். எல்லாரும் பேசிட்டாங்க... அதையேதான் நானும் திரும்பப் பேசணும்... சுவராஸ்யமில்லை... நாவல் வடிவமில்லை... செய்திகள் அதிகமிருக்கு என திரும்பத் திரும்ப அதையே சொல்லணுமா என்றவர்,  எனக்கு மபூகா பிடித்திருந்தது. அந்த இயந்திரத்தின் நம்பர் கொடுத்ததில் என்ன தவறு. நான் எப்பவுமே தேடல் உள்ளவள்... எல்லாவற்றையும் குறித்து வைத்துள்ளேன்... கூகிளில் தேடி அதன் விபரம் அறிந்து கொள்வேன் என்றார். அப்போது சுரேஷ் குறுக்கிட்டு அதுக்காக 23எப் சீட்டில் பயணித்தேன் என்பதெல்லாம் ஓவர் என்றார். அதென்ன கடிதங்களுக்கு மட்டும் மொழி நடை மாறுது... என்று கேட்டவர், ஒருவேளை அது தனியாக எழுதிச் சேர்த்ததால் இருக்குமோ என ஆசிரியரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டார். தனது அம்மாவும் கொஞ்சம் வாசித்ததாகவும் அவருக்கும் பிடித்திருப்பதாகவும் சொன்னவர் செய்திகள் தேவை என்பதை மீண்டும் வலியுறுத்தினார்.

துவக்க ஆட்டக்காரராக களமிறங்க இருந்து கடைசி நேரத்தில் மாற்றிக் கொண்ட நெருடா அழைக்கப்பட்ட போது, கீழே பிரியாணி வந்திருக்கிறது போய் எடுத்து வாருங்கள் என ராஜாராம், நௌஷாத்துடன் என்னையும் அனுப்பினார் பாலாஜி. எடுத்து வருவதற்குள் என்ன பேசினார் என்பது தெரியாது என்றாலும் நாவலில் உள்ள நுண் அரசியலை, உருவ வழிபாடு கூடாது என்பதால் கற்களை உடைத்ததை, வஹாபியிசத்தை தோற்றுவித்தது யார்..?, அதனால் என்ன நிகழ்ந்தது..?, பிரிட்டீஷ்காரனின் வருகையால்தான் வஹாபிஸம் வந்ததா..? என புத்தகத்தைப் படித்து அதன் ஊடான தேடுதலில் தான் அறிந்தவற்றைப் பற்றி மிக நீண்ட விவாதத்தை முன் வைத்தார். பேசியவர்களில் தீவிர ஆராய்ச்சி செய்து பேசியது நெருடா மட்டுமே. இப்படித் தேடிப் படித்திருக்கிறாரே என்ற வியப்பே மேலிட்டது. மிகச் சிறப்பான பேச்சு... மபூகாவுக்குள் பயணிக்காமல் அவருக்கு பிடித்த, நெருடலாய் இருந்த விஷயங்களைப் பேசினார். மகேந்திரன் 'சித்தப்பு நீ எப்ப மபூகா பற்றிப் பேசுவே..?' என வாட்ஸப்பில் தட்டி விட்டார் என்றாலும் கம்யூனிசக் கொள்கை கொண்டவரின் விரிவான பார்வை இப்படியாய் இருந்ததும் சிறப்புத்தான். வாழ்த்துக்கள்.

அண்ணாச்சி வெளியில் சென்ற தருணத்தில் மைக் பிடித்த பாலாஜி சான்யோ நீங்க பேசுறீங்களாவெனக் கேட்டபோது அண்ணாச்சி இல்லையே என யோசித்தவரை, அவர் வரட்டும் நீங்க வந்து பேசுங்க என அழைத்தார். 

சான்யோ பேசும் 'கிளியோபாட்ரா ஏன் செத்தாள்...? விஷம் அருந்தி என்கிறார்கள்... பாம்பைக் கடிக்கவிட்டு என்கிறார்கள்... எப்படி செத்திருப்பாள் என ரெண்டு மூணு நாளாவே யோசித்து அதற்கான தேடலில் இருக்கிறேன் என்றவர் மபூகாவை கண்டிப்பாக நான் நான்கைந்து முறைக்கு மேல் படிப்பேன் என்றார். எனக்கும் தேடுதல் ரொம்பப் பிடிக்கும் என்றவர். விரிவான தகவல்களுடன் சொல்லியிருப்பதில் என்ன தவறு இருக்கிறது என்று வாதிட்டார். மேலும் யார் என்ன சொன்னாலும் நீங்க அடுத்த நாவலும் இதேபோல் தகவலுடன் எழுதுங்க என்றார். இவர் பேசும் போது விமர்சனக் கூட்டத்துக்கே விமர்சனம் பண்றீங்களா... நாவலைப் பற்றிப் பேசுங்கன்னா இங்க பேசுனவங்க சொன்ன கருத்துக்களை வைத்துப் பேசுறீங்க என கௌசர், சுரேஷ், தேவா போன்றோர் சத்தம் போட்டனர்.  சிரித்துக் கொண்டே எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது என்றார்.

'காளி' எழுதிய கவிஞன் பிரபு பேசும்போது இந்த நாவல் வெளிவரும் முன்னர் நானும் அண்ணனும் இது குறித்து நிறையப் பேசியிருக்கிறோம். கவிதை, சிறுகதைக்கு எல்லாம் என்னய்யா வடிவம் இருக்கு... ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை... இப்படித்தான் இருக்க வேண்டும்... இந்த வடிவத்துக்குள் வரவேண்டும் என்றெல்லாம் சொல்லக்கூடாது. இது நாவல்தான்... எவ்வளவு உழைப்பு இருக்கு தெரியுமா இதில் என்றெல்லாம் பேசியவர், அனீஸ் மனைவிக்கு எழுதிய கடிதங்கள் எல்லாமே என்னைக் கவர்ந்தவை... அதில் அத்தனை காதல் இருக்கு.... குறிப்பாக ரெண்டாவது கடிதத்துக்கும் என்னுடைய காளி கவிதைக்கும் ஒரு தொடர்பு இருக்கு... அதை மீண்டும் வாசித்து யாராவது என்ன தொடர்புன்னு சொல்லுங்க பார்ப்போம்... வேறொன்னும் பேசுவதற்கு இல்லை என முடித்துக் கொண்டார்.

பாலாஜி அவர்கள் பேச ஆரம்பிக்கும் போது நாவலைப் பற்றிப் பேசணுமா... இல்லை இங்கு பேசியவர்களைப் பற்றிப் பேசணுமா எனக் கேட்க, நாவலைப் பற்றிப் பேசுங்க என்றதும் நானும் பயணத்தைக் கொண்டாடுபவன் என்பதால்  நாவலை வாசிக்கும் போது நான் குருஷேத்திரம், தில்லி என சுற்றி வந்தேன் என்றவர் படிப்பு முடிந்து முதலில் வேலைக்குச் சேர்ந்ததும் நான் சென்றது தில்லி என்றும், தன்னைக் கூட்டிப் போனவன் விட்டுவிட்டு வேறு வேலையாகச் செல்ல, இந்தி தெரியாத ஊரில் சாப்பாடு வாங்கக் கூட தான் பட்ட கஷ்டத்தைப் பகிர்ந்து கொண்டார். நம்ம ஊரில் இட்லி வாங்கினால் சாம்பார், சட்னி கட்டிக் கொடுத்துருவாங்க... ஆனா சப்பாத்திக்கு பாஜியும் காசு கொடுத்து வாங்கணும் என்பதை அங்குதான் தெரிந்து கொண்டேன் என்றார். மேலும் தமிழ் ஆட்களே இல்லாத ஊரில் ஒரு ராணுவ வீரன் தமிழ்ப் பாடலை விசிலில் பாடிக்கொண்டு சென்றதைக் கேட்டு தான் அடைந்த சந்தோஷத்தையும் பகிர்ந்து கொண்டார். எனக்கு இந்த சந்திப்பிழை, ஒற்றுப்பிழை எல்லாம் தெரியாது என்பதால் 'ப்' போட்டானா, 'ண்' போட்டானான்னு எல்லாம் யோசிக்கலை... எனக்கு பிடித்த களம் என்பதால் அனீஸ் கூட பயணப்பட்டேன் என்றார். கடுமையான கத்திரி வேணுமாம்... அப்படி கத்திரிபோட்டிருந்தா மூணு பக்கத்துல முடிஞ்சிருக்குமேய்யா என்றார். இன்னும் நிறைய உருக்கமாய்ப் பேசியவர் இறுதியில் நல்லாச் சமைச்சவளுக்கு வளையல் போடணும் என்பதால் இந்த மோதிரத்தை அண்ணனுக்குப் போடுறேன் என யூசுஃப் அண்ணனுக்கு மோதிரம் அணிவித்து முத்தமும் கொடுத்தவர் உணர்ச்சிப் பெருக்கில் கண் கலங்கினார். உணர்ச்சிகரமாகப் பேசினாலும் அவரது பேச்சில் இழையோடும் நகைச்சுவை கடந்து இரண்டு விமர்சனக் கூட்டத்திலும் மிஸ்ஸிங்... அது ஏனோ...? சிங்கத்தை சிறையிட்டது யாருய்யா... நகைச்சுவையாய் பேசவும் ஒருவர் வேண்டும் என்பதை மனதில் கொள்வோம்.

பணி நிமித்தம் தாமதமாக, ரொம்பச் சோர்வாக வந்த அசோக் அவர்கள்,  நான் அதிகம் பேச முடியாது என்றதுடன் மைக்கும் வேண்டாம் எனச் சொல்லி ஒரு விரிவான பார்வையை தன் பேச்சின் மூலம் கொடுத்தார். நிறைய விஷயங்களைத் தவறென்றதுடன், சுற்றிக் காட்டுபவனுக்கும் பயணப்படுபவனுக்கும் உள்ள வித்தியாசத்தைச் சொன்னார். சுற்றுலாப் பயணிகளுக்குச் சுற்றிக்காட்ட உதவியாக வருபவன் அந்த ஊரில் உள்ள முக்கிய இடங்களுக்கு மட்டுமே கூட்டிச் செல்வான். அதே நேரம் பயணப்படுபவன் என்றால் அந்த ஊர் முழுவதும் சுற்றுவான்... மண், மக்கள், மொழி, வாழ்க்கை முறை என எல்லாவற்றையும் தேடித்தேடி பார்ப்பான். மபூகாவில் நீங்க சுற்றித்தான் காட்டுகிறீர்கள்... அந்த மக்களைப் பற்றியோ அவர்களின் வாழ்க்கை முறை பற்றியோ பேசவில்லை... ஏன் உள்ளூர் ஆட்கள் என மூவரை மட்டுமே சொல்கிறீர்கள்... மற்றவர்கள் எல்லாமே வெளியூர்வாசிகள்தான். எங்கு சென்றாலும் இடங்களை மட்டுமே பேசுகிறீர்கள் என்ற குற்றச்சாட்டை வைத்தார். இஸ்தான்புல் பற்றிய நாவலில் அங்கிருக்கும் ஒவ்வொரு வீதியும் பற்றி சொல்லப்பட்டிருக்கும்... அதனுடன் நான் மதுரையை ஒப்பிட்டுப் பார்த்திருக்கிறேன் என்றெல்லாம் மிக விரிவாய்... சோர்வை நீக்கிப் பேசினார்.

அண்ணாச்சி அவர்கள் பேசும் போது இதை ஏன் நான் முக்கியமான நாவல் என்கிறேன் என்பதற்கான விளக்கத்தைச் சொன்னார். கணேசகுமாரனின் பார்வை குறித்து விரிவாகப் பேசினார்... வாசகனின் பார்வையில் அது சரியான விமர்சனமே என்றார். சுரேஷ் கூட கணேசகுமாரனின் கருத்துக்கள் பெரும்பாலானவற்றில் நானும் ஒத்துப் போகிறேன் என்றார்.  சுவராஸ்யம் இல்லை என்பது வாசகனின் மனநிலை... ஆழப்படித்தால் இதிலிருக்கும் நுண் அரசியல் புரியும் என்றார். சுவராஸ்யம் இல்லை என்பதாய் எதைச் சொல்கிறீர்கள்..? நாவல் இல்லை என எப்படிச் சொல்லலாம்...? என விரிவாய்ப் பேசி விளக்கம் கொடுக்க, தாங்கள் ஆதரவுக் கரம் நீட்ட வேண்டும் என்பதால் எங்கள் கருத்துக்களைக் குறை சொல்கிறீர்கள் என சுரேஷ், தேவா எனப் பலரும் எதிர்க்குரல் கொடுக்க, விவாதம் சற்றே காரசாரமானது. நான் யூசுஃப்புக்காக கம்பு சுத்துறேன்னு நெனைக்காதீங்கய்யா எனச் சொல்லி, சௌதி குறித்தான வித்தியாசமான பார்வையை மபூகா முன் வைக்கிறது என்றும் எங்களிலும் பல பிரிவுகள் இருக்கத்தான் செய்யுது என்றெல்லாம் தன் அழகு தமிழில், காந்தக் குரலில் பேசி, யூசுஃப் விளக்கமாய்ப் பேசுவார் என முடித்துக் கொண்டார்.

யூசுப் அவர்கள் முன் முடிவோடு வந்து விட்டார் போல... இப்படித்தான் பேச்சு இருக்கும்... இதற்கு இப்படியான பதில் கொடுக்க வேண்டும் என எழுதிய குறிப்புடனே வந்து விட்டார். அங்கு பேசிய எல்லாருக்குமான பதிலை தன் நீண்ட உரையில்... கிட்டத்தட்ட அரைமணி நேரம் (அவர் பேசியதை முழுவதுமாய் வீடியோ எடுத்தவன் என்பதால் அவர் பேசிய நேரத்தைச் சொல்ல முடிகிறது) மிக விரிவாய்ப் பேசினார்... இப்படியான பேச்சுத்தான் அவரின் சிறப்பு. இந்தப் புத்தகம் எழுத தான் எப்படியெல்லாம் உழைத்தேன் என்றும், இதை எழுத எது அடிப்படைக் காரணமாக அமைந்தது என்றும், சின்னச் சின்ன விஷயங்களுக்காக பல படங்களை பார்த்தேன் என்றும், பல புத்தகங்களை வாசித்தேன் என்றும் சொன்னார். நாவலில் என்ன என்ன செய்ய வேண்டும் என ஒரு முன் முடிவு எடுத்ததையும் சொன்னார். டாக்குமெண்ட் பிக்சன் வகையில் நாவல் எழுதுவது எவ்வளவு சிரமம் என்பதையும் புனைவாய் எழுதுதல் எவ்வளவு சுலபம் என்பதையும் சொன்னார். அடுத்த நாவல் புனைவாய் எழுதுவதாய்ச் சொன்னார். அதில் கூட தான் தகவல் கொண்டாடி என்பதால் சிந்துபாத் பற்றிய செய்திகளை இணைக்க இருப்பதாகவும் அதற்கான தேடலில் இருப்பதாகவும் சொன்னார். சௌதி குறித்து தமிழில் எழுதப்பட்ட மூன்றாவது நாவல் மபூகா என்றார். பயணக் கட்டுரைகள் எழுதிய மாலன் கூட சௌதி பற்றி எழுத மாட்டேன் என்று சொன்னார் என்பதையும் சொன்னார். இன்னும் விரிவாய், விளக்கமாய்ப் பேசினார். அவரின் முழுப் பேச்சையும் வாசிக்க அவரின் முகநூல் பதிவைப் பாருங்க.

நூருல் அமீன் எழுதிய புத்தகத்தை வாசித்து கருத்தைச் சொல்லுங்க என இலவசமாகக் கொடுத்தார். அவர் எடுங்க... எடுங்க... என நிற்க, எல்லாரும் பிரியாணி வாசத்தில் மயங்கிக் கிடந்தார்கள்... புத்தகமா... சோறா... என்றபோது சோறுதான் முக்கியமென பிரியாணிக்குள் புகுந்துவிட்டாலும் விழா முடிவில் பலர் புத்தகத்தைப் பெற்றுச் சென்றார்கள்.

பர்னிச்சரை யாருமே உடைக்கலையே எனக் கவலைப்படும் அண்ணாச்சி ஏனோ நேற்று அப்படியான கவலைக்குள் போகவே இல்லை... ஒவ்வொருவரின் பேச்சுக்குப் பின்னரும் நீண்ட விளக்கம் கொடுத்தது புதுமையாய் இருந்தது... மபூகாவுக்காக மட்டுமில்லாமல் இந்த முறையை எல்லா விமர்சனக் கூட்டத்திலும் தொடர்ந்தால் நலம்... கம்பெடுத்துக் கொடுக்கும் அண்ணாச்சி இறுதியில் இறங்கி ஆசிரியர் சார்பாய் கம்பு சுற்றியது ஏனோ என எல்லாருக்குமே ஒரு கேள்வி மனசுக்குள்... மற்றபடி எப்பவும் போல் அண்ணாச்சியின் அன்பும்... அணைப்பும்... குறிப்பாய் அந்த அழகு தமிழும் எல்லாருக்கும் கிடைத்தது. எப்பவும் போலவே புத்தகங்களைப் பாதுகாத்துக் கொண்டார்.

ஒரு தடவை கை கொடுத்ததுடன் ஓடிப்போங்கடா என பாலாஜி விரட்டியதால் நீண்ட நேரம் நிற்காது சற்று முன்னதாகவே அபுதாபியை அடைந்தோம். வரலை என்று சொன்னாலும் நீ வந்துதான் ஆகவேண்டுமென என் இருப்பிடம் வந்து அழைத்துச் செல்லும் பால்கரசு என்றும் நன்றிக்குரியவர். போகும் போதும் வரும்போது பல விஷயங்களைப் பேசிக் கொண்டு செல்ல இந்த முறை இராஜாராம், நௌஷாத், தங்கை சுடர்விழி என பயணமும் பண்பட்டதாகவே அமைந்தது. 

தன் புத்தகங்களைக் கொண்டு வர, லட்சங்களைத் தொலைத்து எழுத்தில் சாதிக்க நினைக்கும் நௌஷாத்தின் கதை உண்மையிலேயே மனசுக்கு வலியைக் கொடுத்தது. எதற்காக இவ்வளவு பணம் கொடுத்து ஏமாற வேண்டும்... ஹிட்ஸும் சர்டிபிகேட்டுக்களுமே நம் எழுத்தின் பாதையைத் தீர்மானித்து விடும் என நினைத்து பணத்தைச் செலவழித்து நிற்பது எத்தனை அபத்தமானது... எழுத்துக்கான இடத்தை அந்த எழுத்தே பெற வேண்டுமேயொழிய குடும்பச் சூழலில் இப்படியான செலவு என்பது எதற்காக என்ற வருத்தம் என்னுள் இன்னும் நிறைந்தே நிற்கிறது. அவன் நினைத்த இடத்தைச் ஜெயிக்க வேண்டும் என்பதே பிரார்த்தனையாகவும் இருக்கிறது.

குறிப்பு எடுக்காமல் இவ்வளவு விவரமா எழுதுறீங்களே... என என்னை ஆரத்தழுவி, உங்க விமர்சனத்தை நான் விரும்பிப் படிப்பேன்.... எழுதுங்க எனச் சொன்ன சசி அண்ணனுக்கு நன்றி. என் எழுத்துக்கான இடத்தை அது பிடித்து வைத்திருப்பதால்தான் இப்படியான உறவுகள் எனக்குக் கிடைத்திருக்கின்றன என்பதில் மிகுந்த மகிழ்ச்சி.

மபூகா விமர்சனக் கூட்டம் குறித்து எழுதும் மனநிலை இல்லை என்பதே உண்மை... நௌஷாத் எழுதியதைப் பார்த்ததும் இனி நாமும் எதற்கு இதையே திரும்ப எழுத வேண்டும் என யோசித்தவனை நச்சரித்து எழுத வைத்தவர் இராஜாராம்... அவருக்கும் அவர் போட்ட பதிவில் வந்து எழுதச் சொன்ன நட்புக்களுக்கும் நன்றி.

அண்ணன் தம்பிகளுக்குள் புரிதலில் எப்போதேனும் சின்னச் சின்ன இடைவெளி வருதல் சகஜமே... அப்படியான இடைவெளி ஆரத் தழுவுதலில் சில நேரம் காணாமல் போய் விடுவதுண்டு... அப்படியான தழுவல் கிடைத்தது என்பதை இதயப் பூர்வமாக உணர்ந்தேன்... இடைவெளி உடைபடும் என நான் நம்புகிறேன். யூசுஃப் என்று எனக்கு எழுத வருவதில்லை... கனவு என்றேதான் வருகிறது... இங்கு யூசுஃபை நுழைக்க நிறைய சிரமப்பட்டேன்... இந்தக் குழுமத்துக்குள் வந்ததால் வந்த உறவில்லை இது.... கனவாய் போனில் ஆரம்பித்த உறவு... எனக்கு கனவுப்பிரியனாய்தான் தெரியும்... அப்படித்தான் இன்றும் அழைக்கிறேன்... அண்ணே... நீ இன்னும் எழுதணும்ண்ணே... சிகரம் தொடணும்... உன் வெற்றியில் நாங்கள் மகிழணும்... உன் மனதில் எப்போதும் நாங்கள் இருக்கணும்... செய்திகள் இல்லாது எழுதாதே... ஆனாலும் குறைத்துக் கொள்... மபூகா 300 பக்கத்துக்கு மேல் எல்லாருக்குமே அயற்சியைக் கொடுத்திருக்கும் என்பதே உண்மை. 

விழாவைச் சிறப்பாக நடத்த உறுதுணையாக நின்ற அண்ணாச்சி, பாலாஜி இருவரும் போற்றுதலுக்கு உரியவர்கள். பாராட்டுவோம்.

சுபான் அண்ணாச்சி இல்லாத நிகழ்வு என்றாலும் அந்தக் குறை தெரியாமல் தமிழ்செல்வன் அவர்களும் கிங்க்ஸ்லி அவர்களும் மிகச் சிறப்பாக தங்கள் பணியைச் செய்தார்கள். அவர்களுக்கும் வாழ்த்துக்கள்... தமிழண்ணே உங்க பொண்ணு எம்பொண்ணை ஞாபகப் படுத்திக்கிட்டே இருந்துச்சுண்ணே...

மபூகா விமர்சனக் கூட்டம் மிகச் சிறப்பான நிகழ்வாய் அமைந்தது. நீண்டதொரு நிகழ்வில் எந்தச் சோர்வுமில்லாமல் பேசிய, கவனித்த அனைவருக்கும் நன்றி.

பேசியவர்களில் பெரும்பாலனோர் மூத்தவர்கள் என்றாலும் பதிவில் அண்ணன்... அண்ணன் என வருவதைத் தவிர்க்கவே பெயரை  மட்டும் போட்டிருக்கிறேன். தவறாக நினைக்க வேண்டாம்...

பதிவு மிகப் பெரியது... பொறுமையாய் வாசித்ததற்கு நன்றி.

-'பரிவை' சே.குமார்.