மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

ஞாயிறு, 31 டிசம்பர், 2017

மனசு பேசுகிறது : 2017 - 2018

2017 - ஆம் ஆண்டு சொல்லிக் கொள்ளும் படியாக எதையும் கொடுத்து விடவில்லை.   நினைத்தது எதுவும் நடந்து விடவும் இல்லை நடந்து எதுவும் நினைவில் வைக்கும்படியும் இல்லை.

ஆண்டின் ஆரம்பமே விரிசலைக் கொடுத்தது. கஷ்டத்தின் இறுதி வரைக்கும் கொண்டு சென்று நிறுத்தி வைத்து நகர்ந்து செல்கிறது. கடந்து செல்ல வைக்குமா இல்லை இன்னும் இதிலேயே நிறுத்தி வைக்குமா வர இருக்கும் ஆண்டு என்பது தெரியவில்லை.

வருடத்தின் ஆரம்பத்தில் அறை மாற்றம்... இப்போது சிறிய அறை என்றாலும் மனதளவில் நிம்மதியாய்.

எழுத்தில் எதையும் சாதித்து விடவில்லை. எங்கள் பிளாக்கில் இரண்டு முறை கதை எழுதும் வாய்ப்பை ஸ்ரீராம் அண்ணா கொடுத்தார். 

பிரதிலிபி போட்டிகளுக்கு எழுதிய கதைகள், கட்டுரைகள் வாசகர் பார்வையில் சிறப்பான இடத்தைப் பிடித்தன என்றாலும் பரிசுக்குறிய கதைகளாக முன்னிற்கவில்லை. இன்னும் எழுத்தில் பட்டை தீட்ட வேண்டும் என்பதையே அது காட்டியது.

தினமணிக் கதிரில் சிறுகதை வெளியானது.

அபுதாபியில் இருக்கும் கனவுப்பிரியன், பிரபு கங்காதரன், சுபஹான் பாய் என சில உறவுகளுடன் ஊர் சுற்றி கொஞ்சம் இலக்கியம் பேசி, நிறைய புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்தோம்.

உடல் நிலையில் சில பிரச்சினைகள் இருந்து கொண்டேதான் இருக்கிறது.

அலுவலகத்தில் நடப்பு புராஜெக்ட் முள் மீது நடப்பது போலத்தான் இருக்கிறது. 2018-ல் இந்தப் புராஜெக்டின் நிலை என்னாகும் என்பதே கேள்விக்குறியாய்த்தான் இருக்கிறது.

நிறைய எழுத வேண்டும் என நினைத்தும் மனசு சந்தோஷமில்லாத நிலையில் எழுதாமலே விட்டவை அதிகமாய்.

நிறைய தமிழ், மலையாள சினிமாக்களைப் பார்த்தேன். 

குடந்தை சரவணன் அண்ணாவின் 'திருமண ஒத்திகை'க்கு அணிந்துரை எழுதிக் கொடுத்தேன்.

அதிகமில்லை என்றாலும் கொஞ்சமாவது வாசித்தேன்.

முத்துநிலவன் ஐயா சிறுகதை எழுத்தாளனாய் என்னைச்  சொல்லியிருந்தார்.

அகல் 2017 விருதுகளில் சிறுகதை ஆசிரியனாய்... கிராமத்து எழுத்துக்கு சொந்தக்காரனாய் எனக்கும் விருது கொடுத்திருக்கிறார் அதன் ஆசிரியர் சத்யா.

பாக்யா மக்கள் மனசு பகுதியில் தொடர்ந்து எழுதும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

எழுத்தாளர் எஸ்.இராமகிருஷ்ணன் அவர்களைச் சந்தித்து நாலைந்து மணி நேரம் இலக்கியம் கேட்கும் வாய்ப்பு அமைந்தது.

கடந்து இரண்டு மாதமாக மரண எண்ணத்தை அதிகம் விதைத்த பிரச்சினைகளைச் சந்தித்துக் கொண்டிருந்தாலும் ஜெயிக்க முடியும் என்ற நம்பிக்கையோடு நகர்ந்து கொண்டிருக்கிறேன்.

இந்த வருடம் நண்பர்களின் தளங்களை வாசித்தாலும் கருத்து இட முடியாத நிலை. என் கணிப்பொறி இன்னும் அப்படியே... 

எழுத்தை புத்தகமாக்க வேண்டும் என்ற எண்ணம் கடந்த வருடங்களைப் போல் குளத்தில் போட்ட கல்லாய்த்தான் கிடக்கிறது.

கடன்களில் இருந்து மீண்டு விடுவோம் என்பது கனவாகவே இருக்கிறது. இதுவே நிறைய பிரச்சினைகளின் ஆணி வேராய் நிற்கிறது.

உறவுகள் அருகிருக்க வேண்டும் என்ற எண்ணமே எனக்கு என்றாலும் உறவுகள் உதாசீனப்படுத்துவதும் நம்மிடம் சொல்லாமலே காரியங்கள் செய்வதும் இன்னும் தொடர்வது வேதனை அளிக்கிறது. கிட்டப் போனாலும் எட்டியே வைக்கும் உறவுகள் என்று மாறுவார்கள்.

வாழ்க்கையைப் புரட்டிப் போட்டு... அடித்துத் துவைத்து... காயப்போட்டு... காயும் முன்னே நகர்ந்து செல்லும் 2017-ன் பின்னே மெல்ல வந்து கொண்டிருக்கும் 2018 என்னைக் காயவைத்து அழகு பார்க்குமா அல்லது மீண்டும் துவைத்துக் காயப்போடுமா என்பது தெரியவில்லை.

மனசு இணைய மின்னிதழ் தொடங்கும் ஆசை ஒன்று எழுந்து மீண்டும் அடங்கியிருக்கிறது. 2018 அதை ஆரம்பித்து வைக்கிறதா என்று பார்க்கலாம் 

2018 வாழ்வில் ஏற்றத்தைக் கொடுக்காவிட்டாலும் கடனில் இருந்து மீட்டெடுக்கும் என்ற நம்பிக்கையோடும் தன்னம்பிக்கையை வளர்க்கும் என்ற ஆசையோடும் அடியெடுத்து வைக்கிறேன்.




2017 - ல் சில நட்புக்கள் குறித்து...

தினமும் பதிவு என்ற முறையில் கலக்கலாய் வலைப்பூவை நடத்தி வரும் ஸ்ரீராம் அண்ணனுக்குப் பூங்கொத்து.

எத்தனை வேலை இருந்தாலும் அவ்வப்போது சிறப்பான பதிவுகளுடன் வலம் வரும் கரந்தை ஜெயக்குமார் ஐயாவுக்குப் பூங்கொத்து.

அதிகம் எழுதவில்லை என்றாலும் கருத்துக்களில் அதிகம் எழுதி ஊக்குவிக்கும் துளசி அண்ணா கீதா அக்காவுக்குப் பூங்கொத்து.

தன் பாணியில் எப்பவும் போல் அடித்து ஆடும் கில்லர்ஜி அண்ணனுக்குப் பூங்கொத்து.

பயணக் கட்டுரைகளில் புகைப்படங்களால் நம்மைக் கவரும் வெங்கட் நாகராஜ் அண்ணனுக்குப் பூங்கொத்து.

கவிதைகளில் கதை பேசும் மீரா செல்வக்குமார் அண்ணனுக்குப் பூங்கொத்து.

கலக்கலாய் பதிவெழுதித் தள்ளும் தேனம்மை அக்காவுக்குப் பூங்கொத்து.

ஆன்மீகக் கட்டுரைகள் என்றால் எங்க துரை செல்வராஜூ ஐயாதான்... அவருக்கும் பூங்கொத்து.

இவர்கள் தவிர்த்து என்னை வாசிக்கும் நான் வாசிக்கும் அனைவரும் புத்தாண்டு வாழ்த்துக்களுடன் அன்பின் பூங்கொத்தும்.

அனைவரின் வாழ்வையும் சிறக்க வைக்கட்டும் 2018.

2018-ஐ வரவேற்போம்.
-'பரிவை' சே.குமார்.

திங்கள், 25 டிசம்பர், 2017

பனியில் நனைந்த பாலை

காலை எப்பவும் போல் எழுந்து குளித்து லிப்டில் இறங்கிய கட்டிடத்தை விட்டு ரோட்டுக்குப் போனபோதுதான் தெரிந்தது மூடுபனிக்குள் முகத்தை மூடிக்கொண்டிருக்கிறது நகரம் என்பது. ஆம் அடுத்த கட்டிடம் தெரியாத அளவுக்கு பனி மூட்டம்... ஒரே ஜிலு.. ஜிலு... குளு... குளு... லேசாக சாரல் போல் சொட்டு வைக்கும் பனி... ஸ்வெட்டருக்கு மேல் குளிரில் நடுக்கியபடி கடக்கும் மனிதர்களை ஸ்வெட்டர் எதுவும் இல்லாமல் கடந்து பேருந்து நிறுத்தம் நோக்கி பயணித்தேன். நாம இங்கு வந்தது முதல் இதுவரை ஸ்வெட்டர் வாங்கவில்லை.

இந்த குளிர்காலம் வந்தாலே பாலைக்குள் தகிக்கும் அரபு தேசம் பனிக்குள் சிரிக்க ஆரம்பித்து விடும். இன்று மூடு பனிக்கு செம மூடு போல... அடித்து ஆடியது.. எதிரே இருப்பது தெரியாத அளவுக்கு செமப் பனி... இந்தக் குளிரில் வேலைக்குப் போகணுமா என்று தோன்றினாலும் போய்த்தானே ஆகவேண்டும் என்ற காரணத்தால் மனசைத் தேத்திக் கொண்டு அவசரம் அவசரமாக பலர் போய்க் கொண்டிருந்தார்கள்... கார்கள் எல்லாம் விளக்குகள் ஒளிர மெல்ல நகர்ந்து கொண்டிருந்தன.

பேருந்து நிறுத்தத்தை அடைந்தபோது ஒரு பெருங்கூட்டம் பேருந்துக்காக காத்திருந்தது. இப்படி ஒரு கூட்டம் எப்போதும் இருக்காதே... இதென்ன இன்று இவ்வளவு கூட்டம்... என்ற யோசனைக்கு பதில் கிடைக்கவில்லை. ஊரில் பள்ளிக்கு பேருந்தில் செல்ல பாஸ் வாங்கி வைத்திருக்கும் பசங்க கூட்டமா நிற்பதும் வரும் பேருந்தில் எல்லாம் ஏற எத்தனித்து 'இதில் பஸ் பாஸெல்லாம் ஏத்துறதில்லை... பின்னால டவுன் பஸ் வருது... அதுல ஏறு' என பல நடத்துனர்கள் சொல்லிச் செல்ல, தட தடக்க வரும் டவுன் பஸ்சிற்குக் காத்திருக்கும் கூட்டம் போலவே தோன்றியது.


தினமும் ஒன்றாகப் பயணிப்பதாலும் எங்க அலுவலகம் இருக்கும் அதே கட்டிடத்தில் பத்தொன்பதாவது தளத்தில் இருக்கும் அலுவலகத்தில் வேலை செய்வதாலும் பழக்கமாகி... நட்பான தமிழக நண்பரிடம் 'என்னங்க இம்புட்டுக் கூட்டம்' என்று வினாவினேன். 'நான் வந்து இருபது நிமிடமாச்சு... ஒரு பஸ் கூட வரலைங்க... என்னன்னு தெரியல' என்றார் வருத்தமாய். ஒருவேளை அதிக பனியில ஓட்ட முடியாதுன்னு நிறுத்திட்டானுங்களோ என்றதும் 'காரெல்லாம் லைட் போட்டுப் போகுது... பஸ்க்கு என்னங்க பிரச்சினை... வேற ஏதோ பிரச்சினையா இருக்கும்...' என்று சிரித்து விட்டு போனில் பேசுவதைத் தொடர்ந்தார். 

நிற்கிறோம்... நிற்கிறோம்... எந்தப் பேருந்து வரவேயில்லை.... 7.45க்கு வரும் எங்கள் பேருந்தும் வரவில்லை... கூட்டம் மட்டும் கூடிக்கொண்டே இருக்கிறது. 7.45 பேருந்தில் ஏறினாலே எட்டு மணி ஆபீசுக்கு 8.20க்குத்தான் போய் சேருவேன். இன்னைக்கு எப்ப பஸ் வந்து... இந்த பனியில் மெல்ல மெல்லப் பயணித்து... அலுவலகத்துக்கு எப்ப போய்ச் சேருவது என்ற கவலை மனசுக்குள் மெல்ல முளைக்க ஆரம்பித்தது.

டாக்ஸியில் போய் விடலாம் என்றால் ஒரு டாக்ஸி கூட அந்த நிறுத்தத்தில் நிற்கவில்லை. அபுதாபியில் காலையில் டாக்ஸி பிடித்து வேலைக்குச் செல்வது என்பது நடக்காத காரியம். எல்லா டாக்ஸியும் சிவப்பு விளக்கி எரிய பயணித்துக் கொண்டிருக்கும்... பச்சை விளக்கு எரிந்தால்தான் பயணிகள் இல்லாத டாக்ஸி என நிறுத்தலாம்... எங்களைக் கடந்த டாக்ஸிகள் எல்லாமே சிவப்பு விளக்கோடு.

மேலும் டாக்ஸிக்கான கட்டணத்தை கன்னாபின்னான்னு ஏத்தி வச்சிருக்கானுங்க... குறைந்த பட்சம் 12 திர்ஹாம்... முதல் நிறுத்தத்தில் ஏறி அடுத்த நிறுத்தத்தில் இறங்கினால் இந்த குறைந்தபட்சம் கொடுத்த ஆகவேண்டும். எங்க அலுவலகம் செல்ல எப்படியும் முப்பது திர்ஹாம் ஆகும். நானும் நண்பரும் சேர்ந்து பயணித்து ஆளுக்கு பாதி கொடுக்கலாம் என்று முடிவெடுத்தாலும் டாக்ஸி கிடைப்பதில் சிக்கல்... அப்படியே ஒரு டாக்ஸி ஒதுங்கினாலும் நிற்கிற கூட்டத்தில் நமக்கு கிடைக்குமா என்ற சந்தேகம் வேறு.


மணியும் நகர்கின்றது... மூடு பனியும் விலக மறுக்கிறது... பேருந்தும் வரவில்லை. இனி ஒருவேளை பேருந்து வந்தாலும் நமக்கு முன்னால் இருக்கிற நிறுத்தங்களில் நிறைந்து அல்லவா வரும்..?  நம்மூரு போல புட்போர்டிலும் உச்சியில் ஏன் பின்னால் இருக்கும் ஏணிப்படியிலும் ஏறியும் தொங்கியும் செல்ல இங்கு வழியில்லை. உள்ளுக்குள் நிறைந்து கதவு அடைபட, சென்சார் வேலை செய்ய ஒதுங்கி வழி கொடுத்தால்தான் வண்டி நகரும்.. இல்லையேல் டிரைவர் மைக்கில் திட்ட ஆரம்பித்து... இருக்கையில் இருப்பவர்கள் எல்லாம் ஆளாளுக்கு சப்தமிட்டு படியில் நிற்பவர் இடித்துப் புடித்து உள்ளே சற்றே தள்ளி கதவு அடைபட்டு பேருந்து நக்ருதல் என்பது ஒவ்வொரு நிறுத்தத்தில் தொடரும். என்ன செய்வது என இருவரும் யோசித்தபோது ஒரு யோசனை தோன்றியது.

அது என்னன்னா...

என்னுடன் வேலை செய்யும் எகிப்துக்காரனான சர்வே இன்சினியர் ரோட்டுக்கு அந்தப் பக்கம் தங்கியிருந்தான். எட்டு மணிக்கெல்லாம் அலுவலகத்தில் இருப்பான். மாலை அலுவலகத்தில் இருந்து வரும் போது என்னைத் தன் காரில் கூட்டி வருபவன் என்பதால் அவனுக்கு போனடித்துப் பார்க்கலாம் என்ற யோசனை எழ, அவனுக்கு போன் பண்ணினேன். எடுத்தவன் 'என்ன குமார்' என்றான். 'எங்கே இருக்கே' என்றதும் 'ஆபீஸ் போறேன்... கார்னிச் ரோட்டில் இருக்கிறேன்' என்றான். 'சரி அப்ப போ' என்றேன்... நாம இன்னைக்கு தாமதமாகப் போய்க்கலாம் என்ற நினைப்புடன்.

'என்ன விஷயம்... சும்மா சொல்லு' என்றான். விபரத்தைச் சொன்னதும் 'அங்கயே நில்லு... நான் வர்றேன்...' என்றான். 'வேணான்டா பாத்துக்கலாம்' என்றதற்கு 'நோ பிராப்ளம்... நான் வர்றேன் இரு' என்றான். அடுத்த பதினைந்தாவது நிமிடத்தில் அவனது வண்டி என்னையும் நண்பரையும் சுமந்து கொண்டு பனி மூடிய கார்னிச் ரோட்டில் மெல்லப் பயணித்தது. 

கடலும் தெரியல... மரங்களும் தெரியல... முன்னே போற கார்களும் தெரியல... என்ன சிக்னல் விழுதுன்னும் தெரியல... என்ன பனி... என்ன பனி... 

நேற்றிரவு பார்க்கிங் பைசா போட மறந்துட்டேன்... பதினொன்னு நாப்பதுக்கு அபராத பில் வச்சிட்டுப் போயிருக்கான்... 200 திர்ஹாம் தண்டம் எனப் புலம்பியபடி வண்டி ஓட்டினான். இரவு 12 மணி முதல் காலை 8 மணி கட்டணம் இல்லை என்றாலும் ரொம்ப சின்சியரா 11.40க்கு வச்சிட்டுப் போயிருக்கான் பாருங்க... 

நாங்க காரை பார்க் பண்ணிட்டு இறங்கினால் தன் காரில் வைத்திருந்த அபராத பில்லை எடுத்துக் கையில் வைத்துக் கொண்டு ''இப்ப என்ன மணியாச்சு... இப்ப வச்சிட்டுப் போயிருக்கான்' என பக்கத்தில் நின்ற பையனிடம் கத்திக் கொண்டிருந்தது ஒரு அரபிப் பாட்டி

அடடா பனிக் காலையில் பாலை அழகுதான். வெயிலில் தகிக்கும் பாலை குளிர் காலத்தில் ஊட்டி, கொடைக்கானல் போல் ஆவது விசித்திரம்தான்... 

ஏசியில்லாம் அறைக்குள் குளிர்ந்து கொண்டிருக்கிறது.

படங்கள் செல்போனில் எடுத்தது.
-'பரிவை' சே.குமார். 

வெள்ளி, 22 டிசம்பர், 2017

மனசு பேசுகிறது : பரோத்தா மத்தன் கறி

காலையில் பக்கத்துக் கட்டிடம் தெரியாத அளவுக்கு பனி மூட்டம் இருந்தது. வெள்ளிக்கிழமை என்றால் விழுந்தடித்துத் தூங்கும் அறை நண்பர்களுக்கு இடைஞ்சல் இல்லாமல் எழுந்து குளித்துக் குளிரும் பனியில் அருகிருக்கும் பூங்காவை இரண்டு மூன்று சுற்றுச் சுற்றிவிட்டு அருகிலிருக்கும் பெங்காலி கடைக்கு டீக்குடிக்கச் சென்றேன்.

இங்கு வார விடுமுறை என்றால் இரண்டு விஷயங்கள் மிகவும் முக்கியமானவை. ஒன்று தண்ணியடித்தல்... மற்றொன்று மதியம் வரை இழுத்துப் போர்த்திக் கொண்டு தூங்குதல்... நமக்கென்னவோ இரண்டிலும் நாட்டமில்லை. மற்ற நாட்களைப் போலத்தான் வார விடுமுறை தினமும்... ஆறு மணிக்கெல்லாம் எழுந்து குளித்துவிட்டோ அல்லது குளிக்காமலோ நடைப் பயிற்சிக்குக் கிளம்பிவிடுவேன். ஆறு மணிக்கு மேல் படுத்திருந்திருந்தாலும் தூங்காமல் செல்போனில் முகநூலோ வேறெதுவோ நோண்டிக் கொண்டிருக்க வேண்டும் என்பதால் கீழிறங்கிச் சென்று விடுவதுண்டு.

பெங்காலி கடையில்தான் டீ நன்றாக இருக்கும். மலையாளி கடையில் போடும் டீ நம்ம ஊரில் திருவிழாக்களில் போடப்படும் கடைகளில் அல்லது பழனி நடைப்பயணத்தில் ரோட்டோரத்தில் முளைத்திருக்கும் கடைகளில் குடிக்கும் டீ என்ற சுடுதண்ணீரை விட கேவலமாக இருக்கும் என்பதால் பெங்காலி கடை டீயே போதுமானதாய் இருக்கிறது.

சிறிய கடைதான் அது... காலை நேரத்தில் கூட்டமிருக்கும். அடிக்கடி செல்வதால் பெங்காலி நம்மைப் பார்த்ததும் சிரித்து வைப்பார். சில நேரம் 'என்ன சாப்பிடுது... சாதா சாயாவா?' அப்படின்னு மலையாளத்தில் கேட்பார். டீயும் ஒரு புரோட்டாவும் சொல்லிவிட்டு அமர்ந்தேன்.

பெங்காலி கடை புரோட்டா என்பது எண்ணெய்யில் வேக வைத்த புரோட்டா... மொறுமொறுன்னு இருக்கும். இது நம்ம விருதுநகரில் போடும் புரோட்டா போல்தான்... இந்த விருதுநகர் புரோட்டா ரொம்ப பேமஸ்... எங்க தேவகோட்டையில் உறவினர் ஒருவர் ஹோட்டல் ஆரம்பித்த போது புரோட்டாவை கல்லில் வேக வைத்து எண்ணெய்யில் பொறித்தெடுத்து விருதுநகர் புரோட்டா என்று விற்க, வரும் கூட்டமெல்லாம் அந்த புரோட்டாவுக்காகவே வந்தது.

பெங்காலிகள் பெரிய தோசைக்கல்லில் நிறைய எண்ணெய் விட்டு பெரிதாக  புரோட்டாவைத் தேய்த்துப் போட்டு நல்லா வேகவைத்துக் கொடுப்பார்கள். அவர்கள் கடையில் இந்தப் புரோட்டாவுக்கும் பாயாவுக்கும்தான் கூட்டமே. பாயா அருமையாக வைப்பார்கள் என்று சொல்வார்கள். அவர்கள் ஆட்டுக்கால் பாயா என்று வைப்பதில் கிடக்கும் பெரிய பெரிய எலும்புகளைப் பார்க்கும் போது நமக்கு அது ஆடுதானா என்ற எண்ணம் தோன்றுவதால் பாயா பக்கம் பாய் விரிப்பதில்லை.

ஒரு புரோட்டாவும் சாதா டீயும் காலை நேரத்துக்கு போதுமானதாய் இருக்கும். பெங்காலி கொண்டு வந்து வைத்த புரோட்டாவை பேப்பரில் சுற்றிச் சுற்றி ஒரளவு எண்ணெய் நீக்கி, சூடாய் கொஞ்சம் பிய்த்து வாய்க்குள் வைத்து டீயை ஒரு உறிஞ்சு உறிஞ்சிய போது எதிரே ஒரு பெங்காலி வந்து உட்கார்ந்தான். கொஞ்ச வயசுக்காரன்தான். சில பெங்காலிகள் சாப்பிடுவதைப் பார்த்தாலே நமக்கு சாப்பிடத் தோன்றாது என்பதையும் சொல்லத்தான் வேண்டும்

எதிரே அமர்ந்தவன் மூன்று புரோட்டாவும் கடலைக்கறியும் கேட்டான். கடைக்கார பெங்காலி மீண்டும் மீண்டும் மூன்றா என்று கேட்டார்... அவரின் கேள்வியில் தொக்கி நின்றது வியப்பா என்பது குறித்து ஆராயவில்லை. அவனும் ஆமா என்று சொல்லி ஆராய விடவில்லை. மூன்று புரோட்டாவும் கடலைக்கறியும் வர, பிய்த்துச் சுருட்டி வாய்க்குள் வைத்தான். 

ஒருபக்கம் புரோட்டாவை வேக வைத்து அடுக்கிக் கொண்டே இருக்க, மறுபக்கம் விற்றுக் கொண்டே இருக்கிறது. இதில் எதற்கு மொத்தமாக வாங்கி அடுக்க வேண்டும். ஊரில் சாப்பாடு போடும் போது அள்ளி வைத்துக் கொள்பவர்களை 'எதுக்கு அவக்களிஞ்ச மாதிரி வச்சிக்கிறே.... கொஞ்சமா வச்சிச் சாப்பிடு... சட்டிக்குள்ளதான் இருக்கும்... எங்கயும் போயிடாது' என்பார்கள். அப்படி ஒவ்வொன்றாக சூடாக வாங்கிச் சாப்பிட்டிருக்கலாம். அவன் விற்றுத் தீர்ந்து விடும் என்று நினைத்தானோ என்னவோ யாருக்குத் தெரியும். அங்கு இருந்தோர்... வருவோர்... போவோர் கண்கள் எல்லாம் அவன் தட்டின் மீதுதான் என்பதை அறியாமலோ அறிந்தோ இருந்திருக்கலாம் அவன்.

சிறிது நேரத்தில் நாலு பிலிப்பைனிகள் வரும்போதே பாய் மத்தன் கறி, பரோத்தான்னு கத்திக் கொண்டே வந்தார்கள். நால்வரும் அமர, மீண்டும் ஒருவன் மத்தன் கறி, பரோத்தா என்று ஆர்டர் சொல்ல ஆரம்பித்தான். பிளைன் இருக்கா என்று ஒருவன் கேட்டான்... பெங்காலிக்கு மட்டுமல்ல அங்கிருந்தவர்களுக்கும் என்ன என்பது புரியவில்லை. மறுபடியும் அவனிடமிருந்து பிளைன் இருக்கா... இப்பவும் புரியலை... உடனே தலையில் கைவைத்து பிளைன்... பிளைன்... என்று விளக்கமாய் கேட்க, இப்ப பெங்காலிக்கு மட்டுமல்ல எல்லாருக்குமே புரிந்தது அது பிளைன் அல்ல பிரைன் என்பதாய்.

பிரைன் இல்லை என்றார் பெங்காலி... யாருக்கு...? என்று கேட்கும் ஆவல் வாய் வரை வந்து நின்றது. நமக்கு வாய்தான் எதிரியே...பெங்காலி சூப்பர் பாயா... பாயா... வேணுமா என்றார்  உடனே பிலிப்பைனி ஒருவன் காலைத் தொட்டுக்காட்டி இதுவா என்றான். ஆமா எனத் தலையாட்ட வேண்டாம் என்று சொல்லி, தால் கறி, மத்தன் கறி, பரோத்தா என ஆர்டர் அடுக்கி முடிக்க, அதுவரை காத்திருந்தவன் போல ஒரு பிலிப்பைனி மூணு மத்தன் கறி எனக்கு ஒரு பாயா என்றான். ஆர்டர் சொல்லப்பட்டது. கதபுத என்ற பேச்சுக்களோடு அதன் வருகைக்காக காத்திருந்தார்கள்.

நான் எழுந்து டீக்கும் ஒரு புரோட்டாவுக்கும் இரண்டு திர்ஹாம்களை பெங்காலியிடம் கொடுக்க அவர் என்னைப் பார்த்துச் சிரித்தார். அவரின் சிரிப்பில் மூணு புரோட்டாக்காரனும் நாலு பரோத்தாக்காரர்களும் எனக்குத் தெரிந்தார்கள். அவருக்குள் அப்படித்தானா என்பதை எப்படி அறிவது..? கண்ணாடிக் கதவைத் தள்ளிக் கொண்டு வெளியே வந்தேன்.

மீனை வாங்கி சுடு தண்ணியில் வேகவைத்துச் சாப்பிடும் பிலிப்பைனிகள் இப்ப மசாலா அயிட்டத்தை அதுவும் நல்ல உரைப்பாக சாப்பிடப் பழகி விட்டார்கள். பிரியாணி வாங்கினால் ஸ்பைசியாகத்தான் வாங்கிச் சாப்பிடுகிறார்கள். 

பெங்காலி கடை டீயும் புரோட்டாவும் நம்மைப் போல் அவர்களுக்கும் பிடித்து விட்டது போல.

கொஞ்சம் பனி விலக, சில்லென்ற காற்றை உடலில் வாங்கியபடி அறைக்கு வந்தால் குறட்டைச் சத்தம், மழை நேரத்தில் எங்க வீட்டைச் சுற்றிக் கிடக்கும் தண்ணீரில் கத்தும் தவளைகள் போல ஆர்ப்பரிக்க அறைக்குள் இன்னும் விடியவில்லை. மணி அதிகமில்லை பத்துத்தானே ஆகிறது.

நான் எனது கட்டிலில் அமர்ந்து போனில் முகநூலில் மூழ்கினேன்... 

அமீரக வாழ்க்கையில் ஒரு விடுமுறை நாள் மெல்ல நகர ஆரம்பிக்கிறது... மதியம் மீன் பிரியாணி என்ற நினைப்போடு.
-'பரிவை; சே.குமார். 

சனி, 16 டிசம்பர், 2017

மனசின் பக்கம் : மகிழ்வும் வருத்தமும் மனசுக்குள்...

பிரதிலிபி 'ஓடி விளையாடு பாப்பா' போட்டியில் கலந்து கொண்ட கட்டுரைக்கு வாசகர் பார்வை அவ்வளவாக கிடைக்கவில்லை என்ற போதிலும் 'தலைவாழை' என்ற சிறுகதை வாசகர் பார்வையில் இரண்டாம் இடத்தில். தேர்வு செய்யப்பட்ட கதை தவிர்த்து வாசகர் பார்வையில் முதலில் வரும் சிறுகதைக்கும் பரிசு உண்டென்றாலும் அதை மதியழகன் என்ற நண்பர் தட்டிச் சென்றிருக்கிறார். அவருக்கு வாழ்த்துக்கள். அதே நேரம் கதைகளை ஒரு பிரபலம் வாசித்து அதில் ஒரு சிறந்த கதையாக எட்வின் லாரன்ஸ்-ன் கதையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். அவருக்கும் வாழ்த்துக்கள். தேர்ந்தெடுத்திருக்கிறார். குறிப்பிடத்தக்க கதையாக கீதா மதிவாணன் அக்காவின் கதையைச் சொல்லியிருக்கிறார். அக்காவுக்கும் வாழ்த்துக்கள். 


கதைகளை வாசித்த பிரபலம் எல்லாக் கதைகளுமே தட்டையாக எழுதப்பட்டிருக்கின்றன என்று சொல்லியிருக்கிறார். அது என்ன தட்டை என்பது புரியவில்லை. எழுதியவர்களில் வலையுலகப் பிரபல, பல புத்தகங்கள் போட்ட எழுத்தாளர்களும் உண்டு. அவர்களும் நம்மைப் போல தட்டையாகத்தான் எழுதியிருப்பார்கள் போலும். எது எப்படியோ வாசகர் பார்வையில் எனது கதைகளுக்கு ஒரு மதிப்பு மிகு வாக்கு இருப்பது மகிழ்ச்சியே... தற்போது ஊர் சுற்றிப் புராணம் என்றொரு கட்டுரைப் போட்டி அறிவித்திருக்கிறார்கள். முடிந்தவர்கள் டிசம்பர்-26க்குள் எழுதி அனுப்புங்கள். தொடர்ந்து போட்டிகள் அறிவிக்கும் பிரதிலிபிக்கு வாழ்த்துக்கள்.

'டேக் ஆப்' என்ற மலையாளப் படம் ஒன்றை ரொம்ப நாளாக பார்க்க வேண்டும் என்று நினைத்து ஒரு வழியாக கடந்த வாரத்தில் பார்த்தும் விட்டேன். அருமையானதொரு படம்... ஈரக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பிடம் மாட்டிக் கொண்டு இருபது நாட்களுக்குப் பிறகு பத்திரமாக மீட்கப்பட்ட கேரள நர்சுகளின் உண்மைக் கதையை திரைக்கதை ஆக்கியிருக்கிறார்கள். நாயகனாக குஞ்சாக்கோ போபன், நாயகியாக பார்வதி... இந்திய தூதரக அதிகாரியாக பஹத் பாசில். சம்பளம் அதிகம் கிடைக்கும் என்பதால் ஈராக் சென்று தீவிரவாதிகளிடம் மாட்டிக் கொள்ளும் பார்வதி உள்ளிட்ட நர்சுகள் படும் அவஸ்தை... விவாகரத்துக்குப் பின்னர் தன்னைக் காதலித்து கல்யாணம் செய்து கொண்ட குஞ்சாக்கோவை தீவிரவாதிகளிடமிருந்து மீட்டுத்தரச் சொல்லி கர்ப்பிணியான பார்வதி அலையும் போது படும் அவஸ்தை... எங்கே கர்ப்பிணியான தன்னை தனது மகன் வெறுத்து விடுவானோ என்று வயிற்றை மறைத்துப் படும் பாடு என படம் முழுவதும் பார்வதி சிக்ஸர் அடித்திருக்கிறார். பாதிக்கு மேல் வந்தாலும் பஹத் மனதில் நிற்கிறார். தீவிரவாதியிடம் மனிதாபிமானத்துடன் பேசும் குஞ்சாக்கோவும் நிறைவாய்... முடிந்தால் டேக் ஆப் பாருங்கள்.

Related image

ண்பரின் வற்புறுத்தலில் இருபத்து எட்டு வருசத்துக்கு முன்னர், அதாவது ஸ்கூல் படிக்கும் போது வந்த மலையாளப் படம் ஒன்றை யூடிப் வழியாகப் பார்த்தேன். திலகனின் கலக்கலான நடிப்பில் 'பெரும்தச்சன்'. என்ன நடிப்புய்யா அந்தாளிடம்... சத்ரியனில் பன்னீர்ச் செல்வம் நீ பழைய பன்னீர் செல்வமா வரணும்.... வருவேன்னு சொல்லும் அந்த வாசகம் ஞாபகத்துக்கு வர, இதிலோ ஆசாரியாய்... பெருந்தச்சனாய்... கலக்கியிருக்கிறார். அவரின் மகனாக பிரசாந்த்... அவர் மலையாளத்தில் நடித்த ஒரே படம் என்றார் நண்பர். வைகாசி பொறந்தாச்சு வந்த சமயத்தில் வந்த படம் என்பதால் குமரேசனாக தெரிந்தாலும் அவரின் நடிப்புத்தான் நமக்குத் தெரியுமே... பெரிதாய் சொல்ல ஒன்றுமில்லை. கேரள நாட்டார் கதைகளில் புகழ் பெற்ற பெயரான ராமன் பெரும்தச்சன் கதாபாத்திரத்தை ஏற்று நடித்த திலகன் படத்தை தூக்கி நிறுத்த, அவருக்குப் பக்க துணையாக தம்புரானாக நெடுமுடி வேணு. மிக நல்ல படம் விருப்பமிருந்தால் யூடிப்பில் இருக்கிறது... பாருங்கள்.

Image result for பெரும்தச்சன் மலையாளம்

ற்போது முள் மீது நடப்பது போன்ற நிலையில்தான் மனசு இருக்கிறது. பல பிரச்சினைகள் ஒன்றை சூழ்ந்து கொண்டு ஆட்டிப் படைக்கின்றன. எப்போது மீள்வது..? எப்படி மீள்வது..? என்ற யோசனையிலேயே கழிகிறது நாட்கள். எதிலும் ஒட்டுதல் இல்லை... பலரின் பதிவுகளைப் படித்தாலும் கூகிள் குரோம் வழி கருத்து இடமுடியாது. விண்டோஸ் எட்ஸ் வழியாக கருத்து இடலாம் என்றாலும் நோட்பேடிலோ வேர்டிலோ டைப் செய்து காப்பி பண்ணித்தான் இட முடிகிறது. அதானால் வாசிப்பதுடன் சரி... எப்போதேனும்தான் கருத்து இடத் தோன்றுகிறது. அலுவலகத்தில் தற்போது பார்க்கும் புராஜெக்ட்டில் பயங்கர பிரச்சினை சுழன்று கொண்டிருக்கிறது. புராஜெக்ட் மேனேஜரை டம்மி ஆக்கி இன்னொரு தில்லிக்காரனை மேனேஜராக்கியிருக்கிறார்கள். அவனோ நல்ல பேர் வாங்க வேண்டும் என்பதால் நம்மை பாடாய் படுத்துகிறான். எனவே அங்கும் இணையத்தை திறப்பதென்பது முடியாததாகிவிட்டது. பார்ப்போம் பிரச்சினை மேகம் எப்போது சூழ்ந்திருக்காது அல்லவா..? ஒன்று அடித்துப் பெய்ய வேண்டும்... இல்லையேல் கலைந்து செல்ல வேண்டும். எது எப்படியோ என்றாவது ஒருநாள் நிர்மூலமான வெண்மேகம் தெரியத்தானே வேண்டும்.

நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு சிறுகதை எழுதும் எண்ணம் தோன்றியது. கதையில் பல நாள் பார்க்காத நண்பனின் நினைவுடன் எழுபவன், அவனைத் தேடிச் செல்ல நினைக்கிறான். கல்லூரியில் நண்பர்கள் ஆட்டோகிராப் போட்டுக் கொடுத்த டைரியை எடுத்து பக்கங்களை நகர்த்தும் போது அவனின் நினைவில் நண்பர்கள் குறித்து எழுபவைகளைக் கதையாக்கி, முடிவில் நண்பனைச் சந்தித்தானா என்பதைச் சொல்லி முடித்திருக்கிறேன். நீண்ட நாட்களுக்குப் பிறகு நிறைவாய் எழுதியது போல் ஒரு திருப்தி... கதையில் சில வரிகள் இங்கே...

'என்னோட அலமாரியைத் திறந்து கல்லூரியில் நண்பர்கள் எழுதிக் கொடுத்த ஆட்டோகிராப் டைரியை எடுத்து மெல்லப் பக்கங்களை நகர்த்தினேன். விதவிதமான கையெழுத்தில்... கட்டுரையாகவும் கவிதையாகவும் காவியமாகவும் எழுதியிருந்தார்கள்.

பெண்களின் ஆட்டோகிராப் பார்க்கும் போது இவர்கள் எல்லாம் இப்ப எங்கே... எப்படி இருப்பார்கள்..? என்று மனசுக்குள் தோன்ற இருபது வருசத்துக்கு முன்னாடி தாவணியில் அழகுச் சிட்டுக்களாய் பார்த்த பெண்கள் எல்லாம் இந்த இருபது ஆண்டுகளில் குடும்பம் குழந்தைகள் என எத்தனை மாற்றங்களைப் பெற்றிருப்பார்கள் என்று நினைத்துச் சிரித்துக் கொண்டேன்.

மெல்ல பக்கங்களைப் புரட்டி வர, செமஸ்டரில் பேப்பர் காட்டவில்லை என்ற கோபத்தில் ராஜூ எழுதியிருந்த 'நல்லவனாய் இருந்தால் நடுத்தெருவில்தான் நிற்பாய்' என்ற வரிகளைப் படித்துச் சிரித்துக் கொண்டேன். நல்லவனாய் இருப்பதால் எத்தனை சிக்கல்களை வாழ்வில் எதிர்க்கொள்ள வேண்டியிருந்தது... வேண்டியிருக்கிறது. ராஜூ தீர்க்கதரிசிதான்... சரியாகத்தான் சொல்லியிருக்கிறான். ஆமா ராஜூ இப்ப எங்க இருப்பான்...? எப்படியிருப்பான்...?'

பெரியம்மாவின் மகனான அண்ணன் ஒருவர் இன்று மரணித்து இருக்கிறார். மரணிக்கும் வயதில்லை என்றாலும் நல்ல மனிதரான அவரை குடி கொண்டு போய் விட்டது. மனசுக்கு வருத்தமான செய்தி... உடல் நலம் கருதியேனும் குடியை விட்டுத் தொலைத்திருக்கலாம்... என்ன செய்வது... தலையில் எழுதியதை மாற்றவா முடியும்..?

அவரின் ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறேன். 

மனசின் பக்கம் தொடர்ந்து பேசும்.
-'பரிவை' சே.குமார். 

செவ்வாய், 12 டிசம்பர், 2017

வாசிப்பனுபவம் : சிவகாமியின் சபதம்

Image result for சிவகாமியின் சபதம்
சிவகாமியின் சபதம்...

வாசிக்க ஆரம்பித்தால் அதனுள் பயணிக்க வைக்கும் எழுத்துக்கு சொந்தக்காரர் கல்கி, அவரின் சுத்தத் தமிழ் சில நேரம் யோசிக்க வைக்கும்... சில நேரம் வியக்க வைக்கும்... பல நேரம் அந்த எழுத்தை விரும்ப வைக்கும்... அந்த விருப்பமே நாவலைத் தொடர்ந்து படிக்கும் ஆவலைத் தூண்டும். அப்படியானதொரு ஆவலுடன் கிடைக்கும் நேரமெல்லாம் வாசித்து முடித்த நாவல் இது.

கல்கியில் பனிரெண்டு ஆண்டுகள் தொடராக வந்திருக்கிறது என்பதை அறிந்தபோது ஆச்சர்யமாக இருந்தது. 

முதலில் பார்த்திபன் கனவு வாசிக்கத்தான் ஆசையிருந்தது... நண்பர் ஒருவர் சிவகாமியின் சபதம் படித்துவிட்டு பின்னர் பார்த்திபன் கனவு வாசித்தாய் என்றால் கதை தொடர்ச்சியாய் பயணிப்பது போல் இருக்கும். அதில் ஒரு சுவராஸ்யம் இருக்கும் என்றார். அதுவும் உண்மைதான். முதலாம் நரசிம்மவர்மப் பல்லவன் இதில் இளவரசனாக... பார்த்திபன் கனவில் நடுத்தர வயது மனிதனாக... பேரரசனாக.

ஒரு பெண்ணின் சபதத்தை முன்னிறுத்து நகரும் கதை இது... சபதம் கதையின் பாதிக்கு மேல்தான் இடப்படுகிறது.... அதுவரை மென்மையான காதலும் முதலாம் மகேந்திரவர்மனின் அறிவுக் கூர்மையையும் கல் சிற்பத்தின் மீதான காதலையும் சொல்வதுடன் சிவகாமியின் நடனம், இளவரசருடனான காதல் என மற்றொரு பகுதியையும் சொல்லிச் செல்கிறார்.

படிப்பறிவில்லாத பரஞ்சோதி.... இப்படியாகத்தான் முதல் அத்தியாயத்தில் அறியப்படுகிறார் திருநாவுக்கரசரை சந்தித்து கல்வி பயில காஞ்சி நோக்கிச் செல்லும் பரஞ்சோதி... பின்னாளில் இவரே  நரசிம்மவர்மனின் நம்பிக்கைக்குரிய சேனாதிபதியாகவும், போரை வெறுத்து சிவனடி வீழ்ந்து சிறுதொண்டராகவும் மாறுகிறார்.

காஞ்சி செல்லும் பரஞ்சோதி, யாரென்று அறியாமலே ஆயனச் சிற்பியையும் அவரின் மகளும் நடனக்கலையில் சிறந்தவளுமான சிவகாமியையும் யானையிடமிருந்து வேலெறிந்து காப்பாற்றுகிறார். அதற்காக சிறை பிடிக்கப்பட, அச்சிறையிலிருந்து காஞ்சிக்கு வரும்போது தன்னை வழியில் ஒரு ஆபத்தில் இருந்து காப்பாற்றி, சேர்ந்து பயணித்த புத்த பிஷூவான நாகநந்தி அடிகளால் காப்பாற்றப்படுகிறார். தன்னை எதற்காக சிறையில் அடைத்தார்கள் என்பதை பின்னாளில் அறிந்தும் கொள்கிறார்... அது நாகநந்தி சொன்னதற்கு நேர்மாறானது. 

நாகநந்தி அடிகளுடன் ஆயனச் சிற்பி வீட்டிற்குச் செல்லும் பரஞ்சோதி, அஜந்தா குகையில் வரையப்பட்ட ஓவியங்கள் காலகாலமாக கலர் மங்காமல் அழியாமல் இருப்பதைப் பற்றி அறிந்து கொள்ள ஆவல் கொண்ட ஆயனருக்காக, ரகசியம் அறியக் கிளம்புகிறார். திருநாவுக்கரசர் ஸ்தல யாத்திரை சென்றிருக்கிறார் என்பதாலே இவ்வேலையைச் செய்ய சம்மதிக்கிறார். அவரிடம் அஜந்தா ரகசியம் குறித்து அறிந்து கொள்ள ஓலை கொடுத்து அனுப்பப்படுகிறது. அந்த ஓலை பல்லவ சாம்ராஜ்யத்துக்கு எதிரானது என்பதை அறியாமல் பயணிக்கிறார்கள்.

இந்தச் சமயத்தில் காஞ்சியின் பெருமையைக் கேள்விப்பட்ட சாளுக்கிய மன்னனான இரண்டாம் புலிகேசி படை திரட்டிக் கிளம்பி வருகிறான். மிகப்பெரிய படைபலம் கொண்டவனை தன் ஆட்சிக்காலத்தில் போர்க்களமே செல்லாத சிறிய படைப்பிரிவுகளைக் கொண்ட பல்லவ அரசு எப்படி சாமாளிக்கும் என்பதாலும் எப்படியும் காஞ்சி சாளுக்கியரின் கையில் சென்று விடும் என்பதாலும் அதைத் சிலகாலமேனும் தடுத்து காஞ்சியையாவது காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் அதற்கான முயற்சியில் இறங்குகிறார் மன்னர் மகேந்திரவர்மன்.

சிவகாமியும் இளவரசனும் காதலிப்பது பிடிக்காத மன்னர் அவர்களைப் பிரிக்க சில சதிகளைச் செய்கிறார். அப்படிப்பட்ட சதியில் ஒன்றுதான் தான் போருக்குச் செல்லும் போது காஞ்சிக் கோட்டையைக் காப்பாற்றும் பொறுப்பை நரசிம்மனிடம் ஒப்படைத்தல். இதன் மூலம் காதலரின் சந்திப்பு துண்டிக்கப்படுகிறது.

பரஞ்சோதி விந்தியமலை நோக்கி பயணிக்க, அவருடன் வந்து சேரும் வஜ்ரபாஹூ என்னும் வழிப்போக்கன், அவருக்குத் தெரியாமல் ஓலையை மாற்றி வைத்து விட்டு பிரிந்து செல்ல, சாளுக்கியரால் சிறை பிடிக்கப்பட்ட பரஞ்சோதியை புலிகேசி முன்பு கொண்டு செல்ல, அங்கு தமிழ் பேசும் மனிதனாக வரும் வஜ்ரபாஹூ ஓலைச் செய்திகளை மாற்றிச் சொல்லி பரஞ்சோதியைக் காப்பாற்றுகிறார். பின்னாளில்தான் தெரிகிறது அந்த வஜ்ரபாஹூ யார் என்பது... அது தெரியும் போது வியப்புக்குள்ளாகிறார்.

சிவகாமி காதலனைப் பார்க்க முடியாமல் தவிக்கிறாள். தன்னைப் பார்க்க வராமல் இருக்கும் இளவரசன் மீது கடுங்கோபம் கொள்கிறாள்.

தனது தோழி கமலியைக் காண அவள் இல்லம் செல்கிறாள். அவளின் கணவன் கண்ணன்தான் நரசிம்மரின் ரத சாரதி. அவர்கள் மூலம் சில விபரங்களை அறிகிறாள். இளவரசனைச் சந்திக்கும் வாய்ப்பு இரண்டொரு தரம் கிடைத்தாலும் பேசமுடியாமல் தவிக்கிறாள்.

படை திரட்டி வந்த புலிகேசியை  தடுத்து நிறுத்தி வைத்திருக்கிறார் மகேந்திரர்... அவருக்கு உறுதுணையாய்  இருக்கிறார் அவரின் படைத்தலைவரான பரஞ்சோதி. மன்னன் இல்லாத காஞ்சியைத் தாக்க பாண்டியரும், சாளுக்கியருக்கு உதவ நினைக்கும் சிற்றரசனான துர்வீநீதனும் படையுடன் வருகிறார்கள்.

தனக்குத் துணைக்குத் துணையாய் நின்ற பரஞ்சோதியை நரசிம்மனுக்கு உதவ, காஞ்சிக் கோட்டையைப் பலப்படுத்த அனுப்பி வைக்கிறார் மகேந்திரர். காஞ்சிக் கோட்டை மதில்களையும் கதவுகளையும் எதிரி அவ்வளவு சீக்கிரம் உடைத்து உள் நுழையாத வண்ணம் நரசிம்மர் செய்திருக்கும் ஏற்பாடுகளைப் பார்த்து பரஞ்சோதிக்கு வியப்பாய் இருக்கிறது.

துர்விநீசன் மீது படையெடுத்துச் செல்லும்படி தனது அன்புக்கு பாத்திரமான ஒற்றன் சத்ருக்னன் மூலமாக ஓலை அனுப்புகிறார் மகேந்திரர். சிவகாமியின் பிரிவு கொடுத்த வலியை போக்கும் மருந்தாய் வந்த பரஞ்சோதியாருடன் போருக்கு கிளம்புகிறார் நரசிம்மர்.

இதற்கிடையே நாகநந்தியால் மனம் கலைக்கப்பட்ட சிவகாமி, நாட்டியப் பேரொளி ஆகும் ஆசையில் அவருடன் கிளம்பிச் செல்ல, எதிரே படைகள் வருவதைப் பார்த்து ஒரு கிராமத்தில் தங்குகிறார்கள். துர்விநீசன் படை புறமுதுக்கிட்டு அக்கிராமத்தின் வழி ஓட, அவனை விரட்டி வரும் நரசிம்மரும் பரஞ்சோதியும் சிவகாமியைப் பார்த்து விடுகிறார்கள். இருப்பினும் அந்தச் சூழலில் அவளுடன் ஆற அமர காதல் பேசமுடியாமல் கிளம்பிச் செல்கிறார்கள்.

பெரும் மழை பெய்கிறது... நாகநந்தியால் ஏரி உடைக்கப்பட, வெள்ளம் கிராமத்துக்குள் வருகிறது. அங்கு தத்தளிக்கும் சிவகாமியையும் ஆயனரையும் நரசிம்மர் வந்து காப்பாற்றுகிறார். துர்வநீசன் கைது செய்யப்பட்ட அதே வேளையில் நாகநந்திக்கும் வலை விரிக்கப்பட, அதில் மாட்டிக்கொள்ளும் நாகநந்தியும் சிறையிலிடப்படுகிறார்.

காஞ்சியை முற்றுகையிட்டு காரியம் ஆகவில்லை என்பதாலும் தங்களுக்கு உணவுப் பற்றாக்குறை வந்துவிட்டபடியாலும் பாண்டியனுடன் நட்பு பாராட்டுவது போல் பாராட்டி உணவைப் பெறும் புலிகேசி, மகேந்திரருக்கு சமாதானத் தூது விடுகிறான். அவரும் ஏற்றுக் கொள்கிறார்.

புலிகேசியின் காஞ்சி விஜயத்திற்கு  முன் நரசிம்மரை பாண்டியர் மீது போர் தொடுக்க அனுப்பி வைத்து விடுகிறார் மதியூகியான மகேந்திரர். காஞ்சி வரும் புலிகேசி நரசிம்மர் எங்கு சென்றார் என்பதை அறிய ஆவல் கொள்கிறார்.  சபையில் நடமான அழைத்து வரப்படும் சிவகாமியை ரசிக்கிறார்.  நாகநந்தி சிறையில் இருப்பதையும் அறிகிறார். இறுதியில் விடைபெற்றுச் செல்லும் போது வஜ்ரபாஹூ யாரென்பதையும் மகேந்திரனால் அறியும் புலிகேசியின் மனதுக்குள் நெருப்பு கனன்று எரிய ஆரம்பிக்கிறது.

கமலி வீடு செல்லும் சிவகாமிக்கு மன்னர் தங்களை ஏதோ திட்டத்துடன் கோட்டைக்குள் வைத்திருப்பதாகத் தோன்ற, கமலி உதவியுடன் சுரங்கப்பாதை வழியாக ஆயனருடன் தப்பி வெளியில் வர சாளுக்கிய வீரர்களால் சிறை பிடிக்கப்படுகிறார்கள். 

சிற்பிகளை காலை வெட்ட வேண்டும் என்ற புலிகேசியின் ஆணைக்கிணங்க, ஆயனருக்கு தண்டனை நிறைவேற்றப்பட இருக்கும் சமயத்தில் மன்னனால் விடுவிக்கப்பட்ட நாகநந்தியால் காப்பாற்றப்பட, சிவகாமி மட்டும் கைதியாக வாதாபி செல்கிறாள். மலையிலிருந்து தள்ளிவிடப்பட்ட ஆயனர் காலொடிந்து வீட்டில் கிடக்கிறார்.

படைகள் திரும்புவதைப் போல் பாசாங்கு செய்து கொஞ்சப் பேருடன் காஞ்சி மீது தாக்குதல் நடத்தப்பட, அந்தத் தாக்குதலில் மகேந்திரன் காயப்படுகிறார். 

பாண்டியனை வென்று திரும்பும் நரசிம்மர், சிவகாமியை சிறை மீட்கும் பொருட்டு வாதாபி சென்று வெறுங்கையுடன் திரும்புகிறார். அதற்குக் காரணம் என்னவென்றால் சிவகாமியின் சபதம்... ஆம் வாதாபியை தீக்கிரையாக்கி... புலிகேசியை கொன்றால்தான் நான் சிறையிலிருந்து வருவேன் என்று சபதம் செய்திருக்கிறாள் சிவகாமி... தன் நாட்டு மக்கள் கைதியாய் படும் துன்பத்தின் காரணமாகவும் புலிகேசியை அவமதித்த குற்றத்துக்காக தான் தெருவில் நடனமாட நேர்ந்த காரணத்தாலும் இவ்வாறு சபதம் செய்கிறாள்.

சிவகாமியை காப்பாற்ற வேண்டியது நம் கடமை என்றும் சாகும் முன்னர் மகனின் திருமணத்தைப் பார்க்க வேண்டும் என்றும் மகேந்திரர் சொல்ல, அதன்படி பாண்டியனின் மகளான வானமாதேவியை மணம் முடித்துக் கொள்கிறார் நரசிம்மர்... அவரின் காதல் இத்துடன் முற்றுப் பெறுகிறது.

காலம் மெல்ல நகர்கிறது... மகேந்திரரின் மரணத்துக்குப் பிறகு நரசிம்மர் மன்னராகிறார். இரண்டு குழந்தைகளுக்கு தந்தை ஆகிறார். ஆயனச் சிற்பி வீட்டுக்கும் அடிக்கடி குழந்தைகளுடன் சென்று வருகிறார்.

ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு பெரும் படை திரட்டி, நண்பனும் சேனாதிபதியுமான பரஞ்சோதியுடன் வாதாபி நோக்கி பயணிக்கிறார்.

நாகநந்திக்கு சிவகாமி மீதான காதல் இன்னும் கூடுதலாகிறது.

புலிகேசிக்கும் நாகநந்திக்கும் இடையில் சிறிதாய் ஏற்பட்ட பிரச்சினை முற்றி, அஜந்தா கலாச்சார விழாவுக்கு செல்லும் இடத்தில் வெடிக்கிறது.

பல்லவர் வாதாபி நோக்கி வருவதைச் சொல்லாமல் மறைத்த நாகநந்தியை விரட்டிவிடுகிறார் புலிகேசி.

வாதாபி நோக்கி நரசிம்மன்...

அஜந்தாவில் புலிகேசி...

அடிபட்ட புலியாய் நாகநந்தி....

காதலன் வருவான் என் சபதம் நிறைவேறும் என சிவகாமி...

யானைகளுக்கு வித்தியாசமாய் பயிற்சி அளித்து நரசிம்மருடன் போர்க்களம் வரும் இலங்கை இளவரசன்...

உதவிக்கு வருகிறேன் என்று சொல்லி காஞ்சி வரை வந்து அக்கா வீட்டில் தங்கியிருக்கும் பாண்டியன்...

இப்படி நிறைய மனிதர்களுடன் நகரும் கதையில் நரசிம்மன் வெற்றிவாகை சூடினானா...? 

சிவகாமியின் காதல் என்னாச்சு...? 

புலிகேசியின் மரணம் எப்படி நிகழ்ந்தது...? 

நாகநந்தி என்ன ஆனார்...? 

வாதாபியில் ரிஷபச் சின்னம் மாற்றப்பட்ட சிங்கக்கொடி பறந்ததா...? என்பதை சுவராஸ்யமாய்ச் சொல்லியிருக்கிறார் ஆசிரியர்.

சபதத்தைத் தொடர்ந்து கனவில் பயணிக்கிறேன்... சபதத்தில் மகேந்திரர் பல வேஷங்கள் போட்டு நாட்டைக் காத்தது போல் கனவில் மாமல்லனான நரசிம்மர், பல வேஷம் போட்டு சோழ தேசத்தைக் காக்கிறார்... சுவராஸ்யமாய் மாமல்லர், குந்தவி, விக்கிரமன், பொன்னன், வள்ளி, மாரப்பபூபதி என கதை பயணிக்கிறது முன்னூறு பக்கங்கள் கடந்து விட்டேன்.

அப்புறம்... சிவகாமி சபதத்தை வாசித்த வகையில்

கதையில் நம்மைக் கவர்வது மகேந்திரரா... நரசிம்மரா...?

நம் மனம் பயணிப்பது பரஞ்சோதியுடனா... நரசிம்மருடனா...?

சிவகாமியின் காதல்...

நரசிம்மனும் சிவகாமியும்...

இப்படி நிறையத் தலைப்பில் நேரம் கிடைக்கும் போது எழுதலாம் என்று தோன்றுகிறது.... பார்க்கலாம்.

மிகப்பெரிய கதை... கதைச் சுருக்கமாய் கொடுப்பதென்பது மிகவும் கடினமே...  பதிவின் நீளம் கருதி முக்கால்வாசி கதைக்குள்தான் பயணித்திருக்கிறேன்.

வாசிப்பில் அலுப்பு ஏற்படாத கதை...

முடிந்தால் வாசிக்காதவர்கள் கண்டிப்பாக வாசியுங்கள்.

-'பரிவை' சே.குமார்.

செவ்வாய், 5 டிசம்பர், 2017

திருமண ஒத்திகைக்கு என் அணிந்துரை

பாக்யாவில் வெளிவந்த குடந்தை ஆர்.வி.சரவணன் அண்ணன் அவர்களின் தொடர்கதையான 'திருமண ஒத்திகை', அவரின் இரண்டாவது நாவலாக சமீபத்தில் இயக்குநர் கே.பாக்யராஜ் அவர்களால் வெளியீட்டு விழாக் கண்டது. அந்த நாவலுக்கு நான் எழுதிய அணிந்துரையை இங்கு பகிர்ந்திருக்கிறேன். வாசித்து தங்கள் கருத்தைச் சொல்லுங்க.

****

ர் பெயரை தன் பெயரோடு இணைத்துக் கொண்டிருக்கும் மனிதர்களோடு நட்பு கொள்வதில் எனக்கு எப்போதுமே அலாதி பிரியமுண்டு. நான் இங்குதான் பிறந்தேன்... இப்படித்தான் வளர்ந்தேன் என்று சொல்பவர்கள் மீது தானாகவே அன்பு ஒட்டி கொள்கிறது. அப்படித்தான் குடந்தையூர் தளத்தில் எழுதி வரும் ஆர்.வி.சரவணன் அண்ணனும் எனக்குள் ஒட்டிக் கொண்டார். 

உன்னோட எழுத்தை ஆயிரம் பேர் வாசிக்கலைன்னு நினைக்காதே... வாசிக்கிற பத்துப் பேரை அது தனக்குள்ள இழுக்குதா... அதுதான் எழுத்து... அப்படியான எழுத்து  உங்கிட்ட இருக்கு... அந்த எழுத்து எப்பவும் வாழும்... அதனால புகழுக்காக எழுதாமல் ஆத்ம திருப்திக்காக எழுது' அப்படின்னு என் நண்பன் சொல்லுவான். அப்படியான எழுத்துக்கு சொந்தக்கார்ர் இவர். ஒரு சிறுகதையையோ அல்லது நாவலையோ எழுதும் போது அதன் காட்சிகளை திரைக்கதையாக விரிக்கும் தனித்தன்மையை இவரின் எழுத்தில் பார்க்க முடியும்.

கதைக்குத் தேவையான சில கதாபாத்திரங்களை மட்டும் வைத்து எழுதப்படும் கதைகளே சிறப்பாய் அமையும். கதாபாத்திரங்கள் பேசுவதாய் அமைவதைவிட முக்கிய கதாபாத்திரத்தைச் சுற்றி கதையை நகர்த்தி, நிறைய இடங்களில் காட்சிப்படுத்தினால் கதை சிறப்பாக அமைந்து படிப்பவர்களையும் ரசிக்க வைக்கும்' என்று எனது கல்வித் தந்தையான பேராசான் மு.பழனி இராகுலதாசன் அடிக்கடி சொல்வதுண்டு. அப்படியான கதைகளை வாசிக்கும் போதெல்லாம் அதனுள் பயணிக்கும் கதாபாத்திரங்களோடு நானும் பயணித்த அனுபவத்தை உணர்ந்திருக்கிறேன்.

அப்படியான கதை நகர்த்தலோடு கதாபாத்திரங்களை தேவைக்கேற்ப பயன்படுத்தியிருக்கும் ஆசிரியர், அவர்களை அழகாக வெளியேற்றி சில இடங்களில் மிக நுணுக்கமாக காட்சிப்படுத்தி வாசிக்கும் நம்மை மெல்ல மெல்ல வசீகரித்து கதையோடு ஆழ்ந்து பயணிக்க வைத்து விடுகிறார். இன்று நிச்சயம் செய்த உடனேயே பெண்ணும் மாப்பிள்ளையும்  செல்போனில் மணிக்கணக்கில்  பேச ஆரம்பித்து விடுகிறார்கள். மேலும் வாட்ஸ்அப்முகநூல் என ஏகப்பட்ட வசதிகள் வேறு. இன்றைய இளம் தலைமுறைக்கு சொல்லவா வேண்டும்..? அவையெல்லாம் இந்த நாவலில் இடம் பிடித்திருக்கிறது.

திருமண ஒத்திகைஎன்னும் இந்த நாவலை முக்கோணப் பார்வையில் எழுதியிருக்கிறார். முதல் ஐந்து அத்தியாயங்கள் நாயகன் வருணின் பார்வையில், ஜாலியான குடும்பம்... இளமைத் துள்ளல்... நட்பு... நிச்சயித்த பெண்ணுடன் சந்தோஷமாக நகரும் நாட்கள்... முகநூல் அரட்டை என பிரச்சினைகள் இல்லாமல் ஜாலியாகப்  பயணிக்கிறது. அடுத்த ஐந்து அத்தியாயங்கள் நாயகி சஞ்சனாவின் பார்வையில், சந்தோஷம் மற்றும்  பெண் குழந்தையைக் காரணம் காட்டி மச்சினியை அடையத் துடிக்கும் அக்கா கணவரினால் ஏற்படும் இன்னல்கள் என நகர்கிறது. பதினோராவது அத்தியாயத்திலிருந்து ஆசிரியரின் பார்வையில், சஞ்சனாவின் அக்கா கணவன் விஜயனை வருண் பார்த்துப் பேசிய பின் வரும் நிகழ்வுகள்நம்மை இப்படியா... அப்படியா... என்று யோசிக்க வைத்துபரபரப்பான  இறுதிக்கு நகர்த்தி  கதையோடு ஒன்றி நம்மை உட்கார வைக்கிறது.  குறிப்பாகசம்பந்திகளின் சூடான போன் உரையாடலும் அதே நேரத்தில், காதலர்களின்  கோபம் தீர்ந்த சந்தோஷங்களும் என மாற்றி மாற்றி பயணிக்கும் அந்த இறுதிக் கட்ட பரபரப்பைஅவரது முதல் நாவலான 'இளமை எழுதும் கவிதை நீ' யின்  இறுதிக்காட்சிகளை போன்றே மிக அருமையாக கையாண்டிருக்கிறார்.

மிக நல்ல கதை, திரைக்கதையாய் விரியும் காட்சிகள் என பயணித்து இறுதிக் காட்சியில் வருண் கோபித்துக் கொண்டு சென்ற பின் வந்தனா அவனைத் தேடி எப்படி சரியான இடத்திற்கு வந்தாள் என்பது மட்டுமே சற்று இடறல்... அந்த இடத்தில் தமிழ் திரைப்பட இறுதிக் காட்சி போல கதை அமைந்து விட்டது என்பதைத் தவிர மற்றபடி குறை சொல்ல முடியாத நிறைவான கதை. 

தொடர்கதையாக பாக்யா வார இதழில் வந்த 'திருமண ஒத்திகைஇப்போது புத்தகமாக வெளி வந்திருக்கிறது. நிச்சயமாக இது படிப்பவர்களின் மனதைக் கவரும். எனது முதல் அணிந்துரையை நான் நேசிக்கும் ஒருவரின் நாவலுக்கு எழுதியதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். அணிந்துரை எழுதச் சொன்ன குடந்தையூர் ஆர்.வி.சரவணன் அண்ணனுக்கு என் நன்றி.

தொடரும் எழுத்துப் பயணம் பல வெற்றிகளை அவருக்கு விருதாக்க வாழ்த்துகிறேன். 
***
தங்களின் படைப்புக்களை படித்து விடுகிறேன் நட்புக்களே... கருத்து இடுவதில் என் கணிப்பொறியில் இருக்கும் பிரச்சினை தீரவில்லை. அலுவலகத்தில் ஏகப்பட்ட பிரச்சினைகள்... வேலைப் பளூவும் கூடுதல்... அங்கு வலைப்பூ திறக்கவும் வாய்ப்பு இல்லை... இல்லையென்றால் அங்கிருந்து கருத்து இடலாம்... கருத்து இடவில்லை என்று நினைக்க வேண்டாம். மீண்டு வருவேன் என்ற நம்பிக்கையோடு....

நன்றி.
-'பரிவைசே.குமார்.

சனி, 2 டிசம்பர், 2017

பயணங்கள் முடிவதில்லை...

யணங்கள் முடிவதில்லை...

பயணங்கள் எப்போதும்  தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றன. பயணிக்கும் மனநிலை வேண்டுமானால் மாறுபடலாம் ஆனால் பயணம் மாறுவதில்லை. அதுவும் நல்ல நட்புக்களுடன் பயணிக்கும் சுகமே அலாதியானதுதான். தற்போதைய மனநிலையில் அடிக்கடி பயணிக்கும் வாய்ப்பு கிடைப்பது என்பது மிகச் சிறந்த மருந்தாய் மனசுக்கு... 


எனது இந்தப் பயணம் பள்ளிக்கு மஞ்சப் பைக்குள் சிலேட்டையும் குச்சி டப்பாவையும் வைத்துக் கொண்டு இடுப்பில் சரியாக நிற்காத டவுசரை இழுத்து பிடித்துச் சொருகி, தேவகோட்டை நோக்கி மூன்று கிலோ மீட்டர்கள் என்னைப் போல் புத்தகப் பை சுமந்த அக்காவுடனும் உறவுகளுடனும் நடக்க ஆரம்பித்த முதல் நாளில் இருந்து தொடங்கி இன்று வரை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

பள்ளியில் படிக்கும் காலத்தில் மேகம் கருத்தால் போதும் கிராமத்துப் பிள்ளைகள் வீட்டுக்குப் போகலாம் என்ற அறிக்கை வர, முகத்தில் அடைமழையெனப் அடித்து ஆடும் சந்தோஷத்துடன் புத்தக மூட்டையை தலைமை ஆசிரியரின் அறையில் வைத்து விட்டு சத்துணவுக்காக கொண்டு செல்லும் தட்டை மட்டும் எடுத்து கையில் பிடித்துக் கொண்டு மழைத் தண்ணீர் பள்ளம் நோக்கி ஓடுவது போல் நடக்க ஆரம்பிப்போம்... 

இந்தத் தட்டு மழை வந்தால் குடையாகும்... இல்லையேல் தாளம் போடப் பயன்படும்.  எது எப்படியோ மகிழ்ச்சியின் மழை எங்களுக்குள் அடித்தாடும்... ஆவாரஞ்செடிகளுக்கு இடையே வளைந்து நெளிந்து செல்லும் ரோடில்லா ஒற்றையடிப் பாதையில் ஓடி வரும் தண்ணீருடன் கால்கள் கொஞ்சிக் கதை பேச, நனைந்து செல்வதில் ஒரு சுகமே.

பள்ளிக் காண நடை பயணம் ஏழாப்பு வரைக்கும் தொடர்ந்தது.  கை, கால் முட்டிகளில் வீரத் தழும்புகள் ஏற்பட ஆறாப்பு, ஏழாப்பில் சைக்கிள் பழகி, கவட்டைக் காலில் இருந்து சீட்டுக்கு மாறி கை விட்டு ஓட்டும் அளவுக்கு வந்ததால் வீட்டில் நீ சைக்கிளில் செல்லலாமென கொடுத்த சான்றிதழினால் அப்பாவின் அட்லஸ் சைக்கிள் எட்டாப்பு படிக்கும் போது என்னுடன் தோழமையானது. 

கல்லூரி வரைக்கும் இவரே பயணத்தின் நண்பனாய்... கல்லூரியில் இருந்து குன்றக்குடி, பிள்ளையார்பட்டி என இவரோடு பயணித்த நாட்கள் மறக்க முடியாதவை. மறுநாள் கே.வி.எஸ். சார் எங்க போனீங்க எல்லாரும்ன்னு தண்ணி காட்டுனதெல்லாம் பயணத்தின் சுவராஸ்யம்தானே. படிக்கும் போது நண்பன் புத்தக ஏஜெண்டாக இருந்ததால் செம்மலரும் தாமரையும் சுபமங்களாவும் சுமந்து தேவகோட்டையில் வீதிவீதியாக பயணப்பட்டிருக்கிறோம்.

பள்ளிப் பயணம் ஒரு புறம் இருக்க, காலையில் குடி தண்ணீருக்கான பயணமாய் சைக்கிளில் குடங்களைக் கட்டிக் கொண்டு முருகன், சேகர் சித்தப்பு, சரவண சித்தப்பு, தம்பி சரவணன், சக்தி மச்சான், என் தம்பி என எல்லாருமாய் ஒவ்வொரு செங்கற்காலவாயாக அழைந்து கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்துக் கொண்டு வந்த அந்த தேடுதல் பயணம் வாழ்வில் மறக்க முடியாத நாட்கள்... 

ஆம்... நாங்கள் செல்லவில்லை என்றால் அக்கா ரெண்டு மூணு கிலோ மீட்டர் போய் அலைந்து திரிந்து தண்ணீர் தூக்கி வர வேண்டும்.  மூன்று குடங்கள் வரை சைக்கிளில் கட்டி வருவதுண்டு. இந்தக் கிணற்றில் தண்ணீர் கிடக்குமென சென்றால் அங்கு எருங்கஞ்செடி நீந்தி நம்மைப் பார்த்துச் சிரிக்கும். அப்படியும் தண்ணீர் எடுக்க விட்டவர்கள் சிலரும் உண்டு. சில நாட்களில் அதிகாலையிலேயே செல்வதும் உண்டு.

கல்லூரியில் படிக்கும் போது திருவாடானையில் நண்பன் ஆதியின் இல்லத்தில் தங்கி இராமேஸ்வரம் பயணம்... இரண்டாமாண்டு படிக்கும் போது மைசூர், பெங்களூர் பயணம்... கணிப்பொறி நிலையம் வைத்திருந்தபோது நண்பர்களுடன் கம்பம், தேனி, கேரளாவென ஒரு திரில்லிங் பயணம்... பள்ளிகளில் கணிப்பொறி வகுப்பெடுக்க சிபியூவையும் மானிட்டரையும் வண்டியின் முன்னே வைத்து இருபது, இருபத்தைந்து கிலோ மீட்டருக்குமேல் நானும் நண்பனும் பயணித்த பயணம்... பழனிக்கு நடைப் பயணம்... திருச்செந்தூர் நடைப் பயணம்... சபரிமலை பயணம்... இப்படியான பயணங்கள் இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

பெரும்பாலான பயணங்கள் திருமணத்திற்கு முன்னே நிகழ்ந்தவை என்பதால் மனைவிக்கு என்மேல் கோபம் உண்டு. ஆம் திருமணத்திற்குப் பின்னர் சில பயணங்கள் தவிர்த்து சொல்லிக் கொள்ளும்படியான பயணங்கள் எதுவும் நிகழவில்லை. ஒவ்வொரு முறையும் எங்காவது செல்ல வேண்டுமென நினைப்புடன் சென்றாலும் ஒரு மாதம் என்பது வீட்டில் செலவழிக்கவே பத்துவதில்லை. எங்களின் பயணம் பெரும்பாலும் தேவகோட்டை-மதுரைக்கானதாய் மட்டுமே இருந்து விடுகிறது. இந்த முறைதான் விண்ணப்பங்கள் மும்முனைத் தாக்குதலாக சேலம் அருகே இருக்கும் தீம்பார்க் சென்று வந்தோம்.


என்னோட பயணங்கள் எல்லாமே நண்பர்களால் நிரப்பப்பட்ட பயணங்களே... ஆமா இப்ப எதுக்கு பயண புராணம் என்பதாய் உங்கள் கேள்வி இருக்கலாம். நேற்றைய பயணத்தின் அனுபவமே பயணத்தைப் பற்றிப் பேச வைத்தது. ஆம்... இங்கு வந்து இந்த ஒன்பது வருடத்தில் முதல் நான்கு வருடங்கள் அடிக்கடி நீண்ட தூர பயணங்கள் சென்று வந்தோம் அது உறவுகள் சூழ்ந்த பயணம். பின்னர் எந்தப் பயணமும் இல்லை... இப்போது சுபஹான் பாய் அவர்களாலும் கனவுப்பிரியன் அண்ணனாலும் மனதுக்கு சந்தோஷமான பயணங்கள் அடிக்கடி நிகழ ஆரம்பித்திருக்கின்றன.

அப்படியான ஒரு பயணம்தான் நேற்றைய விடுமுறைநாள் அனுபவமாய்... அபுதாபியில் இருந்து அலைன் நோக்கி...

பயணத்தின் போது வாசிப்பு என்பது ஒரு சுகானுபவம்... அப்படியான அனுபவம் நேற்றைய ரெண்டு மணி நேர பிரயாணத்தில்... தகிக்கும் பாலை வெயிலில் நாணிச் சிரிக்கும் மணலைப் பார்த்து ரசித்தபடி... இசைக்கும் ராசாவின் பின்னோடு பயணித்த நாட்களாய் நேற்றைய நாள் அமைந்தாலும் வாசிப்பின் ருசியும் கூடுதலாய்... 

என் செல்போனில் 'பார்த்தீபன் கனவு' கிடக்க, ரெண்டு மணி நேரத்தில் பொன்னனோடும் மாமல்லனோடும் பயணிக்கலாமென நினைத்துச் சென்றால் வாசிக்கக் கிடைத்தது தோழி ஒருவரின் முதல் கவிதைத் தொகுப்பான 'கனலி'. சின்னச் சின்ன கவிதைகள்... பக்கம் நிரப்பாமல் ஒன்றும் இரண்டுமாய் ஆக்கிரமித்திருக்க... வேகமாய் பக்கங்கள் நகர்ந்தன. கனலி நெருப்பாய்த் தகிப்பாள் என்று வாசிக்க ஆரம்பித்தாள் வரிக்கு வரிக்கு காதலில் கசிந்துருகியிருக்கிறாள். புத்தகம் பற்றி பின்னொரு பதிவில் பார்க்கலாம்... நாம் பயணத்தைத் தொடர்வோம்.

வெள்ளைப் பாலை மணலை தன் மேல் போர்த்தியிருக்கும் அபுதாபி கடந்து செம்மண் பூமியான எங்க ஊருக்குள் பயணிப்பது போன்றதொரு அனுபவத்தைக் கொடுத்தது சிவந்த மண் பாலையுடன் சிரிக்கும் அலைன்.

அங்கு போய்ச் சேரும் போது ரெண்டு மணியை நெருங்கிவிட காத்திருந்த காளிதாசர் பிரபுவும் கனவுப்பிரியன் அண்ணனும் எங்களுடன் இணைய, முழுக்கோழியும் பிரியாணியும் பிரபு அவர்களின் பிரியமாய் வயிற்றை நிரப்ப, நிரம்பிய வயிற்றுடன் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தோம் நானும், அண்ணன் கனவுப் பிரியனும் ரவியும்... 

அதற்குள் பிரபு அவர்கள் நண்பரின் காரை சுபான் அவர்களும் நண்பர்களும் சென்று எடுத்து வந்தார்கள். பின்னர் பயணப்பட ஆரம்பித்தோம். அலைன் ஓயாசிஸில் கொஞ்ச நேரமே நடை... அதற்குள் கேமராக் கவிஞர் சுட்டுத் தள்ளிய போட்டோக்கள் அதிகம்... வயிற்றுக்குள் சென்ற கோழி அடைக்கத்திய கோழி போலும்... படுத்துக் கொண்டு எழுந்து நடக்க யோசிக்க... மலைப்பாம்பாய் உடலை திருகி... சுகம் காண முடியா நிலையில் நடையைச் சுருக்கி மீண்டும் காருக்குள் ஏறி ராசாவோடு பயணித்தோம். மெல்லக் குளிர் காற்று தாலாட்ட ஆரம்பித்தது.

ஷாகிர் ஏரியை நோக்கி ஒரு நீண்ட பயணம்... சூரியன் அஸ்தமிக்கும் முன்னர் போட்டோ அரங்கேற்றம் நிகழ்த்த நினைத்து விரைவுப் பயணத்தின் முடிவில் கொஞ்சமே தண்ணீர் நிறைந்திருந்த ஏரியை ரசித்தபடி... சூரியன் அஸ்தமனம்... மலைகளின் வனப்பு... நீரில் நீந்தும் நீர்க்கோழி... நாரைகள்... சூரியனைக் கடக்கும் கார்கள்... சிவப்பு ஒளியில் மிளிரும் பிம்பங்கள்... நிலவின் ரம்மியத்தில் சிலிர்த்துச் சிரிக்கும் மணலின் பிம்பங்கள் என ரசனையாய் ரசித்து போட்டோக்களில் சுருட்டிக் கொண்டு கொஞ்சம் கதை பேசி... மீண்டும் பயணத்தைத் தொடர்ந்தோம். 

கனவுப்பிரியன் அண்ணனின் கூட்டுக்குள் வந்து கதை பேசி... அபிராமி அந்தாதி, கண்ணப்பர் கதை, ரஜினி, கமல் என எல்லாம் பேசி...  சிரித்து... கோழியுடன் புரோட்டாவும் சப்பாத்தியும் பழங்களும் சாப்பிட்டுப் படுத்தோம் நிறைந்த வயிறும் நிறைவான மனதுமாய்...

இந்தப் பயணத்தில் அறிந்த ஒன்று.... பிரபு நிறைய விஷயங்களை உள்வாங்கி வைத்திருக்கும் ஒரு ஹார்ட் டிஸ்க் என்பது... எத்தனை விஷயங்கள்... அருமையாக, விளக்கமாகப் பேசுகிறார்... உண்மையில் வியந்தேன்.

காளிதாசர் என்னும் கவிஞராய் மட்டுமே அறிந்திருந்தவர் கலந்து கட்டி இலக்கியத்தில் அடித்தாடுகிறார்... விளக்கத்திற்கான எடுத்துக்காட்டுகளில் காளிதாசராகத் ஜொலித்தார்.  இன்னும் பேச வேண்டும்... இல்லை இல்லை பேசச் சொல்லி கேட்க வேண்டும் மீண்டும் ஒரு விடுமுறை தினத்தில்.. நிறைய... நிறைய.... ரொம்ப விஷயம் கறக்கலாம் இந்த ஆளிடம்... பல சிறுகதைகளுக்கான கரு அவரிடம் இருக்கிறது.

அதிகாலை 5 மணிக்குத் தயாராகி மீண்டும் ஒரு பயணம்... ஜெபல் ஹபீத்தை நோக்கி... மலரும் சூரியனை மறைந்திருந்து படம் பிடிக்க...

ஒரு கரக் டீயைக் குடித்து விட்டு மலையேற ஆரம்பித்தோம்.... பதிமூன்று கிலோமீட்டர்... சில பல ஹேர்பின் வளைவுகளுடன்... நெருக்கமாய் சிரிக்கும் விளக்குகளின் வெளிச்சத்தில்... பகலெனத் தெரிகிறது மலையின் ஊடான பாதை... மேலே ஏற... ஏற... இந்தப் பனியிலும் குளிரிலும் சூரியனைக் காண அங்கு இரவே வந்து தங்கியிருந்த அரபிகளும்... பிலிப்பைனிகளும்... நம்மவர்களும்...  எழுந்து தயாராகிக் கொண்டிருந்தார்கள்.


கம்பமொட்டு வழி கேரளாவுக்குச் சென்ற போது சரியான மழை... டாடா சுமோவில் நண்பர்களுடன் பயணம்... இரவாகி விட மலையில் இருந்து மெல்ல இறங்கிக் கொண்டிருக்கிறோம்... மாலையில் அடித்துப் பெய்த மழையின் மிச்சங்கள் ரோடெங்கும்... கொண்டை ஊசி வளைவுகளில் சோபையாய் எரியும் தெரு விளக்குகள்.... 

தங்க நல்ல இடம் தேடி... அருகிருக்கும் ஊர் நோக்கி மெல்ல நகர்கிறது சுமோவை நண்பர் ஓட்டுகிறார்... ஓரிடத்தில் மொத்தமாய் மூடுபனி (Mist) வந்து வண்டியின் முன்னே அமர, வழி தெரியாத நண்பன் திணறி, ஒண்ணுமே தெரியலை என வண்டியை ஓரமாக நிறுத்த, ஹெட்லைட் எரிவோமா வேண்டாமா என யோசித்து ஓளிவிட, மெல்ல வளைவில் வந்து திரும்பி எங்களைக் கடக்கிறது அரசுப் பேருந்து.

கொஞ்ச நேரத்தில் மூடுபனிக்கு மூடு வந்து மெல்ல வழிவிட வண்டியை எடுத்தால் அந்தத் திருப்பத்தில் எங்கள் வண்டியோ நேரே செல்வதற்கு ஆயத்தமாய்... மூடுபனியில் நண்பன் மெல்லச் செலுத்தியிருந்தால் மலையை ரசித்தபடி மெல்ல கடந்திருப்போம் வாழ்வின் இறுதி நொடிகளை.... அத்துடன் நண்பனுக்கு பயமெடுக்க டிரைவர் சீட்டை மற்றொருவர் ஆக்கிரமித்தார். 

அப்படியெல்லாம் பயம் காட்டாமல் பகலில் பயணிப்பது போல் விளக்குகள் ஜொலிக்க, ஒரு மலை முகட்டில் பலர் கேமராவுடன் காத்திருக்க, சுபான் அவர்களும் காலைக் கதிரவனின் கவிதையை எழுத ஆயத்தமானார். நம்ம அரசியல்வாதிகள் பொதுக்கூட்டத்துக்கு வருவது போல் பகலவனும் ரொம்பச் சோதித்தான். அதுவரை ரசனையாய் அருகில் பிலிப்பைனிகள் போட்டோ எடுக்கவில்லை என்பதையும்... அவர்களின் பாடலுக்கு பிரபு லாலலா... லல... லாலல்லா... பாடவில்லை என்பதையும் சொல்ல வேண்டியது கடமை.

சூரியன் மெல்ல மேலெழும்பி வர, போட்டோக்கள் சுட்டுத் தள்ளப்பட... எல்லாவற்றையும் மலை முகட்டில் படுத்தபடி கவனித்துக் கொண்டிருந்தார் ஒரு பெரியவர்... அவரும் சூரியனாருக்குத்தான் காத்திருந்தார் போல.... ஆம் மலை முகடு ஒரு முதியவனின் முகமாய்....

மீண்டும் இறங்கி... டீயுடன் இட்லி பார்சலும் பெற்று... கார் கொடுத்த நண்பருடன் பேச ஆரம்பிக்க அவரோ நம்ம பரம்பக்குடிக்காரர்.... அமராவதிபுதூர் குருகுலத்தில் படித்தவர்... குருகுலம் பற்றிப் பேசினார். கண்ணதாசன் பற்றியும் பேசினோம்.


மீண்டும் காரின் அருகில் நின்று பாலஸ்தீனம், சிரியா, நபிகள், சதாம் உசேனின் கடைசிக் கவிதை, செங்கிஸ்கான் என ஒரு குட்டி இலக்கிய அரட்டையுடன் பிரபுவை கார் கொடுத்த நண்பருடன் அனுப்பிவிட்டு கனவுப்பிரியன் அண்ணன் அறைக்குத் திரும்பி குளித்து... இட்லியை சாம்பாரில் நனைத்து தள்ளிவிட்டு அங்கிருந்து மீண்டும் அபுதாபி நோக்கி....

வரும் வழியெங்கும் சுபான் அவர்களின் கேமராவுக்கு நல்ல தீனி கிடைத்துக் கொண்டிருந்தது.... அறைக்குத் திரும்பிய போது நண்பரின் கை வண்ணத்தில் சிக்கன் வாசம் வரவேற்றது.

மிகச் சிறப்பானதொரு பயணம் நண்பர்களாலேயே சாத்தியப்பட்டது.

-'பரிவை' சே.குமார்.