மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

புதன், 24 பிப்ரவரி, 2010

சாதனை நாயகன் சச்சின்..!

சாதனைகளால் சச்சினுக்குப் பெருமை என்பதைவிட சச்சினால் சாதனைக்குப் பெருமை என்பதே சாலச்சிறந்ததாகும்.
சச்சின் சாதிக்கப் பிறந்தவர்... எத்தனை சாதனைகள்... கிரிக்கெட்டில் சாதனைகள் எல்லாம் அவர் காலடியில்...
உலக அரங்கில் அதிக ரசிகர்களை கொண்டவர் நம் சச்சின். இந்தியராய் பிறந்ததால் ஒவ்வொரு இந்தியனுக்கும் பெருமை.
இந்த சாதனைகள் எல்லாம் அவருக்கு சொந்தமாக எத்தனை வசவுகள். சச்சினுக்கு வயசாச்சு... இளைஞர்களுக்கு வழி விடலாம். பழைய ஆட்டம் இல்லை... இன்னும் எத்தனை எத்தனை...?
இன்று சச்சினின் ஆட்டம் பார்த்த இளம் வீரர்கள் எல்லாம் இப்படி விளையாட முடியுமா என்றால் கண்டிப்பாக முடியாது என்று அடித்துக் கூறலாம்.
200 ரன் எடுத்த முதல் வீரர். யாரும் எளிதில் எட்ட முடியாத சாதனைதான் இது. சாதிக்க எவனாவது பிறக்கலாம். ஆனால் காலம் உள்ளவரை நம் சச்சினே கதாநாயகனாக.
நண்பர்கள் பலர் எழுதி தள்ளிவிட்டதால் எதுவும் எழுதவில்லை. சாதனை நாயகன் தனது இரட்டைச்சதத்தை நாட்டிற்கும் நாட்டுமக்களுக்கும் சமர்பிப்பதாக சொல்லியுள்ளார். அவருக்கு வாழ்த்துக்கள். இன்னும் சாதியுங்கள்... என்றும் நீங்கள் சாதனையின் குழந்தைதான்.
வாழ்த்துக்கள் சச்சின். உமது கனவாம் உலககோப்பையும் கிட்ட வாழ்த்துக்கள்.
சச்சின் 200 ரன் எடுத்த படங்கள் சில...












Thanks: cricinfo.com

'பரியன் வயல்' சே.குமார்

ஞாயிறு, 21 பிப்ரவரி, 2010

அபுதாபியில் அமுதைப் பொழியும் நிலவே...


அபுதாபியில் நேற்று மாலை தமிழ் அமுது பருகும் வாய்ப்பு பல தமிழர்களுக்கு கிடைத்தது. பாரதி நட்புக்காக அமைப்பின் சார்பாக தனது இனிய குரலால் தமிழகத்தை மட்டுமல்ல உலகத்தையே கட்டிப் போட்ட சுசிலா அம்மாவுக்கு பாராட்டு விழாவும் அதே நிகழ்ச்சியில் திரு. டெல்லி கணேஷ் அவர்களின் விவாத மேடையும் நடந்தன. ஐயாயிரம் ரசிகர்களுக்கும் குறையாமல் கலந்து கொண்டனர்.

நேற்று மாலை 6 மணிக்கு விழா ஆரம்பம் என்று போட்டிருந்ததால் நாங்கள் 6.30 மணிக்கு விழா நடக்கும் இந்திய சமூகக்கூடம் (ISC) சென்றபோது அரங்கமே நிரம்பி வழிந்தது. பாரதி நட்புக்காக அமைப்பு இதுவரை நிகழ்த்திய நிகழ்வின் தொகுப்பு மேடை ஓரத்தில் வைக்கப்பட்டிருந்த திரையில் காண்பிக்கப்பட்டுக்கொண்டிருந்தது.

பின்னர் விழா ஆரம்பமானது. வரவேற்புரை நிகழ்த்தியவர் ஆங்கிலத்தில் ஆரம்பித்து பின் தமிழில் பேசி முடித்தார்.பின்னர் சிலரின் பரதநாட்டிய நிகழ்ச்சிகள் நடந்தன. பரத நாட்டியம் ஆடிய அனைவரும் மிக சிறப்பாக நடனமாடினர். குறிப்பாக பாரதியார் பாடல் ஓன்றுக்கு திரையில் படம் ஒருபுறம் ஓடிக்கொண்டிருக்க, இரண்டு மாணவிகள் நடனமாடினர். அந்தப்பாடலின் உன்னதத்தை தங்கள் நடனத்தில் கொண்டு வந்தனர். அருமை... அவர்களின் அபிநயம்... குறிப்பாக மழை பெய்வது போலவும் உடம்பு சிலிர்ப்பது போலவும் அந்த மாணவிகள் செய்த அபிநயங்கள் அருமை. நிகழச்சி முடிந்தும் இன்னும் கண்ணுக்குள்.

பின்னர் நிறுவனர், தலைவர் உள்பட சிலர் மேடை ஏற்றப்பட்டு கெளரவிக்கப்பட்டு சில வார்த்தைகள் பேசினர். அப்போது பேசியவர்களில் என்னைக் கவர்ந்தது ETA நிறுவனர் பேச்சுதான். ஆம் அபுதாபியில் எந்த தமிழனுக்காவது உதவி வேண்டுமென்றால் என்னிடம் கேளுங்கள். செய்கிறேன் என்றார். பிறக்கு உதவும் அமைப்பாக பாரதி நட்புக்காகவும் செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். பின்னர் பேசிய அமைப்பின் தலைவர் இராமகிருஷ்ணன் உடனே ஆவண செய்வதாக சொன்னது அரங்கத்தில் கைதட்டல் ஒலி அடங்க அதிக நேரம் ஆனது.

பலத்த கை தட்டலுக்கு இடையே சுசிலாம்மா மேடை ஏற்றப்பட்டு இருக்கையில் அமர்த்தப்பட்டார். அவர் அமர்ந்ததும் முனைவர் திருஞானசம்பந்தம் அவர்கள் சுசிலா அம்மா பற்றி சில வார்த்தைகள் பேசினார். சுசிலாம்மாவுக்கு 'அமுதைப் பொழியும் நிலவே' என்ற விருது வழங்கி கௌரவித்தனர் பாரதி நட்புக்காக அமைப்பினர்.

பின்னர் ஏற்புரை நிகழ்த்திய சுசிலாம்மா கலக்கி விட்டார். அவருக்கும் காலில் காயம் என்று சொன்னார். எனவே மேடையில் அமர்ந்து பேசினார். அவரது குரலுக்கு அப்படி என்ன சக்தி? அப்பா... பேச ஆரம்பித்ததும் மடைதிறந்த வெள்ளம்போல் பேச ஆரம்பித்தார்.

மேடையின் எதிரே அவரின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த டெல்லி கணேஷை புகழ்ந்து பேசினார். தெலுங்கில் இருந்து அவர் தழிழுக்கு, தமிழ் நாட்டிற்கு வந்தது 1950ம் வருடம் என்றும் அடுத்த வருடம் வந்தால் 60 வருடங்கள் நிறைவு பெறுவதாகவும் கூறிய போது கைதட்டல் ஒலியில் அரங்கமே அதிர்ந்தது.

அந்தக் காலத்தில் எல்லாப்பாடல்களும் இரவில்தான் பதிவு செய்யப்பட்டன என்றும் இப்ப இருக்கும் வசதிகள் எதுவும் இல்லாமல் வேர்வையுடன் பாடி முடித்து, அந்தப்பாடல் வெற்றி பெற்றபோது கிடைத்த சந்தோஷங்களை நினைவு கூர்ந்தார்.

அவரது மானசீக குரு லதா மங்கேஷ்கர் என்றும் அவருடன் பிறந்தது நால்வரல்ல என்றும் நானும் அவரது தங்கைதான் என்றும் என்னை தெற்குக்கு அனுப்பிவிட்டான் இறைவன் என்றும் மனம் மகிழ, நெகிழ தெரிவித்தார்.

'சுசிலான்னு ஒரு பொண்ணு பாட்டுக் கத்துக்கிட்டு இங்க வரும் அதுக்கு பாட்டெழுதணும் என்றே எங்கள் செட்டிநாடு கண்டெடுத்த காலத்தால் அழியாத காவியக் கவிஞன் கண்ணதாசனை படைத்ததாக புகழந்தார். 'அத்தான்.. என்னத்தான் அவர் என்னைத்தான்...' என்ற பாடலை சில வரிகள் பாடியபோது 'தான்... தான்...' என்று முடித்த அந்த திறமையை பாராட்டினார்.

அதிகம் பேசினால் பாட மாட்டேன்... பாடினால் பேசமாட்டேன்...' என்றபடி 'என்னைப் பாடச் சொன்னால்...' ,'சிட்டுக் குருவி முத்தம் கொடுத்து...' போன்ற சில பாடல்களைப் பாடிய போது அந்த இனிய குரல் இன்னும் சுசிலாம்மாவிடம் அப்படியே இருந்தது.

நகைச்சுவையாகவும் இனிமையாகவும் பாடல்களின் வரிகள், பேச்சு என்று வெளுத்து வாங்கியவர் முடிக்க நினைக்கையில் ஒருவர், பக்கத்து வீட்டுப் பருவ மச்சான் பாடலை கேட்க, அவர் என்னய மச்சானைப்பற்றி பேச சொல்லுகிறார் என்றார் சிரிப்புடன்... அந்தப் பாடலை அவரது புத்தகத்தில் தேடி கண்டுபிடிக்க இயலாததால் பாடாமல் விட்டுவிட்டார்.

தமிழகம்தான் எனக்கு வாழ்வளித்தது. அங்குதான் என் கடைசி நிமிடங்கள் கரைய வேண்டும் என்ற போது அரங்கத்தில் கை தட்டல் இருந்தாலும் பல மனங்கள் கனத்துக் கிடந்தன என்பதே உண்மை. அவர் எழுந்ததும் மக்களைப் பார்த்து ஒருவர் பேச சொல்ல எழுந்தால் அதிகம் பாட்டு வரும் என்றார் புன்னகையுடன்.

அவர் மேடையை விட்டு இறங்கிய போது ரசிகர்கள் எழுந்து நின்னு கைதட்ட, மேடையில் நின்று கும்பிட்டவர், அப்படியே குனிந்து தரையை தொட்டு வணங்கினார். மேன் மக்கள் மேன் மக்களே..!

அவரது பாரட்டுவிழாவிற்குப் பிறகு டெல்லி கணேஷ் தலைமையில் வாழ்க்கைக்கு உறுதுணையாய் இருப்பது இன்றைய வாழ்க்கை முறை, உறவுகள், நண்பர்கள், பொருளாதாரம் என்ற தலைப்பில் விவாதமேடை நடந்தது. அதில் குழுவுக்கு ஐவர் இருந்தனர். எல்லோரும் நல்லா பேசினார்கள். இடையிடையே டெல்லி கணேஷின் நகைச்சுவை வேறு.

அபிதாபியில் அழகிய தமிழ்பருகினேன் அதற்காக எங்கள் சென்னைத் தமிழ் சரியில்லை என்று சொல்லாதீர்கள். இப்ப உள்ள காலச்சூழலில் என்னப்பா நல்லா இருக்கியா என்று கேட்பதை சுருக்கி 'இன்னா கீறியா..?' என்பதாகவும், ஆட்டோவுல போகும் போது அந்த வலது பக்கம் திருப்புப்பா என்றால் நம்மை திரும்பி பார்த்து 'ரைட்ல போன்னு சொல்லு சார் என்பதாகவும் கலகலப்பாக பேசினார்.

பேசியவர்கள் பெயர் ஞாபகத்தில் இல்லை. இருந்தாலும் அனைவரின் பேச்சுக்களும் ரசிக்கும் விதமாக இருந்தாலும் சிலரின் பேச்சுக்கள் நெஞ்சைத் தொட்டன. குறிப்பாக, இலங்கை நண்பர் ஒருவர் பேசும்போது குற்றுயிர் பூமியில் இருந்து வந்திருப்பதாகவும் நாட்டிற்கு போன் செய்து பெற்றோரிடம் பேசினால் சந்தோஷம் என்றும் அவர்கள் போன் எடுக்கவில்லை என்றால் என்னாச்சோ என்ற பதட்டம் வருவதாகவும் தான் ஊருக்கு வருகிறேன் என்றால் இங்கு நிலமை சரியில்லை என்றும் உன் குரலையாவது கேட்கிறோம். உன்னை இழக்க எங்களால் முடியாது என்றும் சொன்னபோது தமிழர்களாகிய நமது நெஞ்சுக்குள் ஒருவித வலி. அரங்கமே சோகத்தில் ஆழ்ந்தது.

ஒரு பெண் பேசும் போது தனது மகனுக்கு விபத்து ஏற்பட்டபோது நண்பர்கள் உதவியதாகவும் அவன் நன்றாக வந்து மூன்றாண்டுகளுக்குப் பிறகு ஓட்டப்பந்தயத்தில் மூன்றாவது பரிசு வாங்கி வந்த போது பரிசைவிட நண்பர்கள்தான் ஞாபகத்தில் வந்ததாகவும் கூறினார்.

எங்கள் நண்பர் சுபான், கந்தசாமி பட பாடலான 'இதெல்லாம் டூப்பு...' பட்டியலில் சில பல சேர்த்து கலக்கி இல்லாம் டூப்பு பணம்தான் டாப்பு என்றும், அவருக்கு பிகர் பிடிக்கும் என்றும் திருமணத்தின் போது நாலு பிகர் இருந்ததாகவும் மனைவியின் அன்பால் ஐந்து, ஆறு என்றாக்கி ஏழை பிடித்துவிட்டதாக சொன்னார். டெல்லி கணேஷ் மிரள பணத்துக்கான சைபரை சொன்னதாக சொன்னார். அவர் இட்ட பட்டியலில் அம்மா, அப்பா இல்லை என்பதை உறவுக்காக பேசிய பெண் பிடித்துக் கொண்டார்.

இன்றைய வாழ்க்கை முறையில் பேசியவர் சற்று குண்டாக இருக்க டெல்லி கணேஷ் கிண்டலாக பேச, அவர் நீங்கள் பெயரில் கணேஷை வைத்திருக்கிறீர்கள்... நான் உருவத்தில் வைத்திருக்கிறேன் என்று போட்டாரே பார்க்கலாம்...

நல்ல நகைச்சுவையுடன் நகர்ந்த விவாதமேடை அதிக நேரம் ஆனதால் கூட்டம் கலைய ஆரம்பிக்க விவாதம் சூடு பிடிக்க ஆரம்பிக்கும் நேரத்தில் முடிவுக்கு வந்தது. நடுவர் நட்பே என்று முடித்தார். நல்ல நிகழ்ச்சி நேரமின்மையால் முடிவுக்கு வந்தது வருத்தமாக இருந்தாலும் நல்ல கலைஞர்களைக் கொண்டு நடத்தப்பட்ட நிகழ்ச்சி மனநிறைவைத்தந்தது.

'பரியன் வயல்' சே.குமார்.

சனி, 13 பிப்ரவரி, 2010

பழனி பக்தர்கள் தலையில் மொட்டை..!



றுபடை வீடுகளில் ஒன்றான திருஆவினங்குடி என்று அழைக்கப்படும் பழனி மலை தமிழகத்தில் இருக்கும் பிரபல கோவில்களில் ஒன்று. தைப்பூசத்திற்கு தமிழகம், கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஏராளமான முருக பக்தர்கள் நடைப் பயணமாக வந்து முருகனின் அருள் பெற்றுச்செல்வார்கள். அப்படிப்பட்ட முருகனின் கோயில் உள்ள பழனியில் வியாபாரிகள் செய்யும் பித்தலாட்டங்களால் நமது தமிழக கோயில்களின் தரம் தாழ்ந்து வருகிறது என்றால் மிகையாகாது.

இது நெடுங்காலமாக நடக்கும் நிகழ்வு என்றாலும் தற்போது மிகவும் கேவலமானதாக, முருக பக்தர்களை கொள்ளை அடிக்கும் ஈன மனிதர்கள் நிறைந்த இடமாக அழகன் முருகனின் படைவீடு மாறியுள்ளது என்பது கேவலமாக உள்ளது.

சில மாதங்கள் முன்பு என்னுடன் அலுவலகத்தில் பணிபுரியும் கேரளா நண்பர் ஒருவர் விடுமுறையில் நாட்டுக்கு சென்றபோது நண்பர்களுடன் பழனி சென்றுள்ளார். டாடா சுமோவில் சென்ற அவர்களை பார்த்ததும் மலையாளிகள் என்று தெரிந்து கொண்டு, கோயிலில் சாமி கும்பிட நாங்கள் உதவி செய்கிறோம் என்று நம்பும்படியாக பேசியிருக்கிறார்கள். நீண்ட நேர பேச்சுக்குப்பின் 200 ரூபாய் என்று முடிவு செய்து ஒருவர் அவர்களுடன் சென்றுள்ளார்.ஆனால் அவர் எந்த உதவியும் செய்யவில்லை. சாமி கும்பிட்டு திரும்பியதும் அவர்கள கார் நிறுத்திய இடத்துக்குப் போனதும் அவர் ஒரு பில் எடுத்துக் கொடுத்துள்ளார். அதில் கைடாக இருந்ததற்கு 200 ரூபாயும், அபிஷேகத்துக்கு பால் வகையரா, ஐயருக்கு கொடுத்தது என்று எதோ ஒரு கணக்கு எழுதி 1000 ரூபாய் கேட்டுள்ளார். நண்பர் உங்களுக்கு பேசியது 200 மட்டும்தானே என்று கேட்க, மத்ததெல்லாம் யார் கொடுப்பா..? என்று அவர் திருப்பி கேட்டிருக்கிறார். வாக்குவாதம் முற்ற அவரது நண்பர்களுக்கும் அந்த வழிப்பறிக் கும்பலுக்கும் பிரச்சினை பெரியதாகியிருக்கிறது. இவ்வளவும் நடந்தும் இது தினம் தினம் நடக்கும் நிகழ்வுதான் என்பதுபோல் யாரும் கண்டு கொள்ளவில்லை. கேரள நண்பர்களின் கை ஓங்கவே, சரி 200 ரூபாய் கொடுங்க என்று பணிந்துள்ளது அந்தக் கும்பல்.

எனது சகோதரர் மனைவியுடன் சாமி கும்பிட பழனி சென்றுள்ளார். பேருந்து நிலையத்தில் இருந்து குதிரை வண்டியில் அடிவாரம் சென்றுள்ளார். குதிரை வண்டிக்காரன் 20 ரூபாய் பேசியுள்ளான். வரும் போதே அங்கு இருக்கும் ஒரு கடை பற்றி சொல்லி உங்களுக்கு எல்லா உதவியும் செய்வாங்க. நம்ம கடைதான் எனக்கு தர வேண்டிய 20 ரூபாயையும் அங்க கொடுத்தாப் போதும் என்று சொல்லியுள்ளான். இவரும் நம்பிவிட்டார்...

அடிவாரத்தில் அந்தக் கடை முன்பு இறக்கிவிட்டு கடைக்காரரிடமும் கூப்பிட்டு சொல்லிவிட்டார். அண்ணனை உட்காரச் சொல்லி இரண்டு கேனில் பால், அர்ச்சனை சாமாங்கள், மாலை எல்லாம் எடுத்து வைத்து பில் எழதி கையில் கொடுத்துள்ளனர். பார்த்த அண்ணாவிற்கு மயக்கம் வராத குறைதானாம். ஒரு நோட்டு போட்டிருந்தானாம். என்னது ஆயிரமா? எனக்கு வேண்டாம் என்றதும் எல்லாம் இதுல அடங்கிடும் நீங்க எதுவும் கொடுக்க வேண்டாம்.ஐயருக்குக்கூட நாங்க கொடுத்துடுவோம் என்றதும் அண்ணா சண்டையிட்டு ஒரு செட்டை 500 ரூபாய் கொடுத்து எடுத்துள்ளார். அவருடன் கைடாக வந்தவன் எனக்கு 200 தனி என்று சொன்னதும் அண்ணாவிற்கு எதோ உறைக்க, அவனுடன் மீண்டும் கடைக்கு திரும்பியுள்ளார். அங்கு சண்டையிட்டு பணத்தை திருப்பப் பெற்று முருகனை தரிசித்து திரும்பியுள்ளார்.

இதுபோல் தினம்தினம் எத்தனையோ நிகழ்வுகள். இது அரசுக்குத் தெரியுமா? தெரிந்தால் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? எத்தனை அப்பாவிகள் பாதிக்கப்பட்டிருப்பார்கள்? அவர்களில் யாரும் காவல்துறையிடம் சொல்ல வில்லையா? இல்லை காவல்துறையும் இதற்கு உடந்தையா? கோயில் அறங்காவல் குழுவிற்கு தெரியாமல் நடக்கிறதா? அல்லது அறங்காவல் துறைக்கும் பங்குண்டா? பழனிக்கு வரும் பக்தர்களின் தலையில் மொட்டையடிக்கும் கும்பலை கட்டுப்படுத்தாவிட்டால் பழனி முருகனின் பக்தர்கள் குறைவதற்கான வாய்ப்பு அதிகம் என்பதைவிட அதுதான் உண்மை என்பதே நிதர்சன உண்மையாகும்.

அரசும் அறநிலையத்துறையும் விரைவில் இதற்கு ஒரு முடிவு எடுக்குமா என்பது பழனியில் இருக்கும் அந்த தண்டாயுதபாணிக்கே வெளிச்சம்...!

-சே.குமார்