மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

புதன், 27 ஜூன், 2018

செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)

ஜுன் - 19 எங்கள் பிளாக் தளத்தின் ' கேட்டு வாங்கிப் போடும் கதை'யில் பகிரப்பட்ட எனது சிறுகதை. வாசித்து தங்கள் கருத்தைச் சொல்லுங்க...

கதையைப் பகிர்ந்தமைக்கு எங்கள் பிளாக் ஸ்ரீராம் அண்ணாவுக்கும் எங்கள்பிளாக் ஆசிரியர் குழுவுக்கும் நன்றி.

*****

செல்வம் 

காலையில் எழும்போதே ஏனோ செல்வம் ஞாபகத்துக்குள் வந்தான். அவனைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் மெல்ல மெல்ல எழுந்து என்னை ஆக்கிரமிக்க ஆரம்பித்தது. 

செல்வத்தைப் பார்த்து பல வருடங்களாகிவிட்டது.  இப்போது இருவருக்குள்ளும் தொடர்பே இல்லை. ஏனோ இன்று அவன் நினைவாய் இருந்தது.

என்னோட அலமாரியைத் திறந்து கல்லூரியில் நண்பர்கள் எழுதிக் கொடுத்த ஆட்டோகிராப் டைரியை எடுத்து மெல்லப் பக்கங்களை நகர்த்தினேன். விதவிதமான கையெழுத்தில்... கட்டுரையாகவும் கவிதையாகவும் காவியமாகவும் எழுதி கையெழுத்திட்டிருந்தார்கள்.

பெண்களின் ஆட்டோகிராப் பார்க்கும் போது இவர்கள் எல்லாம் இப்ப எங்கே... எப்படி இருப்பார்கள்..? என மனசுக்குள் தோன்ற அன்று பாவாடை தாவணியில் அழகுச் சிட்டுக்களாய் பார்த்த பெண்கள் எல்லாம் இந்த இருபது ஆண்டுகளில் குடும்பம் குழந்தைகள் என எத்தனை மாற்றங்களைப் பெற்றிருப்பார்கள் என்று நினைத்துச் சிரித்துக் கொண்டேன். என் கை தொப்பையைத் தடவிக் கொண்டது.

மெல்ல பக்கங்களைப் புரட்டி வர செமஸ்டரில் பேப்பர் காட்டவில்லை என்ற கோபத்தில் ராஜூ எழுதியிருந்த 'நல்லவனாய் இருந்தால் நடுத்தெருவில்தான் நிற்பாய்' என்ற வரிகளைப் படித்துச் சிரித்துக் கொண்டேன். நல்லவனாய் இருப்பதால் எத்தனை சிக்கல்களை வாழ்வில் எதிர்க்கொள்ள வேண்டியிருந்தது... வேண்டியிருக்கிறது. ராஜூ தீர்க்கதரிசிதான்... சரியாகத்தான் சொல்லியிருக்கிறான். ஆமா ராஜூ இப்ப எங்க இருப்பான்... எப்படியிருப்பான்...?

அடுத்தடுத்த பக்கங்களை மெல்ல நகர்த்திக் கொண்டு வர, 'இறுதிவரை என்னில் நீயும் உன்னுள் நானும் என்பதைச் சொல்லிக் கொள்ளாமலே பிரிகின்றோம் நட்பாய்... இது வேடிக்கையாய் இருக்கிறது என்று நினைப்பதே வேதனையாக இருக்கிறது. வாழ்வில் என்றேனும் சந்திக்க நேர்ந்தால் அன்றேனும் மூன்றாண்டுகள் பூட்டி வைத்ததை நம்மால் சொல்லிக் கொள்ள முடியுமா...?'  என அனு எழுதியிருந்த வரிகளைப் பார்த்த போது ஏனோ விரல்கள் அந்த எழுத்தைத் தடவின. கண்ணில் இருந்து கண்ணீர் மெல்ல எட்டிப் பார்த்தது. அனு இப்ப எங்கே இருக்கே...?

அனுவை மனதார காதலித்தவன்தான்... ஏனோ கடைசி வரை நானும் சொல்லவில்லை... அவளும் என்னைக் காதலித்தாள் என்பதை ஆட்டோகிராப் மூலம் அறிந்த போது அவளும் ஏன் சொல்லவில்லை என்ற யோசனைக்குப் பதிலே கிடைக்கவில்லை... இவ்வளவுக்கும் இருவரும் நெருங்க நட்பாய்த்தான் இருந்தோம். பெரும்பாலான நாட்கள் சைக்கிளை உருட்டிக் கொண்டு பேசியபடியே கல்லூரிச் சாலையில் நடந்து வந்திருக்கிறோம். நண்பர்கள் எல்லாம் அவளையும் என்னையும் இணைத்துப் பேசும் போதெல்லாம் சிரித்தபடியே கடந்திருக்கிறாள்.  அனுவைத் தொலைத்தவன் நான்தானே... இனி யோசித்து என்னாவது...?

மெல்லப் பக்கங்கள் நகர, 'நமக்குள் எதற்கு இந்த ஆட்டோகிராப்... உன்னில் நானும் என்னுள் நீயும் எப்போதும் இருப்போம் நண்பா...' என எழுதி அழகாய் கையெழுத்திட்டு முகவரியும் எழுதியிருந்தான் காலை முதலாய் என்னை ஆக்கிரமித்திருந்தவன்.

செல்வம்...

கல்லூரியில் என்னுடன் ஒட்டிக் கொண்ட நட்புக்களில் முதன்மையானவன்.  எப்பவும் சிரிக்கச் சிரிக்கப் பேசுபவன்....  எல்லாருக்கும் பிடித்தவன்.... பேராசிரியர்களின் செல்லப் பிள்ளை... அழகாக, அருமையாகப் பாட்டுப் பாடுவான்....  அவன் பாட்டுக்கென்றே கல்லூரியில் ஒரு ரசிகர் கூட்டம் உண்டு.
செல்வம் ஒண்ணும் பெரிய பணக்கார குடும்பம் கிடையாது.... சாதாரண விவசாயக் குடும்பம்... அவனுக்கு மேலே இரண்டு அக்கா... அவனுக்குப் பின்னே ஒரு தங்கையும் தம்பியும்... விவசாய வேலை எல்லாம் அவனுக்கு அத்துபடி... விடியற்காலையில் எழுந்து உழவு ஓட்டிவிட்டு கல்லூரிக்கு நாலு கிலோமீட்டர் சைக்கிள் ஓட்டிக் கொண்டு வருபவன்.

கல்லூரி முடிந்து வீட்டுக்குப் போகும் போது உரமூட்டையோ மாடுகளுக்கான தீவன மூட்டையோ தூக்கிக் கொண்டு போவது அவன் வாடிக்கை. அவனையும் ஒருத்தி காதலித்தாள். அவள் வேறு யாருமல்ல எங்கள் வகுப்புத் தோழி மல்லிகாதான்... ரெண்டு பேருக்குள்ளும் காதல் இருப்பதை இறுதி ஆண்டில்தான் அறிய முடிந்தது. அறிந்தபின் அது திவிரக் காதலாக மாறியது. கல்லூரி முடிந்த பின்னும் அவன் அவளைப் பார்ப்பதற்காகவே ஊரில் இருந்து நாலு கிலோ மீட்டர் சைக்கிள் மிதித்து வந்து கொண்டிருந்தான்.

ஏனோ தெரியவில்லை அவர்களின் காதலும் கை கூடவில்லை... இருவரும் தனித்தனி வாழ்க்கையை தனதாக்கிக் கொண்டார்கள். அவர்களின் காதலும் என்பதில்  ஆட்டோகிராப்பில் அனு எழுதும் வரை தெரியாமலேயே இருந்து அதன் பின்னும் கை கூடாத என் காதலும் அடக்கமே.

செல்வத்தின் திருமணத்துக்கு அவன் ஊருக்குச் சென்றேன். மற்ற நண்பர்களுக்கு அவன் சொல்லவில்லை. நவநீதனுக்கு மட்டும் சொன்னேன் என்றான். ஏனோ அவனும் வரவில்லை. கிராமத்தில் திருமணம்... மண்டபத்துக்குச் செல்லாத கல்யாணம்... பெரிய கொட்டகை போட்டு தடபுடலாய் திருமண விருந்து வைத்து சிறப்பாக திருமணத்தை நடத்தினார் செல்வத்தின் அப்பா...

அக்காக்கள் திருமணம் முடிந்து அவனுக்கு அடுத்த தங்கைக்கும் திருமணம் முடித்து அவன் திருமணம் செய்து கொண்ட போது முப்பத்திரண்டை தாண்டியிருந்தான். அவனின் அத்தை பெண்ணே அவனின் மனைவியாய்... அவள் பெயர் கூட மல்லிகாதான் என்பதையும் இங்கு சொல்லியாக வேண்டும்.

அவனின் திருமணத்தின் போது என் மகளுக்கு நாலு வயசு... மனைவியின் வயிற்றில் அடுத்த குழந்தை... வயிற்றைத் தள்ளிக் கொண்டு வந்த என் மனைவியிடன் தங்கச்சி அடுத்ததும் மருமகளாப் பொறந்தா அனுன்னு பேர் வையின்னு சொல்லி சிரித்தான். வச்சிட்டாப் போச்சு... எனச் சிரித்தாள் என் ரகசியங்கள் தெரிந்த மனைவி ராதா.

என்னோட ஒரு ரகசியம் மட்டும் இதுவரைக்கும் யாருக்கும் தெரியாது... மனைவி உள்பட. ஒரு முறை எங்க ஊர் கார்த்தி மச்சான் பாலத்துக்கு கீழே உக்கார்ந்து பீர் குடித்தான். அவனுடன் நான் பேசிக் கொண்டு அமர்ந்திருந்தேன். மச்சான் இது ஒண்ணும் பண்ணாதடா... சூட்டைக் குறைக்கும்... உடம்புக்கு நல்லது எனச் சொல்லி குடிக்கச் சொன்னான். நான் மறுத்து மறுத்துப் பார்த்து கடைசியில் அவன் தொல்லைக்காக ஒரு மிடறு குடித்துப் பார்த்தேன்... ஏனோ அந்தச் சுவை எனக்குப் பிடிக்கவில்லை. அதுவே முதலும் கடைசியுமாய்...  அது குறித்து இது வரை யாரிடமும் சொன்னதில்லை.

செல்வத்தின் திருமணத்துக்குப் பின் அவனுடனான தொடர்பு மெல்ல மெல்லக் குறைந்து டிசம்பர் முப்பத்தி ஒன்றாம் நாள் காலண்டர் போல ஆகிவிட்டது. அதன் பின் எந்தத் தொடர்பும் இல்லை. இப்ப எப்படியிருக்கிறான்...? எங்கே இருக்கிறான்...? எத்தனை குழந்தைகள்...? என எதுவுமே தெரியாது.

புதுப்புது நட்புக்களும் உறவுகளும் வர கூடப் படித்த நட்புக்களை எல்லாம் மறந்து விட்டேன்... இது எல்லாருக்கும் நிகழ்வதுதானே. ஒருவனைத் தவிர மற்ற எவரோடும் இப்போது தொடர்பில் இல்லை. அந்த ஒருவனும் உள்ளூர்க்காரன் என்பதாலயே நட்பு தொடர்கிறது. இருந்தும் நான் வெளியூரில் வேலை பார்ப்பவன்... அவனோ உள்ளூரில்.... போன் செய்தாலும் அங்கிருக்கிறேன்.. இங்கிருக்கிறேன்... எனச் சொல்வதால் அவனுடன் பேசுவதைக் குறைத்து ஊருக்குப் போகும்போது மட்டும் சந்தித்து கொஞ்சம் உரையாடுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறேன்.

அப்புறம் அனுவைப் பார்க்கவே இல்லையான்னு நீங்க கேட்கலாம்... ஒரு முறை பார்த்தேன்... அந்தப் பேக்கரியில் கேக்கும் ரஸ்க்கும் வாங்கி வரலாம் என மகளுடன் சென்ற போது ஒரு பெண் இரண்டு குழந்தைகளுடன் கேக் வாங்கிக் கொண்டிருந்தாள். அவளைப் பார்க்கும் போது அனு போலத்தான் இருந்தாள். என்னைப் பார்த்தவள் சற்றே நகர்ந்து தன் குழந்தைகளிடம் என்ன வேண்டும் எனக் கேட்பதில் கவனம் செலுத்தினாள்.

அது அனுதானா என்ற யோசனை எனக்கு...  அவ அக்கா செண்பாவும் இப்படித்தான் இருப்பாள். ஒருவேளை செண்பாவாக இருந்தால்... பேச யோசனையாக இருந்தது.... இப்படி யோசித்து யோசித்துத்தான் பலவற்றை இழந்தேன் என்றாலும் யோசிப்பதை இன்னும் இழக்கவில்லை.

கூர்ந்து கவனித்த போது நாசி அருகே அந்த ஒற்றை மச்சம்... அது அவள் அனுதான் என பறை சாற்றியது. அவளிடம் எத்தனை மாற்றம்... கெச்சலாய்.... சிவப்பாய்.... இடையில் புரளும் கருகரு முடியோடு பார்த்த அனு... குண்டாய்.... தோளில் புரளும் வெட்டப்பட்ட நரை கலந்த முடியுடன் இருந்தாள்.

அனு எனச் சொல்ல வாயெடுக்கும் போது காரின் ஹாரன் சப்தம் கேட்க, 'இந்தா வாறேங்க.... உங்கப்பா கால்ல வெந்நித்தண்ணிய கொட்டிக்கிட்டுத்தான் நிப்பாரு... உங்களைக் கூட்டிக்கிட்டு வந்து ஏதாச்சும் வாங்கிப் பாக்கணும்... அப்பத் தெரியும் எவ்வளவு நேரமாகுன்னு...' எனச் சொல்லியபடி அவசரம் அவசரமாக சில்லறையை வாங்கிக் கொண்டு விரைந்தாள்.

என்னை அறிந்ததாகவே அவள் காட்டிக் கொள்ளவில்லை.அவளை அறிந்த நான் அவள் முதுகுக்குப் பின்னே கண்ணைச் செலுத்த ‘அப்பா’வென பார்வைக்கு தடை போட்டது மகளின் குரல்.

செல்வத்தைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் மனசில் மீண்டும் மீண்டும் எழுந்து கொண்டேயிருந்தது. மனைவியிடம் சொன்ன போது எத்தனை வருசமாச்சுங்க... எங்கயிருக்காருன்னே தெரியாது... எப்படிப் போயி பாக்குறது.... நீங்க வேலை வேலையின்னு நல்லது கெட்டதுக்கு கூட ஊருக்குப் போறது அரிதாகிப் போச்சு... எல்லாத்துக்கும் நாந்தான் ஓடுறேன். ஊருல உள்ள சொந்தங்களே உங்களுக்கு மறந்து போயிருக்கும். இதுல செல்வ அண்ணனை எங்க போயி தேடுவீங்கன்னு கேட்டா. அவ கேட்டதும் சரிதான்... வேலை... வேலையின்னு ஊருப்பக்கமே போறதில்லைதான்.

செல்வத்தோட ஊருக்குப் போயி அவன் அப்பாவைப் பார்த்தா... எங்க இருக்கான்னு சொல்லப் போறாரு...  நான் அப்பா, அம்மா, அண்ணன் அப்படின்னு மூணு உறவைக் கடந்த பத்து வருடங்களில் இழந்திருக்கிறேன். செல்வத்தின் அப்பாவும் அம்மாவும் உயிரோடு இருப்பார்களா...?  என்ற கேள்வி என்னுள் எழ, யோசனை அதிகமானது.

அவர்கள் இல்லைன்னா என்ன ஊரில் யாரிடமாச்சும் விசாரிச்சா சொல்லப் போறாங்க... எது எப்படியோ இன்று இரவு கிளம்பினால் நாளை அவனைப் பார்த்துவிட்டு நாளை இரவு கிளம்பி மறுநாள் டூட்டிக்கி வந்துடலாம் என முடிவு செய்து மனைவியிடம் மெல்லச் சொன்னேன்.

முதலில் எதுக்குங்க என்று மறுத்தவள் பின்னர் பத்திரமாப் பொயிட்டு வாங்க என சின்னப் பிள்ளையிடம் சொல்வதைப் போல் சொன்னாள். அவளுக்கு நானும் எனக்கு அவளும் எப்பவும் குழந்தைங்கதான். அப்பா என்ன சின்னப் பிள்ளையான்னு என் மகன் அவளைக் கேலி பண்ணினாலும் அவளுக்கு நான் பிள்ளைதான்.

காளையார் கோவிலில் இறங்கி, வரலாற்றுச் சிறப்பு மிக்க காளீஸ்வரர் கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு செல்வத்தின் ஊர் வழியாக தாயமங்கலம் செல்லும் டவுன் பஸ்ஸிற்காக காத்திருந்தேன். கையில் தேவகோட்டையில் வாங்கிய பழங்களும் சுவீட்டும்... பேருந்து வர கோவிலுக்குச் செல்லும் கூட்டத்துக்குள் இடித்துப் பிடித்து  ஏறி, இடம் கிடைக்காமல் நின்று கொண்டேன். பேருந்து நிறைந்த கூட்டத்தை தன்னுள் திணித்து மெல்ல நகர்ந்தது.

‘காயா ஓடை’ என்ற நிறுத்தத்தில் இறங்கினவனின் கண்ணில்பட்டது அந்த கண்ணீர் அஞ்சலி பேனர்... அதில் சிரித்துக் கொண்டிருந்தான் செல்வம்.

-'பரிவை' சே.குமார்.