மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

புதன், 16 ஆகஸ்ட், 2017சினிமா : உரு

ரு -  இது ஒரு சைக்கோ த்ரில்லர் கதை.

உன்னோட எழுத்துக்கு இப்போ மார்க்கெட் இல்லப்பா... வேணுமின்னா ஒரு த்ரில்லர் கதையா எழுதிக்கிட்டு வா என்று சொல்ல அதற்கான முயற்சியில் இறங்கும் எழுத்தாளன் படைக்கும் கொலையைக் கூட கலையாகச் செய்ய நினைக்கும் கதாபாத்திரம் உருப்பெற்று கொலை செய்வதுதான் படத்தின் கதை.

கதையின் நாயகன் ஒரு எழுத்தாளன்... ஒருபக்கம் அவனது எழுத்துக்கு மார்க்கெட் மதிப்பு போயாச்சு என பதிப்பகத்தார் வெளியிட மறுப்பதுடன், திகில் கதை எழுதிக்கிட்டு வா பார்க்கலாம் என்று சொல்லிவிட, மறுபக்கமோ வேலைக்கு போகும் மனைவிக்கு கணவன் எழுத்துக்குள் அடைபட்டுக் கிடப்பதால் குழந்தை குட்டியின்னு சந்தோஷ வாழ்க்கை இல்லாமல் இருக்கும் கவலை மற்றும் ஒரு ஆள் சம்பளத்தில் குழந்தை பெற்றுக்கொண்டு வாழ இயலாது என்ற உண்மையான வருத்தம்... இக்காரணிகளின் விளைவாக கொஞ்சம் கோபமான வார்த்தைகள்... அதன் பின் கொஞ்சல்... தன்னை எழுத்தாளனாய் நிலைநிறுத்தி, குடும்ப வாழ்க்கையை சந்தோஷமாக நகர்த்த துடிக்கும் நாயகன் திகில் கதை எழுத முடிவெடுத்து அதற்காக தனி இடம் தேடி நண்பனின் மேகமலை எஸ்டேட் பங்களா செல்கிறான்.

Image result for உரு விமர்சனம்

அவன் கதை எழுத, அதில் எழுதப்படும் வரிகள் உயிர் பெறுகின்றன... கொலையைக் கலையாகச் செய்யும் மர்ம மனிதன் வெளிவருகிறான்... அந்தச் சமயத்தில் மனைவி அவனைத் தேடி வருகிறாள்... அதன் பின்னான சம்பவங்கள் திகிலாய் பயணிக்க ஆரம்பிக்கின்றன.

மேகமலைக் காடு இரவு நேரத்தில் பயமுறுத்தத்தான் செய்கிறது. கணவனை அடித்து ஓலைப் பாயில் சுற்றி வீட்டுக்குள் தூக்கிப் போடும் மர்ம மனிதன் மனைவிக்கு ஐந்து மணி நேரத்தில் வீட்டுக்குள் வராமல் உன்னைக் கொல்வேன் என்று மிரட்டல் விடுகிறான். இந்த மரணப் போராட்டத்துக்கு இடையில் பக்கத்து வீட்டு கர்ப்பிணிப் பெண் உள்பட சிலரைக் கொடூரமாகக் கொல்கிறான். தனக்கு உதவச் சொல்லி அண்ணனுக்குப் போன் செய்கிறாள்... அங்கு வரும் அவனும் கொல்லப்படுகிறான்... காட்டு இலாகா அதிகாரியிடம் உதவி கேட்கிறாள்..? அதுவும் தவிடுபொடி ஆகிறது... கணவன் பிழைத்தானா..? அவள் தப்பித்தாளா..? மர்ம மனிதன் யார்...? என்பதை விறுவிறுப்பாகச் சொல்ல முயன்று தோற்றிருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

எழுத்தாளனாய் 'மெட்ராஸ்' கலையரசன்... விரக்தி அடைந்த எழுத்தாளனைப் பிரதிபலிக்கிறார். கஞ்சா பீடியைப் பற்ற வைத்ததும் எழுத்துக்கான கரு உதிப்பதும்  எழுதும் போது அடிக்கடி அந்த பீடியை பற்ற வைப்பதும்... எழுத்து அருவியாய் வர ஏதோ ஒரு போதைக்கு அடிமையாக இருக்கு வேண்டும் என்பதாய் காட்டப்படுவது கண்டனத்துக்குரியது... போதை இருந்தால்தான் எழுத முடியும் என்றால் இன்று இணைய வெளியில் லட்சக்கணக்கான எழுத்தாளர்கள் இருக்க முடியாது. விரக்தியில் பேனா முனையை உடைப்பது ஏற்றுக் கொள்ளக்கூடியதே... நாமெல்லாம் பேப்பரைக் கிழித்துக் கிழித்து எறிந்தவர்கள்தானே...

தன்ஷிகா... எழுத்தாளன் மனைவி... வேலைக்குப் போகும் பெண்... குழந்தை குட்டி என குடும்ப வாழ்க்கைக்குள் போகத் துடிப்பவள்... மேகமலைக்கு வந்த பின் மர்ம மனிதனிடம் மாட்டி அவர் படும் பாடு... அப்பப்பா... படத்தில் கலையரசனைவிட மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்.

கதாபாத்திரம் சைக்கோ ஆகும் போதே பிசிறு தட்ட ஆரம்பிக்கும் படத்தில் கலையரசன் மர்ம மனிதனைப் பார்க்கும் இடத்தில் நமக்கு இப்படித்தான் இருக்கும்... இவனாகத்தான் இருப்பான் என்று தோன்றும் போதே படத்தில் தொய்வு வந்து விடுகிறது.  பிக்பாஸ் வீட்டில் பேய் நாடகம் போடுறேன்னு முன்னாலே சொல்லிட்டு போட்டதால உப்புச் சப்பு இல்லாத மாதிரித்தான் மர்ம மனிதனுக்கும் தன்ஷிகாவுக்கும் இடையில் நடக்கும் போராட்டம் இருக்கிறது. அந்த இடத்தில் கொஞ்சமேனும் அழுத்தம் சேர்ப்பது தன்ஷிகாவின் நடிப்புத்தான் என்றால் மிகையாகாது. 

ஐந்து மணி நேரம் எனச் சொல்லி ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மர்ம மனிதன் - நாயகி எபிசோடை... மெகா சீரியல் அழுகைச் சீனை இழுப்பது போல் வளவளான்னு கொண்டு செல்வது திகில் படத்துக்கான திகிலைத் தின்று ஏப்பம் விடுகிறது. இசை, ஒளிப்பதிவு எல்லாம் அருமை. நடிகர்கள் சொற்பமே என்றாலும் அவர்களின் தேர்வு கன கச்சிதம். 

கிளைமேக்ஸில் என்ன சொல்கிறார்கள் என்பது ரொம்ப யோசித்தால் புரியலாம்... எனக்கு குழப்பமே மிஞ்சியது. லாஜிக் ஓட்டைகள்... விறுவிறுப்பில்லாத இழுவைக் காட்சிகள் இருந்தாலும் திகில்கதை பிடிக்கும் என்பவர்கள் தாராளமாய்ப் பார்க்கலாம். 

'தரமணி' பிடிக்கவில்லை என்று சொல்பவர்களுக்கு 'உரு' ரொம்பப் பிடிக்கலாம் என்பது என் எண்ணம்.

படம் வந்து ரொம்ப நாளாச்சு... ஏதாவது எழுதணும்ன்னு யோசிச்சப்போ எதுவும் எழுத தோணலை... அதனால் உரு இங்கு உருப்பெற்றுவிட்டது.

-'பரிவை' சே.குமார்.

வியாழன், 10 ஆகஸ்ட், 2017'பிக்பாஸ்' மனிதர்களை எடை போடலாமா..?

பிக்பாஸ் பற்றி எழுதிய பதிவுக்கு வந்த கருத்துக்களில் நண்பர் வருணின் கருத்து மிகவும் வித்தியாசமாகவும் சற்றே கோபமாகவும் வந்திருந்தது. பிக்பாஸ் பற்றி எழுதியது எப்படி எனது விருப்பமோ அப்படித்தான் கருத்து என்பது அவரவர் விருப்பம்... அவர் மனதில் உள்ளதை தெள்ளத்தெளிவாகச் சொன்னதில் எனக்கு எவ்வித வருத்தமும் இல்லை. அதே நேரத்தில் நான் கமல் ஆதரவாளனும் இல்லை... எதிர்ப்பாளனும் இல்லை... ஆண்ட, ஆளத்துடிக்கிற பரம்பரையும் இல்லை... இதையெல்லாம் விட திராவிட அடிமையும் இல்லை என்பதை சொல்லித்தான் ஆகவேண்டும். இன்ன சாதியாய் இருப்பாய் என்று அவராக, மாவட்டத்தை வைத்து சாதியைக் கணித்திருக்கிறார் ஆனால் அது தவறான கணிப்பு. என்னைப் பொறுத்தவரை சாதி பார்த்துப் பழகுவதும் இல்லை... சாதியைத் தூக்கி தலையில் வைத்துக் கொள்வதும் இல்லை... அதனால் அந்த வரிகள் சிரிப்பைத்தான் கொடுத்தது.

மேலும் அந்தப் பதிவில் கமல் குறித்து அதிகம் எழுதவும் இல்லை... போராளிகளாய் தங்களைக் காட்டிக் கொண்டு புத்தி சொல்வோரைப் பற்றிய பகிர்வாய்த்தான் எனக்குத் தெரிந்தது. சரி விடுங்க... ஒவ்வொருவரின் பார்வையும் வித்தியாசப்படும்தானே... வருணின் கருத்துக்களிலும் அவரின் பதிவுகளிலும் ஒரு சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அவர் தளத்தை தொடர்ந்து வாசிப்பவன் நான்... கருத்துப் போர்களையும் வாசிப்பதுண்டு. கருத்துப் போர் செய்யத் தெரியாததால் அதிகம் கருத்து இடுவதில்லை. நிறைய விஷயங்களை நிறைவாய் எழுதக்கூடியவர் அவர்... அவரைப் போல் என்னால் எழுத இயலாது... நானெல்லாம் போகிற போக்கில் கிறுக்கிச் செல்லும் ஆள்தான்...அவரின் கருத்துக்கு மட்டுமின்றி எனது முந்தைய பகிர்வில் கருத்துச் சொன்ன அனைவருக்கும் நன்றி.

இதுவும் பிக்பாஸ் பற்றிய பகிர்வுதான். ஒவியாக்கள் கொண்டாடப்பட வேண்டியவர்களா...? ஆரவ்கள் செய்ததை ஏற்றுக் கொள்ளலாமா..? ஜூலிக்கள் ஒதுக்கப்பட வேண்டியவர்களா..? சிநேகன்கள் செய்வது சரியா..? என நிறையக் கேள்விகளை நம்மிடம் மற்றுமின்றி நம்மைச் சுற்றியிருப்பவர்களிடமும் கேட்கத் தோணலாம். ஏன் நமக்குள் எழும் இதே கேள்விகள் அவர்களுக்குள்ளும் எழலாம் இல்லையா..?

ஓவியாவைப் போல் ஒரு பெண் நம் வீட்டில் இருந்தால் தூக்கி வைத்துக் கொண்டாடுவோமா அல்லது தூக்கிப் போட்டு மிதிப்போமா என்று சிலர் முகநூலில் கேட்டிருந்தார்கள். ஓவியாவைப் போல் ஒரு பெண், தனக்குச் சரியெனப்பட்டதை... மனதில் நினைத்ததை... அப்படியே வாழ நினைத்தால்... அப்படியான ஒரு வாழ்க்கை வாழ்ந்தால் அவரை அப்படியே வளர விடவேண்டும் என்பதுதான் என் எண்ணம். ஆனால் கிராமங்களில் அப்படி வளரும் பிள்ளைகளை 'பொட்டப் பிள்ளைக்கு அடக்கம் வேணும்...' என்றும் 'சமஞ்சபுள்ள மாதிரியா நடந்துக்கிறே' என்றும் அடக்கி வளர்ப்பதைப் பார்க்கலாம். எங்களுடன் கல்லூரியில் படித்த தோழி இப்படித்தான் தனக்கு எது சரியெனப்படுகிறதோ அதை தயங்காமல் செய்து அப்படியே நடந்து கொள்ளவும் செய்தார். எதற்கும் பயப்படமாட்டார்.. இது சரி... இது தவறென மூஞ்சிக்கு நேராக சொல்லிவிடுவார். அவரை அடங்கி ஒடுங்கி வாழ் என்று யாரும் சொல்லவில்லை.. சொல்லப் போனால் அவரின் அந்தக் குணம்தான் எல்லாருகும் அவரைப் பிடிக்கும்படி செய்தது. 

சரி ஓவியாக்கு வருவோம்... அவரின் தனிப்பட்ட தன்மை எல்லாரையும் கவர்ந்ததில் ஆச்சர்யமில்ல... ஆனாலும் நான் கொடுத்ததைக் கொடு போய்விடுகிறேன் என்று சொல்லி வாங்கிக் கொண்டு பின்னரும் துரத்துவதும்... மிரட்டுவதும்... நான் இப்படித்தான் என்று சொல்லும் ஒரு பெண், தூக்கிப் போட்டுட்டுப் போயிடுவேன் என்று உதார் விட்டு விட்டு மீண்டும் மீண்டும் சீண்டி விளையாடுவதும்... அதற்காக எல்லை தாண்டுவதும் சரியானதல்ல... இப்படியான மனநிலை கொண்ட ஆணோ அல்லது பெண்ணோ தூக்கி வைத்துக் கொண்டாட வேண்டியதில்லை... பிடித்தவர்கள் எது செய்தாலும் சரி என்ற மனநிலை நம்மில் மாற வேண்டும். நடவடிக்கை மாற்றம் என்பது சரியா.. தவறா... என்பதை புரிந்து தூக்குவதும் தூர எறிவதும் இருக்க வேண்டும்.

மருத்துவ முத்தம் கொடுத்த... கொடுக்கும் ஆரவ்கள்... ஆபத்தானவர்கள் அல்ல என்றாலும் தங்களுக்கு தேவை என்றால் ஒட்டிக் கொள்ளவும், தேவையில்லை என்றால் வெட்டிக் கொள்ளவும் அவர்களால் முடியும். ஒருவரின் மனதுக்குள் நுழைந்து ஒரு பிம்பத்தை உருவாக்கிவிட்டு உடனே வெளிவர இவர்கள் தயங்குவதில்லை. அப்படியான அதிரடி மாற்றத்தைப் பாதிக்கப்பட்ட நபரால் ஏற்றுக்கொள்ள முடியுமா என்பதைப் பற்றி சிந்திக்கத் தெரியாதவர்கள் அல்லர் இவர்கள்... சிந்திக்க நினைக்காதவர்களே இவர்கள். உன்னைப் பழி வாங்குகிறேன் பார்  என நேற்றைய எதிரியை இன்று தூக்கி வைத்து கொண்டாடும் மனநிலை இவர்களுக்கு இன்பம் அளிக்கலாம் ஆனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு..? இந்தச் செயல் அவர்களின் வெந்த புண்ணில் வேலைத்தான் பாய்ச்சும் என்பதை அறியாதவர்கள் அல்லர்... அறிந்தே அதைச் செய்பவர்கள், என்ன இருந்தாலும் ஓவியாக்களுக்கும் இதில் பங்கு இருக்கும்போது ஆரவ்களை மட்டுமே திட்டுவது என்பது தவறு. ஆரவ்களின் ஆசைக்கு எங்கோ ஓரிடத்தில் ஓவியாக்கள் இடமளித்து விடுவது விபரீதங்களை விலைக்கு வாங்கும் நிலைக்கு கொண்டு செல்கிறது. ஆரவ்களில் செயல்களுக்கு அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்றில்லை என்றாலும் மன்னிப்புக் கேட்கும் மனிதர்களாக மாறும் ஆரவ்களை கேவலமாகப் பார்க்க வேண்டியதில்லை என்பதே என் எண்ணம். ஆனாலும் ஒரு முத்தம் கொடுத்துட்டு அதை மருத்துவ முத்தம் எனச் சொல்லும் மகத்தான இந்த மனிதர்கள் கொஞ்சம் கவனமுடன் அணுக வேண்டியவர்களே என்பதில் சந்தேகம் இல்லை.

நம்மில் பெரும்பாலானோர் ஜூலிகளாய்த்தான் இருக்கிறோம் என்றால் அதை கண்டிப்பாக ஒத்துக்கொள்ளமாட்டோம். ஆனால்அதுதான் உண்மை... அரிச்சந்திரனாய் உண்மை மட்டுமே பேசுவது என்பது இயலாத காரியம்... ஆனால் பொய் மட்டுமே வாழ்க்கையல்ல என்பதை உணர்ந்து வாழ எல்லாராலும் முடியும். ஒரு சிறு பொய்யை... அட இது சும்மா எனக் கடந்து போகத் தெரிந்தால் நாம் வாழ்க்கையை வாழக் கற்றுக் கொண்டுவிட்டோம் என்பதை உணரலாம். அதை விடுத்து அந்தப் பொய்க்கு மசாலா தூவி புதிதாக அடுத்தவருக்குக் கொடுக்கும் போதுதான் நாம் பொய்யிலே வாழத் தொடங்குகிறோம். இப்படித்தான் ஜூலிகள்... தனக்கான இலக்கை நோக்கிப் பயணிக்க உண்மையைவிட பொய்யே சிறந்த ஆயுதம் என்பதை மனதுக்குள் ஆணி அடித்து மாட்டி வைத்துக் கொண்டு அதற்கான வாழ்வை வாழத் துணிபவர்கள்... இதனால் அடுத்தவர் செய்ய நினைப்பதை தன்மேல் சுமத்தி, தன்னைச் செய்யத் தூண்டுவதை அறியாமல் பலி ஆகும் ஆடுகள்... புறம் பேசும் மனிதர்களிடையே பொய் பேசி இலக்கை அடைந்து விடலாம் என்ற நப்பாசையில் நாளுக்கு நாள் பொய்யில் நெய் ஊற்றி பிரகாசிக்க வைப்பவர்கள். அதிலிருந்து வெளிவந்தால் நல்லாயிருக்கும் என்றாலும் அந்த நடிப்பில் இருந்து வெளிவரத் தயங்குபவர்கள்... இப்படியே இருப்போமே என போலியாக நடிக்கத் தெரிந்தவர்கள்... இவர்கள் ஒதுக்கப்பட வேண்டியவர்கள் அல்லர்... நான் உத்தமன் எனக்கு பொய் பிடிக்காது என்று சொல்லும் நூறு சதவிகித சுத்தமானவர்களுக்கு ஜூலிகள் தள்ளி வைக்கப்பட வேண்டியவர்கள் என்றாலும் செய்த தவறுக்கு மன்னிப்புக் கேட்கும் இவர்கள் கவனிக்கப்பட வேண்டியவர்களே... அரவணைப்பே இவர்களை திருத்தும் மருந்து.

புறம் பேசாதார் யாருண்டு...? நானும்... நீங்களும்... அவர்களும்... இவர்களும்... எங்கோ ஒரு இடத்தில், ஏதோ ஒரு விஷயத்தில் புறம் பேசத்தானே செய்கிறோம். அதைத்தான் பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்கள் கேமராவை மறந்து செய்து கொண்டிருக்கிறார்கள். இதில் காயத்ரிகளும் சக்திகளும் மட்டுமின்றி சிநேகன்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். கட்டிப்புடி வைத்தியம் நோயாளிக்கு நல்லதென கமல் சொன்னதை தவறாகப் புரிந்து கொண்டவர்கள் சிநேகன்கள்... ஆறுதல் என்ற போர்வையில் கட்டிப்பிடிப்பது திரைக்கு அழகு... ஆனால் பொதுவெளிக்கு அழகல்லவே... ஆறுதல் சொல்ல ஆயிரம் வழிகள் இருக்க இது மட்டுமே உடனடி நிவாரணம் என நினைக்கும் மனிதர்கள் இவர்கள்... இவர்களின் கட்டிப்பிடி வைத்தியம் எதிர்பாலரிடம் மட்டுமே... இதைத் தவிர்த்துப் பார்க்கும் போது இவர்கள் மனிதாபிமானம் நிறைந்தவர்களாகத்தான் இருக்கிறார்கள்... எதுக்கெடுத்தாலும் பொசுக்கு பொசுக்குன்னு அழுகுறான் பாருன்னு ஊரில் சொல்வாங்க... இன்னொன்னும் சொல்லுவாங்க... ஆம்பளை அழக்கூடாதுன்னு.... ஆனாலும் சிநேகன்களின் மனசு இளகிய மனசு என்பதை பொசுக்கென்று பொங்கும் கண்ணீர் சொல்லத்தான் செய்கிறது ஆம்பளை அழலாம் என... கட்டிப்புடி வைத்தியம் தவறு என்பதை... அதுவும் எதற்கெடுத்தாலும் ஏய் அழாதே எனச் சொல்லி கட்டிப்பிடிப்பது என்பது தவறுதான் அதைச் செய்யக் கூடாதுதான்.

எது எப்படியோ பிக்பாஸ் நம்மை நாம் எடை போட்டுப் பார்க்க வைக்கிறது... இந்த நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்கினாலும் அங்கிருக்கும் மனிதர்கள் ஸ்கிரிப்படியோ அல்லது சுயமாகவோ நடித்தாலும் என் பார்வை இப்படியாகத்தான் இருக்கும். அந்த வீட்டுக்குள் நடமாடும் மனிதர்களை வைத்து நம்மை சுயபரிசோதனை செய்து கொள்ள முடியும் என்பதே என் எண்ணம். கருத்துக்கள் எப்படி வந்தாலும் இது பற்றி இன்னும் பேசுவேன்.

தூக்கிக் கொண்டாடப்பட்ட ஓவியாவும் வில்லியாக்கப்பட்ட ஜூலியும் இல்லாமல் பிக்பாஸ் போரடிப்பதாகச் சொல்கிறார்கள். காய் நகர்த்தும் காயத்ரியும் போய்விட்டால்... சீந்துவாரின்றிப் போகுமோ...?
-'பரிவை' சே.குமார்.

சனி, 5 ஆகஸ்ட், 2017பிக்பாஸ் பார்க்கக் கூடாதா..?

பிக்பாஸ்...

எங்கு பார்த்தாலும் பிக்பாஸ் பற்றியே விவாதங்கள்...

Image result for biggboss tamil

இந்தப் பதிவு கூட அது பற்றியதுதான்... விருப்பம் இருப்பவர்கள் மட்டும் தொடர்ந்து படியுங்கள். பிக்பாஸ் பிடிக்காதவர்கள் தயவு செய்து வாசிக்க வேண்டும். வாசித்துவிட்டு நான் கீழே சொல்லியிருப்பவர்களைப் போல் எனக்கு அறிவுரை சொல்ல வேண்டாம். ஏன்னா நான் விவசாயக் குடும்பத்தில் பிறந்து  மண்வெட்டி பிடித்தவன்தான்... எரவாமரம் போட்டு தண்ணீர் இறைத்தும்... நாற்றுப் பறித்தும்... வரப்பு வாய்க்கால் வெட்டியும்... கதிர் அறுத்தும்... கட்டுத் தூக்கியும் எல்லா வேலையும் பார்த்து வளர்ந்தவன்தான். விவசாயியின் வலியும் தெரியும் அந்த கஷ்ட ஜீவன வாழ்க்கையும் தெரியும். எனவே எனக்கு அறிவுரை வேண்டாம்... மன்னிக்கவும்... அறிவுரை சொல்லும் கருத்துக்களுக்கு விவாதம் செய்யும் மனநிலையில் நான் இப்போது இல்லை.

பிக்பாஸ் பற்றி பேசும் நீங்க நெடுவாசல் போராட்டத்துக்கு ஏன் பொங்கவில்லை... ரேசன் இல்லைன்னு சொல்லிட்டானுங்க அதுக்கு ஏன் போராட்டக்களம் அமைக்கவில்லை... இறப்பைப் பதிவு செய்ய ஆதார் அவசியம் என்று சொன்னதற்கும் பொங்கவில்லையே... ஏன்...? ஏன்...?? என சமூக வலைத்தளங்களில் பலர் குதித்துக் கொண்டிருக்கிறார்கள்... இவர்கள் எல்லாம் எத்தனை போராட்டங்களை முன்னெடுத்து நடத்தினார்கள்... இல்லை எத்தனை போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தார்கள் என்றுதான் தெரியவில்லை. 

மக்களைக் கவர்ந்த ஒரு நிகழ்ச்சி பற்றி முகநூலிலோ டுவிட்டரிலோ தங்கள் எண்ணங்களைப் பகிர்வதில் என்ன தவறு இருக்கிறது என்பதுதான் எனக்குப் புரியவில்லை. இதில் ஒரு நண்பர் பிக்பாஸ் பற்றி எழுதிய பதிவுக்கு கருத்திட்ட ஒருவர் விவசாயியின் வலி உனக்குத் தெரியலையா...? அவர்கள் போராட்டம் நடத்தும் போது நீ கேவலம் எழுதிக் கொடுத்ததை நடிக்கும் நாடகத்துக்கு இவ்வளவு சிரத்தையாக எழுதுகிறாயே என்பதுடன் மானே... தேனே... பொன்மானே... எல்லாம் சேர்த்து கருத்து இட்டிருந்தார். விவசாயியின் மகனாய்ப் பிறந்து அந்த வலியை எல்லாம் அறிந்தவர்கள்தான் அந்தப் பதிவை எழுதிய என் நண்பர்... அவர் சொன்ன ஒரே பதில் நான் இப்படித்தான் புடிக்கலைன்னா போயிடுங்க... என்ன புடுங்கணுமுன்னு கிளாஸ் எடுக்க வேண்டாம்... இதன் பின் பொங்கியவர் அடங்கிப் போய்விட்டார். இன்று விவசாயிகள் போராட்டம் கூட அரசியல் ஆக்கப்பட்டுத்தான் இருக்கிறது... விவசாயிகள் போராட்டம் என்றில்லை எல்லாப் போராட்டமுமே அரசியல் கலந்தவைதான் என்பதுதான் உண்மை. 

பிக்பாஸ் பதிவுகள் உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் அந்தப் பதிவைப் படிக்காதீர்கள்... விலகிச் செல்லுங்கள்... நீங்கள் கேட்கும் போராடினீர்களா என்ற கேள்வியை உங்களிடமே கேட்டு போராட்டக் களங்களுக்கு விரையுங்கள்... அதை விடுத்து நீ ஏன் அதற்கு எழுதுகிறாய்... நீ ஏன் இதற்கு எழுதுகிறாய் என்று கேட்க உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது. சமூக அக்கறையோடு பொங்குவதாய் நடிப்பதை விட, பிடித்ததைக் குறித்து எழுதுவது தவறில்லை என்பதே என் எண்ணம்... இந்தப் பொங்கு பொங்குகிறவர்கள்தான் காலை வணக்கத்துக்கும் மாலை வணக்கத்துக்கும் லைக்கிட்டு ஆயிரம் ஆயிரமாய் லைக் வாங்க வைக்கிறார்கள் என்பதை நம்மில் எத்தனை பேர் அறிவோம்...

Related image

இந்த நிகழ்ச்சி பிரபலமாக ரெண்டே காரணங்கள்தான்... அது 'ஆண்டவர்' என்று சொல்லப்படும் கமலும் 'ஆன்மா'வின் ராகமாய் இருக்கும் ஒவியாவும் மட்டுமே. இந்தாளுக்கு வேலை இல்லையா... இந்த நிகழ்ச்சி நடத்த வந்துட்டான் எனக் கோபமாய் பேசினார் என்னுடன் தங்கியிருக்கும் பக்கா பிஜேபி நண்பர். இதை கமல் நடத்துவதில் என்ன தவறு இருக்கிறது..? பலர் கமலின் திறமையான பேச்சைக் கேட்கவே சனி , ஞாயிறு மட்டும் பிக்பாஸ் பார்ப்பதாய்ச் சொல்கிறார்கள். இந்த நிகழ்ச்சியை கமல் தவிர வேறு யார் நடத்தினாலும் சொதப்பியிருப்பார்கள் என்பதை ஏற்றுக் கொள்ளும் மனநிலை நமக்கு இல்லை என்பதே உண்மை. கமல் தள்ளி வைக்கப்பட வேண்டியவர் என்ற கருத்தே பலருக்குள் இருக்கிறது. 

ரஜினியை அரசியலுக்கு வா என்று சொல்லும் பிஜேபிதான் கமல் வரக்கூடாது என்பதில் தீவிரமாக இருக்கிறது என்பது சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை. கமலின் டுவிட்டர்களை கேலி செய்கிறேன் பேர்வழி என நம்மை நாமே கேலி செய்து கொள்கிறோம்... கமலின் கருத்தை ஏற்று அவரை தலைவராக்க வேண்டும் என்றில்லை... நாம் சுயமாக சிந்திக்க வேண்டும்... மக்களைப் பற்றி சிறிதும் சிந்திக்காமல் தங்கள் நலம் மட்டுமே பார்த்து மத்தியிடம் மண்டியிட்டுக் கிடக்கும் அரசைத் தூக்கியெறிய வேண்டும்... ஆனால் அதைச் செய்வோமா என்றால் செய்ய மாட்டோம் என்பதே நிதர்சனம்... அரசு இப்படி இருக்கே... அரசு எந்திரம் முடங்கிப் போச்சேன்னு யாராவது கேட்டால் பிக்பாஸ் பார்ப்பதால்தான் ஆளும் அரசு குறித்து கவலையில்லாமல் இருக்கிறார்கள் என்று ஒரு சாரார் கிளம்புவார்கள். எது எப்படியோ நாம் திருந்தாதவரை அரசியல்வாதிகள் வாழ்ந்து கொண்டுதான் இருப்பார்கள்.

சரி விஷயத்துக்கு வருவோம்... கமலை விடுத்து பிக்பாஸ் பிக்கப் ஆக முக்கிய காரணம்... 'ஹேர்', 'மொகரையைப் பாரு', 'தூக்கி அடிச்சிருவேன்', 'சேரி பிகேவியர்' என்றெல்லாம் பேசி வன்மம் விதைக்கும் காயத்ரியோ... அவருக்கு சப்போர்ட் பண்ணும் 'ட்ரிக்கர்' சத்தியோ..., 'ஆ...', 'யா..' எனத் தலையாட்டும் ரைசாவோ... 'ஆளிருக்கும் போது ஏன் செய்தாய்' என ஆளில்லாத போது காதல் செய்யத் துடிக்கும் ஆரவோ... 'கட்டிப்புடி' வைத்தியம் செய்யும் சிநேகனோ... 'நான் நடுநிலைவாதி' எனச் சொல்லும் முட்டை கணேஷோ... ஒரளவு நியாயம் பேசும் வையாபுரியோ... என்ன பேசுவது எனத் தெரியாமல் விழிக்கும் பிந்து மாதவியோ... இவ்வளவு ஏன் சல்லிக்கட்டு பிரச்சினையில் நம் உறவுகள் எல்லாம் அடி வாங்கி மிதி வாங்கித் துடிக்க, மீடியா வெளிச்சம் பட மட்டுமே கூச்சலிட்டு இன்று காயத்ரியின் அடிவருடியாகி...  பொய்யின் பிம்பமாய் வாழும் ஜூலியோ அல்ல... எதையும் நேரிடையாகப் பேசும் ஓவியாவே...

ஓவியாவை எல்லாருக்கும் பிடிக்க எது காரணமாக இருக்கும் என்றதும் எல்லாரும் சொல்வது கவர்ச்சி... சத்தியமாக இல்லை என்பதுதான் என் கருத்து. நாம் இப்படி வாழணும் என்று நினைத்து சில காரணங்களால் முடியாமல் சார்பு நிலை வாழ்க்கையைத்தான் இன்று பெரும்பாலானோர் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நாம் வாழ நினைத்த வாழ்க்கையை... ஒரு பெண் வாழ்ந்து காட்டுகிறாளே என்ற எண்ணமே ஓவியாவின் மீது காதல் கொள்ள வைக்கிறது. காதல் என்றதும் வேறு திசையில் பயணிக்காதீர்கள்... பொய் சொல்லாமல்... எது சரி எது தவறு என்பதை உணர்ந்து வாழும் பெண்ணின் மீதான அதீத அன்புதான் ஓவியாவை விரும்ப வைக்கிறது. சரி ஓவியா பற்றி மற்றொரு பதிவில் விரிவாய் பார்ப்போம்.

என்னைப் பொறுத்தவரை வேலை டென்ஷன், பணப் பிரச்சினைகள் எல்லாம் சுற்றி வாழும் சூழலில் மாலை அலுவலகத்தில் இருந்து திரும்பியதும் இது போன்ற நிகழ்ச்சிகளைப் பார்ப்பது ஏதோ ஒரு வகையில் ஆறுதல்... அதற்காக போராட்டக்காரர்களின் வலி தெரியலையின்னு சொல்லாதீங்க... நிறைய போராடியாச்சு... இன்னும் வாழ்க்கையோடு போராடிக்கிட்டுத்தான் இருக்கேன்.

மறுபடியும் சொல்றேன்... பிக்பாஸ் பிடிக்கலையா பாக்காதீங்க... அதைப் பற்றி எழுதுபவர்களை ஒதுக்கி வைத்து உங்க வேலையைப் பாருங்க.. அதை விடுத்து அதற்காக போராடினாயா... இதற்காக போராடினாயா... நடிகன் பின்னே போகாதே... நடிகையின் கவர்ச்சியில் அழியாதேன்னு புராணம் பாடாதீங்க... ஏன்னா மீடியா வெளிச்சம்பட கூச்சல் போட்ட ஒருத்தியை வீரத்தமிழச்சின்னு நீங்க தூக்கி வச்சீங்க... அவ மீடியாவுக்குள்ள நுழைய போட்ட நாடகமே என்பதை இப்போது உணர்ந்து பொங்குகிறோம்... இதுதான் நாம். நான் நானாக இருக்கவே விரும்புகிறேன்... என் விருப்பு வெறுப்புக்களைச் சொல்வதில் முட்டுக் கொடுக்கவோ... முட்டுக் கட்டையாக இருக்கவோ யாரும் தேவையில்லை. 

உங்களுக்கு ஒண்ணு தெரியுமா இன்னைக்கு பொங்குறவங்கதான் சூப்பர் சிங்கர்ல சின்னப் பிள்ளைங்களை முக்கல் முணங்கள் பாட வைப்பதைப் பார்த்து ரசிச்சி பதிவு போட்டவங்க... அதை மறுத்து நான் எப்பவுமே போராளிதான் என்று எத்தனை பேரால் சொல்ல முடியும்...

மீண்டும் சொல்றேன்... யாரும் இங்கு பொங்காதீர்கள்... எனக்கு பிக்பாஸ் பிடிச்சிருக்கு...
-'பரிவை' சே.குமார்.

வெள்ளி, 28 ஜூலை, 2017சினிமா : விக்ரம் வேதா

வேதாளம் விக்ரமாதித்தனிடம் கதை சொல்லி, அதன் முடிவில் ஒரு கேள்வி கேட்கும் அதற்கு சரியான பதில் சொல்லவில்லை என்றால் உன் தலை சுக்கு நூறாக வெடித்து விடும் என்ற மிரட்டலுடன்... அதுவும் கதை சொல்ல... விக்ரமாதித்தனும் பதில் சொல்ல... அதன் பின் முருங்கை மரத்தில் ஏறிக்கொள்ளும் அல்லவா..? அப்படியான கதை சொல்லி அதற்கான விடையையும் பெற்று ஒரு கட்டத்தில் விக்ரமாதித்தனை தடுமாற வைத்து விடை காண எங்கே தேடணுமோ அங்கே தேடு எனச் சொல்லி விடையை கண்டுபிடிக்க வைக்கிறது வைக்கிறது இந்த வேதாளம். பழைய மொந்தையில் பழைய கள்தான் என்றாலும் (நல்லா கவனிங்க புதிய மொந்தையும் இல்லை... புதிய கள்ளும் இல்லை) அதைப் பரிமாறிய விதத்தில் ஜெயித்திருக்கிறது 'விக்ரம் வேதா'.

Image result for விக்ரம் வேதா

18 என்கவுன்டர் செய்த போலீஸ்காரர் விக்ரமிடம் 'திருடா திருடா'. 'திருடா திருடி', 'திருடன் போலீஸ்' என மூன்று கதைகளைச் சொல்லி அதற்கான பதிலாக இதுவா... அதுவா... எனக் கேட்பதை அழகான திரைக்கதையில் விறுவிறுப்பாய் அடுத்தென்ன... அடுத்தென்ன... என ஆவலாய் படம் பார்க்கும்படி செய்து அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்கள் புஷ்கர் மற்றும் காயத்ரி. பலமில்லாத கதை என்றாலும் பலமான திரைக்கதை... வசனம் மற்றும் பின்னணி இசையால் மிகப் பலமான படமாய் வந்திருக்கிறது.

2000-த்தில் கல்லூரிப் பெண்கள் எல்லாம் மேடி, மேடி எனக் கொண்டாடிய 'மின்னலே' மாதவன்... எப்பவுமே நடிப்பில் சோடை போனதில்லை. பெரும்பாலும் அவர் தனக்கான கதைத் தேர்வில் சொதப்புவதில்லை. நல்ல கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடிப்பவர். இதிலும் அப்படியே... ஒரு கட்டிடத்தில் மறைந்திருக்கும் வேதாவின் ஆட்களை தனது சகாக்களுடன் மாதவன் சுட்டுக் கொல்வதில் ஆரம்பிக்கும் படத்தின் ஆரம்பக் காட்சிகளை மாதவனே ஆக்கிரமித்துக் கொள்கிறார்.  தான் எப்படி காதலில் விழுந்து திருமணம் வரை சென்றேன் என்பதை ஒரு பாடலில் சொல்லிவிடுகிறார்.

விஜய் சேதுபதி எப்போ வருவார் எனக் காத்திருக்க, மாஸ் பாடலோ... மாஸ் பைட்டோ இல்லாமல் ஒரு வடையுடன் காவல் நிலையம் வருகிறார்.. கால்கள் மட்டுமே காட்டப்பட்டாலும் கையில் வடையுடன் அந்த நடை... அட அதுவே செம மாஸ் போங்க... பாட்டி வடை சுட்ட கதையை வழிவழியாக கேட்டும் சொல்லியும் வந்திருக்கும் நமக்கு விஜய் சேதுபதி கதை சொல்லப் போறாருன்னு தெரியாது. இங்க பார்றா இம்புட்டு போலீசும் வேதாவைப் பிடிக்க கிளம்பும்போது இந்தாளு அசால்ட்டா வடையோட ஸ்டேஷனுக்குள்ள போறானே... செம சீன் இருக்கும்ன்னு பார்த்தா, தானே சரண்டராகி, விக்ரம் சார் எங்கிட்ட ஒரு கதை இருக்கு சொல்லவான்னு கேட்டு கதை சொல்ல ஆரம்பிச்சிடுறாரு... கதை சுவராஸ்யமாய் நகர ஆரம்பிக்கிறது. அவரும் ஜாமீனில் சென்று விடுகிறார். மற்றொரு தருணத்தில் மற்றொரு கதை மீண்டும் எஸ்கேப்... மறுபடியும் இன்னொரு கதை.. அதில் கிளைமேக்ஸ்.

மாதவனின் மனைவியாக வரும் ஷ்ரத்தா, வேதாவுக்காக ஆஜராகும் வழக்கறிஞரின் ஜூனியர்... கணவன் சுட்டுக் கொல்ல நினைக்கும் ஒருவனை காப்பாற்ற நினைக்கும் மனைவி என்பதால் இருவருக்குள்ளும் ஊடல் வருகிறது. அந்த ஊடலை வெகுநேரம் இழுக்காமல் வீட்டுக்கு வெளியே நம்ம வேலையை விட்டுட்டு வந்துடலாம்... வீட்டுக்குள்ள கணவன் மனைவி  என ஜென்டில்மேன் அக்ரிமெண்ட் போட்டுக் கொள்கிறார்கள். அவருக்கான கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்.

Related image

விஜய் சேதுபதியின் தம்பியாக... ரொம்ப நல்லவனாக வரும் கதிர், கதரின் தோழியாக இருந்து மனைவியாகும் வரலெட்சுமிக்கு அதிக வாய்ப்பில்லை என்றாலும் நாட்டாமை பொண்ணுக்கிட்ட நடிப்பு இருக்கு. மாதவனின் பாஸ், மலையாள வில்லன், சின்னச் சின்ன ரவுடிகள், மாதவனின்  சகாக்காளாக வருபவர்கள் என மற்றவர்களும் சிறப்பாக நடித்திருக்கிறார். படத்திற்கு மிகப்பெரிய பலமே சாம் சி.எஸ்-ன் பின்னணி இசையும் வினோத்தின் ஒளிப்பதிவுதான்.

விக்ரம் காதபாத்திரத்தில் மாதவன் அடித்து ஆடினால் வேதாவாக விஜய் சேதுபதி விளாசித் தள்ளுகிறார். அவரின் உடல்மொழியாலேயே பல இடங்களில் கவர்ந்து விடுகிறார். எந்தப் பக்கம் பால் போட்டாலும் சிக்ஸர்தான். இவரின் நடிப்புக்கு தமிழ்த் திரையுலகம் சரியான தீனி போட்டால் சூப்பர் ஸ்டார் நாற்காலிக்கு போட்டி போடுறாரோ இல்லையோ உலக நாயகன் இடத்துக்கு கண்டிப்பாக போட்டி போடுவார். நா தழுதழுக்க பேசும் போதாகட்டும்... சந்தோஷமாக பேசும் போதாகட்டும்... சான்ஸே இல்லை... எத்தனை சிவகார்த்திகேயன்கள் வந்தாலும் நடிப்பில் விஜய் சேதுபதியை தோற்கடிக்க முடியாது.

வசனங்கள் அருமை... டசுக்கு டசுக்கு பாடல் சூப்பர்... இவன் வில்லனா... இல்லை இவனா... இவனுமில்லைன்னா அப்ப எவன்... என இறுதிவரை நம்மளையும் விடை தேட வைத்துவிடுகிறார்கள். எனக்கும் ஒரு காதல் கதை இருக்கு சொல்லவா என்று சொல்லும் வேதா கடைசி வரை காதல் கதையைச் சொல்லவே இல்லை... ஒருவேளை சொல்லியிருந்தா அதுக்கு ஒரு நாயகி, அப்புறம் ரெண்டு பாட்டுன்னு போயிருக்கும்... அப்படிப் போயிருந்தால்... சரி விடுங்க அதான் போகலையே...

படத்தின் ஆரம்பத்தில் தன் அப்பா ஓட்டிய புல்லட்டை சரி செய்ய ஆரம்பிக்கும் மாதவன், ஒவ்வொரு சாமானாக வாங்கி  சரி செய்து வர, கிடைக்காத ஜெயின் மட்டும் வேதாவின் பரிசாக கிடைக்கிறது. இறுதிக்காட்சியில் புல்லட் முழுமை பெற,  யார் வில்லன் என்ற கேள்விக்கும் விடையும் கிடைக்கிறது. விக்ரமும் வேதாவும் துப்பாக்கியுடன் நிற்க, வேதா விக்ரமிடம் கேட்ட கேள்விகளுக்கான விடைகளை நாம் அறிந்து கொண்டாலும் இந்த நேருக்கு நேர் துப்பாக்கி நீட்டலில் என்ன நடக்கும் என்ர கேள்வியை நம்மீது சுமத்தி அனுப்பிவிடுகிறார்கள்.

புரோட்டா எப்படி சாப்பிட வேண்டும் என விஜய் சேதுபதி சொல்லும் போது நமக்கு அப்படி சாப்பிட்டுப் பார்க்கும் ஆவல் வந்தால் நாமும் புரோட்டா ரசிகரே.

நிறைய ஓட்டைகள் இருந்தாலும் அதெல்லாம் படத்தை பாதிக்கவில்லை... என்ன இருந்தாலும் அம்புட்டுப் பாசம் வைத்திருக்கிற தம்பி கொல்லப்பட்டும் கதை சொல்லிக்கிட்டு சாதாரணமாத் திரியிறது சரியில்லைன்னு நமக்கு தோன்றினாலும்... சரி விடுங்க பெரிய ஓட்டைகளோட வர்ற படங்களெல்லாம் மாஸ் ஹிட்டாகும் போது இதை ஏன் பெரிசு பண்ணிக்கிட்டு...   ரவுடிகள் அப்படித்தான்னு நினைச்சுக்குவோம்.

Related image

மொத்தத்தில் விக்ரம் வேதா என்னும் திருடன் போலீஸ் கதை சொல்லப்பட்ட விதத்தில் ரசிகர்களின் மனதை வென்றிருக்கிறது.
-'பரிவை' சே.குமார்.

புதன், 17 மே, 201718.என்னைப் பற்றி நான் - இராய.செல்லப்பா


ந்த வாரம் என்னைப் பற்றி நான் பகுதியில் தன்னைப் பற்றி வித்தியாசமான முறையில் சொல்லியிருக்கிறார் அன்பின் ஐயா. இராய. செல்லப்பா அவர்கள். ஐயாவின் தளம் செல்லப்பா தமிழ் டயரி 

ஐயாவைப் பற்றி சொல்லித்தான் தெரியவேண்டும் என்பதில்லை. மிகச் சிறந்த எழுத்தாளர். வலையில் எழுதியவர்களை ஊக்குவித்து எழுத வைப்பவர்களில் இவரும் ஒருவர். இவர் தளத்திற்கு நான் அதிகம் செல்வதில்லை என்றாலும் என் தளத்திற்கு தொடர் வருகை தருபவர். குறிப்பாக சாண்டில்யன் கதைகள் பற்றிய பகிர்வுகளை வாசித்து கருத்து இடுவதுடன் இதுபோல் நிறைய எழுதுங்கள் என அடிக்கடி சொல்பவர்.

தன் மனதில்பட்ட கருத்தை மறைக்காமல் சொல்பவர். நிறைய... நிறைவாய் எழுதக் கூடியவர். பல புத்தகங்களின் ஆசிரியர்... இன்னும் இன்னுமாய் நிறையச் சொல்லலாம் என்றாலும் என்னைப் பற்றி நான் என அவர் சொல்வதைப் பார்க்கலாமே.


என்னைப் பற்றி நான் 

துரையைச் சேர்ந்த ஒரு தம்பதியரை இன்று சந்திக்க நேர்ந்தது. இருவரும் அறுபது வயதுவரை பணிசெய்து முறையாக ஓய்வுபெற்றவர்கள். மகன் இப்போது அமெரிக்காவில் இருப்பதால் அவரைப் பார்க்க வந்திருக்கிறார்கள். மரியாதை நிமித்தமான சந்திப்பு.

இருவரும் பரஸ்பரம் தகவல்களைப் பரிமாறிக்கொண்டோம். சொந்த ஊர் எது, மனைவியின் ஊர் எது, எங்கு வேலை செய்தோம், எத்தனை முறை அமெரிக்கா வந்துள்ளோம் போன்ற தகவல்கள். அடுத்து வழக்கமாக அமெரிக்கா வருபவர்கள் கேட்கும் கேள்வி: எப்படிப் பொழுது போகிறது உங்களுக்கு?

அமெரிக்கா மட்டுமல்ல, இந்தியாவிலும் இது ஒரு முக்கியமான கேள்வி. ஒருவன் பணியிலிருந்து ஓய்வுபெற்றுவிட்டால் அவனுக்கு நிறைய நேரம் இருப்பதுபோலவும், என்ன செய்வதென்று தெரியாமல் அவன் விழிப்பதுபோலவும் ஒரு பிரமையான எண்ணம் பலருக்கும் இருக்கிறது. கண்ணாடியில் பார்க்கிறவனுக்குத் தன்முகமே தெரிவது போல, பணியிலிருந்த போதும் ஓய்வெடுத்தே பழகிவிட்டவர்களுக்கு, யாரைப் பார்த்தாலும் அவர்களும் கை நிறையப் பொழுதை வைத்துக்கொண்டு செலவழிக்கும்விதம் அறியாமல் இருப்பதாகவே தோன்றிவிடுகிறது.  

இப்படிக் கேள்வி கேட்பவர்களை நான் எளிதாகச் சமாளித்துவிடுவேன்: “இன்னும் ஒரு மாதம் கழித்து நாம் சந்திக்கலாமா? அப்போது, உங்களுடைய பொழுதை நீங்கள் எப்படிக் கழித்தீர்கள் என்று எனக்குச் சொல்வீர்களா?” என்று எதிர்க் கேள்வி எழுப்புவேன். அவ்வளவே.

இன்று சந்தித்த தம்பதியரிடம் சொன்னேன்: “நான் ஒரு எழுத்தாளனும் கூட. எனவே படிப்பதிலும் எழுதுவதிலும் எனக்குப் பொழுது செலவாகிறது. இருபத்துநாலு மணிநேரமே போதுமானதாயில்லை” என்றேன். அந்தப் பெண்மணி ஆர்வத்துடன் கேட்டார்: எந்தப் பெயரில் எழுதுகிறீர்கள் என்று. சொன்னேன். 

“தெரியுமே! பல வருடங்களாக நீங்கள் தினமலர் வாரமலரில் தெய்வீகம் பற்றி எழுதிவருகிறீர்களே! ஞாயிற்றுக்கிழமை வந்தால் உங்கள் கட்டுரையைத்தான் நான் முதலில் படிப்பேன்” என்று மகிழ்ச்சியோடு கூறினார்.

எனக்கு வெட்கமாகப் போனது. ஏனெனில் அந்த செல்லப்பா நான் அல்லன். இன்னொருவர். அந்தப் பெண்மணியால் அந்த ஏமாற்றத்தைத் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. 

**** 

ல வருடங்களுக்கு முன்பு எனது கவிதைத்தொகுதி ஒன்று வெளியானபோது, சென்னையில் ஒரு புத்தகக்கடையில் என்னைப் பார்த்த (அப்போதே) முதுபெரும் எழுத்தாளர் ஒருவர், “நலமாக இருக்கிறீர்களா? உங்கள் கவிதைகளையும் கட்டுரைகளையும் நான் தொடர்ந்து படிக்கிறேன். தமிழுக்கு உங்களால் இன்னும் நிறைய சேவைகள் பாக்கியிருக்கிறது” என்றார். இந்தியில் இருந்து தமிழுக்கு ஏராளமான  கதைகளை மொழிபெயர்த்து கல்கி, கலைமகள், மஞ்சரி, அமுதசுரபி போன்ற இதழ்களில் வெளியிட்டுவந்தவர் அவர். எனக்கு மகத்தான அதிர்ச்சி. ஏனென்றால் அதுவரை நான் எந்தப் பத்திரிகையிலும் தொடர்ச்சியாக எழுதியதில்லை. அவ்வப்போது ஒன்றிரண்டு வந்திருக்கும். அதையும் படித்தவர்கள் உடனே மறந்திருப்பார்கள். அமர இலக்கியம் எதையும் அப்போது நான் படைத்திருக்கவில்லை. இவர் சொல்வதைப் பார்த்தால் நிச்சயம் இது அவர் நினைவில் எழுந்த ஆள்மாறாட்டம்தான் என்று தெரிந்துவிட்டது.     

‘மன்னிக்க வேண்டும் ஐயா, அது நானாக இருக்கமுடியாது. ஏனென்றால்...” என்பதற்குள் அவர் இடைமறித்தார். “இப்படித் தன்னடக்கத்துடன் இருந்துதான் இந்த நிலைமையில் இருக்கிறீர்கள். இல்லையென்றால் உங்களுக்கு எப்போதோ சாகித்ய அக்கடெமி கிடைத்திருக்காதா? இவ்வளவு வருடங்கள் நீங்கள் காத்திருக்கவேண்டுமா?” என்றார் அவர். அப்பொழுதுதான் அவர் யாரைச் சொல்கிறார் என்று புரிந்தது. தமிழின் மூத்த எழுத்தாளரும், ‘மணிக்கொடி’ பரம்பரையைச் சேர்ந்தவரும், ‘எழுத்து’ இதழின் ஆசிரியருமான சி.சு.செல்லப்பா அவர்களைத்தான் நான் என்று நினைத்துக்கொண்டுவிட்டார், பாவம்! சில மாதங்களுக்கு முன்புதான் சி.சு.செல்லப்பா தமிழ் எழுத்தாளர் என்ற பதவியை ராஜினாமா செய்துவிட்டு சிவலோகப் பதவியை அடைந்திருந்தார்.  அந்த விஷயமே அவருக்குத் தெரியவில்லை என்பது எவ்வளவு சோகமான செய்தி!

**** 

சென்னையில் பணியாற்றிக்கொண்டிருந்தபோது இந்து சீனியர் உயர்நிலைப் பள்ளியில் அடிக்கடி பேச்சு, கவியரங்கம் என்று ஏதாவதொரு நிகழ்ச்சிக்கு என்னை அழைப்பார்கள். கம்பீரமான ஷெர்வாணி அணிந்து சிங்கம் மாதிரி நடைபோடுவார் அந்தப் பள்ளியின் முதல்வராக  இருந்த வெங்கடாசலம் அவர்கள். ஒரு கவியரங்க நிகழ்ச்சியின் இடைவெளியில் இரண்டு ஆசிரியர்கள் பேசிக்கொண்டிருந்ததைக் கேட்டேன். ‘இவரை நாம் அடிக்கடிக் கூப்பிடுகிறோம் அல்லவா? போன மாத நிகழ்ச்சிக்கும் இவர் தானே வந்திருந்தார்?”

இல்லை நண்பரே, போன மாதம் வந்தவர் ‘சிலம்பொலி’ செல்லப்பன்; நான் வெறும் செல்லப்பா மட்டுமே; அவர் வேறு, நான் வேறு; அவர் என்னைவிட பதினைந்து வருடமாவது பெரியவர் – என்று சொல்லவிரும்பினேன். அதற்குள் அவர்கள் கலைந்துவிட்டார்கள்.

****

ங்கிப்பணியில் இருக்கும்போது எமது வங்கியின் அப்போதைய தலைவர் ஒரு வழக்கத்தைக் கொண்டிருந்தார். தம் கீழ்ப் பணியாற்றும் மேலாளர் பொறுப்பில் இருந்தவர்களுக்குத் தம் கைப்படப் பிறந்தநாள் வாழ்த்துக்  கடிதங்களை அனுப்புவார். பிறந்தநாளன்று சரியாக வந்துசேரும்.  அதில் சிறு தவறு நடந்தாலும் பொறுக்கமாட்டார்.  என் பிறந்த நாளுக்கும் அதுபோல் வாழ்த்துக் கடிதங்கள் வரும். ஆனால் என் விஷயத்தில் மட்டும் அவருடைய செயலாளர்கள்  ஒரு சிறிய தவறு செய்துவிடுவார்கள். ‘To’ என்ற இடத்தில் செல்லப்பாவிற்குப் பதில், ‘புல்லப்பா’ என்று ஒருமுறை அடித்திருந்தார்கள். 

வங்கியின் தலைவர் இம்மாதிரி வாழ்த்து அட்டைகள் அனுப்பிப் பெயர்வாங்கிவிடுவதைப் பொறுக்காத ஒரு பொதுமேலாளர், தாமும் இம்மாதிரி வாழ்த்து அட்டைகளை  அனுப்பத்தொடங்கினார். அவருடைய செயலாளர் என் பெயரை ‘எல்லப்பா’ என்று டைப் செய்திருந்தார். புல்லப்பா என்று ஒருவர் நிச்சயமாக வங்கியில் இருந்தார். ஆந்திராவைச் சேர்ந்தவர். என்னைவிட பணிமூப்பு மிகுந்தவர். ஆனால் எல்லப்பா என்று ஒருவரும் வங்கியில் இல்லை. மேலும், செல்லப்பா என்ற பெயரில் கடந்த நாற்பது ஆண்டுகளில்  வங்கியில் இருந்தவன் நான் ஒருவனே. ஆனால்...?  இம்மாதிரிச் சின்ன விஷயங்களை நாம் பெரிதுபடுத்தினால் தொலைந்தோம். பரமசிவன் கழுத்தில் இருக்கும் பாம்புகள் ஆயிற்றே,  கருடனைப் பார்த்து சௌக்கியமா என்றல்லவா கேட்கும்?  

****

மிழின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவர் இந்திரா பார்த்தசாரதி. ‘சாகித்ய அகாடமி’, ‘சம்ஸ்கிருதி சம்மான்’ விருதுகளைப் பெற்றவர். சிறுகதை, நாவல், கட்டுரை, நாடகம் ஆகிய படைப்புத்துறைகளில் சிறந்து விளங்குபவர். ‘குருதிப்புனல்’ நாவல், ஒளரங்கசீப்’, ‘ ராமானுஜர்’ நாடகங்கள் போன்றவை, இவரது படைப்புகளில் குறிப்பிடத்தக்கவை.

அண்மையில் மூத்த எழுத்தாளர் அசோகமித்திரன் காலமானபோது, அஞ்சலி செலுத்தப்போயிருந்தார், இந்திரா பார்த்தசாரதி. அப்போது நடந்ததை அவருடைய  வார்த்தைகளிலேயே பார்ப்போமா? 

நண்பரைப் பனிப்பெட்டியில் பார்த்துவிட்டு கனத்த நினைவுகளுடன் அவர் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தேன். திடீரென்று கேமராவுடன் இரண்டு இளைஞர்கள் என் முன் முளைத்தார்கள்.

‘‘அவரைப் பற்றிக் கொஞ்சம் சொல்ல முடியுமா?’’ என்றார் ஒருவர்.

கேமரா என்னை உற்றுப் பார்த்தது. தொலைக்காட்சி சேனல் பெயரைச் சொன்னார் இன்னொரு இளைஞர்.

முதலில் மறுத்துவிடலாம் என்ற எண்ணம் தலைத்தூக்கியது. இது நான் என் நண்பருக்குச் செய்யும் தர்மம் அன்று என்ற எண்ணம் அதைத் தடுத்தது. நான் யாரென்று தெரிந்து கேட்கிறார்கள் என்ற லேசான பெருமையும் என் முகத்தில் புன்னகையாக அடையாளம் கொண்டது.

நான் அவரைப் பற்றி இரண்டு நிமிடங்கள் என் கருத்துகளைச் சொன்னேன்.

கேமரா கண் மூடியது. என்னைப் பேசச் சொன்ன இளைஞர் மிகவும் இயல்பான, யதார்த்தமான குரலில் என்னைக் கேட்டார்:

“உங்கள் பெயர் என்ன?”

நான் யாரென்று தெரியாமலா என்னைப் பேசச் சொன்னார்கள்? புதிதாக வெளியிடப்படும் திரைப்படத்தின் முதல் ‘ஷோ’ முடிந்தவுடன் வெளியே வரும் ரசிக மக்களைத் தொலைக்காட்சி விமர்சகர்கள் கேட்பது போன்ற கேள்வியா என்று எனக்குத் தோன்றிற்று.

அவர்களுக்கு யாரோ சொல்லி யிருக்க வேண்டும். என் பெயரைச் சொல்லி, ‘‘அவர் அதோ போகிறார். கேளுங்கள்’’ என்று கூறியிருக்கக்கூடும். ஒன்று, கேமரா இளைஞர்கள் அந்தப் பெயரை மறந்திருக்கக்கூடும். அல்லது, அந்தக் குறிப்பிட்ட பெயரை உடையவர் நான்தானா என்று உறுதிப்படுத்திக்கொள்வதற்காகக் கேட்ட கேள்வியாகவும் இருக்கலாம்.

நான் என் பெயரைச் சொன்னதற்கு, ‘‘தேங்க்ஸ்’’ சொல்லிவிட்டுப் போய்விட்டார்கள். அவர்கள் முகத்தில் எந்தச் சலனமும் இல்லை.

இந்த அனுபவம் எனக்குத் தேவை யென்று எனக்குத் தோன்றிற்று. என்னைப் பற்றி நானே மிகைப்பட நினைத்துக் கொண்டிருந்தால், என்னை பூமியின் தளத்துக்குக் கொண்டுவரும் அனுபவம்.

**** 

ந்த நிமிடத்திலும் ‘நான்’ என்று கர்வப்படுவதற்குத் தமிழ் எழுத்தாளனுக்கு அதிகாரமில்லை என்பதைப் புரிந்துகொண்டீர்கள் அல்லவா? ‘என்னைப் பற்றி நான்’ என்று பெருமையோடு என்னத்தை எழுதுவது? 

என்றாலும், என்மீது மிகுந்த பிரியம் கொண்டு பரிவை சே.குமார் அவர்கள் என்னை எழுதச் சொன்னதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக என்னைப் பற்றி இதோ சில வரிகள்:

கவிஞராக அறிமுகம் ஆகி, கதாசிரியராகவும் கட்டுரையாளராகவும் தன் எழுத்துப் பரப்பை விரித்துக்கொண்டிருக்கும் இராய செல்லப்பா, இதுவரை மூன்று புத்தகங்களின் ஆசிரியராவார். (‘இரா’ என்பது அவருடைய சொந்த ஊரான இராணிப்பேட்டையைக் குறிக்கும். ‘ய’ என்பது தகப்பனார் யக்யஸ்வாமி என்பதின் முதலெழுத்து. மற்றபடி, பழம்பெரும் எழுத்தாளரான ராய சொக்கலிங்கத்திற்கும் இவருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை)  வங்கி அதிகாரியாக இருந்து, இந்தியாவின் பல நகரங்களில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். பலமுறை வெளிநாடு செல்லும் வாய்ப்பினைப் பெற்றவர். அந்த அனுபவங்களைத் தமது எழுத்துக்களில் தக்க முறையில் வெளிப்படுத்துபவர். ‘செல்லப்பா தமிழ் டயரி’ என்ற இணையதளத்தின் மூலம் தொடர்ந்து எழுதிவருபவர். மனித உணர்வுகளும் தனிமனிதப் பிரச்சினைகளும், மனிதாபிமானமும் இவரது எழுத்துக்களின் ஆதாரமாக இருப்பவை.

இவருடைய ஆறு புத்தகங்கள் விரைவில் புஸ்தகா நிறுவனத்தின்மூலம் வெளியாகவுள்ளன. (புஸ்தகா- மின்னூல் பதிப்பாளர்கள்). 

1  ஊர்க்கோலம் -கட்டுரைகள்;    
2 உண்மைக்குப் பொய் அழகு – சிறுகதைகள்;  
3  சொல்லட்டுமா கொஞ்சம்? -கட்டுரைகள்;   
4  காதல் பூக்கள் உதிருமா? -சிறுகதைகள்;  
5 அபுசி-தொபசி-பகுதி 1;   
6  அபுசி-தொபசி-பகுதி 2.

இவை தவிர மேலும் ஆறு புத்தகங்கள் இன்னும் சில மாதங்களில் தயாராகிவிடும் நிலையில் உள்ளன. 2013 இல் வலைத்தளம் தொடங்கியிருந்தாலும் 2016 முழுவதும் எழுதாமல் இருந்துவிட்டார். இந்த ஆண்டு ஜனவரி முதல் மீண்டும் புத்துணர்ச்சியோடு எழுத ஆரம்பித்துவிட்டார். இதுவரை முப்பத்தெட்டு பதிவுகள் வெளியாகியுள்ளன.

****

ரி, பொழுது எப்படிப் போகிறது என்ற கேள்விக்கு சற்றே நேர்மையான பதிலைச் சொல்லிவிடலாமா?

கணினித்துறையில் ஆர்வம் உள்ளவன் என்பதால், கடந்த பன்னிரண்டு மாதங்களாக, கணினி மொழிகளைப் படிப்பதில் எனது நேரத்தை அதிகம் செலவிட்டிருக்கிறேன். 

(1) சென்னை ஐஐடி நடத்தும் ஆன்லைன் படிப்பான IMAD- Introduction to Modern Application Development  என்ற படிப்பை வெற்றிகரமாக முடித்தேன்.

(2)  IIT Kharagpur நடத்தும்  Natural Language Processing  என்ற மிகக் கடினமான படிப்பையும் படித்தேன். தேர்வு மட்டும் எழுதமுடியவில்லை. தேர்வுத் தேதியில் அமெரிக்கா வந்துவிட்டேனே.  

(3) Chennai Mathematical Institute  நடத்தும்   Design and Analysis of Algorithms என்ற மேலும் கடுமையான படிப்பில் பதிவு செய்துகொண்டேன். ஆனால் முந்தைய மூன்று படிப்புகளுக்கும் கொடுத்த நேரம்போக, நேரம் மீதி இல்லாததால் அதை முடிக்கமுடியவில்லை. இந்த ஆண்டு முடிப்பேன். 

(4) பைத்தான் என்ற -இன்று மிகவும் அதிகம் டிமாண்டு உள்ள - கணினி மொழியைக் கற்றுக்கொண்டிருக்கிறேன். 

(5)  Python Language  -Harvard University ( edX course). 

இதைத்தொடர்ந்து 

(6) Big Data Analytics  என்ற இன்னொரு மிகுந்த டிமாண்டு உள்ள படிப்பையும் ஆரம்பித்துள்ளேன். முடிக்க ஆறேழு மாதங்கள் ஆகலாம்.

இவை எல்லாமே கணித மற்றும் கணினித்துறையில் மிக நுட்பமான, அதே சமயம் மிகுந்த உழைப்பைக் கோருகின்ற படிப்புகளாகும். ஆர்வத்தின் காரணமாகவே படிக்கிறேன். எனவே வாரத்தில் ஒன்றுக்குமேல் வலைப்பதிவு எழுதவும் கூட எனக்கு நேரம் இல்லை என்பதுதான் உண்மை நிலை.

நன்றி குமார் அவர்களே!

-இராய். செல்லப்பா
நியூஜெர்சி

Image result for இராய.செல்லப்பா

ந்த வாரம் எழுத முடியுமா என்று கேட்டதும் அடுத்த நாளே அனுப்பிக் கொடுத்த ஐயாவுக்கு நன்றி.

என்னைப் பற்றி நான் பகுதிக்கு தொடர்ந்து உறவுகள் அளித்த ஆதரவுக்கு நன்றி.

இதுவரை எழுதித்தரக் கேட்டவர்கள் பலருக்கு விருப்பமில்லை போலும். இனி புதிதாய் சிலரிடம் அழைப்பு விட வேண்டும். ஊருக்குச் செல்வதால் அது முடியாத காரியம். விடுமுறைக்குப் பின் தொடர முடியுமா பார்க்கலாம். நாலைந்து வாரங்கள் போகுமா என்று யோசித்து ஆரம்பித்த ஒரு பகுதியை தொடர்ந்து பதினெட்டு வாரங்கள் நடத்த வைத்த, இதில் தங்களைப் பற்றி பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் நன்றி.

சொல்ல மறந்துட்டேனே... நாளை இரவு ஊருக்குப் போகிறேன்... ஒரு மாதத்துக்கு மேல் இருப்பேன். முடிந்தவரை இந்த முறையேனும் உறவுகளைச் சந்திக்க வேண்டும் என்ற எண்ணம் + ஆவா.

தொடர்புக்கு : 91 9629215744

என்னைப் பற்றி நான் தொடர் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது.

-'பரிவை' சே.குமார்.

வியாழன், 11 மே, 2017குடந்தையூராரை வாழ்த்துவோம் வாங்க....

ர்.வி.சரவணன்.

குடந்தையூர் ஆர்.வி.சரவணன்.

Image may contain: 1 person, glasses

இந்தப் பெயரை வலையுலகில் நாம் அனைவரும் அறிவோம். இன்று அவரின் பிறந்ததினம். நேற்று இரவே எழுதி வைத்து இன்று காலையில் பகிர்ந்திருக்க வேண்டிய பகிர்வு இது. நேரமின்மை மற்றும் எழுத நினைத்தாலும் எழுத வராத மனநிலையும் வேலைப்பளு கொடுக்கும் அசதியும் சேர்ந்த காரணத்தால் எழுதவில்லை.

சரவணன் அண்ணன் எனக்கு நம்ம அண்ணாச்சி... பலமுறை போனில் போனில் பேசியிருக்கிறோம். இரண்டு நாளைக்கு ஒருமுறை எப்படியும் முகநூல் உள்டப்பியில் வந்து நலம் விசாரித்துவிடுவார். கடந்த வாரம் கூட 'என்னாச்சு... ஏன் எந்தப் பதிவும் வருவதில்லை' என்ற விசாரணையோடு முகநூல் உள்டப்பியில் வந்தார். எனக்குப் பிடித்த அண்ணன்களில் இவரும் ஒருவர்.

தனது வலைப்பக்கத்தில் கதை, கட்டுரை. பார்த்தது கேட்டது படித்தது என எல்லாம் பகிர்வார். நாவல் எழுத்தாளர்... 'இளமை எழுதும் கவிதை நீ' என்னும் தொடரை தனது தளத்தில் எழுதி அதை நாவலாக வெளியிட்டவர், திருமண ஒத்திகை என்னும் நாவலை வலைத்தளத்தில் எழுத ஆரம்பித்து பாதியில் நிறுத்தி புத்தகமாக வெளியிடும் முயற்சியில் இருக்கும் போது அதை பாக்யாவில் தொடர்கதையாக வெளியிடும் வாய்ப்புக் கிடைத்து அந்தத் தொடரின் மூலமாக மிகச் சிறந்த எழுத்தாளராக அடையாளம் காட்டப்பட்டார். அது விரைவில் நாவலாக... அவரின் அடுத்த வெளியீடாக மலரும் என்று நினைக்கிறேன். குமுதத்திலும் அவ்வப்போது ஒரு பக்க கதைகள் எழுதி வருகிறார். 

இரண்டு குறும்படங்களை இயக்கிய இந்த எழுத்தாளர்... இயக்குநர்... திரையுலகில் ஜெயிக்க வேண்டும் என்ற முனைப்போடு அதற்கான முயற்சியிலும் இருக்கிறார். காலமும் நேரமும் இன்னும் கை கொடுக்கவில்லை என்றாலும் காலம் ஒருநாள் வெல்லும் என்ற நம்பிக்கை அவரைப் போல எனக்கும் இருக்கிறது. 

குறும்படம் எடுத்ததுடன் துளசி அண்ணாவின் குறும்படங்களிலும் நடித்திருக்கிறார். பல்சுவைப் பதிவர் என்பதுடன் பல்சுவை மனிதர் இவர்... குமார் இந்த முறை ஊருக்கு வரும்போது நாம் கண்டிப்பாக சந்திக்க வேண்டும் என்று மூன்று வருடங்களாக சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார். ஆனால் தனபாலன் அண்ணா, புதுகை செல்வக்குமார் அண்ணா என எல்லாரையும் எப்படி சந்திக்கிறேனோ அப்படித்தான் இவரையும்... இந்த முறையாச்சும்... ம்... முயற்சிக்கணும்.

அவரின் குறும்படமான அகம் புறம் தங்கள் பார்வைக்கு...அன்பின் அண்ணாவுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

தாங்களும் வாழ்த்துக்கள் உறவுகளே....
-'பரிவை' சே.குமார்.

புதன், 10 மே, 201717. என்னைப் பற்றி நான் - தேவா சுப்பையா

ந்த வாரம் என்னைப் பற்றி நான் பகுதியில் தன்னைப் பற்றிச் சொல்லியிருப்பவர் எங்கள் மண்ணின் மைந்தர் அன்பு அண்ணன் 'WARRIOR' என்னும் தளத்தில் எழுதும் தேவா சுப்பையா அவர்கள்.

வலை நட்பு அபுதாபியில் கொடுத்த சில உறவுகளில் அண்ணனாய் அறிமுகமாகி, இன்று என் அண்ணனாகவே ஆகிப் போனவர். சிறந்த எழுத்தாளர்... வாசிப்பவர்களை தனது எழுத்துக்குள் இழுத்துச் செல்லும் வித்தகர். வாசிக்க வாசிக்க சுவராஸ்யமாய் கொண்டு செல்லும் எழுத்துக்காரர்.

தனது சிறுகதைகள் மற்றும் 'காதலே சுவாசமாக' என்ற கட்டுரையை புத்தகமாகக் கொண்டு வந்தவர். இன்னும் சில புத்தகங்களைக் கொண்டு வரும் பணியில் தற்போது மிகத் தீவிரமாக எழுதி வருபவர்.

துபாயில் இருந்து அபுதாபி வரும்போதெல்லாம் 'நான் வருகிறேன்... உன்னைப் பார்க்கிறேன்ப்பா' என்ற செய்தி வந்துவிடும். இருவரும் நிறைய கதைகள் பேசி... குறைவாய் சாப்பிட்டு... சின்னதாய் ஒரு செல்பி எடுத்து... சரி விடுங்க... அது ரொம்ப சந்தோஷமான நிமிடங்களைக் கொடுக்கும் நாள்.

அன்பின் தேவா அண்ணன் அவரைப் பற்றி என்ன சொல்கிறார் என்று பார்க்கலாம் வாருங்கள்.


ன்னைப் பற்றி நானென்ற கட்டுரையை என்  சகமண்ணின் மைந்தன் தம்பி குமார் கேட்டிருக்கும் இந்த நேரத்தில் மிகப்பெரிய ட்ரான்ஸ்மிஷன் எனக்குள் நிகழ்ந்து முடிந்திருக்கிறது. கடந்த வருடத்தில் இதே தலைப்பில் என்னை எழுதச் சொல்லியிருந்தால் இந்தக் கட்டுரை வந்திருக்காது.

இன்னமும் பேருந்து வசதிகளில்லாத, கடைகளில்லாத, பழமையின் கதகதப்பினை உணர முடிந்த வானம் பார்த்த பூமியிலிருந்து ஒலிக்கும் ஒரு பிரதிநிதியின் குரலாய்க்கூட இதை நீங்கள் கருதிக்கொள்ளலாம். இரண்டு மூன்று தூறல்கள் விழுந்ததும் சந்தோசமாய் சென்று உழுது விதைத்து, கண்மாய்க் கரைகளை உயர்த்தி வானம் பார்த்தபடி வாழ்க்கையைத் தேடிக் கொண்டிருந்த ஒரு சமூகத்திற்கு மழைதான் எல்லாமுமாயிருந்தது. மழைக்காய் பொங்கல் வைத்து மழைக்காய் நேர்த்திக்கடன் வைத்து மழைக்காய் அழுது, மழைகண்டு சிரித்து மழையில் நனைந்து ஆடுமாடுகளோடு வாழ்ந்து மரித்தவன் என் தாத்தன். இரண்டு மூன்று ஆட்களைச் சேர்த்துக் கொண்டு தன் புன்செய்க்காட்டில் பெருங்கிணறு தோண்டி தன் புன்செய்க்கு கொஞ்சமும் ஊர்குடிநீருக்கு நிறையவும் கொடுக்க அவர்தான் ஏற்பாடு செய்திருந்தார்.

காலில் குத்திய கருவேலம்முள்ளை எடுத்துப் போடாமல் ஊராரோடு சேர்ந்து தன் நிலத்தில் நடவு நட்டவள், களை  பறித்தவள் கதிரறுத்தவள், கதிரடித்தவள், தூற்றியவள், பொனை ஓட்டிய வைக்கோலை எடுத்து வீட்டுக் கொல்லையில் போர்மேடாக்கியவள் என் அப்பத்தா. உலையில் அரிசியை போட்டு விட்டு இடுப்புப் பிள்ளைக்கு சோறூட்டி தொட்டில் பிள்ளைக்கு பாலூட்டி வளர்ந்த பிள்ளைகளுக்கு வகை சொல்லியபடி இடுப்பெலும்பு ஒடிய வயலுக்கும் வீட்டுக்கும் ஓடிக்களைத்த சம்சாரி அவள். சாமான் வாங்க கொடுத்த இரண்டணாவைத் தொலைத்து விட்டு சந்தையிலிருந்து வீட்டுக்கு வந்தால் அடிவிழுமென்று ஊர் எல்லையிலிருக்கும் காட்டுமுனி கோயில் மரத்தடியில் அழுது ஒப்பாரி வைத்த என் அப்பாவிற்கு அப்போது வயது பனிரெண்டென்று பெரிய அத்தை சொல்லுவாள். காசைத் தொலைத்த கதையறிந்து புளியவிளாரால் விளாசிய தாத்தாவை  அவ்வளவு கோபமாய் அதுவரை பார்த்ததில்லை என்று சொல்லும் அத்தைக்கு அப்போது வயது பதினாறாம். காணி காசுக்கு காணியைக் கட்டிப் பிடித்துக் கிடந்து காசாக்கிக் கொடுத்தால் அதைத் தொலைத்து விட்டேனென்று சொன்னால் எப்படித் தாங்கியிருப்பான் என் தாத்தன்.

இந்த வானம் பார்த்த வழி வந்த என்னைத்தான் எழுதச் சொல்லியிருக்கிறான் என் தம்பி என்னை பற்றி. காலம் உருண்டோட என் தந்தையின் பியூசிக்கு கிடைத்த உத்தியோகம் இடம் மாற்றி, வாழ்க்கையை மாற்றி  வேறொரு சமூகச் சூழலுக்குள் வெள்ளைச் சட்டையும் பேண்ட்டுமாய் என் அப்பாவை அரசாங்க அலுவலர் ஆக்கிப் பார்க்க, அங்கிருந்து ஆரம்பிக்கிறது இந்த கட்டுரையாளனின் கதை. அப்பாவைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருக்கையில் அப்பாவின் பிற்பகுதி வாழ்க்கையில் எல்லாமுமாயிருந்த அம்மாதான் எங்களுக்கும் இன்று வரை எல்லாமே. கனவுகள்  நிறைய காண்பவனாய் இன்னமும் நானிருப்பதற்கும் இப்படி ஏதாவதை எழுத முடியும் என் பிரயத்தனத்திற்கும் அம்மாவே ஆதாரம்.

அம்மாவின் தாத்தன் ஒரு புத்தக ப்ரியன். பட்டு அட்டை போட்டு ஐம்பெருங்காப்பியங்களோடு சங்ககால நூல்களை எல்லாம் எடைக்குப் போட்டுக் கொண்டிருந்த மூன்றாவது தலைமுறையின் சிறு கொடுக்கு நான். விபரமறியாமல் வீட்டார்கள் தூக்கிப் போட்ட என் பாட்டனின்  சொத்து ஊரறிந்தது என்ற வகையில் அறுபது ஏக்கர்கள் நானறிந்தது வரை நாலடுக்கு அலமாரிகள் நான்கு நிறைய புத்தகங்கள். 1800களில் பிறந்திருந்த அம்மாவின் தாத்தா என் பாட்டன் விட்டுச் சென்ற சொத்து என் ஜீனுக்குள் புத்தகம் வாசிக்கும் பழக்கமாய் வந்து உட்கார்ந்து கொள்ள ராணி காமிக்ஸ், பூந்தளிர், அம்புலிமாமாவில் ஆரம்பித்து டால்ஸ்டாயின் வார்& பீஸ் (போரும் அமைதியும்) வரை நீண்டு வந்திருக்கிறது.

வாசித்ததெல்லாம் என்ன வாங்கி வந்த மளிகைச்சாமான் போல அஞ்சரைப் பெட்டிக்குள்ளிருந்து அடுப்படிக்கு சென்று தன் வேலையை முடித்துக் கொள்ளுமா என்ன? வாசித்தது அத்தனையும் யோசிக்க வைக்க அந்த யோசனையை எல்லாம் ஒரு நாள் எழுதிப்பார்க்க வந்தானே நாகரீகக் கோமாளி என்பதைப் போல இந்த தேவா சுப்பையாவிற்கும் கொஞ்சம் எழுதவரும் என்ற எண்ணம் புது மாப்பிள்ளையைக் கண்டால் நாணும் பெண்ணைப் போல வெட்கி வெட்கி என் வெள்ளைத் தாள்களை நிறைக்க தொடங்கியதுதான் இந்த கிறுக்கலகள். என்னைப் பற்றி சொல்ல வேண்டுமானால் என் சமகால துபாய் வாழ்க்கையைச் சொல்ல முடியாது. அது என்னை யாரோவாகவோ விரும்பி மாற்றிக் கொண்டு களமாடும் ஒரு யுத்த வாழ்வு. பொருளீட்டல் என்பது எளிதாய் சிலருக்கு கைகூடும் ஆனால் என்ன ஒன்று எளிதாய் கைகூடும் எல்லாமே எளிதாய் சென்று விடவும் செய்கிறது. அடிப்படையில் தேடிச் சேர்ப்பதிலொரு தர்மம் இருக்கவேண்டும் அந்த தர்மத்தின் பெயர்தான் உழைப்பு.  வாழ்க்கை வேறு திசையில் அழைத்துச் சென்ற பாதையாய் என் பொருள் ஈட்டும் சமகால வாழ்வு இருந்தாலும் கனவு என்னவோ வானத்தில் பறப்பதாயத்தானிருக்கிறது இன்னமும்.

வாழ்ந்து தீர்க்க முடியாத பக்கங்களை ஒரு எழுத்தாளன் எழுதிப் பார்க்கிறான், ஓவியன் வரைந்து பார்க்கிறான், ஒரு இயக்குனர் படமாய் எடுக்கிறான் ஆகமொத்தம பெரும்பாலும் எல்லா படைப்பாளிகளுக்கும் வாழும் உலகம் ஒன்றாயும் வாழ விரும்பும் உலகம் வேறொன்றாயும்தான் இருக்கிறது. இந்தச் சமன்பாட்டு முரண்தான் படைப்பவனின் அதிரகசியமான வாழ்வாய் இருக்கிறது. இந்த கணம் வரை அறுதியிட்டுச் சொல்ல முடியாத வாழ்வின் நிதர்சனத்தில் என்னை ஒரு எழுத்தாளனாய் அடையாளப்படுத்திக் கொள்வதாகவே எனது தினமும் நான் நினைக்கிறேன். எல்லா நேரமும் எழுத விரும்புபவனாகவும், சுற்றி நிகழும் விசயங்களுக்குள் இருக்கும் ஜீவனை ரசிக்க முடிந்தவனாகவும், கொடுமையான வெயிலென்று ஊர் நிராகரிக்கும் உச்சி வெயிலின் உஷ்ணத்தை ரசிக்கத் தெரிந்தவனாகவும், இதற்கு மேல் நின்றால் ஜன்னி கொண்டு விடும் என்று ஊரார் விலக்கி வைக்கும் குளிரை ஸ்வெட்டர் அணியாமல் கைகளால் கட்டிக் கொண்டு அனுபவிக்க விரும்புவனாகவும்...

யாருமற்ற வீதிகளில் இரவு நேரங்களில் விழித்துக் கொண்டிருக்கும் பூமியின் பிரக்ஞைச் சூட்டினை, அந்த கதகதப்பினை அனுபவிக்க ஆசைப்படுபவனாகவும்,  ஆல் இந்திய ரேடியோ திருச்சிராப்பள்ளி வானொலி செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயணஸ்வாமி என்று நினைவுகளை மீண்டும் பால்யத்துக்குள் போக விரும்புபவனாகவும் அப்போது தம்பிகளுடன் ஒரு மேரி பிஸ்கெட்டுக்கு சண்டை போடுபவனாகவும், பக்கத்து வீட்டுப் பையனை நங்கென்று அடித்து விட்டு ஓடி வந்து வீட்டிலிருக்கும் பெரிய மரபீரோவுக்கு பின் ஒளிந்து கொள்ள விரும்புபவனாகவும், அப்பாவின் மடியிலமர்ந்து அம்மா சொல்லும் கதைகளைக் கேட்கவிரும்புபவனாகவும் இருக்கும் நான் யாரென்பதுதான் இப்போதெழும் அந்த ஞானக் கேள்வி.

என் கடவுள் தேடல்தான் காதலென்று உணர்ந்த பொழுது கடவுள் தேடல் நின்று போனது. ஆழ்மனதில் விதைக்கும் விசயங்கள், அதற்குப் பின்னான உழைப்பு, முயற்சி, ஒழுக்கம் எல்லாம் சேர்ந்துதான் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் என்றுணர்ந்த போது மூடநம்பிக்கைகள் அறுந்து போனது. நெருங்கிய உறவினர்களின் மரணங்களில் என்னை துரத்தி வந்த நிலையாமை ஒரு விபத்தில் என் அப்பாவை பறிகொடுத்த போது என் தோளில் ஏறி அமர்ந்து செவிகடித்து எங்கே செல்கிறாய் நீ என்ற கேள்வியை உச்சி மண்டையிலடித்துக் கேட்டது. எல்லாம் ஒரு நாள் சட்டென்று தீர்ந்து போகும் நீ வெறுமனே நாளை யாரோ ஒரு சிலரின் ஞாபகத்தில் தேங்கிக் கிடக்கப்போகும்  நினைவுதான் என்று சொல்லிக் கொண்டேயிருக்கும் காலத்தின் கை பிடித்துக்கொண்டுதான் இந்த நாட்கள் எனக்கு நகர்ந்து கொண்டிருக்கின்றன.

இப்படியாய் வாழ்வின் ரகசியங்கள் எல்லாம் நீர்க்குமிழிகளாய் உடைந்து உடைந்து நிதர்சனத்தை போதித்துக் கொண்டேயிருக்க,  இந்த மாலை வேளையில்  தட்டச்சு செய்து கொண்டிருக்கும் இந்தக் கட்டுரை என்னைப் பற்றி உங்களுக்கு சொல்ல முயன்று தோற்றது போலவே நீங்களும் புரிந்து கொள்ள முடியாத ஒரு குழப்பச் சூழலோடே இந்த வார்த்தைகளைக் கடந்து கொண்டிருக்கலாம்தான். அதிலொரு பிழையுமில்லை.

புரிந்து கொள்ள முடியாத இவ்வாழ்வை புரியாமலேயே அணுகுவது எவ்வளவு உன்னதமானதோ அப்படியாய் சிவகங்கை மாவட்டத்தின் ஒரு குக்கிராமத்திலிருந்து நீண்ட இந்தக் கிளை  தன்னை தன் மூதாதையர்களின் பிரதிநிதி என்று அறிவித்து கொள்ள விரும்புவதாய் ஒரு உத்தேசமாய் கருதிக் கொள்ளுங்கள். எழுத்து நோக்கி நீண்டு கொண்டே இருக்கும் கரங்களுக்குச் சொந்தக்காரன், ஒரு சில புத்தகங்களை எழுதியவன், இன்னும் சில புத்தகங்களை எழுதித் தீர்க்க ஆவல் கொண்டவன் என்பதாயும் எனது அடையாளம் வரையறுக்கப்படலாமென்றாலும்...

காலத்தின் கைகளில் தன்னை முழுமையாய் கொடுத்தவன் நான் என்றுதான் என் பிரக்ஞை என்னை எனக்கு அறிமுகம் செய்கிறது.

ப்ரியத்தோடு என்னை எழுத அழைத்த தம்பி குமாருக்கு எனது நன்றிகள். கட்டுரை அபஸ்வரத்திலிருந்து வெடித்திருக்கிறது ஆனால் சுபஸ்வரம்தான் அது என்பதை உணர்வீர்களாக;

தேவா சுப்பையா.
**********

ன்னைப் பற்றி நான் என்னும் தொடர் ஆரம்பித்த போது பலருக்கு கட்டுரை கேட்டு மின்னஞ்சல் அனுப்பினேன். சிலர் மட்டுமே அனுப்பிக் கொடுக்க பதிவைத் தொடர முடியுமா என்ற யோசனையில் முகநூல் வழியாக வாட்ஸ் அப் வழியாக சிலரைப் பிடித்து கட்டுரை வாங்கி போட்டு வந்த எனக்கு இந்த வாரம் போட எந்தக் கட்டுரையும் இல்லாத நிலையில் மனசுக்குள் வந்தவர் தேவா அண்ணன். 

அவரிடம் முன்பே சொல்லியிருந்தாலும் அவரின் தற்போதைய கம்பெனி சூழலால் விரட்டிக் கேட்கவில்லை. இந்த வாரத்துக்கு அவரை விட்டால் வேறு வழி இல்லை என்பதால் கண்டிப்பாக வேண்டும் என்று வாட்ஸ் அப்பில் செய்தி அனுப்பி... சொல்லப் போனால் நச்சரித்து... அவர் சூழலில் எனக்காய் எழுதி இந்தப் பதிவை எழுத ஆரம்பிக்கும் போதுதான் அனுப்பிக் கொடுத்தார். எனக்காய்... தன் வேலைகளுக்கு இடையில் எழுதிக் கொடுத்த தேவா அண்ணனுக்கு நன்றி.

தொடர்ந்து வாசித்து கருத்துக்களைப் பகிர்ந்து வரும் உறவுகளுக்கும் நன்றி.

விருப்பம் இருப்பவர்கள்... இதுவரை என்னைப் பற்றி நான் எழுதாதவர்கள் எழுத விரும்பினால் 'kumar006@gmail.com'-ல் தொடர்பு கொள்ளுங்கள்.

நன்றி.
-'பரிவை' சே.குமார்.

புதன், 3 மே, 201716. என்னைப் பற்றி நான் - ஜி.எம்.பாலசுப்ரமணியம்

ந்த வாரம் தன்னைப் பற்றிச் சொல்லியிருப்பவர் நாம் அனைவரும் அறிந்த, பதிவுலகில்  ஜி.எம்.பி என்று எல்லோராலும் அன்பாய் அழைக்கப்படும் அன்பின் ஐயா திரு. ஜி.எம்.பாலசுப்ரமணியம் அவர்கள்.

GMB WRITES என்னும் தளத்தில் பல்சுவைப் பதிவுகளைப் பகிர்ந்து வரும் ஐயா அவர்கள், நான் ஒரு திறந்த புத்தகம் என்று சொல்லி, உள்ளத்து உணர்ச்சிகளுக்கு வார்த்தைகளில் உயிர் கொடுத்தால் உண்மையில் ஜொலிக்கும் என்ற வாசகத்தை வலைப்பூவில் வைத்து அதே போன்று எழுதியும் வருகிறார். மணிமேகலைப் பிரசுரம் வாயிலாக சிறுகதைத் தொகுப்பு வெளியிட்டிருக்கிறார். அது குறித்து நான் கூட ஒரு பதிவாகக் கிறுக்கியிருந்தேன். 

ஐயாவுடன் வலையுலக தொடர்புதான்... எல்லாரையும் கருத்துக்களால்... அதுவும் மனதில்பட்ட கருத்தை தயங்காது சொல்லித் தட்டிக்கொடுக்கும் ஐயா அப்படித்தான் என் பதிவுகளிலும் தட்டிக் கொடுத்தார். ஐயா என்னைப் பற்றி நானுக்கு எழுதித் தரமுடியுமா என்று கேட்டதும் எழுதிக் கொடுத்தார்.

ஐயா குறித்து அவரின் எழுத்து கீழே.....


னசு குமார் கேட்டுக் கொண்டதற்கு இணங்க என்னைப் பற்றி நான். 

ஊரறிந்த பாப்பானுக்கு பூணூல் எதற்கு என்னும்  சொல்வழக்கு இருக்கிறது என்னை நான்  அப்படித்தான்  நினைத்துக் கொண்டிருந்தேன் ஆனால் அது சரியில்லையோ  என்று தோன்றுகிறது சில அடையாளங்கள் மட்டும் போதாது  தமிழ் வலையுலகில் என்னை அறியாதார் இருக்க மாட்டார்கள் என்னும்  கர்வம்   அது அப்படியில்லை ஐயா  என்று எனக்குணர்த்தியது. 

ஒரு வலைப்பூவில் வந்திருந்த ஒரு செய்தி. ஒரு பதிவர் பலரது பதிவர்கள் பெயரைக் குறிப்பிட அதில் என் பெயரைக் காணவில்லை அப்போதுதான் உரைத்தது என்னை அறியாதவர்களும்  படிக்காதவர்களும்  இருக்கிறார்கள் என்று என் ஈகோவுக்கான ஒரு அடி அது. என்பதிவுகளைத் தவறாமல் வாசிப்பவர்களுக்கு நான்  ஒரு திறந்த புத்தகம்  என்பது தெரியும். இது என்னை நானே அறிமுகப்படுத்திக் கொள்ளும்  ஒரு முயற்சியே தாங்க்ஸ் டு மனசு குமார். 

என் பெயர் வயது ஆசைகள் ஆதங்கங்கள் என என்பதிவுகள் ஒரு கலந்து கட்டியவையாக இருக்கும்  என்  வலைத்தள முகப்பில்  எழுதி இருக்கும் வாசகங்கள் என் கொள்கையை ஓரளவு காட்டும்  பெரும்பாலும்  உண்மை என்று நான்  நம்புவதைத்தான்   எழுதுகிறேன்  என் பெயர் படம்  என்பன போன்ற தகவல்களை நான் வெளிப்படையாகவே காட்டுகிறேன்   முகம்  தெரியா வலை அறிமுகங்களில் என்னைப் படிப்பவருக்கு நான்  யார் என்று தெரிந்திருப்பது அவசியம்  என்றே எண்ணுகிறேன் முடிந்தவரை வலை அறிமுகங்களை நட்பாக்கிக் கொள்ள விரும்புகிறேன்  அதற்கு நான்  யார் என்பது தெளிவாக இருக்க வேண்டும் அல்லவா  புனைப் பெயரிலோ தெரியாத தகவல்களிலோ  நான் மறைந்து கொள்ள விரும்பவில்லை இதைப் படிப்பவர்களுக்கு இவன் இப்படித்தான் என்னும்  ஒரு கணிப்பு வரவேண்டும் .

ஜோதிஜி திருப்பூர் எழுதி இருந்ததைப் படித்தபோது  அவரைப் போலவே எனக்கும்  என் மூதாதையரைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும்  என்னும் ஆவல்பிறந்தது என்  செய்ய எனக்கு என்  தாத்தா பாட்டி மற்றும்  உறவினர்கள் பற்றிய எல்லா செய்தியும்  கிடைக்கவில்லை அதுபோல் என் வாரிசுகளுக்கும்  அந்தப் பிரச்சனை எழக் கூடாது என்று எண்ணியே என்னைப் பற்றி என்  சுய சரிதையை ஆவணமாக்கும்  முயற்சியில்  இருக்கிறேன்  ஆனால் அது ஏனோ முடிவு இல்லாமல் தேங்கி நிற்கிறது.

என் சொந்த ஊர் எது என்பது சந்தேகமாக இருக்கிறது என் அப்பாவின்  ஊர் பாலக்காட்டில் உள்ள கோவிந்தராஜபுரம்  அதன் முதல் எழுத்தே என் பெயரின்  இனிஷியலில் உள்ளது அப்பா பெயர் மஹாதேவன்   அவர் பெயரின்  முதல் எழுத்தே என்  இனிஷியலில் உள்ள இரண்டாவது  எழுத்து ஆக ஜீ. எம் பாலசுப்பிரமணியம்  என்பது என் பெயர் 1938-ம் ஆண்டு நவம்பர் பதினொன்றாம் தேதி பெங்களூரில் பிறந்தேன்  இப்போது ஊரில் எனக்கென்று மூரிங்  ஏதும்  இல்லாததால் என் பிள்ளைகளின் பெயர்களில் என் ஊரின் இனிஷியலை நீக்கி விட்டேன்.  

அப்பாவுக்கு அரசு பணி செல்லும் இடமெல்லாம் நாங்களும்  செல்வோம்   என்  தாய் எனக்கு மூன்று வயதாய் இருக்கும் போதே இறந்து விட்டார்  என் தாயின் முகம்  கூட எனக்கு நினைவில்லை புகைப்படத்தில்  பார்த்ததுதான்  என்  தாய் இறந்த ஓராண்டுக்குள் என் தந்தை மறுமணம் செய்து கொண்டார்  எங்கள் குடும்பம்  பெரியது  தந்தைக்கு முதல் தாரம்  மூலம் ஆறு பேர் பிறந்து இப்போதும் ஐவராக இருந்தோம்  ஒரே சகோதரி அவளும் போய்ச் சேர இப்போது நாங்கள் நால்வர் மீதி இரண்டாம் தாரம்  மூலம்  ஏழு குழந்தைகள் பிறந்தது. அதில் மூவர் பெண்கள் பிறந்த சில நாட்களிலேயே இறந்துவிட்டனர் ஆக மீதி நால்வரில் இரண்டு பேர்  பரலோகம்  சென்று விட்டனர் நான் என் சிறிய தாயாரின்  பராமரிப்பிலேயே வளர்ந்தேன்  என் பிறந்த நாளுக்கு ஒரு முக்கியத்துவம்  உண்டு. அது நூறாண்டுக்கு ஒரு முறைதான்  இப்படி ரிபீட் ஆகும்  11-11- என்று  ஒரு முறை யாரோ இது பற்றிக் குறிப்பிட்டிருந்தார்கள்  

என்னைப் பற்றிய செய்திகள்பலவும் வலையில் எழுதி இருக்கிறேன் பள்ளியில் முதல் மூன்று வகுப்புகள் படிக்கவில்லை அரக்கோணத்தில் மூன்றாம்  வகுப்பில் சேர்ந்து ஆறாம் வகுப்பு படிக்கும் போதே டைபாய்ட் வந்து பள்ளிப் படிப்பு தடை பட்டது அதன் பின்  என் தந்தையாருக்கு பூனாவுக்கு மாற்றல் ஆக பாலக் காட்டில் அப்பா வழிப்பாட்டியுடன்  ஓராண்டு படிப்பே இல்லாமல் சுற்றினோம்  அங்கு மலையாளம் படிக்க வேண்டும் என்பதால் இதன்  நடுவே தந்தைக்கு கோவைக்கு மாற்றல் ஆகி  அங்கே ராமநாதபுரம்  முனிசிபல் பள்ளியில் தேர்ட் ஃபார்மில் சேர்ந்தேன் நான் அந்தப் பள்ளியில் சேர்ந்த  விவரம் எனது  தளத்தில் இது  லஞ்சமா .?  என்ற  பதிவில் இருக்கிறது.

ஃபோர்த் ஃபார்மும்  அங்கேதான்   வகுப்பில் நானே முதலாம்  மாணவன் ஃபிஃப்த் ஃபார்ம் மற்றும்  சிக்ஸ்த் ஃபார்ம் எனப்படும் பள்ளி இறுதி கூனூரில் புனித அந்தோனியார் பள்ளியில் முடித்தேன்   இவை எல்லாம் என் பதிவுகளில் ஆங்காங்கே எழுதப்பட்டிருக்கும் பின் என்ன வேலை தேடு படலம்தான் நான்  கல்லூரி செல்லாதவன்   ஒரு முறை நண்பனொருவனைப் பிற்காலத்தில் சந்தித்து நான்  எஞ்சினீயராக வேலையில் இருக்கிறேன் என்றதும்  அவன்  பத்தாம் க்ளாஸ் படித்து எஞ்சினீயரா  என்று கேலி செய்தது நினைவுக்கு வருகிறது . நான் வாழ்வியலில் நிறையப் படித்திருக்கிறேன் என்பது எங்கும்  என்னை நிலை நாட்டிக் கொள்ள உதவுகிறது  எனது 53  வயது முடிந்தபோது பீ எச் ஈ எல் லிருந்து விருப்ப ஓய்வு பெற்று விட்டேன்   அதையே என்  பதிவொன்றில் என்னை பெற்றவருக்காகவும்  நான் பெற்றதுகளுக்காவும்  இதுவரை வாழ்ந்தாகி விட்டது போதுமடா சாமி இனி எனக்காக வாழவேண்டும்  என்று எழுதி இருப்பேன். 

விருப்ப ஓய்வு பெறும் போது என்  மனைவியிடம்  நமக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வருமானம்போதுமல்லவா என்று கேட்டேன்  அது 1991ம் ஆண்டு அவளும்  நம் இருவருக்கு அது தாராளம் என்றாள் காலம் தான் எவ்வளவு மாறி விட்டது ரூபாயின் மதிப்பே போய் சில நேரங்களில் எடுத்த முடிவு குறித்த சந்தேகம் வந்ததுண்டு இருந்தாலும்  இப்போது நோ ரிக்ரெட்ஸ் என் வாழ்வின் எல்லா நிலைகளுக்கு ம் நானே பொறுப்பு என்பதை உணர்கிறேன்  மற்றபடி விதி என்றோ கடவுள் என்றோ நம்புவதில்லை

வலையில் என் கருத்துகளை ஆணித்தரமாகக் கூறுவேன்  வெளிப்படையாக இருக்கும்  ஆனாலும் பிறர் மனம் புண்படக்கூடாது என்று நினைப்பவன் எனக்கு முன்  வாயில் சிரித்துக் கடை வாயைக் கடிக்கும்  பலரையும் பிடிக்காது  அதே போல் என்னையும் பலருக்குப் பிடிக்காது என்றும் தெரியும் யார் மீதும்  காழ்ப்புணர்ச்சி கிடையாது வெளிப்படையாக இருப்பதே என் பலம் பலவீனமும் கூட பதிவுகளில் எழுதி இருந்த சிறுகதைகளின் தொகுப்பை நூலாக்கி இருக்கிறேன்.    மணிமேகலைப் பிரசுரம்  அதை என்  75-ம் வயது நிறையும் போது என்  மக்கள் பரிசாக்கினர் எனக்கு இந்த எழுதும் வழக்கம்  முன்பே இருந்தது எழுதியவை என்  ஆத்ம திருப்திக்கே பத்திரிக்கைகளுக்கு  அனுப்பியது இல்லை.  

என் எழுத்துகளை யாராவது ரிஜெக்ட் செய்வது எனக்குப் பிடிக்காது நாடகங்களை எழுதி இயக்கி நடித்தும்  இருக்கிறேன்  புதிது புதிதாக எதையாவது செய்ய வேண்டும்  என்னும்  ஒரு உந்துதல் உண்டு எழுத்துகளிலும்  அவற்றைக் கடைப்பிடித்து இருக்கிறேன்   என்  அறுபது வயதுகளில்  தஞ்சாவூர் பெயிண்டிங்கும்   கண்ணாடி பெயிண்டிங்கும் ஆசிரியர் யாருடைய உதவியும் இன்றி கற்றேன்  இப்போது அதைத் தொடர  இயலாமல் இருக்கிறேன்   நுண்ணிய வேலைகளுக்குக் கண்களும் கைகளும் சேர்ந்து இயங்கல் அவசியம் அது இப்போது குறைந்து கொண்டு வருகிறது. ஒரு ஆண்டுக்கு முன்னால் க்வில்லிங்  வேலையும்  டெரகோட்டா அணிகலன் வேலையும்  முயற்சி செய்தேன் ஆனால் நான்  செய்து வைப்பதை யாருக்கு அணிவித்து அழகு பார்க்க என்று தோன்றியதால் விட்டு விட்டேன்.

இப்போதெல்லாம் எல்லா முதியோரைப் போல் கிருஷ்ணா ராமா என்று இருக்க முடியவில்லை  உடலில் தெம்பு இருக்கும் வரை எதையாவது புதிதாகச் செய்து கொண்டிருக்க வேண்டும்  என்று நினைக்கிறேன் வலை உலகில் நான்  டிஃப்ஃபெரெண்ட்  என்று பலருக்கும்  தெரியும். 

மனசு குமாருக்கு இது போதும் என்று நினைக்கிறேன்.


நல்வாழ்த்துக்களுடன்,
ஜி.எம்.பாலசுப்ரமணியம்.

நான் கேட்டதும் உடனே எழுதிக் கொடுத்த அன்பின் ஐயா அவர்களுக்கு நன்றி. தொடர்ந்து வாசித்து கருத்துக்களை இட்டு என்னைப் பற்றி நான் எனச் சொல்லும் வலை ஆசிரியர்களை மகிழ்விக்கும் அனைவருக்கும் நன்றி.

என்னைப் பற்றி நான் பகுதிக்கு மட்டும் கருத்துரை மட்டுப்படுத்துதல் நீக்கப்படுகிறது என்பதை அறிவீர்கள். தங்கள் கருத்துக்களை இங்கு பகிருங்கள்... நான் கேட்டவர்களில் பலர் இதுவரை அனுப்பவில்லை... விருப்பமில்லை என்றால் பரவாயில்லை... விருப்பம் இருப்பின் விரைந்து அனுப்பிக் கொடுங்க... நன்றி.

அடுத்த வாரம் மற்றொரு வலை ஆசிரியர் தொடர்வார்...
-'பரிவை'. சே.குமார். 

புதன், 26 ஏப்ரல், 201715. என்னைப் பற்றி நான் - துரை செல்வராஜூ

ந்த வாரம் என்னைப் பற்றி நான் பகுதியில் தன்னைப் பற்றி பகிர்ந்து கொள்பவர் நாமெல்லாம் அறிந்த, ஆன்மீக பதிவுகளில் முத்திரை பதிக்கும் அன்பின் ஐயா தஞ்சையம்பதி திருமிகு செல்வராஜூ அவர்கள். ஐயாவைப் பற்றி சொல்வதென்றால் சொல்லிக் கொண்டே போகலாம்... என்னிடம் அவ்வளவு இருக்கு அவரைப் பற்றிய மதிப்பும் மரியாதையும்... அபுதாபியில் சந்தித்த போது அவர் காட்டிய நேசம் என்றும் மறக்க முடியாது.

ஆன்மீகப் பதிவுகளை மிக விரிவாக, வரலாற்று விளக்கங்களுடன் அழகான படங்களுடன் வாசிக்கக் கொடுப்பவர். ஆன்மீகப் பதிவு மற்றுமின்றி எல்லா வகையான பதிவுகளிலும் சிக்ஸர் அடிப்பவர்.

ஒரு வலைப்பதிவரின் பதிவு பிடித்திருந்தால் அதற்கென தனிப்பதிவு எழுதுபவர். அப்படி எழுதக் கிடைத்த பாக்கியசாலிகளில் நானும் ஒருவன். ஆம் என்னோட நேசம் சுமந்த வானம்பாடி சிறுகதைக்கு தனிப்பதிவே எழுதினார்.

அபுதாபியில் சந்திக்கும் போது பல விஷயங்கள் ஐயா பேச... இடையிடையே கில்லர் அண்ணாவும் பேச... நான் எப்பவும் போல் கேட்டுக் கொண்டிருந்தேன். ஐயா சில பதிவுகளை இருவரோ மூவரோ பேசுவது போல் உரையாடல் நடையில் எழுதுவார். மிக அருமையாக இருக்கும்.

என்னோட சிறுகதைகள் ஐயாவுக்கு ரொம்பப் பிடிக்கும்.

இனி ஐயா உரையாடல் நடையில் சொல்வதை வாசிப்போமா...


நானும் உங்களுடன்..
***

ண்ணே!.. அண்ணே!..

தம்பி!.. வாங்க.. எப்படியிருக்கீங்க?..

எங்கே..ண்ணே!.. ஒரு வாரமா குளிரும் மழையும் புரட்டி எடுத்துடிச்சி.. அது
சரி.. உங்களுக்கும் உடம்பு சரியில்லை.. ந்னு கேள்விப்பட்டேன்!..

என்னப்பா.. செய்றது.. நானும் இருக்கேன்... னு, எதிர்பாராத விருந்தாளியா
தலைவலி, ஜூரம்...

இத்தனை வருஷமா ஐயப்ப விரதம்.. ன்னு ஒவ்வொரு நாளும் இரண்டு தரம்
குளியல்... அப்போதெல்லாம் வராத ஜூரம் இப்போது!..

ஆனாலும் - காய்ச்சல் போவதும் வருவதுமாக மிகுந்த சிரமமாகி விட்டது...

ஏன்.. ண்ணே!.. ஓய்வு எடுத்து இருக்கலாம்..ல்லே!..

ஓய்வா?.. சரியாப் போச்சு.. போ!.. ஜனவரி பதினைஞ்சில இருந்து தினமும் கூடுதலாக நாலு மணி நேரம் வேலை பார்க்க வேண்டிய கட்டாயம்...

8 + 4 + 2 ..ன்னு பதினாலு மணி நேரம்.. மீதமுள்ள நேரத்தில் தான் வலைத்தளம், உணவு, உறக்கம்...

அடடா?..

அதுக்கு இடையில தான்.. தலைவலி, ஜூரம்..
ஓய்வு நாள் இல்லாம எல்லா நாளும் வேலை.. ன்னு அறுபது நாள்...
கூடுதலான நாலு மணி நேர வேலை போன வாரம் தான் என்னை விட்டது..

என்னமோ.. அண்ணே!.. ஊரு விட்டு ஊரு போனாலே -  நாம தான் நம்மை நல்லபடியா
பார்த்துக்கணும்.. அதிலயும் நாம கடல் கடந்து வந்திருக்கோம்!.. அது சரி..
நீங்க என்ன சினிமா பொட்டியை...

ஏ... இது சினிமா பொட்டியில்லை!.. கம்ப்யூட்டர்.. தமிழ்..ல கணினி...

இருக்கட்டுமே.. அதுல.. சினிமாவும் பார்க்கிறீங்க தானே!.. அதுல என்ன
குடைஞ்சிக்கிட்டு இருக்கீங்க?..

அதுவா!.. நம்ம மனசு குமார் தெரியுமா?..

அங்கே அபுதாபி..ல இருக்காரே.. இந்த வயக்காட்டு கதையெல்லாம் எழுதுவாரே!..

வயக்காடு மட்டுமா!.. குடும்பம்.. அரசியல்.. இலக்கியம்.. சினிமா..ன்னு
நாலா பக்கமும் சலங்கை கட்டி ஆடுறவராச்சே!... அவரு கேட்டிருந்தார்...

என்னைப் பற்றி நான்!.. - ன்ற தலைப்பு..ல நீங்க உங்களைப் பற்றி எழுதுங்க
ஐயா..ன்னு!.. அது ஆச்சு.. மூனு மாசம்..

அப்போ இதுவரைக்கும் எழுதிக் கொடுக்கவே இல்லையா?.. இத்தனை நாள் என்ன..ண்ணே
செஞ்சுக்கிட்டு இருந்தீங்க?..

என்னப்பா.. இது!.. விடிய விடிய கதை கேட்டமாதிரி ஆயிடுச்சு?.. இப்ப தானே
பிரச்னையை சொன்னேன்!..

ஆமா..மா!.. குழம்பிட்டேன்!.. அது இருக்கட்டும்... அவங்க கேட்டதுக்கு
என்ன.. ண்ணே எழுதப் போறீங்க?..

அது தான்..யா குழப்பமா இருக்கு!.. அந்த அளவுக்கு நம்ம கிட்ட விஷயம்
இருக்கா..ன்னு!..

உங்களுக்கும் குழப்பமா!.. அண்ணே உங்களப் பத்தி உங்களுக்கு தெரியாது!..

உனக்குத் தெரியுமா?..

எனக்கும் தெரியாது.. நீங்க தான் சொல்லணும்!.. நானும் தெரிஞ்சுக்கிறேன்!..

..... ..... .....!..

என்ன.. ண்ணே.. சும்மா இருக்கீங்க!.. உங்களப் பத்தி சொல்லுங்க.. சரி..
நானே கேக்கிறேன்?.. உங்க சொந்த ஊர் எது?..

நீர்வளமும் நிலவளமும் நெறைஞ்சிருக்கும் தஞ்சாவூர் தான் சொந்த ஊர்.. இங்கே
தான் பிறந்தேன்.. ஏழு வயசு வரைக்கும் இங்கே தான் வளர்ந்தேன்..

அதுக்கு அப்புறம்?..

அப்பா அரசு ஊழியர் ஆனதால் வேறு சில ஊர்களில் வளர்ச்சியும் படிப்பும்!..

நீங்க என்ன படிச்சிருக்கீங்க?... அதுக்காக சத்தியம் தான் நான் படிச்ச
புத்தகம்!.. அப்படி..ன்னு எல்லாம் சொல்லக் கூடாது!...

நீ கேட்டதும் தான் நினைச்சுப் பார்க்கிறேன்!.. அதைத் தான் இது வரைக்கும்
படிச்சிருக்கேன்..ன்னு!..

அம்மா.. அவங்க தானே முதல்குரு!.. அந்தக் காலத்தில ஆனா.. ஆவன்னா.. அட்டை..
ந்னு இருக்கும்.. அதுல தான் குழந்தைகளுக்கு முதல்ல படிப்பு ஆரம்பமாகும்..

அட்டைக்கு ஒருபக்கம் உயிர் எழுத்துக்களும் மறுபக்கம் ஔவையார்
சொன்னாங்களே.. ஆத்திச்சூடி கொன்றை வேந்தன் - இதுங்கள்...ல சில வரிகளும்
இருக்கும்!..

ஆனா.. ஆவன்னா.. அட்டையை வெச்சிக்கிட்டு அம்மா சொல்லிக் கொடுத்த அதெல்லாம்
இன்னும் கூடவே வந்துகிட்டு இருக்கு!..

அறம் செய விரும்பு.. ஆறுவது சினம்!.. இயல்வது கரவேல்.. ஈவது விலக்கேல்!..
- இதெல்லாம் நீங்க கடைபிடிச்சிருக்கீங்களா?..

இந்த சினம் மட்டும் தான்.. ஆற மாட்டேங்குது!.. மகாகவி சொன்ன மாதிரி -
பாதகம் செய்பவரைக் கண்டால் நீ பயங்கொள்ளலாகாது பாப்பா!.. - ன்னு
ஆகிடுது... மற்றதெல்லாம் இயன்ற வரைக்கும்...

அப்போ நீங்க தவறே செய்ததில்லையா?..

இல்லை... இளமையில கடல் கடந்து போன நாடு சிங்கப்பூர்.. அங்கே கண்டதே
காட்சி.. கொண்டதே கோலம்..ன்னு நடந்தவங்களுக்கு மத்தியில கற்பூரமா இருந்து
நாடு திரும்பியிருக்கின்றேன்...

அங்கே எப்படியும் இருந்திருக்கலாம்.. கேட்பார் என்று எவரும் இல்லை..
ஆனாலும் ஒரு நாளும் அறம் தவறியதே இல்லை... இன்னமும் அப்படித் தான்!..

அப்போ.. பொய்!..

மனமறிந்து சொன்னதில்லை..
ஆனாலும், சில உண்மைகளைச் சொல்லாமல் இருந்திருக்கிறேன்!...

ஏன்?..

ஒவ்வொரு திரைக்கும் மறுபக்கம் உண்டு தானே!.. தவிரவும் எல்லா உண்மைகளும்
எல்லாருக்கும் தெரிந்திருக்க வேண்டியதில்லை!..

பொய் சொல்லத் தெரியாமல் உண்மையைச் சொன்னதால் குடும்பத்திற்குள் பிளவு
உண்டாகிப் போனது.. இன்று வரைக்கும் சரியாகவில்லை.. அது ஒன்றுதான் மிகப்
பெரிய வருத்தம்..

வருத்தப்படாதீங்க அண்ணே!.. எல்லாம் சரியாகி விடும்.. ஆனா இதெல்லாம் எப்படி!..

வாரியார் ஸ்வாமி, குன்றக்குடி அடிகளார், திருக்குறளார் முனுசாமி... ன்னு..

இவங்கள்.. லாம் யாரு..ண்ணே?...

மக்களை நெறிப்படுத்தி வழிகாட்டிய பெரியவங்க...
அவங்க வாழ்ந்த காலத்தில வாழ்ந்தோம்...ங்கறது பெருமை..
அவங்க சொன்னதைக் கேட்டு நடந்தோம்...ங்கறது மகிழ்ச்சி...

அவங்கள்ளாம் என்ன சொன்னாங்க?..

அத்தனை திருக்குறள்..ல ஒன்றைக் கூட கடைப்பிடிக்க முடியாதா?.. - ன்னு கேட்டாங்க!..

மகாகவியும் சொல்றாரு..
பொய் சொல்லக் கூடாது பாப்பா - என்றும்
புறஞ் சொல்லல் ஆகாது பாப்பா!.. - அப்படின்னு!..

அதெல்லாம் மனசுல அப்படியே பசுமையா இருக்கு...

தவறு ஏதும் செய்யாம நாலு அடி எடுத்து வெச்சிட்டா..
அதுவே நல்ல வழி ஆகிடுது.. பிறகு அதில நாம போக வேண்டியதில்லை..
அந்த வழியே வழிகாட்டி ஆகி நம்மை அழைச்சிக்கிட்டு போயிடுது!...

இதச் சொன்னவங்க யாரு அண்ணே?..

தெரியாது... உங்கூட பேசிக்கிட்டு இருக்கறப்ப.. அதுவா நினைவுக்கு வருது...
யாராவது பெரியவங்க சொல்லியிருப்பாங்க!..

இதெல்லாம் சொல்றீங்க.. நீங்க படிச்சதைச் சொல்லவே இல்லையே?..

நான் படிச்சது புகுமுக வகுப்பு வரைக்கும் தான்!..

அப்படின்னா?..

இன்றைக்கு மேல்நிலை இரண்டாம் ஆண்டு...
அன்றைக்கு கல்லூரியில் முதலாம் ஆண்டு..

அவ்வளவு தானா?.. அதுக்கு மேல ஏன் படிக்கலை?...

குடும்ப சூழ்நிலை.. அதற்கு மேல் இயலவில்லை... அப்பா மருத்துவப் பணியில்
இடைநிலை ஊழியர்... என்னுடன் இரண்டு தங்கைகள்.. இரண்டு தம்பியர்.. அன்புச்
செல்வங்களாக மாடு ஆடு கோழிகள்...

ஏன்..ண்ணே.. நீங்க படிச்ச படிப்புக்கு ஏதாவது ஒரு வேலையில சேர்ந்திருக்க
முடியாதா!..

ஆய்வக உதவியாளார் வேலைக்கு தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில நேர்முகம்..
போனேனே!.. ஆனா, சுற்றியிருந்த அரசியல்வாதிகள் அது அதுக்கும் ஒரு விலையை
வெச்சிருந்தாங்க.. அன்பளிப்பு..ன்னு பேரு அதுக்கு..

நம்ம வசதிக்கு அன்பளிப்பு சீர்வரிசை அதெல்லாம் கொடுக்க முடியலை..
அடுத்தடுத்த ஆண்டுகள்..லயும் அப்படித்தான்... ஆனா அதிகமா இருந்தது!..

அப்புறம் என்ன..ண்ணே ஆச்சு!..

நான் முதல்..ல வேலைக்குப் போன  இடம் - மது கஷாய கடை!..
என்னை வந்து கூப்பிட்டாங்க.. நீங்க ரொம்ப நல்லவங்களா இருக்கீங்க.. - ந்னு!..

மூனு மாசத்துல உரிமையாளர்களுக்குள்ள சண்டை.. மதுக்கடை கோவிந்தா!..

அதுக்கப்புறம் குடந்தையில் கிளினிக் ஒன்றில் வேலை.. அதுவும் ஆறு மாசந்தான்...

அதன் பிறகு தான் ஒரு பிடிப்பு ஏற்பட்டது...  தாமரை திரு. வை. முத்தையா
பிள்ளை - கிராம கர்ணம் அவர்களிடம் உதவியாளராக சேர்ந்தேன்...

கிராம கணக்கு வழக்குகளைக் கையாளுவதற்கு தேர்வுகள் எழுதினேன்.. நில அளவை
பயிற்சியும் பத்திரங்கள் நகல் எழுத அனுமதியும் பெற்றேன்...

அப்போது முதல்வராக இருந்தவர் மக்கள் திலகம்.. பணி நியமனம் கூடி வந்த
வேலையில் ஏதோ பிரச்னை.. அரசு முடிவெடுத்து கிராம கர்ணம் மற்றும்
பட்டாமணியர் வேலையையே ஒழித்துக் கட்டிவிட்டது...

தமிழகம் முழுவதற்கும் கிராம நிர்வாக அலுவலர் என்ற புதிய வேலையை உருவாக்கி
அதற்கொரு தேர்வு வைத்தார்கள்... அதிலும் நான் தேர்வு ஆனேன்.. திரும்பவும்
பணி நியமனம் வழங்குவதற்கு அன்பளிப்பு என்று கை நீண்டது...

மனம் வெறுத்துப் போனது.. கொடுக்க விரும்பாமல் வெளியேறினேன்..

அப்படி இப்படி என்று மாதங்கள் ஓடின...

அந்த வேளையில் தான் - சிங்கப்பூருக்கு வாய்ப்பு கதவைத் தட்டியது..
அங்கே கப்பல் பட்டறையில் (Keppel ShipYard, Tuas, Singapore) நான்கு ஆண்டுகள்..

தங்கைக்கு நல்லபடியாக கல்யாணம்.. தம்பிகளும் மற்றொரு தங்கையும்
மேற்கொண்டு படித்தனர்...

சிங்கப்பூரிலிருந்து திரும்பியதும் மங்கல மேடை எதிர்கொண்டது..

இனிய இல்லறம்.. அன்பின் மகள்... மகன்...

அடுத்த சில ஆண்டுகளில் மீண்டும் சோதனை..

பிராய்லர் கோழி வளர்ப்புக்காக பயிற்சி பெற்றபோது -
என்னதான் கோழி வளர்த்தாலும் பெரும் பண்ணைக்காரன் வைப்பது தான் விலை..
அதனால் நீங்களே கறிக் கடை வைத்துவிடுங்கள் - என்றார்கள்..

இது ஏதடா வம்பு!.. - என்று, அந்த எண்ணத்தை அப்போதே கை கழுவியாயிற்று..

அந்த சமயத்தில் தான் குவைத்தின் மீது ஈராக் படையெடுத்தது.. வளைகுடா
வானில் போர் மேகங்கள்..

அடுத்த சில மாதங்களில் அமெரிக்கா பிற நாடுகளுடன் கூட்டணி போட்டுக் கொண்டு
ஈராக்கை விரட்டியடித்தது...

மீண்டும் குவைத் உருவாக்கப்பட்ட போது பல்லாயிரக்கணக்கானவங்களுக்கு வேலை
கிடைச்சது.. அவங்கள்.. ல நானும் ஒருவன்..

Catering Co., ஒன்றின் ஒப்பந்தத்தில் Waiter வேலை.. மருத்துவமனையில்
என்று அழைத்து வந்து ராணுவ பாசறைக்கு அனுப்புனாங்க!..

அடுத்த இரண்டு ஆண்டுகளில் -
இப்ராஹீம் கலீல் (லெபனான்) அப்துல்லா முகம்மது (கேரளம்) ன்னு நல்ல
மனசுக்காரங்களால - சரக்கறை பொறுப்பாளர்..ன்னு (Store Keeper) வேலை உயர்வு
ஆனது...

வாழ்வின் பொன்னான நாட்கள் அவை...

தொடர்ந்த வருஷங்களில் புதுசா வர்றவங்களுக்கு பயிற்சி கொடுக்கும் வேலையும்
சேர்ந்து கொண்டது..

கூடுதலாக சம்பள உயர்வு கேட்டப்போ புறக்கணிப்பு ஆயிடுச்சி..

நீங்க முன்னால சொன்னீங்களே அவங்க எல்லாம் உதவி செய்யலையா?..

அவங்க எல்லாம் வேற வேற இடங்களுக்குப் போய்ட்டாங்க..

புறக்கணிப்பு.. அலட்சியம்.. பிடிக்கலை.. அங்கிருந்து திரும்பி விட்டேன்..

தஞ்சைக்கு வந்ததும் கரந்தையில் ஸ்ரீ விஷ்ணு கம்ப்யூட்டர்ஸ் - ன்னு,
(DTP Center) பணியைத் தொடங்கினேன்...

குவைத்தில் Store Keeper ஆக வேலை செய்தபோது கணக்கு விவரங்களை கணினியில்
பதிவு செய்வதற்குத் தெரிந்திருந்தாலும்

முறையாக தட்டச்சு தெரியாது... இருந்தும் ஒருமணி நேரத்தில் செந்தமிழ்
எழுத்துருவைக் கற்றுக் கொண்டேன்...

தற்குறிப்பு தொடங்கி மாணவர் தம் ஆய்வேடுகள் வரை - நிறைவான பணி...

அப்போது தான் கரந்தை ஜெயக்குமார், அன்பின் ஹரிணி ஆகியோருடன் நட்பு மலர்ந்தது...

இருந்தாலும், தொடர்ந்த மின்வெட்டு வாழ்வைக் கெடுத்தது.. கடனும் சேர்ந்து கொண்டது...

என் முன்னோர் செய்த தவத்தால் மீண்டும் குவைத் அழைத்தது...
அதே Catering நிறுவனத்தில் மேற்பார்வையாளராக!...

இங்கு வந்த சில வருஷங்களில் மகளுக்குத் திருமணம்...
தற்போது அபுதாபியில் இனிய வாழ்க்கை..
மகன் MBA., முடித்து விட்டான்...

மகளையும் மருமகனையும் காண்பதற்காக அபுதாபிக்கு வந்தபோது தான்
அன்புக்குரிய கில்லர் ஜி அவர்களையும் குமார் அவர்களையும் சந்தித்த மகிழ்வு..

தம்பி.. என்ன தூக்கமா?..

என்ன..ண்ணே!.. இவ்வளவு தூரம் சொல்றீங்க.. தூங்குவேனா?.. மலைப்பா இருக்கு!...

என்னுடைய தந்தை சொல்லி - நான் கேட்காததாக ஒன்று மட்டும்!.

என்ன...ண்ணே.. அது!...

கல்லூரி முடித்ததும் தட்டச்சு பழகச் சொன்னார்.. அதில் விருப்பம் இல்லை..
அதைக் கேட்கவில்லை.. ஆனால், DTP Center வைத்த பிறகு ஆறு ஆண்டுகள் அதில்
தான் வாழ்க்கை...

தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை!.. என்று சும்மாவா சொன்னார்கள்!..

குவைத்தில் இருந்து தான் - தஞ்சையம்பதி மலர்ந்தது.. எத்தனை எத்தனை அன்பு
முகங்கள்.. ஆதரவுக் கரங்கள்.. இதற்கெல்லாம் கொடுத்து வைத்திருக்க
வேண்டும்...

உங்க வானத்தில வண்ணக் கிளிகள் ஏதும் பறக்கலையா!?..

அந்தக் காலத்தில் குடும்பத்தில் தலைப்பிள்ளைக்கு..
ஆணோ பெண்ணோ - அவர்களுக்கு..ன்னு சில கடமைகள்.. கட்டுப்பாடுகள்..

அதெல்லாம் மனசில நின்னதால - கிளியோ குருவியோ - ஒன்னும்  கூடு கட்டவில்லை...

இதுவரைக்கும் வாழ்ந்த வாழ்க்கையில் -
எனக்கென்ற தர்மத்தை விட்டு விலகியதில்லை - என்றே நினைக்கின்றேன்...
அதனால் தான் - காலம் எனக்கொரு பெரிய பணியைத் தந்தது..

என்ன..ண்ணே.. அது!...

பழைமையான சிவாலயம் ஒன்றினை நல்ல உள்ளம் கொண்டோர் புதுப்பித்த வேளையில் -
மிக முக்கியமான பணி என்னை வந்தடைந்தது...

என் வாழ்வில் நான் பெற்ற பெரும்பேறு அது.. நல்லவிதமாக நிறைவேறியது..
கோயிலும் கும்பாபிஷேகம் கண்டு - மக்களின் வழிபாட்டில் உள்ளது...

இருந்தாலும் - ஒரு ஆசை.. இன்னும் நிறைய எழுதணும்..
நல்ல விஷயங்களைச் சொல்லணும்.. மக்களுக்குப் போய்ச் சேரணும்!..

அதுக்கெல்லாம் ஒரு குறைவும் இருக்காது.. பாருங்களேன்!..

சரி.. வா.. காபி குடிக்கலாம்!..

அப்போ... கதை அவ்வளவு தானா!..

கதையா?...

இல்ல..ண்ணே!.. சும்மா ஒரு வார்த்தைக்குச் சொன்னேன்.. நீங்க இதுவரைக்கும்
சொன்னதெல்லாம் நல்லா இருக்கு.. மறக்காம குமாருக்கு அனுப்பிடுங்க!..

அப்படியா.. நீ சொன்னா சரிதான்!..

சரி.. வாங்க காபி குடிக்கலாம்!..

ஆமாம்!.. நானும் வேலைக்குப் போகணும்.. நேரமாச்சு!..
* * *

அன்பு நண்பர்களுக்கு..

இத்தகைய வாய்ப்பினை உருவாக்கித் தந்த திரு. குமார் அவர்களுக்கு நன்றி..

எனக்கு முன்பாக - தம்மைப் பற்றி அறியத் தந்த அனைவருக்கும் வணக்கம்..

சில மாதங்களாக - அவ்வப்போது குமார் அவர்களின் தளமும்
திரு துளசிதரன் அவர்கள் தளமும்
திருமதி மனோசாமிநாதன் அவர்கள் தளமும்
எனது கணினியில் திறப்பதில் மிகுந்த தாமதமாகின்றது

பதிவுகளில் கருத்துரையிடுவது என்பது வெகு சிரமமாக இருக்கின்றது...

ஆண்ட்ராய்டு வழியாக வந்தால் -
செல்லினம் தட்டச்சு ஒத்துழைப்பதில்லை...

அவர்களுடைய பதிவுகளைப் படித்து விட்டு
ஒன்றும் சொல்லாமல் செல்லும்போது மனதில் உறுத்தலாக இருக்கும்...

எனினும் -
இப்படியான அறிமுகம்..
மனம் சற்றே நெகிழ்ந்தாற்போல இருக்கின்றது..

இன்னும் கூட சொல்லலாம்... இருக்கட்டும் ..
மீண்டும் ஒரு இனிய பொழுது கிடைக்கும்...

தாய் தந்தை தம்பி தங்கையர்க்காக வாழ்ந்த வாழ்வு ஆனந்தம்..
மனைவி மக்கள் - எல்லாருக்குமாக வாழும் வாழ்வும் ஆனந்தம்!..

இந்நாளில் பேத்தி வர்ஷிதாவின் மழலையும் ஆனந்தம்..
வரும் நாட்களில் இனிய சந்ததியினரின் கொஞ்சு மொழியும் ஆனந்தம் தான்!..

நம்பிக்கை எப்படி வாழ்க்கை ஆகின்றதோ -
அப்படியே நன்னெறியும் வாழ்க்கை ஆகின்றது!...

வாழ்க நலம்!..

என்றென்றும் அன்புடன்,
துரை செல்வராஜூ...

****

யாவுக்கு மின்னஞ்சல் அனுப்பிய போது கொஞ்சம் வேலை அதிகம் எழுதி அனுப்புகிறேன் என்றார்... பின்னர் உடல் நலமின்மை காரணமாக எழுத முடியாத சூழல் என்ற நிலையிலும் நலமடைந்த பின்னர் இந்த வாரத்தில் எழுதி அனுப்புகிறேன் என்ற மின்னஞ்சல்... அதன் பின் எழுதிட்டேன் பாருங்கள் என்ற மின்னஞ்சல்...  நான் கேட்டதற்கு எழுதி அனுப்பிய ஐயாவுக்கு நன்றி. இந்தத் தொடரை தொடர வைக்கும் அனைவருக்கும் நன்றி.

-'பரிவை' சே.குமார்.