மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 30 ஏப்ரல், 2016

தொடர்கதை : நெருஞ்சியும் குறிஞ்சியும் (பகுதி-15)

முந்தைய பகுதிகள்:

           பகுதி-1       பகுதி-2         பகுதி-3            பகுதி-4        பகுதி-5          பகுதி-6           பகுதி-7    


ண்ணப்பன் மகனை ரோட்டில் வைத்து வெட்டி கொலை செய்து விட்டார்கள் என வாத்தியார் வாசுதேவன் சொன்னதற்கு ‘செஞ்சது சரிதான்’ என வேலாயுதம் சொன்னதும் வாசுவுக்கு கோபம் தலைக்கேறியது.

"என்ன சரி... ஒரு உயிருய்யா... சாதி வெறி அப்புடியா உங்களுக்கெல்லாம் உடம்புக்குள்ள ஓடுது... ஒரு பெண்ணைக் கெடுக்கும் போது மட்டும் உங்களுக்கு சாதி தெரிவதில்லை... மதம் தெரிவதில்லை... உடம்பு மட்டும்தானே தெரியுது... ஆனா கலப்புத் திருமணம்ன்னு வந்துட்டா மனசு தெரியலை... அவளோ அவனோ வாழ வேண்டியவங்கன்னு தெரியிறதில்லை... வெட்டிச் சாய்ப்பீங்க... தூக்குல தொங்க விடுவீங்க... அதுவும் இல்லேன்னா ரயில்வே டிராக்குல போட்டுட்டு போவீங்க... என்னய்யா ரத்தம்... இந்த சாதி வெறி பிடிச்ச ரத்தம்...” கத்தினார் வாசு,

“ஏய் வாசு விடு... அவன் பொதுவாத்தானே சொன்னான்... ஏம்ப்பா வேலாயுதம்... எல்லாரும் ஒண்ணா மண்ணா பழகிக்கிட்டு இருக்கோம்.... எதுக்கு இப்ப நீ பழைய பகையை மனசுல வச்சிக்கிட்டு வாசுக்கிட்ட இப்புடிப் பேசுறே... பேச்சை விடு...”

“நா ஏன் விடணுங்கிறே...  என்ன தப்பாச் சொல்லிட்டேன்... பாத்துப் பாத்து படிக்க வச்சி... புள்ள உசந்த நெலயில இருக்கத கண் குளிரப் பாக்கணுமின்னு நினைக்கிற பெத்தவங்க வயித்துல நெருப்பைக் கொட்டிட்டு ஓடிப் போறாங்களே அது சரியின்னு சொல்றியா..? பெத்தவயிறு அந்த வலியால சாகுற வரைக்கும் வேதனை அனுபவிக்குமே... அதுக்கு யாரு ஆறுதல் சொல்லு... அது வலிப்பா.... வலி... அதை அனுபவிச்சாத்தான் தெரியும்... நான் அனுபவிச்சிக்கிட்டு இருக்கேன்... நம்ம புள்ளை நம்மளைப் பாத்துக்கும்ன்னு நினைச்சிப் படுற சந்தோஷத்தை எவளோ ஒருத்திக்காகவோ ஒருத்தனுக்காகவோ அழிச்சிட்டு போயிடுறாங்களே... அது என்ன நியாயம்... நீ அதைச் சரிங்கிறியா... இல்ல இந்த வாத்தியாரு அது சரிங்கிறாரா...?”

“யாரு சரியின்னு சொன்னா... இப்ப எதுக்கு கோபப்படுறே... விடுப்பா நீ...”

“இந்த வாசு அவனை வெட்டிட்டாங்க... உயிருய்யா.... மயிருய்யான்னு பேசுறாரே... அவனை பெத்தவங்க ஏன் அவனை படிச்சி நல்ல வேலைக்குப் போயி கூலி வேலை பாக்குற எங்களை கோபுரத்துல வச்சிப் பாக்காட்டியும் கோவணத் துணியையாவது மாத்தி வாழ வைக்கணுமின்னு சொல்லி வளக்கலை...  இப்படிப் புள்ளை சாகும்ன்னு தெரிஞ்சும் நீ தூக்கிட்டு வாடான்னுதானே சொல்றாங்க... எங்கே இவரை இல்லைன்னு சொல்லச் சொல்லு... நம்ம டார்கெட்டே நமக்கு மேல இருக்கிற சாதிக்காரனோட பிள்ளைங்கதான்... அதை நீ செஞ்சா உனக்கு நான் பணம் தாறேன்னு அந்த சாதிக்கட்சி தலைவர் சொல்லலை... பணத்துக்காகத்தானே இந்த காதல்களும் ஆணவக் கொலைகளும் நடக்குது... இல்லேன்னு சொல்லச் சொல்லு... பணம் கண்ணை மறைக்க பிள்ளை செத்தாலும் பரவாயில்லை... அவன் குடும்பத்துப் பிள்ளை ஒரு நாளாவது நம்ம வீட்டு மருமகளாவோ மருமகனாவோ வாழணுமின்னு நினைக்கிறாங்களா இல்லையா...? வெட்டிட்டாங்க... வெட்டிட்டாங்கன்னு பேசுறீங்களே... அதுக்கு யார் காரணம்..? அரசியல்வாதிகளும் ஊர்ப் பெரியவனுங்களும்தானே... ஏன் தொடர்ந்து நம்ம சாதிப்புள்ளைங்களை மேலப்பக்கத்துல இருக்கவனுக கெளப்பிக் கொண்டு போகலையா... ராம்நகரு குருந்தப்பன் மகளைக் கொண்டு போனானுங்களே ஞாபகம் இருக்கா... நாம அங்க போனப்ப என்ன சொன்னானுங்க... போலீஸ் ஸ்டேசன்ல குரூப்பா நின்னு எங்கபய விரும்பிட்டான்னு சொல்லி பெத்தவங்க வேண்டாம்ன்னு அத்துக்கிட்டு வான்னு சொல்லி... அதைச் செய்ய வச்சி... நாம பாக்க அந்தப் பிள்ளையை வேலைக்காரி மாதிரி நடத்தலையா..? உனக்கும் தெரியுந்தானே... பேச வந்துட்டாரு...  இந்தாளை பேசாம போகச் சொல்லு... எனக்கு வர்ற கோபத்துக்கு....” கத்தினார் வேலாயுதம்.

“ஏம்ப்பா வாசு... நீ போப்பா... இங்க நின்னியன்னா இன்னும் ஏதாவது மாத்தி மாத்திப் பேசி நல்லாயிருக்க ஊருக்குள்ள சண்டையில வந்து முடியும்...” கெஞ்சலாய்ச் சொன்னார் பஞ்சநாதன்.

வண்டியை நிறுத்தி இறங்கி “இம்புட்டு வியாக்கியானம் பேசுறியே... வேற சாதியில கட்டுனா வெட்டணுமின்னு சொல்றியே... உம்மவனும் ஒருத்தியை இழுத்துக்கிட்டுத்தானே ஓடினான்... போ போயி அவனை வெட்டு... அவனை வெட்ட மாட்டியல்ல... ஏன்னா அவன் உன்னோட பையன்... உன்னோட ரத்தம்...” வாசுதேவன் கோபமாய்க் கத்த கூட்டம் கூடியது.

வேகமாய்த் திண்ணையில் இருந்து எழுந்த வேலாயுதம், “நாந்தான் அந்தச் சனியனே வேண்டான்னு தல முழுகிட்டேனே... அவன் எவள இழுத்துக்கிட்டுப் போனானோ அவ சாதிக்காரனுக்கிட்ட சொல்லி... அருவா எடுத்துக் கொடுத்து அந்த நாயை வெட்டச் சொல்லு... யாரு வேணாமின்னா... இப்பச் சொல்றேன் கேட்டுக்க... என்னப் பாத்து இப்புடி ஒரு வார்த்தை நீ கேட்டதுக்கு அப்புறம் நா சும்மா இருந்தா வீரையாவோட மகன்னு சொல்லிக்கிறதுக்கு அர்த்தமேயில்ல.... எஞ்சாவுக்கு கூட அவன் வரக்கூடாது... வரமாட்டான்... அப்படி மீறி நா உயிரோட இருக்கும் போது வந்தான்னா அவனை நா வெட்டுவேன்டா... இல்ல எஞ்சாவுக்கு வந்தான்னா நீ வெட்டுடா அவனை....” கோபத்தில் கத்தினார் வேலாயுதம்.


ம்பேத்கார் பார்த்துக் கொண்டு வரவும் சுபஸ்ரீயை பிடித்த கையை மெல்ல விட்டான் கண்ணன். சுபஸ்ரீ அவன் முகம் பார்த்து பேசாமல் அவனருகில் அமர, அருகே வந்த அம்பேத்கார், “போகலாமாடா.... எனக்கு வேலை இருக்கு..?” என்றான்.

எதுவும் சொல்லாமல் சுபஸ்ரீயைப் பார்த்தபடி “ம்”  என எழுந்த கண்ணன் “நீங்க எப்படிப் போவீங்க...?” என்றான் அவளிடம்.

“நாங்க பிரண்டோட கார்லதான் வந்தோம்... அவதான் டிரைவ் பண்ணிக்கிட்டு வந்தா...  அதுல போயிருவோம்....” என்றாள் மெல்ல.

“ம்... அப்ப நாங்க கிளம்புறோம்...” என்றபடி நகர, அவளும் பின்னாலேயே வந்தாள். மண்டப வாசலுக்கு வந்தபோது “ நான் கேட்டதுக்கு பதில் சொல்லிட்டீங்களா... சொல்லலைதானே... எதாயிருந்தாலும் சொல்லிட்டா நான் குழப்பமில்லாமப் போவேனுல்ல...” அவனுக்குப் பின்னிருந்து மெல்லக் கேட்டாள்.

திரும்பி அவளைப் பார்த்தவன் ஒன்றும் பேசாது அம்பேத்காரைப் பார்த்தான். அவனோ அவள் கேட்டது காதில் விழாதது போல முன்னே நடந்தான். வரவேற்பில் வைத்திருந்த ரோஜாவை எடுத்து “இதை தலையில காதோரமா வச்சா இன்னும் அழகா இருக்கும்” என்றான்.

அவனைச் சீண்டும் விதமாக “நாந்தான் வச்சிருக்கேனே...” என்று சொல்லிச் சிரித்தாள்.

“அதை எடுத்துட்டு இதை வச்சா இன்னும் அழகா இருக்கும்ன்னு சொன்னேன்...” என நீட்டினான். அவளுக்குப் புரிந்தது... மனசு சிறகடித்தது. பின்னாலேயே வந்து சேர்ந்த தோழியர் ‘ஹே’ என்று கத்தி, “சக்ஸஸ் ஆயிருச்சுல்ல... போகும் போது  பார்ட்டி வைக்கிறே...” என்று கூவினர்.

அவன் கையிலிருந்து பூவை வாங்கி காதோரமாக வைத்து “நல்லாயிருக்கா...?” என்றாள்.

“சூப்பர்... ஜ லைக்...” என்றவன் “வர்றேன்... நாளைக்கி சாயந்தரம் எப்.பில வாறேன்... பை...” என்று கிளம்ப, சுபஸ்ரீ சந்தோஷ வானில் பறக்க ஆரம்பித்தாள்.

ண்டியில் போகும் போது அம்பேத்கார் இது குறித்து பேசுவான் என்று எதிர்பார்த்தான். அவனோ எதுவும் தெரியாதது போல வண்டியை ஒட்டிக் கொண்டிருந்தான். கண்ணனுக்கோ ஆரம்பிக்கப் பயம்... எப்படியும் திட்டுவான்... கத்துவான்... தான் செய்தது மிகப்பெரிய துரோகம்... நட்புக்குச் செய்யும் துரோகம்... இனி எப்படி சாரதி கூட சகஜமாகப் பேச முடியும்... அவனிடம் பொய்யாக நடிக்கும் போது மனசு வலிக்குமே... நாந்தான் அவனுக்கு மனைவியாகப் போறவளின் காதலன் என்றால் எப்படி அவனால் ஏற்றுக் கொள்ள முடியும்...? இப்படி ஒரு துரோகத்தை யார்தான் ஏற்றுக் கொள்வார்கள்...? ஏன் இதுவே என் அத்தை பெண்ணாக இருந்து வேறு யாரேனும்... வேறு யாரேனும் என்ன சாரதியோ இல்ல இந்த அம்பேத்தோ இதுபோல் செய்தால் என்னால் ஏற்றுக் கொள்ள முடியுமா..? அவசரப்பட்டுட்டேனோ... நட்பை விட ஒரு பெண்ணின் கண்ணீருக்கு பலம் அதிகமா? அது ஒரு மனிதனைச் சாய்ச்சிருமா...? அதான் சாஞ்சிட்டேனே... அப்ப துரோகி நான்... அவளை காதலிக்கவில்லை என்று சொல்லிவிடலாமா...? அதெப்படி முடியும்... அவ சாரதியை கட்டிக் கொள்ளும் எண்ணத்தில் இல்லையே... இருவருக்கும் நிச்சயமா பண்ணி வைத்திருக்கிறார்கள்... அவளுக்கு என்னைப் பிடித்திருக்கு... அவ எனக்கு மனைவியா வந்தா நான் பாக்யசாலிதானே... ஆனால் சாரதி... என்னுள் நிறைந்தவனாயிற்றே... பள்ளி நாட்களில் இருந்து எனக்காக எதை எதையோ விட்டுக் கொடுத்தவனாயிற்றே... அவன் எனக்கு நண்பன் மட்டுமில்லையே... என்னோட பிறந்தவன் போன்றவன் அல்லவா..? அவன் வாழ்க்கை என்னால் சூனியமாவதா...? சுபஸ்ரீ காதலிக்கிறேன் என்று சொன்னதால் மட்டுமா நான் சரியென்றேன்... இல்லையே முதல் சந்திப்பிலேயே என்னுள் மலர்ந்தவளாயிற்றே... அவளை மனசுக்குள் காதலிக்க ஆரம்பித்ததால்தானே ஒதுங்க ஆரம்பித்தேன்... இன்று அவளின் ஸ்பரிசம்... அந்தக் கண்ணீர் எல்லாமும் என் காதலை சொல்ல வைத்து விட்டதே... இனிதானே பிரச்சினைகளின் மேகம் எம்மைச் சூழும்... எல்லாவற்றையும் தாங்கும் சக்தி எனக்கிருக்கிறதா..? அப்பா...? அவரை எப்படி சமாளிப்பேன்..? இது தெரிந்தால் வெட்டக் கூட தயங்கமாட்டாரே...? தெரியும் போது பார்த்துக் கொள்ளலாம்... அப்போது என் நிலமை என்ன என்பதை இப்போது எப்படி முடிவு செய்ய முடியும்... இறங்கியாச்சு... இனி எல்லாவற்றையும் சந்தித்துத்தானே ஆக வேண்டும்... என பலவாறு நினைத்தபோது அம்பேத்கார் வண்டியை நிறுத்தினான். 

நன்றி : படம் இணையத்திலிருந்து (ஓவியர் : மாருதி)

  (அடுத்த சனிக்கிழமை தொடரும்...) 

-பரிவைசே..குமார்.

வியாழன், 28 ஏப்ரல், 2016

வாக்காளர் அலப்பறை...9

"என்ன வெயிலு... என்ன வெயிலு.... ஆரம்பமே அமர்களமா இருக்கு... இந்த வருசம் மழை பெய்துன்னு சந்தோஷப்பட்டா... இனி வெயில் கொன்னுடும் போலவே..." சொல்லிக் கொண்டே ஹெல்மெட்டை ஆணியில் மாட்டினான் மெஜஞ்சர் வேலை பார்க்கும் பார்த்தீபன்.

"என்னங்க இப்பத்தான் வெயில் ஆரம்பமாகுது... இப்பவே புலம்ப ஆரம்பிச்சிடீங்க..." என்றார் ஜாக்கிங் போக தயாராகிக் கொண்டிருந்த பரந்தாமன்.

"உங்களுக்கு என்னங்க... கவர்மெண்ட் ஆபீசில புராஜெக்ட்... அதுவும் அரபிப் பெண்ணுங்க அதிகம் வேலை பாக்குற இடம்ன்னு வேற சொன்னீங்க... சும்மாவே ஏசி அதிகம் வைப்பாங்க... இப்ப வெயில் ஆரம்பிக்குதுல பிரீசர்க்குள்ள உக்காந்த மாதிரி இருந்துட்டு வருவீங்க... உங்களுக்கு எங்கங்க தெரியும் வெயில்ல நாயா அலையிறவன் வாழ்க்கை..." பார்த்தீபன் அலுத்துக் கொண்டான்.


"அது உண்மைதாங்க... சுத்தமா ஏசியை குறைச்சு வைக்கமாட்டேங்கிதுங்க... இந்தா நேத்து தலைவலி... இன்னைக்கு இருமல்... வீக்கெண்டுல நாம வீக்குத்தான் போல..." சிரித்தார் பரந்தாமன்.

"அதாவது பரந்தாமன் அண்ணன் ஜெயலலிதா மாதிரி ஏசிக்குள்ள உக்காந்திருக்காரு... நீங்க இருநூறு ரூபாய்க்கு ஆசைப்பட்டு வெயில்ல கிடந்து செத்து மடியிற வீரத் தமிழர்கள் மாதிரி நாயா வீதியில அலைஞ்சு அல்லல்படுறீங்க அப்படித்தானே..." என்றான் அவன்.

"அவனவன் படுற கஷ்டத்தைச் சொன்னா... இவரு அதுக்குள்ள அரசியல்லை வைக்கிறார் பாருங்க... நம்ம தலையெழுத்து கஷ்டப்படுறதுதான்... ஆனாலும் நம்ம மக்கள் இன்னும் ஏமாந்து சாகுறானுங்களே... கோடிக்கோடியா பதுக்கி வச்சிக்கிட்டு சொத்து மதிப்பு எழுபது கோடிங்கிறான்... நூற்றி இருபது கோடிங்கிறான்... நாம இன்னும் தெருக்கோடியிலதான் நிக்கிறோம்..." என்றபடி வேலை முடிந்து வந்து கொஞ்ச நேரம் படுத்துறங்கும் அவர் எழுந்தார்.

"ஆமா... என்னமோ நான் மட்டுந்தான் இந்த ரூமுக்குள்ள அரசியல் பேசுற மாதிரி... சூப்பர் சிங்கரை மட்டுமே பாக்குற நீங்க... முழு நேர அரசியல் பேச்சுத்தான் கேக்குறீங்க... அதுவும் அந்தப் பழக் கட்சியோட மீட்டிங் மட்டும்தான் பாக்குறீங்க... பரந்தாமன் அண்ணன் எப்பவும் மக்கழே... மக்கழே... மட்டும்தான்... இங்க பார்த்தீபன் மட்டும்தான் அரசியல் பேசுறதுமில்லை... விழுந்து விழுந்து பேச்சைக் கேக்கிறதும் இல்லை..."

"இப்ப சொன்னே பாரு மாப்ள... இது கரெக்ட்... எவன் வந்து என்ன பண்ணப் போறான்... அடிக்கிற கொள்ளையை இன்னும் கூட அடிப்பானுங்க... இதுக்கு எதுக்கு இங்க உக்காந்துக்கிட்டு நாம கத்தணும்... " என்றான் பார்த்தீபன்.

"அதுக்காக நாட்டு நடப்பை பேசாம இருக்க முடியுமா..? நடக்குற கூத்தையெல்லாம் ரசிச்சிக்கிட்டா இருக்க முடியும்..." என்றார் அவர்.

"அது சரிதான்..." சிரித்தார் பரந்தாமன்.


"விஜயகாந்த் பழைய பன்னீர் செல்வமா மாறிட்டாராம்... ஆனா நம்ம பன்னீரு... இன்னும் பழைய கஞ்சியாத்தான் இருக்கு... துணூறு வச்சி அதுமேல பொட்டு வச்சி மங்களகரமா இருக்க மனுசன்... நடந்துக்கிறதைப் பாக்கும் போது சே... காசுக்காக இப்படிக் கேவலப்பட்டு நிக்கிறாரேன்னு தோணுது..." என்றான் அவன்.

"காமராஜர் வகித்த முதல்வர் பதவியை அன்னையின் அன்பினால் ரெண்டு முறை வகித்த ஒரு மனுசன்... தமிழ்நாட்டோட முன்னாள் முதல்வர்... கார்ல போற மக்களைக் கொன்ற மகராசியைப் பார்த்ததும் கேள்விக்குறியாய் வளைந்து... நெளிந்து... ரோட்டைத் தொட்டுக் கும்பிடுறாருய்யா... என்ன கேவலம் பாருங்க... இங்கிலீஸ் நியூஸ்க்காரன் போட்டு கிழிகிழியின்னு கிழிக்கிறான்... பதவிக்காகவும் பணத்துக்காகவும் அந்த அம்மா என்னத்தை திங்கச் சொன்னாலும் திம்பானுங்க போல... கேவலப்பட்டவனுங்க..." என்றார் அவர்.

"ஆமா... இப்படி  ஒரு இனத்தோட கவுரவத்தைக் கெடுக்கிற கருமாந்திரம் பிடிச்சவனுங்களை தூக்கி வச்சி ஆடுற நம்ம பயகதான்... மரியாதை செய்யப் போன வைகோவை விடமாட்டோம்ன்னு சாதி சண்டைக்கு வித்திடுறானுங்க... அங்க ஒரு போலீஸ்காரன் சொன்னான் பாருங்க... எத்தனை வருசம் ஆனாலும் நீங்கள்லாம் திருந்தமாட்டீங்கடான்னு... அது எவ்வளவு நிதர்சனம் தெரியுமா...? அதை மறுபடி மறுபடி கேட்டுச் சிரித்தேன்..." என்றார் பரந்தாமன்.

"நம்மளால சிரிக்க மட்டும்தானே முடியும்... சிந்திக்கச் தெரிஞ்சாத்தான் எப்பவோ ரெண்டு குடும்பத்தையும் விரட்டியிருப்போம்ல்ல..." என்றார் அவர்.

"சரியாச் சொன்னீங்க... ரெண்டாயிரத்தை வாங்கிக்கிட்டு ஓட்டைப் போட்டு கோடியில சம்பாரிக்கிறதை வேடிக்கை பார்க்கிறோம்... மறத்தமிழினத்தை இன்னைக்கு மலையாளிகளும் கன்னடக்காரனுங்களும் ஆந்திரா ஆசாமிகளும் கேவலமாப் பேசிச் சிரிக்கிறானுங்க..." என்றான் பார்த்தீபன்.

"கரூர்ல பாத்தீங்களா... கோடிக் கோடியா பிடிபட்டிருக்கு... அந்த போலீஸ் அதிகாரியை கொல்லப் பாக்கிறானுங்க... அப்புறம் எப்படி இவர்கள் மக்களாட்சி கொடுப்பார்கள்... நேர்மையான அதிகாரிகளை எல்லாம் கொன்னுட்டு இவனுங்க தனி அரசாட்சி நடத்தப் போறானுங்க... அன்னைக்கு இந்தியா ஆங்கிலேயனுக்கிட்ட அடிமைப்பட்டுக் கிடந்துச்சு... இன்னைக்கு தமிழன் வந்தேறிகள்கிட்ட அடிமைப்பட்டுக் கிடக்கான்..." என்றார் அவர்.

"தமிழன் அடிமைப்பட்டுக் கிடக்கலைங்க... தானே வழியப் போயி அடிமை ஆகிக்கிறான்... சுயமா யோசிக்கத் தெரியாதா என்ன... இதுவரைக்கும் இல்லாத மாற்றத்தை நட்சத்திரக் கிரிக்கெட்டில் நம்மால கொடுக்க முடிந்ததுதானே... அதேபோல இந்தத் தேர்தல்லயும் கொடுக்கணும்... கொடுப்போம்ன்னு ஒவ்வொரு தமிழனும் நினைச்சாலே போதும்... கூனிக்குறுகி கெடக்க எல்லாப் பயலையும் குறுக்கெலும்ப உடைச்சி நிரந்தரமாக் கூன வச்சிடலாம்..." என்றான் அவன்.


"ஆமா... செய்யணும்... செய்தால் நல்லாயிருக்கும்... நட்சத்திர கிரிக்கெட் போட்டி வெற்றி... மக்களை நாங்க வாங்கன்னு அழைக்கவில்லை... அப்படியிருந்தும் கூட்டம் வந்திருச்சு... கிடைச்ச பணத்துல கடனை எல்லாம் அடைச்சிட்டோம்...  படம் எடுத்து அதுல வர்ற லாபத்துல கட்டடம் கட்டப் போறோம்... அஜீத் கூட எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லைன்னு நேத்து விஷால் பேசுறான்ய்யா..." என்றார் பரந்தாமன்.

"மக்கள் வரலை... ஆப்பு வச்சிட்டானுங்க.. நட்சத்திர கலை நிகழ்ச்சி வச்சாலும் வருவானுங்களான்னு தெரியாது... உள்ளூருலயே விலை போகல... வெளிநாட்டுல எப்படி விலை போகும்ன்னு யோசனை... அதான் படம் நடிக்கப் போறோம்ன்னு சொல்றானுங்க... அதுக்கும் ஆப்பு வச்சிட்டா... விஷால் ஓவரா ஆடுறான்..." என்றான் பார்த்தீபன்.

"அடுத்து அவனையும் முதல்வராக்குவோம்ன்னு நப்பாசைதான்..." என்றான் அவன்.

"சேரன் சொன்ன மாதிரி வந்தமா... நடிச்சமா... சம்பாரிச்சோமா... ஊரைப் பாக்க போனமான்னு இருக்கணும்... இல்லேன்னா விரட்டிறமாட்டோம்." சிரித்தார் அவர்.

"அவன் பேச்சு எதுக்கு... அவனொரு செல்லாக்காசு.... பெரியவரு எனக்கு ஓய்வு கொடுங்கன்னு சொல்றாரு... எதுக்கு அப்புறம் அலைய விடணும்... எல்லாருமாச் சேர்ந்து நீங்க ஓய்வு எடுங்கய்யான்னு சொல்லிட வேண்டியதுதானே..." என்றார் பரந்தாமன்.

"அதுவாவது ஓய்வு எடுக்கிறதாவது... அதெல்லாம் பதவி ஆசையில உயிரை வச்சிக்கிட்டு திரியுது... மக்களுக்காக உழைக்கத்தான் இப்படி அலையிறேன்னு வாய் கூசாம பொய் சொல்லுது... இதை நம்பி இந்த உபிக்கள் முகநூல்ல எல்லாம் பண்ற அட்டூழியம் இருக்கே... தாங்க முடியலை..." என்றார் அவர்.

"திராவிட ஆட்சிகள் முடியட்டும்... தமிழர்களுக்கு விடியட்டும்ன்னு முகநூல்ல போட்டு வச்சேன்... பத்து லைக்கு வராத எனக்கு ஆயிரக் கணக்குல லைக் வந்திருக்குய்யா... எப்படியும் மாற்றம் வரும்..." என்றான் அவன்.


"மாற்றம் வரணும்ன்னுதான் நாங்க வித்தியாசமா இந்தத் தேர்தலை கையாளுறோம்..." சிரித்தபடி சொன்னார் அவர்.

"ஆமா... ஆமா... மே 19-ம் தேதி ரிசல்ட் வந்ததும் உங்க சின்ன டாக்டரைத்தான் ஆளுனர்  பதவியேற்க அழைப்பாராமே... பெரிய டாக்டர் ஆரூடம் சொல்லியிருக்காரு... டிக்கெட் புக் பண்ணி வையுங்க,,, பதவி ஏற்ப்புக்கு போகணுமில்ல..." அவரைச் சீண்டினான் அவன்.

"தேர் கிளம்பின இடத்துல வந்து நிலைக்குத்துற மாதிரி எங்க சுத்தியும் அங்க வந்திருவாரு.... இனி பேசினா வீணாவுல சண்டை வரும்... " என்றபடி அவர் எழ, பரந்தாமன் ஜாக்கிங் கிளம்ப, பார்த்தீபன் குளிக்கச் செல்ல, அவன் சிரித்தபடி ஸ்கைப்பை ஆன் செய்தான்.

நன்றி : படங்கள் இணையத்திலிருந்து...
-'பரிவை' சே.குமார்.

செவ்வாய், 26 ஏப்ரல், 2016

மனசு பேசுகிறது : சாதிப் போர்வை போர்த்தும் தமிழக தேர்தல்

ங்கள் பிளாக் ஸ்ரீராம் அண்ணா அவர்களின் தந்தையார் எழுத்தாளர் திருமிகு. பாஹே (பாலசுப்ரமணியம் ஹேமலதா) அவர்கள் இயற்கை எய்திவிட்டார் என்ற செய்தியை கில்லர்ஜி அண்ணாவின் பதிவின் மூலமாக அறிந்தேன். ஸ்ரீராம் அண்ணா குடும்பத்தாருக்கு மட்டுமல்ல எழுத்துலகுக்கும் மிகப்பெரிய இழப்பு. ஐயாவின் கதை ஒன்றை சமீபத்தில் எங்கள் பிளாக்கில் வாசிக்கும் வாய்ப்பு அமைந்தது. அருமையான எழுத்தோட்டத்தில் அற்புதமானதொரு கதை... ரொம்ப மனசு லயித்துப் படித்த கதை... அதைப் பற்றி கூட மனசின் பக்கத்தில் பகிர்ந்திருந்தேன்.  உடல் நலமில்லாமல் இருந்தார்கள் என்பதை நண்பர்கள் மூலமாக அறிய முடிந்தது. இந்த இழப்பில் இருந்து ஸ்ரீராம் அண்ணாவும் அவரது குடும்பத்தாரும் மீண்டு வரவும்... ஐயாவின் ஆத்மா சாந்தியடையவும் இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

****

வைகோ தேர்தலில் நிற்கவில்லை என்று சொல்லி கடைசி நேரத்த்தில் மாறியது குறித்தான அரசியல் பேச விருப்பமில்லை. அவரின் முடிவு மக்கள் நலக் கூட்டணி தலைவர்களுக்கு வருத்தத்தைக் கொடுத்திருக்கும் என்று கூட சொல்லலாம். தேவர் சிலைக்கு மாலை போடச் சென்றவரை கருணாசின் (கூலிப்)படை தடுத்து நிறுத்தியதும் அதற்காக அவர் ஆவேசம் கொண்டு பேசியதும்... பல வரலாறுகளைச் சொன்னதும்... ஆம்பளையா இருந்தா தடுத்துப் பாரு... நான் வருவேன்... மாலை போடுவேன் எனச் சொல்லி அதைச் செய்து காட்டியதும் பக்கா அரசியல் என்று பலர் பேசினாலும் அவர் செய்தது சரியே என்று தோன்றியது.

சாதிகள் இல்லையடி பாப்பான்னு நாம பள்ளிக்கூடத்துல படிக்கிறோம்... ஆனா இன்றைய நிலையில் சாதிகள் இல்லா தமிழகம் இல்லையடி பாப்பான்னுதான் சொல்லணும்... இனி வரும் தலைமுறைக்கு சொல்லிக் கொடுக்கணும்... அரசியல் முழுக்க முழுக்க சாதியை வைத்தே நடத்தப்படுகிறது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் கூட அந்தத் தொகுதியில் எந்த சாதி வாக்கு அதிகம் இருக்கோ அந்த அடிப்படையில்தான் தேர்வு செய்யப்படுகிறார். அவ்வாறு நிறுத்தப்படும் போது அவர்கள் செய்யும் அடாவடிக்கு அளவில்லாமல் போய்விடுகிறது.

இன்றைய தமிழகத்தில் நமக்காக போராடிய... நமக்காக வாழ்ந்த தலைவர்களை எல்லாம் சாதி என்னும் வட்டத்துக்குள் கொண்டு வந்து கேவலப்படுத்திக் கொண்டிருக்கிறோம். இன்று நாம் கூண்டுக்குள் வைத்து மாலை அணிவித்து மரியாதை செய்யும் தலைவர்கள் எல்லாம் ஏதோ ஒரு வகையில் மக்களுக்காக போராடியவர்கள்... போராட்ட காலங்களில் சிறை சென்றவர்கள் என்பதால்தான் இன்னும் சிறைக்குள் வைத்திருக்கிறோமோ..?

சரி விடுங்க... எல்லாருக்கும் பொதுவான தலைவர்களை சாதி வட்டத்துக்குள் ஏன் கொண்டு வரவேண்டும்... இப்படிக் கொண்டு வர அரசு எப்படி அனுமதிக்கலாம் என்று யோசித்தால் தலைவர்களை சாதி வட்டத்துக்குள் கொண்டு வரச் செய்வதே அரசியல்வாதிகள்தானே... இப்பப் பாருங்க... மக்கள் தலைவர் தேவரை முக்குலத்தோர் சமுதாயம் எடுத்துக் கொண்டு விட்டது. அவருக்கான ஜெயந்தி அன்று நடப்பதை எல்லோரும் அறிவோம். வெள்ளையனை எதிர்த்து தூக்குக்கயிறை முத்தமிட்ட மருது சகோதரர்களை அகமுடையர் சமுதாயமும் வெள்ளையரை எதிர்த்து பிரங்கிமுனையில் கட்டி சுடப்பட்ட வீரன் அழகுமுத்துவை யாதவர் சமுதாயமும் வ.உ.சியை பிள்ளைமார் சமுதாயமும் எடுத்துக் கொண்டன. இப்படி வேலு நாச்சியார், இம்மானுவேல், அம்பேத்கார் என ஒரு நீண்ட பட்டியலில் அண்மையில் நாடர் சமூகம் காமராஜரையும் இணைத்தது. இதையெல்லாம் விட கேலிக்கூத்தாக ஒரு பதாகையில் பாரதியை ஐயர் சமூகம் அபகரித்துக் கொண்டது.

இதெல்லாம் எவ்வளவு கேவலமான செயல்... மக்களுக்கான தலைவர்களை மக்கள் அனைவரும் கொண்டாட வேண்டுமே ஒழிய ஒரு சமூகம் கொண்டாடக் கூடாது. அவர் எங்கள் உரிமை என மரியாதை செய்ய நினைப்போரை தடுத்தலும்... அடிதடி... கலவரம்... வெட்டுக் குத்து... சிலைக்கு போலீஸ் பாதுகாப்பு என போவதும் எந்த வகை அரசியல்..?  நாம் சாதியை ஒழிப்போம் என்று சொல்லி சாதிகளை வளர்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். இந்தத் தேர்தல் பல இடங்களில் சாதீய மோதல்களுக்கு வழி வகுத்துக் கொண்டிருக்கிறது. அரசியல் தலைவர்கள் அதற்கான வேலையை அழகாகச் செய்து வருகிறார்கள். என் சமூகமே இங்கு அதிகம் எனவே நாந்தான் வெற்றி பெறுவேன் என ஒரு வேட்பாளரால் பேட்டி கொடுக்க முடிகிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

பேராசிரியை பர்வீன் சுல்தானா அவர்கள் பேச்சை இன்று கேட்க நேர்ந்தது. என்ன அருமையான பேச்சு... நீ பகவத் கீதை படிக்கலாமா...? கண்ணகி பற்றி பேசலாமா...?  அது வேறு மதம் சார்ந்தது அல்லவா...? என்று பலர் என்னிடம் கேட்பதுண்டு... மதம் இருநூறு முன்னூறு ஆண்டுகளுக்குள் வந்ததுதான்... ஆனால் கண்ணகியும் சீதையும் அதற்கு முன்னே இருந்தே வாழ்கிறார்கள்... அவர்கள் என் ஆயாவும் பாட்டியும்... நான் படிக்காமல் யார் படிப்பார்...? என்று மதவாதிகளுக்கும் ஜாதீய சண்டாளர்களுக்கும் சாட்டையடி கொடுத்துப் பேசியிருக்கிறார். உண்மைதான் நாம் இந்தியர்கள்... நாம் அனைவரும் ஒரு தாய் மக்கள் என்று நினைத்து வாழ்ந்தாலே போதும்... இந்த சாதியும் மதமும் காணாமல் போகும்.


பசும்பொன் கண்டெடுத்த தேவரோ... வீரமங்கை வேலு நாச்சியாரோ... மருது சகோதர்களோ... வீரன் அழகுமுத்துவோ... இம்மானுவேலோ... கப்பலோட்டியோ தமிழனோ... அம்பேத்காரோ.... கண்ணகியோ... கர்மவீரரோ... அப்துல்கலாமோ.... பாரதியோ...  இன்னும் விடுபட்ட தலைவர்கள் பலர்... இவர்கள் எல்லோருமே மக்கள் தலைவர்கள்... மக்களுக்காக தங்கள் வாழ்வைத் தொலைத்தவர்கள்... இவர்கள் சாதிக்குள் சிரிக்க நினைக்கவில்லை... தயவு செய்து இவர்களை எல்லாம் சாதிக்குள் வைத்து அரசியல்வாதிகளின் சொகுசு வாழ்க்கைக்காக சாதீய மோதல்களை உண்டாக்காதீர்கள்... அழிவு என்பது நமக்குத்தான் என்பதை உணருங்கள். ஒரு தலைவனுக்கு மாலை இட ஒருவன் வருகிறான் என்றால் அவனுக்கு அந்தத் தலைவன் மீது எவ்வளவு பற்று இருக்க வேண்டும் என்பதை உணருங்கள்.

இவர் இந்தச் சாதிக்கானவர்... இவர் எங்கள் சாதியின் சொத்து என்றால் அவருக்கு அந்தச் சமூகம் சார்பாக நடக்கும் விழாக்களில் அரசியலில் பெரும் பதவி வகிக்கும் மற்ற சாதியினரை ஏன் கூப்பிடுகிறீர்கள்... ஏன் மாலையிட அனுமதிக்கிறீர்கள்...? சாதி என்பது ஊறுகாயாக இருக்கட்டும் உள்ளம் எங்கும் நிரம்ப வேண்டாம்.

வைகோ பேசியது அங்கு பிரச்சினை பண்ணினவர்களைப் பார்த்து என்பதை அந்தப் பேச்சைக் கேட்ட அனைவரும் அறிவர். ஆனாலும் இன்று காலை பத்திரிக்கைத் துறையில் இருக்கக் கூடிய ஒரு நண்பர் 'தேவர் சமூகத்தினரைப் பார்த்து ஆம்பளையா என்று பேசிய வைகோ, சாதி மோதலுக்கு பிள்ளையார் சுழி போடுகிறார்' என்று முகநூலில் பரப்புரை செய்கிறார். இவர்களைப் போன்றோர்தான் சாதீய மோதல்களுக்கு வித்து... இவர்கள்தான் மோதல் ஏற்பட வேண்டும் என்று நினைப்பவர்கள்... இவர்களே தமிழகத்தை அழிக்க வந்த விஷக்கிருமிகள்... முதலில் இவர்கள் மாற வேண்டும்... மாற்றம் வேண்டும் என்று சொல்லிக் கொண்டு மாறவிடாமல் தடுப்பவர்கள் இவர்கள்... இவர்கள் மாறினால் எல்லாம் மாறும்.

வைகோ பிரச்சினை முடிந்து சென்ற பின்னர் ஒரு நபர் பூட்டையும் சாவியையும் கேட்டு போலீசிடம் சண்டையிடுகிறார். போலீஸ் விவரமாய்ச் சொல்லி புரிய வைக்க அவர் மீண்டும் மீண்டும் அதையே சொல்லிக் கொண்டிருக்கிறார். ஒரு கட்டத்தில் கடுப்பான போலீஸ்காரர் "நீங்கள்லாம் எத்தனை வருசம் ஆனாலும் திருந்தமாட்டீங்க..." என்று சொல்கிறார். இதுதான் உண்மை... இதுதான் நிதர்சனம்... நாம் எப்போதும் திருந்தப் போவதில்லை... சாதியைக் கட்டிக் காப்போம்... சமுதாயம் தழைத்து ஓங்கும்...
-'பரிவை' சே.குமார். 

சனி, 23 ஏப்ரல், 2016

தொடர்கதை : நெருஞ்சியும் குறிஞ்சியும் (பகுதி-14)

முந்தைய பகுதிகள்:

           பகுதி-1       பகுதி-2         பகுதி-3            பகுதி-4        பகுதி-5          பகுதி-6           பகுதி-7    

‘என்னை லவ் பண்றீங்களா?’ என்று கேட்டு விட்டு அவனது இலையில் இருந்து அப்பளத்தை எடுத்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்தவளைப் பார்த்த கண்ணன், ‘இவள் விளையாட்டுக்கு கேக்கிறாளா... இல்லை உண்மையிலேயே கேட்கிறாளா... ‘ என மனதுக்குள் யோசித்தபடி என்ன சொல்வதென்று தெரியாமல் விழித்தான்.

“அலோ... நான் கேட்டதுக்கு பதிலைக் காணோம்...”  

என்னங்க நீங்க... சும்மா விளையாடாதீங்க... என்ன பேசுறோம்ன்னு இல்லாம... பக்கத்துல இருக்கவங்க கேட்டா என்ன நினைப்பாங்க...” சிரித்து மழுப்பினான்.

“என்ன நினைப்பாங்க... நீங்க நடந்துக்கிறது அப்படியிருந்துச்சு... அதான் கேட்டேன்.” மெல்லச் சொன்னாள்.

“என்ன நான் நடந்துக்கிட்டேன்... பொய் சொல்லாதீங்க... என் நண்பனுக்கு மனைவியாகப் போறவங்க நீங்க... உங்க மேல மரியாதை இருக்கு...”

“ஒக்ஹோஹோ... உங்க நண்பனோட மனைவியாகப் போறவதானே... பின்ன எதுக்கு என்னைப் பார்த்து பயந்து ஒளியுறீங்க... ஹாய் சிஸ்டர்ன்னு.... எப்படி... சி...ஸ்...ட...ர்.... அப்படின்னு சொல்லிட்டுப் போக வேண்டியதுதானே.... இதுவரைக்கும் அப்படி ஒரு வார்த்தையை யூஸ் பண்ணியிருக்கீங்களா..?” சிஸ்டரை அழுத்தமாக்கி அவனிடம் சொன்னாள்.

“சொ... சொல்லலாமே... மரியாதையாக வாங்க... போங்க... சொன்னேன்.... சரி இனிமே அப்படியே கூப்பிடுறேன்... எதாயிருந்தாலும் அப்புறம் பேசுவோம்... எல்லாரும் பார்க்கிறாங்க பாருங்க...”

“பாக்கட்டும் கேட்டதுக்கு பதில் வேணும்... இதுவரை நீங்க என்னைய சிஸ்டர்ன்னு சொன்னதில்லை... என்னை பார்த்து ஒளியிறதுலயே உங்க மனசுல என்ன இருக்குன்னு தெரியிறது....” என்றபடி அவன் இலையில் இருந்த பொரியலை எடுத்துச் சாப்பிட்டாள்.

“என்னங்க நீங்க... மத்தவங்க ஒரு மாதிரி பாக்குறாங்க பாருங்க...” கண்ணன் மற்றவர்களின் பார்வைக்காக வெட்கப்பட்டான்.

அவர்களுக்கு எதிரே சாப்பிட்ட ஒரு அம்மா பக்கத்திலிருந்த பெண்ணிடம் “பந்தியில பொண்ணு மாப்ளயத்தான் ஊட்டி விடச்சொல்லி போட்டோ எடுப்பாக... நமக்கு எதுத்தாப்புல பாரு... படிக்கிற புள்ளைக மாதிரி தெரியுது... அந்தப் புள்ள அந்தத் தம்பி எலயில இருந்து சாப்பாட்டை எடுத்துச் சாப்பிடுது...” என்றாள்.

“பாருங்க... நம்மளைப் பத்தித்தான் எதித்தாப்புல பேசுறாங்க...” மெல்லச் சொன்னான் அவன்.

“பேசட்டும்... அதுக்கென்ன இப்போ... கேட்டதுக்கு பதில்.... என்னை லவ் பண்றீங்களா?”

“சாப்பிடுங்க... வெளியில போயி பேசலாம்...”

“சத்தியமா..? வெளியில போயி எஸ்கேப் ஆயிட மாட்டீங்களே...” அவன் கை தொட்டுக் கேட்டாள்.

“இல்லை... கண்டிப்பாப் பேசலாம்....”

“ம் சொல்லுங்க...” என்றபடி அவனருக்கு அருகில் அமர்ந்தாள். அவளின் சேலை முந்தானை அவன் மேல் பட்டது. அவள் அதைப் பற்றி கவலைப்படவில்லை.

“என்ன சொல்லணும்..?”

“ம்... இந்த சாரி உங்களுக்குப் பிடிச்சிருக்கான்னு கேட்டேன்ல அதுக்கு பதில்...” கடுப்பாய்ச் சொன்னாள்.

“ம்...”

“என்ன ம்...?”

“பிடிச்சிருக்குன்னு அர்த்தம்....”

“அப்ப என்னை...?”

“என்ன நீங்க...? திரும்பத் திரும்ப அங்கயே வாறீங்க... பிரண்டுக்கு நிச்சயம் பண்ணுன பொண்ணு நீங்க... விளையாடாதீங்க...”

“என்னங்க நீங்க... பிரண்டுக்கு நிச்சயம் பண்ணுன பொண்ணு... நிச்சயம் பண்ணுன பொண்ணுன்னு பேசுறீங்க... பெரியவா முடிவு பண்ணியிருக்கா... எங்க மனசுக்கு செட்டாகணுமில்ல... என் மனசுல பார்த்தாவை கட்டிக்கணுமின்னுல்லாம் எண்ணம் இல்லை... பட் பெரியவா ஆசைக்காக நான் மறுக்கலை... ஏன்னா எனக்குள்ள எனக்கான ஆள் இவன்தான்னு நான் யாரையும் முடிவு பண்ணி வைக்கலை.  ஆனா இப்ப என்னால ஒத்துக்க முடியாது... அதுபோக பார்த்தாவோட மனசும் என்னோட மனசும் ஒத்துப் போகுமா தெரியலை... ம்... அப்புறம் உங்களை பார்த்ததும் நான் உங்களை விரும்பிட்டேன்னு நினைக்காதீங்க... உங்களைப் பற்றி அபி எங்கிட்ட சொல்லச் சொல்ல உங்கமேல ஒரு பற்றுதல்... நீங்க பார்த்தாவோட வந்தப்போ... பாட்டிக்கிட்ட பேசினப்போ... மத்தவாளுக்காக பரிந்து பேசுறது.... சமுதாயத்துல உள்ள சாதி ஏற்றத் தாழ்வுகளை எதிர்த்து நிக்கிறது... உங்க பேச்சு... கவிதைகள்... சமுதாயம் குறித்த கருத்துக்கள் எல்லாமே என்னை அறியாமல் உங்க மேல ஒரு ஈர்ப்பை ஏற்படுத்திருச்சு....”

“அதுக்காக...?”

“அதுக்காகன்னா...?”

“சரி... நீங்க குரலை உயர்த்துறீங்க... அப்புறம் பேசலாம்...”

“இல்ல அவங்க எல்லாரும் வந்துட்டா நீங்க பேச மாட்டீங்க... அம்பேத் கூட எஸ்கேப் ஆயிருவீங்க... அப்புறம் உங்களை நான் எப்படி பிடிக்கிறது... இப்பவே சொல்லுங்க... என்னை லவ் பண்றீங்களா?”

“ஐய்யோ... என்னங்க நீங்க... அது எப்புடிங்க... நண்பனோட... சினிமாவுல வேணுமின்னா நிச்சயம் பண்ண பொண்ணை லவ் பண்ணலாம்... பாக்காம லவ் பண்ணலாம்... திருமணத்தன்னைக்கு கூட பெண்ணை லவ் பண்றேன்னு சொல்லலாம்.... ஆனா இது வாழ்க்கைங்க... உங்க அத்தை கையால ஒரு வாய் சாப்பாடு சாப்பிட்டிருக்கிறேன்... எப்படி அவங்களை எல்லாம் ஏமாத்தச் சொல்றீங்களா...?”

“யாரு... ஏமாற்றச் சொல்றா..?  அப்ப உங்களுக்கு என்னைப் பிடிக்கலைதானே..?” சுபஸ்ரீயின் கேள்விக்கு பதில் எதுவும் சொல்லாமல் அமர்ந்திருந்தான்.

“இந்த மௌனத்தை நான் எப்படி எடுத்துக்கிறது... பிடிச்சிருக்குன்னா... பிடிக்கலைன்னா...” அவளின் குரல் உடைந்தது. முதல் முறை அவளின் குரல் உடைவதை உணர்ந்தவன் மெல்ல அவளைப் பார்த்தான்...  கண் கலங்கியிருந்தாள்.

“என்னங்க... எதுக்குங்க இதெல்லாம்...? வாழ்க்கை இதுதான்னு முடிவு செஞ்சி வச்சிருக்காங்க... இப்பப் போயி...”

“நம்ம வாழ்க்கையை நாம்தானே தீர்மானிக்கணும்... என்னோட வாழ்க்கையை தீர்மானிக்க அவங்க யாரு...”

“என்னங்க நீங்க... எல்லாம் பாத்துப் பாத்து செய்யிற பெத்தவங்க இதுல மட்டும் எப்படி தவறான முடிவெடுப்பாங்க... பார்த்தாதான் உங்களுக்கு சரியான ஜோடி... இதுல காதல் அது இதுன்னு... ப்ளீஸ் வேண்டாமே...”

“பெத்தவங்க பிள்ளைங்களோட திருமண விஷயத்துல எடுக்கிற முடிவு எப்பவுமே அவங்களுக்கு சாதகமானதுதான்... இதில் மட்டும் அவங்க விட்டுக் கொடுக்கமாட்டாங்க... அது எதுக்கு இப்போ... நாம விவாதம் பண்ண வரலை... விவாகம் பண்ணிக்கிறீங்களான்னு கேட்டேன்... உங்களுக்கு என்னை பிடிக்கலை... இனி பேசி என்னாகப் போறது... ஓகே... பார்க்கலாம்...” இனி இருந்தால் அழுது விடுவோமோ என்று நினைத்தவள் வேகமாக அங்கிருந்து நகர முற்பட்டு எழுந்தாள். “சுபா... ப்ளீஸ்...” என்றபடி அவளின் கையைப் பிடித்து உட்காரச் சொல்ல. அம்பேத்கார் அதைப் பார்த்தபடி வந்து கொண்டிருந்தான். அவனின் பார்வையில் தெரிந்த உஷ்ணம் கண்ணனின் பிடியைத் தளர்த்தியது.


“என்னத்தான் இப்படிச் சொல்றீங்க... நீங்கதானே நம்ம வீட்டுல மூத்தவங்க... நீங்கதானே நல்லது கெட்டது எல்லாத்துலயும் முன்னால நிக்கணும்... அவனைச் சேர்க்க  உங்களை விட்டா வேறு யார் இருக்கா?” சரவணன் போனில் கெஞ்சுவது போலக் கேட்டான்.

“நீ சொல்றதெல்லாம் சரிதான் மாப்ள... ஆனா மாமா இப்பத்தான் ஊருக்குள்ள சாதிக் கொடி ஏத்தி போர்டெல்லாம் வச்சிக்கிட்டு திரியிறாரு... இவரு எப்படி சாதிச் சாக்கடைக்குள்ள இருந்து வருவாருன்னு நினைக்கிறே... அன்னைக்கு கொடியேத்துறேன்னு நின்னப்போ ராசுப்பய நாலு பயலுகளோட பதிலுக்கு போர்டு வைக்கணுமின்னு வந்திருக்கான்... நம்ம வாத்தியார் மாமாதான் அவனுகளை சத்தம் போட்டிருக்காரு... அவரு குரலுக்கு மதிப்புக் கொடுத்து ராசுவும் அவனோட வந்தவனுங்களும் போயிருக்கானுங்க... வாத்தியார் மாமாவுக்கு அவங்க சாதிக்குள்ள மதிப்பு இருக்கு... ஆனா அது எம்புட்டு நாளைக்கு சொல்லு... அந்தப் பயலுக ஒருநா அவரை எதுக்கமாட்டானுங்கன்னு என்ன நிச்சியம்... நாளைக்கு நம்ம மாமா எதாவது பண்ணினா எதுக்கிட்டு வருவானுங்களா மாட்டானுங்களா... உனக்கு அவரை திருத்த வழி தெரியலை... உனக்குத் தேவை வருசா வருசம் அவரு கொடுக்கிற அரிசி... நீ என்னைக்காச்சும் அவருக்கிட்ட இதெல்லாம் தப்பு... இந்த வயசுல இது தேவையான்னு கேட்டிருக்கியா... ஒருவேளை மூத்தவன் இருந்திருந்தா தட்டிக் கேட்டிருப்பான்... இங்க பாரு மாப்ள முதல்ல அவரை சாதிக்குள்ள இருந்து வெளிய கொண்டா... மத்ததை நான் பாத்துக்கிறேன்... புரிஞ்சதா...?” என்றான் ராமநாதன்.

“சரி... மாமா அடுத்த மாசத்துல ரெண்டு நாள் லீவு வரும்... அப்போ ஊருக்கு வர்றேன்... அப்பாக்கிட்ட பேசுறேன்...” என்றபடி போனை வைத்தான்.

ண்ணப்பன் மகனை வெட்டிக் கொன்று விட்டார்கள் எனச் சொன்ன வாசுவிடம் வெட்டியது சரியென வேலாயுதம் சொன்னதற்கு வாசுவின் பதில் என்ன...? அதனால் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டதா..? அடுத்த பதிவுக்கு காத்திருங்கள்.

 (அடுத்த சனிக்கிழமை தொடரும்...) 

-பரிவைசே..குமார்.

வெள்ளி, 22 ஏப்ரல், 2016

மனசின் பக்கம் : வைகறையும் வைகைக் கரையும்


விஞர் வைகறை அவர்களின் மறைவுச் செய்தியை நேற்றிரவு மது சார், துளசி சார், செல்வா அண்ணா ஆகியோரின் வலைத்தளம், முகநூல் பகிர்வுகள் மூலம் அறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன். வைகறை அவர்களைச் சந்தித்ததில்லை... பேசியதில்லை...  புதுகை  வலைப்பதிவர் விழா நிகழ்வுகள் குறித்த பகிர்வுகளில் அனைவரும் இவரைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தனர்.  வலைத்தள உறவுகள் மூலமாகவே இவரை அறிவேன். இவரின் இறப்பு யாராலும் எளிதில் சீரணிக்க்க முடியாத இழப்பு... மறையும் வயதா இது...?  நாளைய சரித்திரத்தில் இடம் பெற வேண்டிய கவியை சாவு தழுவிக் கொண்டு விட்டதே... அவரை நம்பி இருந்த மனைவியும் குழந்தையும்... ? நினைத்தாலே மனசு கனக்கிறது.  தேவதா தமிழ் கீதா அக்கா 'உனக்கு நாங்க இருக்கோம்மா' என கவிஞரின் மனைவியிடம் சொன்னபோது கவிஞரின் மனைவியோ 'நீங்க இருப்பீங்க அக்கா... இனி அவர் இருக்கமாட்டாரே...' என்று அழுததாக முகநூலில் குறிப்பிட்டிருந்தார். அந்த இளம்பெண்ணின் வலியை யாரால் போக்க முடியும் சொல்லுங்கள்.  வயிறு வலி என்று மேம்போக்காக விட்டதே மிகப்பெரிய ஆளாக உயர வேண்டிய ஒருவரின் உயிரைப் பறித்திருக்கிறது என்பதை பலரின் பகிர்வுகள் மூலம் அறிய முடியும் போது... எல்லாருமே சாவை நோக்கித்தான் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறோம்... சேரும் நாளும்... இடமும்தான் நாம் அறியாமல் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது என்றாலும் இருக்கும் வரை உடல் நலம் பார்ப்போம் நட்புக்களே... இந்த இழப்பு மிகப்பெரிய இழப்பு... அவரின் குடும்பத்துக்கு ஆறுதல் சொல்லும் நிலையில் நாம் இல்லை என்றாலும் கவிஞர் வைகறை அவர்களின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திப்போம்.

*****
வெட்டிபிளாக்கர்ஸில் சிறுகதைப் போட்டி அறிவித்திருப்பது குறித்து தனிப்பதிவில் தெரிவித்திருந்தேன்... நிறையப் பேர் கலந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன். இப்போ கல்கியில் சிறுகதைப் போட்டி அறிவித்திருக்கிறார்கள். அதிலும் கலந்து கொள்ளுங்கள் நண்பர்களே... வெற்றி உங்களுக்குத்தான்.


*****
டிகர் சங்கம் நடத்திய கிரிக்கெட் போட்டியில் ஒன்பது கோடி கிடைத்ததென ஒருவரும் பதிமூணு கோடி கிடைத்ததென ஒருவரும் சொல்லியிருக்கிறார்கள். நடிகர் விஷாலோ சங்க கடனை அடைத்து விட்டோம் என சட்டைக் காலரை தூக்கி விட்டுக் கொள்கிறார். ராதிகா 'ஜசரி' வேலனின் கடனை அடைத்ததற்கு வாழ்த்துக்கள் என்கிறார். சிம்பு நடிகர் சங்கம் ஜோக்கராகிவிட்டது என் பிரச்சினையில் தலையிடவில்லை... என நடிகர் சங்கம் தேவையில்லை என்கிறார். அஜீத் பாடலை நான்  போடக்கூடாது என்று சொன்னேனா...? என்று டுவிட்டுகிறார் விஷால். நடிகர் சங்கம் கிரிக்கெட் போட்டி நடத்தினால் என்ன தவறு... எங்களுக்கு பணம் கொடுத்தால் என்ன கெட்டுப் போய் விடுவீர்கள்... நடிகர் சிவக்குமார் குடும்பம் ஒரு கட்டிடம் கட்டித் தருகிறது. நாங்கள் நலிந்த கலைஞர்களுக்குத்தான் கட்டிடம் கட்டுகிறோம். அஜீத் எதுவுமே பேசலை... சும்மா கிளப்பி விடப்படுகிறது. நான் எவ்வளவு உதவிகள் செய்கிறேன் தெரியுமா...? நடிகன் வீட்டில் பிரச்சினை என்றால் யாரும் வரமாட்டீர்கள். அவன் இறந்தால் கூட அது வேடிக்கைதான்... என சகட்டுமேனிக்கு பேட்டி கொடுத்திருக்கிறார் கட்சி மாறி எஸ்.வி,சேகர் அவர்கள். 


நீச்சல் குளமும், தங்க தனி அறைகளும், பேட்டி கொடுக்க வசதியான ஹாலும் நலிந்த கலைஞர்களுக்கானது என்றால் கிரிக்கெட் நடத்துவதில் தவறில்லைதான்... ஆனாலும் நாமளே பணம் போடலாம் என சிலர் சொன்னதற்கு எல்லாரிடமும் பணம் இருக்குமா... ஆய்டா... ஊய்டா... என்று குதிக்கிறீரே.. இருக்கவன் பணம் போட்டுத்தான் இல்லாதவனுக்குச் செய்யணும்... எங்கள்ல ஒருத்தனுக்கு வலியின்னா நாங்கதான் மருந்தா நிப்போமே தவிர உங்ககிட்ட மருந்து வாங்க காசு கேட்டு கிரிக்கெட் போட்டியெல்லாம் வைக்கமாட்டோம்... நீங்க சொகுசு வாழ்க்கை வாழ மக்கள் பணங்கொடுக்கலைன்னு வேதனைப்படணும்... வெட்கப்படணும்... பொறுப்பேற்கணும்.. உங்ககிட்ட கேட்டா என்ன தப்பு... இப்படி வீர வசனமெல்லாம் இனியும் பேசாதீங்கப்பா... போதும்... அரசியல்வாதிகளோட ஆணவப் பேச்சையே கேட்க முடியாத எங்களால உங்களை பேச்சை எல்லாம் தொடர்ந்து கேட்டுக்கிட்டு இருக்கு... இனியும் ஓவராப் பேசினீங்க அசிங்கம் அசிங்கமாத் திட்டுவோம்... இப்பவே கழுவி ஊத்திட்டோம்... இன்னும் அடங்கலை... கேரவான் பாய்ஸ்... கேவலப்பட்டு போயிடாதீங்க... இழந்தை மரியாதையை... மீசையில மண் ஒட்டலைன்னு சொல்லிக்கிட்டு  மறைச்சி அடுத்த படத்தை ஓட்டப் பாருங்க.... இந்தப் படம் பிளாப் ஆயிடுச்சு.

*****

ழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் கோலாகலமாக முடிந்திருக்கிறது. இரண்டாண்டுகளுக்கு முன்னர் அழகர் கோவிலில் இருந்து கிளம்புவதை கோவிலுக்குள் நின்று பார்த்து ரசித்து.... அதன் பின் தல்லாகுள எதிர்சேவை... ஆற்றில் இறங்கி மண்டபத்தில் இருக்கும் போது... அண்ணா நகரில் என தேடித்தேடிச் சென்று பார்த்தோம்... தங்கக் குதிரையை திட்டு வணங்கி அழகரை தரிசித்து... லட்சோப லட்சம் சனங்களின் ஊடே பயணித்து... ஆஹா அற்புதமான தரிசனத்தை அனுபவித்தோம். இந்த முறை எங்கள் குடும்பத்தில் பாப்பாவுக்கு மட்டுமே அந்த ஆனந்த தரிசனம் கிடைத்திருக்கிறது. மதுரையில் ஐயா வீட்டில் இருப்பதால் நேற்று... இன்று... என அழகரை விடாமல் தரிசித்து இருக்கிறார். நான் எப்பவும் போல வீடியோக்களில் பார்த்து சந்தோஷப்பட்டுக் கொண்டேன்.

சித்திரை திருவிழா குறித்த பகிர்வுகளை ஒரே இடத்தில் விளக்கமாய் அழகிய புகைப்படங்களுடன் படிக்க நம்ம துரை. செல்வராஜூ ஐயா அவர்களின் 'தஞ்சையம்பதி' தளத்திற்குச் செல்லுங்கள். சித்திரைத் திருவிழாவை நேரில் கண்டு ரசித்த பேரின்பத்தை அடையலாம்.
-'பரிவை' சே.குமார்.

வியாழன், 21 ஏப்ரல், 2016

வாக்காளர் அலப்பறை...8

ரு மாத விடுமுறையில் ஊருக்குப் போய்விட்டு திரும்பிய ராகேஷிடம் "என்னங்க தேர்தல் பிரச்சாரமெல்லாம் ஊரில் எப்படிப் போய்க்கிட்டு இருக்கு... இந்த முறை யாருக்கு வாய்ப்பு இருக்கு" என்றான் அவன்.

"இந்தத் தடவை கொஞ்சம் வித்தியாசமான தேர்தலா இருக்கும்ன்னு தோணுதுங்க... யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காது. கூட்டணி ஆட்சிதான் அமையும் போல... இந்தாங்க சுவீட் எடுத்துக்கங்க..." என்று சுவீட் பாக்ஸை நீட்டியபடி சொன்னான் கண்ணன்.

"ம்... அப்ப அம்மா வந்துருவேன்... ஐயா வந்துருவேன்... அண்ணே வந்துருவேன்... டாக்டரு வந்துருவேன்னு சொல்றதெல்லாம் பம்மாத்துத்தானா..." சிரித்தான் அவன்.

(இப்படி பேசிப் பேசியே மக்களை ஏமாத்தி வாழ்ந்து முடிச்சிட்டீங்க போங்க)
"அட ஏன் நீங்க வேற நட்சத்திர கிரிக்கெட்டுக்கு நம்மாளுங்க வச்ச ஆப்புல இப்ப அரசியல்வாதிகளுக்கு கூட உதறல் எடுத்திருக்கு... எங்க நமக்கு ஆப்பு வச்சிருவானுங்களோன்னு யோசிக்க ஆரம்பிச்சிட்டானுங்க..."

"அட ஏம்ப்பா நீ வேற பணத்தை வாங்கிக்கிட்டு பக்காவா ஓட்டப் போட்டுடுவானுங்க நம்மாளுங்க... வேணுமின்னா பாரேன் பணம்தான் பேசப் போகுது..." என்றபடி எழுத்தார் முத்துலிங்கம்.

"இந்த தடவை அப்படி நடக்காதுண்ணே... வேணுமின்னா பாருங்க மாற்றம் வரும்... ஆமா உங்க தொகுதியில முன்னாள் எம்.எல்.ஏ. நிக்கிறாரு போல..." என்றான் ராகேஷ்.

"ஆமா திருவாடனைத் தொகுதியா இருக்கும் போது தொடர்ந்து எம்.எல்.ஏ. பல பிரச்சினைகள்ல அவர் பேர் இருந்தாலும் வெளியில ரொம்ப அடிபடாது.... தொகுதியில பல கிராமங்களுக்கு போனதே இல்லை.... எங்க ஊருப் பக்கமெல்லாம் வந்ததேயில்லை... இருந்தும் பிரச்சினையில்லாத மனுசன்னு பேரு... போன தடவை காரைக்குடி தொகுதியானதும் நிக்காமல் ஒதுங்கிட்டாரு... ஆனா இந்த முறை நிக்கிறாரு... பார்ப்போம்... தொடர் வெற்றி தொடருதா... இல்லை முற்றுப்புள்ளி ஆகுதான்னு..."

"ம்... நிறைய இடங்களில் வலுவான போட்டியிருக்கு... அதனால மாற்றம் வரும்ன்னு நினைக்கிறேன்..."

"அதான் சொல்றேன்... மாற்றம் வரணும்... நான் எதாவது சொன்னா இவரு... அதுக்கு எதிர்த்துப் பேசுவாரு... இவரு விஜயகாந்துக்கு சப்போர்ட்..." என்றபடி ஆஜரானார் அவர்.

"மாற்றம் வரணும்தாங்க... ஆனா மாற்றம் முன்னேற்றம்ன்னு சொல்லிக்கிட்டு உங்காளு சாதிக்காரன் அதிகம் இருக்க இடத்துல பாதுகாப்பா நின்னுக்கிட்டாரு... தென் மாவட்டத்துல நிக்கலாமேன்னு ஒருத்தர் கேட்டதுக்கு பதில் சொல்லாம மழுப்பலா சிரிச்சிட்டு வந்திருக்காரு... அப்புறம் எப்படி மாற்றம்... முன்னேற்றம்..." என்றான் அவன்.

"அவரு மட்டும்தான் பாதுகாப்பு பாக்குறாராக்கும்... ஏன் கலைஞர் பாக்கலையா... திருமா பாக்கலையா... விஜயகாந்த் கூட ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒரு இடம் மாறுறாரே... அது கூட பாதுகாப்புத்தான்.... போன முறை ஜெயிச்ச தொகுதியில இந்த முறை ஓட்டுக் கிடைக்காதுன்னு அவருக்குத் தெரியும்..." நக்கலாய்ச் சொன்னார் அவர்.

"விஜயகாந்த் மட்டும் தொகுதி மாறி மாறி நிக்கலைங்க... எல்லாருந்தான் நிக்கிறாங்க... விஜயகாந்த் டெபாசிட் வாங்க முடியாதுன்னு சொல்லிக்கிட்டு நீங்க ஏன் வேட்பாளரை மாத்துறீங்க... இந்தத் தடவை மாதிரி வேட்பாளர் மாற்றம் வேறு எப்பவும் இல்லை..." 

(எதைச் சொன்னாலும் கேக்குற மக்கள் இப்ப இல்லைங்கிறதை மனசுல வச்சுக்கங்க)
"அட ஏம்ப்பா நீ வேற... அம்மா மாதிரி விஜயகாந்த் நடக்குறாரு... விஜயகாந்த் மாதிரி அன்புமணி.... சீமானெல்லாம் பேசுறாங்க... அம்மாவை கேவலமாப் பேசுற ஸ்டாலின்... ஸ்டாலினைப் பேசுற அம்மா இப்படி அரசியல் சாக்கடை காமெடியாப் போய்க்கிட்டு இருக்கு... எல்லாம் பதவி படுத்தும் பாடு..."

"பதவிக்காகத்தானே துரை முருகன் கண்ணீர் சிந்துறாரு... கோடியில கார் வச்சிருக்காரு... எதுக்கு அழுகுறாருன்னு பேஸ்புக்ல போட்டு கிழிக்கிறானுங்க... வயதான காலத்துல முதுகுவலியோட உங்களை நாடி வாறேன்னு கலைஞர் பேசுறாரு... யாரு அவரை தேர்தல்ல நிக்கச் சொன்னா... மத்தவங்களுக்கு எல்லாம் வயசாயிருச்சு... ஆனா இவருக்கு ஆகலை... " சிரித்தான் ராகேஷ்.

"அட ஏன் கேக்குறே... பேஸ்புக்ல ஒருத்தர் திமுகவோட தேர்தல் அறிக்கையோட ஒவ்வொரு பாயிண்டையும் ஒவ்வொருவாரம் விளக்கமா எழுதினாலே போதுமாம்... அவ்வளவு நல்ல அறிக்கையாம்... 190 இடங்களைப் பிடிப்பாங்களாம்....  அதைவிட கொடுமை என்னன்னா ஜெயலலிதாவை எதிர்த்து அவங்க நிப்பாட்டியிருக்கிற சிம்லாவை ஆதரிக்காம திருமா வேட்பாளரை அறிவிச்சி மக்களுக்கு துரோகம் பண்ணிட்டார் துரோகியின்னு இன்னைக்கு ரெண்டு பக்கத்துக்கு கட்டுரை... அதுக்கு ஆஹா.. ஓஹோன்னு கருத்துக்கள் வேற.... ஏன் திருமா நிக்கிற இடத்துல இவங்க ஆள் நிப்பாட்டாம இருக்காங்களா... வாரிசு அரசியல்ங்கிறது எல்லாக் கட்சியிலயும் இருக்கு... ஆனா திமுக மட்டுந்தான் புதியவர்களை நிப்பாட்டுறேன்னு சொல்லி முன்னாள் எம்.எல்.ஏ. குடும்பத்துல ஒரு ஆளை நிப்பாட்டி தமிழகம் எங்கும் வாரிசு அரசியலாக்கி வைச்சிருக்கானுங்க... இவனுக ஜெயிக்கவே கூடாது... ஜெயிச்சா தமிழகத்தை கூறு போட்டு வித்துருவானுங்க..." பொரிந்து தள்ளினார் முத்துலிங்கம்.

"நீங்க சொல்றதுதான் சரிதான்... எல்லாக் கட்சிகளும் அப்படித்தான் இருக்கு... நம்ம சனம் பிரியாணிக்காவும் இருநூறு ரூபாய்க்காகவும் போயி சாவுது பாத்தீங்களா... நாம திருந்தாத வரைக்கும் எல்லாப் பயலும் நம்மளை முட்டாளாக்கியே ஜெயிக்கப் பாப்பானுங்க..." என்றான் அவன்,

"ஆமால்ல... இந்தம்மா மத்தியானம் மூணு மணிக்கு வர்றதுக்கு... பனிரெண்டு மணியில இருந்து மொட்ட வெயில்ல போட்டுக் கொல்றானுங்க... பாவம் பிரியாணிக்கு ஆசைப்பட்டு உசிரை விட்டா... தேர்தல் முடிந்ததும் நிதி உதவி செய்யப்படும்ன்னு சொல்லிட்டு போய்க்கிட்டே இருக்கு... மொதல்ல இந்தப் பொம்பளையை மத்தியானம் கூட்டம் போடாதேன்னு சொல்லணும்... இல்லேன்னா பத்து ஏர் கூலர் வச்சி சொகுசா உக்காந்து பேசுறதை வெயில்ல இறக்கி விடணும்... அப்பத்தான் அதுக்கெல்லாம் மக்களோட வேதனை புரியும்..." என்றார் அவர்.

"ஆமா புரிஞ்சிட்டாலும்... நாம் ஏய்யா போகணும்... பணமும் வேண்டாம்.. மயிரும் வேண்டாம்ன்னு சொல்லிட்டு இருக்க வேண்டியதுதானே...." கோபத்தில் வார்த்தைகளை விட்டார் முத்துலிங்கம்.

(டாஸ்மாக் சரக்கு வண்டியிலதான் பணம் போகுதாமே... உண்மையா?)
"சரி... சரி... எதுக்கு கோபம்? விடுங்க...விடுங்க... இந்த சினிமாக்காரனுங்க பாருங்க... கிரிக்கெட்டுல ஏற்பட்ட நஷ்டத்துக்கு தமிழக மக்கள் பொறுப்பேற்கணுமின்னு விஷாலும்... இதுக்கு மக்கள்தான் வேதனைப்படணுமின்னு தனுஷூம் பேசியிருக்கானுங்க பாத்தீங்களா..." பேச்சை மாத்தினான் ராகேஷ்.

"இதுக்கு எதுக்குய்யா நம்ம வருத்தப்படணும்... அவனுக்கு மாமனாரு போயிருந்தும் கூட்டம் வரலைன்னு ஆதங்கம்... அவனே போகலை.... பேசுறான் பாரு பேச்சு... தென்னிந்திய நடிகர் சங்கம்ன்னு வச்சிருக்கானுங்கதானே... போயி ஆந்திரா, கேரளான்னு அங்க நடத்த வேண்டியதுதானே.... எல்லாப் பயலுக்கும் தமிழன்னா இளிச்சவாயன்னு நெனப்பு... மொத்தமா ஆப்பு வைக்கணும்... இந்த விஷால்... வெஷம்... இவந்தான் சொன்னான் மக்கள் பிரச்சினைக்கு நாங்க போறாட மாட்டோம்ன்னு... இப்ப இவனுக கட்டிடம் கட்ட நாம பணம் கொடுக்கணுமாம்... இல்லேன்னா நஷ்டத்துக்குப் பொறுப்பேற்கணுமாம்... இந்த விஷச்செடியை முதல்ல அழிக்கணும்... இல்லேன்னா இது நாளைக்கு முதல்வராகணும்ன்னு ஆசைப்படும்... நாமளும் வந்தாரை வாழ வைப்போம்... எல்லாத்துக்கும் மொத்தத்துல மாற்றம் கொண்டு வரணும்... அது இந்தத் தேர்தல்ல ஆரம்பிக்கணும்... தீச்சட்டி எடுக்கிறதையும் பாலாபிஷேகம் பண்றதையும் நிப்பாட்டிட்டு ஆக்கப் பூர்வமா இளைஞர்கள் செயல்படணும்... அப்படி செயல்பட்டா,,, நல்லதொரு தமிழகத்தை உருவாக்க முடியும்..." வேகமாகப் பேசினார் முத்துலிங்கம்.

(நடிகைகள் விளையாடுவாங்கன்னு சொல்லியும் கவுத்துட்டானுங்களே...)
"ஆமா விஜயகாந்த் என்ன செஞ்சாலும் அதை செய்தி ஆக்கிற டிவி சேனலெல்லாம் இந்த அம்மாவால சாகுறதைக் காட்டமாட்டேங்கிதே... முதல்ல அவனுக திருந்தட்டும்... அது நரகல்தான்னு தெரிஞ்சும் அதுக்கு பின்னால சந்தனத்தோட காத்திக்கிட்டு இருக்கதை விட்டுட்டு... அந்த நரகலை அள்ளி வீசுற வழி என்னங்கிறதை அவனுக சொன்னா கண்டிப்பாக மாற்றம் வரும்... பார்க்கலாம்... " என்றபடி அவன் வெளியில் கிளம்ப ஆயத்தமானான்.

படங்களுக்கு நன்றி இணையம்...
-'பரிவை' சே.குமார்.

திங்கள், 18 ஏப்ரல், 2016

நட்புக்காக... அகல் ஒரு பார்வை

வார, மாத இதழ்களுக்கு நிகராக மின்னிதழ்களும் மிகச் சிறப்பாக இணையத்தில் வலம் வருகின்றன.  அப்படி வரும் மின்னிதழ்கள் புதியவர்களை ஊக்குவிப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன. அந்த வகையில் நண்பர் சத்யா.GP நடத்தும் அகல் மின்னிதழ் புதியவர்களுக்கான களமாக அமைந்துள்ளது. நண்பரும் மின்னிதழை மிகுந்த சிரத்தையோடு மிகச் சிறப்பாக நடத்தி வருகிறார்.


அகல்  மின்னிதழுக்கு நான் சென்றது ஒரு சிறுகதைப் போட்டிக்காக... வழக்கம் போல் கதை அனுப்பினேன்... பரிசும் பெற்றது... பின்னர் அந்தப் பக்கம் போகவில்லை... ஒருநாள் புத்தகங்கள் அனுப்ப முகவரி கேட்டார். அன்று முதல் எங்களுக்குள்ளான நட்பு இணைய வழி விரிந்தது.  பிறகு அடிக்கடி முகநூல் அரட்டையில் பேச ஆரம்பித்தோம். இலக்கியம் எங்களை நெருக்கமாக்கியது. முகம் பார்க்க நட்பில் மனதறிந்து பழகும் கூட்டத்தில் ஒருவராய் அவர் என்னோடு இணைந்து கொண்டார்.

அதன் பின் எனது பரிசு பெற்ற கதை, வெளிநாட்டு வாழ்க்கை குறித்த கட்டுரை என எனக்கு அகலில் இடமளித்தார். ஏப்ரல் மாத இதழுக்காக காளையார் கோவில் குறித்து எழுதச் சொல்லி, தயங்கிய போது நீங்க எழுதுங்க நல்லா வரும் என்று சொல்லி எழுத வைத்து அதற்கென எட்டுப் பக்கங்களை ஒதுக்கியிருந்தார். உண்மையிலேயே இது மிகப் பெரிய விஷயம். நம்மேல் உள்ள நம்பிக்கையில் எழுத வைத்து அதை தனது மின்னிதழில் கொஞ்சம் கூட நீளத்தைக் குறைக்காமல் அப்படியே எட்டுப் பக்கங்கள் பகிர்வது என்பது மிகப் பெரிய விஷயம். அப்படிப்பட்ட... எழுதுபவர்களை ஊற்சாகப்படுத்தும் நண்பர் சத்யா அவர்கள் பதிப்புத் துறையிலும் கால் பதித்து திரு. ம. தொல்காப்பியன் அவர்களின் திறனாய்வுப் பார்வையில் ரஜினிகாந்த், திரு. மதுமதி அவர்களின் பொன் வாத்துப் பருக்கள் என்ற இரண்டு புத்தகங்களை அகல் மூலமாக வெளியிட இருக்கிறார். 

சரி இதெல்லாம் இங்க எதற்கு என்று நினைக்கிறீர்களா? அகல் மின்னிதழ் குறித்து சில கருத்துக்களை அவருடன் பகிர்ந்து கொள்வதுண்டு. இந்த சித்திரைச் சிறப்பிதழைக் குறித்து அவருடன் பகிர்ந்து கொள்வதைவிட ஒரு பதிவாக ஆக்கினால் நட்புக்குச் செய்யும் மரியாதையாக இருக்கும் அல்லவா... அதனால் இதழ் குறித்தான பார்வையை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.

81 பக்கங்கள் கொண்ட அகல் தமிழ்ப் புத்தாண்டு இதழ் மிகச் சிறப்பான கட்டுரைகள், சிறுகதைகள், தொடர்கள், கவிதைகளைத் தாங்கி கலக்கலாய் வந்திருக்கிறது. இதழை மிகச் சிறப்பாக கொண்டு வந்த திரு. GP.சத்யா அவர்களுக்கும் அவருக்கு வடிவமைத்துக் கொடுக்கும் அவரின் நட்பு வட்டத்துக்கும் இதழினை தங்கள் தளத்திலும் பகிர்ந்து கொள்ளும் பிரதிலிபி நட்புக்களுக்கும் வாழ்த்துக்கள். 

இனி ONE by ONE - ஆக என் பார்வையில்...


* வழக்கம் போல் சத்யா அவர்களின் முதல் பக்கம் புதிதாய் இணைந்த எழுத்தாளர்களை வரவேற்றும் அகல் வெளியிட்டிருக்கும் இரண்டு புத்தகங்கள் குறித்தும் பேசியிருக்கிறது. இன்னும் நிறைய பேசலாம்...

* கவி ரசிகன் அவர்களின் சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துக் கவிதை மிக அருமை. கவிஞருக்கு வாழ்த்துக்கள். 

* கார்த்திக் குமார் அவர்களின் திருக்குறள் கதைகள் இரண்டும் நன்று. நல்லதொரு முயற்சி... தொடரட்டும். இன்னும் வித்தியாசமாய் பயணப்படலாம் என்று நினைக்கிறேன். அடுத்தடுத்த கதைகளில் அதைச் செய்வார் என்று நம்பலாம்.

* கவிதைப் பக்கத்தை அலங்கரித்த அமுதா சுரேஷ், அகராதி, நிர்மலா கணேஷ், சக்தி கிரி, வேதா பிச்சாண்டி, வேத நாயக், ஷிவ சுப்ரமண்யம் ஆகியோரின் கவிதைகள் அருமை. இதில் அதிகம் கவர்ந்தவை சுயமி, விவசாயி. அதற்காக மற்ற கவிதைகள் சரியில்லையோ என்று நினைக்காதீர்கள். எல்லாக் கவிதைகளும் அருமை... என்னை மேலே சொன்ன கவிதைகள் கவர்ந்தது போல் மற்ற கவிதைகள் உங்களைக் கவரலாம்.

பரிசு பெற்ற சிறுகதையான கூடை ரொம்ப அருமையாக எழுதப்பட்டிருக்கிறது. எழுதிய ஹரிஷ் கணபதிக்கு வாழ்த்துக்கள். கதையில் ஒரு பெட்டியில் இருந்து கூடையை எடுத்துக் கொண்டு அடுத்த பெட்டிக்குச் செல்வதாக வரும்போது அந்தப் பெட்டியிலும் இருவர் பேசும் முதல் பெட்டியில் பேசியதன் தொடர்ச்சியாக வசனம் வருவது எப்படி என்று மனசுக்குள் கேள்வி எழுந்தது. அந்த இடத்தை கதையாசிரியர் கவனிக்கவில்லையா... இல்லை நான்தான் சரிவர புரிந்து கொள்ளவில்லையா என்று தெரியவில்லை இருப்பினும் கூடை ரொம்ப எதார்த்தமாய் வந்திருக்கு.

* Dr. நளினி அருண் அவர்களின் சுதந்திரமா... அடிமைகளா...  கட்டுரை இன்றைய நிலையை மிகத் தெளிவாகப் பேசியிருக்கிறது.

* கமலி ஆனந்த் அவர்களின் சித்திரலேகா புதிய தொடர்கதை ஆரம்பம் நல்லாயிருக்கு... போகப்போக வித்தியாசமாய் பயணிக்கும் என்றே உணர்கிறேன்.

* ஈஸ்வரி ரகு அவர்களின் உணவு(ம்) மருந்து கட்டுரை கீழாநெல்லி, நாயுருவி போன்ற நம் வயல்காட்டில் இருக்கும் மருத்துவ குணம் கொண்ட செடிகள் குறித்துப் பேசியது. சித்தர் பாடலும் அதற்கான விளக்கமும் அருமை. ஒவ்வொரு மாதமும் பயனுள்ள கட்டுரையை பகிரும் எழுத்தாளர் ஈஸ்வரி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

* நிரோஷ் எழுதிய வாழ்வுதான் என் நோய் கதை வாழ்க்கையை படம் பிடித்துக் காட்டுகிறது. கதையின் கருவை தலைப்பில் சொல்லிவிட்டதால் இதுதான் நோய் எனத் தெரிந்து விடுகிறது. தலைப்பை மாற்றியிருந்தால் இன்னும் சுவராஸ்யமாய் இருந்திருக்கும்.

மதுரம் பிரபாகர் அவர்களின் MP'S கிச்சன் நன்று.


* எஸ்.கே.மகேஸ்வரன் அவர்களின் தொடர்கதையான ஜமீன் ஸ்வர்ணம் எப்பவும் போல் கலக்கலாய்...

* பிரியா ராஜூ அவர்களின் மாறுபட்ட புதிய தொடரான கடிதம் மிக வித்தியாசமாய்.... இனி வரும் மாதங்களில் தொடர்ந்து கலக்குவார் என்ற நம்பிக்கையை கொடுத்தது.

* திரு. ரிஷபன் அவர்களின் மனிதம் சிறுகதைத் தொகுப்பு குறித்த சாயா சுந்தரம் அவர்களின் வாசிப்பு அனுபவம் நன்று.

* வெட்கங் கெட்ட நிலாவை ராஜா முகமது ரொம்ப சோகமாக முடித்து விட்டார்... முடிவு எதிர் பார்த்ததுதான் என்றாலும் சந்தேகப் பேயை விரட்டி பாஸிட்டிவ்வாக முடித்திருக்கலாமோ என்று என்ன வைத்தது.

* ஹைக்கூ கார்னரை இன்னும் பட்டை தீட்டலாம் என்று தோன்றியது. ஹைக்கூ எழுதும் நண்பர்கள் எழுதி அனுப்புங்கள்... நிறைய... நிறைவாய் வெளியிடலாம்.

* கார்த்திக் ஸ்ரீனிவாசன் அவர்களின் பகலொளி சேமிப்பு நேரம் குறித்த அறிவியல் விசித்திரங்கள் அறியாத விபரங்களை அறியத் தந்தது.

* ஸஃபார் அகமது அவர்களின் அன்புள்ள அப்பா என்ற ஒரு நிமிட சிறுகதை ஓகே ரகம். இன்னும் நிறைய எழுதுங்கள் ஆசிரியரே...

திரு. தமிழ்ச்செல்வன் அவர்களின் செல்வராஜ் அண்ணன் சிறுகதை வாழ்க்கையைப் பேசியது. அகல் ஏப்ரல் இதழில் மனம் கவர்ந்த கதை இது. வாழ்த்துக்கள் தமிழ்ச்செல்வன் சார்.

* சரத் பாபு அவர்களின் கொரியாவுட் என்ற கட்டுரை 'I SAW THE DEVIL' என்ற படத்தைப் பற்றிய விமர்சனப் பார்வை படத்தை பார்க்கும் ஆவலைத் தூண்டியிருக்கிறது. படம் பார்க்க வேண்டும்.

பிரகாஷ் ராம்ஸ்வாமி அவர்களின் நம்பினால் நம்புங்கள்... படப்படப்போடு நகர்ந்தது.... இந்தக் கதையை ஒட்டி மலையாளத்தில் நிவின் பாலி நடித்த ஒரு வடக்கன் செல்பி என்ற சினிமா பார்த்த ஞாபகம். அதிலும் இது போல் இறந்தவனின் மெயில் ஐடி பயன்படுத்தி சாட்டிங் நடக்கும். அதை யார் செய்தார்... அந்தப் பெண் என்ன ஆனார்... என விரியும் கதை கேரளாவில் இருந்து தமிழகத்துக்குள் விரியும்...  ஆனால் அதற்கும் இதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு. நம்பினால் நம்புங்கள் அருமை.

* சிறகு ரவிச்சந்திரன் அவர்களின் சொக்கட்டான் ஆட்டம் தேர்தல் குறித்துப் பேசியது. அவரின் பார்வையில் ஜெ.. ஜெ... போட்டிருக்கிறார். ஆனாலும் இந்த முறை மக்கள் சிறப்பான முடிவை எடுப்பார்கள் என்றே தோன்றுகிறது.

* ஷாரா சித்தாரா அவர்களின் சோளக்கருது சிறுகதை நாம் வாசித்த கதைகளின் களத்தில்தான் பயணிக்கிறது... புதிதாகத் தெரியவில்லை. சென்ற இதழில் மிகச் சிறப்பாக எழுதியிருந்தார் என்று ஞாபகம். இன்னும் சிறப்பான கதைகளை எழுதலாம்.

* சிவக்குமார் அசோகன் எழுதும் ஜலசாவின் டைரியிலிருந்து எப்பவும் போல் சிறப்பு. நல்லாயிருக்கு... பல நியாபகங்களை கிளறிச் செல்லும்...

* நண்பர் சத்யாவின் சமூக (வலை) தளம் சிறுகதை மிகவும் வித்தியாசமான சிந்தனை... இவர் பெரும்பாலும் அஞ்சலிக் கவிதைகள்... ஐய்யய்யோ இருங்க தப்பா நினைச்சிடாதீங்க... நடிகை அஞ்சலி படம் போட்டு கவிதைகள் எழுதுவார். நிகழ்வுகளை எதார்த்தமாய்ப் பதிவார். இப்பல்லாம் குட்டிக் குட்டியாய் நிறைய கதைகள் எழுத ஆரம்பித்திருக்கிறார். இந்தக் கதை கூட பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸப், சாட்டிங், போன் என கலக்கலாய் நகர்கிறது. வாழ்த்துக்கள் (ஆன்மீக) எழுத்தாளர் சத்யா.

மொத்தத்தில் இந்த அகல் மின்னிதழ் எல்லாம் கலந்து பரிமாறப்பட்டிருக்கிறது. செல்வராஜ் அண்ணன் போன்ற வித்தியாசமான கதைகளுக்கும் தேர்ந்தெடுத்து பதியப்படும் ஹைக்கூக்களுக்கும் முன்னுரிமை கொடுக்கலாம். மற்றபடி கட்டுரைகள்... கவிதைகள்...எப்பவும் போல் சிறப்பாகவே பயணிக்கின்றன. வாசகர் கேள்விப் பதில் இந்த இதழில் ஆரம்பிப்பதாகச் சொல்லியிருந்தார்கள். ஆனால் இந்த இதழில் வரவில்லை... அடுத்த இதழில் வரும் என்று நினைக்கிறேன். இங்கு சொல்லியிருக்கும் கருத்துக்கள் என் மனதில்பட்டவைதான்... இன்னும் எழுதியிருக்கலாம்... பட்டை தீட்டலாம்... என்று சொல்லியிருப்பதை எல்லாம் தவறாக நினைக்க வேண்டாம்... மனதில்பட்டதை எழுதும்போது சிலவற்றை மறைத்து சிலாகிக்கப் பிடிப்பதில்லை... மற்றபடி எல்லா எழுத்தாளர்களுக்கும் கலக்கலாகத்தான் எழுதியிருக்கிங்க... வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்கள்.

என்னடா இவன் இப்பத்தான் எழுதுறான்னு நினைக்காதீங்க அகல் நட்புக்களே... நேரமின்மை காரணமாகவே எழுத முடியவில்லை.

***
அகலை இணையத்தில் வாசிக்க... அகல் ஏப்ரல்-2016

PDF பைலை தரவிறக்கம் செய்து வாசிக்க...  அகல்

அகலுக்கு எழுத... : agal.emagazine@gmail.com

-'பரிவை' சே.குமார்.