மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

புதன், 16 நவம்பர், 2011

மனசின் பக்கம்: த்ரீ இன் ஒன் (3 in 1)



மூணாவது வருசத்துல அடியெடுத்து வச்சாச்சு... மனசு வலையில் மட்டும் 200 நண்பர்களின் நட்பையும் வாசிப்பையும் பெற்றது மகிழ்வைத் தருகிறது. எனது தொடரும் எழுத்துக்கும் தொடரும் நட்புக்கும் காரணகர்த்தா நீங்களே... எல்லாருக்கும் நன்றி... நன்றி.. நன்றி.

***********************************

1. சவால் மற்றும் வம்சி

திரு. ஆதி, திரு. பரிசல்காரன் மற்றும் யுடான்ஸ் திரட்டி இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டிக்கான முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. முடிவுகளுக்கு முன்னால் அனைத்துக் கதைகளுக்குமான விமர்சனம் இரண்டு பதிவுகளாக பகிரப்பட்டது. சென்ற முறை விமர்ச்சித்த விதம் வித்தியாசமானதாக இருந்ததால் சுனாமியாய் தாக்குதல்கள் இருந்தன. ஆனால் இந்த முறை கதை மட்டுமே விமர்சிக்கப்பட்டது. அதுவும் முடிந்தவரை நாசூக்காக. மிகவும் அருமையான விமர்சனங்கள்.

இந்த சவாலில் வெற்றி பெற்றவர்கள் விவரம்

முதல் இடம் : திரு. ஆர்விஎஸ் / திரு. பினாத்தல் சுரேஷ்

இரண்டாம் இடம் : திரு. ஜேகே / திரு. நந்தா குமாரன்

மூன்றாம் இடம் : திரு. இளா / திரு. சி.பி.செந்தில்

வெற்றி பெற்ற அறுவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

சவால் ஒன்றுக்கு கதை எழுதுவது என்பது எல்லாருக்கும் சாத்தியமில்லை. இருப்பினும் இந்த சவாலை சவாலாக எடுத்துக் கொண்டு கலந்து கொண்ட அனைத்து உறவுகளுக்கும் வாழ்த்துக்கள்.

சவால் சிறுகதை குறித்த பரிசல்காரனின் பதிவில் நண்பர் நடராஜ்,

ஒரு செம டவுட். இந்த ஃபோட்டோவில் உள்ளது போல் ஒருவர் ரெண்டு துண்டு சீட்டையும், ஒரு இன்கமிங் காலையும் பார்ப்பது போல் காட்சி வரவேண்டுமா, இல்லை, அந்த 2 துண்டு சீட்டில் இருப்பது மட்டும் கதையில் வந்தால் போதுமா?

ஆமா, இந்த டவுட் ஏன் யாருக்கும் வரல? ‘  என்று கேட்டிருந்தார்.

உண்மைதான்... நான் உள்பட பெரும்பாலானோர் துண்டுச் சீட்டு வாசகங்களை மட்டுமே பிரதானமாக்கி எழுதியிருந்தோம். மொபைலில் விஷ்ணு இன்பார்மர் என்ற பெயர் வருவதை கவனிக்கத் தவறிவிட்டோம். இருப்பினும் போட்டியை சிறப்பாக நடத்திய நண்பர்களுக்கும் அவர்களுக்கு உதவிய நடுவர்களுக்கும் நன்றியை உரித்தாக்குகிறோம்.

சவால் சிறுகதைப் போட்டி முடிவுக்குப் பின் அனைவரின் எதிர்பார்ப்பும் வம்சியின் சிறுகதைப் போட்டிக்கான முடிவின் மீதுதான் இருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை. இதில் சவால் எதுவும் இல்லை... போட்டிக்கதைக்கு களமும் சொல்லப்படவில்லை. பதிவராக இருக்க வேண்டும் மற்றும் 2011ல் பதிவிடப்பட்டிருந்தால் போதும் என்பதை மட்டுமே சொல்லியிருந்தார்கள். அதனால் நாம் ரசித்து எழுதியதை அனுப்பியிருக்கிறோம். வெல்லப்போகும் நண்பர்களின் எழுத்துக்களை வம்சியின் வெளியீட்டில் பார்க்கலாம்... இன்னும் பதினைந்து நாளில் வெற்றிக்கனியை தட்டப்போகும் பதிவர்கள் யார்... யார்... என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

*********

2. கோவை கவியரங்கத்துக்கு கவிதை அனுப்பியாச்சா கவிஞர்களே...

கோவையில் நடக்கும் கின்னஸ் சாதனை கவியரங்கத்திற்கு கவிதை அனுப்ப விரும்பும் நண்பர்கள் கூடிய மட்டும் விரைவாக மூன்று கவிதைகள், உங்கள் போட்டோ மற்றும் முகவரியுடன் நேரடியாகவோ அல்லது நண்பர் தமிழ்காதலன் அவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கோ அனுப்பி வையுங்கள். வாசிக்கப்படும் உங்கள் கவிதைக்கு சான்றிதழ் வழங்கி சிறப்பிக்கப்படும். இது குறித்த விவரம் அறிய கீழே உள்ள சுட்டியை தட்டி பார்த்துக் கொள்ளுங்கள்...


உங்கள் மனசினை தட்டி கவிதைகளை பறக்கவிடுங்கள்.

*********

3. ஊருக்குப் போறேன்... ஊருக்குப் போறேன்...

ஆமாங்க... முக்கியமான விசயமே இதுதானே... இல்லயா பின்ன... என்னன்னா... எங்க கம்பெனி புராஜெக்ட்ஸ் முடிஞ்சிருச்சு... இப்போ வேலையில்ல... கறக்குற வரைக்கும்தான் வச்சிக்குவாங்க... சும்மா வச்சு வைக்கலப் போடுவாங்களா என்ன... அதனால ஊருக்குப் போறேன்னு கேக்குறப்பல்லாம் முடியாதுன்னு சொன்னவங்க... சொல்லுறவங்க... இப்ப நீ போ, நீ போன்னு எல்லாரையும் விரட்டிட்டாங்க... என்னையும்தான்...

நாளைக்கு இரவு விமானத்தில் திருச்சி நோக்கி பயணம்... நாளை மறுநாள் மனைவி, மக்களுடன் காரைக்குடியில்... டிசம்பர் 22 வரைக்கும் அங்கதான்... இந்த முறை முடிந்தளவு பதிவுலக நண்பர்களை சந்திக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது.

டிசம்பர் 25 புது புராஜெக்ட் ஆரம்பிக்கலாம் என்று 80% நம்பிக்கையுடந்தான் 22ந்தேதி வரச்சொல்லி அனுப்புகிறார்கள். பார்க்கலாம். புது புராஜெக்ட் ஒரு வருடத்திற்கு மேல் இருக்கும். அப்ப ஊருக்கு அனுப்பமாட்டார்களாம்... இப்பவே சொல்லியாச்சு...

அப்புறம் புராஜெக்ட் அபுதாபி(ABU DHABI)யில்  இல்லை அலைன் (AL AIN)... அதனால வந்ததும் ஜாகையை அலைனுக்கும் மாத்தணும். தங்க அறை பார்க்க வேண்டும்... என்ன செய்வது என்று தெரியவில்லை. ஆசியா அக்கா அலைனில்தான் இருக்கிறார்கள். அவர்களைச் சந்திக்க ஆசை. கண்டிப்பாக நடக்கும் என்று நினைக்கிறேன். பார்க்கலாம்.

அப்புறம் ஊருக்குப் போனா எழுதுறது சிரமம்... ஏன்னா டிசம்பர் 5 மனைவியின் தங்கை திருமணம். அதனால் வேலைகள் சரியாக இருக்கும். என்ன இப்ப நிறைய எழுதுறியாக்கும் இதுல பில்டப் வேறன்னு நினைப்பீங்க... எழுதுறேனோ இல்லையோ முடிந்தளவு வாசிக்கிறேன்.

அப்புறம் எனது கதைகளை புத்தகமாக்க வேண்டும் என்று எனது கல்வித் தந்தை பேராசிரியர் மு.பழனி இராகுலதாசன் அவர்களுக்கு ஆசை. என்னை எழுத்தாளனாக்கிப் பார்த்தவரல்லவா... கதைகளை வாசித்துக் கொண்டிருக்கிறார்கள். எழுத்துப் பிழைகள், தலைப்புகள் என திருத்தம் செய்து கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் ஆசை நிறைவேறுகிறதா என்று தெரியவில்லை... தற்போது இருக்கும் குடும்ப சூழலில் எனக்குள் அப்படி ஒரு எண்ணம் இல்லை. தேவகோட்டை போய் அவரைப் பார்த்தால்தான் தெரியும்... பார்க்கலாம்.

இப்ப எதுக்கு இதெல்லாம்... ஊருக்கு போற சந்தோஷம் மட்டுமே இருக்கட்டுமுன்னு நீங்க சொல்றது கேக்குது... ஓகே... சந்திப்போம்.

-பரிவை’ சே.குமார்

வியாழன், 10 நவம்பர், 2011

நீ வருவாயென...



(நன்றி : இளையராஜா)

எப்போதோ நீ சொன்னது
இப்போதும் மனசுக்குள்...

எப்போதோ நீ கொடுத்தது
இப்போதும் பாதுகாப்பில்...

எப்போதோ நீ கேட்டது
இப்போதும் ஞாபகத்தில்...

எப்போதோ நீ பார்த்தது
இப்போதும் குறுகுறுப்பாய்...

எப்போதோ நீ சிரித்தது
இப்போதும் காதுக்குள்...

எப்போதோ...
எப்போதோ...
எல்லாமே எப்போதோ...

விட்டுச் சென்றாய்...
விலகிச் சென்றாய்...
விலகாத உன் ஞாபகங்களை
எனக்குள் விதைத்துச் சென்றாய்...

பசுமையாய் எனக்குள்
பாதுகாப்பாய் எல்லாமே...

அப்போது வருவாய்...
இப்போது வருவாய்...
என எப்போதும்
நம்பிக்கையாய்...

-‘பரிவை’ சே.குமார்

திங்கள், 7 நவம்பர், 2011

கிராமத்து நினைவுகள் : பொன்வண்டும் சில்வண்டும்

கிராமத்து நினைவுகள்தான் எத்தனை சுகமானவை... நிறைய நினைவுகளை எழுத்தாக்கினாலும் இன்னும் எழுதச் சொல்லும் சுவை அந்த வாழ்க்கையில் இருந்ததை... இருப்பதை மறக்க முடியாது.

சின்ன வயதில் ரசித்துச் செய்த சேட்டைகளாக இல்லாவிட்டாலும் கண்மாய்க்குள் போட்ட ஆட்டம், கூட்டாஞ்சோறு, கபடி, திருவிழாக்கள் என சந்தோஷித்த நாட்கள் அயிரை மீன் குழம்பு போல மனசுக்குள் ஆக்கிரமித்துத்தான் இருக்கிறது.

பள்ளியில் படிக்கும் காலத்தில் பொன்வண்டும் சில்வண்டும் எங்களிடம் பட்டபாடு இருக்கிறதே... அப்ப்பப்பா... வெயில் காலத்தில் பொன்வண்டும் மழைக்காலத்தில் சில்வண்டும் எங்கள் ஊரில் ஏராளமாக இருக்கும்.



பொன்வண்டு தகதகக்கும் நிறத்தில் மின்னும் தலையுடன் நீண்ட மீசையுமாக இருக்கும். இறக்கைக்கும் தலைக்கும் இடையில் இருக்கும் இடைவெளி கத்திபோல இருக்கும். அதில் இலைகளை வைத்தால் வெட்டிவிடும். சில நேரங்களில் தவறுதலாக விரலை வைத்தால் ரத்தம் வரும் அளவுக்கு படக்கென்று பிடித்துவிடும்.

பள்ளி விடுமுறை நாட்களில் கொள்ளையில் இருக்கும் வாகை மரங்களில்தான் தவம் இருப்போம். வாகை மரத்தின் இலைகளில் தொங்கிக் கொண்டிருக்கும். மரத்தில் ஏறியும் கல்லை விட்டு எறிந்தும் பிடிப்போம். சில நேரங்களில் பிடிப்பதற்காக கஷ்டப்பட்டு மரத்தில் ஏறி அருகில் செல்லும் போது பறந்து அடுத்த மரத்துக்குப் போய்விடும். அது பறக்கும் போது ஒருவித சப்தம் வரும். அதை வைத்தே அது எங்கு செல்கிறது என்பது தெரிந்துவிடும். ஓடி... விழுந்து... காலில் முள் குத்தி என்ன கஷ்டப்பட்டாலும் எப்படியும் பிடித்து வந்துவிடுவோம்.

சாமுண்டரி பாக்ஸில் தவிடு போட்டு அதன் மேல் வாகை இலையை போட்டு அதற்குள் அடைத்து வைப்போம். சில நேரங்களில் டப்பாவை திறந்ததும் பறந்து ஓடிவிடும். இருத்தும் பத்திரமாக வைத்து பள்ளிக்கூடத்துக்கு எல்லாம் கொண்டு போவோம்.

பொன்வண்டு சிறியதாக சிவப்பு, பச்சை, மஞ்சள், வெள்ளை என கலர்க்கலராய் முட்டையிடும். அந்த முட்டையில் விளக்கெண்ணையை தடவி வெயிலில் வைத்தால் குஞ்சு பொறிக்கும் என்ற வழிவழியாய் வந்த வாய்ச்சொல்லை நம்பி எண்ணையை தடவி வெயிலில் காத்திருந்த நாட்கள் எல்லாம் உண்டு. கடைசிவரை அப்படி ஒன்று நிகழ்வதேயில்லை.

பொன்வண்டின் கழுத்தில் நூலை கட்டி (பல நேரங்களில் அறுத்துவிடும்) வேகமாக சுத்தினால் அழகிய சப்தத்துடன் பறக்கும். பொன்வண்டு எல்லாருடைய புத்தகப் பைக்குள்ளும் வாகை இலையை சாப்பிட்டபடி வலம் வந்த நாட்கள்தான் எத்தனை இனிமையானவை.

பொன்வண்டு பற்றி தமிழ் விக்கிபீடியாவில்...

பொன்வண்டு (Sternocera) பூச்சி தொகுதியில் (Class Insecta), புப்ரெஸ்டிடெ (Buprestidae) என்ற உயிரியல் குடும்பத்தில், ஸ்டேர்னோசெரா (Sternocera) என்ற பேரினத்தை சேர்ந்த வண்டு வகைகளாகும்.

இவற்றின் உடலின் மேற்புற ஓட்டுப்பகுதி உலோகத்தைப் போல் மின்னும் தன்மை கொண்டதால் தமிழில் இந்தப் பெயர் கொண்டு அழைக்கப்படுகின்றன. ஸ்டேர்னோசெரா பேரினத்தில் உலகெங்கும் சுமார் 56 வண்டினங்கள் (Beetle Species) உள்ளன.

இவ்வகை வண்டுகள் பொதுவாக தாவரவுண்ணிகளாகும்.



அடுத்ததாத பொன்வண்டுக்கு நேர்மாறான வண்டுதான் சில்வண்டு... அழகான உருவமில்லாமல் கருப்பாக வித்தியாசமாக இருக்கும். இது மழைக்காலங்களில் கருவமரத்தில் இருக்கும்... கத்திக் கொண்டேயிருக்கும். இதன் ரீங்காரம் இனிமையானது அல்ல... வீட்டில் யாராவது கத்தி அழுதாலோ அல்லது சப்தமாக கத்தினாலோ எதுக்கு சில்வண்டு மாதிரி கத்துறே என்பார்கள்.

இவற்றின் உடம்பில் இருந்து தண்ணி மேலில் பட்டால் பத்து வரும் என்பார்கள். இருந்தும் அதை பிடித்து கத்தவிட்டுப் பார்ப்பதில் ஒரு சந்தோஷம்... பிடித்துப் பாக்கெட்டுக்குள் போட்டுக்கொண்டு நல்லபிள்ளை போல் நாலு பேர் இருக்கும் போது அருகில் சென்று பாக்கெட்டை லேசாக அமுக்கினால் போதும் கத்த ஆரம்பித்துவிடும்.

பொன்வண்டைப் போன்று ராஜ மரியாதையெல்லாம் இதற்கு இல்லை. மரத்தடியில் விளையாடும் போதும்... கோவிலில் விளையாடும் போதும்... எங்களுடன் இருக்கும் சில்வண்டு வீட்டிற்கு வரும்போது மீண்டும் கருவமரத்தின் அருகில் விடப்படும்.

சில்வண்டு குறித்த குறிப்பு கிடைக்கவில்லை. சில்வண்டின் ஒரு இனமான மகரந்தம் காவும் சில்வண்டு குறித்த தகவல் மட்டுமே விக்கிபீடியாவில் கிடைத்தது.

சில்வண்டின் ஒரு இனமான மகரந்தம் காவும் சில்வண்டு குறித்து

ஓர்க்கிட் சில்வண்டு அல்லது மகரந்தம் காவும் சில்வண்டு (ஆங்கிலம்: Pollinating Cricket ;இலத்தின்: Glomeremus orchidophilus ) இதுவரை அறிந்த சில்வண்டு இனங்களுள் மகரந்தச் சேர்க்கைக்கு உதவும் ஒரேயொரு இனமாகும்.

வழமையாக சில்வண்டு இனங்கள் தாவரங்களைச் சேதப்படுத்துகின்றன, ஆனால் ஓர்க்கிட் சில்வண்டு ஓர்க்கிட் வகையொன்றில் மகரந்தச் சேர்க்கை நடாத்துகின்றது. அறியப்பட்ட தாவரங்களுள் முற்றாக இல்லாது போய்விடக்கூடிய தீவாய்ப்புக் கொண்ட ஆங்க்ரேக்கம் கடேட்டி (Angraecum cadetii) எனும் இன ஓர்க்கிட் தாவரத்தில் மட்டும் இந்தச் சில்வண்டு மகரந்தக்காவியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இத்தகைய சிறப்பினால் 2011ம் ஆண்டுக்குரிய சிறந்த பத்து உயிரினங்களில் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

2008இல் இவ்வுயிரினம் ரீயூனியன் தீவுப்பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டது.

பொன்வண்டு மற்றும் சில்வண்டு குறித்த தகவல்களை வழங்கிய தமிழ் விக்கிபீடியாவுக்கும் படங்களை வழங்கிய கூகிளுக்கும் நன்றி.

சரிங்க... அடுத்த கிராமத்து நினைவுகளில் மீண்டும் ஒரு நினைவலையோடு சந்திப்போம்.

-'பரிவை' சே.குமார்

படங்கள் உதவி : கூகிள்

திங்கள், 31 அக்டோபர், 2011

பூங்காவுக்குள்ளே புயல் (சவால் சிறுகதை - 2011)

யுடான்ஸ், ஆதி மற்றும் பரிசல்காரன் இணைந்து நடத்தும் 'சவால் சிறுகதைப் போட்டி – 2011'க்கான இரண்டாவது சிறுகதை இது. (ஒருவர் இரண்டு கதை அனுப்பலாம் என்று சொல்லியிருக்கிறார்கள்.) யுடான்ஸ்ல எல்லாரும் ஓட்டுப் போடுங்க நண்பர்களே....

முதல் கதை படிச்சு... ஓட்டுப் போட....


*********          *********

(இது சவாலுக்கான படம்)
ப்பவும் சந்திக்கும் பூங்கா வாசலில் தனது பல்சரை நிறுத்திவிட்டு அருகிலிருந்த கடையில் கிங்ஸ் வாங்கி பற்ற வைத்துக்கொண்டு அங்கிருந்த தினத்தந்தியை மேய்ந்து கொண்டிருந்தான் செழியன். அவன் சிகரெட்டை முடிக்கவும் அவனது செல்பேசி அழைக்கவும் சரியாக இருந்தது.

எடுத்துப் பார்த்தவன் கண்ணம்மா என்று வந்ததும் கட் செய்துவிட்டு கண்களால் தேடினான். அவனுக்கு எதிர்ப்புறம் தனது ஸ்கூட்டியை நிறுத்திவிட்டு சிவப்பு கலந்த பச்சை சுடியில் ப்ரீ ஹேர் விட்டு தேவதையாக சாரு நின்று கொண்டிருந்தாள்.

தன்னை நோக்கி வேகமாக வரும் செழியனைக் கண்ட சாரு, இரு வாறேன் என்று சைகை காட்டியபடி அவனருகில் வந்தாள். “என்ன நான் வர கொஞ்சம் லேட்டானது ஐயா தம்மடிச்சிட்டிங்களோ?” என்று செல்லமாக கடிந்து கொண்டாள்.

“இல்ல வாய் நமநமன்னு இருந்துச்சு... இப்பல்லாம் ரெண்டு மூணுதான் தெரியுமா..? கொஞ்ச நாள்ல சுத்தமா குறச்சிடுறேன் என் கண்ணம்மாவுக்காக... ஓகே”

“இப்படியே சொல்லிக்கிட்டு இன்னும் குடிச்சிக்கிட்டுத்தான் இருக்கே... ரெண்டு, முணுன்னு சொல்லுவே... எனக்கென்ன தெரியும்... சரி வா... ஆமா கையில என்ன பேப்பர்... லவ் லெட்டரா...?”

“ஆமா... காதலிக்க ஆரம்பிச்சு மூணு வருசமாச்சு... இனி லவ் லெட்டர் கொடுத்தாத்தான் வாழும்... வேணுமின்னா காதலுக்கு டைவர்ஸ் லெட்டர் கொடுக்கலாம். " என்றான் சிரித்துக் கொண்டே.

“அப்ப நான் உனக்கு கசந்துட்டேனா... எவளாவது ஆபிசுல புதுசா வந்திருக்காளா... ஒகே... வேணாமின்னா விட்டுடு.... எனக்கும் நல்ல பையனா கிடைக்காமலா போயிடுவான்” படபடவென்று பேசியபடி பட்டென்று பிடித்திருந்த அவன் கையை உதறினாள்.

“ஏய்...லூசுக்கண்ணம்மா... சும்மா ஜாலிக்கு சொன்னா கோபம் வந்துருமே உனக்கு... அப்பா... உடனே மூக்கு சிவந்துருமே.... சும்மா சொன்னேன். நீதான் என் வாழ்க்கை... நீதான் என் உலகம்... நீதான் எல்லாமே... நீயில்லாத வாழ்க்கையை நினைச்சுக்கூட பாக்க முடியலை.... இதுல டைவர்ஸ் பண்ணுறதா... வா... இது வேற உள்ள போயி சொல்லுறேன்.”

“என்ன ஐயாவுக்கு புரமோஷன் பேப்பர் கொடுத்துட்டாங்களா?” சகஜ நிலைக்கு மாறினாள்.

“ஆமா... கொடுத்துட்டுத்தான் மறுவேலை பாப்பாங்க... அட நீ வேற வா சொல்லுறேன்...”

ஆட்கள் அதிகமில்லாத ஒரு இடமாக தேர்ந்தெடுத்து அமர்ந்தனர்.

“இங்க வந்ததுக்கு பேசாம இன்னைக்காவது பீச்சுப் பக்கம் போயிருக்கலாம்... சும்மா வந்து உக்காந்து பேசிட்டு போயிக்கிட்டே இருக்கதுல என்ன சுகமிருக்கு" முகத்தை அப்பாவியாக வைத்துக் கொண்டு சொன்னான் செழியன்.

“ம்... வந்த்துல இருந்து ஒரு மார்க்கமாத்தான் பேசுறே...? பீச்சுக்குப் போனா மட்டும் என்னவாம்... அலையை ரசிச்சுக்கிட்டு பேசிட்டு வரப்போறோம். அம்புட்டுத்தானே...” அவனை வேண்டுமென்றே சீண்டினாள்.

“ஆமா லவ்வர்ஸா வாறவனெல்லாம் அலையை ரசிக்கவா வாறாங்க...” இழுத்தான்.

“அப்புறம் எதுக்கு வாறாங்க..?” தெரியாதது போல கேட்டாள்.

“நீ பாத்ததே இல்லையா... சுடுமணலுல உக்காந்து இப்படி துப்பட்டாவ எடுத்து ரெண்டு தலையவும் மறச்சிக்கிட்டு என்னென்வோ ஆராய்ச்சி பண்ணுவாங்க... ரெண்டு நாளைக்கு முன்னாடி நானும் பிரபாவும் போனப்போ ரெண்டு ஸ்கூல் ஸ்டூடண்ட பண்ணுன ஆராய்ச்சியப் பாக்கணுமே... கல்யாணம் பண்ணுனவங்க தோத்தாங்க போ...”

“இது பார்க்... என்னோட துப்பட்டாவ கொடு... எவ என்ன ஆராய்ச்சி பண்ணுறான்னு பாக்கத்தான் அவனும் நீயும் அடிக்கடி பீச்சுக்குப் போறதா... இனி பீச்சுப்பக்கம் போனே மவனே பிச்சுப்புடுவேன் பிச்சு... ஆமா...”

“நாம போற வழியில நடக்கிறத பாக்காம இருக்க முடியுமா?. ஆமா நீ என்ன எங்கேயும் எப்போதும் அஞ்சலி மாதிரி மிரட்டுறே... காதல்ல மிரட்டலெல்லாம் வச்சுக்கக்கூடாது கண்மணி...” அவளது இதழில் விரல் வைத்து அழுத்தினான்.

“சரி... ஐயாவுக்கு ரொமான்ஸ் மூடா இருக்கு போல... கொண்டு வந்த பேப்பரை பத்தி ஒண்ணும் சொல்லலை... என்ன பேப்பர்... ம்...?”

“இந்தா நீயே பாரு” என்றபடி அவளிடம் மடித்து வைத்திருந்த பேப்பரைக் கொடுத்தான்.

பிரித்துப் பார்த்தவள் “என்னடா இது... லூசு மாதிரி இதை எதுக்கு தூக்கிக்கிட்டு திரியுறே...”

“திட்டாம அதுல என்ன இருக்கு பாரு...”

“என்ன இருக்கா ஒருத்தன் திரும்பி உக்காந்துக்கிட்டு மொபைல நோண்டுறான். பேப்பர்ல பிரிண்டெடுத்து கட் பண்ணி வச்சிருக்கான்... “ அவள் அடுக்கிக் கொண்டே போக அவளையே ரசித்துக் கொண்டிருந்தான்.

“எதுக்குடா... இது...” அவளின் கேள்வியால் தன்நிலைக்கு வந்தவன், “அந்த பேப்பர் துண்டுல எழுதியிருக்கதைப் படி...” என்றதும் “என்ன விளையாடுறியா..? ஒரு பேப்பரக் கொண்டாந்து அதுல இருக்கதை சொல்லு... படியின்னு சொல்றியே... எனக்கு வேற வேலையில்ல...”

“சரி நானே சொல்றேன்.... அந்த ரெண்டு பிட் பேப்பர்லயும் என்ன எழுதியிருக்குன்னா... ஒண்ணுல ‘Sir, எஸ்.பி. கோகுலிடம் நான் தவறான குறியீட்டைத்தான் கொடுத்திருக்கிறேன். கவலை வேண்டாம் – விஷ்ணு’ அப்படின்னும் இன்னொன்னுல ‘Mr. கோகுல், s w H2 6f – இதுதான் குறியீடு கவனம் – விஷ்ணு’ அப்படின்னும் இருக்கா...”

“எனக்கு தமிழ்த் தெரியாதுன்னு படிச்சுக் காட்டுறியா...” கோபமாவது போல் முகத்தை வைத்துக் கொண்டு கேட்டாள்.

“இல்ல இதுதான் இப்ப பதிவுலகத்துல பரபரப்பான மெஜெஸ்...”

“என்ன பரபரப்பு... யார் அந்த விஷ்ணுவும்... கோகுலும்...”

“இது சரியா பொருந்துற மாதிரி சிறுகதை எழுதணுமாம்... போட்டி அறிவிச்சிருக்காங்க...”

கைகளை இடுப்புக்கு கொண்டு வந்து அவனை முறைத்தாள்.


(இது கதைக்கான படம் -
படம் நன்றி : மணியம் செல்வன்)

“ஏண்டா கொல்லுறே...? உனக்கெதுக்கு இது... அதெல்லாம் கதை எழுதுறவங்க மண்டய உடச்சுக்கணும்... தூக்கி வீசிட்டு வாடா.... கொல்லாம...”

“என்னயப்பாத்தா கதை எழுதுற மாதிரி தெரியலையா... என்னோட வலைப்பூவுள்ள எழுதுனதை பாத்திருக்கேல்ல... நேத்து பிரபாகிட்ட இதை காட்டுனப்போ வேண்டாத வேலை எதுக்கு மாப்ளேன்னு சொல்லி சிரிக்கிறான். சரி நீயாவது நல்லது சொல்வேன்னு பாத்தா...” முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு திரும்பி அமர்ந்தான்.

“இந்த கோபத்துக்கு ஒண்ணும் குறைச்சலில்ல... ஐயா புலவரே... நீங்க நல்லா கதை எழுதுவீங்க... எழுதுங்க... ஜெயம் கிடைக்கட்டும்...” என்று அவன் கன்னத்தில் இச் பதித்தாள்.

“அதான் சாரு இருக்கியே... அப்புறம் எதுக்கு ஜெயம்...” அவளை இழுத்தான்.

“அடப்பாவி... கோபமெல்லாம் பொய்யா... ஒரு முத்தம் வாங்கத்தானா... அதுசரி ஜெயம் கிடைப்பாளான்னு நப்பாசை எதுவும் இல்லையே...”

அவளைப் பார்த்து சிரித்துக் கொண்டே “ம்.... சொல்லு எப்படி எழுதலாம்... க்ரைம் சப்ஜெக்ட் எடுதுக்கலாமா... இன்ஸ்பெக்டர் கோகுல், இன்பார்மர் விஷ்ணு... இவங்களுக்குள்ள நடக்கிற ஒரு நிகழ்வை வச்சி...”

“நிறுத்து... நீ க்ரைம் கதை எழுதவா.. அதுக்கெல்லாம் நிறையப் பேரு இருக்காங்க... பேசாம பாக்கியம் ராமசாமி எழுதுற அப்புச்சாமி கதை மாதிரி ஜோக்கா எழுது... நீ சிரியஸா பேசினாலே தாங்க முடியாது. இதுல சீரியஸ் கதை வேறயா... பதிவுலகம் கொஞ்ச நாளைக்காவது இருக்கட்டும் ராசா... பஸ்ஸ விட்டதும் எல்லாரும் அங்க போயி கும்முனிங்க... என்னாச்சு பஸ்ஸ செட்டுல போட்டுட்டு எல்லாரையும் வெரட்டிட்டாங்க...”

“சும்மா வெறுப்பேத்தாதே... சொல்லு எப்படி ஆரம்பிக்கலாம்...”

“எனக்கு கதையெல்லாம் எழுத தெரியாது... படிக்கும்போது பார்முலாவ ஞாபகம் வச்சுக்கவே என்னால முடியாது... இதுல S W H2 6F-ன்னு எல்லாம் வச்சு கதைவிடச் சொன்னா... எனக்குத் தெரியாது... நீ யோசிச்சு எதாவது எழுது... பந்தயத்துல ஜெயிக்கலையின்னாலும் கலந்துக்கிட்ட குதிரையின்னாலும் பெருமைதானே...”

“நல்லா ஓட்டக்கத்துக்கிட்டேடி... எப்படி ஆரம்பிக்கலாம்... அந்த பாழடைந்த ரோட்டில்....”

“ஏய்... இரு... பார்க்ல பக்கத்துல காதலிய வச்சிக்கிட்டு கதை... அதுவும் பேய்க்கதை போல யோசிக்கிற நேரமாடா இது... நீ ரொம்ப படுத்துறேடா... நா போறேன்... நீ உக்காந்து யோசி....” கோபமாக எழுந்தாள்.

“சரி... சரி... நான் அப்பறமா யோசிச்சிக்கிறேன்... உக்காரு... அங்க பாரேன்... அந்த ரெண்டு பேரையும்... “ அவன் கை காட்டிய திசையில் பார்த்தாள். அங்கே இதழாராய்ச்சியில் இருவர் தீவிரமாக இருந்தனர்.

“கருமம்... கருமம்... பூங்காவுக்குள்ள புயல வர வச்சிடுவாங்க போல...”

“என்ன சொன்னே... என்ன சொன்னே....”

“என்ன...”

“இல்ல எதோ பூங்காக்குள்ள...”

“பூங்காக்குள்ள இல்ல... பூங்காவுக்குள்ள புயலயின்னு சொன்னேன்...”

“எஸ்... பூங்காவுக்குள்ள புயல்... இதுதான் கதையோட தலைப்பு... தமிழகம் முழுவது குண்டு வக்கிறாங்க.... இது மாதிரி ஒரு பூங்காவுல குண்டு வக்கிறது சம்பந்தமான குறியீடு ஒண்ணு இன்பார்மர் விஷ்ணுவுக்கு கிடைக்குது... அதே நேரம் தீவிரவாத கும்பலுக்கு விஷ்ணு இன்பார்மர்ன்னு தெரிய வருது... அவனோட குடும்பத்தை பணயமா வச்சி மிரட்டுறாங்க... அப்ப அவன் இன்ஸ்பெக்டர் கோகுலுக்கு தப்பான குறியீடை கொடுக்கிறான்... எப்படி தீவிரவாத கும்பல் மாட்டுது... இதுதான் கதை...” படபடவென்று சொல்லிக் கொண்டே போக...

“ஐயோ... நிப்பாட்டு... நீ இப்படி கொல்லுவேன்னு தெரிஞ்சிருந்தா இன்னைக்கு நான் வந்திருக்கவே மாட்டேன்... இதெல்லாம் நிறைய தமிழ்ப்படத்துல பாத்தாச்சு... கொஞ்சம் வித்தியாசமா யோசி... இப்ப என்னய ஆளைவிடு... நான் கிளம்புறேன்... எனக்கு நாளைக்கு முக்கியமான டாஸ்க் முடிக்கணும்... கொஞ்சம் ஜாவா கோடிங்க பாக்கணும்... அப்புறம் இந்தப் போட்டி எப்ப முடியுதுன்னு சொல்லு அதுக்கு அப்புறம் வாறேன்...” என்றாள் சிரித்துக் கொண்டே.

“போம்மா... என்னோட கிரியேட்டிவிட்டிய கேவலப்படுத்தாதே... எனக்குள்ள ஒரு இயக்குநர் இருக்கான்... அவன் வெளிய வாற நாள் தூரத்தில் இல்ல...”

“ஓகே... இப்ப சொல்றேன்... க்ரைம் அது இதுன்னு யோசிக்காம... இதை வச்சி கொஞ்சம் வித்தியாசமா யோசி... ஏன் இப்ப நமக்குள்ள நடந்ததை கொஞ்சம் மாத்தி கதையா ரெடி பண்ணு.... வெற்றி பெற வாழ்த்துக்கள்... காலையில போன் பண்ணும் போது நீ உன்னோட கதையை எங்கிட்ட சொல்றே... பர்ஸ்ட் நான் கேட்டதும் நீ அனுப்பி வைக்கலாம்... ஓகே... பெஸ்ட் ஆப் லக் மை டார்லிங்...” என்றபடி எழும்ப அவனும் அவளுடன் எழுந்து கொண்டான்.

இருவரும் இணைந்து நடக்க, இரண்டு நண்பர்கள் தீவிர ஆலோசனையில் இருந்தார்கள். அவர்களை கடக்கும் போது ‘இன்ஸ்பெக்டர் கோகுலுக்கு தனக்குத் தெரியாம இன்பார்மர் விஷ்ணு தப்புப் பண்றானோன்னு சந்தேகம் வந்திருது... அதனால...’ என்று ஒருவன் இன்னொருவனிடம் சொல்லிக் கொண்டிருந்தான்.

“இவங்க ரெண்டு பேரும் எழுத்தாளர்கள் சுபா போல பதிவுலக சுபா போல... என்னமோ பரிச்சைக்குப் படிக்கிற மாதிரி சின்ஸியரா... உன்னய மாதிரியே நிறைய அலையுதுக போல... நல்லா போட்டி வச்சாங்கப்பா... ஒரு படத்தைப் போட்டு பதிவுலகத்தையே பைத்தியமா க்ரைம் கதையின்னு அலைய வச்சிட்டாங்கப்பா... " என்று செழியனின் காதில் சாரு கிசுகிசுக்க, அவளை “சும்மா வாடி...” என்றான் சிரித்துக் கொண்டே.

-‘பரிவை’ சே.குமார்.

சனி, 29 அக்டோபர், 2011

பொறி (சவால் சிறுகதை - 2011)

(இந்தக் கதை யுடான்ஸ், பரிசல்காரன் மற்றும் ஆதி இணைந்து அறிவித்திருக்கும் சவால் சிறுகதைப் போட்டிக்கானது. கதையைப் படித்து உங்கள் கருத்தையும் தவறாமல் யுடான்ஸில் ஓட்டும் அளியுங்கள். யுடான்ஸ் திரட்டியில் நீங்கள் அளிக்கும் ஓட்டும் வெற்றியாளரைத் தேர்ந்தெடுப்பதில் சிறு பங்காற்ற இருக்கிறதாம். எனவே தவறாமல் வாக்களியுங்கள்.... எனக்கு மட்டுமல்ல... கலந்து கொள்ளும் நண்பர்கள் அனைவருக்கும் வாக்களியுங்கள். )




டற்கரையில் அமர்ந்து சூரியன் அஸ்தமிப்பதை ரசித்துக் கொண்டிருந்த விஷ்ணுவை நெருங்கினார் இன்ஸ்பெக்டர் கோகுல்.

"ஹாய் விஷ்ணு... எப்படியிருக்கீங்க?"

"வாங்க கோகுல்... நான் நல்லாயிருக்கேன். நீங்க எப்படியிருக்கீங்க?"

"நல்லாயிருக்கேன்... வாங்க நடந்துக்கிட்டே பேசலாம்..."

"என்ன கோகுல் திடீர்ன்னு என்னய வரச்சொல்லியிருக்கீங்க... அதுவும் அலுவலகத்துக்கு வரச்சொல்லாம... கடற்கரைக்கு வரச் சொல்லியிருக்கீங்க... எனித்திங்க் இம்பார்ட்டண்ட்?"

"ஆமா விஷ்ணு.... இது முக்கியமான விசயம்... இதை அங்க வச்சு பேசக்கூடாது ஏன்னா சுவருக்குக்கூட காது இருக்கும்... நான் உங்ககிட்ட சொல்றது நம்ம ரெண்டு பேருக்கு மட்டும்தான் தெரியணும்..."

அவர்கள் ஆள் அதிகமில்லாத பகுதிக்கு வந்து கரையோரத்தில் கிடந்த படகில் அமர்ந்தனர். சிகரெட் பாக்கெட்டில் இருந்து சிகரெட்டை எடுத்துக் கொண்டு விஷ்ணுவிடம் நீட்டினார். அவனும் எடுத்துக் கொள்ள... சிகரெட் இருவர் கையிலும் கரைந்து கொண்டிருந்தது.

"இதுதான் மேட்டர் விஷ்ணு..." என்றபடி கரைந்த சிகரெட் துண்டை மணலில் போட்டார் கோகுல்.

"ம்... இந்த விசயத்துல நான் என்ன பண்ணனுமின்னு நினைக்கிறீங்க..."

"விஷ்ணு.... இதுல ஒரு அமைச்சர் சம்பந்தப்பட்டிருக்கிறதுனால டிபார்ட்மெண்ட் எப்படித்தான் விசாரிச்சாலும் எங்க ஆளுக மூலமாக தினசரி நடவடிக்கைகள் அவங்களுக்கு தெரிஞ்சிருது... அதானால விசாரணையும் விசாரிக்கிற அதிகாரியும் பாதிக்கப்படுறாங்க... அதான் உங்களை யாருக்கும் தெரியாம விசாரிச்சு எனக்கு தெரிவிக்கச் சொல்லுறேன்..."

"என்ன கோகுல் நீங்க... இன்னைக்கு நாட்டுல நடக்கிற அம்புட்டு கெட்ட காரியத்துலயும் அமைச்சருங்க இல்லாததே இல்லையே... கொள்ள அடிச்சுப்புட்டு களி திங்கிறதைத்தான் இப்ப உலக நாடே பாத்துக்கிட்டுதானே இருக்கு..."

"அவனுங்க நேரடியா இருக்கதாலதான் எந்த விசாரணையையும் குறிப்பிட்ட தூரத்துக்கு மேல போகுதில்ல... எத்தன கேசு தூங்குது தெரியுமா?"

"சரி விடுங்க... ஜனநாயக நாடு... ஜனங்கள ஏமாத்திப் பொழக்க ஒரு எம்.எல்.ஏ. பதவி இருந்தாப் போதும்.. சரி விடுங்க... நமக்கெதுக்கு அரசியல்... மேட்டருக்கு வருவோம்"

"நான் சொன்னதை நீங்க சீக்கிரமா விசாரிச்சு நல்ல பதிலா சொன்னீங்கன்னா நான் எல்லார் மேலயும் ஆகஷன் எடுப்பேன்... அதுக்கப்புறம் தண்ணியில்லாத காட்டுக்கு மாத்துனாலும் கவலைப்படமாட்டேன்."

"கண்டிப்பா... இன்னும் ஒரு வாரத்துல உங்களுக்கு இந்த கேஸ் சம்பந்தமான எல்லா விவரங்களையும் கொண்டு வந்து தாறேன்... ஒகே... சரி நான் இப்படியே போறேன்... நீங்க வந்த வழியா போயிருங்க..." என்றபடி கிளம்பினான் விஷ்ணு.

*******

றுநாள் மதியம் 12.30 மணிக்கு சூர்யா லாட்ஜ்க்குள் நுழைந்தான்.

"எக்ஸ்கியூஸ் மீ... பரந்தாமன் சாரைப் பாக்கணும்..."

"நீங்க விஷ்ணுவா... எப்ப வந்தாலும் உங்களை அனுமதிக்க சொல்லியிருக்கார். நாலாவது மாடியில ரூம் நம்பர் 401ல இருக்கார். நீங்க போங்க நான் கூப்பிட்டு சொல்லிடுறேன்."

லிப்டில் நாலாவது மாடிக்கு சென்று ரூம் நம்பர் 401 முன்னால் செல்ல, உள்ளே இருந்து வந்த ஒருவர் "நீங்கதான் விஷ்ணுவா... அண்ணன் உங்களுக்காகத்தான் காத்துக்கிட்டு இருக்கார்..." என்றபடி உள்ளே அழைத்துச் சென்றார்.

"வாங்க தம்பி... காலயிலயே வராம இப்பத்தான் வாறிய.." வெற்றிலையை மென்றபடியே கேட்டார்.

"இல்லங்க... கொஞ்சம் முக்கியமான வேலையா சிலரப் பாக்க வேண்டியிருந்துச்சு... அதான் முடிச்சிட்டு வாறேன்... என்ன பேசணும்..." அவரிடம் பேசியபடி அருகிலிருந்தவர்களைப் பார்த்தான்.

"நம்ம ஆளுகதான்... ஒண்ணும் பிரச்சினையில்ல... சொல்றேன்... ஒக்காருங்க..."

"தம்பி... துப்பறிஞ்சு நல்ல பேரு சம்பாரிச்சு வச்சிருக்கியலாமே..." பெரிய மீசை அவனைப் பார்த்து கேட்டது.

"ஐய்யோ... அப்படியெல்லாம் இல்லங்க... எதோ பொழப்பு ஓடுது..."

"சரி தம்பி விசயத்துக்கு வருவோம்..." என்ற பரசுராமன், "ஒங்களுக்கு எம்புட்டு பணம் வேணும்" என்றார்.

"என்னங்க எதுக்கு எனக்குப் பணம்... என்ன வேலையின்னு சொல்லுங்க... வேலைக்குத் தகுந்தமாதிரித்தான் வாங்குவோம்..."

"நீ வேல பாக்கம இருக்கத்தான் பணம் தாறேங்கிறேன்..." வெற்றிலை எச்சில் தெரிக்க சிரித்தார்.

"எனக்குப் புரியல..."

"என்ன தம்பி நானே நேரடியா பேசுறேன்னா... என்ன வேலயின்னு தெரியாதா ஒனக்கு... நாலு ஓட்டலு... ரெண்டு தேட்டரு... நாலஞ்ச்சு மில்லு... சில பல லாரியின்னு பெரிய லெவல்ல இருக்க நானே எறங்கிப் பேசுறேன்னா... பிரிய வேணாமா தம்பி.."

"உண்மைக்குமே புரியலங்க..."

"கோகுல் ஒங்கிட்ட சொன்ன வேலய பாக்காம இருக்கத்தான் பணம் தாறேன்னு சொல்றேன்..."

"...." அதிர்ச்சியாய் அவரை நோக்கியவன் சுதாரித்து " எந்த கோகுல்... எனக்கிட்ட என்ன வேலை கொடுத்தார்".

"தம்பி நடிக்காதீங்க... எங்களுக்கு எல்லா எடத்துலயும் ஆளு இருக்கு... கடற்கரைக்குப் போயி பேசினா... இது பெரிய ரிஸ்கான வேல தம்பி... அமைச்சரு, எம்.எல்.ஏ. பெரிய பெரிய புள்ளிங்கன்னு நிறைய பேரு இதுல இருக்கோம்... எங்க எல்லாரையும் நீங்க தண்டிக்கணுமின்னா தமிழ்நாடு தாங்காது..."

"என்ன மிரட்டுறீங்க... எனக்கு தெரியாதுங்கிறேன்..."

"தம்பி அடிச்சி மிரட்டச் சொல்றியா... என்ன... ம்... ஊட்ல ஒருத்த உயிரோட இருக்கமுடியாது... நீ பிரண்டுன்னு அவனுக்கு உதவப் போற நான் கோடிய கொட்டித் தாறேன்னு சொல்லுறேன்... என்ன கண்டுபிடிச்சியோ எங்கிட்ட கொடுத்துட்டு ஒதுங்கிக்க... நாங்க அவன போட்டுத் தள்ளிடுவோம்... மண் அள்ளுறதை எதுத்த இன்ஸ்பெக்டரை கல்யாணமாகி நாலு மாசத்துல மண்ணு லாரியில மோதி கொன்ன எங்களுக்கு இவன் என்ன பிஸ்கோத்து... வாழ வேண்டிய வயசு... சின்ன சின்ன வேலய பாத்துக்கிட்டு வாழ்க்கய ஓட்டமா... எதுக்கு இதெல்லாம்... ம்"

"அது..." நாக்கு வறண்டது.

"தம்பி நாங்க கஷ்டப்பட்டு ரிஸ்க்கெடுத்து காரியம் பண்றோம்... அவன் இதுல மூக்க நொழச்சதுமில்லாம... பாவம் நீ ஒன்னயும் இழுத்து விட்டிருக்கான்..."

"நான்... அது..."

"பயப்புடாதே... இன்னயில இருந்து நீ நம்மாளு ... ஒனக்கு சொன்னபடி பணம் வரும்... அவன திசை திருப்பி விட்டுட்டு ஒதுங்கிக்க... சரி... முகத்தை தொடச்சிட்டு கிளம்பு. காலையில பண்ணினது என்னோட பெர்சனல் நம்பர்... சேவ் பண்ணி வச்சிக்க.... ஒகே... நாங்க என்ன பண்றோம். எங்க பண்றோமுன்னெல்ல்லாம் நீ துப்பறிய வேண்டாம். பேசாம ஓன்னோட வேலயப் பாரு... அப்புறம் எதுக்கும் நீ என்னய தேடி வரவேண்டாம். அது கோகுலுக்கு சந்தேகத்தை வரவச்சிடும்... அப்புறம் சிக்கலாயிடும். எனக்கு நீ போனெல்லாம் பண்ண வேண்டாம். அவசியமுன்னா நாங் கூப்பிடுறேன்."

"சரி..." என்று கிளம்பியவன் கடற்கரையில் பேசியது இவங்களுக்கு தெரிஞ்சிருக்குன்னா இன்ஸ்பெக்டரை பாலோ பண்றாங்க... இதுல மாட்டிக்கிட்டு நாம குடும்பத்த இழக்கணுமா... இவங்களுக்கு உதவுனா பணத்துக்கு பணமுமாச்சு... உயிர் பயமும் இல்ல... என்று நினைத்தான். ஆனால் உள் மனசு தப்பு பண்ணாதே என்று கத்தியது.

கீழே இறங்கியவன் அவளைப் பார்த்தான்... அவளும் பார்த்தாள். இருவருக்கும் மிகுந்த சந்தோஷம். பின்னர் அவளுடன் சில நிமிடங்கள் பேசிவிட்டு கிளம்பினான்.

*******

ரவு தனக்கு வந்திருந்த மின்னஞ்சல்களைப் பார்த்துக் கொண்டிருந்தான். அதில் திவ்யா என்ற பெயரில் வந்திருந்த மின்னஞ்சலை படித்தவன், 'எஸ்... எஸ்... கிடைச்சிருச்சு... இதை முதலில் கோகுல்கிட்ட சொல்லணும்' என்று நினைத்தபோது போன் அடித்தது. எடுத்துப் பார்த்தவன் 'இவரு எதுக்கு இப்போ கூப்பிடுறாரு?' என்று நினைத்தபடி 'அலோ' என்றான்.

"என்ன தம்பி ஒன்னோட டிடக்ட்டிவ் புத்திய நமக்கிட்டே காட்டுற..?" எதிர்முனையில் பரந்தாமன் கோபமாய் கேட்டார்.

"எ... என்ன... நான் ஒண்ணும் பண்ணல சார்... உங்களுக்கு பேவராத்தான் இருப்பேன்..."

"தம்பி... எங்கிட்ட பொய் சொன்னா எனக்குப் பிடிக்காது... ஆமா ஒன்னால ஒரு பொம்பளப்புள்ள மாட்டிக்கிட்டாளேப்பா..."

"சார்... அவள ஒண்ணும் பண்ணிடாதீங்க... ப்ளீஸ்..."

"நீ நடந்துக்கிறதப் பொறுத்துத்தான் எதாவது பண்ணுவேன்... இன்னும் ஒண்ணும் பண்ணல... சரி வெசயத்துக்கு வா... அவ பண்ணுன காரியத்துக்கு பிசுனசு பேச வாற ரெண்டு வெள்ளக்காரப்பயலுவ நம்ம பக்கத்து பொண்ணு பிரசா வேணுமின்னாங்க... அவங்களுக்கு விருந்து வைக்கலாமுன்னு இருக்கேன். அவள காப்பாத்துது ஒங்கையிலதான் தம்பி இருக்கு..."

"வேண்டாம்... நா... நா... எ... என்ன செய்யணும்?"

"அவ அனுப்புனதை வச்சி நீ கோகுலுக்குட்ட வெசயத்தை சொல்ல ரெடியாயிருப்பே... நாங்க இன்னும் ரெண்டு நாள்ல செய்யப் போற இந்த ஆபரேசன் எங்க நடக்குதுன்னு ஒனக்கு தெரிஞ்சி போச்சு... ஒருவேளை ஒனக்கு முன்னாடி அவனுக்கும் தெரிஞ்சிருக்கலாம். ஆனா நீ சொன்ன அவன் நம்புவான். அதனால அவனுக்கு பொய்யான தகவலை கொடு. மத்ததை நாங்க பாத்துக்கிறோம்."

"சரி செய்யிறேன்... திவ்யாவை...."

"எங்க வேல முடியட்டும்... அவ பத்திரமா வருவா..." என்றபடி போனை கட் பண்ணினார்.

'சை... எப்படி... எப்படி மாட்டுனா... எல்லாம் போச்சு...' என்று நினைத்தவன் திவ்யாவுக்கு எதாவது ஆனால் என்ன பண்றது என்று நினைத்தபோது மனசு படபடக்க ஆரம்பித்தது.

யோசித்தவன் ஒரு முடிவுக்கு வந்தவனாய் பரந்தாமன் நம்பருக்கு போன் செய்ய, அது சுவிட்ஸ் ஆப் செய்யப்பட்டிருந்தது. 'இப்பத்தானே பேசினான். அதுக்குள்ள மப்படிச்சிட்டு மல்லாந்துட்டானா... இல்ல திவ்யாவை எதாவது...' யோசித்த போதே வியர்க்க ஆரம்பித்தது.

கணிப்பொறியில் வேகவேகமாக எதோ டைப் செய்து பிரிண்ட் போட்டு இரண்டாக கட் பண்ணி எடுத்தான். அதில் 'sir, எஸ்.பி. கோகுலிடம் நான் தவறான குறியீட்டைத்தான் கொடுத்துள்ளேன். கவலை வேண்டாம். -விஷ்ணு' என்றிருந்ததை படித்துப் பார்த்தவனுக்கு ஏதோ தவறு இருப்பது தெரிய... மீண்டும் டைப் செய்தான். இந்த முறை குறியீட்டை தகவலாக மாற்றி பிரிண்ட் எடுத்து ஒரு கவரில் போட்டான்.

'Mr.கோகுல், s w H2 6f - இதுதான் குறியீடு. கவனம் - விஷ்ணு' என்று இருந்ததை இன்னொரு கவரில் போட்டு பேரெழுதி இரண்டையும் எடுத்துக் கொண்டு வேகமாக வண்டியை எடுத்தவன், எதுக்கு லெட்டர்ல கொடுத்துக்கிட்டு காலையில சொல்லிக்கலாம் என்று வீட்டுக்குள் வந்து கோகுலுக்கு பிரிண்ட் எடுத்த மேட்டரை அவரது மின்னஞ்சல் முகவரிக்கு அவசரம் என்று தலைப்பிட்டு அனுப்பிவிட்டு அதை கிழித்து எறிந்தான்.

*******

சில தினங்களுக்குப் பிறகு தினங்களுக்குப் பிறகு அன்றைய நாளிதழ்கள் ஏழைக் குடும்பத்து பிள்ளைகளை கடத்தி வந்து கிட்னி திருடும் கும்பல் கூண்டோடு கைது என்றும் சில நகரங்களின் முக்கிய புள்ளிகளுடன் சேர்ந்து ஒரு மத்திய மந்திரியும் இந்த பாதகச் செயலை செய்திருக்கிறார். பிடிபட்டவர்களின் வாக்குமூலத்தை ஆதாரமாக வைத்து மத்திய மந்திரி இன்று மாலைக்குள் கைது செய்யப்படலாம் என்றும் பரபரப்புச் செய்தியை தாங்கி வந்திருந்தன.

*******

ன்று மாலை கடற்கரைக்கு அருகில் இருக்கும் இந்தியன் ரெஸ்டாரண்டில் "எந்த மிரட்டலுக்கும் பயப்படாம எனக்கு சுப்ரமணியபுரம் மேற்குல வீட்டு வசதி வாரிய கட்டிடம் எண் 2 தளம் எண் 6 அப்படிங்கிறதை அழகா s w H2 6f - குறியீடா அனுப்பி, அதே சமயம் பரந்தாமனையும் நம்ப வச்சி... மிகப்பெரிய கிட்னி திருட்டுக் கும்பலை பிடிக்க உதவுனதுக்கு ரொம்ப நன்றி விஷ்ணு. அதுதான் உங்க டிடெக்டிவ் மைண்ட்... உங்களுக்கு என்ன செய்யணுமோ அது விரைவில் காவல்துறை மூலமா செய்யிறேன். இது என்னோட கிப்ட் உங்களுக்காக..." என்று அவனது கையில் அந்த பாக்ஸை கொடுத்த கோகுல், "ஆமா ரெண்டு மூணு நாளா நீங்க தூங்கல போல..." என்று கேட்க

"ஆமா சார் திருட்டுக் கும்பல்கிட்ட இருந்து எனக்கு பிராப்ளம் வந்தா நான் பேஸ் பண்ணிப்பேன். எனக்கு உதவப் போய் என்னோட காலேஸ் மெட் திவ்யா மாட்டிக்கிட்டதுதான் சார் எனக்கு ரொம்ப வருத்தமாப் போச்சு..."

"அவங்களத்தான் சேப்பா காப்பாத்தியாச்சில்ல... நம்ம அரசு நேர்மையா நடவடிக்கை எடுத்தா பரந்தாமன் மத்திய மந்திரியெல்லாம் சிறைவாசம்... இல்லேன்னா எனக்கு தண்ணியில்லாத காடு... நீங்க உயிர காப்பாத்திக்க வேற ஊரு..." என்றபோது விஷ்ணுவின் போன் அடிக்க... அதில் திவ்யா என்று வந்ததும விஷ்ணு முகத்தில் காதலின் மொட்டு மலர்வது கோகுலுக்குத் தெரிந்தது.

-'பரிவை' சே.குமார்.

புதன், 26 அக்டோபர், 2011

தீபாவளி....


பட்டாடை உடுத்தி
பல்வகை இனிப்பு உண்டு
பந்தங்களுடன் பாட்டாசு வெடித்து
பகட்டாக கொண்டாடினாலும்...

புதுத்துணி உடுத்தி
இட்லியுடன் சில இனிப்பும்
சில்லறை வெடிகளுமாய்
நடுத்தரமாக கொண்டாடினாலும்...

இருப்பதில் புதிது உடுத்தி...
இருப்பதை மகிழ்ந்து உண்டு
வெடிப்பதை பார்த்து மகிழ்ந்து
ஏழ்மைத் தீபாவளி கொண்டாடினாலும்...

ராமநாதன் கொடுத்த துணி அணிந்து
சாந்தியக்கா கொடுத்த இட்லியும்
சிந்தாமணி கொடுத்த சில வடையும்
சிக்கனமாய் சாப்பிட்டு
சுப்ரமணி மகன் வெடித்த வெடியில்
வெடிக்காததை தீயிலிட்டு வெடிக்க வைத்து
இல்லாமை தீபாவளி கொண்டாடினாலும்....

கிடைக்கும் சந்தோஷத்தில்
உயர்வேது... தாழ்வேது...
உள்ளத்தின் மகிழ்ச்சியில்
எல்லையில்லா இன்பத்தை
எல்லோருக்கும் கொடுக்கட்டும்
இத் தித்திக்கும் தீபாவளி...



என் இனிய உறவுகள் அனைவருக்கும்
உள்ளங்கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

கொண்டாடுங்கள்... சந்தோஷமாய் இருங்கள்.

இத்தினம் மட்டுமல்ல...
இனி மலரும் தினங்கள் எல்லாம் மகிழ்வை
மலரச் செய்யட்டும்.


தன்மானமிக்க நட்புக்களின் உணர்வுக்கு மதிப்பளிக்கும் விதமாக இன்று முதல் தமிழ்மணம் ஓட்டுப் பட்டையை நீக்கியுள்ளேன்.  
வாழ்த்துக்களுடன்,
-‘பரிவை’ சே.குமார்.
Thanks: Google (Photos)


சனி, 22 அக்டோபர், 2011

அதீதத்தில் 'கூழாங்கல்'



"நாஞ் சொல்லிக்கிட்டே இருக்கேன்... நீ எரும மாட்டுல மழ பேஞ்ச மாதிரி நிக்கிற... என்ன நாஞ் சொல்றது புரியுதா... "
"ம்..." அழுகையினூடே தலையாட்டினாள் சுதா.
"மறுபடியும் நீ அவங்கூட பேசுறதப் பாத்தேன்னு எவளாவது சொன்னா, அன்னக்கே உன்னய கொன்னு போட்டுருவேன்...கொன்னு... நாஞ் சொன்னதை செய்வேன்னு உனக்குத் தெரியுமில்ல..."
"..."
"போ... போயி வேலயப் பாரு..."
"...."
"சொல்லுறேன், மரமாட்டம் நிக்கிற... போ... போயி சந்திரா தண்ணிக்குப் போறதாச் சொன்னா... போயி நல்ல தண்ணி தூக்கிட்டு வா.. போ... அப்புறம் போகும் போது எவகிட்டயும் எங்காத்தா திட்டுச்சுன்னு சொல்லி வைக்காதே... புரியுதா."
"ம்..." கண்ணைத் துடைத்தபடி குடத்தை எடுத்துக்கொண்டு சந்திரா வீடு நோக்கி நடந்தாள்.
"சந்திரா... ஏய் சந்திரா..."


மேலும் படிக்க அதீதம் போங்க.. 'கூழாங்கல்'

இந்தக் கதை அதீதம் தீபாவளி சிறப்பிதழில் வெளிவந்துள்ளது.முதல் முறை இணைய இதழில் என் சிறுகதையை வெளியிட்ட அதீதம் ஆசிரியர் குழுவுக்கு நன்றி.

---------------


என்ன நண்பர்களே கோவை கின்னஸ் கவியரங்கத்துக்கு 28 வரிகளுக்குள் 3 கவிதையும் உங்க போடவும் அனுப்பிச்சா... அனுப்பாத கவிஞர்கள் உடனே அனுப்புங்க... விவரங்களுக்கு இந்த இடுகையை பாருங்க...



-'பரிவை' சே.குமார்
Thanks: Photo from இளையராஜா

செவ்வாய், 18 அக்டோபர், 2011

மனசின் பக்கம்: கோவை கவியரங்க அழைப்பும் சில பகிர்வும்...


னசின் பக்கம் எழுதி ரொம்ப நாளாச்சு... இதோ சில பகிர்வுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

முதல்ல சில நாட்களுக்கு முன்னர் பிறந்த நாள் கொண்டாடிய என் தம்பி 'கலியுகம்' தினேஷ், 'அதீத' பாசம் கொண்ட அண்ணன் திரு. எல்.கே மற்றும் நேற்று பிறந்தநாள் கொண்டாடிய என் அக்கா சுசிக்கும் என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

***

கோவை தமிழ்ச்சங்கம், கற்பகம் பல்கலைக்கழகம், கோவை அரிமா சங்கம் ஆகியவை இணைந்து தமிழ்க் கவிதையை வளர்க்கும் நோக்கத்தோடு கின்னஸ் சாதனை கவியரங்கம் நடத்த உள்ளனர். மொத்தம் 1001 கவிஞர்கள் பங்கேற்கும் இந்நிகழ்ச்சி 72 மணி நேர தொடர் கவியரங்கமாக நடக்க உள்ளது. வரும் டிசம்பர் மாதம் 9,10,11 தேதிகளில் கற்பகம் பல்கலைக்கழக அரங்கில் நடக்க இருக்கும் இந்த கவிரங்கத்தில் பங்கேற்கும் கவிஞர்களுக்கு, கின்னஸ் சாதனைக்கான சான்றிதழ்கள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

கவியரங்கத்தில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள், 28 வரிகளுக்கு மிகாமல் 3 கவிதைகள், புகைப்படம் மற்றும் சுய முகவரியிட்ட உறையுடன், இம்மாத இறுதிக்குள்,

தலைவர்

கோவைத் தமிழ்ச் சங்கம்

63, பாரதிதாசன் நகர்

ராமநாதபுரம்

கோவை-45 என்ற முகவரிக்கு அனுப்பலாம்.

நேரடியாக கவிதைகள் அனுப்ப முடியாதவர்கள் நண்பர் இதயச்சாரல்..! தமிழ்க்காதலன் அவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைத்தால் அவர் கோவை தமிழ்ச்சங்க தலைவருக்கு அனுப்பிவிடுவார்.

அவரின் மின்னஞ்சல் : thamizhkkaathalan@gmail.com

என்ன நண்பர்களே... கின்னஸ் கவியரங்கில் 1001ல் நாமும் ஒருவராக இருக்கலாமே... எடுங்கள் பேனாவை... எழுதுங்கள் கவிதைகளை... நம் தமிழ் மொழி வளர்ப்போம்.

குறிப்பு : வெளிநாட்டில் இருக்கும் கவிஞர்களின் கவிதைகள் அவர்களது பெயருடன் நண்பர்களால் வாசிக்கப்படும்.

இதுதான் தலைப்பு என்றில்லை... என்ன கவிதையாக வேண்டுமானாலும் இருக்கலாம். நீங்கள் பதிவராக இருந்தால் உங்கள் வலைப்பூவில் பகிர்ந்தவைகளில் உங்களுக்கு மிகவும் பிடித்த கவிதைகளையே அனுப்பலாம். இதற்கென தனியாக எழுத வேண்டும் என்றில்லை.

***

நேற்று அலுவலகத்திற்கு வந்ததும் என் மனைவியிடம் இருந்து பதட்டமான போன் கால் ஒன்று வந்தது. பாப்பா போன பள்ளிக்கூடப் பேருந்து விபத்தில் மாட்டிவிட்டதாம். பிள்ளைகளுக்கு ஒன்றும் இல்லையாம் என்று சொன்னதுடன் காரைக்குடியில் இருக்கும் பள்ளியின் ஹாஸ்டலில் தங்க வைத்திருப்பதாக் சொல்லி, போய் பார்த்து வருகிறேன் என்று சொன்னதும் எனக்கு ஒன்றும் ஓடவில்லை. என்னாச்சோ... ஏதாச்சோ என்ற பதட்டம்.

அண்ணனுக்கு போன் பண்ணி விவரம் சொல்ல, அவர் ஊருக்கு போன் செய்து விசாரித்து பயப்படும்படி ஒண்ணுமில்லை என்று சொன்னதும்தான் நிம்மதியாச்சு... பிறகு என் மகளைக் கூட்டிக்கொண்டு வீடு வந்து சேர்ந்த என் மனைவி மீண்டும் என்னுடன் பேசினார்.

அப்போது பாப்பா போன பேருந்துக்கு முன்னால் போன அதே பள்ளிப் பேருந்துதான் விபத்துக்குள்ளாகியிருக்கிறது. இவர்கள் சென்ற பேருந்து விபத்தின் காரணமாக பள்ளிக்கு செல்லாமல் ஹாஸ்டலுக்கு திருப்பி விடப்பட்டுள்ளது. பேருந்து மீது மோதிய டூவீலர்க்காரர் இரண்டு சிறு குழந்தைகளுடன் வந்திருக்கிறார். சம்பவ இடத்திலேயே அவரும் அவரது ஒரு குழந்தையும் உயிர் இழந்துவிட்டனர். இன்னொரு குழந்தை கவலைக்கிடமாக இருக்கிறதாம். அவர் தண்ணி அடித்துவிட்டு வண்டி ஓட்டியதாக சொல்லப்படுகிறதாம். (விபத்தைப் பார்த்தவர்கள் அவர் மீதுதான் தவறு என்று சொல்கிறார்களாம்).

அவர் தண்ணி அடித்திருந்தால் அவர் இழந்து அவரது உயிரை மட்டுமல்ல இரண்டு மாணிக்கங்களை அல்லவா? இதற்கு பள்ளி நிர்வாகம் என்ன செய்யப் போகிறது தெரியவில்லை. ஒரு அப்பனாக என் குழந்தைக்கு ஒன்றுமில்லை என்று சந்தோஷப்பட்டாலும் ஒரு மனிதனாக மலர வேண்டிய பிஞ்சுக் குழந்தைகளின் கனவு கலைக்கப் பட்டுவிட்டதே நினைத்து மனசு வலிக்கிறது. இன்னொரு சோகம் என்னவென்றால் அம்மா இல்லையென்றும் சொல்கிறார்களாம், உண்மையா என்று தெரியவில்லை. குடிகார அப்பனால் (அவன் குடித்திருந்தால்...) குடும்பமே சிதைந்துவிட்டதே.

பள்ளி நிர்வாகம் சரியான முறையில் குழந்தைகளுக்கான பேருந்து வசதியை செய்யாததே விபத்துக்கான காரணம். ஒழுங்கான முறையில் டிரைவர்களை நடத்தாததால் அடிக்கடி மாறும் டிரைவர்கள், அனுபவமில்லாத இளைஞர்கள் டிரைவர்களாக இருப்பது, தனியாரிடம் பிள்ளைகளை ஏற்றிவர கமிஷன் முறையில் ஒப்பந்தம் வைத்துள்ளது என நிறைய தவறுகள் அவர்களிடம் இருக்கிறது. இது தொடரும் பட்சத்தில்... நினைக்கவே பயமாக இருக்கிறது.

கடந்த மாதங்களில் பேருந்து இல்லையென எங்கள் ஏரியாவில் இருந்து 15, 20 மாணவர்களை ஒரு ஆம்னி வேனில் புளி மூட்டை போல அடைத்து கொண்டு சென்று அவர்கள் ஹாஸ்டலில் இருந்து வேறு வண்டிக்கு மாற்றி அனுப்பினர். என் மனைவி பள்ளி நிர்வாகியிடம் சண்டையிட்டு பிள்ளையை அனுப்ப முடியாது என்று சொன்னது போல் மற்ற தாய்மாரும் சண்டை போட்டிருப்பார்கள் போல... மீண்டும் பேருந்து விட்டார்கள். இன்று இரண்டு உயிர்களைப் பலி வாங்கிய விபத்து இன்னும் கோரமாகியிருந்தால் என்ன செய்வது?

இனியாவது பள்ளி நிர்வாகம் யோசிக்குமா?

விபத்தைப் பார்த்த என் மகளுக்கு காய்ச்சல் வந்தாச்சு. மருத்துவரிடம் போய் வந்தும் இன்னும் சரியாகவில்லை. இன்று பள்ளி செல்லவில்லை.

***

ம்ம மைந்தரைப் பத்தி சுசி அக்கா, ராமலக்ஷ்மி அக்கா மற்றும் சகோதரி அமைதிச்சாரல் பகிர சொல்லியிருந்தாங்க... என்னத்தைங்க பகிர்றது... தினமும் நடக்கும் கூத்துக்களையா... சரி இந்தக் கூத்தை மட்டும் கேளுங்க...

மதுரைக்கு அவங்க ஐயா வீட்டுக்கு போனப்போ ம.தி.மு.க காரங்க பம்பரம் சின்னத்துக்கு ஓட்டு கேட்டு வந்திருக்காங்க... பயபுள்ள மனசுக்குள்ள அவங்க கோஷம் சட்டுன்னு புகுந்துக்கிச்சு... அப்புறம் யாரு வந்தாலும் இவரு மழலைத் தமிழ்ல 'போடுங்கம்மா ஓட்டு... பம்பரத்தைப் பாத்துன்னு...' சொல்லியிருக்காரு... இது காரைக்குடிக்கு வந்ததும் தொடர்ந்திருக்கு... பேப்பரை கிழிச்சு எல்லாரு வீட்டுலயும் போயி போட்டு 'போடுங்கம்மா....' வாசகத்தை கத்திக்கிட்டு இருந்திருக்காரு. தினமும் ஸ்கைப்பில் என்னிடம் பேசும் போது இதை சொல்லுவார்.

எங்க தெருவுக்கு பம்பரத்துக்கு ஓட்டு கேட்டு வந்திருக்கு ஒரு கூட்டம்... இவரு வாசல்ல நின்னுக்கிட்டு 'அம்மா வந்துட்டாய்ங்கம்மா... வந்துட்டாய்ங்கன்னு' கத்தியிருக்காரு... அவங்க யாருடா வந்திருக்கான்னு கேட்க , இவரு 'போடுங்கம்மா ஓட்டு... பம்பரத்தைப் பாத்துன்னு...' கத்திட்டாரு... வந்தவங்க பம்பரமா... ரொம்ப சந்தோசப்பட்டு இவர தூக்கி உம்மா கொடுத்து இவர சொல்லச் சொல்லி வேட்பாளரோட மொபைல்ல பதிவு பண்ணிக்கிட்டாங்களாம்.

ரெண்டு வயசுலயே இதை அடக்க முடியலையே பின்னால மேய்க்க முடியுமா? - இது அவங்க அம்மாவோட கேள்வி.

ரெண்டு மூணு நாளக்கி முன்னால படியில இருந்து விழுந்து கால்ல அடிபட்டிருக்கு... ரெண்டு நாள் நடக்காம இருந்த சின்னத்துரை இப்ப வீக்கத்தோட நொண்டிக்கிட்டே வீதிவுலா வாறாராம்.

சரிங்க... இது போதுங்க இப்போ... மத்ததெல்லாம் அப்புறம் பாக்கலாம்... மீண்டும் சந்திப்போம்.

-'பரிவை' சே.குமார்.

திங்கள், 10 அக்டோபர், 2011

கிராமத்து நினைவுகள்: கண்மாய் மீன்




(தூண்டில் போடும் பெரியவர்)

கிராமத்து நினைவுகள் எழுதி நீண்ட நாட்களாகிவிட்டதுங்க. எனக்கு இப்போ நகரத்து வாழ்க்கைதான் வாய்த்திருக்கிறது என்றாலும் கிராமத்து வாழ்க்கைதான் பிடித்திருக்கிறது. அந்த பசுமையான வயல்கள், கண்மாய்கள், ஊரணிகள், எங்கும் நிறைந்த தண்ணீர், கோவில் திருவிழாக்கள், அடர்ந்த மரங்கள், ஆடு, மாடு, கோழி என பார்த்துப் பழகிய கண்களுக்கு குழாய்த் தண்ணீரும், குடியிருக்கும் வீட்டுக்கு அருகில் என்ன நடந்தாலும் கண்டு கொள்ளாத மக்களுமான வாழ்க்கை ஏனோ மனசோடு ஒட்டாமலே தொடர்கிறது. இருப்பினும் ஒரு சந்தோஷம்.

நாங்கள் இருக்கும் காரைக்குடியில் எங்கள் தெருவில் அந்நியோன்யமான நட்பு எங்களுக்கு வாய்த்திருக்கிறது. அது எங்கள் குழந்தைகளுக்கு கிடைத்த வரப்பிரசாதம். தெருவில் எல்லாருடைய வீட்டுக்கும் செல்லப்பிள்ளையாக நம்ம மைந்தர் வலம் வருகிறார். அவர் இல்லை என்றால் தெருவே வெறிச்சோடிப் போச்சு என்று எல்லாரும் புலம்பும் அளவுக்கு வைத்திருக்கிறாராம். (அப்ப எம்புட்டு சேட்டை பண்ணுவான்னு பாத்துக்கங்க.. )

அவருக்கு ரெண்டு வயசுதாங்க ஆகுது. ரெண்டு நாளைக்கு முன்னால ஊர்ல 11 மணிக்கு மேல இருக்கும். அவங்க அம்மாகிட்டா அப்பாட்ட பேசுறேன்னு சொல்லி அழுது போன் பண்ண சொல்லி எங்கிட்ட என்ன கேட்டார் தெரியுமா? அப்பா.... அம்மா தூங்கு... நீ தூங்கலன்னு கேட்டாரு பாருங்க...

சரி கிராமத்து நினைவுகளை எழுதாம மகனப் பத்தி எழுதுறானேன்னு திட்டாதீங்க... என்ன செய்வது வெளி நாட்டு வாழ்க்கை.

எங்க ஊரு கண்மாயில் தண்ணீர் நிறைந்து கிடக்கும் காலங்களில் பள்ளி விடுமுறை நாட்களில் பெரும்பாலான நேரங்களில் அங்கு தான் கிடப்போம். ஒன்று குளிப்போம் இல்லை என்றால் தூண்டிலில் மீன் பிடிப்போம். மழைக்காலத்துக்குப் பிறகு கடைகளில் தூண்டி முள் விற்பனை இருக்கும். முள்ளும் நரம்பும் வாங்கி மயிலிறகு தட்டை அல்லது நெட்டித் தட்டையை சிறிதாக வெட்டி அதில் கட்டி அதை ஒரு நீண்ட கம்பில் கட்டி தூண்டில் தயார் செய்வோம்.



(அழிந்த கண்மாயில் மீன் பிடிக்கும் காட்சி)


மீன் பிடிக்க தனியாக செல்வதில்லை... நாலைந்து பேராகத்தான் கிளம்புறது வழக்கம். போகும் போது எங்க ஊரு ஊரணியில் மண்ணை வெட்டினால் நிறைய மண்புழு கிடைக்கும் அவற்றை எடுத்து ஒரு டப்பாவில் போட்டுக் கொண்டு பிடித்த மீனை போட்டு வைக்க ஒரு பாத்திரத்துடன் அவிழும் டவுசரை பட்டுக் கயிற்றில் (அதாங்க அராணாக்கொடி) சிறையிட்டு வழியும் மூக்கை புறங்கையால் துடைத்தபடி (இது எல்லாருக்குமானது கிடையாது... ஊழை மூக்கன்களுக்கு மட்டும்) செல்வோம்.

தூண்டில் முள்ளில் புழுவை லாவகமாக செலுத்தி தண்ணீருக்குள் வீசி கம்பை கையில் பிடித்தபடி நிற்க, தட்டை தண்ணீரில் மிதக்கும். இரையை தேடி வரும் மீன் புழுவை சாப்பிடும் போது தட்டை லேசாக ஆட ஆரம்பிக்கும்... இரையை விழுங்கும் போது முள் வாயில் பட்டதும் வேகமாக ஓட நினைத்து மீன் இழுக்க... தட்டை தண்ணீருக்குள் அழுங்க... லாவகமாக இழுத்தால் மீன் முள்ளில் மாட்டிக் கொள்ளும். முதல் மீன் பிடித்ததும் நமக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கும்.

அதிலும் தட்டை ஆடுவதைப் பார்த்தே இது கெண்டை... இது கெழுத்தி... இது உழுவை... இது விறாக்கன்னு என சொல்லி பிடிக்கும் அந்த சந்தோஷம் இனி வருமா என்ன... நாம தொடர்ந்து ரெண்டு மீன் பிடிச்சிட்டா போதும் அங்க மட்டும்தான் மீன் இருக்க மாதிரி எல்லாப் பயலுகளும் நம்ம கிட்ட வந்து தூண்டி போட ஆரம்பிச்சிருவாங்க... அதுக்கு ஒரு சண்டையே நடக்கும்.

விறால் மீன் பிடிக்க என்று தனி தூண்டில்... பெரிய முள்... நீண்ட கணமான நூல் அதில் புழுவுக்குப் பதிலாக குட்டி மீன்... தூண்டிலை தண்ணிக்குள் போட்டு ஒரு குச்சியிலோ அல்லது அருகிலிருக்கும் மரத்திலோ கட்டி வைத்துப் பிடிப்போம்.

காலையில் மீன் பிடிக்க வந்தால் மதியம் வரை வீட்டுப் பக்கமே போகமாட்டோம். வீட்டிலிருந்து கூப்பிடும் குரல் கேட்கும் அதுக்குப் போகவில்லை என்றால் அம்மா கம்போடு வந்து விரட்டிக் கொண்டு போவார்.

தண்ணீர் வற்றி கொஞ்சமாக கிடக்கும் போது இரவில் போய் பாச்சை வலை என்ற வலையை குறுக்காக கட்டி வைத்துவிட்டு வந்து விடுவோம். இது சின்ன மீன்களைப் பிடிக்க உதவும் வலை. காலையில் போய் வலையை எடுத்தால் கெழுத்தி கெண்டை மீன்களை அள்ளி வரலாம்.

அழிந்த கண்மாயில் மீன் பிடிக்க கச்சா என்ற ஒன்றை பயன்படுத்தி மீன் பிடிப்போம். மழைக்காலங்களில் ஏத்து மீன் பிடிக்க பத்தக்கட்டை போடுவோம். கச்சா, பத்தக்கட்டை எல்லாம் கால மாற்றத்தில் காணாமல் போய்விட்டன.

இப்போ எங்க கண்மாயில் மீன் பிடிக்க தூண்டிலிடுபவர்கள் யாரும் இல்லை. வருடம் ஒரு முறை மீன் குத்தகைக்கு விடப்பட்டு அந்தப் பணம் கோயில் நிதியில் சேர்க்கப்படுகிறது. குத்தகைக்கு விடுவதில் என்ன சிரமம் என்றால் பக்கத்து ஊர்க்காரர்களிடம் இருந்து இரவு நேரங்களில் கண்மாய் மீனை பாதுகாத்து வைப்பதுதான். எங்கள் கண்மாயில் எப்பவும் விரால் மீன்கள் அதிகம் இருக்கும்... அதனால் இரவில் வந்து வலைபோட்டு பிடித்துச் செல்வார்கள். காவல் காப்பதுதான் பிரச்சினை... பாதுகாத்தால் நல்ல விலைக்கு விடலாம்... இப்போதும் பாதுகாத்து விட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

(ஒரு வகை கெண்டை மீன்)
இந்த வருடம் மீன் அதிகம் இல்லை... சரியான பாதுகாப்பும் இல்லை... எனவே கண்டவனும் பிடித்து சாப்பிட்டு மிஞ்சியதை பிடிக்கலாம் என்று திருவிழா முடிந்து பேசப் போக சில வன்மங்கள் அங்கே தலை தூக்கி அடிதடியில் ஆரம்பித்து மண்டை உடைப்பு வரை போய்விட்டது. அதனால் யாரும் பிடிக்க வேண்டாம் என்று முடிவு செய்து சில ஆயிரங்களுக்கு குத்தகைக்கு விட்டுவிட்டார்கள்.

என்ன இருந்தாலும் கண்மாய் மீன் ருசி தனிதானுங்களே... இதை எழுதும்போதே நாக்குல எச்சில் ஊறுதுங்க... அதுவும் இந்த அயிரை மீனை அப்படியே.... சரி விடுங்க... நெனச்சு என்னாகப்போகுது.

சரி எனக்கு ஒரு சந்தேகங்க.... கனவுல மீன் பிடிக்கிற மாதிரி வந்த பேய் பிடிச்சிருக்குன்னு எங்கம்மா சொல்லுவாங்க... உண்மையாங்க...

-'பரிவை' சே.குமார்.

படங்கள் வழங்கிய இணையத்துக்கு நன்றி.

வெள்ளி, 23 செப்டம்பர், 2011

சில கவிதைகளும்... சிக்கன நன்றியும்...


தற்கெடுத்தாலும்
குற்றம் சொல்லும் சுற்றம்
பூத்தது தவறா...
குமரியான சிறுமி..!

***

விடியலைத் தேடும்
பயணம்...
சோர்வாய் எரிந்தது
தெரு விளக்கு..!

***


ரம் நடுவிழா...
அமைச்சர் காருக்குப்பின்
ஊர்வலமாய் கார்கள்...
மாசுபட்டது காறறு...

***


கானகத்தில் மழை...
நனைந்த குருவிகளின்
சப்தத்தை கேலி
செய்தது மரங்கொத்தி
மரம் விழும் வரை..!

***


'ம்மா பசிக்குது'
அழுத குழந்தையை
அணைத்து அழுதாள்...
உடற்பசி அடங்கிய
திருப்தியில் உறங்கும்
கணவன்...

***


லையுடன் நிற்பவனை
அறியவில்லை...
ஓடும் நீரில்
துள்ளும் மீன்..!

-------------

நட்பே வணக்கம்...


எனக்கு 'இலக்கியத்தேனீ' என்ற விருதினை அளித்து சந்தோஷப்பட்ட முனைவர் இரா.குணசீலன் அவர்களுக்கும், வலைமனையில் எனது தளத்தையும் அறிமுகம் செய்த அதீதம் இணைய இதழுக்கும் அதனை எனக்குத் தெரிவித்த திரு. எல்.கே மற்றும் நண்பர்களுக்கும், வலைச்சரத்தில் பலமுறை பலரால் அறிமுகமானாலும் ஒவ்வொரு முறை அறிமுகமாகும் போதும் அடையும் சந்தோஷத்திற்கு அளவேயில்லை... அந்த வகையில் சென்ற வாரம் என்னை அறிமுகம் செய்த சகோதரர் மாய உலகம் அவர்களுக்கும் உங்கள் அன்பின் முன்னால் என் நன்றி சிறியதுதான்... இருப்பினும் நன்றி மறப்பது நன்றல்ல என்பதால் நன்றி. (தனிப்பதிவாக சொல்ல ஆசைதான்... நேரமின்மை... பொறுத்துக் கொள்ளுங்கள் உறவுகளே...)


அலுவலகத்தில் எட்டு மணி நேர வேலைக்கான சம்பளத்தில் ஏறக்குறைய 15 மணி நேரப்பணி அதுவும் கணிப்பொறி முன்னால்...(சம்பளம் மட்டுமே... மற்ற சலுகைகள் இல்லை) என்ன செய்வது அடிமை வாழ்க்கை... எனவே மனவலியுடன் முதுகு வலியும் இம்சிக்கிறது. அதனால்தான் மனசு பொலிவிழந்து இருக்கிறது... விரைவில் மீண்டு வருகிறேன்...

-'பரிவை' சே.குமார்.